• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,168
Reaction score
3,348
Points
113
தூறல் – 20

இளவேந்தனும் துளசியும் அறிமுகமாகி ஒரு வருடம் கடந்திருந்தது. மெதுவாய் தொடங்கிய நட்பென்ற உறவு அவர்களையறியாது விருட்சமாய் வளர்ந்து கிளையைப் பரப்பி இருந்தது.

துளசிக்காகவென இளவேந்தன் மாலை துணைக்கு அமர்வது முதல், அவனுக்காக இவள் உணவு சேர்த்து எடுத்து வருவது, எதாவது செய்து தருவது, அவ்வப்போது இரவில் இருவரும் சேர்ந்து நடந்தபடியே தங்களுக்குப் பிடித்த படத்தை, பாடலை விமர்சிப்பது வரை அவர்களது தோழமை தொடர்ந்தது.

இளா நடனப்பள்ளிக்கு வரவில்லை என்றால் துளசி அழைத்துக் கேட்பது தொடங்கிய அவள் எதிர்பார்ப்பை தினமும் தன்னிருப்பின் மூலம் பூர்த்தி செய்தான் அவன்.

அன்றைக்கு வகுப்பு முடிந்து துளசிக்காக இவன் கல்மேஜையில் அமர்ந்து காத்திருந்தான். நீண்ட நேரம் கடந்தும் அவள் வராது போக, பாரதியும் அவளது நண்பியும் இவனைக் கடந்து சென்றனர்.

ஒரு நொடித் தயங்கியபடியே இவனிடம் வந்த பாரதி, “அண்ணா, அது துளசி க்ளாஸ்ல தான் இருக்கா. சுயம்பு.‌.. சுயம்பு சார் நிக்க வச்சுட்டாரு. நீங்க துணைக்குப் போங்கண்ணா!” என்றாள் தடுமாற்றத்துடன். இவனுக்கு அவளது குரலில் இருந்த ஏதோ ஒன்று உறுத்தியது. தலையை அசைத்தவன் நொடியும் தாமதிக்காது அமர்ந்த இடத்திலிருந்து எழுந்து கால்சராயில் படிந்திருந்த தூசியைத் தட்டிவிட்டபடி வேக எட்டுகளுடன் வகுப்பறையை நோக்கி நடந்தான்.

“என்ன துளசி, இந்த மூனு விரல் இப்படி இருக்கணும். இதோ இங்க பாரு, என்னை!” என விளக்கம் கூறி கையைத் தொட வந்தவரை பார்வையால் எட்ட நிறுத்தி, சற்றே நகர்ந்து நின்றாள் பெண்.

அதில் முகத்தை சுளித்த சுயம்பு, “இப்படி பண்ணு...” என மீண்டுமொரு தன் கையால் செய்து காண்பித்தார். துளசி நடனத்தில் கவனமாக, சுயம்புவின் பார்வை அவளை வக்கிர எண்ணங்களுடன் மொய்த்தது. இளவேந்தன் வந்து சில நொடிகள் கடந்திருந்தன.

துளசியின் பார்வைக்கு அவரின் தவறான எண்ணம் புரிந்துதான் இருந்தது. ‘பெப்பர் ஸ்ப்ரே எடுத்து மூஞ்சியில் அடித்து விடுவோமா?’ என முகத்தின் எரிச்சலை வெளிப்படையாகக் காண்பித்து நின்றாள்.

கதவை சாற்றிவிட்டு இளா உள்ளே நுழைய அந்த சத்தத்தில் இவர்களது கவனம் அவனிடம் குவிந்தது. “ஏய், யாரு பா நீ? எதுக்கு உள்ள வர?” சுயம்பு பதற்றத்துடன் கேட்டார். அவன் வந்த தோரணையே அவரை பயப்பட செய்தது.

கையை மடக்கிக் கொண்டு கோபத்தில் பல்லை நறதறத்தவன்,
சுயம்புவின் அருகே சென்று, “ராஸ்கல், இனி எந்தப் பெண்ணையும் தப்பா பார்ப்பீயா?” எனக் கேட்டு அவரது மூக்கிலே ஒங்கி குத்தியிருக்க, பொலபோலவென குருதி வழிந்தது. அவர் அதில் கத்தத் தொடங்க, துளசி நடந்ததில் ஒரு நிமிடம் திகைத்துப் பின் இயல்பிற்கு வந்திருந்தாள்.

“இளா... என்ன பண்றீங்க? விடுங்க அவரை!” என இவள் தடுக்க, “கையை எடு ஷிவா!” என்றான் அவன் கோபமாய்.

