• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
997
Reaction score
2,810
Points
93
நெஞ்சம் – 11 ❤️

அன்று பெண் பார்த்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்த மகனின் முகத்தையே ஆர்வமாகப் பார்த்திருந்தார் சாரதா. அவரருகில் அமர்ந்து நிதானமாகப் பேசி தனக்கும் அந்தப் பெண்ணிற்கும் ஒத்துவராது என்பதை பிரபஞ்சன் விளக்கவும், சாரதா பெரிதாய் வருத்தம் கொள்ளவில்லை. அவரைப் பொறுத்தவரை வாழப் போவது அவர்கள் இருவர்தான். மனமொத்து இருந்தால்தான் திருமண வாழ்க்கை சிறக்கும். அப்படியில்லாதப்பட்சத்தில், வாழ்க்கை கசந்து போகுமே.

எனவே எந்த வித மனசஞ்சலங்கள் இன்றியும் மகனின் விருப்பத்தை ஏற்றுக்கொண்ட தாயை இறுக அணைத்து விடுவித்தவனுக்கு, மனதில் பெரியதொரு நிம்மதி பிறந்தது‌.

அடுத்தடுத்து நாட்கள் எப்போதும் போல நகர்ந்துகொண்டிருக்க, பிரபஞ்சனுக்குக் கொஞ்ம் குழப்பமும் இதுவரை உணராத உணர்வில் சுகமாகவும் நாட்கள் நகர்ந்தது. என்ன முயன்றும் உமையாளைக் காணும்போது பிரகாசிக்கும் முகத்தையும் துள்ளும் மனதையும் அடக்க வழியில்லாது போனது.

‘டீனேஜ் பையன் போல பிகேவ் பண்ற டா’ தனக்குத் தானே திட்டிக்கொண்டான் ஆடவன். அவனுக்குத்தான் அவள் மீதான விருப்பம் அழுத்தமாய் வேரூன்றி போனது.

உமையாள் எப்போதும் போல்தான் இருந்தாள். என்ன இவனைக் காணும்போது அவளறியாமல் உதடுகள் புன்னகையை உதிர்த்தன. முன்பெல்லாம் அவனைக் கண்டால் முதலாளி என்ற மரியாதை பான்மை மட்டும்தான் அவளிடம் தென்படும். அந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்ததிலிருந்து ஏனோ பெயரளவில் என்றில்லாமல் முகமும் அகமும் மலர்ந்து அவனைப் பார்த்துப் புன்னகைத்து நன்றி கூறிய உமையாள் உளமெங்கும் நிறைந்துதான் போனாள். அப்போது மட்டுமல்ல, அடுத்து எங்கே சந்திக்க நேரிடினும் பாவை முகத்தில் புன்னகை பூக்கும்.

அது மட்டுமின்றி ஆடை வடிவமைப்பு பிரிவுக்கு உமையாள் மாறிவிட்டிருந்ததால், அடிக்கடி அவனை சந்திக்க அறைக்குள் நுழைவாள்.‌ அவளது ஆடைவடிவமைப்பின் நுணுக்கத்தையும் நேர்த்தியையும் பார்த்து பிரபஞ்சனே வியந்து போனான். அத்தனை அழகாய் ஒவ்வொரு ஆடையும் வடிவமைத்தாள். ஒவ்வொரு முறையும் அவளைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கத் தவறவில்லை பிரபஞ்சன்.

தன் மனதிலிருக்கும் எண்ணத்திற்கு இன்னும் செயல்வடிவம் கொடுக்க முனையவில்லை ஆடவன். முதலில் தனக்குத் தோன்றிய உணர்வு வெறும் ஈர்ப்பா, இல்லை அதையும் தாண்டிய உணர்வா என சுய அலசல் செய்து குழப்பத்தைத் தீர்த்தப் பின்னரே, அவளின் மீதான தன் விருப்பத்தை உரைக்கலாம் என்றிருந்தான். ஏதாவது ஒருவகையில் அவனை ஆச்சரியப்பட வைத்துக்கொண்டிருந்தாள் பாவை.

ஏனோ தன் மனதை தானே நிச்சயம் அறியாதவரை யாரிடமும் தன் எண்ணத்தைப் பகிர்ந்துகொள்ள விரும்பவில்லை பிரபஞ்சன். ஒருவேளை இல்லையென்றாகிவிட்டால், அது உமையாளின் பெயரைப் பாதித்துவிடும் எனத் தன் எண்ணத்தைத் தனக்குள்ளே பாதுகாத்தான்.

இருந்தும் அன்றைக்கு யாரிடமாவது பகிர்ந்து கொள்ள மனம் தூண்ட, நெற்றியை அழுந்தத் தேய்த்துவிட்டுக்கொண்டான். கோகுலுக்கும் அவனுக்கும் இடையில் ஒளிவு மறைவு என எதுவுமே இருந்தது இல்லை, உமையாள் விஷயத்தைத் தவிர.

