• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
997
Reaction score
2,810
Points
93
நெஞ்சம் – 14 ❤️

கையைத் தலையில் வைத்து முட்டியில் குற்றி அமர்ந்திருந்த பிரபஞ்சன் முன்பு ஒரு நிழலுருவம் வந்து நின்றது. நிமிர்ந்து பார்க்காமலே அது கோகுல்தான் என அவனால் உணர முடிந்தது.

“மச்சான்... என்னாச்சு?” அசிரத்தையாய் அமர்ந்திருந்த பிரபஞ்சனின் தோளை கோகுல் தொட, நிமிர்ந்து அமர்ந்தான்.

“தெரியலை டா...” உதட்டைப் பிதுக்கியவன், “ஷி மைட் ஹேவ் சம் ப்ராப்ளம் டா. பட் என்கிட்ட சொல்ல மாட்றாங்க...” ஆதங்கமும் கோபமுமாய் கூறினான் பிரபஞ்சன்.

“டேய், அப்படியெல்லாம் பெருசா எதுவும் இருக்காது. நீயா எதையும் இமேஜின் பண்ணி உன்னைக் குழப்பிக்காத” கோகுல் நண்பனின் தோளைத் தட்டினான்.

“நோ டா... என்னால அவங்க முகத்தைப் பார்த்துக் கண்டுபிடிக்க முடிஞ்சது...” என்றவன், “கேர்ள்ஸ் ஆர் டிபிகல் டூ அண்டர்ஸ்டாண்ட்!” என்றான் உதட்டைப் பிதுக்கி. முகம் முழுவதும் ஆதங்கம் அப்பிக்கிடந்தது. அதில் கோகுலுக்கு சிரிப்பு வந்துவிட்டது.

“மச்சான், பொண்ணுங்களை புரிஞ்சுக்க கடவுளால கூட முடியாது. நீ எல்லாம் எம்மாத்திரம்...” எனக் கூறி சிரித்தவன், “ஃபர்ஸ்ட் நீ ரிலாக்ஸாகு. நீ தானே என்கிட்ட சொன்ன, ஷீ நீட் சம் டைம்னு. மே பீ, அவங்க இப்போ குழப்பத்துல இருக்கலாம். அவங்களுக்கான இடைவெளியை நீ டிஸ்டர்ப் பண்ணாத‌. குழம்பி அவங்களே உன்கிட்ட வருவாங்க. நீ பொறுமையா நான் சொல்றதை மட்டும் யோசிச்சு பாரு. உனக்கே புரியும்...” என்ற கோகுலுக்கு மனம் முழுவதும் ஆச்சர்யம்தான். இதுவரை இப்படியொரு பிரபஞ்சனை அவன் கண்டதில்லை. எந்தப் பிரச்சனையாக இருந்தாலும், அதை அழகாய்ப் பொறுமையாய்க் கையாளுவான்.‌ எதிலும் அவசரம்காட்டாது, தன் மூளையையும் மனதையும் ஒருநிலைப்படுத்தி எதையும் செய்வான். அப்படிப்பட்டவனின் மனது இன்று குழம்பிய குட்டையாய் இருக்கிறது. ஏதோ பெரிய பிரச்சனை ஒன்றின் நுனியைக் கூட கண்டறிய முடியாத பாவனைதான் அவன் முகம் முழுவதும்.

‘எல்லாம் பெண் என்னும் அதிசயம் செய்யும் மாயம் தான். நமக்கு இந்தக் காதலே வேண்டாம்...’ என உறுதி பூண்டவன், பிரபஞ்சனுக்குச் சற்றே தனிமை கொடுத்து வெளியேறினான்.

கோகுல் கூறியதை மனதிலே அசை போட்டான் பிரபஞ்சன். அவன் சொல்வதும் உண்மை தானே? உமையாளுக்கான நேரத்தை நான்தானே வழங்கினேன். நானே அவளைத் தொந்தரவு செய்யக் கூடாது.

