• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,205
Reaction score
3,520
Points
113
நெஞ்சம் – 52 💖

செங்கல்பட்டின் கோவளம் கடற்கரை அந்த மாலை பொழுதில் சலசலத்துக் கொண்டிருந்தது. ஆங்காங்கே மனித தலைகள் தெரிந்தன.

அபியும் ராகினியும் ஆதிரைக்கு அருகே அமர்ந்து மணலில் வீடு கட்டி விளையாடிக் கொண்டிருந்தனர். நீச்சல் வகுப்பு முடிந்ததும் கடைக்குச் சென்று தேவையான பொருட்களை வாங்கிவிட்டு வீட்டிற்குச் செல்லலாம் என ஆதிரை திட்டமிட்டிருக்க, இருவரும் அவளது கன்னத்தில் முத்தமிட்டு கொஞ்சிக் கெஞ்சி கடற்கரைக்கு அழைத்து வந்துவிட்டனர். அவளுக்குமே சில பல வாரங்களாக வீடு, வேலை என ஒரு சிறிய வட்டத்தில் அடைபட்டிருக்கும் உணர்வு. தனக்குமே கொஞ்சம் ஓய்வு வேண்டும் என எண்ணி சின்னவர்களை அழைத்து வந்துவிட்டாள்.

இவ்வளவு நேரம் தண்ணீரில்தான் விளையாடினர். ஆதிரை ராகினியை இன்னுமே கவனமாய் பார்த்துக் கொண்டாள். அபிக்கு நீச்சல் நன்றாய் தெரியும். அவன் விவரம்‌ தெரிந்த பையன். ஆனால் ராகினிக்கு நீச்சல் தெரியாதே என பத்திரமாய் அருகிலே நின்று நீரில் சிறிது நேரம் காலை நனைக்க வைத்து விளையாட விட்டு, “போதும் தண்ணில ஆடுனது. ஏற்கனவே ஸ்விம் வேற பண்ணி இருக்கீங்க. நைட் வீட்டுக்குப் போனதும் ஆளுக்கொரு பாரசிட்டமால் போடணும்!” என்ற கண்டிப்புடன் கரைக்கு அழைத்து வந்துவிட்டாள்.

அபிக்கு ராகினி உடனிருப்பதில் நிரம்ப சந்தோஷம். எப்போதுமே அவன் மட்டும் தனியாய்தான் விளையாடுவான்‌‌. ஆனால் இன்றைக்கு சின்னவள் உடனிருக்கவும் குஷியுடன் விளையாடினான்‌‌. சிறிது நேரம் ஓடிப் பிடித்து விளையாடினர். பின்னர் தனித்தனியாக வீடு கட்டுகிறேன் என்ற பேர்வழியில் மணலை குவித்து ஏதோ செய்தனர்.

அவர்களுக்குப் பத்தடி தள்ளித்தான் ஆதிரை அமர்ந்திருந்தாள்‌. காலைக் கட்டிக்கொண்டு வானத்தையும் கடலையும் இலக்கில்லாமல் விச்ராந்தையாய் பார்த்தாள். கடந்த மாதம் முழுவதும் திருமணம், வேலை, வீட்டில் சண்டை, தேவாவுடனான மனக்கசப்பு என அவளுக்கு உட்கார்ந்து இப்படியெல்லாம் யோசிக்கவே நேரமில்லாமல் போயிற்று.

இப்போது மிக மிக கவனமாய் என்ன நடந்தது, ஏன் தன்னுடைய நடவடிக்கைகள் குழந்தை தனமாய் இருக்கின்றன? திருமணம் முடிந்ததும் தேவா தன்னை டேக் இட் ஃபார் கிராண்டடாக எடுத்துக் கொண்டு விட்டானா? இல்லை நான்தான் அவனின் சிறு அலட்சியம் ஹ்கூம் உதாசீனம் சரியாகச் சொன்னால் அவனின் கவனம் முழுவதும் வேலையில் சென்றதால் கோபம்கொண்டு தன் முனைப்பை இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்கிறேனா?

உறவை மேலும் சிக்கலாக்கி கொள்வது நானா? இல்லை அவனா? என மனம் அலசி ஆராய்ந்து முற்றுப் பெற்றது என்னவோ தேவநந்தன் என்ற மனிதனிடம்தான்.

திடீரென வந்தான், பிடித்திருக்கிறது என்றான், காதலிக்கிறேன் என்று பிதற்றினான். வேண்டாம்‌ என்று தீட்சண்யமாக மறுத்தப் போதும் நீதான் வேண்டும் என்று விடாப்பிடியாக திருமணம் முடித்துக் கொண்டான். இந்த நிகழ்வெல்லாம் வெறும் சொற்ப காலங்களில் நடந்திருக்கின்றன என அவளால் நம்பவே முடியவில்லை.

