• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
997
Reaction score
2,810
Points
93
நெஞ்சம் – 2 ❤️



அதிகாலை மணி நான்கை கடந்ததும், லேசாக வெளிச்சம் வரத் தொடங்க, ஜன்னல்புறம் தலையைச் சாய்த்து வெளியே வேடிக்கைப் பார்த்தவாறு இருந்தாள் உமையாள். ஓரளவுக்கு மனது நடந்ததை ஏற்றுக்கொண்டாலும், ஏனோ கடந்து வந்தப் பாதையை நினைத்ததும் விழிகளில் தன்னையறியாமல் நீர் கோர்த்தது. தான் எடுத்திருந்த முடிவில் ஒரு சதவீத தவறு இருப்பதாகக் கூட மனம் ஒப்புக் கொள்ளவில்லை. மிகச் சரியான முடிவு, ஏனோ இன்னும் விரைவாய் இந்த முடிவை கையிலெடுத்திருந்தாள் கொஞ்சம் நிம்மதியாவது தனக்கு எஞசியிருக்கும் என எண்ணிக்கொண்டாள்.

பரவாயில்லை, தாமதமாக எனினும் இப்போதாவது எனக்கான மடையை நான் தேர்வு செய்துவிட்டேன். இதில் என்ன வந்தாலும் என்னால் எதிர்கொள்ள முடியும் என மனது நம்பியது.

‘பெரிதாய் என்ன எதிர்பார்த்தேன் நான்? எல்லோரையும் போல எனக்கென்று அழகான வாழ்க்கை, அன்பான கணவன். அவ்வளதானே? அதற்குக் கூட எனக்கு குடுப்பினை இன்றி போய்விட்டேனே?’ ஒவ்வொரு முறை துவளும் போதும் இந்த ஒரு கேள்வி மட்டும் மனதையும் உடலையும் போட்டு உருக்கிவிடும். எத்தனை கனவுகள், எத்தனை ஆசைகளுடன் இந்த வாழ்க்கையில் அடி எடுத்து வைத்தாள். முதல் நாளே அதெல்லாம் சரியத் துவங்கியதை கலங்கிய கண்களுடன் பார்த்திருந்தாள் பேதைப் பெண். யாரிடம் தன் பாரத்தைக் கூறி அழ? தாயிடமா? தந்தையிடமா? இல்லை உடன் பிறந்தவர்களிடமா? யாருமே அவளது வார்த்தைக்கு செவிசாய்க்கவில்லையே!

“ம்மா... அம்மா.. அது..‌.” யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாத அந்தரங்கத்தைக் கூட தாயிடம் திக்கித் திணறி கூறிய போது உடலே வெட்கிப் போனது உமையாளுக்கு. ஆனால் அதற்கு வந்த எதிர்வினை அவள் சற்றும் எதிர்பாராததது.

“என்ன டி சொல்ற... இதெல்லாம் போய் என்கிட்ட சொல்லீட்டுப் இருப்பாங்களா? புருஷனை கைக்குள்ள போட்றது எல்லாம் உன்னோட சாமர்த்தியம் டி. வெளிய யார்கிட்டேயும் இப்படி பேசிட்டு இருக்காத. அதெல்லாம் தப்பு...” என அன்று முழுவதும் ஆயிரம் அறிவுரை கூறிய தாயின் பேச்சு முழுவதும்தான் மட்டுமே பிரதான குற்றவாளியாக்கப்பட்டதில் வாழ்க்கையே வெறுத்துப் போய்விட்டாள் பெண்.

‘எல்லோருடைய வாழ்க்கையும் இப்படித்தான் இருக்குமோ? நான் மட்டும்தான் இதை தவறாக எண்ணிக்கொண்டு இருக்கிறேனோ? கண்டிப்பாக எங்களுக்கு இடையேயான புரிதல் வந்தப் பிறகு வாழ்க்கையைத் தொடங்கலாம் என அவர் நினைத்திருப்பாராக இருக்கும்...’ என அறிவிலியாய் தன்னைத் தானே சமாளிக்க நினைத்தை எண்ணுகையில் உதட்டோரம் ஆகமொத்ததிற்கான விரக்தி சிரிப்பொன்று குவியமிட்டது.

