• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,194
Reaction score
3,478
Points
113
நெஞ்சம் – 32.1 💖

ஆதிரை தேவாவிடம் தன் மறுப்பை அழுத்தமாகப் பதிவு செய்திருக்க, மறுநாள் எப்போதும் போல அவள் வேலைக்கு வந்தாள். அவன் எதிர்வினை என்னவாக இருக்க கூடுமென எண்ணியவாறே அவள் அலுவலைக் கவனிக்க, தேவா சற்று தாமதமாகத்தான் வந்தான்.

அவன் பார்வை ஆதிரையின்புறம் திரும்பவே இல்லை. அவள் ஒருத்தி இருக்கிறாள் என்று கூட எனக்குத் தெரியாது என்பது போல சுபாஷிடம் பேசிவிட்டு அறைக்குச் சென்றான்.
இவள் லாக் புத்தகத்தை அவன் அறைக்குகொண்டு சென்று வைத்தாள்.

நிமிர்ந்து கூடப் பார்க்காதவன், “அந்த ரெண்டு ஆர்டர்க்கு பால் போதுமான அளவு இருக்கான்னு செக் பண்ணுங்க மிஸ் ஆதிரையாழ். கரெக்ட் டைம்க்கு பால் டெலிவரி பண்ணணும்!” எனக் கூறவும், இவள் தலையை அசைத்துவிட்டு வந்தாள். அவள் முகத்தில் ஆச்சர்யம் ஏதுமில்லை. இவன் இப்படித்தான் என ஏற்கனவே எண்ணியிருந்தாள். அதனால் பெரிதாய் யோசிக்காது அதைப் புறந்தள்ளினாள்.

அடுத்து வந்த நாட்களும் அப்படித்தான் நகர்ந்தன. இருவரிடமும் பெரிதாய் எவ்வித மாற்றமும் இல்லை‌. உன் இன்மை என்னை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்பது போல தேவா வெகுவாய் ஆதிரையை அலட்சியம் செய்தான். முன்பைவிட இன்னுமே வேலையில் அதிக கெடுபிடியாய் இருந்தான். ஆதிரையும் அவனுக்கு சளைத்தவள் இல்லை என்பது போல நீ எனக்கொரு மூன்றாம் மனிதன்தான் என்பது போல நடந்து கொண்டாள்.

அவன் கண்முன்னே சுபாஷூடம் சிரித்துப் பேசினாள். நட்பாய் அவன் தோளில் கையைப் போட்டாள். ஆதிலாவை அவனுக்குப் பிடித்திருப்பதாக அவன் தயங்கி தயங்கி இவளிடம் தனியாய் இருக்கும்போது உரைத்துவிட, இவளுக்கு ஆச்சர்யம் எதுவும் இல்லை.

“ஹம்ம்... தர்ஷினிகிட்டே இதை சொல்லுங்க சுபாஷ். நல்ல எண்டர்டெயின்மெண்டா இருக்கும்!” சிரிப்புடன் கூறியவளை மென்மையாய் முறைத்தான். பின்னர் ஆதிலாவைப் பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் காண்பித்தான். அவளிடம் எப்படி தன் நேசத்தை வெளிப்படுத்துவது என ஆதிரையைப் போட்டு பாடாய்படுத்தினான். அதனாலே அவர்கள் இருவரும் அடிக்கடி அமர்ந்து பேசினர். இது எதுவும் தேவாவின் விழிகளுக்குப் புலப்படாமல் இல்லை. அவளை அழுத்தமாய் பார்த்தான்.

ஆதிரையும் தன்னையே தொடரும் அவனின் பார்வையை உணர்ந்தே இருந்தாள். அவள் உடல் மொழியிலும் அலட்சியம் புகுந்தது. நான் யாருடன் பேச வேண்டும் என்பதை நீ தீர்மானிக்க முடியாது என அவள் செயலில் காட்ட, தேவாவிற்கு ஏக எரிச்சல். ஆனாலும் எதுவும் என்னைப் பாதிக்கவில்லை என தோள் குலுக்கலில் புறந்தள்ளினான்.

அந்த வாரம் முழுவதும் இப்படியேதான் கடந்திருந்தது.
ஞாயிறு காலை எட்டுமணியாகி இருந்தது. தேவா எழாது படுக்கையில் புரண்டான். இன்னும் சிறிது நேரம் உறங்கு என தூக்கமற்று சிவந்து செவ்வரியோடியிருந்த விழிகள் அவனை படுக்கையில் அமிழ்த்த முயன்றன. இன்றைக்கு உழவர் துணையில் கொஞ்சம் வேலை இருந்தது. இவனுடைய இருப்பு பெரிதாய் தேவைப்படவில்லைதான். எனினும் சும்மாவே படுத்திருப்பது எரிச்சலாய் இருந்தது.

கடந்த சில நாட்களாகவே ஒருமாதிரி கடுப்புடனே நாட்கள் கடந்தன‌. உழைத்து களைத்துப் படுக்கையில் விழுந்ததும் விழிகளை எட்டும் உறக்கம் நான்கைந்து நாட்களாய் எங்கேயோ தொலைந்து போயிருந்தது. நேற்றிரவும் நீண்ட நேரம் முயன்றும் கூட தூக்கம் வரவே இல்லை.

ஆதிரை முகம்தான் கண்ணை நிறைத்தது. அவள் வேண்டாமென தூக்கிப் போட்டுவிட்டு வேறு வேலையைப் பார்க்கலாம் என ரோஷமாய் நினைத்தவனால் நான்கு நாட்கள் கூட அதை நடைமுறைப்படுத்த முடியவில்லை.

