• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,168
Reaction score
3,348
Points
113
தூறல் – 14

வேந்தன் குரல் அக்கறையில் கனிந்து வரவும் இவளிடம் கொஞ்சம் கொஞ்சமாக இறுக்கம் தளர்ந்தது. முகத்தை அவனுக்குக் காண்பிக்காது வலப்புறம் திரும்பிக் கொண்டாள். அவனின் பார்வை அன்பாய் அவளைத் தழுவியது.

ஏனோ அதட்டலிட்ட குரலுக்கு அடிபணியாத மனம் இந்தக் அக்கறையில் குளிர்ந்து நனைந்து தோய்ந்திருக்க, வார்த்தை வரவில்லை. வேண்டாம் என்றுதானே தள்ளி தள்ளிச் சென்றாள். இருந்தும் இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னர் தான் தான் வேண்டுமென வந்து நின்றவனை என்ன செய்வது என இவளுக்குத் தெரியவில்லை. இந்த சூழ்நிலையைக் கையாளத் தெரியாது தடுமாறியவளின் முகம் சுணங்கிப் போனது. இது எந்த வகையிலும் ஒத்து வராது என்று தானே இத்தனை நாட்கள் ஆசைக் கொண்ட மனதை அதட்டி வைத்திருந்தாள்.

ஆனால், நான்கு வருடங்களுக்குப் பின்னர் தன்னுடைய பிறந்தநாள் அன்று இளவேந்தனைக் கண்டதும் இதயம் ஒரு நொடி நடுங்கிப் போனது என்னவோ உண்மை. முகத்தில் தன்னுணர்வுகளைக் காண்பிக்காதிருக்க இவள்பட்ட பிரம்மபிரயத்தனங்களும், மெனக்கெடல்களும் ஏராளம். ஆனாலும் அதையெல்லாம் தூசி போல தட்டி எறிந்துவிட்டானே என ஆற்றாமையில் மனம் புழுங்கியது.

“ஹம்க்கும்... யோசிச்சாச்சுன்னா இதுல சைன் போடலாமே மேடம்?” எனக் கேட்டவனின் குரலில் நழுவிய மனதை இழுத்துப் பிடித்தவளிடம் இறுக்கம் குடி வந்திருந்தது.

இரண்டு கைகளையும் இடையைச் சுற்றிக் கட்டிக் கொண்டவள், “இல்ல, இப்போ இதுல என்ன அக்ரிமெண்ட் எழுதி இருக்கீங்க நீங்க, எனக்குப் புரியலை!” என தீர்க்கமாக வினவினாள்.

“புரியலையா? புரியுற மாதிரி தமிழ் அண்ட் இங்கிலீஷ்ல தானே எழுதி இருக்கேன்!” எனக் காகிதத்தை தன்புறம் இழுத்தவன், “நூறு வருஷம் இந்த ஷிவதுளசி எனக்கு மனைவியா என் கூட இருக்கணும். இடையில் எந்தவித ரீசனுக்காகவும் டைவர்ஸ், பிரியுறதுன்னு எதுவுமே கிடையாது. ரெண்டு பேருக்குமே அந்த ரைட்ஸ் இல்ல. அட் தி எண்ட் ஆஃப் ஹண்ட்ரட் இயர், நீ என் வாழ்க்கையைவிட்டு வெளியேறிடலாம். அப்கோர்ஸ், உனக்குப் பிடிச்ச மாதிரி வாழ்க்கையை அமைச்சுக்கலாம்!” என்றவனை இவள் உணர்வு துடைத்த முகத்துடன் பார்த்தாள்.

“இதெல்லாம் ஒத்துவரும்னு நினைக்குறீங்களா?” வேதனையா ஏக்கமா எனப் பிரித்தரிய முடியாத குரலில் கேட்ட துளசியின் விழிகள் லேசாய் கலங்குவது போலொரு எண்ணம். எதிரிலிருப்பவனிடம் கவனமாய் மறைத்துவிட்டாள்.

“ஒத்து வர வைப்பேன்!” என்றவனை ஆற்றாமையுடன் நோக்கினாள். அந்த முகத்திலும் விழிகளிலும் என்னக் கண்டானோ, அதட்டல் மொழிகள் தன்னிச்சையாய் பின்னகர, “ஷிவா... ட்ரஸ்ட் மீ!” என ஆறுதலான புன்னகையுடன் எட்டி அவளது கைகளைப் பிடிக்க முயன்றான்.