“நீங்க முதல்ல அவரை விடுங்க...” என இவள் பதற்றத்தில் கூற, “கையை எடு டி...” என்றான் கர்ஜனையான குரலில். அதில் திடுக்கிட்டவளின் கரங்கள் தன்னால் தளர்ந்து போக, ஆத்திரம் தீரும் வரை அவரை அடித்தவன், ஆங்கில கெட்ட வார்த்தை ஏதோ இரண்டை முணுமுணுத்துவிட்டு நகர்ந்திருந்தான்.

துளசிக்கு என்ன செய்வதெனத் தெரியவில்லை. சுயம்புவைப் பார்த்தவள், ‘உங்களுக்கு இது வேணும்!’ என மனதில் நினைத்துக்கொண்டு தன் பையைத் தோளில் தூக்கிப் போட்டவாறு அவனைப் பின் தொடர்ந்து ஓடினாள்.

“இளா, எதுக்கு தேவையில்லாத பிரச்சனை?” என ஏதோ பேச வந்தவளின் முன்பு கையை நீட்டியவன், “அவன் அப்படி பார்த்து, பேசி உரசுரான். அறிவுக் கெட்டத்தனமா அப்படியே நிப்பியா டி நீ?” என்றான் பல்லைக் கடித்து. அவன் பேச்சில் துளசியின் முகத்தில் கோபம் படர்ந்தது.

“ப்ம்ச்... வார்த்தையை யோசிச்சு பேசுங்க இளா. அந்தாளு அப்படித்தான். அதுக்குத்தான் பெப்பர் ஸ்ப்ரே எடுத்து அடிக்கலாம்னு நினைச்சுட்டு இருந்தேன்!” என்றான் எரிச்சலாய்.

“கிழிச்ச... நீ எடுத்து அடிக்கிறதுக்குள்ள அவன் தடவிட்டுப் போயிருப்பான். அமைதியா நிக்கிறா இவ!” என அவன் கூற, “ஜஸ்ட் ஷட் அப். என்னைப் பார்த்துக்க எனக்குத் தெரியும் இளவேந்தன். நீங்க உங்க வேலையைப் பாருங்க!” என அவனை உறுத்து விழித்துவிட்டு கோபமாக துளசி விறுவிறுவென நடந்து செல்ல, வேந்தன் அவளை முறைத்தான். அவன் பேசிய பேச்சில் இவளுக்குத் தாறுமாறாக கோபம் வந்தது.

'என்னை இப்படியொரு எண்ணத்தில்தான் பொருத்தியிருந்தானா இவன்?' என மனம் உலைக்கலனாகக் கொதித்தது பெண்ணுக்கு. அவனுடனான நட்பைத் துண்டிக்கும் எண்ணம் கூட நொடியில் உதித்திருந்தது. அவன் பேசிய பேச்சில் கோபமும், அதை விட ஆற்றாமையும் பெருக, விழியோரம் ஈரம் படர்ந்தது. அதைத் தட்டிவிட்டுக்கொண்டே அவன் கண்ணிலிருந்து மறைந்திருந்தாள் துளசி.

இருவரும் ஒருவருக்கொருவர் முகத்தைத் திருப்பிக்கொண்டு சென்றுவிட, ஒரு மாதம் எந்தவித தொடர்பும் அற்றுப் போனது. துளசி கல் போல இறுகியிருந்துவிட, வேந்தனால் முடியவில்லை. இடையில் ஓரிரு முறை அவளுக்கு அழைப்பு விடுக்க, அவள் வேண்டுமென்றே துண்டித்துவிட்டாள். அதில் தன்முனைப்பு தூண்டப்பட்டு விட, ‘போடி போ...’ என அவனும் விட்டுவிட்டான்.

இரண்டு மாதங்கள் கடந்திருந்தன.
துளசிக்கு இரண்டு யுகம் போலத்தான் நாட்கள் நகர்ந்தன. ஆனாலும் கோபத்தை இழுத்துப் பிடித்து அவனுடனான அனைத்துத் தொடர்புகளையும் துண்டித்திருந்தாள். ஒருவருக்கொருவர் நேராய் சந்திக்கும் சந்தர்ப்பம் வாய்த்தாலும், முகத்தைக் காணாது கடந்துவிட்டனர்.

