• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,194
Reaction score
3,478
Points
113
நெஞ்சம் – 34 💖

ஆதிரை தேவாவிடம் சம்மதம் தெரிவித்து இரண்டு நாட்கள் கடந்திருந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் நேரில் முறைத்துக்கொண்டு தான் சுற்றினர்.

தர்ஷினி தேவாவின் பார்வையைக் கவனித்து, “ஏன்கா, இந்த தேவா சார் ஏன் உங்களை முறைச்சுட்டே சுத்துறாரு. என்னவாம் அவருக்கு?” எனக்கேட்டே விட்டாள்.

“ப்ம்ச்... அது முறைப்பு இல்ல தர்ஷினி. ரசிச்சுப் பார்க்குறது!” ஆதிரை வெகுத் தீவிரக் குரலில் கூறவும், மற்றவள் பக்கென சிரித்துவிட்டாள்.

“ப்ம்ச்... சுபாஷ் அண்ணாவோட சேர்ந்து நீங்களும் காமெடி பண்ணீட்டு இருக்கீங்க!” தோளில் அடித்துவிட்டு தர்ஷினி அகல, “உண்மையை சொன்னா யாரு நம்புறா?” என ஆதிரை தோளைக் குலுக்கினாள்.

மறுநாள் காலையில் ஆதிரை வரும்போது தான் தேவாவின் மகிழுந்தும் உள்ளே வந்தது. இவள் வாகனத்தை நிறுத்திவிட்டு நடக்க, ஹரியும் தேவாவும் அவனது அலுவலக அறை நோக்கிச் சென்றனர்.‌

“இன்னைக்கு நான் உங்களுக்கு முன்னாடியே வந்துட்டேன் க்கா!” என்ற தர்ஷினியின் உற்சாக குரலில் இவள் இளமுறுவலுடன் சென்று கைப்பையை மேஜை மீது வைத்தாள்.

எப்போதும் போல ஒருவர் பின்னே மற்றவர் வர, வேலைத் தொடங்கியது. நேற்று தேவா இல்லாத போது இருவர் வந்து அவர்களது உணவு விடுதிக்கு பால் விநியோகம் செய்ய கேட்டிருக்க, செயலியில் பணத்தைக் கட்டிவிடக் கூறியவள், அதன் விவரங்களைத் தனியே பதிந்து வைத்தாள்.

தேவாவிடம் அதை உரைக்க வேண்டும் என்று அப்போதுதான் யோசனை வந்தது. “தர்ஷினி, நான் போய் தேவா சார்கிட்டே நேத்து வந்த ஆர்டரைப் பத்தி சொல்லிட்டு வரேன். நீ இந்த சாம்பிளை போட்டு முடிச்சு வை!” என்றவாறே நகர்ந்தாள்.

மரியாதை நிமித்தமாக கதவை தட்டிவிட்டு உள்ளே சென்றாள். இவளைப் பார்த்ததும் ஹரி புன்னகைத்தான். இவளும் சம்பிரதாய சிரிப்புடன் தேவாவிடம் மடிக்கணினியைக் காண்பித்தாள். அவர்கள் இருவரும் ஏதோ பேசிக் கொண்டிருக்க கூடும். இடையே இவள் வந்ததும் பேச்சு தடைபட்டிருந்தது.

“சார், நேத்து ஒரு ஆர்டர் வந்துச்சு. நான் ஆல்ரெடி டீடெயில்ஸ் அப்டேட் பண்ணிட்டேன். நீங்க செக் பண்ணிட்டீங்களா?” எனக் கேட்டாள்.

“யெஸ், யெஸ், ஆதிரை‌‌. நான் பார்த்துட்டேன். டிஸ்டென்ஸ் கொஞ்சம் அதிகமா இருக்கு. நம்ப லிமிட்க்கு உள்ள வரலைன்னு யோசிச்சேன்!” அவள் முகம் பார்த்தான்.

“எனக்கும் தோணுச்சு சார். பட், ஃபைவ் கிலோ மீட்டர்ஸ் தானே? டெய்லி ஐம்பது லிட்டர் கேட்டிருக்காங்க. நான் ஓகே சொல்லலை, உங்ககிட்டே கன்பார்ம் பண்ணிட்டு சொல்றேன்னு சொல்லி இருந்தேன். ஆனால் அவங்க அட்வான்ஸ் பே பண்ணிட்டாங்க!” என்றாள் தயக்கத்துடன்.

