• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
997
Reaction score
2,810
Points
93
நெஞ்சம் – 6 ❤️

மெதுவாய் நாட்கள் நகர்ந்துகொண்டிருந்தன. உமையாள் அன்று குழந்தையிடம் கூறியதைப் போலவே அந்த மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமை, இருவரும் அருகே உள்ள பூங்காவிற்கு சென்றனர். பதினைந்து நிமிட தொலைவுதான். பெரிதாய் தூரம் இல்லை என்பதால் தாயும் மகளும் பேசிக்கொண்டே பூங்காவிற்குள் நுழைந்தனர்.

“அம்மா... ஊஞ்சல் வேணும் அம்முவுக்கு” ஊஞ்சலை நோக்கி ஓடிய ஆராதனா கையைக் காட்டினாள்.

“மெதுவா அம்மு, கீழே விழுந்துடாத டா...” குழந்தையோடு நடந்தவள், ஊஞ்சலில் மகளைத் தூக்கி அலுங்காமல் அமர வைத்தாள். ஆராதனா இரண்டு கம்பிகளையும் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள, உமையாள் அவளை மெதுவாய் ஆட்டிவிட ஆரம்பித்தாள்‌. குழந்தை சிரித்துக்கொண்டே முன்னும் பின்னும் சென்று வந்தாள். அருகே வரும்போது உமையாளின் துப்பட்டாவை வேறு தொட்டு தொட்டு சிரிக்க, மகளின் சிரிப்பு தாய்க்கும் தொற்றிக்கொண்டது. நீண்ட நாட்களுக்குப் பிறகு சேலையை விடுத்து சுரிதார் அணிந்திருக்கிறாள். லேசாகக் கூச்சம் வேறு எட்டிப் பார்த்தது. அமுதாதான் அரட்டி உருட்டி சுரிதாரை அணியச் செய்தாள்.

“நூத்துக் கிழவி மாதிரி சேலையையே கட்டீட்டு திரியாத டி. ஒழுங்கா நாலு செட் சுடிதார் எடுத்துப் போடு..‌.” அமுதா கூறியதும், உமையாளுக்கும் பழைய நினைவுகள் துளிர்த்தது‌. ஆரம்ப காலத்தில் தாவணி அணிந்து வேலைக்குச் சென்றாலும், கால மாற்றத்தில் எல்லோரும் சுரிதார் அணிய, தானும் அணியப் பழகியிருந்தாள். அன்று முதல்நாள் சுரிதார் அணிந்தப் போதிருந்த கூச்சம் இப்போதும் பெண்ணை தொற்றிக்கொண்டது. முதலில் தயங்கி தயங்கி நடந்தவள், யாரும் தன்னைக் கவனிக்கவில்லை என்ற ஆசுவாசத்தில் நடந்தாள். பின்னர் சிறிதுநேரத்திலே உடையைப் பற்றிய பிரக்ஞை மறந்து போயிருந்தது அவளிடம்.

“அம்மா, ஃபாஸ்ட்டா ஆட்டு மா...” என ஆராதனா கூற, “போதும் டா பட்டூ, கீழே விழுந்துடுவ” மிதமான வேகத்தில் ஊஞ்சலை இயக்கினாள் உமையாள்.

சிறிது நேரத்திலே ஊஞ்சலிலிருந்து இறங்கிய குழந்தை, அங்கே விளையாடும் மற்ற குழந்தைகளுடன் ஒட்டிக்கொண்டாள். நான்கு வாரங்கள் வந்ததால் ஏற்ப்பட்ட நட்பு அது. குழந்தையைக் கண்பார்வையிலே விளையாட அனுமதித்தவள், அங்கு ஓய்விற்காகப் போடப்பட்டிருந்த கல் நாற்காலி ஒன்றின் ஓரத்தில் அமர்ந்தாள். தன்னுடைய சிறு வயது ஞாபகங்களை மீட்டிப் பார்த்தாள். பெரிதாய் சந்தோஷம் கொள்ளுமளவிற்கு ஏதுமில்லை‌.

