• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,168
Reaction score
3,348
Points
113
தூறல் – 23

துளசியின் பிறந்தநாள் முடிந்து சில தினங்கள் கடந்திருக்க, அவள் நடனப்பள்ளி வரவேயில்லை. இளவேந்தனுக்கும் அவள் வராததற்குக் காரணம் தெரியவில்லை. இரண்டு நாட்களாய் தொடர் அழைப்புகள், குறுஞ்செய்தி மூலம் அவளைத் தொடர்பு கொள்ள முனைய, எதிலுமே துளசி அகப்படவில்லை. இவனுக்கு யோசனையோடு மெல்லிய கோடாய் பதற்றமும் வந்திருந்தது.

பிறந்தநாளன்று அவளது செய்கையையும் இப்போது அவளது இன்மையும் தானாய் மனம் இணைத்துப் பாலமிட பதறித்தான் போனான். உடல்நிலை சரியில்லாது இருக்குமோ, வீட்டில் எதாவது பிரச்சனையாக இருக்குமோ என கற்பனைப் புரவி நான்கு பக்கமும் தாவ, அதைப் பிடித்துக் கட்டி வைத்தவன், இன்னும் ஒரு நாள் பார்த்துவிட்டு, அவள் வீட்டிற்கு சொல்லலாம் என முடிவெடுத்திருந்தான்.

ஆனால் மறுநாள் துளசி அவனுக்கு குறுஞ்செய்தியில் பதிலளித்திருந்தாள். வீட்டில் சில பிரச்சனைகள் காரணமாக நடனப்பள்ளி வரவில்லை என்றும், சீக்கிரம் சந்திப்போம். அதுவரை அழைக்கவோ நேரில் சந்திக்க முயற்சிக்கவோ வேண்டாமென கூறியிருக்கவே, இவன் சற்றே நிதானித்தான். அவளுடைய சூழ்நிலை எவ்வாறு இருக்கிறது எனத் தெரியாது தானும் அவளைத் தொந்தரவு செய்யக் கூடாதென அமைதிகாத்தான்.

ஒரு வாரம் ஓடியிருக்க, இளவேந்தனை எப்போதும் அவர்கள் செல்லும் அவிநாசியப்பர் கோவிலுக்கு அழைத்திருந்தாள். இளாவும் அவள் கூறிய நேரத்திற்கு முன்பே அவளுக்காகக் காத்திருந்தான். ஒரு வாரப் பிரிவு கொஞ்சம் ஏக்கத்தை உருவாக்கியிருந்தது.

இவன் வாயிலையே பார்த்திருக்க, சில பல நிமிடங்களில் துளசி வந்து நின்றாள். ஒரு வாரத்திலே தேகம் இளைத்து, முகம் கருத்திருக்க, விழிகள் உள்ளே சென்றிருந்தது. அவனுக்கு அவளை இப்படிக் கண்டதும் அடிவயிற்றிலிருந்து ஏனோ பயபந்து சுழன்றது.

“ஷிவா...” என வேந்தன் பதறிப் போய் அவளருகே செல்ல, சோபையாய் புன்னகைக்க முயன்றவளின் விழிகளில் மெலிதாய் நீர் கோர்க்கத் தொடங்கியது. இவனைக் கண்டதும் இத்தனை நேரமிருந்த உறுதியெல்லாம் மெதுமெதுவாக உதிர்வதாய் ஒரு எண்ணம். விழிகளில் உருண்டு திரண்ட நீரை இமை சிலுப்பி உள்ளிழுத்தவள், “எப்படி இருக்கீங்க இளா?” என புன்னகைக்க முயன்று தோற்ற உதடுகளுடன் வினவினாள்.

“என்னாச்சு டி... ஏன் இப்படி இருக்க? வீட்ல என்ன பிராப்ளம்? எதுவும் பெரிய பிரச்சனையா?” என பதற்றம் மேவ அடுக்கடுக்காய்க் கேள்வி கணைகளை எய்தியவனைப் பார்த்து அதிராமல் புன்னகைத்தவள், “இளா, ரிலாக்ஸ். ஏன் இவ்வளோ பதட்டம்? ஒன்னும் இல்ல. வாங்க சாமி கும்பிட்டுட்டு அப்புறம் பேசலாம்!” என்றாள்.

இளவேந்தன், “ஷிவா...” என அவள் தோளைத் தொட, லாவகமாய் முன்னே நகர்ந்தவள், “வாங்க இளா, உள்ள போகலாம்...” என நடக்க, இவன் எதுவும் உரைக்காது அவளுடன் சென்றான்.