‘எப்படி குழம்பினாலும், தெளிந்து தன்னிடம்தான் வருவாள். உமையாளின் தெளிவு, தெரிவு இரண்டுமே நானாகத்தான் இருக்கக் கூடும். தான் ஏதோ ஒருவகையில் அவளைப் பாதித்து இருக்கிறோம். அதனால்தான் அவளால் தன்னை நேர்க்கொண்டு பார்க்க முடியவில்லை. தன்னிடம் பேச முடியவில்லை’ எனப் பொறுமையாய் யோசித்து நடந்ததை மனதில் ஓட்டிப் பார்த்தவனுக்கு சந்தோஷத்தில் பேச்சு வரவில்லை. இத்தனை நேரம் மனம் முழுவதும் வியாப்பித்திருந்த குழப்பமும் கோபமும் பயமும் நொடியில்
விடை பெற்றிருக்க, அப்படியொரு ஆசுவாசமான உணர்வு‌ எந்த முகாந்திரமும் இன்றி ஆடவன் மனதில் குடிபுகுந்தது. மனமும் உடலும் புதுத் தெம்பை பெற்றது போலொரு எண்ணம்.
இருக்கையிலிருந்து சந்தோஷமாய் துள்ளி குதித்து எழுந்தவன், அறையைவிட்டு வெளியேற கோகுல் தொலைக்காட்சியில் ஏதோ படம் பார்த்துக்கொண்டிருந்தான்.

“ம்மா, ஒரு காஃபி ப்ளீஸ்...” என்ற பிரபஞ்சன் வேண்டுமென்றே கோகுல் அருகே அவனை ஒட்டி உரசியபடி அமர்ந்தான்.

“டேய், அங்கதான் அவ்ளோ இடம் இருக்கே. அப்புறம் எதுக்கு என்னை இடிச்சுட்டு வந்து உட்கார்ற?” என கடிந்துக்கொண்டே சற்று தள்ளி அமர்ந்தான் கோகுல்.

சாரதா அடுக்களைக்குள் நகர்ந்ததும், கோகுலின் கழுத்தை சற்றே வளைத்து அவன் வலக்கன்னத்தில் அழுத்தமாய் முத்தமிட்டவன், “மச்சான் தேங்க்ஸ் டா. லவ் யூ...” எனக் கூற, “சீ... கருமம்! கருமம். போய்த் தொலைடா நாயே!” என துள்ளி எழுந்தான் கோகுல்.

“நாயே! என்ன டா, காதல் முத்தி பைத்தியமாகிட்டீயா? இதுல என்னை ஹோமோ செக்சுவல்னு வேற கலாய்க்குறான். எருமை” என்று கோகுல் திட்டியதற்கு எல்லாம் பிரபஞ்சன் அசையவே இல்லை. காலை நான்றாக மேஜை மீது நகர்த்தி அமர்ந்தவனின் முகத்தில் பற்கள் அனைத்தும் பளிச்சென மின்னின. முகம் மட்டுமல்ல அகமும் சேர்த்து ஜொலித்தன.

“மம்மி, காஃபில கொஞ்சம் உப்பை அள்ளிப் போடுங்க. அப்பவாது உங்க பையனுக்கு சூடு சொரனை வருதான்னு பார்ப்போம்...” கோகுல் சாரதாவிடம் முறையிட,

“டேய், என்ன டா உளறீட்டு இருக்க?” புரியாது வினவினார் அவர்.

“ஆமா, நான் இங்க உளர்றேன். உங்க மகன் உங்களுக்கு மருமகளோட பேத்தியையும் சேர்த்தே ரெடி பண்ண பக்கா பிளானோட இருக்கான்...” கோகுல் உதட்டுக்குள் முணுமுணுக்க,

“சத்தமா பேசு டா...” சாரதா அடுக்களையிலிருந்து கத்தினார். அதற்குள் எட்டி அவன் வாயைப் பொத்தியிருந்த பிரபஞ்சன், “ம்மா, ஒன்னும் இல்லை மா. அவனுக்கும் உப்பு தூக்கலா ஒரு காஃபி கொண்டு வாங்க...” என நண்பனை அறைக்குள் இழுத்துச் சென்றுவிட்டான்.

‘என்னது இது? ரெண்டு பேரும் பைத்தியமாகிட்டாங்களா? கடவுளே! நீதான் ரெண்டு பேரையும் சரி செய்யணும்...’ தீவிரமாய் மனதில் வேண்டுதல் வைத்தார் சாரதா.