ஆண்கள் இருக்கும்போது வீட்டில் பெண்கள் சத்தமாகப் பேசக் கூடாது, அங்கும் இங்கும் ஓடி விளையாடக் கூடாது என தாயின் அறிவுரைகளைக் கேட்டு கேட்டு வீட்டில் சிரிப்பு சத்ததிற்குக் கூட பஞ்சமாகிப் போனதென்னவோ உண்மை. பிறந்த வீட்டில் தான் எப்போது சந்தோஷமாக இருந்தேன் என நினைவடுக்கில் தேடிப் பார்த்தால், விடை என்னவோ சுழியம்தான். பெரும்பாலும் வீட்டில் எதாவது வேலை இருந்துகொண்டே இருக்கும். இல்லையென்றால், புத்தகத்தை எடுத்துப் படிக்க அமர்ந்துவிடுவாள் உமையாள். படிக்க வேண்டும் என நெஞ்சம் முட்டும் அளவிற்கு ஆசையிருந்தாலும், வீட்டில் பத்தாம் வகுப்புடன் அவளை நிறுத்தி விட்டிருந்தனர்.

“அடுத்த வீட்ல போய் வாழப் போறவளுக்கு என்னத்துக்குப் படிப்பு? பேசாம வேலையைக்குப் போ உமா...” என்று தனது தாயின் பேச்சு நினைவில் வந்தது. அவ்வளவுதான், அவர் கூறியது போல பத்தாம் வகுப்பு முடிந்ததும், உமையாள் அருகில் உள்ள தீப்பெட்டி நிறுவனம் ஒன்றிற்கு வேலைக்குச் செல்ல கட்டாயப்படுத்தப்பட்டாள் என்பதே உண்மை. அதன் பின் வேலையின் பின்னே ஓட வேண்டிய கட்டாயம்.

அவள் சந்தோஷமாக இருந்த நாட்கள் என்றால், பள்ளிப்பருவம் மட்டும்தான். பள்ளியில் சக தோழிகளுடன் சிரித்து விளையாண்ட அனுபவம் மனதில் கொஞ்சம் பசுமையாய் இருந்தது. மென்னகை உதட்டில் படர, குழந்தையின் மீது கவனத்தைப் பதித்திருந்தவளின் அருகே வந்தமர்ந்தார் சாரதா.

மூளையின் எச்சரிக்கை உணர்வில், மனதின் இயல்பான உந்துதலில் அவரைத் திரும்பிப் பார்த்தாள் உமையாள்.‌ சாரதாவும் அவளைப் பார்க்க, மெலிதாகப் புன்னகைத்தார். இவளும் பதில் புன்னகை புரிந்தாள்.

“ஊருக்குப் புதுசா மா?” பெரியவர் வினவவும், “ஆமா மா...” தலையை அசைத்தாள் உமையாள்.

“யார் கூட வந்திருக்க மா? தனியா வந்து இருக்கீயா?” சாரதா கேட்க, முதலில் யாரென தெரியாது எப்படி அவரிடம் பேசுவது எனத் தயங்கியவளுக்கு அவரைத் தவறாக எண்ணத் தோன்றவில்லை. சாந்தமான முகம், பேச்சிலும் எந்த விகல்பமும் அவரிடம் இல்லை. பேருந்து பயணத்தின் போது அருகே அமர்ந்து வரும் சகபயணி போலொரு தோற்றம் அவரிடம்.

“குழந்தையோட வந்து இருக்கேன் மா, அவ அங்க விளையாடுறா மா...” என்ற உமையாளின் கரங்கள் அங்கே கூட்டமாய் விளையாடும் குழந்தைகளை நோக்கி நீண்டது.

