• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

காதல் 26

Administrator
Staff member
Messages
459
Reaction score
785
Points
93
காதல் 26:

"ம்மா ஐஸ்கிரீம் வேணும்…" என்ற கவினின் குரலில் கணினியில் இருந்து பார்வையை விலக்கியவள்,

"நைட் டைம்ல ஐஸ் வேணாம். அம்மா காலையில தர்றேன்" என்று கூற,

"ம்ஹூம் எனக்கு இப்போவே வேணும்" என்று உதடு பிதுக்கினான் கவின்.

"ப்ச் சொல்றது கேட்க மாட்டியா எழில்‌. போ போய் படு" என்று அதட்டினாள் மகிழ்.

'உடம்பு சரியில்லைன்னு கேட்குற எல்லாத்தையும் செய்யுறதால ஓவரா அடம்பிடிக்கிறான்' என்று மனதிற்குள் நினைத்தவள் கவின் இன்னும் நகராததை கண்டு,

"ஒரு டைம் சொன்னா உனக்கு புரியாதா…? போய் படு" என்று மீண்டும் அதட்ட,

"ப்பா அம்மா ஐஸ் தர மாட்றா…" என்று பால்கனியில் நின்று அலைபேசியில் பேசி கொண்டிருந்த குருவிடம் போய் நின்றான்.

குரு, "வில் யூ கால் லேட்டர்" என்று அழைப்பை துண்டித்தவன்,

"என்ன வேணும் கவின் செல்லத்துக்கு" என்று இளையவனை கைகளில் வாரி கொண்டான்.

"கவினுக்கு ஐஸ் வேணும்" என்று இளையவன் மொழிய,

"ஓ… ஐஸ்கிரீம் வேணுமா…? என்ன ப்ளேவர் வேணும்?" என்று வினவ,

மகிழ் நிமிர்ந்து அவனை கண்டாள். தான் வேண்டாம் என்ற பின்பும் இவன் தருகிறேன் என்கிறானே…? என்ற பாவனை அவளது முகத்தில்.

அந்த நொடி குருவும் அவளை நோக்கினான்.

"ஐஸ் சாப்பிட்டு ஹாட் வாட்டர் குடிச்சா சரியாகிடும்" என்றிட்டவன் இளையவனிடம் திரும்ப,

"எனக்கு சாக்லேட் ப்ளேவர்" என்று எழில் மொழிய,

"ப்பா எனக்கு ஸ்ட்ராபெரி" என்று இங்கிருந்து தந்தையிடம் ஓடினான் எழில்.

"உனக்கு ஸ்ட்ராபெரியா…? சரி வாங்க நாம ஐஸ்க்ரீம் பார்லர் போகலாம்" என்றிட,

"ஐ…" என்று இருவரும் மகிழ்ச்சியில் குதித்தனர்.

எழில், "ப்பா அம்மாக்கு…?" என்று வினவ,

ஒரு விநாடி அவள் மீது பார்வை பதித்தவன்,

"போய் கேளு உங்கம்மாவும் வர்றாளான்னு?" என்று மொழிந்தான்.

இருவரும் ஓடி சென்று ஒரு சேர,

"ம்மா நாங்க ஐஸ் சாப்பிட பார்லர் போறோம். உனக்கும் வேணுமா…?" என்று வினவிட,

"இல்லை எனக்கு வேணாம். ரெண்டு பேரும் நிறைய சாப்பிட கூடாது. ஒன்னு தான் சாப்பிடணும்." என்று கண்டிப்புடன் இயம்ப,

"சரிம்மா…" என்று இழுத்து தலையசைத்தவர்கள் சிட்டாக பறந்துவிட்டனர்.

குருவும் இளைவர்களுடன் மகிழுந்தின் சாவியை எடுத்து கொண்டு வெளியே சென்றான்.

தன்னை கடந்து செல்லும் அவனரவம் உணர்ந்தாலும் தலையை நிமிர்த்தி பார்க்கவில்லை மகிழ்.

அவர்கள் வெளியேறியதும் பால்கனியை ஒரு முறை வெறித்தவள் எழுந்து சென்று குளிர்சாதன பெட்டியில் இருந்து நீரை எடுத்து மடமடவென அருந்தினாள்.

பின்னர் மீண்டும் வந்து மடிக்கணினியை எடுத்து கொண்டு அமர்ந்துவிட்டாள்.

