• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

நேயமுடன், நான் -1

Ush

Well-known member
Messages
109
Reaction score
270
Points
63
ஒரு வீட்டின் நடுவில் மிகப்பெரிய சாண்டிலியர் மின் விளக்கு வீட்டுக்கே அழகு சேர்த்து ஒளியூட்டிக்கொண்டிருந்ததாம். வீட்டில் உள்ளோர், விருந்தினர்கள் எல்லோருக்கும் அதை மிகப்பிடிக்கும்..அதுவும் நானே இந்த வீட்டின் தலை விளக்கு என்று கர்வம் கொண்டிருந்ததாம். எல்லா நாளும் ஒரே நாளில்லையே..காலப்போக்கில் அதிலும் ஒரு பழுது வந்து விட அதை கழற்றி திருத்த அனுப்பிவிட்டார்கள்.. எத்தனை பெரியவனாய் இருந்தாலும் நமக்கும் ஒரு மாற்று உண்டு.. திருத்தப்பட்டு திரும்பி வந்து போராடி மீண்டும் இடம்பிடிப்பது என்னுடைய கையில் மட்டுமே இருக்கிறது..இந்த உலகம் நமக்காய் காத்திருக்காது என்று விளக்கு அப்போது தான் புரிந்து கொண்டதாம்.

கதையாய் சொல்லி விடலாம். யதார்த்தத்தை புரிந்து ஏற்றுக்கொள்வது மனிதர்களுக்கு ரொம்பவே கடினம்..அவர்களுக்கு மட்டுமல்ல அவர்களை சுற்றியிருப்பவர்களுக்கும் கூட..

1

அழகாய் பசிய சவுக்கு மரங்கள் அடர்ந்து வளர்ந்திருக்க நூறாண்டுகள் முன்னே கட்டப்பட்ட பழைய சர்ச் இன்னும் கம்பீரமாய் எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தது. வழிபாட்டு நேரமில்லாததால் சர்ச் வெறிச்சோடியிருக்க உள்ளே பாதர் ஜார்ஜின் முன்னே பணிவோடு நின்று கொண்டிருந்தாள் நேயா.

அவள் நேயா நிரந்தரி நேசராஜன். இந்த மாதம் தான் பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டலின் கேட்டரிங் கல்லூரியில் தொழில் முறை படிப்பை நிறைவு செய்திருந்தாள்.

“நேயாம்மா,, உன் கிட்ட இதை கேட்க கூட எனக்கு சங்கடமா இருக்கு..” பாதர் தவிப்புடன் தலையை கோதிக்கொள்ள

நேயாவுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது.. அப்பா இறந்ததும் அவளுக்கும் ஜெரமிக்கு ஏன் அம்மாவுக்கு கூட ஒரு தூணாய் ஒரு வழிகாட்டியாய் கூட நின்றவர் இல்லையா,, அவர் என்னிடம் உதவி கேட்க இப்படி தயங்குவதா?

உடனே முகத்தில் குறும்புச்சிரிப்பை வரவழைத்தபடி “பாதர் என்ன ரொம்ப சஸ்பென்ஸ் வைக்குறீங்க? இப்படி பயமுறுத்தினீங்கன்னா நான் விஷயத்தை கேட்க முன்னயே ஓடிருவேன் பரவாயில்லையா?” என்று சிரித்து சூழ்நிலையை இலகுவாக்க முயன்றாள்

அது வேலை செய்தது..மெலிதாய் புன்னகைத்த பாதர் “சரி சரி சொல்றேன்.. ஆனால் எனக்காக ஒகே சொல்ல கூடாது.. உன்னால முடிஞ்சா மட்டும் தான் பண்ணணும் சரியா?” என்று கூர்மையாய் அவளையே பார்த்தபடி கேட்டார்.

