• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,168
Reaction score
3,348
Points
113
தூறல் – 9 💖

“அண்ணா.‌.. என்ன இது?” என சைந்தவி சிரிப்பும் முறைப்புமாய்க் கேட்டாள். அவளைப் புருவம் சுருங்கப் பார்த்த வேந்தனுக்கு ஒரு நொடி சூழ்நிலையைக் கிரகிக்கத் தேவைப்பட்டது.

“என்ன?” என இவன் விழிகளை நன்றாய் சிமிட்டி முகத்தை கையால் தேய்த்து சூடுபடுத்தியபடி வினவினான்.

“நடிக்காத ப்ரோ... இதென்ன அண்ணி ஃபோட்டோ. எப்போ எடுத்தது? இந்தக் கெட்டபுல அண்ணி செம்மையா வேற இருக்காங்க!” என்றவள் பேச்சில் நிதர்சனம் உறைத்ததும், இவனது முகத்தில் லேசாய் சுருக்கம்‌.

“ரூம்க்குள்ள யாரையும்விடாம வச்சிருக்கும் போதே நான் நினைச்சேன் ப்ரோ!” என்றவள் பேசிக்கொண்டே அந்தப் படத்தின் அருகே செல்ல, “சைந்து...” என்று நொடியில் எட்டித் தங்கையின் கையைப் பிடித்தான் வேந்தன்.

“ப்ம்ச்... தொட்டு தானே பார்க்கப் போறேன் வேந்தா...” என்று சின்னவள் முகத்தை சுருக்க, “அப்புறம் பார்த்துக்கலாம் சைந்து...” என அவளை அழைத்துக்கொண்டு வெளியே வந்து அவசர அவசரமாக அறையைப் பூட்டி சாவியை கால்சராயில் வைத்தான்.

தமையனை கீழ்கண்ணால் முறைத்த சைந்தவி, “ப்ரோ, ரொம்ப பண்ற நீ. ஏன் நான் பார்க்கக் கூடாதா?” என இரைந்தவள், “இப்போ நீ என்ன மேட்டர்னு சொல்லலைன்னா வீட்ல வத்தி வச்சுடுவேன்...” என மிரட்டல் விடுத்தாள். கைகள் இரண்டையும் இடையில் வைத்து கண்கள் இடுங்க அவனை நோக்கினாள். அதில் சொல்லியே ஆக வேண்டும் என்றொரு பாவனை பொதிந்திருந்தது.

“அதெல்லாம் ஒன்னும் இல்ல சைந்து. நீ யார்கிட்டேயும் சொல்லக் கூடாது!” என அதட்டினான் அவன். இந்தப் பெண் ஏதும் செய்துவிடுவாளோ என்ற மெல்லிய பதட்டம் விரவினாலும், முகத்தில் எதையும் காண்பிக்கவில்லை அவன்.

“அட... என்ன வேந்தா அதட்டல் எல்லாம் பலமா இருக்கு. இப்போ நான்தான் வாய்ஸ் ரெய்ஸ் பண்ணுவேன். நீ ரெக்வஸ்ட் பண்ணணும். இல்ல இன்னைக்கே மைக் செட் வச்சு எல்லார்கிட்டயும் சொல்லிடுவேன்...” என்றவள் மெதுவாய் நகர்ந்து ஒரு இருக்கையை இழுத்துக் கால்மேல் காலைப் போட்டு அமர்ந்தாள். உதட்டில் குறும்பான புன்னகை ஜனித்தது. வேந்தன் அவளை ஏகமாய் முறைத்தான்.

“ம்கூம்... உன்கிட்ட பணிவு இல்லை தம்பி...” என்றவள் எழச் செல்ல, “சைந்து... யார்ட்டயும் சொல்லிடாத!” என்றான் பல்லைக் கடித்து.

“இது ஆர்டர் போட்ற மாதிரி இருக்கே ப்ரோ‌. இன்னும் கொஞ்சம் பணிவு...” என இவள் பொங்கிச் சிரிக்க, “தயவு செஞ்சு யார்கிட்டேயும் சொல்லித் தொலைச்சுடாத சைந்து...” என்றான் அதே குரலில். ஏனோ அவனது குரலில் பணிவு என்ற வார்த்தைக்குப் பஞ்சமாகிப் போனது.

“ஹக்கும்... இதுக்கு மேல உனக்கு பொலைட்டா கேட்க வரலையா ப்ரோ‌. சரி, சரி... போனா போகுதுன்னுவிட்றேன்...” என்றவள் போலியான சலிப்புடன் இரண்டெட்டுகள் வைத்தாள். வேந்தன் அவளை முறைத்துவிட்டு இருக்கையில் பொத்தென அமர, வலக்கரம் உயர்ந்து முன்னுச்சி முடியைக் கோதின.

