• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,168
Reaction score
3,348
Points
113
தூறல் அப்டேட் பண்ணிட்டேன். நெஞ்சுக்குள்ளே கேட்குதே கதை வர ரெண்டு நாள் ஆகும் கைய்ஸ். சின்ன பெர்சனல் ப்ராப்ளம். வரேன் சீக்கிரம் 🙂

தூறல் – 13

தன்னுடலோடு பொருந்திப் போய் அழுகையில் துடித்த துளசியைக் கண்ட இளவேந்தனிடம் ஒரு நொடி உயிர் நழுவியிருந்தது. இந்தப் பெண்ணின் அழுகையை ஒரு கணம் கூட இவனால் சர்வநிச்சயமாகத் தாங்கிக் கொள்ள இயலாதே. ஏனோ ஊசியால் இதயத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக குத்துவது போலொரு வலி எழுந்தது. சில நொடிகள் இருவருக்குமே புறத்தூண்டல் இல்லை. ஆனாலும் செவி உணர்ந்த சலசலப்பான சத்தத்தில் வேந்தன் உணர்வு பெற்றான்.

விழிகள் சுற்றுப்புறத்தை ஆராய்ந்தன. அருகில் இருந்தவர்களின் பார்வை ஆர்வமாய், அசூயையாய், முகச்சுளிப்புடன் எனப் பல வித உணர்வுகளைப் பிரதிபலித்ததில் அவன் தன்னிலைப் பெற்று அவளைத் தன்னிடமிருந்து பிரித்து மகிழுந்தில் அமர செய்து, மறுபக்கம் தானும் ஏறி அதை இயக்கினான்.

துளசி எதுவுமே கூறாது இருக்கையில் சாய்ந்தமர்ந்து விழிகளை மூடிக் கொண்டாள். விழிகளில் இருந்து சூடான திரவம் வழிந்த வண்ணமிருக்க, கண் இரைப்பைகள் கணநேரம் கூட ஓய்வெடுக்கத் தவறின. மகிழுந்தை ஆள் அரவமற்ற பகுதிக்குச் செலுத்தி ஒரு ஓரமாய் நிறுத்திய வேந்தனின் கரங்கள் தண்ணீர் பொத்தலை எடுத்து அவளிடம் நீட்ட, துளசி வாங்கவில்லை.

“என்னை வீட்ல இறக்கி விடுங்க...” என்றவளின் விழிகள் அவனை சமீபிக்கத் தடுமாறி, தடம்மாறின. இவன் நீட்டிய கைகளைப் பின்னே இழுக்கவே இல்லை. அப்படியே அமர்ந்திருக்க, அவன் முகத்தைப் பார்த்த துளசிக்கு ஏனோ தொண்டையை அடைத்தது.

'பார்க்காதே... அவனைப் பார்க்காதே!' என மனதில் உருப்போட்டாள். ஆனாலும் கைகள் தன்போல் முன்னே நீள,
தண்ணீரை வாங்கி மடமடவென வாயில் சரித்து உடலை சமநிலைப்படுத்த முயன்று தோற்றுதான் போனாள். வலக்கரம் உயர்ந்து முகத்தில் விழுந்த முடியைப் புறந்தள்ள, மற்றொரு கரம் பிசுபிசுப்பான கண்ணீரில் நனைந்தது.

“என்கிட்ட எதுவும் சொல்லணுமா துளசி?” செவியோரம் கேட்ட அடர்ந்தக் குரலில் இவளுக்குப் பிரவாகமாகப் பொங்கியது. ஒன்றல்ல, ஓராயிரம் இருந்தன. நீயில்லாத இந்த நான்கு வருடங்கள் என் வாழ்க்கையில் நான் கடந்த வலி, வேதனை, வாதை என அனைத்தையும் கொட்டிவிடு என மூளை பேரிரைச்சலிட, தலையை இடம் வலமாக அசைத்து இல்லை என்றுரைத்தவள் உதடுகளைக் கடித்து புன்னகைக்க முயன்றாள். நான் நன்றாக இருக்கிறேன் என அந்த சிறிய செயலில் அவனை அமைதிப்படுத்தும் எண்ணம். ஆனால், அருகிலிருந்தவனிடம் நூலிழை அளவு கூட மாற்றமில்லாது போனதில் இமைகள் சோர்ந்து மீண்டும் பனித்தன.

