• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,104
Reaction score
3,173
Points
113
தூறல் – 3

இளவேந்தனுக்கு அன்றைய நாள் அலுவலகத்தில் ஒருவாறாக கழிந்திருந்தது. வேலையில் முழு கவனத்தை செலுத்த முயன்றாலும் விழிகள் அவ்வப்போது துளசியை வெறித்தன. ஏனோ அவளின் அலட்சியமும் இதழ் சுழிப்பும் இவனது தன்முனைப்பை தட்டிவிட்டிருந்தது. இயல்பிலே தன்னகங்காரம் கொண்டவனுக்கு இந்தப் பெண்ணின் நடவடிக்கைகளில் ஏக எரிச்சல் படர்ந்தது.

இங்கே தனக்கு கீழே தானே இவள் வேலை செய்யப் போகிறாள் என மனதில் சிறு எண்ணம் தோன்ற, உதடுகளில் கோணல் சிரிப்பு படர்ந்தது. அலுவலக நேரம் முடிந்து அனைவரும் கிளம்ப யத்தனிக்க, அஸிம் அவனின் முன்பு வந்து நின்றார்.

“ஓகே அஸீம், நாளைக்கு மீட் பண்ணலாம். நீங்க இப்போ லீவ் ஆகுங்க!” என்றவனும் இருக்கையிலிருந்து எழ, அவரும் சிறு தலையசைப்புடன் நகர்ந்திருந்தார்.

மகிழுந்து சாவியைக் கைகளில் சுற்றிக்கொண்டே வெளியேறி தன் வாகனத்தை உயிர்பித்தான் இளவேந்தன். அவனுக்கு சற்றே தள்ளி துளசியின் கையைப் பிடித்துக்கொண்டு நின்றிருந்தான் சந்தோஷ். இருவரும் ஏதோ தீவிரமாகப் பேசிக் கொண்டிருந்தனர்.

“துளசி ப்ளீஸ், இன்னைக்கு மட்டும் டின்னர் போகலாம். நானும் எவ்வளோ நாளா உன்கிட்ட கேட்குறேன். இன்னைக்கு உன் பெர்த்டே, சோ செலிபிரேட் பண்ணலாம்...” என்ற சந்தோஷின் குரல் மன்றாடியது. அவனை அத்தனை சங்கடத்துடன் பார்த்தாள் துளசி. அவளால் அந்த அழைப்பை ஏற்க முடியவில்லை. ஏனோ காதலை நிராகரித்தப் பின்னே இருவரது கரங்களும் நட்பாய் இணைந்திருந்தாலும், இவளால் அவனுடன் அதற்கு மேலும் ஓரடி நெருங்கிப் பழகிட முடியவில்லை. எங்கே தான் இயல்பாக பேசும், பழகும் விதம் அவனுக்கு நம்பிக்கையை விதைத்துவிடுமோ என்ற அச்சம் துளசியை நிதானமாய் யோசித்து செயல்பட வைத்திருந்தது.

“சீனியர்... சாரி. நான் உங்களோட இப்போ வர முடியாது, அம்மா ஈவ்னிங் வெளியப் போகலாம்னு சொன்னாங்க. சோ, ஐ நீட் டு கோ...” தயக்கத்துடன் உரைத்தவளைப் பார்த்த சந்தோஷின் கரங்கள் தளர, தனது பிடியைத் தளர்த்தினான்.

“ஓகே துளசி, நீ போ...” என்றவன் எதுவும் பேசாது தனது மகிழுந்தில் ஏற, துளசி அப்படியே நின்றாள். சந்தோஷ் மகிழுந்தை இயக்கினாலும் நகராது அங்கேயே நின்றான். அவள் நகர்ந்ததும் தான் எப்போதும் அவன் செல்லுவது வழக்கம். அவள் கூறியது பொய் என இருவருமே அறிவர். ஆனாலும் அவளது சூழ்நிலை அப்படி பேச வைத்திருந்தது‌.

தனது பேச்சில் செயலில் துளசியின் முகம் வாடியதும் இவனது கோபமெல்லாம் வடிந்து போனது. பிறந்த நாளன்று இந்தப் பெண்ணை படுத்தி எடுக்கிறோம் என்பது மனதிற்குப் புரிய, ஜன்னல் வழி எட்டிப் பார்த்தவன், “துளசி, ஒரு ஐஸ்க்ரீம் சாப்பிடலாமா?” என்றான் சமாதானமாய். அந்தக்குரல், தான் அவளைப் புரிந்தகொண்டது என்பதை உணர்த்த, இவளது உதடுகள் புன்னகையை சிந்தின.

“போகலாம் சந்தோஷ்!” என்றாள் உணர்ந்து. எப்போதாவது அரிதாக அழைக்கும் அழைப்பு இன்று இவனைக் குளிர்வித்திருந்தது. முகம் முழுவதும் மலர்ந்து அகத்தைக் காண்பித்துக் கொடுத்தது.

