• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,168
Reaction score
3,348
Points
113
தூறல் – 7

துளசி சந்தோஷின் கேள்வியில் திகைத்துப் போய் அவனை நோக்க, “ப்ளீஸ் சே யெஸ் துளசி...” என்றவன் குரலில் அத்தனை மன்றாடல்.

சில நொடிகளில் தன்னை மீட்டவள், “ப்ம்ச்... என்னாச்சு சந்தோஷ், வீட்ல எதுவும் பிரச்சனையா?” என கனிவாய் வினவினாள். அவளது கரங்கள் அவனது கைகளை மெதுவாய் அழுத்தின.

“கல்யாணம் பண்ணிக்கலாம் துளசி, உன்னோட இடத்தை வேற யாராலும் ரீப்ளேஸ் பண்ண முடியாது!” என்றான் மீண்டும். குரலில் அவள் மீதான நேசம் கொட்டிக் கிடந்தது.

“சந்தோஷ், ரொம்ப குழப்பத்துல இருக்கீங்க நீங்க. முதல்ல கொஞ்சம் ரிலாக்ஸாகுங்க!” என்றவள் எழுந்து சென்று இருவருக்கும் தேநீர் வாங்கி வந்து, அவனிடம் ஒன்றைக் கொடுத்தாள்.

“இதைக் குடிங்க...” என்ற துளசி கிடைத்த ஐந்து நிமிட இடைவெளியில் அவனை எவ்வாறு கையாள்வது என யோசித்திருந்தாள். சொட்டு சொட்டாய் இறங்கும் தேநீரின் சுவை கூட அவன் மனதின் கசப்பை கரைக்கவில்லை.

“சரி, இப்போ சொல்லுங்க!” என்றவள் அந்தக் காகிதக் குவளையை எட்டி குப்பைத் தொட்டியிலிட்டாள்.

“அப்பாவுக்கு கொஞ்சம் ஹெல்த் சரியில்லைன்னு டூ டேய்ஸ் முன்னாடி அகைன் ஹாஸ்பிடல்ல செக்கப் பண்ணோம். டயாபடிஸ் இருக்கு, சோ சுகர் லெவல் அதிமாகிடுச்சு. டாக்டர் திட்டி ரெண்டு நாள்ல அட்மிட் பண்ணி, கொஞ்சம் சரியானதும் வீட்டுக்கு அனுப்புனாங்க‌‌. அம்மாவுக்கு கவலை, அவர் நல்லா இருக்கும் போதே எனக்கு கல்யாணம் பண்ணிடணும்னு ரெண்டு நாளா ஒரே பேச்சு. நான் எவ்வளோ சொல்லியும் கேட்காததால சரி, துளசியைக் கல்யாணம் பண்ணி வைங்க, இல்லைன்னா எனக்கு மேரேஜ் வேணாம்னு சொல்லிட்டேன். அதுலருந்து வீட்ல ரொம்ப சண்டை. அம்மா ரிலேட்டீவ்ல ஒரு பொண்ணைதான் கல்யாணம் பண்ணணும்னு சொல்ல, நான் முடியாதுன்னு சண்டை போட்டேன். வீட்ல அமைதியே இல்ல துளசி‌. நீதான் எனக்கு அந்த அமைதியைக் கொடுக்கணும். ப்ளீஸ் சே யெஸ், கல்யாணம் பண்ணிக்கலாம் துளசி, உன்னோட... ம்கூம் நம்ம கடனை ரெண்டு பேரும் சேர்ந்தே அடைக்கலாம். நான் எல்லா சிட்சுவேஷன்லயும் உன் கூட இருப்பேன்!” என்றவன் குரல் கரகரப்பில் துளசியின் விழிகள் கலங்கப் பார்த்தன. தற்போதைய சூழ்நிலையைக் கிரகித்தவள், தானே இப்படி கலங்கி நின்றால், இந்த ஆடவனும் உடைந்துவிடுவானே என மனம் அஞ்ச, “ச்சு... சந்தோஷ், என்ன இது?” என அவனது முதுகில் தட்டினாள்.

“எப்பவும் சிரிச்சுட்டே எனர்ஜிடிக்கா இருக்க சந்தோஷைதான் எனக்கு ரொம்ப பிடிக்கும். இப்படி டல்லா இருக்கவரை இல்ல!” எனப் புன்னகைத்தவளைப் பார்த்தவன்,

“என் எனர்ஜி உன்கிட்டே தான் இருக்கு... உன் வார்த்தையில தான் இருக்கு!” என்றான் எதிர்பார்ப்பாய்‌.

ஒரு நொடி மூச்சை இழுத்துவிட்டவள், “ஈவ்னிங் வீட்டுக்கு வாங்க சீனியர், அங்க பேசிக்கலாம். இங்க வச்சு எதையும் என்னால சொல்ல முடியாது!” என்றாள் சங்கடமான குரலில். அவள் மறுக்கவில்லை என்ற காரணத்திலே அவனது உதடுகளில் புன்னகை ஏறின.