யோசித்தவன், தனது தனிப்பட்ட நாட்குறிப்பேட்டை எடுத்தான். என்றாவது ஒருநாள் மனதிலிலுள்ளதை அதில் எழுதும் பழக்கம் உண்டு ஆடவனிடம். நாட்குறிப்பேட்டை எடுத்துக்கொண்டு ஜன்னலின் அருகே மேஜை போட்டு அமர்ந்தவனின் கரங்கள் திரைச்சீலையை இழுத்துவிட, பளிச்சென்ற நிலவொளி அறையை நிறைத்தது.

மெல்லிய சங்கீதமாய் பூச்சிகளின் ரிங்காரமும் பறவைகளின் சத்தமும் செவியை நிறைக்க, நிலவைப் பார்த்து மனம் ரசித்தது. சில நிமிடங்களில் மழைத்துளிகள் விழ ஆரம்பிக்க, லேசாக சாரல் ஜன்னல் வழி தெறித்தது. உதட்டோரம் புன்னகையுடன் தன் மனதிலிருந்த எண்ணங்களை ஒன்றுவிடாமல் அந்த நாட்குறிப்பேட்டில் எழுதத் துவங்கினான் பிரபஞ்சன். மழை வலுக்கத் துவங்க, ஜன்னலின் வழியே மெல்லிய கூதக்காற்று உடலை சமீபிக்க, காதல் சாரலுடன் மழைச்சாரலும் அவனை சேர்த்து இதமாய்க் குளிர்வித்தது. மனதிலிருந்ததை எழுதி முடித்தப் பிறகு யாரிடமோ தன் எண்ணத்தைப் பகிர்ந்துகொண்ட களிப்பில் மனம் ஓய்வெடுக்கத் துவங்க, கையில் எழுதுகோலை வைத்து சுழற்றிக்கொண்டே தன் எண்ணத்தில் ஆழ்ந்து இருந்தவனை செருமல் குரல் நிகழ்வுக்குக்கொண்டு வந்தது.

“ஹக்கும்... ம்க்கும்...” தொண்டையை வேண்டும் என்றே சத்தமாய் செருமிய கோகுல் நாற்காலியை இழுக்கும் சத்தமும் அதில் அவன் அமர்ந்து கட்டிலில் காலை பொத்தென போடும் சத்தமும் பிரபஞ்சனது செவியை அடைய, திரும்பிப் பார்க்காமலே அவனால் உணர முடிந்தது. உதட்டோரம் புன்னகை வழிந்தது நண்பனது செயலில். கிரணைப் பார்க்கச் சென்ற தினத்திலிருந்து இன்றுவரை இருவருக்கும் இடையில் சரியானப் பேச்சு வார்த்தை இல்லை.

ஆனால், அவர்களுக்கு இடையேயான வேலைகள் எப்போதும்போல நடைபெற்றன. இருவரும் சேர்ந்து அலுவலகம் செல்வதும் வருவதுமாகத்தான் இருந்தனர். கோகுல் வாய் மட்டும் பூட்டுப்போட்டுக்கொண்டது பிரபஞ்சன் அருகில். ஒரே கட்டிலில் தான் எப்போதும் போல உறங்கி எழுந்தனர், ஒன்றாய் உண்டனர். ஆனாலும், இருவருக்கும் இடையே சண்டை ஒருபுறம் அப்படியே இருந்தது.

சாரதா அழைக்கவும் நாட்குறிப்பேட்டை மூடிவைத்துவிட்டு, அறையைவிட்டு வெளியேறினான் பிரபஞ்சன். பத்து நிமிடம் கழித்து அறைக்குள் நுழைந்தான். அவன் மூடி வைத்தப் பக்கம் அழகாக அப்படியே இருந்தது எழுதுகோலும் சேர்த்து. முகம் முழுவதும் புன்னகையில் மிளிர்ந்தது. அவனுக்குத் தெரியுமே, கோகுல் இதை கையால் கூடத் தொட மாட்டான் என்று. தன்னால் சொல்ல முடிந்தால், கண்டிப்பாக அவனிடம்தான் சொல்லி இருப்பேன் என்ற நம்பிக்கை அவனுக்குத் தன்மீது உண்டு என பிரபஞ்சனும் அறிவான். அதனாலே நாட்குறிப்பேட்டை அப்படியே வைத்துவிட்டு சென்றான்.

எதுவும் பேசாதவன் அதை எடுத்துப் பத்திரப்படுத்திவிட்டு,
மெத்தையில் வீழ்ந்தான். சிறிது நேரத்தில் அவனுக்கு அருகே கோகுல் படுக்க, வேண்டுமென்றே வலது காலை தூக்கி நண்பனின் மீது போட்டான்.

