• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

காதல் 35

Administrator
Staff member
Messages
459
Reaction score
785
Points
93
காதல் 35:

திருச்சி விமான நிலையம் காலை நேர பரபரப்புடன் இயங்கியவாறு இருக்க பயணிகள் கையில் பையுடன் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தனர்.

காலை குளிருக்கு ஏதுவாக நன்றாக துப்பட்டாவை இழுத்து போர்த்திவிட்டு கையில் சிறிய பையுடன் விமான நிலைய வாசலில் இறங்கினாள் மகிழினி.

ஓட்டுநரிடம் கூறிவிட்டு தலையசைத்து வந்தவள் மெதுவாக உள்ளே நுழைந்தாள்.

அவள் செல்லவிருக்கும் விமானம் கிளம்ப இன்னும் இரண்டு மணி நேரங்கள் இருந்தது.

அமைதியாக வந்து விமான நிலைய லாஞ்சில் அமர்ந்து கொண்டாள்.

அடுத்தடுத்து செல்லவிருக்கும் விமானம் பற்றிய அறிவிப்பு வந்து கொண்டிருக்க வேடிக்கை பார்த்தபடி இருந்தவளுக்கு லேசாக பசித்தது.

எழுந்து சென்று அருகில் இருந்த தேநீர் விடுதியில் ஓரு தேநீரை வாங்கி கொண்டு அங்கு போடப்பட்டிருந்த நாற்காலியிலே அமர்ந்து கொண்டாள்.

குளிருக்கு சூடான தேநீர் இதமாக இருக்க மெது மெதுவாக பருகினாள். சிந்தை எங்கெங்கோ சென்று வந்தது.

தனியாக செல்லும் முதல் விமான பயணம். அதுவும் எல்லோரிடமும் பொய்யுரைத்துவிட்டு செல்கிறாள்.

யாருக்கும் தான் செல்லும் இடமும் நோக்கமும் தெரிய வந்துவிட கூடாது என்று மனதிற்குள் வேண்டி கொண்டாள்.

அடுத்த சிறிது நேரத்திலே மகிழினி பயணம் செய்ய போகிற விமானத்தின் வருகை அறிவிக்கப்பட தன்னுடைய உடைமைகளை எடுத்து கொண்டு செய்ய வேண்டிய சோதனைகளை முடித்துவிட்டு தன்னுடைய இருக்கையை தேடி வந்து அமர்ந்துவிட்டாள்.

சிறிது நேரத்தில் அருகில் வந்து ஒரு பெண் அமர்ந்தது தெரிந்தது திரும்பி பார்க்கவில்லை. விழிகளை மூடி கொண்டவளுக்கு இந்த மூன்று மாத வாழ்க்கை நினைவு வந்தது.

தான் மீண்டும் குருவின் வாழ்க்கைக்கு வந்த நாள் நினைவில் நழுவி சென்றது.

விழிகளில் நீருடன் ஓடி சென்ற மகி கோதையை இறுக அணைத்து கொண்டாள்.

என்ன முயன்றும் விழிகளில் நீர் பெருகியது.

"சாரி சாரி… அத்தை என்ன மன்னிச்சிடுங்க…" என்று இதழ்கள் விடாமல் உச்சரித்தது.

கோதை எந்தவித எதிர்வினையும் காண்பிக்கவில்லை.‌ எதையும் கூறவும் இல்லை.

மகிக்கு அவருடைய செயலிலே கோதையின் கோபம் புரிந்தது.

தான் செய்தது மிகப்பெரிய தவறு. தாய் இடத்தில் இருந்தவரிடம் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு சென்றது மிகப்பெரிய தவறு எத்தனை மன்னிப்பு கேட்டாலும் சரியாகாது.