தன் வாழ்க்கை வேறு, தன்னுடைய பாதையும் கருத்துகளும் வேறு. இந்த சமூகம் கட்டமைத்து செல்லரித்துப் போன கொள்கைகளைக் கொண்ட திருமணம் என்ற நிகழ்வில் சற்றும் விருப்பம் இல்லாதவள் நான். அப்படி இருக்கையில் எது இவனிடம் என்னை ஒப்புக் கொள்ள தூண்டியது என தீர்க்கமாய் ஆராய்ந்த போது நெஞ்சில் வந்து மோதியது தேவாவின் முகம். இவளிடம் அதிர்வில்லை. ஆனால் இதயம் மென்மையாய் அதிர்ந்தது என்னவோ உண்மை.

அவன் விருப்பத்தின் பெயரில்தான் இந்த திருமணம் நடந்தது. இவளுக்கு தேவாவை சக மனிதனாய் பிடிக்கும். ஆனால் மனம் மிக மிக மெதுவாய் அவனைக் கணவனாக ஏற்கத் தொடங்கியிருந்தது.

உண்மையில் இந்த சின்ன விஷயத்திற்காக தேவாவிடம் ஏன் முறைத்துக் கொண்டிருக்கிறேன் என ஆழ்ந்து யோசித்த போது அவளது எதிர்பார்ப்பு அவனின் அண்மையும் அரவணைப்பும்தான் எனப் புரிந்தது. ஆனால் அதை அவளாளே ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இத்தனை நாட்கள் யார் உடனிருந்து உன்னை அரவணைத்தது எனக் கேட்டால் மனதிடம் சர்வ நிச்சயமாக பதிலில்லை. ஒருவேளை அவன் உடனிருப்பதால் அவனிடம் சலுகையாக அன்பை எதிர்பார்க்கிறோமா எனத் தன்னையே கேட்டாள்.

ஆம் என மனம் ஒப்புக் கொண்டது. அதில் தவறில்லை என அவளுக்கும் புரிய வைத்தது. இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவரும் ஒரு முழுமையான அன்பை பெற தகுதியானவர்கள்தான். நீயும் அதில் அடக்கம்தான். இத்தனை நாட்கள் நாதியற்று இருந்து விட்டாய். இப்போது தேவாவின் கைகளில் கோழிக் குஞ்சாய் அடைக்கலம் புக தயக்கமாய் இருந்தது. அவளுடைய குணமும் அதுவன்று.

எல்லாவற்றையுமே ஒருவித தான் தோன்றிக் தனமாய் சுதந்திரமாய் அவளுக்கு அவளே செய்து பழக்கப்பட்டவள். வெகு சில நேரமே தனக்கென யாரும் இல்லையென்று வருந்தி இருக்கிறாள். பின்னர் எதிலும் தேங்கிவிடக் கூடாதென எதையும் பெரிதாய் எடுக்க கூடாதென தட்டிவிட்டுச் சென்றுவிடுவாள். அப்படி இருக்கையில் அவள் மனம் முதலில் தடுமாறியது அப்புவிடம்தான். ஆனால் அது வயது கோளாறு, உண்மையில் சிறு ஈர்ப்பை காதலென நம்பி அவளே வாழ்வை சிக்கலாக்கி கொண்ட காலம் அவை. அதிலிருந்து மீண்டு விட்டாள்.

வயது முதிர்ந்து பக்குவம் வந்த வயதில் வரும் பிடித்தம் ஈர்ப்பையெல்லாம் கடந்தது என அவளாலே நன்கு உணர முடிந்தது. தேவாவின் மீது பாதி தவறுதான். இவள் பக்கமும் சரி சமமாய் நியாய தராசு தவறைச் சுட்டிக் காண்பித்தது. ஆனாலுமே அவளால் சட்டென ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

திருமணத்திற்கு முன்பு வெளியே அழைத்துச் செல்வது, காலையிலே வந்து காத்திருப்பது, சண்டையிட்டால் கூட அவனாக வந்து வலியப் பேசுவது என அவளுக்காகவென பார்த்து பார்த்து ஒரு பிம்பத்தை செதுக்கிவிட்டிருந்தான் தேவா.

ஒருவேளை அவன் அப்படியெல்லாம் அக்கறையாய் இருந்திருக்காவிட்டால் ஆதிரையின் எதிர்பார்ப்பெல்லாம் இத்தனை ஓங்கி உயர்ந்திருக்காது. திருமணம் செய்யும் வரை அன்பாய் அனுசரணையாய் பார்த்துக் கொண்டுவிட்டு இப்போது வந்து நீ மிகவும் முதிர்ச்சியானவள், பிறந்த நாள் வாழ்த்தெல்லாம் ஒரு பொருட்டாக எடுக்க மாட்டாய் என அவனே ஒரு முன்முடிவெடுத்ததை அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

அதில்தான் கோபம் பொங்கிற்று. எப்போதும் தேவா இவள் பின்னே கொஞ்சிக் குலாவிக் கொண்டிருக்க வேண்டும் என்று நினைக்கும் ரகமில்லை ஆதிரை. ஆனால், அவளுக்கென்று சின்ன சின்னதாய் எதிர்பார்ப்புகள் இருந்தன. அவளுக்கென்று அவனிடம்‌ முக்கியத்துவம் வேண்டுமென மனம் விரும்பிற்று.

