• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

காதல் 39

Administrator
Staff member
Messages
459
Reaction score
785
Points
93
காதல் 39:

அவனுடைய அனைத்தையும் தன்னிடம் சரணடைய வைத்துவிட்டு தன்னுடைய பதிலுக்காக முகம் நோக்குபவனை‌ கண்டு ஒரு நொடி பேச்சற்று போனவளுக்கு விழிகளில் நீர் ஏகமாய் வழிந்தது.

இத்தனை நாள் இவன் எனக்கில்லை இந்த வாழ்வு எனதில்லை இது நிரந்தரமில்லை என்று எண்ணி‌ உள்ளுக்குள் நேசத்தை புதைத்து மருகி கொண்டிருந்தவளுக்கு உள்ளத்தின் உணர்வுகளை வடிக்க வார்த்தைகள் வரவில்லை.

கானல்நீராய் இருந்த நேசம் கை சேர்ந்ததை உள்ளத்தால் நம்ப இயலவில்லை.

அதுவும் தன் மீதுள்ள நேசத்தை கூட கூறும் அளவு தான் இல்லையோ என்று எண்ணி தவித்து கலங்கி நின்றவளுக்கு தன்னுடைய எண்ணம் தவறு தான் தான் யாவையும் பிழையாக எண்ணியுள்ளோம் என்று புரிந்த விநாடி உள்ளே ஒன்று நழுவி சென்றது.

அவனுடைய வாதமும் சரிதானே அவனுக்குமான மன போராட்டங்கள் இருக்கத்தானே செய்யும்.‌ வேறு ஒரு பெண்ணை விரும்புவன் மீது தனக்கு நேசம் வந்துவிட்டதே என்று தானும் நேற்று வரை மனப்போராட்டத்தில் இருந்தோம் தான…?

அப்படி இருக்கையில் ஒரு பெண் மீது விருப்பம் இருக்கும் போது மற்றொரு பெண் மீது விருப்பம் வந்துவிட்டால் ஒருவரது நிலை எவ்வாறு இருக்கும் என்பது புரிந்தது. அவனது அதீத மனப்போராட்டத்தை உள்ளம் உணர்ந்தது.

அவர் கூறியது போல தன் மீது விருப்பம் வந்துவிட்டது என்று கூறியிருந்தால் தான் நம்பி இருப்போமா…? இல்லை இவருடன் வந்து இருப்போமா…? நிச்சயமாக வாய்ப்பு இல்லை.

அவரது நியாயங்கள் சரியானது தான் என்று அவன் பேசும் போது மனது ஆராய்ந்தது. ஆனால் வர்ஷினி விடயத்தில் தன்னை நம்பாது அவன் பேசிய வார்த்தைகள் தான் உள்ளத்தை வதைத்தது.

அவர் வளர்ந்த விதம் சந்தித்த சூழ்நிலை கடந்து வந்த மனிதர்கள் என்று நிறைய அவரை இவ்வாறு மாற்றி இருக்கிறது என்று புரிந்தாலும் மனது ஏற்க மறுத்தது.

என்னவோ கோபத்தில் பேசி இருந்தாலும் இன்றுவரை இதயத்தை தைத்து கொண்டிருக்கிறது.

பேசியவர்கள் மறந்துவிட்டாலும் அதனை வாங்கியவர்கள் எளிதில் மறப்பதில்லை மறக்க முடிவதில்லை.

விழிகளில் நீர் பெருகியது. எல்லா உறவிலும் நம்பிக்கை என்பது எவ்வளவு பெரிய விடயம்.

நான் உன்னை நேசிக்கிறேன் என்பதை விட நான் உன்னை முழுமையாக நம்புகிறேன் என்ற வார்த்தைக்கு வலிமை அதிகம்.

எதோ ஒரு தவறான சூழ்நிலையில் குருவை கண்டிருந்தாலும் நிச்சயமாக தான் சந்தேகப்பட்டிருக்க மாட்டோம்.

ஆனால் அவர் தன்னை துளியும் நம்பாது பேசிவிட்டார். பேசிய வார்த்தைகள் என்றோ என்னை உயிருடன் கொன்றுவிட்டிருந்தது.