நிமிர்ந்து அவர் முகம் பார்த்தவள்,

"சாரித்தை என்னை மன்னிச்சிடுங்க. ஏதோ கோபத்துல பண்ணிட்டேன். ப்ளீஸ் என்கிட்ட பேசுங்க…" என்றவள் தேம்ப துவங்க,

"அப்பா என்கிட்ட யாரையும் பேச வேண்டாம்னு சொல்லுங்கப்பா. நான் என் பேரப் பசங்ககிட்ட மட்டும் தான் பேசுவேன்" என்று முகத்தை திருப்பி கொண்டார்.

"அத்தை…" என்ற மகி யாசிப்பாய் பார்க்க,

அழுது சிவந்த அவளது முகத்தை கண்ட குரு தாளாது,

"ம்மா நான் தான் ஏற்கனவே சொன்னேன்ல…" என்று ஆரம்பிக்க,

கோதை, "டேய் நீ பேசாம இரு இது எனக்கும் அவளுக்கும் உள்ளது நாங்க பேசி தீர்த்துக்கிறோம்" என்று மகனை முறைத்தார்.

"அத்தை தப்பு என் மேல தான் நான் தான் சின்ன விஷயத்துக்கு கோபப்பட்டு கிளம்பி போய்ட்டேன்" என்று மன்னிப்பு வேண்ட,

கோதை அப்போதும் எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை.

"ம்மா தப்பு என் மேல தான் அவ எதுவும் செய்யலை. நான் தான் கோபத்தில வார்த்தையை விட்டுட்டேன். அவக்கிட்ட பேசுங்க" என்று குரு மீண்டும் மொழிய,

"டேய் இப்போதான சொன்னேன் உன்கிட்ட.‌ இப்போ மட்டும் புருஷனும் பொண்டாட்டியும் ஒருத்தரை ஒருத்தர் விட்டு கொடுக்காம பேசுங்க. இத்தனை நாள் என்ன பண்ணிங்க?" என்று வினவ, இருவரிடமும் பதில் இல்லை.

"நீங்க ரெண்டு பேரும் இஷ்டப்பட்டு தான் கல்யாணம் பண்ணிக்கிட்டிங்க?" என்றவர்,

"ஏன் மகி நான் என்னைக்காவது ஒரு ஆர்டினரி மாமியார் மாதிரி நடந்து இருக்கேனா…? உன்னை என் பொண்ணு மாதிரி தான பார்த்துக்கிட்டேன். உன்னையும் அம்முவையும் என்னைக்காவது பிரிச்சு பார்த்திருப்பேனா…?" என்று மகிழினியிடம் வினா தொடுக்க,

அவளது தலை இல்லை எனும் விதமாக அசைந்தது.

"அப்புறம் ஏன் என்கிட்ட சொல்லாம கொல்லாம வீட்டைவிட்டு போன. நாங்க வீட்ல இல்லாத நேரமா வீட்டைவிட்டு கிளம்பி போயிருக்க. இவனும் பார்த்திட்டு அமைதியா இருந்திருக்கான்"

"..."

"உங்களுக்குள்ள என்ன பிரச்சனையா இருந்தாலும் பேசி சரி பண்ணியிருக்க வேண்டியது தான. இல்லைனா பெரியவங்க நாங்க சமாதானம் செஞ்சு வைக்க மாட்டோமா…? எங்ககிட்ட சொல்லாம கிளம்பி போயிருக்கேன்னா எங்களை நீ மதிக்கலைன்னு தான அர்த்தம்" என்று கேட்க,

மகிழ் பதறி, "ஹையோ அத்தை அப்படி எப்பவுமே நான் நினைக்கலை. நான் ஏதோ கோபத்துல அப்போதைக்கு என்ன செய்றோம்னு தெரியாம கிளம்பி போய்ட்டேன்" என்று மொழிந்தாள்.

"சரி கோபத்துல போய்ட்ட அப்புறமாவது எங்ககிட்ட சொல்லி இருக்கணும் இல்லை நாங்க கால் பண்ணோமே அதையாவது அட்டெண்ட் பண்ணியிருக்கணும். மூனு மாசம் எங்க இருக்க என்ன பண்ண எதுவும் எங்களுக்கு தெரியலை. இப்போ வரை குரு வந்து கூப்பிட்ற வரை நீ இங்க வரவோ எங்களை காண்டாக்ட் பண்ணவோ ட்ரை பண்ணலை"

"..."

