• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
997
Reaction score
2,810
Points
93
நெஞ்சம் – 22 ❤️

நாட்கள் நீரோடைப் போல தெளிவாய் சென்றுகொண்டிருந்தது‌. உமையாளுக்கும் பிரபஞ்சனுக்கும் ஆடைத் தயாரிப்பகம், வீடு என இரண்டிலும் நேரம் முழுமையாய்த் தொலைந்து போனது. அவ்வப்போது இருவரும் ஒருவரில் ஒருவர் தொலைந்து போயினர்.

ஆராதனா அப்பா, அப்பா என பிரபஞ்சனை சுற்றி வர, இப்போது உமையாள் மட்டுமல்ல சாரதா, பிரபஞ்சனின் உலகம் கூட குழந்தையை சுற்றி நகரத் துவங்கியது.

அவ்வப்போது யாராவது உமையாளைப் பற்றி புறம் பேசினாலும், அதையெல்லாம் அவள் பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை. அவர்களுக்குத் தன்னைப் போல அன்பான கணவனும், அழகான வாழ்க்கையும் கடவுள் கொடுக்கவில்லை. அதனால் அவர்களது ஆதங்கம் வார்த்தையாய் வெளிப்படுகிறது என நினைத்து நகர்ந்துவிடுவாள்.

உமையாள் இப்போது வாழும் வாழ்க்கை அவளுக்கு அத்தனை நிறைவு கொடுத்தது. நிம்மதியைக் கொடுத்தது. சந்தோஷம் என்பது வேறு, நிறைவு என்பது வேறு என இரண்டையும் ஒன்றாய் அனுபவித்தாள் பெண். பிரபஞ்சன் அருகில் அவளுக்கு அத்தனை பாதுகாப்புகிட்டியது. மனைவியையும் மகளையும் காதல் செய்தான். பெரிய பெரிய பரிசுகள், ஆடம்பர செலவுகள் என பொருட்களையெல்லாம் வாங்கிக் கொடுக்கவில்லை அவன்.

அவர்களுக்காக என்று தன்னுடைய வாழ்க்கையில் பெரிய முக்கியதுவத்தைக் கொடுத்தான். முடிந்தளவு அவர்களுக்கான நேரத்தையும் செலவிட்டான். அவர்களைப் புரிந்துகொண்டான். அதுவே மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வித்திட்டது என்பதே உண்மை.

அந்த வார ஞாயிற்றுக்கிழமை அமுதாவைப் பார்த்துவிட்டு வருகிறேன் என்று அங்கே சென்று வந்த உமையாளின் முகம் எப்போதும் இருப்பது போலில்லாமல் பொலிவிழந்து கிடந்தது. சரி அவளாக சரியாகிவிடுவாள் என பிரபஞ்சன் இரண்டு நாட்கள் விட்டுவிட, இருந்தும் பெண் தெளியவில்லை. சாரதா மருமகளை அழைத்து கேட்டும் அவள் பதிலளிக்கவில்லை. இரவு கண்டிப்பாக கேட்க வேண்டும் என நினைத்தான் பிரபஞ்சன்.

இரவு குழந்தையைத் தட்டிக் கொடுத்து உறங்க வைத்த உமையாள், கணவனின் தோளில் சாய்ந்துகொண்டாள். அவளது தலையை ஆதரவாகத் தடவியவன், “என்னாச்சுங்க? எது உங்களை இவ்வளோ கஷ்டப்படுத்ததுது? என்கிட்ட உங்களால ஷேர் பண்ண முடியும்னு தோணுச்சுன்னா, பண்ணலாம்!” என்றான்.

மெதுவாய் அவனை நிமிர்ந்து பார்த்தவளின் விழிகளில் மெல்லிய நீர் படலம். “என்னாச்சு மேடம்க்கு?” எனக் கேட்டு அவளது விழிநீரைத் துடைத்துவிட்டவனின் கரங்கள் உமையாளின் கைகளை ஆதரவாய்த் தட்டிக்கொடுத்தது.

“அம்மாவைப் பார்க்கணும் போல இருக்கு!” என்றவளின் கண்ணீர் மீண்டும் பொங்கியது.

“அம்மாவை தானே பார்க்கணும். பார்த்திட்டா போச்சு, அதுக்கு ஏன் அழுகை?” என்றவன் கண்ணீரைத் துடைத்தான்.

