• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,194
Reaction score
3,478
Points
113
நெஞ்சம் – 31 💖

எண்டர் பொத்தானை இரண்டு முறை அழுத்தி சோதனை முடிவை பதிந்து சேமித்த ஆதிரை இடதுகையின் பெருவிரலால் கழுத்தை நீவிவிட்டாள். இன்றைக்குப் பால் வரத்து சற்றே அதிகம். அதனாலே வேலை நெட்டி முறித்தது.

சூடான தேநீர் கோப்பையை ஊழியர் வைத்துவிட்டு செல்லவும் அதை எடுத்து உதட்டுக்கு கொடுத்தவாறே கணினியில் விழிகளைப் பதித்திருந்தாள். அவளது அலைபேசி இரண்டு முறை செய்தி வந்ததாக ஒலியெழுப்ப, இவள் அதை கண்டு கொள்ளவில்லை.

“அக்கா... வேல்யூ பார்த்துக்கோங்க!” என ஆதிரைக்குப் பக்கவாட்டில் சோதனைக் குழாயை நகர்த்திய தர்ஷினியின் பார்வை எதேச்சையாக இவளது அலைபேசியில் படிந்தது.

“க்கா... இந்த பிக் எப்போ எடுத்தது? இது மகாபலிபுரம்தானே? நீங்க போனீங்களா?” என அவள் அலைபேசியை எடுத்து அந்தப் புகைப்படத்தை உற்றுப் பார்த்தாள்.

“ஹம்ம்... ஆமா தர்ஷினி!” நிமிர்ந்தமர்ந்த ஆதிரை பதிலளித்தாள்.

“சூப்பர் கா... விஷ்ணு சிலையோட சேர்த்து கவர் பண்ணி இருக்கீங்க. தனியா போனீங்களா கா? ஃபோட்டோ நல்லா இருக்கே, யார் எடுத்தது?” எனக் கேட்டவள், அவளது கைரேகையை வைக்குமாறு அலைபேசியை முன்னே நீட்டினாள்.

“ஹம்ம்... தனியாதான் போனேன் தர்ஷினி!” என்றவள், “நாளைக்கு ஃபோட்டோஸ் பார்க்கலாம். இப்போ மீத சாம்பிளை போட்டு முடி!” முயன்று குரலில் கடுமையைப் புகுத்தினாள். அவளோடு அத்தனை புகைப்படத்திலும் தேவாவும் நிறைந்து கிடந்தான். அபினவ் பற்றி இங்கிருப்பவர்கள் யாருக்கும் தெரியாது.

ஆதிரை தெரியப்படுத்தவில்லை என்பதுதான் தகும். உண்மையில் அவளுக்கு தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி யாரிடமும் பகிர விருப்பமில்லை. அதனாலே சின்னவனைப் பற்றி ஒரு வார்த்தை கூடப் பேச மாட்டாள். சக ஊழியர்களுக்கு அவள் தனியாக வசிக்கிறாள் என்பது வரையில் மட்டுமே தெரிந்தது.

ஒருசில முறை கோமதியும் தர்ஷினியும் அவளிடம் குடும்பத்தைப் பற்றி கேட்க, அப்பேச்சை முற்றிலும் தவிர்த்துவிட்டாள். இப்போதைக்கு தேவாவிற்கு மட்டும்தான் அவளது கடந்தகால வாழ்க்கையின் சுவடுகள் தெரியும். மறைக்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் இல்லை. இவர்கள் எல்லாம் அதைத் தெரிந்து கொள்ளும் அளவிற்கு முக்கியமாகப்படவில்லை, அவ்வளவுதான்.

“ப்ம்ச்... ஒரு போட்டோ பார்க்குற நேரத்துல நான் நாலு சாம்பிள் போட்ருவேன் கா!” கேலியாக கூறிய தர்ஷினி முகத்தை திருப்பிக் கொள்ள, இவள் நெற்றியைத் தேய்த்துவிட்டு அலைபேசியை உயிர்ப்பித்தாள். அவள் மட்டும் தனியாய் இருக்கும் புகைப்படத்தை மட்டும் ஒரு கோப்பில் இட்டவள், அலைபேசியை மற்றவள் புறம் நகர்த்தினாள்.

அவளைப் பொய்யாய் முறைத்த தர்ஷினி புகைப்படங்களைத் தள்ளிவிட்டுப் பார்த்தாள். “இந்தா இருக்கு மகாபலிபுரம். ரெண்டு தடவைதான் கா போய்ருக்கேன். ஒருநாள் ஆற அமர போய் சுத்திப் பார்த்துட்டு வரணும்!” என்றவள் கடைசி மாதிரியையும் சோதனை செய்து முடித்தாள். கோமதியிடமும் முடிவுகளை வாங்கிப் பதிந்த ஆதிரை மடிக்கணினியை அணைத்து வைத்தாள்.

நேரம் ஐந்தை தொட்டிருந்தது. மற்ற மூவரும் கூட தங்களது உடைமைகளை எடுத்துக்கொண்டு தேவா அறைக்குச் சென்று கையெழுத்திட்டு அகல, இவளும் வேலையை முடித்துவிட்டுக் கிளம்பினாள்.

காலையிலிருந்து இமை சிமிட்டாது கணினியைப் பார்த்ததில் விழிகள் பூத்துப் போயிருந்தன. இலவச இணைப்பாக ஒரு பக்க தலைவலி வேறு. வீட்டிற்கு சென்றதும் ஒரு பாராசிட்டமால் மாத்திரையை விழுங்கிவிட்டு இழுத்துப் போர்த்திக்கொண்டு உறங்க வேண்டும் என்று நினைக்கையிலே அபியின் எண்ணம் வந்தது. அவனுக்காக வேணும் இரவு உணவு சமைக்க வேண்டும். வெளியே வாங்கி கொடுக்கும் எண்ணமில்லை.

ஏற்கனவே ஞாயிற்று கிழமை முழுவதும் வெளியேதானே உண்கிறார்கள். உடல் கெட்டுவிடும் என்ற எண்ணம் வர, சமைத்து முடித்துவிட்டு விரைவிலே உறங்க வேண்டும் என்ற யோசனையோடு தேவாவின் அறைக்குள் நுழைந்து கையெழுத்திட்டாள்.