மறுநாள் காலையில் பிரபஞ்சன் உமையாளைக் காணப் போகிறோம் என்ற உந்துதலில் மகிழ்ச்சியான மனநிலையோடு தயாராகிக்கொண்டிருந்தான். அவனையே பார்த்துக்கொண்டு உணவருந்திய கோகுல், “என்ன மம்மி உன் பையன் புது சொக்கா போட்டு கலக்கலா கிளம்புறான்?” என வினவ, “என்னடா கேட்குற?” என அவனருகில் வந்தார் சாரதா.

“அஹம்... ஹக்கும். அது ஒன்னும் இல்ல, உங்க பையனோட கலர் சொக்கா நல்லா இருக்குன்னு சொல்ல வந்தேன். சரி, சரி, சாம்பாரை ஊத்துங்க முதல்ல...” என அவரை திசைதிருப்பியிருந்தான்.

“டேய், நேத்துல இருந்து நீ ஆளே சரியில்லை, பேச்சும்தான்” கோகுலை சாரதா முறைக்க,

“ஹக்கும்... நானும் லேசுவாக்கா உன் மகனை போட்டுவிடலாம்னு பார்க்குறேன். மனசு வர மாட்டுது. நீயும் புரிஞ்சுக்க மாட்ற மம்மி...” என்றவனை சாரதா குழம்பிய முகத்துடன் ஏறிட்டான்.

“குழப்பம் நல்லது மம்மி, குழம்புனாதான் தெளிய முடியும். ஏன் டா நல்லவனே?” கோகுல் பிரப்ஞசனை நக்கலாகப் பார்த்தவாறே இழுக்க, அவன் தொடையில் நறுக்கென கிள்ளியவிட்டு, அவனருகில் உண்ண அமர்ந்தான்.

“ஆ... மம்மி. உங்க பையன் சரியில்லை. கண்டுச்சு வைங்க...” புகார் கூறியவாறே கை கழுவ எழுந்து சென்றான் கோகுல்.

“டேய், காலையிலயே அவன்கிட்ட ஏன் டா வம்பிழுக்குற. சாப்பிடு ஒழுங்கா...” பிரபஞ்சனை கடிந்தவாறே உணவைப் பரிமாறினார் அன்னை. உண்டுவிட்டு இருவரும் ஆடைத் தயாரிப்பகத்தை நோக்கி நகர்ந்தனர்.

(கீழே படிக்க தொடர்ந்து)
 
Administrator
Staff member
Messages
997
Reaction score
2,810
Points
93
“என்ன, ஒன் ட்வொன்ட்டி வாட்ஸ் பல்பை விட உன் பேஸ் இன்னைக்கு டால்லடிக்குது!” கோகுல் வினவ, பிரபஞ்சன் முகத்தில் மேலும் புன்னகை பெரிதாய் படர்ந்தது.

“ஹம்ம்... ஹக்கும். இன்னும் ஒன்வேதான் மச்சி. ரொம்ப ஆடாத!”

“சீக்கிரம் அதை டூவே வா மாத்தி, என் புள்ளைக்கு உன் மடியில உட்கார வச்சு காது குத்துறேன் மச்சி...” பிரபஞ்சன் சிரிக்காமல் கூற, “டேய் போதும் டா. முடியலை...” என நெஞ்சில் கையை வைத்தான் கோகுல். இருவருக்கும் சிரிப்பு பொங்கியது.

“பதட்டபடாம, நெவர்ஸாகாம அவங்களை ஹேண்டில் பண்ணு டா...” என்ற கோகுல் நண்பனின் தோள் தட்ட, பிரபஞ்சன் முகத்தில் மெல்லிய நகை பூத்தது. தலையை மட்டும் அசைத்தான்.

ஆடைத்தயாரிப்பகத்தில் நுழைந்ததும் பிரபஞ்சன் கண்கள் ஒருமுறை வாயிலை சுற்றி வந்தன. “மச்சான், ஆர்வக் கோளாறுல நீதான் அரைமணி நேரம் முன்னாடியே வந்திருக்க. அவங்களையும் அப்படியே எக்ஸ்பெக்ட் பண்ணாத மேன்...” கோகுல் ஏகத்துக்கும் நக்கலாய்க் கூறியதும் அசடு வழிந்த பிரபஞ்சன், அதை வெளியே காட்டாது, “சரி, சரி. நீ போய் உன் வேலையைப் பாரு டா...” என நண்பனை அதட்டிவிட்டு தனதறைக்குச் சென்றான்.

