• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,194
Reaction score
3,478
Points
113
நெஞ்சம் – 47 💖

வியாழக் கிழமையை ஆதிரை வேலை இருக்கிறதென நெட்டித் தள்ளிவிட, வெள்ளிக்கிழமை தேவா அவளைக் கட்டாயப்படுத்தி உழவர் துணைக்கு அழைத்து வந்துவிட்டான்.

அவனுக்குத் தெரிந்த நம்பகமான நபர் ஒருவரை அபியைப் பள்ளிக்கு அழைத்துச் சென்று மீண்டும் வீட்டில் அழைத்து வந்துவிட அவன் பணித்துவிட, இவளுக்கு அந்த வேலையும் இன்றிப் போனது. அவர் காலையில் சரியான நேரத்திற்கே வந்து அபியை தானியில் அழைத்துச் சென்றார். இவள் வேண்டுமென்றே தாமதமாய் கிளம்பினாள்.

தேவா கோபப்பட்டு அவளை வர வேண்டாம் என்றுரைக்க வேண்டுமென்ற நோக்கத்தில் ஆதிரை மிக மிக மெதுவாய் குளித்துவிட்டு முகப்பூச்சை முகத்தில் பூசினாள். பொறுமையாய் முடியிலிருந்த சிக்கை நீக்கி தலையைப் பின்னலிட்டாள். கண்ணாடியில் தேவாவை முறைத்துக் கொண்டே தான் அத்தனையும் செய்தாள். அவன் அசரவே இல்லை. இவள் விடாப்பிடியாக வர மறுத்துவிட, இன்னும் ஒருநாள் விடுமுறை அதிகமாய் எடுத்தாலும் இந்த மாதச் சம்பளத்தில் மொத்தமாய் கைவைத்து விடுவதாய் மிரட்டித்தான் கிளம்ப வைத்தான்.

ஒரு காலை ஆட்டியவாறு அலைபேசியில் ஒரு கண்ணை வைத்தவாறே மறுகண்ணை மனைவியிடம் குவித்திருந்தான். நீ எவ்வளவு நேரம் தாமதித்தாலும் வந்தே ஆக வேண்டும் என அவன் அசட்டையாய் அமர்ந்திருக்க, அவனை முறைத்துவிட்டு குனிந்து கண்ணாடியைப் பார்த்து நெற்றியில் குங்குமத்தை வைத்தவளை இவன் தலை முதல் கால் வரை ஒருமுறை பார்த்து மூச்சை இழுத்துவிட்டான்.

அடர் பச்சை நிறப்புடவை அவளை பாந்தமாய் தழுவியிருந்தது. ஒரு மடிப்பு கூட கசங்காது அழகாய் குத்தியிருந்தாள். எப்போதும் போல நேர்த்தியாய் இருந்தாலும் கழுத்தில் பளிச்சென்றிருந்த மஞ்சள் கயிறும் நெற்றியிலிருந்த குங்குமமும் அவளைப் புதிதாய் காண்பித்தன. ஒரு கையிலிருந்த வளையலைக் கழற்றிவிட்டு கைக்கடிகாரத்தைக் கட்டியவாறே கண்ணாடியில் அவனைப் பார்த்துப் என்னவென்பதாய் புருவத்தை உயர்த்தினாள்.

“ஹம்ம்... கொஞ்சம் புதுசா தெரியுறீயே? என்னவாம்?” எனக் கேட்டவன் விழிகள் அவளை மொத்தமாய் சுருட்டிப் பத்திரப்படுத்தின. பதிலளிக்காது உதட்டைக் கோணியவள், வாசனை திரவியத்தை எடுத்து உடைக்கு மேலே அடித்துவிட்டு கொஞ்சம் குறையாகத் தோன்றிய உதட்டுச்சாயத்தைக் கையில் எடுக்க, தேவா அவளுக்குப் பின்னே வந்து நின்றான்.

“என்னவாம்?” என்றவள் உதட்டைக் குவித்து சாயத்தை இட, அதைப் பார்த்தவன், “கிஸ் பண்ண போறேன். சோ, பீ ப்ரிபேர்!” என்றான் வெகு தீவிரமாக. ஆதிரைக்கு பக்கென்று சிரிப்பு வந்தது.

“இப்போ நோ கிஸ், நோ ஹக்!” என்றவள் அவன்புறம் திரும்ப, தேவா அவளை அணைக்க வந்தான். படக்கென்று அவன் மார்பில் கையை வைத்து தள்ளி பின்னே நகர்ந்து கைப்பையை எடுத்து மாட்டியவள், “ஒன் ஹவர் ஸ்பெண்ட் பண்ணி ரெடியாகி இருக்கேன். சேலை கசங்கிடும், லிப்பாம் மறுபடியும் போடணும். சோ நோ கிஸ் அண்ட் ஹக். எதுவா இருந்தாலும் ஈவ்னிங்தான். அண்ட் ஒன் மோர் திங்க் இப்படி விறைப்பா நின்னுட்டு கிஸ் கேட்டா, நோ சான்ஸ். என்னை என்ன லேப்ல வேலையா வாங்குறீங்க? சீரியஸான ஃபேஸ் ரியாக்ஷன்ல கிஸ் பண்ண உங்களாலத்தான் முடியும். கிஸ் பண்ண கொஞ்சமாச்சும் ரொமான்டிக் ஸ்மைல் அண்ட் லுக் எல்லாம் வேணும் தேவா!” எனக் கேலி செய்தவளை முறைத்தான். அதையெல்லாம் கண்டு கொள்ளாது இவள் முன்னே செல்ல, அவன் உர்ரென மகிழுந்தை இயக்கினான்.

ஆதிரை தனது இருசக்கர வாகனத்தில்தான் வந்தாள். காலையில் தேவாவோடு சென்றால் மாலை அவன் இவளுக்காக மீண்டும் வீடு வந்து பண்ணைக்கு வர வேண்டும். அவனுக்கு வேலையும் கெடும், அலைச்சல் வேறு. அதனாலே இவளாக தனியே சென்று வருகிறேன் என்று கூறியதும் தேவாவும் இயல்பாகவே ஒப்புக் கொண்டான்.

