• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,168
Reaction score
3,348
Points
113
தூறல் – 15

அந்த அறையில் அமைதியாக அமர்ந்திருந்த துளசியின் விழிகளில் என்ன உணர்வென ஒருவராலும் கணிக்க முடியவில்லை. நெற்றி வகுட்டில் காலையில் இளவேந்தன் வைத்த குங்குமம் மின்னி, கழுத்தில் புதிதாய்க் கட்டிய மஞ்சள் தாலி தொங்கிக் கொண்டிருந்தது. ஆம்! அவளுக்கும் இளவேந்தனுக்குமான திருமணம் முடிந்து கிட்டத்தட்ட சில மணி நேரங்கள் கடந்திருக்க, இன்னுமே அவளால் எதையுமே நம்ப இயலவில்லை. நடந்தவை எல்லாம் கனவில் என்பது போலத்தான் மனம் அதீத அமைதியில் திளைத்திருந்தது. அருகே சோனியா அந்த அறையை சுற்றிப் பார்த்தவாறு கையிலிருந்த அலைபேசியில் மறு கண்ணை வைத்திருந்தாள்.

தான் அமர்ந்திருந்த நாற்காலிக்கு பக்கவாட்டில் வீற்றிருந்த கண்ணாடியில் தன்னை ஒரு முறை ஆராய்ந்தாள் துளசி.
கைகள் கழுத்திலிருந்த மஞ்சள் கயிற்றைத் தொட்டு ஸ்பரிசித்து, தனக்கு திருமணம் முடிந்ததை மனதை நம்ப வைக்கப் போராடிக் கொண்டிருக்க, “அண்ணி, இந்தாங்க ஜூஸ், ரொம்ப டயர்டா இருக்கா?” அறைக்குள் நுழைந்த சைந்தவி ஒரு குவளையில் பழச்சாற்றை நீட்டினாள்.

“இல்ல...” என உதடுகளை விரித்த துளசியின் கைகள் முன்னே நீண்டு அந்தக் குவளையை எடுத்து வாயில் சரிக்க, இத்தனை நேரம் ஈரப்பதத்தை தொலைத்த தொண்டையில் அது இதமாய்ப் பதமாய்க் குளுமையைப் பரப்பியது. உதடுகளையும் ஈரப்படுத்திக் கொண்டாள்.

“இந்தாங்க அத்தை, நீங்களும் எடுத்துக்கோங்க!” என்ற அழைப்பில் சுயம் பெற்ற வசுமதி, “இல்ல மா... பரவாயில்லை, இருக்கட்டும்!” என்றார் தயங்கியபடி.

“அத்த, இது நம்ப வீடு. என்ன கூச்சம், எடுத்துக்கோங்க!” என அன்பாக அதட்டி அவருக்கு பழச்சாற்றைக் கொடுத்தவள், சோனியாவிற்கும் கொடுத்தாள்.

“ம்மா... ம்மா!” என ஏதோ கத்திக் கொண்டே அந்த அறையில் நுழைந்த சக்தியின் குரல் சைந்தவியைப் பார்த்ததும் அப்படியே நின்று போனது.

“பெரிய அண்ணி, வாங்க... ஜூஸ் குடிங்க!” சின்னவள் இயல்பாய் அழைக்க, “இல்ல, வேணாம்...” என இவள் முகத்தைக் கோணினாள். அவளை விசித்திரமாகப் பார்த்த சைந்து நகர்ந்தாள்.

“என்ன சக்தி, எதுக்கு கூப்பிட்ட?” என்ற வசுமதிக்கு அடுத்து என்ன செய்வது எனக் கூடத் தெரியவில்லை. மகளின் திருமணம் முடிந்ததை இன்னுமே அந்தத் தாயால் நம்ப முடியவில்லை. வேந்தன் வந்து துளசியை திருமணம் செய்ய கேட்டு, இவர் முடியாதென மறுத்து விட, இரண்டு நாட்கள் தொடர் படையெடுப்பில் அவரிடம் சம்மதம் வாங்கி இருந்தான்.

வசுமதிக்கு இளவேந்தன் வீட்டிற்கு வந்து பேசிய தினம் எதுவுமே புரியாத நிலைதான். இப்படி பெரிய இடத்துப் பையன் தன் வீட்டிற்கு வந்து, தன் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகக் கூறியதை ஒரு தாயாக அவரால் எளிதில் நம்ப முடியவில்லை. அன்றிரவு அவரது தூக்கம் முழுவதும் பறிபோயிருந்தது. துளசி வேந்தன் பேசும்போது அறையினுள்ளே அமைதியாக அமர்ந்திருந்தாள்.

‘இந்த விஷயத்தில் என்னால் எதுவும் செய்ய முடியாது!’ என்பது போலொரு பாவனை அவளிடம். உன் வீட்டில் சம்மதம் வாங்கியது போல என் குடும்பத்திலும் சம்மதம் வாங்க வேண்டியது உன்னுடைய பொறுப்பு என்றுவிட்டாள். அதுவும் இன்றி தங்கள் இருக்கும் இப்படியொரு சூழ்நிலையில் நான் ஒருவரைத் திருமணம் செய்ய விரும்புவதாக வசுமதியிடம் கூற சத்தியமாய் அவளிடம் தெம்பில்லை. இவர்களை இப்படியேவிட்டுச் சென்றுவிடவா இத்தனை நாட்கள் அனைத்தையும் கடந்து வந்தேன் என மனம் வலிக்க, அமைதியாக அமர்ந்திருந்தவளின் விழிகளில் மெலிதான நீர்படலம்.

