• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,194
Reaction score
3,478
Points
113
நெஞ்சம் – 44 💖

புக்கத்துறை கூட்டு சாலையில் இருந்த இந்தியன் வங்கி கிளையில் இருந்தாள் ஆதிரை. அவளுக்கு முன்னே சிறிய கூட்டம் ஒன்று இருக்க, இவள் மெதுவாய் ஊர்ந்து செல்பவர்களை இலக்கில்லாமல் பார்த்திருந்தாள்.

பொன்வாணியின் பேச்சு தன்னைப் பாதிக்கவில்லை என்று இவள் அதை தட்டிவிட முயன்றாலும் அவரது அனாதை என்ற வார்த்தை குத்திக் கொண்டே இருந்தது. பள்ளிக் கல்லூரியில் படிக்கும் போது இந்த வார்த்தைகள் அவளை வதைத்திருக்கின்றன. ஒரு கட்டத்திற்கு மேலே கேட்டு கேட்டு சலித்துப் போய் மரத்துவிட்டதோ என்னவோ.

யார் என்ன சொன்னால் என்ற மனோபாவம் தன்னிச்சையாக குடி புகுந்திருந்தது. அதனாலே யாரையும் பொருட்படுத்த மாட்டாள். முதுகலை படிக்க லண்டன் சென்றப் பிறகு அந்த வார்த்தைக்கு அர்த்தமற்றுப் போனது. அவளுக்கென்று அபி வந்தப் பிறகு அனாதை என்ற வார்த்தையின் அடிநாதம் கூட இவளைத் தொடவில்லை. அவளுக்கு அபி, அபிக்கு அவள் என அழகாய் வாழ்ந்தனர்.
நீண்ட நாட்கள் சென்று பொன்வாணி இப்படி பேசவும் மனம் சோர்ந்து போனது.

வாணி கோபமாய் இருப்பார் என ஆதிரை எதிர்பார்த்தாள்தான். ஆனால் வார்த்தைகளை தேளாய் கொத்துவார் என கிஞ்சிற்றும் எண்ணியிருக்கவில்லை. எப்படி பொன்வாணி இவ்விதம் தன்னிடம் நடந்து கொள்கிறார்? என்றைக்கு இருந்தாலும் அவருடைய மருமகள் நான்தானே? ஒரே வீட்டில் வாழப் போகிறோம் என்றெண்ணம் கூட அவரிடம் இல்லையா? இவள்தான் பெரியவர், ஏதோ கோபத்தில் பேசுகிறார் என கணவனுக்காகப் பொறுத்துப் போகிறாள். அவரிடம் அப்படியொரு எண்ணமே இல்லை போல என யோசனையானது.

தன்னிடம் அவர் காட்டும் முகத்தை கூட பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை. அபியிடமும் அவர் இத்தகைய கடுமையைக் காண்பித்தால், நிச்சயம் பொறுத்துப் போக மாட்டாள். பதிலுக்கு பதில் பேசிவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பாள்.

“மேடம்...” ஊழியர் அழைக்கவும், இவள் நகைகளை கொடுத்து லாக்கரில் வைக்கப் பணித்துவிட்டு வேலை முடிந்ததும் பேருந்தில் ஏறி தன் வீட்டிற்கு சென்றாள்.

அவள் முன்கதவைத் திறந்து உள்ளே வந்ததும் சப்தம் கேட்டு ருக்கு வெளியே வந்தார். “வாடிம்மா புது பொண்ணே... ஏன் டி... முத முதல்ல இங்க வர, புருஷனோட வரக் கூடாதா என்ன?” என அதட்டியவாறே வரவேற்றார். இவள் புன்னகைத்தாள்.

“ஏன்டி... ஏன் முகம் ஒரு மாதிரி இருக்கு. வெயில்ல நடந்து வந்தீயா? வா, வந்து உக்காரு. மோர் எடுத்துட்டு வரேன்!” என அவர் அகல, இவள் சாய்ந்து அந்த நாற்காலியில் காலை நீட்டி அமர்ந்தாள். மோரை எடுத்து வந்து கொடுத்தார் பெரியவர்.

“அந்தப் பையன் வீட்ல எல்லாரும் எப்படிடி ஆதிரை? பார்க்க நல்ல மனுஷங்களாதான் தெரியுறாங்க?” அவர் விசாரிக்க, “எல்லாரும் ஓகேதான் மா. போக போக செட்டாகிடும்!” அவருக்குப் பதிலளித்தவாறே மோரை ஒரே மிடறில் குடித்து குவளையை மேஜை மீது வைத்தாள்.