வெளியே சென்ற சைந்தவி சில நிமிடங்களில் மீண்டும் அவன் முன்னே கையைக் கட்டிக்கொண்டு நின்றாள். உதடுகளில் மென்மையான புன்னகை பூத்திருந்தது.

“ண்ணா...நீ சும்மா சொல்றன்னு நினைச்சேன். பட், அண்ணியை இந்த அளவுக்குப் பிடிக்கும்னு இப்போதான் தெரியுது. சந்தோஷமா இருக்குண்ணா!” என்றவள் கைகளை நீட்டி அவன் முடியைக் கலைத்தாள். பெண்ணின் முகம் கனிந்திருந்தது.

“இவ்வளோ அன்பு இருக்கப்போ எது உன்னைத் தடுக்குதுன்னு தெரியலை. சீக்கிரம் அண்ணிகிட்டே உன் மனசுல இருக்கதை சொல்லிடு... அப்புறம் வீட்ல சம்மதம் வாங்கி உன் ஸ்டேடட்ஸை மேரிட்னு மாத்திடலாம்!” என்று குறும்பும் அக்கறையுமாய் உரைத்தவளைப் பார்த்தவனின் உதட்டில் முறுவல் பூத்தது. பதிலுரைக்காது அமைதியாய் அவளை நிமிர்ந்து நோக்கினான்.

“என் அண்ணாவுக்கு என்ன குறை, ஹம்ம்... அழகு வேந்தா நீ. கண்டிப்பா அண்ணி உன்னை ரிஜெக்ட் எல்லாம் பண்ண மாட்டாங்க!” என அவன் கன்னத்தைக் கிள்ளியவளின் செய்கையில் அவனது முகம் இன்னுமே மலர, உதடுகளில் புன்னகை நீண்டு கவிந்தது.

பேச்சினூடே எட்டி தமையனிடமிருந்து சில ஐநூறு ரூபாய் தாள்களை எடுத்தவள், “என் அண்ணன் கல்யாணத்துக்கு இப்பவே ட்ரீட் கொடுக்கப் போறேன். சோ, இதெல்லாம் கண்டுக்கக் கூடாது!” என்று வெளியே ஓடிவிட, இவன் கைகளைப் பின்னோக்கி வைத்து தளர்ந்து அமர்ந்தான். உதட்டில் தங்கையின் பேச்சில், செய்கையில் அது கொடுத்த உணர்வில் மலர்ந்த புன்னகை சில பல நிமிடங்களுக்குத் தேயவேயில்லை. பின்னர் எழுந்து அலுவலகம் கிளம்பத் துவங்கினான்.

“அக்கா, எனக்கு‌ இன்னைக்கு எக்ஸாம் இருக்கு . நீயே ட்ராப் பண்றீயா?” என்ற சோனியா இழுபட்டையை இழுத்து பின்னலின் அடிப்பகுதியில் மாட்டினாள்‌. விழிகள் கண்ணாடியில் முகத்தை ஒருமுறை சரியாய் இருக்கிறதா என ஆராய, முன்புறம் லேசாய் சிலுப்பியிருந்த முடியைப் பார்த்து முகம் சுருங்க, வலக்கை உயர்ந்து அதை சரிசெய்தது.

“சரி சோனி. நானே ட்ராப் பண்றேன். போ, நீ போய் கிளம்பு...” என்ற துளசி வசுமதிக்கு சமையலில் உதவிவிட்டு குளிக்கச் சென்றாள்.

“சோனி, அக்காவும் நீயும் சாப்டுட்டு இருங்க. நான் பக்கத்துல கடைக்குப் போய்ட்டு வந்துட்றேன்...” என்ற வசுமதி நகர, இவர்கள் இருவரும் உண்டு முடித்திருந்தனர்.

“க்கா... டைமாச்சு. அம்மாவைக் காணோம்!” என்ற சோனியா வாயிலுக்கும் வீட்டிற்கும் இரண்டு முறை நடந்திருக்க, “சித்தி...” என்ற கூச்சலுடன் ஆறு வயசு ஜெய் அவளை நோக்கி ஓடி வந்தான்.

சோனியா அவனை எதிர்பாராது ஒரு நொடி திகைத்துப் பின் புன்னகைக்க, ஜெய் அவளை காலோடு அணைத்துக் கொண்டான். அதில் முகம் மலர்ந்தவள், “ஜெய் செல்லம், சித்தியைப் பார்க்க வந்தீங்களா?” என அவனைத் தூக்கினாள். ஷிவசக்தியும் அவளது கணவன் சதானந்தனும் பின்னே நுழைய, சோனியாவின் முகத்தில் மெல்ல மெல்ல புன்னகை மங்கத் தொடங்கியது.

