• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

துருவம் - 22 ❤️

Administrator
Staff member
Messages
997
Reaction score
2,809
Points
93
அத்தியாயம் – 22




சுட்டெரிக்கும் சூரியனின் வெப்பம் தாளாமல் கண்ணில் பட்ட மோர் கடையில் நின்று மோர் அருந்திக்கொண்டிருந்தவன் சட்டை எல்லாம் வேர்வையில் நனைந்திருந்தது. வறண்டிருந்த தொண்டைக்கு இதமாய் அந்த மோர் நீர் உள்ளே சென்றாலும் ஆதியின் மூளை மொத்தமும் செயல்படாத எண்ணம்.
கடந்த ஒரு வாரமாக பைனான்ஸ் கம்பெனி, பேங்க், வட்டிக்கடை என ஏறி இறங்காத இடம் இல்லை. தெரிந்த மொத்த இடத்திற்கும் சென்றாகிவிட்டது எங்கும் தெளிவான பதில் இல்லை. எங்கு சென்றாலும் ஏதோ ஒரு இடத்தில் முட்டி நிற்கும் பிரம்மை.
கைபேசி சினுங்க, அழைப்பவர் எவர் என்றும் பாராமல் எரிச்சலோடு, "ஹலோ" என்றான்.
"ஹலோ ஆதி தான பேசுறது? வட்டிக்கு பணம் கேட்டுட்டு இருக்கன்னு கேள்வி பட்டேன். கந்துவட்டி ஓகேவா?"
கந்துவட்டி என்று யோசனை இருந்தாலும் கிடைத்த ஒன்றையாவது விட வேண்டாமென்று, "எந்த ஏரியா?"
"கூவம் பிரிட்ஜ் வந்து இதே நம்பர்க்கு கால் பண்ணு, நான் அங்க தான் இருக்கேன்" என்றவன் பேச்சிலே அடாவடி தனம் இருந்தது.
"நான் யோசிச்சிட்டு நாளைக்கு கால் பண்றேன்" என்று இணைப்பை துண்டித்துவிட்டான். இப்பொழுது எங்கு செல்வதென்று தெரியவில்லை. மீண்டும் கைபேசியோலிக்க எடுத்துப்பார்த்தான்.
இது தமிழின் தந்தை நந்தன் தான். அழைப்பை ஏற்காமல் அப்படியே விட்டு பாக்கெட்டிலிருந்து சிகரெட் ஒன்றை எடுத்து பற்ற வைத்தான். சூடான புகை உள்ளே சென்றதும் இதம் பரவுவதற்கு பதில் வழக்கம் போல் தன்னையே தண்டிக்கும் எண்ணம் மட்டுமே. மீண்டும் நந்தன் அழைத்தார்.
உச்சகட்ட எரிச்சலில் அழைப்பை ஏற்று, "ப்பா வெளிய இருக்கேன் என்ன தான் வேணும் உங்களுக்கு?" பேசிய வார்த்தை புரிபட தலையில் அடித்து, "வேலைல இருக்கேன் ப்பா" அமைதியாக பதிலளித்தான் கையிலிருந்த சிகரெட்டை காலில் போட்டு நசுக்கி.
"டேய் வீட்டுக்கு வாடா" அவரும் கட்டமாகவே பேசினார்.
"புரிஞ்சுக்கோங்க ப்பா... என்ன பண்றதுனே தெரியாம நானே பைத்தியம் புடிச்ச மாதிரி அலைஞ்சிட்டு இருக்கேன்" குரலில் அத்தனை சோர்வு.
"ஆதி ஒரு தடவ சொன்னா புரியாதா வீட்டுக்கு வர்றியா இல்லையா?"
ஆழ்ந்த மூச்சை எடுத்தவன், "இன்னும் ஒரு பேங்க் மிச்சமிருக்கு, முடிச்சிட்டு வர்றேன் ஒரு மணி நேரத்துல" அதற்குமேல் பேசினால் நிச்சயம் அவன் எண்ணங்களை மாற்ற வைத்துவிடுவார் என்று ஆதி கேசவன் உடனே இணைப்பை துண்டித்தான்.
தனியார் வங்கிக்கு சென்றபொழுது அங்கிருந்த ஒரு வாங்கி அதிகாரி ஒரு திட்டத்தை பற்றி கூறி அதை அரசு வங்கிகளில் விசாரிக்க கூறினார். அரசு வங்கிக்கு வந்த ஆதி அரை மணி நேரமாக பொறுமை இல்லாமல் அங்கும் இங்கும் உலாவிக்கொண்டே இருந்தான்.
"சார் உள்ள போங்க" அப்பாடா என்று ஒரு அடி எடுத்து வைத்தவன் கால்கள் தனக்கு பின்னாலிருந்தவன் உள்ளே செல்வதை பார்த்ததும் அப்படியே நின்றது, அதன் பலன் அவன் கைகள் கோவத்தில் இறுகி, அந்த ப்யூனை பார்வை தீயால் சுட்டான்.
"நான் வந்து அரை மணி நேரமாச்சு எனக்கடுத்து வந்தவன்லாம் உள்ள போய்ட்டு இருக்கான்"
ஏளனமாக சிரித்தவன், "சார் இது என்ன உங்க வூட்டு சமையல்கட்டா நெனச்ச ஒடனே தோசை பறந்து வந்து தட்டுல விழ? பொறு சார் கூப்புடுவாங்க" பார்வை இறுதியாக விழுந்ததோ ஆதியின் சட்டை பாக்கெட்டில் தான்.
உடனே புரிந்துகொண்டவன், "யோவ் இத வாய் விட்டே கேட்ருக்கலாம்ல, எவ்ளோ நேரம் தான் வெட்டிப்பயே மாதிரி நிக்கனுமாயா" எரிச்சலோடு அவன் கையில் இருநூறு ருபாய் காகிதத்தை வைத்தவன் மீண்டும் சென்று இருக்கையில் அமர்ந்து முகத்தி மூடிக்கொண்டான்.
அங்கிருந்த ஒவ்வொரு நொடியும் பல மணி நேரங்களாக தெரிந்தது, சென்றவன் சென்ற வேகத்திலே மீண்டும் வந்து, "சார் மேனேஜர் பிஸி, மத்த ஆளுங்க இருக்காங்கல்ல பேசுறியா சார்?"
அருகில் காலியாக இருந்த இருக்கையை காட்டி, "ஏன் நீ இங்க ஒக்காறேன் உங்கிட்ட பேசிட்டு கிளம்புறேன்"
அவன் புரியாமல் ஆதியை பார்க்க எழுந்து அவன் தோளில் கை போட்டு வெளியில் அழைத்துசென்றவன், "நான் லோன் வாங்க பேச வந்துருக்கேன்... நீ சொல்ற மாதிரி கிளெர்க் கிட்ட போய் கேட்டா என்ன சொல்லுவான்?"
"மேனேஜர் கிட்ட கேளுங்கன்னு சொல்லுவான்"
"ம்ம்ம் இப்ப" அவன் பாக்கெட்டிலிருந்து தான் கொடுத்த பணத்தை எடுத்தவன், "சார்..." என்ற பதறலையும் கண்டுகொள்ளாமல், "சொல்லு நான் யாரை பாக்கணும்?"
அவன் கையிலிருந்த பணத்தையே பார்த்தபடி, "அசிஸ்டன்ட் மேனேஜர் பிரீ தான் சார் பாக்குறியா?"
அவன் பாக்கெட்டில் பணத்தை வைக்க போனவன் பிறகு தன் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு, "உன்ன நம்ப முடியல... மேனேஜர பாத்துட்டு அப்றம் டிப்ஸ் தர்றேன்"
அசிஸ்டன்ட் மேனேஜர் அறையை நோக்கி நடந்தவனின் முதுகை பார்த்து, 'காசு தருவானா? மாட்டானா?' சந்தேகம் குடிகொண்டது.
நான்கு கனபாடிகள் ஒரு ஆள் உயரத்திற்கு மட்டுமே மறைத்திருந்தது அந்த அசிஸ்டன்ட் மேனேஜர் அறையில். அறை கூட இல்ல அது, இங்கே பேசினால் வெளியே கூட கேட்கும்.
"உக்காருங்க சார்" என்ற அசிஸ்டன்ட் மேனேஜருக்கு ஆதியை விட இரண்டு வயதே அதிகமிருக்கும்.
