• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

தூறல் - 24 💖 (இறுதி அத்தியாயம்)

Administrator
Staff member
Messages
1,168
Reaction score
3,348
Points
113
தூறல் – 24 (இறுதி அத்தியாயம்)

இளவேந்தன் பேசப் பேச துளசி அதிர்ந்து போனாள். அவளது முகத்தில் வேதனைப் படர, விழியோரம் ஈரம் கோர்த்தது. அவன் பேசிய வார்த்தைகள் முழுவதும் தனக்கானதுதான், தான்தான் காரணக்கர்த்தா எனப் புரிய நெஞ்சு விம்மித் துடிக்க, மெதுவாக நகர்ந்து அவனருகே சென்று நின்றாள். சில நொடிகள் இருவரிடமும் மௌனம் ஆட்சி செய்ய, அவன் நிமிர்ந்து பார்த்தான்.

கன்னத்தை நனைத்த உவர்நீரைத் துடைக்கக் கூடத் தோன்றாது தன்னையே வேதனையுடன் பார்த்தப் பெண்ணைக் காண்கையில் அவனுக்கும் வலித்தது தொலைத்தது.
“ப்ம்ச்...” என்று அவளது இடையோடு கட்டிக் கொண்டவன் முகம் கனிந்து கூம்பியிருந்த வயிற்றை சமீபித்தது. துளசி மெதுவாய் கரங்களை உயர்த்தி அவன் தலையை தன்னோடு அழுத்தியவள், “சாரிங்க..‌‌. சாரி. நான்... நான் செஞ்சது எவ்வளோ பெரிய தப்புன்னு புரியுது. ஆனால், அதை மாத்த முடியாதே. நீங்களா, குடும்பமான்ற கேள்வி வரும்போது என்னால சுயநலமா யோசிக்க முடியலை‌. நீங்க... இப்படியொரு சூழ்நிலை வந்திருந்தா, கண்டிப்பா என்னை விட்ருக்க மாட்டீங்கன்னு எனக்குத் தெரியும். உங்க அளவுக்கு நான் உண்மையா இல்ல. காதலுக்கும் உண்மையா இல்ல. நான்... நான் ரொம்ப தப்பானவ இல்ல இளா? ஏன் என்னை உங்களுக்கு இவ்வளோ பிடிச்சிருக்கு? இந்த நாலு வருஷத்துல வேற ஒரு நல்ல பொண்ணைப் பார்த்துக் கல்யாணம் பண்ணி இருக்கலாமே? ஏன் திரும்பி வந்தீங்க. ஏன் என் வாழ்க்கையை சரி செஞ்சீங்க. இப்போ, இப்படி கஷ்டப்படுறீங்க? இதெல்லாம் உங்களுக்குத் தேவையா? நான் எப்படிப் போனா உங்களுக்கு என்ன?” எனத் தேம்பியவளுக்கு நெஞ்சடைத்துப் போனது. தனக்காக தனக்காகவென அனைத்தையும் பார்த்து செய்தவனுக்கு தான் என்ன செய்திருக்கிறொம் என இந்நொடி தான் உணர்ந்திருக்கிறாள். குற்றவுணர்வு நெஞ்சைப் போட்டு அழுத்தியது.

நடந்ததை மறக்க இளவேந்தன் நாட்டைவிட்டுச் சென்றிருக்கிறான் என அவள் நினைத்து வைத்திருக்க, இவன் அங்கே சென்று இத்தனை வேதனைகளை சுமந்திருக்கிறானே என நினைக்க நினைக்க ஆற்றாமையில் மனம் வெதும்பிப் போனது. உதட்டைக் கடித்து உணர்வுகளை அடக்கினாள். தன்னுடைய செயலினால் இவன் அதிகம் காயம்பட்டிருக்கிறான் என மனது வேதனையில் வெந்து தணிந்தது.

மெதுவாய் அவளிடமிருந்து பிரிந்தவன், “எப்பவுமே நீ என்னை சரியா புரிஞ்ச மாட்டீயா டி?” என வெற்றுப் புன்னகையை சிந்தினான் இளவேந்தன். இவள் வேதனையுடன் அவனைப் பார்த்தாள்.

“எந்தப் பிரச்சனை வந்தாலும் அதை ஃபேஸ் பண்ற தைரியம் உனக்கிருக்க மாட்டுது. எப்போ பார்த்தாலும் பிரிஞ்சு போய்டலாம், நான் உனக்கு வேணாம். வேற பொண்ணைக் கல்யாணம் பண்ணி இருக்கலாம். இப்படி பேசிப் பேசியே என்னை டென்ஷன் பண்ற நீ. இருக்கக் கோபம் இன்னும் பல மடங்கு அதிகமாகுது டி...” என்றான் எரிச்சலாய்.

“இல்ல இளா...அது நான் நிதர்சனத்தை சொன்னேன்!” என அவள் பேசி முடிக்கும் முன்னே இடையிட்டான்.