இப்போது உண்மையிலேயே பொறுமை இழந்து விட்டவள் “அட நீங்க பர்ஸ்ட் விஷயத்தை சொல்லுங்க பாதர்..” என்று கேட்டாள்

“உன்னை மாதிரியே எனக்கு ரொம்ப வேண்டப்பட்ட ஒருவர். மீடியா வெளிச்சம் சுத்தி இருக்கற மிகப்பெரிய ஸ்போர்ட்ஸ் பிரபலம். துரதிஷ்டவசமா ஒரு ஆக்சிடன்ட் ஆகி இப்போ வீட்லயே ஆறுமாசம் ரெஸ்ட் எடுக்க வேண்டிய கட்டாயம் ஆகிடுச்சு.. இனி அவரால திரும்ப விளையாட முடியுமா இல்லையான்னெல்லாம் இப்போதைக்கு நம்ம சொல்ல முடியாது. ஒரு பக்கம் உடம்புக்கு பிசியோ மனசுக்கு தெரப்பின்னு போயிட்டிருக்கு”

அந்த முகமறியா மனிதனின் துன்பம் அவளுக்கு புரிந்தது... வானில் பறந்த பட்டம் நூலறுந்து விழும் போது மனம் என்ன பாடுபடும்?அவரளவுக்கு இல்லை என்றாலும் அப்பாவின் இழப்பின் பின்னர் அவர்கள் மூவருமே இதை அனுபவித்திருந்தார்கள். யார் அந்த பிரபலம் ரொம்ப வேண்டப்பட்டவர்னு வேற பாதர் சொல்றார்?...அவள் மனதுக்கு ஒன்றும் பிடிபடவில்லை..

பாதர் இப்போது ஒருமைக்கு தாவி விட்டார். “அவன் இயல்புலயே ரொம்ப கோபக்காரன். இதுல ரெஸ்ட் எடு. அதை சாப்பிடு இதை சாப்பிடுன்னு இப்படி பண்ணு அப்படி பண்ணுன்னு அவனோட மானேஜ்மென்ட் அனுப்புன நிபுணர்களை பார்க்க அவனுக்கு கோபம் தான் வருது. யாருக்கும் அவனை சமாளிக்க முடியல.. எல்லாரையும் விரட்டிட்டான். நான் போய் பார்த்தப்போ ரொம்ப பரிதாபமா இருந்துச்சும்மா.. அப்போ தான் உன் ஞாபகம் வந்தது.. நீ பிரிட்டிஷ் ராயல் பாமிலி மெம்பர் ஒருத்தங்க வந்தப்போ ரெண்டு வாரம் கூடவே இருந்து பார்த்துக்கிட்டல்ல..உன்னால இவனை சமாளிக்க முடியும்னு தோணுது..” என்று அவர் இழுத்தார்

அந்த கிளையன்ட் ராயல் பாமிலியின் கொஞ்சம் தூரத்து உறுப்பினர். உள்ளூர் உணவை தன்னுடைய நாவுக்கேற்றபடி சமைத்து தரும் படி கேட்டிருந்தார். அது அதிர்ஷ்டத்தால் அவளுக்கு வந்த வாய்ப்பு...ஹோட்டல் வேறு கமிட்மென்டில் பிசியாயிருக்க இவளது மேலதிகாரியும் நோய்வாய்ப்பட ஏகப்பட்ட யோசனை தயக்கங்களோடு வேறு வழியின்றி தான் நிர்வாகம் அவளை அனுப்பி வைத்தது. நேயாவுக்கு அவ்வளவு உற்சாகம். இரண்டு வாரம் பிரிட்டிஷ் நாவுக்கு ஆசிய சுவையை வழங்குவதை ஆர்வமாய் செய்தாள்.. அந்த க்ளையன்டுக்கு முழு திருப்தி. அவள் மறுக்க மறுக்க ஒரு டயமன்ட் ப்ரேஸ்லெட்டை பரிசளித்து விட்டு போனவர்.. கல்லூரியிலும் அவளுக்காய் பலமாய் சிபாரிசு செய்திருந்தார்.. அவருடன் அதியுயர் பாதுகாப்பு வளையத்தில் இரண்டு வாரம் இருந்த ஞாபகங்கள் வர புன்னகைத்தவள் “நான் என்ன மாதிரி இங்கே ஹெல்ப் பண்ண முடியும் பாதர்?” என்று கேட்டாள்