“கண்டிப்பா துளசி, தேங்க் யூ சோ மச்!” என்றவன் அவளது தோளில் கையைப் போட்டு ஒரு நொடி அணைத்து விடுவித்தான். துளசிக்கு அவனைக் காணும் போது மனதில் பாரம் ஏறியது. இந்த மனிதனின் மனதை உடைக்கப் போகிறோம் என்ற எண்ணம் அவளைக் கனக்கச் செய்ய, பாரமான மனதுடன் தனது பணியைக் கவனிக்கச் சென்றாள்.

வேந்தன் மதியத்திற்கு மேல்தான் அலுவலகம் வந்தான். அவனுக்கும் தொழிலில் கவனம் சென்றுவிட, துளசி மீதொரு கண்ணும் வைத்துக் கொண்டான். முன்பு போல அவளிடம் பேச்சுக்கள் இல்ல. குறைந்து போயிருந்தது. குறைத்துக் கொண்டானா என இருவருமே அறியர். ஆனாலும் அவளைத் தன் பார்வை வட்டத்தில்தான் வைத்திருந்தான். அவளுடைய செய்கைகள் அனைத்தையும் அவளின் கவனத்தைக் கவராது கண்காணித்தான்.

அன்று சந்தோஷூம் துளசியும் ஒன்றாய் வீட்டிற்கு செல்வதைப் பார்த்தவனின் இதழ்களில் நக்கலானப் புன்னகை. தோள்களைக் குலுக்கிக் கொண்டான். துளசி ஒரு வாரத்திற்கும் மேல இழுத்து கடத்தி ஒரு வழியாய் அந்த உணவு விடுதி கட்டுவதற்கான வடிவமைப்பை முடித்துக் கொடுத்திருக்க, வேந்தனுக்கு அதில் சுத்தமாய்த் திருப்தி இல்லை. அதை திட்ட மேலாளருக்கு மறுபடி அனுப்பிவிட்டான்.

“ஐ நீட் அ பெட்டர் டிசைன் தன் திஸ்!” என அவன் காரமாய்க் கூற, “ஓகே சார், வேற டிசைன் பண்ணி உங்களுக்கு சென்ட் பண்றோம்!” என்றவாறு மேலாளர் நகர்ந்திருந்தான். அந்த வடிவமைப்பு மீண்டும் துளசியிடமே சென்றது.

“துளசி, இந்த டிசைன் வேந்தன் சார்க்குப் பிடிக்கலை. ஹீ நீட்ஸ் அ பெட்டர் ஒன். சோ கொஞ்சம் இன்னோவேட்டீவா ட்ரை பண்ணுங்க!” என அவர் துளசியிடம் காய, தலையை அசைத்து வைத்தாள். அவளுக்கு அதை வடிவமைக்க சுத்தமாய் விருப்பமில்லை. ஆனாலும் வேறு வழியில்லாமல் சரியென ஒப்புக்கொண்டிருக்க, இதில் வேந்தன் செயலில் எரிச்சல்தான் படர்ந்தது.

“நாளைக்கு வேற டிசைன் போட்டுத் தரேன் சார்!” என அந்த வேலையைக் கிடப்பிலிட்டவள் மாலையானதும் சந்தோஷூடன் வீட்டிற்குக் கிளம்பிவிட்டாள்.

அப்போதுதான் கல்லூரி முடிந்து சோனியாவும் வீட்டிற்குள்ளே நுழைந்தாள். சந்தோஷை ஓரிரு முறை அவள் கண்டிருக்கிறாள். அதன் பொருட்டு அவளது இதழ்களில் சிநேகமான புன்னகை தவழ்ந்தது.

வசுமதிக்கு அவனை நன்றாய் அடையாளம் தெரிந்தது. ஏனென்றால் நிறைய முறை உதவி செய்திருக்கிறான். அதைவிட, துளசி சந்தோஷைப் பற்றி தாயிடம் கூறியிருக்கிறாள்.

“வாங்க பா... உள்ளே வாங்க!” என்று வசுமதி வரவேற்க, சந்தோஷ் சிறிய தலையசைப்புடன் நுழைந்தான். துளசியுடன் கல்லூரியில் படிக்கும்போதே ஓரிரு முறை வந்திருக்கிறான். ஆனால், அதற்குப் பின்னே வாய்ப்புகள் அதிகமாக அமையவில்லை. அப்படியே வந்தாலும் வெளியே முகப்பிலிருந்த நாற்காலியில் அமர்ந்து பேசிவிட்டு சென்றுவிடுவான். துளசி உள்ளே வா என அழைக்க மாட்டாள். அவனுக்கு அது உறுத்தலாக இருந்தப் போதும் பெரிதாய் எடுத்துக் கொண்டதில்லை. ஆனால், நெடுநாட்கள் கழித்து இன்று வீட்டிற்குள்ளே அழைத்துச் சென்று அமர வைத்தாள்.

