• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
997
Reaction score
2,810
Points
93
நெஞ்சம் – 10 ❤️

மேலும் இரண்டு நாட்கள் அமைதியாகக் கழிந்திருக்க, அன்றைக்கு ஆடைத் தயாரிப்பகத்தில் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தான் பிரபஞ்சன். பெண்கள் அனைவரும் அந்தச் சந்திப்பிற்காக ஓரிடத்தில் கூடியிருக்க, பிரபஞ்சன், கோகுல், சாரதா மற்றும் அவர்களுடன் மேடை பேச்சாளரும் பெண்களுக்கு விழிப்புணர்வு கூட்டங்களை நடத்துபவருமான திருமதி கல்யாணியும், பிரபல வழக்கறிஞர் ஒருவரும் நின்றிருந்தார்.

அனைவரும் ஓரிடத்தில் குழுமியதும், சாரதாதான் முதலில் தன் பேச்சைத் துவங்கினார். “உங்க எல்லாரையும் நிறைய நாள் கழிச்சு ஒன்னா சந்திச்சதுல சந்தோஷம். இப்படியொரு மீட்டிங் போடணும்னு ரொம்ப நாள் நினைச்சுட்டே இருந்து, இப்போதான் அதுக்கான நேரமும் காலமும் கூடி வந்திருக்கு...” என்றவர் புன்னகைத்தார்‌.

“இந்த திடீர் மீட்டிங்கான காரணம் என்னவா இருக்கும்னு எல்லாருக்கும் மனசுல எண்ணம் இருக்கும். நானே அதை சொல்றேன், உங்களுக்கு பாலியல் சீண்டல்கள் மற்றும் சுரண்டல்கள், உழைப்பு சுரண்டல்கள், குடும்ப வன்முறைகள், வரதட்சணை கொடுமைன்னு இன்னும் பெண்களுக்கு எதிராத நடக்குற வன்முறைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தணும்ன்ற நோக்கத்துக்காகத்தான் இந்த மீட்டிங்கே.

நம்ம ஆஃபிஸ்ல புகார் பெட்டின்னு ஒவ்வொரு செக்ஷன்லயும் வச்சிருக்கோம். அது எதுக்குன்னு உங்க எல்லாருக்கும் தெரியுமா? உங்களோட நிறை குறையை அதுல பகிர்ந்துக்கத்தான். அதுமட்டும் இல்லை, உங்களுக்கு கார்மெண்ட்ஸ்ல என்ன பிரச்சனைனாலும், அதாவது உங்களோட மேற்பார்வையாளர், சூப்பீரியர் ஆபிசர் யாரும் உங்க கிட்ட தவறா நடந்துகிட்டாலோ, இல்லை தகாத முறையில பேசுனாலோ, கூட அதுல நீங்க சொல்லாம். எத்தனை பேருக்கு இது தெரியும்னு எனக்குத் தெரியலை ‌.

உங்களுக்கு ஒரு அநியாயம் நடக்குது, பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாகுறீங்கன்னா, எத்தனை பேர் உங்கள்ல அதை வெளிய சொல்றீங்க. நூத்துல பத்து சதவீதம் பேர் கூட சொல்றது இல்லை. ஏன்? தப்பு செஞ்சவனே தைரியமா சுத்தும் போது, நீங்க ஏன் பயப்படணும். உங்க மேல அந்த இடத்துல எந்த தப்பும் இல்லைன்னு நீங்க முதல்ல உணரணும்...”

“மேடம், வெளியே சொன்னா, வேலையைவிட்டு அனுப்பிடுவேன்னு மிரட்டுறாங்க. இந்த வேலையை நம்பித்தான் எங்க பொழைப்பே ஓடுது. எங்களை என்ன பண்ண சொல்றீங்க மேடம்?” ஒரு பெண் கேள்வி எழுப்பினாள்.

“மிரட்டுனா ஏன்மா நீங்க பயப்பட்றீங்க. உங்களுக்கு மேல இருக்க ஆபிசர்ஸ் வேலை சம்பந்தமா சொல்றதை மட்டும் நீங்க கேட்டா போதும். இது மாதிரி விஷயத்துக்கு எல்லாம் பயந்து அடிபணியணும்னு அவசியம் இல்லை. அவங்க உங்களுக்கு முதலாளி இல்லையே! அவங்க சொல்லி எந்தக் கேள்வியும் கேட்காம, மேனேஜ்மென்ட் உங்களை வேலையை விட்டுத் தூக்கப் போறது இல்லையே மா. இனிமே உங்களுக்கு எது நடந்தாலும், தைரியமா அதை என் மகன்கள் கிட்டே சொல்லுங்க. அப்படி நேரடியா சொல்ல தயக்கமா இருந்தா, புகார் பெட்டியில லெட்டர் எழுதிப் போடுங்க. எந்த இடத்துலயும் நீங்க இந்த மாதிரி விஷயத்துக்கு பணிஞ்சுப் போகவே கூடாது...” சாரதா பதிலளிக்க, அவரது துணிச்சலான தெளிவானப் பேச்சை கவனித்துக்கொண்டிருந்த உமையாளின் பார்வை அவ்வப்போது பிரபஞ்சனையும் தொட்டு மீழ, ஏனோ அவன் மீதான மதிப்பு பன்மடங்கு கூடிப்போனது.

