• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

காதல் 32

Administrator
Staff member
Messages
459
Reaction score
785
Points
93
காதல் 32:

"பிரசாத் காஃபி குடிக்கிறியாப்பா…?" என்ற தாயின் குரலில் நினைவிற்கு வந்தவன்,

"இல்லை வேண்டாம்மா…" என்று பதில் மொழிய,

"சரிப்பா" என்றவர்,

"பிரசாத் எப்பதான் மகியும் பிள்ளைங்களும் வருவாங்க" என்று வினவிட,

"நெக்ஸ்ட் வீக் வந்திடுவாங்கம்மா" என்று பதில் அளித்தான்.

"சரிப்பா சீக்கிரமா வர சொல்லு. பிள்ளைங்களை பாக்காம ஒரு மாதிரி இருக்குப்பா" என்று இயம்ப,

"எனக்கும் தான் மா…" என்றவனது குரலில் என்னவோ இனம் கண்டறிய முடியாத உண்ர்வு தான் இருந்தது.

"சரிப்பா மகி கால் பண்ணா என்னை கூப்பிடு" என்று கூற,

"ஹ்ம்ம்…" என்று தலையசைத்தான் குரு பிரசாத்.

"என்னதான் ஸ்கூல்ல டூர் அழைச்சிட்டு போனாலும் ஒரு மாசமா கூட்டிட்டு போறது. இதுல சிக்னல் இல்லாத இடத்துக்கு வேற கூட்டிட்டு போயிருக்காங்க" என்று புலம்பியபடி கீழிறிங்கி சென்றவரை பார்த்தவாறு பால்கனி கம்பியில் சாய்ந்து நின்று இருந்தவனது முகத்தில் அத்தனை அழுத்தம்.

இருபது நாட்களாக மழிக்கப்படாத தாடி உறங்காது சிவந்திருந்த கண்கள் இளக்கத்தை தொலைத்து இறுகி இருந்த முகம் என்று ஆளே முற்றிலுமாக மாறி இருந்தான்.

அன்றைய தினம் மனைவி குழந்தைகள் திருமணம் என்று எண்ணம் வந்த கணம் மகியின் முகம் மனக்கண்ணில் தோன்றி மறைந்ததில் ஏகமாய் அதிர்ந்து எழுந்து அமர்ந்துவிட்டான் குரு பிரசாத்.

சட்டென ஒரு நொடி என்ன நடந்ததென்று புரியவில்லை. திருமணம் குழந்தைகள் என்று எண்ணும் போது ஹனியின் முகம் நினைவிற்கு வராது மகியின் முகம் வந்தது ஏனென்று அவனுக்கே புரியவில்லை.

மகியை பார்த்த நாள் முதல் அனைத்தும் நினைவில் வந்து போனது.

திருமணத்திற்கு கேட்ட போது முழுதாய் அதிர்ந்த நின்ற மகியின் முகம்.

முகம் முழுவதும் சிரிப்புடன் குழந்தைகளுடன் பேசுபவள் தனது தாயிடம் பாசம் காட்டுபவள் தாய் தந்தை நினைவில் வாடி அழுது சிவந்து முகமெல்லாம் வீங்கி நின்றவள்.

பிள்ளைக்கு ஒன்று எனில் துடித்து அழுகையில் கரைந்து தனது காலை கட்டி கொண்டவள் பிள்ளைக்கு நல்லபடியாக சிகிக்சை முடிந்ததும் தனது கைகளில் முகம் புதைத்து கண்ணீர் வடித்தவள்

தான் தந்தையின் நினைவில் வாடி நின்ற போது தாயாய் மடி தாங்கியவள்.

அம்முவின் மீது தவறு என்று அறிந்த பிறகும் அம்முக்காக தமையனை பழி ஏற்க கூறியவள் தவறு தன் மீது தான் என்று குரு மன்னிப்பு கேட்க சென்ற போது தன்மானத்துடன் பேசியவள்

அதே தன்மானத்துடன் தான் கொடுத்த பணத்தை மறுத்துவிட்டு அவளுக்காக வாங்கி கொடுத்த அனைத்தையும் திரும்பி கொடுத்துவிட்டு தான் கொண்டு வந்தவற்றை மட்டும் எடுத்து சென்றவள்.

