• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,168
Reaction score
3,348
Points
113
தூறல் – 10

“என்ன துளசி, ஒன் ஹவர் லேட்டு இன்னைக்கு. போச்சு போ?” எனத் தேனு மெதுவாய் முணுமுணுக்க, துளசி தலையை ஆமாம் என்பது போல அசைத்துவிட்டு தன்னிருக்கையை சற்று முன்னிழுத்து அமர்ந்தாள்.

கைகள் கணினியை உயிர்ப்பிக்க, விழிகள் திரையில் பதிந்தன.
“ஊர்ல இருந்து அக்கா வந்திருக்காங்க. அதான் தேனு ஒன் ஹவர் லேட்டு‌. மேனஜருக்குப் பெர்மிஷன் மெயில் அனுப்பிட்டேன். அவர் இன்னும் பார்க்கலை!” என்றாள் தேனு கேட்காத கேள்விக்கும் பதிலாய்.

“சரி... சரி, பெர்மிஷன் சொல்லிட்டா பிராப்ளம் இல்ல. பார்த்துக்கலாம்!” என்று தேனு கூற, இவள் வேலையில் ஆழ்ந்துவிட்டாள்.

சில மணிநேரங்கள் கடந்திருக்க, துளசியின் செவியில் சந்தோஷ் குரல் கேட்டதும் விரல்கள் ஒரு நொடி தன் வேலையை நிறுத்திவிட, அன்னிச்சை செயலாய் தலை சப்தம் வந்த பகுதியை நோக்க, விழிகளால் அவனைத் துழாவினாள். அங்கே நின்று சக ஊழியரிடம் பேசிக் கொண்டிருந்தான். இவள் பார்வை உணர்ந்ததும் நொடியில் விழிகள் இவளைத் தொட்டு மீண்டன.

“சந்தோஷ் சார், இன்விடேஷன் வைக்க வந்துருக்கீங்களா?” என மலர்ந்த முகத்துடன் தேனருவி அவனுக்கு அருகே செல்ல, துளசி அசையாது அமர்ந்த இடத்திலே இருந்தாள்.

“ஆமா தேனு...” என்றவன் உதடுகளில் சர்வ நிச்சயமாக உயிர்ப்பான புன்னகை இல்லை. சம்பிரதாயப் புன்னகைதான் அது. மற்றவர் கண்களுக்குப் புலப்படாது போனாலும், துளசியால் இனம் கண்டறிய முடிந்தது. அதில் இவளுக்கு கொஞ்சம் வருத்தம் இல்லாமல் இல்லை. அதை வெளியில் காண்பித்துக் கொள்ளாது புன்னகை என்னும் அரிதாரம் பூசிக் கொண்டாள்.

அனைவருக்கும் அழைப்பிதழை கொடுத்து முடித்தவன், வேந்தனையும் அழைத்தான்.
“வாழ்த்துக்கள் சந்தோஷ், ஹேப்பி மேரீட் லைஃப். கண்டிப்பா வர ட்ரை பண்றேன்!” என அவனை அணைத்து விடுவித்தான் இளவேந்தன். சந்தோஷ் சில நொடிகள் தயங்கி அவன் முன்னே நின்றான்.

“என்னாச்சு மேன், எதுவும் என்கிட்ட சொல்லணுமா? ஸ்பீக் அவுட்!” என்ற வேந்தன் மற்றவன் தோளைத் தொட்டான்.

“சார், ஐ நீட் ட்ரான்ஸ்பர். என்னை வேற ப்ராஞ்சுக்கு மாத்தி விட்றீங்களா?” எனத் தயங்கினான்.

“ஏன், என்னாச்சு. உங்களுக்கு இங்க என்ன பிராப்ளம்?” என்றவன் குரலில் என்ன பாவனை என சந்தோஷால் கண்டறிய முடியவில்லை.

“இல்ல சார், அது... எனக்கு ட்ரான்ஸ்பர் கண்டிப்பா வேணும். சில பெர்சனல் இஷ்ஷூ...” என அவன் தயங்கினான்.

“ஓகே சந்தோஷ், எங்க வொர்க் பண்ணாலும் நீங்க எங்களோட ஸ்டாஃப் தானே?” என்றவன், இடமாறுதலுக்கு ஒப்புதல் அளித்திருந்தான்.

“தேங்க் யூ சோ மச் சார்!” என்ற சந்தோஷ் விடைபெற, இருக்கையில் தளர்வாய் அமர்ந்த வேந்தனின் உதடுகளில் வெற்றி களிப்பு குடியேற, அந்த அழைப்பிதழைப் பிரித்து பார்த்தான். சந்தோஷ் பெயரின் அருகே வேறொரு பெண்ணின் பெயர் இடம் பெற்றிருந்தது.