“ஷ்யூர்...” என்ற சந்தோஷ் மகிழுந்தை முன்னே செலுத்த, துளசியும் நிம்மதி பெருமூச்சுடன் அவனைத் தொடர்ந்தாள்.

தூரத்திலிருந்து கவனித்தாலும் இளவேந்தனுக்கு அவர்களது உரையாடல் தெளிவாய் விழவில்லை. இருவரும் ஒன்றாக அகன்றதும் அவனும் வீட்டிற்கு செல்ல வாகனத்தை உயிர்ப்பித்தான்.


மூவரும் ஒரே பிரதான சாலையில் பயணிக்க, பத்து நிமிடங்களில் துளசியும் சந்தோஷூம் அருகிலிருந்த உணவகம் ஒன்றிற்குள் நுழைய, இவன் அவர்களைக் கடந்து சென்றுவிட்டான். பார்வை ஒருமுறை அவர்களைத் தழுவி மீளாமல் இல்லை.

இளவேந்தன் தன் வீட்டு வாயிலைக் கடந்து உள்ளே செல்ல, ஆள் அரவமின்றி காணப்பட்டது. புருவத்தை சுருக்கியவாறு வாகனத்திலிருந்து இறங்கி இரண்டு எட்டுகள் வைத்ததும், படபடவென பட்டாசுகள் பொரிய, அந்த இடமே வெள்ளைப் புகையால் சூழத் தொடங்கியது. அவன் இதை எதிர்பாராது திகைக்க, “மாமா‌... வெல்கம்!” என பத்து வயது க்ருத்தவ் ஓடி வந்தான்.

அவனைக் கண்டதும் இவனது புன்னகை நீள, “க்ருத்தவ்... எப்போ வந்தீங்க?” என அவனைக் கைகளில் தூக்கினான்.

“மாமா...” என சிரிப்புடன் தயங்கி தயங்கி வந்தாள் எட்டு வயது அனாமிகா. அவளது கைகளில் சிறிய விளையாட்டு இசைக் கருவி ஒன்றிருக்க, “உனக்குதான் மாமா இது!” என்றாள் பற்கள் தெரிய புன்னகைத்து‌. இதைக் கொடுக்கும்போது அவனது முகம் எப்படி இருக்கும் எனக் காண குழந்தை விழிகளை சிமிட்டாது அவனை நோக்க, இளவேந்தன் முகத்தில் அத்தனை வியப்பு.

“அனு...” என்று ஆச்சரியப்பட்டவன் அதைக் கைகளில் வாங்கிக் கொண்டான்.

“தேங்க் யூ சோ மச் அனுகுட்டி...” எனக் குழந்தையின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான். அவளது முகம் பூவாய் மலர்ந்து போனது.

“உள்ள கூட வர விடாம அவனை வெளியே நிக்க வச்சுட்டீங்களா?” என சாம்பவி குழந்தைகளை அதட்டியபடியே வெளியே வந்தாள்.

“அக்கா, என்ன சர்ப்ரைஸ்? கூப்பிட்டாலே வர மாட்ட?” என்ற இளவேந்தன் அவளுடன் உள்ளே நடந்தான்.

“ஹம்ம்.‌‌.. நீ கூட தான் பெரிய பெரிய சர்ப்ரைஸ் தர்ற? பிஸ்னஸை பார்த்துக்க ஓகே செல்லிட்ட போல?” சாம்பவி தம்பியை சிரிப்புடன் நோக்க, தலையை மையமாய் அசைத்தான்.

“அதுக்காகத்தான் கிளம்பி வந்தியா நீ?” என இவன் மென்மையாய் முறைக்க, “பின்ன, இது பெரிய விஷயமாச்சே. காலையிலயே அம்மா கால் பண்ணி சொல்லிட்டாங்க‌. அதான் இவங்களுக்கு ஸ்கூல் முடிஞ்சதும் கூட்டீட்டு வந்துட்டேன்!” என்றவள் விறுவிறுவென முன்னே சென்றுவிட்டாள்.

திடீரென மின் இணைப்புத் துண்டிக்கப்பட்ட, இளவேந்தன் பார்வையை சுழற்றினான். ஒரு நிமிடத்தில் மின்விளக்குகள் எரியத் தொடங்க, “ஹே...!” என்ற கூச்சலுடன் மொத்த குடும்பமும் நடுகூடத்தில் கூடி அவனைப் பார்த்து நிற்க, சைந்தவி ஒரு அணிச்சலை எடுத்து வந்து வைத்தாள்.

“பெஸ்ட் விஷ்சஸ் ண்ணா!” என்று அவள் சிரிக்க, அத்தனை பேரின் செயலிலும் இவனது முகம் வெட்கத்தில் லேசாய் சிவந்தது‌.

“சைந்து...” என இவன் அதட்ட, “ஹாஹா... கிட்டார், வயலின்னு ஒருத்தன் சுத்தீட்டு இருந்தானே, அவனைப் பார்த்தீங்களா ப்ரோ?” என கத்தியை அவன் முன்னே நீட்டியவளின் குறும்பில் அனைவரும் புன்னகைக்க, வேந்தனின் முகம் இன்னுமே சிவந்தது.