“மேடம், என்னதான் வெளிய சொல்லுன்னு நீங்க சொன்னாலும், கடைசியில எங்கப் பேர்தான் கெட்டுப் போகுது. வீட்ல இது தெரிஞ்சா, வேலைக்கே அனுப்ப மாட்டாங்க...” மற்றொரு பெண் குரலெழுப்ப,

“பொம்பளை தலை குனிஞ்சுதான் போகணும். அதிர்ந்து பேசக் கூடாது, அதை செய்யக் கூடாது, இதை செய்யக் கூடாதுன்னு அந்தக் காலத்துல இருந்து பெண்ணுன்னா, இப்படித்தான் இருக்கணும்னு அப்படித்தான் இருக்கணும்னு ஒரு செட் ஆஃப் ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷனோட தான் பொம்பளைப் புள்ளைங்களைப் பெத்தே போட்றாங்க. பொண்ணுன்னா செலவு – இதுதான் பெரும்பான்மையானவர்களோட கருத்து. அப்படிப்பட்ட சமூகத்துல நாம வாழ்ந்துட்டு இருக்கோம்.

காலம்காலமா சொல்ற மாதிரி
நீங்க குனிஞ்ச தலை நிமிராம நடந்தால் மட்டும் உங்களை பார்க்குற வக்கிரப்புத்திகாரங்க குறைவாங்களா? இல்லை உங்க மேல தப்பு இல்லைன்னு இந்த உலகம் ஒத்துக்குமா என்ன? இல்லையே! அப்படி இருக்கும்போது சுத்தி இருக்கவங்க என்ன நினைக்கிறாங்கன்னு நினைச்சு நினைச்சே, பேச வேண்டிய இடத்துல, எதிர்த்து நின்னு போராட வேண்டிய இடத்துல அமைதியா இருக்கீங்க. நீங்க அடங்கிப் போக போகத்தான் எதிர்ல இருக்கவங்களோட ஆட்டம் அதிகமா இருக்கும்‌.

இன்னைக்கு எல்லா துறையிலயும் பெண்கள் சாதிச்சாலும், இன்னும் இந்த மாதிரி செக்சுவல் அப்யூஸ்ன்ற பேர்ல அவங்களை டம்ப் பண்ணிட்டுதான் இருக்காங்க. அதுக்காக எல்லாம் வேலையைவிட்டு விலகிப் போகணும்னு என்ன அவசியம்.

முதல்ல உங்களுக்கு நடந்த அநியாயத்தை வெளிய சொல்ல பயப்படாதீங்க. உங்களோட பயம், பலவீனம்தான் எதிர்ல இருக்கவனோட பலம்.
நீங்க ஒரு தடவை வெளிய சொல்லி அசிங்கப்படுத்துனா, அடுத்த டைம் அந்தத் தப்பை பண்ண அவன் யோசிப்பான்...” மேடைப் பேச்சாளர் கல்யாணிதான் எழுந்து பேசத் துவங்கினார். ஆங்காங்கே பல பல ஆதங்கமான கேள்விகளும் குரல்களும் கேட்ட வண்ணமிருந்தன. அவர் பேசி முடித்ததும், வழக்கறிஞர் முன்னே வந்து அனைவருக்கும் இந்தியலமைப்புச் சட்டத்தைப் பற்றியும் பெண்கள் பாதுகாப்பில் அரசியலமை எந்த வகையில் பங்கெடுத்து உள்ளது என பேசினார். பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை சகித்து வாழ வேண்டிய அவசியம் இல்லை என அனைவரின் மனதிலும் பதிய வைத்தார்.

அமைதியாக அமர்ந்திருந்த உமையாளுக்கும் தன் மனதிலிருந்த ஆதங்கத்தைப் பேச வேண்டும் போலிருந்தது. ஆனால், இதுபோல எல்லாம் அவளுக்கு வாய்ப்பு கிடைத்தது இல்லை. அவள் வாழ்ந்த சூழ்நிலை முற்றிலும் வேறு. ஆனால், மனதிலிருந்த ஆதங்கத்தை எல்லாம் வார்த்தையாய் கொட்டிவிட வேண்டும் என உந்துதல் முகத்தில் பிரதிபலித்தது.
அவளை இத்தனை நேரம் அவதானித்துக்கொண்டிருந்த பிரபஞ்சனுக்குப் புரிந்தது. உமையாளின் முகத்தைப் பார்த்து அகத்தைக் கணித்தவனின் மனது கொஞ்சம் அவளை மெச்சிக்கொண்டது. எழுந்து சென்று தாயின் காதில் எதையோ கூறினான்.

