• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

தவம் 5

Administrator
Staff member
Messages
536
Reaction score
800
Points
93
தவம் 5:

சொந்தத்தில் இது என்ன

வகை சொந்தமோ
இறைவன் தந்த வரம்

இணைந்தது நெஞ்சம்…

“எலிசியன் ஷோர்ஸ்” சிவப்பு நிற எழுத்துக்களால் பெரிதாய் மின்னி கொண்டிருந்தது அந்த தங்கும் விடுதி.

நான்கு தளங்களை கொண்ட அது காலை நேரத்தில் சற்று பரப்பாக இயங்கி கொண்டிருந்தது.

நுழைவுவாயிலில் இருந்து உள்ளே செல்லும் தூரம் வரை அழகான மலர்கள் பூத்து குலுங்கி கொண்டிருந்தன.

வண்ண வண்ண மலர்கள் தான் நறுமணம் பரப்பி அவ்விடத்தை அழகுப்படுத்தின.

ஜான்வி வழக்கம் போல தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே செல்ல
வரவேற்பரையில் அமர்ந்து இருந்த சௌம்யா மற்றும் திவ்யா இவளை பார்த்து புன்னகைக்க தானும் மென்னகையை கொடுத்தவள் மின்தூக்கியில் நான்காவது தளத்தை அடைந்து தனது அறைக்கு சென்றாள்.

எம்.டி ஜீவானந்தம் என்று பெரிதான பெயர் பலகையுடன் இருந்த அறைக்கு அருகில் அவளது அறை இருந்தது.

உள்ளே வந்து தனது கைப்பையை வைத்துவிட்டு ஜீவாவின் அறைக்கு அருகில் இருந்த வருகை பதிவு செய்யும் கருவியில் தனது கட்டை விரலை வைத்து பதிவு செய்ய நேரம் ஏழு ஐம்பத்தி எட்டு என்று காண்பித்தது‌.

ஜானவியின் வேலை நேரம் காலை எட்டு மணியில் இருந்து இரவு எட்டு மணி வரை‌.

வேலை நேரம் சற்று அதிகமாக இருந்தாலும் ஊதியம் அதற்கேற்ப வழங்கப்படுகிறது.

தனது வருகையை பதிவு செய்தவள் இறங்கி கீழே சென்றாள்.

அவளுக்கு காலையில் இருந்து இரவு வரை வேலை சரியாக இருக்கும்.

காலை வந்ததும் முதல் வேலையாக தோட்டத்திற்கு சென்று அதனை ஒழுங்காக சுத்தம் செய்து பராமரிப்பு செய்து இருக்கின்றனரா? என்று பார்க்க வேண்டும்.

தோட்டத்தில் லில்லி ஆர்கிட் மற்றும் லாவெண்டர் மலர்கள் பூத்து குலுங்கியது.

தோட்ட வேலை செய்பவர்கள் காலை ஆறு மணிக்கே வந்து வேலையை துவங்கிவிடுவார்கள்.

இவள் வந்ததும் ஒருமுறை சரிபார்த்துவிட்டு ஏதேனும் சரியாக செய்யாமல் விட்டிருந்தால் சரி செய்யக்கூறுவாள்.

அதன் பிறகு சமையலறைக்கு சென்று காலை உணவு எல்லாம் தயாராக உள்ளதா? இன்றைக்கு மெனு என்ன? என்று சமையல் கலைஞரிடம் கேட்டு கொள்வாள்.

அங்கு சமையலறையில் ஒரு தலைமை கலைஞர் அவருக்கு கீழே நான்கு பேர் மற்றும் அது தவிர சில உதவியாளர்கள் இருக்கின்றனர்.

எட்டு பதினைந்திற்கு காலை உணவு அங்கு தயாராக இருக்கும்.

அதன் பிறகு வரவேற்பு பகுதியில் பணிபுரிபவர்களை அழைத்து நேற்று இரவு செக் இன் செய்தவர்கள் காலை செக் அவுட் செய்தவர்கள் என்று அனைத்து விபரத்தையும் சரி பார்க்க வேண்டும்.