“ஏய், என்னய்யா குடும்பமா சேர்ந்து என் மாப்பிள்ளையை கலாய்க்குறீங்களா?” அதியமான் வந்து இளாவைக் காப்பாற்றி அவன் தோளில் கையைப் போட்டான். அவனது மீசைக்கு அடியிலும் புன்னகை துடித்தது. அதை கவனித்தவன்,

“மாமா...” என அதட்டிவிட்டு, “இது யார் பார்த்த வேலை?” என உண்மையான கோபத்துடன் குரலை உயர்த்தினான்.

“ஹம்ம்... எல்லாருக்கும் சொல்லி வர வச்சது நம்ப நளினி பாட்டிதான்!” கிருத்தவ் குதித்துக்கொண்டே கூறினான்.

“அண்ணா..‌‌. அதுவா முக்கியம், கேக்கை வெட்டு!” என சைந்தவி உந்த,

“ஆமா கொழுந்தனாரே... கேக்கை வெட்டுங்க. இங்க ஒருத்தி வெய்ட்டிங்!” என ஆராண்யாவை முன்னகர்த்தினாள் தீக்ஷி.

“வெட்டு மாமா...” அனாமிகா துள்ள, க்ருத்தவும் முன்னே வந்து நிற்க, பெரியவர்களை முறைத்தவன் குழந்தைகளுக்காக அணிச்சலை வெட்டினான்.

மூவருக்கும் கொடுத்தவன் கத்தியை சைந்தவி கையில் முறைப்புடனே கொடுக்க, அதை அசட்டை செய்தவள் அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்தாள்.

“சந்தோஷமா இருக்கு டா. எங்க பிஸ்னஸ் பக்கமே வராம, சும்மா சுத்தீட்டு இருந்துடுவியோன்னு நினைச்சேன்!” மகிழ் இளவேந்தனைக் கட்டியணைக்க, அவன் குரல் உண்மையிலே மகிழ்ந்திருந்தது. சந்தனவேலைத் தவிர மொத்த குடும்பமும் அங்கேதான் குவிந்திருந்தனர்.

நளினி சமையல்காரர்களிடம் இரவு உணவை தடபுடலாக சமைக்க உத்தரவிட்டுக் கொண்டிருக்க, இளவேந்தன் குழந்தைகளுடன் அமர்ந்துவிட்டான்.

“மாமா‌... ஹாட் சாக்லேட் வேணும் எனக்கு!” வயதில் மூத்தவனான க்ருத்தவ் தொடங்க, “எனக்கு ஐஸ்க்ரீம் மாமா.‌‌..” என்ற அனாமிகாவை தொடர்ந்து, “மாமா ப்ளீஸ், எனக்கும்!” என்று ஆரண்யாவும் வர, மூவரும் அவனது முகத்தைப் பாவமாய் பார்த்தனர். அவர்களது செயலில் இவனது உதடுகள் விரிய, விழிகளை சுழற்றினான்.

“நோ கொழுந்தனாரே!” என்ற தீக்ஷி சாம்பவி, சைந்தவியுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாள். சாம்பவியும் பிள்ளைகளை கண்டிப்புடன் பார்க்க, இளவேந்தன் அவர்களைப் பார்த்து தலையை அசைக்கும் முன், “என் செல்ல மாமா இல்ல?” என்ற அனாமிகா அவனது மடிமீது ஏறி ஒரு கன்னத்தில் முத்தமிட, ஆரண்யா மறுகன்னத்தை எச்சில் செய்தாள். குழந்தைகளின் செயலில் நிச்சயமாக மறுக்க இயலாதவன், “லெட்ஸ் கோ...” என்றுரைக்கவும், குழந்தைகள் மூவரும் விறுவிறுவென வெளியே ஓடிச்சென்று அவனது மகிழுந்தருகே நின்றனர்.

“டேய், நைட் டைம்ல ஐஸ்க்ரீம் வேணாம் டா!” சாம்பவி கூற, “ஒன் டே தானே. ஹாட் வாட்டர் குடிச்சுக்கலாம்!” என்றவன் அவ்வளவுதான் என் பேச்சு என்பது போல வெளியேற, சைந்தவியும் அவனுடன் வந்தாள்.

“அதென்ன அவங்களுக்கு மட்டும் ஐஸ்க்ரீம்? எனக்கும் வேணும்!” என சட்டமாய் முன்பக்க கதவைத் திறந்து ஏறிய தங்கையைப் பார்த்தவனால் கோபத்தை இழுத்துப் பிடிக்க முடியவில்லை. அவளது தலையில் லேசாய் தட்டிவிட்டு வாகனத்தை இயக்கினான்.

“ஷப்பா... உன் கோபம் போய்டுச்சா?” என சின்னவள் கேட்க, அவளைத் திரும்பி பார்த்தான்.