“இப்போதானே போய்ருக்க, மனுஷங்களை பழக கொஞ்ச நாளாகும் டி. ஒரே வீட்ல இருந்தாலும் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரித்தான் இருப்பாங்க. நீ சூதானமா பொழக்கப் பாரு. புருஷன் துணை இருந்தா போதும், வாழ்க்கையை ஓட்டிடலாம்!” அவர் கூற, இவளுக்கு தேவாவை நினைத்ததும் உதட்டோரம்‌ புன்னகை நெளிந்தது. அவர் வேறு ஏதோ கேட்க, இவள் பதிலளித்தாள்.

“இந்த மாசம் வீட்டைக் காலி பண்ண வேணாம் டி... நாள் நல்லா இல்லை. அதான் மாசம் முழுக்க வாடகையை கொடுத்துட்டீயே. அடுத்த மாசம் முத வாரம் காலி பண்ணு!” என ருக்கு ஏதோ சாஸ்திர சம்பிரதாயங்களைப் பற்றிக் கூற, இவளும் அதை ஏற்றுக் கொண்டாள். வெளியே சென்ற மகேசன் வந்துவிட்டார்.

“என் பேரன் என்னம்மா பண்றான்? எப்போ பார்த்தாலும் கைக்குள்ளேயும் காலுக்குள்ளேயும் ஓடீட்டே இருப்பானா? இப்போ ரெண்டு நாளா வீடே ரொம்ப அமைதியா இருக்கு...” என்றவாறே அவர் அமர்ந்தார்.

“அவனுக்கு வீடு முழுக்க ஆளுங்க இருக்கவும் ஒரே குஷிப்பா. ஜாலியா இருக்கான், கூட விளையாட ஆள் வேற இருக்கு. கேட்க வேணுமா?” சிரிப்புடன் இவள் பதிலுரைத்தாள்.

“சரிதான் மா... நீ எடுத்த முடிவு ரொம்ப நல்ல முடிவு. அவனும் நாலு மனுஷ மக்களோட வாழட்டும். அப்போதானே எல்லாம் தெரியும்!” அவர் கூற, இவளும் புன்னகைத்தாள். மேலும் சில பல நிமிடங்கள் பேசிவிட்டு மேலே படியேறி வீட்டைத் திறந்து உள்ளே நுழைந்தாள்.

ஏதோ சொல்ல முடியாத ஆசுவாசம் நிம்மதி என்னவோ ஒன்று உடலில் ஓடியது. இங்கு வந்ததும் நலம் விசாரிக்கவோ விருந்து வைக்கவோ பெற்றவர்கள் இல்லைதான். ஆனாலும் என்னவோ ஐந்து வருடங்கள் உணர்வுகளோடு உறவாய் வாழ்ந்த வீடு, அவளை நலம் விசாரித்தது போல எண்ணம். எங்கு சுற்றினாலும் தன்னுடைய இருப்பிடம் வந்தது ஒரு வித நிம்மதி பிறக்குமே. அதுபோலத்தான் ஆதிரைக்கும் இருந்தது. தேவாவின் வீட்டு சமையல் கூடத்தில் நின்று வேலை பார்க்கும் போது கூட ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்ய வேண்டியதாய் இருந்தது.

ஆனால், இங்கே அப்படி இல்லையே. இது அவளுடைய இடம், அவள் மட்டுமே ஆளும் ராஜியம் என நினைத்தும் சிரிப்பு வந்தது. அறைக்குள்ளே நுழைந்து கையை விரித்து மெத்தையில் விழுந்தாள். இரண்டு நாட்களிலே இந்த வீட்டை மனம் தேடியிருந்தது. உணர்வுகளுடன் கலந்தவையாகிற்றே. அப்படியே சுருண்டு படுத்தேக் கிடந்தாள். பின்னர் மெதுவாய் எழுந்து பொறுமையாய் நிலைபேழையில் இருந்த உடைகளை எடுத்து பெரிய பையில் அடுக்கத் தொடங்கினாள். அபியின் உடையையும் எடுத்து வைத்தாள்.

அத்தியாவசியம் எனத் தோன்றியவற்றை மட்டும் எடுத்து வைத்தாள். சமையல் பொருட்கள் வேண்டாம், அவற்றை ருக்குவிடம் கொடுக்கலாம் என பிரித்தாள். அபி நீச்சல் போட்டில் வெற்றி பெற்ற பதக்கங்கள், அவனுடைய புத்தகங்கள், இவளுடைய அழகு சாதனப் பொருட்களை பத்திரப்படுத்தினாள்.

ருக்கு இவளுக்கு அழைத்து மதிய உணவு உண்ண அழைக்க, தனியாளுக்கு என்ன சமைக்க என்று சோம்பேறித் தனத்தோடு மறுக்கத் தோன்றாது அங்கே சென்று உண்டு வந்தாள். பின்னர் மீண்டும் பொருட்களை பையில் எடுத்து வைத்தாள்.