ஒன்பது மணிக்குச் சரியாய் உமையாள் குழந்தையுடன் உள்ளே நுழைந்தாள். கண்காணிப்பு புகைப்படக் கருவியில் அவர்களைத்தான் பார்த்திருந்தான் பிரபஞ்சன். எப்போதும் தெளிவான முகமும் புன்னகைத்த உதடுகளுமாக இருப்பவள் இன்று ஏனோ சோர்ந்து காணப்பட்டாள். சக பணியாள் ஒருவரிடம் பேசும்போது கட்டாயத்தின் பேரில் உதிர்த்த புன்னகை கூட அவள் முகத்திற்கு அழகைக் கூட்டியது. அவள் உள்ளே செல்லும்வரை பார்த்திருந்தான். குழந்தையுடன் பேசிவிட்டு, அவளை அவர்கள் பகுதியில் விட்டுவிட்டு, வேலை செய்யும் இடத்திற்கு நகர்ந்துவிட்டாள்.

அவள் முகத்திலிருந்த உணர்வு இவனுக்கு இங்கே மனதில் பிரதிபலித்தது. என்னவானது? எனக் கேட்டு அறிந்து ஆறுதல் கூறித் தலைக்கோத வேண்டும் என மனம் முழுவதும் பரபரத்தாலும், அமைதியாய் அமர்ந்துவிட்டான். அவளாக வரட்டும் என ஆர்பரித்த உணர்வுகளையும் மனதையும் அமைதிப்படுத்திவிட்டான். அன்று முழுவதும் இருவரும் ஒருவரையொருவர் சந்திக்கவே இல்லை. அதற்க்கான வாய்ப்பும் அமையவில்லை. பிரபஞ்சன் எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை என்பதே உண்மை.

அடுத்த வந்த ஒரு வாரமும் இருவரும் ஒருவரையொருவர் காணவில்லை. சந்தர்ப்பங்கள் அமைந்த போதும், உமையாள் அதை தவிர்த்துவிட்டாள். பிரபஞ்சன் அறைக்கு, தான் செல்லாது எதாவது காரணம் கூறி, தன் சகப் பணியாளரை அனுப்பிவைத்தாள். எல்லாவற்றையும் கவனித்தாலும் பிரபஞ்சன் எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை. எத்தனை நாளைக்கு இந்தக் கண்ணாம்பூச்சி ஆட்டம் எனப் பார்க்கலாம் என நடப்பதை சுவாரஸ்யமாய் நோட்டமிட ஆரம்பித்தான்.

எங்கேயாவது அவனை எதேச்சையாக காண நேரிட்டால் கூட பார்வையைப் அவன்புறம் சிதறவிடாமல் கவனமாய் இருந்தாள் உமையாள். அதில் பிரபஞ்சன் உதட்டில் மென்னகை பிறக்கும்.

அன்றும் அப்படித்தான் ஆடை வடிவமைப்பு வேலை ஒன்றை அந்தப் பகுதி மேற்பார்வையாளரிடம் ஒப்படைத்து இருந்தான் ஆடவன். ஆனால், வடிவமைப்பு அத்தனை திருப்தியாய் வரவில்லை. இருமுறை திருத்தங்கள் செய்தும் ஏனோ பிடிக்கவில்லை அவனுக்கு.

அதை அலைபேசி மூலம் மேற்பார்வையாளரிடம் தெரிவித்திருக்க, அவர் உமையாளிடம் அந்த வேலையை ஒப்படைத்துவிட்டார்.

“நீங்களே இந்த டிசைனை கரெக்ட் பண்ணி, சார்கிட்டே எடுத்துட்டு போய் காட்டுங்க மா. வேற எதுவும் சேஞ்சஸ் வேணும்னா செஞ்சு கொடுங்க. நம்ம வேலை முடிஞ்சாதான், அடுத்து எல்லா வேலையும் நடக்கும்...” அவர் உமையாளிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட, வேறு வழியின்றி அவர் சொன்னது போல வேலையை முடித்துவிட்டாள். ஒரு வாரமாக அவனைப் பார்க்காது எப்படியோ தவிர்த்துவிட்டாள். ஆனால், இன்று முடியவில்லை.