அந்த பாவனையில் வார்த்தையில் இவளது இதயம் அதிராமல் அதிர, கனிந்த முகத்தைக் காண்கையில் கண்கள் குளம் கட்டின. முகத்தையும் உடலையும் பின்னே நகர்த்தியவள், “ப்ளீஸ், இப்படி கூப்பிடாதீங்க. இந்த... இந்த மாதிரி!” என்றவளிடம் மெலிதாய் தேம்பல்.

“ஜஸ்ட் ரிலாக்ஸ் ஷிவா...” என கரங்களைப் பின்னிழுத்துக் கொண்டான் இளவேந்தன். அவனுக்கும் இந்தப் பெண்ணின் அழுகையைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

“இந்த மாதிரி பேசாதீங்க. எனக்குப் பயமா இருக்கு. இதெல்லாம்... இதெல்லாம் ஒத்து வராதுன்னு எத்தனை தடவை சொல்லிட்டேன். ஏன், ஏன் என்னை இப்படி பண்றீங்க. என்னை நீங்க பலவீனப்படுத்துறீங்க!” என்றவளுக்கு மூச்சடைத்தது. புரிந்து கொள்ளேன் என விழிகள் தளும்பி நின்றன.

இவனிடம் சில நொடிகள் அமைதி. “நான் உன்னோட பலமாதான் இருக்க விருப்பப்படுறேன். பலவீனமா இல்ல துளசி!” என்ற வேந்தனின் விழிகள் அவளில் வேதனையுடன் படர்ந்தது.

“வேணாமே... இந்த மாதிரி அக்கறையான பேச்சு, கரிசனம் எதுவும் வேணாம். நீங்க என்கிட்ட கோபமா பேசி, எதுவும் செஞ்சா கூட என்னால் தாங்கிக்க முடியுது. பட், இந்த வாய்ஸ்... இது எனக்கானது. பட், என்னால அக்செப்ட் பண்ண முடியாது!” தொண்டை அடைக்கப் பேசியவளுக்குக் கண்கள் கரிக்க, சூடான திரவம் குபுகுபுவென கன்னத்தை நனைத்தது. இளவேந்தனிடம் நொடி நேர இளக்கம், அவளுக்காக கரைந்திருந்தான்.

இருந்தாலும் அதை நூதனமானப் புன்னகையில் மறைத்தவன், “எனக்கு வேணும்... இந்த ஷிவா ஆர் துளசி... எனிதிங்க், பட் இந்தப் பொண்ணு மட்டும்தான் எனக்கு வேணும். இந்த ஜென்மத்துல உன்னை வேற யார்க்கும் விட்டுத்தர ஐடியா சுத்தமா இல்லை. எந்த எல்லைக்குப் போய்னாலும் சாதிச்சுக்குவேன்...” என்றவனிடம் இளக்கம், கனிவு என அனைத்தும் தொலைந்து போயிருக்க, இறுகி அமர்ந்திருந்தான்.

துளசி விழிகளில் நீருடன் நிராசையாய் அவனைப் பார்க்க, “சைன் போட்டுட்டு நீங்க கிளம்பலாம் மிஸ்.ஷிவதுளசி. நீங்க என்ன பேசினாலும் ஃபைனல் டிசிஷன் என்னோடதுதான்!” என்றவன் காகிதத்தையும் எழுதுகோலையும் அவள் முன்னே நகர்த்தினான். துளசி அசையாது அமர்ந்திருந்தாள். மாட்டேன் என்றொரு பிடிவாத மொழி அவளிடம்.

“யூ டோன் ஹேவ் எனி சாய்ஸ் துளசி. நேத்து இளான்னு அழுது என்னைக் கட்டிப் பிடிக்கிறதுக்கு முன்னாடி யோசிச்சு இருக்கணும். நோ யூஸ்!” என்றவனை கண்ணீருடன் முறைத்தவள் கைகள் நடுங்க அந்த எழுதுகோலை எடுத்து கையெழுத்திட்டுவிட்டு விறுவிறுவென வெளியேறினாள்.