தாயின் மடியில் தலையை வைத்து இருக்கையில் காலை நீட்டிப் படுத்திருந்த ஆராதனா, சற்றே மறுபுறம் திரும்பிப் படுத்தாள். இடது புற கால் அவளது இடுப்புக்கும் கைக்கும் இடையில் மாட்டிக்கொண்டு அவதியுற, அவளை சற்றே சரியாய்ப் படுக்க வைத்த உமையாளின் கைகள் ஆராதனாவின் வலது காலை வாஞ்சையுடன் தடவிக் கொடுத்தன. பிறவியிலே வலதுபுற கால் சிறிது வளைந்து பிறந்துவிட்டாள் ஆராதனா. அதனாலே எல்லோரைப் போல அவளால் சரியாக நடக்க முடியாது. லேசாக காலை இழுத்துதான் நடப்பாள். பெரிய வேறுபாடு எதுவும் பார்த்தவுடன் கண்டறிய முடியாது. ஊன்றி கவனித்தால் மட்டுமே அதை இனம்காண முடியும்.

“பொட்டைப் பிள்ளையைப் பெத்துருக்கான்னு நானே வயித்தெரிச்சல்ல இருந்தா, இப்படி ஒச்சமான பிள்ளையைப் பெத்துவச்சிருக்கா. இதெல்லாம் ஆகுற காரியம் இல்லை. இந்தப் புள்ளை நமக்கு வேணாம். பேசாம பக்கத்துல எதாவது ஒரு சாவடியா பார்த்து தூக்கிப் போட்ரு டா வீரா...” மனதில் ஈரமின்றி பேசிய திலகவதியின் குரல் இப்போது காதில் ஒலித்தாலும் உடல் விரைத்தது உமையாளுக்கு. குழந்தையின் பிஞ்சு விரல்களை வருடியவளின் பார்வை தூங்கும் மகளை ஆசையுடன் பார்த்தது.

“ம்மா... அம்மா...‌ம்மா...” நாள் முழுவதும் தன்னைக் கொஞ்சிக்கொண்டு சுற்றி வரும் இந்தப் பிஞ்சை ஒருமுறை கூட அவர்கள் நினைத்துப் பார்க்கவில்லையே! மனம் ஆற்றாமையில் கொதித்தது.

“அப்பத்தா...” எத்தனை ஆசையாய் ஓடிவந்து தன்னைக் கட்டிக்கொண்ட குழந்தையை பிடித்து கீழே தள்ளிவிட்டிருந்தார் திலகவதி. அதில் கைமுட்டியில் சிராய்ப்புடன் தன்னிடம் அழுத குழந்தையுடன் சேர்த்து தானும் கண்ணீர் வடித்தவாறு குழந்தையை அணைத்துக்கொண்டு அழுதாள் உமையாள். அந்த வடு இன்னும் குழந்தையின் கை முட்டியில் அப்படியே இருந்தது. அதையும் அவளது விரல்கள் தடவின. அன்றிலிருந்து ஆராதனா திலகவதியைக் கண்டாளே, தாயிடம் ஓடி வந்துவிடுவாள்.

வீரா உமையாளின் முன்னாள் கணவன். அவளைப் பொறுத்தவரை இந்த உலகத்திலே அற்ப ஜீவன், வாழத் தகுதியற்ற மனிதன் அவன். தந்தை என்று ஒருநாள் கூட குழந்தையிடம் பாசம் காட்டியது இல்லை. அவளைத் தூக்கிக் கொஞ்சியது இல்லை. ஏன் தொட்டுக் கூடப் பார்க்க விழையமாட்டான். அவனது தோற்றத்தையும் பார்வையும் பார்த்தே தாயின் பின்னால் ஒளிந்து கொள்வாள் குழந்தை. அவன் முன்னே எதற்காகவாது ஆராதனா உமையாளிடம் கெஞ்சி, அழுதாள் என்றால், அவ்வளவுதான் ஒரே ஒரு சத்தத்தில் குழந்தையை அடக்கிவிடுவான்.

குழந்தையைப் பொறுத்தவரை வீரா ஒரு ராட்சசன்தான். அப்படித்தான் அவளுடைய கண்களுக்கு காட்சியும் அளித்தான் வீரமணி. அவன் உமையாளிடம் சண்டைப் போட்டு திட்டி அடிக்க ஆரம்பித்தால், குழந்தை தாயைக் கழுத்தோடு கட்டிக்கொண்டு நகரமாட்டாள். தாயுடன் சேர்ந்து அவளும் அழுத கணங்கள் ஏராளம்.