“காஃபி இல்ல டீ, என்ன குடிக்குறீங்க தம்பி?” வசுமதி வினவ, “எதுனாலும் ஓகே ஆன்ட்டி...” என தலையசைத்தான்.

அவர் அடுக்களைக்குள் செல்ல, “ப்ரெஷ்ஷாகிட்டு வரேன் சீனியர்...” எனத் துளசி இரண்டெட்டுகள் எடுத்து வைத்திருக்க, கண்ணப்பன் அறையில் சப்தம் கேட்க ஆரம்பித்தது. கத்திக் கொண்டே கையில் கிடைத்தவற்றைத் தூக்கிப் போட்டு உடைக்க ஆரம்பித்திருந்தார் மனிதர்.

துளசி விரைந்து அவரது அறைக்கதவை திறக்க, சோனியாவும் உள்ளே நுழைந்தாள். அவர்களின்
மேல் தட்டைத் தூக்கியெறிந்திருந்தார். அது துளசியின் நெற்றியில் பட்டுத் தெறிக்க, லேசாய் வீங்கத் தொடங்கியது.

“ப்பா... ஒன்னும் இல்ல பா. ஒன்னும் இல்ல!” என்றவள் அவரை அணைத்து சமாதானம் செய்ய முயல, “துளசி... துளசி!” எனக் கத்தினார் மனிதர். சோனியா ஒருபுறம் அவரைப் பிடிக்க, சந்தோஷ் அறைக்குள்ளே நுழையாது அதிர்ந்தவாறே நடப்பதை நோக்கினான்.

சந்தோஷ் புறம் திரும்பிய கண்ணப்பன், “போகச் சொல்லு... அவனைப் போக சொல்லு துளசி! போ!” என அவர் கத்த, “சீனியர் ப்ளீஸ், கதவைக் க்ளோஸ் பண்ணுங்க... ப்ளீஸ்!” என அவள் பதற, சந்தோஷ் பட்டென அந்தக் கதவை மூடியிருந்தான். சில நிமிடங்களில் கண்ணப்பனது சப்தம் அடங்கிப் போக, பெண்கள் இருவரும் நிம்மதியடைந்தனர்.


அவனுக்கு நடப்பது எதுவுமே புரியவில்லை. என்ன ஆனது இந்த மனிதருக்கு என்ற கேள்வியே பிரதானமாய் இருந்தது. அவன் அங்கேயே நிற்பதைப் பார்த்த வசுமதி சங்கடமாய் நோக்கினார்.

“தம்பி, அது ஒன்னும் இல்ல. துளசி அப்பாவுக்கு உடம்புக்கு முடியலை, அதான் இப்படி நடந்துக்கிறாரு. நீங்க வந்து காஃபியைக் குடிங்க!” எனக் குளம்பியை அவனிடம் நீட்டினார். முகத்தில் எதையும் காண்பிக்காதவாறு மீண்டும் இருக்கையில் அமர்ந்தவனின் சிந்தை முழுவதும் கண்ணப்பனின் கத்தல்களும் கூச்சலும்தான் நிறைந்து கிடந்தன.

சில நிமிடங்களில் பெண்கள் இருவரும் வெளியே வந்தனர். சந்தோஷ் முகத்தைப் பார்க்காத துளசி அறைக்குள் நுழைந்து உடை மாற்றச் சென்றுவிட்டாள். சோனியா அவனிடம் என்ன பேசுவது எனத் தெரியாது தயங்கி தாயுடன் நின்றுவிட்டாள்.

“சீனியர், எங்கம்மா காஃபி எப்படி இருக்கு? ஒரு வார்த்தை கூட சொல்லாம குடிச்சு முடிச்சுட்டீங்களே!” சில நிமிடங்களில் சின்ன சிரிப்புடன் அவனருகே வந்து அமர்ந்த துளசியை சந்தோஷ் ஆச்சரியமாகப் பார்த்தான். சற்று முன் நடந்த அனைத்தும் கனவோ என்பது போலிருந்தது அவளது நடவடிக்கை.

“ம்மா... எனக்கு காஃபி!” என மகள் கேட்டதும் வசுமதி அவளுக்கும் குளம்பியைத் தர, அதை வாங்கி நிதானமாகப் பருகினாள். வசுமதி வேலையிருப்பதாய் நகர்ந்துவிட்டார்.

