• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,194
Reaction score
3,478
Points
113
நெஞ்சம் – 39 💖

மறுநாளிலிருந்து ஹரி தீவிரமாக திருமண வேலைகளைப் பார்க்கத் தொடங்கினான். அவனும் தந்தையும் என்னென்ன செய்ய வேண்டும் என்று பணிகளைப் பிரித்துக் கொண்டனர்.

ஜனனியும் ஹரியும் சேர்ந்தே ஒரு நல்ல பத்திரிக்கை வடிவமைப்பை தேர்வு செய்தனர். தேவாவிற்கு ஆதிரையின் மீது ஏகக் கடுப்பு. அதனால் ஹரியையே அவளிடம் நேரடியாக யார் பெயரைப் பத்திரிகையில் கூறிப்பிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளக் கூறிவிட்டான்.

ஹரிக்கு ஒன்றுமே புரியவில்லை. திருமணத்திற்கு சம்மதம் சொல்லிய இருவர் முகத்திலும் அதற்கான சந்தோஷமோ பூரிப்போ இல்லையே எனக் குழம்பிப் போனான்.

ஆதிரையிடம் அழைத்துப் பேசி அவளுடைய பெற்றவர்கள் பெயரைக் கேட்டுத் தெரிந்து கொண்டான். ஆரம்பத்தில் அவள் வேண்டாமென மறுக்க, இவன்தான் அழுத்திக் கேட்டு தகவலைப் பெற்றான். முதன்முதலில் தேவாவிற்காக ஆதிரைப் பேசும்போது கூட அவள் குரலில் ஒருவித இயல்புநிலை இருந்தது. அதைவிட கேலியாய் அதே சமயம் தேவாவிற்கான அக்கறையுடன் அவள் பேசியது இவனுக்குப் பிடித்தும் இருந்தது.

ஆனால் இன்றைக்குப் பேசும்போது ஆதிரை கடமைக்கென பதில் உரைத்திருந்தாள். இவன் மனைவியிடம் புலம்பித் தள்ளினான்.

“ப்ம்ச்... லூசா ஹரி நீ... அன்னைக்கு அத்தைப் பேசுனதால அவங்க ரெண்டு பேருக்கும் இடையில எதாவது பஞ்சாயத்தாகியிருக்கும். ஏன் லவ் பண்ணும் போது நம்ப போடாத சண்டையா. நீ வேணவே வேணாம்னு நான் உன்னை அடிச்சுத் தொரத்துனாலும் நான்தான் வேணும்னு மானங்கெட்டு நீ வரலை. அந்த மாதிரிதான் அவங்களும். கல்யாணம் பண்ணி வைக்கிறது நம்ப கடமை. அதுகப்புறம் அடிச்சுக்கோ புடிச்சுக்கோன்னு அவங்க வாழ்ந்துப்பாங்க. நீங்க வேலையைப் பாருங்க!” என கணவனை அதட்டினாள். அவனும் அரை மனதுடன் தலையை அசைத்து சம்மதித்தான்.

ஜனனி ஆதிரையிடம் திருமணப் புடவை எடுக்க வேண்டும் என்று அழைக்க, “இல்ல ஜனனி, நீங்களே எடுங்க. எனக்கு எதுனாலும் ஓகே!” என முடித்துவிட்டாள். இவளுக்கு மனதிற்குள் துணுக்குற்றது. கணவனிடம் பகிர்ந்தாள். இருவரும் குழப்பத்துடன் திருமண வேலையை செய்தனர்.

பொன்வாணி அனைத்தையும் மனத்தாங்கலுடன் பார்த்துக் கொண்டே இருந்தார். அவருக்கு வாய் வரை வார்த்தைகள் வந்தன.‌ ஆனாலும் கோபால் சொல்லுக்கு கட்டுப்பட்டு முகத்தை மட்டுமே அவரால் திருப்ப முடிந்தது. பிரதன்யாதான் அவரைக் கவனித்துக் கொண்டாள். காலையிலும் மாலையிலும் தாயை சரியாய் மாத்திரை உண்ண வைப்பது அவளது பொறுப்பில் விடபட்டது.

திருமண வேலைகள் தலைக்கு மேலே இருக்க கோபாலால் மனைவியைப் பார்த்துக் கொள்ள முடியவில்லை. இந்தக் கல்யாணத்தை நிறுத்த வேண்டும் என்ற நோகத்திற்காக பொன்வாணி தன் உடல்நிலையைக் கூட கெடுத்துக் கொள்ள தயங்க மாட்டார் என்பது அவரறிந்ததே. அதனாலே மகளை அழைத்து என்னுடைய மனைவி உன் பொறுப்பு என்றுவிட்டார்.

