• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,215
Reaction score
3,603
Points
113
நெஞ்சம் – 57 💖

அந்த வாரம் மெதுவாய் ஊர்ந்து சென்றதது. தேவாவும் ஆதிரையும் தங்களுக்கான கூட்டை வெகு இயல்பாக கட்டமைத்தனர். முன்பெல்லாம் அவன் மட்டுமே மெனக்கெடுவான்‌. ஆனால் இப்போது மனைவி அவனுக்காகவென ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்து செய்ய, மனம் நிறைந்து போனது. என்னவோ அவளது அன்பில் வாழ்வது அத்தனை சுகமாய் இருந்தது கணவனுக்கு.

தான் மட்டுமே கொடுத்த அன்பும் அக்கறையும் அவளிடமிருந்து பெறும் போது இன்னுமே தித்தித்தது. நிரம்ப சந்தோஷமாய் இருந்தான். ஆனாலும் வெள்ளைக் காகிதத்தில் சின்ன கரும் புள்ளியாய் வாணி மனதைப் போட்டு அழுத்தினார். என்னதான் அவர் செய்தது தவறு என இவன் மனைவியோடு தனியாய் வந்து விட்டாலும் அவர் தன் மீது வைத்திருக்கும் பாசம் தேவா அறிந்ததே. மற்றவர்களை விட தேவாவிடம் வாணி அதீத அன்பு செலுத்துபவர். அவனுக்கென்று எப்போதும் அனைத்திலும் ஒருபடி மேலே சென்று அக்கறையாய் செய்வார்.

என்னவோ வாணி ஆதிரை விஷயத்தில் தவறிப் போயிருந்தார். அவர் ஆதிரையை ஏற்றுக் கொண்டிருந்தால் இத்தனை பிரச்சனையை சந்திக்க நேர்ந்திருக்காதே என மனம் வருந்திற்று. தாய் தந்தையைப் பார்க்காது பத்து நாட்களைக் கடத்தி இருந்தான். அவன் பிறந்தது முதல் இத்தனை நாட்கள் அவர்கள் அண்மையின்றி இருந்ததாய் நினைவில் இல்லை. இவனாக இறங்கிச் சென்றால் கண்டிப்பாக வாணி தன் தவறை உணர மாட்டார் என யோசித்தே தற்காலிகமாக பிரிவை ஏற்றுக் கொண்டான். வார்த்தைகள் புரிய வைக்காத உணர்வுகள் சிலவற்றை தூரம் உணர்த்தும் என எண்ணிப் பெருமூச்சு விட்டான்.

தங்கை, தம்பி, பெற்றவர்கள் என எண்ணம் அவர்களையே சுற்றி வந்தது. அவ்வப்போது அனைவருக்கும் அழைத்துப் பேசி அவர்கள் நலத்தை அறிந்து கொண்டான். வாணியிடம்‌ மட்டும் பேசவில்லை.

அங்கே வீடு மயான அமைதியாய் இருந்தது. என்னவோ அன்றைக்கு நடந்தப் பிரச்சனைக்குப் பிறகு கோபால் மனைவியிடம் பேச்சை அறவே குறைத்திருந்தார். என்ன என்பதாய் ஒரு பார்வை கூட இல்லை. மனைவி தன் பேச்சை மீறி விட்டாள் என அவருக்கும் தன் முனைப்பு வந்து ஒட்டிக் கொண்டது. ஹரியும் தாயிடம் முகம் கொடுத்துப் பேசவில்லை. இவர்களுக்கு இடையில் மாட்டிக் கொண்டது ஜனனிதான்.

அவளால் மாமியாரிடம் முகம் திருப்ப முடியவில்லை. ஆதிரையிடம் அவர் நடந்து கொண்டது தவறு என்றாலும் கூட சொந்த அத்தையாகிற்றே. சிறு வயதிலிருந்தே பார்த்து வளர்ந்த பெண்மணி. அதுவும் இல்லாமல் ஒரே வீட்டில் இருந்து கொண்டு யாருமே அவரிடம் பேசவில்லை என்றால் அவர்‌ மனதளவில் பாதிக்க கூடுமென எண்ணியே அவரிடம் பேசினாள். வாணி இறுகிப் போய்விட்டார். பெற்ற மகனும், கட்டிய கணவனும் என்ன நடந்தது எனக் கூட தன்னிடம் ஒரு வார்த்தை கூட கேட்காது தன்னைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றியதை அவர் மனம் ஏற்க மறுத்தது. தனக்கென ஒருவரும் ஆதரவாய் இல்லையே என வெம்பிப் போனார்.

தன் வீட்டு இரத்தம் இல்லாத ஒருவனை வெளியே செல்ல கூறியதில் எவ்வித தவறும் இருப்பதாய் அவருக்குத் தோன்றவில்லை. ஆதிரையைத் திருமணம் முடித்து அழைத்து வந்துவிட்டான். அதனால் அவள் இந்த வீட்டில் இருக்கிறாள். அபினவை ஏன் தன் மகன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என அவருக்கு கோபம் பொங்கிற்று. வார்த்தைக்கு வார்த்தை தேவா அவனை மகன் எனக் கூறுவது அவருக்கு அறவே பிடிக்கவில்லை. அதனாலே கோபத்தை இழுத்துப் பிடித்தார். ஆனால் பெற்ற உள்ளம் கேட்கவில்லையே.