வழக்கறிஞர் தன் உரையை முடித்ததும், “உங்களுக்கு இதைப் பத்தி எதாவது சந்தேகம் இருந்தால் தயங்காமல் கேட்கலாம். அப்புறம் வேற யாரும் மேல வந்து பேசணும்னு விருப்பப்பட்டால், தாரளமா பேசலாம். மாற்றம் உங்களில் இருந்து வந்தா, உங்ககிட்டே இருந்து ஒரு குரல் ஒலிச்சா, அதுதான் நம்மளோட முதல் வெற்றி.‌..” என்றவர் உமையாளைப் பார்க்க, ஆயிரம் தயக்கம் அவளிடம். தலையைக் குனிந்துகொண்டாள்.

பேச வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், முதல் முறை மேடையேறி எப்படி பேச என உள்ளுக்குள்ளே லேசாக நடுக்கமும் பிறந்தது. இதுவே மதுரையாக இருந்திருந்தால், இது போலொரு கூட்டத்திற்கு எல்லாம் அவளது தாய் அனுமதித்து இருக்கவே மாட்டார். வீட்டிலிருக்கும்போது இப்படியொரு எண்ணம் அவளிடமிருந்தது எனத் தெரிந்தால், கொலை குத்தம் செய்தததைப் போலத்தான் எல்லோரும் அவளை நடத்துவார்கள்.

ஆனால், இப்போது அவர்கள் யாருமன்றி தனியான தனக்கான சுதந்திரமான உலகத்தில் இருக்கிறாளே! இத்தனை நாட்கள் உலகத்தை சந்தித்த அனுபவங்களும், இந்த சில நாட்கள் இங்கு தனியாய் வாழ்த்தில் கிடைத்த துணிச்சலும் அவளை பேச உந்தியது. காலம் காலமாக பின்பற்றி வரும் மூட நம்பிக்கைகளால், தன்னைப் போல எத்தனை பெண்கள் வாழ்க்கையையே தொலைத்து நிற்கின்றனர். இன்னொரு உமையாள் வேண்டாம் என மனது உரைத்தது. ஒன்று அல்ல, ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான உமையாள்கள் இந்த உலகத்தில் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை வெளியே சொல்லாது மனதில் வைத்து அழுத்திக்கொண்டுதான் இருக்கின்றனர்.

தாமதமாகவே என்றாலும், தனக்கான சுதந்திரத்தை, தன் பிடிக்காத வாழ்க்கையிலிருந்து வெளியேறியிருந்தாள் உமையாள். தன்னைப் போல சம உரிமை அளித்திடாத, பாலின வேறுபாட்டில் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் துணிச்சலாக அந்த உறவிலிருந்து வெளிவர ஊக்க வேண்டும். தானும் அவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாய் இருக்க வேண்டும் என ஆழ்மனது ஆர்ப்பாட்டமில்லாது கத்தியது.

தயக்கமாய் அமர்ந்திருந்த உமையாளைப் பார்த்த சாரதாவிடம் அந்தத் தயக்கம் இல்லை போல. “உமையாள், வந்து பேசு மா.‌..” என்று அழைக்க, அவள் அசையவில்லை. மனதில் நிறைய இருந்தது பேச. ஆனாலும்
தயங்கி நின்றவளின் விழிகள் பிரபஞ்சனை சந்திக்க, அவன் விழிகளைத் திறந்து மூடினான்.
‘வா...’ என்பது போல ஆடவன் தலை அசைய, மெதுவாக மேலேறி வந்தவளுக்கு, அத்தனை பேரையும் ஒன்றாய் பார்த்ததில் பயம் வந்து ஒட்டிக்கொண்டது. லேசாக நெற்றியில் வியர்வை பூக்கள் பூத்தன.

“தண்ணீயைக் குடிச்சுட்டு பேசுங்க. ஜஸ்ட் ரிலாக்ஸ் கேர்ள், தே ஆர் யுவர் கொலிக்ஸ் ஒன்லி...” உமையாளுக்குச் சற்று தொலைவில் அமர்ந்திருந்த பிரபஞ்சன் எழுந்து வந்து அவளிடம் தண்ணீரைக் கொடுத்து, அவளை இயல்பாக்க முயன்றான். அதை வாங்கிப் பருகியவள், தன்னை சமன் செய்துகொண்டாள்.

“பொறந்ததுல இருந்தே ஒடுக்குமுறைக்கு உள்ளான சமூகம் பெண்கள் மட்டும்தான். ஆண்கள் இல்லையான்னு கேட்காதீங்க, நம்மளை ஒடுக்குறதே இந்த ஆணாதிக்க சமூகம்தான். குடும்ப வன்முறை, வேலை பார்க்குற இடத்துல பாலியல் சுரண்டல், சம்பளத்துல ஏற்றத்தாழ்வு, பெண்கள் உயர் பதவியில இருக்கக் கூடாது, அதையும் மீறி அவ இருந்துட்டா, அவளோட நடத்தையைத் தப்பா பேசுறது, பாலியல் அத்துமீறல்கள், சுரண்டல்கள்னு தினம் தினம் ஒவ்வொரு பொண்ணும் இதுமாதிரி ஏதாவது ஒன்னை சந்திச்சுட்டுதான் இருக்கா. காரணம் பெண்ன்ற பாலினத்துல பிறந்துட்டதால!