“க்கா... வாக்கா, மாமா வாங்க!” என்றவளின் உதட்டில் சம்பிரதாயப் புன்னகை மட்டுமே எஞ்சியிருந்தது.

துளசி சப்தம் கேட்டு வெளியே வர,
“வா துளசி, சரியா வந்துட்ட. இந்தப் பையை மட்டும் வாங்கிக்க. இவ்வளோ தூரம் தூக்குனதுல கையே விழுந்துப் போச்சு!” என்று ஷிவசக்தி முகம் சுருக்கினாள்.

துளசி அவர்களை முறையாய் வரவேற்றவள், “க்கா... கால் பண்ணியிருந்தா, நானே வந்திருப்பேன் இல்ல?” என்ற கேள்வியுடன் அவளது பயணப்பையைத் தூக்கிக்கொண்டு உள்ளே நுழைந்தாள். சோனியா அமைதியாகக் குழந்தையைத் தூக்கியவாறே அவர்கள் பின்னே வந்தாள்.

“என்னகா, வரேன்னு கால் பண்ணி கூட சொல்லாம வந்துட்ட?” என துளசி வினவ, “இவனுக்கு ஸ்கூல் லீவ் துளசி. அதான் உங்களைப் பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன். இங்க போன வருஷம் வந்தது, அதுக்கப்புறம் வர டைமே கிடைக்கலை!” என்ற சக்தி இருக்கையில் அமர்ந்தாள்.

“துளசி, ட்ராவல் பண்ணது செம்ம டயர்ட், சூடா உன் கையால ஒரு டீ போட்டுத் தா...” என்று தமக்கை வினவியதும், துளசி தலையை அசைத்துவிட்டு அடுக்களைக்குள் நுழைந்தாள்.

“சித்தி, ஸ்கூலுக்குப் போகலையா நீங்க?” என குழந்தை சோனியா காதருகே முணுமுணுக்க, “டேய் கண்ணா, நான் ஸ்கூல் முடிச்சு ரெண்டு வருஷம் ஆச்சு. காலேஜ் படிக்கிறேன்...” என அவனின் மூக்கைப் பிடித்து மென்மையாய் ஆட்டினாள்‌.

“அப்போ... நானு... நான் எப்போ காலேஜ் போவேன் சித்தி?” என அவன் உதட்டைப் பிதுக்கினான். அந்தக் குரலில் இவளது முகம் விகசிக்க, அவன் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள்.

“என் அறிவு... நாளைக்கே சித்தி உன்னைக் காலேஜ் சேர்த்துவிட்றேன்!” எனத் தூக்கி அவனைச் சுற்ற, குழந்தைப் பொங்கிச் சிரித்தான்.

தேநீரை வடிகட்டி சர்க்கரையைக் கலந்த துளசி வெளியே வர, இந்தக் காட்சியை பார்த்ததும் உதடுகளில் புன்னகை ஏறின. சக்திக்கும் அவனது கணவனிற்கும் தேநீரைக் கொடுத்தாள்.

அதை ஒரு மிடறு பருகியவள், “என்ன துளசி, சர்க்கரை ரொம்ப கம்மியா இருக்கு. இன்னொரு ஸ்பூன் போடு...” என்று அவள் கூறவும், துளசி சர்க்கரையை எடுத்து வந்து தமக்கையின் தேநீரில் கலந்தாள்.

“மாமா, உங்களுக்கு சர்க்கரை!” என அவனிடம் கேட்க, “இல்ல துளசி, எனக்குப் போதும்!” என சின்ன தலையசைப்போடு மறுத்திருந்தான் சதா. ஷிவசக்தி ஏதோ பேச, துளசி பதிலளித்த வண்ணமிருந்தாள்.

குழந்தையிடம் பேசிக் கொண்டிருந்தாலும் சோனியாவின் கண்கள் கடிகாரத்தில் படிந்து மீண்டன. அதைக் கவனித்த துளசி, “சோனி, காலேஜ்க்கு டைமாச்சுல்ல, நீ கிளம்பு...” என ஜெயவர்மனை இவள் வாங்கிக் கொண்டாள்.

“க்கா... ஆஃபிஸ் போகலையா நீ?” என்ற கேள்வியுடன் சோனியா பையை எடுத்துக்கொண்டு நகர்ந்தாள்.

“அம்மா வந்ததும் போய்க்கிறேன் சோனி. நீ பத்திரமா போ...” என்று இவள் பதிலளித்தாள். சின்னவள் நகர, வசுமதி வந்துவிட்டார்.