பிறந்ததிலிருந்தே பிரிந்திராத மகனை இப்போது பிரிந்திருப்பது அவருக்கு நெஞ்சு முழுவதும் வலியை பரப்பிற்று. தேவா என்ன செய்கிறானோ? நேரத்திற்கு உண்டானா? உறங்கினானா? என தாயாய் கவலை அரித்தது. எதையும் வெளிக் காண்பிக்காது நடமாடினார். கணவனின் பாரா முகமும் வலித்ததுதான். இருந்தும் எங்கேயும் இறங்கி வராது தன் தவறை உணராது சுற்றினார்.

பிரதன்யா அன்றைக்கு கல்லூரியில் ஏதோ ஆண்டு விழா என்று தாமதமாய் வந்தாள். அவளுக்கு நடந்தது ஓரளவிற்குத் தெரிந்தது. தாய் முன்னே அண்ணியிடம் பேசினால் அவரிடம் வசவுகள் பெற நேரிடுமோ என எண்ணியே ஆதிரையிடம் தலையை மட்டும் அசைத்தாள். அவளுக்குப் பருவத் தேர்வுகள் முடிந்துவிட, பதினைந்து நாட்கள் விடுமுறை விட்டிருந்தனர். அதில் நான்கு நாட்கள் கல்லூரியிலிருந்து சுற்றுலா செல்ல ஓடிப் போனது. அடுத்த ஒரு வாரமும் ஆண்டுவிழா, அதற்காக நடனம், பாட்டு என நகர்ந்து விட, இப்போதுதான் அவளுக்கு நேரமே கிடைத்தது.

அன்றைக்கு விடுமுறை என்றாலும் கூட தாயிடம் எதையோ கூறிப் பொய்யுரைத்துவிட்டு கிளம்பினாள். காலையில் நண்பர்களோடு சுற்றிவிட்டு மாலை அபி பள்ளி விடும்நேரம் ஆதிரை வீட்டிற்கு செல்லலாம் எனத் திட்டமிட்டிருந்தாள் அவள்.

***

தேவா குளித்து முடித்து வெளியே வர, ஆதிரை வீடு முழுவதும் புகையைப் பரப்பி இருந்தாள். ‘என்ன பண்றா இவ?’ என யோசனையுடன் அவன் முகப்பறைக்குச் செல்ல, சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தாள் மனைவி.

அவ்வீட்டில் தனியாய் பூஜை அறை இல்லை. சின்னதாய் சுவரோடு‌ ஒட்டிப் போய் குட்டியாக அலமாரி ஒன்று இருந்தது. அதில்தான் சாமி புகைப்படங்களை வைத்திருப்பாள். இன்றைக்கென சாம்பிராணி புகைப்போட்டு ஊதுபத்தி ஏற்றி கடவுளை தரிசித்தவள் தலைக்கு குளித்து முடித்து தலையில் துண்டை சுற்றி கொண்டையிட்டிருந்தாள்.

தேவாவைக் கண்டதும் அவனருகே சென்று கற்பூரத்தை தானே அவன் கண்களில் ஒற்றியவள் விபூதியையும் பூசிவிட்டு அகல, “என்ன இன்னைக்கு புதுசா புகையெல்லாம் போட்டு சாமிக் கும்பிடுற ஆதி?” எனப் புரியாது கேட்டான் கணவன்.

“ஹம்ம்... அது ப்ரைடே இல்லங்க. அதான் சாமி கும்பிடுறேன்!” என அவன் முகம் பார்க்காது முணுமுணுத்தாள். இவன் தலையை அசைத்துக் கேட்டுக் கொண்டான். அபி குளித்து வர மூவரும் அமர்ந்து உண்டனர்.

பொங்கல், சாம்பார், சட்னியோடு வடையும் சுட்டிருந்தாள் ஆதிரை.
“இன்னைக்கு எதுவும் ஸ்பெஷலான டேவா ஆதி?” எனக் கேட்டவன் அவள் முகத்தைப் பார்த்தவாறே உண்டான்.

“இல்லையே... ஏன் கேட்குறீங்க?” ஆதிரை வடையைப் பிய்த்து தேங்காய் சட்னியில் தோய்த்து வாயில் வைத்தாள்‌.

“வடையெல்லாம் ஸ்பெஷலா பண்ணி இருக்கீயே?”

“ம்ப்ச்... பொங்கல் செஞ்சேன், அப்படியே வடை சுட்டேன்ங்க. வேற ஒன்னும் இல்ல. துருவி துருவி கேட்காம சாப்பிடுங்க!” மெல்லிய குரலில் அவனை அதட்டியவள் உண்ண, இவன் என்னவென யோசித்துக் கொண்டே உண்டான்.