“சாரி சந்தோஷ், துளசி இஸ் மைன்!” என்றவன் உதடுகள் மென்மையாக முணுமுணுத்தன. கரங்களால் கணினியில் கண்காணிப்பு கருவியைத் திரையிட்டவன் விழிகள் அதில் குவிந்தன.

“சீனியர், எல்லாருக்கும் இன்விடேஷன் கொடுத்துட்டீங்க. பட் எனக்கு கொடுக்கலையே?” என துளசி சின்ன புன்னகையுடன் கேட்டாள். சந்தோஷிடம் பதிலில்லை. அவளது முகத்தைப் பார்க்காது விழிகள் சுற்றிலும் அலைபாய்ந்தன.

“ப்ம்ச்... சீனியர் வாங்க!” என அவன் கரத்தைப் பிடித்திழுத்துச் சென்று பணிமனையில் அமர வைத்தாள்.

“சொல்லுங்க... உங்க மேரேஜ்க்கு நான் வர வேணாமா?” என இவள் வினவ, “வர வேணாம் துளசி...” என நொடியில் பதிலியம்பியவனை ஆதுரமாகப் பார்த்தவளின் கரங்கள் மெல்ல உயர்ந்து அவனது கரத்தை மெதுவாய்த் தட்டிக் கொடுத்தன.

“சாரி துளசி, நான் உயிருக்கு உயிரா லவ் பண்ண பொண்ணை வச்சுட்டே, இன்னொரு பொண்ணு கழுத்துல தாலி கட்டுற தைரியம் எனக்கில்லை!” என்றவன் குரல் வருத்தத்தில் தோய்ந்தது.

சில நிமிடங்கள் அவளிடம் நிசப்தம். பெருமூச்சை வெளிவிட்டவள், “சீனியர், கண்டிப்பா நான் உங்க மேரேஜ்க்கு வர மாட்டேன். பட், என் மனசு அங்கதான் இருக்கும். உங்களோட வாழ்க்கை சந்தோஷமா நிம்மதியா அமைய என்னோட வாழ்த்துக்கள்!” என்றவளை நிமிர்ந்து பார்த்தவனின் இதழ்களில் விரக்திப் புன்னகை.

“நீ இல்லாம எப்படி துளசி சந்தோஷமா வாழ்றது?” ஆதங்கத்தில் இரைந்தான். நிதர்சனம் உணர்ந்து அடுத்த அடியை எடுத்து வைக்க மனம் முன்னெடுக்கவில்லை. இன்னுமே அவன் தேங்கி நின்றான் இந்தப் பெண்ணிடம்.

“ப்ம்ச்... என்ன பேச்சு சந்தோஷ், இத்தனை வருஷம் உங்க அம்மா, அப்பா கூட நீங்க சந்தோஷமா இல்லையா? எல்லாம் நம்ம மனசுதான் காரணம். சீக்கிரம் நான் உங்களோட கடந்த காலமா மாறிடுவேன். உங்களை மட்டுமே நம்பி வர்ற பொண்ணுக்கு நீங்க நல்ல ப்ரெண்டா, ஹஸ்பண்டா இருப்பீங்கன்னு நம்புறேன். கடவுள் எழுதுனதை யாராலும் மாத்த முடியாது. அக்செப்ட் பண்ணி மூவ் ஆகுங்க. நீங்க நினைச்சதை விட உங்களோட வாழ்க்கை கண்டிப்பா சந்தோஷமா இருக்கும்!” என்றவளை சந்தோஷ் வேதனையுடன் பார்த்தான். அந்தப் பார்வையில் இவளது முகமும் அகமும் கனிந்து போனது.

“சந்தோஷ்... கல்யாண மாப்ளை இப்படி இருக்கலாமா? ஹம்ம்..‌. ஸ்மைல் பண்ணுங்க!” என்றாள் கரங்களை அழுத்தி அவனை இயல்பாக்கும் பொருட்டு.

“சிரிக்க முடியலை துளசி. பொய்யா சிரிக்கிற பீல். உன்னை, உன்னை எந்த வகையிலும் நான் பாதிக்கலையா?” எனக் கேட்டவனின் குரல் முழுவதும் அவளுக்கான அன்பு கொட்டிக் கிடந்தது. அதில் இவளுக்கு முறுவல் தோன்றியது.