“போடி... நான் வேணாம்னு தூக்கிப் போட்டுட்டு போற இல்ல. இனிமே நானா உன்னை பார்க்க முயற்சி பண்ண மாட்டேன். பட், நீ என் முன்னாடி வந்தா அதுக்கு நான் பொறுப்பு இல்ல. இந்த ஜென்மத்துல இனியொரு தடவை இளான்னு நீ என்னைக் கூப்பிட்டுட்டா, அந்தக் கடவுளால கூட என்னைத் தடுக்க முடியாது. இந்த ஷிவதுளசி இளவேந்தனுக்குத்தான்!” அந்த அறையே கர்ஜிக்கும் வகையில் கத்தியவனின் வார்த்தைகளில் உடல் நடுங்க, நான்கு வருடங்களுக்கு முன்பு அழுகையுடன் துளசி அவனைக் கடந்திருந்தாள். இல்லையில்லை கடந்துவிட்டதாய் நினைத்திருந்தாள். அவ்வளவே, மற்றபடி இந்த ஜென்மத்தில் இவனை மறக்கவெல்லாம் முடியாதே. நொடி நேரம் நடந்தவை எல்லாம் கண்முன்னே காட்சியாய் விரிந்தன. நேரே கழிவறைக்குச் சென்றவள் முகத்தை நன்றாய்க் கழுவிவிட்டு வந்து தன்னுடைய அலுவலில் மூழகிப் போனாள்.

துளசி கையொப்பமிட்ட அந்தக் காகிதத்தை எடுத்துப் பார்த்த வேந்தனின் இதழ்களில் நூதனமான புன்னகை. “லெட்ஸ் ஸ்டார்ட் தி கவுண்ட் டவுன்!” என்றவன் உதடுகளில் சிரிப்பு மிளிர்ந்தது.

மாலை வேலை முடிந்ததும் துளசி பேருந்து நிலையத்திற்கு செல்வதற்காக இரண்டெட்டுகள் முன்வைக்க, வேந்தன் அவள் முன்பு மகிழுந்தை நிறுத்தினான். இவள் என்ன என்பதாய் நிமிர, “கெட் இன்...” என மறுபுறக் கதவை அவளுக்காகத் திறந்தான். சுற்றி இருப்பவர்களின் அத்தனை பேரின் பார்வையும் தங்களிடம் குவிவதை உணர்ந்த துளசி, சங்கடமாக அவனைப் பார்த்தாள்.

“யாரு என்ன நினைச்சா பரவாயில்லைன்னு நடுரோட்ல கட்டிப் பிடிக்கலாம். ஆனால், கார்ல ஒன்னா வரக் கூடாதா என்ன?” என்றவன் குரலை தழைத்து நக்கலாய் உரைத்ததும், இவளது முகத்தில் மெதுவாய் கோப ரேகைகள் படர்ந்தன. எதுவும் பேசாது மகிழுந்தினுள்ளே ஏறி அமர்ந்தவள், பட்டென கதவை அடைக்க, அதையெல்லாம் சிறிய தோள்குலுக்கலில் அசட்டை செய்தவன், அந்தப் போக்குவரத்தில் தன்னைக் கலந்தான்.

எங்கே செல்கிறோம் என எந்தவித கேள்வி கணைகளுமின்றி துளசி அமர்ந்திருக்க, வேந்தனும் எதையும் எதிர்பாராமல் மகிழுந்தை பெரிய வாயிலைக் கடந்து அந்த வீட்டின் முன்பு நிறுத்தினான். வாகனத்தின் இயக்கம் தடைபட்டதில் இவளது விழிகள் தன்னிச்சையாக முன்னே இருந்த வீட்டில் படர, மனதில் லேசான பயம் கவ்வியது. வேந்தனின் தந்தை அரசியல் பின்புலத்திலிருப்பவர் என அறிந்திருந்தாலும், இத்தகைய வீட்டை அவள் அட்சர சுத்தமாய் எதிர்பார்க்கவில்லை. ஒரு நொடி மனம் அதிலே தேங்கிவிட, கலக்கத்துடன் அவனை நோக்கினாள்.

அதை உணர்ந்தவன் ஆறுதல் வார்த்தை எதையும் உதிர்க்கவில்லை. இதற்கெல்லாம் நீ பழகிக் கொள்ள வேண்டும் என்றொரு பாவனையில் முன்னே நடக்க, இவளது கால்களில் மெல்லிய தயக்கம். மெதுவாய் அவனைப் பின் தொடர்ந்தாள்.

இளவேந்தன் வீட்டின் உள்ளே நுழையும் நொடி திரும்பிப் பார்க்க, அவளைக் காணவில்லை. புருவத்தை சுருக்கியவன் வெளியே வர, துளசி விழிகளில் பயத்தை தேக்கியவாறு அப்படியே அசையாது நிற்க, அவளது இரண்டு தோளிலும் கால்களை வைத்து நின்றிருந்தான் டீவா. அவர்களது வீட்டு செல்லப் பிராணி.