‘பெர்த் டே விஷ் பண்ணலைன்னு ரெண்டு மூனு வாரம் என்னைப் போட்டுப் படுத்திட்டா. இன்னைக்கு என்ன ஸ்பெஷல்னு தெரியலையே. தேவா, பீ கேர் புல்!’ எச்சரிக்கை மணியடித்தது அவனுக்கு.

வேலைக்கு கிளம்பும் முன்னே இரண்டு முறை இதே கேள்வியை விதம் விதமாக கேட்டு அவளின் முறைப்பை பெற்றுக் கொண்டான் கணவன். அவள் உடுத்தியிருந்த மெல்லிய சந்தனம் கலந்த அரக்கு நிறமும் அவன் கண்ணை உறுத்தியது.

‘யூனிட்ல நடக்குற பெரிய பெரிய இஷ்ஷூ எல்லாம் சமாளிச்சுட்றேன். பொண்டாட்டி மனசுல என்ன இருக்குன்னு கண்டு பிடிக்க முடியலை!’ என்ற கடுப்போடுதான் அவன் கிளம்பினான்.

ஆதிரை அபியை பள்ளியில் விட்டுவிட்டு உழவர் துணைக்கு கிளம்பினாள். தர்ஷினியும் கோமதியும் அவளுக்கு முன்னே வந்துவிட்டனர். போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டதால் அவள் வர பத்து பதினைந்து நிமிடங்கள் தாமதமானது.

“ஹக்கும்... முதலாளியம்மாவா இருக்கது எவ்வளோ பெனிபிட் பார்த்தீங்களா கோமுக்கா? லேட்டா வரலாம். சீக்கிரம் கிளம்பலாம்!” வந்ததும் வராததுமாய் தர்ஷினி நீட்டி முழக்க, ஆதிரை முறைப்புடன் அவளைப் பார்த்தாள். ஆனால் வாயைத் திறந்து ஒரு வார்த்தையை உதிர்க்கவில்லை. எப்படியும் இவள் பதில் பேச சென்றால் எதாவது வம்பிழுப்பார்கள் என வேலையில் கவனமானாள்.

“அப்புறம் ஆதி, என்ன இன்னைக்கு ஃபேஸ் எக்ஸ்ட்ரா டால்லடிக்குது? க்ரீம் எதுவும் மாத்திப் போட்டிருக்கீயா? என்ன விஷயம்?” எனக் கேட்டார் கோமதி அக்கா.

அப்படியா தன் முகம் பளிச்சென தெரிகிறது என கணினித் திரையில் தன் முகத்தை ஆதிரை உற்றுப் பார்க்க, அவர்கள் இருவரும் வாய்விட்டு சிரித்தனர். அவர்களை முறைத்துவிட்டு வேலையைப் பார்த்தாள் இவள். சுபாஷ் வரவும், இன்னுமே அவளைக் கலாய்த்தனர்.

ஆதிலா திருமணம் என்று கூறி பத்து பதினைந்து நாட்கள் விடுமுறையில் சென்றுவிட்டாள். சுபாஷ் சென்ற வாரம் தாடி வளர்த்து சுற்றிக் கொண்டிருந்தான். இப்போதுதான் அவன் இயல்பிற்கு வந்திருக்க, சென்ற வாரத்திற்கும் சேர்த்துப் பேசினான்.

மாலை வேலை முடிந்து செல்லும் போது தர்ஷினி, “க்கா... இந்த சேரி உங்களுக்கு ரொம்ப நல்லா சூட்டாகுதுகா, ஸ்பெஷலி இந்தக் கலர்!” என்றாள் ஆதிரையின் புடவையைத் தொட்டுத் தடவி. இவளுக்கு முறுவல் பிறந்தது.

“தேங்க்ஸ் தர்ஷூ!” என மலர்ந்து பதிலளித்தாள். தேவாவிற்காகத்தான் அரக்கு நிறத்தில் புடவையை உடுத்தினாள். அவன் காலையிலிருந்து தான் சாமிக் கும்பிட்டதையும் தான் செய்த வடையையும் தானே ஆராய்ச்சி செய்தான். எங்கே மனைவியை ஆராய்ந்து அவளைப் பாராட்டினான் என மெல்லிய கடுப்பு.

அதே யோசனையுடன் சென்றவள் கையெழுத்திடும் போதும் அவனை முறைத்துவிட்டே வெளியே வந்தாள். ‘கடவுளே... கவுன்ட் டவுன் ஸ்டார்டா? எதுக்கு முறைச்சுட்டுப் போறான்னு தெரியலையே!’ என இவனுக்கு தலை சுழற்றியது. வீட்டிற்குச் சென்றதும் அவளைக் கவனித்துக் கொள்ளலாம் என வேலையைப் பார்த்தான்.

ஆதிரை வீட்டு வாசலில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, “அபிம்மா...” என குரல் கொடுக்க, அரவம் எதுவும் இல்லை.