“கல்யாணம் ஆகிடுச்சா மா, பார்க்க சின்ன பொண்ணு மாதிரி இருக்க.‌..” சாரதா கூறவும், அவரை சங்கடத்துடன் பார்த்தாள். சுரிதார் அணிய வேண்டாம் என உமையாள் நினைத்ததற்கும் இதுதான் காரணம். திருமணத்திற்கு முன்பு கூட கொஞ்சம் பூசினாற் போலிருந்தாள். ஆனால், அதற்குப் பின்னே நிற்க நேரமில்லாமல் ஓடியது, அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகள் என அவளை உருக்கியிருந்தது. மெலிந்த தேகமும் நடுத்தரமான உயரமும் அவளை சிறுபிள்ளையாகக் காண்பித்தது.
என்ன பதில் சொல்வது எனத் தெரியாது சிரித்தாள் பெண்.

“உன் ஹஸ்பண்ட் என்ன பண்றாரு மா? வீடு எங்க இருக்கு?” இயல்பாக அவர் வினவ, நொடியில் உமையாள் முகம் மாறிவிட்டிருந்தது.

“அது... அது வந்து மா, எனக்கும் அவருக்கும் ஒத்து வரலைன்னு பிரிஞ்சுட்டோம் மா...” என்று அந்தப் பேச்சை வெட்டினாள். அவளது முகபாவத்தை வைத்தே தன் அனுபவத்தில் கணித்த சாரதா, அவளது கையை ஆதரவாகப் பற்றினார்.

“இதை சொல்ல ஏன் மா உனக்குத் தயக்கம். ஒத்து வரலை, புரிதல் இல்லைன்னா, திருமண வாழ்க்கையில இருந்து ஒரு பொண்ணுங்க பிரிஞ்சு வர்றது எல்லாம் தப்பு இல்லை. கண்டிப்பா உன்னால அங்க இருக்க முடியாதுன்றதால தானே பிரிஞ்சு வந்திருப்ப. இதே உன்னோட ஹஸ்பண்ட் கிட்டே இந்தக் கேள்வியைக் கேட்டா, தயங்கி பதில் சொல்லுவாரா என்ன? இல்லைல, அப்புறம் என்ன உனக்கு மட்டும் தயக்கம்? இது உன் வாழ்க்கை, உனக்காக தானே வாழ்ற. இனிமே யார் கேட்டாலும் தயங்காம சொல்லணும்...” என்றவரின் முகத்தைப் பார்த்த உமையாளுக்குப் பேச்சே வரவில்லை. கண்டிப்பாக இவருக்கும் தன் தாய்க்கும் ஒரே வயதுதான் இருக்கும். தன் தாயைப் போன்றொரு அந்தக் காலத்து பெண்ணுக்கு எப்படி இத்தனை புரிதல். இவருக்கு இருக்கும் தெளிவு தன் தாய்க்கு ஏன் இல்லை. நானே கண்கெட்டப் பின்தானே சூர்யநம்ஸகாரசம் செய்தேன். ஆறு வருடங்கள் அந்த சிறை வாழ்க்கையில் வாழ்ந்துவிட்டு தானே வேண்டாம் என்று வெட்டிவிட்டு வந்தேன்?’ என நினைத்தவளின் விழிகளில் லேசான நீர்படலம் கோர்த்தது.

“உன்னைப் பார்க்கும் போது அப்படியே சின்ன வயசுல என்னைப் பார்க்குற மாதிரி இருந்துச்சு. அதான் மா என் மனசுல பட்டதை சொல்லிட்டேன்...” புன்முறுவல் பூத்தவரைப் பார்த்தவள், “பரவாயில்லை மா...” என நொடியில் தன்னை மீட்டுக்கொண்டாள்.