குடும்ப வன்முறைதான் இதுல ரொம்ப கொடுமை. தான் ஒருவகையா உழைப்பு சுரண்டலுக்கு உள்ளாகுறோம்னு தெரியாம எத்தனை பெண்கள் வாழ்க்கை முழுசும் வீடு மட்டுமே உலகம்னு இருக்காங்க? காலையில எழுந்ததுல இருந்து நைட்டு தூங்கப் போற வரைக்கும் வேலை செய்யணும் சம்பளம் இல்லாத வேலைக்காரியா. மொத்தக் குடும்பமும் நம்ம உழைப்பை அட்டை மாதிரி உறிஞ்சு எடுத்துக்குவாங்க.
உழைப்பு மட்டும் இல்லை, சுதந்திரத்தையும் மொத்தமா பறிச்சு எடுத்துக்குவாங்க.

உண்மையிலே ஆண்களுக்கு மனைவின்றவ தன்னோட உடைமை, ஒரு பொருள் மாதிரி. அதாவது அவ எப்பவுமே சுயமா ஒரு முடிவெடுக்கத் தகுதி இல்லாம, கணவனோட கட்டுப்பாட்டிலே கடைசி வரைக்கும் இருக்கணும்‌. அவளுக்குன்னு சுயஅறிவு, சுயசிந்தனை இருக்கக் கூடாது. ஏன் சமமான மரியாதைக் கூட கொடுக்கக் கூடாது. ஒன்னும் தெரியாத மனைவியைப் பாதுகாத்து காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தன்னோடதுன்ற மாதிரி ஆதிகால சிந்தனையில்தான் இந்த சமூகம் இயங்கிட்டு இருக்கு.

சரி, கொஞ்சநாள் காலப் போக்குல பெண்கள் போராடி வேலைக்கு வெளியப் போக ஆரம்பிச்சாங்க. பினான்சியல் இன்டிபென்டன்சி கிடைச்சுச்சுன்னு சந்தோஷப்பட முடியாத ஒரு வகையான சிறைப்பட்ட சுதந்திரம் அது. வேலைக்குப் போய் சம்பாரிச்சு நம்ம செலவு செஞ்சா, அது வேலைக்குப் போறோம்ன்ற திமிர்ல பண்றதுன்னு பேச்சு வரும். அதைவிட கொடுமை, வெளியேயும் வேலை பார்த்துட்டு வீட்லயும் எல்லா வேலையும் நம்ம தான் பார்க்கணும். அப்படி பார்க்கலைன்னா, வீட்டுக்கு அடங்காம, என்ன வேலைக்குப் போறான்னு கேள்வி வரும்.

இப்படி எது தொட்டாலும் குத்தம், குறைன்னு பதில் சொல்லிக் சொல்லியே ஓஞ்சுப் போறவங்க நம்ம மட்டும்தான். எல்லா இடத்திலும் நம்மளோட குரலை உயர்த்தி, அடிப்படை உரிமையையே போராடி வாங்க வேண்டிய சூழ்நிலைதான் இந்த சமூகம் இருக்கே தவிர, இங்க பெண் என்பவள் வெறும் வீட்டைப் பார்த்துக்க, குழந்தையை வளர்க்க இருக்க சம்பளம் இல்லா வேலைக்காரின்ற நினைப்பு மாறவே இல்லை.
(தொடர்ந்து கீழே படிக்க)
 
Administrator
Staff member
Messages
997
Reaction score
2,810
Points
93

பூரண சமத்துவம் கிடைக்கணும்னு எத்தனையோ பேர் போராடுறாங்க. ஆனால், இங்க சமத்துவம்ன்ற வார்த்தையே மதிக்க தயாரதா இல்லாத சமூகத்து மக்களும் இருக்கத்தான் செய்றாங்க. அப்படியிருக்கும் போது பாலின சமத்துவம் கிடைக்க, நமக்கான உரிமையை வாங்க, நமக்கு நடக்குற அநியாயத்தைத் தைரியமா வெளிய சொல்ற உரிமையை வழங்குற, அதை ஏத்துக்குற காலம் வர இன்னும் எத்தனை வருஷம் ஆகும்னு கூடத் தெரியலை.