“ஓகே, நான் பேசிக்கிறேன்!” அவன் கூறியதும் தலையை அசைத்து ஏற்றவளின் விழிகள் தேவாவை சற்று உற்றுப் பார்த்தன. என்னவோ அவனிடம் ஒரு பதற்றம் அல்லது இயல்பு தொலைந்திருப்பதாய் ஒரு எண்ணம். எப்போதும் பேசும்போது அவள் கண் பார்த்து தெளிவாய் பேசுவான். ஆனால் இன்றைக்கு அவனது கவனம் இங்கே இல்லை.

“என்னாச்சு?” ஆதிரையின் குரலில் அலைபேசியில் விழிகளை மேயவிட்டிருந்த ஹரி நிமிர்ந்தான்.

“என்ன என்னாச்சு?” தேவா நெற்றி சுருங்க கேட்டான்.

“இல்ல, உங்க முகமே சரியில்ல‌. எதாவது ப்ராப்ளமா?” இயல்பாய் அவளது வார்த்தைகள் வந்து விழுந்தன. கடந்து சென்ற வாரத்தின் நெருக்கதின் தன்னியல்பாய் இவளது செயல்கள் இருந்தன.

“நத்திங்... ஐ யம் ஓகே, நீ கிளம்பு!” அவன் கூற்றில் இவளிடம் மெல்லிய தயக்கம். கோபமாய் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டு சுற்றினாலும் தேவாவின் இந்த முகம் அவளை நிதானம் கொள்ள செய்தது.

“ஆர் யூ ஷ்யூர்?” அவள் உறுதிபடுத்த கேட்டாள்.

“ஐ யம் டேம்ன் ஷ்யூர். ப்ளீஸ் அவுட்!” அவன் மெலிதாய் குரலை உயர்த்த, கீழ்க்கண்ணால் அவனை முறைத்துவிட்டு ஆதிரை இரண்டு எட்டுகள் வைத்தாள். அவள் மூளையில் திடீரென விளக்கெரிந்தது. அவனது பதற்றம் தாங்கிய முகத்திற்கான முகாந்திரம் இப்போது இவளுக்குத் தெளிவாய் விளங்கிற்று.

தன்னைப் பற்றி பேசத்தான் ஹரியை அழைத்திருப்பான் போல. எப்படி எங்கே தொடங்குவது எனத் தெரியாது சங்கடம் மிக அவன் அமர்ந்திருப்பதை உணர்ந்தாள். இந்த பதற்றத்தை முதன்முதலில் தன்னிடம் விருப்பம் உரைக்கும் போது அவள் கண்ணுற்றிருந்தாள்.

‘சே... பாவம்!’ மனம் அவனுக்காக கரிசனத்தை உதிர்த்தது. தனக்கு கீழே பிறந்த தம்பியிடம் இத்தனை வயதிற்குப் பிறகு ஒரு பெண்ணைப் பிடித்திருக்கிறது, காதலிக்கிறேன். திருமணம் செய்ய முடிவெடுத்திருக்கிறேன் என்று உரைக்கும் போது எத்தனை சங்கடமாக இருக்குமென மனம் கூற, அவனைத் திரும்பிப் பார்த்தாள். ஒருவித அவஸ்தையோடு அமர்ந்திருந்தான். இவளது முகம் மென்மையானது.

வெளியே செல்லாது மீண்டும் தன்புறம் திரும்பியவளைப் பார்த்த தேவா, கண்களாலே வாயிலைக் காண்பித்தான். மெல்லிய தலையாட்டலுடன் அதை மறுதலித்தவள், ஹரியின் புறம் திரும்பினாள்.

ஏனோ அவன் சங்கடத்தைப் போக்கிவிட வேண்டும் என்றொரு எண்ணம். எப்போதும் யாரிடமும் வளைந்து கொடுக்காது சிடுசிடு தேவநந்தன் இன்றைக்கு ஆசிரியரிடம் வீட்டுப் பாடம் எழுதவில்லை எனக் கூற தயங்கும் சிறுபிள்ளை போல அமர்ந்திருப்பதைக் கண்டு உதட்டோரம் புன்னகை உதிர்ந்தது.

