• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

தவம் 1

Administrator
Staff member
Messages
536
Reaction score
800
Points
93
அவளும் நானும் அருளும் தவமும்

தவம் 1:

என்னைத்தான் அன்பே மறந்தாயோ…? என்று அந்த மண்டபத்தில் இருந்த ஒலிப்பெருக்கியில் ஒலிக்க,

“வாசல்ல பலூன்ஸ் நிறைய கீழ விழுந்து இருக்கு அதை போய் சரி பண்ணுங்க” என்ற ஜீவாவின் பார்வை சடுதியில் மனைவியின் புறம் திரும்ப,

தூரத்தில் இருந்து அவனை பார்த்தவளது முகத்திலும் ஏகமாய் அதிர்வு.

மனைவியின் முக பாவனையை வைத்தே இது அவளது வேலை இல்லை என்று உணர்ந்தவன் பட்டென்று தம்பியின் புறம் நோக்க,

அவன் தான் சிரிப்புடன் அண்ணனை பார்த்து கண்ணடித்தான்.

ஜீவா கோபமின்றி மெதுவாக முறைக்க,

“ண்ணா வேற லெவெல் சாங்க்ல” என்று அருகில் இருந்தவன் சிரிப்புடன் மொழிய,

“மாம்ஸ் சாங் ஓகே வா உங்களுக்கு?” என்று மற்றொருவன் வினவ,

“எனக்கு ரொம்ப பிடிச்ச சாங்” என்று மீண்டும் ஒரு குரல் வர,

ஜீவாவிற்கு கோபபத்தை இழுத்து பிடிக்க முடியவில்லை.

கண்ணோரம் சிரிப்பில் சுருங்கி விரிய ஒரு விரல் நீட்டி எச்சரித்து நகர,

இது போதுமே அவர்களுக்கு உடன் சேர்ந்து கோரஸ் பாட துவங்கினர்.

நான் உனை நீங்க மாட்டேன்
நீங்கினால் தூங்க மாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே…

என்று மண்டபத்தில் இருந்த அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தனர்.

பெரியவர்கள் முதற் கொண்டு சிரிப்புடன் பார்த்து கொண்டனர்.

கணவனது புன்னகையை கண்டு தனக்கும் மென்னகை எழ தன்னவன் மீது ரசனையாய் படிந்தது லாவண்யாவின் விழிகள்.

சராசரி ஆண்களுக்கேயான உயரத்தில் இருந்தவன் பட்டு வேட்டி சட்டையில் மாப்பிள்ளை போல இருந்தான்.

அதுவும் அவனது நெற்றியில் இருந்த சந்தனம் அவ்வபோது வந்தவர்களை கவனிக்க அங்குமிங்கும் அலைந்தவனது சிகை சற்றே கலைந்திட அவன் கோதிவிடும் அழகையே கண்ணேடுக்காது பார்த்திருப்பாள் மனையாள்.

காலையில் அவனை பட்டு வேட்டி சட்டையில் பார்த்த போதே,

“மாம்ஸ் மாப்பிள்ளை மாதிரியே இருக்க இன்னோரு தடவை கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்று சிரிப்புடன் கேட்டிருந்தாள்.

நிச்சயமாக ஜீவாவை திருமணம் முடிந்து ஒரு குழந்தைக்கு தந்தை என்று யாரும் நம்ப மாட்டார்கள். பார்க்க அத்தனை இளமையாய் இருந்தான்.

திருமணத்திற்கு வந்தவர்களது கவனம் சிதறுவதை உணர்ந்த சிவலிங்கம் சென்று,

“ஜெய் போதும்” என்று அதட்டிய பின்னர் தான் அமைதியாகினர்.

மனைவியின் பார்வை தன்னையே விடாமல் தொடர்வதை உணர்ந்தவனது இதழ்கடியில் புன்னகை தோன்ற அவ்வபோது பார்க்காது போல அவளை பார்த்து கொண்டான்.

கணவனது பார்வையை உணர்ந்தவளுக்கு முகம் முழுவதும் சிரிப்பு படர்ந்தது.

“என்ன அண்ணி அண்ணனை சைட்டிங்கா?” என்று சிரிப்புடன் வினவினாள் ஷியாமளா.

“அதெல்லாம் ஒன்னுமில்லையே நான் சும்மா பார்த்துட்டு இருந்தேன்” என்றவளுக்கு என்ன முயன்றும் வெட்க புன்னகையை கட்டுபடுத்த இயலவில்லை.