பிரதன்யாவிற்கும் பொன்வாணியை ஒரு தாயாய் நிரம்ப பிடிக்கும். ஹரியோடு போதும் என அவர்கள் அடுத்த பிள்ளைக்கென்று எவ்வித திட்டமும் வைத்திருக்கவில்லை. பிரதன்யா அவர்களுக்கு எதிர்பாராத சொத்துதான். கடைசியாய் பிறந்ததால் தாயிடமும் தந்தையிடமும் அவள் அதிகம் செல்லம் கொஞ்சுவாள். பொன்வாணியுமே மகளை அத்தனை தாங்குவார். அப்படி பார்த்துக் கொண்டவர் ஏன் இந்த விஷயத்தில் மட்டும் இத்தனைப் பிடிவாதமாக இருக்கிறார் என அவளுக்கும் கவலைதான்.

அவ்வப்போது தாயிடம் பேசி அவரது மனதை மாற்ற முயற்சி செய்வாள். ஆனால், பொன்வாணி அசையவே இல்லை. இந்த திருமணத்தில் எனக்கு உடன்பாடில்லை. உங்கள் விருப்பம், நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என ஒதுங்கிக் கொண்டார். அவளும் அவராய் சரியாகி வரட்டும் என்று விட்டுவிட்டாள்.

அன்றைக்கு முகூர்த்த புடவையும் மற்றவர்களுக்கு உடையும் எடுக்க செல்வதாக இருந்தது.
ஆதிரை வரவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்தது. தேவா அதைக் கேட்டுப் பெரிதாய் எதிர்வினையாற்றவில்லை. ஆனாலும் உள்ளத்தில் அனைத்தும் கோபமாய் உருமாறிக் கொண்டிருந்தது.

“தேவா, நான் கூப்பிட்டாலும் நீ வர மாட்ட. நீ யூனிட்டுக்கு கிளம்பு. நான், ஜானு, அப்பாவோட போய் ட்ரெஸ் பர்சேஸ் பண்ணிட்டு வந்துடுறோம்!” என ஹரி கூற, தேவா யோசித்தான்.

“இல்ல ஹரி, நானும் கூட வரேன்!” என அவனும் கிளம்ப, சின்னவன் புரியாது விழித்தான்.

“இவனைக் கூப்பிட்டா வரமாட்டேன்னு சொல்லுவான், நம்பளே போய்ட்டு வரலாம்னு பார்த்தா, வரேன்னு சொல்றான் டி. முப்பது வருஷமா கூட இருந்தும் இவனைப் புரிஞ்சுக்க முடியலடி!” என மனைவியிடம் புலம்பினான் ஹரி.

“ப்ம்ச்... நீயே வர வேணாம்னு சொல்லிடுவ போல ஹரி. அக்காதான் வரலை, அட்லீஸ்ட் மாமாவாது வரட்டும், கிளம்புவோம்!” எனக் கணவனை அதட்டினாள்.

“அத்தை, எல்லாரும் முகூர்த்த புடவை எடுக்க போறோம். நீங்களும் வரலாம் இல்ல?” ஜனனி தயக்கத்துடன் மாமியாரிடம் கேட்க, “எனக்கு தலைவலி ஜனனி. நீங்க கிளம்புங்க!” இவளின் முகத்தைக் கூடப் பார்க்காது அவர் பதிலளித்தார். இவளது முகம் மெல்ல வாடியது.

“ஜானு... அவங்க வர மாட்டாங்கன்னு நான் சொன்னாலும் நீ கேட்காம போய் கூப்பிட்ற!” ஹரி அவளை அதட்டியபடி மகிழுந்து அருகே அழைத்துச் சென்றான்.

“அத்தை பாவம் ஹரி, நம்ப எல்லாரும் ஒன்னா போறோம். அவங்க மட்டும் வீட்டுல இருக்காங்க. பார்க்கவே கஷ்டமா இருக்கு!” என்றாள் வருத்தமான குரலில்.

“ஆமாண்ணா... எனக்கும் அம்மாவை தனியா விட மனசில்லை. வாய் ஓயாம பேசிட்டே இருக்க அம்மா, இப்போ இவ்வளோ சைலண்டா இருக்கது நல்லா இல்ல!” பிரதன்யா கவலையாய்க் கூறினாள்.

“உங்கம்மாவைப் பத்தி தெரியாதா பிரதன்யா? அவளா சரியாகி வந்தாதான் உண்டு. நான் பக்கத்து வீட்டு கனகுகிட்டே சொல்லி இருக்கேன். அவ வந்து உங்கம்மாவோட இருப்பா. சீக்கிரம் வாங்க, போய்ட்டு துணியெடுத்துட்டு வீடு வந்து சேர வேணாமா?” என கோபால் அதட்டவும், அனைவரும் மகிழுந்தில் ஏறினர். தேவா அனைத்தையும் கவனித்தாலும் பதிலளிக்கவில்லை.