இந்தப் பெண் அவனை அதிகம் தொல்லை செய்தாள். சரியாய் உண்ண முடியவில்லை, உறங்க முடியவில்லை. வேலையில் கூட கவனம் சிதறிப் போனது. யாருடைய கவனித்திலும் தன்னுடைய தடுமாற்றம் பதியாதவாறு பார்த்துக் கொண்டான். மற்றபடி தனக்குள்ளே வெகுவாய்ப் போராடி தோற்றுப் போயிருந்தான்.

எதுவும் பேசாது எழுந்து சென்று குளித்து வந்தவன் ஆலீவ் இலை நிற முழுக்கை சட்டையை எடுத்து உடுத்தினான்‌. கண்ணாடியில் பார்த்தவனுக்கு எரிச்சலாய் வர, வேகவேகமாக பொத்தான்களை கழற்றி எறிந்துவிட்டு வீட்டில் அணியும் ஒரு சட்டையும் கால்சராயும் எடுத்து உடுத்தி தயாராகி வெளியே வர, கூடமே சலசலத்தது.

ராகினி அங்குமிங்கும் ஓட, பிரதன்யா அவளை அடிக்கத் துரத்திக் கொண்டிருந்தாள். ஹரி இரவு உடையிலே தட்டில் இடியாப்பத்தை வைத்து கொறித்துக் கொண்டிருந்தான். ஜனனி கையில் பழச்சாறுடன் மகளை அதட்டிக் கொண்டிருக்க, இவனைக் கண்டதும் பொன்வாணி சமையலறையிலிருந்து வந்தார்.

“வா தேவா... சாப்பிடு!” என் தட்டில் இடியாப்பத்தை அவர் வைதத்தும் ஆதிரை ஒரு நொடி கண்முன்னே வந்து சென்றாள். விருப்பும் வெறுப்புமாய் அவளது முகத்தை ஒதுக்கியவன், உணவில் கவனமானான். ஹரி தொலைக்காட்சியில் கவனத்தை வைத்திருந்தான். தாயின் குரல் கேட்டதும் திரும்பி தமையனைப் பார்க்க, அவன் உடையில் இவனது விழிகள் உயர்ந்தன.

அருகே இருந்த மனைவியின் கையை வலிக்காது நிமிண்டியவன், ‘அவனைப் பாரு...’ எனக் கண்ணை காட்டினான். ஜனனி கணவனை முறைத்துவிட்டு தேவாவைப் பார்த்தாள். அவளது புருவமும் உயர்ந்தது.

“என்ன தேவா, வெளிய எங்கேயும் போறீயா? கேஷூவலா ட்ரெஸ் பண்ணி இருக்க?” கோபால் மகனிடம் வினவியவாறே கூடத்திற்கு வந்தமர்ந்தார். ஹரி கேட்க நினைத்துப் பின்னே அந்தக் கேள்வியை விழுங்கியிருந்தான்.

சட்டென்று அனைவரது பார்வையும் இவனிடம் குவிய, சற்றே சங்கடப்பட்ட தேவா, “இல்லப்பா... யூனிட்டுக்குத்தான் போறேன். கொஞ்ச நேரத்துல வந்துடலாம்னு டீஷர்டை போட்டுட்டேன்!” என்றான் குரலிலிருந்த தயக்கத்தை உதறி.

“சரிப்பா சரி... சண்டே ஒரு நாள் ரெஸ்ட் எடுக்கலாம் இல்ல. சுபாஷைப் பார்த்துக்க சொல்ல வேண்டியது தானே?” என அவர் கேட்டதும், “டூ ஹவர்ஸ்ல வந்துடுவேன் பா. நான் போனாதான் வேலை சீக்கிரம் நடக்கும்...” என அவன் பதிலளித்து உண்டு முடித்தான்.

“நம்ப போனாதான் வேலை சரியா நடக்கும்னு சொல்ல கூடாது ப்ரோ. பாஸ் இல்லைன்னா கூட யூனிட் சரியா ரன் ஆகணும். இல்லைன்னா மேனேஜ்மெண்ட் சரியில்லன்னு அர்த்தம்!” ஹரி சத்தமாய் முணுமுணுக்க, தேவா அவனை முறைத்தான்.

“அவனை வம்பிழுக்காம சாப்பிடு டா நீ!” பொன்வாணி சின்னவனைத் திட்டிக் கொண்டே அவன் தட்டில் இடியாப்பத்தை வைத்தார்.

“வெளிய எங்கேயும் போறீயா நீ?” தேவாவின் கேள்வியில் ஹரி இல்லையென தலையை அசைத்ததும் அவனுடைய இருசக்கர வாகனத்தின் திறப்பை எடுத்துக்கொண்டு வெளியேறினான். இவன் வாயைப் பிளந்து அவனைப் பார்த்தான்.

சில பல வருடங்களுக்கு முன்னே தேவா இருசக்கர வாகனம் ஓட்டும் போது கீழே விழுந்து கையில் முறிவு ஏற்ப்படிருந்தது. அதற்குப் பின்னே பொன்வாணியும் கோபாலும் அவனை இருசக்கர வாகனம் ஓட்ட தடை விதித்து மகிழுந்தை வாங்கிக் கொடுத்திருந்தனர்.

அந்த நிகழ்விற்குப் பின்னர் இன்றைக்குத்தான் ஹரியின் வாகனத்தை அவன் ஓட்டுகிறான். இவன் அறைகுறையாய் உண்ட தட்டோடு சமையலறைக்குள் சென்று கையைக் கழுவினான்.

“டேய்... ஏன்டா, எதுக்கு அவசரம் அவசரமா சாப்பிடாம கையைக் கழுவுற?” பொன்வாணி அதட்ட, “ப்ம்ச்... ஒரு முக்கியமான வேலை மா. கால் வந்துச்சு!” என்றான்.