“ஏன் பாதிக்கலை, நிறைய நிறைய பாதிச்சீங்க. என் அம்மா, அப்பாவுக்கு அடுத்ததா என்னை அன்பா பார்க்குற உங்களோட பார்வை என்னை பாதிச்சிருக்கு. நான் சாப்பிட்டேனான்னு டெய்லி அதட்டி என் வயித்தை வாடவிடாம பார்த்துட்ட அக்கறை என்னைப் பாதிச்சது. என் முகத்தைப் பார்த்தே என் ப்ராப்ளத்தை கண்டு பிடிச்ச சந்தோஷ் என்னை நிறைய நிறைய பாதிச்சாரு. உங்க கண்ல எனக்கான நேசத்தைப் பார்க்கும்போது அவ்வளோ சந்தோஷமா இருக்கும். இந்த சந்தோஷ்க்கு என் மனசுல என்னைக்கும் இடம் உண்டு. ஆனால், அது நண்பனா மட்டும்தான். வேற எப்படியும் உங்களை என்னால பார்க்க முடியலை சீனியர்!” என்றவளின் குரல் லேசாய் கலங்கியிருந்தது.

அதில் நொடியில் பதைபதைத்த சந்தோஷ், “துளசி... துளசி, சாரி டா. நான் உன்னை ஹேர்ட் பண்ணிட்டேனா?” எனத் தன் முகம் பார்ப்பவனைக் காண்கையில் இவளுக்குள் ஏதோ உருகிப் போனது.

“உங்களால என்னை ஹேர்ட் பண்ண முடியாது சந்தோஷ்...” என்றவள் முகம் மலர்ந்திருந்தது.

“ஒரு ப்ரெண்டா நீங்க எனக்கு கடைசிவரை வேணும்!” என்றாள் உணர்ந்து. அந்தக் குரலில் இவனுள்ளே ஏதோ சிதறிப் போனது.

“சாரி... சாரி துளசி, நான் ட்ரான்ஸ்பர் இனிஷியேட் பண்ணிட்டேன். இதுக்கும் மேலயும் இங்க வொர்க் பண்ண மனசு வரலை... உன்னைப் பார்த்துட்டே!” என திக்கித் திணறி கூறி முடித்தவனின் குரலில் மெல்லிய இடறல். தவறு செய்த பாவனையில் தன் முன்னே அமர்ந்திருந்தவனைப் பார்த்து அதிராமல் புன்னகைத்தாள் துளசி.

“வேற ப்ராஞ்சுக்கு மாறிப் போனா நம்மளோட ப்ரெண்ட்ஷிப் ப்ரேக் ஆகுமா என்ன சீனியர்? மேரேஜ் முடிஞ்சாலும் எனக்கு ஹெல்ப்னா, அதுக்கு உங்களைதான் ஃபர்ஸ்ட் கூப்பிடுவேன்!” என்றவள் குரலில் இவனது பதட்டம் மெதுவாய் தணிய உடல் தளர்ந்தது. உதடுகள் மெல்லிய புன்னகையை உதிர்த்தன.

“நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன் துளசி!” என்றான் மனதை மறையாமல்.

“இதோ பக்கதுல ஒரு மணி நேரம் தானே ட்ராவல். என்னமோ ஊரை விட்டுப் போற மாதிரி தான் பேச்சிருக்கு. எப்ப தோணுதோ வந்து பார்க்கலாம்!” என்றவளிடம் நிம்மதி பிறந்தது. ஒரு வழியாய் இவன் நிதர்சனம் உணரத் தொடங்கிவிட்டான் என்பதில் உள்ளம் பூரித்துப் போனது.

“சரி துளசி... நான் வரேன்!” என அவன் எழ, அருகே சென்றவள், “ஹேப்பி மேரிட் லைஃப் சீனியர். என்னோட வாழ்த்துக்கள்!” எனக் கைக்குலுக்கி அவனை அனுப்பி வைத்தாள். அவன் கண் மறையும் வரை பார்த்து நின்றவள் விழிகள் மெதுவாய் கலங்கின. உதடுகளில் புன்னகை பூத்திருந்தது.

‘நீங்க நல்லா இருக்கணும் சீனியர், ஐ விஷ்!’ என்று முணுமுணுத்த உதடுகளை ஊன்றிக் கவனித்தான் இளவேந்தன். அவர்கள் பேசியது செவியில் தெளிவாய் கேட்கவில்லை எனினும் துளசியின் உடல் மொழியிலும் விழி அசைவிலும் அவனால் உணர முடிந்தது. அவள் அகலும்வரை விழிகள் பாவையிடம்தான்.

கணினியை அணைத்து வைத்துவிட்டு இருக்கையில் தளர்வாய் அமர்ந்தான். தலையைப் பின்னோக்கி சாய்க்க, கரங்கள் தலை முடியைக் கோதின. மெதுவாய் விழிகளை மூடினான். துளசிதான் வந்து நின்றாள். அவளது கண்களிலிருந்த கன்னம் தொட்ட கண்ணீர் துளிகள் இவனை சர்வ நிச்சயமாய் நிம்மதியிழக்கச் செய்தன.

