• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
997
Reaction score
2,810
Points
93
நெஞ்சம் – 8 ❤️

அன்று ஞாயிற்றுக்கிழமை, எந்த வேலையும் இல்லாதிருக்க, சூரியன் உதித்த பின்னும் பிரபஞ்சன் எழவில்லை. அவன் மீது தன் கால்களைத் தூக்கிப் போட்டு கோகுலும் உறங்கிக்கொண்டிருந்தான். சாரதா மட்டும் எழுந்து குளித்துமுடித்து கூடத்தில் அமர்ந்து அன்றைய நாளிதழைப் புரட்டிக்கொண்டிருந்தார்.

மூட்டுவலி லேசாய் அவரை முகம் சுளிக்க வைத்தது. காலை அருகிலிருந்த மேஜையில் தூக்கி வைக்க, சுகமாக இருக்கவும், தன் வாசிப்பைத் தொடர்ந்தார்.

சற்றுநேரத்தில் கண்களைக் கசக்கிக்கொண்டே எழுந்தான் பிரபஞ்சன். கனத்தக் கால்கள் அவனை அசைவிடாமல் செய்ய, “தடியா, காலை எடு டா” என கோகுலை சற்றே தள்ளிப் படுக்க வைத்துவிட்டு எழுந்து கழிவறைக்குச் சென்று வந்தான்.

அறையைவிட்டு வெளியே வந்தவனின் பார்வையில், முகத்தை சுளித்தவாறு, இரண்டு கால்களையும் மாற்றி மாற்றி கீழே வைப்பதும் மேலே வைப்பதும் என சாகசம் செய்யும் சாரதாவில் நிலைக்க, ஆடவன் முகம் மென்மையானது. வயது மூப்பின் காரணமாக இப்போதெல்லாம் பெரியவருக்கு மூட்டுவலி அதிகமாயிருந்தது.

மருத்துவரின் அறிவுரைப்படி மருந்து மாத்திரைகளை நேரத்திற்கு தாயை உண்ண வைக்கிறான்தான். இருந்தும், இப்போது வலி அதிகமாகியிருக்க, அவரது அறைக்குள் நுழைந்து மூட்டுவலி தைலத்தை எடுத்துவந்தான் பிரபஞ்சன்.

“வா டா, நல்லா தூங்கிட்டு இருந்தீங்களா, அதான் எழுப்ப மனசு வரலை” எனக் கூறியவரின் அருகே அமர்ந்து அவரது காலை எடுத்துத் தன் மடியில் வைத்தான் பிரபஞ்சன்.

“ஜாய்ன்ட் பெய்ன் இருக்குன்னா, சொல்ல வேண்டியதுதானே மா? நான் தைலம் தேய்ச்சு விட மாட்டேனா?” எனக் கேட்டவனின் கரங்கள் தைலத்தை எடுத்துத் தாயின் முட்டியில் மெதுவாக தேய்த்துவிட்டது. அதில் சாரதாவின் முகத்தில் புன்னகை படர்ந்தது.

“போதும் டா, வலி இப்போ பரவாயில்லை...” என அவர் இரண்டுமுறை கூறியதும்தான் அவரது காலை மேஜை மீது நகர்த்தி வைத்தான் மகன்.

“பிரபா, ஒரு பொண்ணு நம்மளோட தூரத்து சொந்தம். போன வாரம் காசியோட கல்யாணத்துல பார்த்தேன். லட்சணமா இருந்தா, விசாரிச்சேன். அவளுக்கும் வரன் பார்க்குறாங்களாம், அந்தப் பொண்ணோட அம்மா, அப்பாகிட்டே பேசிட்டேன். அடுத்த ஞாயித்துக் கிழமை போய் பார்த்துட்டு வரலாம் பா!” என்றார் சாரதா.

“சரி மா, பார்க்கலாம்” பிரபஞ்சன் தலையை அசைக்க,

“ம்மா, போச்சு போங்க. இப்போ அம்மா, அம்மான்னு உங்கக் காலைச் சுத்தி வர்றவன், கல்யாணம் முடிஞ்சதும் பொண்டாட்டி முந்தானையைப் பிடிச்சு சுத்தப் போறான். வெரி பிட்டி ஃபார் யூ மம்மி...” உச்சுக் கொட்டியபடியே கொட்டாவிவிட்ட கோகுல், பிரபஞ்சன் அருகே அமரவும், சாரதா சிரித்துவிட்டார்.

கைக்கு அருகே ஏதேனும் அகப்படுதா எனத் தேடிய பிரபஞ்சன் முகம் லேசாய் சிவந்துவிட்டிருந்தது. கோகுலின் கழுத்தோடு சேர்த்து வளைத்தவன், “இந்த வாய் குறையவே குறையாதா டா?” எனக் கேட்டு அவன் தலையில் கொட்ட, கோகுல் குலுங்கிச் சிரித்தான்.

“மம்மி, பொண்டாட்டி பத்தி சொன்னதும், இப்போவே எப்படி ரியாக்ட் பண்றான் பாருங்க. நான் சொன்னது உண்மையாகப் போகுது...” என்ற கோகுலின் குறும்பில் மூவருக்கும் அப்படியொரு சிரிப்பு வந்தது.