அவனுமே மாலை நேரத்தில் அவளை வீட்டில் விட்டுவிட்டு மீண்டும் வந்து சென்றால் வேலையில் கவனம் சிதறுமென யோசித்தே இருந்தான். அவளைத் தனியே வரச் சென்றுவரக் கூறினால் ஆதிரை எப்படி எடுத்துக் கொள்வாள் என தேவா யோசித்தான். முன்பு அவள் வெறும் தொழிலாளி. ஆனால் இப்போது மனைவியாகிவிட்டாள். அதற்குரிய இடத்தில் அவளும் அது இதுவென இவனிடம் சில சலுகைகளை எதிர்பார்க்க கூடுமென மனம் உரைத்தது.

எதாவது ஒரு இடத்தில் வளைந்து கொடுக்கலாம். ஆனால் எல்லா இடத்திலும் வளைந்து போக முடியாது என இவன் யோசிக்க, ஆதிரை அதற்கு வேலையே வைக்கவில்லை. என் வேலையை நானே பார்த்துக் கொள்கிறேன் என்பது போல இருக்க, இவனுக்கு அதில் சின்ன நிம்மதி பிறந்தது. அவன் கணித்ததில் எவ்விதத்திலும் ஆதிரையிடம் மாற்றமில்லை. நான் இப்படித்தான் என அலட்டிக்காது அவனது குடும்பத்தில் பொருந்திப் போனாள். ஒரே ஒரு விதிவிலக்கு வாணியிடம் அவள் காட்டும் பொறுமை. அதுகூட தனக்காகத்தான் எனப் புரிந்தே இருந்தான்.

அவன் சென்று சில பல நிமிடங்களில் ஆதிரையும் உள்ளே நுழைந்தாள். ஒருவாரம் கழித்து வருவதால் வேலை நெட்டி முறிக்கப் போகிறது என யோசனையும் அவள் வர, “ஹே... எல்லாம் எழுந்திரிங்க! சீக்கிரம். என்ன இவ்வளோ சோம்பேறியா இருக்கீங்க. நம்ப புது முதலாளியம்மா வராங்க! அவங்களுக்கு வணக்கம் வைங்க எல்லாரும்” என்ற தர்ஷினியின் குரலில் சிந்தனை கலைந்த ஆதிரை அவளை மென்மையாய் முறைத்தாள்.

“வாங்க மேடம்... வாங்க வாங்க!” அவள் கேலியாய் கூற, ஆதிரை அவள் முதுகில் வலிக்காதவாறு கைப்பையால் அடித்தவாறே அவளுக்கு அருகே அமர்ந்தாள்.

“ஹம்ம்... முதலாளியம்மா ஜொலிக்குறீங்களே! புது சேரி, வளையல், கழுத்துல தாலின்னு அழகா இருக்கீங்களே!” என அவள் இழுக்க, ஆதிரைக்கு சிரிப்பும் சின்னதாய் ஒரு வெட்கமும் வந்து ஒட்டிக் கொண்டது.

“பார்றா... நம்ப முதலாளியம்மா வெட்கப்படுறாங்க!” அவள் மேலும் கேலி செய்ய, தேவா ஆய்வகத்தைக் கடந்து இயந்திரப் பகுதிக்குள் நுழைய, நொடியில் அனைவரும் அவரவர் வேலையைக் கவனிக்கத் தொடங்கினர்.

அவன் தலை மறைந்ததும் மீண்டும் தர்ஷினி தொடங்கினாள்.‌ “ஏன்கா, ஒரு ஒரு மாசம் லீவ் எடுத்து என்ஜாய் பண்ணீட்டு வர்றது. அப்படியே உங்க ஆளைக் கூட்டீட்டு ஊட்டி கேரளான்னு போய்ட்டு வந்தா, எங்களுக்கும் கொஞ்சம் குளுகுளுன்னு இருக்கும்ல!” என்றாள் பாலை சோதனை செய்தபடியே.

“ஏன் ஆதிரை, லீவ் எடுத்தது எடுத்த. மண்டே வந்திருக்கலாமே வேலைக்கு. ஏன் இன்னைக்கே வந்த‌. மேரேஜ் டயர்ட் இல்லையா உனக்கு?” கோமதி கேட்க, இவள் சின்னதாய் சிரித்தாள். ஒருநாள் அதிகமாய் விடுப்பு எடுத்தால் மொத்த சம்பளத்தையும் தர மாட்டேன் என்று தேவா கூறியதைக் உரைத்தால் தர்ஷினி இன்னுமே கேலி செய்யக் கூடுமென வாயை இறுகப் பொத்தினாள்.

“என்னக்கா... என்ன? ஏதோ யோசிக்கிற மாதிரி இருக்கு? உங்க ஊட்டுக்காரர் என்ன சொன்னாரு?” என்றாள் ஆர்வமாய். ஆதிரை உதட்டில் கையை வைத்து சொல்ல மாட்டேன் என கையை அசைக்க,

“ப்ம்ச்... என்னக்கா? நம்ப என்ன அப்படியா பழகி இருக்கோம்? நம்ப எல்லாரும் ஒன்னா மண்ணா பழகிருக்கோம். சும்மா சொல்லுங்க!” என்று நச்சரித்து அவன் பேசியதைக் கேட்டறிந்ததும் கடகடவென சிரித்தாள் தர்ஷினி.