குளிர் சாதன பெட்டியில் வைத்திருந்த பாலை மட்டும் எடுத்து கீழே ஊற்றிவிட்டாள். ஆட்டி வைத்திருந்த மாவு பொங்கி மொத்த குளிர் சாதனப் பெட்டியையும் நிறைத்து வைத்திருக்க, அவற்றை சுத்தம் செய்து உள்ளே நீண்ட நாட்களாய் கிடந்த எலும்பிச்சை பழம், தயிர், பழைய சட்னி, என்றைக்கோ வைத்த அணிச்சல், பூஞ்சை படிந்திருந்த பாதாம் பால் என அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டு அதை மொத்தமாய் சுத்தம் செய்து கழுவி வைத்தாள்.

சமையலறையிலும் வேண்டாம் என்பனவற்றைக் குப்பைக் கூடையில் போட்டாள். மொத்த வீட்டையும் அலசி ஆராய்ந்து இரண்டு கூடை குப்பைகள், தேவையற்ற பொருட்களை எடுத்துப் போட்டாள். இந்த வீட்டில் இருக்கும் அத்தனைப் பொருட்களையும் நிச்சயமாய் தேவா வீட்டிற்கு எடுத்துச் செல்ல முடியாது. அவர்கள் வீடு நான்கைந்து அறைகள் கொண்டதுதான். ஆனால் இவற்றை வைக்க தனியறை எதுவும் இல்லை. அதனாலே பொருட்களைக் குறைத்தாள்.

குப்பையைக் கொட்டிவிட்டு வந்தாள். பையை இழுத்து மூடி வாயிலருகே எடுத்து வைத்தாள். உடல் ஓய்விற்கு கெஞ்ச, பால் மட்டும் வாங்கி வந்து தேநீர் கலக்கி குடித்தாள்‌. அபியை பள்ளியிலிருந்து கூட்டி வரலாம் என யோசிக்கும் போதே தேவா அழைத்துவிட்டான்.

“அபி ஸ்கூல் ஃபோர் ஓ க்ளாக் ஓவராகிடுமா ஆதிரை? நான் அவனை பிக்கப் பண்ணத்தான் போறேன்!” என்றான் அவன்.

“வேணாம்... வேணாம். நான் அவனைக் கூட்டீட்டு வரேன். நீங்க வொர்க் டைம்ல எதுக்கு தேவா?” எனக் கேட்டவள் இருசக்கர வாகனச் சாவியைக் கையில் எடுத்தாள்.

“உன் ஸ்கூட்டீதான் அந்த வீட்ல இருக்கே ஆதிரை, நீ ஆட்டோ புடிச்சு போகணும்ல. அதனாலே நானே கூட்டீட்டு வரேன்!” என்றான்.

“இல்ல தேவா, நான் இங்கதான் இருக்கேன். சோ, நீங்க அலையாதீங்க!” இவள் பதிலளித்தவாறே வீட்டைப் பூட்ட ஆயத்தமானாள்.

“அங்க எப்போ போன?” தேவா நெற்றியை சுருக்கினான்.

“காலைலயே வந்துட்டேன். திங்க்ஸ் கொஞ்சம் எடுக்க வேண்டி இருந்துச்சு. அப்படியே வீட்டைக் க்ளின் பண்ணி எல்லாத்தையும் ஒதுங்க வைக்கலாம்னு அதைதான் பண்ணிட்டு இருந்தேன்!” என்றாள்.

“ஓகே... நீ இரு, நான் அபி ஸ்கூல் கேட்கிட்டே வந்துட்டேன். அவனைப் பிக்கப் பண்ணிட்டு அங்கேயே வரேன்!” என அழைப்பைத் துண்டித்தான். இவ்வளவு நேரம் இயல்பாய் இருந்தவன் குரல் கடைசியில் மாறியதை ஆதிரை உணர்ந்தாள். என்னவென புரியவில்லை. பூட்டிய வீட்டை மீண்டும் திறந்து உள்ளே சென்றவள், தேவாவிற்கும் அபிக்கும் எதாவது மாலை நேர சிற்றுண்டி செய்யலாம் என யோசித்தாள்.

சூடாய் பஜ்ஜி சுடலாம் என யோசித்து வாழைக்காய் வாங்கி வந்து சுட ஆரம்பிக்க, “ம்மா...” என அபி குரல் கொடுத்துக் கொண்டே உள்ளே ஓடி வந்தான்.

“வாங்க... வாங்க, என் தங்கப்புள்ளை!” என அவள் அழைக்க, அவன் உடையை மாற்ற அறைக்குள் நுழைந்தான்.