“அவனுக்கு இப்போதைக்கு நல்ல உணவு முக்கியம்.. டயடீஷியன்ஸ் பண்ற எதையும் அவன் சாப்பிட மாட்டேங்குறான். சாப்பிடும் மனநிலையிலும் அவன் இல்லை. நீ அவனுக்கு பிடிச்ச போல ஆனா டாக்டர்ஸ் சொல்றதை கேட்டுஅவனுக்கு சமைச்சு தரணும்.. கூடவே அவன் வீட்ல ஸ்டாப்ஸ் வேண்டாம்னு நிறுத்தப்போறாங்க.. பேசிக் கிளீனிங்குக்கு ஆள் வருவாங்க..அதை மேற்பார்வை பார்க்கணும்”

அப்படியானால் ப்ரைவேட் செப் கடமைகளுக்கு மேலதிகமாய் கொஞ்சம் ஹவுஸ் கீப்பிங் டியூட்டி.. இதற்குத்தானே படித்தாள்.. ஆக செய்து விடலாம் தான்..ஆனால் க்ளையன்டுக்கு பாதர் கொடுக்கும் பில்டப் தான் இடித்தது.. ரொம்ப கோபக்கார காரக்டரா.. நமக்கு கோபம்னாலே ஆகாதே என்று யோசித்தவள் “யார் இந்த கிளையன்ட் பாதர்?” என்று அதிமுக்கிய கேள்வியை கேட்டாள்

“ருத்ரேஷ்வர் மா..தெரிஞ்சிருக்குமே..கிரிக்கட் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அவன் காயம்பட்டது...?”

ஒருமுறை அவர்கள் நின்று கொண்டிருந்த ஹாரிடோரே சுழல்வது போல பிரமை தோன்றியது நேயாவுக்கு. ருத்ரேஷ்வரா? பாதர் ருத்ரேஷ்வர் என்றா சொன்னார்? சந்தேகத்தில் காதை ஒரு தடவை தேய்த்து விட்டுக்கொண்டவள் விழித்தாள்.. ஹை ப்ரோபைல் என்று சொன்னார் ஆனால் இவ்வளவு ஹை என்று சொல்லவில்லையே.. ரிஸ்க்கி ப்ரோபைலும் கூட! அவன் கோபத்தை உலகமே அறியுமே.. இப்போ அவன் அடிபட்ட புலி வேறு..நான்லாம் தாங்க மாட்டேன் என்று பதறியடித்து நிமிர்ந்து பார்த்தவள் அவளையே எதிர்பார்ப்பாய் பார்த்திருந்த பாதரை கண்டதும் எச்சில் விழுங்கினாள்.

“என்னம்மா யோசிக்குற? கஷ்டமா?”

உடனே முகபாவத்தை மாற்றிக்கொண்டவள் “கஷ்டமெல்லாம் இல்லை பாதர். என்னை அங்கே ஏத்துப்பாங்களா? அவர் நினைச்சா பெரிய பெரிய செப்கள் எல்லாம் வருவாங்க.. எல்லாத்துக்கும் மேல அவங்களுக்கு பெரிய டீமே இருக்குமே.. நான் ரொம்ப சின்ன பொண்ணு எக்ஸ்பீரியன்ஸ் இல்லைன்னு சொல்லிடுவாங்களே..” என்று கேட்டாள்.. அப்படித்தான் சொல்ல வேண்டும் என்று மனதோரம் பயம் வேண்டுதலும் வைத்தது.