“ஃபோன் ரூம்க்குள்ள இருக்கு. ஹால்ல தானே டா நீ உக்கார்ந்து இருந்த...” அவர் ஆராய்ச்சியாய்க் கேட்க, “ம்க்கும்... ஒருத்தன் வழக்கத்துக்கு மாறா கேஷூவல் ட்ரெஸ்ல போறான். என்னோட பைக்கை வேற சுட்டுட்டுப் போறான். என்ன திருட்டுத்தனம் பண்றானோ, அவனை விட்டுடு நீ. அவசரத்துக்கு ஒரு பொய் சொல்ற‌ என்னை நீ கேள்வி கேளும்மா!” தாயைக் கடிந்தவன் விறுவிறுவென வெளியே செல்ல, ஜனனி அவனைத் தீயாய் முறைத்தாள்.

‘பைக்கை வேற எடுத்துட்டு போய்ட்டான்!’ என முனங்கியவன், வழியில் செல்லும் தானியை மறைத்து அதிலேறி தேவாவைப் பின் தொடர்ந்தான். அவன் உழவர் துணை முன்பு சென்று நிற்கவும், இவனுக்கு சப்பென்றாது.

‘சே... என்ன இவன்? இவனை நான் ஜேம்ஸ் பாண்ட் லெவலுக்கு ஃபாலோ பண்ணா, இங்க வந்து நிக்கிறான்!’ சின்னவனுக்கு யோசனையானது. ஜனனி கூறியது சரிதான் போல. இவன் அதற்கெல்லாம் ஒத்து வர மாட்டான் என ஏகமனதாய் முடிவெடுத்தவன், ‘ஆட்டோக்கு இருநூறு ரூபாய் செலவானதுதான் மிச்சம்!’ என முனகிக் கொண்டே வீட்டை நோக்கித் திரும்பினான்.

தேவா உள்ளே நுழைந்தான். ஆதிலாவும் சுபாஷூம் சோதனைக் கூடத்தில் இருந்தனர். ஆதிலாவிற்கு புதன்கிழமை விடுப்பு வேண்டுமென்று இன்றைக்கு வேலைக்கு வந்திருந்தாள்.

தேவாவைக் கண்டதும் சுபாஷ் அவனிடம் வந்தான். இவன் சில பல கேள்விகளுடன் அலுவலக அறைக்குள் சென்றான். சிறிது நேரத்தில் மொத்த தொழிற்சாலையையும் சுற்றிவிட்டு மீண்டும் அறைக்குள் நுழைந்து நேரத்தைப் பார்த்தான். மணி பதினொன்று ஆகியிருந்தது.

கணினியில் விழிகளைப் பதிக்க, நேரம் சென்றது.‌ பதினொன்றையானது, கடுப்புடன் அலைபேசியை எடுத்து கருப்பியிருந்த ஆதிரையின் எண்ணை வெள்ளைக்கு மாற்றி இரண்டு முறை அவளுக்கு அழைக்கச் சென்று பின்னர் வேண்டாம் என விட்டுவிட்டான். மேலும் அரைமணி நேரம் கடக்க, தன் மீதே கோபமாய் வந்தது. காலையிலிருந்து எதிலுமே கவனம் செல்லவில்லை.

‘ஆதிரை ஆதிரை ஆதிரை!’ மூளை மனம் உடல் என அனைத்தும் அவளை ஏதோ ஒரு வகையில் நினைவுப்படுத்தி உந்த, சுயக்கட்டுப்பாட்டை முற்றிலும் இழந்தான். வெடுக்கென கணினியை மூடிவிட்டு கோபத்தோடு இருக்கையை தள்ளிவிட்டு எழுந்தவன், “சுபாஷ்...” என அழைத்துக் கொண்டே வெளியேற, அவன் பதற்றத்துடன் வந்தான்.

“எனக்கு வெளிய வேலை இருக்கு சுபாஷ். நீங்க இங்க பார்த்துக்கோங்க. ஈவ்னிங் வொர்க் முடிஞ்சதும் வாட்ச் மேன்கிட்ட சாவியைக் கொடுத்துட்டு கிளம்புங்க. நாளைக்கு மீட் பண்ணலாம்!” என அவன் இருசக்கர வாகனத்தில் பறக்க, இவன் சில நொடிகள் புரியாது விழித்து நின்றான். பின்னர் தலையை உலுக்கினான்.

தேவா நேராக ஆதிரையின் வீட்டை நோக்கித்தான் பயணப்பட்டான். அவள் வெளியே சென்றிருக்க மாட்டாள் என உள்ளுணர்வு உணர்த்தியது. செல்லும் போதே ஓரளவிற்கு தன்னை சமன் செய்தவன் விறுவிறுவென படியேற, வெளியே இரண்டு மூன்று காலணிகள் கிடந்தன. இவன் யோசனையுடன் நின்றுவிட்டான்.

“பைக் சத்தம் கேக்குது ஆதிரை... யாருன்னு பாரு!” என்ற ருக்கு அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த சாம்பாரைக் கரண்டியில் எடுத்து ஒருமுறை ஊதி சுவை பார்த்தார்.

“உப்பு பத்தலை ஆதி!” என்றவர் உப்புக் கல்லை அதில் தூவ, இவள் வாயிலுக்கு வந்தாள். தேவாவைப் பார்த்ததும் நொடியில் முகம் மாறியது.

