• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
997
Reaction score
2,810
Points
93
நெஞ்சம் – 1 ❤️

மையிருட்டாய் கீழ்வானம் கருத்திருக்க, ஆள் அரவம் அங்கும் இங்கும் தென்பட்டுக்கொண்டிருந்தன. சடசடவென பெய்த மழை பாரபட்சமின்றி அனைவரையும் தொட்டுத் தழுவி முத்தமிட, கையில் குடையோடு ஓட்டமெடுத்தனர் பலர்.

இரவு நேரம் மதுரைத் தொடர்வண்டி நிலையம், வழக்கத்திற்கு மாறாக அதீத சலசலப்புடன் தென்பட்டது‌.
உள்ளே நுழைந்து முகப்பை கடந்ததும் இரண்டாவது நடைமேடை நவநாகரீகமாக அனைவரையும் வரவேற்றுக்கொண்டிருந்தது. அதில் நடுநாயகமாக செதுக்கப்பட்டிருந்த கல்மேஜையின் வலது புறமூலையில் அமர்ந்திருந்த பெண்ணின் சிந்தையில் புறத்தூண்டல்கள் எதுவும் பதியவில்லை என்பது நூறு சதவீதம் உண்மை.

“ட்ரெய்ன் வந்துடுச்சு... தள்ளுங்க. தள்ளுங்க.‌ ஏம்ப்பா பார்த்து போ...” ஆங்காங்கே சத்தமும் சலசலப்பும் ஒலித்துக்கொண்டே இருக்க, அவரவர் பொதிகளைத் தூக்க முடியாது சுமந்தவாறே தங்களுடைய பெட்டியைத் தேடி அடைக்கலம் புகத் தொடங்கினர் மக்கள். மழை காரணமாக சற்றே தொடர்வண்டி தாமதமாகத்தான் அதனிடத்தை அடைய, அதுவே எல்லோரையும் அவசரப்பட வைத்ததுத் தொலைத்தது.

தொடர்ந்து ஒலிப்பெருக்கியில் மாற்றி மாற்றி தொடர்வண்டி வந்தததற்கான அழைப்புகள் மட்டும் நிற்காமல் ஒலித்துக்கொண்டிருக்க, மக்கள் நெருக்கடியை சமாளிக்கப் போராடி வெற்றிக் கண்டிருந்தனர் காவிநிற காவலாளிகள்.

தான் வேற்று மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதை அப்பட்டமாய் பறைசாற்றும் விதமாக முக வடிவமைப்பை வைத்திருந்த பயணச்சீட்டு பரிசோதகர் வாயில் எதையோ மென்றவாறே அங்குமிங்கும் அலைந்துகொண்டிருந்தார்.

இத்தனைப் பரபரப்புகளும் பதட்டங்களும், ஓட்டங்களும் தன்னை எந்த விதத்திலும் அசைக்கவில்லை என்பதைப் போலத்தான் அவளது முகமும் அகமும் இருந்தன. மெதுவாய்க் குறையத் தொடங்கிய மழையின்
ஒவ்வொரு துளி நீரும் தரையில் பட்டுத் தெறிக்க, அந்தச் சத்தம் மட்டும்தான் அவளது செவியை நிறைத்தன. கருத்த வானத்தையே விழியகற்றாமல் பார்த்துக்கொண்டிருந்தாள் அவள், உமையாள். விழிகள் ஆங்காங்கே கருத்தும் வெளுத்தும் புதிதாய் மேகங்கள் அங்குமிங்கும் நகர்வதை மொய்த்தன.