“ப்ம்ச்... அக்கா, அவர்... ஐ மீன் உன்னோட எம்.டி மேல... நீ...” என்னக் கேட்பது எனத் தெரியாது சோனியா தடுமாறி நிற்க, துளசியின் உதடுகளில் கசந்த முறுவல் தோன்றியது. இது தாயின் கேள்விதான் எனப் புரிய, இவள் வெளியே எழுந்து சென்றாள்.

வசுமதி முகம் முழுவதும் அப்பிய பதட்டத்துடன் அறையைப் பார்த்திருக்க, “ம்மா...” என அவரை அணைத்துக் கொண்டவளிடம் மெல்லிய விசும்பல்‌.

“துளசி..‌. என்ன டா, இங்கப் பாரு. அம்மா முகத்தைப் பாரு!” என்றவருக்கு மகளின் அழுகையில் வயிற்றிலிருந்து பயபந்து தொண்டையை அடைத்தது. இவளது அழுகைக்குப் பின்னே ஏதேனும் விஷயமிருக்குமோ எனப் பதறிப் போனார்.

“இங்க பாரு டி துளசி!” என அதட்டி அவளைத் தன் முகம் காண செய்தவர், “அந்தப் பையனுக்கும் உனக்கும் எப்போதுல இருந்து பழக்கம்?” என கோபமாய்க் கேட்க, இவளிடம் பதிலில்லை. மௌனமாய் தலையைக் குனிந்தாள்.

“துளசி, வாயைத் திறந்து சொல்லு டி... பணக்கார சகவாசம் எல்லாம் நமக்கு எதுக்கு டி. உங்கப்பாவை இந்த நிலையில வச்சுட்டு உங்களைப் பத்திரமா பார்த்துக்கிறதே எனக்கு வயித்துல நெருப்பைக் கட்டிட்டு இருக்கது போலதான். இப்படி அந்தப் பையன் வந்து பேசீட்டு போறதைப் பார்த்தா, உன் விருப்பம் இதுல இருக்க மாதிரி தோணுது!” என்றவரின் விழிகளில் சரசரவென நீர் வழிந்தது. குரல் கோபத்தில் உயர்ந்தாலும் அகத்தை முகம் காண்பித்துக் கொடுத்தது.

“ம்மா...” எனத் தவிப்பாய் அழைத்தவளுக்குத் தொண்டை அடைத்தது. ஆதியெது அந்தமெது என அவளால் முழுதாக உரைக்க முடியவில்லை. வேண்டாமென வெட்டியறெந்த உறவின் நீட்சியாய் இவன் மீண்டும் துளிர்த்து வருவான் என அவளுமே சர்வ நிச்சயமாய் எதிர்பார்க்கவில்லை. அப்படி இருக்கையில் தாயிடம் என்னக் கூற முடியும். ஏனோ, அவரது நம்பிக்கையை உடைக்கத் தோன்றவில்லை போல. அமைதியைக் கையிலெடுத்திருந்தாள்.

“உன் மனசுல எதுவும் நினைச்சிருந்தா, எல்லாத்தையும் அடிச்சுடு டி. அந்தப் பையனை பார்த்தாலே தெரியுது, வசதியான வீட்டுப் பையன்னு. அவங்க இருக்க நிலைமைக்கு நம்மளால எதுவும் எடுத்து செய்ய முடியாது. அதுவும் உன்னை அங்க வெறும் கையோட அனுப்பிட்டு, என்ன கஷ்டப்படுறீயோன்னு என்னால தவிச்சுப் போய் இருக்க முடியாது டி. நம்ம வசதிக்கு ஏத்த மாதிரி ஒரு பையனா பார்க்கலாம்!” என்றவர் துளசியின் கைகளைப் ஆதரவாகப் பிடித்தார். என்னைப் புரிந்து கொள்ளேன் என அவரது பரிதவிப்பைக் கண்டவளுக்கு உள்ளே சத்தமில்லாது ஏதோ உடைந்து உதிர்ந்தது.

“என் பொண்ணு எந்தத் தப்பும் பண்ண மாட்டா!” என கன்னம் வழித்தவருக்கு, நிச்சயமாகத் துளசி தவறாய் எதுவும் செய்திருக்க வாய்ப்பில்லை என மூளை உணர்த்தியிருந்தது. சிறு வயதிலிருந்தே பொறுப்பாய் இருக்கும் மகள் எங்கும் இடறியதாய் நினைவில்லை. அப்படி இருக்கையில் இப்போதும் அவள் தங்களது பேச்சை மீற மாட்டாள் என நம்பினார்.