“இல்ல... ஐ யம் ஓகே!” என உதடுகளை இன்னுமே விரித்தவளின் முகம் சிவந்திருக்க, இமைகள் தடித்து வீங்கி தரையை நோக்கியிருந்தன.

“ஷிவா...” எனக் கையை விரித்தவன், “வா...” என அழைத்த நொடி, இவளது இதயம் துடிப்பை நிறுத்தி சில நொடிகள் துடித்தடங்கியது. உடல் துரிதகதியில் செயல்பட, தலையையும் உடலையும் பின்னகர்த்தி முடியாதென சிரத்தை அசைத்தவளின் முகம் நிச்சயமாய் பொய்யைத் தழுவின.

வேந்தனைக் கட்டிக்கொண்டு கதறி விடுவோம் என அனத்திய மனதை அடக்கி வைத்திருந்தாள். அவனின் முகத்தைப் பார்த்தால் மனதை கொட்டிக் கவிழ்த்துவிடுவோம் என மூளை பரபரவென செயல்பட்டு கதவை திறக்க விழைய, முடியாது போனது. வேந்தன் மகிழுந்தின் மையப் பூட்டை முடுக்கியிருந்தான்.

விரித்த கைகளை இவன் மாற்றாது, “ஏன் டி... ஏன்?” எனக் கேட்கவும், துளசி உதட்டைக் கடித்து அவனைப் பாவமாய்ப் பார்த்தாள். சத்தியமாய் அவன் அதில் உருகிப் போனான்.

“நான் இல்லாம நீ இருந்துடுவன்னு நிரூபிச்சுட்ட இல்ல ஷிவா?” எனக் கேட்டவன் குரலில் மேவியிருந்த வேதனை இவளைக் கூர் கத்தியால் கிழிக்க, “நோ... ப்ளீஸ் எதுவும் பேச வேண்டாம்‌. பாஸ்ட் இஸ் பாஸ்ட்!” என மெலிதான உடல் அதிரக் கத்தினாள் துளசி.

இதற்கு மேலும் எதுவும் பேசாதே. மோசமாய் உடைந்துவிடுவேன் என விழிகள் முழுவதும் இறைஞ்சலாய்ப் பார்த்தவளை அவன் இழுத்து அணைக்க, ஒரு நொடி அதிர்ந்த துளசியின் கரங்கள் இத்தனை நேரத் தவிப்பிற்குக் கிடைத்தப் பற்றுக் கோலாய் அவனைத் தன்னோடு இறுக்கிக்கொண்டன.

இவளது விழிகளிலிருந்து வழிந்த வெது வெதுப்பான நீர் அவன் உடலைத் தொடவும், மெல்லிய அதிர்வு ஆடவனிடம். நான்கு வருட பசலை நோய்க்கும் சேர்த்து வைத்து தேம்பியவள், உடைந்தழுதாள். ஆறுதல் அளித்த கரத்தின் கதகதப்பு கரையும் முன்னே தன்னுடைய வேதனைகளை கண்ணீரில் கரைக்க முயன்றாள்.

“என்னால முடியலை இளா. எதையும் சரியா செய்ய முடியலை...” என்றவள் அவனது கழுத்தோடு முகத்தை அழுத்திப் புதைக்க, இப்போது இருவரும் ஓரிருக்கைக்கு மாறியிருந்தனர்.

“ஒன்னும் இல்லடி. இங்க பாரு, என் முகத்தைப் பாரு!” தவித்தவனின் வார்த்தைக்குப் பெண் செவிசாய்க்கவில்லை. விட்டால் சென்று விடுவானோ என தாயைத் தொலைத்த சேயாய் அவனோடு ஒன்றியிருந்தாள். நாதியற்றுக் கிடந்த மனம் அவனது செய்கையில் மொத்தமாய் தளர்ந்து சரிந்திருந்தது.

சில நிமிடங்கள் கழித்து அவள் முகத்தை நிமிர்த்தி முடியை ஒதுக்கி கண்ணீரைத் துடைத்தவன், “கல்யாணம் பண்ணிக்கலாம் துளசி...” எனவும், தீச்சுட்டாற் போல விலகியவளுக்கு என்ன செய்கிறோம் என புறத்தூண்டல் அப்போதுதான் உறைத்தது. மனம் பதைபதைத்துப் போக, உணர்ச்சி வேகத்தில் என்ன செய்துவிட்டாய் என மனசாட்சி குற்றவாளி கூண்டில் அவளை நொடியில் ஏற்றியிருக்க, இன்னுமே மனதில் பாரமேறியது.