“சாரி துளசி, பிள்ளையார் கோவில்ல பூஜை நடந்துச்சா, அதான் வர்ற நேரமாகிடுச்சு. நீ ஆஃபிஸ் கிளம்பு!” என்றவர் துளசியிடம் பேசிக்கொண்டே உள்ளே நுழைய, ஜெய், “பாட்டி...” என அவரிடம் ஓடினான். மகளையும் மருமகனையும் கண்டதும் திகைத்துப் போனார்.

“சக்தி... வா, வா. வாங்க மாப்பிள்ளை, திடுதிப்புன்னு சொல்லாம வந்துருக்கீங்க?” என்றவர் பேரனின் கையைப் பிடித்துக்கொண்டு மகளருகே சென்றார். அவளை நீண்ட நாட்கள் கழித்துக் கண்டதில் பெரியவரின் முகம் முழுவதும் புன்னகை. பெறாவிட்டாலும் சிவசக்தி இந்த வீட்டின் மூத்த மகளாகிற்றே. அப்படித்தான் வசுமதி அவளை எண்ணி வளர்த்திருந்தார்.

கண்ணப்பனின் அண்ணன் அரசும் அவரது மனைவி பரிமளமும் சாலை விபத்தொன்றில் இறந்துவிட, அவர்களின் ஒரே மகள் சிவசக்தி யாருமற்றுத் தனித்து அநாதையாக்கப்பட்டாள். அப்போது அவளுக்கு பதினைந்து பிராயம் கூட நிரம்பியிருக்கவில்லை‌. கண்ணப்பனுக்குத் தன் அண்ணன் அரசுவின் மீது அத்தனை அன்பும் மரியாதையும் உண்டு. அதனாலே சிவசக்தியை தனியே விடுதியில் விட பெரிதாய் எண்ணமில்லை‌. தன்னுடைய இரண்டு பெண்களோடு இவள் மூன்றாவதாய் இருந்துவிட்டுப் போகட்டும் என்பது அவரது சித்தாந்தம். சக்தியைத் தன் மூத்த மகளாக எண்ணியவர், தன் வீட்டிற்கு அழைத்தும் வந்துவிட்டார்.

வசுமதியும் கணவன் சொல் தட்டாத பெண்மணி. அவரும் சிவசக்தியை அரவணைத்துக் கொள்ள, மூன்று குழந்தைகளையும் எவ்வித பாகுபாடும் காண்பிக்காது இருவரும் வளர்த்தனர்.

துளசியும் சோனியாவும் சக்தி இந்த வீட்டிற்கு வரும் பொழுது விவரம் அறியா பிராயத்தில் இருந்தனர். புதிதாய் இந்த வீட்டில் சக்தி நுழைய, அவளை அப்படியே ஏற்றுக் கொண்டனர். ஆனால், சிவசக்தியால் அத்தனை எளிதில் அவர்களுடன் இணைய முடியவில்லை. இதே வீட்டிலிருந்தாலும் அவளது பேச்சு எல்லாம் வசுமதி மற்றும் கண்ணப்பனிடம்தான். அவர்கள் ஆரம்பத்தில் சக்தியைக் கண்டித்தலும், நாட்கள் செல்ல செல்ல அவள் சரியாகிவிடுவாள் என விட்டுவிட, அவள் தனித்திருந்தே பழகிவிட்டாள்.

கண்ணப்பன் மூன்று பிள்ளைகளையும் ஒரே மாதிரி வளர்த்தாலும் சிவசக்திக்கு அவர் துளசி மீது அதீத அன்பு செலுத்துவதாய் ஒரு எண்ணம். அதனாலே அவளுக்குத் துளசி மீது மெதுவாய் வெறுப்பு துளிர்க்கத் தொடங்கியது. எப்போதும் அவளைப் பற்றி பெற்றவர்களிடம் குறை கூறுவது, திட்டுவது, அவளை வேலை வாங்குவது எனத் தன் மனப்பொறாமை எண்ணங்களுக்குத் தீனி போட்டுக் கொள்ளுவாள். துளசி இயல்பிலே பொறுமையானவள். ஆனாலும் இவளது செய்கைகள் எல்லை மீறும்போது அவள் எதாவது கேட்க, சிவசக்தியின் ஆயுதம் கண்ணீரானது.

தன் தாய் தந்தையிருந்தால் இப்படி நிகழ்ந்திருக்குமா என அவளது பேச்சு முழுவதும் பெற்றவர்களைப் பற்றியே எழும். கண்ணப்பனும் வசுமதியும் சக்தியின் அழுகை பொறுக்காது துளசியை அதட்டுவார்கள், திட்டுவார்கள். அதில் சக்திக்குக் குரூர திருப்தி.