கோகுலை அனுமதித்தால், பேசிக்கொண்டே இருப்பான் என உணர்ந்த பிரபஞ்சன் அவனை இழுத்துக்கொண்டு அறைக்குள் நுழைந்தான். இருவரும் சண்டையிட்டு சமாதானம் அடைந்து, பின் புதிதாய் வந்த திரைப்படம் ஒன்றிற்கு செல்லலாம் என முடிவெடுத்து அந்த ஞாயிறை கழித்துவிட்டிருந்தனர்.

திங்கள்கிழமை எப்போதும் போல வழக்கத்துடன் நகர, பிரபஞ்சன் தன் அலுவலக வேலையில் மூழ்கியிருந்த நேரம், கதவு தட்டப்பட, “யெஸ் கம்மின்...” என்றான்.

“சார், இந்த மந்த் ஆர்டருக்கு ட்ரெஸ் டிசைன் பண்ணியாச்சு. நீங்க பார்த்து ஓகே சொன்னா, ப்ரொசீட் பண்ணலாம்...” தலைமை ஆடை வடிவமைப்பாளர் கூறவும், எதிரிலிருந்த இருக்கையில் அவரை அமர வைத்தான். பின் அவர் அனுப்பிய மின்னஞ்சலை கணினியில் திறந்தான். இரண்டு மூன்று வடிவமைப்புகள் அதிலிருக்க, ஒன்றைத் தேர்ந்தெடுத்து, “இது நைஸ், பைனலைஸ் பண்ணுங்க. ரொம்ப நல்லா இருக்கு, எப்போவும் டிசைன் பண்றதைவிட, இது கொஞ்சம் டிப்ஃரண்டா இருக்கு...” என மெச்சுதலாய் அவரைப் பார்த்தான் ஆடவன்.

“தேங்க் யூ சார், ஸ்டிச்சிங்ல இருக்க ஒரு பொண்ணுதான் டிசைன் பண்ணாங்க” என்று அவர் கூறவும்,

“நைஸ், யாரு அவங்க?” என வினவினான் பிரபஞ்சன்.

“அவங்க நேம் உமையாள் சார், நான் டிசைன் பண்ணும்போது அங்க துணி அடுக்க வந்தாங்க, அப்போதான் ஐடியாஸ் கொடுத்தாங்க. எனக்கும் ஓகேன்னு தோணுச்சு. உங்ககிட்ட கேட்டு முடிவு பண்ணலாம்னு வந்தேன்!” என்றவரிடம் பிரபஞ்சன் புன்னகை பெரிதாய் விரிந்தது. தானே அதை வடிவமைத்தது எனக்கூறி கடந்து இருக்கலாம். அடுத்தவர்களைப் பாராட்ட மனம் வேண்டும் என நினைத்தவன், அவரிடம் மேலும் சில தகவல்களைப் பெற்றுக்கொண்டு வேலையில் ஆழ்ந்தான்.

கோகுல் அன்று வேலைக்கு வரவில்லை. ராகவனை மாதாந்திர மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவனை அழைத்துச் சென்றிருந்தான். அதனாலே பொழுது மெதுவாக நகர்வது போல தோன்ற, கையை நீட்டி சோம்பல் முறித்தவன், எழுந்து சிறிது நேரம் நடந்து வரலாம் என ஒவ்வொரு பகுதியாகச் சுற்றிவர ஆரம்பித்தான். அப்படியே வேலைகள் எப்படி நடக்கிறதென்று மேற்பார்வை பார்த்தபடியே நடக்க, எப்போதை விடவும், அவன் வருகையில் எல்லோருக்கும் வேலையில் சற்று கவனம் கூடும் என்பதை ஏற்கனவே அவதனித்திருக்கிறான் பிரபஞ்சன். அதனாலே பெரும்பாலும் அவன் மேற்பார்வை பார்க்க வரமாட்டான்.
எல்லோரையும் அவரவர் வசதிக்கு ஏற்ப வேலையை சுதந்திரமாக செய்யவிடுவான். வேலையில் நேர்த்தி இருந்தால் போதும், அவ்வளவுதான் அவர்களுடைய வேலை சுதந்திரத்தில் தலையிடமாட்டான்.

எல்லோரையும் கவனித்தவாறே நடந்து வந்தவனைக் கடந்த சிலர் புன்னகைத்து, வணக்கம் கூறவும், சிரிப்புடன் தலையை அசைத்து அதை ஏற்றுக்கொண்டவனின் பார்வை உமையாளின் மீது ஏதேச்சையாக விழ, அவள் வடிவமைத்த ஆடை கண்முன்னே விரிந்தது.

கண்டிப்பாக அவளுக்கு ஆடை வடிவமைப்பில் ஆர்வம் உண்டு என உணர்ந்தவன், அவளுடைய வேலையைப் பாராட்டிவிட்டு, தையல் பகுதியிலிருந்து ஆடை வடிவமைப்பு பகுதிக்கு மாற்றலாம் என எண்ணி அவளருகே நகர்ந்தான். தான் தைத்த துணிகளை எல்லாம் கையில் எடுத்துக்கொண்டு அறைக்குள் நுழைந்தவளின் பின்னே, மேற்பார்வையாளரும் உள்ளே நுழைந்தார்.