அவளின் செய்கையில் வேந்தனுக்கு அப்படியொரு கோபம் பெருகியது. “நீ இஷ்டப்பட்டாலும், இல்லைனாலும் கல்யாணம் நடக்கும். நடத்தி காட்டுவேன்...” என்றவன் கோபத்தை மகிழுந்தில் காண்பிக்க, இவளுக்கு அடிவயிற்றிலிருந்து பயம் தொண்டையை அடைத்தது. முகத்தில் எதையும் காட்டாதிருக்க பிரம்மபிரயத்தனப்பட்டவள், விழிகளை வெளியே திருப்பினாள்.

“உங்களுக்கு சந்தோஷமா இருக்கும் இல்ல?” துளசி குரல் முழுவதும் அடிபட்ட பாவம். இவனை அசைத்துப் பார்த்தாலும் துளி கூட அசைந்து கொடுக்க முனையவில்லை. இனியும் இந்தப் பெண்ணை தனியாய் விட்டுட்டுப் பைத்தியக்காரன் போல அலைய முடியாது என தினம் தினம் அனத்தலிடும் மனம் இன்று மொத்தத்திற்கும் பெரிதாய் ஆடியிருந்தது. எதுவாகினும் என்னருகே இருந்துக்கொண்டு செய்யட்டும் என்பது அவனுடைய இந்நொடி சித்தாந்தம்.

“எனக்கு விருப்பம் இல்ல!” பட்டென்று உரைத்தவளை அவன் ஒரு பொருட்டாய்க் கூட மதிக்கவில்லை என்றதில் இவளிடம் கோபம் கனன்றத் தொடங்கியது. அவளது வீட்டின் தெருமுனையில் வேந்தன் மகிழுந்தை நிறுத்த, அவனுக்கு தீர்க்கமான பார்வையைப் பரிசளித்தவள், “என்னை மீறி உங்களால எதுவும் பண்ண முடியாது!” என்றாள் அடமாய்.

சில நொடிகள் இருவரது பார்வையும் மற்றவரில் குவிய, வேந்தன் இதழ்களில் மெல்லிய முறுவல். அவளை இழுத்து இறுக அணைத்தவன், “என்னைவிட்டுப் போகணும்னு நினைச்சாலும் உன்னால முடியாது டி. விட மாட்டேன், இனிமே எதுவா இருந்தாலும் என்கூட இருந்துப் பண்ணு. நீ நினைக்கிற மாதிரி உன் குடும்பத்தை நான் தலையில தூக்கி வச்சுக்கப் போறதில்லை. உன்னால முடியாதுன்றப்போ வந்து உனக்காக நிப்பேன், இப்போ இல்லை... எப்பவுமே!” என்றவன் பதிலில் துளசியின் துள்ளல் அடங்கியிருக்க, விழிகள் மெதுவாய் கலங்கத் தொடங்கின. அதட்டலான, கோபமான வார்த்தைகளைப் புறந்தள்ளி புறக்கணிக்க முயன்றவளால், இந்தக் குரலை பரிபூரணமாக ஏற்க முடிந்தது. உதறிச் செல்ல முடியவில்லை என்பது நூறு சதவீதம் உண்மை.

“ஷிவா...” செவியோரம் கேட்ட அடர்ந்தக் குரலில் இவளுள் மொத்தமாக அமிழ்ந்து போனது. அசையாதிருந்தாள், துள்ளல், துடிப்பு ஒதுக்கம் என எல்லாம் காற்றில் கரைந்திருந்தன. அருகிலிருந்தவன் மட்டும்தான் செவியையும் விழிகளையும் நிறைத்தான்.

“நீ இல்லைன்றதை விட இந்த உலகத்துல வேற எதுவும் என்னை இந்தளவுக்கு கஷ்டப்படுத்தனது இல்ல டி. உன்னால நான் இல்லாம இருக்க முடியும். ஆனால், சத்தியமா என்னால முடியாது!” அவன் குரலில் அத்தனை வேதனை மண்டிக் கிடக்க, இவளுக்குத் துடித்தது.

“வேணாம்...” என்றாள் உதட்டைக் கடித்து கலங்கிய கண்களை மறைத்து.