“மண்ணாங்கட்டி நிதர்சனம்... மயிறு நிதர்சனம். எதாவது சொல்லிடப் போறேன் டி...” என்றவன் எழுந்து அவளது கையைப் பிடித்தவன், “பிரிஞ்சுப் போய்டணும். என்கூட இருக்கக் கூடாது. அதானே உன் எண்ணம். வா, உன்னை உன் அம்மா வீட்லயே விட்டுட்றேன்!” என அவள் கையைப் பிடித்திழுத்தான்.
அவனிடமிருந்து கடினப்பட்டு கையை உருவியவள் முறைத்துப் பார்த்தாள்.

“என்னடி முறைக்கிற... நீ தானே சொன்ன... டைவர்ஸ் வேணும்னு. எனக்கு இந்த துளசி வேணாம்!” என வேந்தன் முடிக்கும் முன் அவனை இறுக அணைத்தவள், “எனக்கு இந்த இளவேந்தன்தான் வேணும். என் இளாதான் வேணும். இனிமேல் செத்தாலும் அவர் கூட தான். வாழ்ந்தாலும் அவர் கூட தான்!” என்றாள் அடமாய், அழுத்தமாய். இந்த வார்த்தை இப்பெண்ணின் வாயிலிருந்து உதிர்ந்ததும் அவனுக்கு அகம் முகம் என அனைத்தும் நிறைந்து போனது. வேண்டாம் வேண்டாம் என்ற உதடுகள் இப்போது இவனை சொந்தம் கொண்டாடுகையில் அவர்கள் காதலின் வாசனை மனதை நிறைத்தது. இருந்தும் இளவேந்தன் விரைப்பாய் நிற்க, தன்னை அணைக்காத கைகளை முறைத்துப் பார்த்த துளசி, அவனடமிருந்து விலகாது நிமிர்ந்து பார்த்தாள்.

“உன்னை நம்ப முடியாது டி. மாத்தி மாத்திப் பேசுவ நீ!” என்றவன் பேச்சில் இவளது மனம் ஒரு நொடி சுணங்கிப் போனது. இருந்தாலும் அவன் பேச்சின் நியாயம் உரைக்க, அகத்தை முகத்தில் காண்பிக்காதவள், “நம்பிதான் ஆகணும். நம்பி தானே கல்யாணம் பண்ணீங்க?” என்று போலியாய் சடைத்தவளின் பேச்சில் இளவேந்தன் உதடுகளில் முறுவல் பூத்தது. பேசிக் கொண்டிருக்கும் போதே துளசி வயிற்றிலிருக்கும் குழந்தை எட்டி உதைக்க, ஒரு நொடி வயிற்றில் கையை வைத்தவள், அவன் கையைப் பற்றி இழுத்தாள்.

“உங்கக் குழந்தையைக் கேளுங்க. அவனே அம்மாவுக்குத்தான் சப்போர்ட் பண்றான்!” என்றவளை சின்ன சிரிப்புடன் நோக்கியவன் கைகள் குழந்தையின் ஸ்பரிசம் உணர்ந்ததும் சிலிர்த்தது. சிரிப்புடன் தன் முன்னே குனிந்திருந்தவன் நெற்றியில் அழுந்த முத்தமிட்டாள் துளசி.

“இட்ஸ் அ ப்ராமீஸ். இனிமேல் வாழ்க்கையே போற பிரச்சனை வந்தாலும் சரி, நான் என் இளாவை எந்த இடத்துலயும் விட்டுக் கொடுக்க மாட்டேன். யெஸ், இதுக்கு முன்னாடி உங்களை விட்டுக் கொடுத்தேன் தான். காரணம் சொல்லி நியாயப்படுத்த விரும்பலை. பட், இப்போ என் மனசுல இருந்து சொல்றேன். இந்த மாதிரி எப்பவும் நடந்துக்க மாட்டேன் இளா!” என்றாள் உணர்ந்து. இவனிடம் சில நொடிகள் மௌனம். நிமிர்ந்து நின்றான்.

அவனது தாடியடர்ந்த கன்னத்தைத் தாங்கிய துளசி இரண்டு கன்னத்திலும் முத்தமிட்டு, “சாரி ஃபார் எவ்ரிதிங்க்!” என்றாள் உணர்ந்து. மெல்லிய முறுவலுடன் அவளைப் பார்த்த இளவேந்தன் மனைவியை இழுத்தணைத்துக் கொண்டான்.

“பாஸ்ட் இஸ் பாஸ்ட். இனிமே நடந்ததைப் பத்திப் பேச வேணாம் ஷிவா. ப்யூச்சர் வாழ்க்கையைப் பார்க்கலாம்!” என்றான் மெதுவாய் அவளது நெற்றியில் முத்தமிட்டு. சிறிய தலையசைப்புடன் அவனோடு ஒன்றியவள், “உங்கக் கோபம் எப்போ போகும்?” என வினவினாள்.

“ஹம்ம்... தெரியலை‌. இப்போ இந்த நிமிஷம் கோபமெல்லாம் இல்ல, வருத்தம் மட்டும்தான். நாளாக நாளாக அதுவும் சரியாகிடும் டி...” என அவளது தலையை வருடினான்.