அந்த பெரிய அறையில் ஆட்கள் குறைவாகவே இருந்தனர். ஒருசில மக்களே அங்குமிங்கும் நின்றுகொண்டிருந்தனர். அந்த மேற்பார்வையாளர் உமையாளின் அருகே அவளை உரசிவிடும் தூரத்தில் நிற்க, அவனின் எண்ணம் புரிந்த பிரபஞ்சன் கைகளை மடக்கினான் கோபத்தில். ஆங்கில கெட்ட வார்த்தை ஒன்று இயல்பாய் உதடுகள் உச்சரிக்க, அவளருகே விரைந்தான் ஆடவன்.

தன்னருகே நின்ற நிழலில் ஒரு நொடி திடிக்கிட்டு நிமிர்ந்த உமையாளின் பார்வை அருகிலிருந்தவனைச் சுட்டுப் பொசிக்கியது. அவள் பார்வையின் வீச்சைத் தாங்காது அவன் ஓரடி பின்னே நகர, எதுவும் பேசாது தன் எடுத்து வந்தத் துணிகளின் கணக்கை எழுதிமுடித்து நிமிர்ந்தவள், அவன் முன்னே கையைக் கட்டிக்கொண்டு நின்றாள்.

“என்ன வேணும் உங்களுக்கு?” உமையாள் அழுத்தமாக வினவ, எதிரிலிருந்தவன் பற்கள் முழுவதும் வெளியே தெரிந்தது.

“என்ன உமையாள், வீட்ல தனியா இருக்க போல? ஆண் துணை இல்லாம எந்தப் பொண்ணாலும் இந்தக் காலத்துல இருக்க முடியுறது இல்லை. கலி காலமா போச்சு...” என்றவனின் குரலில் அத்தனை வழிசலும் குழைவுமிருந்தது.

அவர்கள் இருவருக்கும் அருகே இருந்த சுவரில் மறைவாய் நின்றுவிட்டான் பிரபஞ்சன். உமையாளின் எதிர்வினை என்னவாக இருக்கும் என அறிந்து கொள்ளத்தான் அவர்களருகே செல்லவில்லை ஆடவன்.

“ஆமா சார், நீங்க சொல்றதும் சரிதான். ஒரு பொண்ணு புருஷனை விட்டு பிரிஞ்சு இருந்தாலே, கண்ட நாயெல்லாம் வழிஞ்சுட்டு வந்து நிக்கும்...” என்றவளின் நக்கல் பேச்சில் எதிரிலிருந்தவளின் முகம் கருத்துப் போனது.

இருந்தும் தன்னை சமாளித்துக்கொண்டவன், “அதைவிடு உமையா, உனக்கு துணையா ஆண் வேணும்னு தோணலையா? எப்படி இப்படி நைட்டெல்லாம் தனியா இருக்க...” என்றவனின் நாரசமான வார்த்தைகளில் உமையாளின் உள்ளம் கொதித்து அடங்கியது. விழிகள் அவனது வார்த்தையில் கலங்கப் பார்க்க, அதை அனுமதிக்கவில்லை பெண். எதிரில் இருப்பவன் முன்னே தன்னை தானே பலவீனமாகக் காட்டிக்கொள்ள மனம் வரவில்லை. உதட்டைக் கடித்து அழுகையையும் பயத்தையும் ஒரு சேர உள்ளே தள்ளியிருந்தாள். அவனை அற்பமாகப் பார்த்து வைத்தவள்,

“ஏன், நீங்க வேணா வந்து வாட்ச்மென் வேலை பாருங்களேன்...” என்றாள் இளக்காரமான தொனியில்.

அதில் எதிலிருந்தவனின் முகம் கோபத்தை தத்தெடுத்தது‌. “என்ன நக்கலா? என்னை நீ அட்ஜஸ்ட் பண்ணி போகாம, இங்க வேலை பார்க்க முடியாது...” என்றவனின் வக்கிரப் பார்வை தன்னை துகிலிரிப்பதை எண்ணி அருவருத்துப் போனவளுக்கும் உடலும் உள்ளமும் ஒரு சேர கசந்து போனது.

‘தன் தந்தை வயதிருக்கும் இந்த மனிதருக்கு. எப்படி என்னை அந்த மாதிரியொரு கண்ணோட்டத்தில் இவனால் பார்க்க முடிகிறது’ என்ற எண்ணம் தொண்டையை அடைத்தது.

“என் அப்பா வயசு இருக்கும் உங்களுக்கு. அசிங்கமா இல்லை, ஒரு பொண்ணு தனியா இருந்தா, இப்படியெல்லாம் பேசணும்னு தோணுமா? இத்தனை நாள் நீங்க செஞ்சதையெல்லாம் எல்லாரும் பொறுத்துக்கிட்டாங்க
என்றதுக்காக, என்கிட்டயும் நீங்க அட்வான்டேஜ் எடுத்து பேசலாம்னு நினைச்சுட்டீங்களா?” குரல் முழுவதும் கோபமும் அதைவிட ஆற்றாமையும் பொங்கி வழிந்தது. இவர்களைப் போன்ற சில கேடுகெட்ட ஜென்மங்களால் தான், பெண்கள் வெளியேறி வேலைக்குச் செல்ல கூட பயம் கொள்கின்றனர். இப்படிப்பட்டவர்களைப் பார்த்து பயந்து ஓடிக்கொண்டே இருப்பதால்தான், அவர்களின் திமிறும் செயல்களும் அடங்காமல் தொடர்கிறது.