விழிகளை மூடி கடவுளை தரிசித்த துளசியின் கண்களிலிருந்து உவர்நீர் வழிந்தது. ‘கடவுளே! நான் எடுத்தது சரியான முடிவா? இல்ல தப்பான்னு கூட எனக்குத் தெரியலை. எதுனாலும் நீங்கதான் துணைக்கு இருக்கணும். இளா பாவம், என்னால காயப்பட போறாரு. ஆனால், என் சூழ்நிலை அப்படி. மன்னிச்சிடுங்க இளா!’ என வேண்டியவளின் தொண்டையில் இப்போதே பேச வேண்டிய வார்த்தைகள் முள்ளாய் குத்தின. அதை உதிர்க்கப் போகும் தனக்கே இத்தகைய வலியென்றால், அவ்வார்த்தைகளைக் கேட்கும் இளவேந்தன் எப்படி உடைந்து போவான், காயம்படுவானென கண்கள் இன்னுமே கரித்தன.

இளவேந்தனின் பார்வை முழுவதும் துளசியிடம்தான். அவள் கண்களிலிருந்து வழியும் சூடான திரவத்தில் இவனுக்கு மூளை சூடாகிப் போயிருந்தது. இந்தப் பெண் ஏன் இத்தனை தாமதிக்கிறாள் எனக் கோபம் வந்தாலும், அவளது சூழ்நிலையை மனதில்கொண்டு ஏதும் செய்யவில்லை.

கடவுளை தரிசித்துவிட்டு இருவரும் ஓரிடம் தேடி அமர்ந்தனர். அவளே கூறுவாள் என அவன் காத்திருக்க, சில பல நிமிடங்கள் கடந்தும் துளசியின் வாய்ப்பூட்டு திறக்கவில்லை. பொறுமையிழந்தவன், “என்னாச்சு டி... வாயைத் திறந்து பதில் சொன்னா தானே தெரியும்?” எனக் குரலை உயர்த்தினான்.

“அது‌‌... ஃபேமிலி இஷ்ஷூ இளா!” அவன் முகத்தைப் பார்ப்பதை தவிர்த்தாள்.

“முதல்ல என் முகத்தைப் பார்த்து பேசு ஷிவா...” என்றவன் அவள் நாடிப்பிடித்து தன் புறம் திருப்ப விழைய, கையைத் தட்டிவிட்டாள்.

“என்னாச்சு ஷிவா?” அழுத்தமாய்க் கேட்டவனின் குரலில் பதில் வந்தே தீர வேண்டுமென்ற கட்டாயம் புதைந்திருக்க, இவளது உதடுகளில் கசந்த முறுவல்.

“ப்ம்ச்... அப்பா ஒரு லேண்ட் வாங்கி இருந்தாரு இளா, நான் கூட உங்ககிட்ட சொன்னேனே. நான் ஃபர்ஸ்டா டிசைன் பண்ணி ஹோட்டல் கட்டப் போறோம்னு. அங்கதான் பிரச்சனை. நாங்க வச்சிருக்க பத்திரம் ஒரிஜினல் இல்ல. அப்பாவை யாரோ ஏமாத்திட்டுப் போய்ட்டாங்க. அதனால கடன் அதிகமாகிடுச்சு. அவருக்கும் கொஞ்சம் உடம்புக்கு முடியலை!” என இயந்திரக்கதியில் கூறி முடித்தவளின் கன்னத்தை கண்ணீர் நனைத்தது.

“ச்சு... ஷிவா, அழாத டி...” என அவள் கண்ணீரைத் துடைத்து கரங்களை எடுத்துத் தன் கைகளில் புதைத்தவன், “ஏதா இருந்தாலும் ஃபேஸ் பண்ணிக்கலாம் டி. நான் இருக்கேன்ல. நம்ப ரெண்டு பேரும் சேர்ந்து எல்லாத்தையும் சரி பண்ணலாம். நான் என் சைட்ல என்ன பண்ணறதுன்னு பார்க்குறேன் டா. நீ எல்லாத்துக்கும் அழாத. அழுகுறது நம்பளை வீக் ஆக்கும்!” என மென்மையாய் கைகளைத் தட்டியவனைப் பார்த்து இவளுக்கு குபுகுபுவென ஏதோ உணர்வொன்று நெஞ்சை அடைத்தது.