ஒன்பது மணிக்கு மேல் காலி செய்யப்பட்ட அறைகளை தூய்மை பணியாளர்களை வைத்து சுத்தம் செய்ய வைக்க வேண்டும்.

இதற்கிடையில் ஒன்பரை மணிக்கு ஜீவா வந்துவிடுவான்.

அவனிடம் சென்று தான் இதுவரை செய்தது மற்றும் வரவேற்புரை வாங்கிய விபரங்களை சரியாக சமர்ப்பிக்க வேண்டும்.

பிறகு வந்து தூய்மை பணி மேற்பார்வை செய்பவர் மூலமாக அனைத்து அறைகளும் சுத்தம் செய்யப்பட்டுள்ளதா என்று பார்க்க வேண்டும்.

சில சமயம் தானே சென்று நேரடியான சுத்தம் செய்வதை மேற்பார்வை செய்வாள். அப்போது தான் வேலை சரியாக நடக்கும் என்ற எண்ணம்.

அதன் பிறகு பதினொரு மணிக்கு சற்று ஓய்வு கிடைக்கும். அதில் அறையில் அமர்ந்து கணக்கு வழக்கு வேலைகளை பார்ப்பாள்.

இடையில் ஜீவானந்தம் ஏதாவது வேலை கூறினான் அதையும் பார்ப்பாள்.

பிறகு பனிரெண்டரை மணிக்கு மதிய‌ உணவு தயாராகிவிட்டதா? என்று பார்த்து மெனுவை சரி பார்ப்பாள்.

அங்கு இந்தியன் சைனீஸ் என அனைத்து வகையான உணவு வகைகளும் கிடைக்கும் ஆதலால் ஒவ்வொன்றையும் பார்க்க வேண்டும்.

இரண்டு மணிக்கு மேல் அறைகளிலோ அல்லது விடுதியிலோ வேறு ஏதாவது தண்ணீர் அல்லது மின்சாரம் தொடர்பான பிரச்சனைகள் உள்ளதா என்று கவனிப்பாள்.

இடையில் மதிய உணவை பத்து நிமிடத்தில் முடித்து கொள்வாள்.

மூன்று மணிக்கு மேல் ஸ்பா மற்றும் இதர வசதிகள் சுற்றுலா அழைத்துச் செல்லும் வசதி சுற்றுலா வழிகாட்டி மற்றும் வாகனங்கள் ஏற்பாடு செய்வது என்று அனைத்து விபரங்களையும் பட்டியலிட்டு ஜீவாவிடம் அனுமதி பெற்று அதற்கான ஏற்பாடு செய்வாள்.

ஐந்து மணிக்கு மாலை தேநீர் மற்றும் சிற்றுண்டி வழங்கப்படுகிறதா என்று கவனிப்பாள்.

பிறகு ஆறு மணிக்கு தோட்டத்தில் நடுவில் கேம்ப் பையர் போடுதற்கு ஆட்களை வைத்து ஏற்பாடு செய்வாள்‌.

பிறகு ஏழறை மணிக்கு இரவு உணவு மெனுவை தயாரித்துவிட்டார்களா? என்று ஒருமுறை சரிபார்த்துவிட்டு இரவு வேலைக்கு அடுத்ததாக வருபவரிடம் ஒப்படைத்துவிட்டு எட்டு மணிக்கு வீட்டிற்கு கிளம்பிவிடுவாள்.

ஜானவி ஜீவாவிற்கு தனிப்பட்ட உதவியாளர் மற்றும் விடுதியின் ஜி.எம் என்று அழைக்கப்படும் ஜெனரல் மேனேஜர் பதவியையும் செய்கிறாள்.

இரண்டு பதவியையும் ஒற்றை ஆளாக செய்கிறாள் அதற்கேற்ப சம்பளமும் பெறுகிறாள்.

எனினும் இவ்வேலையை இவளை விட யாராலும் இவ்வளவு நேர்த்தியாக செய்ய இயலாது.

வாங்கும் ஊதியத்திற்கு உண்மையாக வேலை செய்ய வேண்டும் நினைப்பவள் ஜானவி.