தேவா ஆதிரை முகத்தைதான் பார்த்திருந்தான் போல. அவள் இவனைக் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. ஏதோ யோசனையில் இருந்தாள்.

“ஆதி, ஆர் யூ ஓகே?” அவன் கேள்வியில் சுயம் பெற்றவள், “என்ன சார்?” என்றாள் புரியாது விழித்து.

“நீ ஓகே வா? ஏன் ரொம்ப டல்லா தெரியுற?” அவன் கேட்டதும் இவளது முகத்தில் நொடி நேர ஆச்சர்யம்.

இந்தளவிற்கு இவன் தன்னைக் கவனக்கிறானா என எண்ணியவள், “சிஸ்டம் பார்த்துட்டே இருந்ததுல லைட்டா தலைவலி சார்!” என்றாள் முறுவலுடன்.

“ஹம்ம்... டேக் கேர்!” இயல்பாய் அவன் கூறியதும் இவள் தலையை அசைத்து ஏற்றுக்கொண்டு வெளியே வந்தாள்.

வீட்டிற்குச் சென்றதும் ஒரு கோப்பை தேநீரோடு மாத்திரையை விழுங்கிவிட்டு சிறிது நேரம் படுத்து எழுந்தாள். அபினவ் இவள் கொடுத்த ரொட்டியை உண்டு கொண்டே வீட்டுப் பாடம் செய்தான்‌. எளிமையாய் உப்மா செய்து அவனை உண்ண வைத்தவள், அருகிலே படுத்து தட்டிக் கொடுத்து தூங்க வைத்து தானும் உறங்கிப் போனாள்.

மறுநாள் எப்போதும் போல இவள் வேலைக்கு வர தேவா வந்ததும் ஒரு நொடி இவளைத்தான் பார்த்தான். நான் நன்றாய் இருக்கிறேன் என ஆதிரை புன்னகைக்க, அவன் அதை தலையை அசைத்து ஏற்றுக் கொண்டான்.

மற்றவர்கள் இருக்கும்போது இவர்களுக்கு இடையே மௌமன உரையாடல் அரங்கேறியது. அந்த வார ஞாயிறு பிறகு ஒருவரை ஒருவர் நேரில் பார்க்கும்போது பரஸ்பர புன்னகையைப் பரிமாறிக் கொண்டனர். தேவா வேலையில் கடுமையைக் காண்பித்தாலும் ஆதிரையிடம் கொஞ்சம் புன்னகை முகத்தை மட்டுமே வெளிப்படுத்தினான்.

அவளும் அதை அறிந்தாலும் வேலையில் எவ்வித சலுகையும் எடுத்துக் கொள்ளாது அனைத்திலும் சரியாய் இருந்தாள். அதுவே தேவாவிற்குப் போதுமானதாக இருந்தது.

அந்த வாரம் ஞாயிறு வெளியே செல்கிறோம் என தேவாவிடம் உறுதிப்படுத்திக் கொண்டாள் ஆதிரை. எப்போதும் போல விரைவாய் எழுந்து குளித்து முடித்தாள்.

என்ன சமைப்பது என யோசனையில் புருவம் சுளித்தவள் மகன் பூரி கேட்டது நினைவை நிறைக்க, கோதுமை மாவை எடுத்துப் பிசைந்தாள்.

“ம்மா...” என அபினவ் எழுந்து வந்தான். அவன் பல் துலக்கி முடித்ததும் அவனுக்கு பாலைக் கொடுத்தாள்.

“ம்மா... என்ன பண்றீங்க?” கோப்பையை சமையல் மேடையில் வைத்துவிட்டு ஆதிரை கையிலிருந்த பாத்திரத்தை எட்டிப் பார்த்தான்.

“அபிக்குப் பிடிச்ச பூரி சுடப் போறேன்!” என்றவள், மாவை பிணைந்து மூடி வைத்துவிட்டு குருமாவிற்கு காய்கறிகளை நறுக்கினாள்.

“சூப்பர்மா... நான் போய் குளிச்சிட்டு வரேன். பூரி சுட்டு வைம்மா..” என்றவன் குடுகுடுவென ஓட, இவள் புன்னகையுடன் குருமாவை காமைக் கலத்தில் வைப்பதற்காக விசிலை தேடி மாட்டிவிட்டு பாத்திரத்தை அடுப்பில் ஏற்றினாள்.

ஓரமாய் வைத்திருந்த அலைபேசியை ஒருமுறை எட்டிப் பார்த்தாள். தேவாவிடமிருந்து ஒரு செய்தி கூட இன்னும் வரவில்லை. கடந்து சென்ற ஞாயிறுகளில் காலையில் ஒரு குறுஞ்செய்தியைத் தட்டிவிட்டு, தன்னுடைய வருகையை உறுதி செய்வான். ஆனால், இன்றைக்கு புலனம் காற்று வாங்கிக் கொண்டிருந்தது.

கோதுமை மாவை வட்டமாய் தேய்த்து முடித்தாள். தேவாவிற்கும் சேர்த்துதான் இன்றைக்கு சமைத்தாள். அபி குளித்து முடித்து வந்ததும் அங்கேயே ஒரு நாற்காலியை இட்டு அமர்ந்தவன் சுடசுட தாய் கொடுத்த பூரியை உண்டான்.
ஆதிரையும் உண்டு முடிக்க, இருவரும் கிளம்பி அமர்ந்தனர்.

நேரம் பத்தை தொட்டிருக்க, இன்னுமே தேவா வந்திருக்கவில்லை. இவள் யோசனையுடன் அவனது இலக்கத்திற்கு அழைக்க, அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது. சரியென புலனத்தில் ஒரு குறுஞ்செய்தியைத் தட்டிவிட்டாள். அபி வேறு தேவாவவை எதிர்பார்த்து வாயிலையே பார்த்திருந்தான்.