துளசியை அப்படிக் காண்கையில் இவனது உதட்டினோரம் குறும்பான புன்னகை துடித்தது. அதில் அவனை முறைத்தாள் பெண். சிரிப்புடன் நெருங்கி டீவாவைத் தூக்கியவன், “இன்னும் மேடம் நாய்க்கு பயப்பட்றதை நிறுத்தலையா?” என்ற கேள்வியுடன் அதை அதன் சங்கிலியில் பிணைத்தான். அவளிடம் பதிலில்லை. இருவரும் ஒன்று போல் வலதுகாலை எடுத்து வைத்து உள்ளே நுழைந்தனர்.

“என்ன கொழுந்தனாரே, ஆஃபிஸ்ல வேலை ஓவரா?” என இழுத்த தீக்ஷிதா வேந்தனுடன் ஒரு பெண்ணும் நுழைவதைக் கண்டு பேச்சை நிறுத்தினாள்.

“அண்ணி... பார்த்துக்கோங்க. ப்ரெஷாகிட்டு வரேன்!” என எந்தக் கேள்விகளுக்கும் இடமளிக்காது நகர்ந்திருந்தான் அவன். துளசி தீக்ஷிதாவைப் பார்த்தவாறு நின்றிருந்தாள். அவளது பார்வை எங்கும் அலைபாயவில்லை. குறைந்தபட்சம் முதல்முறையாக வரும் போதிருக்கும் ஆர்வம், ஆச்சரியம் என எதுவும் துளசியிடமில்லை. நிர்மலமான முகத்துடன் நின்றிருந்தவளைக் கண்டு இவளது முகத்தில் யோசனைப் படர்ந்தது.

“வாங்க, வந்து உட்காருங்க...” என்ற தீக்ஷியையும் ஆரண்யாவையும் தவிர கூடத்தில் ஒருவரும் இல்லை. சின்னவள் புத்தகத்தை வைத்துக்கொண்டு படிக்கிறேன் என விளையாடிக் கொண்டிருந்தாள்.

“என்ன குடிக்கிறீங்க... டீ, காபி, ஜூஸ்?” என்ற தீக்ஷி நிமிடத்தில் துளசியை அளந்திருந்தாள். வேந்தனுடன் ஒரு பெண் வந்திருக்கிறாள் என்ற ஆச்சரியமே அவளது முகத்தில் படர்ந்திருந்தது.

மெல்லிய பருத்திப் புடவையிலிருந்த துளசி தலைக்கு எண்ணெய் வைத்து உச்சியெடுத்துப் பின்னியிருக்க, முகத்தில் வேலை செய்த களைப்பு கொட்டிக் கிடந்தது. கழுத்தில் வெள்ளி சங்கிலியும் காதில் மெலிதான வளையம் ஒன்று தொங்கியது. வேறெதுவும் பெரிதாய் ஒப்பனைகளோ, ஆபரணங்களோ இல்லை.

“இல்ல... எதுவும் வேணாம்!” என்ற துளசிக்கு மனம் முழுவதும் பயம் அப்பிக் கிடந்தது‌. வேந்தன் வீட்டில் தன்னை மருமகளாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்ற எண்ணம் மட்டும் மனதில் திண்ணமாக இருந்தது. அந்த நம்பிக்கையில் தான் காலையில் கையெழுத்திட்டிருந்தாள். ஆனால், இவனது உறுதியில் உள்ளே பதற்றம் தொற்றிக் கொண்டதென்னவோ உண்மை.

“இல்ல... இல்ல, காஃபி எடுத்துட்டு வரேன் இருங்க!” என்ற தீக்ஷி நகர, துளசி நிச்சலமான முகத்துடன் அமர்ந்திருந்தாள்.
மகிழ்வேந்தன் சில நிமிடங்களிலே உள்ளே நுழைந்தான். கூடத்தில் ஒரு புதியவள் அமர்ந்திருக்கவும், இவனிடம் யோசனை.
அதற்குள் தீக்ஷி குளம்பியை எடுத்து வந்து கொடுக்க, அவளது தோழியென எண்ணி உள்ளே சென்றுவிட்டான்.

“வந்துட்டீங்களாங்க?” என்ற தீக்ஷி, நாகரீகம் கருதி அங்கேயே நின்றுவிட, சைந்தவி கல்லூரி முடிந்து அன்று தாமதமாய் வீடு வந்து சேர்ந்தாள்.