“ஆருயிரே என்னுயிரே உள்ளம் கொண்டது ஓர் மயக்கம்!
என்னுயிரே காதலில் இரண்டாம் நிலைதான் பால் மயக்கம்!
மெய் தீண்டும் நேசம் தொடங்கியதோ?
இது காதலின் மூன்றாம் படி நிலையோ?
என் உடல் வழி அமிர்தம் வழிக்கின்றதோ?
என் உயிர் மட்டும் புது வித வலி கொண்டதோ?”

மாலை அலுவலகம் முடிந்து துளசி கிளம்ப யத்தனித்த நொடி அவளது கைப்பேசி அலற, எடுத்து செவியில் பொருத்தினாள்.

“மேடம், வீடு ஒன்னு அமைஞ்சு இருக்கு. இது உங்களுக்கு செட்டாகும்னு தோணுது, எப்போ பார்க்கலாம்?” என மறுபுறம் அந்த வாலிபன் வினவ, “சார், இப்போ என்னால வர முடியாது. வீக் எண்ட் பார்க்க வரலாமா?” எனத் தயங்கினாள். இவள் வீட்டைப் பார்த்துவிட்டு தாமதமாய் தன்னிருப்பிடம் சென்றால் அங்கே சக்தியின் பேச்சும் செய்கையும் எப்படி இருக்குமென கற்பனை விரிய, உதடுகளில் கசந்த முறுவல்‌ பிறந்தது.

“சரிங்க மேடம், வீக் எண்டே போகலாம்!” என அவன் சம்மதித்ததும் சரியென அழைப்பைத் துண்டித்துவிட்டு வீட்டிற்கு கிளம்பினாள். செல்லும் வழியில் ஜெயவர்மனுக்கு இனிப்புகள் வாங்கிக் கொண்டாள்.

உள்ளே நுழைந்ததும் சித்தி எனத் தாவிய சின்னவனை அறைக்குள் தூக்கிச் சென்றவள், “ஜெய்க்கு சித்தி என்ன வாங்கிட்டு வந்திருக்கேன் பாரு...” என்ற துளசி பெரிய டெய்ரிமில்கை அவன் பிஞ்சுக் கரங்களில் வைத்தாள்.

அதை தன் கைகளில் அடக்க முடியாது போனாலும் விழிகள் சந்தோஷத்தில் விரிய, “தேங்க் யூ சித்தி...” எனக் குதித்தான் சின்னவன். அவன் பட்டுக் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள் இவள்.

அவனும், “சித்தி... நானு, நானு!” என எக்கி அவளது கன்னத்தை ஈரம் செய்தான். துளசியின் உதடும் முகமும் மலர்ந்து போயின. ஜெயவர்மன் இன்னெட்டைத் தூக்கிக்கொண்டு ஓடவும், இவள் உடைமாற்றவென அலமாரியைத் திறந்தாள்.

“ம்மா... சித்தி வாங்கிக் கொடுத்தாங்க!” ஜெய் குதூகலக் குரலில் கூற, “எதுக்கு இவ்வளோ பெரிய சாக்லேட் உனக்கு. மொத்தத்தையும் சாப்ட்டா கேவிட்டி வந்துடும். அதை கொடு ஜெய்!” என்ற சக்தி குழந்தையின் கையிலிருந்து வெடுக்கென இன்னெட்டைப் பிடுங்கி விட, அவன் விழிகள் கலங்க, முகம் வாடிப் போயின.

“சக்தி, என்ன இது? அவன் கொஞ்சம் சாப்பிடட்டும்!” சதானந்த் மகனைத் தூக்கி மடியில் அமர்த்தியபடி மனைவியை அதட்டினான்.

“லாஸ்ட் மந்த் அவன் பல் வலின்னு நைட்டெல்லாம் அழுது என்னைத்தான் தூங்கவிடாம பண்ணான். நீங்க நல்லா தூங்கீட்டு இருந்ததால மறந்துட்டீங்க...” இவள் அவனைப் பார்த்துக் காய, சதானந்தால் எதுவும் பேச இயலவில்லை.

“ம்மா... சாக்கி மா. கொஞ்சம் தாங்க மா!” என சின்னவன் கெஞ்சி ஏக்கப்பார்வை பார்த்தான். உடைமாற்றி வெளியே வந்த துளசி, “க்கா..‌. குழந்தை கேட்குறான் இல்ல, கொஞ்சம் கொடுத்தா தப்பில்லை. முழுசும் சாப்பிட்டாதான் தப்பு...” என்றவள் ஜெயவர்மனைத் தூக்கினாள்.