மேலும் ஒரு மணி நேரம் கடந்தும் அவனது வருகைக்கான எவ்வித அறிகுறியும் தென்படாது போக, சின்னவனின் முகம் வாடியது.
“என்னம்மா... அங்கிளை இன்னும் காணோம்?” அவன் கேட்க, ஆதிரைக்கும் ஒன்றும் தெரியவில்லை. வருகிறேன் என்று கூறிவிட்டு இப்படியெல்லாம் தேவா அசட்டுத்தனமாய் இருக்க மாட்டான். ஒருவேளை முக்கியமான எதாவது அலுவலாகக் கூட இருக்கலாம் என சிந்தித்தவள், அபியின் வாட்டம் பொறுக்காது இருவரும் வெளியே கிளம்பினர்.

“நம்ப இப்போ கிளம்பலாம் அபி. அங்கிள் வந்து நம்பளோட ஜாய்ன் பண்ணிப்பாரு. ஓகே வா?” என மகனிடம் கேட்க, அவன் தலையை அசைத்து ஏற்றுக் கொண்டான்.

எங்கே செல்வது என எந்த திட்டமும் இல்லாததால் அருகே இருந்த விளையாட்டு திடலுக்கு அழைத்துச் சென்றாள். மதிய உணவை முடித்துவிட்டு அப்படியே நீச்சல் வகுப்பிற்கு சென்றனர்.

மாலை வரை தேவா வராததால், “அம்மா, அங்கிள்?” என வினவியவன் நீச்சல் உடையை அவிழ்த்துவிட்டு ஏற்கனவே அணிந்து வந்த உடையை மீண்டும் உடுத்தினான்.

“இப்போதான் அங்கிள் கால் பண்ணாரு அபி. அவருக்கு ஏதோ முக்கியமான வேலையாம். அதான் வர முடியலைன்னு சாரி கேட்டாரு. உன்கிட்டேயும் சொல்ல சொன்னாரு. நெக்ஸ்ட் வீக் வர்றேன்னு ப்ராமிஸ் கூட பண்ணாரு!” மகன் வருத்தப்படக் கூடாது என்று பொய்யுரைத்தாள். அவன் முகம் தெளியவில்லை எனினும் தலையை அசைத்தான்.

“ஹம்ம்... இப்போ நம்ப ஷாப்பிங் போகப் போறோம். ப்ரௌனி செய்யலாம்னு யோசிச்சு வச்சிருக்கேன் அபிமா. உனக்கு வேணுமா?” மகனை திசைதிருப்பும் முயற்சியில் ஆதிரைக் கேட்கவும், இவன் முகம் மலர்ந்தது.

“யெஸ்மா... டபுள் சாக்லேட் ப்ரௌனி செய்யலாம் மா. லாஸ்ட் டைம் பண்ண மாதிரி நிறைய சாக்லேட் போட்டு பண்ணுங்க மா!” அவன் ஆசையுடன் கூற, “செய்யலாமே... ஓகே, நம்ப திங்க்ஸ் வாங்கிட்டு வீட்டுக்குப் போய் கேக் பண்ணலாம்...” என சிரிப்புடன் உரைத்தவள் கடைக்குச் சென்று தேவையான பொருட்களை வாங்கிவிட்டு வீட்டிற்குச் சென்றார்கள்.

அபி நொடியில் உடை மாற்றி முகம் கழுவிவிட்டு வர, இவளும் தன்னை சுத்தம் செய்தாள். இருவரும் சேர்ந்து அணிச்சலை செய்து முடித்திருந்தனர்.

“ம்மா... த்ரீ ஃபீஸ் வேணும் எனக்கு!” அவன் மூன்று விரல்களை காண்பிக்க, “த்ரீதான் டா. அதுக்கும் மேல ஒன்னு கூட கிடையாது. காலைல சாப்பிட்டுக்கோ!” என கண்டிப்புடன் அவனுக்கு மூன்று துண்டுகளை கொடுத்தவள், தனக்கு ஒன்றை எடுத்துக் கொண்டாள். ஏற்கனவே உடல் பூசினாற் போன்றாகிவிட்டதோ என சேலை கட்டும் போது லேசாய் எட்டிப் பார்க்கும் குட்டித் தொப்பை அவளுக்கு நினைவு வர, ஒன்றோடு நிறுத்தினாள்.

ருக்மணி பாட்டிக்கும் மகேசன் தாத்தாவிற்கும் அணிச்சலை எடுத்துச் சென்று கொடுத்துவிட்டு அவரிடம் சிறிது நேரம் பேசினாள். அவர் சுற்றி வளைத்து தேவாவைப் பற்றியே கேட்க, இவள் அவன் தனக்கு நண்பன் என முகம் மாறாது பதிலளிக்க வேண்டி இருந்தது. உண்மையில் ஆதிரைக்கு இப்படி விளக்கம் கொடுப்பது அறவே பிடிக்காது.

ஆனால் அவளுக்கு வேறு வழியில்லை. தினமும் அபியைத் தன்னுடைய பேரன் போல அவர்கள் பார்த்துக் கொள்கிறார்கள். இவள் வரத் தாமதமானால் ருக்கு பாட்டி அபியின் வயிற்றை வாட விடாது பார்த்துக் கொள்வார். அந்த நன்றிக்கடன் எப்போதுமே ஆதிரையிடம் உண்டு. அதனாலே அவர்கள் கேட்கும் அனைத்து கேள்விக்கும் பொறுமையாய் பதிலளித்தாள்.

“ஏன்டி ஆதிரை... உன் புருஷன் என்ன பண்றாரு?” ருக்கு பாட்டி கேட்க, இவள் என்ன சொல்வது எனத் தெரியாது தவித்து அப்போதைக்கு ஏதோ ஒரு பொய்யைக் கூறி மழுப்பிவிட்டு வீட்டை அடைந்தாள். உறங்க செல்லும் முன்னே அலைபேசியை ஒருமுறை எடுத்துப் பார்த்தாள். தேவாவிடமிருந்து செய்தி எதுவும் வந்திருக்கவில்லை.

‘ஹோப் யூ ஆர் ஃபைன் சார்? மெசேஜ் பார்த்துட்டு கால் பண்ணுங்க!’ என்ற குறுஞ்செய்தியை அனுப்பிவிட்டு உறங்கிப் போனாள்.

மறுநாள் காலையில் உழவர் துணைக்குச் சென்றதும் இவளது விழிகள் தேவாவைத்தான் தேடின. அவன் தாமதமாய் வருவான் என்று வேலையில் கவனம் செலுத்தினாள். மதிய உணவு நேரம் வந்தும் கூட அவன் வரவில்லை.