“ப்ம்ச்... கோபம் போய்டுச்சுன்னு தெரிஞ்சு இருந்தா கூட வந்திருக்கவே மாட்டான். சரியான உம்முனா மூஞ்சு ப்ரோ நீ...” என அவள் சடைக்க, இவனது முறைப்பு பெரிதானது.

“சரி... சரி, சமாதானம். ரோட்டை பார்த்து ஓட்டு ண்ணா...” என சைந்தவி இறங்கி வர, இளவேந்தன் வாகனத்தை
ஒரு உணவகத்தின் முன்னே நிறுத்தினான்.

சிறியவர்கள் ஒரு பனிகூழ் என ஆரம்பித்து ஒரு நீண்ட நெடிய பட்டியலைத் தயாரிக்க, சைந்தவி அவர்களை அதட்டி உருட்டி ஒன்றை மட்டும் வாங்கிக் கொடுத்தாள்.

“அங்க ஒன்னே ஒன்னுன்னு கெஞ்சீட்டு, இங்க அம்மாக்கள் இல்லன்னதும் லிஸ்ட் போடுவீங்களா? நோ, அலவ்ட் இல்ல?” என்றவள் தனது மருத்துவர் வேலையை அவர்களிடம் காண்பித்தாள். இளவேந்தன் எதையும் கூறாது சிரிக்க, “அத்தை இஸ் டூ பேட்!” என ஆரண்யா க்ருத்தவ் காதில் முணுமுணுக்க, “யெஸ், மாமா ஒன்லி குட் பாய்!” என அனாமிகாவும் கிசுகிசுத்தாள். அவர்கள் எத்தனை மெதுவாய் பேசியும் பெரியவர்களை அது அடையாமல் இல்லை.

“பார்த்தீயாண்ணா?” என சைந்தவி தமையனை முறைக்க, அவன் மீசைக்கு கீழே புன்னகை துடித்தது.

“எப்படித்தான் எல்லாரையும் க்ளவரா கவர் பண்றீயோ?” என அதற்கும் அவள் வேந்தனை வசைபாட, அவன் தோள்களைக் குலுக்கினான். சிரிப்பும் முறைப்புமாய் அவர்கள் உண்டுவிட்டு கிளம்பினர்‌.

பிரதான சாலையில் சற்றே வாகன நெரிசல் அதிகமாய் இருக்க, இளவேந்தன் மாற்றுப் பாதையில் மகிழுந்தை செலுத்தினான்.

“மாமா, பலூன்... பலூன்!” சாலையில் ஊதுபை விற்றுக் கொண்டிருந்தவரைப் பார்த்து ஆராண்யா கேட்க, மகிழுந்தை நிறுத்தியவன், மூவருக்கும் வாங்கிக் கொடுத்தான்.

“சார, நூத்தம்பது ரூவாய்க்கு ஐநூறு ரூவா தர்றீங்களே! சில்லரை இல்ல சார்!” என கடைக்காரர் கூற, தங்கையைத் திரும்பிப் பார்த்தான்.

“வரும்போது பர்ஸ் எடுத்துட்டு வரலை ண்ணா!” என்று அவள் உதட்டைப் பிதுக்கினாள்.

“ஹம்ம் சேஞ்ச் இல்ல, நீங்களே வச்சுக்கோங்க!” என்றவன் குழந்தைகளை அழைத்துக்கொண்டு நடந்தான். அந்தக் கடைக்காரர் அவனை ஆச்சர்யம் பொதியப் பார்த்தார்.

“அண்ணா, சேஞ்ச் வாங்கலையா நீ?” என்று சைந்தவி கேட்க, “இல்ல...” என்றான்.

“த்ரீ பிஃப்டி ண்ணா... அம்மா எனக்கு டெய்லி ஃபைவ் ஹண்ட்ரட் தான் பாக்கெட் மணி தர்றாங்க. நீ அதை அவருக்கு டிப்ஸ் மாதிரி கொடுக்கிற?” என முறைத்தாள்.

“சரி, சேஞ்ச் கொடுக்குற வரை அங்கே நிக்க முடியுமா? பக்கத்துல எங்கேயும் ஷாப் இல்ல. டைமாச்சுன்னு அம்மா கால் பண்ணிட்டே இருக்காங்க!” என இவர்கள் விவாதித்துக் கொண்டிருக்க, துளசி வாகனத்தைத் தள்ளிக்கொண்டு அவர்களைக் கடந்தாள்.

அவள் இவர்களைக் கவனிக்கவில்லை. ஆனால் இளவேந்தன் கண்களில் சரியாய்பட்டுத் தொலைத்தாள். இவனது புருவங்கள் ஏறியிறங்கின.

‘இன்னும் இவள் வீட்டிற்கு செல்லவில்லையா?’ என்ற கேள்வியைத் தாங்கி அவளைப் பார்த்தான்.

“ண்ணா... என்ன பார்வை அந்தப் பொண்ணு பின்னாடியே போகுது?” என சைந்தவி அவன் தோளை இடிக்கவும் சுயநினைவு பெற்றவன் அவளைத் திரும்பி யோசனையாய்ப் பார்த்தான். அவளது வார்த்தைகள் இவன் சிந்தையை அடையவில்லை.