“எனக்கு வேணும்... இந்த ஷிவாதான் வேணும். நான் பாசிங் கிளவுட் இல்ல. அது மாதிரி நீ என்னை மறக்கலை, மறக்கவும் மாட்ட. இல்லைன்னா, இந்த நாலு வருஷத்துல சந்தோஷோட ஒரு வாழ்க்கையை தொடங்கி இருக்கலாம். ஆனால், நீ செய்யலை. செய்யவும் மாட்ட டி. பிகாஸ் யூ லவ் மீ தட் மச்!” என்றவனை முயன்று உதறியவள், “உங்களோட கற்பனைக்கு நான் ஆளாக முடியாது. என் குடும்பக் கஷ்டத்துல என் வாழ்க்கைதான் முக்கியம்னு சுயநலமா யோசிக்கத் தோணலை, தோணாது!” என்றாள் கோபமாய். புரிந்து கொள்ளேன்டா என பார்வையில் இறைஞ்சல் கொட்டிக் கிடந்தது. இவனது தலை அதை நம்ப மாட்டேன் என அசைய, வேதனையும் கோபமுமாய்ப் பார்த்தவள் விறுவிறுவென இறங்கி நடக்க, வேந்தன் அவளை கடைசி நொடி வரை விழிகளில் நிரப்பிக் கொண்டான்.

துளசி வீட்டின் முகப்பு பகுதிக்குள் நுழைய, நடை நிதானப்பட்டது. இப்படி அழுது சிவந்த முகத்துடன், தடித்த விழிகளுடன் தன்னைக் கண்டால் தாயும் தங்கையும் கேள்வியெழுப்பக் கூடுமென மூளை எச்சரித்ததில் அப்படியே வலதுபுறம் சில அடிகள் நடந்தாள். அங்கே துணி துவைப்பதற்காக இடப்பட்டிருக்கும் குழாயில் முகத்தை நன்றாய் அழுத்திக் கழுவினாள். இருந்தும் விழிகளின் சிவப்பு மறையவில்லை.

என்ன செய்வது எனத் தெரியாது மனம் சோர்ந்து போக, சில நொடிகள் யோசித்தவள், அலைபேசியை எடுத்துக் காதுக்குக் கொடுத்தவாறு நடந்தாள்.

“ஓ... ஓகே சார்!” என அப்போதைக்கு தோன்றிய வார்த்தைகளை உதிர்த்து வசுமதியையும், சோனியாவையும் பார்த்து தலையை அசைத்து அறைக்குள் நுழைந்து கதவைப் பூட்டினாள். இப்போது மூச்சு சீராய் வர, இழுத்துவிட்டாள்.

சேலையை உருவி வேறுடைக்கு மாற்றி வழலைக் கட்டியைத் தேய்த்து ஒருவாறு முகத்தை சரி செய்தாள். கண்ணாடியில் ஒருமுறை தன்னைப் பார்த்தவள், மீறி எதையும் கேட்டால், சமாளித்துக் கொள்ளலாம் என வெளியே சென்றாள்.

“ஏன் துளசி இவ்வளோ லேட்டு, ஃபோன் பண்ணா கூட எடுக்கலை?” என்ற வசுமதி அவளுக்குத் தட்டில் மூன்று இடியாப்பங்களை இட்டு முன்னகர்த்தி வைத்தார்.

கொஞ்சம் ஈரமாயிருந்தக் கையை உடையில் துடைத்துவிட்டு அப்படியே அவரருகே அமர்ந்தவள், உணவில் கவனமானாள்.

“க்ளையண்ட் ஒருத்தர் சைட் விசிட் பண்ண கூப்பிட்டுப் போய்ட்டாரு. அந்த இடம் கொஞ்சம் தூரம் மா. அதான் அவரே வந்து விட்டுட்டுப் போனாரு!” என சில நொடிகள் கழித்துப் பதிலளித்தாள். சோனியாவின் பார்வை தமக்கையைவிட்டு நகரவில்லை. அதை இவள் உணர்ந்திருந்தாலும், எதிர்வினையாற்றவில்லை. தாயை சமாளிப்பது விட, தங்கையிடம் பொய் கூறுவது கடினம் என அவள் உணர்ந்ததே. வசுமதி மகளுக்கு இன்னும் ஒரு இடியாப்பத்தை தட்டில் வைத்தார்.

“போதும் மா!” மென்முறைப்புடன் உண்டுவிட்டு எழுந்தாள்.
அறைக்குள் நுழைந்ததும் சோனியா வருவதற்குள் உறங்கிவிட வேண்டும் என்ற வேண்டுதலுடன் படுத்து கண்ணை மூடினாள் துளசி. சில நிமிடங்களிலே அவளது அருகே அசைவு தெரிய, இவளுக்குப் புரிந்து போனது.