நாற்காலியில் அமர்ந்தவன், "பிஸ்னஸ் லோன் விசயமா பேச வந்தேன் சார்"
"ம்ம்ம் சொல்லுங்க என்ன பிளான் எவ்ளோ லோன் அமௌன்ட் வேணும்?" பேசிக்கொண்டிருந்தவர் ஏதோ ஒரு கோப்பை மும்முரமாய் சரி பார்த்துக்கொண்டிருந்தார்.
"CGTMSE ஸ்கீம்ல லோன் வாங்கலாம்னு ஐடியா, மினிமம் அம்பது லட்சம் வேணும்... மாக்ஸிமம் டூ சி மேல வேணும்"
அவனை நிமிர்ந்து பார்த்த மேனேஜர், "என்ன பிசினஸ் பண்ண போறீங்க?"
"கான்ஸ்ட்ரக்ஷன் ஒர்க் சார்"
அவன் நனைந்த சட்டையை பார்த்தவன், "ஓ சிவில் என்ஜினீயரா... எத்தனை வருஷம் எக்ஸ்பீரியன்ஸ்?"
"ஆறு வருஷம் சார்... லோன் ப்ராஸஸ், ரெக்குவயர்மன்ட்ஸ் என்ன-னு கொஞ்சம் சொல்றிங்களா?"
"பேசலாம் சார்... உங்க பேர்ல இல்லனா உங்க அப்பா அம்மா பேர்ல ஏதாவது ப்ராபர்ட்டி ஏதாவது?"
"ப்ராபர்ட்டி எதுவும் இல்ல சார்... இது கவர்மெண்ட் லோன் ஸ்கீம் சோ ப்ராபர்ட்டி எதுவும் நடுல வராதுன்னு தான் இந்த ஸ்கீம் பத்தி கேக்க வந்தேன்" உள்ளுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக தீயின் வீரியம் ஏறிக்கொண்டே சென்றதை எவ்வளவு நேரம் கட்டுப்படுத்த முடியுமென்று தெரியவில்லை ஆதிக்கு.
அதனால் தன்னுடைய கையிலிருந்த அவன் சார்ந்த தகவல் மொத்தத்தையும் அடங்கியிருந்த ஒரு பைலை அந்த அசிஸ்டன்ட் மேனேஜர் கையில் கொடுத்தான். அவன் கொடுத்ததை திறந்து பார்த்தவர், "கவர்மெண்ட் ஆயிரம் சொல்லும் மீடியால, வெப்பேஜஸ்ல எல்லாம்... அது எதுவும் அப்டியே நூறு சதவீதம் ரியாலிட்டில இருக்காது மிஸ்டர் ஆதி கேசவன், எங்களுக்கு நீங்க பணம் குடுக்க முடியலைன்னா எப்படி உங்ககிட்ட வாங்க முடியும்? நீங்க கட்டி குடுக்குற பில்டிங் யாருக்கோ, அவன் காசு குடுத்து வாங்கிட்டு போய்டுவான் நாங்க என்ன அவன்கிட்டயா போய் நிக்க முடியும்? முடியாதுல"
எதுவும் பேச முடியாத நிலை, கையில் சேமிப்பாக சில லட்சங்கள் கூட இல்லை, அனைத்தும் கடனை அடைப்பதிலும், சகோதரிக்கு நகைக்கு சேமிப்பதிலுமே கழிந்தது. இதில் எங்கு அவன் சொத்துக்களை வாங்கி போட முடியும்? ஆதியின் வங்கி அக்கௌன்ட் எண்ணை தன்னுடைய கணினியில் போட்டு பார்த்தவர், "லோன் இது வர எடுத்ததே இல்லையா நீங்க?"
"அவசியம் இருந்ததில்லை" என்றான் கோவத்தை அடக்கி.
"லோன் எடுக்காம இருந்தா எப்படி சார் சிபில் ஸ்கோர் இருக்கும்? இந்த பேங்க் இல்ல எந்த பேங்க் நீங்க போனாலும் முதல செக் பண்றது உங்க சிபில் ஸ்கோர் தான். சரி உங்க கூட பிசினஸ் பண்ற பார்ட்னர்ஸ் டீடெயில்ஸ் தாங்க அவங்களோடத பாக்கலாம்"
இருக்கையில் சாய்ந்து அமர்த்திருந்தவன் பற்களை கடித்து சற்று முன்னாள் நகர்ந்து அமர்ந்தான், "சார் நான் தெளிவா சொல்றேன். எனக்கு சொத்து எதுவும் இல்ல, சொந்தமும் இல்ல, பார்ட்னர்ஸும் இல்ல. படிப்பு, அறிவு இது மட்டும் தான் என்கிட்ட இருக்கு. இதுக்கு லோன் கிடைக்குமா கிடைக்காதா?"
ஆதியின் பொறுமையின்மையை பார்த்தவன் அவனை வேண்டுமென்றே சீண்டும் பொருட்டு, "உங்க பிசினஸ் ஐடியா இருக்கா? பக்காவா இருக்கனும்"
தன்னுடைய அவசரத்தை புரிந்தவன் என்று ஆதியும் தான் யோசித்து வைத்திருக்கும் எண்ணத்தை நினைத்து, "இருக்கு"
"ம்ம்ம் அத தெளிவா சொல்லுங்க நான் அப்ப தான் மேனேஜர்கிட்ட பேசி என்ன பண்ணலாமான்னு கேக்க முடியும்" ஏதோ ஒரு வழி பிறந்ததில் சற்று ஆசுவாசமானவன் அடுத்த பதினைந்து நிமிடங்களில் கூறவேண்டிய திட்டங்கள் சிலவற்றை மட்டும் கூறி எடுத்துரைத்தான்.
அடுத்த சில நிமிடங்கள் அவரும் தன்னுடைய சந்தேகங்களை கேட்டு ஆதியிடம் தெளிவுபடுத்திக்கொண்டார்.
"ம்ம்ம் ஐடியா ரொம்பவே நல்லா இருக்கு ஆதி கேசவன் பட் ஒரு சின்ன பிரச்சனை இப்ப தான் எனக்கு நியாபகம் வருது"
சிறியது என்றதும் எப்படியும் சமாளித்துவிடலாம் என்ற எண்ணம், "சமாளிச்சுக்கலாம் சார் சொல்லுங்க" என்றான்.
"நீங்க சொல்றத பாத்தா கண்டிப்பா உங்களுக்கு இந்த ஒரு கோடி, ரெண்டு கோடி எல்லாம் பத்தாது, இந்த ஸ்கீம்ல மாக்ஸிமம் அமௌன்ட் ரெண்டு சி தான்"
அவ்வளவு தானா என்று நிம்மதி மூச்சு ஒன்றை விட்டு, "எனக்கு இப்போதைக்கு பிசினஸ் ஸ்டார்ட் பண்ண ஒரு பேஸ் அமௌன்ட் அவ்வளவு தான் சார், எப்டியும் காண்ட்ராக்ட் எடுத்துட்டா கண்டிப்பா அவங்க அட்வான்ஸ் அமௌன்ட் தருவாங்க அத வச்சு அட்ஜஸ்ட் பண்ணிப்பேன் சார்"
தைரியமாய் பேசியவனை வியப்புடன் பார்த்தவர், "உங்க கான்பிடென்ட் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு பட் இந்த ஸ்கீம் இஸ் ஒன்லி பார் சர்வீஸ் அண்ட் மேனேஜ்மென்ட் சம்மந்தப்பட்ட பிசினஸ்க்கு மட்டும் தான். கான்ஸ்ட்ரக்ஷன் இது ரெண்டுளையும் வராதுல ஆதி?" முகத்தில் குடிகொண்டிருந்த மகிழ்ச்சி மொத்தமாய் வடிவது போன்று இருந்தது.
ஆனால் இவை அனைத்தயும் முதலிலே தெரிந்துகொண்டு தன்னை இவ்வளவு நேரம் வைத்து கைப்பாவையாக விளையாடியவனை பார்க்க பார்க்க ஆத்திரம் எல்லையே இல்லாமல் அதிகரித்துக்கொண்டே சென்றது.
அமைதியாக அந்த மேனேஜர் கையிலிருந்த பைலை வாங்கியனை பார்த்து, "பேங்க்கு எல்லாம் வராதா இருந்தா ஈகோ, அவசரத்தை எல்லாம் வாசலையே வச்சிட்டு வந்துடுங்க... ஓகே?"