“துளசி, நைட் வேணாம். காலைல சாப்பிடட்டும்...” சக்தி கூற, சின்னவன் விசும்பிக் கொண்டே துளசியின் நெஞ்சில் சாய்ந்தான். அவளுக்குக் கோபம் வந்தாலும் காண்பிக்க முடியாத நிலையில் இருந்தாள். எதாவது பேசினால் சக்தி எங்கேனும் சென்று முடித்து எதாவது பிரச்சனை செய்வாளோ எனப் பொறுமையை இழுத்துப் பிடித்தாள்.

“சக்தி... ஆசை காட்டி அவனை ஏமாத்துற மாதிரி இருக்கு...” என்ற வசுமதி அந்த இன்னெட்டை எடுத்து கொஞ்சம் குழந்தைக்குக் கொடுத்தார். சிவசக்தி அவரை எதுவும் சொல்ல முடியாது முகத்தைக் கடுகடுவென வைத்துக் கொண்டாள். இன்னெட்டுக் கிடைத்ததும் ஜெயவர்மனின் அழுகை நிற்க, துளசி கண்ணீரைத் துடைத்துவிட்டாள்.

சின்னவன் கீழே இறங்கி புத்தகத்தை விரித்து வைத்து தரையில் அமர்ந்து எதையோ எழுதிக் கொண்டிருந்த சோனியாவின் மடியில் அமர்ந்து கொண்டான். அவளது புத்தகத்தைக் காண்பித்து ஏதோ கேள்வி கேட்டவனைக் கொஞ்சிக் கொண்டே பதிலளித்தாள் சோனியா. துளசி மென்முறுவலுடன் அவர்களைப் பார்த்திருந்தாள்.

“துளசி, இன்னும் எத்தனை நாள் தனியா இருக்கப் போறதா உத்தேசம் உனக்கு?” சிவசக்தி குரல் அதட்டல் போல செவியில் வந்து விழ, புரியாது குழப்பத்துடன் அவளைப் பார்த்தாள் துளசி.

“என்னக்கா... என்ன தனியா?” என இவள் புரியாது வினவ,

“கல்யாணம் பண்ணாம இப்படியே இருக்கதா உனக்கு ஐடியாவா? இப்பவே இருபத்தஞ்சு ஆச்சு. இதுக்கும் மேலயும் தள்ளிப் போட வேணாம். அதனால நானும் மாமாவும் உனக்கொரு மாப்பிள்ளை பார்த்து வச்சிருக்கோம். அம்மாவுக்கு ஓகேதான்!” என்று அவள் கூறவும் துளசியின் இதயம் மெலிதாய் அதிர்ந்து போனது. முகத்தில் எதையும் காண்பிக்காது தாயின்புறம் திரும்ப, அவரது தலையையும் சிவசக்தியின் கூற்றை மெய்பிப்பது போல அசைந்தது.

‘என்ன... எப்போது இது நடந்தது?’ என அவளால் எண்ணிக் கூடப் பார்க்க முடியவில்லை. காலையில்தானே சிவசக்தி வந்திறங்கினாள். அதற்குள்ளே தாயையும் சம்மதிக்க வைத்துவிட்டாளே என துளசியிடம் வெகுவாய் ஆச்சர்யம்.

“துளசி, அங்க என்ன பார்வை. இப்படி திரும்பு, பையனைப் பத்தி சொல்லிட்றேன். ரொம்ப பாரம்பரியமான குடும்பம். பையனும் தங்கமானவன், சொத்து எல்லாம் நிறைய கிடக்கு. என்ன கொஞ்சம் கருத்தப் பையன், உன் அளவுக்குப் படிக்கலை. மத்தபடி எந்தக் குறையும் சொல்ல முடியாது!” என்ற சக்தியின் பேச்சு துளசிக்கு அத்தனை உவப்பாய் இல்லை. முகத்திலும் பிடித்தமின்மையை வெளிப்படுத்தினாள்.

“இந்தா... பையன் போட்டோ பாரு. உனக்கு அவனைப் பிடிக்கும். மாமாதான் உனக்காக கவலைப்படுட்டே இருந்தாரு, இந்த சம்பந்தத்தைக் கூட அவர்தான் எடுத்துட்டு வந்தாரு!” என்று சக்தி கூறியதும் சதானந்திடம் மெல்லிய அதிர்ச்சி. அவனது முகத்தைப் பார்த்தே அவனுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என துளசியால் உணர முடிந்தது.

சக்தியின் கரங்கள் இவளை நோக்கி நீள, அலைபேசியை வாங்கவில்லை துளசி. “இல்ல அக்கா, எனக்கு இப்போதைக்கு கல்யாணத்துல இஷ்டம் இல்லை. கொஞ்ச நாள் போகட்டும். அப்புறம் பார்த்துக்கலாம்!” என்று எழுந்து நகரச் சென்றாள்.