அவனுக்கு என்னவானது என ஆதிரையிடம் மெலிதாய் ஒரு பதற்றம் அப்பியது. இருந்தாலும் எதையும் வெளியே காண்பித்துக் கொள்ளவில்லை. அவளுக்கான விடையை சுபாஷே உரைத்துவிட்டான்.

“என்ன இன்னிக்கு தேவா சாரைக் காணோம். ஒரே அமைதி மயமா இருக்கே!” என தர்ஷினி கேட்க,

“ப்ம்ச்... அவர் வரலைன்னா சந்தோஷம் தான் தர்ஷினி. இல்லைன்னா எதையாவது கேப்பாரு, திட்டுவாரு. என்னைக்காவது தான் இதுமாதிரி ஃப்ரியா இருக்க முடியுது!” கோமதி இடை புகுந்தார்.

“இன்னைக்கு மட்டும் இல்ல, நாளைக்கும் கூட நீங்க ஜாலியா இருக்கலாம். தேவா சார் வெனஸ்டே தான் வருவாரு!” சுபாஷ் கூற, ஆதிரை அவனைக் கேள்வியாகப் பார்த்தாள்.

“அவரோட க்ளோஸ் ரிலேட்டீவ்ல டெத்தாம். ஹரி சார் கால் பண்ணி சொன்னாரு. அவர் இல்லைனாலும் வேலையை கரெக்டா பார்க்க சொன்னாரு. அதனாலே ரொம்ப ஓபி அடிக்கலாம்னு நினைக்காதீங்க. சார் வந்தா, எனக்கும் ஆதிக்கும்தான் திட்டு விழும்!” என அவன் மெல்லிய கண்டிப்புடன் கூறியதை தர்ஷினியும் கோமதியும் கண்டு கொண்டதாய் தெரியவில்லை. நாளைக்கும் தேவா வரமாட்டான் என்றதிலே அவர்கள் மனம் மகிழ்ச்சியில் திளைத்தது. ஆதிலா மட்டும் சம்பிரதாயத்திற்காக அவனிடம் தலையை அசைக்க, இவனது முகத்தில் புன்னகை நீண்டது.

தேவா வரவில்லை என்றதும் அனைவரும் மந்தமாய் செயல்பட்டனர். வேலை நிலுவையில் நின்றுவிட, ஆதிரை அனைவரையும் அதட்டி வேலை வாங்கினாள். சுபாஷ் எல்லோரிடமும் இலகுவாக பழகுபவன் என்பதால் அவனுடைய கண்டிப்பான பேச்சை ஒருவரும் கேட்கவில்லை.

“அக்கா.‌.. கதை பேசலாம், தப்பில்லை. பட், வேலையை முடிச்சிட்டு உக்கார்ந்து பேசுங்க. இல்லைன்னா எவ்வளோ நேரம் ஆனாலும் நீங்க இங்கதான் இருக்கணும்!” இவள் கோபத்துடன் கூறியதில் கடகடவென வேலை நடந்தது.

பால் வடிகட்டும் இடத்திற்குச் சென்று வேலை சரியாய் நடக்கிறதா என்று பார்த்துக் கொண்டாள். குளிரூட்டும் அறையையும் மறக்காமல் கவனித்தாள்.

“ப்ம்ச்... இவ்வளோ நேரம் நான் காட்டு கத்து கத்துறேன். ஒருத்தரும் கண்டுக்கலை ஆதி. நீ சொன்னதும் எல்லாரும் கப்சிப்னு ஆயிட்டாங்க!” சுபாஷ் கடுப்போடு கூறினான்.

“நீங்க எல்லா நேரத்துலயும் ரொம்ப ஜோவியலா, ஈஸியா அப்ரோச் பண்ற மாதிரி இருக்கீங்க சுபாஷ். அதனாலே நீங்க சொன்னாலும் அதை வொர்க்கர்ஸ் சீரியஸா எடுத்துக்க மாட்டாங்க. கொஞ்சம் எல்லார்கிட்டயும் டிஸ்டென்ஸ் மெய்ண்டெய்ன் பண்ணுங்க. வொர்கல எங்கேயும் காம்ப்ரமைஸ் பண்ண மாட்டேன்னு சொல்லுலயும், செயல்லயும் காட்டுங்க!” அவனைப் பார்த்து ஆதிரைக் கூற, சுபாஷூக்கும் அதேதான் தோன்றிற்று. இனிமேல் கொஞ்சம் கடுமையாக நடந்து கொள்ள வேண்டும் என்று நினைத்து பெருமூச்சுவிட்டான்.

ஆதிரை இன்றைக்கு இழுத்துப் பிடித்ததி
ல் வேலை சரியாய் நடந்தது. மறுநாளும் அவள்தான் அனைத்தையும் மேற்பார்வை பார்த்து வேலையை சரியாய் செய்தாள்.


 
Administrator
Staff member
Messages
1,194
Reaction score
3,478
Points
113
புதன்கிழமை காலையிலே தேவா வைத்துவிட்டான். இவளைப் பார்த்ததும் அவன் தலையை அசைக்க, ஆதிரை எதுவும் பேசாது லாக் புத்தகம், கடந்த இரண்டு நாள் தரவுகளை அவனிடம் ஒப்படைத்தாள். மேலும் இரண்டு பேர் விஷேசத்திற்கு பால் வேண்டும் என்று கேட்டிருக்க, அதையும் கணினியில் பதிந்திருந்தாள்.

தேவாவிற்கு ஆதிரையிடம் பேச வேண்டும்தான். ஆனாலும் வேலை வந்து முன்னே நின்றது. அனைத்தையும் ஒரு முறை சரிபார்த்து முடித்ததும் அவளை அழைத்துப் பேச வேண்டும் என்று நினைத்தவாறே அலுவலில் ஆழ்ந்தான்.