ஒன்று நீ என்னைக் கண்டு கொள்ளாமல் என் போக்கில் விட்டுவிடு. அப்படி இல்லை அன்பைக் கொடுக்க வேண்டும் என்றால் முழுமையான அன்பையும் காதலையும் கொடுத்துவிடு. அறைகுறை அப்பெல்லாம் அவளுக்குப் போதவில்லை. இத்தனை நாட்கள் விடுபட்டிருந்த வெற்றிடத்தையும் தேவா நிரப்ப வேண்டும் என அவளுக்கு ஆசையாய் இருந்தது. ஆனால் வாய் விட்டுக் கேட்கவும் தன்மானம் இடம் கொடுக்கவில்லை.

அன்பைக் கேட்டுப் பழக்கப்பட்டிராதவள் ஆதிரை. உண்மையில் ஒரு தூய அன்பை அனுபவித்தும் பழக்கம் இல்லாதவள். அவளுக்கு நிரம்ப ஆசையாய் இருந்தது. தேவாவின் மொத்த அன்பும் காதலுக்கும் தனக்கு மட்டுமே வேண்டும் என்ற சிறு பிள்ளைத்தனமான சுயநலம் ஒன்று முளைத்து அவளை ஆட்டு வித்தது. அதனாலே அவனிடம் முறைத்துக் கொண்டே சுற்றுகிறாள்.

அப்படியென்ன நீ குறைந்து போய்விட்டாய்? அவனாய்தானே அன்பைக் கொடுத்தான், அலட்சியத்தையும் கொடுத்து, காயத்தைக் கொடுத்தான். அவனே அதை சரிசெய்ய வேண்டும் என்று எண்ணி கடலை வெறித்தாள்.

ஆழமாய் வெகு ஆழத்தில் ஆதிரையின் மனதில் வெற்றிடம் நிரந்தரமாகவிட்ட ஒன்று. இப்போதும் அவள் அதை ஸ்பரிசித்தாள். ஒருமாதிரி வெறுமையாய் உணர்ந்தது மனம். யாருமே இல்லாத போதும் அதே உணர்வுதான். திருமணம் முடிந்தப் பின்னரும் கூட இந்த வெற்றிடம் ஏன் போக மாட்டேன்‌ என்று அடம்பிடிக்கிறது? சின்னதாய் கவலை வந்தது. ஆனாலும் தேவா அனைத்தையும் பார்த்துக் கொள்வான் என நினைத்தாள். அந்த நினைப்பே சுகமாய் இருந்து தொலைத்தது.

தேவா ஒன்றும் பொய்யாய் வார்த்தைகளை கூறி அது இதுவென அவளை ஏமாற்றவில்லை. அவனளவில் கொஞ்சம் அன்பையும் அக்கறையும் இவளிடம் செலுத்தினான். அதிலே ஆதிரையின் மனம் நிறைந்து போயிருந்தது.

இந்த நான்கு நாட்களாக கணவனை வெகுவாய் தேடியிருந்தாள் பெண். இவள் முனைத்துக் கொண்டு பேசாமல் இருந்தால் கூட வலிய வந்து அவன் பேசுவதில் மனதோரம் சின்னதாய் ஒரு இதம்... ம்கூம் எப்போதும் அவன் எனக்காக இருக்கிறான் எனத் தோன்றும். நான் கண்டு கொள்ளவில்லை என்றால் கூட என்னை நினைக்க, என்னிருப்பை தக்க வைத்துக் கொள்ள அவன் போராடுகிறான் என அற்பமாய் மகிழ்வாள்.

நான் இருக்கிறேனா? இல்லையா? என்று கூட தேட யாருமே அவளுடன் இருந்தது இல்லை. அப்படி இருக்கும்போது எப்போதும் அவளைப் பார்த்து கவனித்து, அவளுக்காக என அனைத்தையும் தேவா செய்யும் போது நிறைவாய் இருந்தது.

பிறந்தநாளே முடிந்து இரண்டு வாரம் கடந்து போயிருந்ததால் கணவன் மீதான கோபம் கொஞ்சம் கொஞ்சமாக நீர்த்துப் போயிருந்தது. அவனிடம் இவளாகச் சென்று பேசிவிடலாம்தான். ஆனால் அவனுக்கு அவனுடைய இந்த சின்ன தவறாகினும், அதைப் புரியாமலே போய்விடும் என எண்ணம்‌ தோன்றவே அமைதியாய் இருந்தாள்.