“ம்மா... உன் இஷ்டம்தான் மா. உன்னையும் அப்பாவையும் மீறி நான் எதையும் பண்ண மாட்டேன் மா!” என்றவள் உதடுகளில் வலி நிறைந்த புன்னகை உதிர்ந்தது. மகளின் கன்னத்தில் முத்தமிட்டார் வசுமதி. அவரது முகம் மலர, குளம் கட்டிய கண்ணீருடன் தாயைப் பார்த்துப் புன்னகைக்க முயன்ற உதடுகள் தோல்வியைத் தழுவின. பொய்யாய் கூட புன்னகை ஜனிக்கவில்லை.
சோனியா தமக்கையை வேதனையாய்ப் பார்த்தாள்.

“மனசுல எதுவும் நினைச்சிருந்தா, அதை மாத்திக்கோ டா!” என்றவரிடம் தலையை அசைத்துவிட்டு, அறைக்குள் அடைந்தாள் பெண். அவளின் பின்னே நுழைந்த சோனியா, கதவை இறுக்கித் தாழ் போட்டாள்.

துளசி தங்கை வந்ததை உணர்ந்து விழிகளைத் துடைத்தவாறே புத்தக அலமாரியில் பார்வையைப் படரவிட்டாள். தன்னுடைய மனநிலை என்னவென்று அவளாலே உணர முடியவில்லை. இப்படியெல்லாம் ஒரு சூழ்நிலை வரக்கூடும் என்று தானே வேண்டாமென்று ஒதுங்கி வந்தாள். ஆனாலும் வேண்டாம் என உதறித் தள்ளிய போது, மனம் முழுவதும் சுக்கு சுக்காக உடைந்து சிதறியிருந்தது. இது முதல்முறை அன்று. ஆனாலும் அன்றைய வடுவின் நீட்சியாய் வலித்து தொலைத்தது. எதையும் நினையாதே மனமே என அதட்டினாள். அழுகையை அடக்கி புன்னகைத்தவளின் முன்பு சோனியா வந்து நின்றாள்.

“அக்கா, டூ யூ லவ் ஹிம்?” அவளின் கேள்விக்கு சர்வ நிச்சயமாய் இவளிடம் பதிலில்லை. ஆமாம் என பதில் கூறச் சொல்லி ஆர்ப்பாட்டம் செய்த மனதின் இரைச்சல் உதட்டோரம் நின்று சதி செய்ய, பதிலுரைக்காது முகத்தைத் திருப்பினாள்.

“இப்படி அமைதியா பார்த்தா என்ன நினைக்கிறது கா. வாயைத் தொறந்து சொல்லு. அம்மா, அப்பா, நான் குடும்பம் முக்கியம்தான். அதுக்காக ஆசைப்பட்ட வாழ்க்கையைவிட்டுத் தரணும்னு அவசியம் இல்ல. உன் தலையில எல்லாத்தையும் போட்டுக்க நினைக்காத. நீ இல்லைன்னா, இந்தக் குடும்பம் ரன் ஆகாதுன்ற எண்ணத்தை விடுக்கா. உனக்குப் பிறகு எல்லாத்தையும் சமாளிக்க என்னால முடியும். என் வயசுல தானே நீ குடும்பப் பொறுப்பை சுமந்த. அப்போ, ஏன் என்னால முடியாது?” எனக் கேட்டவளின் குரலில் அத்தனை ஆற்றாமை. அப்படியென்ன இந்தப் பெண் எதையும் உரைக்காது மனதிலே வைத்துப் புழுங்கிக் கொண்டிருக்கிறாள் என இவளுக்கு வலித்தது. அவளுக்கென பார்க்காது தங்களுக்காகப் பார்த்து இத்தனை நாட்கள் குடும்பத்தை சுமந்தது போதும். இனி அவளுடைய வாழ்க்கையைப் பார்த்துக் கொள்ளட்டும். நான் அனைத்தையும் சுமக்க தயாராய் இருக்கிறேன் என பாசம் கொண்ட மனது முன்னே வந்து நின்றது.

தங்கையின் பேச்சில் அழுகைக்கு தயாரான விழிகளை சிமிட்டி அணை போட்டவள், “இல்ல... அதில்ல சோனி!” எனத் தடுமாறினாள். அந்நொடி மூளையின் செயல்பாடு அவளது கட்டுப்பாட்டிலிருந்து நழுவியிருந்தது. உதடுகள் பொய்யை உதிர்க்கத் தயங்கின.

“என்ன இல்ல... ஹம்ம், என்ன இல்லன்னு சொல்ற நீ?” என அதட்டிய சோனியா புத்தக அலமாரியைத் திறந்து ஒரு புத்தகத்தை எடுத்தாள். பக்கங்களை வரிசையாய் புரட்டவும், ஒரு புகைப்படம் கீழே விழுந்தது.

“இது யாரு கா?” என அப்புகைப்படத்தை அவள் துளசியின் முன்பு காண்பிக்க, இவளிடம் ஒரு நொடி அதிர்ந்த பாவனை.

“இது... இந்தப் படத்துல இருக்காது அவர் தானே? ஹம்ம்... சொல்லு கா. இதை ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே நான் பார்த்திருக்கிறேன். சரி, காலேஜ் ப்ரெண்ட்னு நினைச்சு கேட்கலை. பட், இதோட அர்த்தம் எனக்குப் புரிஞ்சிடுச்சு!” என்று அவள் தீர்க்கமாக வினவியதில், துளசி அகப்பட்டுக் கொண்டாள். ஆனாலும் உதடுகள் ஒரு வார்த்தையைக் கூட உதிர்க்கவில்லை. இறுகப் பூட்டிக் கொண்டாள்.