"இப்போ நாங்க கூப்பிடலைன்னா நீ வீட்டுக்கு வந்திருக்க மாட்ட அப்டிதான…?" என்று முறைக்க,

"இல்லை இல்லைத்தை அப்படியில்லை…" என்று மகி மறுத்தாள்.

"அப்படியில்லைன்னா வேற எப்படி?" என்று கோதை வினவ,

மகியிடம் பதில் இல்லை. தவிப்புடன் குருவை ஏறிட்டாள்.

தாயின் சொல்லுக்கு கட்டுப்பட்டு அமைதியாக இருந்தவன் மனையின் தவிப்பான பார்வையில் கரைந்து,

"ம்மா ப்ளீஸ்‌. போதும் இதுக்கு மேல இதை பேச வேண்டாம் அவ பாவம் தப்பு என் மேல தான் மா" என்று தாயிடம் மனையாளுக்காக பரிந்து பேசினான்.

மகனிடம் பதில் கூறாதவர்,

"மகி நான் உன்கிட்ட தான பேசிட்டு இருக்கேன் ஏன் நீ பதில் சொல்ல மாட்டியா? அவனை பாக்குற" என்று மருமகளை அதட்டினார்.

மகி, "அது… அத்தை ப்ளீஸ் இந்த ஒரு தடவை மன்னிச்சிடுங்க. இனி எப்பவுமே இதுமாதிரி நடக்காது" என்று கூற,

"ஓஹோ அப்போ இதுக்கு முன்னாடி இது மாதிரி நடக்க வாய்ப்பு இருக்குனு நினைச்சியா?" என்று கோதை திருப்பி வினா எழுப்ப,

மகிழ் தான் அவருடைய கேள்வியில் வாயடைத்து போனாள்.

"ம்மா…" என்று மீண்டும் குரு வர,

"நீங்க பேசாம இருங்க. நான் பேசிக்கிறேன்" என்றவள் கோதையின் கையை பிடித்து கொண்டு,

"அத்தை ப்ளீஸ் நான் செஞ்ச தப்பை எத்தனை மன்னிப்பு கேட்டும் சரி பண்ண முடியாது. நீங்க எனக்கு இன்னொரு அம்மா மாதிரி.‌ உங்ககிட்ட சொல்லாம போனது ரொம்ப பெரிய தப்பு தான். என்ன பண்ணா உங்க கோபம் போகும்னு தெரியலை. அம்மு தப்பு பண்ணா அடிச்சு திருத்துவிங்க தான அது மாதிரி என்னையும் அடிச்சுடுங்கத்தை" என்று கண்களில் நீருடன் கோதையின் கையை எடுத்து தன்னை அறைந்து கொள்ள,

"மகி என்ன பண்ற?" என்று பதறியவர் கையை உருவிக்கொண்டு மகியை அணைத்து கொண்டவர்,

"ஏன் இப்படி பண்ண. நீ பசங்க எல்லாரும் இல்லாம வீடு வீடாவே இல்லை" என்றவரது விழிகளும் நிறைந்து போனது.

"நானும் உங்களை ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணேன்த்தை" என்று தானும் அணைத்து கொண்டாள்.

மனையாளையும் தாயையும் ஒற்றுமையாய் கண்ட குருவிற்கு மனது வெகுவாய் நிறைந்து போனது.

பிறகு பிறைசூடனிடம் மன்னிப்பை வேண்டினாள்.

அதனை தொடர்ந்து நால்வரும் பயண களைப்பு தீர குளித்து முடித்து வர இரவுணவை அனைவரும் சேர்ந்து உண்டனர்.

மகி பிள்ளைகளை உறங்க வைக்க செல்ல குரு தாயின் அறைக்கு சென்றான்.