தாயை இப்படி விட்டுச் செல்வதில் அனைவரையும் விட அவனுக்குத்தான் அதிக வருத்தம். ஆனாலும் பொன்வாணி அத்தனை எளிதில் இறங்கிவர மாட்டார் என அவனுக்குத் தெரியும். மனைவியாக வரப் போகிறவளும் தாயானவரும் ஆளுக்கு ஒருபுறமாய் அவனைப் பாடாய்ப்படுத்தினர். திருமணம் வரைப் பல்லைக் கடித்துக்கொண்டு பொறுத்துக் கொள் என சுயக்கட்டுப்பாட்டோடு இருந்தான். எதுவாய் இருந்தாலும் சரி, திருமணம் நல்லபடியாய் முடியட்டும்.
பின்னர் தாயை சமாதானம் செய்து கொள்ளலாம் என அமைதியாய் அனைத்திலும் கலந்து கொண்டான்.

காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு பிரபலமான துணிக் கடைக்குச் சென்றனர். தேவா ஆண்கள் பகுதிக்குள் நுழைந்தான். அவனுக்குப் பட்டு வேட்டி சட்டைதான் என்பதால் பெரிதாய் தேடி எடுக்க வேண்டிய அவசியமில்லை. தன்னுனுடைய அளவிற்கு எடுத்து ஹரி கையில் கொடுத்தான்.

பின்னர் தேவா சிறுவர்கள் உடை பகுதிக்குள் செல்ல, ஹரி யோசனையுடன் அவன் பின்னே சென்றான்.‌ “இங்க என்ன பார்க்கப் போற தேவா?” எனக் கேட்டான். ஏனென்றால் அது ஆண் குழந்தைகளுக்கான பகுதி.

“அபிக்கு ட்ரெஸ் எடுக்கணும் ஹரி!” அவன் கூறவும், அப்போதுதான் சின்னவனுக்கு நினைவு வந்தது. அனைவருக்கும் என்னென்ன வாங்க வேண்டும் என்று பட்டியல் தயாரித்த போது கூட அபியை அனைவரும் மறந்துவிட்டிருந்தனர்.

‘சே!’ என இவன் நெற்றியில் அறைந்து கொண்டான். ஆதிரைக்கு மட்டும் சேலை எடுத்துவிட்டு அபிக்கு எடுக்காது சென்றால் எவ்வளவு அபத்தமாய் இருக்கும். இப்போதே இப்படியென்றால் திருமணத்திற்குப் பின்னே அபியை எப்படி நீங்கள் உங்கள் குடும்பத்தில் ஒருவனாய் ஏற்றுக் கொள்வீர்கள் என ஆதிரை எண்ணி வருந்தியிருக்க கூடுமென மனதிற்குள்ளே தன்னையே நிந்தித்தான்.

தேவாவிடம் அதீத கோபம் மட்டுமல்ல, அதைவிட அதிகமாய் நேர்த்தியும் கடமையுணர்வும் இருக்கும். எந்தவொரு வேலையை செய்தாலும் முழுமையாய் செய்வான். ஆதிரையிடம் வெறும் வாய் வார்த்தையாக அவன் அபியை நன்றாய் பார்த்துக் கொள்வேன் என்று அவன் கூறியிருக்கவில்லை. அவனுக்கு போலியான பசப்பு வார்த்தைகள் ஒருபோதும் ஒவ்வாது. முடியும் என்றால் முடியும். இல்லை என்றால் முகத்திற்கு நேரே அடித்தாற் போல கூறிவிடுவான். யாருக்கும் பொய்யாய நம்பிக்கையோ வாக்குறுதியோ கொடுப்பதில் அவனுக்கு சர்வ நிச்சயமாக உடன்பாடில்லை.

ஹரி தேவாவைப் போல அல்ல. எல்லாவற்றிலும் அரைகுறைதான், விளையாட்டுத்தனம் அவனிடம் அதிகம். திருமணம் முடியும்வரை இன்னும் கவனமாய் இருக்க வேண்டும் என்றெண்ணிக் கொண்டே தேவாவுடன் சேர்ந்து அபிக்கு உடையை தேர்வு செய்தான். அவனுக்கு மூன்று ஜோடி உடைகள் எடுத்தனர்.‌

பின்னர் முகூர்த்த புடவை பகுதிக்குள் நுழைய, ஜனனியும் பிரதன்யாவும் அங்கிருந்த முக்கால்வாசி புடவையைக் கலைத்துப் போட்டு எதையும் எடுக்காது பார்த்துக் கொண்டிருந்தனர்.

தேவா அவர்களுக்கு அருகே சென்று, “அந்த மெரூன் கலர் சேரியை எடுங்க!” எனக் கடைச் சிப்பந்தியிடம் கூற, அவரும் அந்த அரக்கு வண்ணப் புடவையை எடுத்து விரித்துக் காண்பித்தார்.