“சோனி, போ... போய் படிக்கிற வேலை இருந்தா பாரு!” என்ற தமக்கையின் வார்த்தைக்கு மறுவார்த்தை பேசாது சோனியா நகர்ந்திருக்க, “ஹம்ம்...மாடிக்குப் போகலாம் வாங்க சீனியர்...” என முன்னே நடந்தவளைப் பின்பற்றி சந்தோஷ் நடந்தான்.

மாடியேறியதும் கையைக் கட்டி நின்று சுற்றும் முற்றும் வேடிக்கைப் பார்த்தத் துளசியை வியக்காமல் இருக்க முடியவில்லை சந்தோஷினால். அவள் அமைதியாய் இருக்க, இவனே தொடங்கினான்.

“ஏன் துளசி சொல்லலை?” சந்தோஷ் ஆதங்கமாய்க் கேட்க, அதிராமல் அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள்.

“உன்கிட்ட தான் கேட்குறேன். அப்பாவுக்கு உடம்புக்கு சரியில்லைன்னு சொல்லி இருக்க. பட், இப்படி இருக்காருன்னு சொல்லவே இல்லையே!” என ஆற்றாமையுடன் கேட்டான்.

“ஹம்ம்... என்ன சொல்ல சொல்றீங்க சீனியர். என் அப்பா மனநல பாதிக்கப்பட்டவருன்னா?” என வினவியவள், “தெரியலை, யார்கிட்டேயும் சொல்லி அனுதாபம் தேடிக்க விருப்பம் இல்ல. அதான் சொல்லலை, தோணவும் இல்ல!” என்றாள் பிரித்தரிய முடியாதக் குரலில். அவள் மனதிலிருப்பதை சந்தோஷால் இனம் கண்டறிய முடியவில்லை.

“உங்களை நான் வீட்டுக்குள்ள கூப்பிடாம வெளிய வச்சே பேசி அனுப்புறதுக்கு அப்பாதான் காரணம் சீனியர். அவருக்குப் புதுசா வீட்டுக்குள்ள யார் வந்தாலும் பிடிக்காது. கத்துவாரு, கையில் கிடைச்சதைத் தூக்கியெறிவாரு. அதனாலே யாரையும் உள்ளே விட மாட்டோம். எல்லார்கிட்டயும் இந்த விளக்கத்தை சொல்லீட்டு இருக்க முடியாது. சோ, யார் என்ன நினைச்சாலும் பரவாயில்லைன்னு வாழ்ந்துட்டு இருக்கோம்!” என்றாள் உதட்டில் மென்னகையுடன். சந்தோஷ் அவளை அமைதியாகப் பார்த்தான்.

“இத்தனை நாள் வீட்டுக்குள்ள விடாதவ எதுக்கு இப்போ கூட்டீட்டு வந்தான்னு யோசிக்குறீங்களா?” கேள்வி கேட்டுவிட்டு அவளே தொடர்ந்தாள்‌.

“இதுதான் என் நிலைமைன்னு வார்த்தையால சொல்றதை விட உங்களைக் கூட்டீட்டு வந்து காட்டுறது சரின்னு தோணுச்சு. அதான் கூட்டீட்டு வந்தேன். அப்பா நாலு வருஷமா இப்படித்தான் இருக்காரு. பிராபப்லி குடும்பத்தை நான்தான் பார்த்துக்கிறேன். சோனியா படிச்சுட்டு இருக்கா, அம்மா வீட்டைப் பார்த்துட்டு, அப்பாவையும் பார்த்துப்பாங்க. என்னோட சம்பாத்தியத்துலதான் குடும்பமே ஓடீட்டு இருக்கு”

“ஹம்ம்... இதுல இருந்து என்னால வெளியேற முடியாது. இவங்க என் குடும்பம், என் பொறுப்பு. அப்பாவுக்கு இப்படியானதும் என்ன செய்யன்னு தெரியாம அம்மா தவிச்சுப் போய் நின்னப்ப, நான் பார்த்துக்கிறேன்னு ஏத்துக்கிட்ட பொறுப்பு. அதை எந்த காலத்துலயும் என்னால விட முடியாது. அவங்களை கஷ்டத்துல விட்டுட்டு மேரேஜ் பண்ணிக்கிற அளவுக்கு கொடூரமானவளா இதுவரைக்கும் மாறாம இருக்கேன்!” என்றவளின் உதடுகளில் விரக்திப் புன்னகை. சந்தோஷ் அவளைத் தவிப்பாய் பார்த்தான்.