“அபி, அம்மா உன் ட்ரெஸ் எல்லாம் பேக் பண்ணிட்டேன். அங்க போய் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிக்கலாம். நீ பேஸ் வாஷ் பண்ணிட்டு வா. சூடா பஜ்ஜியும் டீயும் குடிக்கலாம்!” என்றாள். தேவா உள்ளே நுழைந்தான்.

“வாங்க!” என இவள் அழைப்பை அவன் கண்டு கொள்ளாது வீட்டை அளந்தான்.ஓரளவிற்கு எல்லா வேலையும் முடித்து வைத்திருந்தாள்.

“ப்ரெஷாகிட்டு வாங்க தேவா!” என்றாள். அவன் அவளை முறைத்தான்.

“ஏன் முகத்தை உர்ருன்னு வச்சு இருக்கீங்க?” என யோசனையுடன் கேட்டாள்.

“இவ்வளோ வேலையும் தனியா பண்ணீயா? என்னைக் கூப்பிட்டிருக்கலாம் இல்ல. வீட்டைக் காலி பண்றது அவ்வளோ ஈஸி இல்ல?” என்றான் மெல்லிய அதட்டலுடன். அவனை புரியாது பார்த்தாள் ஆதிரை.

“என்ன இவ்வளோ வேலை, இதெல்லாம் எப்பவுமே நான் தனியாதான் பண்ணுவேன் தேவா. அதுவும் இல்லாம நீங்க மேரேஜ்னு ரெண்டு நாள் லீவ் எடுத்துருக்கீங்க. ஏற்கனவே வொர்க் பெண்டிங்ல இருக்கும். இங்க வந்தா யூனிட்ல யார் வேலை பார்ப்பா?” எனக் கேட்டாள்.

“சுபாஷ் இருக்கானே, அவன்கிட்டே சொன்னா பார்த்துப்பான்!” என்றவன், “இவ்வளோ நாள் நீ தனியாள். சோ, எல்லாத்தையும் தனியா பண்ண. இப்போதான் நான் இருக்கேன். வொர்க்கை ஷேர் பண்ணிக்கலாம். மேரேஜ் இஸ் அபவுட் ஷேரிங்க நாட் ஒன்லி ஹேப்பினெஸ், பட் ஆல்சோ ரெஸ்பான்சிபிலிட்டி!” என்றான் கண்டிப்புடன். ஆதிரை முகத்தில் மெல்லிய சிரிப்பு வந்தது.

“ப்ம்ச்... சரிதான். நான் யார்கிட்டேயும் ஹெல்ப் கேட்டோ, இல்ல இதைப் பண்ணப் போறேன்னு அனுமதி கேட்டோ செஞ்சது இல்ல. சோ, நீங்க சொல்லித்தான் எனக்கு ஓ... ஹஸ்பண்ட்னா வேலை வாங்கலாமோன்னு தோணுது!” என்றாள் கேலியுடன் இழுத்து. அவன் முறைத்தான்.

“சரி... சரி விடுங்க, இனிமேல் எதுனாலும் தேவான்னு உங்களுக்கு கால் பண்ணிட்றேன்!” என்றாள் உதட்டோரம் சிரிப்பை மென்றபடி.

“அதுக்காக தொட்டதுக்கெல்லாம் எனக்கு கால் பண்ண கூடாது. எனக்கு அது பிடிக்காது. உன்னால தனியா செய்ய முடியாததா இருந்தா கால் மீ. அதர் தன் தட், நீயா பார்த்துக்கோ. ஐ க்நோ, யூ ஆர் நீ இன்டிபெண்டட். டோன்ட் எக்ஸ்பெக்ட் மீ ஆல்வேய்ஸ்” என்றான் கண்டிப்புடன்

“ஹக்கும்... இவரை எதிர்பார்க்கவே இல்லையாம். இவரா வருவாரு, ஹெல்ப் பண்ணுவேன்னு சொல்வாரு. அப்புறம் டோன்ட் எக்ஸ்பெக்ட் மீயாம். இதென்னய்யா போங்காட்டமா இருக்கு...” என முனங்கிக் கொண்டே வந்து பஜ்ஜியையும் தேநீரையும் அவனுக்கு கொடுத்தாள். அபி வரவும், தேநீரை ஆற்றி அவனுக்கும் கொடுத்தாள்.
சுட்டு முடித்த பஜ்ஜியை ருக்குவிற்கு கொடுத்துவிட்டு வந்தாள்.

ஆதிரை வந்து அமரவும், தேவா அவளுக்கு அருகே பஜ்ஜியை நகர்த்தினான். “வேணாம் தேவா, நான் ஆயில் பராடெக்ட்ஸ் எல்லாம் சாப்பிட்றது இல்ல!” என்றாள் மறுப்பாய். அவன் யோசனையுடன் பார்த்தான்.