துளசியைக் கண்டதும் நொடிகளில் அவளது மூளை பளிச்சிட, காலணிகளை வேகவேகமாக கழட்டிவிட்டு உள்ளே ஓடி வந்தவள், “அண்ணி, பாருங்க இந்த வேந்தனுக்கு தைரியத்தை. லவ்வை சொல்லவே மாட்டான்னு நினைச்சேன். ஆனால், தைரியமா உங்களை வீட்டுக்கே கூட்டீட்டு வந்துட்டான்!” என இவள் துள்ளலாய்ப் பேச, துளசி என்ன பதிலுறுப்பது எனத் தெரியாது சங்கடமான புன்னகையை உதிர்த்தாள்.

“ஏய் சைந்து... என்ன, என்ன பேசுற நீ?” தீக்ஷிதா பதற்றத்துடன் சின்னவளை அதட்டினாள்.

“அண்ணி, நீங்க ஃபர்ஸ்ட் அண்ணி. இவங்கதான் நம்ம வீட்டுக்கு செக்ண்ட் அண்ணி. வேந்தன் உங்ககிட்ட சொல்லலையா?” என சைந்தவி அதிராமல் கூற, தீக்ஷக்கு தலை மெதுவாய் சுற்றியது. விழிகள் பார்ப்பதை செவி உணர்ந்ததை, அவளால் நம்பாமலும் இருக்க முடியவில்லை. ஏனென்றால் இத்தனை நேரப் பேச்சிற்கும் துளசி எவ்வித எதிர்ப்பும் காண்பிக்கவில்லையே.

“ஐயோ... சைந்து... எனக்குப் படபடன்னு வர்ற மாதிரி இருக்கு. இவ்வளோ பெரிய ஷாக்கை என் பிஞ்சு உடம்பு தாங்காது. நான் உங்க அண்ணனைக் கூட்டீட்டு வரேன்!” என அறைக்குள்ளே ஓடினாள் தீக்ஷி.

மகிழ்வேந்தன் உடை மாற்றிக் கொண்டிருந்தான். “என்னங்க... வெளிய ஒரு பொண்ணு உட்கார்ந்திருக்காளே, அவளைப் பார்த்தீங்களா?” என படபடவென வினவினாள்.

“ஆமா பார்த்தேன், யாரு உன் ப்ரெண்டா?” என அவன் இரண்டு கைகளின் வழியே மேல் சட்டையை அணிந்து, தன் உடலை அதனுள்ளே செலுத்தியபடி வினவினான்.

“ப்ம்ச்... அந்தப் பொண்ணை எனக்கு யாருன்னே தெரியாதுங்க...” என அவள் முடிக்கும் முன்னே, “தெரியாம எப்படிடி நடு ஹால்ல உட்கார வச்சு காபி கொடுக்குற?” என சிடுசிடுத்தான்.

“ச்சு... என்னைப் பேச விடுங்க. அந்தப் பொண்ணு உங்கத் தம்பியோட லவ்வர்!” என்றவளை பைத்தியத்தியமா என்பதைப் போல பார்த்தவன், “கண்டதையும் உளறி வைக்காத டி. ஏற்கனவே தலைவலி, போ... போய் சூடா காஃபி எடுத்துட்டு வா!” என்றான் எரிச்சலாய்.

“ஆமா... நான் இப்போ பேசுறது உளறலாதான் இருக்கும். உங்களுக்கு காஃபி போட்றதுதான் இப்போ முக்கியம். கொஞ்ச நேரத்துல அவன் வந்து சூடான அண்டாவுல மொத்தக் குடும்பத்தையும் போடப் போறான்!” என முனங்கிக் கொண்டே நகர்ந்திருந்தாள்.

தலைவலி மாத்திரையை விழுங்கிவிட்டு சிறிது நேரம் தூங்கி எழலாம் என அறையில் தூங்கிக்கொண்டிருந்த நளினியை சைந்தவியின் குரல் எழுப்பியிருந்தது.

“இந்தப் பொண்ணு எதுக்கு இப்போ கத்தீட்டு இருக்கா?” எனக் கண்ணைக் கசக்கித் தட்டுத் தடுமாறிக் கொண்டே கூடத்திற்குள் நுழைந்தார். அங்கே துளசியும் சைந்தவியும் பேசிக் கொண்டிருந்தனர்.

“சைந்தவி... ஏன்டி இவ்வளோ சத்தம்?” என அதட்டலிட்ட நளினி, “போ... முதல்ல ட்ரெஸ் சேஞ்ச் பண்ணீட்டு வா‌‌. அப்புறம் பேசலாம்” என அவளை அறைக்குள் அனுப்பியவர், துளசியருகே அமர்ந்தார்.

