• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,168
Reaction score
3,348
Points
113
நெஞ்சம் – 16 💖

அயிரை நிறச்சட்டைக்குப் பொருத்தமாக சந்தன வண்ண கால் சராயை அணிந்து தலையைக் கோதி கண்ணாடியில் பார்த்த தேவா வெளியே வர, ஜனனி அப்போதுதான் சீப்பை மும்முரமாகத் தேடிக் கொண்டிருந்தாள். பொன்வாணி தலையிலிருந்த துண்டை உதறி முடியை உலர்த்த, இவன் இருவரையும் முறைத்தான்.

“பத்து நிமிஷம் மாமா... ராகியை கிளப்பிட்டு நான் ரெடியாக டைமாகிடுச்சு!” என்ற ஜனனி தலையைப் பின்னலிட்டு அதில் பூவை சொருகினாள். ராகினி பாவடைச் சட்டையோடு தாயின் அலைபேசியில் ஏதோ விளையாடிக் கொண்டிருந்தாள்.
தேவாவும் அவளுக்கு அருகே அமர்ந்தான்.

ஜனனி கருவுற்று நல்ல செய்தி கிடைத்துவிட அதற்கு கோவிலுக்குச் சென்று நன்றி சொல்ல வேண்டும் என்று பொன்வாணி எண்ணியிருக்க, சிவன் கோவிலில் விசேஷம் என்பதால் இன்றைக்கே செல்லலாம் என கணவரை அழைத்தார்.

“இல்ல வாணி, நம்ப ராசுவோட அப்பா முடியலைன்னு ஹாஸ்பிடல்ல இருக்காராம். நான் ஒரெட்டுப் போய் பார்த்துட்டு வரேன்!” என கோபால் அகல, ஹரி காலையிலே பண்ணையில் ஏதோ கோளாறு என அதை நோக்கி ஓடியிருந்தான்.

“தேவா... இன்னைக்கு பண்ணையில நிறைய வேலை இருக்காப்பா?” என்ற வாணி, “சிவன் கோவில்ல எங்களை விட்டுடுறீயா? ஆட்டோல போகலாம்னா அவன் ரோட்ல தூக்கித் தூக்கிப் போடுவான். ஜனனியை இந்த மாதிரி நேரத்துல ஆட்டோல கூட்டீட்டு போறது நல்லா இல்லை!” என அவனை அழைத்தார்.

“கேப் புக் பண்ணி போய்க்கலாம் அத்தை... மாமாவை ஏன் டிஸ்டர்ப் பண்றீங்க?” ஜனனி இடைபுக, மாமியார் அவளை முறைத்தார். இன்றைக்கு சிவன் கோவிலில் விமர்சையாக பூஜை நடக்கவிருந்தது. மகனையும் எப்படியாவது அவரது சந்நிதிக்கு அழைத்து வர வேண்டும் என்ற எண்ணம் பெரியவருக்கு. அவன் வந்தால் தடைபட்டிருந்த திருமணம் நல்லபடியாக முடியும் என்ற நம்பிக்கையில் அவனையும் அழைத்தார்.

“ஆமா மா.. கேப்ல போகலாம் இல்ல... நீங்க ரெண்டு பேரும் டைம்க்கு கிளம்ப மாட்டீங்க!” அவன் யோசனையுடன் கூற,

“எத்தனை மணிக்கு நீ கிளம்பணும்ன்னு சொல்லு டா. கரெக்டா அதே டைம்க்கு நாங்களும் ரெடியா இருப்போம்!” என மகனை சமாளித்தவர், அவன் குறிப்பிட்ட எட்டு மணியைத் தாண்டி எட்டு முப்பதைத் தொட்டும் இன்னும் தயாராகவில்லை. அவன் சலிப்புடன் அமர்ந்திருந்தான்.

“அத்தை... எட்டு மணிக்குப் பூஜை ஆரம்பிச்சுடும்னு சொன்னாங்க... போச்சு பூஜை முடிஞ்சதுதான் நம்ப போவோம் போல!” ஜனனி கூற, “இந்தா‌‌... கிளம்பிட்டேன் டி!” என்றவர், மகளின் அறையை எட்டிப் பார்த்தார். அவள் இழுத்துப் போர்த்திக்கொண்டு உறங்கினாள்.

“பிரது... நாங்க வர டைம் முன்ன பின்ன ஆகும். ஒழுங்கா எழுந்து சாப்ட்டு மிச்ச சட்னியை ப்ரிட்ஜ்ல எடுத்து வை. சாம்பாரை சூடு பண்ணு. நான் வர்றவரை படுத்தே கிடந்த, பழுக்க காய்ச்சி சூடு வச்சுடுவேன்!” அவர் இரைந்ததும், சின்னவள் போர்வையை இழுத்து முகத்தை மூடித் திரும்பிக் கொண்டாள்.

“விடிஞ்சு எவ்வளோ நேரம் ஆகுது... பொண்ணா லட்சணமா எங்களோட கோவிலுக்கு வாடீன்னு கூப்ட்டா காலங்காத்தால எழுந்திருக்க முடியாதுன்னு வியாக்கியானம் பேசுறா!” மகளை வசைபாடியபடியே தனக்கென குட்டியாய் வெட்டி வைத்திருந்த பூவை எடுத்து கொஞ்சம் முடியில் சுற்றிக் கொண்டவர், “வாடா போகலாம்...” என கையில் கூடையோடு முன்னே சென்றார்.