“உங்கப் பையன் பசியில என் வயித்துல ஃபுட் பால் விளையாட்றான். சாப்பிடலாமா?” எனத் துளசி வினவ, “இதுதான் லாஸ்ட் ஷிவா. நமக்குள்ளே என்ன பிராப்ளம்னாலும் நீ சாப்பிடாம இருக்கக் கூடாது!” என்ற கண்டிப்புடன் மனைவியை அழைத்துச் சென்று சாப்பிட அமர்ந்தான்.

“ஹக்கும்... என்ன வேந்தா... அண்ணி கைகால்ல விழுந்து சமாதானம் பண்ணீட்டியா?” என சைந்தவி அவர்களை வம்பிழுக்க, சிரிப்பும் முறைப்புமாய் சாப்பிட்டு எழுந்தனர்.

இத்தனை நாட்கள் நீ நான் என்ற தன்முனைப்பிலும் கோபத்திலும் பிரிந்திருந்தவர்கள், சமாதான உடன்படிக்கைக்கு வரவும், வாழ்க்கை நன்றாக செல்லத் தொடங்கியது.

ஓரிரு வாரங்கள் கடக்க, துளசிக்கு வளைகாப்பு முடிந்து அவளைத் தாய் வீட்டிற்கு அனுப்பிவிட்டனர். கணவனைப் பிரிந்து செல்கிறோம் என்ற வருத்தம் இருந்தாலும் தந்தையுடனான நாட்கள் எல்லாம் துளசிக்கு அத்தனை நிம்மதியை அளித்திருந்தது.

அவர் நடந்தவற்றிலிருந்து மீண்டு தன்னம்பிக்கையுடன் தொழிலை நடத்தத் தொடங்க, முன்பு போல வீட்டின் பொறுப்புகள் எல்லாம் கண்ணப்பனிடம் வந்திருந்தது. தன் தவறவிட்ட இளமைக் காலத்தின் பசுமையை இப்போது திகட்ட திகட்ட அனுபவித்துக் கொண்டிருந்தாள் சோனியா. துளசி வந்ததும் வேண்டுமென்றே தந்தையிடம் அவள் செல்லம் கொஞ்ச, இவளுக்குப் பொறாமை என்று இல்லாவிடினும் முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்வாள். கண்ணப்பன் இரண்டு பெண்களையும் சமாதானம் செய்யத் திணறினார். வளைகாப்பிற்கு வந்த சக்தியும் இங்குதான் இருக்க, அவள் ஒருபுறம் முனைத்துக் கொள்வாள். மூவரையும் ஒரு சேர சமாளிப்பதில் தான் கண்ணப்பனின் முழு திறமையும் இருந்தது.

இத்தனை நாட்கள் வெறுமையை மட்டும் பூசி அழுகையும், கவலையும் பார்த்த வீட்டின் சிரிப்பு சத்தத்தில் துளசி சகலமும் மறந்து லயித்திருந்தாள். அவர்கள் வீடு கல்லும் மண்ணும் மட்டுமல்ல, அவர்களுடைய உணர்வாகிற்றே. இத்தனையும் மீட்டுத் தந்த கணவன் மட்டும் எப்போது நினைவை நிறைப்பான்.

இப்போதெல்லாம் இளவேந்தன் அழைப்பான் என காத்திருக்காது இவளே காலை, மாலை என அழைத்துப் பேசினாள். அவனைக் காண வேண்டும் என்று தோன்றினால் உரிமையுடன் அழைத்தாள். வேந்தனுக்கு அப்படியொரு நிறைவு மனைவியின் செய்கையில். அவளாக உரிமையை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தானே அவன் விரும்பினான்‌. இப்போது அவளே முன்வரவும், எஞ்சியிருந்த கோபமெல்லாம் வடிந்து போயிருக்க, முழுதாக இல்லாவிடினும் அவளுடைய இளாவாக இருக்க முடிந்தளவு முயன்றான். அதில் துளசி அகமகிழ்ந்து போனாள். தனக்காக என அவனது மெனக்கெடல்களில் இவளது மனம் முழுவதும் நேசத்தின் வாசனை படர்ந்தது. அத்தனை லாவகமாய் இருவரும் தங்களைப் பழைய இளா, ஷிவாவாக இணைத்துக் கொண்டு ஒரு குடையின் கீழே மீண்டுமொரு பயணத்தைத் தொடங்கினர். வயது முதிர்ந்த பிராயத்தில் மரணத்தின் வாசலில் கூட ஒன்றாய் பயணங்களை முடித்துக் கொள்ள வேண்டும் என இருவரது மனதிலும் ஆழப் பதித்துக் கொண்டிருந்தனர். அதனாலே பிரிவு என்ற வார்த்தைக்கு அங்கே இடமில்லாத போனது.

காதல்வயப்பட்டிருந்த போது நிகழும் சிறு சிறு சண்டைகள், சமாதானங்கள் மீண்டும் இங்கே தலை தூக்கின. ஆனாலும் இது கொஞ்சம் மனமுதிர்ந்த சண்டைதான். அழகான சமாதானங்கள் அவர்களை ஆட்கொண்டன. துளசி தன்னுடைய ஆசைகளை கணவனிடம் அன்பு கட்டளையிட, வேந்தன் மறுப்பானா என்ன? அதை ஏற்று அவளது இளாவாக சேவை புரிந்தான்.