அதனால பொண்ணா, பொறந்த ஒவ்வொருத்தரும் கடக்க வேண்டிய தூரம் நிறைய இருக்கு. எந்த இடத்திலும் உங்களோட சுயமரியாதையை விட்டுக்கொடுத்துப் போகாதீங்க. உங்களுக்கான உரிமை, உங்களுக்கான அநியாயம் எதுனாலும் தைரியமா பொதுவெளியில வைங்க. நியாயம் கிடைக்காமப் போனாலும், உங்களோட தைரியத்தைப் பார்த்து இன்னும் ரெண்டு பேர் வெளிய சொல்ல முன்வருவாங்க. ஒரு சின்ன மாற்றம் நம்மகிட்ட இருந்து வந்தா, அடுத்து வரத் தலைமுறையில இருக்க பெண்களாவது பாலின சமத்துவம் இருக்க சமூகத்தைப் பார்ப்பாங்க...” உமையாள் தன் மனதிலிருந்த ஆதங்கத்தைப் பேசி முடித்தாள். எத்தனை நாட்களாக மனதில் வைத்துப் புழுங்கிக்கொண்டிருப்பாள். அவளது குரலில் ஒரு தெளிவும், ஆற்றாமையும், ஆங்காங்கே கோபமும் கூட வெளிப்பட்டது.

பிரபஞ்சன் அவளது ஒவ்வொரு வார்த்தையும் அவதானித்துக்
கொண்டிருந்தான். இந்தப் பெண்ணுக்கு இத்தனை பேசத் தெரியுமா? இவளது குரல் இந்தளவு சத்தமா? அவளது பேச்சிலிருந்தே கடந்த கால வாழ்க்கையின் கசப்பை, அவனால் உள்வாங்க முடிந்தது. தனது மெல்லிய தேகம் அதிரும் அளவு பேசினாள். அவ்வப்போது வலக்கை உயர்ந்து நெற்றியிலும் வழியும் வியர்வையைத் துடைத்துக்கொண்டது. ஆரம்பிக்கும்போது இருந்த தயக்கம் மறைந்து ஆளுமை வெளிப்பட்டது அந்தக் குரலில்‌. அவளது செயல், சொல், பாவனை என எல்லாம் சிந்தை முழுவதும் நிறைந்து போனது.

மனம் இந்தத் துணிச்சலான பேச்சை அவளிடமிருந்து எதிர்பாராது இன்பமாய் அதிர்ந்து போனது. எத்தனை பெண்கள் தன்னை, தன் சமூகத்தைப் பற்றிய தெளிவுடன் இருக்கின்றார்கள் என்றால், எண்ணிக்கை மிகக் குறைவு தானே? ஆனால், உமையாள் அவர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டவள். தனக்கு நடந்த அநியாயம் மற்றவர்களுக்கு நடக்கக் கூடாது என எண்ணி, துணிந்து பேசியிருக்கிறாளே! என அவள் மீதான பிரபஞ்சன்கொண்ட பிம்பம் சுக்கு நூறானது.

கண்டிப்பாக மணியின் மீது பாலியல் வழக்குப் தொட்ந்திருந்தால், தயங்கினாலும் உமையாள் சாட்சி சொல்லியிருப்பாள். தனக்கு நேர்ந்த அநியாயத்தை வெளியில் உரைத்திருப்பாள் எனத் தோன்றியது அவனுக்கு. அவளைப் பற்றிய தன்னுடைய கணிப்பு தவறு என்று உணர்ந்தான். இத்தனை தெளிவும் முதிர்ச்சியும் கண்டிப்பாக வாழ்க்கையின் அனுபவத்தாலும், அவள் அன்று கையில் வைத்திருந்த புத்தகத்தின் வழியும் வந்திருக்கலாம் எனத் தோன்றியது. பெரியாரும், கார்ல் மார்க்ஸூம் அவளது பேச்சில் நிறைந்திருந்தனர்.

எல்லாம் சரியாகப் பேசிய போதும், இத்தனை தைரியமானப் பெண், ஏன் தன் முன்னே அழுதாள் என்பது மட்டும்தான் அவனுக்குப் புரியவில்லை. அன்றே இந்தப் பெண்ணின் தெளிவு தெரிந்திருந்தால், அவனுடைய மணியின் மீதான நடவடிக்கைகள் கூற மாறியிருக்கலாம் என எண்ணினான் பிரபஞ்சன். நிகழ்ச்சி சிறிது நேரத்திலே நிறைவு பெற்றது.

“நம்மளோட கார்மெண்ட்ஸ்ல புகார் பெட்டி இருந்தாலும், இன்னும் நிறைய பேர் உங்களுக்கு நடந்ததை வெளிய சொல்ல தயங்குறீங்க. அதனால இதுக்காக நம்ம கார்மெண்ட்ஸ்ல ரெண்டு பேரை ஹெட்டா நியமிக்கலாம்னு இருக்கேன். அவங்களும் பெண்கள், நீங்களும் பெண்கள்னால, உங்களால் ஈஸியா அவங்க கூடப் பேச முடியும். நேரடியா சொல்ல முடியாதவங்க அவங்களை கான்டாக்ட் பண்ணுங்க...” என்றவர், “உமையாளும், ராணியும்தான் அந்த ரெண்டு பேர்...” என்றார். இதை எதிர்பார்க்கவில்லை இரண்டு பெண்களும். சாரதா அவர்கள் இருவரையும் நியமித்ததற்குப் பல காரணங்கள் உண்டு. முதலில் அவர்களுடைய தைரியமான பேச்சும் அனுகுமுறையும்தான் முக்கிய காரணம். இருவரும் மறுத்துக் கூற வர, சாரதா அவர்களைப் பேசி சம்மதிக்க வைத்தே அனுப்பிவைத்தார்.