“அத்தை... அபிஷேகம் முடிஞ்சிருக்கும். நம்ப கொண்டு போற பால், தேன்லாம் வேஸ்டாகப் போகுது!” ஜனனி புலம்பியபடியே பின்னிருக்கையில் ஏற, ராகினி தேவாவோடு முன்னே அமர்ந்தாள். கதவை வெளிப்புறம் பூட்டிய பொன்வாணி ஜன்னல் வழியே மேஜை மீது சாவியை வைத்துவிட்டு வந்து மகிழுந்தில் ஏறினார்.

செங்கல்பட்டின் ஒரு மூலையில் இருந்த அந்த சிவபெருமான் கோவிலை நோக்கிச் சென்றனர். எப்போதும் பிரதோஷம் என்றால் கோவிலில் கூட்டம் அதிகமாக இருக்கும். இன்றைக்கு ஏதோ வருடத்திற்கு ஒருமுறை செய்யும் பூஜை நடைபெறவிருப்பதால் அந்த தெருவே ஜெகஜோதியாக காட்சியளித்தது.

தேவாவிற்கு மகிழுந்தை நிறுத்த இடமே கிடைக்கவில்லை. அந்த கோவிலோடு ஒட்டியிருந்த கடையருகே வாகனத்தை நிறுத்தியவன், “ம்மா... சாமி கும்பிட்டுட்டு பத்திரமா ஜனனியை வீட்டுக்கு கூட்டீட்டுப் போங்க. ராகினி பத்திரம், கூட்டமா இருக்கு...” அறிவுறுத்தினான்.

“டேய் தேவா... இவ்வளோ தூரம் வந்துட்ட... அப்படியே உள்ள வந்துட்டுப் போனா என்ன டா. இங்க இருக்க சிவபெருமான் சக்தி வாய்ந்தவர் டா!” மகனையும் உள்ளே அழைக்க முயன்றார் பொன்வாணி.

“ப்ம்ச்... அப்போ நம்ம வீட்ல இருக்க சிவன் போட்டோக்கு சக்தி இல்லையாமா? வீட்ல எதுக்கு கும்புடுறீங்க?” அவன் கேட்டதும், தாய் முறைத்தார்.

“விதண்டாவாதம் பண்ணாம ஒழுங்கா வந்துட்டுப் போ டா!” அதட்டலிட்ட தாயைப் பொருட்படுத்தாதவன், “எனக்கு வேலை இருக்கு மா... நான் கிளம்புறேன்” என்றவாறே மகிழுந்தை இயக்க, பொன்வாணி மகனை அதிருப்தியுடன் பார்த்துவிட்டு மருமகளுடன் உள்ளே நுழைந்தார்.

“ஆதிரை... உன்கிட்ட கோவிச்சுட்டுப் பேசாம இருக்க புருஷன் சீக்கிரம் வந்து பேசணும், சமாதானம் பண்ணணும்னு வேண்டிக்கோ. இந்த வருஷமாவது உன் வாழ்க்கைல நல்லது நடக்கும்னு நம்புவோம்...” ரூக்கு ஆதிரைக்கும் சேர்த்து பாலும், தேனும் வாங்கிக் கொண்டே கூற, இவளிடம் சிறு தலையசைப்பு மட்டுமே.

ஆதிரை இந்தியா வந்த புதிதில் குழந்தையோடு தனியாய் நிற்க, திருமணமாகாதப் பெண்ணிற்கு வீடு தர இரண்டு மூன்று வீட்டின் உரிமையாளர்கள் மறுத்துவிட்டனர். அதனால் வேறு வழியின்றி கணவனோடு சண்டையிட்டு தனித்து வந்துவிட்டதாய் உரைத்திருந்தாள். அதை இன்றளவும் நம்பிய ருக்கு அவளைக் கோவிலுக்கு அழைத்துச் செல்லும் போதெல்லாம் உபதேசம் தர மறக்கவில்லை.

இருபுறமும் கூட்டம் நெருக்கியிருக்க, தேவா இரண்டு அடி நகர்ந்துவிட்டு மீண்டும் அப்படியே நின்றுவிட்டான். ஆமை போல ஊர்ந்து மக்கள் உள்ளே செல்ல, மெதுவாய் நகர்ந்தான். முன்னே சென்ற இருசக்கர வாகனம் அப்படியே நகராது நிற்க, இவன் எரிச்சலாய்ப் அதைப் பார்த்திருந்தான். அந்நேரம் மகிழுந்தில் அலைபேசி ஒலிக்க, திரும்பிப் பார்த்தான். ஜனனியின் அலைபேசியை விட்டுச் சென்றிருந்தாள்.

அவர்கள் சாமியை தரிசித்துவிட்டு மகிழுந்து முன்பதிவு செய்துதானே வீட்டிற்குச் செல்ல வேண்டும். அப்படியெனில் அவளது அலைபேசி இல்லாது எப்படி செல்வார்கள் என யோசித்தவனுக்கு துளியும் சந்தேகம் இல்லாது இது தாயின்
வேலைதான் எனப்‌ புரிந்தது. வேண்டுமென்றேதான் அலைபேசியை வைத்துவிட்டுச் சென்றிருக்க கூடுமென எண்ணிக் கடியானவன், அந்த தெருவின் முனையில் வாகனத்தை நிறுத்திவிட்டு கடுகடுத்த முகத்தோடு கோவிலின் உள்ளே நுழைந்தான்.