கணவன் வீட்டு சொந்தம் இப்படியென்றால், தாய்வீடு அதற்கு ஒருபடி மேல்‌. இரண்டு அக்காக்களுக்கும் அண்ணனுக்கும் கிடைக்கும் அந்த ஒரு சம உரிமை கூட உமையாளுக்கு அந்த வீட்டில் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை.

ஆராதனா பிறந்திருந்த சமயத்தில் மாமியார் பேசியதைக் கேட்டு உமையாள் தாயிடம் கதறிய போது, “மாமியார்னா, அப்படித்தான் உமா. நீயும் அவங்க சொல்ற மாதிரி குழந்தையை ஊனமா பெத்துட்ட. அவங்களுக்கும் மனசுல குறை இருக்கத்தானே செய்யும். என்ன பண்ணுவாங்க. பொறுத்துப் போம்மா. உன் அண்ணன் வாழ்க்கையும் இதுல அடங்கி இருக்கு. பார்த்து சூதானமா பொழைச்சுக்கோ‌...” என எப்போதும் போல சேலைத் தலைப்பால் கண்ணைக் கசக்கிய தாயை இயலாமையுடன் பார்த்தவளின் வாய், பூட்டு போட்டுக்கொண்டது.

‘சண்டையிட்டால் கூட,
வார்த்தைக்கு வார்த்தைப் பேசி சமாளித்துவிடலாம் போல. இந்த அன்பு என்ற பெயரில் சிறைக்கைதியாக வைத்திருப்பது எல்லாம் ஆகப்பெரும் கொடுமை’ என நினைத்து அந்தப் பேச்சை அப்படியே நிறுத்திவிட்டாள்.

“விழுப்புரம் உங்களை அன்புடன் வரவேற்கிறது...” மஞ்சள் பலகை ஒன்று முகப்பிலும் இறுதியிலும் வீற்றிருந்தது.

“உமா, இறங்க வேண்டிய இடம் வந்துடுச்சு.‌‌..” அமுதா தன்னுடைய குழந்தையைக் கையில் தூக்கிக்கொண்டு, மகனை எழுப்பி கணவனிடம் பையையும் அவனையும் ஒப்படைத்தவள், தனது காலணிகளை தேடி மாட்டினாள்.

தன் குரலுக்கு சற்றும் எதிர்வினையாற்றாது அமர்ந்திருக்கும் தோழியைப் பார்த்த அமுதா, “உமா...” என அழுத்தி அழைக்கவும், ஒரு சிலரது கவனம் அவர்கள்புறம் திரும்பியது.

மேலே வைத்திருந்த தனது இரண்டு பைகளையும் கீழே இறக்கி வைத்த அந்த வாலிபனின் கவனமும் அவர்களிடம் குவிந்தது.

“என்ன அமுதா?” சலனமின்றி கேட்டாள் உமையாள்.

“இறங்க வேண்டிய ஸ்டேஷன் வந்துடுச்சு டி. பாப்பாவைத் தூக்கிக்கோ...” அமுதா கூறவும், தலையை அசைத்த உமையாள் எழுந்து உடையை சரிசெய்து குழந்தையை தூக்கி தோளில் கிடத்தவும், அந்த அசைவில் ஆராதனா விழித்துக்கொண்டாள். கண்ணைக் கசக்கிவாறே தாயைப் பார்த்தவள் புதிய இடத்தைச் சுற்றி கவனிக்க ஆரம்பித்தாள். ஒவ்வொருவராகப் படியருகே செல்ல, உமையாளின் பின்னே அந்த வாலிபன் சென்றான்.

அவன் கையிலிருந்தப் பையில் தொங்கிக்கொண்டிருந்த பொம்மையைப் பார்த்த ஆராதனா அதைக் கைநீட்டித் தொடவும், குனிந்து தொலைபேசியில் கவனமாக இருந்தவனின் கன்னத்தை பிஞ்சுக் கரங்கள் உரசவும், ‘யாரு அது?’ என வியப்பாய் நிமிர்ந்தவனின் முன்னே ஆராதனா தெரிந்தாள். அவன் தன்னைக் கண்டுகொண்டதும் விழிகளை லேசாய் விரித்து பயந்து கையைக் குழந்தை முன்னே இழுக்கவும், மீண்டும் அவன் கன்னம் தீண்டியது பிஞ்சுக்கரம். அதில் உதட்டில் புன்னகை ஒன்று ஜனிக்க, ‘பொம்மை வேணுமா?’ எனக் கேட்டவனின் கைககள் கம்பியிலிருந்து அந்தப் பொம்மையை பிரித்து எடுத்தது.