ஒவ்வொரு விஷயத்திற்கும் துளசி இதுபோல் அதிகமாய்க் காயம்பட, கொஞ்சம் கொஞ்சமாக சக்தியிடம் விலகிக் கொண்டாள். அவளது செய்கைகள் தன்னை எந்த வகையிலும் பாதிக்கவில்லை என்பது போல துளசி நடந்து கொள்ள, அதற்கும் சக்தி எதாவது சண்டையிட்டு, அழுது அடம் செய்வாள். பெற்றவர்கள் சமாதானம் செய்வார்கள். நாட்கள் செல்ல, அழுகை குறைந்து, அதிகாரம் செய்யத் தொடங்கியிருந்தாள். வீட்டில் எந்த வேலையும் செய்ய மாட்டாள். அவளுடைய வேலைகளைக் கூட மற்றவர்களை ஏவுவாள். வசுமதியும் கண்ணப்பனும் ஏதாவது ஒரு வார்த்தை திட்டி விட்டால், கண்ணீர் குபுக்கென்று விழிகளிலிருந்து வழிந்துவிடும். தனியாய் அமர்ந்து கொள்ளுவாள், உண்ண மாட்டாள். அதனாலே அவளைத் திட்டுவது, அதட்டுவது என அத்தனையும் நிறுத்தியிருந்தனர். அவளைப் பொறுத்துப் போக பழகியிருந்தனர். இப்படித்தான் துளசி மற்றும் சோனியாவின் சிறுவயது நகர்ந்திருந்தது.

கண்ணப்பன் சிவசக்திக்குப் பரிந்து துளசியைக் கடிந்தாலும் தனியாக அழைத்து மகளை சமாதானம் செய்வார். தந்தைக்காக என எண்ணி சக்தியைப் பொறுத்துப் போக பழகியிருந்தாள் துளசி. இவள் கல்லூரி முதலாமாண்டு படிக்கும்போது சிவசக்திக்கு திருமணம் முடிந்து இந்த வீட்டைவிட்டு அவள் அகன்றிருக்க, அப்போதுதான் துளசிக்கு நிம்மதி பிறந்தது.

சோனியாவிற்கு சிறு வயது என்பதால் பெரிதாய் எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை. கொஞ்சம் வளர வளர சக்தி நடவடிக்கையின் பொருளுணர்ந்ததும் அவளைப் பிடிக்காது போனது. அதனாலே அவள் எங்கிருந்தாலும் இவள் நகர்ந்துவிடுவாள். திருமணம் முடிந்ததும் சக்தியின் இன்மையால் சர்வ நிச்சயமாய் இவர்களுக்கு பெரியதொரு நிம்மதி கிடைத்திருந்தது.

அதற்குப் பின்னே நடந்த சில விரும்பத்தகாத நிகழ்வுகளால் குடும்பமே மொத்தமாய் சிதறியிருந்தது. நிம்மதி என்ற வார்த்தைக்கு அர்த்தம் தேட கூட நேரமில்லாது துளசியின் நாட்கள் நகரத் தொடங்கின.

சிவசக்தியின் கணவன் சதானந்தனுக்கு கன்னியாகுமரியில் அரசுப்பணி கிடைத்துவிட, இவர்கள் கோயம்பத்தூரிலிருந்து அங்கு புலம் பெயர்திருந்தனர். முன்பு போல இரு குடும்பத்திற்கும் தொடர்புகள் அற்றுப் போயிருந்தது. சிவசக்தி அவளுக்காய்த் தோன்றும் போது வசுமதிக்கு அழைத்துப் பேசுவாள்.
கண்ணப்பனைப் பற்றி விசாரிப்பாள். நாளடைவில் அதுவும் அருகிப் போயிருக்க, அரிதாக நேரில் காணும்போது அவர்களது உறவு நீளும்.

திருப்பூருக்கும் கன்னியாகுமரிக்கும் சற்றே தூரம் என்பதால் சக்தியால் அடிக்கடி இங்கே வர முடிவதில்லை. அதனாலே வருடத்திற்கு ஒரு முறையாவது இங்கு வந்துவிடுவாள். இப்போதும் குழந்தையின் பள்ளி விடுமுறையைக் காரணம் காண்பித்து மகன் மற்றும் கணவனோடு திருப்பூருக்கு வந்துவிட்டாள்.

“ஏன் மா... நான் இங்க வரக்கூடாதா என்ன? வந்ததும் வராததுமா இவளும் அப்படித்தான் கேக்குறா. நீயும் கேக்குற, நான் வந்ததுல உங்களுக்கு இஷ்டம் இல்ல போல?” என அவள் கேட்கவும், வசுமதி பதறிப் போனார்‌. சிவசக்தி மற்றவர்கள் பேச்சிற்கு அவளாக ஒரு அர்த்தம் கற்பித்துக் கொள்ளும் வகையில் சேர்த்தி. ஆரம்பத்தில் அவளை ஏற்றுக்கொள்ள அனைவரும் திணறினாலும், நாட்கள் செல்ல செல்ல அவள் இப்படித்தான் என்று பழகியிருந்தனர், பழக வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டிருந்தது.