அங்கிருந்த கூட்டத்தைப் பார்த்து மலைத்துப் போனானன். சுற்றிலும் பெண்கள்தான் ஆக்கிரமித்திருந்தனர். ஆங்காங்கே ஒரு சில ஆண்களும் தென்பட்டனர். இத்தனை பெண்களுக்கு இடையில் எப்படி இடித்துக் கொண்டே உள்ளே செல்வது என நினைத்துப் பல்லைக் கடித்தவன் வேறு வழியற்று அங்கே ஓரமாய் நின்றான். எப்படியும் அவர்கள் இந்த வழியில்தானே திரும்பி வர வேண்டும் என்று எண்ணியவன், பொன்வாணிக்கு அழைக்கும் எண்ணத்தைக் கைவிட்டான். வீட்டிலிருந்து கிளம்பும் போதுதான் தன்னுடைய அலைபேசியில் பேட்டரி தீர்ந்துவிட்டது என எடுக்காது வந்திருந்தார் பெண்மணி.
 
Administrator
Staff member
Messages
1,168
Reaction score
3,348
Points
113
‘எல்லாம் ப்ளான்...’ முகம் கோபத்திலும் எரிச்சலிலும் திளைக்க, சில பல நிமிடங்கள் அங்கே நின்றான். உழவர் துணைக்கு வேறு செல்ல வேண்டும், இன்றைக்கு ஒருவர் நேரில் வந்து சந்தித்து அவர்களது பெண்கள் மற்றும் ஆண்கள் விடுதிக்குப் பால் விநியோகம் செய்யக் கேட்டிருக்க, இவனும் சந்திப்பதற்கு ஒப்புக் கொண்டிருந்தான். பத்து மணிக்குத்தான் அவர் வருவார் என்றாலும் இவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை.

தலைக்கு மேல் வேலை இருக்க, இங்கே கோவிலில் எந்தக் முகாந்திரமும் அற்று நிற்பது எரிச்சலாய் வந்தது. தேவாவிற்கு பெரிதாய் கடவுள் பக்தியெல்லாம் அறவே இல்லை. எதற்காகவும் கடவுளிடம் சென்று நிற்பதில் விருப்பமற்றவன். உழைத்தால் உயர்வு, தன்னுடைய சோம்பேறித் தனத்திற்கும் அடிமுட்டாள் தனத்திற்கும் கோவிலில் வந்து கடவுளைக் குறை சொல்வதோ அல்லது அவரிடம் முறையிடுவதோ சுத்த பத்தாம்பசலித் தனம் என எண்ணுபவன். அதனாலே கோவிலுக்கு வருகைத் தருவதை விரும்பவில்லை. ஆனால், இன்றைக்கு பொன்வாணி சதி செய்திருந்தார்.

கொஞ்சம் ஓரமாய் பெண்கள் நகரவும், உள்ளே சென்று அலைபேசியைக் கொடுத்துவிட்டு கிளம்பிவிடலாம் என்ற எண்ணத்துடன் அந்தப் பெண்கள் கூடத்தில் நுழைந்தான். இருபுறமும் மங்கையர்களிடம் இடிபட்டவன், தாயை அந்த நேரத்திற்கு வகை தொகையில்லாமல் மனதில் திட்டித் தீர்த்தான்.

சட்டென அனைவரும் முன்னே நகர, தேவா அவர்களுடன் இழுபட்டான். நொடியில் அவர்கள் நிற்க, தேவா முன்னிருந்த பெண்ணின் தோளில் கை வைத்து தன்னை நிதானித்தவன், சுதாரித்து பின்னிழுத்துக் கொள்வதற்குள், “அறிவில்லையா உங்களுக்கு?” எனக் கோபமாய் கேட்டுக் கொண்டே திரும்பினாள் ஆதிரையாழ். தேவா மன்னிப்பு கேட்க வாயைத் திறந்தவன் திகைத்துப் போனான். அந்நொடி அவளை அங்கே எதிர்பார்த்திருக்கவில்லை. அவளுமே அவன் என எண்ணியிருக்கவில்லை.

“சாரி ஆதிரையாழ்... சாரி!” அவன் மன்னிப்பை வேண்ட, அவள் அவனைக் கவனிக்காதுதான் திட்டினாள்.

“இட்ஸ் ஓகே சார்!” என ஆதிரை தலையை அசைக்க, தேவா அப்படியே நகர்ந்து ஒரு ஓரத்திற்குச் செல்ல, கூட்டம் முன்னே நகர்ந்தது.

ஆதிரை அவனைப் பார்த்து தயங்கிவிட்டு, “ம்மா... அபியைப் பார்த்துக்கோங்க. ரெண்டு நிமிஷத்துல வந்துடுறேன்!” என்றவாறே அவன் அருகே சென்றாள்.

“அகைன் சாரி ஆதி, இட் வாஸ் மை மிஸ்டேக்!” பிடரியைக் கோதியபடி அவன் முனங்கலாக கூற, “பரவாயில்லை சார், நீங்க வேணும்னு செஞ்சிருக்க மாட்டீங்கன்னு எனக்குத் தெரியும்!” என்றவளின் பதிலில் தேவாவிம் நெஞ்சம் திடுகிட்டுப் போனது.