வழக்கம் போல காலை உணவு வேலையை முடித்துவிட்டு வர ஜீவா வந்திருந்தான்.

அவனிடத்தில் சில விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

சடுதியில் ஒருவித சங்கடம் ஒட்டி கொண்டது. கார் நேற்று அவன் முன்பு தான் அழுதது தான்.

இரவு முழுவதும் தன்னை தானே அத்தனை முறை நிந்தித்து கொண்டாள் ஜீவானந்தம் முன்பு அழுததற்கு.

அப்படி என்ன சுயக்கட்டுபாடு இல்லாமல் போய்விட்டது. இத்தனை வருடங்கள் எப்படி இறுகி உணர்வுகளை தொலைத்து வாழ்ந்து வந்தாயோ அது போல இப்போதும் இருந்துவிட வேண்டியது தான?

யார் என்ன கூறி காயம் செய்தால் என்ன? இதைவிட பெரிய காயங்களை புன்னகையோடு கடந்துவிட்டாய் தானே? இப்போது மட்டும் என்ன வந்து தொலைத்து என்று பலவாறாக தன்னையே நொந்து கொண்டாள்.

இரவு அழுதது தெரியாதது போலத்தான் முகத்தை நன்றாக கழுவி சிறிது ஒப்பனை வேறு செய்து வந்திருந்தாள்.

இருந்தும் அவனை காண உள்ளுக்குள் பெரிதான தயக்கம் தடை போட்டது.

எப்படி இருந்தாலும் பார்த்து தானே ஆக வேண்டும் என்று எண்ணி ஒரு பெருமூச்சு விட்டவள் எப்போதும் போல உணர்வுகளற்ற முகத்துடன் அவனது அனுமதி வேண்டி அறை முன்பு நின்றாள்.

ஜீவானந்தம் வர கூறியவுடன் உள்ளே சென்று வழக்கம் போல,

“குட் மார்னிங் சார்” என்று மென்னைக்க,

“ஹ்ம்ம்” என்று தலையசைத்தவன் இருக்கையை காண்பித்தவனது முகம் சாதாரணமாக தான் இருந்தது.

நேற்றைய மற்றும் காலை விபரங்களை தொகுத்து அவனிடத்தில் கொடுக்க,

அதனை வாங்கி பார்வையிட்டவனது மனம் ஜானவியை பற்றி தான் எண்ணி கொண்டிருந்தது‌.

நேற்று அப்படி ஒரு அழுகை அழுதவள் இன்று எதுவுமே நடக்காதது போல காலை சரியான நேரத்திற்கு வந்துவிட்டாளே என்ன பெண் இவள் என்று தான் தோன்றியது.

சிந்தனையுடன் அவற்றை பார்த்து முடித்தவன்,

“வாஷிங் மெஷின் சர்வீஸ் பண்ண ஆள் வந்துட்டாங்களா?” என்று வினவ,

“இல்லை சார் இப்போ தான் பேசுனேன். இன்னும் ஹாஃப் ஹவர்ல வந்துடுவேன்னு சொன்னாங்க”

“ஓ… அப்புறம் இந்த க்ரோசரீஸ் சப்ளை லிஸ்ட் கேட்டு இருந்தேனே என்ன ஆச்சு?” என்க,

“நான் செஃப்கிட்ட சொல்லி இருக்கேன் சார். ஈவ்னிங்குள்ள ரெடி பண்ணி தர்றேன்னு சொல்லி இருக்காங்க” என்றவள்,

“வெஜிடபிள் சப்ளையரை சேஞ்ச் பண்ண சொல்லி சூப்பர்வைசர் கேட்டு இருக்காங்க” என்றாள்.

“என்ன இஸ்ஸு?”

“அவங்க சப்ளை பண்ற காய்கறிகள் ப்ரெஷ்ஷா இல்லையாம் தென் நார்மல் ரேட்டைவிட எப்பவும் அதிகமா பில் போட்றாங்க”

“ஓ… நீங்க செக் பண்ணிங்களா?”