‘எதிர்த்து பேசு, ஆண் என்ற அவனின் அகந்தயை அழி. உடைத்து நொறுக்கு. என்ன வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம்...’ என்று மூளையும் மனதும் கத்தியது.

“இனிமே இந்த மாதிரி பேச்செல்லாம் வச்சுட்டுப் பக்கத்துல வந்தீங்க...” என்றவளின் கைகள் அருகிலிருந்த பேனாவை எடுத்து மூடியை மூடித் திறந்தது. நிமிர்ந்து மீண்டும் அவனைப் பார்த்தவள், “சொல்ல மாட்டேன், செஞ்சுடுவேன். பெருசா ஒன்னும் இல்லை, என்னால என்ன முடியுமோ அதை செஞ்சு உங்களை அசிங்கப் படுத்திடுவேன். யார்கிட்டேயும் வெளிய தலை காட்ட முடியாத அளவுக்கு பண்ணிடுவேன். என்கிட்டன்னு இல்லை, கார்மென்ட்ஸ்ல யார்கிட்டேயும் நீங்க இப்படி நடந்துக்கக் கூடாது...” என்றவளின் குரலில் அவளை அலட்சியமாகப் பார்த்தான் எதிரிலிருந்தவன்.

“சே, பொம்பளை உனக்கே இவ்வளோ திமிறு இருக்கோ?” என்றவன் அவள் முன்னே கையை நீட்டி தோளைத் தொட முயன்றான். நூலிழை இடைவெளியில் யார்க் கண்ணையும் உறுத்தாத வகையில் அவன் கையில் பேனாவின் முனையை அழுத்தமாக சொருகியிருந்தாள் உமையாள். அலறினான் அவன், கைகளிலிருந்து இரத்தம் கசிந்தது.

“ஆஃப்டர் ஆல் பொம்பளை இல்லை, உன்னைப் பொத்தவளும் பொம்பளைதான், உன்னைக் கட்டுனவளும் பொம்பளைதான். உனக்கு பிறந்தவளும் பொம்பளை, அதைவிட உனக்கு மேல நூறு பொம்பளைங்க வேலை பார்க்குறாங்க...” என்றவள், “இதுதான் உனக்கு கடைசி வார்னிங். பார்க்க அமைதியா இருக்காளே, எது செஞ்சாலும் மான, அவமானத்துக்கு பயந்து வெளிய சொல்லாம இருப்பான்னு தப்புக் கணக்குப் போடாதீங்க. நான் வெளிய சொன்னாலும், சொல்லலைனாலும் இந்த சமூகம் என்னைக்கும் என்னை தூக்கி வச்சு கொண்டாடப் போறது இல்லை. அப்படியிருக்கும்போது உன்னை மாதிரி பொறுக்கீங்களுக்கு பயப்பட அவசியம் இல்லை...” என்று அருகிலிருந்த கிழிந்த துணியொன்றை அவர் மீது எறிந்து, “இரத்தம் வருது சார், பார்த்து கையையும், வாயையும் ஒழுங்கா வச்சுக்கோங்க...” என்றாள். குரலில் எரிச்சல் மண்டிக் கிடந்தது.

“இங்க நீ எப்படி வேலை பார்க்குறேன்னு நானும் பார்க்குறேன்...” என்றவன் வன்மத்துடன் நகர, அந்த அறையிலிருந்த சொற்ப ஆட்களும் நகர்ந்துவிட்டனர்.
(தொடர்ந்து கீழே படிக்கவும்)
 
Administrator
Staff member
Messages
997
Reaction score
2,810
Points
93

அப்படியே சுவற்றில் சாய்ந்து விழிகளை மூடியவளின் கண்கள் பனித்துவிட்டிருந்தன. உடலும் உள்ளமும் சோர்ந்து போனது. இது முதல்முறை அல்லவே! கடந்த ஆறு வருடத்தில் அவள் பார்த்திராத, கண்டிராத மனிதர்களா?

முதலில் பயந்து அஞ்சி நடுங்கியவள், ஒருநிலைக்கும் மேல் தாளாது எதிர்த்துப் போராட ஆரம்பித்திருந்தாள். தனக்கென யாரும் துணை நிற்கப் போவதில்லை என மனமும் மூளையும் உணர்ந்த கணம், தனக்குத் தானே வேலியாகிப் போனாள் பெண். இவனை விட பல மடங்கு வக்கிரப்புத்தி உடையவர்களை எல்லாம் கடந்து வந்துவிட்டாள்.

இருந்தும் மனம் சோர்ந்து போக, உடல் நடுங்கியது. அந்த பழைய வாழ்க்கை வேண்டாம் என்று தானே, தூக்கியெறிந்துவிட்டு, அமைதியான வாழ்க்கையொன்றின் பிடியில் வாழ்ந்துகொண்டிருக்கிறாள். இங்கேயும் இப்படிப்பட்ட கயவர்களால் நிம்மதி பறிபோகிறதே. இன்னும் எத்தனை தூரம்தான் இவர்களைக் கண்டு அஞ்சி ஓடுவது? இவர்களுக்கு எல்லாம் பெண்கள் வெறும் நகமும் சதையும் மட்டும்தானா? ஒரு பெண் தனியாக இருந்தால், எந்த எல்லைக்கும் சென்று அவளிடம் பேசலாமா? விலங்குளை விட மோசமான ஜீவன்கள் இவர்கள்.