“அந்த வொய்லட் கலர் சேரியையும் எடுங்க!” என இரண்டையும் எடுத்துப் பார்த்தவன், “இது அவளுக்கு ஓகேவா இருக்கும். பில் போட்டுடுங்க. எல்லாரும் ட்ரெஸ் எடுத்துட்டு வீட்டுக்கு கிளம்புங்க. எனக்கு டைமாச்சு, நான் போறேன்!” என யார் முகத்தையும் பார்க்காது சென்றவனை ஹரி வாயைப் பிளந்து பார்த்தான்.

“மென் ஆர் சிம்பிள்னு தெரியும் அண்ணி. பட் தேவா இவ்வளோ சிம்பிளா இருக்க கூடாது. வந்தான், சேலையை எடுத்தான், பில் போட சொல்லிட்டான். பத்து நிமிஷத்துல மேரேஜ் பர்சேஸே முடிச்சிட்டான்!” பிரதன்யா அதிசயித்தாள்.

“ஏய் ஜானு, என்னடி இவன் இப்படியெல்லாம் மாறிட்டான். புடவை செலக்ட் பண்ற அளவுக்கு ஆதிரையை இவனுக்குப் பிடிச்சிருக்கா என்ன?” ஹரி வெளியே சென்ற தேவாவையே வாயைப் பிளந்து பார்த்தான். ஜானு அதைப் பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை. அவர்களுக்கு இடையேயான பிணக்கை அவர்களே பார்த்துக் கொள்ளட்டும் என்று விட்டாள்.

“ஆனாலும் சரியான ஆள்டி அவன். கல்யாணத்துக்கு ஒரு புடவை, ஃபர்ஸ்ட் நைட்டுக்கு ஒன்னுன்னு செலக்ட் பண்ணி இருக்கான் பாரேன்!” ஹரி ஜனனியின் காதில் முணுமுணுக்க, “ப்ம்ச்... பிரது இருக்கா ஹரி!” என அவனைக் கண்களால் மிரட்டினாள் அவள்.

பிரதன்யா அப்போதுதான் இவர்கள்புறம் திரும்பியவள், “ஏன் ஹரி, கல்யாணத்துக்கு முன்னாடியும் சரி, அப்புறமும் சரி... நீ எங்களுக்கெல்லாம் தெரியாம ஒளிச்சு மறைச்சு அண்ணிக்கு மாசம் நாலு சேரி எடுத்துக் குடுத்தீயே. அம்மா கூட என்கிட்ட சொல்லி பொறுமுனாங்க. அவங்களுக்கு ஒருநாள் கூட நீ சேலை எடுத்துக் குடுத்தது இல்லைன்னு. நீ தேவாண்ணாவை சொல்ற?” அவள் கேலியாய்க் கேட்க, ஜனனி கணவனைக் கண்களால் எரித்தாள்.

“உங்கம்மாவுக்குத் தெரியாம ஒரு புடவை கூட உன்னால எடுத்து தர முடியாதா ஹரி? சரி, கட்டுன பொண்டாட்டிக்குத்தானே நீ எடுத்துக் குடுத்த. அதுக்கு கூட உங்கம்மாவுக்கு பொறாமை!” அவள் கணவனைக் கடித்தாள்.

“ஏன்டீ?” ஹரி தமக்கையை காட்டமாய் பார்த்தான்.

“சரி... சரி அண்ணி, ஆதி காலத்துல நடந்ததுக்கு இப்போ பஞ்சாயத்தைக் கூட்டாதீங்க. ஹரிக்கு என்ன பனிஷ்மெண்ட் கொடுக்கலாம்னு நான் சொல்றேன். எப்படியும் மேரேஜ்க்கு புடவை செலக்ட் பண்ணவே ஈவ்னிங் ஆகிடும்னு நினைச்சேன். அதான் அந்த வேலை முடிஞ்சதே. நைட் வரை உங்க புருஷன் காவக்காக்கட்டும். நம்ப பொறுமையா ட்ரெஸ் செலக்ட் பண்ணலாம்!” என்றாள் தமயனைக் கேலியாக பார்த்தவாறே.

“நோ வே... எனக்கு தலைக்கு மேல வேலை கிடக்கு. ஒழுங்கா லஞ்சுக்குள்ள பர்சேஸை முடிங்க. ஆஃப்டர் நூன் நான் வெளியே போகணும்!” அவர்களை அதட்டிவிட்டு தந்தையை நோக்கிச் சென்றான்.