“ப்ம்ச்... சென்டிமென்ட்லாம் வேணாம் சீனியர். என்னால முடிஞ்ச அளவுக்கு என் குடும்பத்தைப் பார்த்துப்பேன். அப்பா கொஞ்சம் கொஞ்சமாக க்யூர் ஆகிட்டு வர்றாரு. அவர் முழுசா குணமாக ஒரு வருஷமாகலாம், இல்ல ரெண்டு, மூனு, ஏன் ஐஞ்சு வருஷம், அதுக்கு மேலயும் கூட ஆகலாம். அதுவரைக்கும் அவரைப் பார்த்துக்கணும்ன்ற கடமை எனக்கு இருக்கு. தலையெழுத்தேன்னு செய்றேன்னு நினைக்காதீங்க, சின்ன வயசுல இருந்தே எங்களை அவ்வளோ பாசமா வளர்த்து, எங்களோட தேவை ஒவ்வொன்னையும் பார்த்துப் பார்த்து செஞ்ச மனுஷனுக்கு நான் திருப்பி செய்றேன், அவ்வளோதான். சோனியாவுக்குப் படிப்பு முடிஞ்சு அவ வேலைக்குப் போக ஸ்டார்ட் பண்ணிட்டா, பினான்ஷியலா நாங்க ஸ்டேபிள் ஆகிடுவோம். ஹம்ம், சின்ன வயசுல இருந்தே எங்களுக்குன்னு ஒரு சின்ன ஹோட்டல், அதுல வர்ற வருமானம்னு தேவைக்கு கொஞ்சம் அதிகமாகவே வாழ்ந்தோம். இப்போ, அப்படி இல்லையே. அதனால இந்த மாதிரி சிட்சுவேஷனை சமாளிக்க முடியாமல் திணறீட்டு இருக்கோம்!” என்றாள் உண்மையாய்.

“இதுவும் கடந்து போகும்னு நினைச்சுக்குவேன். இன்னும் கொஞ்ச நாள்ல அப்பா சரியாகிட்டார்னா, எல்லாமே பழையபடி ஆகிடும். அவர் எங்களை சந்தோஷமா பார்த்துப்பாரு. சின்ன வயசுல இருந்த மாதிரி அவர்கிட்ட சலுகையாய் கொஞ்சணும், அது இது வேணும்னு கேட்டுக்கலாம்னு மனசு நம்புது. எவ்வளவோ கஷ்டத்தைத் தாண்டி வந்துட்டேன். எல்லாமே ஒரு அனுபவம்தான். அப்பா சரியாகி இதெல்லாம் வெறும் நினைவுகளா மாறும்போது என்னை நினைச்சு நானே சிரிக்கலாம், பெருமைப்படலாம், வருத்தப்படலாம், எதுவேணா நடக்கலாம். இல்ல, அப்பா சரியாகாமலே கூடப் போகலாம். அது எதுவும் என் கையில இல்ல சீனியர், நம்பிக்கைல தான் வாழ்ந்துட்டு இருக்கேன்!” என்றவளின் குரல் லேசாய் கமறியது. எத்தனை நாட்கள் தந்தை இப்படியே இருப்பார் என்ற கவலை அவளை அரிக்கத் தொடங்கி இருந்தது.

நொடியில் தன்னை சுதாகரித்தவள், “இதுதான் சீனியர் நான், என்னோட குடும்பம், என் பொறுப்புன்னு வாழ்ந்துட்டு இருக்கேன். அப்படி இருக்கும்போது எந்த வகையிலும் நான் உங்க வாழ்க்கைல நுழைய முடியாது. ஐ யம் ஹெல்ப்லெஸ்! எப்போ உங்க மனசுல இருக்கதை நீங்க சொன்னீங்களோ, அப்பவே உங்ககிட்டே இருந்து தள்ளித்தான் இருக்கணும்னு நினைச்சேன். பட், என்னோட சூழ்நிலை உங்ககிட்ட உதவி கேட்டு, வேலைக்கு சேர வச்சிடுச்சு. அப்போ எல்லாம் கில்ட்டா இருக்கும் சீனியர், உங்களை நான் யூஸ் பண்ணிக்கிறேனோன்னு. மனசுலயே சாரி சொல்லிப்பேன். இப்பவும் உங்ககிட்ட சாரி கேட்டுக்குறேன். எதாவது ஒரு வகையில உங்களுக்கு நான் நம்பிக்கை கொடுத்திருந்தா, என்னை மன்னிச்சிடுங்க!” என்றாள் விழிகளில் நீர் திரையிட.

“ச்சு... துளசி... என்ன, அதெல்லாம் ஒன்னும் இல்ல!” என்ற சந்தோஷ் அவளது கண்ணீரைத் துடைத்துவிட்டான்.

“ஏன் துளசி, எப்பவுமே சிரிச்சிட்டே இருப்பீயே! உனக்கு இவ்வளோ கஷ்டம் இருக்குன்னு என்கிட்ட ஷேர் பண்ணத் தோணலையா? நான் உன்கிட்ட ப்ரபோஸ் பண்ணதை விடு, ஒரு ப்ரெண்டா எந்த வகையிலும் நான் உனக்கு உதவ மாட்டேனா? என் மேல அவ்வளோ நம்பிக்கை உனக்கு?” என்றவன் குரலில் வருத்தம் மேவியிருந்தது.