அவளால் புறக்கணிப்பையோ அலட்சியத்தையோ தாங்கிக் கொள்ள முடியவில்லை. இரண்டு நாட்கள் அதற்காக வருந்தினாலும் அடுத்தடுத்து அவள் தேவாவிடமிருந்து விலகிவிடுவாள். இப்போதும் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. தன்னுடைய குணமே அதுதான் என ஆதிரைக்கும் தெரிந்தது. அவள் யாரையும் எதையும் பெரிதாய் எடுத்துக் கொள்ள மாட்டாள். அப்படி ஒருவருக்கு முக்கியத்துவம் இவளாக கொடுத்தால் அதே அளவு அன்பை எதிர்பார்ப்பாள். கிடைக்காத பட்சத்தில் மனமும் உடலும் சோர்ந்து துவண்டு விடுகிறது. அவளுடைய பிரச்சனையும் அதுதான்.‌

தேவா வேலை வேலை என்று அதன் பின்னே சுற்றுவதிலும் கொஞ்சம் எரிச்சல்தான். அவளைப் பொறுத்தவரை அபியுடன் நிறைய நேரம் செலவழிக்க வேண்டும் என்று விரும்புவாள். ஆனால் வேலைக்குச் சென்றே ஆக வேண்டிய கட்டாயம். அதனாலே முடிந்தளவு அவனுக்கான நேரத்தை ஒதுக்குவாள். ஆனால் தேவா குடும்பத்தை இரண்டாம் பட்சமாக கருதுவதில் இவளுக்கு சற்றும் உடன்பாடில்லை.

என்னென்னவோ சிந்தனை முட்டி‌ மோத, ஒரு பக்கம் கவனத்தை பிள்ளைகளிடமும் வைத்திருந்தாள்.

தேவா மகிழுந்தை நிறுத்திவிட்டு ஆதிரையைக் கண்களால் துழாவிக் கொண்டே வந்தான். ஒரு மூலையில் அவளும் குழந்தைகளும் விளையாடிக் கொண்டிருந்தனர்.

இவன் மணலில் கால் புதைய நடந்து அவர்கள் அருகில் சென்றான். ஆதிரை தனியே அமர்ந்து கடலை வெறித்துக் கொண்டிருந்ததை பார்க்கவும் இவனுக்கு சட்டென்று மனம் பிசைந்தது. அவள் முகம் ஒருமாதிரி அமைதியற்று இருந்ததை உணர்ந்தவன் மெல்ல அவளுக்கு அருகே சென்று அமர்ந்தான்.

ஆதிரை திடுக்கென்று மனம் அதிர திரும்பிப் பார்த்தாள். தேவாதான் என்பதை புலன்கள் உணர்ந்ததும்‌ மெல்ல முகம் மாற, உடல் தளர்ந்து அமர்ந்தவள் மூச்சை வெளியிட்டுவிட்டு திரும்பி அமர்ந்தாள்.

“கிளம்பலாமா?” தேவா அவள் முகத்தைப் பார்த்து கேட்க, வானம் இருட்டிக்கொண்டு வந்தது.

“அபிம்மா, ராகினி வாங்க வீட்டுக்கு கிளம்பலாம். மிச்சத்தை வீட்டுக்குப் போய் விளையாடலாம்!” என்றவள் எழுந்து உடையிலிருந்த மணலை தட்டிவிட்டாள்.

தேவாவை அப்போதுதான் கவனித்த சின்னவர்கள், “தேவாப்பா... தேவா அங்கிள்!” என ஓடி வந்து அவன் மீது ஏறினர். அவர்கள் இருவரையும் சமாளித்து எழுந்து நின்றான் அவன்.

“அங்கிள், இன்னும் கொஞ்ச நேரம் தண்ணில விளையாடலாமா? நீங்களும் வரீங்களா? நான், நீங்க, ராகின்னு மூனு பேரும் ஓடிப் பிடிச்சு விளையாடலாம்!” சின்னவன் ஆசையாய் கேட்க, தேவா மனைவி முகத்தைப் பார்த்தான்.

‘ம்கூம்...’ என கண்டிப்புடன் தலையை அசைத்தாள் அவள்.

“ஹம்ம்... இன்னைக்கு அங்கிள்க்கு ரொம்ப டயர்ட் அபி. ஹம்ம்... நெக்ஸ்ட் வீக் நம்ப மகாபலிபுரம் பீச் போகலாம். நிறைய நேரம் ஸ்பெண்ட் பண்ணலாம்!” என முகத்தை தூக்கிய அபியையும் ராகினியையும் சமாதானம் செய்து அழைத்துச் சென்றான். சின்னவர்கள் தேவாவோடு மகிழுந்தில் ஏற, ஆதிரை தன் இருசக்கர வாகனத்தை இயக்கினாள்.