“யார் வேந்தா அது, தெரிஞ்ச பொண்ணா, நான் போய் பேசவா?” எனக் கேட்டவளின் குரலில் குறும்பு எஞ்சியிருந்தது.

“சைந்து...” தமையன் குரலை உயர்த்த, “ப்ம்ச்‌... ஏதோ ஹெல்ப் பண்ணலாம்னு பார்த்தேன். வேணாம்னா போ..‌.” என்றவள் உதட்டை சுழித்துவிட்டு வாகனத்தில் ஏறி அமர்ந்தாள்.

இளவேந்தனுக்கு காரணம் வேண்டும். ஏன் இந்தப் பெண் தனியாக செல்கிறாள் எனத் தெரிந்து கொள்ள மனம் உந்தியது. அதற்குள்ளே துளசி மறைந்திருக்க, எதுவும் பேசாது வாகனத்தை இயக்கி அவள் செல்லும் பாதையிலே சென்றான்.

ஓரிடத்தில் நின்றிருந்தவளின் முகம் சோர்வில் களைத்திருந்தது. ‘இன்னும் ஒரு ட்வென்ட்டி மினிட்ஸ்தான். நடந்திடு துளசி!’ என எண்ணியவளின் கைகள் சிவந்திருந்தன‌. சந்தோஷூடன் சென்றுவிட்டு வீட்டிற்குத் திரும்பும்போது பாதி வழியிலே அவளது வாகனத்தின் எரிபொருள் தீர்ந்துவிட்டிருந்தது.

கையில் வெறும் நூறு ரூபாய் மட்டுமே இருந்தது. ‘நாளைக்குப் பஸ்ல வந்துடலாம். இப்போ கொஞ்ச தூரம் தானே, வீட்டுக்குப் போய்டலாம்!’ என எண்ணி பாதி தூரத்தைக் கடந்துவிட்டாள். வாகனத்தின் கனத்தை அவளால் தாங்கி தள்ள முடியவில்லை. எங்கேயும் அதை நிறுத்திவிட்டு செல்லவும் மனமில்லாது தள்ளியபடி நடந்தாள்‌. மூச்சு வேறு அதிகமாய் வாங்கியது. சிறுவயதிலிருந்தே இளைப்பு நோய் அவளுக்கு உற்றத் தோழி. அதனாலே முன்னெச்சரிக்கையாக எப்போதும் உறிஞ்சியைக் கைப்பையில் வைத்திருப்பது அவளது வழக்கம்.

மகிழுந்தின் ஜன்னல் வழியே துளசியைப் பார்த்தபடி இவன் வாகனத்தை நகர்த்த, “வேந்தா... சம்திங் ராங்!” என அவனை அவதானித்த சைந்தவி உரைக்க, கவனத்தை சாலையில் பதித்தவன் பத்து நிமிடத்தில் வீட்டை அடைந்திருந்தான்.

“சாப்பிட்ற டைம்ல ஐஸ்க்ரீம். இப்போ டின்னர் சாப்பிட மாட்டானுங்க!” என சாம்பவி தம்பியை முறைத்தாள்.

“விடு டி... நீயே ஆடிக்கொருதடவை வர்ற. புள்ளைங்க ஏங்கிடுவாங்க!” என்ற நளினி மகளை அதட்டியவாறே இளவேந்தனை பிடித்திழுத்து நாற்காலியில் அமர வைத்தார். அனைவரும் இரவுணவை உண்டு கொண்டிருந்தனர். சந்தனவேல் மகனைப் பார்த்து புன்னகைக்க, அதெல்லாம் அவனது சிந்தனையில் பதியவில்லை. ஏனோ இந்தப் பெண் துளசி அவனை நிம்மதியாய் அமர விடவில்லை. உள்ளே சிறு துளியாய் படர்ந்திருந்த உறுத்தல் கொஞ்சம் கொஞ்சமாக ஆழிப்பேரலையாக மாறிக் கொண்டிருந்ததை அவன் மட்டுமே அறிவான். சோர்வில் களைந்திருந்த முகமும், வலியில் சுருங்கிய விழிகளும் அவனது நிம்மதியைப் பறித்துவிட்டிருந்தது.

“இடியாப்பம் வைக்கவா? பூரி வைக்கவா டா?” எனக் கேட்ட நளினி மகனின் தட்டில் இரண்டையும் நிரப்ப, இவனது கால்சராயிலிருந்த அலைபேசியைத் தடவி எடுத்து காதுக்கு கொடுத்தான்.

“யா... பத்து நிமிஷத்துல வரேன் டா!” வராத அழைப்புக்கு பதில் அளித்தவன், “ம்மா... ஒரு பத்து நிமிஷத்துல வந்துட்றேன்...” என தனது இருசக்கர வாகனத்தின் சாவியை எடுத்துக்கொண்டு விறுவிறுவென மறைந்திருந்தான். மற்றவர்கள் அவனை கவனிக்கவில்லை எனினும் சைந்தவி கண்களில் தவறாமல் அனைத்தும் விழுந்தன.