ஏப்ரல் ஏழாம் தேதி அன்று. கையிலிருந்த பரிசுப் பொருளை வெறித்த வண்ணமிருந்தாள் துளசி. இளவேந்தனுக்காக என அவள் தேடித் திரிந்து மூன்று மாதங்கள் முன்பே பிறந்தநாள் பரிசு வாங்கிவிட்டிருந்தாள். ஆனால், இப்போது இருவருக்கும் இடையில் பெரியதொரு இடைவெளி விழுந்திருந்தது. நாட்கள் நகர நகர, கோபம் கரைந்து இருவருக்குமே ஏக்கம் பிறந்திருந்தது. ஆனால், அவன் பேசட்டும் என இவளும், இவள் பேசட்டும் என அவனும் முனைத்துக்கொண்டு திரிந்தனர். யார் இந்த முதல் ஊடலுக்குப் பின்னான முதலடியை எடுத்து வைப்பதென கண்ணுக்குத் தெரியாத பனிப்போர் நடந்து கொண்டிருந்தது.

அந்த கடிகாரத்தை எடுத்துப் பையினுள் வைத்தவள் கல்லூரிக்கு கிளம்பினாள். வகுப்பில் இருக்கும்போதும் அவனுடைய ஞாபகம் தான். கடந்த வருடம் அவனுடைய பிறந்தநாள் தேதி தெரியாது என்பதால் மாலைதான் வாழ்த்தை தெரிவித்திருந்தாள். இந்த வருடம் தன்னுடைய வாழ்த்துதான் முதலாக இருக்க வேண்டுமென அத்தனை ஆசையுடன் காத்திருக்க, அது என்னவோ கானல் நீராய் கரைந்திருந்தது.

கல்லூரி முடிந்து இவள் நடனப்பள்ளி செல்ல, இளவேந்தன் வாயிலுக்கு அருகே இருந்த மேஜையில் நண்பர்களுடன் அமர்ந்திருந்தான். முதலாவதாக இல்லையெனினும், கண்டிப்பாக தன்னுடைய வாழ்த்து அவனை அடைய வேண்டுமென உள்ளம் நச்சரித்ததில், அமைதியாய் அவனருகே சென்று நின்றாள். அவளைக் கண்டு கொண்டாலும், வேந்தனிடம் எதிர்வினை இல்லை.

அதில் அவனை முறைத்தவள், “ஹேப்பி பர்த்டே...” என்றாள் சுவற்றைப் பார்த்து.

“மச்சான், இன்னைக்கு இந்த சுவத்துக்கு பெர்த்டே போல. சொல்லவே இல்ல?” இளா நக்கலாக நண்பனிடம் கேட்க, அவர்கள் சிரித்துவிட்டனர்.

துளசி பல்லைக் கடித்துவிட்டு, “ஹேப்பி பெர்த்டே இளா. உங்களுக்கு தான் விஷ் பண்ணேன்!” என்றவள் அவ்விடத்தைவிட்டு அகலப் பார்க்க, எட்டி அவளது கையைப் பிடித்திருந்தான் ஆடவன்.

“எனக்கு பெர்த்டே விஷ்னா, என் முகத்தைப் பார்த்து விஷ் பண்ணணும். சுவத்தைப் பார்த்து இல்ல!” என அதட்டலிட்டவன், அவளை இழுத்து அருகே அமர வைக்க, துளசி அவனைப் பாராது முகத்தைத் திருப்பிக் கொண்டாள். இளவேந்தனின் நண்பர்கள் அவர்களுக்குத் தனிமைக் கொடுத்து நகர்ந்தனர்.

துளசி பேசாது அமர்ந்திருக்க, தொண்டையைக் கனைத்தவன், “ஹம்ம்... விஷ் மட்டும் தானா? கிஃப்ட் எதுவும் இல்லையா?” என்றான் ஆர்வமாய். அந்தக் குரலை, அதிலிருந்த பாவனையை உள்வாங்கியவளின் பார்வை மெதுவாய் அவன் கட்டியிருந்த விலை உயர்ந்த கடிகாரத்தில் நிலைத்து மீண்டது.

“இல்ல... அது, கிஃப்ட் எதுவும் வாங்கலை!” என்று துளசி உள்ளே சென்ற குரலில் பொய்யுரைக்க, அதை கண்டு கொண்டவன் புருவங்கள் உயர்ந்தன.

“ஓஹோ...” என இழுத்தவன், எட்டி அவளது கல்லூரிப் பையை எடுக்க, அவள் பதறிப் போனாள்.

“என்ன வேணும்!” என அவள் பையை கைப்பற்ற முனைய, அதற்குள்ளே இளவேந்தன் அந்த வண்ணக் காகிதம் சுற்றப்பட்ட பரிசை வெளியே எடுத்திருந்தான்.