இவன் அவளது வேகத்திற்கு மெதுவாய் செல்ல, ஒரு பல்பொருள் அங்காடியின் முன்னே வாகனத்தை நிறுத்தியவள், “நான் கொஞ்சம் திங்க்ஸ் வாங்கணும். நீங்க முன்னாடி போங்க, வாங்கிட்டு வரேன்!” என்றவள் வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே செல்ல, தேவா அலட்டிக்காது தானும் குழந்தைகளுடன் அவள் பின்னே சென்றான்.

ஆதிரை ஒரு தள்ளும் கூடையில் தனக்கு வேண்டியவற்றை எடுத்துப் போட, “பெரிம்மா சீஸ் கேக் செய்ய சீஸ், அப்புறம் சாக்லேட்!” அது இதுவென ராகினி கூடையை நிரப்ப, அபி அவன் பங்குக்கு எடுத்து வந்து கொடுத்தான். ஆதிரை அவற்றில் தேவை என்பதை மட்டும் வைத்துக்கொண்டு, மீதவற்றை அங்கேயே வைத்துவிட்டாள்.

அவள் பணம் செலுத்துமிடம் செல்ல, தேவா அனைத்திற்கும் பணத்தைக் கொடுத்துவிட்டான். இவள் பரிவர்த்தனை அட்டையை எடுப்பதற்குள் அவன் நீட்டி இருந்தான். இவள் அவனைத் திரும்பி ஒரு நொடி பார்த்தாள்.

“சார், இந்தாங்க!” என ஊழியர் அவர்கள் வாங்கிய பொருட்களை பையில் போட்டுக் கொடுக்க, தேவா அதை வாங்கிக்கொண்டு முன்னே நடக்க, இவள் குழந்தைகளை அழைத்துச் சென்றாள்.

மகிழுந்து பின்னிருக்கையில் பொருட்களை வைத்தவன், “ஆதி, டின்னர் வெளிய சாப்பிடலாமா?” அவள் முகம் பார்த்தான்.

சில நொடிகள் யோசித்தவள், “அபி, ராகினி... ஹோட்டல்ல சாப்பிடலாமா? இல்ல வீட்டுக்குப் போய் சாப்பிடலாமா?” என அவர்களிடம் கேட்டாள்.

“ஹோட்டல்ல சாப்பிடலாம்!” இருவரும் ஒரு சேரக் கூற, இவளுக்கு புன்னகை எழுந்தது.

“ஹம்ம்... சரி போகலாம்!” என தேவாவிற்கான பதிலைக் குழந்தைகளிடம் கூறியவள் இருசக்கர வாகனத்தில் முன்னே சென்று ஒரு உணவகத்திற்குள் நுழைந்தாள். பின்னே திரும்பி தேவா வருகிறானா என அடிக்கடி பார்த்துக் கொண்டாள்.

ஆதிரை காலியாய் இருந்த மேஜையாகப் பார்த்து அமர, மற்ற மூவரும் வந்தனர். அபி என்ன வேண்டுமென கூற ராகினி ஒரு நொடி விழித்துவிட்டு, “ஜஸ்க்ரீம், ப்ரௌனி கேக், க்லோப் ஜாமுன், ஹாட் சாக்லேட்!” என அடுக்க இவளுக்கு சிரிப்பு வந்தது.

“ராகிம்மா... நான் டின்னருக்கு ஆர்டர்‌ போட சொன்னேன். சாப்பாட்டை ஒழுங்கா சாப்பிட்டு முடிச்சா, டெசர்ட்ஸ் வாங்கலாம்!” என்றவள் மூவருக்கும் உணவைக் கூறிவிட்டு தேவாவைப் பார்த்தாள்.

“சிக்கன் கறி தோசை, ஈரல் வறுவல், மட்டன் சுக்கா!” என்றான். ஆதிரை அவனைப் பார்த்தாள்.

“செம்ம பசி டீ!” அவன் முணுமுணுக்க, எதுவும் கூறாதவள் உணவு வந்ததும் உண்டு கொண்டே பிள்ளைகளையும் உண்ண வைத்தாள். அவர்கள் ஆசைப்பட்டு கேட்டாலும் நிறைய சாப்பிடவில்லை. அப்படியே தேவாவின் புறம் நகர்த்தினாள். அவன் கூச்சப்படாமல் நன்றாக உண்டான். மதியம் உண்டது நான்கு மணிக்கே செரித்துவிட்டது. மாலை தேநீர், சிற்றுண்டி என எதுவுமே சாப்பிடாததால் அவன் வயிற்றில் அளவுக்கு அதிகமாக அமிலம் சுரந்தது. அதனால் நன்றாய் உண்டான்.