மனம் மட்டும் நடந்த நிகழ்வை உள்வாங்கி உணர்ந்து, நிதர்சனத்தை ஏற்றுக்கொள்ள முடியாது மூச்சை முட்டுமளவிற்குத் தோல்வியைத் தழுவியது. குபுகுபுவென தொண்டை வரை மேலெழுந்த வரையறுக்க முடியாத, வரையறைகளுக்கு அப்பாற்பட்ட உணர்வொன்று மனதை அதீத வேகத்துடன் மைக்ரோ விநாடிகளைக் கடந்தும் அழுத்த, அதை அப்படியே உள்ளேயே தள்ளியிருந்தாள். கீழிமை முடிகளை உரசி உறவாடி அதன் விளிம்பிலிருந்து கன்னத்தைத் தொட முயன்ற விழிநீரை மேல் இமைகளை சிமிட்டி, அணை போட்டவளின் கைகள் மார்போடு ஒன்றியிருந்த மகளின் தலையைப் பரிவாகப் பாசத்துடன் தடவிக் கொடுத்தது.

“ம்மா...” என சிணுங்கினாள் குழந்தை. அவளைத் தட்டிக் கொடுத்து உறங்க வைத்தவளின் வயிறு காலையிலிருந்து கத்திக்கொண்டிருந்தது. நடந்த கலவரத்தில் மூன்று வேளை உணவையும் தவிர்த்துவிட்டிருந்தாள். ஸ்மரனையற்று சமைந்து போயிருந்த மனம் மட்டுமல்ல, உடலின் சர்வ அவைங்களும்தான்.

‘ஏன் ஒருநாள் சாப்பிடலைன்னா, செத்து போய்டுவீயா டி?’ என ஏளனமாய்க் கேட்ட கணவனின் வார்த்தைகள் செவியில் எதிரொலித்தது. இல்லையில்லை, இப்போது அவன் அந்நிய ஆடவனாகிற்றே! வேண்டாம் என்று தூக்கியெறிந்துவிட்ட பின்பு உறவு முறை ஒன்றுதான் குறையா? மனம் கேலி செய்தது.

ஒவ்வொரு சொட்டு நீரும் மெது மெதுவாகத் துளி துளியாய் விரலை நனைக்க, அங்காங்கே வெந்நிற கால்களில் வட்ட வட்டமாய் புள்ளிகள் போல நீர்த்துளிகள் படர்ந்திருந்தன.
நீண்ட நேரம் கால்களை நீரில் வைத்தது ஜிவ்வென இழுக்கவும், மெதுவாய் கால்களை மேலே இழுத்து அமர்ந்தவளுக்கு இத்தனை நேரம் நடந்தது மட்டுமே மனதை நிறைக்க, இப்போது அடுத்து என்ன என்ற கேள்வி தொக்கி நின்றது.

கைகள் ஒருமுறை கழுத்தைத் தொட்டு தடவியது. அது வெறுமையாய் இருந்ததில் மனதில் அப்படியொரு ஆசுவாசம். அந்த நொடி
எல்லாவற்றிலிருந்தும் விடுபட்ட உணர்வு. இனி யாருக்கும் அடிமையாக இருக்க வேண்டியதில்லை. என்ன உணர்வென்று வார்த்தையால் கோர்க்க முடியவில்லை. இத்தனை நாட்கள் அடைப்பட்டிருந்த சிறையிலிருந்து விடுபட்ட பறவையின் மனநிலையைத்தான் ஒத்திருந்தது அவளின் நிலையும்.

மனைவி என்ற பெயரில் விஷமான மனிதர்களின் பிடியில், எவ்வளவு கொடுமையான நாட்கள். எத்தனை தூங்காத இரவுகள், நிம்மதியிழந்து பயத்தோடு வாழ்ந்த கணங்கள் எல்லாம் இப்போதும் உடலை உலுக்கியது.

அடிமை வாழ்க்கைதான் இத்தனை நாட்கள் வாழ்ந்திருக்கிறோம் என்ற எண்ணத்தில் கழிவிரக்கம் தோன்றியது. விட்டுக்கொடுத்துப் போவது தான் வாழ்க்கை என சிறு வயதிலிருந்து போதித்துப் போதித்துத் தன் வாழ்க்கையை இப்படி மாற்றிய தாயின் மீது கோபம் வந்தது. எத்தனை நாட்கள் விட்டுக்கொடுத்து சொல்வது? புரிதல் என்பது துளியளவு இல்லாத இடத்தில் கொட்டக் கொட்ட குனிந்து விட்டுக்கொடுத்து இதுவரை என்ன சாதித்து இருக்கிறேன் நான்? விட்டுக் கொடுத்துப் போவது வேறு, முட்டாள்தனமாய் அடிமைப்படுத்தப்படுவது வேறு என மனதில் ஆணியடித்தது போல உரைத்தது.