அன்றைய நாள் இந்தப் பேச்சுக்களுடனே முடிந்திருந்தது. நினைத்ததை நடத்தி முடித்துவிட்ட திருப்தி மூவரிடமும் இருந்தது. கோகுல்தான் ராகவனுக்குத் தெரிந்த வழக்கறிஞரை அழைத்து வந்திருந்தான்.

இரவு உணவின்போதும் கூட சாரதா அதைப் பற்றித்தான் பேசினார். “இந்த உமையாள் பொண்ணு, பார்க்க எவ்வளோ அமைதியா இருக்கா. ஆனால், பேச்சுல எவ்வளோ தெளிவு...” என்று தாய் உமையாளைப் பற்றி பெருமையாக உரைக்க, கோகுல் ஏதோ பதில் கூறினான் அதற்கு. ஆனால், பிரபஞ்சன் மட்டும் பேசாது புன்னகையுடன் அவர்களைப் பார்த்திருந்தான். தன்னையே பெருமையாகப் பேசுவது போல மனம் சந்தோஷ சாரலில் நனைந்தது.

நிகழ்ச்சி நடந்து முடிந்ததிலிருந்து ஆடைத் தயாரிப்பகத்தில் வேலை பார்க்கும் பெண்களிடம் தெளிவும் தன்னபிக்கையும் ஒரு மடங்கு கூடியிருக்க, பிரபஞ்சன் புன்னகைத்துக் கொண்டான். சிறிய மாற்றம் என்றாலும், அதுதான் மிகப்பெரிய ஒன்றிற்கு வித்திடும் என நினைத்தான். ராணி மற்றும் உமையாள் தலைமையிலான குழு நன்றாகவே செயல்பட்டது. உமையாள் இந்த விடயத்தில் அதிக கவனத்துடன் செயல்பட்டாள். அவள் வாழ்க்கையின் முற்பகுதியில் தான் அனுபவித்தக் கொடுமைகளை எல்லாம் யாரும் இனி அனுபத்திடக் கூடாது என மனதில் உறுதியாக
நினைத்துக்கொண்டாள்‌.

அந்த வாரம் முடிய, பிரபஞ்சனுக்கு சாரதா பார்த்திருந்த பெண்ணைக் காணச் செல்லலாம் என அவர் எண்ணியிருந்தார். ஆனால் பெண் பிரபஞ்சனைத் தனியாக சந்திக்க விரும்புவதாக அவளின் பெற்றவர்கள் கூறிவிட, மகனை சமாளித்து அனுப்பிவைத்தார் பெரியவர்.

கோகுலை உடன் அழைத்துச் செல்கிறேன் என பிரபஞ்சன் கூற, முதலில் மறுத்த சாரதா பின் அவனையும் உடன் அனுப்பிவைத்தார்‌.

“டேய், நீ பண்றது எல்லாம் நல்லா இல்லை டா. நீ ஃபிகரோட கடலை போட, நான் எதுக்கு டா உன் கூட வரணும்?” கோகுல் புலம்பிக்கொண்டே உடன் வர, பிரபஞ்சன் பதில் கூறவில்லை.‌ உதட்டோரம் புன்னகை மட்டும் நெளிந்தது.

“என்னமோ பண்ணு, நான் உள்ள வரமாட்டேன் டா. கார்லயே உட்கார்ந்துக்குறேன்...” என்று புலம்பியவனை பிரபஞ்சன் ஒரு பொருட்டாய் மதிக்கவில்லை என்பதே உண்மை.

மகிழுந்தை அந்தப் பிரபல உணவு விடுதியின் முன் நிறுத்தினான் பிரபஞ்சன். “சரி வா டா, போய் காபி சாப்பிடலாம்‌‌...” சிரிக்காமல் பிரபஞ்சன் அழைக்க, “வாட் இஸ் திஸ் டா. இவ்வளோ நேரம் நான் கத்துனது உனக்குக் கேட்கலையோ?” கோகுல் இரண்டு கைகளையும் விரிக்க, அவன் கையைப் பிடித்து உள்ளே இழுத்துப் போனான். புலம்பிக் கொண்டே என்றாலும் நண்பனது இழுப்பிற்குச் சென்றான் கோகுல்.

இருவரும் ஒரு மேஜையில் அமர, ஓரளவுக்கு மாலை நேரத்தில் உணவகத்தில் ஜனத்திரள் அதிகமாகத்தான் இருந்தது. ஆங்காங்கே குடும்பம் குடும்பமாகவும், சில பேர் ஜோடியாகவும் அமர்ந்து உண்டு பேசி சிரித்துக்கொண்டிருந்தனர்.

வெட்ட வெளியில் வெயில் படாதவாறு மேற் கூறை அமைக்கப்பட்டு நவீன மயமாக்கப்பட்டிருந்தது அந்த உணவகம். மரத்தின் அருகேயிருந்த மேஜையில்தான் இருவரும் அமர்ந்தனர்.