“ஆஹான் பாருடா வெட்கத்தை அண்ணி கல்யாணம் அனிதாக்கு தான் நீங்க ஓல்ட் கப்புள்” என்று வம்பிழுக்க,

“ஸோ வாட் ஓல்ட் இஸ் கோல்ட்” என்று இதழை சுழித்தவள் சிரிப்புடன் கணவனை நோக்கி செல்ல,

அருகில் வரும் முன்பே, “என்ன?” என்று ஒற்றை புருவத்தை உயர்த்தி இருந்தான்.

“ஒன்ஸ் மோர் சாங் கேக்கலாமா?” என்று யாருமறியாது கண்ணடிக்க,

“நீங்க போய் நான் சொன்னதை பாருங்க” என்று அருகில் இருந்தவரை அனுப்பியவன் மனைவி அருகில் வந்து பொய்யான் முறைப்புடன்,

“போய் வந்தவங்களை கவனிடி” என்க,

“அவங்களை அப்புறம் கவனிச்சிக்கிறேன் இப்போ உன்னை கவனிக்கிறேன் மாமா” என்று கள்ள சிரிப்புடன் கூற,

இவன் சுற்றும் பார்த்துவிட்டு மனைவியை சிரிப்பும் முறைப்புமாக நோக்கினான்‌.

“ஆஹான் நான் எதுவும் பாக்கலை” என்று ஜெய் கூறி கொண்டே கடந்து செல்ல,

“லவ் யூ மாம்ஸ். இந்த ட்ரெஸ்ல சும்மா அள்ளுற. அப்படியே இறுக கட்டிக்கணும் போல இருக்கு” என்றவள் சடுதியில் நகர்ந்து சென்று மாமியார் அருகில் வந்தவர்களை கவனிக்க செல்ல,

இவனுக்கு தான் புன்னகையை மறைப்பது பெரும் பாடாய் போனது‌.

கூடவே விழிகளும் அவளை நோக்கியே சுழன்றது.

செம்பவள நிறத்தில் பட்டுப்புடவையும் அதற்கேற்ற அணிகலன்களும் அணிந்திருந்தவளது முகம் வழக்கத்தை விட அவ்வளவு அழகாய் இருந்தது.

அதுவும் இடை தாண்டிய கூந்தல் அவள் நடக்கும் சமயம் அங்குமிங்கும் நடனமாடி அவனது கவனத்தை ஈர்த்தது.

அவனுக்கு பிடிக்கும் என்பதற்காகவே இடைவரை கூந்தலை வளரவிட்டு பராமரித்து வருகிறாள்.

மஞ்சள் கலந்த சந்தன நிறத்தில் எத்தனை முறை பார்த்தாலும் மீண்டும் பார்க்க தூண்டும் வசீகர அழகிற்கு சொந்தக்காரி.

“ப்பா…” என்ற மகனின் குரலில் மனைவியிடமிருந்து பார்வையை அகற்றி,

“என்னடா தங்கம்?” என்று வினவினான்.

அவன் பதில் அளிப்பதற்குள் தாய் பரமேஸ்வரி,

“தம்பி உன்கிட்ட வரணும்னு ரொம்ப நேரமா அடம்பிடிச்சிட்டு இருக்கான்” என்று பதில் அளித்தாள்.

“தூக்கு பா” என்று மகனும் கையை நீட்டியிருந்தான்.

மகனை கைகளில் வாரி கொண்டவன்

“சொல்லுடா தங்கம்” என்று மொழிய,

“ப்பா ஐஸ்க்ரீம்” என்க,

“நோ ஐஸ்கிரீம். டாக்டர் என்ன சொன்னாங்க. ஐஸ்கிரீம் சாப்டா பீவர் வரும்னு சொன்ன்ங்கள்ல” என்று பொறுமையாக எடுத்து கூற,

“ஒன்லி ஒன் பா. ப்ளீஸ்” என்று தாடையை பிடித்து கெஞ்ச,

மகனின் செய்கையில் புன்னகை முகிழ்ந்தது. காரணம் மனையாளும் தனக்கு எதாவது வேண்டும் என்றால் இப்படித்தான் தாடையை பிடித்து கொஞ்சுவாள். அதனை பார்த்து தான் மகன் செய்கிறான் என்று எண்ணியவன் மறுக்க இயலாமல்,

“ஒன்னே ஒன்னு தான். அதுக்கு மேல கேட்க கூடாது” என்று கண்டிப்புடன் கூற,

“ஹ்ம்ம்…” என்று தலையை நான்கு பக்கமும் உருட்டினான்.