பின்னர் போலியாய் வருத்தம் கொண்டவள், “இதெல்லாம் நீங்களா இழுத்துக்கிட்டதுகா. நல்லது சொன்னா யாரு கேட்குறா? ஹம்ம்... நான் அப்பவே சொன்னேன். நைன் டூ பைவ் அவர் முகத்தைப் பார்க்கவே தலை சுத்துது. யோசிங்கன்னு சொன்னேன். சரி, நடந்தது நடந்து போச்சு. இனிமே என்னத்த பேச!” என கேலி செய்தவள், “இப்போ அவருக்கு நீங்கதான்கா பாஸ். பேசாம இந்த சீரியல்ல வர்ற மாதிரி சொல்ற பேச்சைக் கேட்கலைன்னா டிவோர்ஸ் பண்ணிடுவேன்னு நாலு வெத்துப் பேப்பரைக் காட்டி மிரட்டி விடுங்க கா. பயந்துடுவார்!” என்றாள் வில்லி கதாபாத்திர தொனியில்.

“கல்யாணமான ஒரே மாசத்துல எனக்கு டிவோர்ஸ் வாங்கி குடுத்துடுவ போல நீ!” ஆதிரை அவளை முறைக்க, சுபாஷ் வந்தமர்ந்தான். அவனும் தர்ஷினியுடன் சேர்ந்து ஆதிரையை ஒருவழி செய்திருந்தான்.

மதிய உணவு இடைவேளையின் போது இன்னுமே அவர்களுக்குப் பேச நேரம் கிடைத்தது. “ப்ம்ச்... முன்னவாது இந்த நாலு சுவத்துக்குள்ள அந்த மனுஷனைத் திட்டித் தீர்க்கலாம். இப்போ முதலாளியம்மா வேற இருக்காங்களே. எப்படி அவரைத் திட்டுறது. நம்மளோட ப்ரீடம் போய்டுச்சா?” பாவம் போல கேட்டவள் உணவை எடுத்து வாயில் வைக்க, ஆதிரை அவளை மெலிதாய் முறைத்தாள்.

“பார்த்தீங்களா? இப்பவே ஆதிரை முறைக்கிறா. சாரைப் பத்தி எதுவும் பேசுனா நமக்கு வேலை போய்டும். நாங்க பேசுறது எல்லாத்தையும் தேவா சார் கிட்டே போட்டுக் கொடுத்துடுவல்ல ஆதி?” சுபாஷ் கேட்கவும், ஆதிரைக்கு அய்யோடா என்றிருந்தது. காலையிலிருந்து ஆள் மாற்றி ஆள் ஒருவர் ஏதோ ஒருவகையில் அவளை கலாய்த்தனர். சரி ஓரிரு நாளில் இந்தப் பேச்சை விட்டுவிடுவார்கள். கோபப்படாமல் சிரிப்புடனே இருக்க வேண்டும் என முயன்று சிரித்து வைத்தாள்.

இவள் அதட்டலிட்டாள் அவர்கள் அந்தப் பேச்சை விட்டுவிடுவார்கள்தான். ஆனாலும் தர்ஷினி, சுபாஷின் முகம் வாடிவிடக் கூடும். அதுவும் இல்லாது இப்போது தேவாவின் மனைவி என்ற ஸ்தானத்தில் எதை செய்தாலும் சற்று யோசித்தே செய்ய வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வு தலை தூக்கியது.

மதிய பொழுதும் முடிந்துவிட, ஆதிரை லாக் புத்தகத்தில் அன்றைய வரவு செலவை எழுதிக் கொண்டிருந்தாள். பாலை சோதனை செய்து முடித்துவிட்டு அவளருகே அமர்ந்த தர்ஷினி, “ஏன்கா... நம்ப பாஸ், அதான் உங்க வீட்டுக்காரரு, தேவா சார் வீட்லயாவது சிரிப்பாரா கா? அவர் சிரிச்சு நீங்க பார்த்திருக்கீங்களா கா?” என வெகு தீவிரக் குரலில் கேட்டாள். ஆதிரை உதட்டோரம் புன்னகை வந்தமர்ந்தது. ஆமாமென தலையை அசைத்தாள்.

“சீரியஸாவா கா? அவருக்கு சிரிக்க தெரியுமா? நீங்க சொல்லித்தான் எனக்கு அது தெரியுது பாருங்களேன். இத்தனை வருஷத்துல ஒருநாளாவது என்னைப் பார்த்து சிரிச்சிருக்காரா அந்த மனுஷன். சரி விடுங்க, உங்களைப் பார்த்தாவது சிரிக்கிறாரே!” என்றாள் நொடிப்பாக. ஆதிரை எதுவும் கூறாது லாக் புத்தகத்தை தேவாவின் அறையில் வைத்துவிட்டு வந்தாள்.

திருமணத்திற்கு முன்பு எப்படி அவன் அறைக்குச் சென்று வேலையை மட்டும் பார்த்துவிட்டு வருவாளோ, அப்படித்தான் இப்போதும் புத்தகத்தை ஒப்படைத்தாள். எவ்வித வேறுபாடும் இருவரிடமும் இல்லை. ஆதிரை தோளைக் குலுக்கி சிரித்துக் கொண்டாள். அவன் இப்படித்தான் என அவளறிந்ததே.


“அப்புறம் முதலாளியம்மா, இந்த மூவிஸ்ல காட்டுற மாதிரி அவர் ரூம்ல ஒரே ரொமான்ஸா?” எனக் கேட்ட தர்ஷினி ஆதிரை முறைக்கவும், படக்கென தன்னிடத்திற்கு ஓடிவிட்டாள்.

“பதில் வரலையே முதலாளியம்மா?” அவள் மெல்லிய குரலில் ஆதிரையைப் பார்த்து சிரிக்க, “இதே கொஸ்டீனை உங்க சார்கிட்டே கேட்டு பதிலைத் தெரிஞ்சுக்கோ தர்ஸூ!” என்றாள் கேலியாக.

“ஹக்கும்...இதுக்கு நீங்க வாயை மூடிட்டு இரு தர்ஷின்னு மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லி இருக்கலாம் கா!” அவள் முகத்தைக் கோண, இவள் கண்டு கொள்ளவில்லை.