“நான் இவ்வளோ கேட்டும் ஒரு வார்த்தைக் கூட பேச மாட்ற இல்ல. அவ்வளோ அழுத்தம் கா உனக்கு. இது ஒன்னும் நம்ப வீட்ல இருக்க ஸ்கூட்டியோ, இல்ல நீ போட்டு இருக்க கொலுசோ கிடையாது. அதுக்கெல்லாம் உயிரில்லை. பட், நீ உயிரும் உணர்வும் இருக்க மனுஷி கா. விருப்பமில்லாத வாழ்க்கைக்குள்ள நுழைஞ்சா, அது நரகம்!” என சோனியா துளசியை அணைத்துக் கொள்ள, பதிலுக்கு இவளது கைகள் அணைக்கவில்லை. தங்கைப் பேச்சின் நிதர்சனம் உணர்ந்ததில், உறைந்து நின்றாள். உண்மை கசக்கும் எனத் தெரிந்தும் அதை ஏற்க மனதில்லை.

“தியாகிப் பட்டம் வாங்கி என்ன சாதிக்கப் போற கா‌. நான் அம்மாகிட்ட எடுத்து சொல்லவா, கண்டிப்பா புரிஞ்சுப்பாங்க” என சோனியா கூறியதும் புறத்தூண்டல் உறைத்தது போல தங்கையிடமிருந்து பிரிந்தவள், “இல்ல... வேணாம் சோனி. உன் வேலையை மட்டும் பாரு!” என்றாள் முகத்தை வேறுபுறம் திருப்பி. கோபமாய் பேச முயன்ற வார்த்தைகளில் நடுக்கம் தொக்கி நின்றது.

“இது கூட என்னோட வேலைதான் கா. என் அக்கா கஷ்டப்படுறதை என்னால பார்த்திட்டு சும்மா இருக்க முடியலை!” என்று ஆதங்கத்திலும் வருத்தத்திலும் சின்னவளின் வார்த்தைகள் வந்து விழுந்தன.

“ஆசைப்பட்றதுக்கும் ஒரு தகுதி வேணும் சோனி. இதுக்கும் மேல இந்தப் பேச்சை பேசாத நீ. போ, போய் வேலை இருந்தா பாரு. சின்ன புள்ளையா நடந்துக்க!” என அவளது கன்னத்தில் தட்டிய துளசியின் கண்கள் பளபளத்தன. அவளது கையைக் கோபமாகத் தட்டிவிட்ட சோனியா, விறுவிறுவென நகர்ந்துவிட, இவளின் கன்னங்கள் மெது மெதுவாக நனைந்தன.

சோனியாவின் கைகளிலிருந்து பறந்து ஒரு மூளையில் விழுந்திருந்தப் புகைப்படத்தை எடுத்துப் பார்த்தவளின் உதடுகள் வலியை மீறியும் புன்னகைக்க, அதை தொட்டுத் தடவிப் பார்த்தாள். அவளும் அவனும் சிரிப்புடன் நின்றிருக்க, துளசியின் கரங்கள் அவளது கழுத்திலிருந்த தங்கநிற மெடலைத் தூக்கிக் காண்பித்த வண்ணமிருந்தன. எடுத்துப் பத்திரப்படுத்திக் கொண்டாள். புகைப்படத்தையும் அதனோடான நினைவுகளையும் மட்டுமே‌.

“சக்தி, என்ன பண்ற? தூங்கப் போய்டீயா?” வசுமதி தயங்கியபடி வினவ, “இல்ல மா... எங்க தூங்குறது. இப்போதான் மூனு பேருக்கும் தோசை சுட்டு முடிச்சேன். காலே வலிக்குது!” என்றபடி இருக்கையில் அமர்ந்தவளின் வலதுகை அலைபேசியை காதொலிப்பானோடு இணைத்தது.

“சரி சக்தி, நீ சாப்பிடலையா? நேரமாச்சு பாரு!” அக்கறையாய்க் கேட்டார் பெண்மணி.

“ஹம்ம்... சாப்பிடணும் மா. சரி, நீங்க சொல்லுங்க. ஏன் இப்போ கால் பண்ணி இருக்கீங்க?” என அவள் விஷயத்திற்கு வந்தாள். வசுமதி தயங்கித் தயங்கி நடந்ததைக் கூறவும், சக்திக்கு ஒரு நொடி தலை சுற்றியது.

“ம்மா... என்ன சொல்றீங்க நீங்க? இதெப்படி சாத்தியம்?” அவள் குரலில் அதிர்ச்சி விலகவில்லை.

“ஆமா சக்தி... அந்தப் பையன் கிட்ட நான் வேண்டாம்னு சொல்லி அனுப்பிட்டேன்!”

“ஹம்ம்... ம்மா, அது... நல்ல வேளை நீங்க சரின்னு சொல்லலை. பணக்கார பையன், அவனா வந்து இவளைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்றான்னா, கண்டிப்பா அதுக்குப் பின்னாடி எதுவும் காரணம் இருக்கப் போகுது மா. நம்ப பொண்ணு வாழ்க்கை வீணா போய்டக் கூடாது மா. பாவம் துளசி, ஏற்கனவே வீட்டுக்காக கஷ்டப்படுறா. இதுல, இது வேறயா?” பொய்யான அக்கறை காண்பித்தக் குரலில் பொறாமை எண்ணம் பிரதானமாய் இருந்தது.