“அவனுக்கு இப்போதைக்கு நிபுணர்கள் வேணாம்மா..மன அமைதி தான் வேணும்.. ஒரு சாதாரண விஷயம் தெரிஞ்ச ஆளு அவன் சாப்பாட்டை பார்த்துக்கிட்டா போதும்.. அவனுக்கு வழக்கமா பழகுற ஆட்கள்ல இருந்து ஒரு மாற்றல் தேவை. திரும்ப பழையபடி ஆகுவானா இல்லையான்னே தெரியாத நிலையில் அதே சூழ்நிலையில் அவனை வச்சிருந்தா பாவம்னு பட்டுச்சு எனக்கு”

அவளுக்கு புரிந்தது..உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தோளில் பந்து பட்டு ஸ்ட்ரெச்சரில் அவனை எடுத்து போனதை உலகமே பார்த்தது. அவனால் தான் உலகக்கோப்பையில் தோற்றதாக, வேண்டுமென்றே பணம் வாங்கி விட்டு அவன் காயம் பட்டது போல நடித்ததாக எல்லாம் வாய்க்கு வந்தது போல அவனை ரசிகர்களும் விமர்சகர்களும் திட்டினார்கள்.. ஆனால் திரும்ப விளையாட வருவானா என்றே தெரியாத அளவு இவ்வளவு சீரியஸ் காயமா..பாவமே.. அவளது இரக்க மனம் பாதர் கேட்டதை தலையாட்டி ஒத்துக்கொண்டது..

“இப்போ தான் நிம்மதியாயிருக்கு.. நீ இதை சரியா ஹான்டில் பண்ணிடுவம்மா..எனக்கு நம்பிக்கை இருக்கு” என்று சந்தோஷமாய் போன பாதரை பார்த்து விட்டு “எனக்கு இல்லையே பாதர் அவ்வ்” என்று வாய்க்குள் முணுமுணுத்தபடியே திரும்பி வந்தவள் வீட்டில் பாதர் ஏன் கூப்பிட்டு விட்டார் என்று யோசனையாய் இருந்த அவளுடைய அம்மா மலருக்கு விஷயத்தை சொன்னாள்

அம்மாவின் முகமே பிடித்தமின்மையில் சுருங்கி விட்டது..

“நீ படிப்பை விட்டுட்டு ஹோட்டல் மானேஜ்மென்ட் படிக்க போனதே எனக்கு தாங்க முடியல.. ஹோட்டல்ல வேலை செய்றதுன்னா கூட நான் ஏத்துப்பேன்.. ஆனா ஒருத்தங்க வீட்ல ஏன்டி நீ போய் வேலை செய்யணும்..எனக்கு பிடிக்கவே இல்லை!” என்று ஆதங்கமாய் வந்தது அவர் குரல்

“அம்மா ருத்ரேஷ்வர் மா!” தன்னுடைய தயக்கங்களையும் பயத்தையும் விடுத்து அம்மாவுக்கு உற்சாகமூட்ட முனைந்தாள் நேயா

“யாரா இருந்தா என்ன? எனக்கு என் பொண்ணு உசத்தி..அவ எதுக்கு மத்தவங்க வீட்ல.....” தொடர்ந்து என்ன சொல்லியிருப்பாரோ

“மா..அப்படில்லாம் நினைக்க கூடாது.. நான் அங்கே ப்ரைவேட் செப் தானே..வேலை கஷ்டம் இல்லைம்மா.. ஹோட்டல்ல பண்றதாவது நிறையப் பேருக்கு பண்ணணும்,.இங்கேன்னா ஒரே ஒரு ஆளுக்கு தான் பண்ணணும்..ஹோட்டல்ல செப்பா ஆரம்பிக்கறதை விட பல மடங்கு சம்பளம் . ருத்ரேஷ்வர் கிட்ட வேலை செஞ்சேன்னு சொன்னாலே என் மதிப்பு உயரந்திடும்மா நல்லதை பாரேன்..” தன் குழப்பங்களை ஒதுக்கி விட்டு அம்மாவை சமாதானம் செய்தாள் நேயா.