“எஸ் சார் க்ராஸ் செக் பண்ணிட்டேன். அவங்க சொல்றது உண்மை தான் சப்ளையர் பழைய வெஜிடபிள்ஸ் தான் சப்ளை பண்றாங்க அன்ட் ரேட்டும் ஹை தான். அவங்க பில் ப்ளஸ் நான் வேற ஒரு சூப்பர் மார்கெட் போய் டேரெக்டா பிரைஸ் லிஸ்ட் வாங்கிட்டு வந்து இருக்கேன்” என்று கையில் இருந்த காகிதங்களை கொடுத்தாள்.

“ஹ்ம்ம்” என்று வாங்கி பார்த்தவனிடத்தில் அவளது திறமை கண்டு ஆச்சரியம் இல்லை.

காரணம் கடந்த ஏழு ஆண்டுகளாக அவளது திறனை பார்க்கிறானே?

நரேனது சிபாரிசில் பணிக்கு வந்த போது சிறிது யோசனையுடன் சம்மதித்தான்.

ஆனால் நேர்முக தேர்விலே நன்றாக பதில் அளித்தவளிடமிருந்த திறமை கண்டு தான் அவளுக்கு வேலை கொடுத்தான்.

ஆனால் சிறிது நாட்களிலே அவளது திறமை கண்டே இப்பதவியை கொடுத்து இருந்தான்.

எள் என்னும் முன் எண்ணெயாய் இருப்பவள் ஜானவி.

மேலும் பல வினாக்களை கேட்டு தெளிவு பெற்றவன்,

“நீங்களே நல்ல சப்ளையர் பாத்து அரேன்ஜ் பண்ணிட்டு சொல்லுங்க” என்றுவிட,

“ஓகே சார்” என்று வெளியேறியவள் அறைக்கு வந்து தான் நிம்மதி மூச்சை வெளியிட்டாள்.

அவளுக்கு தெரியும் ஜீவா தேவையின்றி யாருடைய தனிப்பட்ட விடயங்களில் தலையிட மாட்டான் என தெரிந்தாலும் உள்ளுக்குள் ஏதோவொரு பதட்டம்.

அது இப்போது தான் வடிந்தது. மெதுவாக மூச்சை வெளியேற்றி நிதானமானவள் நேற்றைய வரவு செலவை கவனிக்க துவங்கினாள்.

அதன் பிறகு மதிய உணவிற்கு என நேரம் பறந்தது.

இரவு கேம்ப் பையர் வரை பணி முடித்துவிட்டு இரண்டாவது சுற்றிற்கு வரும் மனோகரனிற்காக காத்திருந்தாள்.

மணி எட்டாக பத்து நிமிடமே இருந்தது. அவன் வந்தால் உடனடியாக தான் கிளம்பிவிடலாம்‌.

மகள் வேறு வந்து காத்திருப்பாள். சௌம்யா காலை விரைவாக வருவதால் ஆறு மணிக்கு கிளம்பிவிடுவாள்.

அவள் தான் பள்ளி முடிந்து வரும் ஜீவியை பார்த்து கொள்வது.

இன்று நேற்றல்ல பல வருடங்களாகவே இவ்வுதவி செய்கிறாள்.

ஆனால் இன்று வரை அதனை சொல்லிலோ செய்கையிலோ காண்பித்தது இல்லை.

இதற்கெல்லாம் என்ன நன்றி கடன் செய்ய போகிறேனோ? என்று அவ்வ போது நினைத்து கொள்வாள்.

மணி எட்டாகியும் இன்னும் மனோகர் வந்தபாடில்லை. ஜானவிக்கு கடுப்பாக இருந்தது.

இது இப்போது மட்டுமில்லை நிறைய முறை இவ்வாறு செய்கிறான்.

அது மட்டுமின்றி அவனது அட்டகாசம் அதிகம். காரணம் அவன் ஜீவாவின் தூரத்து உறவினன்.

அதை வைத்து கொண்டு எல்லோரிடமும் எப்போதும் ஏவல் தான்.