“வாட், கம் அகைன் ஆதிரை!” அவன் திகைப்புடன் கேட்க, அவள் அவன் முகத்தைப் பார்த்து தயங்கி, “நீங்க வேணும்னு பண்ணிருக்க மாட்டீங்க. ஐ க்நோ, இட் வாஸ் அ ஆக்சிடென்ட்!” என்றாள் மெல்லிய குரலில். தேவாவின் உதடுகளில் அவனையும் அறியாது முறுவல் பிறந்தது. அவள் வார்த்தையில் அந்தப் பாவனையில் தேவாவின் மொத்த மனநிலையும் மாற்றிப் போட்டிருந்தது.

தொண்டையைச் செருமியவன், “தேங்க் யூ!” என்றான் மென்குரலில். இத்தனை நேர கோபம், பதற்றம் எல்லாம் வடிந்து போக, முகம் மலர்ந்து போனது.

“எனக்கு ஒரு ஹெல்ப் பண்றீங்களா ஆதிரை?” தேவா கேட்டதும், இவள் என்னவென்பதாய் பார்க்க,

“என்னோட அம்மாவும், தம்பியோட வொய்ஃபும் உள்ள இருக்காங்க. ஃபோனை கார்லயே மிஸ் பண்ணிட்டுப் போய்ட்டாங்க. அதைக் கொடுக்கத்தான் வந்தேன். பட் இந்த கூட்டத்துல!” எனக் கையைக் காண்பித்து தலையை முடியாது என அசைத்தவன், “நீங்க கொடுத்துடுறீங்களா?” எனக் கேட்டான்.

“ஓகே சார், நான் குடுக்குறேன்!” என்றவளிடம் ஜனனியின் அலைபேசியைக் கொடுத்தான்.

“ஸ்க்ரீன் சேவர்ல இருக்கவங்கதான் அம்மா, ஜனனி, ராகினி!” என்றான். உடன் ஹரி, தேவா, அவனது தந்தையும் தங்கையும் நின்றிருந்தனர். அந்தப் புகைப்படத்தை நன்றாகப் பார்த்துக் கொண்டவள், தலையை அசைத்து உள்ளே செல்ல, தேவாவின் பார்வையும் அவள் பின்னே கட்டுப்பாடற்று அலைந்தது. இமைக்காமல் அவளையே பார்த்திருந்தான்.

அவசர அவசரமாக குளித்துக் கிளம்பி ஏனோ தானோவென வந்திருப்பாள் போலும். சீரில்லாது முடி பறக்க, ஒரு சாமந்தியும் பெயருக்கு கொஞ்சம் மல்லியும் அதனோடு உறவாடின. அரக்கு வண்ண பட்டு வகையிலான புடவை. தங்கநிற ஜரிகை வைத்திருக்க, அதை ஒற்றையாய் விட்டிருந்தாள். அவள் சென்று மறையும் வரைப் பார்த்திருந்த தேவநந்தன் மூச்சை இழுத்துவிட்டு விறுவிறுவென வெளியே சென்றான்.

இந்த சில நிமிடங்களில் இன்னும் கூட்டம் நெருக்கியது. வாயிலைத் தாண்டி தெரு முழுவதும் மக்கள் நிற்க, அவன் மகிழுந்தை ஒரு அடிகூட நகர்த்த முடியாது போக, முகத்தை சுளித்தான். நடந்து சென்று பிரகாரத்தின் சொர்க்க வாசல் திறக்கும் பகுதியிலிருந்த படிகட்டில் அமர்ந்தான். மனமும் மூளையும் ஆதிரையை சுருட்டிப் பத்திரப்படுத்தியிருந்தது. தலையைக் கோதி நிமிர்ந்து கோபுரத்தையே பார்த்தான்.

சற்று முன்னிருந்த மனநிலை மொத்தமாய் மாறியிருந்தது. ஆதிரை சிரித்தது, சங்கடமானக் குரலில் கூறியது என நொடிக்கு நொடி அவள் முகமே கண்ணை நிறைக்க, பெருமூச்சை வெளிவிட்டான். அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. இந்த சிறு சலனத்தைப் பிடிப்பைக் கொண்டு இந்தப் பெண்ணோடு வாழ்ந்துவிட முடியுமா? தான்தான் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறோமோ என மனம் குழம்பியது.

எந்தவித தெளிவான முடிவும் எடுக்க முடியாது திணறிப் போனான். எல்லா விஷயத்திலும் தெளிவாய் திடமாய் யோசித்து முடிவெடுப்பவன் இந்தப் பெண் ஆதிரையிடம் குழம்பிப் போனான். இவள் தன்னைப் புரிந்து வைத்திருக்கிறாள் என்பதற்காக திருமணம் செய்து கொள்ள முடியுமா? ஒருவேளை அவள் எல்லோரைப் பற்றியும் அலசி ஆராய்ந்து புரிந்து கொள்ளும் வகையில் சேர்த்தி எனில், எவ்விதத்தில் அவனது உணர்வுகள் சரியென்றாகும். புரிதல்தானே ஒரு உறவுக்கு அடிநாதம் என்பதை வசதியாய் மறந்து போயிருந்தான்.