அம்மாவோ “உங்கப்பா இருந்தப்போ எங்களுக்கும் ப்ரைவேட் செப் இருந்தாங்க..” என்று அமர்த்தலாய் சொல்ல

அம்மாவை முறைத்தவள் “எம்மா கண்மணி அக்காவும் நானும் ஒண்ணா” என்று கேட்டாள் இடுப்பில் கைவைத்தபடியே..

“இல்லைதான்..கண்மணி அக்கா உன்னை விட நல்லா சமைப்பாங்க..”என்றார் அவரும் சிரியாமல்

ம்மா!!! என்று செல்லமாய் முறைத்தவளுக்கு சிரிப்பும் வந்து தொலைத்தது. அம்மாவுக்கு வைட் காலர் வேலைகள் மட்டுமே வேலை..மற்றதெல்லாம் மதிப்புக்குரியான அல்ல.. வேறு யாரும் செய்யட்டும் என் பெண் ஏன் செய்ய வேண்டும் என்பார். அதுவும் நேயா படிப்பை பாதியில் நிறுத்திய கோபம் அவருக்கு இன்னும் இருக்கிறது.. அதன் வெளிப்பாடு தான் இந்த பேச்சு..

“என்ன தான் சொல்லு நான் பழைய காலத்து மனுஷி.. எனக்கு பிடிக்கல..ஆனா பாதர் கேட்டுட்டார் ஒண்ணும் பண்ண முடியாது” என்றவர் தயங்கி “நேயா..அந்த ருத்ரேஷ்வர் பத்தி நல்ல விதமா நான் படிச்சதே இல்லை..ஜாக்கிரதையா இருக்கணும்” என்று கண்டிப்பான குரலில் சொன்னார்.

“என்ன தான் காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சுன்னாலும் இது ஓவரா இல்லை? போங்கம்மா அவர் எங்கே..நான் எங்கே..உங்க கற்பனைக்கு இல்லையா ஒரு என்டு.. என்று கேலி செய்தவள் சிரித்துக்கொண்டே குளிக்க போய்விட்டாள்.

நல்ல வேளை அந்த ஹவுஸ் கீப்பிங் டியூட்டிகளை பத்தி சொல்லல..சொல்லியிருந்தா செத்தோம் என்று எண்ணிக்கொண்டவளுக்கு பாதர் என்னை ருத்ரேஷ்வரிடம் எப்படி அறிமுகம் செய்வார்..அவன் அதற்கு ஒப்புக்கொள்வானா? என்று யோசனை ஆரம்பித்து இது நமக்கு தேவையா என்று வந்து முடிந்தது.

அவனிடம் இருந்து வரப்போகும் பணம் அவளுக்கு பேருதவி தான்.

ஆனால் அவனோடு நிம்மதியாய் வேலை செய்ய முடியுமா?

ப்ச்.. அவனை உனக்கு யாரென்றே தெரியாது. ஒருவரோடு பேசிப்பழக முன்னரே இப்படித்தான் இருப்பார் என்று மதிப்பிடுவது தவறு என்று தனக்குத்தானே தடா போட்டவள் அப்போதைக்கு ருத்ரேஷ்வரை மறந்து வேலை தேடும் வழக்கமான சைட்களை மேயலானாள்

மறுநாள் மாலை வரை எந்த தகவலும் பாதரிடம் இருந்து வரவில்லை.. ஆகவே ருத்ரேஷ்வர் மறுத்து விட்டிருப்பான் என்று எண்ணிக்கொண்டவளுக்கு சின்னதாய் ஏமாற்றத்தை தவிர்க்க முடியவில்லை..அத்தோடு அதை மறந்து AOS ஹோட்டல் மானேஜ்மென்ட் நிறுவனத்தில் தன்னுடைய சர்ட்டிபிக்கேட்களை வாங்கி வர சென்று விட்டாள்.

அடுத்த காலை பாதர் போன் செய்தார்.