“அபிம்மா... அம்மா வந்துட்டேன் டா!” இவள் குரலை உயர்த்திக் கொண்டே ருக்குவின் வீட்டிற்குள் நுழைந்தாள்.

“வா ஆதிரை... உன் பையன் இங்க இல்ல. உன் நாத்தனார் வந்தா. அதான் நான் இன்னொரு சாவியைக் கொடுத்தேன். இரண்டு பேரும் மேல இருக்காங்க!” என ருக்கு கூறவும், “சரிம்மா...” என்றவள் யோசனையுடன் படியேறினாள்.

‘பிரதன்யா வந்திருக்காளா?’ என இவள் எண்ணியபடி உள்ளே நுழைய, “வெல்கம் ஹோம் அண்ணி... டொன் டொன் டொன் டொன்!” என அவள் கூடத்தில் கையில் கரண்டியுடன் வந்து நின்றாள். அவள் செயலில் ஆதிரையின் முகத்தில் மெல்லிய முறுவல் பரவிற்று.
அபி நீள்விருக்கையில் அமர்ந்து எதையோ கொறித்துக் கொண்டிருந்தான்.

“ம்மா... அத்தை பஜ்ஜி சுட்டுக் கொடுத்தாங்க!” அவன் குதூகலத்துடன் கூற,

“அண்ணி... போங்க, போய் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வாங்க. சூடான காபியும் சுவையான பஜ்ஜியும் ரெடி!” என்றாள் பாவனையாய். அதில் இவளுக்கு புன்னகை பெரிதானது.

“உனக்கெதுக்கு இந்த வேலையெல்லாம் பிரது?” மென்மையாய் அவளை அதட்டினாள்.

“ப்ம்ச்... சாப்பிட்ற மாதிரித்தான் இருக்குண்ணி. அங்கப் பாருங்க டெஸ்டிங் ரேட்டை. சமத்தா உக்கார்ந்து சாப்பிட்றான். போங்க! போங்க!” அவள் கேலியுடன் கூற, ஆதிரை சிரிப்புடனே உடைமாற்றச்‌ சென்றாள். ஆசை ஆசையாய் தேவா பார்க்க வேண்டும் என்று இந்தப் புடவையை உடுத்தினாள். அவிழ்க்கும் போது அவன் எண்ணம்தான். இரவு அவன் வரும்வரை மாற்ற வேண்டாம் என யோசித்தாள். சட்டென தன் எண்ணப் போக்கில் முகம் சிவந்தது.

‘பேட் கேர்ள் ஆதி!’ என மண்டையிலே கொட்டிக் கொண்டு உடை மாற்றி வந்தாள்.

“அண்ணி... சாப்பிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க!” என பிரதன்யா இவளது முகத்தை ஆர்வமாய் பார்த்தாள். பஜ்ஜி எண்ணெயில் குளித்திருந்தது. பொதுவாய் பிரதன்யா சமையலறைப் பக்கம் எட்டிப் பார்க்கும் ரகமல்ல. அன்றைக்கு நடந்தப் பிரச்சனையில் ஏதோ உதவுகிறேன் என்று வந்தாள். மற்றபடி அவளுக்குப் பெரிதாய் சமைக்கவெல்லாம் தெரியாது.

“நல்லா இருக்கு பிரது!” என அவள் முகம் வாடக் கூடாது என உரைத்தவள் இரண்டு பஜ்ஜியோடு ஒரு கோப்பை குளம்பியைக் குடித்து முடித்துள் சமையலறைக்குள் செல்ல, அது அலங்கோலமாக கிடந்தது.

ஆதிரை மலைத்துப் போய் பார்க்க, “லைட்டா உங்க கிச்சனை நாஸ்தி பண்ணிட்டேன்ல அண்ணி?” என சின்னவள் அசட்டுச் சிரிப்பை உதிர்த்தாள்.

“கொஞ்சம் இல்ல பிரது, நிறையவே நாஸ்தி பண்ணிட்ட!” பிரதுவை முறைத்த ஆதி அவற்றை மேலோட்டமாக சுத்தம் செய்தாள். அவளுக்கும் சற்று சோர்வாய் இருந்தது. வெளியே ஏதோ சப்தம் கேட்க பிரதன்யா யாரென்று பார்த்தாள்.
ஹரியும் ஜனனியும் ராகினியோடு உள்ளே நுழைந்தனர்.

“என்ன ப்ரோ... என்ன இந்தப் பக்கம்?” பிரதன்யா இடுப்பில் கைவைத்துக் கேலியாய் கேட்டாள். அவள் இங்கே பேருந்தில் வரும்போது ஜனனியை வாரப் பரிசோதனைக்கு அழைத்துச் சென்ற ஹரி பார்த்துவிட்டான்.