“சீனியர், அது... அது எந்த வகையிலும் நல்லா இருக்காது. இது என்னோட ரெஸ்பான்சிபிலிட்டி, என்னால முடியும்னு தானே கடவுள் கொடுத்திருக்காரு, தாங்கிக்கிற மனவலிமை என்கிட்ட இருந்தது, இருக்கு. ஒருவேளை என்னால முடியலைன்னா, கண்டிப்பா உங்ககிட்ட தான் ஹெல்ப் கேட்பேன், அப்போ உங்களால முடிஞ்சதை செய்ங்க!” என்றாள் சமாதானமாய்.

“துளசி, உனக்குன்னு பொறுப்பு இருக்கு, எத்தனை நாள் தனியா சுமப்ப நீ. அதை மொத்தமா வாங்கிக்க முடியலைனாலும், நமக்கு கல்யாணமானப் பின்னாடி என்னால அதை ஷேர் பண்ணிக்க முடியும். இப்போ செய்ற உதவியை அப்போ இந்த வீட்டுக்கு மருமகனாவும், மகனாவும் உரிமையா என்னால செய்ய முடியும்!” என்றான் தன் முடிவில் உறுதியாக.

அவனை வேதனை பொங்கப் பார்த்தாள் துளசி. “உங்களோட மனசு ரொம்ப பெருசு. ஆனால், உங்க வீட்ல அப்படி இருக்கணும்னு அவசியம் இல்ல. உங்க பேரண்ட்ஸ்க்கு நம்ம கல்யாணத்துல இஷ்டம் இல்லை. இது எந்த வகையிலும் நடக்காத விஷயம்...” என்றாள் அவனுக்குப் புரிய வைத்திடும் நோக்கோடு.

“துளசி, நடக்காததுன்னு எதுவும் இல்ல. நம்ம நினைச்சா ஃபேமிலியைக் கன்வின்ஸ் பண்ணலாம்!”

“அப்போ ஏன் சீனியர் உங்க அம்மாவைக் கன்வின்ஸ் பண்ண முடியாம காலைல என்கிட்ட வந்து நின்னீங்க?” எனக் கேட்டவள், “சரி, கட்டாயத்தின் பேர்ல அவங்க சம்மதம் சொன்னாலும் கடைசி வரை அவங்களுக்கும் எனக்கும் மனஸ்தாபம் இருந்துட்டே இருக்கும். கல்யாணம்ன்றது நீங்களும் நானும் மட்டும் முடிவு பண்ற விஷயமில்லை. ரெண்டு குடும்பம் சேருற விஷயம். எந்த வகையிலும் ஒத்து வராததை செஞ்சு, எல்லார் மனசையும் கஷ்டப்படுத்த வேணாம். நீங்க உங்கம்மா சொல்ற பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கோங்க!” என்றவளைப் பார்த்து முடியாது எனத் தலையை அசைத்தவனை என்ன செய்வது எனத் தெரியாது வேதனையாய் நோக்கினாள்.

“சரி, உங்கம்மா கடைசிவரை சம்மதம் சொல்லலைன்னா, என்ன பண்றதா உத்தேசம். வெறும் ஐஞ்சாறு வருஷம் தெரிஞ்ச எனக்காக உங்களைப் பெத்து வளர்த்த அம்மா, அப்பாவைத் தூக்கிப் போட்டுட்டு வர ரெடியாகிட்டீங்க போல? எனக்குத் தெரிஞ்ச சந்தோஷ் யார் மனசையும் கஷ்டப்படுத்த மாட்டாரு!” என்றாள் அழுத்தமாய்.

“அடுத்தவங்களுக்காகப் பார்த்துப் பார்த்து நான் நேசிக்கிற பொண்ணை இழக்க விருப்பம் இல்ல!” என்றவனைக் கோபமாகப் பார்த்தவள், “நீங்க நேசிச்சா மட்டும் போதாது. நான் உங்களை வெறும் ஃப்ரெண்டா மட்டும்தான் பார்த்தேன், இனிமேலும் என் மனசுல அந்த எண்ணம் மட்டும்தான் இருக்கும்!” என்றாள் கோபமாக‌.