ஏதோ தான் தான் இந்த விடுதியின் முதலாளி என்பது போல அவனது செய்கை இருக்கும்.

அதுவும் அவன் வந்த சிறிது நேரத்திலே ஜீவா கிளம்பிவிடுவதால் அவனுக்கு வசதியாய் போயிற்று.

ஜீவா புறப்பட்டதும் மானசீகமாக முதலாளி வேடம் பூண்டு அதனை நிஜத்தில் நிறைவேற்றவும் செய்தான்.

ஜீவாவின் உறவினர் என்று அஞ்சியே எல்லோரும் அவனது சொல் பேச்சை கேட்டனர்.

இல்லை என்றால் ஜீவாவிடம் கூறி பணியை விட்டு நீக்கிவிடுவேன் என்று மிரட்டி பணிய வைத்தான்.

ஜானவியிடம் மட்டும் அவனது ஏவல் செல்லாது. அவனை பார்வையிலே தூர நிறுத்தி விடுவாள்.

சரியாக எட்டே காலுக்கு உள்ளே நுழைந்தவன் ஜீவாவிடம் ஏதோ கூறிவிட்டு வர,

ஜானவி பையை எடுத்து கொண்டு வெளியே வந்தாள்.

“என்ன ஜானவி கிளம்பிட்டிங்க போல” என்று சிரித்தபடி வினவ,

“ஹ்ம்ம்” என்று அவன் முகம் காணாது தலையசைத்தவள் நகர முற்பட,

“இன்னைக்கு செக் இன் ரிப்போர்ட் எங்க இருக்கு ஜானு” என்று வினவ,

“டோன்ட் கால் மீ லைக் தட்” என்று காட்டமாக கூறியவள்,

“எல்லாமே சிஸ்டம்ல அப்டேட்டா இருக்கும்னு உங்களுக்கு தெரியாதா?” என்றவள் விறுவிறுவென நடக்க,

“கோபப்படாதீங்க ஜானவி” என்றவனது சிரிப்பு கேட்க,
இவளுக்கு பற்றி கொண்டு வந்தது.

இவன் வந்து ஒரு வருடம் ஆகிறது. இதற்கு முன் பார்த்த நாகராஜ் மிகவும் நல்லவன்.

தேவையற்ற பேச்சுக்கள் இருக்காது. அரசு பணி கிடைத்துவிட்டதால் சென்றுவிட ஜீவாவின் தந்தையின் சிபாரிசு பெயரில் இவன் வந்து சேர்ந்தான்.

வந்த நாளில் இருந்து இவனது பேச்சு பார்வை சிரிப்பு எதுவும் சுத்தமாக சரியில்லை.

திரும்பி சென்று ஜீவாவிடம் கூறிவிடலாமா? என்று யோசனை பிறந்தது.

தன்னிடம் வாலாட்டினால் பார்த்து கொள்வோம் என்று அந்த முடிவை கைவிட்டவள் விறுவிறுவென தனது வாகனத்தை எடுக்க செல்ல அது பஞ்சர் ஆகியிருந்தது.

“ப்ச் இதுவேறையா?” என்று சலித்தவள் அலைபேசியை எடுத்து சௌம்யாவிற்கு அழைப்பு விடுத்தாள்.

அழைப்பை ஏற்ற சௌம்யா,

“என்னடி கிளம்பிட்டியா?” என்று வினவ,

“இல்லைடி டையர் பஞ்சர். நான் வர்ற வரைக்கும் ஜீவிய பாத்துக்கிறியா?” என்று தயக்கமாக கேட்க,

“ஹ்ம்ம் பாத்துக்கிறேன். நீ பாத்து வா” என்று கூற,

“தாங்க்ஸ் டி”

“அதெல்லாம் நீயே வச்சுக்கோ” என்று இவள் சிலுப்ப,

“நேத்தும் உன்னை தான் தொந்திரவு பண்ணேன்” என்றவள் வருந்தி கூற,

“அடிச்சேன்னு வை. தொந்திரவு அது இதுன்னு பேசிட்டு இருக்க. ஏன் நான் வெளியே போய்ட்டா நீ சஞ்சுவ பாத்துக்க மாட்டியா?” என்று திட்ட,

“பாத்துப்பேன் தான் இருந்தாலும்” என்றவள் நிறுத்த,

“இதெல்லாம் ஒன்னுமே இல்லை. நீ பாத்து டாக்ஸி எதுவும் புடிச்சு வா” என்று கூற,

“ஹ்ம்ம்” என்றவள் அலைபேசியை வைத்துவிட்டு திரும்ப வெகு அருகில் மனோகர் நின்று இருந்தான்.