‘இந்தப் பக்கம் இவளுக்கு என்ன வேலை?’ என்ற எண்ணத்துடன் தங்கைக்கு அழைத்தான். அவள் தேவாவையும் ஆதிரையையும் பார்த்துவிட்டு வருவதாக கூறினாள். சரியென்று வைத்தவன் பரிசோதனை முடிந்ததும் கிளம்பி வந்துவிட்டான். இப்போது அவளுடைய கேலியில் முறைத்துக் கொண்டே வந்து அமர்ந்தான்.

“ஓஹோ... அண்ணி, நான் செஞ்ச பஜ்ஜியோட டேஸ்ட் பிடிச்சுப் போய் உங்க கோ சிஸ்டரையும் கொழுந்தனையும் டேஸ்ட் பார்க்க கூப்பிட்டீங்களா என்ன?” போலியான ஆச்சரியத்துடன் பிரதன்யா கூற, என்னவென புரியாத ஆதிரை வெளியே வர, ஹரியும் ஜனனியும் அமர்ந்திருந்தனர்.

“பெரிம்மா...” என ராகினி இவளைக் கண்டதும் ஓடி வந்து காலோடு கட்டிக் கொள்ள, ஆதிரையின் முகம் மலர்ந்தது.

“வாங்க ஹரி, வாங்க ஜனனி!” என அவர்களை வரவேற்றவள் சின்னவளைத் தூக்கிக் கொஞ்சினாள்.

“ப்ரோ... இந்தா நீயும் உன் பொண்டாட்டியும் என் பஜ்ஜியை டேஸ்ட் பண்ணுங்க!” பிரதன்யா பஜ்ஜியை அவர்கள் முன்னே சின்ன தட்டில் வைத்தாள்.

ஜனனி அதை எடுக்கச் செல்ல, “ஏய்... ஏய் இரு டீ. அவ சொன்னா நீ அதை எடுத்து சாப்பிடுவீயா?” ஹரி பதறிப் போய் அவள் கையைப் பிடித்தவன், “பஜ்ஜில எண்ணெய் இருக்கா? இல்ல எண்ணெய்ல பஜ்ஜி இருக்கான்னு தெரியலை!” என முகத்தை அஷ்டக் கோணலாக்கினான்.

“ஹரி... ரொம்ப பண்ணாத நீ!” என சடைத்த பிரது, “அண்ணி, ஹம்ம்... நீ சாப்பிடு!” என்றாள் ஜானுவிடம் கண் காண்பித்து.

“ஏய்... இப்போதான் டாக்டரைப் பார்த்துட்டு வர்றோம். அவளுக்கு இன்னும் ஒன் வீக்ல டெலிவரியாகிடும்னு சொல்லி இருக்காங்க. அதுக்குள்ளேயும் நீ எதுவும் பண்ணி விட்றாத!” என அவன் தங்கையை முறைக்க,

“பஜ்ஜியோட அருமைத் தெரியாதவன்!” என அவள் உதட்டைக் கோணியபடியே தட்டைத் தூக்கிக்கொண்டு சென்றாள். அவர்கள் அலப்பறையில் ஆதிரை பக்கென்று சிரித்திருந்தாள்.

ஜனனி எழுந்து அவளருகே சென்றவள், “அக்கா, சாரிகா!” என்று தயங்கியபடியே அவள் கையைப் பிடித்தாள்.

“ம்ப்ச்.. ஜானு, எதுக்கு சாரி?” எனக் கேட்டு முறுவலித்தவளுக்கு ஜனனியிடம் சின்னதாய் கண்ணுக்குத் தெரியாத திரை ஒன்று முளைத்தது. என்னவோ அன்றைக்கு அத்தனை நடந்தும் இவள் எங்கேயும் நியாயமாய் நடந்து கொள்ளாமல் வாணியின் பக்கம் நின்றுவிட்டபடியால் பழையபடி அவளிடம் உறவை வளர்க்க மனம் வரவில்லை. இருவருக்கும் இடையில் ஒரு வெளியை உருவாக்கி தன்னுடைய இடத்திலே நின்று கொண்டாள் இவள்.

“டாக்டர் என்ன சொன்னாங்க ஜானு?” எனப் பேச்சை மாற்றினாள் ஆதிரை.

“இன்னும் ஒன் வீக்ல டெலிவரி இருக்கும்னு டாக்டர் சொன்னாங்க அண்ணி. அப்படியே செக்கப் முடிச்சிட்டு உங்களைப் பார்க்கலாம்னு வந்தோம். என் கூடப் பொறந்தவனைக் காணோமே!” ஹரி அவள் கேள்விக்குப் பதிலளித்தான்.

“வர்ற நேரம் தானே ஹரி. வந்துடுவாங்க!” அவனிடம் உரைத்தவள், “உட்காருங்க ஜானு. ஏன் நின்னுட்டே இருக்கீங்க. இன்னும் ஒன் வீக் கேர் ஃபுல்லா இருக்கணும். பால்ஸ் பெய்ன் எதுவும் வந்துச்சா?” என அவளிடம் விசாரித்தாள். ஜனனி பதில் சொல்லிக் கொண்டிருக்கும் போதே

“நீ போ...” என அபி ராகினியை முன்னே தள்ள, “ண்ணா... நீ போ!” என அவள் அவனைத் தள்ள என இருவரும் ஒருவரையொருவர் முன்னிறுத்தி ஆதிரையின் முன் நின்றனர். பின்னர் ஒரு சேர அவர்கள் பிரதன்யாவின் முகம் பார்க்க, பெரியவர்களும் அவர்கள் பார்வை சென்ற திசையில் பார்த்தனர்.