இனி ஒரு முறை இது நடக்காது என்று என்ன நிச்சயம். அப்படி ஒரு முறை நடந்துவிட்டால் தான் மொத்தமாய் உடைந்து போவோம் அதன் பின்னர் என்ன செய்தும் இந்த வாழ்க்கையில் தன்னால் இருக்க இயலாது என்று உள்ளம் மொழிய விழி நீர் மேலும் நிறைந்தது.

மனது அவனை ஏற்கவும் முடியாது மறுக்கவும் முடியாது தவித்தது. உள்ளுக்குள்ளே பெரிய போராட்டம். ஆனால் முகம் அத்தனை நிச்சலமாக இருந்தது.

இங்கு இவளது அமைதியில் குரு தான் சிறிது சிறிதாக சிதறி கொண்டிருந்தவன் நிமிடங்கள் கடந்ததும்,

"மகி ப்ளீஸ் மகி எதாவது பேசு. நான் இவ்ளோ சொல்லியும் உனக்கு என்னை புரியலையா…? என் மனசு தெரியலையா.‌..? எதாவது பதில் சொல்லுடி" என்று தவிப்புடன் மொழிய,

அவனை பதிலின்றி வெறித்தாள் மகிழினி.

அந்த பார்வை அதில் இருந்த ஏதோ ஒன்று அவனை வதைக்க,

"மகி ப்ளீஸ் நான் உன்னை ரொம்ப காயப்படுத்திட்டேன்னு புரியிது. அதை எப்படி சரி செய்யிறதுனு எனக்கு தெரியலைடி. எனக்கு தெரிஞ்சது எல்லாம் நீ இல்லாத வாழ்க்கை நரகம் அது மட்டும் தான். உனக்கு கோபம் போகலைன்னா என்னை அடிக்க கூட செஞ்சிடுடி" என்றவன் அவளது கரத்தை பிடித்து சட்டென்று தன்னை மாறி மாறி அறைந்து கொள்ள,

அதில் அதிர்ந்தவள்,

"எ… என்ன என்ன பண்றிங்க விடுங்க" என்று பதறி கையை உருவிக்கொண்டு,

"என்னை மேலும் மேலும் கஷ்டப்படுத்தாதிங்க‌ என்னால முடியல" என்று அழுகையுடன் கூறியவள் அவனை அமர்ந்தவாக்கிலே அணைத்து கொண்டாள்.

உடல் அழுகையில் குலுங்கியது. குருவிற்கும் நீர் பெருக அவளை தானும் அணைத்து கொண்டான்.

இருவருக்கும் வார்த்தைகள் வரவில்லை. உணர்வுகளின் விளிம்பில் தத்தளித்து கொண்டிருந்தனர்.

நொடிகள் கடந்தும் அமைதி அங்கே கோலோச்சியது.

சிறிது நேரத்தில் வெளியே கதவை தட்டும் ஓசையில் தான் இருவருக்கும் நினைவு வந்தது.

சட்டென்று மகிழ் அவனிடமிருந்து பிரிந்துவிட,

குரு அவள் முகத்தை ஒரு கணம் பார்த்துவிட்டு எழுந்தவன் கதவை திறக்காது,

"யாரு…?" என்று குரல் கொடுத்தான்.

"அண்ணா நான் தான்…" என்று வர்ஷினியிடமிருந்து குரல் வந்தது.

'இந்த நேரத்தில் எதற்கு வந்துள்ளாள்…?' என்று எண்ணம் வர சட்டென்று முகத்தை துடைத்தவன்,

"போய் பேஸ் வாஷ் பண்ணிட்டு வா" என்று மகியிடம் கூறிவிட்டு கதவை திறந்தவன்,

"என்ன அம்மு இந்த நேரத்தில…?" என்று வினவ,

தமையனின் முகத்தில் இருந்த மாறுதலை கண்டாலும் எதுவும் வினவாது,

"அது அண்ணா கவின் திடீர்னு தூக்கத்துல இருந்து எழுந்து உங்களை தேடி அழ ஆரம்பிச்சிட்டான். அவன் சத்தத்துல எழிலும் எழுந்துட்டான். நான் சமாளிக்க ட்ரை பண்ணேன் முடியலை…" என்று இந்த நேரத்தில் தொந்திரவு செய்கிறோமே என்று சங்கடத்துடன் பதில் அளித்தாள்.