சடுதியில் அவனை எதிர்பாராதவள் அதிர்ந்து பின்னகர,

“என்ன ஜானவி பயந்துட்டிங்களா?” என்று சத்தமாக சிரிக்க,

அந்த இருட்டில் எதிரொலித்த சிரிப்பு இவளுக்கு கிலியை உண்டு பண்ணியது.

தன்னை நிதானப் படுத்தியவள்,

“ப்ச் இப்போ எதுக்கு பின்னாடி வந்து பயம்புடுத்துறீங்க” என்று முறைக்க,

“ஜெஸ்ட் ஃபன்” என்று இளித்தவன்,

“என்ன இன்னும் கிளம்பலையா?” என்று வினவிவிட்டு தான் வாகனத்தை பார்த்தான்.

“ஓ… பஞ்சரா?” என்று இழுத்தவன்,

“இருட்டிடுச்சு. லேட் ஆகிடுச்சே வாங்க நான் ட்ராப் பண்றேன்” என்று கேட்க,

“தேவையில்லை. நான் போயிக்கிறேன் வழியவிடுங்க” என்று கடுகடுத்த முகத்துடன் கூற, இவன் அசையாது நின்றான்.

ஜானவி, “வழிய விட போறீயா இல்லையா?” என்று ஒருமையில் விழிக்க,

“விட்றேன். ஜானு அதுக்கு முன்னாலே ஒன்னே ஒன்னு” என்று இளித்தவனது குரல் இவளுக்கு அபாயத்தை உணர்த்தியது.

இவன் வேண்டுமென்றே தான் செய்கிறான்‌.

இங்கிருந்து தான் கத்தினால் கூட யாருக்கும் கேட்காது. இவன் ஏதோ திட்டம் போட்டிருக்கிறான் என்ன செய்வது என்று இவள் சிந்திக்க துவங்கினாள்.

“எனக்கு ரொம்ப நாளா ஆசை. ஏன் உன்னை பாத்த அந்த செகெண்ட்ல இருந்தே. தளதளன்னு பெங்களூர் தக்காளி மாதிரி இருக்க நீ. உன் கூட ஒரு நாள் வாழலலைனாலும் எனக்கு மோட்சம் கிடைக்காது” என்றவனது பேச்சில் முகம் சுழித்தவள்,

“சீ வழியவிடு” என்று அவனை தள்ளிவிட்டு ஓட முயற்சிக்க,

அவளது கையை எட்டி பிடித்தவன்,

“எங்க ஓடப்பாக்குற? உன்னை ஓட விட்றதுக்கா டையரை பஞ்சர் பண்ணி புடிச்சு இருக்கேன். இன்னைக்கு ஒரு கிஸ்ஸாவது உன்கிட்ட வாங்காம விட போறது இல்லை” என்றவன் அவளை இழுக்க,

“சீ விட்றா பொறுக்கி” என்றவள் அவனை தாக்க முயல,

“ரொம்ப துள்ளாதடி. நான் எம்டியோட மச்சான் தெரியும்ல. எனக்கு கோவாப்ரேட் பண்ணலை அவர்கிட்ட சொல்லி வேலையை விட்டு தூக்கிடுவேன். ஒழுங்கா என்னை அட்ஜெஸ்ட் பண்ணி போக பழகு” என்று அவளது இரண்டு கையையும் பிடிக்க,

“இப்போ மட்டும் விடலை. நான் உன்ன கொன்னுடுவேன் டா” என்றவள் உக்கிரமாக கூற,

“பத்தினி மாதிரி சீன் போடாதடி. புருஷன் இல்லாம தனியா தான இருக்க. எத்தனை பேர் கூட படுத்திருப்ப. அதே மாதிரி என்கூடயும் இரு‌. நான் உன்னை நல்லா பாத்துக்கிறேன்” என்று வக்கிரமாக பேசியவன் சப்பென்ற சத்தத்துடன் கீழே விழுந்திருந்தான்.