என்ன செய்ய? அவனைப் பார்த்தால் மனதில் சொல்ல முடியாத உணர்வுகள் முகிழ்க்கிறது. இந்த ஒரு வாரமும் தன் மனதின் போராட்டத்தை அவள் மட்டுமே அறிவாள். அதிகமாய் அவளுள் வியாபித்திருந்தான் இந்த பிரபஞ்சன். அவனது குணமும் மற்றவர்களை அவன் அணுகும்முறையும், பரிவான பார்வையும் அக்கறை கலந்தப் பேச்சும் என நித்தமும் அவளை தொல்லை செய்தான்.

ஆயிரம் வார்த்தைகளை உதிர்க்கவில்லை. கட்டியணைக்கவில்லை, காதல் மொழி பேசவில்லை. கண்ணியமாய் கைக்கட்டி எட்டி நின்று தன் விருப்பத்தை தெரிவித்த பிரபஞ்சன் மனதில் நின்று போனான். ஒரு சகமனிதனாய் அவனை அதிகம் பிடித்தது. ஆனால், மனம் முழுவதும் பயம்தான். அவளுடைய கடந்த கால வாழ்க்கையில் கண்ட காயங்கள் எல்லாம் மீண்டும் கண்முன்னே வந்து போனது. ஏற்கனவே வாழ்வில் விழுந்த அடி பெரியது. அதிலிருந்து மீண்டு வரவே கிட்டத்தட்ட இந்த ஒரு வருடங்கள் அவளுக்குத் தேவைப்பட்டது. அந்த சிறையிலிருந்து விடுதலை பெற்று இப்போது அவளும் மகளும் என அழகாய் ஒரு கூட்டை வடிவமைத்து வாழ்கிறாள்.

புதிதாய் அந்தக் கூட்டில் மெதுவாய், தன்னை எந்த விதத்திலும் காயப்படுத்தாது உள்ளே நுழைபவனை என்ன செய்ய? அவன் முகத்தைப் பார்த்து கோபம் கூட சத்தியமாய் அவளுக்கு வராது. எப்போதும் சிரிக்கும் உதடும் புன்னகைக்கும் விழிகளுமாய் அவளை வசீகரித்தான். கண்டிப்பாய் புறத்தோற்றம் அவளை எந்த விதத்திலும் அசைக்கவில்லை. அவளைப் பொறுத்தவரை அழகு என்பது எண்ணத்திலும் செயலிலும் வெளிப்பட வேண்டும். அந்த வகையில் பிரபஞ்சன் நிரம்ப அழகானவன்.

அவனை எப்படி நேருக்கு நேர் சந்திக்கப் போகிறோம்? என்ற கேள்வியே அடிவயிற்றில் எதையோ உருளச் செய்தது. தன் முகத்தைப் பார்த்து அகத்தை அறிந்திடுவானோ? என்ற பயம் மனதை கவ்வ, பிரபஞ்சன் அறை வாயிலில் சில நிமிடங்கள் அப்படியே நின்றுவிட்டாள். அந்தப் பகுதி வழியாக வருவோர் போவோர் எல்லாம் அவளை ஒரு நொடி நின்று பார்த்துவிட்டு செல்ல, படபடக்கும் இதயத்துடனும் தயக்கத்துடனும் அறைக் கதவைத் தட்டினாள்.

“ஹெஸ் கம்மின்...” என்ற பிரபஞ்சன் அலைபேசியில் யாருடனோ உரையாடிக்கொண்டிருக்க, இவள் உள்ளே நுழைந்தாள். அவளை எதிர்பாரது இன்பமாய் அதிர்ந்த பிரபஞ்சன் விழிகள் மின்னின.

‘கம் அண்ட் சிட் கேர்ள்...’ உதட்டை அசைத்தவனின் முகத்தையும் விழிகளையும் ஒரு நொடி பார்த்தவள், அப்படியே விழிகளைத் தாழ்த்திக்கொண்டாள். அமைதியாய் இருக்கையில் அமர்ந்தவளின் இரு செவிகளிலும் பிரபஞ்சனின் குரல்தான் எதிரொலித்தது. ஒவ்வொரு முறையும் இதயம் அதிகமாய்த் துடித்து தன் இருப்பை உறுதி செய்தது. அந்த அறையின் ஜன்னலருகே நின்று பேசிக்கொண்டிருந்த பிரபஞ்சனின் ஒருக்கரம் சிகையை அவ்வப்போது கோதிக் கொள்ள, மற்றொரு கரம் அலைபேசியை காதோடு பொறுத்தியிருந்தது. சாலையில் ஒரு கண்ணையும் சோலையில் ஒரு கண்ணையும் பதித்திருந்தான்.

