• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,168
Reaction score
3,348
Points
113
நெஞ்சம் – 11 💖

“அக்கா, நீங்க அங்க நிக்கிறது இங்க அனலடிக்குது கா. இப்படி காய்ச்சலோட வேலை பார்க்கணுமா?” தர்ஷினி கூறுவதைப் பொருட்படுத்தாமல் ஆதிரை பாலை சோதனை செய்து கொண்டிருந்தாள்.

“ஆதி, யார் சொல்வதையும் கேட்குறதில்லை நீங்க!” சுபாஷ் அலுத்துக் கொண்டு அவள் கொடுக்கும் முடிவுகளை கணினியில் பதிந்தான். அன்றைக்கு வேலை அதிகம் என்பதால் மூவரும் காலையிலிருந்தே சுறுசுறுப்பாக வேலை செய்தனர். சுபாஷ் அனைத்தையும் மேற்பார்வை பார்த்துவிட்டு இவளுக்கு உதவுவதாய் ஆய்வகத்திலே அமர்ந்துவிட்டான்.

“அவ்வளோதானே சுபாஷ், வேவல முடியப் போகுது. என் ஒரு ஆளால மொத்த வேலையும் கொலாப்ஸ் ஆகக் கூடாது இல்லை. அதுவும் இல்லாம இது மேரேஜ் ஆர்டர். நம்ம தரோம்னு சொல்லிட்டு பாலை டெலிவரி பண்ணலைன்னா அது தப்பா போய்டும்!” என்றவள் கடைசி பாலையும் சோதனை செய்து முடித்தாள்.

“அக்கா, நீங்க உக்காருங்க. லாக் புக்கை நான் எழுதுறேன்!” தர்ஷினி புத்தகத்தில் பதிய, சுபாஷ் கணினியில் அனைத்தும் சரியாய் இருக்கிறதா எனப் பார்த்தான். கோமதி சோதனைக் குழாய்களை கழுவி அதன் நிறுத்தியில் வைத்தார். ஆதிலா அன்றைக்கு வரவில்லை.

“எல்லாம் முடிச்சாச்சுல்ல ஆதி. நீங்க வீட்டுக்கு கிளம்புங்க. சார் வந்தா நாங்க சொல்லிக்கிறோம்!” சுபாஷ் அவள் முகம் பார்க்க, “இல்ல சுபாஷ், சார் எப்படியும் வந்துடுவாரு. நான் அவர்கிட்டே சொல்லிட்டே கிளம்புறேன். அவர் இல்லாதப்போ நான் போனா நல்லா இருக்காது...” என்றவளுக்கு தர்ஷினி சூடான மாலை நேரத் தேநீரைப் பருக கொடுத்தாள். சுபாஷ் தேவாவிற்கு அழைத்துச் சொல்ல, அவன் வருகிறேன் என்று கூறிவிட்டான்.

“இன்னும் டென் மினிட்ஸ்ல தேவா சார் வந்துடுவாரு ஆதி, நீங்க அவர்கிட்டே பெர்மிஷன் கேட்டு கிளம்புங்க!” சுபாஷ் கூறியதும் தலையை அசைத்தவள் அவன் வந்ததும் லாக் புத்தகத்தை எடுத்துக் கொண்டு அவனது அறைக்குள் நுழைந்தாள். முகம் சோர்வை அப்பட்டமாய்க் காண்பிக்க, கண்கள் உள்ளே சென்றிருந்தன.

ஏற்கனவே கடுகடுவென்றிருந்த தேவா வேலை சரியாய் முடியவில்லை எனத் திட்ட வாயெடுக்கும் முன்னே, “சார், வொர்க் முடிச்சுட்டேன். எல்லாத்தையும் எக்ஷெல் ஷீட்ல அப்டேட் பண்ணிட்டேன். லாக் புக்!” என அவன் மேஜையின் மீது ஆதிரை வைத்ததும் அவனது வார்த்தைகள் தொண்டைக் குழியிலே நின்றுவிட்டன.

“எனக்கு பீவரிஷ்ஷா இருக்கு சார். நீங்க பெர்மிஷன் கொடுத்தா, நான் கிளம்புவேன்‌!” எனக் கூறியவளுக்கு நிற்குமளவிற்குக் கூட உடலில் தெம்பு இல்லை. காய்ச்சல் அனலாய்க் கொதித்தது. முடியாது என வேலையை அப்படியே விட்டு சென்றிருக்கலாம் தான். ஆனால் அதற்குப் பின்னே தேவாவின் சுடுசொற்களும் உபரியாய் வந்து நிற்குமே.