குளம் கட்டிய விழிகளுடன் அவனைப் பார்த்து புன்னகைத்தவள், “இளா, எனக்கொரு உதவி பண்றீங்களா?” என வேதனையான குரலில் கேட்டாள். அடுத்துப் பேசப் போகும் வார்த்தையில் இவன் எப்படி துடித்துப் போவான் என மனம் ஊமையாய் அழுதது.

“சொல்லு டி... என்ன ஹெல்ப் வேணும். அண்ணா கிட்டே, இல்ல அப்பாகிட்டே பேசுறேன். லீகலா ஆர் இல்லீகலா, எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம்...” என அவன் அக்கறையாய் உரைத்ததில், இவளுக்கு கண்கள் மேலும் மேலும் கரித்தன.

“இளா, நான் பேசுறதை கொஞ்சம் கோபப்படாம கேளுங்க. நான் எப்பவுமே நம்ப ரெண்டு பேரோட நல்லதுக்கும்தான் யோசிப்பேன்” என்றவளை இளவேந்தன் கேள்வியாய்ப் பார்த்தான்.

அடைத்த தொண்டையை சரிசெய்து இமையை சிலுப்பி நீரை விரட்டி அவன் முகத்தை ஆழ்ந்து பார்த்தவள், “நம்ப பிரிஞ்சுடலாம் இளா...” என்றாள். இளவேந்தன் என்ன பேசுகிறாள் இவள் எனப் புரியாது அவளை நோக்கினான். சத்தியமாய் அவள் கூற்றின் சாராம்சம் இவனது மூளையை எட்டவில்லை.

அவன் முகத்தின் பாவனைகளை படிக்க முயன்று கொண்டே, “இந்தக் காதல் வேணாம் இளா. நம்ப... நம்ப ரெண்டு பேரும் சேர்றது சரி வராது. ஏற்கனவே வீட்ல நிறைய பிரச்சனை. அதோட இதையும் சேர்த்து என் குடும்பத்து மேல ஏத்த விரும்பலை. அம்மா நிலம் கையைவிட்டுப் போனது, அப்பாவுக்கு உடம்பு சரியில்லாம போனதுன்னு ரொம்ப உடைஞ்சு போய்ட்டாங்க. இதுல... இதுல நான் காதல் அது இதுன்னு போய் நின்னா மொத்தமா உடைஞ்சுடுவாங்க. அம்மா, அப்பா, தங்கச்சின்னு எல்லாத்தையும் பார்த்துக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கு. அதுல இருந்து என்னால விலக முடியாது... மோர் ஓவர் நீங்க... ஐ மீன் உங்களையும் என்னால கஷ்டப்படுத்த முடியாது. என்னோட சுமை, கடமையை நான் பார்த்துக்கிறேன்!” ஒரு வழியாய் மனதிலிருந்ததை ஒப்பித்துவிட்டாள். எதிலிருந்தவனிடம் எந்த எதிர்வினையும் இல்லாது போனதில் உள்ளம் பதறியது.

இளவேந்தனுக்கு அவள் கஷ்டத்தில் ஏதோ புரியாது உளறுகிறாள். சில நாட்களில் அவளே தெளிந்து விடுவாள் என்ற எண்ணம். அவள் பேச்சின் பின்னிருக்கும் உறுதியை உணரவில்லை. பெருமூச்சை வெளிவிட்டவன், “ஷிவா, இப்போ நீ ரொம்ப பிரஷர்ல இருக்க. அதனால்தான் இப்படி பேசுற. நான் வீட்டுக்குப் போனதும் எங்க ஆபிஸ் அட்வகேட்கிட்டே பேசுறேன். அடுத்து என்ன பண்றதுன்னு கேட்கலாம்...” என்றான் தன்மையாய்.

தலையை இடம் வலமாக வேண்டாம் என்பது போல அசைத்தவள், “நோ இளா, அதெல்லாம் வேண்டாம். நானே பார்த்துக்கிறேன். நீங்க இதுல தலையிடாதீங்க...” குரலில் அத்தனை மறுப்பு.

“தனியா உன்னால எதையும் ஹேண்டில் பண்ண முடியாது ஷிவா. நீ திடீர்னு இப்படி நடந்ததுல அதிர்ச்சில இருக்க. அதுலருந்து வெளிய வா. அதுக்குள்ள நான் ஏதாவது பண்றேன்...”

“நான் சொல்றது உங்களுக்குப் புரியலையா இளா. நீங்க என் விஷயத்துல வராதீங்க. ஐ கேன் ஹேண்டில். இதுதான் நம்பளோட கடைசி சந்திப்பா இருக்கும். இனிமே நோ மீட்டிங், நோ கால்ஸ், நோ சேட்ஸ்...” என்றாள் அழுத்தமாய்.