அவனும் அவளைத்தான் பார்த்தான். குளித்து முடித்து பச்சை வண்ண புடவை உடுத்தியிருந்தவள், துண்டை கூட தலையிலிருந்து அகற்றாது அப்படியே கொண்டையிட்டிருந்தாள். சமையலறையில் இவ்வளவு நேரம் நின்றிருந்ததில் முகம் முழுவதும் வியர்த்து வடிந்தது. சேலையின் முந்தியை எடுத்து இடையில் சொருகி இருந்தாள். இவனது பார்வை அங்கும் தொட்டு மீண்டது.

‘எதுக்கு வந்த?’ என வார்த்தையில்லாமல் அவனைப் பார்த்து நின்றாள்.

“யாரு வந்திருக்கா ஆதிரை?” ருக்கு கையிலிருந்த கரண்டியோடு வெளியே வந்துவிட்டார்.

தேவாவை அழுத்தமாய்ப் பார்த்தவள், “என் ப்ரெண்ட் ருக்குமா. நான்தான் வர சொன்னேன்!” என்றாள்.

“அப்படியா... சரி, சரி. உள்ள வாங்க தம்பி!” என அவர் அகல, இவள் எதுவும் கூறாது வழிவிட்டு விறுவிறுவென உள்ளே சென்றாள். தேவா மௌனமாய் வந்து அமர்ந்தான். அறைக்குள்ளே ஒரு பெரியவருடன் அபினவ் அமர்ந்திருந்தான்.

இவனைக் கண்டதும், “தேவா அங்கிள்...” என ஓடி வந்து அருகே அமர்ந்தான்.

“ஹாய் அபி!” இவன் புன்னகைத்தான்.

“நான் உங்க மேல கோபமா இருக்கேன் அங்கிள். ஏன் நீங்க லாஸ்ட் வீக் என்னைப் பார்க்க வரலை?” சட்டென்று அவன் மீதிருந்த கோபம் நினைவு வந்ததும் சின்னவன் முகத்தை வெடுக்கென திருப்ப, ஆதிரையும் இப்படித்தான் என நினைத்ததும் தேவாவின் உதட்டில் மென்னகை படர்ந்தது.

“சாரி அபி, அங்கிள்க்கு முக்கியமான ஒரு வொர்க் வந்துடுச்சு. அதான் லாஸ்ட் வீக் வர முடியலை!” சின்னவனை சமாதானம் செய்ய முயன்றான்.

“நீங்க இனிமே வர மாட்டீங்கன்னு அம்மா சொன்னாங்க!” அவன் யோசனையுடன் கேட்க, தேவா சமையலறைக்குள் நின்ற ஆதிரையை இங்கேயே முறைத்தான்.

“அம்மா சும்மா சொல்லி இருப்பாங்க அபி. இனிமே எப்பவுமே அங்கிள் வருவேன். உன்னை வெளிய கூட்டீட்டுப் போவேன்!” என்றான்.

“பொய் சொல்லாதீங்க அங்கிள்!” அவன் நம்பவில்லை.

“சரி, உன்னை வெளிய கூட்டீட்டுப் போகலாம்னுதான் நான் பைக் எல்லாம் எடுத்துட்டு வந்தேன். பட், நீ நம்பலை. நான் வீட்டுக்கு கிளம்புறேன்!” அவன் பொய்யாய் உரைத்து எழ, “நிஜமா பைக்லயா வந்தீங்க அங்கிள்?” எனக் கேட்ட அபியின் விழிகள் சந்தோஷத்தில் மின்னின.

“நிஜமா... நீ வேணா போய் பாரு...” இவன் கூறியதும் குடுகுடுவென ஓடிச் சென்று பால்கனியிலிருந்து எட்டிப் பார்த்தவன், தேவாவின் இருசக்கர வாகனம் அங்கிருப்பதை உறுதி செய்து கொண்டான்.

“வாவ் அங்கிள், நம்ப வெளிய போகலாமா?” அவன் துள்ளலுடன் கேட்க,‌ மகேசன் தாத்தா எழுந்து வந்தார்.

ஆதிரையின் தோழனாய் இருக்க கூடுமென கருதியவர், “வாப்பா தம்பி!” என்றார் புன்னகையுடன். இவன் மென்முறுவலுடன் தலையை அசைத்தான்.

“அங்கிள்... வாங்க!” அபி இவன் கையைப் பிடித்திழுக்க, “உங்கம்மாகிட்டே சொல்லிட்டு வா அபி. நம்ப போகலாம்!” என எழுந்து நின்றான்.

“ம்மா... தேவா அங்கிள் பைக் எடுத்துட்டு வந்திருக்காரும்மா. நான் அவரோட கடைக்குப் போய்ட்டு வரேன்!” மூச்சு வாங்கியபடியே கேட்ட மகனைக் கண்டிப்புடன் பார்த்தாள்.

“வேணாம் அபி.‌. வெளிய போய் எதாவது வாங்கி சாப்பிட்டு அப்புறம் மதியம் சரியா சாப்பிட மாட்ட. எங்கேயும் போக வேணாம். ஒழுங்கா வீட்டுலயே இரு!” இவள் அதட்டவும், அவன் முகம் வாடியது.

“அம்மா... ப்ளீஸ் மா, நான் எதுவும் வாங்கி சாப்பிட மாட்டேன் மா. பைக்ல ஒரு ரவுண்ட் அங்கிளோட போய்ட்டு வரேன் மா. இதுவரை நான் பைக்ல போனதே இல்லைல?” சின்னவன் கெஞ்சல் குரலில் ஆதிரையின் கைகள் ஒரு நொடி நின்று பின் இயங்கின. தேவாவின் நிழல் சமையலறையை நிறைத்தது. அவளைத்தான் பார்த்திருந்தான்.

“ஆதி, புள்ளைதான் ஆசையா கேக்குறான் இல்ல, அனுப்பிவிடு நீ!” ருக்கு அபிக்கு ஆதரவளித்தார்.