சின்னவர்ளிடம் முறைப்புடன் கண்ணைக் காண்பித்த பிரது, “ஹிஹிஹி... எனக்கொன்னும் தெரியாது அண்ணி!” என்றாள் அப்பாவியாய். அதிலிருந்தே அவள்தான் ஏதோ சொல்லிக் கொடுத்திருக்கிறாள் என ஆதிரைக்குப் புரிந்து போனது.

“என் ராகி செல்லத்துக்கு என்ன வேணும்? பெரிம்மாகிட்டே சொல்லுங்க!” இவள் சிரிப்புடன் கேட்க, “பெரிம்மா... கேக் வேணும்!” என்றாள் உதட்டைப் பிதுக்கி பிரதன்யாவையும் பார்த்து.

‘ஹக்கும்... என் அண்ணன் பெத்த குட்டி பிசாசு. ஐடியா கொடுத்தா என் முகத்தைப் பார்த்தே மாட்டி விட்றது!’ என மனதிற்குள் முனங்கியவள், “கிச்சன்ல ஓவன் இருக்கேன்னு பார்த்தேன் அண்ணி. மத்தபடி நான் ஐடியா எல்லாம் கொடுக்கலை. ஜஸ்ட் கேக் சாப்பிட்டா நல்லா இருக்கும்னு சொன்னேன்!” என்றாள் குறும்பான குரலில்.

“ராகி, பெரியம்மா இப்போதான் வொர்க் முடிஞ்சு வந்தாங்க. டயர்டா இருப்பாங்க. இன்னொரு நாள் கேக் செய்யலாம்!” ஜனனி மகளை அதட்ட,

“அட ஜானு... பத்து நிமிஷத்துல ஈஸியா கேக் செய்யலாம்!” என்ற ஆதிரை சிறுவர்களை அழைத்துச் சென்று மேடையில் அமர வைத்துவிட்டு எளிமையாய் இன்னட்டுகள், வெண்ணெய், வாழைப்பழம், கேப்பை மாவை வைத்து அணிச்சலுக்கான கலவையை தயாரித்து நுண்ணலை அடுப்பில் வைத்தாள்.

மீதிமிருந்த இன்னட்டை இருவரும் எடுத்து சாப்பிட, “போதும் சாக்லேட்ஸ். கேக்லயும் மிக்ஸ் பண்ணி இருக்கேன்!” என்ற கண்டிப்புடன் வெளியே வந்தாள். அவர்களும் வால் போல அவள் பின்னே வந்தனர்.

“என்ன அண்ணி, வெறுங்கையோட வரீங்க. கேக்கை காணோம்?” பிரது கேட்க, ஆதிரை பதிலளிக்கும் முன்னே ராகினி இடையிட்டாள்.

“அத்தை... கேக் காலி. நானும் அண்ணாவும் சாப்ட்டோம். பெரிம்மா செஞ்சு கொடுத்தாங்க. உனக்கு இல்ல?” என்றாள் நாக்கை துருத்தி. அனைவருக்கும் புன்னகை முளைத்தது.

“அட என் அர ஆழாக்கே! ஓவன்ல வச்சிட்டு வந்துருக்கீங்கன்னு எனக்குத் தெரியாதா என்ன? இப்பவே உங்கப்பா மாதிரி பொய் சொல்றீயா? என் பெரியண்ணன் ஒரு வாரம் வீட்ல இல்லைன்னதும் உங்கப்பா உன்னை நல்லா வளர்த்திருக்கான்!” என அவள் பாவனையாய்க் கூற, ஹரி பிரதன்யாவின் காதைப் பிடித்து திருகினான்.

“சின்ன வயசுல இருந்து எனக்குப் பொய் சொல்லிக் கொடுத்தது நீதானே டா. அதான் உன் புள்ளைக்கும் சொல்லிக் கொடுத்திருப்ப!” என அவள் துள்ள, அபியும் ராகியும் அவர்களைப் பார்த்துக் கைதட்டி சிரித்தனர். ஆதிரை மென்னகையுடன் அவர்களை பார்த்தாள்.

“வாலு.‌.. தேவா மாமா பத்து நாள் இல்லைன்னதும் உன் வாய் நீளமாகிடுச்சு பாரேன்!” என ஜானு கூற, வீடே கலகலவென்றிருந்தது.