“ப்ம்ச்...” என்ற கோகுல் பிரபஞ்சன் காலைத்தட்டி விட, சிரிப்புடன் மீண்டும் அவன் மீது காலைப் போட்டான் பிரபஞ்சன்.

“என்ன டா வேணும்?” முகத்தைக் கோபமாக வைத்து பிரபஞ்சன் புறம் திரும்பிய கோகுல் பல்லைக் கடிக்க, “மச்சீ, கோபமா இருக்கீயா?” நக்கலான சிரிப்புடன் வினவினான்.

“ஆமா டா நாயே!” என்ற கோகுல் மறுபுறம் திரும்ப, “சரி விட்றா. என்கிட்ட என்ன கோபம்?” நண்பனை சமாதானம் செய்ய விழைந்தான்.

தன் தோளில் படர்ந்த கரத்தை தட்டிவிட்ட கோகுல், “எனக்குத் தெரியாம என்ன திருட்டு வேலை பார்குற நீ? அதை சொல்லாம, உன்கூட பேச மாட்டேன்...” குழந்தைப் போல அடம்பிடித்தான்.

“ப்ம்ச்... உன்கிட்ட சொல்லாமலா, சீக்கிரம் சொல்றேன் டா” பிரபஞ்சன் கூறியதும், இருவரும் எழுந்து அமர்ந்திருந்தனர். அன்றைக்குப் பிறகு இருவரும் சமாதானக் கொடியை பறக்கவிட வாய்ப்பு இல்லை. இப்போது இருந்த நல்ல மனநிலையில் பிரபஞ்சன் அந்த நல்லக் காரியத்தை கையிலெடுத்தான்.

“அந்தச் சீக்கிரம் எப்போ?” கோகுலின் உதடு கோணிக் கொண்டன.

“அவங்ககிட்ட சொன்னதுக்குப் பிறகு...” பிரபஞ்சன் கூறியதும், அவனைக் கீழே தள்ளி அவன் வயிற்றில் ஏறி அமர்ந்த கோகுல், “எனக்குத் தெரியும் டா. நீ கெக்க பெக்கன்னு தனியா ரூம்ல சிரிக்கிறது, நிலாவை ரசிக்கிறதுன்னு சீனைப் போடும்போதே நினைச்சேன். என்கிட்ட சொல்லணும்னு உனக்குத் தோணலைல...” என்றவன் கையில் பிரபஞ்சனின் மூடி கொத்தாக மாட்டியிருந்தது.

“ஆ.‌.. வேணாம் டா. அது... எனக்கே கன்ப்யூசனா இருந்துச்சு அதான் டா...” பிரபஞ்சன் என்ன கூறியும் கோகுல் சமாதானம் ஆகவில்லை.

“பொண்ணு எந்த ஊரு, எப்படி தெரியும்?”

“நம்ம ஆபிஸ்ல வொர்க் பண்றவங்க தான்...” பிரபஞ்சன் பதிலளித்ததும், “இந்தப் பூனையும் பால் குடிக்குமான்னு இருந்துட்டு, எனக்குத் தெரியாம பாரே நடத்திட்டு இருந்துருக்க... யாரு டா அந்த அவங்க...” என்றவன் மூடியை இறுக்கிப் பிடிக்க, பிரபஞ்சன் கத்த ஆரம்பித்தான்.

“டேய்! டேய்... என்ன டா பண்றீங்க? சத்தம் கேட்டு அறைக்குள் நுழைந்த சாரதா பதற, “மம்மி, ஒன்னும் இல்லை. எனக்கும் அவனுக்கும் பழைய கணக்கொன்னு தீர்க்க வேண்டியது இருக்கு. நீ போ, நாங்கப் பார்த்துக்கிறோம்...” என்ற கோகுல், “இல்லை டா?” என நண்பனை பார்த்து வினவினான். அதில் அப்படித்தான் கூறவேண்டும் என்ற தொனி ஒளிந்திருந்தது.

“ஆங்... ஆமா மா...” என்று பிரபஞ்சன் ஒப்புக்கொள்ள, “என்னமோ போங்க டா!” தலையில் அடித்துக்கொண்டு நகர்ந்தார் சாரதா.

விட்ட இடத்திலிருந்து கோகுல் கேள்விகளைத் தொடர, பிரபஞ்சன் வாய் பூட்டுப் போட்டுக்கொண்டது. “வாயைத் தொறந்து பதில் சொல்லு டா!” என்று கோபத்தில் பிரபஞ்சன் முடியைப் பிடித்து ஆட்டினான் கோகுல். ஆனால், எதிர்வினை என்னவோ சுழியம்தான்‌.