இரண்டு நிமிடங்கள் பேசி முடித்து அழைப்பை துண்டித்துவிட்டு இருக்கையில் வந்து அமர்ந்தவனின் அரவம் உணர்ந்தாலும் பெண் அவனை நிமிர்ந்து பார்க்கவே இல்லை. பிரபஞ்சன் அவனைக் காணது தவித்த தவிர்த்த விழிகளைத்தான் புன்னகையுடன் கண்டான். இரண்டு நிமிடங்கள் கழிந்தது. அவன் என்னவெனக் கேட்பான் என எதிர்பார்த்து ஏமாந்தவள், “இந்த டிசைனைப் பாருங்க சார். உங்களுக்கு இது ஓகே வா?” எனப் பிரபஞ்சன் முகத்தைக் காணாது, தான் மாதிரிக்காக தைத்த துணியை அவனிடம் காண்பித்தாள்.

“ஹம்ம்... எனக்கு எப்பவுமே ஓகே தான்...” குறுஞ்சிரிப்புடன் கூறியவனின் பதிலின் சாரம்சத்தை உணர்ந்தவள் அதிர்ந்து அவனை நோக்க, அந்த விழிகளில் விழுந்துபோனான் பிரபஞ்சன். நீண்ட நாட்கள், அவனைப் பொறுத்தவரை நீண்ட ஒருவார கால இடைவெளிக்குப் பின்னான சந்திப்பு, நமக்கு பிடித்த தேநீர் விடுதியில் மழை நாளில் ரசித்து ருசித்து தேநீரை சுவைப்பது போல அந்த நொடி தித்தித்தது.

மீண்டும் விழிகளை தாழ்த்தியவள், “ஓகே சார், நான் வரேன்...” என்றவள் எழப் பார்க்க, “நோ, நோ. உட்காருங்க. உங்ககிட்ட பேசணும்...” என்றான்.
அமைதியாய் அமர்ந்துவிட்டாள்.

“எத்தனை நாளைக்கு இந்த ஹைட் அண்ட் சீக் கேம் விளையாடப் போறீங்க?” பிரபஞ்சன் வினவ, அவளிடம் பதிலில்லை.

“என் முகத்தைப் பாருங்க முதல்ல...” லேசான அதட்டல் தொனிதான். ஆனால், உமையாள் நிமிரவே இல்லை. தலையை மட்டும் இடம் வலமாக முடியாது என்பது போல அசைத்தாள். அவளது செய்கையில் அழையா விருந்தாளியாக பெரியதான புன்னகை ஒன்று ஜனித்தது பிரபஞ்சனுக்கு. அந்த நொடி ஆராதனாவிற்கும் அவளுக்கும் இடையே ஏழு வேறுபாடுகளைக் கண்டறிய முயன்று தோற்றான்.

“ஹ்ம்ம்... ஹே கேர்ள்! ப்ளீஸ்...” என்றான் ஆழ்ந்த கரகரப்பான குரலில். அவளுக்கும் அவனுக்கும் மட்டுமான குரல் அது. செவியில் மோதிய குரல் விழிகளில் நீரைத் தளும்ப செய்தது.

“உமையா, ப்ளீஸ்... என்னை நிமிர்ந்து பாரு...” ஒருமைக்கு தாவி இருந்தான் பிரபஞ்சன். அந்தப் பிரபஞ்சத்தை முழுமையாய் அந்த நொடி ஆட்சி செய்தது உமையாள் மட்டும்தான்.

லேசான முறைப்பும் இமைகளில் தொக்கி நின்ற நீருமாய் நிமிர்ந்தாள் பெண். “ஹே கேர்ள், என்னாச்சு?” பதட்டமும் தவிப்புமாய் கேட்டுக்கொண்டே எழ முயன்றவனை கையை நீட்டி தடுத்து இருந்தாள்.

“எனக்குப் பிடிக்கலை...” என்றாள் லேசாய் உதட்டைக் கடித்து. அவளது கூற்றுப் புரியாது விழித்தவன்,“என்ன பிடிக்கலை. புரியலை மா!” என்றான்.