தெரிந்தே தான் இவ்வளவு நேரம் ஒருவரின் ஆசையையும் தூண்டிவிட்டு, நேரத்தையும் விரையமாகியிருந்தான். "இது மட்டும் பேங்க்கா இல்லாம இருந்து, நீ பப்ளிக் சேர்வேன்ட் இல்லாமா இருந்ததுன்னு வை மவனே... உன் மூஞ்சி மொகரைய உன் குடும்பத்துக்கே அடையாளம் தெரியாத மாதிரி ஒடச்சு, கிழிச்சு நாறு நாராக்கிருப்பேன்" இவ்வளவு நேரம் மரியாதைக்காக சட்டையின் கையை மடக்கி எழுந்தவன், "இவ்வளவு நேரம் கிறுக்கன் மாதிரி என்ன பேச விட்டு வேடிக்கை பாத்துருக்க? கோத்தா நீ வெளிய வாடா... டீ கடைல தான் இருப்பேன்"
அசிஸ்டன்ட் மேனேஜர் முகத்தில் அப்பட்டமான பயம் தெரிந்தாலும், "என்னையா ஓவரா பேசுற? செக்யூரிட்டிய கூப்புடவா?"
ஆதியை பயம் காட்டி இருக்கையிலிருந்து எழ பார்த்தவனை அமர வைத்து, "அடங்குடா... எவ்வளோ பெரிய புடுங்கி வந்தாலும் நான் ஒன்னும் சொம்ப இல்ல"
குரல் வந்த பொழுது இருந்ததே, ஆனால் தன்னை சோதனைப்படுத்தி பார்த்தவனுக்கு, விட்டால் அந்த இடத்திலே முடிவு கட்டிருப்பான். அதற்குமேல் அங்கிருந்தால், அவனை அடிதட்டுவிடும் நோக்கில் ஆதி வேகமாக வெளியேற, வழியில் ஆதியை மடக்கிய ப்யூன், "சார் காசு" என்றான்.
"அசிங்கமா பேசிடுவேன் போய்டு" அவன் நினைத்தது நிறைவேறவில்லை போலும் என்று அந்த மனிதனும் விட்டுவிட்டான்.
தமிழின் வீட்டிற்கு செல்ல மனமும் இல்லை, மீண்டும் நந்தனின் பேச்சை உதாசீனம் செய்யவும் மனமில்லாமல் கைபேசியை அணைத்துவைத்து எப்பொழுதும் அமர்ந்திருக்கும் டீ கடையில் சென்று அமர்ந்து தன்னை கடந்து செல்லும் வாகனங்களை இலக்கே இல்லாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான்.
ஒரு வாரமாக மாறி மாறி நிராகரிப்பையும், அவமானங்களையும் மட்டுமே சந்திக்கும் அவன் இதயத்திற்கு என்ன ஆறுதல் தேவைப்பட்டதென தெரியவில்லை, நிலையில்லாமல் மனம் தவித்தது.
அடர்ந்த இருளில் கண்களில் கூறிய வெளிச்சம் படிய முகத்தை சுளித்து கண்களில் விழுந்த வெளிச்சத்தை மறைத்து, ஒளி வீசிய வாகனத்தை பார்த்தான், "டேய் கிறுக்கு பு..."
பொது இடமென கருதி வேகமாய் வாயை மூடிய கெளதம், "அசிங்கமா வாயில வருது. எங்கடா இருந்த இவ்ளோ நேரம். மணி என்னனு பாத்தியா பத்து ஆக போகுது. வீட்டுல ஒரு பொண்ண வச்சிட்டு இப்டி பொறுப்பே இல்லாம ஊர் மயிறு சுத்திட்டு இருக்க" ஆத்திரமாய் நண்பனை வசைபாடினான் கெளதம்.
"அவனுக்கு அதெல்லாம் ஒரு கவலையும் இல்ல, போன ஆப் பண்ணி வச்சிட்டு இப்டி தெருவுல ஒக்காந்து அவனை பத்தி மட்டும் தான் யோசிப்பான்"
எதுவும் பேசாது அமைதியாக இருந்தவனை பார்த்து தன்னையே நிதானப்படுத்தி, "ஆதி என்னடா பிரச்னை சொல்லு நாங்க ஹெல்ப் பண்றோம்" என்றான் கனிவாக.
"ஆஹ் நொட்டுவிங்க"
ஏற்கனவே மனமே சரியில்லாமல் இருக்க நண்பர்களிடம் பேசும் மனநிலையில் இல்லாது போக வாகனத்தை எடுத்து அங்கிருந்து சென்றான். "டேய்... ஆதி" இருவரின் அழைப்பும் காற்றில் தான் கரைந்தது.
மனம் நிலையில்லாது தவித்து நிற்கும் நேரங்களில் வந்து சேரும் அதே இடத்திற்குத் தான் இப்பொழுதும் அவன் கால்கள் வந்து சேர்ந்தது. உதய்யின் பழைய இல்லம் இருக்கும் தெருவின் முனையில் இருக்கும் காலி மைதானம் இரவு பத்தரை ஆகியிருந்தும் அந்த மொத்த மைதானமும் இன்னும் பல இளைஞர்களை தன வசம் இழுத்துவைத்திருந்தது. சிலர் கேலி கிண்டலில், சிலர் இன்னும் வியர்வை சொட்டச் சொட்ட விளையாட்டில்...
வண்டியில் அமர்ந்திருந்த வாக்கிலே சில சிறிய வீடுகள் தள்ளியிருந்த உதய் வீட்டையே பார்த்திருந்த இதயம் நிம்மதியைத் தொலைத்து மனம் கலங்கி வண்டியின் ஹாண்ட்பாரில் தலையை வைத்துப் படுத்தான் பழைய நினைவுகளில், மெல்லிய இரவு காற்று தாயின் தாலாட்டாய் மாறாதா என்ற பேராசையுடன். அன்னை மடியைப் பெரிதாக நினைக்காதவனுக்கு ஒன்பதாம் வகுப்பில் பேரிடியாக இருந்தது தந்தை, அன்னையின் மறைவு...
அதுவரை சுதந்திர காற்றை மட்டுமே சுவாசித்தவனுக்குத் தங்கை என்னும் பெரும் பொறுப்பு தோளில் வந்தமரத் திக்கு தெரியாமல் ஸ்தம்பித்துப்போனான். தந்தையாய் மாறி சகோதரியைப் பாதுகாத்தாலும் சஹானாவின் சில தயக்கங்கள் நீ தந்தையாய் இருக்கலாம் அன்னையாக முடியாது என்று அவனை ஒரு பாதுகாவலனாகத் தோல்வியுறவைக்கும். ஒரு பக்கம் குடும்பமாகிய சகோதரி, மறு பக்கம் அடுத்த வேலை உணவிற்கு அவன் தயாரிக்க வேண்டிய பணம்.
நிர்க்கதியான நிலையில் விட்டுச் சென்ற பெற்றோரை மட்டுமே குறை கூட முடிந்தது, ஆனால் அதிலும் என்ன பயன் நேரம் விரயமாவதைத் தவிர? வாழ்க்கையே வெறுத்து நின்ற தருணங்களில் தெய்வமாய் வந்து முன் நிற்பார் காயத்திரி.
செய்வதறியாது உடலைக் கவிழ்த்து கட்டிலில் படுத்திருந்தவனின் தலையை இதமாய் வருடும் அவர் கை ஒரு மென்மையான பாசம் மட்டும் இருக்கும் அன்னையின் குரலில், "ஆதி கண்ணா..." மயில் தொகையைவிட மெல்லிய குரல் அது, அவரின் மனதைப் போலவே.
அந்த இனிமையான குரலில் ஆறுதலைத் தேடினானோ அல்லது வழியை கண்டுகொண்டானோ கன்னங்களில் கண்ணீர் கோடுகள், "ம்மா" கன்றாய் ஊமை வலியுடன் அன்னை மடி நாடினான்.
பிள்ளைகளுக்குள் பாகுபாடு பார்க்காத அவரின் பாசம் இப்பொழுதும் சற்றும் மாறாமல் இருந்தது, அவன் அடர்ந்த சிகையை விறல் கொண்டு கோதியவர் மௌனமாய் இருந்தார்.
"ம்மா" குரல் கரகரத்தது மகனுக்கு.
"சொல்லுபா" அவன் முதுகில் கை கொண்டு தடவி அவனைத் தேற்ற முயன்றவர் கையை பிடித்து தன்னுடைய கன்னத்தில் வைத்து இறுக்க அவர் கையை பற்றிக்கொண்டான்.