இறுதியாக தான் கூறியதும் கையெழுத்திட்டு விவாகரத்தை கொடுத்துவிட்டு இன்றைய இரவே கிளம்பி சென்றவள் அனைத்து பரிமாணங்களில் அவனுக்குள் மனதிற்குள் ஓடி கொண்டு இருந்தாள்.

அழுகையுடன் சிரிப்புடன் கோபத்துடன் அவள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் மனதிற்குள் ரீங்காரமிட கரங்களால் தலையை பிடித்து கொண்டான்.

அந்த கணமும் மூடிய இமைக்குள் அவள் தான் வந்தாள். அமைதியாய் பொறுப்பான தாயாய் மருமகளாய் அந்த வீட்டினுள் அவனது அறையினுள் வலம் வந்தவள் அவனது உணர்வுகளில் கலந்து உயிரில் உறைந்து இருந்தாள்.

அவன் கண்முன்னே கருத்தை கவராது நடமாடியவள் அவனுடைய வழக்கமாயிருந்தாள். பேசினாலும் பேசவில்லை என்றாலும் அவளை உண்ர்ந்து கொண்டு தான் இருந்திருக்கிறான்.

"இன்னும் இருபது வருஷம் கூட உங்களுக்கு வொஃய்ப்பா நடிக்கிறேன். என் பையனை எனக்கு காப்பாத்தி கொடுங்க" என்று அவனது காலில் விழுந்த போது காலினை நனைத்த கண்ணீர் துளியினால் தான் ஆடிப்போனது எதனால் என்று புரிந்தது.

கவினுக்கு சிகிக்சை நல்லபடியாக முடிந்த பிறகு தனது கரத்தில் முகத்தை புதைத்தவளது கண்ணீர் கரத்தை மட்டும் அல்ல இதயத்தையும் சேர்த்து நனைத்து விட்டிருந்ததை உள்ளம் உணர்ந்தது.

இருமுறை அவளது கண்ணீர் அசைத்து பார்த்தது தன்னை மட்டுமல்ல தன்னுடைய உணர்வுகளையும் தான் மனதிற்கு தெரிந்தது.

குடும்பத்தாரின் நினைவில் மகி வாடி வருந்திய போது தான் தோள் தாங்கியதன் காரணம் உள்ளே முகிழ்ந்தது.

ஹனிகா தனது கன்னத்தில் இதழ் பதித்த போது தான் அதிர்ந்து அவளது முகம் கண்ட காரணம் இப்போது தான் புத்திக்கு உரைத்தது.

ஹனிகா மகியின் முன் அவ்வாறு நடந்து கொண்டதால் தான் தான் அதிர்ந்து நின்றோம் என்று அந்த கணம் எண்ணியிருக்க அது அப்படியல்ல. அதன் காரணம் வேறு என்று அவள் தன்னைவிட்டு விலகி சென்றுவிட்ட பிறகு தான் புரிந்தது.

அவள் இருந்த வரை அவள் தனக்கு இன்றியமையாதவள் என்று அப்போது புரியவில்லை.

அவளது இன்மை தான் அவள் மேல் தனக்கிருந்த உணர்வுகளை புரிய வைத்திருந்தது.

உடல் பொருட்கள் ஆவி என அனைத்திலும் அவள் நிறைந்துவிட்டாள்.

அவள் தன்னுடைய வழக்கமாகி போனாள் அவளின்றி ஒரு அணுவும் அசையாது என்று உள்ளம் உணர்ந்து கொண்டது.

ஹனிகாவின் கண்ணீரை காண விரும்பாத தனக்கு மகியின் கண்ணீரினால் உள்ளே ஒன்று நழுவிய உணர்வு நினைவிற்கு வந்தது.

நழுவிய ஒன்று இதயம் தான் அதுவும் அவளது காலடியில் தான் என எண்ணம் முகிழ்ந்தது.