மாடிப் படியேறிய தேவா, தன் வீட்டிலிருந்து என்ன இவ்வளவு சப்தம் என யோசனையுடன் வர, வாயில் முன்னே நிறைய காலணிகள் கிடந்தன. நிமிர்ந்து கூடத்தைப் பார்க்க, அவனது குடும்பம் மொத்தமும் உள்ளே இருந்தது. அதைப் பார்த்ததும் சோர்ந்து களைத்திருந்த முகம் நொடியில் மலர்ந்தது.
தேவாவைப் பார்த்ததும் ராகினியும் அபியும் ஓடி வந்து அணைத்தனர்.

“வா தேவா!” ஹரி தமையனை அழைத்தான்.

“ஃபார் கைண்ட் இன்பர்மேஷன் ஹரி, இது அவர் வீடு. நீதான் கெஸ்ட்!” பிரதன்யா அவன் தோளை சுரண்டினாள்‌.

“நம்ப வீடு பிரது இது!” என்றவன் சின்னவர்கள் தேவாவை விட்டதும் அவன் தோளில் கைப் போட்டவன், “ஒரு சின்ன பையன்னு கூடப் பார்க்காம அப்பாவும் புள்ளையும் குடும்ப பொறுப்பை என் தலையில சுமத்திட்டீங்க. சரி தம்பி என்ன பண்றான்னு ஒரு தடவை எட்டிப் பார்த்தீயா டா?” என அவன் கழுத்தை வளைத்தான்.

“ஹரி ரொம்ப பொறுப்பானவர். அவர்கிட்ட நீங்க குடும்ப பொறுப்பைக் குடுத்துப் பாருங்க. நல்லா பண்ணுவாரு‌. நீங்களே எல்லாத்தையும் பார்த்திட்டே சுத்தாதீங்கன்னு உன் அண்ணிதான் டா சொன்னா!” என தேவா சற்றே உரத்தக் குரலில் கூற, ஆதிரை கணவனை முறைத்தவள், “நான் சொல்லலை ஹரி!” என்றாள் இவனிடம்.

“நீங்க என் அண்ணனைக் கண்ணாலே மிரட்டுனதை நான் பார்த்துட்டேன் அண்ணி. நீங்கதான் சொல்லி இருப்பீங்க!” என்றவன் தேவாவை அறைக்குள் அழைத்துச் சென்றான். பத்து பதினைந்து நிமிடங்கள் கழித்தும் அவர்கள் வரவில்லை.

“ஏன் அண்ணீஸ், உங்க புருஷனுங்க ரெண்டு பேரும் என்ன கிசுகிசுன்னுப் பேசிக்குறாங்க? தனியா போய் வேற பேசுறாங்க. இதெல்லாம் கேட்க மாட்டீங்களா?” என பிரதன்யா கூற, இருவரும் அவளை முறைத்தனர். ஆதிரை நினைவு வந்தவளாய் எழுந்து சென்று அணிச்சலை வெளியே எடுத்தாள்.

அது நன்றாய் வந்திருக்க சின்னவர்களுக்கு ஆளுக்கு இரண்டு துண்டுகள் கொடுத்தவள்,‌ மற்றவர்களுக்கு கிண்ணத்தில் கொடுத்தாள். தேவாவும் ஹரியும் வந்தனர். பேச்சினூடே நேரம் செல்ல, இரவு உணவை உண்டுவிட்டே அனைவரும் விடை பெற்றனர்.

ஆதிரை முடியைத் தூக்கி கொண்டையிட்டு அலங்கோலமாக கிடந்த சமையலறையைப் பார்த்தாள். முகம் அஷ்டக் கோணலானது. காலையில் பார்த்துக் கொள்ளலாம் என மனம் கூற, மூளையோ வேலையை முடி எனக் கூறிற்று. ஓரளவிற்கு சுத்தம் செய்தவள் திருப்தியானதும் படுக்கச் சென்றாள்.

சட்டென அவளிடம் தயக்கம் வந்து சொல்லாமல் கொள்ளாமல் ஒட்டிக் கொண்டது. சங்கடத்துடன் அறைக்குள் நுழைய, அபி தூங்கியிருந்தான். தேவா கட்டிலில் சாய்ந்து அமர்ந்து அலைபேசியை பார்த்திருந்தான்.

ஆதிரை வந்ததும், “காலைல வேலையைப் பார்க்கலாம்ல ஆதி? யு லுக் வெரி டயர்ட்!” என்றான் கரிசனத்துடன். இவளிடம் சின்னதாய் புன்னகை உதிர்ந்தது.

“சும்மா கொஞ்சமா சுத்தம் பண்ணேன்ங்க‌. மார்னிங்தான் மத்த வேலையைப் பார்க்கணும்!” என்றாள் புன்னகைத்து. அவன் சரியென குனிந்து கொள்ள, இவளுக்கு அடுத்து என்ன செய்வதெனத் தெரியவில்லை.

“தேவா...” தயங்கியபடியே அவனை அழைத்தாள்.

“என்ன ஆதி?” அவன் கேட்க, “இல்ல... அது. ஹம்ம் வெளிய படுக்கலாமா?” என மெல்லிய குரலில் அவன் முகம் பார்க்கத் தயங்கியபடியே கேட்டாள்.