இரவு பன்னிரெண்டு மணிக்கு அழைத்து குல்ஃபியும் ஸ்மூர்த்தியும் வேண்டுமென செல்லமாய் அடம்பிடித்தலில் தொடங்கி இருந்தது அவளது ஆசைகள். கணவன் வேண்டாமென்று உறுதியாய் மறுத்ததும், இவள் முறைத்துக் கொள்ள, சமாதான லஞ்சமாய் மறுநாள் காலை குல்ஃபியை வாங்கி வந்து கொடுத்தான். வார நாட்களில் இரவு அருகிலிருக்கும் பூங்காவிற்கு வேந்தன் அழைத்துச் செல்ல, இருவரும் பேசியபடி நடை பயிலத் தொடங்கியிருந்தனர். அன்றும் அப்படித்தான் மனைவியை பூங்காவிற்கு அழைத்து வந்தான் வேந்தன்.

“இந்த பால் உங்களுக்குத்தான். கோபம் வந்துச்சுன்னா இதுமேல காட்டுங்க!” எனக் குறும்பாய் கூறியவளை முறைக்க முயன்று தோற்றவன் இதழ்களில் புன்னகை படர்ந்தது.

“போடி...” என அதை ஓடி வந்து எறிய முயன்று அப்படியே சுழற்றி கையில் பிடித்தவனை ஆசையாய்ப் பார்த்திருந்தாள் துளசி. இரவு நேரக் கூதக்காற்று மேனியை வருடிச் சென்றது. அவள் உடலை குறுக்கவும், “ஷிவா, வா கிளம்பலாம். குளிர ஆரம்பிச்சுடுச்சு...” என்றவன் மனைவியைக் கைப்பிடித்து எழ வைத்து அழைத்துச் சென்றான்.

அவன் கைவளைவிலே நடந்தவள், “இளா, நாம இன்னும் ஒரு குழந்தை பெத்துக்கலாம் பா!” என்றாள். இவன் முகத்தில் முறுவல் பூத்தது.

“ஹக்கும்... நான் ரெடிதான்...” என குறும்பாய் உரைத்தவனை முட்டியால் இடித்தவள், “நான் அந்த அர்த்தத்துல சொல்லலைங்க. எங்க வீட்ல பிராப்ளம் வந்தப்போ எனக்கு சோனியா ஆறுதல், அவளுக்கு நான் ஆறுதல்னு இருந்தோம். அந்த மாதிரி நாமளும் ரெண்டு குழந்தைங்களைப் பெத்துக்குவோம். நம்ம காலத்துக்குப் பிறகு ஒருத்தருக்கொருத்தர் ஆதரவா இருந்துப்பாங்க. ஒன்னோட நிறுத்தக் கூடாது இளா!” என்றவளின் பேச்சில் இவனிடம் மென்னகை பிறந்தது.

“இன்னும் மூனு கூடப் பெத்துக்கலாம்!” என்றவனை செல்லமாக முறைத்தவள், “ஹம்ம்... ஆசைதான் போங்க. ஒன்னுக்கே எனக்கு உடம்பு அங்க அங்க வீங்கிப் போச்சு. போங்க, போங்க!” என செல்லமாக சிணுங்கியவளை சிரிப்புடன் நோக்கியவன், அவளை வீட்டில் விட்டுவிட்டு இருப்பிடம் நகர்ந்தான்.

துளசிக்கு இன்னும் இரண்டு வாரங்களுக்குப் பின்னர் மருத்துவர் பிரசவ தேதி குறித்துக் கொடுத்திருந்தார். ஆனால், அதற்கு முன்னரே காலையிலிருந்து மெதுவாக வலி வரத் தொடங்கியிருந்தது. அதை வசுமதியிடம் அவள் கூற, “கொஞ்சம் கொஞ்சமாக வலி வரத்தான் செய்யும் துளசி. நல்லா வலிச்சதுன்னா சொல்லு, ஹாஸ்பிடல் போகலாம்...” என்றார் அவர். தலையை அசைத்தவளுக்கு அன்றிரவே இடுப்பு வலி வந்துவிட, மொத்தக் குடும்பமும் மருத்துவமனைக்கு கிளம்பிவிட்டனர்.

“சோனி, மாமாவுக்கு கால் பண்ணி சொல்லு...” என வலியிலும் துளசி கூற, சோனியா இளவேந்தனுக்கு அழைத்து விஷயத்தைப் பகிர, இரவு நேரத்தில் யாரையும் பதற்றப்பட வைக்க வேண்டாமென இவன் மட்டும் கிளம்பி வந்துவிட்டான்.

இரவு முழுவதும் துளசி வலியில் துடிக்க, அதிகாலையில் தான் குழந்தை பிறந்தது. அதற்குள்ளே வெளியே இருப்பவர்களுக்கு இருப்புக் கொள்ளவில்லை.

“ஆண் குழந்தை பிறந்திருக்கு சார்...” என செவிலியர் வந்த கூறிச் சென்று அரைமணி நேரம் கழித்தே குழந்தை கைக்கு வந்தது. கண்ணப்பன்தான் முதலில் அவனை வாங்கினார்.