சுபாஷை அழைத்தும் சில பல கேள்விகளைக் கேட்டு, அவன் தெரியாது விழித்ததில் எரிச்சலானவன், “நான் வந்தாலும் வரலைனாலும் உங்களுக்கான வொர்க்கை சரியா பார்க்கணும் சுபாஷ். சும்மா நீங்க வந்துட்டுப் போறதுக்கு நான் சேலரி கொடுக்கலை. இனிமே இந்த மாதிரி எக்ஸ்க்யூஸ் கேக்காதீங்க. நவ் அவுட்!” என குரலை உயர்த்தி இருந்தான்.

இங்கே சோதனைக் கூடம் வரை அவனது சப்தம் கேட்டது. “வந்ததும் வராதததுமா ஆரம்பிச்சுட்டாரு‌. சே, சரியான சிடுமூஞ்சி சிதம்பரம் இவரு. ரெண்டு நாள் ஜாலியா இருந்தோம். இந்தாளு மூஞ்சியைப் பார்த்தா மூடே அப்செட் ஆகிடும்!” தர்ஷினி கடுப்புடன் ஆதிரை பக்கத்தில் அமர்ந்து முணுமுணுத்தாள்.

அவளை நிமிர்ந்து உறுத்துப் பார்த்தவள், “ஏன் தர்ஷினி, ரெண்டு நாள் தேவா சார் வரலைன்னு உனக்கு சம்பளம் கட் பண்ணிட்டாரா என்ன?” எனக் கண்டிப்புடன் கேட்டாள்.

அவள் புரியாது விழித்து, “இல்லையே கா.‌..” என்றாள்.

“ஃபைன், அப்போ சம்பளம் கரெக்டா கொடுக்குறார்னா நம்ப அதுக்கேத்த மாதிரி சரியா வேலை பார்க்கணும் தானே? ஹம்ம், சும்மா காசை அள்ளி இறைக்குறதுக்கு அவரென்ன மன்னர் பரம்பரையா? நம்பளை மாதிரி கஷ்டப்பட்டுத்தானே இந்த இடத்துக்கு வந்திருக்காரு. சோ, அவரோட கோபம் நியாயமானது தான். தப்பு செஞ்சா திட்டதான் செய்வாரு. அதனாலே நீ அவரை மரியாதை இல்லாம பேசாத. இதுதான் லாஸ்ட்!” என கோபத்தோடு ஆதிரை கூறியதும் தர்ஷினி முகம் மாறியது.

“அவரை சொன்னா உங்களுக்கு ஏன் கா கோபம் வருது. மனுஷன்னா கொஞ்சமாச்சும் குணமா இருக்கணும். எப்போ பார்த்தாலும் முகத்தைக் காண்பிச்சா என்ன பண்றது?” இவள் பதிலுக்குப் பொரிந்தாள்.

“அவர் இப்படி இருக்கும்போதே ஓபியடிக்குறீங்க‌. அவர் கொஞ்சம் ப்ளெக்சிபிளா இருந்தா உங்களை வேலை வாங்க முடியாது!” ஆதிரைக் கண்டிப்புடன் கூறியதும் வெடுக்கென முகத்தை திருப்பிய தர்ஷினி எழுந்து சென்று கோமதி அருகே அமர்ந்து கொள்ள, இவள் தோளைக் குலுக்கிவிட்டு தன் வேலையைப் பார்த்தாள்.

சிறிது நேரத்திலே தேவா அழைத்து விட்டான். அவனது அறைக்குச் சென்றாள். புதிதாக வந்திருக்கும் விஷேச ஆர்டர்களின் தரவுகளைப் பற்றி விசாரித்தான். நேற்றைக்கு ஏன் பால் வரத்து குறைந்தது என்பதைக் கேட்டு தெரிந்து கொண்டான். ஆதிரை பதிலளித்தாலும் அவன் முகத்தைதான் பார்த்திருந்தாள்‌. மூன்று நாட்களிலே எடை குறைந்தது போல முகம் வற்றியிருந்தது. கண்கள் வேறு சிவந்து கிடந்தன.

அலுவலகப் பேச்சு முடிந்ததும், “என்னாச்சு உங்களுக்கு?” எனக் கேட்டாள்.

“என்ன... ஐ யம் ஓகே!” அவன் இயல்பாய்க் கூற, “யூ லுக் வெரி டயர்ட். கண்ணெல்லாம் ரெட்டிஷா இருக்கு?” கேள்வியாக அவனைப் பார்த்தாள்.

“மூனு நாளா சரியா தூங்கலை. நேத்து ட்ராவல் வேற. அதான் கொஞ்சம் டயர்ட்!” என்றவன் இருக்கையில் சாய்ந்து அமர்ந்தான்.

“ஓ... இன்னைக்கே இங்க வரணும்னு என்ன அவசியம்? ஒரு நாள் ரெஸ்ட் எடுத்துட்டு வரக் கூடாதா? இந்த யூனிட்டை யாரும் தூக்கிட்டுப் போய்டுவாங்களா?” மெல்லிய குரலில் கடிந்தவளை அவன் முறைத்தான்.

எழுந்து பின்புறம் சென்றவள் அவனுக்கு ஒரு தேநீரை வாங்கி வந்தாள். “டீயைக் குடிச்சுட்டு வேலையைப் பாருங்க!” என அவள் மேஜை மீது தேநீரை வைக்கவும், தேவாவின் முகத்தில் நன்றியான புன்னகை. சில நிமிடங்கள் முன்புதான் ஒரு தேநீர் குடித்தால் நன்றாய் இருக்குமென யோசித்திருந்தான்.

“தேங்க்ஸ்!” மென்முறுவலுடன் அதை உதட்டுக்கு கொடுத்தான்.
இவள் சில நொடிகள் நின்றுவிட்டு, கிளம்ப யத்தனித்து மீண்டும் அவன்புறம் திரும்பினாள்.

“நீங்க சுபாஷ்கிட்டே இவ்வளோ ஹார்ஷா பேசிருக்க வேணாம் தேவா சார்!” என்றவளை அவன் புருவம் சுருக்கிப் பார்த்தான்.

“அவர் பண்ணது தப்புதான். பட் கொஞ்சம் பொறுமையா சொல்லி இருக்கலாம்!” அவன் முகத்தைப் பார்த்துக் கூறினாள்.