என்ன பதில் கூறுவது எனத் தெரியாது, ‘தனக்கு வேண்டும்’ என்பதை மட்டும் விழிகளில் தேக்கிப் பார்த்த ஆராதனாவைக் கண்டவனின் முகம் கனிந்து போக, அவளது கையில் பொம்மையை திணித்தான் அவன்.

அதில் பிரகாசித்த முகத்தையும் அரிசிப் பற்கள் தெரிய சிரித்து தன் இரண்டு குடுமியும் ஆட்டிய குழந்தையின் செய்கையும் அத்தனை பெரியதானப் புன்னகையை அவன் உதட்டில் மலரச் செய்தது. இது எதையும் அறியாத உமையாள், முன்னே நகர்ந்து சென்றாள்.

குழந்தைக் கொடுத்த துள்ளலிலே புன்னகையுடன் ஒரே குதியாக குதித்து தொடர் வண்டியிலிருந்து இறங்கியவன் முன்பு பாதித் தூக்கத்துடன் நின்றிருந்தான் மற்றொருவன்.

“ஏன் சார் கேப் புக் பண்ணி வர மாட்டீங்களோ? நான் தான் வந்து கூட்டீடுப் போகணுமா டா தடியா!” என முறைப்புடன் அவன் கையிலிருந்த தள்ளும் பையைப் பிடுங்கிக்கொண்டு நடந்தான் கோகுல் என பெயர் வைக்கப்பட்டவன்.

நண்பனின் திட்டில் சற்றே புன்னகை விரிய, அவனுடன் நடந்தான், பிரபா என கோகுலால் அழைக்கப்படும் பிரபஞ்சன். வேண்டாம் எனக்கூறியும் கேட்காது தன்னை அழைக்க வைத்திருந்த கோகுலை நினைத்து சிரிப்பு முளைத்தது பிரபஞ்சனிற்கு. அவன் அப்படித்தான்.

பள்ளியில் தொடங்கிய நட்பு கல்லூரியிலும் இணைந்து இன்று வரை நிலைத்திருக்கிறது. அருகருகே இருப்பிடம் அமைந்தது ஒரு காரணமாக இருந்தாலும், அவர்களுக்கு இடையேயான புரிதல் இருவரையும் நட்பென்னும் போர்வையில் பிணைத்து வைத்திருக்கிறது.

பிரபஞ்சன் இயல்பிலே அமைதியான சுபாவம். அழுத்தக்காரன் வாய் திறந்து கூறாமலே எதையும் சாதிக்கும் வல்லவன். அவனுக்கு எதிர்மாறானவன் கோகுல். சேட்டை, அடாவடி என அனைத்திற்கும் பேர் போனவன். எதிரெதிர் துருவங்கள் ஈர்க்கும் என்ற ஈர்ப்பு விதிப்படி இந்த இரண்டு துருவங்களும் இணைந்திருக்கின்றன.

திசைமாற்றியைக் கையில் லாவகமாக வளைத்து வாகனத்தை இயக்கிக்கொண்டிருந்தான் கோகுல். அவனுக்கு அருகே சாய்வு இருக்கையில் படுத்து விழிகளை மட்டும் மூடியிருந்தான் பிரபஞ்சன்.

“என்ன டா, போன வேலை ஓவரா?” எனக் கோகுல் அமைதியைக் கலைக்கவும், இருக்கையை நேராக்கி நிமிர்ந்து அமர்ந்தவன், “ஹம்ம்...” என்றான் இயந்திரக்கதியில்.

“பிஸ்னஸ் ஓகே, மேரேஜ் ஒழுங்கா அட்டென்ட் பண்ணியா?” கோகுல் அழுத்தமாக வினவ, “பண்ணேன், பண்ணேன்...” விட்டேற்றியாகப் பதில் கூறிய நண்பனை முறைத்தான் கோகுல்.