ஒரு கை தட்டினால் மட்டும் ஓசை வருமா? இல்லையே! வெறும் காற்றில் தான் வரைய முற்பட்ட ஓவியம் ஒன்று ஆதியும் அந்தமும் இன்றி தன்னை விட்டுப் பிரிந்து போனது போல காற்றில் கலந்துவிட்டிருந்தை அவளால் கண்கூடாக உணர முடிந்தது.

தூரத்தே ஆங்காங்கே கலைந்து செல்லும் மேகங்கள் போல தன்னுடைய கனவும் கலைந்துவிட்டதை கனத்த மனதுடன் பார்த்துக்கொண்டிருந்தாள்.

‘ஆண்கள் எல்லோரும் அப்படித்தான். பெண்கள் வீட்டிற்க்கு அடங்க வேண்டும். அவர்களுக்கும் அடங்கி செல்ல வேண்டும்’ எனக் கூறி தன்னை இத்தனை நாட்கள் இந்த வாழ்க்கைக்குள் பிணைத்து வைத்திருந்த சகோதரிகளை நினைத்ததும் விழிகளில் நீர் கோர்த்தது.

ஆயிரம் பேர் முன்னிலையில் தன்னை அடிமை சாசனம் எழுதிக் கொடுத்த பெற்றவர்களை இப்போது நினைத்தாலும் விழிகள் பளபளத்துத் தொலைத்ததன. இப்போது என்றில்லை எப்போதுமே அவர்களுக்கு தன் மீது ஒரு துளி நம்பிக்கைக் கூட துளிர்க்கவில்லையென நினைக்க மனம் ரணப்பட்டுதான் போனது.

“டீ, காபி. டீ, காபி....” செவியருகே கேட்ட குரலில் நிஜ உலகிற்கு அழைத்து வரப்பட்ட உமையாளின் கரங்கள் தன்னிச்சையாய் நீர் கோர்த்திருந்த விழிகளைத் துடைத்துக்கொள்ள விழைய, தன் முன்னே தேநீரோடு நின்றுக்
கொண்டிருந்தவரைப் பார்த்ததும் வயிற்றில் அமிலம் அதிகமாய் சுரந்தது.

“ஒரு டீ கொடுங்க அண்ணா...” என சூடாய்த் தேநீரை வாங்கி உதட்டிற்குக் கொடுத்தாள். கொஞ்சம் மழைக்கு இதமாய் அது தொண்டையை சமீபிக்க, இப்போது உமையாள் என்பது மட்டும்தான் தன்னுடைய பெயர் என மனதில் அழுத்தமாகப் பதிய வைத்தாள். தேநீர் உள்ளிறங்கவும், மனம் கொஞ்சம் சமன்பட, உடலிலும் புதுத் தெம்பு வந்திருந்தது. இத்தனை நேரம் கலகத்தை மட்டும் சுமந்திருந்த விழிகளில் லேசாய் நம்பிக்கையின் சாயல் தென்பட, கையிலிருந்த பணத்தை எடுத்துப் பார்த்தாள். இப்போதைய தேவைக்கு அதிகமாகவே இருந்தது.

வீட்டிலிருந்து வெளியேறியதும் இல்லையில்லை விடுதலை பெற்றதும் எங்கே செல்வது என புரியவில்லை. கையில் ஒரு ரூபாய் கூட இன்றி தெருவில் நின்றிருந்தவளின் விழிகளில் தென்பட்டது அடகு கடை‌. காதில் அணிந்திருந்த காதணியை அவிழ்த்து விற்றுவிட்டாள்.