விழிகள் திரையில் இருந்தாலும் மனது இளையவர்களிடம் தான் இருந்தது. அதிகமாக பனிக்கூழை சாப்பிட்டால் சளி பிடித்து கொள்ளுமே என்ற எண்ணம் தான்.

மற்றபடி குருவை பற்றி கிஞ்சித்தும் அவள் எண்ணவில்லை. அன்று குருவிடம் பேசிவிட்டு படுத்தவள் அப்படியே உள்ளுக்குள் இறுகி போனாள்.

இந்த ஐந்தாண்டு கால வாழ்க்கை கற்று கொடுத்திராத ஒன்றை ஒற்றை நாளில் குரு கற்பித்துவிட்டானே பிறகு எப்படி மாறாது இருப்பாள்.

குருவும் அந்த சம்பவத்திற்கு பிறகு நடந்த நிகழ்வை பற்றி பேசவில்லை. என்னவோ ஒரு முறை மன்னிப்பு கேட்க வந்து அவள் பேசிய பேச்சுக்களில் இவனுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது.

அதனால் இதற்கு மேலும் தான் இறங்கி வந்து பேச முடியாது என்று நினைத்து விட்டுவிட்டான். பின்னர் மகிழ் கூறியது போல குருவிற்கு இருந்த ஆயிரம் வேலைகளில் அதனை மறந்தும் இருந்தான்.

ஆனால் ஒன்று மகிழ் மற்றும் அகிலன் மீது இருந்த எண்ணம் பல மடங்கு உயர்ந்திருந்தது. பணத்தையும் தாண்டி குணத்திற்கும் மதிப்பளிக்கலாம் என்று அவனுக்கு புரிந்திருந்தது.

காயப்படுத்தியவன் மறந்து கடந்திருக்கலாம். ஆனால் காயப்பட்டவளால் அதனை எளிதில் கடக்க இயலவில்லை.

ஏற்கனவே பெற்றோரை இழந்து தனக்கிருந்த பொறுப்புகளின் காரணமாக அமைதியாக இருந்தவள் கொண்டவன் கொடுத்த காயங்களால் இன்னும் அமைதியாகி உள்ளுக்குள் இறுகி போனாள்.

கோதை மற்றும் பிறைசூடனிடம் கூட தன்னுடைய பேச்சை குறைத்து கொண்டாள்.

தான் எப்போது இங்கிருந்து வெளியேறி செல்வோம் என்று நாட்களை எண்ண துவங்கி இருந்தாள். எண்ண வைத்திருந்தான் குரு பிரசாத்.

அவன் அத்தனை பேச்சுக்களை பேசிய பிறகு அந்நியர்களுக்கு மத்தியில் இருப்பது போல ஒரு சிந்தை நாளுக்கு நாள் வலுத்தது.

என்னவோ உணவு கூட தொண்டையை விட்டு இறங்க மறுத்தது.

அடிக்கடி மனதில் அவன் கூறிய வார்த்தைகள் முள்ளாக தைத்தது. அவசியமின்றி தன்னால் எந்த செலவும் வர கூடாது என்று கவனமாக இருந்தாள்.

பிள்ளைகள் தன்னிடம் ஏதாவது கேட்டாலும் குருவினுடைய பணத்தை உபயோகிக்காது தனக்கு அவன் கொடுத்திருந்த சம்பள பணத்தில் வாங்கி கொடுத்தாள்.


சுத்தமாக விருப்பம் இல்லாத வீட்டில் இருப்பது வெகு கொடுமையாக தான் இருந்தது.

இருந்தும் பட்ட நன்றி கடனுக்காக அங்கிருந்தாள். அவன் கொடுத்த காயங்களை போல அவன் செய்த உதவிகளும் அளப்பரியது.

அதுவும் தனது வாழ்விற்கு ஆதரமாக இருந்த கவினை நல்லபடியாக காப்பாற்றி கொடுத்திருக்கிறான்.

அதற்கு பதிலாக வாழ்நாள் முழுவதும் கூட மனைவியாக நடிக்கலாம் கண்டிப்பாக தவறில்லை. ஏன் தானோ இதனை அவனிடம் கூறியிருக்கிறோமே…?