ஹரி தேவாவையும் ஆதிரையும் பார்த்திருந்தான். ஏன் இந்தப் பெண்ணிடம் தன் அண்ணன் ஒருமையில் பேசுகிறான் என அவனுக்கு கேள்வி எழும்பிற்று. எத்தனை வயது வேறுபாடுகள் இருப்பினும் தேவா யாரிடமும் மரியாதை குறைவாய் பேசியதில்லை. அப்படி இருக்கையில் ஏன் ஆதிரையிடம் மட்டும் இந்த அணுகுமுறை. அவளுமே வெகு இயல்பாக அவனிடம் கேள்வி எழுப்பினாளே எனப் புரியாது பார்த்தான்.

எல்லாவற்றையும் விட ஏதோ முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்று அழைத்து வந்த தேவா, காலையிலிருந்து சுற்றி வளைத்து மூக்கைத் தொட்டுக் கொண்டிருந்ததில் அவனுக்கே சுவாரஸ்யம் கூடிப் போயிற்று. எப்போதும் அதட்டியே பழக்கப்பட்ட தேவா ஏன் எதையோ கூறத் தயங்குகிறான். அதுவாக இருக்குமோ? இதுவாக இருக்குமோ? எனக் கற்பனை கட்டவிழ்ந்தது. ஆனாலும் இவன் அதற்கெல்லாம் சரிபட்டு வர மாட்டான் என மூளைக் கூறியது.

“எப்படி இருக்கீங்க ஹரி சார்?” ஆதிரைக் கேட்கவும், “ஆ... நல்லா இருக்கேன் ஆதிரை. நீங்க?” என புன்னகை முகமாகக் கேட்டான்.

“நானும் நல்லா இருக்கேன். உங்க அண்ணன் எதாவது முக்கியமான விஷயம் பேசணும்னு உங்களைக் கூட்டீட்டு வந்தாரா?” என அவள் கேட்க, இவன் ஒரு நொடி ஆச்சர்யப்பட்டு பின்னர் தலையை ஆமாம் என்பது போல அசைத்தான்.

“மிஸ் ஆதிரையாழ், இது உங்களோட வொர்க்கிங் ஹவர். என் தம்பியோட உட்கார்ந்து பேசுறதுக்கா உங்களுக்கு சேலரி தரலை. கோ அண்ட் டூ யுவர் வொர்க்!” தேவா கோபத்துடன் உரைத்தான். இவள் எதையாவது கூறி விடுவாளோ என்ற பதற்றம் அவனிடம் அப்பிக் கிடந்தது.

“ப்ம்ச்... ஆமா, நான் வேலை பார்க்குறதுக்கு நீங்க சேலரி தரீங்க சார். பத்து நிமிஷம் நான் உங்க தம்பிக்கிட்டே பேசுனா ஒன்னும் வேலை நின்னுப் போய்டாது. முதல்ல நீங்க தண்ணியைக் குடிச்சு ரிலாக்ஸ் பண்ணுங்க. ரொம்ப டென்ஷனா இருக்கீங்க!” எனத் தண்ணீர் பொத்தலை நகர்த்தினாள். அவன் அவளைத் தீயாய் முறைத்தான்.

“முறைச்சது போதும்... தண்ணியைக் குடிங்க!” இவள் மெல்லிய குரலில் அதட்டவும், கடுகடுத்த முகத்துடன் நீரை எடுத்து அருந்தினான். ஹரிக்கு தலை சுற்றியது.
அவன் விழித்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.

“ஹரி சார், நான் நேரா விஷத்துக்கே வரேன். உங்க அண்ணன் தேவாவுக்கு ஒரு பொண்ணைப் பிடிச்சிருக்கு. ஐ மீன் லவ் பண்றாராம்!” அவள் கூறியதும் தேவாவிற்கு புறையேறியது.