கோபால் பேத்திக்கு என்று ஐந்தாறு உடைகளை தேர்வு செய்து வைத்திருக்க, இவன் அவரை முறைத்துவிட்டு, அவர் எடுத்ததிலே சிறந்ததாய் இரண்டை மட்டும் தனியாய் வைத்தான். பின்னர் தாய்க்கு, தந்தைக்கும் எடுத்துவிட்டு தனக்கும் இரண்டு உடையை எடுத்து முடித்தான். மதிய உணவு நேரம் வந்திருந்தது.

இவன் மனைவியைத் தேடிச் செல்ல, இன்னுமே பிரதன்யாவும் ஜனனியும் அமர்ந்த இடத்தைவிட்டு அசையவில்லை. அவர்களை அதட்டி சீக்கிரம் உடையை எடுத்து மதிய உணவை வெளியே முடித்துக் கொண்டு அவர்களை வீட்டில் விட்டுவிட்டு வெளியே கிளம்பினான்.

***

மதிய உணவை முடித்துக்கொண்டு அனைவரும் மெதுவாய் வேலையைத் தொடங்கி இருந்தனர். ஆதிரை லாக் புத்தகத்தில் வரவைப் பதிந்து கொண்டிருந்தாள். தர்ஷினி அலைபேசியை வைத்து ஏதோ பார்த்துக் கொண்டிருந்தவள், “ஆ... கோமுக்கா! இதைப் பாருங்களேன். நம்ப தேவா சார்க்கு கல்யாணமாம்!” என்றாள் ஆச்சர்யத்துடன்.

“உண்மையாவா தர்ஷினி... உனக்கு எப்படி தெரியும்?” அவளருகே விரைந்தபடியே கேட்டார் கோமதி.

“இங்க பாருங்க... இன்விடேஷனை! என் ப்ரெண்டோட ரிலேட்டீவ்தான் நம்ப தேவா சார். அவளோட வீட்டுக்குப் பத்திரிகை வச்சாங்களாம். அவதான் எனக்கு பார்வர்ட் பண்ணி இருக்கா!” என்றாள் மணமகள் பெயரை உற்றுப் பார்த்தபடி.

“பரவாயில்லை, இப்போதான் அவருக்கு கல்யாண யோகம் வந்திருக்கு போல. நான் கூட இவரோட குணத்துக்கு எந்தப் பொண்ணும் செட்டாகலைன்னு நினைச்சேன். பாவம் எந்தப் பொண்ணு மாட்டுச்சோ?” என அவர் கேலியாய் சிரித்தார்.

“சரியா சொன்னீங்கக்கா.‌.. இவரோட குணம் தெரிஞ்சா, எல்லாரும் தெறிச்சு ஓடிடுவாங்க!” என அவளும் சிரிக்க, ஆதிரை அவர்கள் இருவரையும் முறைத்தாள்.

“தர்ஷினி, வேலை நேரத்துல என்ன சிரிப்பு?” அவள் அதட்ட, “க்கா... இங்க பாருங்க, ஆதிலா நீயும் பாரு. தேவா சார்க்கு கல்யாணமாம். சே... வீக் டேய்ஸல வைக்காம மனுஷன் வீக் எண்ட்ல வச்சிருக்காரு. இதை சாக்கா வச்சு ஒருநாள் லீவ் போடலாம்னு பார்த்தா, அங்கேயும் ஆப்பு!” அவள் குரல் கடுப்புடன் வந்தது‌. ஆதிரை எதுவும் பேசாது வேலையில் கவனமாய் இருந்தாள்.

ஆதிலா தர்ஷினியின் அலைபேசியை வாங்கிப் பார்த்தாள். “பொண்ணு பேரைப் பார்த்தீங்களா தர்ஷினி? ஆதிரையாழ்னு போட்டிருக்கு? நம்ப அக்கா பேர்!” அவள் யோசனையுடன் கூறினாள்.

“ஆமா! ஆமா...நான் கூடப் பார்த்தேன். நம்ப அக்கா பேர்தான். பட், இவங்களா இருக்க வாய்ப்பே இல்ல. ஒரே இடத்துல வேலை பார்த்து, ஐஞ்சாறு வருஷமா அவரைத் தெரியும் அக்காக்கு. ஒருநாளாவது சிரிச்சுப் பேசி இருப்பாரா? சிடுமூஞ்சி சிதம்பரம் அவரு. அதனால இது வேற யாரோவாதான் இருக்கும்!” தர்ஷினிக்கு ஒரு சதவீதம் கூட சந்தேகம் வரவில்லை. ஆதிரை அவர்கள் பேச்சில் சங்கடத்தோடு மடிக்கணினியில் புதைந்தாள்.