“துளசி!” எனப் பேச வந்தவனை இடை நிறுத்தியவள், “உங்க வீட்ல இருக்கவங்க எதிர்பார்ப்புக்கு நாங்க என்னைக்கும் வர மாட்டோம் சீனியர். யாருக்கும் இஷ்டமில்லாம ஒரு கல்யாணம் பண்றதுக்கு உங்கப் பெத்தவங்க விருப்பப்படி கல்யாணம் பண்ணி, அவங்களையாவது சந்தோஷப்படுத்துங்க. ஏன்னா, இப்போ உணர்ச்சி வேகத்துல நீங்க பேச, நானும் சம்மதம் சொன்னாலும் நாளைக்கு நான் எங்க வீட்டுக்கு எது செய்றதா இருந்தாலும் உங்க அம்மாகிட்ட அது போகும். யார்கிட்டேயும் பெர்மிஷன் வாங்கி என் குடும்பத்தைப் பார்த்துக்கிற நிலைமைக்கு வர்றதுக்குப் பதிலா, நான் இப்படியே இருந்துட்றதுதான் பெட்டர்.
அதுக்காக நான் மேரேஜ் பண்ணாமலே இருந்துடுவேனோன்னு கவலைப் படாதீங்க. ஒரு ஐஞ்சு வருஷமோ? இல்லை பத்து வருஷமோ எல்லாம் சரியானப் பின்னாடி என் தலைல என்ன எழுதியிருக்கோ, அது நடக்கும். அப்போ அதை நான் அக்செப்ட் பண்ணீட்டு என் வாழ்க்கையை வாழ்ந்துட்டுப் போறேன்!” என்றவளின் பேச்சில் கோபமும் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறானே என்ற ஆற்றாமையும் நிரம்பி வழிந்தன.
சந்தோஷ் அவள் வார்த்தையின் கடுமையில் முகம் கசங்கி விழிகள் கலங்கிப் போய்ப் பார்த்தான். அதில் இவளுக்கும் வலித்திருக்க வேண்டும்.

முகத்திலிருந்த கடுமை மறைய அவன் கைகளைப் பிடித்தாள்.
“நம்ம ஆசை படுற மாதிரியே எல்லாருக்கும் வாழ்க்கை அமைஞ்சுட்றது இல்ல சந்தோஷ். நம்ம அதிகமா நேசிச்சவங்களை நம்ம வாயாலே வேணாம்னு தூக்கிப் போட வச்சு வேடிக்கைப் பார்க்கும் இந்த வாழ்க்கை!” என்றவளின் குரல் லேசாய் உடைந்து போனது.

இடறிய குரலை சரிசெய்ய விழையாதவள், “அதனால உங்க மனசை மாத்திக்கப் பாருங்க. எனக்காக ஐஞ்சு வருஷம், பத்து வருஷம் வெயிட் பண்ணுவேன்னு சொல்லாதீங்க. அதெல்லாம் வார்த்தைக்கு ஒத்து வரலாம். ஆனால், நிஜத்துல வாழ்ற வாழ்க்கை வேற. உங்களோட ஒவ்வொரு முடிவும் உங்க குடும்பத்தையும் அதிகமாக பாதிக்கும். நான் சொல்றது இப்போ உங்களுக்கு கஷ்டமா இருக்கலாம். ஆனால், ஒரு பத்து வருஷம் கழிச்சு யோசிச்சா, சரியா தோணும். புரிஞ்சுப்பீங்கன்னு நம்புறேன்!” என்றவள், “நான் பார்த்த நல்ல ஆம்பளைங்கள்ல நீங்களும் ஒருத்தர். உங்களோட மனசுக்கு என்னை விட நல்ல பொண்ணா அமைவா‌‌. நீங்க எப்பவுமே நல்லா இருக்கணும்னு நான் வேண்டிக்கிறேன். இப்படி பேசிட்டாளேன்னு கோபம் இருக்கலாம், அது கொஞ்ச நாள்ல போய்டும். ஒரு ப்ரெண்டா எப்பவும் உங்களுக்காக இருக்கேன், இருப்பேன்!” என்றவள் வேதனையான புன்னகையுடன் படிகளில் இறங்கத் தொடங்கினாள்.

இதற்கு மேலும் விவாதிக்க எதுவுமில்லை என்கிற எண்ணம் அவளுக்கு. சந்தோஷ் துளசி பேச்சிலே நின்றுவிட்டான். அவளது சூழ்நிலை புரிந்தாலும், அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. ஏனோ இந்தப் பெண் தனக்கில்லை என்பதை மனம் ஏற்றுக்கொள்ளாது சண்டித்தனம் செய்தது. அவனால் வேறு எதுவும் செய்ய முடியும் என்று தோன்றவில்லை. இரண்டு பக்கமும் அவனது விருப்பத்திற்கு செவி சாய்க்கவில்லை என்ற எண்ணத்தில் விழிகள் கலங்கி உள்ளம் துடிக்க, போகும் அவளை வெறுமையாய்ப் பார்த்தான். அவளையும் குற்றவாளி கூண்டில் ஏற்ற காதல் கொண்ட மனது விழையவில்லை.

‘யூ டிசர்வ் மோர் துளசி!’ என்று அவன் உதடுகள் முணுமுணுக்க, விரக்தியாய்ப் புன்னகைத்தான். எதுவும் பேசாது விறுவிறுவென வசுமதியிடம் கூற உரைக்காது கிளம்பிவிட்டான்.