இவளது கண்ணீர் தன்னை வருத்தியது என்றால் மகியின் கண்ணீர் தன்னை மொத்தமாக வோரோடு அசைத்து பார்த்துவிட்டது.

அதுவும் இத்தனை வருடங்களாக யாரிடமும் தனது இறுகத்தை தளர்த்தி தந்தை இறப்பின் போது இருந்த எண்ணத்தை வருத்தத்தை கூற முயலவில்லையே…? ஏன் பெற்ற தாயிடம் கூட பகிரவில்லை.

ஆனால் மகிழியிடம் அவள் கேட்டதும் இறுக அணைத்து கொண்டு அனைத்தையும் கொட்டிவிட்டானே…? அதுவும் அவளிடம் சேயாய் மாறி போயிருந்தானே…? அவளிடம் கூறிய பிறகு அவளுடைய ஆறுதலை கேட்ட பின்னர் சற்று தெளிந்து தன்னுடைய இறுக்கத்தில் இருந்து வெளிவந்திருந்தானே…?

தன்னுடைய சரி பாதியாய் எண்ணாதவளிடம் எப்படி தன்னை மறந்து மனதை திறந்து காட்டியிருக்க கூடும்.

ஏற்கனவே தன்னையறியாமல் தன் மனது அவளை வாழ்வின் சரிபாதியாய் தன்னில் சரி பாதியாய் நினைத்திருக்கிறது. தான் தான் அதனை உணராது இருந்திருக்கிறோம்.

ஆக மொத்தத்தில் அவள் மேல் தனக்கிருப்பது நேசம் என்று உள்ளம் அடித்து கூறிய நொடி குருவிற்கு இம்மையும் புரியவில்லை மறுமையும் புரியவில்லை.

மகிழ் மேல் தனக்கு வந்திருப்பது காதல் என்றால் இத்தனை நாள் ஹனியின் மேல் இருந்தது என்ன…? ஈர்ப்பா அதுவும் இருபத்தியாறு வயதில் தனக்கு அவள் மேல் ஈர்ப்பு வந்தததா…?

அதுவும் இரண்டு வருடங்களாக அந்த ஈர்ப்பு நீடித்ததா…? ஒருத்தி மேலே நேசம் கொண்டிருக்கும் போது மற்றொரு பெண்ணின் மீது எப்படி நேசம் பிறக்கும்.

அவள் என்னருகில் என் அறையில் என் வீட்டில் தினமும் நடமாடினால் தனக்கு அவளை பிடித்துவிடுமா…? தான் என்ன அத்தனை பலகீனமானவனா…?

இந்தனை வருடங்கள் யாரும் என்னை நெருங்காததால் நான் தனியாக இருந்துவிட்டு என்னை நானே மிகவும் மனோதிடம் உள்ளவன் என்று நினைத்துவிட்டேனா…? என்று சிந்தை பிறந்த கணம் தன்மீதே ஒரு வெறுப்பு தோன்ற சட்டென்று மெத்தையில் இருந்து கீழிறங்கியவன் குளியலறைக்குள் நுழைந்து விட்டான்.

குழாயை திறந்து முகத்தில் நீரை பட்டு பட்டென்று அடித்து கழுவினான்.

மனதின் வெம்மை தீரவில்லை. தன் மீது வந்த கோபமும் குறையவில்லை வெறுப்பு தீரவில்லை.

அன்றிரவு சரியாக உறங்கவில்லை. அலுவலகத்தில் ஒரு வேலையும் ஓடவில்லை.

எதையுமே செய்ய முடியவில்லை. யாவிலும் அவளது மகிழினியின் முகம் தான்.

அலுவலகத்தில் அப்படி என்றால் வீட்டு பக்கமே வர பிடிக்கவில்லை. கதவினை திறந்தால் அவளில்லாத வெறுமை அவனை கொன்று திண்றது.

அவளில்லாத குழந்தைகள் இல்லாத இருள் சூழ்ந்த வெறுமை தன்னை இழுத்து கொள்வது போல தோன்ற வீட்டிற்கு செல்வதை வெறுத்தான்.