ஏன் விலங்குகள் கூட, விருப்பத்துடன் தான் உறவு வைத்துக் கொள்ளும். ஆனால், இப்படிப்பட்ட மனிதர்களுக்கு பெண் என்ற வார்த்தையே போதும்...’ என்று நினைத்தவளுக்கு வாழ்க்கையே வெறுத்துப் போனது. இதுபோல நிகழ்வுகள் ஏற்படும் ஒவ்வொரு முறையும் நெஞ்சம் விம்மித் துடிக்கும்‌. அப்படியே அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்து விரல்களால் முகத்தை மூடியவளின் கண்ணிலிருந்து சூடான திரவமொன்று வெளியேறியது. உடல் அழுகையில் குலுங்க, தன்னை நினைத்தே கழிவிரக்கம் தோன்றி, மேலும் அவளை வலுவிழக்கச் செய்ததது. நடந்த நிகழ்வில் என்னதான் தைரியத்துடன் அவள் பேசிவிட்டாலும், உள்ளத்தில் பயபந்து சுழலாமல் இல்லை.

தனித்து நிற்பது போன்றொரு பிரம்மை, உண்மையும் அதுதானே. ஆரம்பத்தில் இருந்து அவளுக்கு அவள் மட்டும்தானே. இப்போது ஆராதனாவிற்கும் அவள் மட்டும்தான். தனக்கு எதேனும் நிகழ்ந்துவிட்டால், தானின்றி குழந்தை தனியாகிவிடுவாளே! ஆண் குழந்தையாக பிறந்து இருந்ததால் கூட, இத்தனை வலித்து இருக்காது. பாவப்பட்ட பெண்ணாக பிறந்துவிட்டாள். தன்னைப் போல அவள் எந்த ஒரு இடத்திலும் தனித்து நின்றுவிடக் கூடாது என பெற்ற உள்ளம் பதறி பரிதவித்துப் போனது.

அமைதியாய் நடந்த அனைத்தையும் அவதானித்துக் கொண்டிருந்த பிரபஞ்சனின் விழிகள் சோர்ந்து நிர்கதியாக நின்றிருந்த உமையாளின் ஓய்ந்த தோற்றத்தில் நிலைத்தது. விழிகள் கலங்கி, நடந்ததை ஏற்றுக்கொள்ள முயன்று தன்னைத் தேற்றிக்கொண்டிருந்தவளைக் கண்டு இவனுக்குள் ஏதோ ஒன்று சுக்கு சுக்காக உடைந்தது. இதயம் தனது துடிப்பை அதிகப்படுத்தியிருக்க, காரணமில்லாது மனம் முழுவதும் வலி வியாபித்தது. அவளருகே சென்று தோளணைத்து ஆறுதல் கூற மனம் பரபரத்தாலும், தனது கைகள் கூட நடுங்குவதை அப்போதுதான் உணர்ந்தான். இரண்டு கைகளையும் நன்றாய் மடக்கி நடுக்கத்தைக் குறைத்தவன், மரத்துப் போயிருந்த கால்களை கடினப்பட்டு நகர்த்தி அவளருகே சென்றான். அப்படியே அவளது உயரத்திற்கு குனிந்து நாற்காலிக்கு முன்னே அமர்ந்தான்.

அவன் அரவத்தை உணர்ந்த உமையாள் யாரென்று தெரியாது பயந்து, அஞ்சிப் போய் விழிகளைத் திறந்தாள். தனக்கு முன்னே அமர்ந்து இருப்பவனைக் கண்டு மனமும் முகமும் ஆசுவாசம்கொண்டது. அவளது பயந்த முகத்திலே பெண் எத்தனை கலவரத்திலுள்ளாள் என அவனால் உணர முடிந்தது. விழிகள் முழுவதும் நீரில் நனைந்து பயந்து போய் அமர்ந்து இருந்தவள்தான், இத்தனை நேரம் அப்படி பேசினாள் என ஒருவரும் நம்ப மாட்டார்கள்.

உமையாளின் விழிகளைத்தான் பார்த்திருந்தான் பிரபஞ்சன். அடிபட்ட குழந்தை ஆறுதலின்றி தவித்தது போல அமர்ந்து இருந்தவளைக் கண்டு சத்தியமாய் அவனும் கலங்கிப் போனான். உயிர் முழுவதும் அந்த நொடி உருகிப் போய் நின்றது அந்த கலங்கிய விழிகளைக் கண்டு, துவண்ட பெண்ணையும் கண்டு. இதயத்தில் இனம்புரியாத உணர்வொன்று சுரந்தது. தொண்டையைச் செருமி தன்னை சரிசெய்துகொண்டவன், “தண்ணியை குடிங்க...” என அவளிடம் நீர் பொத்தலை நீட்டினான்.

அந்நிய ஆடவன் முன்பு தான் இப்படி கண்ணீர் வழிய நிற்கிறோம் என புத்திக்கு உரைத்தாலும், உடல் அந்தக் கணத்தில் ஒத்துழைக்க மறுத்து சதி செய்தது. எதுவும் பேசாமல் எழுந்து நின்றவள், நடக்க முற்பட்டாள்.