மனோகர் வாங்கிய அறையில் பொறி கலங்கி திரும்பி பார்க்க,

ஜீவா செந்தணலாக சிவந்த முகத்துடன் நின்றிருந்தான்.

ஜானவி ஒருவித ஆசுவாச மூச்சுடன் சுவற்றில் சாய்ந்து விட்டாள்.

மனோகர், “சார்” என்று ஏதோ கூற,

“டேய் ஏதாவது பேசுன உன்னை கொன்னே போட்ருவேன்” என்று உறும,

“நீங்க என்னை தப்பா நினைக்காதீங்க அவ தான் எனக்கு சிக்னல் கொடுத்து இங்க கூப்டா. நீங்க வர்றதை பாத்து நல்லவ மாதிரி நடிக்கிறா” என்று கூற,

“என்ன?” என்ற ஜானவி அதிர்ந்து பார்க்க,

ஜானவியின் அதிர்ந்த முகத்தை கண்ட ஜீவா மனோகரது வாயிலே ரெண்டு குத்து விட்டான்.

அவன் மூக்கு உடைந்து ரத்தம் வந்தது.

“மூச் வாயை திறக்க கூடாது. திறந்தா பேச வாயிருக்காது” என்று கர்ஜித்தவன் யாருக்கோ அழைபேசியில் அழைத்து பேச,

கருப்பு உடை அணிந்தவர்கள் இருவர் வந்தனர்.

“இவனை குடோன்ல அடச்சி போடுங்க” என்று கூற,

“சார் அவ பொய் சொல்றா. புருஷன் இல்லாததால என் மேல ஆசைப்பட்டு அவ தான் என்னை கூப்டா” என்று மீண்டும் கதற,

அவர்களை வைத்தே நாலு உதை கொடுக்க வைத்தவன் வாயை கட்டி இழுத்து போக செய்தான்.

ஜானவி தான் அதிர்ச்சி மாறாது நின்று இருந்தாள். எப்படி பட்ட பழியை தன் மீது தூக்கி போடுகிறான் என்று.

அவன் பேச்சை கேட்டதும் ஒரு நொடி எதுவும் புரியவில்லை ஜானவிக்கு.

“ஜானவி ஜானவி” என்று இருமுறை ஜீவா அழுத்தி அழைத்த பிறகு சுயநினைவை அடைந்தவள்,

“ஹான் சார்” என்று விழிக்க,

“ஆர் யூ ஓகே?” என்று வினவினான்‌.

“ஹ்ம்ம்” என்று தலை அசைத்தவள் ஓய்ந்து போய் தெரிந்தாள்.

நேற்றும் இது போலொரு சூழ்நிலையில் இவளை கண்டோம் இன்றுமா? என்று எண்ணியவன்,

தனது வாகனத்தில் இருந்து தண்ணீர் பொத்தலை எடுத்து வந்து கொடுத்தான்.

அதனை குடித்தவள் சற்று ஆசுவாசமாக,

“ஸ்கூட்டி பஞ்சரா ஜானவி?” என்று வினவ,

“ஆமா சார்”

“வாங்க நான் ட்ராப் பண்றேன்” என்று கூற,

“இல்லை வேணாம் நான் பாத்துக்கிறேன் சார்” என்று மறுக்க,

“என்ன பாப்பீங்க. இந்த நிலமையில எப்படி தனியா போவீங்க வாங்க” என்றவன் சற்று அதட்டலாக அழைக்க,
வேறுவழியின்றி அவனது வானத்தில் ஏறினாள்.