நாட்கள் செல்லச் செல்ல தான் அவளில் எவ்வளவு தூரம் ஆழ்ந்து போயிருக்கிறோம் என்று அவனுக்கு உள்ளம் தெள்ளத் தெளிவாக படம் பிடித்து காண்பித்தது.

அவளில்லாத வாழ்க்கை இது போல தான் இனி எப்போதும் என உள்ளம் கூக்குரலிட்டது.

தாயிடம் அவர்கள் மூவரையும் பள்ளியில் இருந்து இருபது நாட்கள் சுற்றுலா அழைத்துச் சென்று இருப்பதாக பொய்யை கூறிவிட்டவனால் ஹனியிடம் பேச இயலவில்லை.

என்னவோ வேறொருத்தியை மனதில் வைத்து கொண்டு ஹனியிடம் பேசுவதில் பெரியதான குற்றவுணர்வு வாட்டியது.

இருவருக்கும் செய்யும் துரோகமாகப்பட வேலை அதிகமாக இருக்கிறது என்று கூறி ஹனியிடம பேசுவதை குறைத்து இருந்தான்.

நாட்கள் சென்றது அவனை வாட்டும் மகியின் இன்மையும் அதிகரித்தது. கோதையும் ஊரில் இருந்து வந்து பதினைந்து நாட்கள் ஆகியிருந்தது.

தாயிடம் நடந்த எதையும் கூற இயலும் என்று தோன்றவில்லை ஏற்கனவே சொன்ன பொய்யையே தொடர்ந்து வந்தான்.

யாரையும் பார்க்க பிடிக்கவில்லை பேச பிடிக்கவில்லை அப்பா என்று இளையவர்களின் குரலும் கள்ளமறியா முகமும் நினைவிற்கு வந்து வருத்தியது.

ஊண் உறக்கம் யாவையும் மறந்து சுற்றி கொண்டு இருந்தான் உடையில் நேர்த்தி இல்லை உள்ளத்தை போலே. தோற்றமே என்னவோ போல ஆகியிருந்தது.

வீட்டிற்கு வர அஞ்சி அலுவலகத்திலே சில நாள் தங்கிவிட்டான்.

கோதைக்கே அவனது தோற்றத்தை கண்டு வருத்தம் மோலோங்கி கேட்டுவிட, எதையெதையோ கூறி சமாளித்து இருந்தான்.

வர வர ஹனியும் ஏன் என்னிடம் இப்போது சரியாக பேசுவதில்லை என்று அடிக்கடி கேட்க துவங்கியிருந்தாள்.

இரவெல்லாம் விழித்து சிந்தித்தவன் ஒரு முடிவெடுத்துவிட்டான்.

தாயிடம் அலுவல் தொடர்பாக வெளியூருக்கு செல்வதாக தெரிவித்துவிட்டு மும்மைக்கு விமானம் ஏறி இருந்தான்.

செய்யப் போகும் செயலின் வீரியத்தை உள்ளம் உணர்ந்து தான் இருந்தது.

ஆனால் இதனை தவிர வேறு வழி இருப்பதாக தெரியவில்லை. என்னவோ எதையும் கூறாது அவளை ஏமாற்றி கொண்டு தானும் குற்றவுணர்வுடன் இருப்பதற்கு உண்மையை கூறி உடைத்துவிடலாம் என்று தான் செல்கிறான்.

தன்னுடைய தற்போதைய முடிவு நிலை அறிந்தால் நிச்சயமாக ஹனிகா உடைந்து போவாள் தான்‌.

ஏன் அழுவாள் சண்டையிடுவாள் என எல்லாம் தெரியும் அழுதாலும் பரவாயில்லை உண்மையை கூறிவிடலாம்.

என்னை போன்ற பலகீனமானவன் அவளுக்கு எப்போதும் வேண்டாம். ஒரு நல்ல வாழ்க்கை அமையட்டும்.

நாளை திருமணம் முடிந்த பிறகு தன்னுடைய மனம் மாறிவிட்டால் அவளுடைய வாழ்வு என்னாவது என்னை போன்ற நிலையற்ற மனநிலையில் இருப்பவன் அவளுக்கு எப்போதும் வேண்டாம்.