“அமுதா சொன்னா, அவங்களுக்கு உடம்பு முடியலையாம்‌. என்கிட்ட பேசணும்னு சொன்னாங்களாம்” என்றவள், அவனது மார்பில் இறுக தன் முகத்தைப் புதைத்து வெடித்து வந்தக் கேவலை அடக்க முயன்றாள். என்ன சண்டை, சச்சரவுகள் வந்தப் போதும், தாய்க்கு ஒன்று எனும்போது சர்வமும் அடங்கிவிடுகிறது.

அவளது முகத்தை நிமிர்த்தியவன், “நாளைக்கே போகலாம். அழக் கூடாது நீங்க...” என்று அவளது நெற்றியில் முத்தமிட்டான் பிரபஞ்சன். மெலிதாய் தலையை அசைத்தவளின் உதட்டில் சின்னதாய் புன்னகை ஒன்று பூத்தது.

பிரபஞ்சன் கூறியது போலவே மறுநாள் ஆடைத் தயாரிப்பகம் சென்று முக்கியமான வேலைகளை எல்லாம் முடிந்துவிட்டு, அன்று இரவு பேருந்திலே பயணச்சீட்டை முன்பதிவு செய்தான். சாரதா முட்டிவலி காரணமாக வர மறுத்துவிட, கோகுல் பெற்றவர்களைப் பார்த்துக் கொள்வதற்காக விழுப்புரத்திலே தங்கிவிட்டான்.

மற்ற மூவரும் மதுரையை நோக்கிப் பயணப்பட்டனர்.
“இப்போ நீ எடுத்து இருக்க முடிவு ரொம்ப சரியானது உமா!” என்று சாரதா உமையாளிடம் கூறி, அவர்களை வழியனுப்பி வைத்தார்.

மறுநாள் காலை ஒரு தங்கும் விடுதி ஒன்றில் அறையெடுத்து மூவரும் குளித்து கிளம்பினர். வீட்டிற்கு வர வேண்டாம் என்றும் மீனாட்சி அம்மன் கோவிலில் சந்திக்கலாம் என்றும் உமையாளின் தாய் வள்ளி, அமுதாவிடம் கூறியிருந்தார். எனவே காலை உணவை உண்டுவிட்டு மூவரும் கோவிலுக்குச் சென்றனர்.

நீண்ட நாட்கள் கழித்து மீனாட்சியைப் பார்த்ததில், மனதில் உள்ள பாரத்தையெல்லாம் கடவுளிடம் இறக்கி வைத்தவள், அங்கே ஒரு ஓரமாய் அமர்ந்துவிட்டாள். குடும்பமாய் வரும்போது அவர்கள் எப்போதும் அமரும் இடமும் அதுதான். அந்த நினைவில் லேசாய் விழியோரம் ஈரம் கசிந்தது அவளுக்கு.

பிரபஞ்சன் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு கோவிலை சுற்ற சென்றுவிட்டாள் சின்னவள். சிறிது நேரத்திலே உமையாளின் முன்னே நிழலாடியது. நிமிர்ந்து பார்க்காமலே தனது தாய் என்பதை உணர்ந்தவளுக்கு, கண்களைக் கரித்துக்கொண்டு வந்தது. எழுந்து நின்றாள் பெண்.

முகமெல்லாம் வற்றி கண்களில் கருவளையம் சூழ்ந்து நின்றிருந்த வள்ளியின் விழிகள் முழுவதும் யாசிப்புதான். “உமா...” என்றவர் உடல் அழுகையில் குலுங்க, மகளது விழிகளிலும் கண்ணீர் குபுகுபுவென இறங்கியது. தூரத்திலே அவர்களைக் கண்டுவிட்ட பிரபஞ்சன், தனிமைத் தர எண்ணி, அங்கேயே நின்றுவிட்டான்.

“எப்படி இருக்க டி?” என முந்தானையால் விழிநீரைத் துடைத்தார் வள்ளி.

“இன்னும் சாகலை மா. உயிரோடதான் இருக்கேன்!” என்றவளின் விழிகளில் மீண்டும் கண்ணீர் வழிந்தது.

“ஏன் டி இப்படி பேசுற?” என்று கேட்டவருக்கு நெஞ்சை அடைத்தது. மகளது பேச்சு அவரை இதயத்தை நடுங்கச் செய்தது.