“ஹேப்பி பெர்த்டே டூ யூ இளா. ஹியர்’ஸ் அனதர் இயர் ஆஃப் ஹேப்பினெஸ், ஹார்ட் பெல்ட் ஸ்மைல்ஸ், ப்ளெஸ் ஃபுல் டேய்ஸ், அன்பார் கெட்டப்பிள் மெமரீஸ்!” என அழகாய் எழுதியிருந்தை உச்சரித்தவன், ‘டூ மை இளா’ என குட்டியாய் கண்ணுக்குத் தெரியாத இடத்திலிருந்ததையும் படித்து முடித்ததும் முகம் முழுவதும் பரவப் பார்த்த புன்னகையை உதடுகளில் தேக்கி முறுவலுடன் அவளைப் பார்த்தான். இவள் சற்றே கோபமும், முறைப்புமாய் அவனைப் பார்த்தாள்.

“ச்சு... ஷிவா, என்னைத் தவிர இளான்னு உனக்கு வேற ஃப்ரெண்ட் இருக்காங்களா என்ன?” எனக் குறும்பாய்க் கேட்டான். அதில் இன்னுமே அவளது முறைப்புக் கூடியது.

“எனக்காகத் தானே வாங்குன?” என ஆர்வம் மின்னக் கேட்டவனிடம் இவள் தயக்கமாய் தலையை அசைத்தாள். அவன் கட்டியிருக்கும் கடிகாரத்துடன் ஒப்பிடுகையில் இதுவொன்றும் அத்தனை சிறப்பானது இல்ல. கண்ணப்பன் அவளுக்காக கொடுக்கும் பணத்தில் சேமித்து வைத்து வாங்கி இருந்தாள்.

இளவேந்தன் ஆசையாய் அதைப் பிரிக்க, இவள் அவன் முகத்தைதான் பார்த்திருந்தாள். அவனது பாவனையை மெதுவாய் உள்வாங்கினாள். அந்தக் கைக்கடிகாரத்தைப் பார்த்தவன் முகம் நொடியில் மலர்ந்து போனது.

“வாவ்! வாட்ச் ரொம்ப அழகா இருக்கே!” என அதைத் தொட்டுத் தடவியவனை இவளது பார்வை ஆசையாய்த் தொட்டுத் தடவி மீண்டது. இத்தனை நேரமிருந்த அலைப்புறுதல், கோபம் எல்லாம் விடைபெற்று நல்ல மனநிலைக்கு வந்திருந்தாள் பெண்.

“கிஃப்ட் ஷூட் நாட் பீ எவாலிவேட்டட் பை ப்ரைஸ். ஷூட் பீ எவாலிவேட்டட் பை லவ்!” என்றவன் தொண்டையைக் கனைத்து, “லவபிள் பெர்சன்!” என்று முடித்து தன் அணிந்திருந்த கடிகாரத்தை அகற்றிவிட்டு, அவள் வாங்கிக் கொடுத்ததை முன்னே நீட்டினான்.

“நீயே கட்டி விடு ஷிவா!” என்றவன் கூற்றில் இவளது முகம் மலர, ஆசையாய் அவனுக்கு கட்டிவிட்டாள். இளவேந்தன் அந்தப் புன்னகையை சுருட்டிப் பத்திரப்படுத்திக் கொண்டான்.

“தேங்க் யூ...” என்றவன், “சாரி ஷிவா, நான் அன்னைக்கு அப்படி பேசியிருக்க கூடாது!” என்றான் தன்னிலையிலிருந்து இறங்கி. ஒரு நொடி அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு குனிந்த துளசி, “நானும் சாரி இளா... அப்படி பிகேவ் பண்ணது என் தப்புதான்!” என அவளும் கூற, இருவரிடமும் நிம்மதிப் புன்னகை பிறந்தது. யார் இறங்கிவருவது என்ற போராட்டத்தில் இருவருமே வெற்றிக் கண்டிருந்தனர்.

“ஓகே லீவ் இட், இதைப் பத்தி இனிமேல் பேசக் கூடாது!” என்றவன் அவள் முன்னே கையை நீட்டினான்.

துளசி கேள்வியாகப் பார்க்க, “கிஃப்ட் எல்லாம் கொடுத்திருக்க. ஃபோட்டோ எடுக்க வேணாமா?” என அவன் சின்ன சிரிப்புடன் வினவ, அவன் கரங்களில் தன் கையைக் கோர்த்தாள். அவன், அவள், அவர்களுடைய கையுடன் கடிகாரமும் அழகாய் புகைப்படத்தில் இணைந்தன.