ஆதிரை அவளுக்கு வேண்டிய அளவு உண்டாள். ஆனாலும் கணவன் போதுமான அளவு உண்டான என அவனையும் கவனித்துக் கொண்டாள். தேவாவும் வந்ததிலிருந்து பார்க்கிறான். அவன் கவனிக்காத போது மனைவி அவன் தேவைகளை நிறைவேற்றுகிறாள் என இன்றுதான் உணர்ந்தான். மற்ற நாட்களிலும் அவள் அப்படித்தான் என்பதை வெகு தாமதமாகத்தான் புரிந்து கொண்டான். உதட்டோரம் சின்ன புன்னகை வந்தமர்ந்தது.

அபி தண்ணீர் கேட்டதும் தன் கைப்பையிலிருந்த பொத்தலில் நீரை எடுத்துக் கொடுத்தாள் ஆதி. பையிலிருந்தே கைக்குட்டையை எடுத்து அவன் வாயைத் துடைத்துவிட்டாள்.

தேவா உண்டு முடித்து காத்திருக்க, சின்னவர்கள் மெதுவாய் சாப்பிட்டனர். ஆதிரை அவர்களை அழைத்துச் சென்று கையைக்‌ கழுவிவிட்டு பத்திரமாய் தேவாவிடம் அவர்கள் சென்றுவிட்டதை உறுதி செய்தப் பின்னரே கழிவறைக்குச் சென்றாள்.

அபி மேஜையிலிருந்த ஆதிரையின் அலைபேசியை எடுத்தான். அதிலிருந்த கடவுச் சொல்லை அவன் நீக்கி உள்ளே செல்ல, தேவா எதேச்சையாக பார்த்துவிட்டான்.

“அபி, ஃபோனை குடு!” யோசனையுடன் அவன் கேட்க, “டூ மினிட்ஸ் அங்கிள். என் ஃப்ரெண்ட் மெசேஜ் போட்டிருக்கா!” என அவன் கெஞ்சலாய்ப் பார்த்தான்.

“ஒரு நிமிஷத்துல தரேன் டா!” என்றவன் அவனிடமிருந்து அலைபேசியை பறித்து திரையை நன்றாய் பார்த்தான். அவனின் புகைப்படம்தான்.‌ மகாபலிபுரம் கடற்கரைக்குச் சென்ற போது இவனும் அபியும் சிரித்து விளையாடும் போது எடுத்த புகைப்படம். பற்கள் தெரிய வசீகரமாய் சிரித்திருந்தான் தேவா. தனக்கேகே தான் அழகாய் இருக்கிறோம் என தேவாவிற்குத் தோன்ற வைத்தப் புகைப்படம் அது. பார்த்ததும் சட்டென முகம் மலர்ந்தது.

‘என்னைத் தவிர எல்லாத்தையும் பத்திரமா வச்சுப்பா! கேடி!’ என நினைத்தவன், அலைபேசியை அபியிடம் நீட்டினான். அவள் வரத் தாமதமாக கைப்பையில் என்ன வைத்திருக்கிறாள் என மெதுவாய் கையை விட்டுத் துழாவினான்.

கடலை மிட்டாய், எள்ளு உருண்டை, சின்ன டப்பாவில் பேரிச்சம்பழம், ஒரு ஆப்பிள், கொஞ்சம் அலங்கார பொருட்கள், அணையாடை, கைக்குட்டை, சிறிய முதலுதவி பெட்டி, வட்டப் பொட்டுகள் நிரம்பிய அட்டை, ஊக்குகள் என ஒரு கடையே உள்ளிருந்தது. சில பல மாத்திரைகளும் அடக்கம்.

‘இவ்வளோ வச்சிருக்கா?’ என யோசித்தவன் கையை வெளியே எடுக்க, பட்டென சின்ன காகிதம் அளவு இருந்த புகைப்படத் தொகுப்பு வெளியே வந்து விழுந்தது. என்னவென எடுத்துப் பார்த்தான்.

கடற்கரைக்குச் சென்ற போது மூவரும் எடுத்த புகைப்படங்களைக் கையளவு தொகுப்பாக வைத்திருந்தாள். இவன் உதட்டோரம் குமிழிட்ட புன்னகையுடன் அதைத் திருப்பி பார்த்தான்.

‘கில்லிங் ஸ்மைல்!’ என அவன் சிரித்திருந்த புகைப்படத்திற்கு கீழே எழுதி இருந்தாள். இன்னுமின்னும் அவன் உதடுகள் சிரிப்பில் மலர்ந்தன. அடுத்த என்ன எழுதியிருப்பாள் என ஆர்வமாய் திருப்பினான்.