உச்சி முகர்ந்து பேரனை முத்தமிட்டார் மனிதர். வசுமதி அருகில் இருந்தவாறே குழந்தையை ரசிக்க, சோனியா அவர்களைப் புகைப்படம் எடுத்தாள்.

“மாப்ளை, இந்தாங்க... உங்க மகனைப் பாருங்க!” எனப் பூரித்துப் போய் பேசியவரை சிரிப்புடன் நோக்கியவன், குழந்தையைக் கைகளில் வாங்கினான். மூக்கு கன்னம் என மனைவியை உரித்து வைத்திருந்தவனைக் கொஞ்சினான். அதற்குள்ளே செவிலியர் வந்து மீண்டும் குழந்தையைத் தூக்கிக் கொண்டு சென்றுவிட, இவன் வீட்டிற்கு அழைத்து விஷயத்தைப் பகிர்ந்தான். அவர்கள் எல்லோரும் கிளம்பி மருத்துவமனையை அடைய, அப்பகுதியே சலசலப்புடன் காணப்பட்டது.

ஆரண்யா, “குட்டிக் கிருஷ்ணா... குட்டி கிருஷ்ணா!” எனக் குழந்தையை சுற்றி வர, அனைவரது முகத்திலும் புன்னகை. துளசி மயக்கம் தெளிந்து எழவும், குழந்தைக்குப் பசியாற்றினாள். பாலைக் குடித்த சின்னவன் உறங்கவும், தொட்டிலில் கிடத்தினார் வசுமதி. இளவேந்தன் மனைவியருகே அமர்ந்து அவளது கைகளை ஆதரவாகப் பற்றிக் கொண்டான்.

அவனது முகத்தையே குறுகுறுவென பார்த்த துளசி, “பயந்துட்டீங்களா மிஸ்டர் இளவேந்தன்?” எனக் கேட்கவும், இல்லையென தலையை ஆட்டிப் பின், “கொஞ்சமா பயந்துட்டேன் டி...” என்றவன் பாவனையில் துளசி பொங்கிச் சிரிக்க, அவள் நெற்றியில் முத்தமிட்டான்.

“இன்னொரு தடவை பயப்பட ரெடியா இருங்க!” என்றவளை இவன் செல்லமாக முறைத்தான். துளசி புன்னகைக்க அந்த நிமிடம் அவர்களுக்கு மனதில் ஆழப்பதிந்து போனது.

சில பல மாதங்களுக்குப் பின்னரான அழகான இளங்காலை பொழுது. குளிருக்கு இதமாய் போர்வையை விடுத்து துளசியும் வேந்தனும் ஒருவருக்கொருவர் இறுக அணைத்துத் தூங்கிக் கொண்டிருந்தனர்.

அதிகமாய் உடலை துளைத்த குளிரில் அவளுக்கு உறக்கம் பறிபோய் விட, விழிகளைத் திறந்தாள். பக்கவாட்டில் கணவன் முகம் தெரிய அவன் கன்னத்தில் முத்தமிட்டவள், “ஹேப்பி பெர்த்டே இளா...” என்றாள் சிரிப்புடன். காதில் கேட்ட குரலிலும் கன்னம் உணர்ந்த ஸ்பரிசத்திலும் இவனது உதடுகளில் புன்னகை ஏறின.

அவளின் புறம் திரும்பி கழுத்தில் முகம் புதைத்து ஆழ்ந்து மனைவியின் வாசத்தை உள்ளிழுத்தவன், “தேங்க்ஸ் டி பொண்டாட்டி...” என்றான். குளிரில் உறைந்த குரலில் லேசான கரகரப்பு.

“உங்க வாய்ஸ் ரொம்ப...” என தொடங்கியவள், “அஹம்... ஹக்கும்!” எனத் தொண்டையைக் கனைத்தாள்.

“சொல்ல வந்ததை சொல்லி முடிக்கணும் டி...” என்றவன் அவளை இன்னும் தன்னுடன் இறுக்க, “எதுக்கு பா... ஒன்னும் வேணாம். முதல்ல எழுந்திரிச்சு குளிங்க. உங்களுக்காக ட்ரெஸ் எல்லாம் வேற சர்ப்ரைஸா அத்தை எடுத்து வச்சிருக்காங்க. எழுங்க...” என அவனை அதட்டி உருட்டி குளியலறைக்குள் அனுப்பியவளின் பார்வை குழந்தையிடம் திரும்பியது.

“ரித்விக் செல்லம்...” என இவள் கெஞ்சலுக்கு செவிமடுக்காது ஆழ்ந்த உறக்கத்திலிருந்தான் அவன். சரி குழந்தை தூங்கட்டும் என இளவேந்தன் குளித்து வந்ததும் இவளும் குளித்து தயாராக, அவன் எழுந்துவிட்டான். அவனுக்குப் பசியாற்றி குளிக்க வைத்து புது உடை மாற்றினாள்.

வீட்டிலிருந்த அனைவரும் வேந்தனுக்கு வாழ்த்தைத் தெரிவிக்க, ஆரண்யா ஏதோ பரிசுப் பொருளை சித்தப்பாவிடம் நீட்ட, அவளைத் தூக்கி முத்தமிட்டுப் பெற்றுக் கொண்டான்.

