• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

துருவம் - 4 ❤️

Administrator
Staff member
Messages
997
Reaction score
2,809
Points
93
அத்தியாயம் – 4

"அக்கா என்னக்கா பண்ற நீ. ஒழுங்கா போங்கு ஆட்டம் ஆடாம விளையாட மாட்டியா?"
"டேய் போடா நான் அப்படி தான் விளையாடுவேன் புடிச்சா இரு இல்லனா போ" கூறிக்கொண்டே ஒளித்து வைத்து இருக்கும் அந்த சீட்டை யாருக்கும் தெரியாமல் உள்ளே சொருகினாள்.
"அக்கா கண்டு புடிச்சிருவாங்க கா" பின்னிருந்து பேசி கொண்டிருக்கும் தன் பக்கத்து வீடு சிறு பிள்ளையை ஒரு பார்வை பார்த்தாள் முறைப்புடன், "ஆமா இந்த பார்வைக்கு ஒன்னும் குறை இல்ல பாரு அவன் தான் இப்பயும் ஜெயிக்க போறான்" எரிச்சலுடன் முன்னே விளையாடி கொண்டிருக்கும் ப்ரஜனை பார்த்து கூறினான் ராகுல்.
"இப்ப நான் ஜெயிச்சு குடுத்தா நீ என்ன பண்ணுவ?" சவாலோடு அவனை பார்த்து சிரித்தாள்.
"ஆஹ் ஒன்னும் பண்ண மாட்டேன் நீயே திருட்டு தனமா ஜெயிக்கிற இதுல உனக்கு பூஜை வேற பண்ணனுமா?"
"டேய் பொடலங்கா என்ன வாய் அதிகம் ஆகிடுச்சு?" குரலை உயர்த்தினாள்.
"அக்கா அப்றம் பேசிக்கலாம் எப்படி ஆச்சும் ஜெயிச்சுக் குடுக்கா, இது ஆறாவது வாட்டி நாம தோக்குறது"
அவள் நாடியை பிடித்துக் கெஞ்சினான் ராகுல். தலையை ஆட்டியவாறே, "இவ்ளோ தூரம் நீ கெஞ்சி கேக்குற. சரி, உனக்கு ஹெல்ப் பண்ண ட்ரை பண்றே"
தீவிரமாக விளையாடியவள் அந்த ஆட்டையிலேயே வெற்றியும் தழுவினாள், "எப்புடி?" இல்லாத சட்டை காலரை தூக்கி ராகுலிடம் கேட்டாள், "மாஸ் காட்டிட்ட போ கா" சந்தோஷத்தில் இருந்த பணம் அனைத்தையும் இருவரும் சுருட்டி அருகில் இருந்த அந்த பொட்டி கடைக்கு சென்று குண்டு சோடா குடித்து விட்டு வீடு திரும்பினார்கள், "சரி கா நாளைக்கு மறக்காம காலைல வந்துரு" நாளை மட்டைப்பந்து விளையாட நினைவூட்டினான் ராகுல்.
"நாளைக்கு எனக்கு இண்டெர்வியூ இருக்குடா அங்க போகணும்"
"இதோட 22 வது இண்டெர்வியூ, சரி எப்புடியும் நீ செலக்ட் ஆக போறது இல்ல அதுனால பீல்டிங்கு ஆவது கிரௌண்ட்க்கு வந்துருக்கா டாடா" என்று கூறியவன் அவள் அடிக்கும் முன்பே ஓடிவிட்டான்.
"டேய் பாரு நாளைக்கு செலக்ட் ஆகல என் பெற யாழினி இல்ல" வந்த கோவத்தில் கத்தினாள்... ஆனால் அதை கேட்க தான் அவன் அங்கு இல்லை.
"அப்புடின்னா வாரத்துக்கு உனக்கு 2 பேர் மாத்தணும் நாங்க"
வீட்டு வாசலில் நின்றவளுக்கு அவள் தாயார் கூறியது கேட்டது, "அட போமா நீயும் அவன்கூட சேந்து என்ன கலாய்க்கிறியா?" உதட்டை பிதுக்கி கேட்டவளை பார்க்க பாவமா இருந்தது, "சரிடா தங்கம் உனக்கு வேலை கெடச்சிரும் கவலைப்படாத" என்றார் யாழினியின் தாயார் அம்புஜம்.
"கண்டிப்பா கெடச்சிறும்ல மா?" சிறுபிள்ளை போல் கேட்டவளின் கண்களில் ஒரு ஏக்கம் இருந்தது.
"ஆமா அப்புடியே நீ சம்பாதிச்சு குடுத்து இந்த குடும்பத்தை நெட்டமா நிமித்திருவப் பாரு, நானு பாத்துட்டே தா இருக்கேன் ஒரு வருசமா வீட்டுல தெண்டமா தா இருக்குற இதுல இன்டெர்வியூக்கு போறேன்னு சொல்லி நூறு ருபாய் வாங்கிட்டு போறது. உன்னால வீட்டுக்குனு என்ன நல்லது நடந்துச்சு, உனக்கு வீட்டுக்கு ஏதாச்சு நல்லது பண்ணனும்னு தோணுச்சுனா உன்ன பெத்தவனுக்கு நாலு காசு சம்பாதிச்சு குடு, கடன் வாங்காமயாச்சும் நிம்மதியா குடிப்பேன்" தள்ளாடியவாறே வீட்டு நிலைக்கதவின் உதவியோடு அறைபோதையில் சிவந்திருந்த கண்களை சிரமத்துடன் திறந்து நின்றார், பரமசிவம். யாழினியின் தந்தை.