அவளுக்கு யாரிடமும் தேவையற்று திட்டு வாங்குவதில் விருப்பம் இல்லை. அதனாலே முடியவில்லை என அனத்திய உடலோடு அனைத்தையும் செய்தாள். இன்றைக்கு சுபாஷோடு மற்ற மூவருக்கும் அவள் நன்றி சொல்லியே ஆக வேண்டும். அவர்களின் முழு ஒத்துழைப்பு இல்லையென்றால் இத்தனை விரைவில் அனைத்தையும் செய்து முடித்திருக்க முடியாதே.

“ஓகே, நீங்க கிளம்புங்க!” அவன் கூறியதும் தலையை அசைத்தவள் மெதுவாய் நடந்தாள். எப்படி மருத்துவமனை செல்லப் போகிறோம் என இப்போதே விழிகள் கலங்கப் பார்த்தன. தனக்கு யாருமில்லை என்று ஆதிரை ஒருநாளும் வருந்தியது இல்லை. தாய், தகப்பனின் அன்பை அப்படியொன்றும் அவள் அனுபவித்ததாய் நினைவில் சிறு துண்டுகளாக கூட இல்லை. அவளது இளமைக் காலம் பாட்டியின் அரவணைப்பிலும் தாத்தாவின் கண்டிப்பிலும் சென்றது. தாய், தந்தை கைவிட்ட பெண் பிள்ளையை ஒழுக்கமாக வளர்க்க வேண்டும் என்றொரு நோக்கம் மட்டுமே அவர்களிடம் இருந்தது. அவளுக்கு அன்பு காட்ட வேண்டும் என்று இருவருக்குமே தோன்றவில்லை என்பது வலி நிறைந்த உண்மை.

பதினெட்டு வயதில் பாட்டியும் தாத்தாவும் இன்றி தனித்து விடப்பட்டவளை விடுதிதான் மடிதாங்கியது. மாதம் மாதம் வங்கி கணக்கில் பணம் மட்டும் தவாறது போட்டுவிடுவார்கள் தாய், தந்தையர். அதனால் அவளுக்கு பணக்கஷ்டம் இருந்தது இல்லை. தனித்து வளர்ந்ததாலோ என்னவோ அன்பு, பாசத்திற்கு எல்லாம் வெகுவாய் ஏங்கிப் போயிருந்தாள் ஆதிரை.

அதெல்லாம் ஒரு காலம் எண்ணுமளவிற்கு இப்போது தான், அபினவ் என அவளது உலகம் சுருங்கிப் போய்விட்டது. அபயும் எட்டு வயதைத் தொட்டுவிட்டான். இன்னும் நாலைந்து வருடங்கள்தான். அவன் பெரியவனாகிவிட்டான் என்றால் தன்னைப் பார்த்துக் கொள்வான் என்ற எண்ணம் எப்போதும் அவளிடம் உண்டு‌. அந்த நினைப்பிலே வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தாள்.

எதையும் எதிர்பாராமல் ஓடிக் கொண்டிருந்தாலும், உடல் சில சமயங்களில் ஒத்துழைக்காமல் இப்படி உபாதைகள் வரும்போது மட்டும் யாராவது துணையிருந்தால் நன்றாக இருக்கும் என எண்ணுவாள். ஆனால் யாருமில்லை என்ற நிதர்சனம் முகத்தில் அறைய, வருந்துவாள்தான். அதற்காக பெரிதாய் கண்ணீர் வடிக்கும் ரகமில்லை ஆதிரை. சிறு வயதிலிருந்தே தனிமை பழகிவிட்ட காரணத்தால் தன்னைத் தான்தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற தெளிவு அவளிடம் இருக்கும்.

ஆதிரையின் நடையைப் பார்த்தவன், “ஆதிரை, டேக் டூ டேய்ஸ் லீவ். ஹெல்த் சரியானதும் வந்தா போதும்!” என்று தேவா கூறவும், அவனைத் திரும்பிப் பார்த்துப் புன்னகைத்தவள், “தேங்க் யூ சார்!” என்றாள்.

“எப்படி இப்படியே போவீங்க? வீட்ல இருந்து யாரையும் கூப்பிடுங்க இல்லைன்னா கேப் புக் பண்ணிப் போங்க!” தேவாவின் குரலில் சகமனிதரிடம் கொள்ளும் பரிவும் அக்கறைமும் நிரம்பி இருந்தது.

“இல்ல சார், நானே போய்டுவேன். தேங்க் யூ ஃபார் யுவர் கன்செர்ன்!” என்றவள் முகத்தை நன்றாகத் தண்ணீரில் அடித்துக் கழுவி, கைப்பையை எடுத்து தோளில் மட்டிக்கொண்டு கிளம்பினாள்.