“ஏன் மா, ஏன்? ஒரு நிமிஷம் ஒரு நொடி கூட உன் மக தப்பு பண்ணி இருக்க மாட்டான்னு உனக்குத் தோணலை இல்லை. நான் அப்படிப்பட்டவளா மா? என் மேல அவ்வளோ நம்பிக்கை உங்களுக்கு எல்லாம்?” என்றவளின் உடல் இப்போது இறுகியிருந்தது. தாயின் அருகே செல்லவில்லை பெண். ஆனால், தன் வார்த்தை அவரை எந்த அளவிற்கு காயப்படுத்தும் எனத் தெரிந்துதான் பேசினாள். அவரது உடல் அழுகையில் குலுங்க, இவளுக்கு இதயம் முழுதும் அப்படியொரு வலி.

“என்னை மன்னிச்சுடு டி!” என காலில் விழச் சென்ற தாயைப் பதறிப் போய் பிடித்து, “ஏன் மா... ஏன் என் பாவத்தை ஏத்துற?” என அழுகையுடன் கேட்ட மகளை அணைத்துக்கொண்டார் வள்ளி.

“என்னை மன்னிச்சுடு உமா. உன் வாழ்க்கை இப்படி போனதுக்கு நான்தான் காரணம். என்னோட கோழைத் தனம்தான். உங்கப்பாவை எதிர்த்து என்னால எதுவும் செய்ய முடியாது மா!” என்று இயலாமையில் கண்ணீர் வடித்த தாயை இதழ்களில் கசந்த முறுவலுடன் பார்த்தார்.

“இப்பவும் உன்னால அப்பாவை விட்டு வர முடியாது. அவர் பேச்சை மீற முடியாதுல்ல மா? ஏன் மா? ஏன்? இப்படி காலம் முழுக்க அவருக்கு அடிமையாய் கிடக்குற?” என அவரது தோளைப் போட்டு உலுக்கினாள் உமையாள்.

“ஏன்னா, எங்களுக்கு போதிக்கப்பட்டது அதான் உமா. கல்லானாலும் புருஷன், புல்லானாலும் புருஷன்னு. கட்டையில போற வர அவர் பொண்டாட்டியாதான் இருப்பேன்!” என்றவரை என்ன சொல்வது எனத் தெரியாது பார்த்தாள்.‌

இது இன்று நேற்றல்ல. அவள் பிறந்ததிலிருந்து பார்த்துக்கொண்டு தானே இருக்கிறாள். எதையும் அவளால் மாற்ற முடியவில்லையே என்ற இயலாமையில் நெஞ்சம் விம்மியது.

“ஏன் மா, இத்தனை நாள் நான் இருக்கேனா, செத்தேனான்னு கூடப் பார்க்கலை. அவ்வளோ வேண்டாதவளா போய்ட்டேன் இல்ல?” என்றவளின் கரங்களை எடுத்து முகத்தில் வைத்துக்கொண்டார் வள்ளி.

“என்னை மன்னிச்சிடு உமா. மன்னிப்பு கேட்கக் கூட தகுதி இல்லாதவ நான். உன் மேல எந்தத் தப்பும் இல்லைன்னு இப்பதான் எங்களுக்குத் தெரிஞ்சது!” என்றவரின் கைகளை உதறியவளுக்கு நெருப்பு சுட்டது போலிருந்தது.

“அப்போ உண்மை தெரியலைன்னா, கடைசி வரை எனக்கு வேசி பட்டம் கட்டி இருப்பீங்க? அப்படித்தானே?” என்றவள் பொங்கும் விழிநீரைத் துடைக்காது அவரை வெறித்தாள்.

“அப்படியெல்லாம் பேசாத உமா!” வேதனையுடன் கூறினார் வள்ளி.