"நூத்துக்கு நூறு சரியான வார்த்தை தான் பா, என்ன பண்றது உங்க பொண்ணாச்சே உங்கள் மாதிரி கொஞ்சம் ஆச்சு இருக்கணும்ல அதான் உங்களமாதிரியே அம்மா சம்பாதிக்கிற இருவது ஆயிரம் ரூபாய்ல இன்னோரு பாதிய இப்புடி இன்டெர்வியூக்கு போய் வேஸ்ட் பண்ண பிளான் போட்ருக்கேன், என்ன ஓகேயா?" கண்கள் மின்ன குறும்போடு கேட்டாள்.
"கேட்டியா உன் பொண்ணு பேச்ச ஒடம்பு முழுக்க திமிரு மட்டும் தா இருக்கு" உதவியாய் பிடித்திருந்த கதவை கோவத்தில் விட்டவரின் கால்கள் தடுமாற கீழே விழ இருந்தவரை, "அப்பா பாத்து பா" தாங்கி பிடித்தாள் குழலினி. யாழினியின் தங்கை .
அவள் கையை பிடித்தவர் அருகில் இருந்த நாற்காலியில் சரிந்தார், "பாத்தியா இது தான் பொண்ணு, பெத்தவங்களுக்காக கஷ்ட பட்டு சம்பாதிச்சு குடும்பத்துக்கு உதவி பண்ணுறா"
"காலேஜ் போறவ கிட்ட பேசி மண்டைய கழுவி பார்ட் டைம் ஜாப் பாக்க வச்சிருக்கீங்க, வர்ற காச அவ என்ன அம்மா கிட்டயா குடுக்குறா? உங்களுக்கு குடிக்க தான குடுக்குறா அதுனால நீங்க அவளுக்கு சப்போர்ட் பண்ண தான் செய்விங்க, ஏய் குழல் போய் சூடா ஒரு டீயை எடுத்துட்டு வா பாப்போம்"
தன் பேச்சை கேட்டு சகோதரி உள்ளே சென்றதும் அருகில் இருந்த தாயை பார்த்தவள், அவர் எந்த உணர்வும் இல்லாமல் பரமசிவத்தை பார்ப்பதை பார்த்து, "அம்பு இன்னைக்கு இந்த பரமசிவத்துக்கு போதை கொஞ்சம் அதிகம் ஆன மாதிரி எனக்கு தெரியுது உனக்கு எப்படி தெரியுது?" என்றாள் யாழினி.
"ஏங்க இப்புடி குடிச்சு குடிச்சு ஒடம்ப கெடுக்கிறீங்க" அம்புஜத்தின் குரல் நடுக்கத்தை உணர்ந்தவர் தலையை நிமிர்த்து பார்த்து ஒரு வலி நிறைந்த புன்னகையை குடுத்தார்.
ஆறு வருடங்கள் பின்னோக்கி சென்று தன்னுடைய கம்பீரமான கணவரை அழைத்து வர மனம் அடித்தது. தொழில் ஏற்பட்ட கடும் இழப்பிற்கு பிறகு துவண்டவர் இரண்டு ஆண்டுகள் முயன்று முயன்று தோற்று வாழ்க்கையையே வெறுத்து குடி பழக்கத்திற்கு அடிமை ஆகிவிட்டார். மதுவின் வாடை கூட அருகில் சேர்க்காதவரை இந்த நிலையில் பார்க்க தினம் தினம் இறப்பை வருவது போல் இருந்தது, "ஏங்க காலைலயே குடிச்சிட்டு வந்துருக்கீங்க?" என்று வாடிய குரலில் கேட்டவரை பார்த்து,
"குமார பாத்தேன்" மீதி அவர் கூறாமலே புரிந்தது அம்புஜத்திற்கு.
குமார் பரமசிவத்திடம் வேலை பார்த்தவர். ஆரம்பத்தில் விசுவாசத்துடன் இருந்தவரை நம்பி பரமசிவம் ஏகப்பட்ட பொறுப்புகளை குடுத்ததிற்கு தண்டனையாக அவரை ஏமாற்றி நிரம்ப லாபம் தரும் டெண்டர்களை வேறு ஒருவருக்கு விற்று பரமசிவத்தை அடியோடு சரிய வைத்தார்.
"பரவாலங்க அவன் பண்ணதுக்கு கண்டிப்பா அனுபவிப்பான், அதுக்குன்னு உங்க ஒடம்ப நீங்க கெடுத்துக்கலாமா?"
"மனசு கேக்கலமா இருக்க சொத்து எல்லாத்தையும் வித்து இப்புடி நாம வாடகை வீட்டுல வந்து இருக்க நிலைமை வந்துருச்சே" கலங்கிய குரலில் பேசியவாறு பார்த்த அம்புஜத்திற்கும் கண்கள் கலங்கியது.
"அம்மா நடிப்ப போட்றாரு" வீட்டில் தொங்கிய அந்த பழங்காலத்து ஊஞ்சலில் அமர்ந்து மிச்சரை கொறித்து கொண்டு இருந்தாள், "ரெண்டு வாரத்துக்கு முன்னாடியும் இதையே தான் சொன்னாரு, எல்லாம் ஒரு சாக்குமா குடிக்கிறதுக்கு" அமைதியாக எழுந்து சென்றத் தாயைப் பார்த்து,
"அப்டியே யூ டர்ன் போடு உன் ஆத்துகார பாரு" என்றாள்.
அவர் திரும்பி பார்ப்பதற்குள் பரமசிவம் அந்த இடத்தில இல்லை, "பாத்தியா அவர் என்ன பன்னாலும் நம்புறமா நீ. மண்டைய கொஞ்சம் யூஸ் பண்ணுமா. சரி, இந்தா ஐநூறு ரூபா சீட்டு விளையாண்டு ஜெயிச்சது, ஒரு நூறு ருபாய் மட்டும் நாளைக்கு போறப்ப தா எனக்கு" தாயிடம் கொடுத்து விட்டு தன் அறைக்குச் சென்றவளைப் பார்த்து செய்வதறியாமல் நின்றார் அம்புஜம். கண்டிப்பாக இந்த ஐநூறு ருபாய் சீட்டில் ஜெய்திருக்க வாய்ப்பு இல்லை என்று அவருக்கு தெரியும், யாருக்கும் தெரியாமல் ஒரு ரெஸ்டாரண்ட்டில் அவள் வேலை செய்வது தெரிந்தும் வறுமையின் காரணத்தினால் போக வேண்டாம் என்று அவரால் கூற இயலவில்லை.