"நீ போ நான் டூ மினிட்ஸ்ல வந்து அவங்களை தூக்கிக்கிறேன்" என்று குரு இயம்ப,

"சரிண்ணா" என்றவள்,

"சாரிண்ணா இந்த நேரத்தில டிஸ்டர்ப் பண்ணிட்டேன்" என்று கூறினாள்.

"டிஸ்டர்ப்லாம் ஒன்னுமில்லை டா. நான் இன்னும் தூங்கலை ஒர்க் தான் பாத்துட்டு இருந்தேன்" என்று அவளை அனுப்பி வைத்தவன் உள்ளே வர,

முகத்தை கழுவிவிட்டு வந்த மகிழினி,

"இந்த நேரத்தில எதுக்கு அம்மு வந்திருக்கா…?" என்று வினவினாள்.

அவளது குரலில் இருந்த பதட்டம் இவளை தான் எவ்வளவு காயப்படுத்தினாலும் எங்களுக்காக தவிப்பதை நிறுத்த மாட்டாள் என்று தோன்ற வைக்க,

"பசங்க ரெண்டு பேரும் எழுந்து அழறாங்களாம். நான் போய் தூக்கிட்டு வர்றேன்" என்று கூற,

"இருங்க நானும் வர்றேன்" என்றவள் துண்டை எடுத்து முகத்தை துடைத்தவள் அவனுடன் சென்றாள்.

அரை தூக்கத்தில் எழுந்து அமர்ந்து இருந்த கவின,

"அப்பா வந்துட்டிங்களா…" என்று தூக்கத்திலும் அவனை அணைத்து கொள்ள குருவிற்கு உள்ளம் நெகிழ்ந்தது.

"வந்துட்டேன்டா செல்லம்" என்று அவனை தூக்க,

"நான் உங்ககூடவே தூங்குறேன்" என்றவன் அவனது தோளிலே சாய்ந்தவாறு உறங்க,

"ப்பா நானும்" என்று எழிலும் உறக்கத்துடன் கை நீட்ட,

"அம்மா தூக்கிக்கிறேன்" என்று மகிழ் தூக்கி கொண்டாள்.

இருவரும் அம்முவிடம் கூறிவிட்டு அறைக்கு வந்த குரு கவினை மெத்தையில் படுக்க வைத்துவிட்டு நகர முற்பட,

"ப்பா எங்கேயும் போகாதிங்க என் பக்கத்துலயே இருங்க" என்று அவனது கையை பிடித்து கொள்ள,

குரு, "எங்கேயும் போகலைடா செல்லம். இங்க பக்கத்துல தான் இருக்கேன்" என்று மொழிய,

"இப்படிதான் வர்றேன்னு சொல்லிட்டு போனிங்க. அப்புறம் ரொம்ப நாள் வரவே இல்லை. இப்பவும் நான் தூங்குன பின்னாடி போய்ட்டிங்களோன்னு பயந்துட்டேன்" என்று கவின் மொழய சட்டென்று குருவிற்கு விழிகள் கலங்கிவிட்டது.

என்ன தவம் செய்தேன் இத்தகைய அன்பை பெற என்று உள்ளம் விம்ம சடுதியில் கவினை அணைத்து கொண்டான்.

இதனை கண்ட மகிழினிக்கும் விழிநீர் கன்னம் தாண்டிவிட்டது.

"இதோ இந்த எதிர்பார்பில்லாத அன்பு எனக்கு காலம் முழுக்க வேணும் மகி. இதுக்காக கூட நீ என்னை ஏத்துக்க மாட்டியா…?" என்றவனின் கூற்றில் இவளுக்கு உள்ளே ஒன்று நழுவி விழுந்தது.