“பார்த்துக் குடிங்க!” அவனிடம் கடிந்தவள், “இவ்வளோ நாள் சிங்கிளா இருந்த உங்கண்ணன் மேரேஜ் பண்ணலாம்னு முடிவெடுத்திருக்காரு. நீங்க அவரைவிட சின்னப் பையன். உங்ககிட்ட சொல்ல எம்போரசிங்கா இருக்கும். அதான் சொல்லாம தயங்கிட்டு இருக்கார்!” அவள் கூறி முடித்ததும் ஹரியின் முகம் அதிர்ந்து பின் ஆச்சர்யத்தை உமிழ்ந்தது.

“டேய் தேவா... ஆதிரை சொல்றது உண்மையா டா? எனக்கு தலை சுத்துற மாதிரி இருக்கு டா. அந்த தண்ணியைக் குடு கொஞ்சம்!” எனக் கையை நீட்டியவனை முறைக்க முயன்றாலும் தேவாவிடம் சங்கோஜம் வந்து ஒட்டிக் கொண்டது. ஆதிரையை முறைத்துக் கொண்டே அவனிடம் நீரைக் கொடுத்தான்.

ஹரி ஆதிரைக் கூறியதை கேட்டு உள்வாங்கி உணர்ந்து கிரகிக்கவே இரண்டு நிமிடங்கள் தேவைப்பட்டன. தேவா காதலிக்கிறானா? என்னுடைய தமையனா? அவனுக்கு சிரிக்க தெரியும் என்பதே எனக்கு சொற்ப நாட்களாகத்தானே தெரியும். அப்படி இருக்கையில் இவன் காதலிக்கிறானா? மனம் அதிசயித்துப் போனது. என்னவோ அவன் கொலை செய்ததைப் போலவே பார்த்து வைத்தான். அதில் தேவாவிற்கு மேலும் மேலும் சங்கடமானது. சட்டென்று எழுந்து வெளியே சென்று பின்முடியைக் அழுந்தக் கோதினான்.

‘ஆதிரை!’ கோபமாய் கடுப்பாய் கொஞ்சம் ரசிப்பாய் அவளது பெயரை முணுமுணுத்தான். உள்ளே செல்லவே ஒருமாதிரியாய் போயிற்று அவனுக்கு. வெளியே சுற்றியிருந்த மரத்தை வேடிக்கைப் பார்த்தபடியே நின்றான். எப்படியும் அவள் பேசிவிடுவாள் என எண்ணம் தோன்றவும், நெஞ்சில் அவளது முறைப்பான முகம் வந்து மோதிச் சென்றது.

“ஹரி சார், ஏற்கனவே அவர் ஒரு மாதிரி சங்கடமா ஃபீல் பண்றாரு. தேவா சாரா இப்படின்னு உங்களுக்கு அதிர்ச்சியா இருக்கலாம். நியாயம் தான். பட், வேற எதுவும் கேட்டு அவரை சங்கடப்படுத்தாதீங்க!” தேவாவிற்காகவென ஆதிரையின் குரல் ஹரியிடம் சற்றே இறங்கியது.

“ஆதிரை, இது பிராங்க் இல்லைல?” அவன் சந்தேகத்தோடு கேட்க, இவளுக்குப் புன்னகை முளைத்தது.

“உங்க அண்ணன் ப்ராங்க் பண்ணுவாரா?” இவள் கேள்வியாய்ப் பார்க்க, அவன் இல்லையென தலையை அசைத்தான்.

“சரி, என் அண்ணனுக்கே ஒரு பொண்ணைப் பிடிச்சிருக்குன்னா அந்தப் பொண்ணு எப்படி இருப்பாங்கன்னு எனக்குத் தெரியணும். யாருங்க அவங்க?” இவன் ஆர்வமாய்க் கேட்டான். இவ்வளவு நேரம் சரளமாகப் பேசிக் கொண்டிருந்த ஆதிரையின் தொண்டையில் இப்போது வார்த்தைகள் சிக்கி கொண்டன.

“அது... உங்க அண்ணன் கிட்டயே கேட்டுக்கோங்க ஹரி சார். நான் போய் வேலையைப் பார்க்குறேன். இல்லைன்னா எங்க பாஸ் கடிச்சு கொதறீடுவாரு...” கேலியாய் கூறி வெளியே சென்றவளை தேவா தீயாய் முறைத்தான்.

“நான் உங்களுக்கு ஹெல்ப் பண்ணியிருக்கேன் தேவா சார். யூ ஷூட் தேங்க் மீ!” இவள் அலட்டலாய்க் கூறினாள்.