“உன்னைப் பத்தியே கேட்குறேன் பார். நான் இங்கதான் அரைமணி பக்கத்துல சிவகாமி நகர்ல குடியிருக்கேன். என் பையனுக்கு இன்னைக்கு பிறந்தநாள்னு கோவிலுக்குப் போனோம். இடையில ஏதோ வேலை வந்துடுச்சுன்னு அவன் என்னை கார்ல அனுப்பிட்டு ஆட்டோ பிடிச்சு போறேன்னு சொன்னான். நான்தான் இங்க இருக்க பார்க்ல உட்கார்ந்து இருக்கேன், நீ வேலையை முடிச்சுட்டு வாடான்னு அனுப்பிவிட்டேன். நான் இங்க இருந்தா தான், வேலையை சீக்கிரம் முடிச்சுட்டு வருவான். இதே என்னை வீட்டுக்கு அனுப்பிட்டா, லேட்டாக்குவான்...” என்றவர் கூறவும், உமையாள் சிரித்தாள். அவரிடம் பேசிக்கொண்டிருந்தாலும், விழிகள் குழந்தையைத் தான் சுற்றி வந்தன.

விளையாடி களைத்துப் போன ஆராதனா, “அம்மா, தண்ணீ வேணும்...” என அவளருகே வந்தாள். தன் கைப்பையிலிருந்த தண்ணீரை உமையாள் மகளிடம் கொடுக்க, சிந்தி சிதறி குடித்து முடித்தவள், தாயருகே ஒரு பெண்மணி இருக்கவும், அவரைப் பார்த்து விழித்து உமையாளின் புறம் நகர்ந்தாள்.

“உன்னோட பொண்ணா மா?” எனக்கேட்ட சாரதாவிற்கு உமையாளை தன்னுடைய இடத்தில் பொறுத்தி, ஆராதனாவை பிரபஞ்சன் இடத்தில் பொறுத்திப் பார்க்க தோன்றியது.

“பாட்டி கிட்ட வாங்க குட்டி...” அவர் கையை நீட்ட, தாயை நிமிர்ந்து பார்த்தாள் குழந்தை‌.

“பாட்டி டா பட்டூ, போங்க...” என்கவும், புது மனிதரைக் கண்டு வெட்கம் கொண்டு மெதுவாய் அவரருகே ஆராதனா செல்ல, குழந்தையைத் தூக்கி கொஞ்சினார் சாரதா.

“குழந்தைக்கு கொடுக்க எதுவுமே இல்லையே!” என்றார்.

“பரவாயில்லை மா” என்ற உமையாள் கைக்குட்டையால் வியர்வை வடிந்திருந்த மகளின் முகத்தைத் துடைத்துவிட்டாள்.

சாரதா தன் அலைபேசியை எடுத்து பிரபஞ்சனுக்கு அழைத்தார். அழைப்பு ஏற்கப்பட,
“இதோ வந்துட்டேன் மா, ஃபைவ் மினிட்ஸ்...” என்றான்.

“சரி, சரி பொறுமையா வா டா. வரும்போது சாக்லேட் வாங்கிட்டு வா டா. இங்க ஒரு குட்டியும் அம்மாவும் எனக்கு ஃப்ரெண்ட்ஸா கிடைச்சு இருக்காங்க...” என்று சாரதா கூறவும், மகன் முகத்தில் புன்னகை.

“அது சரி, அப்படியே செட்டிலாகிடுவீங்களே. பேச ஆள் கிடைச்சா போதும் உங்களுக்கு...” அலுத்துக் கொள்வது போல பேசியவனின் உதட்டில் புன்னகை இருந்தது.

“போடா... சீக்கிரம் வா‌...” சாரதா சிரிப்புடன் அழைப்பைத் துண்டித்தார்.

“சாக்லேட் எல்லாம் எதுக்கு மா?” உமையாள் சங்கடப்பட, “அதனால என்ன மா, என் பையனுக்கு பிறந்தநாள். அதான் குட்டிக்கு சாக்லேட். இப்போ ஓகே வா?” என்று சாரதா கேட்கவும், பெண் புன்னகைத்தாள்.