“கொஞ்ச நாள் போகட்டும்னா, எப்படி நாப்பதுல கல்யாணம் பண்ணிப்பீயா நீ? உன்கிட்ட நான் சம்மதம் கேட்கலை. அப்பாவுக்கு அடுத்து இந்தக் குடும்பத்து மேல எனக்குப் பொறுப்பு அதிகம். மாமா தான் அப்பா ஸ்தானத்துல இருந்து இந்தக் கல்யாணத்தை நடத்தி வைக்கிறேன்னு சொல்லி இருக்காரு. நீ அவரை மதிப்பேன்னு நம்புறேன்!” என்ற சக்தியிடம் என்ன பேச எனத் தெரியாது துளசி பொறுமையை இழுத்துப் பிடித்து நின்றாள்.

“ம்மா... பேசாம இருக்க... நீயே சொல்லு, நான் இந்தக் குடும்பத்தோட நல்லதுக்குத்தான் இதை செய்றேன். நான் மட்டும் கல்யாணம் பண்ணி சந்தோஷமா இருக்க, என் தங்கச்சிங்க கஷ்டப்பட்டுட்டு இருக்காங்க‌‌. நாலு பேர் என்னைக் கேள்வி கேட்குறதுக்கு முன்னாடியே நான் என் கடமையை முடிச்சிடணும்னு நினைக்கிறேன். அதனால துளசி இந்தப் பையனைதான் கல்யாணம் பண்ணணும். அடுத்த வாரம் அவங்களைப் பேச வர சொல்லிட்றேன்!” என்றவளை துளசி அதிர்ந்து பார்த்தாள். இவள் ஒரு முடிவோடு தான் வந்திருக்கிறாள் என எண்ணியதும் நெஞ்சை ஏதோ அடைக்கும் உணர்வு.

இத்தனை நேரப் பேச்சுகளை அமைதியாய் அவதானித்த சோனியா புத்தகத்தை மூடிவிட்டு ஜெயவர்மனைத் தூக்கிக்கொண்டு சிவசக்தி முன்பு வந்து நின்றாள்.
“ஏன் சக்தி கா, நீ இதெல்லாம் எங்க மேல இருக்க அக்கறைல செய்யலையா? யாரும் உன்னைக் கேள்வி கேட்ற கூடாதுன்னு செய்றீயா? நான் கூட அக்கா பாசத்துல பண்ணுறன்னு நினைச்சு ஏமாந்துட்டேன்!” எனப் போலி வருத்தத்தைக் காண்பித்தவளிடம் ஏக நக்கல் தொனிதான்.

அதில் சக்தியின் முகம் மாறியது.
“ம்மா... என்னமா, இவளைப் பேசவிட்டு வேடிக்கைப் பார்த்துட்டு இருக்கீங்க? நீங்க அமைதியா இருக்கது இவ பேசுறதெல்லாம் உண்மைன்ற மாதிரி இருக்கு. நான்தான் தங்கச்சிங்கன்னு பாசமா இருக்கேன். ஆனால், சின்னவ என்னை அப்படி நினைக்கலை போல. எடுத்தெறிஞ்சுப் பேசுறா!” என்ற சக்தியின் கண்கள் கலங்கிப் போயின.

“சோனியா, நீ சின்ன பொண்ணு. இதுல எல்லாம் தலையிடக் கூடாது. போ, போய் படிக்கிற வேலையைப் பாரு!” வசுமதி சோனியாவை அதட்டிக் கொண்டே சக்தியின் அருகே சென்று நின்றார்.

“ம்மா... நான் ஒன்னும் சின்ன புள்ளை இல்ல மா. எனக்கு இருபது வயசாகப் போகுது‌. இந்த வீட்ல நடக்குற நல்லது கெட்டது எல்லாத்தையும் தெரிஞ்சுக்குற, கேள்வி கேட்குற உரிமை எனக்கிருக்கு!” என்றவள், சக்தியின் புறம் திரும்பினாள்.