ஒருவேளை அவன் தன்னை வாழ்நாள் முழுவதும் நடிக்க கேட்டாலும் தன்னால் மறுக்க இயலாது. மறுக்க கூடிய நிலையில் தான் இல்லை.

ஆனால் அதற்கு வாய்ப்பு எந்த காலத்திலும் இல்லை. அவரது வாழ்வில் இன்னொரு பெண் அங்கமாக இருப்பதில் இதற்கான சாத்தியக்கூறு ஒரு சதவீதம் கூட இல்லை.

முன்பு கசந்த உண்மையாக இருந்த ஒன்று இப்போது சற்று நிம்மதி அளிக்கக்கூடியதாக இருந்தது.

மனதிற்குள் அவன் பேசிய வார்த்தைகள் காயத்தை ஏற்படுத்தி இருந்தாலும் இப்போது வரை மனதில் அவன் நன்றாக குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக ஹனிகாவுடன் மனம் நிறைந்து வாழ வேண்டும் என்று தான் எண்ணியது.


இந்த கணம் வரை வாழ்வில் தனக்கு மிக மிக பெரிய உதவிகளை செய்தவனை மனது கடவுளாக தான் எண்ணியது.

"மகிழ் வேலையா இருக்கியாம்மா?" என்ற கோதையின் குரல் எண்ணங்களில் உழன்றபடி இருந்தவளை கலைத்தது.

சுயம் அடைந்தவள்,

"இல்லை இல்லைத்தை வாங்க" என்று மடிக்கணினியை எடுத்து ஓரமாக வைத்துவிட்டு எழ முயற்சிக்க,

"அட உட்காரும்மா. எதுக்கு எழற?" என்றபடி அவளருகில் அமர்ந்தார்.

"சொல்லுங்கத்தை எதாவது வேணுமா…? எதுக்கு முட்டி வலியோட மேல ஏறி வந்திங்க?" என்ற கேட்டவளது குரலில் சிறிதான ஒட்டுதல் தன்மை கூட இல்லை.

இங்கிருக்கும் வரை இவர்களிடம் நன்முறையில் நடக்க வேண்டும் என்று நினைத்து முயன்று தன்னை இயல்பாக காண்பித்து கொண்டாள்‌‌. ஆனால் என்ன முயன்றும் அந்த பழைய பாவனைகள் வரவில்லை.

"எதுவுமே வேண்டாம்மா. நீ தான் சாப்பாடு மாத்திரை எல்லாம் நேரத்துக்கு கொடுத்திட்றியே…" என்றவரது குரலில் இருந்த மாறுபாட்டை அப்போது தான் கவனித்தாள் மகிழ்.

அந்த மாறுபாட்டிலே கூற வந்த விடயம் பெரிது போல என்று தான் எண்ணம் வந்தது.

"ஏன்மா நீயும் அவங்க கூட போக வேண்டியது தானே…?" என்று வினவ,

"இல்லைத்தை எனக்கு கொஞ்சம் வேலை இருந்தது. அதான்" என்று இழுக்க,

"சரிதான். அவன் தான் வேலை வேலைன்னு ஓடுறான்னா நீயும் அப்படிதான் இருக்க. வேலை ஆயிரம் இருக்கும் அதுக்காக எந்த நேரமும் லாப்டாப் முன்னாடியே உட்கார்ந்து இருக்க முடியுமா…?"என்க,

இவளுக்கு ஒருவேளை மீண்டும் குழந்தையை பற்றி பேச வந்திருப்பாரோ என்று தான் தோன்றியது..

அதில் உள்ளுக்குள் ஒன்று மெலிதாய் இறுகி போக அமைதியாக அவரை நோக்கினாள்.

"உன்கிட்ட ஒரு விஷயம் பேசணும்னு தான் மா வந்தேன்" என்றவர் பிறகு நொடிகள் கடந்ததும்,

"நாளைக்கு அவரோட நினைவுநாள்" என்றவரது குரலில் லேசாக கரகரப்பு.

சடுதியில் வேறு விடயம் என்று அறிந்தவளுக்கு கோதையின் உணர்வுகள் புரிய,

கோதையின் கையை ஆதரவாக பிடித்து கொண்டாள்.

"நாளைக்கு எப்போதும் போல படையல் வச்சு சாமி கும்பிடுவோம்" என்றவருக்கு,

"என்ன டைம்க்கு கும்பிடணும்னு சொல்லுங்கத்தை. நானும் சீக்கிரமா எழுந்து உங்களுக்கு ஹெல்ப் பண்ண வர்றேன்" என்றாள் இழப்பின் வீரியம் அறிந்தவள்.