அவன் கேட்டதை வாங்கி கொடுக்க உணவு உண்ணும் இடம் சென்றவனை மனையாள் இடையில் கையூன்றி முறைக்க,

“ஒன்னே ஒன்னு தான்” என்றவன் மகனுடன் நகர,

“வீட்டுக்கு வாங்க ரெண்டு பேருக்கும் இருக்கு” என்றவள் செல்ல முறைப்புடன் அகன்றாள்.

சிவலிங்கம் பரமேஸ்வரி தம்பதியினருக்கு நான்கு பிள்ளைகள் முதலாவது ஜீவானந்தம் அடுத்து அனிதா அவளுக்கு தான் இன்றைக்கு திருமணம்.

அதற்கடுத்ததாக ஜெய் கிருஷ்ணா கல்லூரியில் படித்து கொண்டிருக்கிறான். கடைக்குட்டி ஷியாமளா இந்த வருடம் தான் கல்லூரியில் அடி எடுத்து வைத்திருக்கிறாள்.

சிவலிங்கத்தின் தங்கை திலகவதி கண்ணாயிரத்தின் மூத்த புதல்வி தான் லாவண்யா அடுத்து வினய். இறுதியாக மஹிமா.

அனிதாவிற்கும் வினய்க்கும் தான் இன்று திருமணம். பெண் கொடுத்து பெண் எடுக்கின்றனர்.

இரு குடும்பமும் சொந்த தொழில் செய்து நல்ல வசதியான பின்புலத்தை கொண்டவர்கள் தான்.

வினய் மேடையில் அமர்ந்து மந்திரங்களை கூறி கொண்டிருக்க அவன் எதிர்ப்பார்த்து காத்திருந்த நேரமும் வந்தது‌.

“பொண்ணை அழைச்சிட்டு வாங்கோ” என்று புரோகிதர் கூற,

லாவண்யாவும் சியாமளாவும் சென்று அழைத்து வந்தனர்.

வேலைகளை கவனித்து கொண்டிருந்த ஜீவாவின் விழிகள் தங்கையின் மீது பாசத்துடன் படிந்து மீண்டது.

லாவண்யா எல்லோரிடமும் மாங்கல்யத்தை ஆசிர்வாதம் வாங்கி வர புரோகிதர் மாங்கல்யம் தந்துனானே என்று மந்திரத்தை கூறி வினயின் கையில் கொடுத்தார்.

வினய் தங்கள் இருவரது வாழ்வும் சிறப்பாக அமைய வேண்டும் என்று மனதிற்குள் வேண்டி அனிதாவின் கழுத்தில் மங்களநாண் பூட்டி தன்னில் சரிபாதியாக ஏற்று கொண்டான்.

பார்த்திருந்த அனைவரது மனமும் நிறைந்து போனது.

அடுத்தடுத்த சடங்குகள் சிறப்பாக இளையவர்களின் கேலியுடன் துவங்கியது.

பெரியவர்கள் எல்லோரையும் உணவருந்த அழைத்து சென்று கொண்டிருக்க,

ஜீவாவும் பந்தியை கவனிக்கும் வேலையில் இருந்தான்.

லாவண்யா இப்போதும் ஓரிருவர் வந்து கொண்டிருக்க அவர்களை வரவேற்று உபசரித்தபடி இருந்தாள்.

“ம்மா இந்த ட்ரெஸ் எனக்கு எப்படி இருக்கு?” என்ற மகளது குரலில் சேலையை மடிப்பை சரி செய்து நிமிர்ந்தவள்,

“என் தங்கத்துக்கு எது போட்டாலும் அழகா தான் இருக்கும்” என்று மகளது கன்னத்தை வருடினாள்.

“யூ லுக் ஸோ ப்ரிட்டி இன் திஸ் சாரி மா” என்று கன்னக்குழியுடன் சிரிக்கும் மகளை கண்டு தானும் புன்னகையை உதிர்த்தவள்,

“போலாமா ஜீவி” என்று வினவ,

“யெஸ்மா நான் ரெடி” என்று தன்னுடைய குட்டி கைப்பையை எடுத்து கொண்டாள்.

“நீ வெளிய இரு நான் கிச்சனை செக் பண்ணிட்டு லைட் ஆஃப் பண்ணிட்டு வர்றேன்” என்க,

“ஓகேம்மா” என்ற ஜீவிதா வாசலை நோக்கி சென்றாள்.

சமையலறையை ஒரு முறை கண்களால் அளந்தவள் மின்விசிறி விளக்கு என அனைத்தையும் அணைத்தவள் வெளியே வந்து கதவை பூட்ட,

சரியா அதே நேரம் அலுவலகம் செல்ல வந்த சௌமியா,

“என்னடி இப்போதான் கிளம்புறியா?” என்று வினவிட,

“கொஞ்சம் லேட் ஆகிடுச்சு” என்றபடி கதவை பூட்டினாள்.