“சார், ஆதி தனியா போறாங்க. நான் அவங்களை ஹாஸ்பிடல் கூட்டீட்டு போய்ட்டு, வீட்ல விட்டுட்டு வரவா சார்? இந்த நிலைமையில தனியா டாக்டரைப் பார்த்துட்டு போறது கொஞ்சம் ரிஸ்க். நீங்க பெர்மிஷன் கொடுத்தா, ஐ வில் ஹெல்ப் ஹெர்!” சுபாஷ் வெகுவாகத் தயங்கிபடியே கேட்டான்.

“ஷ்யூர் சுபாஷ், போய்ட்டு இங்க வரணும்னு அவசியம் இல்ல. நீங்க வீட்டுக்கு கிளம்பிடுங்க!” என்றவன் சில நொடிகள் மௌனித்து, “வாட் அபவுட் ஹெர் ஃபேமிலி மெம்பர்ஸ்?” எனக் கேட்டான்.

“எனக்குத் தெரியலை சார். பட், அவங்க பேமிலியோட இல்ல, தனியா இருக்காங்கன்னு நினைக்கிறேன். அதான் நான் ஹெல்ப் பண்ண கேட்டேன்!” தலையை அசைத்து விடைபெற்றவன், ஆதிரையின் வாகனச் சாவியில் கை வைத்தான்.

“ஆதி, இந்த நிலைமையில நீங்க தனியா போறது சேஃப்டி இல்ல. நான் சார்கிட்டே பெர்மிஷன் கேட்டுட்டேன். உங்க ஸ்கூட்டியிலயே நம்ப ஹாஸ்பிடல் போகலாம். அப்புறம் வீட்ல இறக்கி விடுறேன்!” என்றவனைப் பார்த்து சோபையாய் முறுவலித்தாள்.

“அதிசயமா சார் இன்னைக்கு கன்சர்னா பேசுறார்னு பார்த்தா, நெக்ஸ்ட் நீங்களா சுபாஷ்?” எனக் கேட்டவள், “ஐ யம் ஓகே. நான் நல்லா இருக்கேன். பத்திரமா போய்டுவேன்!” தன்மையாய் மறுத்தாள்.

“ஆதி, ப்ளீஸ். என்னை ஒரு ஃப்ரெண்டா, ஹ்கூம் ஒரு பிரதரா கூட நினைச்சுக்கோங்க. நான் கூட வரேன்!” என்றான். அவனது அன்பில் இவளுக்கு முகம் கனிந்தது.

“தேங்க் யூ சுபாஷ். பட் நான் என்னைப் பார்த்துப்பேன். முடியலைன்னா உங்கககிட்டே ஹெல்ப் கேட்குறேன்...” என்றவாறே அவள் கிளம்பிவிட, “அடமெண்ட் ஆதி!” சுபாஷ் இதழ்கள் முணுமுணுத்தன.

தேவா தூரத்திலிருந்து அவர்களைப் பார்த்திருந்தான். என்ன பேசினார்கள் எனக் கேட்காவிட்டாலும் ஆதிரை சுபாஷின் உதவியை மறுத்துவிட்டாள் என்பது மட்டும் நன்றாய் புரிந்தது. தூரத்தே செல்லும் அவளை சில நொடிகள் பார்த்தவனுக்கு அபஸ்வரமாய் விஷாலி நினைவுக்கு வர, மனம் குழம்பிய குட்டையாகிருந்தது.

இன்றைக்கு அவளுடைய செய்கைகள் எத்தனை எரிச்சலை உண்டு பண்ணின என நினைக்கும் போதே கோபமாய் வந்து தொலைத்தது. என்ன செய்வது என யோசித்து தலை வலி வந்ததுதான் மிச்சம். வேலையை முடித்து வீட்டிற்குச் சென்றவன், ‘இந்த மேரேஜை கால் ஆஃப் பண்ணிடலாமா?’ என எண்ணுமளவிற்கு சென்றுவிட்டான்.

தேவா உள்ளே நுழைய, பொன்வானி கூடத்தில் எதையோ விரித்து வைத்திருக்க, மொத்தக் குடும்பமும் அங்கே குழுமியிருந்தனர்.

இவன் புரியாது அருகே செல்ல, “வா ப்ரோ, உன்னோட எங்கேஜ்மெண்ட்க்கு தான் அம்மா பர்ச்சேஸ் பண்ணிட்டு வந்திருக்காங்க. எப்படி இருக்குன்னு பாரு!” என ஹரி அவனை அருகே இழுத்து அமர வைத்தான். தேவா ஒரு பெருமூச்சுடன் அனைத்தையும் பார்த்தான்.