“ஏன் சக்தி கா, எங்க மேல பாசமா இருக்கேன், அக்கறையா இருக்கேன்னு வார்த்தைக்கு வார்த்தை சொல்ற. ஆனால், ஒரு பத்து நிமிஷம் போன் பண்ணி கூட உன்னால பேச முடியலை. ஒரு வருஷம் ஆச்சு நீ கடைசியா வந்துட்டுப் போய். அதுக்கு இடையில நோ கால்ஸ்‌. நாங்க உயிரோட இருக்கோமா இல்லை, செத்துட்டோமான்னு கூட நீ பார்க்கலை. ஹம்ம்... இந்த வீட்டோட நிலைமை உனக்குத் தெரியுமா? துளசிக்கா எவ்வளோ கஷ்டப்படுறான்னு தெரியுமா? சாப்பாட்டுக்கே கஷ்டப்படுற நிலையிலதான் இருக்கோம். ஏன், மாமா கவர்மெண்ட் ஜாப்லதானே இருக்காரு. ஒரு நாள் ஒரு பொழுது கால் பண்ணி என்னம்மா பண்ற, காசு வச்சிருக்கீயா? அப்பா மெடிகல் செலவுக்கு அனுப்பவான்னு ஒரு ரூவா அனுப்பி இருப்பீயா? ம்கூம், அப்போ எல்லாம் இல்லாத அக்கறை என்ன இப்போ புதுசா?” என சோனியா வார்த்தைகளைக் கடித்து துப்ப, சக்தியின் முகம் விழுந்து போனது‌.

“சரி, அக்கறைன்னே வச்சுப்போம். உனக்கு மட்டும் நல்ல படிச்ச கவர்மெண்ட் வேலைல இருக்க பையனைத்தானே அப்பா பார்த்து கல்யாணம் பண்ணி வச்சாரு. ஆனால், நீ துளசிகாக்கு எப்படி மாப்பிள்ளை பார்த்திருக்க. அவ அங்கப் போய் என்ன பண்ணனும்னு எதிர்பார்க்குற. மாடு மேச்சுட்டு, அதுகளுக்கு சாணி அள்ளிப் போட்டு கிராமத்துல இருக்கணும்னு நினைக்கிற? இதெல்லாம் எந்த விதத்துல அக்கறைன்னு எடுத்துக்கிறது? எனக்குப் புரியலை. நீயே சொல்லு கேட்போம்!” என்ற சோனியாவின் வார்த்தைகள் பொங்கின. எத்தனையோ நாட்கள் இவளது அட்டகாசங்களைப்
பொறுத்துக்கொண்டு போனார்கள். ஆனால், கடைசியில் சக்தி துளசியின் வாழ்க்கையில் கை வைக்கப் பார்க்கிறாளே என தமக்கைகாகப் மனம் வெதும்பிப் போனது.

சக்தியின் கண்களில் நீர் நிரம்பி வழிந்து கன்னத்தை நனைத்தது. “ம்மா... போதும் மா. என்னதான் என் புள்ளை என் புள்ளைன்னு சொல்லி வளர்த்தாலும் கடைசியில் நான் மாற்றான் வீட்டுப் புள்ளைன்னு நிரூபிச்சிட்டீங்க இல்ல. உங்களுக்காகப் பார்த்து பார்த்து நான் செய்ய, நீங்க என்னை எதுக்குமே மதிக்கலை. நான் செய்ய வர்ற நல்லதைக் கூட தப்பா எடுத்துக்குறீங்க. என் அம்மாவா இருந்தா, இவளைப் பேசவிட்டு வேடிக்கைப் பார்த்து இருப்பாங்களா என்ன? ஓரகத்தி மகன்னு இளக்காரமா போய்ட்டேனா நானு. யாருமில்லாத அநாதைன்னு உங்க இஷ்டத்துக்குப் பேசலாம் இல்ல? எதுக்கு இங்க வந்தேன். இப்படி அசிங்கப்பட்டு நிக்கவா?” என சக்தி தேம்பியழ, சோனியா அவளை எரிச்சலாய்ப் பார்த்தாள்.

“நாடகக்காரி!” அவள் இதழ்கள் கோபத்துடன் முணுமுணுக்க, துளசி சற்றே கலவரத்துடன் அனைத்தையும் பார்த்திருந்தாள்.

“நான் கிளம்புறேன். இங்க இருக்க எனக்கு என்ன உரிமை இருக்கு?” என்ற சக்தி குழந்தையை இழுத்துக்கொண்டு நடக்க முயல, அவன் வீறிட்டு அழத் தொடங்கினான்.

“சக்தி...வாயை மூடு. அநாதை, அது இதுன்னு பேசிட்டு இருக்க. உன்னை நாங்க அப்படியா வளர்த்தோம். முத்த மகளாத்தான் அப்பவும், இப்பவும் பார்க்குறேன். அவ உன் தங்கச்சிதானே? ஏதோ தெரியாம பேசுறா... பொறுத்துப் போ!” என்ற வசுமதி, சோனியாவின் முதுகில் ஒன்று வைக்க, “ம்மா... என்ன பண்றீங்க?” என துளசி பதறித் தங்கையைத் தன்புறம் இழுத்தாள். அவர் அடித்த அடியில் கண்கள் கலங்கினாலும் சோனியா அப்படியே நிற்க, துளசி வேதனையுடன் அவளைத் திரும்பிப் பார்த்தாள்.