"அதெல்லாம் நான் நானே பாத்துப்பேன்மா. எனக்கு குருவை நினைச்சு தான் கவலை. எதையுமே வெளியே சொல்ல மாட்டான்.‌ நாளைக்கு ஒரு நாள் மட்டும் எங்கேயும் வெளியே போகாம ரூம்க்குள்ளயே அடைஞ்சு கிடப்பான். யாருக்கிட்டயும் பேச மாட்டான். சாப்பிட வர மாட்டான். அவன் மறுபடியும் நார்மலாக கொஞ்ச நாள் ஆகும். அவன் வெளிநாட்டுல போய் படிச்சாலும் அவங்க அப்பாவோட ரொம்ப நெருக்கம்"

"..."

"என்கிட்ட கூட சொல்லாம ரெண்டு பேருக்கும் நிறைய ரகசியம் இருக்கும். அவர் இருக்கும் போது குரு இப்படி அமைதியா எப்பவுமே இருக்க மாட்டான். நல்ல கலகலன்னு இருந்தவன் தான் திடீர்னு வந்த அவரோட இழப்புல தான் அவன் இறுகி போய்ட்டான். பிஸ்னெஸ் பிஸ்னெஸ்னு ஓடுனவன் ரொம்ப அமைதியாகிட்டான். என்கிட்ட கூட ஒரு லிமிட்டோட தான் பேசுவான். ஆனால் அவனுக்கு உன்னை பிடிச்சிருந்தது எனக்கு ஆச்சரியம் தான். இத்தனை நாள் எப்படியோ. ஆனால் இப்போ நீ வந்துட்ட நீ தான் அவனை நாளைக்கு பாத்துக்கணும்" என்று அவளது கையை இறுக பிடிக்க,

"கண்டிப்பாத்தை. இதை நீங்க என்கிட்ட சொல்லணுமா…? நாளைக்கு அவர் சாப்பிடுவாரு. நான் பாத்துக்கிறேன் இதை நீங்க இவ்ளோ தூரம் சொல்லணும்னு அவசியமே இல்லை" என்று மொழிந்தாள் மகிழ்‌.

"எங்களையே இவ்ளோ நல்லா பாத்துக்குற நீ. அவனை எப்படி பாத்துப்பேன்னு தெரியும் இருந்தாலும் அவன் எல்லா வருஷம் போலவும் இந்த முறையும் தனியா மனசுக்குள்ள புழுங்குறதை நான் பாக்க விரும்பலை" என்ற கோதைக்கு மகிழால் என்ன பதில் கூறுவதென்று தெரியவில்லை.

அமைதியாக தலையசைத்தாள். மேலும் சிறிது நேரம் தன் கணவனை பற்றியும் மகனை பற்றியும் நிறைய பேசியவர் நேரம் சென்று தான் அறையில் இருந்து வெளியேறினார்.

கோதை சென்ற சிறிது நேரத்தில குரு இளையவர்களுடன் உள்ளே நுழைந்தான்.

கவின் உறங்கியிருக்க அவனை தோளில் சுமந்து கொண்டு எழிலை கை பிடித்து அழைத்து வந்தான்.‌ எழிலும் பாதி தூக்கத்தில் தான் நடந்து வந்தான்.

வந்ததும் மெத்தையை சரி செய்து இளையவர்களை சரியாக படுக்க வைத்து போர்வையை போர்த்திவிட மகிழின் பார்வை குரு வந்ததில் இருந்து அவன் மீது தான்.

இளையவர்களை படுக்க வைத்துவிட்டு நிமிர்ந்தவன் திடீரென அவள் புறம் பார்வையை திருப்ப அதனை உணர்ந்தவள் நொடி நேரத்தில் பார்வையை மடிக்கணினிக்கு மாற்றி இருந்தாள்.

மனதிற்குள் குரு பிரசாத் மிகவும் சாதாரணமாக இருப்பது போல தான் மகிழுக்கு தோன்றியது.

ஆனால் குரு பிரசாத் வெகு அழுத்தகாரன் யாரிடமும் அத்தனை எளிதில் தன்னை வெளிப்படுத்திவிட மாட்டான் என்று மகிழுக்கு தெரியவில்லை.