“வாயை மூட்றி... லூசு மாதிரி உளறீட்டு!” எரிச்சல் மிகுந்த குரலில் உரைத்தவன், “இதைப் பத்தி ரெண்டு நாள் கழிச்சு பேசிக்கலாம். முதல்ல எழு நீ!” எனக் கையை நீட்டியவனை தவிர்த்துவிட்டு தானே எழுந்தாள்.

“சாப்டீயா டி... முகமெல்லாம் வத்திப் போச்சு!” என்றவனின் பார்வை புசுபுசுவென இருக்கும் கன்னம் வற்றிப் போயிருந்ததில் நிலைத்தன. அதட்டலாயினும் அன்பான வார்த்தைகள் இவளை உடைக்கப் போதுமானதாய் இருந்தன. உதட்டைக் கடித்து மெல்லிய கேவலை அடக்கியவள் அவன் முகம் பார்க்காது விறுவிறுவென வெளியேறி இருசக்கர வாகனத்தில் பறந்துவிட, வேந்தனிடம் பெருமூச்சு எழுந்தது. இரண்டு நாட்களில் அவள் இயல்பாகிவிடுவாள் என்றவனின் எண்ணத்தை துளசி பொய்யாக்கி இருந்தாள்.

ஆம்! அவனை சந்திக்கும் அனைத்து வழிகளையும் முடக்கி இருந்தாள். அலைபேசி தொடர்பில் கூட அவனது இலக்கத்தைக் கருப்பியிருக்க, வேந்தனுக்கு கோபம்தான். நடனப்பள்ளியும் வராதுப் போனவளை எங்கும் காணாது தவித்துப் போயிருந்தான். வீட்டிற்கு சென்று நிற்க மனதில்லை. ஏற்கனவே இருக்கும் பிரச்சனைகளில் தானும் எதையும் இழுத்து வைக்க வேண்டாம் என பல்லைக் கடித்து சில நாட்கள் பொறுத்துக் கொண்டான். துளசியால் வேந்தன் இன்மையை தாங்கிக்க கொள்ள முடிந்தது. ஆம்! தந்தைக்கு இப்படியானதில் முற்றிலும் உடைந்திருந்த தாயை இவள்தான் தேற்றினாள்.

“ம்மா... ஏன் மா இப்படியே இருக்க. எல்லாத்தையும் சீக்கிரம் சரி பண்ணிடலாம் மா. பணம் தானே? அதெல்லாம் சம்பாரிச்சுடலாம். இப்போதைக்கு உன்கிட்ட இருக்க நகையெல்லாம் வித்துடலாம். இன்னும் வேணும்னா வீட்டு மேல கடன் வாங்கிக்கலாம் மா. அப்பாவை நல்ல ஹாஸ்பிடல்க்கு கூட்டீட்டுப் போய் ட்ரீட்மெண்ட் பார்க்கலாம். நான் இருக்கேன் மா. அப்பா இடத்துல இருந்து என்னால முடிஞ்சளவுக்கு குடும்பத்தைப் பார்த்துப்பேன் மா. நீ... நீ மட்டும் இப்படி உடைஞ்சு உட்காராத மா. சோனி பாவம், அவளும் அழுதுட்டே இருக்கா. நீ தானே அவளைப் பார்த்துக்கணும்!” ஒருவாறு நடந்ததை ஏற்றுக்கொண்டு தன்னை உறுதிப்படுத்திய துளசி தாயைத் தேற்றியிருந்தாள். வசுமதியும் ஓரளவுக்கு நிதர்சனத்தை உணர்ந்தார்.

வெறும் வாய் வார்த்தையாக அல்லாது துளசி கூறியது போலவே வசுமதி நகைகளை விற்று கொஞ்சம் பணத்தை சேர்த்தவள், வீட்டின் பத்திரத்தை எடுத்துக்கொண்டு வைரமுத்துவிடம் சென்று நின்றாள். வங்கியில் கடன் பெற நீண்ட நாட்களாகும் என அவரிடம் சென்றாள். தந்தையின் நண்பன் என்ற வகையில் அவரை நன்கு பரிச்சயம் எனவும் அவரிடம் உதவி கேட்க, வைரமுத்துவிற்கும் இவர்களது சூழ்நிலை புரிந்திருக்க, பத்திரத்தை வாங்கிக்கொண்டு பணம் கொடுத்து உதவி செய்தார்.