“நான் உன்கிட்ட ஹெல்ப் கேட்கலையே!” மெல்லிய குரலில் அதட்டினான்.

“ஆமா... நீங்க கேட்கலை. பட், எப்பவும் ஹெட் மாஸ்டர் மாதிரி விறைப்பா இருக்க மனுஷன் இன்னைக்கு ஹோம் வொர்க் செய்யாத ஸ்டூடண்ட் மாதிரி உக்கார்ந்து இருக்கவும் மனசு கேக்காம ஹெல்ப் பண்ணேன். தேங்கஸ் சொல்லலைனாலும் எப்போ இந்த முறைக்கிறதை நிப்பாட்ட போறீங்கன்னு தெரியலை!” முகத்தை தோளில் இடித்துவிட்டுப் போனவளை தேவா பார்வையால் மொத்தமும் களவாடியிருந்தான்.

உண்மையில் ஆதிரைக் கூறியது போல ஹரியிடம் எப்படி இந்த விஷயத்தை தொடங்குவது என அவஸ்தையுடன்தான் அமர்ந்திருந்தான். தன் தம்பியிடம் இத்தனை வயதில் காதலிக்கிறேன் எனக் கூறுவது எத்தனை பெரிய சங்கடம். இரண்டு நாட்களாக எப்படி பேசலாம் என உருப்போட்டிருந்த வார்த்தைகள் யாவும் காலையில் காற்றில் கரைந்து போயிருந்தன. சட்டென்று வீட்டில் போட்டு உடைத்துவிட முடியும்தான். ஆனாலும் தனக்கு ஆதரவுக்கரம் நீட்ட, துணைக்குப் பேச ஒரு ஆள் இருந்தால் நன்றாய் இருக்குமென தோன்ற, இவனிடம் பேச அழைத்திருந்தான்.

ஹரி காதல் என்று வந்த போது இது போலவெல்லாம் தடுமாறி நிற்கவில்லை. தேவாவிடம் உதவியும் நாடவில்லை. நேரே தந்தையிடம் சென்று ஜனனியைத் திருமணம் செய்து வையுங்கள் எனக் கேட்டு, தாயிடம் சண்டையிட்டு ஒரு பிரளயத்தைக் கிளப்பிவிட்டே அவனை மனம் முடித்திருந்தான்.

பொன்வாணிக்கு ஜனனியை ஹரிக்கு மணம் முடிப்பதில் முதலில் விருப்பமே இல்லை. தனது ஒன்றுவிட்ட அண்ணன் மகளை இளையவனுக்குப் பேசலாம் என அவர் எண்ணியிருக்க, ஹரி திருமணம் என்று செய்தால் அது ஜனனியைத்தான் செய்வேன் என ஒற்றைக் காலில் நின்று சாதித்திருந்தான். அதற்கே பொன்வாணியை சம்மதிக்க வைக்க மொத்தக் குடும்பமும் அத்தனை அல்லோல்பட்டது. அப்படி இருக்கையில் ஆதிரை விஷயத்தில் அவர் எவ்வாறு எதிர்வினையாற்றுவார் என நினைக்கும் போதே மலைப்பாக வந்தது.

ஆதிரை சம்மதம் சொன்னதும் சட்டென்று திருமணத்தை முடித்துவிட வேண்டும் என்று மனம் முழுவதும் உந்துதல்தான். ஆனாலும் அப்படி எடுத்தோம் கவிழ்த்தோம் என்று திருமணத்தை செய்ய முடியாதே என பெருமூச்சுடன் அறைக்குள் செல்ல, “ப்ம்ச்... நீதானே டி அவன் நல்லபுடி நாணயம். சொக்கத் தங்கம்னு டயலாக் விட்டுட்டு இருந்த. நான்தான் சொன்னேனே... இவன் ஏதோ திருட்டுத்தனம் பண்றான்னு. நீ என்னைத் திட்டுன?” ஹரி மனைவியிடம் மல்லுக் கட்டிக் கொண்டிருந்தான்.