சோனியா துளசியின் அருகே வந்து அவளது இடுப்பைச் சுற்றிக் கையைப் போட்டு அணைத்தாள். “என்னாச்சு கா, அழுத மாதிரி இருக்க?” அக்கறையாய் வினவியவளின் கரங்கள் எழுந்து தமக்கை கன்னத்தை தொட்டுத் தடவின. அதில் இவளுக்கு ஏனோ ஏதோ செய்தது. அதிலும் அவளின் அணைப்பு சற்று முன்னே தன்னைத் தேற்றி அடைக்கலம் கொடுத்தவனின் ஸ்பரிசத்தை நினைவில் நிரப்பியது.

“சோனி, ரொம்ப டயர்டா இருக்கு. மார்னிங் பேசிக்கலாம்!” என அவளது கையை வலுக்கட்டாயமாகப் பிரித்துவிட்டு மறுபுறம் திரும்பிப் படுத்துக் கொண்டாள். சோனியா மேற்கொண்டு தமக்கையை எந்தவிதத்திலும் தொந்தரவு செய்யவில்லை.

மறுநாளும் அவள் பேசுவதற்கு எந்தவித வாய்ப்பும் அளிக்காது துளசி கிளம்பிச் சென்றுவிட, மாலை விசாரித்துக் கொள்ளலாம் என சோனியா கல்லூரிக்கு கிளம்பிவிட்டாள்.

விரல்கள் விசைப்பலகையில் இருந்தாலும் மனம் என்னவோ கணினியில் குவியவில்லை. ஏதோ பதைபதைப்பும் பதட்டமும் மனதை அத்தனையாய் வியாபித்திருக்க, எதிலும் கவனம் செல்லவில்லை. வேந்தனை எதிர் கொள்ள வேண்டுமே என்றொரு எண்ணம் மனம் முழுவதும் பதகளிப்பை விரவச் செய்திருந்தது. அவ்வப்போது நெற்றியில் பூத்த வியர்வைத் துளிகளைக் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டாள்.

அவன் வருகிறான் என உள்ளுணர்வு உணர்த்தியதில் கருமணிகள் இரண்டும் அசையாது திரையில் குவிய, முகத்தில் எப்போதும் போலொரு பாவனை. அப்பகுதியைக் கடந்து சென்றவனுக்கு அவளது பிரம்மப்பிரயத்தனங்களால் முறுவல் தோன்றியது.

துளசியைப் போல வேந்தனுக்குப் பெரிதாய் எதுவும் தோன்றவில்லை. முடிவெடுத்தப் பின்னர் அதிலிருந்து பின்வாங்க ஒரு நொடி கூட அவன் யோசிக்கவில்லை. அடுத்து என்ன செய்து திருமணத்தை நடத்துவது என மனதில் ஒரு பெரிய திட்டத்தையே வகுத்திருந்தான்.

“துளசி, வேந்தன் சார் வர சொன்னாரு மா...” என அஸீம் அழைத்ததில் இதை எதிர்பார்த்தேன் என்பது போலொரு பாவனையில் அவனது அறைக்குச் சென்றாள் துளசி.

“கம்மின்...” அவன் குரல் செவியில் நுழைந்ததும் ஒரு நொடி கால்கள் தயங்கி உள்ளே நுழைய, “கம் அண்ட் சிட் துளசி...” என்றவன் பாவனையில் என்ன இருந்தது என இவளால் ஊகிக்க முடியவில்லை.

அமைதியாய் வந்து அமர்ந்தாள்.
வேந்தன் எதுவும் பேசாதிருக்க, மௌனம் சில நொடிகளை விழுங்கின. “வொர்க் ரிலேட்டடா எதுவும் கேட்கணுமா சார்?” என்ற துளசியின் குரலில் நேற்றைய தடுமாற்றம், தயக்கம் என எதன் அடிநாதத்தையும் கண்டறிய முடியவில்லை. நீ முதலாளி, நான் தொழிலாளி என்ற பாவனை மட்டுமே அவளிடத்தில். இதை எதிர்பார்த்தேன் என்ற எண்ணத்தில் வேந்தனது இதழ்கள் வளைந்தன.

‘இதற்கெல்லாம் நான் அசர மாட்டேன்!’ என அவளது அலட்சியத்தை சிறிய தோள் குலுக்கலில் புறந்தள்ளியவன் கைகள் உயர்ந்து சில காகிதங்களை அவளுக்கு முன்னே நகர்த்தின.