இப்படி பேசுபவர்களிடம் எவ்வாறு உண்மையைக் கூறப் போகிறோம் என தயக்கமாய் இருந்தது. கொஞ்சம் அவஸ்தையாய் கூட உணர்ந்தாள். எப்படியும் இன்றைக்கு ஊழியர்கள் அனைவருக்கும் பத்திரிக்கை கொடுக்கப் போகிறார்கள். தேவா நேற்றைக்கே இதைப் பற்றி அவளுக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி இருந்தான். திருமணத்திற்கு ஒருவாரம் தான் இருந்ததால், அவளும் சரியென பதில் போட்டிருந்தாள்.

ஆனால் இன்றைக்கு நேரில் அனைவரது முகத்தையும் பார்க்க தயக்கமாய் இருந்தது. அதிலும் தர்ஷினி எப்படி எதிர்வினையாற்றுவாள் என்ற நினைப்பே சங்கோஜத்தை அளித்தது. யார் என்ன நினைத்தால் என்ன என்ற மனப்பான்மை உடையவள் என்றாலும் இத்தனை வருடங்கள் உடன் வேலை பார்த்தவர்களிடம் திருமண விஷயத்தை எப்படிப் பகிரப் போகிறோம் என மனதில் மெல்லிய பதற்றம் விரவியது.

“அக்கா, நாங்க பேசிட்டே இருக்கோம். நீங்க என்ன கனவு காண்றீங்களா?” தர்ஷினி அவள் தோள் தொட்டு உசுப்ப, ஆதிரை விழித்தாள்.

“பொண்ணு பேர் உங்களோட பேர்தான். அதான் டிஸ்கஸ் பண்ணிட்டு இருந்தோம். எப்போ நம்மளுக்கு இன்விடேஷன் கொடுக்கப் போறாருன்னு தெரியலை. ஒன் வீக்தான் இருக்குல்ல மேரேஜ்க்கு. தேவா சாரோட ப்யூச்சர் வொய்ஃபை பார்க்க நான் ரொம்ப ஈகரா இருக்கேன் கா!” அவளது குரலில் ஆர்வம் கொட்டிக் கிடந்தது. ஆதிரை அவளை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு கணினியின்புறம் திரும்பினாள்.

தேவா அன்று காலையில் தாமதமாகத்தான் வந்தான். எப்படியும் மதியத்திற்கு மேல்தான் அனைவரிடமும் திருமண விஷயத்தைப் பகிர்வான். சரியாகச் சொன்னால் மாலை தேநீர் நேரத்தைப் பயன்படுத்துவான். வேலை நேரத்தைக் கெடுத்துக் கொள்ள விரும்ப மாட்டான் என அவள் கணித்தது சரி என்பது போல அவன் காலையில் சோதனைக் கூடத்தை எட்டிப் பார்க்கவே இல்லை.

பொன்வாணியை வைத்து நடந்த சண்டைக்கு மறுநாள் அவர்கள் கடைசியாய் பேசிக் கொண்டது‌. அடுத்து வந்த பத்து நாட்களும் சாதாரண பேச்சுக்களே அருகிப் போய்விட்டன‌. ஆதிரை எப்போதும் போல வேலைக்கு வந்தாள், சென்றாள்.

அவர்கள் இருவருக்கும் திருமணம் என்று கூறினால் ஒருவரும் நம்ப மாட்டார்கள் அப்படித்தான் இருந்தது இவர்களின் நடவடிக்கை. தேவா திருமணம் முடியும் வரை ஆதிரையிடம் பேச வேண்டாம் என்ற எண்ணத்தில் இருந்தான். எதாவது பேசச் சென்றால் உன்னுடைய விருப்பத்தை மட்டுமே முன்னிறுத்தி இந்த திருமணம் நடக்கிறது. உனக்கு வேண்டாம் என்றால் இப்போது கூட நிறுத்திவிடலாம் என்பது போல அவளது பேச்சுக்கள் இவனைக் காயப்படுத்திக் கடுப்பேற்றுபவையாக இருக்கும். அதில் தேவா கடுப்பாகி பதிலுக்குப்‌ பதில் பேசினால் மனக்கசப்புகளே எஞ்சும்.

அதுவும் இல்லாமல் தேவாவிற்கு ஆதிரை மீது கட்டுக்கடங்காத கோபம் ஒருபுறம் இருந்தது. அது எதையும் காண்பிக்க முடியாத சூழல். எதாவது கூறினால் திருமணம் வேண்டாம் என்று அவள் கூறினாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. அதனாலே
தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொண்டிருந்தான். எந்த தடங்கலும் அற்றுத் திருமணம் முடியட்டும், பிறகு அவளைப் பார்த்துக் கொள்ளலாம் என மனதில் உருப்போட்டுக் கொண்டிருந்தான்.