பெருமூச்சோடு எழுந்த பிரபஞ்சனுக்கு அவள் சங்கடம் புரிய, “டென் மினிட்ஸ் கழிச்சு ரூம்க்கு வாங்க...” என்றுவிட்டு அறைக்குள் நுழைந்தவனுக்கு, அந்த மேற்பார்வையாளர் மீது அத்தனை கோபம் வந்தது. அதையும் விட, அவன் இப்படித்தான் இங்கு இருபது வருடத்திற்கு மேலே பணியில் இருக்கிறேன் என்ற பெயரில் பெண்களை தவறாகப் பயன்படுத்துகிறான் என்பதே தாமதமாக தன் கண்ணிலும் கருத்திலும் படுகிறது என தன்மீதும் கோபம் வந்தது.

சில நிமிடங்களில் தன்னை நிலைபடுத்தியவன், கோபத்தில் எதையும் செய்ய விரும்பவில்லை. அதற்காக அவனை அப்படியெல்லாம் விட்டுவிடும் எண்ணமும் இல்லை‌. என்ன செய்வது என தனக்குள் யோசித்து முடிவெடுத்துக்கொண்ட பிரபஞ்சனுக்கு, அப்போதுதான் ஒரு தெளிவு பிறந்திருந்தது.

அறைக் கதவை தட்டிவிட்டு உள்ளே நுழைந்தாள் உமையாள். முகம் முன்பை விட இப்போது தெளிந்திருந்தது. அவனுக்கு முன்னிருந்த இருக்கையில் அமர்ந்தவளின் வதனம் எப்போதும் போல அமைதியாய் இருக்க, பிரபஞ்சன்தான் அறுபது நொடிகளை அசாத்திரமாய் விழுங்கிய மௌனத்தைக் கலைத்தான்.

அவளை எப்படியாவது சகஜ நிலைக்குகொண்டு வரவேண்டும் என மனம் தவிப்பதைப் பிரபஞ்சன் மட்டுமே அறிவான். என்ன பேசுவது? எனத் தெரியாது தடுமாறி தன்னை சமாளித்தவன்,
“அவ்வளவு நேரம் தைரியமா பேசி பதிலடி கொடுத்த நீங்க, அப்புறம் ஏன் அழுதீங்க?” என வினவினான்.

அவன் கேள்வியில் உமையாளின் தலை கவிழ்ந்தது‌. அவள் வேண்டுமென்றே அழவில்லையே! தானாய் ஊற்றெடுக்கும் கண்ணீரை என்ன செய்து தடுப்பாள் அவள்? கோபத்தின் ஆற்றாமையின் மறு வெளிப்பாடு அது‌.

“இங்க, என்னைப் பார்த்து நிமிர்ந்து பதில் சொல்லுங்க. உங்க மேல இந்த விஷயத்துல எந்தத் தப்பும் இல்லையே! அப்புறம் ஏன் அப்படியொரு அழுகை?” என்றவனின் முகத்தைப் பார்த்தவளின் விழிகளில் மீண்டும் நீர் சுரந்தது. கீழிமையின் விளிம்பை தொட்டு வெளியேறத் துடித்த விழிநீரை அடக்கியவள் பார்வையை அவன் முகத்திலிருந்து அகற்றி சுற்றிலும் சுவரில் ஒட்டப்பட்டிருந்த புகைப்படத்தில் பதித்தாள். உள்ளத்தின் நடுக்கம் இப்போதும் குறைந்தபாடில்லை. இரண்டு கைகளையும் பத்து விரல்களையும் ஒன்றையொன்று கோர்த்துக்கொண்டு மடியில் வைத்து அழுத்தி பயத்தை விழுங்கியவளின் பார்வை இப்போது விரல்களில் படர்ந்தது. ஆனால், வாயைத் திறந்து ஒருவார்த்தைக் கூட பெண் உதிர்க்கவில்லை.

எதிரிலிருப்பவள் என்ன நினைக்கிறாள் என அவளது முகத்திலிருந்து கண்டறிய முடியாது தோற்றுப் போனவனிடம் இதுவரை இல்லாத பதற்றம் தொற்றிக்கொண்டது. இதற்கு முன் அவன் இது போன்ற சூழ்நிலையைக் கையாண்டது இல்லையே! என்ன பேசுவது? எப்படி பேசி அவளை இதிலிருந்து வெளியேகொண்டு வருவது எனத் தெரியாது தவித்தவனின் உள்ளத்தை இந்த பெண் கொஞ்சம் அதிகமாகப்படுத்தினாள்.
எதற்கு இத்தனை பரிதவிப்பு தனக்குள் என எண்ணி தொண்டையைக் கணைத்து,
“சாரி உமையாள்...” என்றவனைப் புரியாது நோக்கினாள் உமையாள்.

நடந்த நிகழ்வில் அவனுடைய தவறென்று எதையும் வரையறுக்க முடியாதே! பிறகு எதற்கு இந்த யாசிப்பான பார்வையும், மன்னிப்பும் என்ற கேள்வி அவளது விழிகளில் தொக்கி நின்றது.

“அது, இதுக்கு என்னோட கேர்லெஸ்ஸூம் காரணம். இந்த மாதிரி ஆட்களை வேலைக்கு வச்சது எங்களோட தப்புதான்...” என்றவனைப் பார்த்த உமையாளின் விழிகளில் விரக்திப் புன்னகை மிளிர்ந்தது. நடந்ததற்கு எந்த வகையிலும் சம்பந்தமே இல்லாத ஒருவன் மன்னிப்பு கேட்கிறான். தவறு செய்தவன் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு செல்கிறான்.