இத்தனை நாட்களில் அவன் தெரியவிடவும் இல்லை. அவளுக்கான எல்லைகளை அவளும் அறிந்து இருந்ததால் அவனிடம் நெருங்க முயற்சிக்கவில்லை.

ஆனால் இப்போது அவனுக்கு உதவ வேண்டும் ஆறுதல் கூற வேண்டும் என்று சிந்தை பிறந்தது.

காரணம் அவன் மீது வைத்த நேசமில்லை. தன்னை போல அவனும் இழப்பினால் பாதிக்கப்பட்டவன்‌ அதுவும் தான் குடும்பத்தினர் நினைவு நாளில் உடைந்து நின்ற போது கைகளை ஆதரவாக கொடுத்தவன் என்பதால் தான்.

அவனும் உறங்க செல்வதை கண்டவள் தானும் கணினியை அணைத்து வைத்துவிட்டு வந்து அமைதியாக படுத்துவிட்டாள்.


உறக்கத்தில் இருந்த மகிழுக்கு புரண்டு படுத்ததில் தூக்கம் கலைந்துவிட இமைகளை பிரித்து பார்க்க தொண்டை தாகத்தில் வறண்டு இருந்தது.

அருகில் இருந்த தண்ணீர் ஜக்கை எடுக்க அது தீர்ந்து போயிருந்தது.

சரி கீழே போய் தண்ணீர் எடுத்து வருவோம் என்று எழுந்து அமர்ந்தவள் அப்போது தான்
குருவின் இடத்தில் அவனை காணவில்லை என்பதை கவனித்தாள்.

சட்டென்று விழிகளை நேரத்தை பார்க்க அது ஒன்று என காண்பித்தது.

இந்த நேரத்தில எங்க சென்றிருப்பார் என்று சிந்தனையுடன் எழுந்து விழிகளால் அறையை துழாவினாள்.

எங்கும் அவனை காணவில்லை. கழிப்பறையை காண அதுவும் சாற்றியிருந்தது.

எழுந்து மெதுவாக கதவை சாற்றிவிட்டு கீழே இறங்கி வந்தாள்.‌ கூடமும் வெறுமையாக தான் இருந்தது.

அத்தனை அறைகளும் கதவு சாற்றியிருக்க அவ்வளவு அமைதியாக இருந்த இருள் சற்று அச்ச மூட்டுவதாக இருந்தது.

சமையலறை சென்று விளக்கை போட்டு வறண்டு இருந்த தொண்டையை நீரால் நனைத்தவள் யோசனையுடனே விளக்கை அணைத்து விட்டு படியேற போனாள்.

இருந்தும் அறைக்கு செல்ல மனம் வரவில்லை. இந்த நேரத்தில் எங்கு சென்றார் யாரிடம் கேட்பது போல யோசனையுடனே சில நிமிடங்கள் நின்றவள் படியேறும் கணம் கீழே அகிலன் வந்தால் எப்போதும் தங்கும் அறையின் கதவு லேசாக காற்றிற்கு திறந்தது.

இவளும் கதவு திறந்த சத்தத்தில் திரும்பி பார்க்க அந்த ஆழ்ந்த இருட்டில் ஒரு உருவம் அமர்நிருப்பது தெரிய‌ ஒரு கணம் உள்ளுக்குள் திடுக்கிட்டாள்.

இதயம் தாறுமாறாக துடிக்க துவங்க படியின் கைப்பிடியை இறுக பிடித்து கொண்டவள் விழிகளை சிமிட்டி விட்டு மீண்டும் பார்த்தாள்.

இப்போது கதவு நன்றாக திறந்திருக்க அமர்ந்திருந்த உருவம் ஓரளவு நிலவின் வெளிச்சத்தில் தெளிவாக தெரிந்தது.

விழிகளை நன்றாக சுருக்கி பார்த்ததவளுக்கு அது குரு தான் என்று புரிந்த பிறகு தான் பெரிதாய் நிம்மதி பிறந்தது.

'ஊஃப்…' என்று பெருமூச்சை வெளியிட்டவள்,

'இவர் இங்கே இந்த நேரத்தில் என்ன செய்கிறார்…?' என்று வினாவுடன் நோக்கினாள்.