‘கார்மெண்ட்ஸ்ல குறைஞ்சது 500 கேர்ள்ஸ். அதுல கல்யாணம் ஆனவங்க ஒரு 350 பேர்னு ஒதுக்கிட்டா கூட, 150 பொண்ணுங்க மிச்சம் இருக்காங்களே. எப்படி கண்டு பிடிக்கிறது. இவனை டீப்பா வாட்ச் பண்ணணும் இனிமே!’ கோகுல் மனதில் நினைக்க, பிரபஞ்சன் அவனைப் பார்த்து புன்னகைத்தான். முகமெல்லாம் சிவந்து தனக்கு கீழே தன்னைத் தாங்கி படுத்திருந்த பிரபஞ்சன் மீதிருந்து போனால் போகிறது என்று எழுந்தான் கோகுல். இன்னும் கோகுல் முகத்தில் அந்த முறைப்பு அப்படியேதானிருந்தது.
 
Administrator
Staff member
Messages
997
Reaction score
2,810
Points
93

பிரபஞ்சனின் கண்கள் லேசாகக் கெஞ்சி சுருங்க, இறுக்கம் தளர்ந்தான் கோகுல். பின் இருவருக்கும் சிரிப்பு வர, நண்பனைத் தாவி அணைத்தான் கோகுல். பதிலுக்கு தானும் அவனை அணைத்த பிரபஞ்சனிடம், “ஹேப்பி ஃபார் யூ டா...” என்ற கோகுல் உற்சாகமாய்க் கூற, இருவருக்கும் அந்த நொடி மகிழ்வாய் போனது.

மனதிலிருந்ததைக் கோகுலிடம் அரசல்புரசலாகக் கூறினாலும், ஒரு வித திருப்தி மனதெங்கும் பரவியிருக்க, உற்சாகத்துடன் வலம் வந்தான் பிரபஞ்சன். எப்போதும் இருக்கும் புன்னகையை விட, ஒரு மடங்கு அதிகமாகத்தான் அவன் முகம் புன்னகைத்து தொலைத்தது. கோகுல் ஆடைத் தயாரிப்பகத்திலிருக்கும் போது, தனது முழுக் கவனத்தையும் நண்பன் மீதுதான் வைத்திருந்தான். அவன் திருமணமாகதப் பெண்களுடன் பேசும்போது குறிப்பாய் அவனை அவதானிக்க முயன்றான். ஆனால், பலன் சுழியம்தான். பிரபஞ்சனுக்கு இது தெரிந்தாலும், அமைதியாய் இருந்துகொண்டான்.

நடந்ததை அசைபோட்டவாறே மகிழுந்தை இயக்கிக்கொண்டிருந்தான் பிரபஞ்சன். அருகிலிருந்த ஊர் ஒன்றிற்கு தொழில் சம்பந்தமாகச் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தான். அது வாரத்தின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை. கோகுல் காலையிலே படுத்துத் தூங்கிக்கொண்டு எழாமல் சண்டித்தனம் செய்ய, தான் மட்டும் சென்று வந்தான்.

ஜானகியம்மாவும் இளையராஜவும் அவனை நனைத்தனர். உதட்டில் மலர்ந்த புன்னகையுடன் அவ்வப்போது நடந்த நிகழ்வுகளை அசை போட்டவனின் மனதிற்கினியவளே சாலையில் நடந்து வந்துகொண்டிருந்தாள். கண்களை சுருக்கி அவள்தான் என உறுதி செய்தவன், தனது மகிழுந்தை ஓரமாய் நிறுத்திவிட்டு, சாலையிலிறங்கி நடக்கத் துவங்கினான்.

மஞ்சள் வண்ண பூப்போட்ட சுரிதார் அணிந்து கண்ணுக்கு அழகாய் தரிசனம் தந்தாள் உமையாள். முகம் வியர்வையில் குளித்திருந்தது. வெயில் தாங்காது அவ்வப்போது உதட்டைக் குவித்து ஊதிக்கொண்டிருந்தவளின் முடிக்கற்றைகள் வேறு முகம் முன்னே விழுந்து அவ்வப்போது உமையாளை தொந்தரவு செய்ய, இவனுக்குத்தான் பெரும் இம்சையாகிப் போனது. பார்வையைத் தழைத்து உதட்டைக் குவித்து ஊதிக்கொண்டவனின் செவி மடல்கள் சிவக்கத் துவங்க, அதை அழுந்தத் தேய்த்துக்கொண்டே நிமிர்ந்தான். இப்போது அருகே வந்து விட்டிருந்த உமையாள் இரண்டு கைகளிலும் பெரிய பெரிய பொதிகளைத் தூக்கி சுமந்தவாறே வந்ததைக் கவனித்தவனின் முகமும் அகமும் கனிந்து போனது.

“அம்மு, ரோட்ல போகாத. அம்மா கையைப் பிடிச்சுக்கோ...” மெலிதாய் சத்தமிட்டவளின் கைகளில் குழந்தையைப் பிடிக்க சத்தியமாய் இடமில்லை. வெயில் இல்லாத இடமாக ஓரமாய் தாயும் மகளும் நடந்து வந்தனர்.