“ஆமா சக்தி, எனக்கும் பயமா இருந்துச்சு. உங்கப்பா நல்லா இருந்தா கூட, விசாரிச்சு முடிவை சொல்றேன்னு சொல்லி இருப்பாரு. நான் ஒத்தையில என்னத்த பண்ண முடியும். அந்தப் பையன் இதோட விட்ற மாதிரி தெரியலை. அதான் உனக்கு ஃபோன் பண்ணேன். நீ சொன்ன சம்மந்தம் என்னாச்சுன்னு கேட்க. அது அமைஞ்சு வந்தா, இவளை கல்யாணம் பண்ணிக் கொடுத்துடலாம். என் பொண்ணு காசு, பணம், இல்லாத வீட்டுக்கு கட்டிக் கொடுத்தாலும், நிம்மதியா இருக்கணும்.‌..” என்றவர் குரலில் மகளை நினைத்துக் கவலைக் கொட்டிக் கிடந்தது.

“அம்மா... அதென்ன இல்லாத வீடு. இந்த மாப்பிள்ளையும் நம்பளை விட வசதியானவங்க தான் மா. துளசியை அப்படியெல்லாம் நம்ப விட்ருவோமா என்ன? நீங்க மட்டும் அந்தப் பையன் வந்தா, வீட்டுக்குள்ள சேர்க்காதீங்க. நாளைக்கு விடிஞ்சதும் நான் மாப்பிள்ளை வீட்ல பேசிட்றேன்...” என்றவளுக்குத் துளசிக்கு இத்தகைய வாழ்வா என நெஞ்சம் விம்மித் துடித்தது. அதை தடுக்க வேண்டும் என்ற முனைப்பு தூண்டிவிட்டதில், அன்றைக்கு அவளுக்கு தூக்கம் வராது போனது.

அவர்களது உரையாடலைக் கேட்ட வண்ணமிருந்த சோனியாவிற்கு மனதே கேட்கவில்லை. எப்படியேனும் துளசியின் மனதிலிருப்பதை தாயிடம் சொல்லிவிட வேண்டும் என்றொரு உந்துதல்‌. விஷயம் தெரிந்தாலும் வசுமதி இதற்கு சம்மதிக்க மாட்டார் என்பது அவரது பேச்சிலே இவளால் அறிய முடிந்தது. அடுத்து என்னவென மூளை பரபரவென ஆராய, இளவேந்தன் கண்முன்னே வந்து நின்றான். அவனிடம் பேசினால் இதற்கொரு தீர்வு கிடைக்கும் என்ற எண்ணம் பளிச்சிட்டது‌. நாளை எப்படியாவது அவனை சந்திக்க வேண்டும் என நினைத்துக் கொண்டே உறங்கிப் போனாள்.

காலை எழுந்ததிலிருந்தே தன்னிடம் பாரா முகம் காண்பிக்கும் தங்கையைப் பார்த்தவாறே துளசி அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்தாள். சோனியா தன்னைத் தொடரும் பார்வையை உணர்ந்தாலும் அதை அலட்சியம் செய்தாள். நேற்றைய தன் பேச்சை ஒரு பொருட்டாய் மதிக்காத துளசியின் மீது ஏக வருத்தமும் கோபமும் முகிழ்த்தது. அதனாலே அதை செயலில் வெளிப்படுத்தினாள்.

“சோனி, தயிர்சாதம் தான் கிண்டுனேன். கடையில ஊறுகா வாங்கிக்கோ...” என்று வசுமதி கொடுத்த உணவு டப்பாவை வாங்கி பையில் வைத்து அதை தோளுக்குக் கொடுத்த சோனியா, “சரிம்மா... நான் வரேன்!” என நகர்ந்தாள்.

“சோனி... இரு, நானும் பஸ் ஸ்டாண்ட்க்கு வரேன்!” என்று துளசியும் பின்னே வர, சின்னவள் நிற்காது விறுவிறுவென நடக்க, வாயிலைக் கடந்ததும் அவளது நடை மொத்தமாய் நின்று போனது.

தங்கையைத் தொடர்ந்த துளசியும் ஸ்தம்பித்து விட, இளவேந்தன் வாயிலை அடைத்தவாறு நின்றிருந்தான். அவனைக் கண்டதும் சோனியாவின் முகம் பளிச்சிட, மற்றவளின் முகம் நொடியில் மாறியது.

வசுமதி அவனைக் கண்டு திகைக்க, “வாங்க.‌.. உள்ள வாங்க!” என சோனியா அவனை உள்ளே அழைத்து அமர வைத்ததும்தான் பெண்மணி சுற்றம் உணர்ந்தார். அவனை உள்ளே வர விடாது அப்படியே அனுப்பிவிட வேண்டுமென நினைத்திருந்தவர், மகளின் செய்கையில் அவளை முறைத்தார்.