“வாம்மா... நல்லா இருக்கீயா? சைந்துவோட படிக்கிறீயா?” என வினவியவர், “நீயும் அவளை மாதிரி சுடிதார் போடாம ஏன் இப்படி சேலையைக் கட்டீட்டு கஷ்டப்படுறமா? காலேஜ் போக சுடிதானே வசதியா இருக்கும்...” எனத் தொடர்ந்தார்.

அவரது தவறானப் புரிதலில் விழித்த துளசி, “அது... ஆன்ட்டி... அம்மா!” என எப்படி அழைப்பது என சில நொடிகள் அவள் தடுமாற,

“வீட்டுக்கு வந்தவங்களுக்கு எதுவும் கொடுக்காம பேசிட்டு இருக்கேன் பாரு மா. எதாவது குடிக்கிறீயா?” எனக் கேள்வியெழுப்பியவர், “தீக்ஷி, காஃபி எடுத்துட்டு வா” என மருமகளைப் பணித்தார்.

“இல்ல... இல்ல மா, இப்போதான் குடிச்சேன்!” என துளசி பதிலளித்தாள்.

கையில் குவளையுடன் வந்த தீக்ஷி, “உங்கப் புள்ளைக்கு கொடுத்துட்டு வரேன்த்தை!” என்று அவர்கள் இருவர் அமர்ந்திருந்ததை மனதில் கிலியுடன் பார்த்தவாறே நகர்ந்தாள்.

‘என்ன நடக்கப் போகுதோ. கடவுளே காப்பாத்துங்க!’ என்ற வேண்டுதலுடன் மீண்டும் கூடத்திற்கே வந்து நின்றுவிட்டாள். வேந்தன் சில பல நிமிடங்களில் உடைமாற்றி வெளியே வர, தீக்ஷி அவனைப் பார்த்தாள்.

‘என்ன கொழுந்தனாரே இது?’ என அவள் பயத்துடன் நோக்க, “சும்மா அண்ணி, ஒரு காஃபி ப்ளீஸ்!” என்றான் கண்ணை சிமிட்டி.

“என்ன சும்மாவோ... என்ன குண்டைத் தூக்கிப் போடப் போறானோ?” எனப் புலம்பலுடன் அவள் நகர, வேந்தன் தாயையும் துளசியையும் சிறு புருவத்தூக்கலுடன் பார்த்தவாறு அமர்ந்தான்.

“ம்மா... இந்தப் பொண்ணு எப்படி இருக்கா?” என்ற மகன் கேள்வியில் அவனை யோசனையாய்ப் பார்த்த நளினி, “ஏன்டா, பார்க்க நல்லா லட்சணமாதான் இருக்கா!” என்றார்.

“ஹம்ம்... அப்போ உன் பையனுக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்றீயா?” என சின்ன சிரிப்புடன் கேட்டவனை அவர் முறைத்தார்.

“டேய்... என்ன பேச்சு இது? இவ சைந்தவி ஃப்ரெண்ட், உனக்கும் தங்கச்சி மாதிரி டா. சின்ன பொண்ணு, பயந்துடப் போறா...” என அவர் அதட்ட, அதில் இவனுக்கு சிரிப்பு பொங்கியது. தலையை சமத்தாய் அசைத்தவனுக்கு துளசி பார்வையால் கண்டனம் தெரிவித்தாள்.

அதை கண்டு கொள்ளாதவன், “அண்ணி... காஃபி போட ரெண்டு மணி நேரமா?” என பொய்யான சலிப்புடன் சமையலறைக்குள் சென்றான்.

“ஆமா டா... உனக்கு, உங்க அண்ணணுக்கு, அப்புறம் உன் வருங்காலப் பொண்டாட்டிக்கு காபி போடத்தான் நான் இங்க இருக்கேன்!” என அவள் படபடவென பொரிய, இவனது முகம் முழுவதும் புன்னகை பூத்தது.

“என்ன அண்ணி, திடீர்னு கோபமெல்லாம் பட்றீங்க?” என அவன் முறுவலித்தபடி கேட்டான்.

“பின்ன என்ன டா... திடுதிப்புன்னு ஒரு பொண்ணை கூட்டீட்டு வந்து நிக்கிற. என் மாமியார், மாமனாருக்கு எதுவும் ஆகிடக் கூடாதுன்னு பயமா இருக்கு டா!”