“அம்மு குட் கேர்ள், ஓரமாதான் நடப்பா...” என்ற ஆராதனா தாயுடன் சேர்ந்து நடந்தாள். சில நொடிகள் கடக்க மீண்டும், சாலைக்கு நடுவில் சென்றாள்.

“சொன்ன பேச்சைக் கேட்க மாட்டீயா டி...” பொறுமையை இழுத்துப் பிடித்து உமையாள் கோபமாய்க் கூற, இருசக்கர வாகனம் ஒன்று ஆராதனாவை உரசும்படி வர, “அம்மு...” என கையிலிருந்த இருந்தப் பையைக் கீழே போட்டுவிட்டு குழந்தை அருகே அவள் விரைவதற்குள் அந்த வாகனம் கடந்திருக்க, அப்படியே இருகைகளாலும் முகத்தை மூடியவளுக்கு சர்வ அவைங்களும் நின்று போக உள்ளம் நடுங்கிப் போனது. அந்த நொடி உயிரும் உடலும் குலுங்கிப் போனது. விழிகள் காட்சியை மூளைக்குக் கடத்த, நடந்த நிகழ்வில் உள்ளம் முழுவதும் உறைந்துவிட்டவளின் உலகம் அந்த நொடி நின்றுபோனது.

“ம்மா...” என அவளது தோளைத் தொட்ட ஆராதனாவின் குரலில்தான் போன உயிர் உடலை சமீபித்திருந்தது. குழந்தைக்கு எதுவுமில்லை என மூளை உணர்ந்து அந்தச் செய்தியை மனதிற்குக் கடத்தவும், சுய உணர்விற்கு வந்தவளின் கரங்கள் எதிரிலிருப்பவரை உணராது குழந்தையை வாங்கி தன்னோடு இறுக்கிக்கொண்டது. உதடுகள் துடிக்க, நடுங்கிய உடலும் கலங்கிய உள்ளமுமாய் தன் முன்னே நின்றிருந்தவளைப் பார்த்து பிரபஞ்சனும் துடித்து தவித்துப் போனான். விழிகளிலிருந்து குபுகுபுவென நீர் கன்னத்தில் இறங்க, மெல்லிய விசும்பல் பெண்ணிடம்.
வாயைத் திறந்து எதுவும் உரைக்கவில்லை எனினும் அவனுக்குமே இதயம் ஒரு நொடி நடுங்கிப் போனது. ஓடி வந்து குழந்தையைத் தூக்கியிருந்தான்.

“ஏன் அம்மு இப்படி பண்ற?” கோபமாய்க் கேட்க முயன்றாலும் குரலில் லேசாய் நடுங்கியது உமையாளுக்கு. குழந்தைக்கு எதுவுமில்லை என மூளை உணர்ந்தாலும், தன்னை சமாதானம் செய்ய அவளது தலை முதல் கால் வரை கைகளால் தடவினாள். நொடியில் முகமெல்லாம் சிவந்துவிட்டிருந்து பாவைக்கு.

“அம்மா சாரிம்மா, அம்மு இப்படி பண்ண மாட்டா...” என தாயின் கன்னத்தில் வழிந்த நீரை துடைத்த ஆராதனாவை அணைத்துக்கொண்டாள் உமையாள். சில நொடிகள் தேவைப்பட்டது அவளுக்கு. உணர்ந்தாள், மூளையும் மனதும் சமநிலைக்கு வந்தது சில நிமிடங்களில்.

விழிகளில் வழிந்த நீரைத் துடைத்துக்கொண்டே நிமிர்ந்துப் பார்த்தவளின் முன்பு தவிப்புடன் நின்றிருந்தான் பிரபஞ்சன். அவள் கைகளை ஆதரவாகப் பிடித்துக்கொள்ள வேண்டும் என மனது தவித்துப் போனது அந்தக் கணத்தில். ஆனால், உமையாள் அதை எப்படி எடுத்துக் கொள்வாளோ? என்ற பயம் கட்டிப் போட, சுற்றியிருந்த சூழ்நிலை கருதி அமைதியாகிவிட்டான் ஆடவன். அவன்தான் குழந்தையைக் காப்பாற்றியது என உணர்ந்தவள், “தேங்க்... தேங்க் யூ சார்..‌.” எனத் தொண்டை அடைக்கக் கூறியவள், உதட்டை அழுந்தக் கடித்து தொண்டை வரை வந்தக் கேவலை அடக்கிக்கொண்டாள்.

“ஆர் யூ ஓகே?” என வினவிய பிரபஞ்சன், அவள் தலையை அசைக்கவும் தான் நிம்மதியானான். நொடியில் என் உயிரையும் உருக்கியிருந்தாள் இந்தப் பெண் என உள்ளம் அதிவேகத்தில் அடித்துக்கொண்டது. கீழே கிடந்த அவளது பைகளைக் கையில் ஏந்தினான்.