“ஏம்பா, அடுத்த வெள்ளிக்கிழமை கோவில்ல வச்சு நிச்சயத்தை முடிச்சுட்டு ஒரே மாசத்துல கல்யாணத்தை பண்ணிடலாம்னு முடிவு பண்ணியிருக்கோம். உனக்கு ஓகே வா டா?” கோபால் மகனிடம் கேட்க, “அண்ணா... இந்த பேபி பிங்க் சாரி எனக்கு எப்படி இருக்கு?” என பிரதன்யா புடவையை தோளில் வைத்து அவனிடம் காட்டினாள்.

“தேவாப்பா... என்னோட ட்ரெஸ்!” ராகினி வெட்கத்துடன் அவனது காலைக் கட்டிக் கொள்ள, முகத்தில் முறுவல் பூத்தது.

“எல்லாரோட ட்ரெஸ்ஸை விட என் ராகி பாவாடை சட்டை தான் நல்லா இருக்கு!” என அவளைக் கைகளில் அள்ளினான். அவள் தேவாவின் தோளில் முகம் புதைத்துப் புன்னகைக்க, “இதெல்லாம் போங்கு ண்ணா...” என பிரதன்யா சிணுங்கினாள்.

“சின்ன புள்ளைக் கூட போய் சண்டை போடுவீயா நாத்தனாரே!” ஜனனி இவளை தோள்பட்டையில் இடிக்க, “ஹக்கும்...” என அவள் சிலுப்பினாள். தாயும் தந்தையும் அனைத்தையும் சிரத்தை எடுத்து செய்வது தனக்காகத்தான் என புத்திக்குப் புரிய, எடுத்தோம் கவிழ்த்தோம் என எதையும் செய்ய வேண்டாம் என மனம் நிதானமடைந்திருந்தது.

நிச்சயதார்த்திற்கு இன்னும் எட்டு நாட்கள் இருக்க, கொஞ்சம் பொறுமையாக விஷாலியிடம் பேச வேண்டும், அவள் வளர்ந்த விதம் அப்படி. இதோ தன் வீட்டுப் பெண்கள், ரிதன்யா, ஜனனி எல்லாம் அப்படியா இருக்கிறார்கள். செல்லமாய் வளர்ந்தவர்கள் எனினும் சூழ்நிலையை அனுசரித்து செல்லவில்லையா? விஷாலி எடுத்துக் கூறினால் புரிந்து கொள்வாள். திருமணம் முடிந்தால் இணக்கம் வரும், புரிதல் வரும் என தனக்குத் தானே சமாதான மொழிகளைக் கூறியவன், “டேட் ஓகே தான் மா...” என்று கூறிவிட்டு அறைக்குள் புகுந்தான்.

ஆதிரை, தான் எப்போதும் சந்திக்கும் மருத்துவரைப் பார்த்துவிட்டு வீடு நோக்கி வந்தாள். இரண்டு நாட்களுக்கு மாத்திரைகளை வழங்கியவர் ஒரு ஊசியையும் குத்தி அனுப்பி இருந்தார். இவள் வீட்டைத் திறந்ததும் யாருமற்ற வீடு முகத்தில் அறைந்தது. கதவை அடைத்துவிட்டு படுக்கையில் விழுந்தாள்.

இரவு உணவு சமைக்க முடியாது என எண்ணி அபிக்கும் தனக்கும் சேர்த்தே வெளியே வாங்கி வந்துவிட்டாள். மகன் என்ன செய்கிறானோ என காலையிலிருந்து அவனது யோசனையும் இடையிடையே வந்து சென்றது. இரண்டு முறை அழைத்து அவன் நலத்தை உறுதி செய்து கொண்டாள். மீண்டும் அழைத்தால் அது நன்றாய் இராது என எண்ணி கைப்பேசியைத் தூக்கிப் போட்டாள்.

அதீத உடல் வெப்பநிலை காரணமாக கண்களில் நீர் பெருகிற்று. சுருண்டு படுத்துப் போர்வையை போர்த்தினாள். உடல் லேசாய் தூக்கிப் போட்டது. சூடாய் தேநீர் வைத்துக் கொடுத்து யாராவது இதமாய் வலிக்கும் தலையைக் கோதி விட்டால் எப்படியிருக்கும் என எண்ணும்போதே சுகமாய் இருந்தது. மெதுவாய் போர்வையை விலக்கி எழுந்தவள் தட்டுத் தடுமாறி ஒரு தேநீரைத் தயாரித்து வந்து குடித்தாள். ஊசியின் விளைவால் மெல்ல மெல்ல உடல் வெப்பநிலை குறைந்தது.

சிறிது நேரம் அந்த நீள்விருக்கையில் தலை சாய்த்துப் படுத்திருந்தாள். சிறு வயதிலிருந்தே உடல் நிலை சரியில்லாமல் சென்றால் யாரேனும் உடனிருந்து இப்படி கவனித்தால் அப்படி அன்பு செய்தால் எப்படி இருக்கும் என கற்பனையிலே நேரத்தைக் கழிப்பாள். நிஜத்தில்தான் நடக்கவில்லை. கனவிலாவது நடக்கட்டுமே என உதடுகளில் கசந்த முறுவல் தோன்றிற்று.
அப்படியே நிராதரவாக தலையை சாய்த்துப் படுத்தாள்.