“இல்ல மா, இதுக்கும் மேல நான் இங்க இருக்கது சரியில்லை!” என அவள் நகரப் பார்க்க, “மாப்பிள்ளை, நீங்க கொஞ்சம் இவகிட்ட எடுத்து சொல்லுங்க. வீடுன்னா பிரச்சனை வரத்தான் செய்யும். அதுக்காக வந்த அன்னைக்கே கிளம்புறதா?” என வசுமதி பேசி சக்தியை சமாதானம் செய்து அமர வைத்தார்.

“சக்தி கா, எங்க மேல உங்களுக்கு நிறைய அக்கறை இருக்கு, இல்லைன்னு சொல்லலை. ஆனால் நம்ம குடும்ப சூழ்நிலை என் கல்யாணத்தைப் பத்தி யோசிக்கவிடலை‌. உங்களுக்கே தெரியும் அப்பா நிலைமை பத்தி. சோனியா வேற படிக்குறா. அம்மா ஒருத்தவங்க எப்படி எல்லாத்தையும் பார்த்துக்க முடியும். சோ, இந்த டாபிக் இப்போ வேணாம். எல்லாம் ஓரளவுக்கு சரியானதும், நானே சொல்றேன். அப்புறம் கல்யாணத்தைப் பார்த்துக்கலாம்!” என்று உறுதியாய் மறுத்துவிட்டாள். என்னை மீறி எதுவும் உன்னால செய்துவிட முடியாது என்றொரு பார்வையை வீசியவளை பார்த்து சக்திக்கு கோபம் வந்தது.

சக்தி ஏதோ பேச வர, “போதும். இந்தப் பேச்சை காலைல பேசிக்கலாம். எல்லாரும் வாங்க. வந்து சாப்பிடுங்க!” என வசுமதி அனைவரையும் அமர வைத்து உணவுண்ண வைத்தார். தொண்டையில் அடைத்துக் கொண்ட உணவை கடினப்பட்டு விழுங்கிய துளசி பாயையும் தலையணையும் எடுத்து வந்து கூடத்தில் விரித்துப் படுக்க, சோனியா அவளருகே படுத்தாள்.
சிவசக்தி மகன், கணவனுடன் அறைக்குள் நுழைந்தாள்.

வசுமதி அடுக்களையை சரிசெய்ய சென்றுவிட, துளசியின் விழிகளிலிருந்து கண்ணீர் வழிந்தது.

“அக்கா, அழறீயா நீ?” என்ற சோனியா அவள் மீது கையைப் போட்டு அணைத்துக் கொண்டாள்.

“இது பேசுறதெல்லாம் பெருசா எடுத்துக்காத கா. என்னை மீறி என்ன பண்ணிடும் இந்த சக்திகா. நான் பார்த்துக்கிறேன்!” பெரிய மனுஷியாய்ப் பேசிய தங்கையின் கன்னத்தில் முத்தமிட்டாள் துளசி.

“சாரி சோனி, அம்மா அடிச்சது வலிக்குதா?” இவளது குரல் கலங்கி வந்தது‌.

“அட, இதெல்லாம் புதுசா என்ன. விடுக்கா. அப்பவே வலி போய்டுச்சு. நீ நிம்மதியா தூங்கு. எது வந்தாலும் பார்த்துக்கலாம்!” என்ற சோனியாவின் நம்பிக்கையில் இவளது உதட்டில் முறுவல் பூத்தது.

“கட்டாயக் கல்யாணம்னு போலீஸ்ல புடிச்சுக் கொடுத்துடலாம் இந்த சக்தி அக்காவை. மாமாவாது நிம்மதியா இருப்பாரு. சரியான தொல்லை, திடீர்னு வந்து இறங்கும் போதே நினைச்சேன். வந்த அன்னைக்கே ஏழரையக் கூட்டீடுச்சு!” சோனியா ஆதங்கத்தில் முணுமுணுக்க, துளசியின் எண்ணமும் அதுவே. சில நிமிடங்கள் இருவரிடமும் அமைதி. வசுமதி வந்து அவர்கள் அருகே படுக்க, பேச்சு நின்றது. சில பல மணி நேரங்கள் கழித்து நித்தரா தேவியை சரணடைந்திருந்தாள் துளசி.

விரைவிலே எஞ்சியிருந்த கொஞ்சம் நிம்மதியுமிழந்து தனித்து பூங்காவில் அமர்ந்திருந்தவளின் முகத்தில் தேற்ற ஆளற்ற அழுகை. மெல்லிய விசும்பல் பெரிய அழுகையாய் மாற, அவள் முன்னே வந்து நின்றிருந்த இளவேந்தனைக் அணைத்துக்கொண்டு கதறியழுதிருந்தாள்.

தொடரும்...
 
Top