“அபி பிறந்ததுக்கு அப்புறம் செம்ம வெயிட் போட்டுட்டேன். நம்ம ஊர்ல இருந்தா கூட ரைஸ் மட்டும் சாப்பிட்டிருப்பேன். அங்க லண்டன்ல தொட்டதுக்கெல்லாம் சீஸ், பன்னுன்னு நானே பன்னு மாதிரி ஆகிட்டேன். ரெண்டு மூனு வருஷம் கஷ்டப்பட்டு குறைச்சு ஐடியல் வெயிட்டுக்கு வந்தேன். சோ, அப்படியே அதை மெயிண்டெய்ன் பண்றேன்!” என்றாள். அவனும் இரண்டு பஜ்ஜியோடு நிறுத்திக் கொண்டான்.

“ஹம்ம்... வேற எதுவும் வொர்க் இருக்கா?” எனக் கேட்டவாறே சாப்பிட்டவற்றை தேவா எடுத்துச் சென்று கழுவி வைத்தான்.

“பெருசா எதுவும் இல்ல தேவா, நீங்க அபியோட உட்கார்ந்து எதாவது மூவி பாருங்க. நான் ஒரு ஒன் ஹவர்ல வொர்க்கை முடிச்சிடுவேன்!” என்றாள்.

“என்ன வேலைன்னு கேட்டேன் நான்?” அவன் அழுத்திக் கேட்க, “ஒட்டடை அடிக்கணும் தேவா, இதெல்லாம் நீங்க பண்ணுவீங்களா? உங்க வீட்ல நீங்க ராஜா மாதிரி இருக்கீங்க? யூனிட்ல கூட உட்கார்ந்த இடத்துல இருந்து வேலை வாங்குற மனுஷன். சோ, உங்களுக்குப் பழக்கமில்லாத வேலை!” என அவள் கூறிக் கொண்டிருக்கும் போதே அவன் கட்டிலின் மீது ஏறி ஒட்டடையை நீக்கத் தொடங்கினான்.

“பார்ரா... வீட்ல ஐயா வேலையெல்லாம் பார்பீங்களோ?” என போலி ஆச்சர்யத்துடன் கேட்டாள்.

அவளை முறைத்தவன், “இப்போ நான் இருக்க பொஷிசனுக்கு தகுந்த மாதிரி யூனிட்ல வொர்க் பண்றேன். அங்க வந்து நான் க்ளின் பண்ணீட்டு இருந்தா, என் மேல இருக்க மரியாதை குறைஞ்சிடும். எங்க இருக்கோமோ அதுகேத்த மாதிரி யோசிக்காம எந்த வேலைனாலும் செய்யணும். அண்ட் நான் ஒன்னும் பார்ன் வித் சில்வர் ஸ்பூன் இல்ல ஆதி. லோவர் மிடில் க்ளாஸ், இப்போதான் பிஸினஸ் டெவலப்பாகவும் வீடு வாங்கி அப்பர் மிடில் க்ளாஸா இருக்கோம்!” என்றான்.

“ஓ... சரி.‌. சரி!” என இவள் கேட்டுக் கொண்டாள். ஓரளவிற்கு வேலை முடிந்தது.‌

ஆதிரை நேரத்தைப் பார்த்தவள், “அபிக்குப் பசிக்கும். நம்ப அங்க போய் சாப்பிட டைம் ஆகும்‌. நான் எதாவது குக் பண்ணவா தேவா?” எனக் கேட்டாள்.

“போகும்போது எதாவது ஹோட்டல்ல சாப்பிட்டுக்கலாம்!” இவன் கூற, அவள் மறுதலித்தாள்.

“வேணா தேவா, பத்து நிமிஷம், நான் எதாவது பண்றேன்!” என்றாள்.

“அம்மா... பாஸ்தா பண்ணுங்க!” சின்னவன் அவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டே வந்து நின்றான்.

“வேணாம் அபி, அம்மா இன்னொரு நாள் செஞ்சு தரேன். அங்கிள்க்கு பாஸ்தா எல்லாம் பிடிக்காது!” என்றாள் ஆதிரை. அபினவ் தேவா முகத்தைப் பார்த்தான்.

“இல்லையே... அபிக்குப் பிடிச்ச பாஸ்தா எனக்கும் பிடிக்கும்!” தேவா அபியின் கன்னத்தைக் கிள்ளினான். அவனது முகம் மலர்ந்தது.

“ஆர் யூ ஷ்யூர் தேவா?” இவள் உறுதி படுத்த கேட்க, “போய் குக் பண்ணு டீ!” என அவன் அதட்டினான். உதட்டைச் சுழித்துவிட்டு சென்ற ஆதிரை பத்து நிமிடத்தில் வரகு அரிசி பாஸ்தா செய்து முடித்தாள்.