“நீ நாளையில் இருந்தே அங்கே போய்டும்மா. ஆனால் ருத்ரேஷ்வர் வேணாம்னு தான் சொன்னான். நான் தான் அதையும் இதையும் சொல்லி சரி சொல்ல வச்சிருக்கேன். நாளையில் இருந்து வழக்கமான அவனோட உதவியாளர்கள் யாருமே அவன் வீட்டுக்கு வரமாட்டாங்க..நீயும் சின்னப்பொண்ணு உன்னை சுலபமா மிரட்டிடலாம்னு நினைப்பான் போலிருக்கு. ஜாக்கிரதை. அப்புறம் அவனோட மானேஜருக்கு இந்த ஏற்பாடு சுத்தமா பிடிக்கலை. சாரிம்மா உனக்கு அங்கே முழு மனசா வரவேற்பு இருக்காது.. ஆனால் உன்னால அவன் கொஞ்சமாவது பழைய நிலைக்கு வந்தா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன். இல்லை உன்னால முடியலைன்னு உனக்கு தோணினா அந்த நிமிஷமே நீ வேலையை விட்டு நின்னுடு..கண்டிப்பா செய்ஞ்சே ஆகணும்னு கட்டாயம் இல்லை..புரிஞ்சதா?”

வயிற்றுக்குள் பயப்பந்துகள் உருள்வதை கஷ்டப்பட்டு மறந்தவள் இந்த பேச்சு ஆரம்பித்த நாளில் இருந்து மனதுக்குள் வந்த கேள்வியை கேட்டு விட்டாள்.

“பாதர் உங்களுக்கு எப்படி அவரை தெரியும்?” கேள்வி வந்து விழுந்தபிறகு தான் நாவை கடித்து சொல்ல முடிஞ்சா மட்டும் சொல்லுங்க என்று அவசரமாய் சொன்னாள்..

நீ இவ்வளவு தூரம் உதவி பண்றப்போ இதை சொல்றதுல என்னம்மா” என்றவர் “ ருத்ரா தேசிய அணிக்கு வர முன்னே A டீம்ல ஆடும் போது அவங்களுக்கு பல்வேறு சமயங்களுக்கான சகிப்புத்தன்மை வகுப்புக்கள் இருக்கும். நானும் ஒரு செஷன் எடுத்தேன்..அப்படி அறிமுகமான பையன் தான் அவன்.. அப்படி அறிமுகமாகி நம்ம ஸ்கூலுக்கும் ஹாஸ்டலுக்கும் இப்போ அவன் தான் பிரதான ஸ்பான்சர். யாருக்குமே அதை அவன் வெளிப்படுத்திக்கறது இல்லை. இது மட்டுமில்லை..என் மூலமா வேற சமூக காரியங்கள் எது வந்தாலும் தயங்காம எடுத்து செய்துடுவான்..கெட்டவன் இல்லை. அதான் பயமில்லாமல் அவனை நம்பி உன்னை அனுப்பி வைக்கிறேன்.. என்றார்

அவ்வளவு உழைப்பவனுக்கு இது கால் தூசி தான்..இருந்தாலும் மனசு என்று ஒன்று வேண்டுமில்லையா..சின்னதாய் இதயத்தின் ஓரம் எதிர்பார்ப்பு முளைத்தது நேயாவுக்கு.

அம்மாவிடம் விஷயத்தை சொன்னவள் அவள் எங்கே வேலை செய்யப்போகிறாள் என்ன செய்யப்போகிறாள் என்று ஜெரமி எவ்வளவு துருவி கேட்டாலும் சொல்லவே கூடாது என்று வாக்குறுதியும் வாங்கிக்கொண்டாள்.

ஜெரமி சும்மாவே அவள் தன்னால் தான் படிப்பை கைவிட்டாள் என்று குற்றவுணர்வில் சுற்றித்திரிவான்..இதில் இங்கே வேலை செய்வது தெரிந்தால் அவ்வளவு தான். மொத்தமாய் மூட்டை முடிச்சுகளோடு வந்தே விடுவான்.

வரும்
 
Last edited by a moderator:
Top