“ஏன் டா, பிரச்சனை எதுவும் பண்ணலையே! அம்மா பாவம் டா. உன்னையேதான் நினைச்சுட்டு இருந்திருப்பாங்க. அம்மாவுக்காக இதெல்லாம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ டா. உன்னை என்ன, போய்க் கொஞ்சி குலாவ சொன்னாங்களா? பிஸ்னஸ் விஷயமா போற. அப்படியே அந்தக் கல்யாணத்தை அட்டென்ட் பண்ணி கிஃப்ட் கொடுத்துட்டு வான்னு சொன்னாங்க. அதுக்கு இவ்வளவா டா?” எனக் கேட்ட கோகுலுக்கும் பிரபஞ்சனை அனுப்புவதில் துளிகூட விருப்பமில்லை.

பிரபஞ்சனிற்குத் தந்தை வீட்டு சொந்தத்தை அறவே பிடிக்காது. அதற்கு பல காரணங்கள் அவனிடம் உண்டு. தாயையே அவர்களிடம் பேசக் கூடாது என ஒரு சில முறை சண்டையிட்டிருக்கிறான். அப்படியிருக்கையில் அவர்களது சொந்தத்தில் திருமணமென்று அவனையே சாரதா போகச் சொல்ல, முடியாது என்று அழுத்தமாகக் கூறிவிட்டான் பிரபஞ்சன். ஆனால், தாய் என்ற மந்திரச்சொல் அவனைக் கரைத்து அனுப்பியிருந்தது.

சாரதாவிற்கு இந்த விஷயத்தில் மகன் மீது ஏக வருத்தம். தனக்குப் பிறகு அவன் யாருமின்றி நின்றுவிடக் கூடாது என்று உறவுகளோடு அவனை ஒட்ட வைக்கப் போராடுகிறார். ஆனால், மகன் பிடி கொடுத்தபாடில்லை‌‌. அதுதான் இந்த முறை அவனைக் கட்டாயப்படுத்தி அனுப்பிவிட்டிருந்தார்.

“என்ன டா...” கோகுல் இடது கையை எடுத்து பிரபஞ்சன் தோளில் தட்ட, “ப்ம்ச்... அவங்களுக்குக்காகத்தான் டா போனோன். லீவ் இட் டா...” என்றவன் அந்தப் பேச்சை அப்படியே முறித்துவிட, கோகுலும் அமைதியாகிவிட்டான்.

சிறிது நேரத்திலே இருப்பிடம் வந்துவிட, மகிழுந்தை அதனிருப்பிடத்தில் கோகுல் நிறுத்திவிட்டு இறங்கவும், பிரபஞ்சன் இரண்டெட்டில் வீட்டிற்குள் நுழைந்துவிட்டான். அவன் பின்னே இவனும் நுழைந்தான்.

கூடத்திலே சாரதா இருக்கையைப் போட்டு அமர்ந்து அன்றைய நாளிதழை கையில் வைத்துப் புரட்டிக்கொண்டிருந்தார்.

“வாப்பா...” என்றவர், “போய் ப்ரெஷாகிட்டு வா. காபி போட்றேன்...” முகம் முழுவதும் புன்னகையுடன் கூறிய தாயருகே சென்றவன் அவரை லேசாய் அணைத்து, “டைம் ஆறுதானே ஆகுது. இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கலாம் இல்லை மா. அதான் மங்கை அக்கா இருக்காங்க இல்ல? அவங்க காஃபி போட்டுத் தர மாட்டாங்களா?” என வினவினான்.

“முழிப்பு வந்துடுச்சு டா. போ போய் ப்ரெஷாகிட்டு வா...” சாரதா சமையலறைக்குள் நுழைய, தனது அறைக்குள் நுழைந்தான் பிரபஞ்சன். அவனுக்கு முன்பே அறைக்குள் நுழைந்து கட்டிலில் பொத்தென விழுந்து பாதியிலேவிட்ட உறக்கத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தான் கோகுல். அவனைப் பார்த்தவாறே தன்னுடைய பையை அறையில் வைத்துவிட்டு குளிக்க சென்றான் பிரபஞ்சன்.

நடுத்தர மத்திய வசதியுள்ள மக்கள் குடியிருக்கும் பகுதிக்குள் சென்று அந்தத் தானி நின்றது. அமுதா, அவளது கணவன் குழந்தைகள் மற்றும் உமையாளும் தானியிலிருந்து இறங்கினர்.