வேலை முடிந்து தேவாவின் அறையில் கையெழுத்திட்டு அனைவரும் அகல, “போய்ட்டு வரேன் தேவா!” என்று இவள் கூறவும், அவன் மடிக்கணினியில் வேலையாய் இருந்தவன் முகத்தை நிமிர்த்தாது வெறுமனே தலையை அசைத்தான்.

ஆதிரை அவனை முறைத்துக் கையைக் கட்டி நிற்க, அவள் அரவம் அகலாததில் தேவா நெற்றியை சுருக்கிவிட்டு நிமிர, இவள் அமைதியாய் அவனைப் பார்த்தாள். அவள் பார்வையின் பொருளுணர்ந்தவன் நெற்றியை ஒருவிரலால் கீறிவிட்டு, “ஹம்ம்... பத்திரமா போ!” என்றான் மெல்லிய முறுவலுடன்.

“ஹக்கும்... வேலை முக்கியம்தான். அதுக்காக கல்யாணமானதை கூடவா மறப்பீங்க?” என அவனுக்கு குட்டு வைத்துவிட்டே ஆதிரை அகன்றாள். தேவாவும் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தான்.

மெதுவாய் நாட்கள் நகரத் தொடங்கின. ஆதிரையும் தேவா வீட்டில் தன்னை இணைத்துக் கொண்டாள். வாணியைத் தவிர அவளுக்குப் பெரிதாய் பிரச்சினைகள் எதுவும் இருக்கவில்லை.

ஜனனியுடன் அமர்ந்து பொழுதைக் கழிப்பது, குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பது, விதவிதமாக எதையாவது சமைப்பது என வேலை நேரம் போக மற்ற நேரம் நன்றாய் கழிந்தது. அவ்வப்போது தேவாவை வம்பிழுத்து சிரிப்பாள். அவன் முறைத்து விட்டு செல்வான்.

அபிக்கு இன்னும் தேவா அங்கிள் என்ற விளிப்பில்தான் இருந்தான். ஆனால் ராகினி ஹரியை அப்பா என்றழைக்க இவன் சித்தப்பா எனப் பழகினான். ஜனனியிடம் சித்தி என ஓட்டிக் கொண்டே சுற்றினான். ஆதிரை இல்லாத நேரத்தில் ஜானுதான் அவனைப் பார்த்துக் கொண்டாள். பிரதன்யா சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடுவாள், படிக்க வைப்பாள். அருகில் எங்கேனும் அழைத்துச் செல்வாள்.
 
Administrator
Staff member
Messages
1,194
Reaction score
3,478
Points
113
தனியே இருந்து பழகிய ஆதிரைக்கு இந்தக் குடும்பம் நிறைய பிடித்தது. உண்மையில் குடும்ப வாழ்க்கை இப்படித்தான் இருக்கும் போல என நிறைய பார்த்து கற்றுக் கொண்டாள், ரசிக்கவும் செய்தாள்.

வாணி எதாவது வம்பிழுத்தால் ஒன்று அந்த நேரத்தில் எதாவது தோன்றினால் படக்கென்று பேசிவிடுவாள்‌. இல்லையென்றால் அவரை வெறுப்பேற்றும் விதமாக எதாவது செய்து வைப்பாள். அவரும் சும்மா இல்லாது நேரம் கிடைக்கும் போதெல்லாம் இவளை வாயில் போட்டு அரைத்தார். கோபால் மனைவியைக் கண்டிக்க, தேவா எதுவும் பேசவில்லை.

ஆனாலும் பார்வையாலே தனிக்குடித்தனம் சென்று விடுவேன் என்பது போல பார்க்க, வாணிக்கு பக்கென்றுதான் இருந்தது. ஆனாலும் மகன் அப்படியெல்லாம் பொறுப்பை தட்டிக் கழித்துவிட்டு தனியாய் சென்றுவிட மாட்டான் என மலையளவு அவன் மீது நம்பிக்கை வைத்திருந்தார். அதனாலே அவன் பார்வையை அசட்டை செய்தார்.

இப்படியே சிறு சிறு சலசலப்புகளுடன் வழக்கமான குடும்பமாய் ஆதிரைக்கு வாழ்க்கை நகர்ந்தது. வேலைக்குச் சென்றால் தர்ஷினி சுபாஷ் என அவளை ஒருவழியாக்கினர். வீட்டில் குழந்தைகள், எப்போதும் தன்னைச் சுற்றி ஆட்கள் இருந்து கொண்டே இருந்ததில் இவளுக்கு மனதில் இதம் பரவிற்று.

அன்றைக்கு தேவா வெகு தாமதமாகத்தான் இரவு வீட்டிற்கு வந்தான். ஹரியும் அவனுடன்தான் வந்தான். உழவர் துணையின் இரண்டாவது கிளையில் இயந்திரம் பழுது காரணமாக வேலை நிலுவையில் இருக்க, இவர்கள் அங்கே இருந்து அனைத்தையும் பார்த்து முடித்து வீடு வர நேரமாகியிருந்தது. அதனாலே காலை எட்டு மணியைக் கடந்தும் தேவா எழவில்லை.

“ம்மா... ஹேப்பி பெர்த்டேம்மா!” என்ற அபி எழுந்ததும் தாயின் கன்னத்தில் முத்தமிட்டு அவளிடம் சிறிய பரிசொன்றைக் கொடுக்க, இவளது முகத்தில் புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது.

ஆதிரைக்குத் தன்னுடைய பிறந்த நாளே மறந்து போயிருந்தது. உண்மையில் கடந்த சில வருடங்களாக அபிதான் நினைவில் வைத்து அவளுக்கு வாழ்த்து கூறுகிறான்

பிறந்த நாளுக்கென்று இவளாக பெரிதாய் எவ்வித மெனக்கடலும் செய்தது இல்லை. அப்படியும் நினைவில் இருந்தால் கூட அதைப் பற்றி பெரிதும் அவள் அலட்டிக் கொள்ளவில்லை. எல்லா நாளும் போல அதுவும் ஒன்றுதான் எனக் கடந்துவிடுவாள்.