“ப்ம்ச்... தட்டுல வச்ச சாப்பாட்டை சாப்பிடாம போறான்...”. நளினி வருந்த, “அதானே பார்த்தேன், உன் மகன் ஒரு நாள்ல திருந்திட்டானோன்னு” என சந்தனவேல் நொடித்தார்.

“அவனை குறை சொல்லலைன்னா, உங்களுக்குத் தூக்கம் வராதே!” என கணவனை முறைத்தார் அவர்.

‘எதற்காக இப்போது செல்கிறோம்?’ என்ற கேள்விக்கு சத்தியமாய் இவனிடம் பதிலில்லை.

‘அவள் எப்படி போனால் எனக்கென்ன?’ என்ற தன்னகங்காரம் சற்றே ஓய்வெடுத்துக் கொண்டதோ என்னவோ.

‘இரவு நேரத்தில் தனியாக செல்கிறாளே என்ற கரிசனமா?’ என மனம் அவனை எள்ளி நகையாடிய போதும், அலைபேசியை எடுத்து அவளது முகவரியைப் பார்த்துவிட்டு அங்கே வண்டியை செலுத்தினான்.

‘என்னாச்சு இந்த அக்காக்கு? ஏன் இவ்வளவு நேரமா வரலை?’ என்ற சோனியா வாயிலருகே வந்து நின்று சாலையில் அங்குமிங்கும் நடந்தாள். முகத்தில் சற்றே பயம்தான். ஏழு மணிக்கே வந்துவிடும் துளசியை எட்டு மணியைக் கடந்தும் காணவில்லை என மனம் அடித்துக்கொண்டது. வசுமதி புலம்பல் கேட்டுதான் இவளுக்குப் பதறியது‌‌. அவரை அமைதிபடுத்திவிட்டு வெளியே வந்து நின்றாள். அழைப்பு சென்றுகொண்டிருந்தாலும், துளசி அதை ஏற்கவில்லை.

அந்தத் தெருவில் சென்று நின்ற, வேந்தனின் பார்வை அவர்கள் வீட்டை மொய்த்தது‌‌. ‘இந்த பெண் இன்னும் வரலில்லையா?’ என்றவனின் விழிகள் சோனியாவில் நிலைத்தன. அவளது நடையே துளசி வரவில்லை என்றுரைக்க, ‘இடியட்... இடியட். நைட் டைம்ல அவனோட சுத்தீட்டு வரணும்னு என்ன அவசியம். அப்படி கூட வர்றவளை கேர்ஃபுல்லா வீட்ல சேர்க்கணும்னு தெரியாதா அவனுக்கு?’ என சந்தோஷையும் துளசியையும் வறுத்தவனின் பொறுமை கடந்திருந்தது. அவளைத் தேட சொல்லி உந்திய மனதின் அரிப்புத் தாளாமல் வாகனத்திலேறி அதை உயிர்ப்பித்தான்.

“க்கா... இரு, இரு... நான் வரேன்!” என்ற சோனியாவின் கத்தலில் வழிகள் விரைந்து நிமிர, சோர்வில் சோபையாய் புன்னகைத்தவளைப் பார்த்து இவனுக்குள்ளே பிரபஞ்சத்தின் பெருவெடிப்பை உணர்ந்தான்.
குப்பென்று பெயரிடப்பட முடியாத உணர்வொன்று அடிவயிற்றிலிருந்து மேலெழும்பத் தொடங்க, கைகள் அன்னிச்சையாய் உயர்ந்து இதயத்தில் பதிந்து தொலைக்க, விழிகள் முழுவதையும் துளசிதான் நிறைத்தாள்.

“என்னாச்சு கா? ஏன் ஸ்கூட்டியைத் தள்ளீட்டு வர்ற? எனக் கேட்ட சோனியாவிடம், “ரிப்பேராகிடுச்சு சோனி...” என்றாள் உள்ளே சென்ற குரலில்.

அவளது குரலை நம்பாத சின்னவள், “பெட்ரோல் தீர்ந்துடுச்சா கா?” என வினவ, துளசி எதையும் கூறாது மெதுவாய் நடந்தாள்‌.

“காலைல அந்த நூறு ரூபாவை என்கிட்ட எதுக்கு கொடுத்த நீ? நான்தான் எனக்கு எந்த செலவும் இல்லைன்னு சொன்னேனா இல்லையா கா?” எனத் தமக்கையைக் கடிந்தவளுக்கு மனதில் வருத்தம் மேவியது.