'சென்று பார்ப்போமா…?' என்று எண்ணம் வர சடுதியில் அதனை அழித்தாள்.

தான் சென்று என்னவென கேட்க அவன் முகத்தில் அடித்தாற் போல எதாவது கூறிவிட்டால் என்ன செய்வது என்று சிந்தித்தவள் அந்த முடிவை கைவிட்டு படியேற துவங்கினாள்.

இறுதி படியை தாண்டும் முன் கோதை தன்னிடம் கூறியதும் தான் பதில் அளித்ததும் நினைவிற்கு வர நடை தடைப்பட்டது.

ஒருவேளை தந்தையின் நினைவில் தான் இப்படி அமர்ந்து இருக்கிறாரோ என்று தோன்ற விறுவிறுவென படியிறங்கி அறையை நோக்கி சென்றாள்.

வாசல் வரை வேகமாக சென்றுவிட்டவளுக்கு உள்ளே செல்ல தயக்கம் மேலிட்டது.

அவன் பேசிய வார்த்தைகளுக்கு முன் செய்த உதவி வந்து நிற்க மறு நினைவின்றி கதவை திறந்து உள்ளே நுழைந்தாள்.

குரு அவளுக்கு முதுகு காண்பித்து சாரளத்தை வெறித்தபடி அமர்ந்து இருந்தான்.

இவளரவத்தை அவன் உணர்ந்தது போலே தெரியவில்லை.

இவள் மெதுவாக அவனது முன்புறம் சென்று நிற்க எந்த சலனமும் இன்றி அவளை வெறித்தவனது முகம் அத்தனை இறுக்கமாக இருந்தது‌.

விழிகள் இரண்டும் ரத்த நிறத்தில் சிவந்து இருக்க இவளுக்கு அவன் தோற்றமே சற்று அச்சத்தை விளைவித்தது.

தயங்கிபடியே அவள் நிற்க இவனும் எதுவும் கேட்காது அப்படியே அமர்ந்து இருந்தான்.

இவள் தான் தயக்கத்தை உடைத்து,

"சார்…"என்று அழைத்திட,

"என்ன…?" என்று பதிலுக்கு வினவியவனது குரலில் அத்தனை இறுக்கம்.

"அது ரூம்க்கு வந்து தூங்காம இங்க இந்த நேரத்தில என்ன பண்றிங்க?" என்று திணறி வினவிட,

"தட் இஸ் நன் ஆஃப் யுவர் பிஸ்னஸ். நீ ரூம்க்கு போ" என்று குரல் அழுத்தமாக வர,

"இல்லை நீங்க தூங்க வாங்க" என்றாள் மகிழ்.

"சொன்னா புரியாதா இடியட். போ இங்க இருந்து" என்றவனது குரலில் பொறுமை கிஞ்சித்தும் இல்லை.

"இல்லை நீங்க தூங்க வாங்க" என்றவள் அவனருகே சென்று தோளை தொட,

சடுதியில் அவளை இடையோடு அணைத்து பிடித்திருந்தான் குரு பிரசாத்.

அதில் அதிர்ந்து அவனிடமிருந்து விலக போராடியவளுக்கு வெகு அருகில் அவனிடமிருந்து வந்த மதுவாடை மேலும் ஏகமாய் அதிர வைத்தது.

'என்ன குரு குடித்திருக்கிறாரா? அவருக்கு குடிப்பழக்கம் இருக்கிறதா?' என்று எண்ணியவள் அவனிடமிருந்து முழு பலத்துடன் விலக பார்க்க,

அவளை மேலும் இறுக்கி பிடித்தவனது முகம் அவளது வயிற்றில் பதிந்தது.

"வி… விடுங்க…" என்று திணறியவளுக்கு,

"மகி ப்ளீஸ்‌…" என்றவனது வார்த்தையில் மொத்தமாய் உறைந்து போக சிலையாக நின்றுவிட்டாள்.





 
Active member
Messages
341
Reaction score
229
Points
43
Meera sis marupadiyum puthu sa ethachum prachanai ah andha ponnu magi thalai la kattitathiga pavam ava erkanavae guru ah va la rombha irugi poita
 
Well-known member
Messages
610
Reaction score
346
Points
63
Dai guru enna da pandra antha ponnu already manasu odaju poethaa iruka ippo ne athuyum thevayillama panni vaikatha 😬😬😬
 
Top