மகனின் மௌனமும், அவன் கண்ணீரும் அன்னையையும் கலங்கச் செய்தது, "அம்மாகிட்ட சொல்லுபா"
ஆதரவைத் தேடிய மனது மொத்தமாய் மனக்குமுறலை வெளியேற்றியது, "முடியலாமா என்னால... எதுவுமே முடியல மா"
"எதுக்குயா நீ கலங்குற? போதும்யா நீ கஷ்டப்பட்டது எல்லாம்" கண்ணை உயர்த்தி அன்னையின் முகம் பார்த்தான் ஆதி கேசவன்.
புரியவில்லை மகனுக்கு, "ம்மா..??" குழப்பமாய் காயத்திரியைப் பார்த்தான், பதில் கூற மனமில்லாமல் மௌனமாய் கலங்கிய விழிகளுடன் அந்த பாசத்திற்குரிய பெண்மணியை விழி அகற்றாது பார்த்தான்.
"இனியாவது சந்தோசமா இரு... இருப்ப... எல்லாமே நல்லது தான்யா நடக்கும்... நிம்மதியா போ வழி பிறக்கும்"
படுக்கையிலிருந்து எழுந்தவன் திடுக்கிட்டுப் பார்த்த பொழுது அன்னை அங்கில்லை மாறாக அவன் இரு சக்கர வாகனமும் அடர்ந்த காரிருளும் மட்டுமே துணையாய் இருந்தது. கையிலிருந்த கடிகாரத்தில் மணியைப் பார்த்தான். நள்ளிரவைத் தாண்டியிருந்தது. அசதியில் தன்னை அறியாமல் உறங்கியவனுக்கு அந்த சொற்ப நேரத்திலும் சொப்பனம்...
அதன் அர்த்தம் புரியவில்லை, அதைப் பற்றி யோசிக்கும் நிலையிலுமில்லை. இரவின் தனிமையில் அப்படியே அருகிலிருந்த சிறிய கல்லில் அமர்ந்தான். அந்த இடத்தை விட்டுச் செல்ல மனமேயில்லை.
நிசப்தமாய் இருந்த தெருவில் மிக மெல்லிய சத்தத்தோடு வந்து நின்ற வெள்ளை நிற ரோல்ஸ் ராய்ஸ் வாகனத்தினையும் அதனுள் அமர்த்திருந்தவனையும் பார்த்தவன் மீண்டும் தன்னுடைய பார்வையை அவன் வீட்டிற்குத் திருப்பினான். சில நொடிகள் அதே அமைதிக்குப் பிறகு, காரின் கதவைத் திறந்து வெளி வந்த உதய்யை தொடர்ந்து ஜெயனும் வந்தான்.
ஜெயனை பார்த்து, "நீங்க போங்க ஜெயன். நான் வர்றேன்" என்றபடியே தன்னுடைய டக் இன் செய்த சட்டையை வெளியில் எடுத்துவிட்டவன் முழுக் கையாய் இருந்த சட்டையும் கை முட்டி வரை மடித்துவிட்டு, அணிந்திருந்த கூலிங் கிளாஸை கழட்டி சட்டையில் மாட்டிக்கொண்டு வந்தான்.
"இருக்கட்டும் சார் வெயிட் பண்றேன்"
ஆதியைப் பார்த்துச் சொன்னவனை எண்ணிச் சிரித்த உதய், "உங்க கூட இருக்குறத விட அவன் கூட நான் சேஃப் ஜெயன்"
முதலாளியை ஆசிரியமாய் பார்த்தான் ஜெயன். ஒரு சமயம் எதிரியாய் நிற்கின்றனர், ஒரு சமயம் மறைமுகமாய் தாங்கி பிடிக்கின்றனர், பல சமயம் தோழனாய் தோள் தங்குகின்றனர்... என்ன வகையான நட்பு இது... புரியவில்லை அவனுக்கு.
"அப்ப உங்க ரெண்டு பேரோட பாதுகாப்பும் என்னோடது சார்"
விசுவாசத்தைத் தாண்டி ஜெயன் தன் மீது வைத்திருந்த பாசத்தை எண்ணி மகிழ்ந்தவன் இதழில் வந்த சிறு புன்னகையில் ஆணாய் இருந்தாலும் அந்த சிரிப்பை ரசிக்காமல் இருக்க முடியவில்லை ஜெயனால். ஆதியை நோக்கி உதய் மாதவன் செல்லவும் தன்னுடைய அசிஸ்டன்ட் ஒருவனை அழைத்து வாகனத்தை எடுத்துச்செல்லக் கூறி ஆதி, உதயைத் தாண்டி சில அடிகள் தூரத்தில் நின்று கொண்டான் ஜெயன்.
ஜெயனை பார்த்த ஆதித் தன் முன்னாள் வந்து நின்ற உதய்யையும் கண்டும் காணாமல், "இவன் எதுக்கு இங்க நிக்கிறான்? தூக்கம் வருமா வராதா இவனுக்கு?" இருந்த எரிச்சலில் என்னரமும் உதய் பின்னால் சிறு அலுப்பும் காட்டாது திரிபவனைப் பார்த்து கோவம் தான் வந்தது ஆதிக்கு.
"உன்ன பாதுகாக்க நிக்கிறானாம்" வார்த்தைகள் உதிர்த்த உதய்யின் இதழ்களில் குறுஞ்சிரிப்பு.
"டேய் கருப்பு பூனை..." தன்னை தான் ஆதி அலைகிறான் என்று தெரிந்து ஆதியை பார்த்தான், "நீ இங்க நின்னு ஒன்னும் கிழிக்க வேணாம் கெளம்பு" சத்தமாக ஆணையிட்டாலும் ஜெயன் அசையவில்லை.
அதை யூகித்தே இருந்த உதய், "நான் சொன்னா கூட அவன் கேக்க மாட்டான்"
"கிறுக்கன் கூட இந்நேரம் கூலர்ஸ் போட மாட்டான்" கேட்டும் சிறு புன்னகையோடு உதய் அமைதியாகிவிட்டான்.
உதய்யின் நிர்மலமான முகத்தைப் பார்த்தவன், "உன்ன யாரு இங்க வர சொன்னா?" ஜெயன் பக்கம் திரும்பி, "டேய் இவன கூட்டிட்டு போ" ஜெயனுக்கு இது உத்தரவு தான். ஜெயன் எதுவும் செய்யாமலிருக்க, "ஜடம்" வாய்க்குள்ளே முணுமுணுத்தான்.
நண்பனின் நிலையில்லா நிலையம் செய்வதறியாது திகைத்து நின்ற தோற்றமும் உதய்யை கண் சிமிட்டாமல் நண்பன் மீது பார்வையை நிலைத்திருக்க வைத்தது.
"என்ன பிரச்னை உனக்கு?" உதய்யிடம் எப்பொழுதும் இருக்கும் அதே அமைதி நாளிரவு ஒரு மணிக்கும் இருந்தது.
உதய்யை பார்க்காமல் பார்வையைத் தவிர்த்தவன், "உன்கிட்டலாம் சொல்லணும்னு அவசியமில்லை போடா" எரிச்சலோடு வந்தது பதில் ஆதியிடமிருந்து.
"ஏன் கோவமா இருக்க?" - உதய்
"நான் கோவமா இருக்கேன்னு உங்கிட்ட சொன்னேனா?" - ஆதி
"சரி ஏன் நிதானம் இல்லாம குழப்பத்துல இருக்க?" விடுவதாக இல்லை உதய்.
ஆதிக்கு தெரியும், தன்னை பார்த்த உடனே மொத்தத்தையும் தெரிந்துகொள்வான் என்று, "அதெல்லாம் ஒண்ணுமில்ல"
"அப்றம் ஏன் காலு ஒரு இடத்துல அசையாம நிக்க மாட்டிக்கிது" குழப்பத்திலிருக்கும் பொழுது கால்கள் தானாக ஆடும் ஆதிக்கு.
இப்பொழுது உதய்யின் வார்த்தையில் கால்களை அசையாது விட்டான், உதடுகளும் அசைய மறுத்தது. ஆதி கேட்டால் கூறும் ரகம் இல்லையென்று தெரிந்து அவனே கூறட்டுமென உதய் அமைதியானான்.
ஆதி முன்னாள் நிற்கும் அவனுடைய வண்டியை பார்த்தவன் அதன் பியூயல் டாங்கை தடவி பார்த்தான், அவனுக்கு பிடித்த கருப்பு நிறம். ஆதிக்கு கருப்பை விட வாகனத்தில் சிகப்பு தான் பிடிக்கும்.