எழில், "நானும் பயந்துட்டேன்பா. எங்களை விட்டு எங்கேயும் போய்டாதிங்க" என்று தானும் குருவை‌ அணைத்து கொள்ள,

மூவரது பிணைப்பையும் கண்ட மகிழினிக்கு தான் நெஞ்சம் உருகி நின்றது…

"ம்மா நீங்களும் வாங்க…" என்று எழில் கை நீட்ட,

பிஞ்சின் பாசத்தில் உள்ளம் நெகிழ தானும் அவர்களை அணைத்து கொண்டு குருவின் கையுடன் பிணைத்து கொண்டாள்.

இதோ இந்த தூய அன்பிற்காக எதை வேண்டுமானாலும் இழக்கலாம் என்று குருவிற்கு தோன்றியது. இத்தகைய அன்பு தனக்கு கிடைக்க காரணமாக இருந்த மகியை வாழ்க்கை முழுவதும் கொண்டாலலாம் காலடியில் சரணடைந்தது கிடக்கலாம் என்று எண்ணம் எழுந்தது.

"அப்பா இனிமேல் உங்களைவிட்டு எங்கேயும் போக மாட்டாங்க. லைஃப் லாங் உங்ககூட தான் இருப்பாங்க…" என்ற மகிழினியின் வார்த்தைகள் இருவருக்கும் பொதுவானதாக இருந்தது.

என்னவோ அந்த வார்த்தைகள் குருவினுள் சொல்ல முடியாத நிம்மதியை ஜனிக்க செய்ய இதழ்களில் கீற்றாய் மென்னகை பிறந்தது.

"ஆமா எங்கேயும் எப்பவும் உங்களைவிட்டு போக மாட்டேன்" என்று குருவும் மொழிய,

"ப்ராமிஸ்ஸா…?" என்று கவின் கையை நீட்ட,

இருவரது கையும் இணைந்து அந்த பிஞ்சின் கை மீது படிந்தது. குருவிற்கு இந்த கையை இனி இந்த ஜென்மத்தில் விட்டுவிட கூடாது என்று தோன்றியது.

அதன் பின்னர் கவின் படுக்க விழைய எழில்,

"ம்மா பசிக்கிது…" என்று வயிற்றை தடவினான்.

மகிழ்,"பசிக்கிதா…? இந்த நேரத்தில என்ன செய்யிறது பால் காய்ச்சி கொண்டு வரவா…?" என்று வினவ,

"ஹ்ம்ம்…" என்று எழில் தலையசைத்தான்.

மகிழ் எழுந்து செல்ல விழைய,

"நீ இரு நான் போய் கொண்டு வர்றேன்" என்று குரு மொழிய,

"நீ… நீங்களா என்ன செய்விங்க. நான் போறேன்" என்று பதில் அளித்தாள்.

"பால் தானே நானே எடுத்துட்டு வர்றேன் நீ இரு" என்றவன் எழுந்து செல்ல,

சமையலறையின் பக்கம் கூட எட்டி பார்த்திடாத குரு பிரசாத் என்ன செய்ய போகிறார் என்று வியப்புடன் தான் மகிழ் பார்த்திருந்தாள்.

ஐந்து நிமிடம் பத்து நிமிடம் ஆக கவின் நன்றாக உறங்கி இருந்தான்.

மகிழ், 'இவ்ளோ நேரம் ஆச்சே. ஏதும் தெரியாம நிக்கிறாரோ' என்று சிந்தித்துவிட்டு,

"இங்கேயே இருடா குட்டி அப்பா என்ன பண்றாருன்னு பாத்திட்டு வர்றேன்" என்று மகிழ் எழுந்த சமயம்,

"லேட்டாகிடுச்சோ…" என்றபடி உள்ளே நுழைந்த குருவின் ஒரு கையில் பாலும் மறுகையில் தட்டும் இருந்தது.

மகிழ் அதனை கவனித்துவிட்டு,

"இது யாருக்கு…?" என்று வினவ,

"உனக்கு தான் பிரெட் ஆம்லேட் போட்டு கொண்டு வந்திருக்கேன்" என்றவன் எழிலுக்கு பாலை புகட்ட,

"எனக்கா… எதுக்கு…?" என்று மகிழ் வினவினாள்.