“ப்ம்ச்... ரெண்டு தெருவுக்கு முன்னாடிதான் சோனி பெட்ரோல் காலியாச்சு. மெயின் ரோட்க்கு போகணுமேன்னு, ஸ்கூட்டியைத் தள்ளீட்டு வந்துட்டேன். அவ்வளோதான்... விடு!” என்ற தமக்கையைக் காண்கையில் இவளுக்கு விழிகள் பனிப்பது போலிருந்தது. தந்தைக்கு மட்டும் இப்படியொரு நிலைமை ஏற்படாதிருந்தால், இந்நேரம் இவர்கள் வாழ்வு இப்படியா இருந்திருக்கும்? பிள்ளைகள் மூவரையும் கால் தரையில் படாதவாறு அத்தனை பாசமாய் பார்த்துக்கொண்ட மனிதராகிற்றே. அப்படிப்பட்ட மனிதர் இன்று அறைக்குள் முடங்கிக் கிடக்க, துளசி குடும்பத்திற்காகவென அனைத்தையும் சுமக்க வேண்டியதாகிவிட்டது. அவள் வாங்கும் மாத சம்பளத்தில் பாதிக்கும் மேல் கடனை செலுத்தினர். மேலும், தந்தையின் மருத்துவ செலவு, சோனியாவின் படிப்பு, வீட்டு செலவு என அனைத்தும் அதிலே அடக்க வேண்டும். அதனாலே மாத கடைசியில் கையில் பணத்தின் இருப்பு சுழியமாகிவிடுகிறது. வசுமதி வேறு வீட்டின் செலவுகளை முடிந்தளவிற்குக் குறைத்து, இரண்டு மகள்களின் திருமணத்திற்கு பணத்தைக் குருவி கூட்டைப் போல சேமித்துக் கொண்டிருந்தார்‌.

“அக்கா, நில்லு...” என்ற சோனியா வாயிலைக் கடந்து வாகனத்தை நிறுத்திவிட்டு இவளருகே வந்து முகத்தை தன் துப்பட்டாவால் துடைத்தாள். அவளது கைப்பையை வாங்கியவள் அதிலிருந்து உறுஞ்சியைத் துழாவி எடுத்து, “முதல்ல இந்த இன்ஹேலரை யூஸ் பண்ணு‌. உன்னால ப்ரீத் பண்ண முடியலை தானே?” என்று அவளின் நிலையை சரியாய்க் கணித்தாள்.

துளசிக்கு அவளது அக்கறையில் செயலில் புன்னகை பெரிதானது. ஏனோ இந்நொடி தங்கை தன்னைவிட பெரிதாய் வளர்ந்துவிட்டதாய் ஒரு எண்ணம் தோன்றியது. உறுஞ்சியை வாங்கி மருந்து அளவை சரிசெய்து வாய்க்குள் செலுத்தி, இரண்டு மூன்று முறை அதை சுவாசித்தாள். சில நிமிடங்களிலே சுவாசம் சீரானது. சிறிதுநேரம் அங்கேயே இருவரும் நிற்க, வசுமதி வாயிலுக்கு வந்துவிட்டார்.

“ஏன் டி, வெளிய நின்னே பேசுறீங்க. அவளே லேட்டாதான் வந்திருக்கா, உள்ள வாங்க‌. பனி வேற!” என்றவர் திட்டிவிட்டு இருவரையும் உள்ளே அழைத்துச் சென்றார்.

இளவேந்தன் வீட்டை நோக்கி இருசக்கர வாகனத்தை செலுத்திக் கொண்டிருந்தான். அவனால் நம்ப முடியவில்லை. எரிபொருள் நிரப்பும் அளவிற்குக் கூட இந்தப் பெண்ணிடம் பணபற்றாக்குறையா என்ன? என மனம் முழுவதும் ஆச்சர்யம்தான். நூறு ரூபாய் கூட இல்லாத அளவிற்கு என்ன நிலைமை இவளுக்கு என மனம் சோர்ந்து சோபையாய் சிரித்த முகத்தை இன்னுமின்னும் மீட்டிப் பார்த்தது‌.

அலைபேசியை எடுத்து ஊழியர்களின் சம்பள விவரங்களை எடுத்துப் பார்த்தான். ஷிவதுளசி என்ற பெயருக்கு அருகே நாற்பது ஆயிரம் எனக் குறிப்பிட்டிருந்தார்கள். இந்த வேலைக்கும் பதவிக்கும் உரிய நியாயமான சம்பளத்தைதான் வழங்குகிறார்கள் என்று யோசித்தவனுக்கு என்ன செய்வது எனத் தெரியவில்லை. அவளின் மீது கரிசனமா? அக்கறையா? எனக் கேட்டால் பதிலில்லை இவனிடம்.

அஸீமிற்கு அழைத்தான். இரவு நேரத்தில் அழைப்பு வரவும் அவர் பதற்றத்துடன் அழைப்பை ஏற்றார்.

“ஹலோ அஸீம், ஸ்டாஃப்ஸ்க்கு எப்போ சேலரி க்ரெடிட் பண்ணுவோம்?” என வினவினான்.