‘ஹேண்ட்சம் கை... பட் ப்ளாக்கி!’ என அவள் எழுதி இருக்க, இவன் முகம் சுருங்கியது. தேவாவும் ஆதிரையும் ஜோடியாக நின்றிருக்கும் புகைப்படம். அவள் தோள் மீது கையைப் போட்டிருந்தான். அவள் வெளீரென வெண்ணெய் போலிருக்க, இவன் அவளுக்கு அருகே அடர் கருப்பாய் தெரிந்தான்.

‘ஹக்கும்... ஏதோ கொஞ்சம் டார்க்கா இருக்கேன். அதுக்காக ப்ளாக்கின்னு எழுதுவாளோ?’ என முனங்கியவன் அடுத்து திருப்பினான்.

‘இந்த சிரிப்பை எங்கயா ஒளிச்சு வச்சிருந்த? மொத்த சொத்தையும் எழுதித் தரலாம் போல!’ என குட்டியாக ஒரு இதயம் வரைந்து வைத்திருந்தாள். பக்கென சிரித்துவிட்டிருந்தான். தூரத்தில் அவள் வருவது தெரியவும் படக்கென அதை அவள் கைப்பையில் போட்டு மூடி வைத்தான்.

“போகலாமா?” எனக் கேட்டவள் கைப்பையை எடுத்து மாட்ட, அபி இருக்கையிலிருந்து நங்கென்று குதித்து இறங்க, ராகினியும் அதையே பின்பற்றினாள்.

“மெதுவா ராகிம்மா!” அவளை அதட்டியவள் இரண்டு பேரையும் கையில் பிடித்துக்கொண்டு நடந்தாள். தேவா பணம் செலுத்த செல்ல, “நான் பே பண்ணிட்டேன்!” என்றுவிட்டு முன்னே சென்றாள். இவன் அவளை முறைத்தான். கழிவறைக்குச் சென்று தாமதமாக வந்ததன் காரணம் அவனுக்கு விளங்கிற்று.

மூவரும் மகிழுந்தில் வர, அவள் இருசக்கர வாகனத்தில் முன்னே சென்றாள். தேவாவின் சிந்தனை முழுவதும் ஆதிரைதான். புரியாத புதிராய் இருந்தாள் மனைவி. எந்த வகையிலும் அவளை சேர்க்க முடியவில்லை. ஆனாலும் அவளை நிறைய பிடித்து தொலைத்தது. அதுவும் அவள் தன்னைப் பற்றி பேச கேட்டது, இன்றைக்கு அவளது அலைபேசியில் இவன் புகைப்படத்தை வைத்திருந்தது முதல் தேவாவிற்கு ஒன்று நன்கு விளங்கிற்று.

இவன் கட்டாயத்தினால் ஆதிரை இந்த திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. அவளுக்குத் தன் மீது பிரியம் அல்லது சின்னதாய் ஈர்ப்பு ஏற்ப்பட்டதாலே தன் வாழ்க்கைக்குள் நுழைந்திருக்கிறாள் என்ற நினைப்பே தித்தித்தது.

மெதுவாய் நடந்த நிகழ்வை ஓட்டி தன் மீதான தவறு என்னவாக இருக்கும் என பொறுமையாய் யோசித்தான். ஆனாலும் அவன் கண்களுக்கு புலப்படவில்லை.
தேவா பெண்களைப் புரிந்து கொள்ளும் விஷயத்தில் பெரும் மடையனாக இருந்தான். அவனுக்கும் அது தெரியும். ஆனாலும் மனையிடம் இறங்கிப் போகத் தயங்கவில்லை.

‘போய்ட்டு போறா... என் பொண்டாட்டி அவ! சாரி கேட்டா குறைஞ்சுப் போய்ட மாட்டேன்!’ என நினைத்து மூச்சை வெளிவிட்டான்.

ஆதிரை, வீட்டிற்கு சென்றதும் முதல் வேலையாக சின்னவர்களுக்கு உடைமாற்றி விட்டவள் பாராசிட்டமால் ஒன்றை முன் பாதுகாப்பிற்காக விழுங்கச் செய்தாள்.

அவர்கள் அகலவும் விரித்து விட்டிருந்த கூந்தலை அள்ளிக் கொண்டையிட்டு ஊசியை சொருகியவள், அலமாரியைத் திறந்து மாற்றுடை எடுத்தாள். தேவா எதுவும் பேசாது மனைவியின் செயலை மட்டும் அவதானித்தான். அவன் பார்வை இவளுக்கும் குறுகுறுக்கச் செய்தது. ஆனாலும் அலட்சியமாய் தோளைக் குலுக்கிவிட்டு உடைமாற்றி தன்னை சுத்தம் செய்துவிட்டு வந்தாள்.