"நீ கண்டிப்பா சாப்பிடாம தான் வந்திருப்பேன்னு தெரியும் அதான் ப்ரெட் ஆம்லேட் செஞ்சு எடுத்துட்டு வந்தேன். முன்ன பின்ன இருந்தா அட்ஜெஸ்ட் பண்ணிக்கோ" என்றவனுக்கு தலையசைப்பை பதிலாக கொடுத்தவள் அவன் தனக்காக செய்திருக்கிறான் என்ற உவகையிலே பிய்த்து வாயில் வைத்தாள்.

"நல்லா இருக்கா…?" என்று குரு வினவ,

"ஹ்ம்ம் நல்லா இருக்கு. உங்களுக்கு குக்கிங்கூட தெரியுமா…?" என்று மகிழ் மெதுவாய் வினவ,

"ஹ்ம்ம் யு.எஸ்ல படிக்கும் போது நான் தான் குக்கிங் எல்லாம். அப்புறம் இங்க வந்தபின்னாடி எல்லாம் டச்விட்டு போச்சு" என்று குருவும் விளக்கம் கொடுத்தான்.

வார்த்தைகளை கோர்த்து மெது மெதுவாய் அவர்களுக்கான பிணைப்பை தொடங்கி இருந்தனர்.

"நீ… நீங்க சாப்டிங்களா…?" என்று மகி வினா தொடுக்க,

"ஹ்ம்ம் சாப்பிட்டேன்" என்றவன் அவள் உண்டு முடித்ததும் தட்டை வாங்கி செல்ல,

இளையவர்கள் உறங்கிவிட்டதை உறுதி செய்தவள் எழுந்து சென்று பால்கனியில் நின்று கொண்டாள்.

இரவு நேர காற்று சிலு சிலுவென உடலை தழுவி சென்றது.

சற்று நேரத்தில் வாழ்வில் எத்தனை மாற்றங்கள். தான் வரும் போது இருந்த மனநிலை என்ன இப்போதிருக்கும் நிலை என்ன…? சூழ்நிலை சட்டென்று யாவையும் மாற்றிவிடுகிறது என்று எண்ணியவாறு இருந்தாள்

குளிருக்கு இதமாக கைகளை கட்டி கொண்டு நின்றிருந்தவளை கண்டவன் தானும் வந்து அருகில் நின்று கொண்டாள்.

அது ஒரு அழகான மௌன நேரம். இரவின் மோன நிலையை இருவரும் கலைக்க விரும்பவில்லை.

இருவரும் நெருங்கியும் நிற்கவில்லை விலகியும் நிற்கவில்லை ஆனால் சிறிதான இடைவெளி இருந்தது.

மகிழினிக்கு பேச வேண்டிய சில விடயங்கள் இருந்தது. இப்போதே பேசிவிட வேண்டும் என்று நினைத்தவள்,

"நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கணும்…?" என்று துவங்க,

"என்ன…?" என்றவனது பார்வை அவளிடத்தில்.

"எனக்கு ஐ லவ் யூன்ற வார்த்தைய விட ஐ ட்ரஸ்ட் யூன்ற வார்த்தை மேல மதிப்பு அதிகம். ஏற்கனவே நீங்க என்னை நம்பாம பேசுனதுல நான் ரொம்ப உடைஞ்சு போய்ட்டேன். இனிமேலும் எதையும் தாங்கிக்கிற சக்தி எனக்கில்லை" என்றவள் நிறுத்திவிட்டு அவனை நோக்க,

குருவும் அவள் பேசிமுடிக்கட்டும் என்று தான் பார்த்திருந்தான்.