“ஏன் மா, அப்படி நீங்கதானே எனக்குப் பட்டம் கொடுத்தீங்க. அதை என் வாயால கேட்கவும், உங்களுக்கு வலிக்குதா? எனக்கும் வலிச்சது மா. ஊர்ல இருக்க எல்லாரும் என்னைத் தப்பா பேசுனப்ப கூட, என் அம்மா என்னை நம்புவாங்கன்னு உனக்காக காத்திருந்தேன். ஆனால், நீ, அந்த இடத்துல எனக்காக ஒரு வார்த்தை பேசுனீயா? அமைதியா இருந்து, என்னை உயிரோட பொதைச்சுட்ட மா. கேட்டா உங்க அப்பாவை மீறி என்னால எதுவும் செய்ய முடியாதுன்னு சொல்லுவ. என்னால முடியலை மா. எத்தனை நாள் நினைச்சு நினைச்சு அழுது இருக்கேன் தெரியுமா? நான் அப்படிப்பட்டவ இல்லைன்னு கத்தணும்னு தோணும்... ஆனால், பாரேன் சொந்தக் குடும்பமே நம்பலை. ஊரைக் குத்தம் சொல்லி என்ன சொல்ல?” என்றவளின் குரலில் வெறுப்பும் வேதனையும் மண்டிக் கிடந்தது.

மகளை சொல்லவென்னா வேதனையுடன் பார்த்தவர், “உமா, என்னால எதையும் மாத்த முடியாது. நீ சந்தோஷமா இருக்கதா அமுதா சொன்னா. உன்னை ஒரு தடவை பார்த்து மன்னிப்புக் கேட்டுட்டா, நான் சந்தோஷமா செத்துடுவேன் டி. அடுத்த ஜென்மத்துலயாவது புருஷனுக்குப் பயப்படாத, நல்ல அம்மாவா இருக்க முயற்சி செய்றேன். நீ எங்க இருந்தாலும் நல்லா இரு டி!” என்றவர், உமையாளின் தலையில் கைவைத்து ஆசிர்வாதம் செய்தார். அவரது சூழ்நிலை புரிந்தது பெண்ணுக்கு. வலித்தது, ஆயிரம் கத்திகளைக்கொண்டு இதயத்தைக் கிழிப்பது போலொரு வலி. அவள் தாயையும் முழுவதுமாக குற்றம் சொல்ல முடியாது. தான் வாழ்ந்த சமூகமும் சூழ்நிலையும் தனக்குப் போதித்ததை மட்டும்தான் அவர் பின்பற்றுகிறார் என.

“நான் செத்தா, என் சாவுக்கு மட்டும் வந்துட்டு போ உமா” என்றவரின் குரலில் மொத்தமாய் உடைந்து போனாள் உமையாள். இத்தனை நாளிலிருந்த வெறுப்பு கோபம் ஆற்றாமை என எல்லாம் தகர்ந்து போனது அந்த நொடி. இந்த உலகத்திலே அவள் அதிகம் நேசித்தது தன் தாயைத் தானே? அவர் இப்படி பேசும்போது சர்வமும் துடித்தது பெண்ணுக்கு.

“அம்மா... ஏன் மா?” எனக் கேட்டு அவரை இறுக அணைத்தாள் உமையாள். வள்ளியின் உடலிலும் அதிர்வு. “உமா!” என்றவர், மகள் கன்னத்தில் நெகிழ்ச்சியில் முத்தமிட்டார். அவரது முகத்தைத் தொட்டு தடவினார். அவரது தோள் சுருங்கிய கைகள் மகளை ஆரத் தழுவிக்கொண்டது. இப்போது அவரது விழிகளில் சந்தோஷக் கண்ணீர் பொங்கியது. அவளது கன்னத்தில் முத்தமிட்டார்.

“இதுவரைக்கும் உனக்கு நான் எதுவுமே செய்யலை டி. இது என் அம்மா எனக்குப் போட்ட நகை. இதை நீ வச்சுக்கோ... உன் வாழ்க்கையை நல்லா அமைச்சுக்கோ டி!” என்றவர், தன் சேலையில் சுருட்டி வைத்திருந்த நகைகளை அவளது கையில் கொடுத்தார்.

அந்த நகைகளைப் பார்த்து விரக்தியாகப் புன்னகைத்தவள், “அப்பவும் என்னை நீ புரிஞ்சுக்கலை. இப்பவும் என்னைப் புரிஞ்சுக்கலை‌. இந்த நகை, பணம் இதெல்லாம் என்னைக்குமே உன்கிட்ட இருந்து நான் எதிர்பார்க்கலை மா. அன்பா ஒரு பார்வை, அனுசரணையான பேச்சு, என் மக தப்பு பண்ணி இருக்க மாட்டான்னு உன்னோட நம்பிக்கை. இதை மட்டும்தான் மா நான் எதிர்பார்த்தேன்!” என்றவள், புறங்கையால் விழிகளைத் துடைத்தாள்.