ஜன்னல் கம்பி வழியே அவனைப் பார்த்த துளசி, “சாரி சீனியர்‌...” என்றுவிட்டு விழிகளில் வழிந்த நீரைத் துடைத்துக் கொண்டாள். மனம் முழுவதும் பாரமாய் இருக்கத் தலையணையில் முகம் புதைத்து அதை ஈரம் செய்தாள். தன் மீது இந்த ஆடவன் வைத்த எதிர்பார்ப்பில்லாத நேசத்தை உடைத்துவிட்டோம் என மனம் ஊமையாய்க் கண்ணீர் வடித்தது.

“துளசி, அந்த தம்பி கிளம்பிட்டாரா?” எனக் கேட்டுக் கொண்டே அறைக்குள் நுழைந்தார் வசுமதி.

அவரை நிமிர்ந்து பார்க்காதவள், “ஹம்ம்... போய்ட்டாரு மா!” என்றாள் தெளிவற்ற குரலில்.

“வெளிய வேலை எதுவும் இருக்கா துளசி? இந்த கேஸ் அடுப்புல ஏதோ அடைச்சுகிடுச்சு. பத்த வச்சா, முடியலை. நைட்டுக்கு சமைக்கணும், அதை என்னென்னு கடைக்கு எடுத்துட்டுப் போய் பார்த்துட்டு வர்றீயா?” என அவர் வினவ, “ஃபைவ் மினிட்ஸ் மா. வர்றேன், போங்க!” என்றவள் எழுந்து முகத்தைக் கழுவிவிட்டுத் துப்பட்டாவை எடுத்து கழுத்தைச் சுற்றி அணிந்து கொண்டாள்.

வசுமதி அடுப்பைத் தூக்கிக்கொண்டு வர, “அக்கா, ரோப் வச்சு கட்ட வேணாம். நான் ஃப்ரீயா தான் இருக்கேன். நானே வரேன்!” என்ற சோனியா தமக்கையின் பின்னே அமர்ந்தாள். துளசியும் எதுவும் பேசாது தலையசைக்க இருவரும் வாகனத்திலேறி நகர்ந்தனர்.

சில நொடிகள் கடந்திருக்க, “க்கா... நான் நீங்கப் பேசுனதைக் கேட்டுட்டேன் கா!” என்றாள் சின்ன குரலில். துளசி கரத்தில் ஒரு நொடி வாகனம் தடுமாற அப்படியே நிறுத்திவிட்டாள்.

பின்னிருந்து துளசியை அணைத்த சோனியா, “சாரி கா, உனக்கு நாங்க ரொம்ப பாரமா இருக்கோமா கா?” என்றாள் குரலில் வேதனையுடன். விழிகள் கலங்கின சின்னவளுக்கு.

“ச்சு... என்ன பேச்சு சோனி இது?” என அதட்டிய துளசியின் குரல் தவித்துப் போனது.

“அக்கா, நான் அடுத்த வருஷம் படிச்சு முடிச்சதும் வேலைக்குப் போய் அம்மா, அப்பாவைப் பார்த்துக்கிறேன். உனக்கு. ஒரு நல்ல பையனா பார்த்துக் கல்யாணம் பண்ணி வைக்கிறேன் கா!” என்றாள் சோனியா. தங்கையின் பேச்சில் துளசிக்கு இத்தனை நேரமிருந்த பதற்றம் தணிய, வாகனத்தை இயக்கினாள்‌. உதடுகளில் புன்னகை எட்டிப் பார்த்தன.

“சரிங்க பெரிய மனுஷி, முதல்ல அதுக்கு நீங்க படிச்சு முடிக்கணும்!” என்றாள் கிண்டலாய். உடல் கொஞ்சமே கொஞ்சம் தளர்ந்தது. உதடுகளில் மெது மெதுவாய் புன்னகை ஏறின.

“அக்கா, சிரிக்காத கா. நான் சொல்றதை செய்வேன்!” என சின்னவள் முறுக்கிக் கொள்ள, இவள் மனமுவந்து சிரிக்க, சந்தோஷ் இருவரது நினைவிலிருந்தும் பின்னகர்ந்திருந்தான். அடுப்பை பழுது நீக்கிவிட்டு, ஒரு கடையில் பனிக்கூழை வாங்கி இருவரும் ருசித்தனர்.

“அக்கா, நான் எதையும் அம்மாகிட்ட சொல்ல மாட்டேன் கா. நீ கவலைப்படாதே!” என்று சோனியா கூற, துளசி புன்னகைத்தாள். கொஞ்சம் பாரம் குறைந்ததை போல மனம் உணர்ந்தது. பின் இருவரும் வீட்டிற்குச் சென்று சேர்ந்திருந்தனர்.

தூறும்...
 
Top