தேவாவை ஒரு பார்வை பார்த்தவள், “போய்ட்டு சீக்கிரம் வரணும். எதுவும் வாங்கி சாப்பிடக் கூடாது டா!” என்று மகன்புறம் திரும்பினாள்.

“சரிம்மா...” என்றவன், “வாங்க அங்கிள்... போலாம்” என சிட்டாய் பறந்து படிகளில் இறங்க, தேவா அவன்பின்னே சென்றான்.


 
Administrator
Staff member
Messages
1,194
Reaction score
3,478
Points
113
சின்னவனைத் தூக்கி முன்புறம் அமர்த்தியவன் வாகனத்தை இயக்கினான். அபியின் முகத்தில் மகிழ்ச்சி பொங்கியது.

“இதுவரைக்கும் பைக்ல போனதில்லையா அபி?” இவன் குரலில் கழுத்தை வளைத்துப் பின்புறம் பார்த்தவன், “யெஸ் அங்கிள், ஸ்கூட்டி, கார், பஸ், ட்ரெய்ன்னு எல்லாத்துலயும் போய்ருக்கேன். பட், பைக்ல உங்ககூட தான் ஃபர்ஸ்ட்!” என்றான்.

“ஹம்ம்!” தேவா தலையை அசைத்தான்.

“நான் பிக் பாயானதும் அம்மா எனக்கு பைக் வாங்கித் தரேன்னு சொல்லி இருக்காங்க. நானும் உங்களை மாதிரி சூப்பரா பைக் ஓட்டக் கத்துப்பேன்!” அவன் இரண்டு கையையும் வாகனம் ஓட்டுவது போல வைத்து ஆசையாய்க் கூறியதும், இவன் புன்னகைத்தான்.

வண்டியை ஒரு பழச்சாறு கடையின் முன்பு நிறுத்தினான்.
“அங்கிள், எனக்கு எதுவும் வேணாம். அம்மா திட்டுவாங்க!” அபி பயத்துடன் தலையை அசைத்தான்.

“எனக்கு தகமா இருக்கு அபி. ஒரு பாதாம் மில்க் வாங்கி ஷேர் பண்ணிக்கலாமா? என்னால ஃபுல்லா குடிக்க முடியாது...” தேவா கூறியதும் அபி யோசித்துப் பின்னர் போனால் போகிறதென்று தலையை அசைத்தான்.

பாதம் பாலை வாங்கியவன், “நீ குடிச்சுட்டு குடு அபி!” என்கவும் சின்னவன் வாங்கி வாயில் வைத்துத்தான் தெரிந்தது. மடமடவென அனைத்தையும் குடித்து முடித்துவிட்டே நிமிர்ந்தான்.

“ஐயோ... சாரி அங்கிள், நான் ஃபுல்லா குடிச்சுட்டேன். நீங்க ஷேர் பண்ணிக்கலாம்னு சொன்னீங்க இல்ல?” அசட்டுத்தனமாய் அவன் பற்களை காண்பித்து புன்னகைக்க, தேவா உதட்டில் முறுவல் அரும்பிற்று. அவன் தலையைக் கலைத்துவிட்டான்.

“இட்ஸ் ஓகே அபி, நெக்ஸ்ட் டைம் நம்ப ஷேர் பண்ணிக்கலாம்...” என வாகனத்தை முடுக்கினான். இரண்டு முறை அந்தப் பகுதியை சுற்றி முடித்துவிட்டு இருவரும் வீட்டை அடைந்தனர்.

உள்ளே நுழையும் போதே ஊதுபத்தி வாசனை நாசியை நிறைத்தது. கூடத்தின் ஓரத்தில் ஒரு மேஜையில் ஒரு வயதான தம்பதியின் படம் நாற்காலியில் இருக்க, அதற்குப் பூ போட்டிருந்தார்கள். படத்திற்கு முன்னே பூ, வாழைப்பழம், ஊதுபத்தி மற்றும் ஒரு இலையில் உணவைப் பரிமாறி இருந்தனர். ஆதிரையை வளர்த்த தாத்தா பாட்டீயாக இருக்கலாம். அவர்களுடைய நினைவு நாளாக இருக்கும் என எண்ணியவன் உள்ளே நுழைய முற்படவில்லை.

நான்கைந்து பெண்கள் இரண்டு சிறுமிகள் ஒரு வயதானவர் என ஏழெட்டு பேர் கூடத்தில் அமர்ந்து உண்டு கொண்டிருந்தனர். வாயிலில் நடக்க இடம் விட்டுத்தான் அமர்ந்திருந்தனர்.‌

“உள்ளே வந்து உக்காருங்க!” ஆதிரை இருவரையும் அழைத்து நாற்காலியில் அமரச் செய்தாள். கீழே அமர்ந்து உண்ண இடமில்லை. ஏற்கனவே கூடத்திலிருந்த நீள்விருக்கையை எடுத்து அறைக்குள்ளே போட்டிருந்தாள்.

ஆதிரையும் ருக்குவும் தான் அனைவருக்கும் பரிமாறினர். அவர்கள் உண்டுவிட்டு கிளம்ப, “ம்மா... நீங்களும் அப்பாவும் சாப்பிடுங்க. டைமாச்சு!” என பெரியவர்களை அமர்த்தியவள், “அபி...வா, பாட்டிக்கிட்டே உக்காரு. தேவா சார், நீங்களும் வாங்க!” என்றாள்.