“அழகா இருக்குல்ல பிக்...” என இளவேந்தன் கைகடிகாரத்தைப் பெரிதாக்கிப் பார்க்க, இவளும் எட்டிப் பார்த்தாள். அவன் கைப்பட்டு அந்தப் புகைப்படத் தொகுப்பிலிருந்து வெளியே வந்திருக்க, அவனது அலைபேசித் திரையில் துளசியின் புகைப்படம் மின்னியது. ஒரு நொடி இவளின் முகத்தில் ஆச்சர்ய பாவனை படர்ந்தது. அவள் பார்க்கக் கூடாதென அலைபேசியை நகர்த்த முயற்சி செய்தவன் தோல்வியைத் தழுவினான்.

“இளா... இது, இது நான் வெல்கம் டேன்ஸ் கொடுத்தப்போ எடுத்ததா?” என ஆச்சயர்மாய் அவள் கேட்க, பிடரியைக் கோதியவன் தொண்டையைக் கனைத்துவிட்டு, “ஆமா...” என்றான் மென்குரலில்.

“என் போட்டோ எதுக்கு வால்பேப்பரா வச்சு இருக்கீங்க?” இப்போது மூக்கை சுருக்கி, கண்கள் இடுங்க ஆராய்ச்சியாகக் கேட்டாள் பெண்.

“ஹம்ம்... அது, நல்லா இருக்குன்னு வச்சிருக்கேன்!” அவன் இயல்பாய்த் தோளைக் குலுக்கினான்.

“நல்லா இருந்தா வச்சுப்பீங்களா? என் பெர்மிஷன் கேட்கணும் அதுக்கு?” துளசி கோபமாய்ப் பேச, அவனுக்கு லேசாய் சிரிப்பு எட்டிப் பார்த்தது.

“போட்டோவை தானே வச்சிருக்கேன் ஷிவா...” என அவன் குரல் தொனியும் அதிலிருந்த அர்த்தமும் உணர்ந்தவள், “சீ... பேட் பாய் நீங்க...” எனப் பையை எடுத்துக்கொண்டு நகர்ந்தாள்.

அவளது பாவனையில் இவனுக்கு சிரிப்பு பொங்கியது. “இந்த பேட் பாய் கூடதான் இவ்வளோ நாள் ப்ரெண்ட்ஷிப் வச்சிருந்தீங்க மேடம்...” எனக் கத்தினான்.

“அதான் ப்ரெண்ட்ஷிப்பைக் கட் பண்ணப் போறேன்!” அவளும் மெதுவாகக் கத்தினாள்.

“நோ... இன்னைக்கு பெர்த் டே. சோ, நாளைக்கு அன்ப்ரெண்ட் பண்ணிக்கலாம்!” என்றவனை மென்மையாய் முறைத்தவளின் உதடுகளில் புன்னகை ஏறின. சிரிப்பும் முறைப்புமாய் நகர்ந்தவளை இவன் ஆசையாய், காதலாய்ப் பார்த்திருந்தான்.


மறுநாள் இருவரும் பேசிக் கொண்டிருக்கையில் துளசி எதேச்சையாகப் பார்ப்பது போல அவனது அலைபேசியை எட்டிப் பார்க்க, அவளின் படமல்லாது வேறொரு பெண்ணின் புகைப்படத்தை வைத்திருந்தான். மெதுவாய் ஏமாற்றம் படரத் தொடங்கியது.

“இது... ஐ மீன் இந்தப் பொண்ணு யாரு?” இயல்பாய்க் கேட்டவளின் குரலில் மெல்லிய பொறாமை உணர்வு உராய்ந்து வந்தது. இவனுக்குப் புரிந்தாலும் பெரிதாய் அலட்டிக் கொள்ளவில்லை.

“இந்தப் பொண்ணைத் தெரியலையா?” என இளவேந்தன் அலைபேசியை அவளிடம் காண்பித்தான். மீண்டுமொருமுறை அந்தப் புகைப்படத்தை உற்றுப் பார்த்தவளின் நெற்றி சுருங்கியது.

“இல்லையே!” துளசி உதட்டைப் பிதுக்கினாள்.

“ஹம்ம்... செலீனா கோம்ஸ், என்னோட கசின். யூ எஸ்-ல இருக்கா!” என அவன் சிரிக்காமல் கூற, “ஓ...” என்றவளின் குரல் இறங்கியிருந்தது.

“சின்ன வயசுல இருந்தே எனக்கு அவ மேல ஒரு க்ரஷ். இப்போ டூ இயர்ஸா இன்ஸ்டாகிராம்ல கனெக்டாகி இருக்கோம். அம்மா, அப்பாவுக்கும் அவளை ரொம்பப் பிடிக்கும். மே பீ, அவங்களே எங்க மேரேஜ்க்கு மூவ் பண்ணுவாங்கன்னு நினைக்கிறேன்!” என இளவேந்தன் பேசப் பேச, இவளது முகம் மாறியது. பார்வையை மறுபுறம் திருப்பி இவனுக்கு காட்டாது மறைத்தவளைக்
கண்டு வேந்தனுக்கு சிரிப்பு முளைத்தது.