நளினி மகனுக்கென பார்த்துப் பார்த்து சமைக்க, துளசி குழந்தையை சைந்தவியிடம் கொடுத்துவிட்டு இனிப்பாய் பாசிப்பருப்பு பாயசம் செய்தாள். உணவு மேஜையில் தாயா? தாரமா? என்ற போட்டியில் ஒருவாறு இருவரையும் சமாளித்து உண்டு முடித்து எழுந்த இளவேந்தனின் மனம் ஆஸ்கார் ஒன்றை எதிர்பார்த்தது என்னவோ உண்மை.

நளினியின் வற்புறுத்தலின் பேரில் மூவரும் அருகிலிருந்த கோவிலுக்குச் சென்று வந்தனர். மனைவியையும் மகனையும் வீட்டில் விட்டுவிட்டு இளவேந்தன் அலுவலகம் கிளம்பினான். துளசி குழந்தைக்கு ஒரு வயது வரும்வரை அலுவலகம் செல்ல வேண்டாமென மாமியார் நூற்று நாற்பத்து நான்கு தடை உத்தரவைப் பிறப்பித்திருக்க, மருமகளும் அதை ஏற்றுக்கொண்டாள்.

மாலை இளவேந்தன் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தான். வேண்டாமென்று மறுத்தும் சைந்தவி அணிச்சலை வாங்கி வந்துவிட, சிறு சங்கடத்துடன் அதை வெட்டினான். முதல் வாய் யாருக்கென்ற போட்டி ஏதுமின்றி மகன் அவ்விடத்தை ஆக்கிரமித்திருக்க, அதிலொரு ஆசுவாசம் பிறந்தது. சில பல கலாட்டாக்களுடன் இரவு உணவு முடிந்து அனைவரும் அறைக்குள் அடைந்தனர்.

குழந்தையைத் தூங்க வைக்கிறேன் என முன்னரே துளசி அறைக்
குச் சென்றுவிட்டாள். இவன் இதமான மனநிலையில் உதட்டில் உறைந்த புன்னகையுடன் அறைக்குள் நுழைந்தான்.
 
Administrator
Staff member
Messages
1,168
Reaction score
3,348
Points
113
சிரிப்புடன் அவன் முன்னே வந்து நின்ற துளசி, “எப்படி இருக்கு?” என்று புருவத்தை உயர்த்திக் கேட்டாள்.

“ஹே...இது.. இது நான் எடுத்துக் கொடுத்த சேரி தானே ஷிவா?” என ஆர்வமாய்க் கேட்டவன் அகமும் முகமும் மலர்ந்திருந்தது. அவன் துளசியின் பிறந்தநாளுக்காக எடுத்துக் கொடுத்த சேலையைதான் இப்போது உடுத்தியிருந்தாள்.

“ஆமா... பரவாயில்லையே, மறந்துருப்பீங்கன்னு நினைச்சேன். ஹம்ம்...ஷார்ப்பு தான்?” என முகத்தைக் கோணியவளின் முடிகளுடன் சேர்ந்து தலையிலிருந்த மல்லிப்பூவும் முன்னே வந்து விழுந்தது.

இடையோடு அவளைத் தூக்கி அணைத்தவன், “அதெல்லாம் மறக்க மாட்டேன் டி பொண்டாட்டி... ப்பா... என்ன வாசமா இருக்க டி?” என எக்குத்தப்பாக வாசம் பிடித்தவன் செய்கையில் இவள் சிவந்து போனாள்.

“ச்சு... என்ன பண்றீங்க. மெதுவா பேசுங்க, ரித்விக் எழுந்துடப் போறான்!” எனத் துளசி அதட்டவும், சிரிப்புடன் அவளை இறக்கியவன், “ச்சு...போடி. உனக்காக நான் வேற ப்ளான் பண்ணியிருக்கேன். முதல்ல இந்த சேரியை ரிமூவ் பண்ணு!” என்றவனை இவள் முறைத்தாள்.

“ப்ம்ச்... டர்டியா யோசிக்காத டி...” என்றவன் அலமாரியைத் திறந்து ஒரு பையை அவளிடம் கொடுத்தான்.

“இந்த ட்ரெஸைப் போட்டுட்டு வா ஷிவா!” என கண்கள் மின்னக் கூறியவனை சந்தேகமாகப் பார்த்தவாறே அதைப் பிரித்தாள் துளசி. பரதநாட்டிய உடையைக் கண்டதும் ஒரு நொடி அவளின் மனம் கடந்த காலத்தை நினைத்து கனிந்து போனது.

“நோ... போங்க. டான்ஸைவிட்டே ரொம்ப வருஷம் ஆச்சு. சோ, மறுபடியும் வேணாம்!” என மறுத்தாள்.

“ஏய், துளசி பெர்த் டே பாயோட விருப்பம் டி. நீ நிறைவேத்திதான் ஆகணும்!”