வழியில் தென்பட்ட உணவகம் ஒன்றில் குழந்தைக்கு உணவை வாங்கிக் கொடுத்தவள், தொடர்வண்டி நிலையத்தை அடைந்து கிட்டதட்ட ஐந்தாறு மணி நேரங்கள் கடந்திருக்க, குழந்தை உறங்கியேவிட்டிருந்தாள்.

முதலில் நடந்த நிகழ்வை தன்னை நம்ப வைக்கப் போராடி, சில மணி நேரங்களில் அதை ஏற்றுக்கொண்டாள். யாருமற்று நிராதரவாக நிற்கும் நிலையொன்று தனக்கு வருமென்று துளிக்கூட இதுவரை உமையாள் சிந்தித்திருக்கவில்லை. திக்கற்று போனவளுக்கு இப்போது தொடர்வண்டி நிலையம் தான் ஆதரவாகிப் போனது.

பெற்றவர்கள், இரண்டு அக்காக்கள், அண்ணன் ஒருவன், அண்ணி என எத்தனைப் பெரிய குடும்பம் தன்னுடையது. எத்தனை அன்பான குடும்பம் என நினைத்ததும் இதழ்களில் விரக்தியானப் புன்னகை குமிழிட்டது.

இருபத்தியிரண்டு வருடங்கள் உடனிருந்தவர்கள் தன்னை நம்பாது அந்நியவர்களின் பேச்சிற்கு செவிசாய்த்து கீழ்த்தரமாய் தன்னைப் பார்த்த அருவருப்பான பார்வையில் உடலும் மனதும் அந்த நொடியே மரித்துப் போய்விட்டிருந்தது. அத்தனை நேரம் அழுத்தமாய் நின்றிருந்த உடல் கூட தளர்ந்து விட, முகம் நிர்மலமாக இருந்தாலும், விழிகள் மனதின் போராட்டத்தை நொடியில் அடுத்தவர்களுக்கு திரையிட்டு காட்டிவிட்டது.

சுற்றி அத்தனை பேரின் கண்களுக்கும் தவறு செய்யாத தான் குற்றவாளியாக்கப்பட்டதில், கழிவிரக்கம் தோன்ற, அவமானமாய் உணர்ந்தாள்.
அதைவிட இத்தனை நாட்கள் எல்லோரும் அணிந்திருந்த முகமூடி அப்போது கழன்று இருந்ததில், அவளுக்கு நடந்ததை ஏற்றுக் கொள்ளவே மூச்சு முட்டியது.

‘நீங்கள் என்ன என்னை வேண்டாம் என தூக்கிப் போடுவது. இப்படிப்பட்ட வாழ்க்கை எனக்கு வேண்டாம். ஒரு சகமனிஷியாய் கூட என்னை மதித்திராத, பரஸ்பர அன்பும் புரிதலும் இல்லாத இத்தகைய கீழ்த்தரமான வாழ்க்கையில் நான் கண்ட சுகமெல்லாம் போதும்...’ கல்லாய் சமைந்த மனதின் உணர்வுகளெல்லாம் மேலெழும்பி அவளை கதறச் சொல்ல, ஆர்ப்பாட்டமேதுமின்றி தனக்கென வாழ்வின் முதல்முறையாக ஒரு பெரிய முடிவை எடுத்திருந்தாள்.

சரியோ, தப்போ இனி தன் வாழ்க்கையின் ஒவ்வொரு முடிவும் தன்னால் மட்டுமே நிர்ணயிக்கப்பட வேண்டும். அன்பு என்ற அபத்தமான வார்த்தையின் பிடியில் தன் வாழ்க்கை அடுத்தவர்களின் கையில் சீரழிந்து போனதற்க்கெல்லாம் அந்த நொடியே முற்றுப்புள்ளி வைத்திருந்தாள்.