“கொஞ்சம் இல்லை ரொம்ப லேட் இந்நேரம் கல்யாணம் முடிஞ்சு இருக்கும்” என்க,

“ஆமா. போய் கிஃப்ட் கொடுத்துட்டு வந்திடணும்”

“இதுக்கு எங்க கூடவே வந்து இருக்கலாம் நீ” என்று அங்கலாய்த்தாள்.

“நானும் அதான் நெனைச்சேன். அவங்க கம்பெல் பண்ணி கூப்பிடும் போது மறுக்க முடியலை” என்றவள் விளக்க,

“சரி சரி லேட் ஆகுது பாரு கிளம்பு. அப்புறம் பேசலாம்” என்று சௌமியா முடித்திட,

“ஹ்ம்ம்” என்று தலையசைத்தவள் கீழிறங்கி சென்றாள்.

அவள் ஜானவி ஒன்பது வயது ஜீவிதாவின் தாய். முப்பது வயதை நொருங்கி கொண்டு இருப்பவள்.

பால் வெள்ளை என்பார்களே அந்த நிறத்தில் பளிச்சென்று இருப்பாள். சுருள் சுருளான கேசம் இடையை தொட்டிருந்தது.

பச்சை நிறத்தில் பூக்கலிட்ட காட்டன் சேலை அவளது நிறத்திற்கு அழகாய் பொருந்தி இருந்தது. காதில் சிறிய ஜிமிக்கி கழுத்தில் ஒரு மெல்லிய சங்கிலி ஒரு கையில் கைக்கடிகாரம் மற்றொன்றில் வளையல்.

அவளருகே நடந்து சென்ற ஜீவிதா ஜானவியின் நகல்.‌ அப்படியே தாயை நடை உடை பாவனை உருவம் என அனைத்திலும் ஜானகியை பிரதிபலித்தாள்‌.

கீழிறங்கி வந்தவள் தனது வெஸ்பாவில் திருமண மணடபத்தை நோக்கி பயணமானாள்.

இருபது நிமிடத்தில் இருவரும் மண்டபத்தை அடைந்தனர்.

ஊரிலே மிகவும் பிரபலமான வளமையானவர்கள் மட்டுமே கொண்டாட கூடிய மண்டபம் அது. எங்கிலும் லிங்கம் குரூப் ஆஃப் கம்பெனியின் செழுமை தெரிந்தது.

வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்க,

“வாவ் இந்த ப்ளேஸ் சூப்பரா இருக்கு மா” என்று விழிகளை பெரிதாய் விரித்தாள் ஜீவிதா.

“கல்யாணம் இப்படி தான் நடக்கும் டா செல்லம்” என்றவள் ஒரு கையில் பரிசை எடுத்து கொண்டு மறுகையில் ஜீவியை பிடித்தாள்‌.

“உங்களுக்கும் அப்பாவுக்கும் இப்படி தான் மேரேஜ் நடந்ததா மா?” என்று மகளது கேள்வியில் அவளது நடை சடுதியில் தடைபெற்றது.

திரும்பி ஜீவியை பார்த்தாள். அந்த பார்வையில் என்ன கண்டாளே ஜீவிதா,

“ஓகே ஓகே இனி கேக்கலை” என்று முடித்துவிட,

வர வர மகளுக்கு தன்னிடத்தில் புரிதல் அதிகமாகிவிட்டது என்று தோன்றினாலும் வயதிற்கு மீறிய முதிர்ச்சி வருத்தம் கொள்ள செய்தது‌.

இவளது வயதில் தான் எந்த கவலையும் இன்றி எவ்வளவு மகிழ்ச்சியாக சுற்றி திரிந்தோம் என்று எண்ணம் பிறக்க மகளது உயரத்திற்கு குனிந்தவள்,

“நீ வளர்ந்த பின்னாடி கண்டிப்பா நான் உனக்கு அப்பாவ பத்தி சொல்றேன்” என்று கூற,

“நான் ஆல்ரெடி உன் ஷோல்டர் அளவு வளர்ந்திட்டேனே மா” என்று கண்சிமிட்டியவள்,

“ஓகே டன் உள்ளே போகலாம்” என்றாள்.

பதிலுக்கு ஒரு புன்னகையை கொடுத்தவள் மகளது கையை பிடித்து கொண்டு உள்ளே வர

அனிதா வெட்ஸ் வினய் என்று பெரிய எழுத்துக்களில் பொறிக்கப்பட்ட பதாகை அவர்களை வரேவேற்றது.