“ம்மா... காய்ச்சல் அடிக்கிற மாதிரி இருக்கு மா. நீ என்னை வந்து கூட்டீட்டுப் போறீயா மா?” எத்தனை விரட்ட முயன்றும் அவளது குரலே செவியில் ஒலித்து தொலைத்தது.

“அதை ஏன் என்கிட்ட சொல்ற? அவருக்கு இதெல்லாம் பிடிக்காது. உன்னைப் பெத்தவனுக்கு ஃபோன் பண்ணு. அவன் உன்னைப் பார்த்துப்பான். ஃபோன் பண்ணி என் உசுரை எடுக்காத. இப்போதான் நான் நிம்மதியா இருக்கேன். அது உனக்குப் பொறுக்கலையா?” சிடுசிடுவென்று பேசிவிட்டு தாய் அழைப்பைத் துண்டித்ததும் கேட்க ஆளற்று காய்ச்சலில் சுருண்டுப் போன நாட்கள் நினைவில் வந்தன.

‘அப்பாவுக்கு ஒரு தடவை ஃபோன் பண்ணி பார்ப்போம்!’ என இல்லாத சமாதானங்களைத் தனக்குத் தானே சொல்லி மறந்து போயிருந்த எண்ணை கடினப்பட்டு நினைவிற்கு கொண்டு வந்து அழைத்தவள், “ப்பா...” என்றாள் மெலிதாய் விசும்பியபடியே.

“சனியனே... எத்தனை தடவை எனக்குப் ஃபோன் பண்ணாதன்னு சொல்லி இருக்கேன். எதுக்காக இப்போ கால் பண்ண? நானே என் புள்ளைக்கு உடம்பு சரியில்லைன்னு ஹாஸ்பிடல்ல இருக்கேன். அதான் மாசமாசம் பணம்‌ போட்றேன் இல்ல. அப்புறம் என்ன உனக்கு?” இன்னும் வேறு என்ன பேசியிருப்பாரோ? அழைப்பைத் துண்டித்தவள் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு வைதேகி அவளது அறையில் வைத்திருந்த உணவை எடுத்து உண்டுவிட்டு மாத்திரையை விழுங்கினாள்.

அப்போதுதான் கொஞ்சம் விவரம் புரிய தொடங்கியிருந்த வயது. தாய், தந்தை தன்னை வேண்டாம் என அசிங்கத்தை உதறுவது போல வீசிச் சென்றுவிட்டார்கள் என மெதுவாய்ப் புரியத் தொடங்கியது. அதுவரையிலுமே அவளுக்கு உடல்நிலை சரியில்லை எனப் பாட்டி வீட்டில் விட்டுவிட்டார்கள் என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தாள்.

இல்லை வைதேகிப் பாட்டி அவளிடம் நம்ப வைத்திருந்தார். தற்போதைக்கு அவர் மட்டுமே இவளிடம் அவ்வப்போது கரிசனமாகப் பேசுவார். ஜம்புலிங்கம் தாத்தாவைப் பார்த்தால் இவளுக்கு பயத்தில் வியர்த்து ஊற்றிவிடும். ஏனென்றால் ஒருநாள் பள்ளி செல்ல மாட்டேன், தாய், தந்தையை பார்க்க வேண்டும் என அழுதவளை பெல்ட்டை எடுத்து விலாசிவிட்டார். அன்றிலிருந்தே அவளது அழுகை நின்று போனது. இதுதான் வாழ்க்கை, இப்படித்தான் இருக்கும் எனப்‌ புரிந்த நாளும் அதுதான்.

அதற்குப் பிறகு அழுகை, அடம், எதிர்பார்ப்பு என எல்லாமே அற்றுப் போயிருந்தது. வைதேகியும்‌ ஜம்புலிங்கமும் அவளது சொந்த தாத்தா, பாட்டியில்லை. அந்த வயலைக் குத்தகைக்கு எடுத்திருந்தவர்கள்.

அதிரையின் பெற்றவர்கள் வீட்டை எதிர்த்து ஓடி வந்து காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்பது அவர்கள் விடயத்தில் உண்மையாகிப் போயிருந்தது. காதல் வாழ்க்கை கசந்தது. வேண்டா வெறுப்பாக ஆதிரையைப் பெற்றெடுத்தார் அவளது தாய். தினமும் ஒரு சண்டை, சமாதானம் என சென்ற வாழ்க்கையில் ஒருநாள் சண்டை முற்றிப் போனது.