“ஓ... ஆல் தி பெஸ்ட் இளா!” என குரல் லேசாய் இடறிப் போக, வரவழைக்கப்பட்ட புன்னகையுடன் கூறியவளின் சிரிப்பு கண்களை எட்டவே இல்லை.

இத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த சிரிப்பு பொங்கியெழ, “ஷிவா...ஷி இஸ் அ ஹாலிவுட் ஆக்டர், சிங்கர். ஐ யம் ஜஸ்ட் ஜோக்கிங் டூ யூ!” என்றதும், துளசியின் முகம் செவசெவவென கோபத்தில் சிவந்தது.

அவனைப் பார்த்துப் பல்லைக் கடித்தவள், “அறிவிருக்கா டா உனக்கு?” என மெல்லிய குரலில் உடல் அதிரப் பேச, அவன் திகைத்துப் போனான்.

“டா... என்னையா ஷிவா?” உண்மையிலே இளவேந்தன் முகம் முழுவதும் திகைப்பே எஞ்சியிருந்தது.

“ஆமா டா... இளவேந்தன், உங்களை... சாரி உன்னைத்தான்!” எனக் கோபமாய்க் கூறி எழுந்து நடக்கத் தொடங்கினாள். இவன் சிரிப்பை கடினப்பட்டு உதட்டுக்குள் அடக்கி, “ஹே... ஷிவா, சாரி டா. சாரி!” என பல மன்னிப்புகளைக் கேட்ட வண்ணம் அவளைத் தொடர்ந்தான். துளசி அத்தனை எளிதில் அவன் மன்னிப்பை ஏற்றுக் கொள்வதாய் இல்லை. சிறிது நேரம் எனினும் அவளை எத்தனை அவஸ்தைப்பட வைத்துவிட்டான் இவன் என கோபம் குபுகுபுவென மூக்கின் நுனியைக் கடந்து மூளை வரை உயர்ந்தது.

சில நிமிடங்கள் இருவரும் நடக்க,
“அந்தப் பொண்ணு என் கசினா இருந்து, நான் லவ் பண்ணா உனக்கு என்ன பிராப்ளம் ஷிவா?” என நின்று நிதானமாகக் கேட்டான் இளவேந்தன். அதில் இவளது நடை தடுமாறியது.

“அது... அது, எனக்கென்ன பிராப்ளம். ஒன்னும் இல்ல, ஆல் தி பெஸ்ட், அந்தப் பெண்ணையே லவ் பண்ணுங்க, கல்யாணம் பண்ணுங்க. ஐ டோண்ட் கேர், வி ஆர் ஃப்ரெண்ட்ஸ் ஒன்லி...” என தட்டுத் தடுமாறி கோப முகத்தைப் பூசிக்கொண்டு நடந்தவளையே பார்த்திருந்தான் இளவேந்தன்.

“ஷி இஸ் சோ க்யூட்!” என இவனது உதடுகள் முணுமுணுத்தன.

இரண்டு நாட்கள் அவனை அலைய வைத்து, கெஞ்ச வைத்தே துளசி இறங்கி வந்திருக்க, அன்றைக்கு ஏதோ ஆசிரியர்கள் கலந்துரையாடல் என வகுப்புத் தாமதமாகத்தான் தொடங்குமென அறிவித்திருத்திருந்தனர். அதனால் வேந்தனும் துளசியும் பணிமனையில் அமர்ந்திருந்தனர்.

வசுமதி சுட்டுக் கொடுத்த போலியையும், பனியாரத்தையும் இவனுக்காக எனப் பத்திரப்படுத்தி எடுத்து வந்திருந்தாள் துளசி. அதை சின்ன புன்னகையுடன் உண்டவன், வேண்டுமென்றே அலைபேசியை அவளருகே நகர்த்தினான். உதடு முழுவதும் குறும்பு சிரிப்பு படர்ந்தது. அவனை முறைத்தவள், அதைத் தொட கூட முனையவில்லை.

“ஹக்கும்... இன்னைக்கு என்னோட உண்மையான கசின் போட்டோ வால் பேப்பர்ல வச்சிருக்கேன் ஷிவா!” என்றவனை முறைத்துவிட்டு, அலைபேசியை எடுத்துப் பார்த்தாள்.

‘யாரிவள்?’ என பார்வையாலே பெண் வினவ, “எம்மா வாட்சன், என்னோட!” என ஆரம்பித்தவன் முன்னே கையை நீட்டியவள், “நான் பார்த்துக்கிறேன்...” என அவன் கூறிய பெயரை கூகுளில் தேடினாள்.