நேரமாகி இருந்ததால் ஒரு சிலர் வெளியேறி கொண்டு இருந்தனர்.

வந்தவர்களை வழியனுப்பி கொண்டு இருந்த லாவண்யா ஜானவியை கண்டுவிட்டு,

“ஜானவி வாங்க வாங்க” என்று புன்னகையுடன் வரவேற்றவள்,

“இது தான் வர்ற நேரமா? கல்யாணமே முடிஞ்சது” என்று பொய்யாக முறைக்க,

தாய் பதில் மொழியும் முன் முந்தி கொண்ட ஜீவிதா,

“ஆன்ட்டி அம்மா சீக்கிரம் கிளம்பிட்டாங்க‌. நான் தான் லேட் பண்ணிட்டேன்” என்றிட,

“பார்றா அம்மாக்கு சப்போர்ட்ட” என்று சிரித்தாள்.

“சீக்கிரம் வர ட்ரை பண்ணோம். பட் ட்ராபிக் வேற” என்று ஜானு விளக்க,

“சரி உள்ள வாங்க” என்று தானே ஒரு இருக்கையை காண்பித்தாள்.

“நீங்க வந்தவங்களை கவனிங்க நாங்க பாத்துக்கிறோம்” என்று ஜானு கூற,

“சரி சாப்பிட்டு தான் போகணும் கண்டிப்பா” என்று கூறியவள் மற்றவர்களை கவனிக்க சென்றாள்.

தாயின் அருகே அமர்ந்திருந்த ஜீவிதா,

“அந்த அக்கா அழகா இருக்காங்க மா” என்று அனிதாவை பார்த்து கூற,

ஜானுவின் பார்வையும் அவள் மீது படிந்தது.

இயற்கையாகவே அழகாய் இருக்கும் அனிதா இன்று பட்டுடுத்தி அழகு நிலைய பெண்களின் கை வண்ணத்தில் தேவதையாக ஜொலித்தாள். அதையும் மீறி காதல் கைகூடிய நிறைவில் முகம் ஜொலித்தது.

“ஹ்ம்ம் ஆமா அழகா இருக்காங்க” என்று தானும் பொழிந்தாள்.

வந்தவர்கள் ஒவ்வொருவராக மேடையேறி வாழ்த்து கூறி இறங்கி செல்ல ஜானு தானும் பரிசை கொடுத்துவிட்டு கிளம்ப எண்ணி கொண்டு இருந்தாள்.

மேடையில் இருந்த கூட்டம் ஓரளவிற்கு குறைய,

“ஜீவி வா போய் கிஃப்ட் கொடுத்திட்டு வரலாம்” என்று மகளின் கையை பிடிக்க,

“அம்மா எனக்கு ஐஸ்கிரீம் வாங்கி தர்றீயா?” என்று பனிக்கூழ் வழங்கும் பகுதியை காண்பிக்க,

“நோ” என்று ஜானவி மறுக்க,

“பிப்டீன் டேஸ் ஆச்சு மா” என்க,

“சரி இங்க வேணாம். போகும் போது நான் உனக்கு வாங்கி தர்றேன்” என்றாள்.

“ஹ்ம்ம் சரிம்மா” என்றவளது முகம் முழுவதும் புன்னகை பூத்தது.

“வா” என்று கைப்பிடித்து மேடை ஏறியவள் மேடைக்கு செல்ல,

“வாங்க ஜானுக்கா” என்று அனிதா கூற,

“ஹாப்பி மேரிட் லைஃப் போத் ஆஃப் யூ” என்று மனம் நிறைந்து வாழ்த்தியவள் தன் கொண்டு வந்திருந்த பரிசை கொடுக்க,

“இவங்க ஜானவி நம்ம கம்பெனில தான் வொர்க் பண்றாங்க. நரேன் அண்ணாவோட சிஸ்டர்” என்று அறிமுகம் செய்தவள் பரிசை பெற்று கொண்டவள்,

“உங்களோட பாப்பாவா கா” என்று வினவிட,

“ஹ்ம்ம் ஆமா” என்று தலையசைத்தாள்.

ஜீவிதா முன் வந்து, “ஹாப்பி மேரிட் லைஃப் ஆன்ட்டி அண்ட் அங்கிள்” என்று தன் பங்கிற்கு வாழ்த்த,

“தாங்க் யூ” என்று இருவரும் புன்னகைத்தனர்.

ஜானவி தலையசைத்து நகர முற்பட,

“இருங்கக்கா போட்டோ எடுத்துட்டு போகலாம்” என்று அனிதா கூற,

“இல்லை இருக்கட்டும்” என்று நாசுக்காக மறுத்தாள்.