“ஹாஹா... அண்ணி, டோன்ட் வொர்ரீ. நீங்க எப்பவும் போல எனக்கு சப்போர்ட் மட்டும் பண்ணுங்க. நான் ஸ்கோர் பண்ணிக்கிறேன்!” என குவளையைத் தூக்கிக்கொண்டு நகர்ந்தவன், சில நொடிகள் நின்று, “எல்லாரையும் ஹால்ல ஆஜர் படுத்துங்க அண்ணியாரே!” என நக்கலாய் மொழிந்தவனை இவள் திகிலுடன் பார்த்தாள்.

“இவனுக்கு சப்போர்ட் பண்ணா, என் புருஷன் சாமியாடிருவாறே!” என்ற புலம்பல் வேந்தனை எட்டாமல் இல்லை.

இவன் வந்து இருக்கையில் அமர, சந்தனவேல் வந்துவிட்டார். அவர் வருகைக்காகத்தான் காத்திருந்தான். நளினி கணவர் பின்னே செல்ல, மனிதர் துளசியை சொந்தகாரப் பெண் என எண்ணிப் பார்த்துக்
கொண்டே நகர்ந்தார்.

தீக்ஷிதா கணவனை கூடத்தில் அமர வைத்துவிட்டு சைந்தவியை அழைக்க செல்ல, “அட... ஆமா அக்கா... நான் சொன்னேன், நீதான் நம்பலை!” என சாம்பவியிடம் அனைத்தையும் ஒப்பித்துக் கொண்டிருந்தாள் அவள்.

“இவ வேற...” என பல்லைக் கடித்த தீக்ஷி, “சைந்து... லைவ் டெலிகாஸ்ட் வேணா போடேன்.
போ, போய் ஹால்ல உட்காரு!” எனவும், “சூப்பர் ஐடியா அண்ணி. தேங்க் யூ!” என அவள் கன்னத்தைக் கிள்ளிவிட்டு சாம்பவிக்கு காணொளி அழைப்புவிடுத்தாள் சின்னவள்.

சந்தனவேலும் நளினியும் சில நிமிடங்களில் கூடத்திற்கு வந்தனர். அத்தனை பேரும் நிற்பதை சிறிய யோசனையுடன் பார்த்தவர் அமரவும், மற்றவர்களும் இருக்கையை ஆக்கிரமித்தனர்.

வேந்தன் எழுந்து முன்னே சென்று நின்றான். அவனது தலை துளசியை நோக்கி அசைந்ததும் மெதுவாய் அவளும் அவனருகே நகர்ந்து நிற்க, அவளது தோளில் கையைப் போட்டு அணைத்தவன், “ப்பா... இது துளசி. நம்ப வீட்டோட ரெண்டாவது மருமகள்!” என்று அதிராமல் குண்டைத் தூக்கி வீசியிருக்க, மொத்தக் குடும்பமும் ஒரு நொடி ஸ்தம்பித்தது.

“தீக்ஷி, உன் ஃப்ரெண்டை எப்படிடி அவன் லவ் பண்ணான்...” எனக் கேட்ட மகிழை வெட்டவா? குத்தவா? எனப் பார்த்தவள்,

‘இந்த மனுஷன் வேற... மக்கு மண்ணாந்தரை!’ என மனதிற்குள் கணவனை வறுத்தெடுத்தாள்.

“சைந்து, உன் ஃப்ரெண்ட்கிட்ட அவன் எதுக்குடி விளையாட்றான். பாவம் அந்தப் பொண்ணு, பயப்படப் போகுது!” நளினி பதறி மகளிடம் பாய்ந்தார்.

“ம்மா... அவங்க என் ப்ரெண்ட் எல்லாம் இல்ல மா. அண்ணனோட லவ்வர்! அதுவும் எய்ட் இயர்ஸா லவ் பண்றாங்க!” என அவள் கூற்றில் நளினி நெஞ்சில் கைவைத்தார். சந்தனவேல் மகனை உக்கிரமாக முறைத்தார்.

‘எதே... எட்டு வருஷமா?’ என அதிர்ந்த தீக்ஷி சுவரோடு ஒன்றினாள்.

“நளினி... உன் மகன் என்ன பேசுறான்?” என சந்தனவேல் அதட்டலில் அந்த அறையே நிசப்தமாகியது. துளசிக்கு தன்னைக் கொண்டுதான் இந்தப் பேச்சு என்றதும் ஏனோ முகம் விழுந்துவிட, வேந்தனின் கைகளை அகற்ற முயன்றாள். ஆனால், அவன் தன் கரங்களை நொடிகூட தளர்த்தவில்லை. பிடியை இறுக்கினான்.