“உமா...” என்றவருக்கு என்ன பேசுவது எனத் தெரியவில்லை.
தலையைக் குனிந்துகொண்டார். மகள் கூறுவதும் உண்மைதானே? அது அவரை நெருஞ்சி முள்ளாய்க் குத்தியது. அன்றே அவர் சுதாரித்து இருந்தால், உமையாள் இப்படியொரு இக்கட்டான சூழ்நிலையில் கைதியாக நின்றிருக்கவே தேவையில்லையே!

வள்ளி அப்படி நிற்கப் பொறுக்காதவள், “ம்மா.‌.. கடவுள் ஒன்னைப் பறிச்சா, அதை விட நல்லதா இன்னொன்னு கொடுப்பார்னு நீதானே சொல்லுவ! இப்போ அவர் எனக்கு எல்லாத்தையும் விட நல்ல புருஷனைக் கொடுத்து இருக்காரு‌...” என்றவள் பிரபஞ்சனைப் பார்க்க, அவன் ஆராதனாவை தூக்கிக்கொண்டு அவர்களுக்கு அருகில் வந்தான்.
பிரபஞ்சனைப் பற்றி அமுதா ஏற்கனவே கூறியிருந்தாள்.

அவன் வந்ததும், வள்ளி தன் சேலை தலைப்பை எடுத்து தோளைச் சுற்றிப் போட்டார்.
“வாங்க தம்பி!” என்றவருக்கு மெலிதாய் தலையை அசைத்தான் பிரபஞ்சன். மூவருக்கும் அடுத்து என்ன பேசுவது எனத் தெரியவில்லை.

“சாப்பிட்டீங்களா ஆன்ட்டி?” பிரபஞ்சன் வினவ, “வீட்ல போய் சாப்பிட்டுக்கிறேன் தம்பி...” என்றார் வள்ளி.

“ஆன்ட்டி, வாங்க வெளியே சாப்ட்டு போகலாம்” பிரபஞ்சன் வற்புறுத்த, “இல்ல தம்பி, இவுக அப்பாவுக்குத் தெரிஞ்சா திட்டுவாங்க!” என்று அவர் கூற, உமையாள் தாயைத் தீர்க்கமாகப் பார்க்க, அவரது தலை தானாய் அசைந்தது. மூவரும் அருகிலிருந்த உணவகத்திற்குச் சென்றனர்.

அங்கே அவர்வர்க்கு வேண்டியதை தாங்களாகப் பெற்றுக் கொள்ளும்படி இருக்க, பிரபஞ்சன்தான் மூவருக்கும் வேண்டியதை வாங்கிவந்து கொடுத்தான். உமையாள் சாப்பிடாது சாப்பாட்டை அளக்க, “ஏன்ங்க, சாப்பிடுங்க!” என உமையாளை மெதுவாய் அதட்டி, குழந்தைக்கும் ஊட்டினான். அவனைப் பார்த்த வள்ளிக்கு மனதில் அப்படியொரு நிம்மதி. மகளையும் பேத்தியையும் பிரபஞ்சன் பார்த்துக் கொள்வான் என்ற பெரியதொரு ஆசுவாசம். மூவரும் உண்டு முடித்தனர்.

“உமா, இந்த நகையை வாங்கிக்கோ டி!” என்ற வள்ளி இறைஞ்சுதலாய்ப் பார்த்தார்.

“அம்மா, நான்தான் சொன்னேனே. என் புருஷன் என்னை ரொம்ப நல்லா பார்த்துக்குறாரு மா. எனக்குப் பணத் தேவை இருந்தா, கண்டிப்பா உன்கிட்டதான் வருவேன்!” என்று உமையாள் புன்னகைத்தாள். பிரபஞ்சன் புறம் பார்வையை நகர்த்தினார் பெரியவர். அவரது இறைஞ்சல் பார்வை இப்போது பிரபஞ்சனிடம்தான்.

“ஏன்ங்க, வாங்கிக்கோங்க. நமக்குத் தேவை இருக்கோ, இல்லையோ, உங்க அம்மா ஆசையா தர்றாங்க. நீங்க அதை வாங்குனா, அவங்களுக்கும் ஒரு சந்தோஷம். சோ ப்ளீஸ் வாங்குங்க!” பிரபஞ்சன் வற்புறுத்தலால் உமையாள் வாங்கினாள்.