***************************
"டேய் கடைய கொஞ்சம் நேரம் வந்து பாத்துக்குறியா அப்பா வெளிய போயிருக்காரு எனக்கு திடீர்னு ஒரு ப்ரசென்ட்டேஷன் வேலை வந்துருச்சு. கொஞ்சம் நேரம் இரு அப்பா வந்துருவாரு" கெளதம் ஆதியை தொலைப்பேசியில் அழைத்து கேட்டான்.
தூக்கத்தில் இருந்தவன் கண்களை கசக்கி, "மச்சான் என்னடா சொன்ன திருப்பி சொல்லு"
"டேய் போதைல இருந்தியா இவ்ளோ நேரம்?"
"இல்லடா தூங்கிட்டு இருந்தேன், சரி என்ன சொன்ன திருப்பி சொல்லு"
"அட நாற பயலே கெளம்பி வாடா கடைக்கு, எனக்கு வேல இருக்கு"
"சண்டே ஆச்சும் நிம்மதியா தூங்க விடுறிங்களாடா கொடும பண்ணாதடா, தூக்கம் வருது" தலையணையை கட்டியபடியே புலம்பினான் ஆதி.
"தமிழ் அவங்க அம்மாவோட வெளிய போயிருக்கான். நீ தான்டா ஹெல்ப் பண்ணணும். இல்லனா வேலை போயிரும்டா, ப்ளீஸ் மச்சி"
"வந்து தொலையிறேன் உனக்கும் உங்க அப்பனுக்கும் வேற வேலை இல்ல, அந்த இத்து போன நாலு வாட்சை வச்சிட்டு என் உயிர வாங்குறீங்க யாருடா அந்த கடைக்குலாம் வராங்க? பேசாம கடைய மூடிட்டு வீட்டுல படுத்து தூங்க வேண்டியது தான"
"பேசாம மூடிட்டு வாடா" காலை கட் செய்திருந்தான் கெளதம் மறுபக்கம்.
எரிச்சலோடு வண்டியை எடுத்தவன் முடிந்தவரை மெதுவாக வண்டியை ஓட்டினான். ஆள் அரவம் இல்லாத இடத்தில் மெதுவாக ஒட்டியது இதுவே முதல் முறை அவனுக்கு. மெதுவாக வந்தவனின் வண்டியில் எவரோ இடிக்க பிரேக்கை அழுத்தி பிடித்து காலை தரையில் ஊன்றினான் ஆனால் எதிரில் வந்த அந்த ஆக்ட்டிவா வண்டியில் வந்த பெண் 'தொப்'என கீழே சரிந்து இருந்தாள்.
நீல வண்ண சுடிதாரில் வெள்ளை நிற லெக்கிங் பாண்ட்ஸ் அணைந்து இருந்தவள் முகம் அவனுக்கு தெரியவில்லை. அவன் முதலில் பார்த்தது அவன் வண்டியில் ஏதேனும் அடி பட்டிருக்கிறதா என்று தான். அவள் நல்ல நேரமோ என்னமோ அந்த கருப்பு ராயல் என்பீல்டில் ஒரு இடம் மட்டும் ஹெட் லைட்டிற்கு கீழே சிறிய அளவு நசுங்கி இருந்தது. போதா குறையாக ஒரு சிறிய கீறல்.
அந்த அடர் கருப்பு நிறத்திற்கு அந்த சிறு வெள்ளை கோடு பெரியதாகவே இருந்தது. வந்த கோவத்தில் அந்த பெண்ணை பார்த்து திரும்பியவன் அவளை பார்த்து கண்களை மூடி கொண்டான் கோவத்தை கட்டு படுத்த. அவள் கீழே விழுந்த பொழுது வண்டியும் அவள் மீது விழுந்திருக்க அதை எடுக்க முடியாமல் அப்படியே திண்டாடிக் கொண்டு இருந்தாள்.
"அறிவு இருக்க இல்லையா உனக்கு? ஒரு வண்டிய பாத்து ஓட்ட தெரியல நீ எதுக்கு வண்டிய எடுத்துட்டு வர்ற? கண்ண பொடனிலையா வச்சிட்டு வண்டிய ஓட்டுவ லெப்ட் சைடு ஒட்டாம எதுக்கு ரைட் சைடுல ஓட்டுற, உனக்குலாம் எவன் லைசன்ஸ் குடுத்தான்?" வண்டியில் விழுந்த காயத்தில் தனக்கே பட்டது போல் பொரிந்து தள்ளினான்.
"ஐயோ இருங்க" அவள் கெஞ்சினாள் வண்டியை எடுக்கப் போராடி கொண்டே, "என்ன இருங்க? உன்னால என் வண்டிக்கு காயம் ஆகிடுச்சு அப்புடியேப் பளிச்சுனு தெரியுது"
"அப்புறமா நல்லா திட்டுங்க ஆனா இப்ப இந்த வண்டிய கொஞ்சம் எடுத்து விடுறிங்களா ரொம்ப வெயிட்டா இருக்கு. ப்ளீஸ்" சிறு பிள்ளை போல் கெஞ்சினாள்.