“தேங்க் யூ சோ மச் அபிம்மா!” என்றவள் அவனைத் தூக்கி முத்தமிட்டு அந்தப் பரிசைப் பிரித்தாள். குட்டியாய் கழுத்தணி ஒன்று இருந்தது.

“செயின் அழகா இருக்கே டா. பட் இதை வாங்க உன்கிட்ட காசு ஏது?” என ஆதிரை அதட்டலாய் கேட்க, “ப்ம்ச்... சின்ன பையன் ஆசையா வாங்கித் தந்தா விசாரணை கமிஷன் வச்சு அவனை மிரட்டாதீங்க கா!” என்றபடி ஜனனி உள்ளே வந்தாள்.

“ஆப்பி பெர்த் டே பெரிம்மா!” என ராகினி ஆதிரையின் காலைக் கட்டிக் கொள்ள, இவளுக்கு முகம் மலர்ந்தது.

“தேங்க் யூ சோ மச் தங்ககுட்டி!” என அவளைக் கைகளில் அள்ளினாள்.

“ஹேப்பி பெர்த்டே ஆதிக்கா!” என்ற ஜனனி ஒரு புடவையை அவளிடம் நீட்டினாள்.

சிரிப்புடன் அதைப் பெற்றுக் கொண்ட ஆதிரை, “எதுக்கு ஜானு இதெல்லாம்... ஐ ஃபீல் எம்பாரசிங்!” என்றாள் சங்கடத்துடன்.

“ப்ம்ச்... இது உங்களுக்கு ஸ்பெஷல் பெர்த் டே இல்ல கா. மாமாவோட என்ஜாய் பண்ணுங்க. அப்புறம் உங்காளுக்குப் பிடிச்ச மெரூன் கலர் சேரி இன்னைக்கு!” என்றாள் கண்ணடித்து. ஆதிரை சிரிப்பும் முறைப்புமாய் பார்த்தாள்.

“சரி, சரி... சீக்கிரம் குளிச்சிட்டு சேரியைக் கட்டீட்டு வாங்க. ஜாக்கெட் மேரேஜ்க்கு கொடுத்த சைஸ்லயே ஸ்டிச் பண்ணி வாங்கி இருக்கேன். பிட்டிங் கரெக்டா இருக்கான்னு பார்த்துக்கோங்க!” என்றுவிட்டு, “இன்னைக்கு பெர்த் டே பேபிக்காக கேசரி செஞ்சு இருக்கேன்!” என்றாள். ஆதிரை அவளை சிரிப்புடன் பார்த்தாள்.

“தேங்க் யூ ஜானு!” இவள் அவளது தோளில் தட்டினாள்.

“ஹம்ம்... எங்க மாமா என்ன சர்ப்ரைஸ் வச்சு இருக்காரோ தெரியலை. என்னென்னு நாளைக்கு சொல்லுங்க...” அவள் அகல, ஆதிரை அபியை பள்ளிக்கு கிளப்பிவிட்டு தானும் குளித்து முடித்து புதுப்புடவையை அணிந்தாள்.

மேல்சட்டை ஓரளவிற்கு சரியாய் வந்தது. வலது புற தோள்பட்டையில் மட்டும் லேசாய் கழன்றுவிடுவது போலிருக்க, ஒரு ஊக்கை எடுத்து இறுக்கிப் பிடித்துக் குத்தினாள். இப்போது சேலையும் சட்டையும் வெகு நேர்த்தியாய் இருந்தது.

குழந்தைகளை உண்ண வைத்தவள், தேவாவுடன் சேர்ந்து சாப்பிடலாம் என அவர்களை பள்ளிக்கு அனுப்பிவிட்டு கணவனை உசுப்பினாள்.

“தேவா டைமாச்சு, எழுந்திரிங்க!” என மனைவியின் குரலில்தான் கண் விழித்தான். காலை எழுந்ததும் இன்னும் முடிக்கப்படாமல் இருந்த வேலைதான் முதலில் கண்ணுக்கு முன்னே வந்து நின்றது. விரைவில் சென்று அதையெல்லாம் சரிசெய்தால்தான் நாளைக்கு காலையில தடையில்லாமல் பால் விநியோகம் செய்ய முடியுமென மூளைக் கூற, எழுந்ததும் குளிக்கச் சென்றுவிட்டான்.

ஆதிரை அவன் தன் முகத்தைப் பார்ப்பான் என எதிர்பார்த்திருந்தாள். அவன் அவளை நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை. மனதோரம் மெல்லிய சுணக்கம் வந்தமர்ந்தது.

அவன் குளித்து வருவதற்குள் இவள் வேலைக்குச் செல்ல தயாராகினாள். தேவாவுடன் முருகன் கோவிலுக்குச் சென்று வரலாம் என்ற எண்ணம் உதித்தது. திருமணம் முடிந்து பெரிதாய் அவனுடன் வெளியே செல்லவோ, நேரம் செலவழிக்கவோ வாய்ப்பு கிடைக்கவில்லை.

குளித்து வந்தவன், “ஆதிரை, நீ ஏன் இன்னும் கிளம்பாம இருக்க?” என்ற அதட்டலுடன் சட்டை பொத்தானைப் போட்டான். இவள் அவனை அமைதியாய் பார்த்தாள்.

“கரெக்ட் டைம்க்கு நீ யூனிட்ல இருக்கணும். முன்ன பின்ன போகலாம்னு எப்பவும் நினைக்காத. எனக்கு வேலைல அலட்சியமா இருந்தா பிடிக்காது!” என்றான் கண்டிப்பான குரலில்.