“இதைத் தவிர வேற எதுனாலும் செய்றேன். போங்க!” அவள் மறுக்க, “போடி... ஒன்னும் வேணாம். போ... நான் போய் படுக்கிறேன்!” எனக் கோபமாய் நகர முயன்றவனின் கையைப் பிடித்தவள், “சரி... சரி. ரொம்ப பண்ணாதீங்க. ட்ரெஸ்ஸை போட்றேன்!” என முறைப்புடன் அவனது இசைக் கருவிகள் வைத்திருக்கும் அறைக்குள் நுழைந்தாள். செல்லும் அவளை சிரிப்புடன் பார்த்தவன், மனைவி தனக்காக வாங்கி வந்த உடையை எடுத்தான்.

நளினி வாங்கிக் கொடுத்த உடையை அணியட்டுமென தான் வாங்கியதை துளசி வேந்தனிடம் காலையில் கொடுக்கவில்லை. மாலை அலுவலகம்விட்டு வந்ததும்தான் கொடுத்திருந்தாள். அவளது எண்ணத்தில் இவனுக்கு நிறைந்து போனது. மனைவி எடுத்த உடையை ஆசையாய்த் தடவிப் பார்த்தவன், குளித்து முடித்து அணிந்து வந்தான்.

ஒரு மணி நேரத்தைக் கடத்திவிட்டு மெதுவாய் அறைக் கதவை சங்கடத்துடன் எட்டிப் பார்த்தாள் துளசி. அதில் இவனுக்கு புன்னகை முளைத்தது. குழந்தை உறங்கிவிட்டானா என மீண்டும் ஒரு முறை பரிசோதித்துவிட்டு, அந்த அறைக்குள் நுழைந்து கதவை அடைத்தான்.

துளசி நீண்ட நாட்களுக்குப் பின்னர் பரதநாட்டிய உடை அணியவும், லேசாய் வெட்கத்துடன் நெளிந்தவாறே நின்றிருந்தாள். இவன் விடாது அவளைக் குறுகுறுவெனப் பார்க்க, “இந்த அர்த்த ராத்திரியில் இந்த ட்ரெஸ்ஸை எதுக்குப் போட சொன்னீங்க?” என சிருங்கார சிணுங்கலை சிந்தியவளிடம் உள்ளம் கொள்ளைப் போனது.

தொண்டையைக் கனைத்தவன், “நம்ப ஃபர்ஸ்ட் டைம் மீட் பண்ணப்போ ஆடுன பாட்டுக்கு இப்போ மறுபடியும் டான்ஸ் ஆடிக் காட்டு ஷிவா!” என்றவனிடம் இவள் நோ-வென அலற, அதை யெஸ்-ஸில் முடித்து வைத்தான் கணவன்.

அவனை முறைத்துக் கொண்டே தயங்கிபடியே ஆடத் தொடங்கிடவள் சில நிமிடங்களில் பாடலுடன் ஒன்றிட, இவன் அவளை ஆசையுடன் பார்த்தான். பாடல் முடியவும், அவனின் மெச்சுதலானப் பார்வையில் அவளிடம் மெல்லியதாய் வெட்கம் படர்ந்தது.

“ஷிவா, உனக்கு அரங்கேற்றம் பண்ணணும்னு ஆசை இல்ல. இப்போ பண்ணிடலாமா?” எனக் கேட்டான்.

“ஐயோ, இந்த வயசுல சேன்ஸே இல்ல. போங்க...” என முறைத்தவள், “சரி போதுமா? நான் ட்ரெஸ்ஸை மாத்துறேன்!” என நகரச் சென்றவளின் முன்னே நின்றவன், “அஹம்... ஏன்டி, இங்க ஒருத்தன் இருக்கானே, அவனை மதிக்கிறீயா நீ?” என்றவனை இவள் புருவம் சுருங்கப் பார்க்க, “அது... ஹக்கும்... இந்த ட்ரெஸ்ல உன்னை அன்பேக் பண்ணணும்னு ரொம்ப நாள் ஆசை!” என்றவனின் பேச்சில் துளசியின் முகம் சிவந்து போனது.

“சீ... ரொம்ப நாள் ஆசைன்னா... ஹம்ம்... எப்போதுல இருந்து?” என அவள் கேட்டத் தோரணையில் இவனுக்கு முகம் முழுவதும் விஷமப் புன்னகை‌. அதிலே புரிந்தவளின் முகம் குப்பென சிவந்தது.

“சீ... டேர்டி பாயா நீங்க... ரொம்ப கண்ணியமானவரு, ஜென்யூன் பெர்சன்னு நினைச்சுதானே உங்கக் கிட்ட பழகுனேன்?” என அவள் முறைக்க, “ஏய்... அது... அப்போ நினைக்க மட்டும்தானே டி செஞ்சேன். மத்தபடி நான் குட் பாய். உன்கிட்ட கண்ணியமாதானே நடந்தேன்!” என்றான் சமாளிப்பாக.

“சமாளிக்காதீங்க...” என முறைத்தவளை இடையோடுத் தூக்கியவன், அந்த அறையில் சமீபகாலமாக முளைத்தக் கட்டிலில் பொத்தென விழவும், இருவருக்கும் சிரிப்பு வந்தது.