“என்ன வேணும் சார்?” என கடை ஊழியர் வினவ, “இன்னொருத்தவங்க வரணும். வந்ததும் ஆர்டர் பண்றோம்..‌.” பிரபஞ்சன் பதிலளித்தவாறே, தன் கைப்பேசியை கையில் எடுத்தான். சாரதா பார்த்திருந்தப் பெண் கிரண்தான் அழைத்தாள்.

“யெஸ், உள்ளதான் இருக்கேன். ரைட் சைட் போர்த் டேபிள்...” பிரபஞ்சன் பேசி முடித்ததும், கோகுல் வலதுபக்கம் மரத்துக்கு அருகே இருந்த மேஜைக்கு மாறிவிட்டிருந்தான். பிரபஞ்சனை சட்டை செய்யாதவன், தனக்குப் பிடித்த குளிர்பானம் ஒன்றை வரவழைத்து அருந்தத் துவங்கினான்.

ஐந்து நிமிடத்தில் பிரபஞ்சன் அமர்ந்து இருந்த மேஜைக்கு அருகே வந்த கிரண் அவனைப் பார்த்து புன்னகைத்து, “ஹாய் மிஸ்டர் பிரபா!” என்றவாறே எதிரிலிருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.

“ஹாய் கிரண்...” சிநேகமாகப் புன்னகைத்தான். கிரண்தான் பேசத் துவங்கினாள். அவளது பேச்சு பொதுவாக ஆரம்பித்து, திருமணத்தைத் தொட்டிருந்தது. இந்த காலத்து நவீன யுவதி, எல்லோரைப் போலவும் அவளுக்கென்று சில ஆசைகள் இருந்தது. அவனிடம் தன்னைப் பற்றி பகிர்ந்துகொண்டாள்.

இருவருக்கும் அவரவர்க்குப் பிடித்த குளிர்பானத்தை வரவழைத்தனர். பின்னர் அவனைப் பற்றிக் கேட்டாள். பிரபஞ்சனும், தன்னைப் பற்றியும் தன் வாழ்க்கை முறை, ஆடைத் தயாரிப்பகம் என பொதுவாகக் கூறினான். எந்த வித அலட்டலுமின்றி பேசிய பிரபஞ்சனை கிரணுக்குப் பிடித்திருந்தது.

பிரபஞ்சனுக்கும் அவளுடன் பேசும்போது நீண்ட நாட்கள் பழகிய தோழியிடம் பேசும் உணர்வு. வாய் ஓயாமல் பேசிக் கொண்டிருந்தவளிடம் தலையை அசைத்த பிரபஞ்சன் மனதில் தானாய் உமையாளின் நினைவு வந்தது. கிரணுக்கு முற்றிலும் எதிர்பதமான அவளது அமைதியான சுபாவம் மனதில் நின்றது. மேடைக்கு ஏறத் தயங்கி அவனைப் பார்த்தது, தான் அருகில் சென்று ஆறுதல் வார்த்தைக் கூறியதும், அவனைப் பார்த்து சிநேகமாகப் புன்னகைத்த உமையாள் அனுமதியின்றி இதயத்தை நிறைத்துத் தொலைத்தாள். அவளது தெளிவான பேச்சும் உறுதியும் மனதோரம் வந்து நின்றது.

நண்பனாகலாம் எனக் கேட்டு கையை அவளிடம் நீட்டிய போது தயங்கித் தவித்தவளின் முகம் நினைவில் மனதில் லேசாய் சாரலடித்தது‌. தாயும் மகளும் எப்போதும் தங்களுக்கென ஒரு உலகில் சஞ்சரித்து சிரிக்கும் மெல்லிய சிரிப்பொலி திடீரென செவியை மோதுவது போன்றொரு பிரம்மை. இதயம் என்றைக்கும் இல்லாது படபடவென அடித்து, அவளுக்குத் தன்மீதான காதலை உறுதி செய்து தொலைத்தது.

கிரண் கண்ணை உருத்தாத வகையில் இடக்கரத்தை உயர்த்தி காதை அழுந்தத் தேய்த்துவிட்டுக்கொண்டான். சிவந்து போனது காதும் முகமும் கூட. பேசிக்கொண்டிருந்த கிரண் இவனது சிவந்த முகத்தைப் பார்த்து, “ஓ காட், பிரபா, யூ ஆர் பிளஷிங். வாட் ஹேப்பண்ட் மேன்?” என ஆச்சர்யப்பட்டாள்.

ஐயோவென்றாது ஆடவனுக்கு. பொதுவாய் சிரித்து வைத்தான். “சோ ஸ்வீட் ஆஃப் யூ மேன், ஐ லைக் யூ. இந்த மேரேஜ் ப்ரோபசல் எனக்கு ஓகே.‌ உங்களுக்கும் ஓகேன்னா, வீ கேன் கோ பார் ஃபர்தர் ஈவன்ட்...” என்றவளுக்கு உண்மையாகவே பிரபஞ்சனைப் பிடித்துப்போனது. அதிர்ந்து பேசாத மென்மையான குணம், தன்னுடைய கருத்துகளுக்கும் விருப்பத்திற்கும் மதிப்பளித்துப் பேசிய விதம், தன் கருத்துக்களை பொறுமையாக கேட்டது என அனைத்தும் அவளைக் கவர்ந்தது.