“சார், யூஸூவலா மந்த் பர்ஸ்ட் வீக் கொடுத்துடுவோம் சார்...” அஸீம் பதிலுரைத்ததும்,

“ஹம்ம்... இனிமேல் மந்த் ஃபர்ஸ்ட் டேட் எல்லாருக்கும் சேலரி க்ரெடிட் ஆகணும். நாளைக்கு பிப்ரவரி ஒன், சோ மார்னிங்ல இருந்து இதை ப்ரொசிட் பண்ணுங்க!” என்றான்.

“ஓகே ஷ்யூர் சார்!” என அழைப்பைத் துண்டித்துவிட்டு வீட்டை அடைந்தான்.

“டேய், எங்க அவசரமா போன?” சாம்பவி தம்பியை முறைத்தாள். எல்லோரும் உண்டுவிட்டு அறைக்குள் அடைந்திருக்க, இவனுக்காக காத்திருந்த நளினியை படுக்குமாறு அறிவுறுத்திவிட்டு இவள் அமர்ந்திருந்தாள்.

“ச்சு... சாரி கா, வெளிய சாப்ட்டு வந்துட்டேன். நீ போய் தூங்கு...” என்றவன் அவளது பதிலைக் கூட எதிர்பாராது அறைக்குள் சென்று கதவை அடைத்தான். உடல் அசதியாய் இருப்பது போல தோன்ற, மாற்றுடை எடுத்துக்கொண்டு சென்று குளித்து வந்தான்.

அலமாரியிலிருந்து ஒரு சாவியை எடுத்தான். அவனது அறைக்குள்ளே மற்றொரு தனியறை இருந்தது. அதை திறந்துகொண்டு உள்ளே நுழைந்தான். நன்கு விசாலமான அறை முழுவதும் பலவித இசைக்கருவிகள் நிரம்பி வழிந்தன. அவனது பொழுது போக்கு மட்டுமல்ல, இசையின் மீது அவனுக்கு அத்தனை அலாதிப் பிரியமும் உண்டு.

கிட்டார் அருகே சென்றவன் அதை எடுத்துக்கொண்டு இருக்கையில் அமர்ந்து அதை மீட்டத் தொடங்க, மனம் சர்வ நிச்சயமாய் அதில் லயிக்கவில்லை. மீண்டும் மீட்டினாலும் அதில் ஏதோ சிறிய தவறு இல்லை பிசிறு தட்டியது போல. விழிகளை மூடி மனதை ஒருநிலைப்படுத்தி வாசிக்க முயன்றவனை முழுவதும் நிறைத்தாள் துளசி. பட்டென்று விழிகளைத் திறந்த இளவேந்தனுக்கு இதயத்திலே ஏதோ நழுவுவது போலொரு உணர்வு. திகைத்துப் போய் அமர்ந்துவிட்டான். இந்தப் பெண் துளசி அவனை ஏதோ ஒரு வகையில் தொல்லை செய்கிறாளென மூளையும் மனதும் போட்டிப் போட்டு உரைக்க, மீண்டும் மனதை ஒருநிலைப்படுத்தி கிட்டாரை வாசிக்க முயன்றவனின் கைகளில் மெல்லிய நடுக்கம். முதல்முறையாக தடுமாறிப் போனான்.

ஏனோ இயலாமைக் கொடுத்த கோபத்தில் கிட்டாரைத் தூக்கியெறிய சென்றவன் நிதானித்தான். இந்தப் பெண் என்னைப் பாதிக்கவில்லை என்றொரு வைராக்கியத்தை மனதில் நிலை நிறுத்தியவன் பொறுமையாய் கிட்டாரை வாசிக்கத் தொடங்க, விழிகளை மூடாது மெதுவாய் அதில் மனம் லயிக்கத் தொடங்கியது.

“தனிமையே! தனிமையே!
உனக்கென்ன இத்தனை தாகமா?” என்ற பாடல் வரிகள் இசையாய் அவனது கையில் மிதந்து காற்றில் கலந்தன. நீண்ட நாட்களாக மனதிலிருந்த வெறுமை இப்போது இந்நொடி விலகியது. அவனையும் அறியாது விழிகளை மூடிவிட, காலையில் சிரிப்பும் முறைப்புமாய் பூங்கொத்தை வாங்கிய துளசிதான் வந்து நின்றாள்.

கொன்று குவித்த இளவேந்தனின் தனிமைக்கொரு முற்றுப்புள்ளி வைத்திருந்தாள் ஷிவதுளசி கனிந்த முகமும் அகமுமாய். கோபமாய் வந்த போதும் இமையை சிலுப்பவில்லை அவன். இந்தப் பெண் மறைந்துவிடுவாள் என மனம் அறிவுறுத்தியதோ? மூளை அரற்றியதோ? ஆனாலும் அந்நியமில்லாத விழிகளிலும் புன்னகையிலும் இவனது மனம் மெதுவாய் குவியத் தொடங்க, தலையை சாய்த்து கண்களை மூடியவன் சிறிது நேரத்தில் அமர்ந்தவாறே உறங்கிப் போனான்.
 
Well-known member
Messages
932
Reaction score
682
Points
93
Superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr
 
Top