கோதை உறங்குவதற்கு தயாராகி கொண்டிருந்தவர் மகனின் வரவை உணர்ந்து நிமிர்ந்து பார்த்து,

"என்னப்பா" என்று வினவ,

அமைதியாக வந்து தாயின் அருகே அமர்ந்தவன் அவரை அணைத்து கொண்டான்.

கோதையும் ஏதும் கேட்காது மகனை அணைத்து தலை கோதினார்.

"சாரி அண்ட் தாங்க்ஸ் மா" என்று கூற,

பதில் கூறாது புன்னகைத்தவர்,

"ப்ரசாத் மகி ரொம்ப நல்ல பொண்ணுப்பா. எனக்கு தெரியும் அவ மேல எந்த தப்பும் இருக்காதுனு இருந்தாலும் நான் அவக்கிட்ட கோபமா பேசுனதுக்கு காரணம் இனி ஒரு தடவை அவ இந்த மாதிரி ஒரு முடிவு எடுக்க கூடாதுனு தான். மத்தபடி அவ மேல தப்பு இருக்காதுனு எனக்கு தெரியும். மகி மாதிரி ஒரு பொண்ணு கிடைக்கிறது அபூர்வம். அவளை நல்லா பாத்துக்கோ" என்று மொழிய,

மனைவியின் மேல் தாய்க்கு உள்ள நம்பிக்கையை கண்டு மனதிற்குள் வியந்து மகிழ்ந்தவன்,

"கண்டிப்பாம்மா" என்று தாயை அணைத்து விடுவித்தவன் மேலும் சில வார்த்தை பேசிவிட்டு அறைக்கு சென்றான்.

அங்கு இளையவர்களை உறங்க வைத்துவிட்டு மகி தானும் படுத்திருந்தாள்.

அறைக்குள் நுழைந்த கணம் குருவிற்கு யாவும் உள்ளே நிறைந்து போனது.

இத்தனை நாட்கள் இவர்கள் இல்லாது வெறுமையை பூசி இருந்த அறை இப்போது அழகால் நிறைந்து போனது.

கருமையாய் இருந்த வாழ்க்கை வர்ணமயமாகி போனது. இதோ இந்த கணம் வாழ்வு அவ்வளவு அழகாகி போனது.

மனதின் உவகையை சொல்ல வார்த்தைகள் இல்லை. இதழ்களில் ஒரு அமரிக்கையான புன்னகை வந்தமர அமைதியாக வந்து மெத்தையில் படுத்துக் கொண்டான்.

இத்தனை நாள் இவளில்லாது முள்மேடையாய் இருந்த மெத்தை இப்போது மலர் மேடையானது.

இவளருகாமையிலே நிம்மதியாய் மகிழ்ச்சியாய் வாழ்வை வாழ்ந்துவிட்டு போய்விடலாம் என்று உள்ளம் ஆனந்த கூச்சலிட்டது.

அமைதியாக திரும்பி படுக்கும் சமயம் அருகில் அசையும் அரவம் கேட்க திரும்பி பார்த்தான்.

மகிழ் எழுந்து அமர்ந்திருந்தாள். குரு எழுந்தமர்ந்து இரவு விளக்கை போட்டுவிட்டு,

"என்ன மகிழ் எதாவது வேணுமா?" என்று வினவ,

'இல்லை' எனும் விதமாக தலையசைத்தவள்,

"உங்ககிட்ட ஒன்னு சொல்லணும்" என்க,

"என்ன சொல்லணும்?" என்று அவள் முகம் பார்த்தான் குரு.

"அது… நீங்க… நான் உங்க வாழ்க்கையில இன்டர்பியர் ஆகிடுவேனோன்னு எதுவும் நினைச்சுடாதிங்க. நான் ஐ மீன் நம்ம ரிலேஷன்ஷிப் இப்பவும் அக்ரிமெண்ட் ரிலேஷன்ஷிப் தான் இது பெர்மனென்ட் இல்லைன்னு எனக்கு தெரியும். மோர் ஓவர் நான் யார் என்னோட நிலைமை என்ன தகுதி என்ன எல்லாம் எனக்கு நல்லா தெரியும். நீங்க எப்ப உங்க லைஃபை மூவ் பண்ண நினைச்சாலும் வேற மேரேஜ் பண்ண நினைச்சாலும் நான் உடனே உங்க லைஃபை விட்டு விலகி போய்டுவேன்"

"..."