‘என்ன இது?’ என வார்த்தையில்லாது பார்வையாலே வினவினாள் துளசி.

“ஹக்கும்...” தொண்டையைக் கனைத்து, “இது மேரேஜ் அக்ரீமெண்ட்... உனக்கும் எனக்குமானது!” என்றவனை இவள் புரியாத பார்வை பார்த்தாள்.

“நம்ம உறவுக்கு சாட்சி, அடையாளம், ஹம்ம் இதொரு டைப் நாட், அவிழ்க்க முடியாத நாட். மேரேஜ்க்கு முன்னாடி விட்டுட்டுப் போன மாதிரி நடந்துடக் கூடாதில்லை. அதான் ப்ரிகாஷன்!” அழுத்தம் திருத்தமாக உரைத்தவனது வார்த்தையில் இவளுக்கு சுருக்கென முள் குத்தியது போலிருக்க, அவனை வெறித்தாள்.

“என் ஃபேஸ்ல என்னம்மா இருக்கு? பேப்பர்ஸை படிச்சா அக்ரிமெண்ட் டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ் புரியும்...” என்றவன் காகிதத்தை அவளை நோக்கி நகர்த்தினான். துளசி அதை தொடவில்லை.

“எடுத்துப் படிக்கணும் துளசி!” அதட்டலிட்டவனை கீழ்க்கண்ணால் முறைத்தவாறே அதை எடுத்துப் படித்தாள். அவளது முகம் ஒரு நொடி சுருக்கிப் பின்னர் ஆச்சர்யத்தில் விரிந்தது.

“என்ன... என்ன அக்ரிமெண்ட் இது?” என அவள் வார்த்தைகளைத் தேடித் துழாவினாள். இதுவரை இப்படியொரு ஒப்பந்தத்தை துளசி கேள்விப்பட்டதாய் நினைவில்லை. அதனாலே முகத்தில் யோசனையுடன் ஆச்சர்யமும் படர்ந்தது.

“இது மிஸஸ் வேந்தனுக்கான ஸ்பெஷல் அக்ரிமெண்ட்...” என்றவன் உதடுகளில் நீண்ட நாட்களுக்குப் பின்னரான குறும்பான புன்னகை முளைத்து தொலைத்தது. அவனது கைகள் உயர்ந்து முன்னுச்சியிலிருந்த முடிகளைக் கலைத்துவிட, துளசி பார்வையைத் தழைத்துக் கொண்டாள். அந்த சிரிப்பும் செய்கையும் அவளை ஏதோ செய்தது. இவன் இப்படி சிரிப்பதை பார்த்து எத்தனை ஆண்டுகளிலிருக்கும் என மனம் தனியாய் கணக்கிடத் தொடங்க, மூளை விழித்துக் கொண்டது.

“என்னால இதை ஒத்துக்க முடியாது!” என முறைத்தாள்.

“ஓஹோ... இதை நேத்து இளா, ப்ளான்னு பப்ளிக் ப்ளேஸ்னு கூடப் பார்க்காம கட்டிப் பிடிச்சப்ப சொல்லி இருக்கணும் மிஸ்.ஷிவதுளசி!” குறும்புடன் கூறியவன் பார்வை கொடுத்த குறுகுறுப்பில் இவளுக்கு அடிவயிற்றில் எதையோ உருளச் செய்தது. இந்தப் பேச்சில், தனது செய்கையை அவன் கூறக் கேட்கும்போது கோபமும், மெலிதான வெட்கமும் வந்து தொலைத்தது. வேந்தன் அவளது முகபாவனைகளை அவதானித்த வண்ணமிருக்க, லேசாய் சிவந்த கன்னத்தால் இவனது உதடுகள் பெரிதாய் விரிய, முகம் நீண்ட நாட்களுக்குப் பின்னர் மலர்ந்திருந்தது. அவளது குழப்பத்தில் இவனுடைய முகமும் அகமும் கனிந்திருக்க, “ஷிவா...” என அன்பாய் அழைத்தான். எத்தனை நாட்களுக்குப் பின்னரான அவர்களுடைய இனிமையான நேரங்கள் இல்லையில்லை நிமிடங்கள் என மனம் அந்நொடி களிப்பில் மகிழ்ந்து திளைத்திருந்தது.
 
Active member
Messages
137
Reaction score
116
Points
43
Nice update sis.
 
Top