அவள் கண்கள் அந்த கெஞ்சலில் சுருங்கி மீண்டும் விரிவதை பார்த்தவன் அதில் ஒரு நொடி கண் இமைக்க மறந்து தான் போனான். தன்னை அறியாமலே அவன் கண்கள் அவள் காதில் அவள் அசைவிற்கு ஆடும் அந்த ஜிமிக்கியை பார்த்து வருடி பின் அழகிய மான் விழிகளுக்கு மீண்டும் சென்றது. ஏனோ அவன் இதய துடிப்பை அந்த ஒரு நொடி மௌனம் தெளிவாக முதல்முறை காட்டுவது போல் காட்டியது.
'ப்பா என்ன கண்ணுடா...' வாரி சுருட்டி இழுத்தது அந்த கண்கள்.
"ஆ .. கால் வலிக்கிது" அவள் பேச்சில் மீண்டும் சுயத்திற்கு வந்தவன் வேகமாக தலையைச் சிலுப்பி வண்டியை எடுத்து ஓரமாக நிறுத்தினான்.
"வண்டியவே தூக்க முடியல நீ எதுக்கு இவ்வளோ வெயிட்டான வண்டிய எடுத்துட்டு வர்ற"
அவனை இடை மறித்து, "அப்பா சொன்னாங்க நா தான் கேக்கல . ஆனா எனக்கு அது ரொம்ப புடிச்சிருக்கே"
"இந்தாம்மா என் வண்டிய காயமகிருக்க. அத கேட்டா உன் கதையை என்கிட்ட ஒப்பிச்சிட்டு இருக்க"
இடையில் மீண்டும் அவன் அலைபேசி சினுங்க எடுத்து எரிச்சலுடன், "டேய் வந்துட்டு இருக்கேண்டா" என்று கூறிவிட்டு வைத்துவிட்டு அவளிடம் திரும்பி, "இப்ப இதுக்கு ஒரு முடிவு சொல்லு" என்றான் விடாப்பிடியாக.
"நான் என்ன சொல்ல உங்க வண்டி நீங்க தான் பாத்துக்கணும்"
"அடிங்க" ஒரு அடி அவளை நோக்கி எடுத்து வைத்தவன் அவள் அரண்ட விழிகளை கண்டு சிலையாகி நின்றான், "ராங் ரூட்ல கரெக்டா வந்துட்டு எனக்கு நீ அட்வைஸ் பண்ணுறியா?"
"யாரு ராங் ரூட்ட ல வந்தது? நான் கரெக்டா தான் வந்தேன், நீங்க தான் தப்பா வந்திங்க"
"எது ரைட் சைடுல வரது உங்க ஊருல கரெக்டா?" ஆமாம் ஆமாம் என்று இருமுறை தலையை ஆட்டினாள், "உங்க ஊரு என்ன அமெரிக்காவா?" அதற்கும் ஆமாம் என்றாள்.
"இந்த கதை தான வேணாம்கிறது ஒழுங்கா என் வண்டிய சரி பண்ணிக் குடு இல்லன்னா உன்ன கொன்னுடுவேன். பொம்பள புள்ளங்கிறனால தான் அமைதியா பேசிட்டு இருக்கேன். இல்லனா இன்னேரம் நடக்குறதே வேற" கோவத்தில் கத்தினான். அவளின் அந்த அப்பாவி போன்ற முகம் அவனை ஏனோ பொறுமை இழக்கச் செய்தது.
"எதுக்கு கத்துறிங்க? நா என்ன மாஜிக் பண்ணியா உங்க வண்டிய சரி பண்ண முடியும்?" கையை பிசைந்து கொண்டே கேட்டவள் அவள் வண்டியை பார்க்க அது சரமாரியாக அடிவாங்கி இருந்தது, "பேசாம என் வண்டில நீங்க ரெண்டு கோடு போட்டுவிட்ருங்க நா அப்பாகிட்ட ஏதாச்சும் சொல்லி சமாளிச்சிக்கிறேன்"
'கேன கிறுக்கா இருக்கு இது' நொந்து கொண்டவன், "அறிவே இல்லையா உனக்கு யாராச்சு இப்புடி வண்டில கோடு போடுங்கனு சொல்லுவாங்களா? மரமண்ட மரமண்ட"
"ஹலோ ஹலோ யாரு மரமண்ட நான் இல்ல, என்கிட்ட காசு இல்ல சார் ப்ளீஸ்" வேறு வழி இன்றி கெஞ்சினாள்.
அந்த பெரிய விழிகள் மன்னிப்பிற்காக சுருங்கியதை அவன் ரசிக்கத்தான் செய்தான், "சரி உன் பேர் என்ன?" அவனையும் மீறி அவன் குரலில் ஒரு ஆர்வம் தெரிந்தது.
தலையை சரமாரியாக ஆட்டியவள், "சொல்ல மாட்டேன் முன்ன பின்ன தெரியாதவங்ககிட்ட" அப்படியே குழந்தை போல் அவன் கண்களுக்கு தெரிந்தாள், புருவத்தை உயர்த்தி, "அப்ப வண்டிக்குக் காசு குடு"
"ம்ம்ம்ஹ்ம்ம் அதையும் தர மாட்டேன்" தரையில் காலை உதைத்தாள்.
"அப்ப நான் உன்ன விட மாட்டேன்" அவளை போலவே அவனும் அடம் பிடித்தான்.
முகத்தை சுருக்கியவாறே, "மணிமேகலை" என்றாள் முனகிக்கொண்டே.
"சீய்ய் இந்த பேருக்கா இந்த சீன் போட்ட" முகத்தை சுளுக்கியவாறே கூறியவன் தன் வண்டியில் ஏறி அமர்ந்து அவளை பார்க்க அவள் அவனை முறைத்து நின்றிருந்தாள்.
"பேரு நல்லாவே இல்ல" முகத்தை கோரமாக வைத்து கூறியவன் வெளியில் பொய் கூறினாலும் உள்ளுக்குள் 'மேகா' என்று அவள் பெயரை பதிவு செய்தான்.