சில நிமிடங்கள் மௌனத்தில் கழிய, “ரொம்ப நன்றி சார்” என்று ஜானவி கூற,

“நான் தான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்கணும் ஜானவி. ஐ ஆம் எக்ஸ்ட்ரீம்லி சாரி. இனிமே எப்பவும் ஒர்க்கிங் ப்ளேஸ்ல இந்த மாதிரி ஒரு சுட்சுவேஷனை பேஸ் பண்ண மாட்டிங்க. நாளைக்கே இதுக்கு ஒரு முடிவு கட்றேன்” என்று மன்னிப்பை வேண்ட,

“நீங்க எதுக்கு சார் மன்னிப்பு கேட்குறீங்க‌. நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லணும் அவன் என்னை பத்தி சொன்னதை நம்பாம அவனை அடிச்சிங்களே. வேற யாராவது உங்க இடத்தில இருந்தா அவன் சொன்ன மாதிரி உடம்பு சுகத்துக்கு” என்று பேசுகையிலே இடை நுழைந்தவன்,

“ஸ்டாப் இட் ஜானவி. நான் எப்படி உங்களை தப்பா நினைப்பேன். அதுவுமில்லாம நீங்க என் நரேனோட சிஸ்டர்” என்க,

“அப்போ நான் நரேனோட தங்கச்சியா இல்லைன்னா நம்பியிருக்க மாட்டிங்களா?” என்றவள் வெடுக்கென வினவ,

“நோ நீங்க யாரா இருந்தாலும் நான் உங்களை நம்பியிருப்பேன். நான் உங்களை ஏழு வருஷமா பாக்குறேன். ஐ க்னோ யூ” என்றவனது வார்த்தையில் அவளது விழிகள் மின்னியது.

“தாங்க் யூ ஃபார் ட்ரஸ்ட்டிங் மீ” என்றவள் கூற,

அதனை தலையசைத்து ஏற்று கொண்டவன்,

“ஜானவி நீங்க ஏன் சந்தோஷை கன்சிடர் பண்ண கூடாது” என்று வினவ,

“ஏன் சார் இந்த மாதிரி சில்லறைங்களுக்காக நான் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கணுமா?” என்று ஒருவித சிரிப்புடன் கேட்க,

“அதுக்காக சொல்லலை. தனியா இருக்கதால அட்வான்டேஜ் எடுத்துகிறாங்க” என்று மொழிய,

“இவனுங்களுக்கெல்லாம் பயந்து கல்யாணம் பண்ணனும்னா நான் எவ்ளோ பண்றது. என் சேஃப்டிய பாத்துக்க எனக்கு தெரியும் சார். இன்னைக்கு ஏதோ கேர்லெஸ்ஸா இருந்துட்டேன்” என்றாள்‌.

“இதுக்காக இல்லைன்னாலும் நீங்க ஒரு கல்யாணம் பண்ணிக்கலாம். விட்டுட்டு போன ஒருத்தருக்காக லைஃப் லாங்க் தனியா இருக்கணுமா?”என்றவன் முடிக்கவும்,


“ஸ்டாபிட் சார்.‌ என் ஹஸ்பண்ட்டை பத்தி உங்களுக்கு என்ன தெரியும் விட்டுட்டு போனாருன்னு சொல்றீங்க. எப்படிப்பட்ட சூழ்நிலையில நாங்க பிரிஞ்சோம்னு எங்களுக்கு தான் தெரியும். ஆயிரம் பேர் வந்தாலும் அவர் ஒருத்தர் கொடுத்த காதலுக்கு ஈடாக முடியாது” என்றவள்,

“தாங்க்ஸ் பார் தி லிப்ட்” என்றுவிட்டு விறுவிறுவென இறங்கி சென்றாள்.

ஜீவா தான் அவளது ஆக்ரோஷத்தை திகைத்து பார்த்தான்…



 
Well-known member
Messages
416
Reaction score
300
Points
63
Janvi ku ava husband ah pathi jeeva pesunathuku enna kobam.varuthu apadi yaru than avan iva pesura thu ah keta pothu avan ah yum ivan ga rendu per oda love ah yum parkanum nu thonuthu
 
Top