வேந்தன் அமைதியாய் அமர்ந்தான். அவனது பார்வை வசுமதியிடம்தான். நீங்கள் சம்மதம் சொல்லவில்லை என்றால் இங்கிருந்து நகர மாட்டேன் என்றொரு பாவனையில் அமர்ந்திருந்தவனை என்ன செய்வது எனத் தெரியவில்லை அவருக்கு. துளசி கலக்கம் சூழ்ந்த விழிகளுடன் இருவரையும் மாற்றி மாற்றி பார்த்தாள்.

வேந்தனைக் கண்டதும் கோபம் ஒருபுறம் வந்தாலும், வருத்தமும் தோன்றியது. இவனுக்கு இப்படி இங்கே வந்து அமர வேண்டும் என்று என்ன வேண்டுதலா என வேதனையுடன் அவனைக் கண்டாள்.

“தம்பி, நேத்தே உங்கக் கிட்டே சொல்லிட்டேன். இந்த சம்பந்தம் ஒத்து வராதுன்னு. என் மகளுக்கு வேற பையனைப் பார்த்துட்டோம்...” என வசுமதி பேசிக் கொண்டிருக்கும் போதே கண்ணப்பனின் சத்தம் கூடத்தை அடைந்தது‌. ஆங்காரத்துடன் கத்தியவர் கதவில் எதையோ எடுத்து எறிய, அது கீழே விழுந்து உடைந்ததை வெளியே அமர்ந்திருந்தவர்களால் உணர முடிந்தது.

துளசி விறுவிறுவென சாவியை எடுத்துக் கதவைத் திறக்க, சோனியாவும் வசுமதியும் உடன் செல்ல, இளவேந்தன் முகத்தில் யோசனையுடன் அவர்களுடன் நகர்ந்தான். இவள் கதவைத் திறந்ததும் வேறு சில பொருட்களும் வெளியே வந்து விழுந்தன.

“துளசி, அவனைப் போக சொல்லு... அவனைப் போக சொல்லு!” என அரற்றியவரை இவன் அதிர்ந்து நோக்கினான். நான்கு வருடங்களுக்கு முன்பு எத்தனை கம்பீரமாகப் பார்த்த மனிதர் இன்று இப்படியொரு கோலத்தில் கண்டதை அவனால் நம்ப இயலவில்லை.

புதிய மனிதரைக் கண்டதும் கணவர் கத்துகிறார் என எண்ணிய வசுமதி, “தம்பி... நீங்க உள்ள வராதீங்க!” என அவனைத் தடுத்தார். ஆனால், இளவேந்தன் அறைக்குள் நுழைந்திருந்தான்.

“ப்பா... என்ன பண்றீங்க. ஒன்னும் இல்ல!” என பதறி துளசி முன்னேற விழைய, வேந்தன் தடுத்திருந்தான்.

“துளசி... என்ன... என்ன பண்ற நீ. அவர் அரோகண்டா பிகேவ் பண்றாரு. நீ போகாத!” என்றவனைக் கோபமாய் உறுத்து விழித்தவள், “கையை விடுங்க, அவர் என் அப்பா!” என அழுத்தமாக உரைத்தாள். வேந்தன் பிடியைத் தளர்த்தாதிருக்க, சோனியா அவர்களுக்கு பக்கவாட்டில் நுழைந்திருந்தாள்.

“ப்பா... இவர் யாரும் இல்ல... நம்ம நம்ம துளசியக்காவைக் கல்யாணம் பண்ணிக்கப் போற மாப்பிள்ளை தான்!” என சின்னவள் தந்தையிடம் கூறி முன்னேற, கண்ணப்பன் கைகள் தளர்ந்தன. அவரது கத்தல்கள் மெதுவாய் அடங்கத் தொடங்க, இளவேந்தனை அவர் வெறித்துப் பார்த்தார். மற்றவர்கள் ஆச்சர்யமாய் அவரைப் பார்த்தனர்.

“ப்பா...” என சோனியா அவரைப் பிடித்து அமர வைக்க முயல, கையைத் தட்டிவிட்டவர் மெதுவாய் நடந்து வேந்தன் அருகே வந்தார். துளசி அவரைப் பயத்துடன் நோக்கி இருவருக்கும் இடையில் நுழைந்து நின்றாள். வேந்தன் என்ன செய்கிறார் இந்த மனிதர் எனப் பார்த்தான்.

“துளசி... துளசி... மாப்பிள்ளை!” நொடியில் முகம் கொள்ளா புன்னகையுடன் சிரிக்கும் கண்ணப்பனைக் கண்டு வசுமதியின் விழிகளில் சரசரவென நீர் வழிய, துளசி அவரது பேச்சில் அதிர்ந்து நின்றாள். சோனியா அனைத்தையும் பார்வையாளராக இருக்க, கண்ணப்பன் அவளைத் தாண்டி வேந்தனை இழுத்து அணைத்திருக்க, அவனது உடல் ஒரு நொடி சிலிர்த்தது.

“மாப்ளை... மாப்ளை!” என அவன் முகம் தொட்டு ஸ்பரிசித்தவர், துளசியைப் பார்த்து சிரிக்கவும், இவளுக்கு மனதில் ஏதோ சுளீரென்று இருந்தது. இத்தனை வருடங்களில் எத்தனையோ புதிய மனிதர்களைக் கண்டு ஆர்ப்பாட்டம் செய்த கண்ணப்பன் முதன் முதலில் வேந்தனைக் கண்டுதான் அமைதியடைந்திருக்கிறார். அதைவிட அவரது கண்களில் ஒளி வந்திருக்க, சிரித்த முகத்துடன் நிற்கும் கணவரைக் கண்டு வசுமதியின் நெஞ்சம் விம்மித் துடித்தது.