“எக்ஸ்யூஸ் மீ!” காதருகே குரல் கேட்டதும் ஜனனி திரும்பிப் பார்க்க, ஆதிரை நின்றிருந்தாள்.

அவள் என்னவென நோக்க, “தேவா சார் இந்தப் போனை உங்ககிட்டே கொடுக்க சொன்னாரு!” என நீட்டினாள்.

“ஓ... ஓகே, தேங்க்ஸ்ங்க!” என்ற ஜனனி நட்பாய் புன்னகைத்து அலைபேசியைப் பெற்றுக் கொண்டவள், “உங்கப் புள்ளையை உள்ள வர வைக்க நீங்க ப்ளான் போட்டா, அவரு ஃபோனை நம்ப ஸ்டாஃப் கிட்டே கொடுத்து விட்டுட்டாரு!” என மாமியாரிடம் கிசுகிசுத்தாள். ஆதிரைக்கும் அந்த சத்தம் செவியில் நுழைந்தது.

“இவனை என்ன பண்றதுன்னு தெரியலை... காலகாலத்துல ஒரு கல்யாணத்தைப் பண்ணி வச்சுடலாம்னு பார்த்தா அதுக்கும் வழி இல்ல!” எனக் கோபமாய் முனங்கியவர், “ஏம்மா... போனை அவன் குடுத்தா நீ ஏன் வாங்குன. முடியாதுன்னு சொல்ல வேண்டியது தானே?” என ஆதிரையிடம் அவர் சத்தமிட்டதும் அவள் முகம்‌ மாறிற்று. பொன்வாணியின் குரலே சற்று உரத்தக் குரல்தான். பழகியவர்களுக்கு நன்கு தெரியும்‌ என்றாலும் ஆதிரைக்கு அவர் பேசியதில் முகம் வாடிப் போனது. இவர்களுக்கு உதவி செய்தது என்னுடைய தவறு என அகலச் சென்றாள்.

“அத்தை... என்ன நீங்க, அவங்க ஹெல்ப் பண்ண வந்துருக்காங்க!” மாமியாரை அதட்டிய ஜனனி, ஆதிரையின் கையைப் பிடித்தாள்.

“சாரிங்க... என் அத்தை வாய்ஸே அப்படித்தான். மாமா உள்ள வரலைன்னு அப்படி பேசிட்டாங்க. நீங்க எதுவும் தப்பா எடுத்துக்காதீங்க!” என்றாள் கெஞ்சலாய்.

“இல்லங்க... அதெல்லாம் ஒன்னும் இல்ல!” முறுவலிக்க முயன்றாள் ஆதிரை. ஆனாலும் முன்பிருந்த மலர்ச்சி முகத்தில் இல்ல.

“என் மகன் மேல இருக்க கோபத்தை உன்கிட்ட காட்டீட்டேன் மா... ஒன்னும் எடுத்துக்காத!” பொன்வாணியும் பேச, ஆதிரை தலையை அசைத்தாள். அவளால் அவர்களோடு ஒட்ட முடியவில்லை.

“உன் பையானா மா... வீட்டுக்காரரோட வந்தீயா?” அபினவைப் பார்த்து பொன்வாணி கேட்டதும், ஆதிரையின் முகம் இன்னுமே மாறிற்று.

“பையன்தான் மேடம், தனியாதான் வந்துருக்கேன்!” ஒட்டாத புன்னகையுடன் உரைத்தாள். அதற்குள் அபி தாயின் கையை சுரண்டினான்.

“ம்மா... சுச்சு போகணும் எனக்கு!” அவன் ரகசியமாய்க் கூற, அவர்களிடம் தலையை அசைத்தவள் கோவிலின் பின்புறம் வழியே சென்றாள். கோவிலுக்கு எதிரே இருந்த ஒரு உணவகத்தில் உள்ள கழிவறைக்கு அவனை அழைத்துச் சென்று மீண்டும் இங்கே வந்தாள். கூட்டம் அதிகமாக இருக்க, உள்ளே செல்ல அவளுக்கு சலிப்பானது. அங்கிருந்த மரத்தின் கீழ் அமர்ந்தாள். கடவுளை தரிசித்து விட்டாள். ருக்கு அவருடைய சொந்தம் ஒருவரைக் கண்டுவிட்டு கதையளக்க, அவர் வரும்வரை அமரலாம் என்று கீழே உட்கார்ந்தாள்.

“ம்மா... பொங்கல் தராங்க... நான் வாங்கிட்டு வரேன்” என அபி ஓட, இவள் அவனைப் பார்த்திருந்தாள். வரிசையில் நின்று பொங்கலை வாங்கி வந்தவன், “ஆ... சூடா இருக்கு மா!” எனக் கத்திக் கொண்டே அமர, அவனை முறைத்து விரைந்து தொண்ணையை வாங்கி கீழே வைத்தவள், “சுடுதுன்னா சட்டையைத் தூக்கிப் பிடிக்க வேண்டியது தானே அபி!” என்றாள் அதட்டலாய். அவள் கரங்கள் நீண்டு மகன் கையை ஆராய்ந்தன.

“ஒன்னும் இல்ல மா!” எனக் கையைப் பின்னிழுத்தவன், ஊதி ஊதிப் பொங்கலை சாப்பிட, அவனை மென்மையாய் முறைத்தாள் ஆதிரை. அப்படியே மரத்தில் சாய்ந்தவளின் பார்வை கூட்டத்தை மேய்ந்தது.