எத்தனை வருடங்கள் ஆகியது இருசக்கர வாகனத்தில் பயணம் செய்து... செல்வத்தில் கொழிக்கும் வாழ்க்கையில் பகட்டையும் பாதுகாப்பையும் விட்டு நிம்மதியாக எளிமையான வாழ்க்கையை வாழ அந்த நொடி ஆசை வந்தது.
"இந்தா" நண்பனின் ஆசையை கண்டுகொண்டவன் சாவியை உதய்யிடம் தூக்கி போட்டான்,
சாவியை பிடித்த உதய் ஆசையாக கண்கள் மின்ன வாகனத்தில் ஏறி அமர்ந்து உயிர் கொடுத்தவன் சற்று கண்கள் தெளித்திருந்த ஆதியை பார்த்து அப்படியே நிற்க, ஆதி முகத்தை திருப்பிக்கொண்டு, "நான் வரல" உள்ளே சென்ற குரலில் பதில் வந்தது.
ஆதியை விட பிடிவாதமுடையவன் வண்டியை அணைத்து அப்படியே நின்றான் தனக்கு எதிரிலிருந்த இருளை வெறித்து நின்றான். தலையில் அடித்து எழுந்த ஆதி, "பிடிவாதம்"
வசைபாடிக்கொண்டே வண்டியில் ஏறி அமர உதய் மௌனமாய் வாகனத்தை செலுத்தினான். பின்னாலே வந்தது உதய்யின் பாதுகாப்பிற்
காக ஒரு பி.எம்.டபில்யூ அதில் ஜெயனும் அவனுடைய அசிஸ்டன்ட் இருவரும். அதை எதையும் கவனிக்கும் நிலையிலா உதய் இருந்தான்?
 
Administrator
Staff member
Messages
997
Reaction score
2,809
Points
93
சலனமற்ற மனதுடன் நண்பனுடன் பல வருடங்கள் கழித்து செல்லும் பயணம், அதுவும் உதய் பெரிதும் விரும்பி ஓட்டும் புல்லட்டில்... உதய்யின் மனநிலையை கூறவே வேண்டாம், இத்தனை வருடங்களில் காணாமல் போயிருந்த ஒரு நிம்மதி, திருப்த்தி. மௌனமாய் இருவரும் பயணிக்க திடீரென நினைவு வந்தவனாய் தன்னுடைய வண்டியில் பின்னால் மாட்டியிருக்கும் ஹெல்மட்டை எடுத்து வாகனத்தை ஓடிக்கொண்டிருந்த நண்பனின் தலையில் மாறிவிட்டான்.
"டேய் எடுடா" கர்ஜித்தான்.
உதய்க்கு புடிக்காதது ஹெல்மெட் அணிவது, ஊருக்கு ஆயிரம் உபதேசங்கள் வழங்குபவன், லட்ச கொள்கைகள் வைத்திருப்பவன் தடா போடுவது இந்த ஒன்றுக்கு மட்டுமே, கேட்டால் இதை அணிந்தால் ஏதோ சங்கிலி போட்டு சுதந்திரத்தை தடுப்பது போல் இருக்குமாம்.
ஆதி வழக்கம் போல் அவன் பேச்சை நிராகரித்தான். சில நிமிட பயணத்திற்கு பிறகு வாகனத்தை திருப்பி உதய் தொடங்கிய இடத்திலே வந்து நிறுத்தினான்.
ஆதி இறங்கியதும் உதய் தானும் இறங்கி வாகனத்தில் சாய்ந்து நின்றான், "சஹானாக்கு மாப்பிள்ளை எதுவும் பாக்குறியா?"
"அவளே பாத்துக்குவா"
"சஹானா மனசுல அந்த மாதிரி எந்த எண்ணமும் இல்ல" அன்று சஹானாவுடன் சென்ற சிறிது நேரத்தில் ஏதோ உதய் கணித்தது அது, "எவனாவது அவளை லவ் பன்றானா?" சரியாக யூகித்து கேட்டான் உதய்.
"ஆதவன்" ஒரு வார்த்தையில் பதில் வந்தது.
உதயால் நம்ப முடியவில்லை... இத்தனை வருடங்களாய் தன்னிடம் ஒரு தகவலை கூறாமல் இருக்காதவன் இந்த விஷயத்தை பற்றி ஏன் தன்னிடம் கூறவில்லை என்று தெரியவில்லை. ஒருவேளை தனக்காக இத்தனை ஆண்டுகள் மௌனமாய் தன்னுடைய காதலை மறைத்து இருந்தானா? தன்னையே அறியாமல் மனதில் ஒரு சிறிய பெருமிதம் கலந்த வலி, தனக்காக மட்டுமே யோசிப்பவன் மனதை அறியாமலே நான் இருந்துள்ளேன் என்ற வலி.
"எவ்ளோ நாள்?"
"பல வருஷம் லவ் போல, தெளிவா தெரியல" கைபேசியை எடுத்து ஏதோ செய்துகொண்டே கூறியவனிடம் ஒட்டுதல் இல்லாத பேச்சு.
"சஹானாக்கு தெரியுமா?" - உதய்
"டெய்லி காலேஜ் வாசல்ல தான் அவன் வண்டி நிக்கிது... தெரிஞ்சிருக்கும்" - ஆதி
"நீ என்ன முடிவு பண்ணிருக்க?" - உதய்
"என்ன முடிவு பண்ணிருக்கனா? என்ன கேக்குற" - ஆதி
"உனக்கு புரிஞ்சது" - உதய்
"சஹானா விருப்பம்" - ஆதி
"முழு மனசோட சொல்லு உன்ன மீறி ஆதவன், சஹானா ரெண்டுபேரும் எதுவும் செய்ய மாட்டாங்க"
மௌனம் சில நொடிகள் ஆக்கிரமிக்க, "நாளைக்கே சஹானா சம்மதம் இருந்தா அவன் கல்யாணம் கூட பண்ணிக்கட்டும்... என் கூட இருந்து அவளுக்கு தான் கஷ்டம், ஒரு அண்ணனா என்ன செஞ்சிருக்கேன் இது வரைக்கும் என் தங்கச்சிக்கு? இனிமேலாவது என் தங்கச்சி சந்தோசமா, பாதுகாப்பா இருக்கட்டும்" பெரிதாக அவன் பாதிக்கப்பட்டிருந்தது அமைதியான அவன் பேச்சிலே தெரிந்தது.
"உன்ன விட சஹானாக்கு யார் அதிகம் பாதுகாப்பா இருந்துட முடியும்?"
பார்வையை இருளிலிருந்து விலக்க இயலவில்லை, மனம் ரணமாய் வலித்தது, "நேரம் காலம் பாக்காம குடிக்கிறவன், நாடு ராத்திரி தனியா இருக்க தங்கச்சி கூட இல்லாம இப்டி தெருல சுத்திட்டு இருக்கவன் தான் பாதுகாப்பா?"
தன்னை மட்டுமே ஏசிக்கொள்ள வேண்டும்... இந்த அத்தனைக்கும் அவன் ஒருவன் மட்டுமே காரணமல்லவா? தன்னுடைய மன வேதனையை, வலியை மட்டுமே பார்த்து திருமண வயதில் இருக்கும் தங்கையைத் தனியாக வீட்டில் விடுவது மட்டுமல்லாமல் காரணமே இல்லாமல் வேதனைப்பட அந்த சிறு பெண்ணிற்கும் கொடுக்கிறான், இரவில் ஆதி வரும் வரை உறங்காமல் படுத்திருப்பவள் அவன் வந்ததும் அவனை உண்ண வைத்து அவன் முகத்தையே பார்த்துக்கொண்டிருப்பாள்.
சில நேரங்களில் ஆதி எவருடனும் சண்டையிட்டு வந்தால் கண்ணீர் சிந்திக்கொண்டே அவனுடைய காயங்களுக்கு கட்டிட்டு ஒரு வார்த்தை கேட்காமல் சென்று உறங்குபவளை இப்பொழுது நினைத்தாலும் மனம் வலிக்கும்.
"ரெண்டு வருஷம் முன்னாடியே வரன் பாக்கணும்னு ஆசை, ஆனா நான் சஹானாக்காக சேத்து வச்ச அந்த கொஞ்ச தங்கம் மட்டும் போதாதே, அது மட்டும் என் தங்கச்சிக்கு நல்ல வாழ்க்கையை குடுத்துடுமா?