“அம்மா...” பாதி தூக்கமும் விழிப்புமாய் எழுந்து தன் கழுத்தைக் கட்டிக்கொண்ட மகளைக் காணும்போது மனம் கனிந்து போனது. இந்தப் பிஞ்சு குழந்தையைக் கூட ஒருநாள் ஒருபொழுது அருகே அழைத்து தூக்கிக் கொஞ்சியிராத அவனெல்லாம் என்ன மனிதனோ? என நினைத்தவள்,
“என்ன டா அம்மு, பசிக்கிதா?” எனக் கேட்டு குழந்தையை நிமிர்த்தவும், “ம்மா... வலிக்கிதா மா?” எனக் கேட்டு கண்ணீர் தடங்களை சுமந்திருந்த உமையாளின் கன்னத்தில் முத்தமிட்டாள் நான்கரை வயது ஆராதனா.

அதில் லேசாய் கலங்கிய விழிகளை சிமிட்டி, “இல்லை டா, அம்மாவுக்கு வலிக்கவே இல்லை. அம்மா நல்லா இருக்கேன்...” மெலிதாய்ப் புன்னகைத்தவள், “சாப்பிடலாமா அம்மு?” என வினவியபடி எழுந்து அருகிலிருந்தக் கடையில் உணவை வாங்கிக் குழந்தைக்கு ஊட்டினாள்.

“ம்மா... நீ... நீயும் சாப்பிடு...” பிஞ்சு கரத்தால் இட்லியைப் பிய்த்து ஆராதனா தாயின் முன்பு நீட்டவும், குழந்தையை அணைத்து கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டாள் உமையாள்.

“அம்மு, நீ முதல்ல சாப்பிடு, அம்மா அடுத்து சாப்பிட்றேன்...” என்றவள் குழந்தைக்கு ஊட்டி முடித்து தானும் உண்டாள்.

மணி இரவு பத்தைத் தொடவும், சுற்றிலும் ஆட்கள் நடமாட்டம் குறையத் துவங்க, மழையும் விட்டிருந்தது. குழந்தை தாயின் கழுத்தைக் கட்டிக்கொண்டு மீண்டும் கண்களை மூட, எங்கே செல்வது என யோசித்தாள் உமையாள்.

சொந்தம், நட்பு என ஒருவருடைய முகம் கூட சிந்தையில் உதிக்கவில்லை. என்ன வாழ்க்கை வாழ்ந்தேன் நான்? என்ற கேள்வி முதல்முறையாக நெஞ்சைப் போட்டு அழுத்தியது. மனது ஆற்றாமையில் விம்மத் துவங்க, திடீரென யாரோ தோளில் கையை வைக்கவும், மனம் யாரென்று தெரியாது பதறிப் போனது. அந்நொடியே திரும்பியவளின் பார்வையில் ஒரு பெண் தென்படவும், மூச்சை ஆசுவாசமாய் வெளியிட்டாள்.

“நீ... நீங்க உமா தானே?” எதிரிலிருந்தவள் நெற்றியைச் சுருக்கி சந்தேகமாய் வினவ, உமையாளின் தலை தானாய் ஆடியது.

“ஹே உமா... எப்படி இருக்க டி?” எனக் கேட்டு கையைப் பிடித்தப் பெண்ணை ஊன்றி கவனித்தவளின் சிந்தை அடையாளம் காணவும், “அமுதா...” என இதழ்கள் மலர்ந்தன உமையாளுக்கு.

“அமு... அமுதா?” எனக் கேட்டாள் உமையாள்‌.

“ஆமா டி, எப்படி இருக்க, எந்த ஊர்ல இருக்க நீ? உனக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு கேள்விப்பட்டேன். அண்ணன் கூட வரலையா? எங்கப் போக நிக்குற?” அமுதா நீண்ட நாட்கள் கழித்துத் தன் நெருங்கிய தோழியைக் கண்டதில் படபடவென பொரிய, உமையாள் அவளுடைய கேள்வி எதற்கும் பதிலளிக்கவில்லை. லேசாகப் புன்னகைத்தாள்.