“ஃபார் அ கைண்ட் இன்பர்மேஷன் மிஸ்டர் தேவநந்தன், இன்னும் எனக்கு வொர்க்கிங் டைம் ஸ்டார்டாக ஹஃப் அவர் மேலயே இருக்கு. நான் கரெக்ட் டைம்க்கு உள்ள இருப்பேன். அதைப் பத்தி நீங்க கவலைப்படத் தேவையில்லை, வந்து சாப்பிடுங்க, கிளம்பலாம்!” ஆதிரை வெடுக்கென்று பேசிவிட்டு செல்லவும், தேவா அவளை நெற்றி சுருக்கிப் பார்த்துவிட்டு உண்ணச் சென்றான். அவனுக்குப் பரிமாறிவிட்டு ஆதிரை உண்டாள்.

“என்ன இன்னைக்கு கேசரி எல்லாம் பண்ணி இருக்க?” எனக் கேட்டவாறே அவன் உண்ண, ‘செம்ம சர்ப்ரைஸ் உங்க மாமா கொடுத்திருக்காரு ஜானு. புல்லரிச்சுப் போச்சு!’ மனதிற்குள் கேலியாய் சிரித்தவள், “சும்மதான் எனக்கு சாப்பிடணும் போல இருந்துச்சுன்னு ஜானு செஞ்சு கொடுத்தாங்க!” என்றுவிட்டு உண்டு எழுந்தாள்.

அவன் மகிழுந்து சாவியை எடுத்துக் கொண்டு விறுவிறுவென முன்னே ஓட, ஆதிரைக் கைப்பையை தோளில் மாட்டியவாறே அவன் பின்னே சென்றாள்.

“தேவா, ஒரு டென் மினிட்ஸ் வர்றீங்களா, இன்னைக்கு சஷ்டி. சோ‌ முருகன் கோவிலுக்குப் போய்ட்டு அப்படியே போகலாம். நானும் உங்க கூடவே வரேன்!” என்றாள் இவள்.

“நோ... நோ சாரி ஆதிரை. இன்னொரு நாள் பார்த்துக்கலாம். இன்னைக்கு நிறைய வொர்க் இருக்கு‌. நான் அந்த பிராஞ்சுக்குப் போறேன். அங்க போய் எல்லாம் சரி பண்ணாதான் நாளைக்கு பால் சப்ளை பண்ண கரெக்டா இருக்கும்.”

“நம்ப பிராஞ்சை நீதான் பார்த்துக்கணும். வேலையெல்லாம் கரெக்டா நடக்கணும். எதாவது மிஸ்டேக்னா உன்னைத்தான் கேட்பேன். கோவில் அது இதுன்னு சுத்தீட்டு லேட்டா போனா எனக்கு செம்ம கோபம் வரும். பீ ஆன் டைம் டூ வொர்க், நான் வரேன்!” என்றவன் படக்கென்று பறந்துவிட, ஆதிரைக்கு மளுக்கென்று கண்கள் கலங்கி நீர் தேங்கியது.

காலையில் சிறுவர்களின் வாழ்த்தோடு தொடங்கியதாலோ என்னவோ முகத்தில் என்றும் இல்லாத ஒரு மலர்ச்சி ஒட்டிக் கொண்டது. எப்போதும் யார் வாழ்த்தினால் என்ன? பிறந்த நாள் என்ன பெரிய பொக்கிஷ தினமா என தோளைக் குலுக்கிவிட்டு அதை அசட்டையாகக் கடப்பவளின் மனநிலையை காலையில் கிடைத்த வாழ்த்து முற்றிலும் மாற்றிப் போட்டிருந்தது.

சரி தேவாவும் வாழ்த்துவான் என சின்னதாய் எதிர்பார்ப்பு முளைக்க, அவனுக்கு இவள் பிறந்த நாளே தெரியவில்லை என்ற உரைத்ததும், ‘சரி, எல்லாரும் எல்லரோட பெர்த்டேவும் ஞாபகம் வச்சுக்க என்ன அவசியம்?’ என அதை பெரிதுபடுத்தவில்லை. ஆனால் கோவிலுக்கு உடன் வர மாட்டேன் என்றது மட்டுமில்லாமல் அவளையும் செல்லக் கூடாது என்று கூறியதும் அவன் மீது காண்பிக்க முடியாத கோபம் கண்ணீரில் வெளிப்பட்டுவிட்டது.

மூச்சை இழுத்துவிட்டவள் ஒரு சொட்டுக் கண்ணீரைக் கூட கீழே விழவிடவில்லை. ‘போயா...’ என மனதிற்குள் அவனைத் திட்டச் சென்று, ‘இத்தனை வருஷம் யார் உனக்கு விஷ் பண்ணது, வெளிய கூட்டீட்டு போனது? யாருமே இல்லாம நீயாதானே பண்ண? இப்போ என்ன அவர்கிட்ட எதிர்பார்க்குற? அவரைப் பத்தி தெரிஞ்சும் எக்ஸ்பெக்ட் பண்ணாத!’ என தன்னை மீட்டவள், வேண்டுமென்றே கோவிலுக்குச் சென்று அரைமணி நேரம் சாமியை ஆற அமர தரிசித்துவிட்டு தாமதமாக வேலைக்குச் சென்றாள்.

தேவா கூறியது போலவே அவன் இல்லை என்றதும் அனைவரும் மந்தமாய் வேலை பார்த்தனர். இவள்தான் அவர்கள் அனைவரையும் விரட்டி வேலை வாங்கினாள். தேவா இல்லாத இடத்தை நிரப்பினாள். தலைக்கு மேலிருந்த வேலை பளுவினால் காலையில் நடந்த நிகழ்வு மொத்தமாய் பின்னோக்கி நகர்ந்திருந்தது.

இடையே அவன் அழைக்க, ஒரு வேளை வாழ்த்துவதற்குத்தான் அழைக்கிறானோ என அவள் எண்ணி பேச, வேலையெல்லாம் சரியாய் நடக்கிறதா எனக் கேட்டு அவன் அழைப்பைத் துண்டிக்க, இவளுக்கு சட்டென மனமும் உடலும் சோர்ந்து போனது. ஆனாலும் எதையும் முகத்தில் காண்பிக்கவில்லை.