கோவிலுக்கு வரும்போது மனம் எப்போதும் போலத்தான் இருந்தது. ஆனால், பொன்வாணி முகத்தைக் காண்பித்து பேசியதில் சட்டென மனம் சோர்ந்தது. காரணம் அது மட்டுமா எனக் கேட்டாள், ஆமாம் என்ற பதிலைத்தான் கூறுவாள்.

இன்றைக்கு அவள் தாயின் பிறந்தநாள். ஐம்பது வயதைக் கடந்தப் பின்னர் அவர் எப்படி இருப்பார் என அவர் வயதையொத்த பெண்களில் மனம் அலைந்தது. தாயின் பிறந்தநாள், தந்தையின் பிறந்த நாள், அவர்களது திருமண நாள், விவாகரத்து பெற்ற நாள் என அனைத்துமே அவள் மனதில் ஆழப் பதிந்து போயின. வேண்டாம் என விரட்ட முயன்றாலும் காலையில் நாட்காட்டியில் பதிந்த விழிகள் இந்த நாளை நினைவூட்டியிருந்தது‌.

தன்னை வேண்டாம் எனத் தூக்கிப் போட்டவர்களை இவளுமே வேண்டாம் என்று மறுத்துவிட்டாள்தான். ஆனாலும் வருடத்திற்கு ஓரிரு முறை இப்படி நினைவிற்கு வந்து செல்வார்கள். விவரம் தெரியாத வயதில் தாய், தந்தை என மனம் ஏங்கத்தான் செய்தது. அவள் கண்முன்னே அவளது தாய் வேறொரு குழந்தையைத் தூக்கிக் கொஞ்சியிருக்கிறார், உணவூட்டியிருக்கிறார். இவள் பாசமாக அம்மா என்றழைக்கச் செல்லும் போதெல்லாம் அவர் முகம் அசூயையைக் காண்பித்தது இன்னுமே நினைவில் நிற்கும்.

ஏனோ தாயும் தந்தையும் இருந்தும் இல்லாத நிலைமையில்தான் தான் வாழ வேண்டும் என்ற விதியோ எண்ணி எத்தனையோ நாட்கள் அழுதிருக்கிறாள். எல்லாமே மனதிற்குப் புரிந்து புத்திக்கும் உறைத்ததுதான். ஆனாலும் அவளுக்குள்ளே ஒரு ஆழ்ந்த வெறுமை எப்போதும் அவளை மென்று தின்று கொண்டே இருந்தது.

இவர்கள் இப்படி தன்னைப் பெற்று நடுவீதியில் எறிந்ததற்கு பதில் பெறாமலே இருந்திருக்கலாம் என எண்ணி வருந்தியிருக்கிறாள். விவரம் புரிந்ததும் அவர்கள் மீது கட்டுக்கடங்காத வெறுப்பும் கோபமும் உண்டாகிற்று. தன்னை வேண்டாம் என கூறியவர்கள் பணமும் வேண்டாம் என வேலைக்குச் சென்றதும் நிராகரித்துவிட்டாள்.

நான் நன்றாய் இருக்கிறேன் என திமிராய் நிமிர்வாய் இருந்தாலும் மனதில் ஒரு வெற்றிடம் நிரந்தரமாகக் குடி கொண்டிருந்தது. அதை நிரப்ப ஒருவரும் இல்லை என்ற உண்மை முகத்தில் அறையும். அபினவும் அற்றுப் போயிருந்தால் என்னவாகி இருப்போம் என்ற நினைப்பே கசந்தது.

ஒருவேளை தாய் தந்தை சரியாய் இருந்திருந்தால் அவள் இப்படி தனித்து நின்றிருக்கும் நிலையே வந்திருக்காது. அவளுக்கென்று முறையாய் ஒரு குடும்பம், கணவன் என வாழ்ந்திருப்பாள். ஆனால் இன்றைக்கு அவளது மொத்த வாழ்க்கையும் திசை மாறிப் போயிருந்தது. தவறுதான், ஆனாலும் அதைத் தெரிந்துதான் செய்தாள். யாருமற்று கிடந்தவளுக்கு தன் முன்னே அன்பாய் நீண்ட கரத்தை தட்டிவிட துணிவில்லை. அதனாலே பிடித்துக் கொண்டாள். ஆனால், அந்தக் கரமும் அவளைப் பாதியில் விட்டுச் சென்றதுதான் விதி.

அலைபேசியை எடுத்து புலனத்தில் தாயின்‌ முகப்பு படத்தைப் பார்த்தாள். ஐம்பதைக் கடந்திருந்த முகத்தில் சிரிப்பு மிளிர்ந்தது.‌ அருகே பதினெட்டு வயதில் ஒரு பெண்ணும், இருபத்து நான்கு வயதில் ஆணும் நின்றிருக்க, அருகே அவர்களது தந்தை நின்றிருந்தார்.

அடுத்து தன் தந்தையின் முகப்பு படத்தை எடுத்துப் பார்த்தாள். அங்கேயும் நால்வர் என சிரித்த முகமாய் நின்றிருக்க, இவளது உதடுகளில் கசந்த முறுவல் பிறந்தது. இந்த இரண்டு குடும்பத்தில் எங்கேயும் தான் இல்லையென்ற உண்மை முகத்தில் அறைய, அலைபேசியை அணைத்து வைத்தாள்.