“ஏன் உமா, நீ மாறவே இல்லையா? வாயைத் தொறந்து பதில் சொல்லு...” என்ற அமுதாவின் விழிகள் அப்போதுதான் எதிரிலிருந்தவளை முழுதாக அளந்தது. விழிகள் எல்லாம் சிவந்து கண்ணீர் தடங்கள் முகம் முழுவதும் படர்ந்திருந்தன. இளைத்துக் கருத்துப் போயிருந்த உமாவின் கழுத்தில் திருமணமான அடையாளமின்றி காணப்பட, காதிலும் எதுவும் அணியவில்லை. மனம் ஏதோ தவறாக உள்ளது என உரைக்க, திரும்பி கணவனை நோக்கிய அமுதா, “ஏங்க, இது உமா. என் ஸ்கூல் ஃப்ரெண்ட்...” என கணவனுக்கு அறிமுகம் செய்து வைத்தாள். அவனும் லேசாக தலையை அசைக்க, உமாவும் மெலிதாகப் புன்னகைத்தாள்.

“ஏங்க, இந்த பால் டப்பால பாப்பாவுக்கு பால் மட்டும் வாங்கிட்டு வாங்க.‌‌..” என்ற அமுதாவின் கையில் இரண்டு வயது பெண் குழந்தை உறங்கிக்கொண்டிருக்க, அவளது கணவன் ராஜாவின் கையைப் பிடித்தபடி ஒரு சிறுவன் நின்றிருந்தான்.‌

மனைவி குரலுக்கு தலையாட்டிய ராஜா நகரவும், அமுதாவின் கவனம் தோழியின் புறம் திரும்பியது. “என்னாச்சு உமா, எதுவும் பிரச்சனையா?” என குரலை தழைத்து வினவினாள்.

“இல்லை அமுதா, அதெல்லாம் ஒன்னும் இல்லை..‌.” மறுத்த உமையாளின் முகத்தைக் கவனித்த அமுதாவின் விழிகள் அவளது பதிலை துளியும் நம்பவில்லை.

“சரி, எதுனாலும் பரவாயில்லை. வீட்டுக்குப் போய் பேசிக்கலாம். இப்போ நீயும் குழந்தையும் என் கூட வாங்க” என்றாள் அமுதா.

“இ... இல்லை...” மறுத்துப் பேச வந்த உமையாளின் கையைப் பிடித்து, “எதுவும் பேசாத உமா, இப்போ நீ என்னோட வர்ற...” அன்பான அதட்டலிட்ட தோழியைப் பார்த்தவளுக்கு மனம் வலித்தது. கிட்டத்தட்ட ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு பார்த்தது. இப்போது அடையாளம் கண்டு தன் பிரச்சனை என்னவெனக் கூட அறியாது அடைக்கலம் கொடுக்க நினைக்கும் இவளுடைய அன்பில் ஒரு துளிகூட தன் வீட்டு மக்களுக்கு இல்லையே! இப்போது என்றில்லை, என்றுமே அவர்களுக்கு என் மீது துளியும் அக்கறை இருந்ததது இல்லை. தான் மட்டும்தான் அன்பு, பாசம், உறவுகள் என பைத்தியக்காரத்தனமாக சுற்றி வந்தது புரிந்தது.

அமுதாவின் கணவன் வரவும், அவனிடம் ஏதோ பேசியவள், “வா உமா, நாங்க ரிசர்வ் பண்ண கோச்லயே டீடீஆர் கிட்டே சொல்லி உனக்கும் இடம் போடலாம்...” என்ற அமுதா உமையாளின் கையைப் பிடித்துக்கொண்டே தொடர்வண்டியில் ஏறினாள். உமையாளுக்கும் தற்போதைய நிலைக்கு எங்கு செல்வது எனத் தெரியாது பாதுகாப்பின்றி இங்கு அமர்ந்திருப்பதற்கு, அவளுடன் செல்வது உசிதமாகப் பட, அடுத்து என்ன செய்வது என அங்கு சென்று முடிவெடுக்கலாம் என நினைத்தாள். இடமாற்றம் கண்டிப்பாகத் தேவை என எண்ணித்தான் தொடர்வண்டி நிலையத்திற்கே வந்தாள். அதனாலே அமுதாவுடன் சென்றாள் உமையாள்.