“என்ன பேச்சு சக்தி இது?” என வசுமதி அவளை அதட்டினார்.

“பின்னே என்னம்மா... கல்யாணம் பண்ணிக் கொடுத்ததும் மாமியார் வீடுதான் எல்லாம்னு அனுப்பி விட்டுட்றீங்க‌. என்னைக்காவது ஒருநாள் அம்மா வீட்டுக்கு விருந்தாளி மாதிரி வந்துட்டுப் போறேன். அதுவும் உங்களுக்குப் பிடிக்கலையா?” என அவள் மீண்டும் அதே கேள்வியைத் தொடுத்தாள். முகம் வாடிப் போனது வசுமதிக்கு.

“பிடிக்கலைன்னு எல்லாம் பேசாத சக்தி...” என்றவர், “சரி, சாப்டீங்களா ரெண்டு பேரும். குழந்தை வேற பசில இருக்கப் போறான்!” என்று சமையலறையை நோக்கிச் சென்றார்.

“இன்னும் இல்ல மா. குழந்தைக்குப் பசிக்கும். நீ அவனுக்கு சாப்பாடு ஊட்டு. ஏன் வந்தீங்கன்னு கேட்க தெரியுறவளுக்கு, சாப்டீங்களான்னு கேட்க வாய் வரலை மா!” என சத்தமாய் முணுமுணுத்தாள் சக்தி. அதில் வசுமதியுடன் உணவை கூடத்திற்கு எடுத்து வந்த துளசியின் நடை சில நொடிகள் நின்று பின் தொடர்ந்தன. தன்னைத்தான் அந்த வார்த்தைகள் சாடுகின்றன எனத் தெரிந்தாலும் அவளிடம் எதிர்வினை ஏதுமில்லை.

“என்ன துளசி, அக்கா வந்ததும் சாப்பிட சொல்ல மாட்டீயா நீ?” என வசுமதி மகளைக் கடிந்தார்.

“ம்மா... அவளை ஏன் திட்ற நீ? ஏதோ வேலைக்குப் போற அவசரத்துல மறந்துடுப்பா!” என சக்தியின் குரல் இப்போது தங்கைக்கு ஆதரவாகப் பேசின. துளசிக்கு இது எப்போதும் நடக்கும் ஒன்றுதான் என்பதால் இதழ்களில் கசந்த முறுவல் தோன்றியது.

“இல்ல சக்தி, நீன்னதும் சரியா போச்சு. வேற யாரும் வந்தா, இப்படி பண்ணக் கூடாது இல்ல. அதான் சொன்னேன்!” என்ற வசு அவர்கள் இருவருக்கும் உணவைப் பரிமாறினார்.

தன் கைப்பையை எடுத்துத் தோளில் மாட்டிய துளசி, “ம்மா, ஆஃபிஸ்க்கு டைமாச்சு. நான் கிளம்புறேன்...” என நகரப் பார்க்க,
“துளசி, இன்னைக்கு ஒருநாள் லீவு போடு டி.. நாளைக்குப் போய்க்கலாம்!” என்றாள் சக்தி.

“இல்ல கா, இன்னைக்கு டிசைன் பெண்டிங்ல இருக்கு!” வாயிலில் நின்றபடி தயங்கினாள்.

“டிசைன் இன்ஜியரா தானே இருக்க துளசி. எம்.டி மாதிரி பேசாத. ஒரு நாள் லீவ் போட்டா, ஆபிஸே ரன் ஆகாத மாதிரி பேசுறா மா!” என சக்தி அவளிடம் தொடங்கி தாயிடம் முடிக்க, சதானந்த் துளசியைப் பாவமாய்ப் பார்த்தான். அவளுடைய பார்வையும் அவனிடம் குவிய, ஆறுதலாய்ப் புன்னகைத்தாள்.

“இல்ல சக்தி, இப்போ எல்லாம் அவளுக்கு வேலை நிறையா இருக்கு...நைட்டு லேட்டாதான் வர்றா” என்ற வசு, “துளசி, நீ கிளம்பு” என்றதும் அவள் நொடியில் நகர்ந்திருந்தாள்.