எப்போதாவது மனம் நடந்தவற்றை நினைத்து உழன்று தவிக்கும். இன்றைக்கும் அப்படித்தான். இருபத்தைந்து வருடமாக அவர்கள் இல்லாது வாழ்ந்து விட்டாள். பெற்றவர்களின் துணை தேவைப்படும் போதே அவர்கள் இல்லை. இப்போது அவளுக்கு யாருமே தேவைப்படவில்லை. எப்போதும் போல மனம் சுய சமாதானங்களை எழுப்பிற்று. வெற்றுப் பார்வையோடு அந்த கோபுரத்தையே பார்த்திருந்தாள்.
வலித்தாலும் அதைப் பகிர யாரும் இல்லை என்பதுதான் அதனினும் பெரிய வலி. இல்லாமல் போனால் இல்லையென்று மனதைத் தேற்றிக் கொள்வாள். ஆனால் இருந்தும் இல்லாத நிலை அவளுக்கு வெகுவாய் வலித்தது.

‘ஆதி... யூ ஆர் வெரி ஸ்ட்ராங்க் தெரியுமா? இத்தனை வருஷமா உன்னை நீயே பார்த்திட்டு இருக்க. அப்புறம் என்ன சோக கீதம் வாசிக்கிற... சியர் அப்! பாஸ்டைப் பத்தி நினைக்காத. ப்ரசென்ட்ல சந்தோஷமா வாழு!’ என அவன் குரல் மனதில் எழவும், ஆதிரை முகத்தில் புன்னகை பிறந்தது.

தேவா அவர்களைத்தான் பார்த்திருந்தான். கூட்டத்தில் அவளுக்கு அவன் புலப்படவில்லை. ஆனால் அவனுக்கு ஆதிரையும் அபியும் நன்றாய் தெரிந்தனர். நிராதரவாக இந்தப் பெண் அமர்ந்திருப்பதைப் பார்த்து அவனுக்கு மனம் பிசைந்தது. எப்போதும் சுறுசுறுப்பாக வேலை பார்க்கும் ஆதிரையைக் கண்டுப் பழகியவனுக்கு அவள் இப்படியிருப்பது பிடிக்கவில்லை. என்னவென கேட்க உந்தினாலும் எந்த உரிமையில் கேட்பான்.

“ஐ... தேவாப்பா!” ராகி குரல் கொடுக்க, அவனின் கவனம் இவர்களிடம் குவிந்தது. பூஜை
முடிந்து கூட்டம் கலையத் தொடங்க, “தேவா... நீ இன்னும் கிளம்பலையா டா?” என பொன்வாணி அதிசயித்துக் கேட்டார்.

அவரைப் பார்த்து முறைத்தவன், “இந்தக் கூட்டத்துல எப்படி நான் வெளியப் போய் என் காரை மூவ் பண்றது? வேணும்னே தானே போனை மிஸ் பண்ணீட்டு போனீங்க?” என அவரிடம் சிடுசிடுத்தான்.

“டேய்... யாராவது வேணும்னு பண்ணுவாங்களா? ஜனனி மறந்து வச்சுட்டா. சரி விடு, இங்க நிக்கிற நேரத்துக்கு உள்ள வந்து சாமி பார்த்துக்கலாம் இல்ல டா?” என்றவாறே அவன் நெற்றியில் குங்குமத்தை வைத்தார்.

“அதானே உங்க ப்ளான்?” எனக் கேட்டவனின் பார்வை ஆதிரைப் புறம் மெதுவாய் படர, அவள் எழுந்து நின்றிருக்க, அங்கே ஒரு வாலிபன் அவளிடம் பேசிக் கொண்டிருந்தான். அவள் முகத்தில் பதற்றம் தொற்ற, விறுவிறுவென அபியை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.

“டேய், அப்படியே எங்களை வீட்ல விட்டுடுடா...” எனத் தாயின் குரல் கேட்டுத் திரும்பியவன், “ஹம்ம்... நீங்க கார்ல போய் உக்காருங்க. நான் வரேன்!” என்று ஜனனியிடம் வண்டியின் திறப்பைக் கொடுத்துவிட்டு கோவிலுக்குள்ளே நுழைந்தான்.

“அத்தை... என்ன உங்க மகனுக்கு பக்தி வந்துடுச்சா? கோவிலுக்குள்ள போறாரு!” ஜனனி யோசனையுடன் கேட்க,
“தேவா, தேவா!” எனத் தாயின் அழைப்பை நிராகரித்து உள்ளே சென்றான்.

“எங்கப் போறான் இவன்? உள்ள வரமாட்டேன்னு சொன்னான். கோவிலுக்குள்ள வந்துட்டான். இப்போ சாமி பார்க்க போறான். எல்லாம் அந்த சிவனோட வேலையாதான் இருக்கும். அப்படியே என் புள்ளைக்கு நல்ல பொண்ணா காட்டுங்கப்பா!” என அவர் வேண்ட, மூவரும் வெளியேறினர்.

“ம்மா... என்னாச்சு?” என ஆதிரை அமர்ந்திருந்த ருக்குவிற்கு அருகே மண்டியிட்டாள்.

“எனக்கு ஒன்னும் இல்ல ஆதிரை, காலைல சாப்பிடாதது பீபி கம்மியாகி மயக்கம் வந்துடுச்சு. இப்போ ஓகே தான்!” என்றவரைக் கைத்தாங்கலாக தூக்கினாள்.