குழந்தையை கீழே இறக்கிவிட்டவள், “பரவாயில்லை சார். நான் பார்த்துக்குறேன்...” என உமையாள் அவனருகே வர, “இட்ஸ் ஓகே, வாங்க நான் உங்களை ட்ராப் பண்றேன்...” என்றான் பிரபஞ்சன்.

“இல்லை, இல்லை. நாங்க பஸ்ல போய்க்கிறோம்...” என உமையாள் மறுக்க, அதையெல்லாம் காதில் வாங்காதவன், விறுவிறுவென தன் மகிழுந்தில் அனைத்தையும் வைத்தான். முன்பக்க கதவை திறந்து வைத்து அவளைப் பார்க்க, ‘வரமாட்டேன்...’ என அடமாய் நின்றாள் உமையாள்.

“ப்ளீங்க, வாங்க...” உதட்டை மட்டும் அசைத்தான். வார்த்தைகள் இல்லை, ஆனால் கெஞ்சல் தொனிதான். எதுவும் பேசாத உமையாள் நடந்துவந்து அவனுக்கு அருகே அமர, மகிழுந்தை இயக்கினான் பிரபஞ்சன். குழந்தையை மார்போடு அணைத்து இருக்கையில் சாய்ந்தவளுக்கு இன்னுமே கூட உடல் நடுக்கம் குறையவில்லை. ஆராதனாவிற்கு மட்டும் எதாவது ஆகியிருந்தால், தான் என்னவாகி இருப்போம். தனக்கென யார் இருக்கிறார்கள்? யாருக்காக இனிமேல் நான் வாழப் போகிறேன்?’ பல கேள்விக் கணைகள் நெஞ்சைத் துளைக்க, மீண்டும் குபுகுபுவென விழிகளில் நீர் கசிந்தது. அவளது அதீத இதயத் துடிப்பு பிரபஞ்சனுக்கும் கேட்க, தயக்கமும் தவிப்புமாய் அவளை ஓரக்கண்ணால் பார்த்தான்.

தாயை அணைத்து அவளிடம் தஞ்சம் புகுந்திருந்த ஆராதனா, நிமிர்ந்து பார்த்து அவள் கண்களில் முத்தமிட்டாள். “அம்மா ப்ராமிஸ், அம்மு இனிமே ரோட் சைட் போக மாட்டா. அழாத...” என குழந்தை உதட்டைப் பிதுக்கவும்தான் உமையாளுக்கும் அழுகை நின்றது. ‘எதுவும் ஆகவில்லையே! பிறகு எதற்காக இந்த அழுகை?’ எனக் குழந்தைக்காக தன்னைத் தானே தேற்றிக்கொண்டாள். விழிகளில் வழியும் நீரை நன்றாகத் துடைத்துக்கொண்டு, நிமிர்ந்து அமர்ந்தாள்.

பிரபஞ்சன் பின்னர் எதுவுமே கூறவில்லை, அவளாகவே சரியாகிவிடுவாள் என்ற நம்பிக்கையில் நிம்மதியாய் வாகனத்தை இயக்கினான். சில நிமிடங்களில் இருவரும் குசுகுசுவென ஏதோ ரகசியம் பேச, குழந்தை சிரிக்க ஆரம்பித்து இருக்க, உமையாளுக்கும் மெல்லிய புன்னகை.

அவர்களைக் ஓரக்கண்ணால் நோட்டமிட்டவனின் உதட்டோரம் புன்னகை பூக்க, மனதெங்கும் நிம்மதி வியாபித்தது. மகிழுந்தில் வைத்திருந்த பொம்மை ஒன்று கண்ணில் படவும், “அம்மா, ஜூலி...” என அதை கைநீட்டி எடுத்தாள் ஆராதனா.

“அம்மு, அது உன் ஜூலி இல்லை. வேற பொம்மை...” என்றவள் குழந்தையின் கையிலிருந்து பிடுங்கி அதனிடத்தில் வைத்தாள். பிரபஞ்சன் தொடர்வண்டி நிலையத்தில் குழந்தைக்கு கொடுத்த பொம்மையின் துணை பொம்மை அது.

“பரவாயில்லை எடுத்துக்கட்டும் குழந்தை...” என்ற பிரபஞ்சனின் இடது கை அந்தப் பொம்மையை எடுத்து ஆராதனாவிடம் கொடுக்க, அவள் வாங்கவே இல்லை. தாயின் முகத்தைப் பார்த்துவிட்டு, வேண்டாம் என்பது போல தலையை அசைத்து, உமையாளின் தோளில் முகத்தைப் புதைத்துக்கொண்டாள்.