கண்ணப்பன் வாங்கிய மொத்தக் கடனையும் அடைத்தவள், வசுமதியுடன் சேர்ந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாள். உடனடியாக அவரை சரிசெய்ய முடியாதென்றும், சிறிது காலமாவது தேவைப்படும் என்றவரின் பரிந்துரையின் பேரில் அங்கேயே மருந்து மாத்திரைகளை வாங்கிக் கொண்டு கண்ணப்பனை அழைத்துக்கொண்டு வீடு சேர்ந்தனர். அவரது கத்தல்கள் கூச்சல்கள் தாங்காது மனிதர் தனி அறையில் அடைக்கப்பட, துளசி உள்ளம் வெதும்பிப் போனாள்.

இதற்கிடையில் கல்லூரி இறுதி தேர்வுகள் வந்துவிட, அதற்குத் தயாரானாள். நல்லபடியாக தேர்வை முடித்தால் தான் வேலையில் அமர முடியுமென எண்ணி முடிந்தளவு கவனத்தை அதில் செலுத்தினாள். இத்தனை பிரச்சனைகளுக்கு இடையில் இளவேந்தன் பின்னகர்ந்திருந்தான். அவனைப் பற்றிய நினைவை துளசி சர்வ நிச்சயமாய் தவிர்க்கவில்லை. நினைக்க நேரமின்றி போனதுதான் நிதர்சனம். எப்போதாவது எழும் நினைவு என்றாலும் அதை விரட்டிவிடுவாள். ஆனாலும் அவளது கண்ணீர் தலையணை மட்டுமே அறிந்த ரகசியம்.

அன்றைக்கு துளசிக்கு முதல் தேர்வு. அவள் பரிட்சை முடிந்து வரும் நேரத்திற்கு சரியாய் இளவேந்தன் கல்லூரி முன்பு நின்றான். யாரிடமும் பேசாதவள் பையை தோளில் மாட்டிக்கொண்டு வெளியேற செல்ல, இளவேந்தனைக் கண்டதும் ஒரு நொடி அதிர்ந்து போனாள். அவன் வருவானென மனம் எதிர்பார்தது என்னவோ உண்மை.

அவனைக் கண்டும் காணாதது போல அவள் நடக்க, அதில் கோபம் வந்தாலும் இளவேந்தன் அவளுக்கு அருகில் சென்றான்.

“எக்ஸாம் எப்படி எழுதியிருக்க ஷிவா?” எனக் கேட்டவனிடம் அவள் வாயைத் திறக்கவில்லை.

“இப்போ அப்பா எப்படி இருக்காரு. பிராப்ளம் சால்வ்டா?” என மீண்டுமொரு கேள்வியைக் கேட்டான். இவள் பதிலளிக்காது நகர, கையைப் பிடித்திழுத்தவன்,
“நான் லூசு மாதிரி பேசீட்டு இருக்கேன். அமைதியா போனா என்ன அர்த்தம் டி?” எனப் பல்லைக் கடித்தான்.

அவன் கையை உதறிய துளசி, “உங்களுக்கான பதிலை நான் ஏற்கனவே சொல்லிட்டேன் இளா. என்னைப் பார்க்க வராதீங்க பேசாதீங்கன்னு!” என்றவளைப் பார்வையால் எரித்தவன், “ஷிவா, நீ தெரியாம பேசுற டி...” என்றான் இழுத்துப் பிடித்தப் பொறுமையுடன்.

“நான் தெரியாம பேசலை இளா. நல்லா தெரிஞ்சு, புரிஞ்சுதான் பேசுறேன். நம்ப ரெண்டு பேரோட நல்லதுக்குத்தான் நான் எடுத்த முடிவு!” துளசி பேச்சில் மெதுவாகக் கோபம் எட்டிப் பார்த்தது.

“நீ எடுத்த முடிவுல எனக்கு உடன்பாடில்லை...” சீறலாய் உரைத்தான்.

“ப்ம்ச்... உங்களுக்கு புரியலையா இளா. இதை ரெண்டு பேரும் அக்செப்ட் பண்ணிதான் ஆகணும்!”

“இந்த மாதிரி சின்ன காரணத்துக்காக என்னை விட்டுக் கொடுக்க முடிவு பண்ணிட்டீயா டி? ஒரு வருஷமோ, ரெண்டு வருஷமோ பிராப்ளம் தீர்ந்துடும். ஆனால், ஒருதடவை வேண்டாம்னு விட்டுட்டா, வாழ்க்கைப் பூராம் கவலைப்படணும் துளசி. நான் சொல்றதைப் புரிஞ்சுக்க ட்ரை பண்ணு. மணி இஸ் நாட் அ பிக் டீல்...”