அவள் மறுபுறம் என்ன கூறினாளோ, “ஏய்! நிஜாமா டி. நான் சொன்னதை என்னைக்கு நீ நம்பி இருக்க. ஹம்ம்... அவனே நேர்ல சொல்லுவான். அப்போ வச்சுக்கிறேன் உன்னை!” இவன் பொரிய, “ஹரி...” என தேவாவின் தீப்பார்வை அவனை சுட்டது.

“தேவா வந்துட்டான். நான் அப்புறம் பேசுறேன்!” என்ற ஹரி அழைப்பைத் துண்டித்துவிட்டு தமையன் பேசக் கூட நேரம் அளிக்காது ஓடிச் சென்று அவனை இறுக அணைத்துக் கொண்டான்.

“டேய்... ஹரி!” இவன் அதட்ட, “தேவா... எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு டா. நான்... நீ... உனக்கும் லவ் வரும்னு நான் இமேஜின் கூட பண்ணதில்லை டா!” அவனை விட்டுப் பிரிந்தவனின் வார்த்தைகள் ஆர்ப்பாட்டமாய் வந்து விழுந்தன.

“நானும் மனுஷன் தான் டா!” தேவா முணுமுணுப்புடன் இருக்கையில் அமர்ந்தான்.

“ப்ம்ச்... இப்போதான் ப்ரோ எனக்கு அது தெரியுது. எங்க நீ சிங்கிளாவே இருந்துடுவீயோன்னு அம்மா கவலைப்படும் போது எனக்கும் கில்டா இருக்கும் டா. உனக்கு முன்னாடி நான் கல்யாணம் பண்ணதாலதான் இப்படியோன்னு நினைச்சு வருத்தப்பட்டிருக்கேன். பட், இப்போ ரொம்ப ஹேப்பி டா. நீ அரேஞ்ச் மேரேஜ் பண்ணியிருந்தா கூட நான் இவ்வளோ சந்தோஷப்பட்டிருக்க மாட்டேன். லவ் மேரேஜ் இஸ் அ ப்யூர் ப்லிஸ் டா!” உணர்ந்து கூறினான். இவன் மென்னகையுடன் அதை ஆமோதித்தான்.

“சரி... நீ எதைப் பத்தியும் கவலைப்படாதண்ணா. வீட்ல நான் பேசுறேன். அடுத்த மாசமே கல்யாணத்தை வச்சுடலாம். பொண்ணு வீட்லயும் நம்ப போய் பேசலாம்... அதுக்கு முன்னாடி எனக்குப் பொண்ணு யாருன்னு மட்டும் சொல்லு ப்ரோ. எங்கண்ணனையே விழ வச்ச மேனகையை நான் பார்க்கணும்!” சிரிப்போடு கேட்டான் ஹரி.

தொண்டையைச் செருமிய தேவா, “அதை ஆதிரைகிட்டயே கேட்க வேண்டியது தானே டா?” எனக் கேள்வி எழுப்பினான்.

“ப்ம்ச்... அவங்கதான் உன்கிட்ட கேட்க சொன்னாங்க. நீ சொல்லு மேன் முதல்ல!” இவன் படபடவென பொரிந்தான்.

“இவ்வளோ நேரம்‌ எனக்கு சப்போர்ட் பண்ணி பேசும்போதே தெரியலையா டா. ஆதிரைதான் உன்னோட அண்ணி!” என்றான் தேவா. ஹரிக்கு மீண்டுமொரு அதிர்ச்சி.

“ப்ரோ... நிஜமாவா? நீங்க ரெண்டு பேரும் பேசும்போதே எனக்கு ஏதோ டிப்ரெண்டா ஃபீலாச்சு. நீ ஸ்டாப்கிட்டேலாம் டிஸ்டென்ஸ் கீப்-அப் பண்ணுவ. அதுவும் இல்லாம நீ வா போன்னு பேச மாட்டீயேன்னு நினைச்சேன். பட், ஆதிரையைத்தான் பிடிச்சிருக்குன்னு சொல்வன்னு நான் எக்ஸ்பெக்ட் பண்ணலை!” கடகடவென மூச்சு வாங்க கூறியவன், “ஏன்ண்ணா... அவங்க ஐஞ்சாறு வருஷமா இங்கதானே வேலை பார்க்குறாங்க. முன்னாடியே உனக்கு பல்ப் எரிஞ்சு அவங்களை கரெக்ட் பண்ணி கல்யாணம் பண்ணி இருந்தா இந்நேரம் ரெண்டு புள்ளைங்களே இருந்துருக்கும். ரொம்ப லேட் பிக்-அப் டா நீ!” ஆதங்கமாய்க் கூறிவனை தேவா முறைத்து வைத்தான்.