“ஹே கேர்ள்னு கூப்பிடாதீங்க. அது எனக்குப் பிடிக்கலை...” குழந்தை தந்தையிடம் தனக்குப் பிடிக்காததை கூறி முறையிடும் பாவனை. அதில் பிரபஞ்சன் முகம் கனிந்துவிட்டது.

“சரி, அழாதீங்க. நான் இனிமே உங்களை அப்படி கூப்பிடலை. கண்ணைத் துடைச்சுக்கோங்க...” என்றவனின் பார்வை முழுவதும் அவளுக்கான ஆச்சரியம்தான் நிரம்பி வழிந்தது. தான் சந்தித்த அழகான தன்னம்பிக்கை நிறைந்த பெண், வாழ்க்கையில் எத்தனையோ போராட்டங்களையும் வாதையும் வலிகளையும் சந்தித்து, அதிலிருந்து மீண்டு வந்தவள்.
அப்படிப்பட்டவள், தன் முன்னே எந்த வித அலட்டலும் எச்சரிக்கை உணர்வுமின்றி அவள் அவளாக விருப்பையும் வெறுப்பையும் முன் வைக்கும்போது அவளுக்கு தன் மீதான நம்பிக்கையை நினைத்து மனம் எந்தளவு
ஆசுவாசமடைந்தது என வார்த்தைகளால் விளக்கமுடியாது.

விழிகளில் பொங்கும் நீரைத் துடைத்து நிமிர்ந்தவள், “எனக்கு உங்களைப் பிடிக்கலை...” என்றாள். உதடுகள் பொய்யைத் தழுவினாலும், விழிகளில் அவன் மீதான நேசம் மிளிர்ந்தது.

“பட், எனக்கு இந்த உமையாளை ரொம்ப பிடிச்சிருக்கே. வாழ்க்கையில எவ்வளோ கஷ்டப்பட்டாலும், இன்னைக்கு வரை தன்னம்பிக்கையோட அது தந்த பொலிவோட அழகா இருக்க உமையாளை ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு...” என்றான் ஆழ்ந்த குரலில்.

நின்றுவிட்டதாய் நினைத்திருந்த கண்ணீர் மீண்டும் உடைப்பெடுத்தது. “இப்படி பேசாதீங்க. எனக்கு பயமாயிருக்கு...” என்றவளுக்கு குரல் அடைக்க, இரண்டு கைகளிலும் முகத்தை ஆழமாய்ப் புதைத்துக்கொண்டாள். அமைதியாய் அவளைப் பார்த்திருந்தான் பிரபஞ்சன். தன் முன்னே அமர்ந்திருந்தவளை முழுமையாய் அவதானிக்க முயன்றான்.

“என்ன பயம் உமையாள்? என் மேல உங்களுக்கு பயமா?” எனக் கேட்ட பிரபஞ்சன் குரல் முழுவதும் பரிவுதான். நிமிர்ந்து பார்த்தவள், ‘இல்லை...’ என்பதாய் தலையை அசைக்க, “என்ன டா?” என்றான் வாஞ்சையாய். ஒரு தாய் மகளைக் கேட்கும் வாஞ்சை குரலில் கொட்டிக்கிடந்தது. அதில் மீண்டும் மனம் அவன்புறம் சாய்ந்தது.

“வேணாம், இது சரிவராது...” என்றாள் திக்கித் திணறி. ஆனால், உள்ளே அப்படியொரு வலி வியாபித்தது.

“சரி உங்களுக்கு வேண்டாம்னா, எனக்கும் வேணாம்...” என்றான். அந்தப் பதிலைக் கூறியவனைக் கண்களில் ஏக்கமும் வலியுமாய்ப் பார்த்தாள். அவளுக்கே தனக்கென்ன வேண்டும் என தெளிவு இல்லாது இருக்க, எதிரிலிருந்தவன் அமைதியாகிப் போனான். பரிவும் கனிவுமாய் அவளைப் பார்த்தவன்,

“சரி, எதுவும் வேணாம். முதல்ல அழறதை நிறுத்துங்க. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு...” கரகரத்துப் போன குரலில் கூற, அவனை விழியகலாது பார்த்துக்கொண்டே கண்ணீரை துடைத்தவள், “என்னைப் பார்க்க நீங்க முயற்சி பண்ணக் கூடாது...” என்றாள்.