"போயா லூசு" கோவமாக கூறியவள் விறுவிறுவென தன் வண்டியை எடுத்து பறந்துவிட்டாள்.
தான் அழைத்து முக்கால் மணி நேரங்களுக்கு பிறகு வந்தவன் சிரித்துக்கொண்டே வந்ததை பார்த்து முறைத்த கெளதம், "ஏண்டா உனக்கு நான் கால் பண்ணி ஒரு மணி நேரம் ஆச்சு இப்ப வர?"
"சரி அது தான் வந்துட்டேன்ல இப்ப கெளம்பு"அவன் மனம் அந்த வண்டியுடன் அவள் முறைத்து சென்றதை நினைவு படுத்திக்கொண்டே இருந்தது. அவன் முகத்தில் இருக்கும் அந்த புன்னகைக்கும் அது தான் காரணம்.
"கெளம்பித் தொலையிறேன் ஆமா இப்ப எதுக்கு நீ எவ்ளோ கேவலமா சிரிக்கிற?"
கௌதமின் சட்டை பட்டனை நோண்டிக்கொண்டே, "அது வந்துடா நான் ஒரு பொண்ண பாத்தேனா..."
"கருமம் வெக்க பட்டு தொலையாத உனக்கு என்ன பொண்ணுகளை பாக்குறது புதுசா என்ன?"
'அட!! ஆமா!! நமக்கு இது என்ன புதுசா ரொம்ப யோசிக்காதடா ஆதி' தன்னையே சமாதான படுத்திக்கொண்டே, "உனக்கு நேரம் ஆகல?" என்றான் கௌதமை பார்த்து.
"கிளம்பிட்டேன். போன நோண்டிட்டே இருக்காம வரவங்களுக்கு வேணும்கிறத ஒழுங்கா எடுத்து குடுடா"
"ஆமா இவங்க அப்புடியே டைட்டன் ஷோரூம் வச்சிருக்காங்க. கூட்டம் அல்லி குமியிரத்துக்கு போடா வெண்ண" என்று வழக்கம் போல் கைபேசியை எடுத்து அவன் வேலையை பார்க்க ஆரம்பித்தான்.
சிறிது நேரம் கழிய ஒரு மாதுளை சாற்றை வாங்கி குடித்துக்கொண்டே அலைபேசியை பார்த்தவன் தலையை கண்ணாடி மேசையில் வைத்து கைபேசியை பார்த்துக்கொண்டிருக்கும் வேளையில் யாரோ அழைக்கும் சத்தம் கேட்டு வேண்டுமென்றே அதற்கு செவி சாய்க்காதவன் போல் இருந்தான் மீண்டும் அந்த சத்தம் கேட்பதை உணர்ந்து தலையை நிமிர்த்துகையில், "அங்கிள்" என்ற அந்த சொல்லை கேட்டு அதிர்ச்சியில் பார்த்தவனுக்கு கோவம் கலந்த ஆச்சர்யம்.
"ஏய் யாரை அங்கிள்னு சொல்ற பல்ல ஒடச்சிருவேன்" என்றான் சீரிய சினத்தோடு. நின்றது மணிமேகலை தான்.
"நீங்க படுத்து இருகப்ப டக்குனு அங்கிள்லோனு நெனச்சேன் " என்றாள் சிறு நக்கல் சிரிப்புடன்.
"ஏது என் மண்டைய பாத்தா வெள்ளை முடியும் வழுக்கை மண்டையும் தெரியுதா உனக்கு?" என்றான் கோவதோடு.
ஆமாம் என்று தலையை ஆட்டியவள் அடக்கிவைத்த சிரிப்பை இதற்குமேல் கட்டுப்படுத்த இயலாமல் சிரித்து விட்டாள்.
"ஓவரா சிரிச்சனு வச்சுக்கோ உன் வண்டிய ஒடச்சு அடையாளம் தெரியாம மாத்திடுவேன் பாத்துக்கோ" அவன் மிரட்டலில் அமைதியானாள், "எதுக்கு இங்க வந்துருக்க?" என்றான்.
"சண்டை போட வந்தேன்" இது வரை இருந்த சிரிப்பு மறைந்து கஷ்டப்பட்டு கோவத்தை வரவழைத்தாள்.
"எதுக்கு?"
"அத உங்க மொதலாளிய வர சொல்லுங்க உங்ககிட்ட சொல்ல மாட்டேன்"
"அவர் என் முதலாளி இல்ல சொல்லு அவர் என் அப்பா தான்"
கையில் இருந்த கைக்கடிகாரத்தை அவனிடம் கொடுத்தவள், "அந்த டயல்ல பாருங்க" கோணல் மாணலாக சில இடங்களில் உடைத்து இருந்தது.
"உடைஞ்சு இருக்கு. என்ன வண்டில இருந்து கீழ விழுந்தப்ப ஒடஞ்சிருக்கும் மாத்தி தரவா?"
"என்ன மாத்தி தரவானு கேக்குறீங்க? எப்படி இப்புடியெல்லாம் கேக்க மனசு வருது உங்களுக்கு? எவ்ளோ அமௌன்ட் குடுத்து வாங்கியிருக்கேன் தெரியுமா? அப்பாக்கு தெரிஞ்சது அவ்வளோ தான் என்ன கொன்னு போட்ருவாங்க. உங்ககிட்ட தான் வாங்குனேன் நீங்க என்ன பண்ணுவீங்களோ, ஏது பண்ணுவீங்களோ எனக்கு தெரியாது. இது இனிமேல் பிரேக் ஆக கூடாது அப்டி இருக்க மாதிரி நீங்க தான் ரெடி பண்ணி தரணும். மௌண்டைன் டாப்ல இருந்து போட்டா கூட அது உடையாம இருக்கனும் சொல்லிட்டேன் அவளோ தான் "
பொறிந்தவள் ஒரு பெருமூச்சு விட்டு, "சரி சொல்லுங்க எப்ப வந்து வாங்கிக்க? ப்ளீஸ் கேன் யு கிவ் இட் பாக் சூன்? (Please can you give it back soon?)" என்றாள்.