ஆதிரை கடந்த பத்து நாட்களும் குழப்பத்திலே சுற்றினாள். எப்போதும் ஒரு முடிவை எடுத்துவிட்டால், அதன் சாதக பாதங்களைப் பார்த்துக் கொள்ளலாம் என்ற அசட்டைத் தனம் அவளிடம் நிரம்பி இருக்கும். அதற்காக சட்டென்று எதையும் சிந்திக்காமல் செய்யக் கூடியவள் அன்று. தேவாவின் விஷயத்திலே அவள் அலசி ஆராய்ந்து யோசித்து தான் இந்த முடிவை எடுத்தாள்.

ஆனால் பொன்வாணியின் அன்றைய பேச்சிற்குப் பின்னே இவளுக்கு மனம் முழுவதும் பயம் அப்பிக் கிடந்தது. முன்பென்றால் அவளுடைய முடிவு தனியொருத்தியாய் அவளை மட்டுமே பாதிக்கும். ஆனால்,‌ இப்போது அவளது ஒவ்வொரு செயலையும் சொல்லும் அபியையும் சேர்த்தே பாதிக்கும்.

கண்டிப்பாக திருமணம் முடிந்து அங்கே சென்றால் பொன்வாணியின் சுடு சொற்களை கேட்க நேரிடும். அவருடைய கோபம் நியாயம்தான். ஆனால் அதை தன்னிடம் காண்பித்து என்னவாகப் போகிறது. அவர் பெற்ற மகன்தானே யாருக்குமே விருப்பம் இல்லை எனினும் அவனது பிடித்ததைக்கொண்டு இத்திருமணத்தை முன்னகத்தியிருக்கிறான். அவரிடம் காட்ட முடியாத கோபத்தை இவளிடம் காண்பிப்பது நியாயமற்ற செயலாகிற்றே.

சரி, இவளாவது தேவா என்ற மனிதனுக்காக அவரைப் பொறுத்து செல்லலாம். ஆனால், அபி. அவன் சிறுவன். பொன்வாணி அவன் மனம் நோகும்படி வார்த்தையாலோ அல்லது செயலாலோ காயப்படுத்தி விடுவாரோ என்ற பயமிருந்தது.

ஆதிரை அவர் என்னப் பேசினாலும் அதைக் கேட்டு அமைதியாய் இருக்கும் ரகமல்ல. ஒன்றிற்கு இரண்டாக பதில் கூறினால் மட்டுமே இவளுக்கு மனம் மட்டுப்படும். ஆக, திருமணத்திற்கு பின்னான வாழ்க்கையின் கற்பனைகள் இப்போதே அவளுக்குத் தெரிந்தது.

தனக்கும் தாய்க்கும் இடையில் தேவாவின் தலை உருளும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. தான்தான் தனியாய் யாருமற்று அனாதையாக வளர்ந்தோம். தன் மகனாவது குடும்ப சூழ்நிலையில் வளரட்டுமே என்ற சுயநலத்தால்தான் ஆதிரை இத்திருமணத்திற்கு சம்மதித்தாள். ஆனால், அது தவறென மூளை அனத்தியது. அதனாலே எதையும் யோசிக்க தோன்றாமல் அப்படியே சுற்றினாள். எல்லாவற்றையும் விட தேவாவின் மீதிருந்த நம்பிக்கை அவளது பயத்தை நீர் பட்ட நெருப்பாய் அணைத்துப் போட்டுவிட்டது. அவன் பார்த்துக் கொள்வான். அவன்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். அவனுக்கு வேறு வழியும் இல்லை என மனம் கேலி செய்தது.

இறுதியில் என்னதான் இந்த திருமண வாழ்க்கையில் இருக்கிறது என்று பார்த்து விடலாம் என்றெண்ணி பெருமூச்சுவிட்டாள்‌.

மாலை இடைவேளை நேரம் வரவும், அனைவரும் ஆசுவாசமாய் அமர்ந்து தேநீரைப் பருக, “எல்லாரும் ஃபைவ் மினிட்ஸ்ல மிஷினரி ஹால்ல அசெம்பிள் ஆகுங்க. தேவா சார் ஏதோ பேசணுமாம்!” என சுபாஷ் வந்து உரைத்தான்‌.

“ண்ணா... சார் என்ன பேசப் போறார்னு உங்களுக்குத் தெரியுமா? எனக்குத் தெரியுமே. அவரோட மேரேஜ்க்கு இன்வைட் பண்ணப் போறாரு!” என தர்ஷினி சுபாஷோடு பேசியவாறே வெளியே செல்ல, அடுத்து இரண்டு நிமிடத்தில் ஆதிலாவும் கோமதியும் கூட அகன்றனர். ஆதிரை மட்டும் அங்கே போக சங்கடப்பட்டுக் கொண்டே அமர்ந்திருக்க, தேவா வந்து சோதனைக் கூடத்தின் வாயிலை மறைத்து நின்றான்.