ஹனிகா மிகவும் நல்லவள் அவள் குணத்திற்கு ஏற்றபடி ஒரு நல்வாழ்வு அமைய வேண்டும்.
அவள் மகிழ்வாக ஒரு நிறைவான வாழ்வை வாழ வேண்டும் என்று பலவாறான எண்ணங்களுடன் பயணத்தை தொடர்ந்தான்.

ஹனியின் காதலுக்கு தான் தகுதியற்றவன் என்ற சிந்தனை மட்டும் உள்ளே வலு பெற்று இருந்தது.

சில மணி நேரப் பயணத்தில் மும்பையை அடைந்திருந்தான்.

ஹனியிடம் நேற்றே தான் வருவதை கூறியிருந்தான். இதனை அறிந்த ஹனி மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்றவள் தானே வந்து அழைத்து கொள்வதாக கூற குரு வேண்டாம் தானே வருகிறேன் என்று கூறிவிட்டான்.

ஹனிக்கு குருவை நேரில் காண்பதே மிகவும் மகிழ்ச்சியளிக்க எதையும் பெரியதாக எடுத்து கொள்ளவில்லை.

ஹனியின் தோழி திவ்யா குடும்பத்தோடு வெளியூர் சென்று இருப்பதால் தன்னுடைய வீட்டிலே சந்தித்து கொள்ளுமாறு கூறியிருந்தாள்.

ஹனியும் தானாக வீட்டில் கூறும்வரை எதுவும் தெரிய வேண்டாம் என்று எண்ணி சரியென கூறினாள்.

குரு வந்ததும் அவனிடம் பேசிவிட்டு தன்னுடைய வீட்டிலும் பேசிவிட்டு இருவரையும் சந்திக்க வைக்கலாம் என்று திட்டமிட்டிருந்தாள் ஹனிகா.

ஆனால் விதி வேறொன்றை திட்டமிட்டிருப்பதை அவள் அறியாள்.

குரு விமான நிலையத்தில் இருந்து இறங்கி ஒரு நட்சத்திர விடுதியில் குளித்து தயாராகி ஹனிகாவை காண சென்றான்.

அந்த உயர் ரக அடுக்குமாடி குடியிருப்பின் ஆறாவது தளத்தை அடைந்து அழைப்பு மணியை அழுத்திவிட்டு காத்திருந்தவனுக்கு ஒரு பெண்ணின் மனதை சுக்கு நூறாக உடைக்க போகிறோம் என்ற தோன்றி உள்ளே வதைத்தது.

காதில அலைபேசியுடன் கதவை திறந்தவள்,

"கால் யூ லேட்டர்" என்று அழைப்பை துண்டித்துவிட்டு,

"குரு…" என்று சிரிப்புடன் ஆரம்பித்தவள் அவனது தோற்றத்தில் அதிர்ந்து நின்று விட்டாள்.

அவன் உள்ளே நுழைந்ததும் கதவை பூட்டியவள்,

"என்ன என்ன ஆச்சு. ஏன் இப்படி ஆகிட்ட குரு…" என்று அதிர்வுடன் வினாவை எழுப்ப,

சலனமின்றி அவளை பார்த்தவன்,

"கொஞ்சம் ஒர்க் லோட்" என்றிட,

"என்ன வொர்க் எப்போ பார்த்தாலும் அதையே கட்டி அழறிங்க. நம்ம மேரேஜ்க்கு அப்புறம் நான் தான் உங்களுக்கு பர்ஸ்ட் அப்புறம் தான் பிஸ்னஸ் எல்லாம். பாருஙக தூங்காம கண்ணெல்லாம் ரெட்டிஷ்ஷா இருக்கு. போகாததுக்கு இந்த பியர்ட் வேற எப்பவும் நீட் அண்ட் க்ளீன் ஷேவ்ல இருக்க உங்களுக்கு இது சூட் ஆகலை" என்று பொரிந்து தள்ளியவள்,

"இருந்தாலும் இந்த அப்பியரன்ஸ் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. மிஸ் யூ லாட் குரு" என்று அவனை இறுக்கமாக அணைத்து கொண்டவள்,

"சீக்கிரமா மேரேஜ் பண்ணிக்கலாம் குரு.‌ என்னால உங்களை பிரிஞ்சு இருக்க முடியலை" என்று அவனது மார்பில் முகத்தை புதைக்க,

இங்கு குருவிற்கு உடல் இறுகியது.