என் தங்கச்சிய சுத்தி அப்பா அம்மா தாத்தா பாட்டி, தாய்மாமா இப்டி எல்லாரும் இருக்கனும், புகுந்த வீட்டுக்கு அவ போறப்ப ஆயிரம் பத்தரம் சொல்லியாவது அனுப்ப ஒரு குடும்பம் வேணாம்? என்னால அண்ணனை தாண்டி அவளுக்கு வேற எதுவாவும் இருக்க முடியல...
இத்தனை வருஷம் என்னால அவ அனுபவிச்ச வேதனைக்கு ஒரு நிறைவான கல்யாணத்தை குடுக்காம இருந்தா நான் என்ன அண்ணண்?
என் வாழ்க்கை எப்படி போகுமோ தெரியல ஆனா என்ன இந்த உலகம் பேசுற மாதிரி என் தங்கச்சிய யாரும் அனாதைன்னு ஒரு வார்த்தை சொல்லிட கூடாது... அவன்கிட்ட சொல்லிடு கல்யாணத்துக்கு அப்றம் என் சஹானாவை யாரும் தப்பா பேச கூடாது அவளுக்கு அவ அண்ணண் நான் எப்பயும் இருப்பேன்"
தன்னையும் மீறி அனுமதியில்லாமல் சில கண்ணீர்த் துளிகள் கன்னத்தில் உருண்டோடியதை உடனே துடைத்துக்கொண்டான் சஹானாவின் சகோதரன்.
உறவுகளின் அவசியம் தெரியாதவர்களுக்கு உறவுகள் நூறு இருக்கும் ஆனால் தனியாய் நின்று போராடும் மனிதர்களுக்கே ஏசுவதாக இருந்தாலும் போற்றுவதாக இருந்தாலும் ஒரு உறுதுணையின் அவசியம் தெரிந்திருக்கும். அதை அறியாதவனா உதய்?
ஆதிக்கு எதுவும் இல்லை என்ற ஏக்கம், உதய்க்கு அனைத்தும் இருந்தும் இல்லையென்ற வலி... இரண்டும் ஒன்று ஒன்று விஞ்சி நின்று இதிலும் போட்டியோடு தான் நின்கின்றது.
ஆனால் இருவரும் அறிவர் இவர்கள் இருவரும் ஒன்றாக இருந்தால் எதைப் பற்றியும் மனமோ மூளையோ யோசிக்காது, சமூகத்தில் பேச்சுகளும் எண்ணங்களும் ஒன்றும் அவர்களுக்குப் பொருட்டாகாதென்றும். வண்டியிலிருந்து இறங்கி வந்தவன் ஆதிக்கு அருகிலிருந்த இடத்தில் உதய் அமர அவன் கைகள் தன்னுடைய தோளில் சுற்றிப் போட்டு சில முறை தட்டிக்கொடுக்க ஏங்கியதை ஆதியின் உள் மனம் மட்டுமே அறிந்த ஒன்று.
"டென்த் ஸ்டாண்டர்ட் பப்ளிக் தமிழ் எக்ஸாம் அன்னைக்கு புட்பால் மேட்ச், செலக்ட் ஆனா ஸ்டேட் லெவல் ட்ரைனிங் பிளஸ் ஸ்பான்ஸர்ஷிப். எக்ஸாமா மேட்சா-னு கேட்டப்ப மேட்ச்ன்னு சொன்னவன், சரியா மேட்ச் அன்னைக்கு தங்கச்சிக்கு வந்த லேசான காய்ச்சல் தான் ஆனா அதுக்கு அந்த மேட்ச்ச விட்டுட்டு ரெண்டு நாள் தூங்காம அவ சரியாகுற வர தங்கச்சி பக்கத்துலயே இருந்து அம்மாவா கவனிச்சுக்குட்டான்"
"ச்ச்..." உச் கொட்டி ஆதி முகத்தை வேறு பக்கம் திரும்பிக்கொண்டான்.
ஆனாலும் விடாமல் தொடர்ந்த உதய், "அன்னைக்கு தங்கச்சி மேல பாசமா, கண்ணுக்குள்ள வச்சு பாதுகாப்பா பாத்துக்குட்டே இருந்த அதே அண்ணன தான் இன்னைக்கும் பத்து நிமிசத்துக்கு ஒரு தடவ வீட்டுல இருக்க கேமரால தங்கச்சி பத்தரமா இருக்காளான்னு வாசலையே பாத்துட்டு இருக்கான்"
வந்ததிலிருந்து உதய்யும் ஆதியின் ஒவ்வொரு செயல்களையும் பார்க்கிறான், சில நிமிடங்களுக்கு ஒரு முறை கைப்பேசியை எடுத்து பார்த்துக்கொண்டே தான் உதய்யிடம் பேச்சை வளர்கிறான்.
"கூட இருக்கனும்" நூறு முறை கைப்பேசியில் பார்த்துக்கொண்டே இருந்தாலும் நேரிலிருந்து பார்த்துக்கொள்வது போல் வராதல்லவா?
"அப்ப போடா ஏன் இங்கையே நிக்கிற?"
அது தான் ஆதிக்கும் பதில் தெரியவில்லை, இந்நேரம் உதய் இங்கு வராமல் இருந்தால் நிச்சயம் இந்நேரம் கிளம்பியிருப்பான், இப்பொழுதும் முகத்தில் அடித்தது போல் பேசிவிட்டுக் கிளம்பலாம் தான்... ஆனால் ஒரு ஆறுதல் தேவை ஆதிக்கு, மனதில் இருக்கும் சோர்வு நீங்கி உத்வேகம் வர வேண்டும், அதற்கான வழி தான் தன் அருகில் இருக்கும் உதய் மாதவன்.
தமிழ், கெளதம் அல்லது அவர்கள் குடும்பம், இவர்கள் அனைவரும் ஆதியின் சிரமான நாட்களில் அவனுக்குப் பக்கபலமாய் தான் இருந்துள்ளனர், இருக்கின்றனர். ஆனால் சில சமயங்களில் ஆதியின் மனதைத் தமிழ், கெளதம் இருவரும் புரிந்துகொள்ள முயலாமல் போகும் நிலையில் தான் உதய் இருக்கும் பழைய வீட்டிற்கு வருவான்... இத்தனை ஆண்டுகளில் பல முறை வருவது உண்டு ஆனால் இந்த சில நாட்களில் தான் உதய் இங்கு இருக்க, அவனை அடிக்கடி காணும் நிலை ஆதிக்கு ஏற்பட்டுள்ளது.
"எல்லாமே தெரிஞ்சும் நீ இன்னும் போகாம இருக்கனா கண்டிப்பா சஹானா புரிஞ்சுக்குவா உனக்கு தனிமை தேவைப்படுதுன்னு அதை புரிஞ்சு தான் சஹானாவும் உனக்கு இன்னும் கால் பண்ணல"
அமைதியாகத் தான் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தவன் கால்கள் இன்னும் தன்னையே அறியாமல் ஆடிக்கொண்டிருக்கப் புரிந்தது உதய்க்கு சஹானா மட்டும் அவன் மன உளைச்சலுக்குக் காரணமில்லை என்று. ஜெயன் மூலம் இரண்டு நாட்களுக்கு முன்பாக ஆதி வங்கியில் கடன் வாங்க அலைவது பற்றி கேள்வியுற்றுள்ளான். அது காரணமாக இருக்குமோ?
"ஆனா இந்த மாதிரி இருட்டையே வெறிச்சு பாத்துட்டே இருந்தா எல்லாமே சரியாகிடுமா? மனசுக்கு கஷ்டம் இருக்கும், நிராகரிப்பு இருக்கும், வலி வேதனை ஒதுக்கல் எல்லாமே இருக்கும். தாங்கி தான் ஆகணும். நெனச்ச ஒடனே எல்லாமே நடந்துடா நம்மள பத்தி நமக்கே தெரியாம போய்டும்.
மாறாத... மாத்திக்கவும் செய்யாத, எதுக்காகவும் யாருக்காகவும்... முட்டி மோதி தான் வழிய கண்டுபுடிக்க முடியும், ஒரே வழி மட்டும் இல்ல பல வழிகள் இருக்கு, முன்னாடி காயம் தந்த பழைய வழிகள் இப்ப நம்பிக்கையும் தரும். அவசரப்படாம நிதானமா யோசி"
நிதானமாக ஆழ்ந்த குரலில் பேசிய உதய்யின் வார்த்தைகளைத் தெளிவாகக் கேட்ட ஆதிக்கு அதன் அர்த்தம் தான் புரியவில்லை ஆனால் அந்த இடத்தில் ஆதி முன்னேறிச் செல்ல ஒரு பாதையே காட்டியிருந்தான். ஆதி யோசனையில் இருக்க உதய் ஆதியின் சட்டையைப் பின்புறமாகத் தூக்கினான் திடீரென.