“ஆஃப்டர் எவ்ரிதிங்” – எம்மா வாட்சன் நடித்த சமீபத்திய திரைப்படம் என பெரிய எழுத்துக்கள் திரையில் வந்துவிழ, இளவேந்தன் சன்னமாய் சிரித்து வைத்தான்.

“ஆஃப்டர் எவ்ரிதிங்க் மூவி செம்மையா இருக்கும் ஷிவா. ட்ரை பண்ணி பாரேன்!”

“என்ன கான்செப்ட்?” அவள் வினவ, “அஹம்... ஹக்கும், அதான் டைட்டிலே சொல்லுதே. அதை விடு ஷிவா. போலி செம்ம, ஆன்ட்டி கிட்டே நான் பாராட்டுனேன்னு சொல்லிடு!” எனப் பேச்சை மாற்றினான். தலையை அசைத்தவள், டப்பாவை வாங்கி கழுவி வைத்தாள். இடையில் அவளுடைய அலைபேசி இரண்டு முறை அடித்து ஓய்ந்திருந்தது.

“சந்தோஷ் சீனியர்!” என திரையில் மிளிர்ந்தப் பெயரை இளவேந்தன் யோசனையுடன் பார்க்க, மூன்றாவது முறையாக வந்த அழைப்பை அவசரமாக ஏற்றுக் காதுக்குக் கொடுத்தாள் துளசி.

“என்னாச்சு சீனியர், எதுக்கு இத்தனை டைம் கால் பண்ணி இருக்கீங்க?” என வினவினாள்.

மறுபுறம் பதில் என்ன அளிக்கப்பட்டதோ, “அது... சீனியர், ஐ யம் நாட் ஷ்யூர். வீட்ல பெர்மிஷன் கொடுத்தா, நான் உங்களோட ஜாய்ன் பண்ணிக்கிறேன்!” என மேலும் ஓரிரு நிமிடங்கள் பேசி அழைப்பைத் துண்டித்தாள்.
இளவேந்தன் அவள் முகத்தையே பார்த்திருந்தான்.

“என் காலேஜ் சீனியர். அவங்க எல்லாரும் அவுட்டிங் போறாங்களாம். சோ, என்னையும் கூப்ட்டாங்க!” என்றாள் இயல்பாய்.

“சீனியர்ஸ் அவுட்டிங்ல ஜூனியருக்கு என்ன வேலை?” இவனது கண்கள் இடுங்கின.

“ஹம்ம், சந்தோஷ் சீனியருக்கு நான்னா கொஞ்சம் பிடிக்கும். அதான் கூப்ட்டாரு!”

“கொஞ்சம் மீன்ஸ்?” இளவேந்தன் குரல் இறுகியது.

“அது... ஒரு டைம் எனக்குப் ப்ரபோஸ் பண்ணாரு. நான் அக்செப்ட் பண்ணலை. பட், குட் ப்ரெண்ட் ஆஃப் மைன். என்ன ஹெல்ப் கேட்டாலும் செய்வாரு!” என்றவளை ஊன்றிப் பார்த்தவன், “ப்ரபோஸ் பண்ணி ரிஜெக்ட் பண்ணப் பிறகு எப்படி நல்ல ப்ரெண்டா இருக்க முடியும்? முதல்ல அவன் ப்ரெண்ட்ஷிப்பைக் கட் பண்ணு, நம்பரை ப்ளாக் பண்ணு?” என்றவனை நக்கலாகப் பார்த்தாள் பெண்.

“ஏன்..‌. நான் ஏன் ப்ளாக் பண்ணணும் இளா. யெஸ், நீங்க சொல்ற மாதிரி அவர் ப்ரெண்ட்ஷிப்பா பழகலைன்னு வச்சுப்போம். நான் அவரை நல்ல ப்ரெண்டா தான் ட்ரீட் பண்றேன். முதல்ல அவர் ப்ரபோஸ் பண்றப்போ எனக்கு ஐடியா எதுவும் இல்ல. மே பீ இன்னும் ரெண்டு வருஷம் இருக்கே, பழகுனா பிடிக்கலாம், லவ்வை அக்செப்ட் பண்ணலாம், கமிட் ஆகி, கல்யாணம் பண்ணி, அவரை மாதிரியும் என்னை மாதிரியும் புள்ளைக் குட்டி கூடப் பெத்துக்கலாம்!” என்று அவள் அடுக்கடுக்காய்க் கற்பனைகளை வாரியிறைத்து பேசி முடிக்கும் போது இளவேந்தனுக்கு மூளை சூடாகியிருந்தது.