“யெஸ், அது உங்ககிட்ட இருக்கதால பிக் டீல் இல்ல. இதுவே பணம் இல்லாம கஷ்டப்பட்டிருந்தா பிக் டீலா இருந்திருக்கும்!” என்றவளுக்கு அவனிடம் இப்படி பேச வலித்து தொலைத்தது.

“ச்சு... பணம், அதை சம்பாரிச்சுடலாம் ஷிவா. பட், நான்... நான் நீ இல்லாம இருக்க மாட்டேன் டி. விட்றாதீங்க இளான்னு என் காதுக்கிட்டே நீ அழுத சத்தம் இன்னும் கேட்டுட்டே இருக்கு டி. அவ்வளோ ஈஸியா தூக்கிக் கொடுக்க நான் ரெடியா இல்ல!” என்றவன் குரலில் வேதனை மண்டிக் கிடக்க, இவளுக்கு அழுகை வரப் பார்த்தது.

முகத்தில் எதையும் காட்டாதவள், “விட்டுடாதீங்கன்னு சொன்ன நான்தான் இப்போ விட்டுடுங்கன்னு சொல்றேன். நீங்க இல்லாம என்னால வாழ முடியும் இளா! என் குடும்பம், அவங்களை... இப்படியொரு சிட்சுவேஷன்ல நான், என் காதல்தான் பெருசுன்னு சுயநலமா யோசிக்க முடியலை!” என்றவளின் பேச்சில் இளவேந்தன் காயம்பட்டுப் போனான். பேசியவளும் அனலிடைப்பட்ட புழுவாய்த் துடித்துக் கொண்டிருந்தாள் என்பது அவள் மனம் மட்டுமே அறிந்த ரகசியம்.

“அப்போ இந்த இளா உனக்கு வேணாம் ரைட்?” என அழுத்தமாகக் கேட்டவனை நிமிர்ந்து பார்த்தவளின் விழிகளில் குபுகுபுவென நீர் நிறைந்தது. வார்த்தையால் உரைக்காதவள், தலையை மட்டும் அசைத்தாள்.

“வாயைத் தொறந்து சொல்லு டி...” ரௌத்திரமாய்க் கேட்டான்.

ஒரு நொடி உருண்டையாய் அடிவயிற்றிலிருந்து தொண்டையை அடைத்த உணர்வை உள்ளே தள்ளியவள், “எனக்கு இந்த இளா வேணாம். ஆமா, நான் உங்களை காதலிச்சேன், காதலிக்கிறேன். ஆனால், என்னோட சூழ்நிலை இப்படியொரு இடத்துல நிறுத்திடுச்சு. முடியலை இளா, வீட்டையும் பார்த்து உங்களையும் என்னால சமாளிக்க முடியலை. காதல்தான் பெருசுன்னு கண்ணை மறைச்ச திரை விலகிடுச்சு. இப்போ பூதாகரமா இருக்கது பணப் பிரச்சனை, குடும்பம். இது ரெண்டும் தான் பிரதானமா இருக்கு. உங்க காதலுக்கு மதிப்பு கொடுக்க முடியாத நிலைமை என்னோடது. நான் ரொம்ப அதிகமா நேசிச்ச உங்களை வேணாம்னு என் வாயாலே தூக்கிப் போட வச்ச விதியை நினைச்சு அழுகை வருதுதான். பட், நான் மூவ் ஆன் ஆகணும். நீங்க... நீங்க என் வாழ்க்கைக்கு வேணாம்!” நெஞ்சடைக்க உரைத்தவள் அவன் கையை எடுத்து தன் தலை மீது வைத்தாள்.

“என் மேல சத்தியம்... இனி... இனிமே நீங்க என்னை பார்க்கவோ, பேசவோ முயற்சி செய்யக் கூடாது!” என துளசி கூறியதும் தீச்சுட்டது போல கையை உதறி அவளை வெறித்தான் இளவேந்தன்.

அவளருகே நகர்ந்து முழங்கைக்கு மேலே பற்றியவன், “இப்போ சொல்றேன் கேட்டுக்கோ டி. நானா உன்னைப் பார்க்கவோ, பேசவோ ட்ரை பண்ண மாட்டேன். ஆனால், என் கண்ல அடுத்த தடவை நீ பட்டுட்டா, என்னை இளான்னு கூப்பிட்டுட்டா... இந்த ஜென்மத்துல நீதான் எனக்குப் பொண்டாட்டி. அதை கடவுளே நினைச்சாலும் மாத்த முடியாது!” என அவளை உதறித் தள்ளிவிட்டு சென்றவனின் இமையோரம் மெலிதாய் நீர் கோர்த்து தொலைத்தது.