“இல்ல ஆதி, நான் அப்புறம் சாப்பிட்றேன்!” அவன் மறுக்க, “சங்கடப்படாதீங்க தம்பி... இது நம்ப வீடு மாதிரி. சாப்பிட வாங்க!” மகேசன் தேவாவை அழைக்கவும், அவன் வேறு எதுவும் பேச முடியாது அமர்ந்தான்.

ஆதிரை பரிமாற, “வாழக்காய் பொரியல் ரொம்ப நல்லா இருக்கு ஆதி. எப்படி செஞ்ச நீ?” என சமையல் குறிப்பைக் கேட்டுக் கொண்டே ருக்கு உண்டு முடித்தார். மகேசன் தாத்தாவும் சாப்பிட்டு எழுந்தார்.

“இன்னும் யாரு வரணும் ஆதி? நீ பார்த்துக்குறீயா? நானும் அவரும் போய் கொஞ்ச நேரம் கண்ணசருரோம் டி...” ருக்கு கூற,

“செல்வி அக்கா மட்டும்தான் வரணும்மா... நான் பார்த்துக்குறேன். காலைல இருந்து நான் வேணாம்னு சொன்னாலும் கேக்காம எல்லாத்தையும் இழுத்துப் போட்டு செஞ்சீங்க. டயர்டா இருக்கும்...போய் தூங்குங்க!” என்றாள் கண்டிப்புடன்.

“ஒருநாள் தானே டி... நான் வர்றதுக்குள்ளே இவளோ பாதி சமையலை முடிச்சுட்டாங்க. என்னமோ எல்லாத்தையும் நானே சமைச்ச மாதிரி சொல்றா!” என ஆதிரையிடம் ஆரம்பித்து கணவரிடம் முடித்தவர் மெதுவாய் கீழே இறங்கிச் சென்றார்.

ஆதிரை தேவாவின் இலையில் காலியான உருளைக் கிழங்கு வறுவலை நிரப்பி, பின் சேலையை நன்றாய் இழுத்து சொருகிவிட்டு மகனுக்கு அருகே அமர்ந்தாள்.

“வெளிய எதுவும் சாப்பிட்டீயா அபி?” அதட்டலுடனே அவனது இலையை தன்னை நோக்கி நகர்த்தி சாதத்தைப் பிணைந்து அவன் வாயருகே கொண்டு சென்றாள்.

“இல்லம்மா... நான் எதுவும் சாப்பிடலை!” எனக் கூறியவன் அவள் கொடுத்த உணவை கடகடவென உண்டான். எங்கே தான் பாதம் பால் குடித்தது தாய்க்கு தெரிந்துவிடுமோ என முகத்தில் மெல்லிய பயம் படர்ந்தது. அதனாலே சாப்பிட முடியவில்லை எனினும் உண்டான். அவன் முகபாவனையை வைத்தே இவளுக்குப் புரிந்தது. தேவா உண்டு முடித்து எழ, மகன் இலையிலே தனக்கும் உணவை இட்டு அவள் சாப்பிட்டு முடித்தாள்.

அனைவர் உண்ட இலையை கூடையில் எடுத்து வைத்திருந்தவள் அதை எடுத்துச் சென்று பக்கவாட்டில் எறிந்துவிட்டு வர, தேவாவின் பார்வை அவளைத் தொடர்ந்தது. அவன் தன்னிடம்தான் பேச வந்திருக்கிறான் எனத் தெரிந்தாலும் ஆதிரை கண்டு கொள்ளவில்லை.

கூடத்திலிருந்த உணவை எடுத்துச் சென்று சமையலறைக்குள் வைத்தாள். மலை போல பாத்திரங்கள் குவிந்து கிடந்தன. அதைப் பார்த்ததும் மலைப்பாய் இருந்தது.

‘செல்வி அக்கா வர்றதுக்குள்ள பாதி பாத்திரத்தைக் கழுவி வச்சிடலாம்!’ என எண்ணிக் கொண்டே வேலையை தொடங்கினாள். தேவா வந்து நிற்கும் அரவம் தெரிந்தது. இவள் எதிர்வினையாற்றவில்லை.

“ஆதிரை, ஐ நீட் டு டாக் டூ யூ. தெரிஞ்சும் நீ என்னை அவாய்ட் பண்ற!” அவன் கொஞ்சம் கடுப்புடன் கூறினான். அப்போதிலிருந்தே இவனது பார்வை அவளைத்தான் மொய்த்தது. தெரிந்தும் கண்டு கொள்ளவில்லை என்ற சிடுசிடுப்பு இவனிடம்.

“எனக்கு வேலை கிடக்கு சார். உங்க கிட்டே பேச இஷ்டமும் இல்ல!” திரும்பாமலே அவள் பதிலளித்ததும் தேவாவிற்கு மூக்கிற்கு மேலே கோபம் வந்து தொலைத்தது.

“ஃபைன்!” கோபத்தோடு உரைத்தவன் விறுவிறுவென நடக்கும் சப்தம் கேட்க, ஆதிரையிடம் நிம்மதி பெருமூச்சு. ஏற்கனவே வேலை செய்ததில் அலுப்பாய் இருந்தது. இதில் இவனுடன் வேறு போராட வேண்டுமா என ஆயாசமாய் இருக்க, அவனே சென்று விட்டதில் பெருத்த நிம்மதி அடர்ந்தது. அவனிடம் பேசும் மனநிலை அட்சர சுத்தமாய் இவளுக்கு இல்லை.

பாதி பாத்திரங்களை கழுவி கவிழ்த்தியதும், “ஆதி...” என்ற குரலோடு ஒரு பெண்மணியும் இரண்டு குழந்தைகளும் வந்தனர்.

“வாங்க செல்விக்கா... வாங்க ரம்யா, திவ்யா!” என மூவரையும் உபசரித்து உண்ண வைத்து செல்வியின் கணவருக்கும் உணவைக் கொடுத்து அனுப்பினாள்.