“அப்பா, ஐஸ்க்ரீம்...” ஆராதனா பனிக்கூழை கையைக் காட்ட, இருவரும் அங்கே நகர்ந்தனர்.

“உமா, நீ சொன்னது உண்மைதான் டி. அப்படியொரு வாழ்க்கையை எம்புள்ளைக்கு ஏன் கொடுத்தன்னு கடவுள்கிட்ட ஒவ்வொரு முறையும் கேட்பேன். இப்போ அதைவிட நல்ல வாழ்க்கையை உனக்குக் கொடுத்து இருக்காரு. உன் மனசு போல இந்தத் தம்பி தங்கம்.நீ நல்லா இருப்ப!” என ஆசிர்வதித்தவர் பிரபஞ்சனிடமும் சிறிய தலையாட்டலுடன் விடைபெற்றார்.

உமையாள் விழிகளில் லேசான நீர்ப்படலத்துடன் பிரபஞ்சனைப் பார்த்தாள். ஆராதனாவிடம் பேசிக்கொண்டே அவளுக்கு பனிக்கூழை ஊட்டிக்கொண்டிருந்தான். உதட்டில் மென்னகையுடன் கணவனை ஆசையாய்ப் பார்த்திருந்தாள்.

தன்னுடைய ஒரு சொட்டுக் கண்ணீர் பொறுக்காதவன், இருந்த வேலைகளையெல்லாம் விட்டுவிட்டு மறுநாளே என்னுடன் கிளம்பி வந்துவிட்டான். ஏன்? எதற்கு? என்ற எந்தக் கேள்வியும் நிபந்தனையுமற்ற அன்பு அவளை லேசாய் நெகிழச் செய்தது. இமை சிமிட்டாமல் தன்னைப் பார்த்தவளின் பார்வை உணர்ந்த பிரபஞ்சன் அவளருகே சென்று, “ஏங்க, உங்க ஊர்க்கு வந்து இருக்கேன். சுத்தி காட்ட மாட்டீங்களா?” எனக் குறும்பாய்க் கேட்டான்.

“ஆங்...” என விழித்தவளுக்கு அவன் கேட்டது புரியவில்லை.
“என்னக் கேட்டீங்க?” என உமையாள் வினவ, “தௌசன்ட் கிஸ் கேட்டேன்ங்க!” என குறும்புடன் அவன் முன்னே நடக்க, அந்தப் பதிலின் சாரம்சத்தை உணர்ந்து லேசாய் சிவந்து பின் கணவனை முறைத்தாள். பகல் பொழுதில் மதுரையைச் சுற்றியவர்கள், அன்றிரவே விழுப்புரத்திற்குப் பயணப்பட்டனர்.

அடுத்தடுத்து நாட்கள் எப்போதும் போல நகர்ந்தன. உமையாள் முகம் இப்போது நன்றாய் தெளிந்திருந்தது. புன்னகை முகத்துடன் வலம்வரத் தொடங்கினாள். அவளது தெளிவு பிரபஞ்சனிடம் நிம்மதியை அளித்திருந்தது. முன்பைவிட கணவன் மனைவிக்கு இடையில் அதிக புரிதல் வந்திருந்தது. எல்லாவற்றையும் சின்னப் புன்னகையுடன் கடக்கும் கணவனை ஆயிரம் காதல் செய்தாள் பெண் என்பதே உண்மை.

ஆயினும் மனதிலுள்ளவற்றை அவனிடம் பகிர்ந்துவிட்டால், கொஞ்சம் நிம்மதி கிடைக்கும் என்றெண்ணியவள், அதற்காக ஒரு சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தாள்.

தொடரும்...


 
Active member
Messages
131
Reaction score
89
Points
28
உமாவோட அம்மா நிலைமை தான் பெரும்பாலானவர்களுக்கு இருக்கு! ஃப்ளாஷ்பேக் வரப் போகுது!!! ❤️
 
Active member
Messages
113
Reaction score
59
Points
28
உமாவோட அம்மா போன்றவர்கள் குடும்பம் சமூகத்துக்கு கட்டுப்பட்டு பயந்தே வாழ்ந்துட்டாங்க... சுயமா சிந்திக்காம தலையாட்டியே பழக்கப்பட்டுட்டாங்க.... பாவம்.... 😔
 
Top