மூவரும் உண்ண அமர்ந்தனர். ஆதிரைக்கு பாஸ்தா அவ்வளவு விருப்பம் இல்லை. என்றைக்காவது ஒருநாள் உண்பாள். அபிக்கு பிடிக்கும் என்பதால் அவனுக்கு மட்டும் கூட செய்து கொடுப்பாள். அவளைப் போலவே தேவாவிற்கு பிடிக்காது என்றே தோன்றிற்று. அவன் முகத்தை ஓரக்கண்ணால் பார்த்தாள்.

ஒரு கவளம் உண்டதுமே அவன் முகம் மாறியது. ஆனாலும் உணவை வீணடிக்க கூடாது என கடினப்பட்டு சாப்பிட்டு முடித்தான். மூவரும் உண்டு முடிய, ஆளுக்கொன்றாய் பையை எடுத்து வந்து மகிழுந்தில் வைத்தனர். ஆதிரை சமையல் பொருட்களை ருக்குவிடம் கொடுத்துவிட்டு வீட்டு சாவியையும் ஒப்படைத்தாள். அவர் அடிக்கடி இங்கு வந்து செல்லுமாறு கூற, இவளும் புன்னகையுடன் விடை பெற்றாள்.

ஆதிரை தனது இருசக்கர வாகனத்தில் முன்னே செல்ல, தேவா அபியோடு அவளை மெதுவாய் பின் தொடர்ந்தான்.

இவர்கள் வீடு சென்று சேர ஒன்பது மணியானது. ஹரியும் கோபாலும் அமர்ந்து உண்டு கொண்டிருந்தனர். “வா தேவா, சப்பாத்தி சுட்டிருக்கேன். வந்து சாப்பிடு!” என அழைத்தார் பொன்வாணி.

“இல்லம்மா... நாங்க அங்கேயே சாப்பிட்டு வந்துட்டோம். ஆதிரை குக் பண்ணா!” மறுத்தான் மகன்.

“ஏன்டா... சாப்பிட்டுத்தான் வருவேன்னா எனக்கு ஒரு ஃபோன் போட்டு சொல்ல மாட்டீயா? நான் இங்க கிறுக்கச்சி மாதிரி சப்பாத்தியை சுட்டு அடுக்கி வச்சிருக்கேன். ஏன் பொண்டாட்டி கையால சாப்பிடத்தான் இப்போலாம் உனக்கு இஷ்டமோ?” என அவர் பொரிந்தார்‌.

“ப்ம்ச்... ம்மா, அப்படிலாம் இல்லைமா. அபிக்கு பசிக்கும்னு சாப்பிட்டு வந்தோம்!” தேவா பதிலளிக்க,

“சும்மா எதாவது நொண்டி சாக்கு சொல்லாத தேவா. பொண்டாட்டி வந்ததும் பெத்த அம்மா ரெண்டாம்பட்சமா போய்ட்டேன் இல்ல. முன்னாடிலாம் வெளிய போனா போன் போட்டு லேட்டாகும்னு சொல்லுவ. ஆனால், இப்போலாம் நான் உன் கண்ணுக்குத் தெரிய மாட்றேன் போல!” அவர் கோபமாய் பேசினார். ஆதிரை இவ்வளவு நேரம் மரியாதை நிமித்தமாக நின்றிருந்தவள், அவர் பேச்சு பிடிக்காது அபியை அழைத்துக் கொண்டு அறைக்குள் நுழைந்தாள்.

“மாமியார்னு உன் பொண்டாட்டிக்கு ஒரு பயம் இருக்கா? நான் இங்க கத்தீட்டு இருக்கேன். மட்டு மரியாதை தெரியாம உள்ள போய் கதவடைச்சுக்குறா அவ!” வாணி சிடுசிடுத்தார். தேவா சலிப்பாய் பார்த்து பதில் கூற விழைய,

“வாணி, என் தட்டுல சப்பாத்தி தீர்ந்து போச்சு. என்னைக் கவனிக்காம அங்க என்ன பேச்சு வேண்டி கிடக்கு?” கோபால் மனைவியை அதட்ட, அவர் ஏதோ முணுமுணுத்தவாறே கணவனைக் கவனித்தார். தேவா பெருமூச்சுடன் அறைக்குள் நுழைந்தான்.

ஆதிரை பையை ஒரு மூலையில் வைத்துவிட்டு உடை மாற்றச் சென்று வந்தாள். அபியும் பள்ளி சீருடையை மாற்றி வர, இவள் அறையை விட்டு வெளியேறினாள். தேவா அவள் முகத்தைதான் பார்த்தான். வாணியின் பேச்சிற்கு ஆதிரையின் எதிர்வினை என்னாவாக இருக்கும் என்ற எண்ணத்துடன் பார்த்தான். அவளிடம் பெரிதாய் எந்த மாற்றமும் இல்லை.