“துளசிக்கு கல்யாணம்... என் துளசிக்கு கல்யாணம்!” என்றவர் ஒரு கையை வேந்தனை அணைத்து மறுகையால் துளசியையும் அணைக்க, இவளுக்கு வழிகள் பளபளத்தன. இத்தனை நேரப் பேச்சிற்கும் வேந்தன் அவளது கைகளை விடவேயில்லை. கண்ணப்பனும் அவர்கள் இருவரது இணைந்த கைகளை தன் கரங்களுக்குள் பொதிந்து கொண்டார்.

வசுமதி கண்ணீரை புடவை முந்தானையில் துடைத்துக்கொண்டே நகர்ந்துவிட, “ப்பா... அக்காவுக்கு கல்யாணம். நீங்க வரணுமா இல்லையா?” எனத் தந்தை தோளைப் பிடித்து தன்னை நோக்கித் திருப்பினாள் சோனியா.

“ஆமா... ஆமா... வரணும். வரணும்!” சின்ன குழந்தை போல தலையை அசைத்தார் மனிதர்.

“அப்போ சமத்தா, அமைதியா வந்து உட்காருவீங்களாம்!” என அவரை சமாதானம் செய்தாள். துளசியும் வேந்தனும் அவரைப் பார்த்தவாறே நின்றிருந்தனர். அவனின் குற்றம் சாட்டும் பார்வை இவளை அடைய, விறுவிறுவென வெளியே வந்துவிட்டாள்.

வேந்தனும் பெருமூச்சுடன் நகர்ந்தான். வசுமதியின் முகம் இப்போது இவனை வேண்டாம் என சொல்வதா என குழப்பத்தில் அமிழ்ந்திருக்க, அது அவனுக்கும் புரிந்தது. அந்தக் குழப்பத்தைத் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டான். சில பல நிமிடங்கள் பேசி, அவரை சிந்திக்க விடாமல் தடை செய்து, சம்மதத்தைப் பெற்றிருந்தான்.

வெள்ளிக்கிழமை வீட்டினரோடு பேச வருவதாய்க் கூறி வேந்தன் அகல, சோனியா தயங்கித் தயங்கி சக்தியைப் பற்றி அவனிடம் உரைத்திருந்தாள். அவனது உதட்டில் நக்கல் புன்னகை மலர்ந்தது. அனைத்தையும் அவன் பார்த்துக் கொள்வதாகக் கூறியதும், சின்னவளுக்கு நிம்மதி பிறந்தது.

வேந்தன் கூறியபடியே சக்தியின் வாயை அவளது கணவன் மூலம் அடைத்திருந்தான். அடுத்தடுத்து எல்லாம் வேக வேகமாக நடந்தன. இரு வீட்டிலும் பேசி முடித்து திருமண தேதி குறித்து என துரிதகதியில் நடைபெற, இதோ ஷிவதுளசி இளவேந்தனின் மனைவியாக மாறியிருந்தாள்.
வேந்தன் பேசிச் சென்ற பதினைந்து நாட்களில் அவர்களது திருமணம் நடந்து முடிந்திருந்தது. சந்தனவேல் அரசியலில் முக்கியமானவராதலால், பெரிய பெரிய அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் என திருமணம் எங்கும் கூட்டமும் ஆடம்பரமும் நிரம்பி வழிந்தன.

திருமணத்தின் மொத்த ஏற்பாடுகளும் வேந்தன் குடும்பமே ஏற்றுக் கொள்ள, இவர்களுக்கு எந்த சுமையும் இன்றிப் போனது. சோனியாவும் வசுமதியும் பெண்ணின் வீட்டு சார்பாக நிற்க, நெருங்கிய உறவினர்களை மட்டுமே அழைத்திருந்தார்.

திருமணம் முடிந்து சடங்குகள் முடிய துளசியும் வேந்தனும் அவளது வீட்டிற்குச் சென்று கண்ணப்பனிடம் ஆசிப் பெற்றுவிட்டே இங்கே வந்திருந்தனர். உறவினர்கள் வெளியே சலசலத்துக் கொண்டிருக்க, பெண்கள் மூவரும் ஒரு அறையில் ஓய்வுக்காக அமர்ந்திருந்தனர்.

“ம்மா... என்ன மா, பணக்காரங்க புத்தியைக் காமிக்குறாங்க. நம்பளை மதிக்கவே மாட்றாங்க. நீங்க என்னென்னா, எதுவுமே பேசாம ஓரமா உட்கார்ந்திருக்கீங்க?” எனப் பொருமியவளின் விழிகள் அந்த வீட்டைப் பார்த்து பார்த்து ஓய்ந்து போனது. ஏனோ துளசி இந்த வீட்டில் வாழப் போகிறாள் என்ற எண்ணத்திலே வேந்தன் குடும்பத்தை சக்திக்குப் பிடிக்காமல் போனது.