“ஐயயோ... எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லங்க...” பதறிய நளினி கணவனருகே சென்று நின்றார்.

“ப்பா... அம்மாவுக்கு, ம்கூம்... இந்த வீட்ல யாருக்குமே தெரியாது. இப்போதான் இவளைக் கூட்டீட்டு வந்தேன். உங்க எல்லாரோட சம்மதத்தோட எங்க கல்யாணம் நடக்கணும்!” என்றவனைக் கண்டனமாய்ப் பார்த்தவர், “வேந்தா... என்ன பேச்சு இது. முதல்ல அந்தப் பொண்ணை அவங்க வீட்ல விட்டுட்டு வா!” என்றார் கோபமாய்.

“இல்ல, நீங்க சம்மதம் சொல்லுங்க. அப்புறம் இவளை விட்டுட்டு வரேன்!” என அவன் அழுத்தமாய் நின்று அவரது கோபத்திற்குத் தூபம் போட்டான்.

“நளினி, முதல்ல அவனை நான் சொன்னதை செய்ய சொல்லு. மத்ததை காலைல பேசிக்கலாம். ஊர் பேர் தெரியாத பொண்ணைக் கூட்டீட்டு வந்து நடுவீட்ல நிக்கிறான்!” என்ற சந்தனவேலின் முகம் இந்தப் பேச்சு தனக்கு உவப்பாயில்லை என்பதை எடுத்துரைக்க, துளசிக்கு விழிகளில் நீர் கோர்த்தது.

‘இதற்குத் தானே என்னை அழைத்து வந்தாய்?’ என அவனை கோபமாய் பார்த்தவள், பட்டென கையை உதறினாள்.

“ப்பா... யாரோ ஒரு பொண்ணு இல்ல. இனிமே இவ இந்த வீட்டு மருமக, உங்களுக்கு இஷ்டம் இருந்தாலும் இல்லைனாலும் மாத்த முடியாது. உங்க எல்லார் சம்மதத்தோட கல்யாணம் பண்ணி வச்சுடுங்க!” வேந்தன் அழுத்திக் கூறினான்.

“என் சம்மத்தத்தோட நடக்க வாய்ப்பே இல்ல. இது எந்த வகையிலும் ஒத்து வராது டா. போ, போய் ஆகுற காரியத்தைப் பாரு டா!” சந்தனவேல் அவன் பேச்சை மதிக்காது அறைக்குள் நகர்ந்து விட, இவன் கோபமாகப் பின்னே சென்று அறையை பட்டென அடைத்தான்.

“டேய் வேந்தா... கதவைத் தொற டா!” நளினி பதற, சில நிமிடங்களுக்கு உள்ளே காரசாரமான விவாதம் நடந்தது. சிறிது நேரத்தில் சத்தம் குறைய, சந்தனவேல் வெளியே வர, வேந்தன் வெற்றிப் புன்னகையுடன் பின்னே வந்தான்.

இருக்கையில் அமர்ந்து பெருமூச்சை வெளிவிட்டவர், “உன் பேர் என்னமா?” என துளசியிடம் வினவினார்.

“துளசி... துளசி அங்கிள்” அவள் மெல்லிய குரலில் பதிலியம்பினாள்.

“சரிம்மா துளசி... ஒரு நல்ல நாளா பார்த்து உங்க வீட்டுக்குப் பேச வரோம். நீ உங்கப்பா அம்மாகிட்ட விஷயத்தை சொல்லி வைம்மா!” என்றவரை மொத்தக் குடும்பமும் அதிர்ந்து நோக்கியது. துளசி அதிர்ச்சி விலகாது தலையை அசைக்க, வேந்தன் முறுவலித்தபடி அவளது கண்ணீரைத் துடைத்துவிட்டான். அதை பெண் உணரவில்லை.

“பார்த்தீயா கா... வேந்தன் அப்பாவைக் கரெக்ட் பண்ணிட்டான்!” காணொளி அழைப்பிலிருந்த சாம்பவியிடம் சைந்தவி கிசுகிசுக்க, அது அமைதியான அறையில் பெரிதாய் எதிரொலித்தது. அனைவரும் அவளை முறைக்க, சின்னவள் ஓடியேவிட்டாள். அதில் துளசியின் உதடுகளில் புன்னகை மலர, வேந்தன் அவளை ஆசையாய்ப் பார்த்திருந்தான்.
 
Active member
Messages
137
Reaction score
116
Points
43
Appadi enna vendhan sollli irupaan?
 
Top