“ஏன் மா, அவ லேட்டா வர்றதை கண்டிக்காம என்கிட்ட வேற நீ சொல்லீட்டு இருக்க. அவ கல்யாணமாகாத பொம்பளைப் பிள்ளைன்றதை மறந்துடாத நீ!” என்ற சக்தி உண்டுகொண்டே தாயைக் கடிய, அவரிடம் பதிலில்லை. அமைதியாய் அமர்ந்திருந்தார். சதானந்த் அவரை சங்கடமாகப் பார்த்து வைத்தான்.

“சக்தி, சாப்பிடும் போது பேசாத, அவனுக்கு சாப்பாட்டை ஊட்டி விடு!” என அவன் மெதுவாய்க் கூற, இவளது பேச்சு அடங்கியிருந்தது.

உண்டு முடித்து அவன் ஓய்வெடுக்க அறைக்குள் சென்றுவிட, ஜெய் வீட்டிற்குள்ளே விளையாடினான். வசுமதி அவர்களுக்கு மதியம் சமைப்பதற்காக கீழே அமர்ந்து காய்கறிகளை நறுக்கிக் கொண்டிருக்க, அவரருகே அமர்ந்தாள் சக்தி.

“ம்மா... துளசிக்கு எப்போ கல்யாணம் பண்றதா இருக்க நீ? அவ வயசுல ஜெய் என் கையில இருந்தான். ஆனால், இன்னும் அவளுக்கு கல்யாணம் பண்ற எண்ணமே இல்ல போல உனக்கு?” என்று அவள் கேட்க,

“ப்ம்ச்... எனக்கு மட்டும் ஆசையில்லையா சக்தி. பாவம், அவதான் இந்த வீட்டை சுமந்துட்டு இருக்கா. அவர் வேற இப்படியே இருந்துடுவாரோன்னு பயமா இருக்கு. எப்படி ரெண்டு புள்ளைகளை கட்டிக் கொடுக்கப் போறேன்னு தெரியலை. வர்றது வாய்க்கும் கைக்குமே போத மாட்டுது!” என்றார் ஆதங்கமாய்.

“ம்மா... எனக்கும் வருத்தம் இல்லாம எல்லாம் இல்ல மா. எங்க, உங்களுக்கு ஏதாவது உதவி செய்யலாம்னு பார்த்தா, என் மாமியாருக்குப் பொறுக்காது. சும்மா ஏதாவது சொல்லிட்டே இருக்கும். அதுவுமில்லாம பொண்ணு கொடுத்த வீட்ல வாங்குனா, அது நம்மளுக்குத்தான் இறக்கமாய்டும். அதனால்தான் என்னால் உங்களுக்குன்னு எதுவும் செய்ய முடியலை!” என்று குறையாய் கூறி வருத்தம் கொண்ட சக்தியின் குரலில் போலியின் சாயலை ஒருவரும் கண்டறிய முடியாது.

“என்னைத் தப்பா நினைக்காதே மா. புகுந்த வீடு சரியில்லை... இல்லைன்னா உங்களை இப்படி கஷ்டப்பட விடுவேனா?” என்றவள் விழிகளில் இரண்டு சொட்டு நீர் வடிந்து கன்னம் நனைத்தது.

“ஏய் சக்தி, இதென்ன கண்ணைக் கசக்குற பழக்கம். என் பொண்ணைப் பத்தி எனக்குத் தெரியாதா? எங்கக் கஷ்டம் எங்களோட போகட்டும். நீ அங்க மாப்பிள்ளையோட சந்தோஷமா இருந்தாலே போதும். எங்களுக்கு செய்ய முடியலைன்னு எல்லாம் நினைக்காத நீ!” என மகளின் கண்ணீரைத் துடைத்தவர், அவளை அணைத்தார்.

“பணம் காசு தான் கொடுத்து உதவ முடியலை. அதான் துளசிக்கு ஒரு நல்ல வரன் கொண்டு வந்தேன் மா. அவ போற வீட்ல நல்லா வாழட்டும்னு. எங்க ஊர்க்காரவங்க தான்...” என்றாள்.

“இப்போதைக்கு நம்மளால எதுவும் அவளுக்குன்னு செய்ய முடியாதே சக்தி‌!” வசுமதி வருந்தினார்.

“ம்மா... நம்ம வீட்டு கஷ்டம் எனக்குத் தெரியாதா என்ன? அதான் இந்த பையனைப் பார்த்தேன். ரொம்ப நல்ல பையன், சொந்தமா வீடு, விவசாய நிலம், ஆடு, மாடுன்னு நிறையா இருக்கு. நல்ல பொண்ணா இருந்தா போதும், வரதட்சணை எதுவும் வேணாம்னு சொன்னாங்க. அப்பதான் எனக்கு துளசி ஞாபகம் வந்துச்சு. நல்ல சம்பந்தம், என்ன பையன் படிக்கலை. ஆனால், அதெல்லாம் பெரிய குறையா தெரியலை மா!” என்றவள் எழுந்து சென்று தன் அலைபேசியிலிருந்தப் புகைப்படத்தைக் காண்பித்தாள்.