“ப்ம்ச்... உனக்கு என்ன மரியாதை குறைவு செஞ்சுட்டாங்க சக்தி கா?” சோனியா எரிச்சலாய்க் கேட்டாள்.

“பொண்ணு மாப்பிள்ளைக்கு பாலும் பழமும் கொடுக்கலாம்னு நான் போனா, நாங்கப் பார்த்துக்கிறோம்மான்னு என்னை உள்ளவே விடலை. இப்பவே இப்படி பண்றாங்க. நாளைப் பின்னே நீங்க இங்க துளசியைப் பார்க்க எல்லாம் வந்தா, மதிக்க மாட்டாங்க போல. அதான் நான் இந்த சம்பந்தம் வேணாம்னு சொன்னேன். கேட்டீங்களா?” நூறாவது முறையாக மனதின் குமுறலை வெளிப்படுத்தியவளை எள்ளலாகப் பார்த்த சோனியாவின் உதடுகள் வளைந்தன.

“ஏன் கா, பெரியவங்க இருக்கும் போது நீ ஏன் எல்லா விஷயத்தையும் நுழையுற. இதென்ன நம்ப வீடா... நீ பண்றதை எல்லாம் பொறுத்துக்க?” சின்னவள் நக்கலாய் உரைக்க, சக்தி அவளை முறைத்தாள்.

“சோனி, நான் பேசுறதுக்கு எதிர்வாதம் பேசணும்னே இருக்காத நீ!” என சக்தி பல்லைக் கடிக்க, “அண்ணி... நல்ல நேரம் வந்துடுச்சு. பாலும், பழமும் கொடுக்க வர சொன்னாங்க!” என சைந்தவி வந்து நிற்க, இவர்களது பேச்சு தடைபட்டது. துளசி தலையை அசைத்து எழுந்து நின்றாள்.

“சக்தி அண்ணி, நீங்களும் வாங்க. நீங்கதான் கொடுக்கணும்னு விருப்பப்பட்டதா அம்மா வர சொன்னாங்க!” என சின்னவள் கூற, சக்தியின் முகம் லேசாய் மாறியது. சோனியா சக்தியை அர்த்தப் பார்வை பார்த்தாள்.

“இல்ல... நீங்களே கொடுங்க!” இவள் வர மறுக்க, “சக்தி, என்னம்மா... உன்னைக் கூட்டீட்டு வர தான் இவளை அனுப்புனேன்...” என்ற நளினி, “சம்பந்தி நீங்களும் வாங்க...” என அனைவரையும் அழைத்துச் செல்ல, சக்தியின் முகம் கன்றிப் போனது. இத்தனைப் பேச்சிலும் வசுமதி தலையிடவில்லை.
 
Administrator
Staff member
Messages
1,168
Reaction score
3,348
Points
113
வீட்டில் செய்ய வேண்டிய சடங்குகள் முடிய, உறவினர்கள் கலையத் தொடங்கின. வசுமதியும் சோனியாவும் துளசியை அணைத்துவிட்டு அகன்றனர். வேந்தன் அவர்களைத் தங்குமாறு கூற, கண்ணப்பனைக் காரணம் காண்பித்து நகர்ந்திருந்தனர். வசுமதி மகளிடம் ஆயிரம் பத்திரங்களைக் கூறி, கலங்கிய விழிகளுடன் அகல, சோனியாவிற்கும் கண்களில் பொலபொலவென நீர் வழிந்தது. இவள்தான் இருவருக்கும் ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்திருந்தாள்.

இரவு சடங்கென கூறி சாம்பவி இவளை வேந்தன் அறையில் விட்டுவிட்டு அகல, உள்ளே நுழைந்தவளுக்கு குப்பென மல்லிகையின் வாசம் நாசியை நிறைத்தது.

அவள் அனைத்தையும் ஆராய்ச்சியாகப் பார்த்துக் கொண்டே உள்ளே நுழைய, ஆள் அரவமின்றி காணப்பட்டது. சில நொடிகள் தயங்கித் தயங்கி நடந்து வந்து கட்டிலில் அமர்ந்தாள். முதலில் பதற்றத்தில் முகமெல்லாம் வியர்த்திருக்க, சில நொடிகளில் அறையின் பரிட்சயத்தில் அது வடிந்து போயிருந்தது. உடல் தளர, சாய்ந்து அமர்ந்தாள். காலையிலிருந்து நின்று கொண்டிருந்த கால்களுக்கு ஓய்வு கிட்டியதில் வலி குறைந்திருந்தது. இவள் விழிகளை மூடி அமர்ந்திருக்க, வேந்தன் உள்ளே நுழையும் அரவம் உணர்ந்தாலும் அசையாதிருந்தாள்.

அலைந்து திரிந்து கூடடைந்த பறவையின் நிம்மதி துளசியின் முகத்தில் லயித்திருக்க, அவளையே பார்த்துக்கொண்டே நின்றிருந்தவன் கேட்ட கேள்வியில் துளசி திகைத்து அதிர்ந்து விழிகளைத் திறக்க, இவன் முகம் முழுவதும் புன்னகையுடன் நின்றிருக்க, கைகளில் அவள் கையெழுத்திட்ட ஒப்பந்தம் வீற்றிருந்தது.

தூறும்...
 
Top