அமுதா வீட்டைத் திறக்கவும், ராஜாவும் குழந்தையும் உள்ளே செல்ல, “உமா, வா...” என உமையாளையும் அழைத்துக்கொண்டு நுழைந்தாள்.

ராஜா குளித்து முடித்து வேலைக்குக் கிளம்பிவிட, பெரியவன் வெளியே விளையாட ஓடிவிட, தூங்கும் குழந்தையைத் தொட்டிலிட்டாள் அமுதா.

“உமா, ட்ரெய்ன்ல நீ தூங்கலை இல்ல? கொஞ்சம் நேரம் படு...” கூடத்தில் பாயை விரித்த அமுதா கூறவும், “இல்லை அமுதா, தூக்கம் வரலை...” என மறுத்தாள் உமையாள்.

“ப்ம்ச்... அதெல்லாம் வரும். பாப்பாவை என்கிட்ட கொடுத்துட்டு நீ கொஞ்சநேரம் தூங்கு...” அமுதா ஆராதனாவைத் தூக்க விழைய, “ம்மா..‌ அம்மா...” என உமாவின் காலைக் கட்டிக்கொண்டாள் குழந்தை.

“புதுசா ஆளுங்களைப் பார்த்து பயப்படுறா அமுதா. அவ என்கூடவே இருக்கட்டும்...” என்ற உமையாள் படுக்கையில் விழுந்தாள். தூங்கி எழுந்தால் சற்று தெம்பாகவும் தெளிவாகவும் இருக்கும் எனத் தோன்ற, குழந்தையை அருகில் படுக்கவைத்து தட்டிக்
கொடுத்துக்கொண்டே உறங்கிப் போனாள்.

குளித்து முடித்து கண்ணாடி முன்பு நின்று தலையைத் துவட்டிய பிரபஞ்சன் நினைவில் அரிசிப் பற்கள் தெரிய சிரித்த ஆராதனா வந்து விழவும், புன்னகையுடன் தலையை சிலுப்பிக்கொண்டான்.

புன்னகைக்க மறந்த உதடுகளும் எப்போதும் புன்னகையுடன் வலம் வரும் உதடும் என்று சந்திக்கும்?



தொடரும்...




 
Active member
Messages
131
Reaction score
89
Points
28
தன்னோட சொந்தப் பையனோட குழந்தையாகவே இருந்தாலும், ஊனம்ன்றதால் எப்படி நடத்திருக்காங்க 😤 இதுக்கப்புறம் ஆவது உமையாளுக்குப் புது வாழ்க்கைக் கிடைக்கட்டும்.. முக்கியமாக மனநிம்மதி ❤️
 
Well-known member
Messages
610
Reaction score
346
Points
63
ஒரு குழந்தை பாத்து இப்படி பேசிடு இருக்கங்கா என்ன குடும்பம் இது😠😠 இப்போது உமா நீ நல்ல முடிவு எடுத்து இருக்க 😊ஆராதனா பிரபஞ்சன் cute பொம்மை குடுத்தது என்ன சந்தோஷம் பாப்பா💃💃 கோகுல் பிரபா நல்ல நண்பர்கள் தான் ❤️🤗
புன்னகைக்க 😔மறந்த உதடுகளும் எப்போது புன்னகையுடன் 😄வலம் வரும் உதடும் என்று சந்திக்கும் நீங்க தான் சிக்கிரமா சொல்ல வேண்டும்😍🤞🤩
 
Active member
Messages
113
Reaction score
59
Points
28
என்ன அம்மா இவங்க பொண்ணை அடங்கி நடன்னு சொல்லியே அடிமை வாழ்க்கை வாழ வச்சுருக்காங்க... 😤😤😤

திலகவதி ஆரா பொண்ணா பிறந்ததும் குற்றம் சிறிய குறைபாடோட பிறந்ததும் குற்றம் உங்களுக்கு... அதுக்காக பேத்தி கூட பார்க்காம ராட்சசி மாதிரி நடந்து இருக்கீங்க.... குறை உங்க மனசுல தான்.... 😡😡😡😡

பிரபா ஸோ லவ்லி.... 🥰 குழந்தையோட முகத்துல சிரிப்பை தந்தது.... அந்த bonding அழகு.... 🤗🤗🤗😇😇😇
 
Top