தேநீர் கோப்பையை மேஜை மீது வைத்தவன், “நான் வந்தாலும் வரலைனாலும் வொர்க் கரெக்டா நடக்கணும் ஆதிரை. அதுக்குத்தானே சேலரி வாங்குறான். ரெண்டு நாள்ல சேல்ஸ் ரெக்கார்ட்ஸை கூட ஒழுங்கா அவன் மெய்டெய்ண் பண்ணலை. சோ, நான் திட்டுனதுல தப்பில்லை!” என்றான் கண்டிப்பான குரலில்.

“ப்ம்ச்... அவர் தப்பு பண்ணார்தான். நீங்க திட்டுனது சரிதான். ஆனால் இந்த ரூம்க்குள்ள மட்டும் கேட்குற மாதிரி திட்டுங்க. உங்களோட வாய்ஸ் லேப் வரை கேக்குது. எல்லாரும் கேட்குற மாதிரி திட்டு வாங்குறது ஒரு மாதிரி ஆக்வர்டா இருக்கும் சார். அப்புறம் சுபாஷ்க்கு ஆறுதல் சொல்றேன்னு, கூட இருக்க எல்லாரும் உங்களை இஷ்டத்துக்கு வில்லன் மாதிரி போர்ட்ரெய்ட் பண்ணுவாங்க. இதெல்லாம் அவசியமா? ரொம்பவும் கெடுபிடியா இருந்தா, இந்தாளு இப்படித்தான்னு உங்க மேல இருக்க மரியாதை குறைஞ்சுடும் சார். தட்டிக் கொடுக்க வேண்டிய இடத்துல தட்டிக் கொடுத்து வேலை வாங்குங்க. உங்களுக்காகத்தான்
நான் சொல்றேன்!” தர்ஷினி பேசியதை வைத்துதான் இவற்றை தேவாவிடம் பகிர்ந்தாள்.

“சொல்லி முடிச்சாச்சா!” அவன் குரலில் எரிச்சல் அப்பிக் கிடந்தது.

இவள் பதிலளிக்காது அமைதியாய் இருக்க, “இது என்னோட ஆஃபிஸ். நான்தான் இங்க எம்.டி. சரியான நேரத்துக்கு சம்பளம் தர்ற நான், கரெக்டா வேலை பார்க்கணும்னு எக்ஸ்பெக்ட் பண்றது தப்பே கிடையாது. மிஸ்டேக் பண்ணா, திட்டதான் செய்வேன். சோ, இங்க நான் எப்படி இருக்கணும்னு அட்வைஸ் பண்ற வேலை வேணாம் மிஸ் ஆதிரையாழ். எனக்கு என்னை ரூல் பண்றதோ, என் பிஸ்னஸ்ல தலையிட்றதோ சுத்தமா பிடிக்காது. மைண்ட் இட்!” என்றான் கோபத்துடன். ஆதிரையின் முகம் மாறியது.

“கரெக்ட் சார், நீங்கதான் இங்க எம்.டி. நீங்க சொல்றதுதானே வொர்க்கர்ஸ் கேட்கணும். நான்தான் ஏதோ லூசு மாதிரி உங்ககிட்டே பேசிட்டேன். ஐ யம் ரியலி சாரி சார். நீங்க சுபாஷை ரூம்க்குள்ள கூப்பிட்டு இன்னும் நாலு வார்த்தைக் கூட திட்டிக்கோங்க. அதனால் எனக்கு எந்த பாதிப்பும் கிடையாது. வாங்குற சம்பளத்துக்கு நான் சரியா வேலை பார்க்குறேன்!” முகம் மாறாதிருக்க வெகு பிரயத்தனப்பட்டு கூறி முடித்தவள் விறுவிறுவென வெளியேறிவிட்டாள்.

இப்போது வேண்டாம் என்றாலும் மெல்லியதாய் மிக மெல்லியதாய் ஒரு நீர்படலம் விழித்திரையை சூழ்ந்தது. கழிவறைக்குச் சென்று முகம் கழுவிவிட்டு சோதனைக் கூடத்திற்கு நுழைந்தாள். கணினியில் விரல்கள் தட்டச்சு செய்தாலும் இன்னுமே தேவாவின் பேச்சு செவியில் எதிரொலித்தது. எப்படி ஒருவனால் ஐந்து நிமிடங்கள் முன்பு சிரித்துப் பேசிவிட்டு அதன் சுவடு கூட காயாதிருக்கும் போது முகத்திலே அறைந்தது போல வார்த்தைகளை திராவகம் போல வீச முடிகிறது என மீண்டும் மீண்டும் கண்கள் கலங்கின.

தன் மீதுதான் தவறு. வெளியே செல்லும் போது அவன் காண்பித்த முகத்தால் இங்கேயும் கொஞ்சமே கொஞ்சம் இணக்கத்தை எதிர்பார்த்தது என் தவறுதான். அவன் சம்பளம் கொடுக்கும் முதலாளி. அவன் வைத்தது தானே இங்கு சட்டம். சுபாஷூம் தானும் ஒன்றுதான் எனப் புத்தியில் உறைத்தது.

கலங்கும் விழிகளை சிமிட்டிக் கட்டுப்படுத்தினாள். தேவாவிடம் நிறைய நல்ல குணங்கள் இருந்தாலும் தொழில் என்று வருகையில் யாராய் இருந்தாலும் முகதாட்சண்யம் பார்க்காமல் வார்த்தைகளை வீசிவிடுவான். இந்த ஐந்து வருடத்தில் அவளுக்கும் அவனது குணம் தெரிந்ததுதான்.

இவளிடம் நட்பாய் பேசி சிரிக்காது எப்போதும் போல அவன் அவனது இடத்தில் இருந்திருந்தால் ஆதிரை இப்படியெல்லாம் அவனிடம் உரிமை பேசி இருக்க மாட்டாள். என்னவோ இப்போது அவனிடம் நட்பென்ற உரிமையில் மனதில் உள்ளதை உரைத்து விட்டாள். இல்லையென்றால் அவன் முகத்தை கூட இவள் ஒரு நிமிடத்திற்கு மேல் பார்க்க மாட்டாள்.

மனம் வலித்து தொலைத்தது. சற்று நேரம் முன்புதான் இவனுக்கு ஆதரவாக பேசி தர்ஷினியிடம் சண்டையிட்டிருந்தாள். அதற்குத் தக்க சன்மானம் அளித்து விட்டான் என மனம் புழுங்கியது.