திருமணம் முடிந்த நான்காவது வருடத்தில் இருவரும் விவாகரத்து கேட்டு நீதிமன்றப் படியை மிதித்தனர். அத்தனை எளிதில் எல்லாம் விவாகரத்துக் கிடைத்துவிடவில்லை. ஒரு வருடம் அலைந்து திரிந்துதான் கிடைத்தது. அந்த ஒரு வருட இடைவெளியில் ஆதிரையை பெற்றவர்கள் இருவரும் பார்த்துக் கொள்ள பிரியப்படவில்லை. அங்கே ஒரு மாதம் இங்கே ஒரு மாதம் என அலைக் கழிக்கப்பட்டாள். விவரம் தெரியாத வயது என்பதால் தாய், தந்தை என இருவரிடமும் சென்று வந்தாள்.

விவாகரத்துப் பெற்றப் பின்னர் அவளது பொறுப்பை ஏற்றுக் கொள்ள இருவருமே முன்வரவில்லை. நீதிமன்ற தீர்ப்பின்படி யாராவது ஒருவர் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றிருக்க, அவளது தந்தை வேண்டா வெறுப்பாக பொறுப்பை ஏற்றார். அவரது பூர்விக கிராமத்தில் இருந்த நிலத்தோடு வீட்டையும் இவள் பெயரில் எழுதி வைத்து, வைதேகி, ஜம்புலிங்கத்திடம் நிலத்தைக் குத்தகைக்கு விட்டுவிட்டார். நிலத்தில் வரும் அனைத்து வளங்களும் அவர்களுக்கு இலவசமாக கொடுத்தார். வீட்டிற்கும் வாடகை வாங்கவில்லை. மாற்றாக ஆதிரையைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை அவர்களிடம் ஒப்படைத்தார்.

திருமணமாகி பிள்ளையில்லாதவர்களுக்கு போக்கிடமும் இல்லை. அதனாலே ஆதிரையோடு வந்த அனைத்தையும் ஏற்றுக் கொண்டனர். வைதேகி பாட்டி அவளைக் கொஞ்சம் அக்கறையுடன் பார்த்துக் கொள்வார். ஆனால் அதிலும் கண்டிப்பு நிரம்பி இருக்கும். ஜம்புலிங்கம் அவளிடம் ஒருபோதும் அன்பாய், கரிசனமாய் நடந்தது இல்லை. ஏதோ அவள் தங்களது பொறுப்பு என்றளவில் மட்டுமே பார்த்துக் கொள்வார்.

மூன்று வேளை உணவு, நல்ல உடை, இருக்க இருப்பிடம், தனியார் பள்ளியொன்றில் படிப்பு என அவளது அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் தடையின்றி கிடைத்தன. அன்றைக்கு அதெல்லாம் அவளுக்குப் பெரிதாய் தெரியவில்லை. ஆனால் இப்போது பிடிக்காத தந்தை எனினும் எப்படியாவது போ என அனாதை ஆசிரமத்தில் விடாது அவளது பொறுப்பை இந்த வகையில் ஏற்றுக் கொண்டாரே என மனம் அதிலும் நல்லதை ஏற்றுக் கொண்டது.

ஒருவேளை அவர் இவளை வேறு எங்கேனும் சென்று விட்டிருந்தால் இது போல கல்வி, உணவு, இருப்பிடம் கிடைத்திருக்குமா என்பது கேள்விக்குறிதான். அவள் படித்த படிப்பு தானே இன்றைக்கு அவளை யார் துணையும் அற்று நிற்க வைத்திருக்கிறது.

அந்த வகையில் தந்தை நல்லவர் என நினைத்து கொள்வாள். ஆனால், உரிய நேரத்தில் கிடைக்க வேண்டிய அன்பு, அக்கறை, வழிகாட்டுதல் என எதுவும் கிடைக்காது வாழ்க்கையே தடுமாறி போயிருந்தாள். அதை நினைத்து வருத்தம் இருந்தாலும் தனக்கென யாருமில்லாது நிற்காமல் அபி கிடைத்திருக்கிறானே என எண்ணி மகிழ்வாள். இருப்பதை வைத்து சந்தோஷமாக வாழ வேண்டும் என்ற கோட்பாடு வைதேகி உடனிருக்கும் போதே அவள் உருவாக்கிக் கொண்டாள்.