அவன் இன்னுமே அவளைப் பார்வையால் தொடர, கட்டிலில் படுக்கலாம் என்ற முடிவை மாற்றி விறுவிறுவென ஜானுவின் அறைக்குச் சென்றுவிட்டாள். அவனருகே தீடீரென ஏதோ ஓர் அசௌகரியத்தை உணர்ந்தாள். அது பிடிக்காமல் அகன்றுவிட்டாள்.

‘இங்க தானே டீ தூங்க வரணும்!’ அசட்டையுடன் உடை மாற்றி வந்தவனின் கண்களில் மீண்டும் அவள் கைப்பை தென்பட்டது. மீதி புகைப்படத்தை பார்க்கும் ஆர்வம் தொற்ற, பையை எடுத்து வந்து கட்டிலில் அமர்ந்தவன் அந்த தொகுப்பை பார்த்தான்.

அடுத்தடுத்த புகைப்படங்களில் என்னென்னவோ அவனைப் பற்றி எழுதி இருந்தாள். ‘மை கருவாயன்!’ என எழுதி, ‘இன்னைல இருந்து புருஷன் போஸ்ட் கொடுத்தாச்சு. ஒழுங்கா ட்யூட்டியைப் பார்க்கணும் மிஸ்டர் தேவநந்தன். இல்லைன்னா பனிஷ்மெண்ட் கன்பார்ம்!’ என கிறுக்கி இருந்தாள். இவன் உதட்டோரம் புன்னகை வழிந்தது. சிரிப்பும் முறைப்புமாய் பார்த்தான்.

‘ஹம்ம்... நூத்துக்கு ஐம்பது மார்க் போடலாம். அவ்வளோதான் வொர்த். சிடுமூஞ்சி!’ என எழுது கோலால் அவன் கண்ணைக் குத்தி இருந்தாள்.

தன் கண்களைத் தொட்டுப் பார்த்துக் கொண்டவன், ‘இவளே சொத்தை எழுதி தருவேன்னு சொல்வாளாம். அப்புறம் இவளே சுமார் மூஞ்சின்னுவாளாம்!’ என பொறுமிக் கொண்டே பார்த்தான்.

ஜனனியின் அறையில் நீச்சல் வகுப்பில் நடந்ததையும் கடற்கரையில் விளையாடியதையும் ராகினி தாயிடம் ஒப்பிக்க, ஆதிரை சிரிப்புடன் அவளைப் பார்த்தாள்.

“ம்மா... பெரிம்மா நிறைய ஃபோட்டோ எடுத்தாங்க. காட்டுங்க பெரிம்மா!” தாயிடம் தொடங்கி ஆதிரையிடம் முடித்தாள் சின்னவள்‌.

“ஃபோன் ரூம்ல இருக்கு. எடுத்துட்டு வரேன் ஜானு!” என்ற ஆதிரை அலைபேசியை எடுக்க அறைக்குள் நுழைய, தேவா அவளது கைப்பையை அருகில் வைத்திருந்தான்.

“என் பையை எதுக்கு எடுத்தீங்க? என்ன வேலை அதுல உங்களுக்கு என்ன வேலை?” கடுப்பாய்க் கேட்டவள் அவன் அருகே செல்ல, தேவா கேலியாய் சிரித்தபடி அந்தப் புகைப்பட சட்டத்தைப் பார்த்தான். ஆதிரைக்கு ஒரு நொடி எதுவும் புரியவில்லை.

“என்னடீ இது?” என அவன் கேலியாக அதை ஆட்டிக் காண்பிக்க, இவளுக்கு நொடியில் சங்கடம் அவஸ்தை சரியாகச் சொன்னால் வெட்கம் வந்துவிட்டது. அவள் மட்டுமே பார்க்க, என எழுதிய அத்தனையும் அவன் படித்துவிட்டான் என சங்கோஜமும் தயக்கமும் அவளை வாயடைக்கச் செய்தன. ஆனாலும் என் தனிப்பட்ட பொருளை இவன் ஏன் தொட்டான் என கோபம் குபுகுபுவென பொங்கியது.

“யாரைக் கேட்டு மினிஆல்பத்தை எடுத்தீங்க நீங்க?” அவள் சினத்தோடு கேட்க, “யாரை டீ கேட்கணும்? ஹம்ம்... யாரைக் கேக்கணும்னு சொல்லு. பெர்மிஷன் வாங்கிடலாம்!” எனக் கேட்டவன் கட்டிலிலிருந்து இறங்கி அவளை நோக்கி வந்தான்.

தொடரும்...







 
Well-known member
Messages
461
Reaction score
333
Points
63
Indha janu ma sandai ah mattum gap illama kattura ah konjam Happy ah scene vandha pattu nu cut pannividra deva ku villi velai ellam correct ah paru
 
Active member
Messages
210
Reaction score
165
Points
43
Eagerly waiting for the next epi sis.
 
Top