அவள் பாலை சூடு செய்து இரண்டு குவளைகளில் ஊற்றிக் கொண்டு வந்தாள். “அபி... இந்த பாலைக் குடிச்சிட்டுத்தான் படுக்கணும்!” என மகனிடம் ஒரு குவளையைக் கொடுத்தவள், “இந்தாங்க... உங்களுக்கும் பால்!” என்றாள்.

அவன் மேல் சட்டையை அணிந்து கொண்டிருந்தவன், “நைட்ல பால் குடிக்கிற பக்கமெல்லாம் எனக்கு இல்ல ஆதிரை!” என்றான்.

“தெரியுமே... பட் பாஸ்தா உங்களுக்கு பிடிக்கலைல. கொஞ்சமா சாப்பிட்டீங்க. உங்களுக்கு அது போதாது. நைட் பசிக்குமேன்னு அபிக்கு பால் காய்ச்சும் போது அப்படியே சேர்த்து எடுத்துட்டு வந்தேன்!” என்றவள் அவன் வாங்கும் வழியைக் காணோம் என்று அதை மேஜை மீது வைத்துவிட்டு சென்று கட்டிலில் சாய்ந்து அமர்ந்தாள். காலையிலிருந்து ஓய்வில்லாமல் வேலை பார்த்ததில் உடல் அலண்டு போனது.

“தேங்க்ஸ்...” என்றவன், “அம்மா பேசுனதுக்கு உன் ரியாக்ஷன் இவ்வளோதானா? நான் என்கிட்ட கேட்பேன்னு நினைச்சேன்!” அவளை ஓரக்கண்ணால் பார்த்தபடியே பாலை அருந்தினான்.

“ஹம்ம்... என்கிட்ட டேரெக்டா கேட்டிருந்தா நல்லா நாலு பதில் சொல்லி இருப்பேன். பட், அவங்க அவங்க புள்ளைக்கிட்டே பேசுறாங்க. என்னதான் நான் உங்க பொண்டாட்டியா இருந்தாலும் அம்மாவுக்கும் மகனுக்கும் இடையில வர்றது சரியில்லை. சோ, நான் எதுவும் பேசலை. நீங்களே ஹேண்டில் பண்ணிப்பீங்கன்னு விட்டுட்டேன்!” என்றாள் தோள் குலுக்களுடன்‌. அவன் புருவத்தை உயர்த்தினான்.

அபி ஆதிரையின் அருகே வந்து விழுந்து அவளது அலைபேசியை அரவம் இல்லாது எடுத்தான். ஆனால் அவளுக்கு அது தெரிந்தே இருந்தது.

“டென் மினிட்ஸ்தான் டைம் அபிம்மா, ஃபோனை வச்சுட்டு தூங்கணும்!” என்றாள் கண்டிப்புடன்.

“நாளைக்கு சண்டேம்மா!” அவன் சிணுங்கினான்.

“நாளைக்குத்தான் லீவாச்சே. நீ எழுந்து விளையாடலாம் இல்ல. சோ, இப்போ தூங்கணும்!” அதட்டலாய் அவள் கூற, “தூங்கும் போது ஃபோன் பார்க்க கூடாது அபி!” என தேவாவும் கூற, அவன் உம்மென்ற முகத்துடன் தலையை அசைத்தேவிட்டு தொலைபேசியை வைத்தான். ஆதிரை புன்னகைத்தாள்.

தேவா அறைக் கதவை தாழிட்டு வந்தான். ஆதிரை கழிவறை சென்று வர, “என்ன புதுசா நைட்டி எல்லாம் போட்ற ஆதி? டீஷர்ட், பேண்ட் தானே போடுவ?” எனக் கேட்டான் தேவா. அவனைப் புருவம் உயர்த்திப் பார்த்தாள் இவள்.

தொண்டையைக் கணைத்தவன், “இல்ல வீட்ல பார்த்தேனே!” என இழுத்தான்.

அவனை மென்மையாய் முறைத்தவாறே படுக்கை விரிப்பை சரி செய்தவள், “நீங்க மட்டும் இருந்தா நான் ஸ்லீவ்லெஸ் பனியன், த்ரீ போர்த் பேண்ட்னு போடலாம். இங்க அப்படி இல்லையே, ஹரி, மாமா எல்லாம் இருக்காங்களே!” என்றாள்.

“ஏன்... அதென்ன நான் இருந்தா?” வேண்டுமென்றே அவன் கேட்டான்.