“கெட்டப் பையன் இந்த இளா...” என்றவளின் பேச்சை தடை செய்திருந்தான் இளவேந்தன். மாட்டேன், முடியாது என சிணுங்கி, கெஞ்சி, கொஞ்சி என துளசி முழுவதும் வேந்தன் வசம்தான். தன்னுடைய ஆசைகள் அனைத்தையும் மனைவியிடம் நிறைவேற்றியவனைப் பார்க்க முடியாது முகத்தை அவனது புஜத்தில் மறைத்தாள் பெண்.

“ஏய்... என்னடி புது பொண்ணு மாதிரி இந்தளவு வெட்கப் பட்ற. அப்போ கூட இப்படியெல்லாம் இல்லயே!” எனப் பேசியவன் வாயிலே ஒரு அடி போட்டாள் துளசி.

“ரொம்ப பேசுறீங்க...” என்றவள் நினைவு வந்தவளாக, “இப்போவாது உங்க அப்பாகிட்ட என்ன சொல்லி சம்மதம் வாங்குனீங்கன்னு சொல்லலாம் இல்ல. வாயைவே திறக்க மாட்றீங்க!” என நொடித்தாள்.

“அது எங்கப்பாவுக்கும் எனக்கும் இருக்க சீக்ரெட்னு சொன்னீங்க, கொன்றுவேன்!” என வேந்தன் ஆரம்பிக்கும் முன்பே முடித்தவளைக் கண்டு அவனது கண்ணோரம் புன்னகையில் சுருங்கி விரிந்தது.

“ஹம்ம்... நான் சொல்லணும்னா, நீ எனக்கு ஒரு ஃபேவர் பண்ணணுமே ஷிவா!” என்றவனை சந்தேகமாகப் பார்த்தவள், “என்ன பண்ணணும்?” என ஆராய்ச்சியாகக் கேட்டாள்.

“அது... இந்த ட்ரெஸ்ஸை நான் எப்போ சொன்னாலும் போட்டுக்கணும்!” என அவன் முடிக்கும் முன், “ஐயோ... சாமி. நீங்க சொல்லவே வேணாம்!” என அலறியபடி நகர்ந்தவளைக் கண்டு இவனுக்கு சிரிப்பு பொங்கியது.

“சரி... சரி. பயப்படாத டி!” என இழுத்தணைத்தவன், “சொல்றேன். என் அப்பாவுக்கு நான் பாலிட்டிக்ஸ்ல இன்வால்வ் ஆகணும்னு ஆசை. எனக்கு இந்தப் பொண்ணு துளசி மேல ஆசை. சோ, ரெண்டு பேரோட ஆசையை ம்யூட்சவலா ஓகே பண்ணிட்டோம்!” என்றான் தோளைக் குலுக்கி.

“ஓஹோ... பாலிடிக்ஸ் போக ஐயாவுக்கு ஐடியா இருக்கோ?” என இவள் இழுக்க,

“ஆமா... பின்னே, எம்.எல்.ஏ, எம்.பி,
மினிஸ்டர்-னு நிறைய ஆசை இருக்கே!” என வேந்தன் கூற, “ஓஹோ...” என்றாள் இவள்.

“அப்புறம் இந்த ஷிவதுளசி மினிஸ்டரோட பொண்டாட்டி!” என மனைவியை வாசம் பிடித்தான்.

“ரொம்ப பெரிய ஆசைதான் போங்க...” இவள் அவன் செயலில் சிணுங்க, “ஹம்ம்...” என்று முனங்கியவன் தன் செயலில் கவனமாக, ரித்விக் அழும் சத்தம் இருவரையும் அடைந்தது.

“இளா... குழந்தை அழுறான் பாருங்க...போங்க, போய் சமாதானம் பண்ணுங்க!” என துளசி கூறும் முன்னே எழுந்து உடையை சரி செய்துவிட்டு அவன் அகன்றிருக்க, இவளுக்கு முறுவல் பூத்தது.

துளசி பொறுமையாக உடை மாற்றி வர, இளவேந்தன் குழந்தையை தோளில் போட்டு சமாதானம் செய்தவாறிருந்தான்.

“ரித்து செல்லம்... பசிச்சிருச்சா உங்களுக்கு? அம்மா வேணுமா?” என்றவளைப் பார்த்து சின்னவன் உதட்டைப் பிதுக்கி ஏங்கியழத் தொடங்க, அவனை வாங்கி மடியில் கிடத்தியவள் பசியாற்றத் தொடங்கினாள். கைகள் குழந்தையின் தலையைக் கோதிய வண்ணமிருக்க, இளவேந்தன் குழந்தையையும் தாயையும் ரசித்த வண்ணமிருந்தான். உதடுகள் வற்றாத புன்னகையை உதிர்த்தன. அவர்களுக்கான நிறைவு இந்த வாழ்க்கை, சுக துக்கங்கள் என அனைத்தும் அடக்கம். நேசம் என்னும் பிணைப்பும் தங்கள் இணையின் மீதான புரிதல், அன்பு, மரியாதை அவர்களை இந்தப் பந்தத்தில் கடைசிவரை இணைத்திருக்கும்.

சுபம்
 
Top