இன்றைக்கு அவளை வளர்த்த தாத்தா பாட்டியின் நினைவுநாள். வருடா வருடம் இந்த ஒருநாளில் மட்டும் அவர்களை வழிபட்டு அருகிலிருந்தவர்களை அழைத்து சமைத்துப் போடுவாள். யாரிடமிருந்து இந்தப் பழக்கம் வந்தது என ஆதிரைக்குமே தெரியாது. ஆனாலும் தொடர்ந்து இதை செய்து வருகிறாள்.

பாத்திரங்களை கழுவி முடித்து வீட்டின் கூடத்தை சுத்தம் செய்து குப்பையை வெளியே எறிந்தாள். இரண்டு எட்டுகள் உள்ளே வைத்தவளின் நெற்றி சுருங்க, மீண்டும் பின்னே திரும்பி பார்த்தாள். அவர்கள் வீட்டின் சுற்றுசுவருக்குள் ஒரு இருசக்கர வாகனம் நின்றிருக்க, யாருடையது என யோசித்தாள்.

நொடியில் தேவா நினைவு வர, குனிந்து கீழே பார்க்க அவன் காலணியும் இருந்தது. இன்னும் இவன் கிளம்பவில்லையா என யோசனையோடு வீட்டிற்குள் நுழைந்து அறையை நோக்க, தேவாவும் அபியும் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தனர். மனம் ஒரு நொடி திடிக்கிட்டுப் போனது. இவளுக்கு அருகே படுப்பது போல தேவாவை ஓட்டிப் படுத்து அவன் மீது அபி காலைப் போட்டிருந்தான். அவர்கள் இருவரையும் அமைதியாய்ப் பார்த்தாள் இவள். மனதிற்குள் ஏதோ பிசைந்தது.

அவளுடைய கட்டில், அவளுடைய மகன். அவர்களுக்கான இடம் இது. ஆனால் இவன் உரிமையுடன் படுத்திருக்கிறான் என மனம் இரைச்சல் போட, விறுவிறுவென உள்ளே சென்றாள். தேவா உறங்குகிறானா என அருகே செல்ல, அவனது சீரான மூச்சு அவன் ஆழ்ந்த சயனத்தைப் பறைசாற்றியது. எழுப்பச் சென்று அவன் முகத்தைப் பார்த்து தயங்கி, கதவை லேசாய் சாற்றிவிட்டு வந்தவள் வேலையை முடித்தாள்.

கால் இரண்டும் கடுகடுத்தது. இடுப்பு வேறு வலித்தது. காலையில் எழுந்ததிலிருந்து உட்கார நேரமில்லை. இத்தனை பேருக்கு சமைத்துப் பரிமாறி, சுத்தம் செய்து என உடல் அலண்டு போயிருக்க, கூடத்திலே ஒரு இருக்கையில் அமர்ந்தாள். தொலைக்காட்சியை உயிர்பித்து பாடலை ஒலிக்க விட்டாலும் மனம் அதில் லயிக்கவில்லை. என்னவோ மூளை இதயம் இரண்டையும் தேவாதான் குடைந்து கொண்டிருந்தான்.

ஏன் இத்தனை உரிமை எடுத்துக் கொள்கிறான் இவன்? நான் கொடுத்த இடம்தானா? இல்லையே என மனம் விவாதித்தது. சிறிது நேரம் அதே யோசனையிலே அமர்ந்து இருந்தாள். வெயில் மட்டுப்பட்டு நிழல் படரவும், பால்கனியில் ஒரு இருக்கையைப் போட்டு சாலையை இலக்கில்லாமல் வெறித்துக் கொண்டிருந்தாள்.

எவ்வளவு நேரம் தூங்குகிறான். அவனைச் சென்று எழுப்பு என மனம் உந்த, ஏனோ அதை செய்யாது அமைதியாய் நாற்காலியில் தலை சாய்த்து விழிகளை மூடிவிட்டாள்.

தேவா புரண்டு படுத்ததும் அவன் கை யார் மீதோ படுவது போலத் தோன்றவும், கண்ணைத் திறந்து பார்த்தான். அபினவ் தனக்கு அருகே உறங்கிக் கொண்டிருக்க, அப்போதுதான் இது ஆதிரையின் வீடு என்று உறைத்தது. கோபமாய் சென்றவன் கிளம்பலாம் என படிக்கட்டில் கால் வைத்துப் பின்னர் ரோஷம் மானத்தையெல்லாம் காலணியோடு வெளியே கழற்றிவிட்டு அறைக்குள்ளே வந்திருந்தான்.

அபினவ் ஆதிரையின் அலைபேசியில் விளையாடிக் கொண்டிருந்தான். அவனுடன் அமர்ந்து பேசியபடியே கட்டிலில் படுத்தான். தலையணையில் முகம் புதைத்ததும் ஏதோ ஒரு வாசனை நாசியை துளைத்தது. கழுத்தை திருப்பி முகத்தை தலையணையில் நன்றாய் புதைத்தான்.

கண்டிப்பாக ஆதிரை உபயோகிக்கும் ஏதோ ஒரு அழகுசாதனப் பொருளின் சுகந்தமாய் இருக்க கூடும். அதுதான் அத்தனை வைத்திருக்கிறாளே என விழிகள் கண்ணாடி முன்பிருந்த மேஜையில் பதிந்து மீண்டது. படுத்த சில நிமிடங்களுக்கு என்னவோ ஒரு சங்கடம் வந்து ஒட்டிக் கொண்டது. இது ஆதிரையின் மெத்தை, அவளுடைய தலையணை எனவும் ஏதோவொரு உணர்வு. அவனுக்குத் தெரிந்து எந்தப் பெண்ணின் அறையிலும் அவன் படுத்ததாய் நினைவில்லை.