“மேடம்க்கு தனியா கூப்பிடணுமோ?” அவன் கேலியாய் கேட்க, ஆதிரை பட்டென்று மடிக்கணினியை அணைத்துவிட்டு அவன் முன்னே வந்து நின்றாள்.

“நீங்களே எல்லாரையும் இன்வைட் பண்ணலாம் இல்ல. நான் எதுக்கு?” அவன் முகத்தைப் பார்க்காது எதிரே நின்று கொண்டிருந்த வாகனத்தில் கண்களை மேய விட்டாள்.

“ஓ... நீ எதுக்கு? கரெக்டா மேரேஜ் அன்னைக்கு வந்து மேடைல உக்கார்றது மட்டும்தானே உன் கடமை. மத்ததைப் பத்தி நீ ஏன் கவலைப்படப் போற. நீ கெஸ்ட் மாதிரி? ஹம்ம், தாலி கட்டுற நேரத்துக்கு வந்துடுவீயா? இல்ல, அதுக்கும் ஏன் வரணும்னு கேட்பீயா?” அவன் எள்ளலாகக் கேட்டான்.

அதன் பின்னே ஏகப்பட்ட கடுப்பும் கோபமும் இருந்தது. இவன் எத்தனைப் போராடத்தை தாண்டி இந்த திருமணத்தை நல்லபடியாக நடத்திவிட்டு வேண்டும் என்று முனைப்பில் இருக்கிறான். ஆனால், ஆதிரையிடம் அதற்கான எவ்வித எதிர்வினையும் இல்லை. என்னவோ யாருக்கோ திருமணம். இவள் விருந்தினர் போல அல்லவா நடந்து கொள்கிறாள்.

இந்த பத்து நாட்களில் என்ன செய்தான், பத்திரிகை அனைவருக்கும் கொடுக்கத் தொடங்கி விட்டார்களா? மண்டபம் பார்த்து விட்டார்களா? எனத் தகவலாய்க் கூட இவள் எதைப் பற்றியும் கேட்கவில்லை என்ற கோபம் அவனுக்கு. சரி, கேட்கவில்லை, எதிலும் இவள் பங்கு கொள்ளவில்லை. குறைந்தபட்சமாக இரண்டொரு வார்த்தைகாளாவது சம்பிரதாயத்திற்காக கேட்டிருக்கலாம். அதுவும் இல்லை, என்னவோ இவளுக்குப் பிடிக்காத திருமணம் போல நடந்து கொள்கிறாளே என மனதிற்குள் பொறுமினான்.

ஆதிரை நிமிர்ந்து அவனை முறைத்தவள், “ஐ ஃபீல் எம்பாரசிங். நீங்க பாஸ், சோ ஒருத்தரும் உங்களைக் கேள்வி கேட்க மாட்டாங்க. பட், நான் அப்படி இல்ல. என்னைத்தான் என்ன? ஏதுன்னு கேட்பாங்க!” என்றாள் கடுப்புடன்.

“யார் என்னக் கேட்டாலும் என் ரூம்க்கு அனுப்பிவிடு. நான் பதில் சொல்லிக்கிறேன்!” என்றவன் அவள் எதிர்பாராது நேரத்தில் தோளில் கைப்போட்டு அணைக்கவும், ஆதிரை திடுக்கிட்டாள்.

“தேவா சார்!” அதட்டலுடன் அவன் கையைத் தட்டிவிடப் பார்த்தாள்.

“பேசாம வாடீ... இன்னும் ஒரு வாரத்துல கல்யாணம். ஏதோ மூனாவது மனுஷன்கிட்ட பேசுற மாதிரி பிஹேவ் பண்றா. நீ நடத்துக்கிறதைப் பார்த்தா, எனக்கே மேரேஜான்னு டவுட் வருது!” அவன் எரிச்சலாய் முணுமுணுத்து முன்னே நடக்கவும், ஆதிரையும் அவனோடு இழுபட்டாள்.

தொடரும்...

சாரி! சாரி! சாரி! ரொம்ப பெரிய கேப்! எதிர்பாராதது. இனிமே தொடர்ந்து அப்டேட்ஸ் கொடுத்து கதையை நல்லபடியா வழியனுப்பி வச்சுடலாம் 😉😌

 
Active member
Messages
202
Reaction score
162
Points
43
எது நல்லபடியா வழி அனுப்பிடலாம் ஆஹ். 🤣🤣🤣
By the by idhuvum marriage prep epidhan sis
Where is kalayana epi
 
Well-known member
Messages
445
Reaction score
323
Points
63
Ethey nalla padiya anupi vidalam ah enga ma mental hospital ka pinna yazh um ponvaani um avan ah paduthu ra pattu ku avan nalla padiya manamedai ku varuvan na ra thu yae doubt than ithula ne vera kalyanam panni vaikama avan ah suthal ah la vidura ah
 
Top