மனது மீண்டும் மீண்டும் இந்த அன்பிற்கு நீ முற்றிலும் தகுதி அற்றவன் என்று கூச்சலிட்டது.

என்னென்னவோ நினைத்து வந்தவனால் எதுவும் பேச இயலவில்லை.

இந்த பெண்ணின் நேசத்தின் முன்பு பேச்சற்றவனாகி போனான்.

"ஹனி எனக்கு கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா…?" என்று வினவிட,

"ஓ சாரி எதுவுமே கொடுக்காம பேசிட்டு இருக்கேன் பாருங்க‌ உட்காருங்க நான் போய் குடிக்க எதாவது எடுத்துட்டு வர்றேன்" என்றவள் சமையலறைக்குள் செல்ல,

இங்கு குரு தான் இந்த பெண்ணிடம் எப்படி உண்மையை கூற போகிறோம் என்று நினைத்து தளர்ந்து அமர்ந்திட்டான்.

ஐந்த நிமிடத்தில் பழச்சாறுடன் வந்தவள் அவனுக்கு ஒன்றை கொடுத்துவிட்டு தானும் எடுத்து கொண்டவள் அவனருகில் அமர்ந்தாள்.

"ஜூஸ் எப்படி இருக்கு குரு…?" என்று வினவியவளுக்கு,

"ஹ்ம்ம் நல்லாயிருக்கு" என்று பதில் மொழிந்தான்.

அதனை அருந்தும் வரை அமைதியாக கழிந்திட ஹனி,

"குரு உங்க வீட்ல எப்போ நம்ம மேரஜை பத்தி பேச போறீங்க. அப்பா எனக்கு அலைன்ஸ் பாக்க ஸ்டார்ட் பண்ணிட்டாங்க. கொஞ்சம் சீக்கிரம் உங்க வீட்ல நீங்க பேசுனா நான் என் அப்பாக்கிட்ட பேசுவேன்" என்றவள் அவனது முகத்தை காண அதில் எந்தவித உணர்வும் இல்லை.

அவனது அமைதியில் அர்த்தம் கண்டவள்,

"எனக்கு புரியிது குரு. உங்களுக்கு உங்க வீட்ல இதை பத்தி பேச கஷ்டமா இருக்கும்னு ஆனால் இதை தள்ளி போட்டா நமக்கு தான் பிராப்ளம். மோர் ஓவர் எனக்கு இதுக்கு மேல உங்களை பிரிஞ்சு இருக்க முடியும்னு தோணலை. முடிஞ்ச அளவு சீக்கிரமா மேரேஜ் பண்ணிக்கலாம்" என்று அவனது தோளில் சாய்ந்து கொள்ள,

இவனுக்கு தான் ஒரு பெண்ணை ஏமாற்றி கொண்டு இருக்கிறோம் என்ற எண்ணம் நெருஞ்சி முள்ளாய் குத்தியது.

"ஆமா கேக்கணும்னு நினைச்சேன் மகிழ் எப்படி இருக்காங்க ஜாப் ப்ளேஸ் எல்லாம் செட் ஆகிடுச்சா…?" என்று வினவிட,

இவனுக்கு மேலும் உள்ளே இதயம் மெல்லிய சங்கிலியால் இறுகியது. இதற்கு மேலும் இவளை ஏமாற்ற கூடாது என்று நினைத்தவன்,

"நாம பிரிஞ்சிடலாம் ஹனிகா"என்று மொழிய,

அவனது வார்த்தையில், "என்ன…" என்று முழுதாய் அதிர்ந்து விழுக்கென்று நிமிர்ந்து பார்த்தாள் ஹனிகா…













 
Top