பிரபஞ்சன் வழியில் மகிழுந்தை நிறுத்தி ஒரு கடையில் குழந்தைக்கு இன்னட்டை வாங்கிக்கொண்டு உள்ளே நுழைந்தான். அம்மாவுடன் யாரோ ஒரு பெண் பேசிக்கொண்டிருக்கிறார் என நினைத்து உள்ளே நுழைந்தவனுக்கு உமையாளின் பின்புறம் மட்டும் தெரிந்ததால், அவளை அடையாளம் தெரியவில்லை.

பிரபஞ்சன் அருகில் வரவும், “இதோ என் பையன் வந்துட்டான் மா...” என சாரதா கூறவும், அவன் அருகில் வந்திருந்தான். சுரிதாரில் உமையாளைக் காணவும் ஒரு நொடி நெற்றியைச் சுருக்கியவன், பின் முகத்தை மாற்றிக்கொண்டான். அவனை அங்கு எதிர்பாராது திகைத்தவள் எழுந்து நின்றுவிட்டாள். இதழ்கள் தானாகவே பழக்க தோஷத்தில், “சார்...” என்றது.

“இப்போ நம்ம கார்மெண்ட்ஸ்ல இல்லை, நான் உங்களோட பாஸும் இல்லை...” என்றவன் மெலிதாகப் பற்கள் தெரிய சிரித்தான். உமையாள் முதலில் விழித்துப் பின் தலையை அசைக்க, “இந்தப் பொண்ணை உனக்கு ஏற்கனவே தெரியுமா டா பிரபா?” என சாரதா இடை புகுந்தார்.

“நம்ம கார்மெண்ட்ஸ் ஸ்டாப் தான் மா...” என்றவன் ஆராதனாவை நோக்கி கையை நீட்ட, தாயைக் கண்டவள், அவனிடம் தாவினாள். ஏதோ பலநாள் பழகியது போன்றிருந்தது அவன் குழந்தையைத் தூக்கியவிதம்.

“அட, நம்ம கார்மெண்ட்ஸ்ல தான் வேலை பார்க்குறீயா மா?” என்று சாரதா வினவ, “ஆமா மா” பதிலளித்தாள் உமையாள்.

“இவ்வளோ நேரம் அது தெரியாமலே பேசிட்டு இருக்கோம்
பாரு மா...” என்ற சாரதாவின் பேச்சு முன்பைக்கு விட இப்போது வெகு உரிமையுடன் வந்தது.

“அம்மா போகலா மா?” பிரபஞ்சன் வினவ, ஆராதனா அவன் தோளில் ஒய்யாரமாக சாய்ந்தவாறே இன்னட்டை ருசித்துக் கொண்டிருந்தாள்.

“போகலாம் பா.‌..” என்றவருக்கு நீண்ட நேரம் உட்கார்ந்து இருந்ததால், கால் நமநமத்துப் போயிருந்தது. எழ தடுமாறியவரைத் தாங்கி பிடித்திருந்தாள் உமையாள்.

“பார்த்து மா, என் தோளைப் பிடிச்சுக்கோங்க...” என்றவள் பதறவும், “ஒன்னும் இல்லை மா, ரொம்ப நேரம் உட்கார்ந்தா, இப்போ எல்லாம் சட்டுன்னு எழுந்திரிக்க முடியலை...” என புன்னகைத்தவருடன் தானும் நடந்தாள். அமைதியாய் இருவரையும் பார்த்த பிரபஞ்சன் குழந்தையுடன் முன்னே நடந்தான்.

இன்னட்டை சுவைத்து முடித்த ஆராதனா, அப்போதுதான் நினைவு வந்தவளாக, “எதுக்கு சாக்கி?” என வினவினாள்.