உடன் பணிபுரியும் மற்றவர்களுக்கும் ஆதிரையின் பிறந்தநாள் தெரியாது. அவளாக தெரியப்படுத்தவும் விரும்பவில்லை. ஒரு சில வருடங்கள் யாராவது ஒரு ஆள் நினைவில் வைத்து வாழ்த்துவார்கள்.

இந்த வருடம் யாருக்குமே நினைவில்லாமல் போனதில் அவளுக்கு வெகு திருப்தி. இல்லையென்றால் தேவா இந்த பிறந்தநாளுக்கு என்ன வாங்கி கொடுத்தான்? வெளியே எங்கேயும் செல்லவில்லையா எனக் கேட்டு குடைந்து விடுவார்களே! அதற்கு மறதியே பரவாயில்லை என நினைத்து பெருமூச்சுவிட்டாள்.

மாலை வேலை முடிந்ததும் வீட்டிற்கு கிளம்பினாள். சேலையை அவிழ்க்கும் போது கொஞ்சம் கடுப்புடனே அதை தூக்கி கூடையில் போட்டாள். அதைக் கட்டும் போது தேவாவிற்குப் பிடித்த நிறம் எனப் பார்த்து பார்த்து உடுத்தி அலங்கரித்த எதுவும் அவன் கண்ணுக்கே படவில்லை என்ற வருத்தம் மனதோரம் அரித்தது.

‘கல்யாணத்துக்கு ஓகே சொல்றதுக்கு முன்னாடி வர வீட்டு வாசல்ல நிப்பானுங்க‌. வீக் எண்ட் அவுட்டிங், டேட்டிங், மூவி எல்லாம் கூட கூட்டீட்டு போவாங்க. பட் பொண்டாட்டியானதும் எங்க இருந்துதான் அலட்சியம் வருதோ?’ வேண்டாம் என நினைத்தாலும் முனுக்கென வலித்து தொலைத்தது.

‘சீ... இந்தக் கருமத்துக்குத்தான் நான் எந்த கமிட்மெண்டும் இல்லாம நிம்மதியா இருந்தேன். கல்யாணம் பண்ணா உன்னைத்தான் பண்ணுவேன். இல்லைன்னா சந்நியாசம்னு டயலாக் எல்லாம் விட்டுட்டு பொண்டாட்டி கூட பத்து நிமிஷம் கோவிலுக்கு வர நேரமில்லை. வருஷம் முழுக்க வேலை இருக்கத்தான் செய்யும். அதுக்காக அதையே கட்டீட்டு அழ முடியுமா?’ ஆற்றாமை அரித்தாலும் அதை ஒதுக்கிவிட்டு மகனோடு அமர்ந்தாள்.

“அம்மா டூ டே உங்க பெர்த் டே, சோ சீஸ் கேக் செய்யலாமா?” என அபி ஆர்வமாய்க் கேட்க, ராகினியும் தலையை அசைத்தாள்.

“ஓவன் இல்லையே அபி, சரி. நம்ப சாக்கோ சிப்ஸ் எல்லாம் போட்டு கப்ல ப்ரௌனி செய்யலாமா?” என சோர்ந்த மகனின் முகத்தை மலரச் செய்தவள், ராகினியை இடுப்பில் வைத்துக் கொண்டே காமைக் கலத்தில் அணிச்சலை செய்தாள். ஓரளவிற்கு நன்றாய் வந்திருக்க, ஜனனி பிரதன்யாவை அழைத்து கொடுத்தாள்.

“ஐயோ... சாரி அண்ணி, மார்னிங் விஷ் பண்ணலாம்னு நினைச்சேன். பட் ஏதோ எண்ணத்துல மறந்துட்டேன். கேசரி சாப்பிடும் போதும் கூட உங்க ரூமை எட்டிப் பார்த்தேன். நீங்க குளிச்சிட்டு இருந்தீங்க!” என அசட்டுத்தனத்துடன் அவள் கூற, ஆதிரை சிரிப்புடன் தலையை அசைத்தாள்.

“அப்புறம் அண்ணி, அண்ணா என்ன வாங்கி கொடுத்தான். எங்க அவுட்டிங் போறீங்க நீங்க?” அவள் கேட்டதும், ஜனனி கூட ஆர்வமானாள்.

“அது... இன்னைக்கு அவருக்கு வொர்க் அதிகம் பிரது. சோ வீகெண்ட் வெளிய கூட்டீட்டுப் போறேன்னு சொல்லி இருக்காரு. அப்போ ஏதோ சர்ப்ரைஸ் ப்ளான் பண்ணி இருக்காரு போல. என்னென்னு கேட்டா சொல்லவே இல்ல” என்றாள் கணவனை எங்கும் விட்டுக் கொடுக்க விருப்பமின்றி.

“பார்றா... எங்கண்ணனை... செம்ம லவ்வர் பாயா மாறிட்டான் போல. சே, தேவா அண்ணா எல்லாத்துலயும் பெர்பெக்ட். சிடு மூஞ்சியா இருந்தா கூட சர்ப்ரைஸ் பண்றாருல்ல அண்ணி?” அவள் கேலியாகக் கூற,

“பிரது... மாமா எப்பவும் எதையும் மறக்க மாட்டாரு. ஏன் இந்த வீட்ல இருக்க எல்லோரோட பிறந்த நாளுக்கும் அத்தைகிட்டே காசு குடுத்து ட்ரெஸூ, அப்புறம் என்னென்ன வேணும்னு வாங்கிக்க சொல்வாரு. என்ன அவரா எதையும் நேர்ல வாங்கித் தர மாட்டாரு. எக்ஸ்ப்ரசீவ் இல்ல, பட் நல்ல மனுஷன்!” என்றாள். ஆதிரை முகம் மாறாது அனைத்தையும் கேட்டாள்.