“குழந்தையை ரொம்ப மிரட்டி வச்சிருக்கீங்க நீங்க...” மெல்லிய புன்னகையுடன் பிரபஞ்சன் கூற, உமையாள் என்ன சொல்வது எனத் தெரியாது தயக்கமாய் அவனைப் பார்த்தாள். தயங்கும் விழிகளில் முத்தமிட்டு குழந்தையை அணைத்திருந்த அவளில் தான் தஞ்சம் புக வேண்டும் எனத் தோன்ற, கரகரத்த தொண்டையைச் சரி செய்துகொண்டவனின் இதழ்களில் வெட்க முறுவல் ஒன்று பூத்தது. அவளறியாமல் அதை மறைத்தவனின் உள்ளத்தில் முதன்முதலில் கள்ளத்தனம் புகுந்தது. ஓர்ப்பார்வையில் தன்னை வெட்கப்பட வைத்த பாவையை மனதில் நிறைத்துக்கொண்டான்.‌ அவளது இருப்பு இதயத்தை இதமாக்கியது.

சில நிமிடங்களில் உமையாளின் இருப்பிடம் வந்துவிட்டது. தான் கூறாமலே எப்படி இவர் இங்கு வந்தார்? என பெண் அவனை ஆராய்ச்சியாகப் பார்க்கவும், “மங்கை அக்கா சொல்லி இருக்காங்க. அவங்களோட வீட்லதான் நீங்க இருக்கீங்கன்னு...” அவள் பார்வை உணர்ந்து பதிலளித்தான் பிரபஞ்சன்.

உமையாளின் பைகளை எடுத்து வீட்டுத் திண்ணையில் வைத்தான். அவனை உள்ளே அழைக்கலாமா? வேண்டாமா? என்ற சிந்தனையோடு நின்றிருந்தாள் உமையாள். தனியே தான் மட்டும் தங்கியிருக்கும் போது அவன் உள்ளே வந்தால், அது நன்றாக இராது என மூளை எச்சரித்தது. அவளது முகபாவனைகளை அவதானித்துக்கொண்டிருந்த பிரபஞ்சன் முகத்தில் முறுவல் ஒன்று பூத்தது. அவனுக்கு அப்படியெல்லாம் ஒன்றும் தோன்றவில்லை போல.

“நான் வரேங்க...” என்று மகிழுந்து கதவைத் திறந்து அந்தப் பொம்மையை எடுத்து ஆராதனாவின் கையில் வைத்தவன், “ஜூலி பாவம் இல்லை. அவளோட ரோமியோவோட சேர்த்து வச்சிடுங்க அம்மு...” என குறும்பான சிரிப்புடன் கூறினான். குழந்தைக்கு என்ன புரிந்ததோ, பொம்மையை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டாள். உமையாளுக்கு அவன் பேச்சின் அர்த்தம் சுத்தமாய் விளங்கவில்லை.

“ஷி இஸ் சோ க்யூட்...” பிரபஞ்சன் உமையாளைப் பார்த்துக் கூற, மெலிதாகப் புன்னகைத்தாள். ஆனால், அவன் யாரைக் குறிப்பிடுகிறான் என ஆடவன் மட்டுமே அறிந்த ரகசியம்.

“தேங்க் யூ சார், அப்போ கொஞ்சம் எமோஷனலாகிட்டேன். அது... என்னோட உலகமே ஆராதனாதான். எனக்குன்னு இருக்கவ என் குழந்தை மட்டும்தான். அவளுக்கு எதுவும் ஆகிடுச்சோன்ற பயத்துல அழுதுட்டேன்...” என்றவளுக்கு கொஞ்சம் வெட்கமாக இருந்தது அந்நிய ஆடவன் முன்னே அழுதது. முகத்தை சுருக்கி விழிகளைத் தன் வதனத்தைக் காணாது ஏற்றி இறக்கிக் கொஞ்சம் கெஞ்சும் பாவனை, வெட்கப்பட்ட பாவனை என அத்தனையும் நொடியில் வெளிப்படுத்தியவளை வாஞ்சையுடன் பார்த்தான் பிரபஞ்சன். அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.

அப்படியே மகிழுந்தில் சாய்ந்து நின்றவனின் விழிகள் சாலையில் யாரும் தங்களை கவனிக்கின்றனரா? என நோட்டமிட்டன. இடதுகரத்தை எடுத்து கால் சராய்க்குள் நுழைத்தவன், வலது கரத்தை நெற்றியருகே எடுத்து வந்து தேய்த்தான். தொண்டையை செருமிக் கொண்டு, “உமையா, உங்கக் கிட்ட ஒன்னு கேட்கணுமே!” என்றான்.