“அட வாங்கக்கா” என்றவள் கைப்பிடித்து தன்னருகே நிறுத்தி கொள்ள,

வேறுவழியின்றி மகளை கையில் பிடித்தபடி அவர்களுடன் புகைப்படத்திற்கு நின்றாள்.

பிறகு ஆட்கள் பரிசை கொடுக்க வரிசையில் நிற்பதை கண்டவள்,

“சரி வர்றேன்” என்று இருவரிடம் விடை பெற்று கீழே வர,

“ம்மா எனக்கு ரெட் வெல்வெட் ஐஸ்கிரீம் வாங்கி தரணும்” என்று ஜீவி மீண்டும் துவங்க,

“ஹ்ம்ம் வாங்கி தர்றேன்” என்றவள் கிளம்புவதற்காக வெளியே செல்ல,

வாசலில் வந்தவர்களை வழியனுப்ப நின்று இருந்த லாவண்யா,

“என்ன அதுக்குள்ள கிளம்பிட்டிங்க. சாப்பிட்டிங்களா இல்லையா?” என்று வினவ,

“இல்லை அது இன்னொரு பங்க்ஷனுக்கு போகணும்” என்று ஜானவி தயக்கமாய் இழுக்க,

“அதுக்கு சாப்பிடாம போவீங்களா? சாப்பிட்டு தான் போகணும்” என்று உரிமையாய் முறைக்க,

ஜானு தயக்கமாய் நோக்கினாள்.

“பத்து நிமிஷத்துல சாப்டுட்டு போக ஒன்னும் ஆகாது வாங்க” என்றவள் தானே கைப்பிடித்து அழைத்து சென்றாள்.

ஜீவியிடம், “டைனிங் ஹால்ல ஐஸ்கிரீம் இருக்கும் உனக்கு பிடிச்சதை வாங்கிக்கலாம்” என்று லாவண்யா கூற,

ஜீவி பதில் அளிக்கும் முன் ஜானு,

“இல்லை அவளுக்கு வீசிங் இருக்கு” என்று மறுத்திட,

ஜீவியும், “டாக்டர் ஐஸ்கிரீம் சாப்பிட கூடாதுனு சொல்லி இருக்காங்க ஆன்ட்டி” என்று தாயின் பேச்சை ஆதரித்தாள்.

“ஓ…” என்ற லாவண்யா,

“ஐஸ்கிரீம் மட்டுமில்ல நிறைய டெசர்ட்ஸ் சாக்லேட்ஸ் கூட இருக்கு அதெல்லாம் சாப்பிடலாம்ல” என்று கேட்க,

“ஹ்ம்ம்” என்று தலையை பலமாய் அசைத்தாள்.

உள்ளே நுழைந்ததும் மேற்பார்வை பார்த்து கொண்டிருந்த ஜீவா கண்ணில் பட லாவண்யா,

“மாமா இவங்க வந்துட்டு சாப்பிடாம போறாங்க. நீங்களே கேளுங்க” என்றுவிட,

ஜானு தான் இதை எதிர்ப்பாராது திகைத்து ஜீவாவை பார்க்க,

ஒருவரிடம் பேசி கொண்டு இருந்தவன் திரும்பி,

“சாப்பிட்டு போங்க ஜானவி” என்று அவள் முகம் பார்த்து கூற,

சடுதியில் முக பாவனையை மாற்றி,

“சரிங்க சார்” என்றவள் மகளுடன் அமர இடத்தை தேட,

“பாத்தீங்களா நான் சொன்னப்போ மறுத்தீங்க உங்க சார் சொன்னதும் உடனே சரின்னுட்டிங்க‌” என்று போலியாய் முறைக்க,

“இல்லை அது…” என்றவள் என்ன கூறுவதென்று தெரியாது தடுமாற,

அதனை உணர்ந்த லாவண்யா,

“ஜானவி ஐ ஆம் ஜஸ்ட் கிட்டிங். போய் சாப்பிடுங்க” என்று இருக்கையில் அமர வைத்துவிட்டு நகர,

இரண்டு நிமிடத்தில் இலை போடப்பட்டு உணவு பதார்த்தங்களால் நிரப்பப்பட்டது.

கிட்டத்தட்ட இருபத்தி ஐந்து உணவு வகைகள் வைக்கப்பட ஜானு சற்று திகைப்பாய் நோக்க,

“ம்மா என்னால இவ்ளோ எப்படி சாப்பிட முடியும்” என்று கேட்டுவிட்டாள்.

ஜானவிக்கும் தெரிந்தது. மகள் இதில் பாதியை கூட உண்ண மாட்டாள் உணவு வீணாகிவிடுமே என்று.