“ம்மா... பார்க்க கருப்புன்னு நினைக்காத. போட்டோனால அப்படி இருக்கு, நேர்ல வெள்ளையாத்தான் இருப்பான். இந்த சம்பந்தத்தை விட்றக்கூடாது மா!” என சக்தி வலியுறுத்தினாள்.

“நீ சொல்றது சரி சக்தி, துளசியைக் கல்யாணம் பண்ணி அனுப்பிட்டா, இந்தக் குடும்பத்தை யார் பார்த்துக்குறது?” எனக் கவலையாய் வினவினார்.

“ச்சு... இப்போவேவா கல்யாணத்தை வைக்க சொல்றேன். பேசி முடிச்சுடுவோம் மா, அப்புறம் ஒரு ஆறு மாசம் இல்ல, ஒரு வருஷம் கழிச்சு கல்யாணத்தை வச்சுக்கலாம். அதுக்குள்ளேயும் சோனியா படிப்பை முடிச்சு வேலைக்குப் போக ஆரம்பிச்சுடுவா!” பேசியபடியே அவர் நறுக்கி வைத்த காய்களை கிண்ணத்தில் வைத்தாள் சக்தி. வசுமதி முகத்தில் அத்தனை யோசனை.

“இன்னும் என்னம்மா யோசிக்கிற நீ? அவளைக் கடைசிவரை கல்யாணம் பண்ணாம, இந்தக் குடும்பத்தைப் பார்த்துக்க வச்சுக்கப் போறீயா நீ?” சக்தி காரமாய் வினவினாள்.

“என்ன பேசுற சக்தி நீ. அப்படியெல்லாம் இல்ல. துளசி என்ன சொல்லுவாளோன்னு இருக்கு...” எனத் தயங்கினார்.

“அவ இதுல கருத்து சொல்ல என்ன இருக்கு, பெரியவங்க நம்மளா பார்த்து செய்றதுதான். எனக்கு கல்யாணம் நீயும் அப்பாவும் தானே பண்ணி வச்சீங்க. இப்போ அப்பாவுக்கு உடம்புக்கு சரியில்லை. அதனாலே நீயும் நானும்தான் மா எடுத்து செய்யணும். அதெல்லாம் யோசிக்காத நீ. நான் அவகிட்ட பேசிக்கிறேன். இப்ப நீ சொல்றதுதான்!” என அவள் பேசி முடிக்க, வசுமதி சம்மதித்திருந்தார்.

“நல்லது மா. நான் மாப்ளை வீட்ல அவரை பேசச் சொல்றேன். சீக்கிரம் ஆக வேண்டியதைப் பார்க்கலாம். அப்பாவால எதையும் செய்ய முடியலைன்னு கவலைப்படாத மா. நான் தங்கச்சிங்களைப் பார்த்துக்கிறேன்!” என சக்தி பேசவும், வசுமதிக்கு உருகிவிட்டது.

“நீ இப்படி பேசுறது பார்க்க சந்தோஷமா இருக்கு சக்தி. எங்கக் காலத்துக்குப் பிறகு துளசியையும், சோனியாவையும் நீ பார்த்துப்ப...” என அவர் மகிழ்ச்சியில் பேச, விழியோரம் கலங்கியது அந்தத் தாய்க்கு.

“இதெல்லாம் சொல்லணுமா மா?” என்ற சக்தி, “கருவாடு இருந்தா, எப்பவும் நீ வைக்கிற மாதிரி குழம்பு வை மா. ரொம்ப நாளாச்சு உன் கையால சாப்ட்டு. நானே சமைச்சு சாப்ட்றது வெறுப்பா இருக்கு!” என ஏக்கமாய் அவள் உரைத்ததும், “இதோ, அரை மணி நேரத்துல வச்சுட்றேன் சக்தி. புள்ளை இளைச்சுப் போய்ட்ட. சரியா சாப்பிட்றதே இல்லையா நீ?” என அக்கறையாய் கேட்டவர் எழுந்து சமையலறைக்குச் சென்று அடுப்பை பற்ற வைத்து பாத்திரத்தை அதில் ஏற்றினார்.

“ச்சு... எங்க மா, வீட்ல எழுந்ததுல இருந்து வேலைதான்.‌ இதுல சாப்பிடவே தனியா டைம் ஒதுக்க முடியலை...” என குறைப்பட்டவளின் பேச்சு குடும்பம் தொட்டு ஊரைச் சுற்றி வந்தது.

தொடரும்...
 
Top