"வேணும்னா அக்ரிமெண்ட் ரெடி பண்ணிடுங்க சார். சைன் பண்ணிட்றேன். நான் இதை நீங்க செஞ்ச உதவிக்கான நன்றிக்கடனா தான் செய்யிறேன். ஒருவேளை சீக்கிரமே நீங்க ஹனிகா மேமோட சமாதானம் ஆகி வீட்ல எல்லாரும் அக்செப்ட் பண்ணிக்க ரெடியா இருக்கும் போது நீங்க எனக்காக எந்த இடத்துலயும் யோசிக்க தேவையில்லை. நீங்க போன்னு ஒரு வார்த்தை சொன்னா போதும். இந்த ரிலேஷன்ஷிப்ல இருந்து நான் ரிலீவ் ஆகிடுவேன்" என்றவள் அவனது முகத்தை காண அவனிடம் பதில் இல்லை.

நிமிடங்கள் கடந்து,

"நான் இதை பத்தி எதுவுமே கேட்கலையே ஏன் இப்போ இது திடீர்னு…?" என்றவனது குரலில் அத்தனை இறுக்கம்.

"இல்லை எனக்கா சொல்லணும்னு தோணுச்சு. நீங்க உங்க லைஃப்ல மூவ் ஆன் ஆக நாங்க எந்தவிதத்துலயும் தடையா இருக்க மாட்டோம். அதான் சொன்னேன்" என்றுவிட,

தான் என்றோ கூறிய வார்த்தைகள் இன்று தன்னை தாக்குகிறது என்று எண்ணியவன் மௌனமாக தலையசைக்க இவள் படுத்துவிட்டாள்.

இங்கு குரு சற்று முன் இருந்த அத்தனை மகிழ்ச்சியையும் தொலைத்திருந்தான்.

அதுவும் அவளது ஒப்பந்தம் என்ற வார்த்தை வாழ்க்கையின் வட்டம் தன்னை சுழற்றியடிப்பதை உணர்த்தியது.

இருந்தும் மனதை தேற்றி கொண்டான். தனக்கு நேசம் பிறந்தது போல அவளுக்கும் பிறக்க வேண்டும் என்று எந்தவித அவசியமும் இல்லை. நிச்சயமாக ஒரு நாள் அவள் தன்னை புரிந்து கொள்வாள் என்று நம்பிக்கையோடு வாழ்வை நகர்த்தினான்.

அதன் பின்னர் வாழ்க்கை ஓரளவு பழையபடி அவர்களுக்கு நகர்ந்தது.

அப்போது தான் ஓரு நாள் ஏதேச்சையாக மகிக்கு ஹனிகாவின் திருமண பத்திரிக்கை கண்களில் பட்டது.

அது எப்போது குருவிற்கு வந்தது என்று தெரியவில்லை. அதனை கண்டதும் ஒரு பெரிய அதிர்ச்சி மகிழினிக்கு.

வீட்டில் பேசி சம்மதிக்க வைத்து எப்படியாவது குருவையும் ஹனிகாவையும் சேர்த்து வைக்க வேண்டும் என்று இவள் எண்ணியிருக்க இப்போது ஹனிகாவிற்கு திருமணமா?

அவளும் இவ்வளவு நாட்களாக குரு பிரசாத்தை பார்க்கிறாளே எப்போதும் போல இருந்தாலும் ஏதோ ஒரு சோகம் அவனிடம் தென்படுகிறதே…

அதன் காரணம் நேசம் கைக்கூடாததை தவிர வேறு என்ன இருக்க முடியும்.