“சாரி இளா... சாரி. நீங்க நல்லா இருக்கணும். என் பிரச்சனை என்னோட போகட்டும். காதல்னு எதையும் காம்ப்ளிகேட் பண்ணிக்க வேணாம். உங்களுக்கு நல்ல வாழ்க்கை அமைய நான் கடவுள்கிட்டே வேண்டிக்கிறேன்!” என மனம் வலிக்க வலிக்க இளவேந்தனிடம் காதலை ரத்து செய்திருந்தாள் பெண். அவளைக் காணக் கூடாது என்று தான் இளவேந்தன் வெளி நாட்டிற்கு சென்றுவிட்டிருந்தான்.

நடந்ததை நினைத்துப் பார்த்தபடி படுத்திருந்த துளசியின் கன்னங்கள் நனைந்தன. அதை துடைக்கத் தோன்றாது கட்டிலிலே படுத்திருந்தாள். மதியத்திலிருந்து இப்படியே அசையாது படுத்திருந்தாள்‌.

இரவு கவிழவும் இளவேந்தன் வீட்டிற்குள் நுழைந்தான். காலையில் நடந்த பிரச்சனையே மூளையைக் குடைந்து கொண்டிருந்தது. முகம் முழுவதும் யோசனையுடன் வந்தவனைப் பார்த்த நளினி, “ஏன் டா, உனக்கும் அவளுக்கும் எதுவும் பிரச்சனையா? துளசி முகமே சரியில்லை. அழுதுருக்கா, புள்ளைதாச்சி பொண்ணு டா. மதியமும் சாப்பிடலை. நைட்டும் சாப்பிடலை!” என்றவர் மகனைக் குற்றம் சாட்ட, முகத்தில் எரிச்சல் பரவியது. அவர் கொடுத்த தேநீரைக் கூடப் பருகாது அப்படியே எழுந்து சென்று அறைக் கதவைப் பட்டென அடைத்தான்.

அவன் வருகை உணர்ந்தாலும், துளசி அசையாது படுத்திருந்தாள். கன்னத்திலிருந்த தடயங்கள் அவளது உவர் நீரைப் பறைசற்றின.

“ஏன் சாப்பிடலை?” என முன்னே நின்று கேட்டவனை இவள் சட்டை செய்யவில்லை.

“உன்கிட்ட தான் கேட்குறேன் துளசி, ஏன் சாப்பிடலை?” எனப் பல்லைக் கடித்தான். அதில் மெதுவாய் அவனை நிமிர்ந்து பார்த்தவள், “பசிக்கலை, சாப்பிடலை!” என்றாள் விட்டேற்றியாக.

“அதெப்படி பசிக்காம போகும். என் கோபத்தைக் கிளறாம சாப்பிட வா டி!” என்றவனை முறைத்துப் பார்த்துக்கொண்டே எழுந்து அமர்ந்தவள், “இந்த அக்கறை எனக்கா? இல்ல உங்கக் குழந்தைக்கா?” என அழுத்தமாய்க் கேட்டாள்.

இளவேந்தன் பதிலளிக்காது முகத்தைத் திருப்ப, “ஏன் பதில் சொல்ல மாட்றீங்க. ஐ க்நோ, இது என் மேல இருக்க அக்கறை இல்ல. ப்யூர்லி உங்கக் குழந்தை மேல இருக்க பாசம்...” என்றவள் சில நொடிகள் நிறுத்தி, “முகத்தைப் பார்த்துக் கூடப் பேசாத முடியாதவரு,
அப்படியொன்னும் சகிச்சுட்டு என் கூட வாழத் தேவையில்லை...” என்றாள் கோபமாய். அதில் அவள்புறம் திரும்பியவன் அனலாய் முறைத்தான்.

“என்னை என் அம்மா வீட்ல கொண்டு போய் விட்டுடுங்க!” துளசி கூற, “முடியாது...” என நொடியில் பதிலளித்தான்.

“அப்போ நடந்ததை மன்னிச்சு ஏத்துக்கோங்க..‌.”