“அது, இன்னைக்கு எனக்கு பெர்தடே, அதான் அம்முவுக்கு சாக்லேட்...” என்றான். குழந்தை புரிந்ததைப் போல தலையை அசைத்து, அவன் தோளில் முகத்தை சாய்த்தாள்.

பிரபஞ்சனின் மகிழுந்து வந்ததும், சாரதா உள்ளே ஏறி அமர்ந்தார். “நீ எங்கப் போகணும் மா, வா நாங்க இறக்கி விட்டுட்டுப் போறோம்...” என்றார்.

“இல்லை மா, பக்கத்துலதான் நாங்க போகணும். நடந்தே போய்க்கிறோம்...” என்றவளின் கரங்கள் ஆராதனாவை தூக்கியது.

“சரி மா, பார்த்துப் போய்ட்டு வாங்க...” என்ற சாரதாவிற்கு தலையை மென்னகையுடன் அசைத்தாள் உமையாள்.

அவளின் கழுத்தில் ஒரு கையைச் சுற்றிப் போட்டிருந்த ஆராதனா, திடீரென முன்பக்கமிருந்த பிரபஞ்சன் பக்கம் குனிந்து விட, இதை எதிர்பாராத உமையாளும் இழுபட்டாள். பிரபஞ்சன் குழந்தையை சிரிப்புடன் காண, தன் பிஞ்சுக் கரங்களால் அவனை லேசாக இழுத்தவள், “ஹேப்பி பர்த் டே அங்கிள்...” என்று அவன் கன்னத்தில் முத்தமிட, ஒரு நொடி உடல் சிலிர்த்துப் போனவன் உதட்டில் பெரிய புன்னகை வந்து அமர்ந்துகொண்டது.

“தேங்க் யூ அம்மு...” என்றான் ஆடவன்.

“அம்மா என் பெர்த் டேக்கு இப்படித்தான் செய்வா...” குழந்தை பற்களைக் காட்டவும், அவளை வாஞ்சையுடன் பார்த்தான் பிரபஞ்சன். பின்னர் அவன் பார்வை உமையாளிடம் தாவ, ஒரு நொடி தயங்கியவள், “ஹேப்பி பர்த் டே சார்...” என்றாள்.

“தேங்க் யூ‌‌...” மெல்லிய முறுவலுடன் பிரபஞ்சன் தலையை அசைக்க,

“அதென்ன மா சார், அங்க மட்டும்தான் அவன் உனக்கு சார். இங்க என்னோட பையன் மட்டும்தான்...” என்ற சாரதாவை உமையாளுக்கு நிறைய நிறைய பிடித்தது‌‌. அத்தனை பெரிய ஆடையகத்திற்கு சொந்தக்காரர். ஆனால், பேச்சில் உடையில், நடந்து கொள்ளும் விதத்தில் என எதிலுமே பகட்டு இல்லையே. அவருக்குப் பதில் கூறாதவள் புன்னகைக்க, இருவரும் விடை பெற்றனர்.

குழந்தையை கீழே இறக்கி, அவளது காலணிகளை சரியாய் அணிந்துவிட்டவள், “அம்மு பசிக்குதா?” என வினவினாள்.

“அம்மு வயித்துல சாக்கி இருக்கு மா. பசிக்கலை...” குழந்தை வயிற்றைத் தொட்டுக் காண்பித்து சிரிக்கவும், “சரி வீட்ல போய் சாப்பிடலாம்...” என நிழலாக இருந்த பகுதியில் மெதுவாக நடை போட்டாள். நெஞ்சம் சாரதாவின் வார்த்தைகளில் நெகிழ்ந்திருந்தது. அவரது ஆறுதலான பேச்சும், செய்கையும் மனது களிப்புடன் ஏற்க, சிறிது நேரம் பேசினாலும் நெருக்கமாகிப் போன உணர்வு அவளுக்கு.