நேசித்த வாழ்வு கைக்கூடாததன் வலி இவளுக்கு தெரியுமே…? அதுவும் தான் நேசித்த ஒருவனுக்கு அந்த வலி வர இவள் விரும்பவில்லை.

நிச்சயமாக குரு பிரசாத்திற்கு அவன் ஆசைப்பட்ட வாழ்வை அமைத்துக் கொடுத்து அவன் வாழும் மகிழ்ச்சியான வாழ்வை தான் காண வேண்டும் அதில் தான் தன்னுடைய முழு மகிழ்ச்சி இருக்கிறது என்று உள்ளம் நம்பியது.

இதோ இப்போது அதற்காக தான் குருவிடம் அகிலனை பார்க்க செல்வதாக பொய் கூறிவிட்டு ஹனிகாவை பார்ப்பதற்காக மும்பையை நோக்கி செல்கிறாள்.

பிள்ளைகளுக்கு பரிட்சை நடைபெறுவதால் தான் மட்டும் சென்று வருவதாக கூறி கிளம்பி வந்துவிட்டாள்.

சில மணி நேர பயணத்தில் விமானம் மும்பையில் தரையிறங்க சோதனைகளை முடித்துவிட்டு வெளியே வந்து வந்து நான்கு சக்கர வாகனத்தில் ஏறி தான் செல்ல வேண்டிய முகவரியை கூறி அமர்ந்தாள்.

ஏற்கனவே மகிழ் ஹனிகாவிடம் பேசி சந்திக்க சம்மதம் வாங்கி இருந்தாள். அதுவும் குருவிற்கு தெரிய வேண்டாம் என்றும் கூறி இருந்தாள்.

ஹனிகா தன்னுடைய தோழி வீட்டிற்கு வர கூறியிருக்க அவ்விடத்தை அடைந்து ஹனிகாவிற்கு அழைப்பு விடுத்தாள்.

அழைப்பை ஏற்ற ஹனிகா உள்ளே வருவதற்காக கதவை திறந்து,

"வாங்க உள்ள" என்று வரவேற்ற ஹனிகாவிற்கு மனது முழுவதும் குழப்பம் தான்.

இவள் எதற்கு தன்னை பார்க்க வந்துள்ளாள் அதுவும் குருவிற்கு தெரியாமல் என்று பலவாறான கேள்விகள் உள்ளே.

இருந்தும் எதையும் காண்பிக்காது வரவேற்றவள்,

"என்ன சாப்பிட்றிங்க டீ ஆர் காஃபி?" என்று வினவ,

"இல்லை எனக்கு எதுவும் வேண்டாம்" என்று மகிழ் மறுத்துவிட்டாள்.

பிறகு ஹனிகா, "சொல்லுங்க எதுக்காக என்னை பாக்கணும்னு சொன்னிங்க?" என்று வினா தொடுக்க

மகிழ் தன் பையில் இருந்த பத்திரிகையை எடுத்து நீட்டி,

"இது உங்க மேரேஜ் இன்விட்டேஷனா?" என்று வினா எழுப்பினாள்.

அதனை கண்ட ஹனிகா,

"ஆமா ஏன் கேக்குறிங்க?" என்று மொழிய,

"நீங்க குரு சாரை விட்டுட்டு ஏன் வேற ஒருத்தரை மேரேஜ் பண்ணிக்க போறீங்க?" என்று மகிழ் வினவ,

"வாட்…?" என்ற ஹனிகாவின் முகத்தில் அதிர்ச்சி ரேகைகள்.





 
Active member
Messages
341
Reaction score
229
Points
43
Appada nan bayandhu yae poitan iva airport la iruka vum iva vera nandri kadan kaga than vandha apadi nu sonnala athu than marupadiyum pirinchitangalo nu nalla vela iva hanuman ah va pakka than vandhu iruku ah
 
Well-known member
Messages
610
Reaction score
346
Points
63
Mahi apadilam unaya vittu pooga mataa guru honey enn epadi shock aagura
 
Top