ஆராதனா புதிய மனிதர்களைக் கண்டு தாயுடன் ஒடுங்கியவாறு அவர்களைப் பார்த்துக் கொட்ட கொட்ட விழித்தாள். குழந்தையின் முகத்தைப் பார்த்தவள், “இது அமுதா அத்தை டா. பயப்படாதீங்க...” என அவள் முதுகில் ஆதுரமாகத் தடவினாள். குழந்தையின் மனநிலையில், கண்ணோடத்தில் காலையில் நடந்த நிகழ்வு அவளை எந்த அளவிற்கு பாதித்திருக்கும் என ஒரு தாயாக உமையாளால் உணர முடிந்தது.

அமுதாவும் அவளது கணவனும் குழந்தைகளும் ஒரு முழுநீள இருக்கையை ஆக்கிரமிப்பு செய்து கொள்ள, அதற்கு எதிர்ப்புறம் வெற்றிடமாக இருந்த இருக்கையில் அமர்ந்தாள் உமையாள். குழந்தையையும் தனக்கு அருகே அமர்த்தினாள்.

“சாப்டியா உமா? பாப்பா சாப்டாளா?” எனக் கேள்வி கேட்ட அமுதாவின் கரங்கள் தன்போல் பையைத் திறந்து உணவுப் பொட்டலத்தை எடுக்க, “இப்போதான் அமுதா சாப்பிட்டோம். அவளும் சாப்பிட்டா...” உமா பதிலளிக்கவும், அதன் உண்மைத் தன்மையை சோதித்த அமுதா, தன் மகனுக்கும் கணவனுக்கும் உணவைப் பிரித்து வைத்தாள்.

அவளது மடியில் குழந்தை பால்புட்டியில் பாலை குடித்துக்கொண்டிருந்தது‌. “அமுதா, நீ சாப்பிடு. குழந்தையை நான் வச்சிருக்கேன்...” உமா கையை நீட்டவும், அமுதாவும் அவளிடம் குழந்தையைக் கொடுத்துவிட்டு உண்ணத் துவங்கினாள். தன் தாயின் மடியில் படுத்திருக்கும் குழந்தையைப் பார்த்தாள் ஆராதனா. பின் தாயையும் குழந்தையையும் அவள் ஆர்வமாக விழியை விரித்துக் காண, “பாப்பா டா அம்மு‌...” என குழந்தையிடம் உமையாள் கூறவும், ஆராதனாவும் குழந்தையின் கன்னம் பாதம் என தொட்டுத் தடவி, அம்மாவிடம் எதையோ பேசியபடி இருக்க, அப்போதுதான் உமையாளின் இறுக்கம் கொஞ்சம் தளர்ந்திருந்தது.

தொடர்வண்டி கிளம்ப இன்னும் பத்து நிமிடங்கள் உள்ளன என ஒலிப்பெருக்கியில் தமிழிலும் இந்தியிலும் மாறி மாறி அறிவிப்பு ஒலிக்கவும், அவசர அவசரமாக மகிழுந்திலிருந்து இறங்கி உள்ளே நுழைந்த அந்த வாலிபனின் ஒரு கரத்தில் ட்ராலி எனப்படும் தள்ளும் வகையான பை ஒன்று தரையில் உருண்டு பிரண்டு வரவும், மற்றொரு கையில் ஒரு சிறிய பை ஒன்று தொங்கிக் கொண்டிருக்க, தலையை சற்றே தோளோடு சாய்த்து நடந்தவனின் தோள்பட்டைக்கும் செவிக்கும் இடையே இருந்த இடைவெளியை மனிதர்களின் ஆறாம் விரலான அலைபேசி அடைத்திருந்தது.

“இதோ உள்ள வந்துட்டேன் மா.. ஹம்ம்... மிஸ் பண்ணலை...” என உதடுகள் மறுமுனையில் உள்ளவருக்கு பதலளித்தாலும் விழிகள் பரபரவென்று தனக்குரிய பெட்டி எங்கே இருக்கிறது என ஆராய, அதைக் கண்டதும் ஆசுவாசப் பெருமூச்சு ஒன்றை வெளிவிட்டவன், “ஓகே மா...” என கூறி சில நிமிடங்கள் அறிவுரை செய்த தாயின் வார்த்தைகளில் உதட்டில் உறைந்த புன்னகையுடன் தொடர்வண்டியில் ஏறினான். கையிலிருந்த இரண்டு பொதிகளையும் மேலே அதனிடத்தில் வைத்துவிட்டு, அப்படியே இருக்கையில் பொத்தென அமர்ந்து மூச்சை வெளிவிட்டான்.