"என்னடா பண்ற?" திமிறி ஆதி உதய்யின் கையை பிடித்து நிறுத்த, ஆதியை முறைத்த உதய், "கைய எடு" என்றான் கோவமாக.
சளைக்காமல் அப்படியே ஆதி நிற்க, அவன் கையை முறுக்கி உதய் ஆதியைச் சற்று தன் வசப்படுத்தியிருந்தான். நண்பனுக்காகத் தளர்வாக ஆதி நிற்க, அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்ட உதய் சட்டையை மேலே தூக்கிவிட்டு அரிவாளால் வெட்டுப்பட்டிருந்த காயத்தை ஆராய்ந்தான்.
சில நாட்களுக்கு முன் தான் கட்டை எடுத்திருப்பான் போலும். காயம் சிறிதே ஆற துவங்கியிருந்தது. விரலால் புண்ணைத் உதய் தொட்டுப் பார்க்க, வலியில் ஆதியின் தேகம் இறுகியது, அதுவே அவன் முகத்திலும் பிரதிபலிக்க கோவம் உதய்க்கு தலையைத் தொட்டது.
"அறிவில்ல? இப்டியா தண்ணி படுற மாதிரி டெய்லி குளிப்ப? ஏன் அந்த ரெண்டு தடி மாடுகள ஒரு வாரம் ஹெல்ப் பண்ண சொல்ல வேண்டியது தான? இல்ல நீயே பெரிய இவன் மாதிரி நானே பாத்துக்குறேனு சொன்னியா? டேப்லெட் சாப்பிட மாதிரி தெரியல, சரியா ட்ரெஸ்ஸிங் பண்ண மாதிரி இல்ல.
ஊர்ல இருக்கவன் கூட எல்லாம் சண்டையை இழுத்து வச்சுக்குறது, அப்றம் வந்து அவன் வெட்டாம உனக்கு வந்து சேவகம் பண்ணுவானா? கொஞ்ச நேரம் ஒக்கார முடியல வலில நெளிஞ்சிட்டே இருக்க... இல்ல தெரியாம கேக்குறேன் நீ என்ன தான் மனசுல நினைக்கிற உன்ன நம்பி இருக்கவங்களுக்காக ஆவது அமைதியா இருக்க வேணா?"
ஜெயன் பக்கம் திரும்பியவன், "ஜெயன்" என்று அழைக்க, இவ்வளவு நேரம் அமைதியாக இருவர் உரையாடலும் நிகழ்ந்திருக்க, இறுதியாக உதய் பேசிய கோப வார்த்தைகள் ஜெயனை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. இது போன்ற வார்த்தைகளை எந்நாளும் பயன்படுத்தாதவன் இன்று இப்படிப் பேசியது மட்டுமல்லாமல் இவ்வளவு குரலை உயர்த்திப் பேசியதும் அதிர்ச்சி தான்.
"சார்..." வேகமாக உதய் அருகில் வந்து நின்றான்.
"மெடிக்கல் கிட் வீட்டுல போய் எடுத்துட்டு வாங்க ஜெயன்" ஜெயன் வேகமாகச் செல்ல ஆதி உதய்யின் பேச்சில் இறுகிய முகத்துடன் தன்னுடைய கையை அவனிடமிருந்து விடுவித்து வண்டியை நோக்கி நகர்ந்தான்.
"எங்க போற?" ஆதியின் கையை பிடித்து அருகில் அமர வைத்துக்கொண்டான் உதய்.
"உன் வீட்டுக்கு ஒன்னும் போகல போதுமா?"
எரிச்சலோடு ஆதி பேச அவனைப் புரிந்துகொண்ட உதய், "கூட்டிட்டு போக எந்த காரணமும் எனக்கு தெரியல"
"வண்டி சாவி தா" பிடிவாதமாய் ஆதி நிற்க உதய் அவனைச் சட்டையே செய்யவில்லை.
"இவ்ளோ பிடிவாதமா இருக்காதன்னு சொல்லிருக்கேன் உன்கிட்ட" - ஆதி
"அதையே தான் நானும் சொல்றேன் பிடிவாதம் புடிக்காத அமைதியா ஒக்காரு"
அதற்கு மேல் ஆதியைப் பேசவிடாமல் உதய் கைப்பேசி சிணுங்க அதை எடுத்து ஏதோ ஒரு மொழியில் உதய் பேசிக்கொண்டிருக்க ஆதி ஒரு இடத்தில் நிற்காமல் அங்கும் இங்கும் நடந்துகொண்டிருந்தவன் ஒரு கட்டத்தில் சிகரெட் ஒன்றை எடுத்துப் பற்ற வைத்து தூரம் சென்று நின்றுகொண்டான். சிறிது நேரத்தில் ஜெயன் வர ஜெயனிடம் கைப்பேசியை ஒப்படைத்தவன் ஆதியைப் பார்த்து நிற்க, வேண்டும் என்றே பொறுமையாக அந்த சிகரெட் காலியாகும் வரை பொறுத்திருந்து பிறகு தான் வந்தான்.
"சட்டையக் கழட்டு"
"வேணாம் மருந்து தா நானே வீட்டுல போய் போட்டுக்குறேன்" வம்படியாக அவனை அமரவைத்து அவன் காயத்திற்கு மருந்தையும் தானே போட்டு விட்டு மீதமிருந்த மருந்தையும் அவனிடம் கொடுத்தான் தினமும் மறக்காமல் போட்டுக்கொள்ளும்படி.
"ஆமா யாரு அந்த பொண்ணு?" - ஆதி
"எந்த பொண்ணு?" - உதய்
"அது தான் அன்னைக்கு பார்ட்டில கறியோட பிரியாணி சாப்புடுறதுக்கும் வெறும் குஸ்கா மட்டும் சாப்புடுறதுக்கும் இருக்க வித்யாசத்தை கால் மணி நேரம் கிளாஸ் எடுத்துச்சே... டேய் சாத்தியமா சொல்றேண்டா ரெண்டு பீஸ் மட்டும் தான் எடுத்து சாப்பிட்டேன்... புடிச்சிடுச்சு அவ்ளோ தான். அந்த பிள்ளை எடுத்த கிளாஸ்ல பிரியாணியவே வெறுத்துட்டேன்... என்ன வாயி அப்பா..." அந்த நாள் நினைவில் இன்றும் பெருமூச்சு ஆதியிடம்.
"அந்த பொண்ணு அப்டி தான்..."
"பேர் என்ன?" - ஆதி
"யாழினி" - உதய்
"உன்னோட அசிஸ்டன்ட்டா?" - ஆதி
"ம்ம்ம் ஆமா லாஸ்ட் ஒன் மந்த்தா தான் ஒர்க் பன்றா"
"பார்ட்டில ஏன் அந்த பொண்ணையே அடிக்கடி உன் கண்ணு பாத்துட்டே இருந்துச்சு?" ஆதி சந்தேகமாய் உதய்யை ஓரக்கண்ணால் பார்க்க உதய் முகத்தை வேறு பக்கம் திருப்பி நின்றான்.
"யாழினி கைல தான் நெறைய ஒர்க் குடுத்தேன்... கொஞ்சம் சொதப்புவா அதுக்கு தான் என்ன பன்றான்னு கவனிச்சிட்டே இருந்தேன்" ஆதியின் கேள்வி வழியை மறைத்து நிறுத்தினான்.
"அப்ப அன்னைக்கு உன்னோட ரூம்ல இருந்து அந்த பொண்ணு எதுக்கு சிரிச்சிட்டே வந்துச்சு... பின்னாடி துரையும் சந்தோசமா வந்திங்க?"
இதை எல்லாம் எப்படி கவனித்தான், "நீ அங்க எப்படி வந்த?" கேள்வி உதய்யிடமிருந்து.
"உங்கிட்ட பிசினஸ் பேச வந்தேன்... உங்கள அப்டி பாத்ததும் வந்துட்டேன். சரி மழுப்பாம பதில் சொல்லு, இதுல அந்த பொண்ணு சாரீல இருந்து கீழ விழுந்த கர்சீப்ப எடுத்து நீ உன்னோட பாக்கெட் குள்ள எடுத்து வச்சுக்குட்ட... அந்த பொண்ணுகிட்ட அப்றம் குடுக்க தான்னு மட்டும் பொய் சொல்லாத நம்புற மாதிரி இருக்காது" என்ன பதில் கூறுவதென்று தெரியவில்லை உதய்க்கு.