“ஜஸ்ட் ஷட் அப் ஷிவதுளசி!” என்றான் கோபத்தை அடக்கி.

“ப்ம்ச்... ஏன் கோபப்பட்றீங்க இளா. நீங்க பாலிவுட் ஆக்ட்ரஸ்... ஹம்ம் அவங்கப் பேரென்ன?” என சில நொடிகள் யோசித்தவள், “ஆ... செலீனா கோம்ஸ், இதோ இப்போ சென்னீங்களே எம்மா வாட்சன்னு இத்தனை ஃபாரின் கேர்ள் ப்ரெண்ட் வச்சிருக்கும் போது, நான் ஒரேயொரு சீனியர் பாய் ப்ரெண்ட் வச்சிருக்கக் கூடாதா என்ன?” என்றவளை அதிர்ந்து பார்த்த இளவேந்தனுக்கு துளசியின் இவ்விதமான நடவடிக்கைக்குக் காரணம் புரிந்தப் போது, இன்னுமே கோபம் வந்து தொலைத்தது.

“பழிவாங்குறீயா டி?” என்றான் பல்லைக் கடித்து.

“சே... சே, பழி வாங்குறீயா? அது இதுன்னு என்ன பேச்சு இளா. நம்ம ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸ் தானே? நீங்க கேர்ள் ப்ரெண்ட்ஸ் வச்சிருக்கீங்க. அவங்களோட மேரேஜ், செட்டில்மெண்ட்னு போய், உங்க அம்மா அப்பா சம்மதத்தோட கல்யாணம் பண்ணி, அழகா வெள்ளையா புசுபுசுன்னு குழந்தைக் குட்டிங்க பெத்துப் போடுவீங்க. அதே மாதிரி, நானும் லைஃப்-ல செட்டிலாக வேணாமா என்ன? நானென்ன சன்னியாசியாவா போகப் போறேன்” என்றவளை ஆத்திரம் தீரும்வரை முறைத்தவன், “ஷிவா... சாரி, சாரி, தௌசண்ட் டைம்ஸ் சாரி. தப்புதான், வால் பேப்பர்ல அவங்க போட்டோஸ் வச்சது தப்புதான். இனிமே எந்தப் பொண்ணு போட்டோவும் வைக்க மாட்டேன்...” என்றவன் அலைபேசியை எடுத்து கடலும், மீனும் இருப்பது போலொரு இயற்கை காட்சியை முகப்பில் வைத்தான்.

“சீ... சீ, இதிலென்ன தப்பிருக்கு இளா. உங்க வயசுல இப்படிபட்ட ஆசையெல்லாம் நியாயம் தானே?” என்றவளை ஆயாசமாகப் பார்த்தான்.

“இப்போ என்ன பண்ணா உன் கோபம் போகும் ஷிவா?” என இளவேந்தன் தன்னிலையிலிருந்து இறங்கி வந்திருந்தான்.

“கோபமா... எனக்கா? அப்படியெல்லாம் இல்லையே இளா!” என அசட்டையாய் உரைத்தவளின் குரலின் பின்னே கோபத்தின் தடம் தடயத்தைப் பதித்திருந்தது.

“கடவுளே! இந்தப் பொண்ணை எப்படி சமாதானம் செய்ய?” என இவன் உதடுகள் முணுமுணுக்க, துளசி அவனது அலைபேசியை எடுத்துப் பார்த்தாள்.

“ஓஹோ... பிஷ்ஷைக் கூட கேர்ள் ப்ரெண்டா வச்சுப்பீங்களா இளா?” என அவள் நக்கலாய்க் கேட்க, ஒரு நொடி விழித்தவனுக்கு அவள் கூற்றின் சாராம்சம் பின்னர்தான் உறைத்தது.

“ஓ காட்! நான் வால் பேப்பரே இனிமே வைக்க மாட்டேன் கேர்ள்!” என அவன் அலறிய நொடி, துளசிப் பொங்கி சிரிக்க ஆரம்பித்திருந்தாள். அவனது பாவனையில், குரலின் பேதத்தில் இத்தனை நேரம் இழுத்துப் பிடித்திருந்தக் கோபம் கரைந்து காணாமல் போயிருக்க, மனம் விட்டு சிரித்தவளையே இளவேந்தன் இமை சிமிட்டாது பார்த்திருந்தான்‌. அவனிடமிருந்த பதற்றம், கோபம் என அனைத்தும் அந்தப் புன்னகையிடம் மண்டியிட்டு தோற்று மடிந்து தோய்ந்திருந்தது.
 
Top