“பரவாயில்லை சார்...” உதட்டில் ஒட்டாத விழிகளை எந்த வகையிலும் எட்டாதப் புன்னகையொன்று வேண்டா வெறுப்பாய் உமையாளின் இதழ்களில் படர்ந்தது.

வேலை நேரம் முடிந்து எல்லோரும் கிளம்பியிருந்தனர். அப்போதுதான் ஆராதனா நினைவு வந்தது பிரபஞ்சனுக்கு. எப்போதும் போலிருந்தால், இந்த நேரத்துக்கு குழந்தையைத் தேடி உமையாள் ஓடியிருப்பாள் எனத் தோன்ற, அலைபேசியை எடுத்து ஆராதனாவை தனது அறைக்குள் அழைத்துவரப் பணித்தான்.

அப்போதுதான் குழந்தை நினைவில் வரவும், கன்னத்தில் காய்ந்திருந்த கண்ணீர் தடங்களைத் துடைத்துத் தன்னை இயல்பாக்கிக்கொண்டாள். கதவை திறந்து உள்ளே ஓடிவந்த ஆராதானாவை உமையாள் தூக்கி மடிமீது அமர்த்தவும், “அம்மா, எங்கப் போன? அம்மு உன்னைத் தேடுனா!” என்றாள் முகத்தை உம்மென்று வைத்தவாறே.

“அச்சோ, மதியம்தானே டா பார்த்தோம். அதுக்குள்ளேயும் அம்மு என்னைத் தேடிட்டாளா?” உமையாள் ஆச்சரியமாகக் கேட்பது போல வினவ, “ஆமா மா” என்ற ஆராதனா, தாயின் கன்னத்தில் முத்தமிட்டாள். இத்தனை நேரம் நடந்த நிகழ்வு, அழுகை, பதற்றம் என எல்லாமும் அந்த ஒற்றை முத்தத்தில் பெண்ணிடம் வடிந்துவிட்டிருந்தது.

குழந்தை முகத்தை இரண்டு கைகளாலும் பிடித்தவள், “அம்மாவும், அம்முவை மிஸ் பண்ணா...” என்று முகம் முழுவதும் முத்தமிட்டு, அவளை இறுக்கிக் கொள்ள, தாயின் கழுத்தில் முகத்தைப் புதைத்தாள் ஆராதனா. அவளது சிரிப்பு சத்தமும் உமையாளின் புன்னகை முகமும் அறையை மட்டுமல்ல, பிரபஞ்சனின் அகத்தையும் நிறைத்தது.

“அம்மா, அம்முவுக்கு லைட்டா பசிக்குது..‌.” தாயின் காதில் ரகசியமாய் கிசுகிசுப்பாய்க் கூறியவளின் குரல் பிரபஞ்சனுக்கும் நன்றாய் கேட்டிருந்தது. அதில் அவனின் முகத்தில் அழகான மென்னகை படர்ந்தது.

தனது மேஜையின் அலமாரியைத் திறந்து அதிலிருந்த இன்னட்டுகளையும், தனக்காக வாங்கி வைத்த ரொட்டிகளையும் எடுத்து இருவர் முன்பும் வைத்தான் பிரபஞ்சன். அதைப் பார்த்த ஆராதனா, “நோ, நோ... அம்முவுக்குப் பசிக்கலை...” என்று தாயுடன் ஒன்றினாள். பிரபஞ்சன் உமையாளைக் கெஞ்சலாகப் பார்க்கவும், “அம்மு, எடுத்துக்கோ...” என்றாள்.

“நோ ம்மா... வேணாம்...” குழந்தை தலையை இடம் வலமாக அசைத்தாள்.

“எடுத்து சாப்பிடு அம்மு” உமையாள் மீண்டும் கூற,

“போம்மா, இப்போ இப்ப சாப்பிட சொல்லிட்டு, வீட்டுக்கு வந்து அம்முவை திட்டுவ, அவ கூட சண்டை போடுவ... வேணாம்...” குழந்தை சத்தமாகக் கூற, அவளது கூற்றில் இருவருக்கும் சிரிப்பு வந்துவிட்டது. பிரபஞ்சனும் உமையாளைத்தான் பார்த்திருந்தான். இத்தனை நேரம் அழுகையில் குளித்திருந்த முகம் இப்போது மலர்ந்து புன்னகைக்கவும், மனதினோரம் ஏனேன்றே தெரியாத ஆசுவாசம் பிறந்து தொலைத்தது.

“திட்ட மாட்டேன் டி, எடுத்து சாப்பிடு‌. நான் தானே உன்னை சாப்பிட சொல்றேன்...” உமையாள் இரண்டு மூன்று முறை அழுத்திக் கூறவும் எட்டி இனிப்பை எடுத்தவள், அதை அறைகுறையாய்ப் பிய்த்து உண்ண ஆரம்பித்தாள்.

நேரமாவதை உணர்ந்த உமையாள், “சார், நாங்க கிளம்புறோம்...” என எழுந்தாள்.

தானும் எழுந்த பிரபஞ்சன், “நீங்க தப்பா நினைக்கலைன்னா, நான் உங்களை வீட்ல ட்ராப் பண்றேன்...” என்றான்.