"ரெண்டு நாள் முன்னாடி மார்க்கெட்ல அந்த பொண்ண பாத்தேன், பின்னாடியே உன்னோட ரெண்டு கார்ட்ஸ். ஏதோ உன்கிட்ட வேலை பாக்குற பொண்ணு மேல இவ்ளோ அக்கறை உனக்கு இருக்காதுனு எனக்கு நல்லாவே தெரியும்" உதய் மௌனமாய் நிற்க ஆதியும் அவன் பேசுவதற்கு காத்திருந்தான்.
"தெரியல... ஆனா நடந்தா நல்லா இருக்கும். அதே நேரம் அதுக்கெல்லாம் நேரமில்லை" சூசகமாக தன்னுடைய உணர்வுகளை பகிர்ந்து அதிலிருந்து விடுபட்டுமிருந்தான்.
"என்னடா நான் வேணா போய் பேசவா? எப்டியும் நீ ஒன்னும் பேசிக்க மாட்ட"
சூழலை மாற்றும் எண்ணத்தில் வாய் விட்டு சிரித்த உதய், "டேய் என்னடா மாமா வேலை பாக்க ஆரமிச்சிட்ட?"
'அதுதான?' என்றும் அப்பொழுது தான் தோன்ற தானும் சிரித்தான் ஆதி.
"ஒரு தடவ நியாபகம் இருக்கா? டென்த் ஸ்டாண்டர்ட் படிக்கிறப்ப தமிழ் டீச்சர் மேல எனக்கு பெரிய க்ரஷ்... அதுக்கு ஹெல்ப் பன்றேன்னு சொல்லி நீயும் கௌதமும் சேந்து லவ் லெட்டர் எழுதி அட்டெண்டென்ஸ் நோட் குள்ள வச்சு விட்டிங்க"
ஆதி சிரிக்க ஆமாம் என்று தலையை ஆட்டிய உதய், "இதுல ஹைலைட்டே வழக்கமா லெட்டர் எழுதுற நியாபகத்துல இப்படிக்கு கெளதம்-னு போட்டு வச்சது தான்"
உதய் விழுந்து விழுந்து அழகிய நாட்களை நினைத்து சிரிக்க, "அவன் மட்டும் சிகிட்டான்னு நாம எல்லாருமே பொய் நாங்களும் தான்னு சொன்னதுக்கு, பனிஷ்மென்ட்டா ரெண்டு நாள் கிரௌண்ட்ல தான் இருக்கணும்னு சொன்னாங்க பாரு... அட்டெண்டென்ஸ் ஓட ஹாலிடே டா அது" - ஆதி
"நீ அதோட விட்டியா? அந்த டீச்சர பாக்குறப்ப எல்லாம் சிரிச்சு சிரிச்சு ஸ்கூல் விட்டே ஓட வச்சியே" - உதய்
"காரணம் யாருடா நீங்க தான்... கிராஸ் பண்றப்ப எல்லாம் கூட படிக்கிற பொண்ண கிண்டல் பண்றமாதிரியே பேர சொல்லி கத்தி விட்டு என்ன சொல்ற... ஆனாலும் அப்ப ஸ்டார்ட் பண்ண மாமா வேலை இப்ப வர நடக்குது"
சிரித்துக்கொண்டே எழுந்த உதய், "சரி நேரமாச்சு நான் கிளம்புறேன்" அப்பொழுது தான் ஆதியும் நேரத்தைப் பார்த்தான் மணி இரண்டை தாண்டி பதினெட்டு நிமிடங்கள் ஆகியிருந்தது.
வீட்டை நோக்கி உதய் நடக்க, "சார் கார வர சொல்லவா?"
முகத்தில் வற்றாத சிரிப்போடு நெட்டி முறித்தவன், "வேண்டாம் ஜெயன்... நடக்குறது ஒரு தனி சுகம்" இதுவரை ஜெயன் பார்க்காத ஒரு உதய் மாதவன் இவன்... பல பெரிய ஒப்பந்தங்களை எல்லாம் கைப்பற்றியபொழுது இல்லாத மகிழ்ச்சி இப்பொழுது இவன் முகத்தில்.
"மிஸ்டர் உதய் மாதவன்" ஓங்கி ஒலித்தது ஆதியின் கணீர் குரல் அந்த காலி தெருவில்.
உதய் திரும்பிப் பார்க்க வண்டியில் அமர்ந்து புறப்படுவதற்குத் தயாராக நின்றிருந்தான் ஆதி, "கொஞ்ச நேரம் சிரிச்சு பேசுன ஒடனே எல்லாத்தையும் நான் மறந்துட்டேன்னு மட்டும் தப்புக் கணக்குப் போட வேண்டாம். இறந்தவர் மேல பழியை போட்டு அதுல குளிர் காஞ்ச ஈன பிறவிக முகம் இன்னும் என் கண் முன்னாடி தான் நிக்கிது"
உதய்யின் இதழ்களில் குடிகொண்டிருந்த புன்னகை ஆதியின் வார்த்தைகளில் சட்டென மறைந்து இறுகியது, சட்டையில் தொங்கவிட்டிருந்த கூலர்ஸை அணிந்து, "என் கூட சண்டை போடுறவங்க உடல் அளவுல மட்டுமே பலமா இருந்தா பத்தாது மிஸ்டர் ஆதி கேசவன், மனசளவுல பலமா இருக்கனும். என் மொத்த சந்தோஷத்தையும் கொன்னுட்டு என்ன அனாதையா நிக்க வச்சவன நானும் இன்னும் மன்னிக்கல, நான் அனுபவிச்சதுல பத்து பர்ஷன்ட் கூட அவன் இன்னும் அனுபவிக்கலையே... அவர் ரிவென்ஜ் கேம் இஸ் ஸ்டில் ஆன்"
பளிச்சென முகத்தில் விழுந்த திருவிளக்கின் நிழலில் வெள்ளை சட்டையும், கருப்பு கூலிங் கிளாஸ் அணிந்து சுற்றிலும் இருளால் சூழ்ந்திருந்தாலும் அவன் நிற்பது கூட கம்பீரமாய், வசீகரமாய் நின்றவனைப் பார்த்து, 'நீ என்னைக்கும் கெத்து தான்டா உதயா' பெருமையாக நினைத்துக்கொண்டது மனம்.
வீடு கதவு வரை சென்றவன் தன்னையே பார்த்து நின்ற ஆதியைப் பார்த்து, "ஆல் தி பெஸ்ட்" இருளில் உதயின் சிரிப்பும் மறைய எதற்காக இந்த வாழ்த்து என்று புரிந்தும் புரியாமல் இல்ல
ம் நோக்கிப் பயணித்தான் ஆதி. இருவரும் பல வருடங்களுக்கு பிறகு சுகமான உறக்கத்தை அனுபவித்தனர்.
 
Well-known member
Messages
610
Reaction score
346
Points
63
Namma aadhai udhai ya epadi la pesurathu ayoo so cute da🙈🙈❤️❤️aadhavan sahana va love pandran nu aadhai ku theriyuthu varaay va😍 unga flashback story la kettu siripa control panna mudiyala tamil teacher 🤪🤪Gowtham semma da 🤭🤭nalla friends da negga ellarum 🤗🤗ama aadhai yazhini un frd oda lover tha Avan samalikuran 😂epadi ungala pakka romba santhosama iruku 💕💕💕
Enn da nalla thaana pesidu iruthiga ippo enna villain range la pesuriga 😬😬😬😬
 
Messages
37
Reaction score
4
Points
8
Namma aadhai udhai ya epadi la pesurathu ayoo so cute da🙈🙈❤️❤️aadhavan sahana va love pandran nu aadhai ku theriyuthu varaay va😍 unga flashback story la kettu siripa control panna mudiyala tamil teacher 🤪🤪Gowtham semma da 🤭🤭nalla friends da negga ellarum 🤗🤗ama aadhai yazhini un frd oda lover tha Avan samalikuran 😂epadi ungala pakka romba santhosama iruku 💕💕💕
Enn da nalla thaana pesidu iruthiga ippo enna villain range la pesuriga 😬😬😬😬
thank u so much sis... itha vida special item onu iruku
 
Top