“சரி... சரி, முறைக்காத. எது எப்போ நடக்கணும்னு விதி இருக்கோ, அப்போதான் நடக்கும்...” என்றவன், “அம்மா அப்பாகிட்ட சொன்னா ரொம்ப சந்தோஷப்படுவாங்க டா. நான் யூனிட்டுக்குப் போகலை. வீட்டுக்குப் போய் முதல்ல அவங்களுக்கு சொல்லணும்!” துள்ளலாய்க் கூறினான்.

“ஹரி... முதல்ல காம் டவுன். நான் உன்கிட்டே இதை ஷேர் பண்ண ஒரு ரீசன் இருக்கு. இந்த மேரேஜை ஈஸியா அம்மா அக்செப்ட் பண்ண மாட்டாங்க. ஒரு சின்ன ப்ராப்ளம் இருக்கு!” தம்பியை இருக்கையில் அமர வைத்தான்.

“என்ன ப்ராப்ளம் ப்ரோ? ஆதிரை வீட்ல ஒத்துக்க மாட்டாங்களா? நம்ப பேசி சம்மதிக்க வைக்கலாம்!” யோசனையும் தமையனைப் பார்த்தான்.

இல்லையென தலையை அசைத்த தேவா, “ஆதிரைக்கு ஒரு குழந்தை இருக்கு!” என்றவனின் குரல் ஹரியின் முகத்தில் அதிர்வை உண்டாக்கிற்று.

“என்ன சொல்ற தேவா?” தான் கேட்டது உண்மையா என்பது போல பார்த்தான் ஹரி.

“யெஸ்... ஷீ ஹேஸ் சைல்ட். அவளோட ஃபர்ஸ்ட் லைஃப் சரியா அமையலை. சோ சிங்கிள் பேரண்டா பையனை வளர்க்குறா!” என்றான் பெருமூச்சுடன். அதற்கு மேலும் ஆதிரையின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி தம்பியாகவே இருந்தாலும் கூட, கூற விருப்பமில்லை. அது அவளுக்கும் தனக்கும் தெரிந்த ரகசியமாகவே இருக்கட்டும் என்றெண்ணினான். ஹரியின் முகம் மாறினாலும் நொடியில் அதை சமாளித்திருந்தான்.

“ஓ... ஆனால் பார்க்க ரொம்ப சின்ன பொண்ணு மாதிரி தெரியுறாங்களே!”

“ஹம்ம்... ஷீ இஸ் தேர்டி!” தேவா கூறியதும், ஹரிக்கு ஆச்சர்யம்தான்.

“என்ன சொல்லன்னு தெரியலை தேவா. வீட்ல எல்லாரும் ஓகே சொன்னாலும் அம்மா அவ்வளோ சீக்கிரம் சம்மதம் சொல்ல மாட்டாங்க. ஜானுவைக் கல்யாணம் பண்ணிக்கவே நான் எவ்வளோ சண்டை போட்டேன்னு உனக்கே தெரியும்!” அவன் குரல் சோர்ந்து வந்தது. தேவா எதுவும் பேசவில்லை.

“கேட்குறேன்னு தப்பா எடுத்துக்காத ப்ரோ. நீ ஆதிரை விஷயத்துல ஸ்ட்ராங்கா இருக்கீயா? ஏன்னா அவ்வளோ ஈஸியா இந்தக் கல்யாணம் நடக்கும்னு தோணலை!” ஹரி தயங்கியபடியே கேட்டான்.

“ஆதிரயைக் கல்யாணம் பண்ணலைன்னா, நான் யாரையும் பண்ண மாட்டேன் டா. ஐ லவ் ஹெர். அவளை என்னால விட முடியாது டா. உனக்கே தெரியும் என்னோட குணம். பட் மூனு மாசம் மானம் ரோஷம்னு எல்லாத்தையும் விட்டுட்டு அவ பின்னாடி போய் சம்மதம் வாங்கி இருக்கேன். அப்படி இருக்கப்போ எப்படிடா நான் அவளை விடுவேன். ஐ யம் டேம்ன் சீரியஸ்?” எனக் கூறி தலையைக் கோதியவனை ஆச்சர்யமாய் பார்த்தான் ஹரி.