'கன்பார்ம் இது லூசு தான்' என்று நினைத்தவன், "அம்மனி நீங்க ஒன்னும் ரோல்க்ஸ் வாட்ச் வச்சிருக்கல... மலைல இருந்து போட்டா கூட ஒடையாம இருக்கத்துக்கு"
"இட் இஸ் "
ஆர்வத்தில் கண்ணை சிமிட்டியவன், "ரோல்க்ஸ் ஆஹ்?"
அவள் ஆம் என்று தலை அசைக்க அந்த கடிகாரத்தை பார்த்தவன் அதில் இருக்கும் முற்களின் அமை
ப்பை பார்த்தவன், "இது டூப்ளிகேட்" என்றான் வேகமாக.

(தொடர்ந்து கீழே படிக்க)
 
Administrator
Staff member
Messages
997
Reaction score
2,809
Points
93
"ஆமா ஒரு நாள் என் வாட்சை நான் தொலைச்சிட்டேன் அதுனால அங்கிள் கிட்ட கேட்டு இந்த வாட்சை வாங்கிட்டு போனேன், ஆனா நீங்க அதை ஒடச்சி..."
அவள் தன்னை தான் சொல்ல வருகிறாள் என்று அறிந்து, "ஆ ஆ என்ன சொல்ல வந்த?" என்றான்.
ஒரு குறும்பு பார்வையோடு இதழ்களில் சிரிப்புடன், கண்களை வருட்டியவள், "நான்... நான். ஆமா நான் ஒடச்சிட்டேன்"
கைக்கடிகாரத்தை அவள் முன்னே தூக்கி போட்டவன், "இந்த வாட்ச் வாங்க ரொம்ப கஷ்டப்பட்டியோ?" அவள் ஆம் என்று தலை ஆட்ட, "உங்க அப்பா கிட்ட போய் வாட்ச் தொலைஞ்சிருச்சுனு உண்மையச் சொல்லு" என்றான்.
"அதெல்லாம் நீங்க சொல்ல கூடாது எனக்கு சரி பண்ணித்தாங்க" சிறு பிள்ளையாய் அடம் பிடித்தாள்.
"முடியாது"
"மாட்டேன். வீட்ல தெரிஞ்சதுனா என்ன கொன்னுடுவாங்க. ரொம்ப காசு... என்ன நம்பி குடுத்த மொத திங் அது தான். இப்ப நான் அதை மிஸ் பன்னிட்டேன்னு சொன்னா அப்புறம் என்ன எதுவுமே பண்ண விட மாட்டாங்க. ப்ளீஸ் ரிப்பேர் பாத்து தாங்க"
வாட்சை கையில் எடுத்தவன், "சொன்னேன்ல அவ்ளோதா இதுக்கு மேல பேச முடியாது வேணா இன்னொரு வாட்சை தேடி வாங்கிக்கோ"
கண்கள் அவன் கையில் நிலைத்து அவனை தொட்டு மீண்டும் கீழே வந்தது, "ப்ளீஸ்" என்றவள் கண்களும் குரலும் மாறி இருந்தது.
'இதுக்குலாமா அழுகணும்?' என்று நினைத்தவன் அவளின் அழுகையை பார்க்க விரும்பாமல், அதை மீண்டும் அவளிடம் கொடுத்தான்.
"நான் இத ரிப்பேர் பண்ணி தர மாட்டேன் வேற யார்கிட்ட வேணா போய் ரிப்பேர் பாத்துக்கோ. ஆனா சொல்றத கேளு. இப்பயே நீ இத போய் உங்க அப்பா கிட்ட சொன்னனா ஒன்னும் தெரியாது . ஆனா இந்த மாதிரி பொய்யான ஒன்ன வச்சு எவ்ளோ நாள் தான் ஏமாத்துவ? ஒவ்வொரு தடவ பாக்குறப்பயும் பயம் தான் இருக்கும். அதுக்கு ஒரு தடவ சொல்லி திட்டு வாங்கிறது பரவால்ல. அது மட்டும் இல்லாம அவங்களுக்கு உன் மேல அடுத்து நம்பிக்கை இல்லாம போய்டும் இப்படி ஏமாத்துனா. இதுக்கு மேல உன் இஷ்டம்" அவன் பேசுவதை அமைதியாய் கேட்டவள் தலையை இன்னும் குனிந்து வைத்து இருந்தாள்.
திரும்பி செல்ல இருந்தவளை பார்த்து, "குந்தவை வாட்ச்" என்றான் அவளை அழைத்து.
அவன்புறம் சோகமாக திரும்பியவள், "என் பேர் குந்தவை இல்ல, மணிமேகலை. எனக்கு அந்த வாட்ச் வேணா" ஆழ்ந்த சோகத்தில் கூறியவளின் விழிகள் சோர்த்து இருந்தன.
அதையும் தாண்டி அவளின் அந்த எதார்த்தமான மனநிலை அவனை மிகவும் கவர்ந்தது. மையிடா கண்கள் சிமிட்டும் அழகை பார்த்துக்கொண்டே இருக்க தோன்றியது. ரோல்க்ஸ் அணியும் அளவு வசதி படைத்த பெண்போல இல்லாமல் சாதாரண பெண் போலவே இருந்தது அவள் நடவடிக்கை .