“ரொம்ப நல்ல பொண்ணா தெரியுறா. அமைதி, கேட்ட கேள்விக்குத்தான் பதில் சொல்றா...” சாரதா கூற, ‘ஆமாம்...’ என்பது போல தலையை அசைத்தான் பிரபஞ்சன்.

“ஆனால் பாரு, நல்ல வாழ்க்கை அமையலை. கட்டுனவன் சரியில்லை போல, குழந்தையோட தனியா இருக்கா...” சாரதாவின் குரலில் உண்மையான வருத்தம் தொனித்தது. பிரபஞ்சன் மௌனமாய்க் கேட்டுக்கொண்டான்.

“பரவாயில்லை டா, இப்போ இருக்க பொண்ணுங்களுக்கு எல்லாம் தைரியம் அதிகம். தனியா குழந்தையைப் பார்த்துக்கிட்டு இருக்காளே, பாராட்ட வேண்டிய விஷயம்...” என்றவர், “பிடிக்காத வாழ்க்கையை சகிச்சுட்டு வாழணும்னு அவசியம் இல்லைன்னு இப்போதான் எல்லாருக்கும் புரியுது...” என்றார்.

“அவங்களை பாராட்ட முன்னாடி, என் அம்மாவைதான் அப்போ பாரட்டணும்...” என்றவன் முகத்தில் தாயை நினைத்து பெருமிதம்தான். எத்தனை வருடங்கள் தந்தையில்லாமல் தன்னை தனியாளாக கஷ்டப்பட்டு ஆளாக்கி, சாரதா கார்மெண்ட்ஸ் என்ற ஒரு நிறுவனத்தையே தன் கைக்குள் வைத்திருந்தார். நினைக்கவே அத்தனை பெருமை. பிரபஞ்சனும் தாயின் கஷ்டம் உணர்ந்தவன், அவருக்கு ஆதரவாகத்தான் எல்லா விதத்திலும் இருந்திருக்கிறான்.
மகன் கூற்றில் சாரதாவிற்கு புன்னகை.

பிரபஞ்சன் அலைபேசி இசைத்தது. அதை எடுத்து அவன் காதிற்கு கொடுத்ததும், “டேய் நாயே! எவ்வளோ நேரம் வெயிட் பண்றது. பிரியாணி ஆறிப் போய் அவலாகிடும் டா. உனக்கு பெர்த் டேன்னா, நீ லேட்டா வரலாமோ? சீக்கிரம் வந்து தொலையும்...” எதிரிலிருந்தவனைப் பேச விடாது கோகுல் மூச்சு வாங்கப் பேசி இணைப்பை துண்டிக்கவும், இருவருக்கும் சிரிப்பு தொற்றிக் கொண்டது. இரண்டு மணி நேரத்திற்கு வீட்டின் வாயிலை மிதிக்கக் கூடாது என இருவரையும் மிரட்டி காலையில் வீட்டிலிருந்து அனுப்பியவன் கோகுல் தான். கண்டிப்பாகத் தன் பிறந்த நாளுக்காக வீட்டை எதாவது படுத்தி எடுத்து வைத்திருப்பான் என்ற புன்னகையுடன் பிரபஞ்சனும் சாராதவும் வீடு நோக்கி பயணப்பட்டனர்.

தொடரும்...





 
Active member
Messages
131
Reaction score
89
Points
28
இவங்களைப் பிரபஞ்சனோட அம்மாவுக்கும் பிடிச்சுப் போச்சு... ஆனால் இன்னும் உமையாளோட முழுக்கதை தெரியலையே? இவளோட வாழ்க்கை இன்னும் மேலே போகும் போது வில்லனாக அந்த முன்னால் கணவன் வந்துடுவானோ? ❤️
 
Well-known member
Messages
610
Reaction score
346
Points
63
Ippo Irukura poonugala thairiyam athigam avagala panna mudiyathu athuyum illa Gokul enna panni irukan break vitama pesidu 😍😍
 
Top