“காலைலயே எதாவது சாப்பிடுங்கன்னு சொன்னேன், கேட்டீங்களா?” என அவரைக் கடிந்தவள், மகனையும் கண் பார்வையிலே வைத்தாள்.

“ஏம்மா... நீ பத்திரமா ருக்குவைக் கூட்டீட்டு போய்டுவீயா? இல்ல நாங்க வரட்டுமா?” ருக்குவின் சொந்தக்காரப் பெண்மணி வினவ, “நானே பார்த்துக்குறேன் மா!” என பதிலளித்து ருக்குவிற்கு நீரைப் புகட்டியவள் அபியின் கையை எடுத்து தன் முந்தானையில் முடிச்சுப் போட்டாள்.

“அபி, அம்மா பாட்டீயைக் கூட்டீட்டு வரணும். நீ என் சேலையை பிடிச்சுட்டு பின்னாடியே வா... எங்கேயும் போய்டாத!” என அறிவுறுத்திவிட்டு ருக்குவைக் கைத்தாங்கலாக அழைத்துச் சென்றாள்‌. தேவா நடந்த அனைத்தையும் பார்த்துக்கொண்டு தான் இருந்தான்.

அவளுக்கு அருகே வந்தவன் ஆதிரையின் முந்தானையின் முடிச்சை அவிழ்த்து விட்டு அபியின் கையைப் பற்ற, அவள் யாரெனப் பதறித் திரும்ப, “ரிலாக்ஸ் ஆதி, நான்தான் கூட்டீட்டு வரேன்!” பக்கவாட்டில் குனிந்து அவள் காதருகே தேவா முணுமுணுக்க, அவன் குரலை வைத்து அடையாளம் கண்டவள் தலையை அசைக்க, தேவாவிற்கு மல்லிகைப் பூவோடு அவள் வாசனையும் நாசியை நிறைத்தது. குனிந்து பேசும்போதே பார்வையில் பட்ட வெற்றுக் கழுத்தும் தோளும் இவனை தடம்புரளச் செய்திருந்தன. முதன்முதலில் மூச்சடைக்கும் உணர்வை அனுபவித்திருந்தான்.

அவள் பின்னே எந்த பிரஞையும் அற்று கால்கள் நடக்க, தன் தொண்டைக் குழி வரை வந்த உணர்வொன்றை கடினப்பட்டு உள்ளே அமிழ்த்தினான்.

“அந்த ஹோட்டலுக்குப் போறேன் சார். இவங்களை சாப்பிட வச்சு கூட்டீட்டு போகணும்!” என அவன் முகம் பார்க்காது பக்கவாட்டில் திரும்பி வாகனம் வருகிறதா எனப் பார்த்து அவள் சாலையைக் கடக்க, தேவா தலையை அசைத்து உள்ளே சென்றான்.

ருக்குவை அங்கிருந்த நாற்காலியில் அமர வைக்கச் சென்ற ஆதிரைத் தடுமாற, “ஆதி... பார்த்து!” எனத் தேவா அவள் தோள்தொட்டுப் பிடித்திருந்தான்.

அவளுமே நாற்காலியை இறுகப் பற்றி தன்னை சமன் செய்தவள், “தேங்க் யூ சார்!” எனவும் இவன் வெடுக்கென கையை இழுத்துக் கொண்டான். இதயம் தாறுமாறாக துடித்தது. அவளைவிட்டு சில அடிகள் தள்ளி நின்றான்.

“தேங்க் யூ சார்... தேங்க் யூ ஃபார் யுவர் டைம்லி ஹெல்ப்!” என அவள் மெல்லிய புன்னகையை உதிர்க்கவும், அந்த உதடுகளில் பார்வைப் பதிந்து மூக்கில் நிலைத்து விழிகளைத் தொட்டது. இதுவரை எந்தப் பெண்ணையும் அவன் இப்படியெல்லாம் பார்த்ததாய் நினைவில் இல்லை.

எத்தனையோ மங்கைகளின் விழிகளைப் பார்த்து தயங்காது பேசியிருக்கிறான். அப்போதெல்லாம் எவ்வித தடுமாற்றமும் இருந்தது இல்லை. ஆனால் இன்றைக்கு ஆதிரையைக் காணும்போது
தடுமாறினான்.

தொண்டையைச் செருமியவன், “இட்ஸ் ஓகே ஆதிரை, வேற எதுவும் ஹெல்ப் வேணுமா?” எனக் கேட்டான்.

“நோ சார், நான் பார்த்துக்குறேன்!” அவள் வேண்டாமென மறுத்து முறுவலிக்க, இவன்
தலையை அசைத்து அதை ஏற்றுக்கொண்டு விறுவிறுவென அதிவேகமாக துடிக்கும் இதயத்தை நீவி விட்டுக் கொண்டே வெளியேறினான்.

தொடரும்...
 
Well-known member
Messages
416
Reaction score
300
Points
63
Deva ku athirai mela love vandhuduchi aana athu love than avanuku innum confirm ah puriya ma irukan but yazh ku apadi enna feelings um ivan mela illayae aana innumae andha abi devanandhan than rombhavae idikuthu
Iva past life ah pathi therincha ellathukum.vidai kidaikum pola
 
Top