அந்தக் கூற்றில் எதிரிலிருந்தவனின் முகம் முழுவதும் புன்னகை. பற்கள் தெரிய புன்னகைத்தவன், “சத்தியமாய் நான் வரலை. நீங்கதான்...” என இழுத்தவனின் பேச்சின் சாராம்சம் உணர்ந்து லேசாய் சங்கடப்பட்டு, சிவந்து பின்னர் அவனை முறைத்தாள்.

“சாரி...” இரு தோள்களையும் குலுக்கி விழிகள் சுருங்கி சரணடைவது போல இரண்டு கைகளைத் தூக்கியவனைப் பார்த்து உமையாள் முகத்தில் மென்னகை படர்ந்தது. அவள் முகத்தின் சிரிப்பையும் அது கொடுத்த பேரழகையும் ஆசையாய்ப் பார்த்திருந்தான் பிரபஞ்சன். அந்நொடி அந்த சிரிக்கும் உதடுகளோடு அவனும் உறைந்துவிட வேண்டும் எனத் தோன்றியது.

“எனக்கு போன் பண்ண கூடாது...” கட்டளையிட்டாள் பெண்.

“ஆகட்டும் மகாராணி...” எழுந்து நின்று சேவகன் போல செய்தவனின் செயலில் உமையாள் கன்னத்து தசைகளில் மென்மையான சிவப்பு பட்டும்படாமலும் படர்ந்து அழகு சேர்த்தது.

“சரி, மேடம்க்கு வேற எதுவும் ஆப்ளிகேஷன் இருந்தா சொல்லிடுங்க. எல்லாத்தையும் ஃபாலோ பண்றேன்...” அடக்கமாய்க் கேட்டவனை மெலிதான பொய்க் கோபத்துடன் பார்த்தாள்.

“தட்ஸ் மை கேர்ள்...” என்றவன் பின் நாக்கை கடித்து, “ஹம்ம்... சாரி!” என்றான். தலையை மட்டும் அசைத்தாள். அடுத்து என்ன பேசுவது என இருவருக்கும் தெரியவில்லை.

தொண்டையை சரிசெய்த பிரபஞ்சன், “உமையா, நான் முன்னாடியே சொன்னதுதான்.‌ உங்களுக்குப் பிடிக்கலைன்னா, அதை எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லலாம். உங்களை எந்த விதத்திலும் நான் கட்டாயப்படுத்த மாட்டேன். அது போல காயப்பட்டுத்த மாட்டேன்.
ரொம்ப மனசை போட்டுக் குழப்பிக்காதீங்க. வாழ்க்கைல சின்ன சின்ன முடிவை நம்ம எடுக்கலாம். ஆனால், பெரிய பெரிய முடிவை எல்லாம் வாழ்க்கை அதுவா எடுத்துக்கும். சோ, அதை அக்செப்ட் பண்ணி மூப் பண்ணுங்க. கோ வித் த ஃப்ளோ, வாழ்க்கை எப்படி போகுதோ, அப்படியே போகலாம். அதுல தப்பு எதுவும் இல்லைங்க...” என்றான் எந்த வித அலட்டலுமின்றி. அவனையும் அவன் பேச்சையும் அவதானித்து மனதில் பூட்டியவள், தலையை மட்டும் அசைத்து வெளியேறினாள். செல்லும் அவளை மென்னகையுடன் பார்த்தான் பிரபஞ்சன்.

பிரபஞ்சம் எப்போது உமையாளை ஆளும்?

தொடரும்...



 
Active member
Messages
131
Reaction score
89
Points
28
ஏமாற்றத்தைப் பார்த்துட்டு சீக்கிரம் நம்புறது கஷ்டம் தான்..‌ //பிரபஞ்சம் எப்போது உமையாளை ஆளும்?// வரி செம்ம ஜானு ❤️
 
Well-known member
Messages
610
Reaction score
346
Points
63
Saratha Amma prabha Gokul nalla combo pa 😄🤩🤩
Prabhajam sikirama umaiyalai aalum 🥳💃🤩antha nall sikirama varum semma cute prabha pratical pesura so sweet man💞💞💞
 
Active member
Messages
113
Reaction score
59
Points
28
Lovely 🥰🥰🥰🥰🥰 ஹே கேர்ள்... 🤗🤗🤗 சீக்கிரம் ஓகே சொல்லிடு... 😇
 
Top