“முடியாது!” என்றவனின் குரலில் எரிச்சலானவள், “அப்போ என்னாலயும் சாப்பிட முடியாது. இதுக்கொரு தீர்வு கிடைக்காம நான் சாப்பிட மாட்டேன்!” என அடமாய் நின்றுவிட்டாள். இளவேந்தனுக்கு சுறுசுறுவென கோபம் பொங்கியது. அதை அடக்கிக் கொண்டிருக்கிறான் எனப் புரிந்தவள், கட்டிலிலிருந்து இறங்கி அவனது கையைப் பிடித்தாள்.

உதறப் போனவனை, “ப்ளீஸ் இளா... ப்ளீஸ், ஒரு ஐஞ்சு நிமிஷம் நான் பேசுறதை கேளுங்க...” என்ற கெஞ்சல் குரல் அவனைக் கொஞ்சம் நிதானிக்க செய்தது.

“சாரி இளா... நான் செஞ்சது தப்புதான். இவ்வளோ நாள் கொடுத்த தண்டனை போதும், முடியலை இளா. நீங்க கோபத்துல அடிச்சு, இல்ல பேசியிருந்தா கூட இவ்வளோ வலிச்சிருக்காது. ஒரே ரூம்க்குள்ள யாரோ எவரோன்னு இருக்கதுக்கு செத்துடலாம் போல இருக்கு. ஆமா, நான் பண்ணது தப்புதான். உங்களால மன்னிக்க முடியலைன்னா, மறந்துடுங்க. இதையே நினைச்சு, நீங்களும் கஷ்டபட்டு எனக்கும் தண்டனை கொடுக்குறீங்க. எப்போதான் நம்ப வாழ்றது. சந்தோஷமா வாழணும்னு தானே கல்யாணம் பண்ணது. இப்படி சண்டை போடவா?” என இறைஞ்சல் குரலில் கேட்டவள், அவன் முன்னே வந்து நின்றாள்.

“என்னை அடிச்சுடுங்க. கோபம் போற வரைக்கும் கூட அடிங்க. பேசாம மட்டும் இருக்காதீங்க இளா!” என்றவளின் விழிகள் பனித்தன. அவளை வெற்றுப் பார்வை பார்த்தவன், “ஏன் டி விட்டுட்டுப் போன?” என இத்தனை வருடங்களுக்குப் பிறகு மனதிலிருந்ததைக் கேட்டிருந்தான். அந்தக் கேள்வியில் துளசி வேதனையுடன் அவனைப் பார்த்தாள்.

“ஏன்டி விட்டுட்டுப் போன? அவ்வளோ ஈஸியா போய்ட்டேனா இந்த இளா. நீதானடி இளா, இளான்னு சுத்தி வந்த. விட்டுடாதீங்க இளான்னு அழுத. அப்படி இருந்தவளை விட்டுட்டு நாலு வருஷம் பைத்தியக்காரன் மாதிரி திரிஞ்சேன். சொந்த ஊரு, குடும்பம்னு எல்லாத்தையும் விட்டுட்டு தெரியாத ஊர்ல போய் லூசு போல சுத்தீட்டு இருந்தேன் டி. யார்கிட்டேயும் ஷேர் பண்ணிக்க கூட முடியலை. நான் உன்னை விட்டுருக்கக் கூடாதோ, நீ தெரியாம பேசுற, புரிய வச்சு கூட இருந்துருக்கணுமோன்னு கில்டினெஸ் வேற. வேணான்னு தூக்கிப் போட்டுட்டுப் போனவளைப் பத்தி எனக்கென்ன கவலைன்னு ஈகோ ஒரு பக்கம். நீ இல்லாத ஒவ்வொரு நாள், வாரம், மாசம் என்ன பண்ணேன், எப்படி போச்சு எதுவுமே எனக்குத் தெரியாது. அப்படியென்ன நான் ஈஸியா போய்ட்டேன்னு ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்த கோபம். அவ்வளோ சீக்கிரம் அது... அது போகாது டி. மூளைக்குள்ள இருந்துட்டே உன் கூடப் பேசாத, நீ என்னை விட்டுட்டுப் போனவன்னு டெய்லி என்னை டார்ச்சர் பண்ணுது. இளா வேணாம்னு நீ சொன்ன வார்த்தை இன்னும் என்னைக் கொல்லுது டி...” என்றவன் குரலில் வேதனை மண்டிக் கிடக்க, அப்படியே கட்டிலில் பொத்தெ
ன அமர்ந்தவன், கைகளில் தலையைத் தாங்கினான். துளசி அவன் வார்த்தைகளில் அதிர்ந்து நின்றிருக்க, அவளது விழிகள் வேகவேகமாய் நனைந்தன.

தூறும்...
 
Top