வேலை சம்பந்தமாக எதையோ கேட்கப் போகிறான் என நினைத்தவள், “கேளுங்க சார்...” என்றாள். சோபையான புன்னகையுடன் நின்றவளின் முடிகள் காற்றில் பறந்தது. இடது கரத்தை அவனறியாமல் எடுத்து துப்பட்டாவை சரிசெய்தாள் உமையாள். ஓரக்கண்ணால் பார்த்தவன், பார்க்காதது போல திரும்பிக்கொண்டான். கள்ளம் புகுந்த உள்ளம் ரசித்தது அனைத்தையும் அவளையும் சேர்த்து.

பதிலுக்காக அவன் முகம் நோக்கியவளின் விழிகளிலிருந்தப் பார்வையை அப்படியே கீழே இறக்கி மூக்கு, உதடு என கண்கள் அளவெடுக்கத் திணறிப் போனவனின் காது மடல்கள் எல்லாம் தன்னால் சிவந்து போயின. அதை கைகளால் தேய்த்துவிட்டுக் கொண்டவன்,

“இல்லை, இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்ன சொன்னீங்களே, உங்களோட உலகம். அந்த உலகத்துக்குள்ள நானும் வர விருப்பப்படுறேன். என்னை கல்யாணம் பண்ணிக்கிறீங்களா?” எனக் கேட்டான். வார்த்தைகள் இயல்பாய் வந்தன ஆடவனுக்கு.

‘என்ன கேட்கிறார் இவர்?’ எனப் புரியாது நோக்கியவள், “சார், நீங்க சொன்னது எனக்கு... எனக்கு வேற மாதிரி கேட்டுச்சு...” என்றாள் தயங்கி. தான்தான் ஏதோ ஒரு சிந்தனையில் தவறாக எண்ணிவிட்டோம் என எண்ணம் பாவைக்கு.

“ஹம்ம்... உங்களுக்கு தப்பா எல்லாம் கேட்கலை. கல்யாணம் பண்ணிக்கலாமா உமையா?" என்றவனை சத்தியமாய் அதிர்ச்சியாய் நோக்கினாள் உமையாள். அவனிடமிருந்து இப்படியொரு கேள்வியை எதிர்நோக்கவில்லை என அதிர்ந்த அந்த மெல்லிய விழிகள் பறைச்சாற்றின.

லேசான கோபம், தயக்கம், அதிர்ச்சி என நொடிகளில் பாவனைகளை உதிர்த்தவள், “சார், அது நீங்க என்னை நார்மலாக்க இப்படி சொல்றீங்கன்னு புரியுது. நான் நல்லா இருக்கேன். நீங்க கிளம்பலாம்...” என கிளம்புமாறு கையைக் காட்டியவளின் கோபம் கூட அத்தனை அழகாய் இருந்தது. ஒரு நொடி கூட தன்னைக் வார்த்தைகளால் காயப்படுத்தவில்லை பெண். ஆனால், தள்ளி நிறுத்திவிட்டாள்.

எதிர்பார்த்த ஒன்றுதானே. பெருமூச்சை வெளிவிட்டவன், “நான் வரேன் உமையா...” என்றுவிட்டு பின் நிறுத்தி நிதானமாக மெல்லிய குரலில், “nothing gonna change my love for you” என்று முணுமுணுத்துவிட்டு
நகர, அவன் முகத்தைக் கூட அவள் பார்க்கவில்லை. காதில் ஒலித்த ஆங்கில வார்த்தைகள் அவளுக்குப் புரியவில்லை.
மறுபுறம் திரும்பி நின்றிருந்தவளின் பக்கவாட்டுத் தோற்றத்தில் உதட்டில் புன்னகை ஜனிக்க, ‘ஹே உமையாள்...’ என்ற பாடலை உதடுகள் முணுமுணுத்தன. அங்கிருந்து கிளம்பியவனுக்கு காதலை உரியவளிடத்தில் ஒப்படைத்த நிறைவு. வாங்கியவளின் மனமோ கொதித்துக்கொண்டிருந்தது.

தொடரும்..‌.










 
Active member
Messages
131
Reaction score
89
Points
28
காதலைச் சொல்வதும், சொல்லிக் கேட்பதும் அழகு தான்! பிரபஞ்சனுடைய காதல் உமையாளுக்கு விரைவில் புரியும்!‌ ❤️
 
Well-known member
Messages
610
Reaction score
346
Points
63
பிரபாஜன் கோகுல் இருக்குற bonding செம்மதான் lovely friendship 😻🥳பாதி சொல்லிட இன்னும் இருக்கு கோகுல் அந்த பெண் யாரு தெரியும் போது🤭 பிரபா உமா கிட்ட love ya சொல்லிட wow wow 💝💝💝நீ சொல்லிட அவ என்ன react பண்ண போற waiting 😄
 
Active member
Messages
113
Reaction score
59
Points
28
காதல் வந்ததும் கள்ளத்தனம் புகுந்துடுச்சு.... பிரபா always ப்ளஷ்ஷிங்... 🤩🤩🤩🤩

லவ்லி ப்ரோபோசல்... 💞💞💞
 
Top