“எதுக்கு... பெட்லயே படுத்துக்கலாம்!” அவன் இயல்பாய்க் கூற, இவளிடம் சட்டென ஒரு ஏமாற்றம் பரவிற்று.

“ஆர் யூ ஷ்யூர்?” என மீண்டும் கேட்டாள்.

“என்ன ஷ்யூர்... உள்ளயே படுக்கலாம்!” என அவன் கூற,

‘மக்குப் புருஷா... மக்குப் புருஷா... மக்குப் புருஷா... காலைலயே கற்பூரத்தைக் காட்டுனேன். அப்புறமும் புரிஞ்சுக்கலைன்னா நான் என்ன பண்ண?’ மானசீகமாக தலையிலே அடித்துக் கொண்டவள் வெடுக்கென பாயை உருவி தரையில் விரித்தாள். சில நாட்களாக அவள் தரையில் படுப்பதால் தேவாவிற்கு அது பெரிதாகத் தோன்றவில்லை.

பாயில் அமர்ந்தவள் நிமிர்ந்து அவனைத் தயங்கியபடியே பார்த்தாள். கூந்தல் கலைந்து கிடந்தது. தூங்கும் போது தொந்தரவாக இருக்க கூடாதென அதை விரித்து விட்டிருக்க, அவள் பக்கவாட்டிலிருந்த மஞ்சள் விளக்கு அவள் முகத்தையும் மெல்லிய மஞ்சளாய் காண்பித்தது. கணவனைப் பார்ப்பதும் கைவிரல் நகங்களை ஆராய்வதுமாய் இருந்தாள். அவனுக்காகவென மனம் இரங்கிற்று. அவன் அருகாமை அவளுக்குமே வேண்டுமெனத் தோன்றியது. ஆனால் வாய்விட்டு கேட்க முடியாமல் வெட்கம் தடுத்தது.

அவள் பார்வை குறுகுறுக்க, தேவா திரும்பி பார்த்தான். “என்ன டீ, ஏன் என்ன பார்த்துட்டே இருக்க?” என அதட்டலாய் கேட்டான். இவள் முகம் வாடியது.

“ஒன்னும் இல்ல, ஃபோனை வச்சுட்டு தூங்குங்க!” என்றவள், ‘போயா... காலம் முழுக்க தனியாவே படு. பொண்டாட்டி உனக்கொரு கேடு!’ எனக் கடுப்பானவள் போர்வையைத் தலை முதல் கால் வரைப் போர்த்திக்கொண்டு படுத்துவிட்டாள். ஆனாலும் மனதிற்குள்ளே கணவனை ஆன மட்டும் திட்டித் தீர்த்தாள்.

தேவா அலைபேசியை ஓரமாய் வைத்துவிட்டு படுத்தான். என்னவோ மனைவியின் பார்வை அவனுக்கு ஏதோ அவஸ்தையைக் கொடுத்தது. என்ன இருந்தது அப்பார்வையில் என யூகிக்க முயன்றான். ஏன் இப்படி நடந்து கொள்கிறாள் என யோசித்தவாறே கையைத் தலைக்கு அடியில் கொடுத்து மின்விசிறியைப் பார்த்தவாறே படுத்தவான்.



'என்னவா இருக்கும். காலைல டிப்ரெண்டா சாமி கும்பிட்டா, வடை பொங்கல் செஞ்சா, மெரூன் சேரி, போகும் போது முறைக்க வேற செஞ்சா!' என அடுக்கியவன், 'சாமி கும்பிட்டா!' என்ற வார்த்தையில்
மூளையில் விளக்கெரிய, ‘யூரேகா... அடப்பாவி... காலைல இருந்து விதவிதமாக பொண்டாட்டி சிக்னல் கொடுத்திருக்கா. அது கூடப் புரியாத மக்கா இருந்துருக்கீயே டா தேவா!’ எனப் படக்கென எழுந்தவன் அவளருகே வர, ஆதிரை அவனைத் தீயாய் முறைத்தாள்.

தொடரும்...

உங்க தேவாவுக்கு ரொமான்ஸ் கேட்டீங்க. சைட்டே டவுனாகிடுச்சு. இதுல இருந்து என்ன தெரியுது‌. மக்குப் பையன் தேவாவுக்கு நோ ரொமான்ஸ்
 
Last edited:
Well-known member
Messages
524
Reaction score
389
Points
63
அதானே இவனுக்கு பல்பு எரியறத்துக்குள விடிஞ்சிடும்🤭🤭🤭🤭
 
Well-known member
Messages
471
Reaction score
342
Points
63
Nan sollala indha janu eppovum deva ku no romance num pothu extra dose smile yetti pakkuthu nu .

Aanalum indha deva ipadi makku ah irundhu irukku ah venam payapulla oruthi azhaga makeup oda ivanuku signal kuduthu ivan pongal um vadai ah yum think panran 🤦🏻‍♀️adapoda
 
Active member
Messages
219
Reaction score
169
Points
43
Update Iruka sis Innaiku??
 
Top