“ஏய் பிரதன்யா, வா, வந்து எனக்கும் உங்க அப்பாவுக்கும் டீ போட்டுக் குடுத்துட்டுப் போய் புக்கை எடுத்துப் படிடீ. எப்போ பார்த்தாலும் உக்கார்ந்து அரட்டை அடிச்சிட்டே இருக்காத!” வாணி மகளை சப்தமிட்டார்.

“ப்ம்ச்... நான் இங்க உக்கார்ந்து உங்க கூட சிரிச்சுப் பேசுறேன் இல்ல. அது எங்கம்மாவுக்குப் பொசு பொசுன்னு இருக்கும் போல அண்ணி. அதான் கூப்பிட்றாங்க!” முனங்கிக் கொண்டே அவள் செல்ல, ஜனனி சிரித்தாள். இருவரும் சிறிது நேரம் அமர்ந்து பேசினர்.

***

“ப்ரோ,‌ டைம் சிக்ஸாச்சு. நீ கிளம்பு, இங்க நான் பார்த்துக்கிறேன்!” ஹரி தேவாவைக் கிளப்ப முயன்றான்.

“இல்ல ஹரி, வொர்க் முடியட்டும். நான் பொறுமையாவே போறேன்!” தேவா வேலையை மேற்பார்வை பார்த்திருந்தான்.

“ப்ம்ச்... இன்னைக்கு ஒருநாள் தானே? நான் பார்த்துக்கிறேன்ண்ணா. நீ கிளம்பு, அண்ணியையும் அபியையும் எங்கேயாவது டின்னர் கூட்டீட்டு போ. அவங்க ரெண்டு பேரும் வெயிட் பண்ண போறாங்க!” ஹரி கூற, தேவா புரியாது அவனைப் பார்த்தான்.

ஹரிக்கு தமையனின் பார்வை புரிய, “தேவா, இன்னைக்கு அண்ணிக்கு பெர்த் டே‌. மேரேஜ் முடிஞ்சு வர்ற ஃபர்ஸ்ட் பெர்த் டே டா!” என்றான் இவனுக்குத் தெரியாதோ என்ற எண்ணத்துடன்.

“ஓ...” எனக் கேட்ட தேவாவிற்கு ஆதிரையின் சற்றே அதிகப்படியான ஒப்பனையும் அரக்கு நிறத்தில் அவள் உடுத்தியிருந்த புதிய புடவைக்குமான காரணம் விளங்கிற்று. இவன் அதைக் கவனித்தாலும் முழுதாய் நின்று ரசிக்க நேரமில்லை. அதனாலே எதுவும் பேசவில்லை. பிறந்தநாள் என்பதால்தான் கோவிலுக்கு அழைத்தாள் போல என எண்ணினான்.

“என்ன டா ஓன்னு கேட்குற? உனக்கு தெரியாதா? விஷ் கூடப் பண்ணலையா? அவங்க எக்ஸ்பெக்ட் பண்ணி ஏமாந்து இருக்க போறாங்க டா!” இவன் கூற, தேவா இல்லையென தலையை அசைத்தான்.

“ப்ம்ச்... அதெல்லாம் அவ எக்ஸ்பெக்ட் பண்ற கேரக்டர் இல்லை டா. அவ என்ன குழந்தையா பெர்த் டே செலிப்ரேட் பண்ண? மோர் ஓவர் ஆதிரை இதெல்லாம் பெருசா நினைக்கிற ஆளும் இல்ல. லீவ் இட்!” என்றான் இயல்பாய். இரவு வீட்டிற்கு சென்றதும் அவளுக்கு ஒரு வாழ்த்தைக் கூற வேண்டும் என்று மனதில் பதித்துக் கொண்டான்.

“தேவா... திஸ் இஸ் டூ மச். உனக்கெல்லாம் எதுக்கு டா கல்யாணம். நான்லாம் லவ் சொன்ன நாள்ல இருந்து இன்னைக்கு வரைக்கும் ஜானுவுக்கு ட்வெல்லோ க்ளாக் விஷ் பண்ணிடுவேன் டா. நாலு ட்ரெஸாவது குறைஞ்சது எடுத்துக் குடுக்கணும். கண்டிப்பா அந்த மந்த் ஃபுல்லா அவுட்டிங்னு என் பர்ஸை காலி பண்ணிடுவா. பட், நீ குடுத்து வச்சவன் டா. அண்ணி பரவாயில்லை போல!” என அவன் கூற,

தேவா காலையில் பார்த்த ஆதிரை முகத்தை கண் முன்னே கொண்டு வர முயன்றான். ஆனால் அவளது பாவனை எதுவும் வரவில்லை. இவன் அவளைக் கவனித்தால் தானே முகம் நினைவில் வர. ஆதிரை கண்டிப்பாக இதையெல்லாம் பெரிதுபடுத்த மாட்டாள் என அப்பேச்சை அப்படியே விட்டுவிட்டு வேலையைப் பார்க்கத் தொடங்கினான் தேவா.

தொடரும்...

 
New member
Messages
7
Reaction score
5
Points
3
பாவம் ஆதி இந்த ரோபவை கட்டிக்கிட்டு இன்னும் என்ன என்ன வேதனை படப்போறாளோ 🤔🤔🤔🌺🌺🌺🌺
 
Well-known member
Messages
445
Reaction score
323
Points
63
Deva ah ne athi eppovum ethaiyum expect panra category illa nu nenachikitu Iruku actually ava kita expectation illa ma illa ava expect panna ethuvum ithu varaikum avaluku kedaichithu illa athu na la than ava ipadi Iruku ah aana Innaiku ava unkita expect panna ne aval oda usual behaviour ah parthu ava feelings ah ignore pannita mattuna da ne aanalum ne ivolo thathi ah Iruku ah venam deva
 
Well-known member
Messages
510
Reaction score
383
Points
63
விஷ் பண்ணாததுக்கு நீயே சாக்கு சொல்லிக்கோ
 
New member
Messages
9
Reaction score
7
Points
3
Epi kondo regular ah podunga pa one week aahe wait panna veipengah
 
Top