சொந்த தாய், தந்தை இல்லாவிடினும் இரத்த சொந்தமான பாட்டி, தாத்தா இருந்திருந்தால் கொஞ்சம் உரிமை எடுத்து அது இதுவென கேட்டிருப்பாளோ என்னவோ. அங்கே தான் கடமைக்காக ஒட்டிக் கொண்டு இருப்பதை உணர்ந்ததும், அடமெல்லாம் குறைந்து போனது. அவர்கள் கொடுக்கும் உணவை மறுப்பின்றி உண்ணுவாள். வைதேகி வயது முதிர்ந்தவர். அதிலும் தோட்ட வேலையும் செய்வதால் அவரால் வீட்டிலும் வேலை செய்ய முடியாது.

சரியாய் அவளுக்குப் பத்து வயதிருக்கும் போது அவரது வேலைகள் இவளுக்கும் சரிபாதியாய் வழங்கப்பட்டது. எந்தக் குறையும் இன்றி தன்னை கடமைக்காக எனினும் வளர்க்கிறார்களே என அவர்கள் மீது நிறைய நன்றியுண்டு ஆதிரைக்கு. அதனாலே அவராக கூறவில்லை எனினும் இவளே வீட்டை சுத்தம் செய்வது, உணவு சமைப்பது என அனைத்தையும் கற்றுக் கொண்டாள். வைதேகி பாட்டி அவளுடைய பதினேழு வயதில் உடல் மூப்பு காரணமாக காலமாகிவிட, ஜம்புலிங்கத்தால் இவளைத் தனியாக பார்த்துக் கொள்ள இயலவில்லை. அதிலும் பெண்பிள்ளையாய் போய்விட, விடுதியில் சேர்த்துவிட்டார்.

அத்தோடு கடமை முடிந்தது என இவளை வந்து ஒருநாளும் அவர் பார்த்தது இல்லை. ஏங்கி ஏங்கி கிடைக்காத அன்பை ஒரு கட்டத்தில் ஆதிரையே வெறுத்து ஒதுக்கினாள். அவள் மூன்றாம் ஆண்டு படிக்கும்போது ஜம்புலிங்கமும் இறைவனடி சேர்த்துவிட்டார். அவர் இருந்தும் இவளைக் கண்ணே மணியே என்று கொஞ்சவில்லை. இருந்தும் தன்னை வளர்த்தவர்களும் அற்று ஆதிரை மொத்தமாக தனியாளாக அன்றைக்குத்தான் நின்றாள்.

படிப்பு முடிந்ததும் கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்டாள். எங்கே செல்வது எனத் தெரியாது திக்கற்று நின்றாள். அவளது கல்லூரித் தோழியின் தந்தை ஒருவர் இவளுக்காகப் பரிந்து நல்ல மகளிர் விடுதி ஒன்றில் சேர்த்துவிட்டார். அந்த வீடும் நிலமும் இப்போது வேறு ஒருவர் குத்தகைக்கு எடுத்திருக்க, இவளால் அங்கு சென்று நிற்க முடியாது. மாத‌மாதம் இவளது வங்கி கணக்கிற்கு பணம்‌ மட்டும் வந்து சேர்ந்தது. அவர்கள் பத்து வருட குத்தகைக்கு எடுத்திருக்க, அதற்குப் பின்னர் ஆதிரைக்கு அந்த நிலமும் வீடும் சொந்தம். அது மட்டும் அல்லாது வைதேகியின் நகைகளையும் இவளிடம் தான் கொடுத்துவிட்டுச் சென்றார்.

யாருமற்று அங்கிருக்க அவளுக்கு விருப்பமில்லை. முதுகலை படிக்கலாம் என எண்ணினாள். பெரிதாய் எதிலும் நாட்டமில்லாதவள் படிப்பை மட்டும்தான் பற்றுக் கோலாகப் பற்றி இருந்ததால், பள்ளிக் கல்லூரியிலும் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தாள். அவளது பேராசிரியர் ஒருவரின் உதவியின்படி லண்டனில் உள்ள சில கல்லூரிகளுக்கு விண்ணப்பித்திருக்க, அதில் பாதி கட்டணம் உதவித் தொகையாக கிடைத்திருக்க, கையிருப்பில் உள்ள பணத்தை மீத தொகையாகச் செலுத்திவிட்டு அங்கே தன்னுடைய முதுகலையை முடித்திருந்தாள். லண்டனில் தான் அவளுடைய வாழ்க்கையும் மொத்தமாக திசை மாறிப் போயிற்று. அமைதியாக நடந்தவற்றை அசைபோட்டுக் கொண்டிருந்தாள்.

அழைப்புமணி ஒலிக்க, முகத்தைக் கழுவிவிட்டு வந்து கதவைத் திறந்தாள். நித்திலா, அவளுடைய அம்மாவோடு அபினவ் வந்திருந்தான்.