"கோபத்துல நீங்க வார்த்தைய விட்டிங்க தான். ஆனாலும் அது என்னை ரொம்ப பாதிச்சிடுச்சு. இன்னும் நமக்குள்ள எதுவும் மாறலை. நீங்க ஹை ஸ்ட்டேட்டஸ்லயும் நான் லோ ஸ்டேட்டஸ்லயும் தான் இருக்கேன். நமக்கான வாழ்க்கை இன்னும் ரொம்ப தூரம் இருக்கு"

"குறைஞ்ச பட்சம் ஒரு இருபது வருஷம் சேர்ந்து வாழ்வோமா…? அப்படி இருக்கும் போது இப்போ இல்லை இன்னும் கொஞ்ச வருஷம் கழிச்சு ஏதோ ஒரு சுட்சுவேஷன்ல கோபத்துல நீங்க இதே மாதிரி வார்த்தைய விட்டா சத்தியமா என்னால தாங்க முடியாது. அப்புறம் நாம வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லாம போய்டும். அதுக்கு பின்னாடி என்னால இந்த வாழ்க்கையை தொடர முடியாது" என்றவளது வார்த்தையில் இருந்த வேதனை அவனை சுட்டது.

இறுதி வரிகளில் அவனது முகம் காண முடியாதவள் பட்டென்று வானத்தை வெறிப்பது போல திரும்பி கொண்டாள்.

தான் ஏற்பட்டுத்திய காயத்தின் ஆழம் அவனுக்கு அவளுடைய வார்த்தைகளிலே புரிந்தது.

தனது கரத்தை நகர்த்தி அவளது கரத்தின் மீது வைத்தவன்,

"எனக்கு உன்னோட வார்த்தைல இருக்க வலி புரியிது மகிழ். நான் உன்னை அளவுக்கதிகமா காயப்படுத்திட்டேன். என்னோட காதல் கண்டிப்பா அதை சரி செய்யும். அண்ட் ஒன் மோர் திங்க் என்னோடது எல்லாமே உன்னோடது தான். அப்போ நானும் உன்னோட உடமை தான். எந்த காலத்திலயும் என்கிட்ட இருந்து அந்த மாதிரி வார்த்தை வராது. எனக்கான எல்லாமுமா என் பக்கத்துல நீ இருக்கும் போது நான் எந்த காலத்திலயும் தவற மாட்டேன். எனக்கு என்னைவிட உன்மேல நம்பிக்கை அதிகம் நீ எப்பவும் என்னை தவறவிட மாட்ட" என்றவனது கூற்றில் மகியின் கரங்களும் அவனுடையதை பற்றி கொண்டது.

மொழிகளில்லா நேசம் அவர்களை பிணைத்து கொண்டது.

குருவின் இத்தகைய பேச்சு ஒருவித நிறைவை அளித்தது. அவன் தவறமாட்டான் என்று கூறியிருந்தால் கூட இத்தகைய உணர்வு தோன்றியிருக்குமா என்று தெரியவில்லை தான் அவனை தவறவிட மாட்டேன் என்று தன்மீது நம்பிக்கையாய் கூறியதில் உள்ளம் நெகிழ்ந்து நிறைந்து போனது.

நேரம் செல்ல செல்ல குளிர் காற்று அதிகரிக்க குரு,

"போய் படுப்போம் வா" என்றிட,

மகியும் மறுமொழியின்றி அவன் பின்னே சென்றாள்.

குழந்தைகளை நடுவில் விட்டு இருபுறமும் இருவரும் படுத்து கொள்ள இருவரது கையும் பிணைந்த நிலையில் தான் இருந்தது.

சேர வேண்டியவரிடத்தில் சேர்ந்துவிட்டதில் இருவரையும் நிம்மதியான உறக்கம் தழுவி சென்றது…

நேசத்திற்கு உரியவர்களிடம்
சேர்த்துவிட்ட நேசத்திற்கு
தான் எத்தனை உவகை…?





















 
Well-known member
Messages
854
Reaction score
626
Points
93
Superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr

Romba azhaghana ud ma
👌👌👌👌👌👌👌👌👌👌👌
 
Active member
Messages
341
Reaction score
229
Points
43
Wow super rendu perum oruthar innoruthar kita pesi oru alavuku sort out pannitaga
 
Well-known member
Messages
610
Reaction score
346
Points
63
Ahh ahh semma Ethan guru unnoda answer la mahi happy 😊😊😊😊 intha anboda santhosama iruka💕💕💕💕
 
Top