முதல் கட்ட சங்கடம் சில பல நிமிடங்களில் தோய்ந்து போகும் முன்னே இத்தனை நாட்கள் எட்ட நின்று விளையாடிய தூக்கம் எப்படி வந்ததென அவனுக்கே தெரியவில்லை. கிட்டத்தட்ட மூன்று மணி நேரங்கள் தன்னையும் மறந்து ஆழ்ந்து உறங்கிப் போயிருந்தான். அபியின் தூக்கம் கெடாது அவனைத் தள்ளிப் படுக்க வைத்துவிட்டு எழுந்து முகம் கழுவி வந்தான்.

ஆதிரை பால்கனியில் அமர்ந்திருப்பது தெரிய, சமையலறைக்குள் நுழைந்தான். ஏற்கனவே அவள் பாலைக் காய்ச்சி வைத்திருந்தாள். தட்டுத்தடுமாறி அடுப்பை பற்ற வைத்து குளம்பியைத் தயாரித்து இரண்டு கோப்பைகளில் ஊற்றி எடுத்து வந்தான்.

தன்னை நோக்கி வருபவனைப் பார்த்து, “நல்ல தூக்கமோ?” எனக் கேலியாய்க் கேட்டாள் ஆதிரை‌.

“ஹம்ம்... யெஸ், நாலு நாளா நல்லா தூங்கலை. பட் இன்னைக்கு உன் பெட்ல படுத்ததும் எப்படி தூங்குனேன்னு தெரியலை. நல்ல தூக்கம் வந்துடுச்சு!” என்ற மெல்லிய குரலில் கூறியவாறே அவளிடம் கோப்பையை நீட்டினான்.

“வரும்... வரும்!” அதே கேலிக் குரலில் உரைத்தபடியே அவன் கொடுத்த குளம்பியை வாங்கிப் பருகினாள். தேவா தனக்கும் ஒரு இருக்கையை இழுத்துப் போட்டு அமர்ந்தான்.

ஆதிரை அவனையே குறுகுறுவென பார்த்தாள். குனிந்து குளம்பியை அருந்திக் கொண்டிருந்தவன் நிமிர்ந்து, “என்ன?” எனக் கேட்டான்.

“இல்ல, ரொம்ப உரிமை எடுத்துக்குறீங்களே மிஸ்டர் தேவா. நீங்களா வந்தீங்க. என் ரூம்ல என் பையனோட அதுவும் என் கட்டில்ல சாவகாசமாக தூங்கி எழுந்து வரீங்க. ஏதோ சொந்த வீடு மாதிரி கிட்சன்க்குள்ள போய் காஃபி வேற? நான்தான் இடம் கொடுத்தேனான்னு யோசிக்கிறேன்!” என்றாள் நக்கலாய்.

“ம்ப்ச்!” உச்சுக் கொட்டியவன் குளம்பியில் கவனமானான்.

“உங்ககிட்ட தான் கேக்குறேன் மிஸ்டர் தேவா!” அவள் அழுத்திக் கேட்க, “எனக்கும் பேசணும் உன்கிட்ட. காஃபியை குடி, எல்லாத்தையும் பேசலாம்!” என்றான் குனிந்தவாறே.

“ஃபைன்... இப்பவே பேசி எல்லாத்துக்கும் எண்ட் கார்ட் போட்றது நல்லது!” உதட்டு சுழிப்புடன் ஆதிரை குளம்பியைப் பருக, தேவா அவளறியாது விழிகளால் அவளை மென்றான். தலைக்கு குளித்து ஏனோ தானோவென்று சீரில்லாத வாரயிருந்த தலையும் அரிதாரம் பூசாத முகமும் கண்ணை நிறைத்தன. இரண்டு காலையும் தூக்கி இருக்கையில் வைத்து சம்மணமிட்டு அமர்ந்து சூடாய் இருந்த பானத்தை ஊதிக் குடித்தாள்.

‘பேசணும்... பேசியே ஆகணும்!’ இவன் மனமும் முந்தியது‌. காலியான குளம்பி கோப்பையையோடு இருவரும் பேச்சு வார்த்தையைத் தொடங்கி இருந்தனர்.

தொடரும்...

சொல்லாம கொள்ளாம லீவ் எடுத்ததுக்கு மன்னிச்சிடுங்க மக்களே. ரொம்ப வேண்டிய ஒருத்தவங்க இழப்பு. அதான் சட்டுன்னு அக்செப்ட் பண்ண முடியலை. சோ ஒன் வீக் லீவ் எடுத்துட்டேன் 🙂 இனிமே தொடர்ந்து அப்டேட்ஸ் வரும். கதையை ரொம்ப இழுக்குறேனா? இது கொஞ்சம் பெருசா போகுது. என்னையும் வச்சு செய்யுது 😐😑
 
Well-known member
Messages
445
Reaction score
323
Points
63
Pesunga pesunga appo va chum ithuku oru result kedaikithu ah nu parpom . yazh ku chinna vayasula irundhu yenguna anbu kedaika la na ea thu na la ippo thanaku ethuvum thevai yae illa na ra thu la pidivatham ah iruku athae pidivatham deva kita yum iruku ava venum apadi na ra thu la aana ennaku ennavo deva than ella edathula yum erangi vara nu thonuthu actually avaluku mathavanga enna pannagalo athu than ava Deva oda anbu kum panra ah
 
Well-known member
Messages
510
Reaction score
383
Points
63
என்னத்த பேச போறீங்க உப்பு சப்பில்லாம
 
Top