ஒரு திமிர் இல்லை, சிறு ஒப்பனை இல்லை, தான் என்கின்ற அகங்காரம் எதுவும் இல்லாமல் இருந்தவளின் குணம் ஒரு நிமிடம் அவன் இதயத்தைக் குளிரூட்டினாலும் மறுகணம் அவன் இழந்ததை நினைவுபடுத்தி முள்ளாய் குத்தியது.
கனவிலிருந்து வந்தவன் அவளை மீண்டும் அழைத்தான், "கீழ விழுந்தப்ப உனக்கு எதுவும் அடி பட்டுச்சா?"
கை முட்டியை காட்டியவள், "ஆமா லைட்டா ரத்தம் வந்துச்சு, வீட்டுக்கு போய் பாக்கணும்"
"சென்னை கூட்டத்துல போனா தூசி எல்லாம் படும் இரு" என்று தன் வண்டியில் இருந்த முதலுதவி பெட்டியை எடுத்தவன் அதில் இருந்த ஒரு பிளஸ்ட்டரை எடுத்து அவளிடம் நீட்ட அதை வாங்கி முகத்தை கோணல் மாணலாக மாறி ஒரு வழியாக அதை போட்டும் கொண்டாள், "அப்பா இதுக்கு இவ்ளோ நேரமா? இப்ப கெளம்பு"
வண்டியில் ஏறி அமர்த்த பின்பு அவனை ஒரு குறும்பு சிரிப்புடன் பார்த்தவள், "தேங்க்ஸ் அங்கிள்"
"வந்தேன் மண்டை ஒடஞ்சிரும் ஓடிரு" என்றான் பொய் கோபத்துடன் அவன் கடையை விட்டு வெளியே வருமுன் அவள் துள்ளி குதித்து ஓடி விட்டாள்.
***********************
அந்த பரபரப்பான திங்கள் கிழமைக் காலை வேளையில் ஒரு மணி நேர கடின ஒர்கவுட் முடித்து காலை உணவை கூட உண்ணாமல் மின்னல் வேகத்தில் அலுவலகத்திற்கு வந்தவன், தன் அறையை பார்த்ததும் இருந்த புத்துணர்வு நீங்கி கோவம் மட்டுமே மீதம் இருந்தது.
"ஜெயன் மொத எனக்கு ஒரு அசிஸ்டன்ட் அரேஞ் பண்ணுங்க இங்க பாருங்க இப்படியா டேபிளை ஆர்டர் இல்லாம வச்சிருப்பிங்க. அடுத்து மீட்டிங்கு தேவையான பைல்ஸ் எங்க இருக்குனு நான் இப்ப இதுல எப்படி கண்டு புடிக்கிறது?" அனலாய் கொதிக்கும் கோவத்தை அடக்கியவாறே அவனை சுற்றி இருக்கும் இடத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தான் உதய்.
"சார் மீட்டிங் லஞ்சுக்கு அப்றம் தான் சார். உங்க அஸிஸ்டண்ட்ஸ் இண்டெர்வியூ அரேஞ் பண்ணிட்டேன். இப்ப 9 மணிக்குமேல் இண்டெர்வியூ ஸ்டார்ட் ஆகிடும்"
"தயவுசெஞ்சு அத பண்ணுங்க" என்றான் தனது மடிக்கணினியை எடுத்து சோபாவில் அமர்ந்து.
"சார் உங்க அஸிஸ்டண்ட் நீங்க பாத்து செலக்ட் பண்ண தான கரெக்டா இருக்கும்"
பெருமூச்சு விட்டவன், "சரி 5 பேருக்கு மேல நான் இண்டெர்வியூ பண்ண மாட்டேன். அந்த 5 பேருக்குள்ள ஆள் கிடைக்கலனா நீ தான் எனக்கு அசிஸ்டன்ட் ஒர்க் பண்ணனும்" ஜெகனும் ஆமோதித்து தலையை அசைத்தவன் உதய்க்கு குடிக்க தேநீர் எடுக்க சென்றான்.
சரியாக 9 மணிக்கு ஜெயன் ஒவ்வொருவராக அனுப்பி வைக்க ஆரம்பித்தான். வந்தவர்களில் முதல் இரண்டு நபரும் அவன் எதிர்பார்த்ததை விடவும் திறமைசாலிகளாக இருந்தனர் இருந்தாலும் அடுத்தவரை அவன் அழைக்க ஒரு பெண் உள்ளே வந்தாள். உள்ளே வர அனுமதி கேட்கவில்லை வந்ததும் அவனுக்கு எதிரில் இருக்கும் நாற்காலியில் அமர்ந்தவள் அந்த அறையைச் சுற்றிப் பார்க்க ஆரம்பி த்தாள். அவனின் கடினப் பார்வையும் மீறி.
"இதுக்கு முன்னாடி எத்தனை இன்டெர்வியூஸ் அட்டென்ட் பண்ணிருக்கீங்க?"
அவனின் ஆளுமையான குரலைக் கேட்டுத் திடுக்கிட்டு அவன் மேல் கவனம் செலுத்தியவள் அவனின் பார்வையில் சிலையாகி தான் போனாள். அந்த குளிர்ந்த ஏ.சி யில் சற்றும் கலையாத அடர்ந்த கேசம், கேள்வியாய் ஆளை துளைத்தெடுக்கும் கூர்ந்த பார்வை நடுங்கவே செய்தது. கோவத்தில் சிவந்திருந்த மூக்கை பார்த்ததும் வந்த சிரிப்பை அடக்க கண்களை சிமிட்டி சமாளித்தாள். ஆனாலும் அவன் மொத்தமாய் ஆண்களுக்கே உரிய அழகில் யாரை வேண்டுமானாலும் எளிதில் வசப்படுத்திவிடும் அழகன் போல அவள் கண்ணில் தெரிந்தான். வந்தது வேறு யாரும் இல்லை, யாழினியே தான்.