‘ஆதி... முன்னாடி அவர் திட்டும் போது இவ்வளோ ஃபீல் பண்ணியா? இல்லையே? இப்போ மட்டும் என்ன? அவன் உன்னுடைய முதலாளி. அவனளவில் தொழில் எது தனிப்பட்ட வாழ்க்கை என்ற தெளிவு அவனிடம் இருக்கிறது. உனக்காக கூட அவன் எங்கேயும் வளைந்து போக அவசியம் இல்லையே. சுபாஷ் செய்த தவறுக்குத் திட்டு வாங்கினான். நீ எதிலும் தலையிடாதே!’ மூளை அவளை அதட்டியது.

அவள் விசைப்பலகையில் தட்டும் சப்தம் மட்டும்தான் சோதனைக் கூடம் முழுவதும் கேட்டது. அனைவரும் அவரவர் வேலையில் கவனமாய் இருந்தனர்.‌ தன் சற்று முன்னர் குரலை உயர்த்தியதுதான் என அவளுக்கும் புரிந்தது.

வேலையிடத்தில் உள்ள பிரச்சனைகளை அங்கேயே விட்டுவிட்டு செல்ல வேண்டும் என உருப்போட்டுக் கொண்டே வந்தவள், அபியின் முகத்தைப் பார்த்ததும் முறுவலித்தாள்.

“அம்மா...” என அபி இவள் வந்ததும் இடையோடு கட்டிக் கொண்டான். அவனைப் பார்த்ததும் ஆதிரைக்கு மற்றவை எல்லாம் மறந்து போனது.

“என்ன அபி?” எனக் கேட்டவள் அவனைத் தூக்கிக் கொள்ள, “நான் மேக்ஸ் டெஸ்ட்ல ட்வென்டி அவுட் ஆஃப் ட்வென்டி வாங்கிட்டேன்!” என வெட்கத்துடன் கூறி தாயின் கழுத்தைக் கட்டிக் கொண்டான். இவளுக்கு சிரிப்பு வந்தது.

“இதெல்லாம் வரலாற்றுல பதிக்கணுமே அபி மா. லாஸ்ட் டெஸ்ட்ல எட்டு மார்க் தானே வாங்குன?” என அவள் கேலியாய்க் கேட்க, மகன் சிணுங்கினான். அப்படியே பள்ளியில் நடந்ததை அவன் விவரிக்க, இவளுக்கு நேரம் போனது.

இரவு உணவாக அவனுக்கு கேரட் தோசையும், நியூடெல்லா தோசையும் சுட்டுக் கொடுத்தாள். நிஞ்சா ஹட்டோரியைப் பார்த்துக் கொண்டே அவன் ஒரு மணி நேரம் உண்ண, ஆதிரையும் இரண்டு தோசையோடு அவனருகே அமர்ந்தாள். சட்னி எதுவும் அரைக்கவில்லை. அதனால் பொடியை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிட்டாள். தாயிடம் இரண்டு வாய் வாங்கினான் சின்னவன்.

“ம்மா... ஃபைவ் ஃபைவ் பிஃப்டி ஃபைவ் தானேம்மா? சின்சோ கரெக்டா தானே சொல்றான்?" தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டே தன்னிடம் கேட்டவனை முறைத்தாள் இவள்.

“ஃபைவ் ஃபைவ் டென் டா. உனக்கு யாருடா மேக்ஸ்ல ட்வென்டி மார்க்ஸ் போட்டது?” என இவள் கேட்டதும், அவன் பல்லை காண்பித்து சிரித்தான். முன்னிருந்த மூன்று பற்களிலும் மெலிதாய் இன்னெட்டு கறை ஒட்டியிருந்தது. அதற்கும் சேர்த்து முறைத்தாள்.

இவள் தோசையை எடுத்து வாயில் வைக்க, அலைபேசி இசைத்தது. எழுந்து சென்றாள். தேவா எனப் பெயர் வர, மின்னூக்கியை அணைத்துவிட்டு அலைபேசியை காதுக்கு கொடுத்தாள்.

“சொல்லுங்க சார்?” ஒரு முதலாளிடம் பேசும் பாவனை அவளது குரலில். தேவா அலைபேசியை ஒலிபெருக்கியில் போட்டிருந்தான். வேலை முடித்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தான்.

அவள் குரலில் இவனிடம் ஏகத்தயக்கம். காலையில் அவளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நினைத்துதான் அறைக்குள் அழைத்தது. வேலை இருந்ததால் அதை முடித்துவிட்டு மற்றவற்றை பேசலாம் என அவன் எண்ணியிருக்க, அதற்குள்ளே ஆதிரை ஏதோ கூற, இவன் கோபத்தில் வார்த்தையை விட்டுவிட்டான்.

மூன்று நாட்கள் சரியாய் தூங்க வில்லை. துக்க வீட்டில் வேறு மூன்றாம் நாள் காரியத்தில் யார் உறுமா கட்டுவது வேண்டாம் என பெரிய பஞ்சாயத்தே நடந்து முடிந்திருந்தது. இவனுக்கு அவையெல்லாம் சேர்ந்து மனநிலையை மோசமாக்கி இருந்தன. போதாத குறைக்கு இவள் வேறு வந்து அதற்கு தூபம் போடுவது போல பேசவும், இருந்த கடுப்பை மொத்தமாய்க் காண்பித்துவிட்டான்.

அதுவும் இல்லாது இவனுக்கு தன்னுடைய தொழிலில் யார் குறுக்கிட்டாலும் அறவே பிடிக்காது‌. ஹரியையே இரண்டு மூன்று முறை திட்டி இருக்கிறான். என்னவோ அவன் நினைத்தும் இந்தப் பழக்கத்தை மாற்ற முடியவில்லை.

“ஹலோ சார்?” அவன் அமைதியாய் இருக்க, ஆதிரை குரலெழுப்பினாள்.

நெற்றியை தேய்த்தவன், “ஆதி, ஐ யம் சாரி...” என்றான்.

“எதுக்கு சார் இந்த சாரி?” அவள் புரியாது கேட்டாள்.