இது தன் தமையன் தேவாவா என இன்னுமே அவனால் நம்ப முடியவில்லை. காதல் வந்தால் எல்லோரும் பெண்ணினத்திற்கு அடிமைதான் போல என நினைத்ததும் சிரிப்பு வந்தது.

எழுந்து வந்து அவன் தோளைத் தட்டியவன், “கஷ்டம்தான் டா... பட் முடியவே முடியாதுன்னுலாம் இல்ல. என்னை நம்ப அம்மாவோட பாசமான முகத்தை தவிர வில்லி ஃபேஸ் ஒன்னு வச்சிருக்கும். அதை இப்போ பார்க்க வேண்டி வரும். என் கல்யாணத்தப்போவும் அப்படித்தானே பண்ணாங்க. நீ கவலைப்படாதே. ஆதிரைதான் எனக்கு அண்ணி. நைட் வீட்ல பேசுவோம். பட் ஒன் திங்க் அம்மா கன்வின்ஸ் ஆகலைன்னா நீ வெயிட் பண்றேன்னு சொல்லிடாதே. இதான் சாக்குன்னு அம்மா உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கிடும். முடிஞ்சளவு கன்வின்ஸ் பண்ணுவோம். முடியலையா அப்பா தலைமைல ஜாம் ஜாம்னு கல்யாணம் பண்ணிடலாம்!” என்றான்.

“ப்ம்ச்... ரெண்டு பேரும் சம்மதிக்கணும் டா. அம்மாகிட்டே பேசலாம்!” தேவா அழுத்திக் கூற, “ரைட் விடு, பார்த்துக்கலாம். எங்க ரெண்டு பேரை விட உன் மேலதான் அம்மாக்கு ரொம்ப பாசம். சோ, அதை வச்சே கரெக்ட் பண்ணலாம்!” என்றவன், “நைட் வீட்ல சொல்லிடலாம் டா. ரொம்ப டிலே பண்ண வேணாம். இப்போ சொன்னாலே, அம்மாவை கன்வின்ஸ் பண்ணி கல்யாணம் பண்ண மாசக்கணக்கா ஆகிடும்!” என எழுந்து நின்றான். தேவா தலையை அசைத்தான்.

“சரி, நான் கிளம்புறேன் டா. ஹம்ம்... உன் செலக்ஷன் நல்லா இருக்கு டா. எங்களை எவ்வளோ மிரட்டுற நீ. அண்ணி உன்னை மிரட்டுறதை கண்குளிரப் பார்த்து ரசிக்கணும் ப்ரோ!” என முணுமுணுத்துவிட்டுச் சென்றவனை இவன் முறைத்து வைத்தான்.

ஹரி சோதனைக் கூடத்தை எட்டிப் பார்க்க ஆதிரை தீவரமாக வேலை செய்து கொண்டிருந்தாள். அவளிடம் பேசலாம் என்ற எண்ணத்தைக் கைவிட்டான். தேவாவே
அத்தனை சங்கடமாய் பேச, ஆதிரையும் இவனிடம் பேச கூச்சப்படலாம். பொறுமையாய் இன்னொரு நாள் பேசிக் கொள்ளலாம் என எண்ணியவாறே வெளியேறினான்.

தொடரும்.‌‌..

 
Well-known member
Messages
445
Reaction score
323
Points
63
Deva ne love panra nu sonnathukae hari ipadi shock aaguran ithula unga athi arputha proposal ah mattum paiyan parthu irundhan apadiyae mayangi vizhunthutu irundhu irupan
 
Well-known member
Messages
510
Reaction score
383
Points
63
அப்பாடா ஒரு வழியா ஹரி கிட்ட விஷயத்தை சொல்லியாச்சு, வீட்ல அவன் பார்த்துப்பான்
 
Active member
Messages
192
Reaction score
159
Points
43
Dialogues are excellent sis.. eagerly waiting for the next epi.
 
Top