“வாங்க நித்திமா, உள்ள வாங்க!” ஆதிரை அவர்களை சின்ன புன்னகையுடன் வரவேற்க, “இன்னொரு நாள் வரோம் அபிமா. தப்பா எடுத்துக்காதீங்க. அவரு கார்ல வெயிட் பண்றாரு. லேட்டான்னா, திட்டுவாரு. டே டைம்ல மீட் பண்ணலாம்!” என அவர் மறுக்க, இவள் கீழே வரைச் சென்று அவர்களை வழியனுப்பி விட்டு வர, அபினவ் உடை மாற்றி முகம் கழுவி வந்தான்.

“அபி, வா சாப்பிடலாம்!” என உணவைப் பிரித்தாள்.

“ம்மா... நான் சாப்ட்டேன். நித்தி அம்மா சிக்கன் ரைஸ் வாங்கி கொடுத்தாங்க!” அந்த சுவை அப்போதும் நாக்கில் நடமாடக் கூறியவனைப் பார்த்து சிரித்துவிட்டாள்.

“சரி டா, அப்போ அம்மா சாப்பிட்றேன்!” என ஆதிரை அமர்ந்து உண்ண, அபினவ் இங்கே கிளம்பியதிலிருந்து மீண்டும் வீடு வரும்வரை நடந்த அனைத்தையும் கூறி முடித்தான். அவள் வெறுமனே தலையை மட்டும் ஆட்டிக் கேட்டுக் கொண்டாள்.

ஆதிரையின் சோர்ந்த முகத்தையும் சிவந்த விழிகளையும் அப்போதுதான் கவனித்த அபி, “ம்மா... ஏன் மா உங்க கண்ணு ரெட்டிஷ்ஷா இருக்கு. பீவரா மா?” என அவளது நெற்றியில் கையை வைத்தான். அதில் ஆதிரையின் மனம் கனிந்து போயிற்று.

“ஆமா அபி, நேத்து மழைல நனைஞ்சதுல ஃபீவர் வந்துடுச்சு டா!” என்றாள் புன்னகையுடன்.

“டாக்டர்கிட்டே போனீயா மா? டேப்லெட் ஊசியெல்லாம் கொடுத்தாங்களா?” எனக் கேட்டுக் கொண்டே தாயின் பின்னே நடந்தான். ஆதிரை சோர்வாக கட்டிலில் படுக்க, “ம்மா... தலை வலிக்கிதா மா? தைலம் தேய்ச்சு விடவா?” எனக் கேட்டவன் பிஞ்சுக் கரங்களால் அவளது நெற்றியைப் பிடித்துவிட்டான். அப்படியே தைலத்தையும் தடவி விட்டவனை அருகே இழுத்து அவன் கன்னத்தில் முத்தமிட்டவளின் விழிகள் மெதுவாய் பளபளத்தன.

“அபி... போதும் டா. அம்மா கதவை லாக் பண்ணிட்டேனான்னு பார்த்துட்டு லைட்டை ஆஃப் பண்ணிட்டு வந்து படு டா!” என்றாள் கனிவாய். சமத்தாய் தாய் சொன்னதை செய்துவிட்டு வந்து அவளுக்கு அருகே ஒட்டிப் படுத்தான்.

“அபி, தள்ளிப் படு. அப்புறம் உனக்கும் காய்ச்சல் வந்துடும். நாளைக்கு ஸ்கூலுக்குப் போகணும் இல்ல?” தாயின் அதட்டலில் கொஞ்சம் இடம் விட்டு கட்டிலில் நகர்ந்து படுத்தவன், “ம்மா... செம்ம டயர்டா இருக்கு மா. நாளைக்கு ஸ்கூல் லீவ் நான்!” எனக் கூறிவிட்டு அவன் படக்கென கண்ணை மூடிக் கொள்ள, ஆதிரை அவனை மென்மையாய் முறைத்தாள்.

“நோ... நாளைக்கு ஒழுங்கா ஸ்கூலுக்கு போகணும் அபிமா!” இவள் அதட்ட, “அபி தூங்கிட்டான். காலைல சீக்கிரம் எழ மாட்டான்!” அவன் முனங்களில் இவளுக்குப் புன்னகை
படர்ந்தது. சரி ஒருநாள் மகன் விடுமுறை எடுத்துக் கொள்ளட்டும் எனக் கூறி உறங்கிப் போனாள் ஆதிரையாழ்.

தொடரும்...















 
Well-known member
Messages
416
Reaction score
300
Points
63
Yazh oda life la avalukku Abi ah thavira anbu ah na uravu nu yarumae illa ya ah
Appuram sis andha london flashback eppo sis solluviga .avolo past ah pathi ellam sonna nega atha mattum solla ma vidum pothu appo athu la than main twist yae irukum nu thonuthu
 
Well-known member
Messages
492
Reaction score
370
Points
63
பாவம் ஆதிரை, லண்டன்ல என்ன ஆச்சு?
 
Top