“ஹம்ம்... அதுவா தேவா சார், நீங்க ஒருத்தர் தானே எனக்குப் புருஷன். சோ, உங்க முன்னாடி போட்றது தப்பில்லைல?” கேலியாகக் கூறியவளை தீயாய் முறைத்தவன், “எல்லாருக்கும் ஒருத்தன் தான்டி புருஷனா இருக்க முடியும்!” என்றான் கடுப்பான குரலில். இவள் தோளைக் குலுக்கினாள்.

சில நிமிடங்கள் கழித்து அவன் முன்னே வந்து நின்றவள், “ஏன் கேட்டீங்க? இந்த நைட்டீ நல்லா இல்லையா?” என்றாள் பார்வையில் கேள்வியைத் தேக்கி.

தேவா கடுப்பில் இருந்தான். “ஆமா டீ... பூசனிக்கா மாதிரி இருக்க...” என்றுவிட்டான். இவ்வளவு நேரம் அவளைக் கேலி பேசிய ஆதிரை முகம் கோபமாய் மாறியது.

“இந்தக் கருவாயனுக்கு இந்த பூசணிக்காயே ஓவர்!” கையை நீட்டி அவள் முறைப்புடன் கூற, தேவா அவளைக் கோபமாய் பார்த்தான். சில நொடிகளில் இருவருக்குமே சிரிப்பு வர, குழந்தைகளைப் போல ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்து சிரித்திருந்தனர்.

“போயா...” உதட்டைச் சுழித்துவிட்டு ஆதிரை கண்ணாடி முன்பு சென்று நின்றாள். கையைப் பின்னோக்கி சென்று உடையை இறுக்கிப் பிடித்து கண்ணாடியில் முன்னே பின்னே எனத் திரும்பி பார்த்தாள். தேவா கட்டிலில் சாய்ந்து அமர்ந்து அவளைக் கேலியாய் பார்த்தான்.

அவனை முறைத்தவள் சிணுங்கிவிட்டு கண்ணாடியைப் பார்த்து குட்டியாய் இருந்த தொப்பையை வருடினாள். தேவா திரும்பி அபியைப் பார்க்க, அவன் தூங்கிவிட்டிருந்தான். இவன் எழுந்து வந்து ஆதிரைப் பின்னே நின்று அவளை பின்புறமாய் அணைத்து அவள் உயரத்திற்கு தலையைக் குனிந்து கண்ணாடியில் பார்த்தான்‌.

முதலில் ஆதிரை திடுக்கிட்டாலும் பின்னர் சமாளித்துவிட்டு, “அபி பொறந்தப்போ வந்த தொப்பை, ஸ்ட்ரெச் மார்க்ஸ். ரெண்டுமே போகலை தேவா!” என்றாள் தயக்கத்துடன்.

இவன் படக்கென்று கையை முன்னகர்த்தி அவளது வயிற்றை வருடி, “செல்லத் தொப்பை டீ. நல்லாதான் இருக்கும், இருந்துட்டுப் போகட்டும்!” என்றான் முறுவலுடன்.

ஆதிரை தலையைப் பக்கவாட்டாய் உயர்த்தி அவன் முகத்தருகே பார்த்து, “உண்மையாவா?” என புருவத்தைச் சுருக்கி சந்தேகமாகக் கேட்டாள். அந்தக் கண்களில் பதிந்த பார்வை மூக்கு உதடு என இறங்க, ஆதிரையும் மெதுவாய் அவனுள்ளே இறங்கினாள்.

தொண்டையைச் செருமியவன், “அப்படி சொன்னாவது பக்கத்துல விடுறீயா
ன்னு பார்க்கத்தான்!” என்றான் உதட்டோர புன்னகையை மென்றபடி. ஆதிரை அவனை உதறிவிட்டு முறைத்துக் கொண்டே அபிக்கு மறுபுறம் சென்றுபடுத்துவிட, தேவா சிரிப்புடனே உறங்கிப் போனான்.

தொடரும்…

 
Well-known member
Messages
993
Reaction score
735
Points
93
Superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr
 
Well-known member
Messages
445
Reaction score
323
Points
63
Ponvani eppo vangi katti ka poraga nu theriyala aana confirm ah andha sambavam nadakum ivanga ipadi yae pesitu irundha .
Adei yappa tease panni sirika ellam seiyura ga athisayam than
 
Active member
Messages
202
Reaction score
162
Points
43
Ponvani pesanadhu romba thappu
Deva ku terincha
Aadhirai ya pacify pannuvaan ah illa amma naalum wife self respectkaga stand pannuvaan ah
 
Active member
Messages
192
Reaction score
159
Points
43
Days ellam konjam confusiona Iruku sis. Marriage Sunday thaan nadanthathu. deva 2 days la office ponaan. Again eppadi Sunday??
 
Top