“எல்லாத்துக்கும் தான்‌. உன்கிட்ட வரேன்னு சொல்லிட்டு இன்பார்ம் பண்ணாம விட்டதுக்கு. அவர் என்னோட சித்தப்பா. சட்டுன்னு டெத்தாகவும், என்னால வேற எதையும் யோசிக்க முடியலை. அதுவும் இல்லாம ஃபோன்ல சுத்தமா சார்ஜ் இல்ல. போன இடத்துல அதெல்லாம் கேட்டுட்டு இருக்க முடியுமா?” அவன் நீண்ட விளக்கம் தர,

“இட்ஸ் ஓகே சார், எனக்கு உங்க சிட்சுவேஷன் புரியது. இதெல்லாம் நார்மலா நடக்கும். நான் எதுவும் தப்பா எடுத்துக்கலை!” அவள் இயல்பாய் உரைத்தாள்.

“அகைன் சாரி ஆதி, அது... இன்னைக்கு நான் உன்கிட்ட ஹார்ஷா பேசிட்டேன். சாரி, அது என் மைண்ட் செட் சரியில்ல. எனக்கு என்னோட பிஸ்னஸ்ல யாரும் தலையிட்டா பிடிக்காது!”

“தேவா சார், நீங்க சாரி கேட்க அவசியமே இல்ல. ஆக்சுவலி தப்பு என் மேலதான். அவசரக் குடுக்கைத்தனமா நான் தானே உங்களுக்கு அட்வைஸ் எல்லாம் பண்ணேன். நீங்க சொன்னது ரைட் சார்‌. சம்பளம் குடுக்குற முதலாளி தன்கிட்ட வேலை பார்க்குறவங்க சரியா இருக்கணும்னு நினைக்கிறதுல என்ன தப்பு இருக்கு? நானும் உங்ககிட்டே ஒரு வொர்க்கர் தானே? அப்படி இருக்கும்போது உங்களுக்கு அட்வைஸ் பண்றது எல்லாம் சரியா? இட்ஸ் ப்யூர்லி மை மிஸ்டேக் சார்!” என்றாள் அமைதியான குரலில். என்னவோ அவள் குரலில் இருந்த விலகலில் இவனுக்கு கடுப்பானது.

“லூசு மாதிரி உளறாத டீ!” அவன் எரிச்சலாகக் கூறினான்.

“சார், நீங்க எப்படி மரியாதை எக்ஸ்பெக்ட் பண்ணுவீங்களோ, அதே மாதிரி எனக்கும் மரியாதை முக்கியம். நீங்க எனக்கொரு ஹெல்ப் பண்ணீங்க. அதுக்கு நீங்க கேட்ட டிமாண்டை நான் செஞ்சுட்டேன்‌. அது ஓவர், சோ இனிமே நீங்க என் பாஸ். நான் உங்ககிட்ட வேலைப் பார்க்குறேன். அதை ஞாபகம் வச்சுக்கோங்க. டீ போட்டுக் கூப்பிட்ற வேலை வேணாம். எனக்குப் பிடிக்காது!” தன்மையாய் கூறினாள் ஆதிரை.

“ப்ம்ச்... நீ கோபமா இருக்கேன்னு எனக்குப் புரியுது ஆதி. நம்ப நேர்ல பேசுவோம்” அவன் குரல் இறங்கி வந்தது.

“நிஜமா எனக்கு எந்தக் கோபமும் இல்லை சார். நான் ரொம்ப நார்மலா பேசுறேன். நீங்க என்னை சமாதானம் செய்யணும்னு அவசியம் இல்லை. நானே உங்ககிட்டே நல்லா பேசி பழகிட்டு எப்படி நோ சொல்றதுன்னு யோசிச்சுட்டு இருந்தேன். நீங்க காலைல பேசுனதை வச்சு நான் இதை சொல்லலை. எப்படி இருந்தாலும் நான் உங்களுக்கு ஓகே சொல்ற ஐடியால இல்ல. சோ, உங்களுக்குப் புரியும்னு நினைக்கிறேன். உங்க ஃபேமிலிக்கு அடாப்ட் ஆகுற மாதிரி பொண்ணா பார்த்துக் கல்யாணம் பண்ணிக்கோங்க சார்!” அவள் குரலில் தேவாவிற்கு அத்தனைக் கடுப்பு.

இன்னும் எத்தனை தூரம் அவன் இறங்கி செல்வது. அவனளவில் இதுவரை யாரிடமும் இவ்வளவு வளைந்து கொடுத்ததாய் நினைவில் இல்லை. இவள்தான் வேண்டும் என்று பின்னாலே செல்வதால் தன்னை துச்சமாக எண்ணுகிறாளோ எனக் கோபமாய் வந்தது.

“இதான் உன் டிசிஷனா?” என சினத்தோடு கேட்டான்.

“யெஸ் சார்!” அவள் கூறவும்,

“ஃபைன்...” என்றவன் அவள் வேறு எதுவும் பேசும் முன்னே அழைப்பை துண்டித்து விட்டு அவளது எண்ணைக் கருப்பிவிட்டான். அவ்வளவு கோபம் வந்து தொலைத்தது.

ஆதிரை அலைபேசியை சில நொடிகள் பார்த்திருந்தாள். நேற்று வரை அவன் மனம் நோகாது எப்படி மறுப்பை கூறப் போகிறோம் என்ற கவலை இருந்தது. ஆனால், இன்றைய அவன் பேச்சிற்கு பின்னே அது அவசியமற்றது எனப் புரிந்தது. அவன் எப்படி இருக்கிறானோ, நானும் அப்படியே இருக்கிறேன் என அசட்டையாக தோளைக் குலுக்கிக் கொண்டாள்.

தொடரும்...



 
Well-known member
Messages
445
Reaction score
323
Points
63
Love panna than fight breakup samadhanam ellam parthu iruken inga enna da ivanga eppo parthalum muttikitae irukaga janu ma evolo azhaga sandai mooti vittu escape aagita ne ozhunga avanga la serthu vai
 
Well-known member
Messages
510
Reaction score
383
Points
63
இரண்டு பேரும் இப்படியே பேசிட்டு இருந்தா 😳😳😳😳
 
Active member
Messages
192
Reaction score
159
Points
43
Eagerly waiting for the next epi sis.
 
Top