“முடிஞ்ச அளவு சாப்பிடு ஜீவி” என்க,

“பட் மா புட் வேஸ்ட் பண்றது தப்புனு நீங்க தான சொன்னீங்க” என்று மகள் கேள்வியாய் நோக்க,

மகளின் வினாவில் ஒரு கணம் தடுமாறியவள்,

“ஆமா டா. ஆனால் சில இடங்கள்ல தவிர்க்க முடியாது. என்னாலயுமே இவ்ளோ சாப்பிட முடியாது” என்று மகளிடம் கூற,

என்ன புரிந்ததோ, “சரிம்மா” என்றுவிட்டு உண்ண துவங்கினாள்.

உணவு அவ்வளவு அமிர்தமாய் இருந்தது. ஆனால் எல்லோராலும் இத்தனை பதார்த்தங்களை உண்ண இயலாது நிச்சயமாக பாதிக்கு பாதி வீணாக போகும். பதார்த்தங்களின் எண்ணிக்கையை குறைத்து இருக்கலாம் என்று எண்ணியபடி உண்ண,

“எதாவது வேணுமா ஜானவி” என்று ஜீவா வினவ,

தன் போக்கில் சிந்தனையில் இருந்தவள்,

“ஹான்” என்று ஒரு கணம் விழித்துவிட்டு பின்,

“எதுவும் வேணாம் சார்” என்றிருந்தாள்.

ஜீவிதா பாதி கூட உண்ணாமல்,

“போதும்மா எனக்கு” என்று இலையை மூடிவிட்டு எழுந்தாள்.

ஜானு, “வெயிட் பண்ணு டா நானும் வர்றேன்” என்க,

“எனக்காக எழ வேணாம் பொறுமையா சாப்பிடு. நான் ஹான்ட் வாஷ் பண்ணிட்டு அங்க வெயிட் பண்றேன்” என்க,

“ஹ்ம்ம் எங்கேயும் போய்டாத” என்று தலையசைத்தாள்.

கண் பார்வையில் மகள் இருப்பதை உறுதி செய்தவள் முடிந்தளவு உணவை உண்டு முடித்தாள்.

இதற்கு மேல் நிச்சயமாக முடியாது என்று தோன்றிவிட எழுந்து சென்றாள்.

கைகழுவி வந்து பார்க்க மகளை அந்த இடத்தில் காணவில்லை.

சடுதியில் பதற்றம் தொற்றிக் கொள்ள விழிகளை பரபரவென்று சுழற்றி மகளை தேடினாள்‌.

இரண்டு நிமிட தேடுதலுக்கு பிறகு இனிப்புகள் கொடுக்கும் இடத்தில் மகள் யாருடனோ பேசி கொண்டு இருப்பதை தூரத்தில் இருந்து கண்டவள் விறுவிறுவென நடந்து சென்றாள்.

நெருங்கியதும் தான் தெரிந்தது ஜீவாவிடம் தான் பேசி கொண்டு இருக்கிறாள் என்று.

சடுதியில் ஒரு ஆசுவாசம் பிறந்தது. என்னவோ இப்போதெல்லாம் படிக்கும் பார்க்கும் செய்திளை காணும் போது ஒரு நிமிடம் மகளை காணவில்லை எனினும் உயிர் வரை பதறுகிறது.

ஒற்றை ஆளாய் அவளை வளர்க்கிறோம் கவனமாக இருக்க வேண்டும் என்று ஜானவி எப்போதும் எச்சரிக்கையுடனே இருப்பாள்.

அருகில் சென்றதும், “ஜீவி சொல்லிட்டு வர மாட்டியா?” என்று மெல்லிய குரலில் அதட்ட,

“நான் தான் கூப்பிட்டேன் ஜானவி”என்று ஜீவா பதில் மொழிய,

அவனை மறந்து அதட்டியதை உணர்ந்தவள்,

“கூட்டத்துல காணேமேன்னு பதறிட்டேன் சார்” என்று சங்கடமாய் புன்னகைக்க,

ஜீவா புரிந்தது எனும் விதமாக தலையசைக்க,

“ம்மா இந்த குட்டி பையன் க்யூட்டா இருந்தான் மா அதான் பாக்க வந்தேன்” என்று ஜீவி கூறினாள்

ஜீவாவின் கையில் இருந்த குழந்தையை அப்போது தான் கவனித்தாள். இதற்கு முன் ஒரு சில சமயம் பார்த்து இருக்கிறாள் பேசியது இல்லை.