“நான் ஓகேதான் சார், பஸ்லயே போய்க்கிறேன்...” என்றவளுக்கு, பிரபஞ்சனும் ஒரு ஆண்தானே என்ற எண்ணம் மனதில் துளிர்த்தது. இப்போது அவளிருக்கும் சூழ்நிலையில் யாரை நம்புவது, சந்தேகப்படுவது எனத் தெரியவில்லை. வெளியில் ஒரு முகமும் உள்ளே ஒரு முகமும் வைத்துக்கொண்டுதான் ஏராளமானோர் அலைகின்றனர்.

“ஓகே, ஒன் மினிட்...” என்றவன், சிறிய காகிதம் ஒன்றை எடுத்து அதில் தன் அலைபேசி இலக்கத்தை எழுதி அவளிடம் நீட்டினான்.

“உங்களுக்கு எதுவும் பிராப்ளம்னா, ஐ மீன் எதுவும் உதவி வேணும்னா, இந்த நம்பருக்குத் தயங்காம கால் பண்ணுங்க...” என்றவனின் குரலில் துளியும் கள்ளமில்லை. உண்மையான அக்கறையுடன்தான் கூறினான்‌. இருந்தும் உமையாள் தயங்கி நிற்க,

“எல்லாரும் அவனை மாதிரி இருக்குறது இல்லைங்க. உங்களோட சேஃப்டிக்காகத்தான் சொல்றேன். வாங்கிக்கோங்க ப்ளீஸ்...” குரல் இறைஞ்சியது. விழிகளும் கூட என்னைப் புரிந்து கொள்ளேன் என்பதைப் போலத் தோன்ற, “சாரி சார், அது... என்னால யாரையும் நம்ப முடியலை...” திக்கித் திணறி கூறினாள்.

அதில் ஆடவனின் முகம் மென்மையானது. அவளது அலைப்புறுதல்களை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. தலையை மட்டும் அசைத்தவனின் கையிலிருந்த காகிதத்தைப் பெற்றுக்கொண்டு உமையாள் நடக்கவும், அவள் கையிலிருந்த ஆராதனா திரும்பி அவனிடம் கையை அசைத்தாள். பற்களில் ஆங்காங்கே இன்னட்டு ஒட்டியிருந்தது‌. இவனுக்கும் அதில் புன்னகை அரும்பியது. குழந்தையிடம் எதையோ முணுமுணுத்துக்கொண்டே சென்றவளையும் சேர்த்து அகம் தன்னால் பதிந்துகொண்டது.

உமையாள் சென்றதும் நாற்காலியில் பொத்தென அமர்ந்தவனுக்குப் பெரிய அலையொன்று அடித்து ஓயந்ததைப் போலொரு அமைதி. நீண்ட பெருமூச்சை வெளிவிட்டான். தன்போல் கரங்கள் முன்னெற்றியை அழுத்தித் தேய்த்துக் கொள்ள, அகத்தையும் விழிகளையும் சேர்த்து நிறைத்தது உமையாளின் கலங்கிய விழிகளும் ஓய்ந்த தோற்றமும்‌‌.

“ச்சு...” என்றவன் வீட்டை நோக்கிப் பயணித்தான். மனது குழம்பிய குட்டையாகியிருந்தது கடந்த ஒருமணி நேரத்தில். வீட்டிற்கு சென்று அங்குமிங்கும் அலைந்தவன், நினைவு வந்தவனாக மங்கைக்கு அழைத்துத் திக்கித் திணறி எதை எதையோ கூறி, பின் உமையாள் வீட்டிற்கு வந்துவிட்டாளா? எனக் கேட்டு உறுதிபடுத்திய பிறகே மனம் சமாதானம் அடைந்து தொலைத்தது.

தொடரும்...






 
Well-known member
Messages
409
Reaction score
303
Points
63
பாவம் உமா, அந்த ஆளுக்கு என்ன தண்டனை தரப் போறான்?
 
Active member
Messages
131
Reaction score
89
Points
28
ஆஃப்ட்ரால் நீ ஒரு பொண்ணு ‌.‌...ஸ்ஸஸோ!!! இதைக் கேட்டாலே எரிச்சலாகத் தான் வரும். நம்மளோட வாழ்க்கையிலேயும் இப்படிப் பேசும் போது நல்லா நாலு வார்த்தைக் கேட்டு விட்ருவோம்‌. அப்போ தான் ஆறுதலாக இருக்கும். இதோ இப்போ உமையாள் கேட்டாளே? அந்த மாதிரி.‌‌.. 🙌
 
Well-known member
Messages
610
Reaction score
346
Points
63
Prabha avana enna panna poran nu theriyala atho perusa panna poran athu ennaa oru poonu thaana uma ne nallatha ketta evanuku la ethu veynum thaa😠😠 papa va pathathum uma normal agida 🤩🤩enga prabha ku tha onum puriyala 😁😁
 
Active member
Messages
113
Reaction score
59
Points
28
உமை சூப்பர்... 👍❤️ இந்த மாதிரி ஜென்மங்களால் எல்லா இடத்துலயும் பெண்களுக்கு தொல்லை தான்.... உமா பயப்படாம தைரியமா அவனை ஓட விட்டது சூப்பர்...🤩 பிரபா மனசு அலை பாய ஆரம்பிச்சுடுச்சு... 🤭🤭🤭
 
Top