திடீரென கிரண் தன் விருப்பத்தைத் தெரிவிக்கவும் என்ன செய்வது, பதில் கூறுவது எனத் தெரியாதவன் உணர்ந்த ஒன்று உமையாளிடம் தோன்றும் உணர்வெதும் இவளிடம் தோன்றவில்லை எனதான். இனிமேல் யாரிடமும் தோன்றது என மனம் அடித்துக்கூறியது.
மெலிதாய்ப் புன்னகைத்தவன், “கிரண், உங்களோட பேசும்போது ஒரு நல்ல ஃப்ரெண்ட் பீல் வருது...” என்றவனின் கூற்றில் கிரண் மெதுவாகத் தலையை அசைத்தாள்.

அவளுக்கும் புரிந்தது. “இட்ஸ் ஓகே பிரபா, ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட். ஆல் தி பெஸ்ட், உங்களுக்குப் பிடிச்ச பொண்ணை சீக்கிரம் பார்க்க...” என்றவள் சற்றே நிறுத்தி, “ஏற்கனவே மீட் பண்ணிட்டீங்க போல?” என புருவத்தை குறும்பாய் கேட்க, பிரபஞ்சன் இரண்டு கைகளையும் சரணடைவது போல உயர்த்த, இருவருக்கும் சிரிப்பு வந்தது. மேலும் சில நிமிடங்கள் பேசி நட்பை மட்டும் உறுதி செய்துவிட்டு, திருமணத்திற்கு அழைக்குமாறு கூறி கிரண் விடை பெற்றாள்.

இருவரும் சிரித்து சிரித்துப் பேசுவதை கவனித்த கோகுல் பிரபஞ்சன் அருகே வந்து அமர்ந்து அவன் தோளைத் தட்டினான். “என்ன மச்சி, ஓகே போல?” எனக் கேட்கவும், இல்லயென தலையை அசைத்தான்.

“வொய் டா? நல்லா பொண்ணா தான் தெரியுறாங்க...” கோகுல் ஆச்சர்யப்பட, “ஹம்ம்... சொல்றேன் சீக்கிரம்!” என்றான். அவன் பதிலில் ஆச்சரியம் பொங்கும் பார்வை கோகுலிடம்.

“டேய், நாயே! எனக்குத் தெரியாம எதுவும் செஞ்சு வச்சிருக்கீயா?” என்ற கோகுல் கரங்கள் பிரபஞ்சன் அணிந்திருந்த மேற்சட்டையின் நுனியில் இருக்க, ஒரு வார்த்தை உதிர்க்கவில்லை ஆடவன். உதட்டை கைவிரல்களால் பிடித்து மூடிக்கொள்ள, சிறு சண்டை ஆரம்பமானது. சண்டை முடிவுக்கு வந்தாலும், இருவரும் சமாதானமாகவில்லை. பிரபஞ்சன் வாயைத் திறந்து ஒரு வார்த்தைக் கூட உதிர்க்காது சாதிக்க, கோகுலும் முனைத்துக்கொண்டான். இருவரும் எதிரும் புதிருமாகத்தான் வீடு சேர்ந்தனர்.‌

தொடரும்...








 
Active member
Messages
131
Reaction score
89
Points
28
சாரதா அம்மாவும், பிரபஞ்சனும் பிரச்சினையை நல்லா ஹேண்டில் பண்ணாங்க சூப்பர்! கிரணோட ஆட்டிட்யூட் நல்லா இருந்ததுடா ❤️
 
Well-known member
Messages
610
Reaction score
346
Points
63
சாரதா அம்மா நல்ல பேசு பெண்களுக்கு encouragement குடுதாக💙 உமா நீ என்னமா பேசுற உன்னை மாறி எல்லாரும் பேசுனா எல்லா சூழ்நிலை ஃபேஸ் பண்ணலாம் 🤞🤞கிரன் நல்ல பெண் பிரபா ku ஒரு நல்ல ப்ரெண்ட்🤩 கோகுல் அமா பிரபா உனக்கு தெரியமா ஒரு ரகசியம் வைத்து இருக்கான் 😁😁சொல்லுவான் சிக்கிரமா உங்களோட சண்டை லா எவ்வளவு நேரம் இருக்க போகுது🤣🤣
 
Active member
Messages
113
Reaction score
59
Points
28
அருமையான பதிவு... பெண்களுக்கு எதிரான அடக்கு முறைகளையும் விழிப்புணர்வையும் அழகா சொல்லி இருக்கீங்க சிஸ்டர்.. 👍😍

பிரபஞ்சன் confirm பண்ணிட்டான்.... ஆனா அது சுலபம் இல்லையே .....
 
Top