அப்படியே ஜீவாவை உரித்து வைத்திருந்தான். இருவரும் ஒரே போல உடையில் வேறு இருந்தனர்.

இருவரது உருவ ஒற்றுமையை கண்டு அழகாய் புன்னகை ஜனிக்க,

“உன் நேம் என்ன?” என்று வினவிட,

அவன் பதில் கூறாது தந்தையின் தோளில் முகத்தை புதைத்து கொண்டான்.

“அவன் புது ஆட்களோட அவ்வளவா பேச மாட்டான்” என்று ஜீவா கூற,

“ஆமா மா என்கிட்டயும் அவன் வரலை. அவன் நேம் அதிரன். நேம் கூட அவனை மாதிரியே க்யூட்டா இருக்குல” என்று மகள் கூற,

“ஹ்ம்ம்” என்று தலை அசைத்தவளது விழிகள் அச்சிறுவன் மீது படிந்து மீண்டது.

“ம்மா” என்று ஜீவி ஏதோ கூற துவங்க நேரமாவதை உணர்ந்த ஜானவி,

“நாங்க போய்ட்டு வர்றோம் சார்’ என்றுவிட,

“ஹ்ம்ம்” என்று தலை அசைத்தவன்,

“பாப்பாக்கு ஐஸ்கிரீம் வாங்கிட்டு போங்க” என்று கூற,

“அவளுக்கு வீசிங் இருக்கு சார்” என்று காரணத்தை கூற,

தலையசைத்து விடை கொடுத்தான்.

இவளும் மிதமான புன்னகையுடன் மகளை அழைத்து கொண்டு கிளம்பினாள்.

வாசலில் இருந்த லாவண்யா,

“சாப்டீங்களா?” என்று வினவ,

“ஹ்ம்ம் சாப்பிட்டோம்” என்று பதில் அளித்தாள்‌.

“சாப்பாடு நல்லா இருந்துச்சா ஜானவி?” என்று கேட்க,

“ரொம்ப நல்லா இருந்துச்சு” என்று கூற,

“உண்மையாவா? இல்லை நான் கேட்டேன்னு சொல்றீங்களா?” என்று கேட்க,

“நிஜமா நல்லா இருந்தது ஆன்ட்டி”என்று ஜீவி பதில் அளிக்க,

“ஓ உனக்கு பிடிச்சு இருந்ததா அப்போ நல்லா தான் இருக்கும்” என்று புன்னகைத்தவள் வழியனுப்பி வைக்க வாகன நிறுத்துமிடம் வரை வந்தாள் ஜானவி மறுத்தும் கேளாமல்.

சரியாக ஜீவாவும் மகனுடன் நெருங்கிய உறவினர் ஒருவரை வழியனுப்பி வைக்க வர,

அவனை கண்டதும் லாவண்யாவிற்கு காலையில் இருந்து வேலையின் காரணமாக தான் புகைப்படம் எடுக்காதது நினைவிற்கு வந்தது.

“மாமா” என்று கணவனை அழைத்தவள்,

“ஜானவி எங்க மூனு பேரையும் ஒரு பிக் எடுத்து தர்றீங்களா இல்லை உங்களுக்கு டைம் ஆகிடுச்சா?” என்று வினவ,

“ஹ்ம்ம் எடுத்து தர்றேன்” என்றவள் அலைபேசிக்காக கையை நீட்ட,

“உள்ள கேமரால எடுத்துக்கலாம் அவங்களை ஏ
ன் தொந்திரவு பண்ற?” என்று மனைவியை மெதுவாக அதட்டினான்.

“கேமரால எடுக்குறது எல்லாம் எப்போ நம்ம கைக்கு வரும். வாங்க ஒரு பிக் தான?” என்று கணவனது கையை பிடித்து அருகில் நின்றவள்,

“உங்களுக்கு தொந்திரவு எதுவும் இல்லையே?” என்று ஜானவியிடமும் வினவிட,

“அதெல்லாம் இல்லை” என்றவள் ஜீவாவின் அலைபேசியை கையில் வாங்கி மூவரையும் அழகாய் படம் பிடித்தாள்.

நேசம் ததும்பும் முகத்துடன் இருவரது புன்னகையும் அத்தனை அழகாய் இருக்க புகைப்படம் அம்சமாக வந்திருந்தது ஜீவா லாவண்யாவின் குடும்ப புகைப்படம்…






 
Well-known member
Messages
416
Reaction score
300
Points
63
Jeeva mela janu ku ethachum crush or ethachum feelings irundhu irukumo yen na avan normal.ah than pesunan aana janu jeeva ah va pakkum pothu first stun aagitu appuram tha n normal aana athu than
 
Top