அவன் கேள்வியை கவனிக்காதவள், "சார்?" என்றாள்.
"இது உங்களுக்கு எத்தனாவது இன்டெர்வியூ?"
"22" என்றாள் நெளிந்து.
"ஏன் தெரியுமா உங்கள யாருமே எடுக்கல? உள்ள வரப்ப கதவை தட்டிட்டு வரணும்னு தெரியல, உட்காறப்ப என்னோட பெர்மிஷன் கேக்காமயே உட்காறீங்க . பாத்த ஒடனே தூக்கி வெளிய போட தான் தோணுது"
அவமானத்தில் தலையை தொங்க விட்டவள் சட்டேன்று எழுந்து நின்றாள் 'சாரி' என்று முணுமுணுத்தப்படி .
"ரெஸ்யூம்" அவள் கண்களில் இருந்து வழிந்து ஓட இருந்த நீரை முடிந்த அளவு தடுத்தவள் அவனிடம் அவள் பைலை கொடுக்க அதை பார்த்தவன் அவளிடம் சில கேள்விகள் கேட்ட பிறகு.
"இந்த ஜாப் கிடைக்கும்னு தோணுதா உங்களுக்கு?"
இல்லை என்று தலையை ஆட்டியவள், "கெடச்சா நல்ல இருக்கும்னு தோணுது"அவள் கண்ணில் இருந்து வழிந்த நீரை பார்த்தவன் அவள் கூறாமலே அவளின் வறுமையியும் வருத்தத்தையும் அறிந்தான், "இது பெர்மனெண்ட் ஜாப் இல்ல எனக்கு ஒரு 3 டு 6 மந்த்ஸ் தான் அசிஸ்டன்ட் தேவை"
"அப்ப எனக்கு ஜாப் கெடச்சிடுச்சா சார்?" அந்த சோகமான முகம் மறைந்து வெறும் ஆனந்தம் மட்டுமே அந்த நிமிடம் இருந்தது.
"இல்ல நாளைக்கு உங்களுக்கு மெயில் வரும் செலக்ட் ஆகிருந்தா" தனக்கு கிடைக்க வாய்ப்பு இல்லை என்று உறுதியாக நினைத்தவள்.
அவளின் முகம் வாடியதை இறுக்கமான முகத்துடன் பார்த்தவன் அவள் கதவின் புறம் சென்று ஒரு நிமிடம் ஏதோ ஒன்று யோசித்து மீண்டும் அவன் புறம் திரும்ப அவள் பேசுவத்திற்காக காத்திருந்தான் மௌனமாக.
"வேற எதாவது வேகன்சிஸ் இருக்கா சார்? இருந்தா ஏதாச்சும் ஹெல்ப் பண்ணுங்க சார்" அவள் பேசியது அவனுக்கு கோவம் இருந்தாலும் ஏதோ இதற்குமேல் எனக்கு வழி இல்லை என்று அவள் கூறுவது அவனுக்கு தெளிவாக தெரிந்தது. அது மட்டும் அன்றி தன்னிடம் உரிமையாக ஒருவர் பல வருடங்கள் பிறகு கேட்டும்பொழுது அவனால் என்ன பதில் கூறவேண்டுமென்று தெரியவில்லை.
"உங்க பேர் என்ன?"
"யாழினி"
"Yazhini you can join tomorrow morning at sharp 9. The only reason I am giving you this opportunity is for your fresher profile. If I am not satisfied with your work don't expect me to keep you here. You may go now"
'நல்லா பொய் சொல்ற' அவன் மனசாட்சி கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறாமல் அவன் வேலையை பார்க்க இன்னும் கதவு திறக்கும் சத்தம் தன் காதில் கேட்கவில்லை என்றதும் அவள் இன்னும் வெளியில் செல்லவில்லை என்று தெரிந்து அவன் தலையை நிமிர்ந்தான்.
உதய்யின் மடிக்கணினியின் அருகில் ஒரு சாக்லேட் வைத்தவள், "இது ஒரு சின்ன ட்ரீட் சாளரி வந்ததும் பெருசா ட்ரீட் வச்சறேன் சார். ஒரு வருசமா வாங்கி வச்ச சாக்லேட் இணைக்கு தான் யூஸ் ஆகியிருக்கு. இன்னைக்கு என்ன அந்த ராகுல் கிட்ட இருந்து காப்பாத்திட்டீங்க இல்லன்னா அவன் என்ன வம்பிழுத்தே கொண்டிருப்பான். அப்பறம் எனக்கு இன்னொரு பேர் நான் யோசிக்கிறதுல இருந்து காப்பாத்தி குடுத்துட்டீங்க. நான் அடிக்கிற அடில பால் கிரௌண்ட தாண்டி பறக்கும் பாருங்க. நன்றி சார்"
ஏதோ நினைவு வந்தது போல் மீண்டும் ஒரு சாக்லேட் வைத்தவள் "வெளிய இருக்க அந்த வெரப்பான அண்ணாக்கும் குடுத்துருங்க அவர் முகம் ராசியானது" தானாக வந்தவள் தானாக பேசினாள் அவளாகவே சென்றும்விட்டாள்.
கை எட்டும் தூரத்தில் இருந்த மிட்டாயை பார்த்தவன் சிரிப்புடன் அதை எடுத்து தூக்கி போடவும் மனம் இல்லாமல் உண்ணவும் மனம் இல்லாமல் இன்முகத்துடன் பார்த்
துக்கொண்டே இருந்தான்.
 
Well-known member
Messages
610
Reaction score
346
Points
63
Yazhini enna alla rounder poola games la killadi tha 😅😅😅udhai job kuduthudan ini eva enna la panna pora🤩🤩
Dai aadhi unakum love vanthurum 💞💞😸poola da manimehalai illa illa "kundhavai" apadithana aadhi 🤩🤩
 
Top