‘இன்னைக்கு ட்ரெயினை கண்டிப்பா மிஸ் பண்ணப் போறோம்...’ உள் மனது கேலி செய்ய, அதை அடக்கி மூச்சையும் பிடித்து ஓடி வந்ததில் இதயம் படபடவென அடித்துக் கொள்ள, தண்ணீர் பொத்தலை வாயில் சரித்தான். மனது சமன்பட, அலைபேசியை எடுத்து வண்டி ஏறிவிட்டதாக நண்பனுக்கு குறுஞ்செய்தியை விரல்கள் தட்டச்சு செய்து அனுப்ப விழைய, மெல்லிய சிரிப்பொலி ஒன்று அவன் காதை நிறைக்கவும், இத்தனை நேரம் சிந்தையில் சுற்றி உள்ளவர்கள் மறைந்து இப்போதுதான் தெரிந்தனர்.

மடியில் வைத்திருந்த அமுதாவின் குழந்தையைத் தாய் மகள் இருவரும் கொஞ்சி விளையாடி, சலசலத்து சுற்றம் மறந்து புன்னகைத்துக்கொண்டிருக்க, அவர்களைப் பார்த்த அந்த வாலிபன் இதழ்களிலும் ரசனையான புன்னகை படர்ந்தது. சில நொடிகள் அவர்களைப் பார்த்தவன், பின் தலையைச் சிலுப்பிவிட்டு காதொலிப்பானை எடுத்து அலைபேசியில் பொறுத்தி காதிற்கு கொடுத்தவாறு ஜன்னல் புறம் திரும்பி கால்களை முழு இருக்கை அளவிற்கு நீட்டி, உடலை அதற்குள் அடைக்கப் போராடி வெற்றிக் காணவும், வண்டியும் தனது பயணத்தைத் தொடங்கியது‌.


தொடரும்...
 
Active member
Messages
131
Reaction score
89
Points
28
இந்த உமையாளுக்கு ஏதோ பெரிய பிரச்சினை நடந்து தற்காலிகமாக காப்பாற்றப்பட்டு இருக்கான்னு நினைக்கிறேன்.. அமுதா கூட அவங்க வீட்டுக்குப் போய் நல்ல நிலைக்கு வரனும்.. யதேச்சையாக இவங்களைப் பார்க்குற அந்த ஆண் தான் ஹீரோவா?? பொறுத்திருந்து பார்ப்போம்... வாழ்த்துகள் ஜானு ❤️
 
Well-known member
Messages
610
Reaction score
346
Points
63
நல்ல ஆரம்பம் 😻😻உமா பாக்க பாவமா இருக்கு🥺 என் அவ அப்பா அம்மா அண்ணா அக்கா கூட அவள நம்பிக்கை இல்லாம பார்த்து இருக்காங்க😔😔 என்ன நடந்து இருக்கும் நல்ல வேளை அமுதா வந்த🥰 இப்போ யாரு அந்த பையன் பரவாயில்ல ட்ரெயின் யா மிஸ் பண்ணலயே🤩🤩 இனி உமா வாழ்க்கைலா என்ன நடக்கும் பாக்கலாம்😊😊
 
Active member
Messages
113
Reaction score
59
Points
28
Good start ❤️
பாவம் உமையாள்... 😥 பிறந்த வீடு புகுந்த வீடு ரெண்டும் சரியில்லை போல... 😞 குழந்தையோட தனியா ஆதரவில்லாம நிற்கும் போது கை கொடுக்கும் அமுதா நட்பு அருமை... 💝
ஹீரோ வந்தாச்சு.... 🤩
 
Top