• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

காதல் 23

Administrator
Staff member
Messages
459
Reaction score
785
Points
93
காதல் 23:

மகியால் தான் கண்டதை நம்ப முடியவில்லை. தன்னுடைய அகிலனா தனது தமையனா இது என்று அதிர்ந்து பார்த்தாள்.

அந்த காணொளியில் அகிலனும் வர்ஷினியும் ஒருவரையொருவர் முத்தமிட்டு கொண்டிருந்தனர்.

இருவரது முகமும் அத்தனை தெளிவாக தெரிந்தது.

"பார்த்தியா உன் தம்பி பண்ணி இருக்க வேலைய‌" என்ற குருவின் குரலில் திரும்பி அவனை கண்டவளிடம் பதில் இல்லை.

அவளே ஏகமாய் அதிர்ந்திருந்தாளே. அவளால் அந்த காணொளியை நம்ப முடியவில்லை.

இருந்தும் அகிலன் மீது அவளுக்கு முழு நம்பிக்கை இருந்தது. அவன் படிப்பதை விட்டுவிட்டு இப்படி ஒரு செயலை எந்த நிலையிலும் செய்ய மாட்டான்.

இந்த சிறிய வயதிலே தன் தம்பி எவ்வளவு பொறுப்பாக இருக்கிறானே என்று நிறைய இடங்களில் மகியே பெருமையாக எண்ணி இருக்கிறாள்.

படிக்கும் போதே பகுதி நேர வேலை மகிக்கு வீட்டு வேலையில் உதவி செய்வது என்று எவ்வளவு பெறுப்பானவன். அத்தையவன் இந்த செயலை செய்திருப்பான் என்று கனவிலும் இவள் நம்ப மாட்டாள்.

மெல்ல விழிகளை துடைத்து கொண்டவள் நிமிர்ந்து,

"இந்த வீடியோல இருக்கது எல்லாம் பொய். எ… எனக்கு என் அகிலை பத்தி நல்லா தெரியும். அவன் எந்த காலத்திலயும் இப்படி ஒரு காரியத்தை பண்ண மாட்டான்" என்று அவனது முகம் பார்த்து கூறினாள்.

"லக்சரியஸ் லைஃப்க்கு ஆசைப்பட்டு ரெண்டு பேரும் பிளான் பண்ணி எல்லாத்தையும் செஞ்சிட்டு இப்போ எதுவும் தெரியாத மாதிரி ஆக்ட் பண்றிங்களா…? பிளான் போட்டு என் தங்கச்சியை ஏமாத்தி இருக்கிங்க. ட்ரெய்ட்டர்ஸ்…" என்று பல்லிடுக்கில் வார்த்தையை துப்பியவனது முகம் கோபத்தில் சிவந்து இருந்தது.

"நான் செஞ்ச எல்லாத்தையும் மறந்துட்டு எப்படி தான் இப்படி கேவலமா நடந்துக்க உங்களுக்கு மனசு வந்தது. இவ்ளோ சேஃபான ப்ளேஸோட இந்த சேலரில யார் உனக்கு வேலை கொடுப்பா. ஆனால் என் தாத்தா பாவம் பார்த்து கொடுத்தாரு. அதுக்கு தான் நல்லா திருப்பி கொடுத்திட்டிங்க…." அக்னியின் ஜுவாலையுடன் வார்த்தைகள் வெளியே வந்தது.

மகியால் இதயத்தை கூறு போடும் அவனுடைய வார்த்தைகளை அதற்கு மேல் தாள முடியவில்லை.

'பணத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்வாயா…?' என்று வார்த்தையிலே மரித்து போயிருந்தாள்.

"போதும் ப்ளீஸ் சார். என்னால முடியலை. ஏற்கனவே நீங்க பேசுன வார்த்தையிலே நான் செத்துட்டேன். இனியும் என்னை காயப்படுத்தாதிங்க. எல்லா விஷயத்துக்கும் ரெண்டு பக்கம் இருக்கும். என் தம்பி நிச்சயமாக எந்த தப்பும் செஞ்சிருக்க…" என்றவளது பேச்சில் இடை நுழைந்தவன்,

"ஷட் அப் இடியட். இதுக்கு மேலேயும் நீ எதுவும் தெரியாத மாதிரி ஆக்ட் பண்ணிட்டு இருந்த நான் மனுஷனா இருக்க மாட்டேன். ப்ச் என் கண்ணுல படாத. ஆத்திரத்துல எதாவது பண்ணிட போறேன்" என்று நெருப்பு துண்டுகளாய் வார்த்தைகளை கக்கியவன் விறுவிறுவென எழுந்து உள்ளே நுழைந்தான்.

குருவை கண்டதும் அறைக்குள் விளையாடி கொண்டிருந்த கவினும் எழிலும் மகிழ்ச்சியுடன் ஓடி வந்து,

"ப்பா அவேஞ்சர்ஸ் பாக்க போலாம்" என்று இரண்டு கால்களையும் பிடித்து கொள்ள,

காலையில் இனித்தது போல இப்போது குருவிற்கு இனிக்கவில்லை.

தன்னை முயன்று கட்டுபடுத்தியவன்,

"இன்னொரு நாள் போகலாம். ரெண்டு பேரும் போய் விளையாடுங்க" என்றிட,

"ம்ஹூம் இப்பவே போகணும்" என்று இருவரும் கோரஸ் பாட,

இம்முறை பொறுமை இழந்துவிட்டவன்,

"ஒரு தடவை சொன்னா புரியாதா…? போங்க ரெண்டு பேரும்" என்று கத்திவிட,

இளையவர்கள் அரண்டு பின்வாங்கியிருந்தனர்.

நடந்ததை உணர்ந்தாலும் எதையும் கவனத்திற்கு கொண்டு செல்ல விரும்பாத மனநிலையில் இருந்தவன் அறைக்குள் நுழைந்து விட்டான்.

இங்கு குருவின் கத்தலில் சுயநினைவை அடைந்தவள் எழுந்து விறுவிறுவென ஓடினாள்.

கோபத்தை இளையவர்களிடம் காண்பித்து விட்டான் என்று புரிந்தது.

குருவின் கோபத்தில் இளையவர்கள் இருவரும் அழ துவங்கியிருந்தனர்.

தாயை கண்டதும், "ம்மா…" என்று ஓடி வந்து அணைத்து கொண்டனர்.

எழில், "ம்மா அப்பா திட்டிட்டாரு" என்று அழுகையுடன் கூற,

"ம்மா…" என்ற கவின் தேம்ப துவங்க,

மகிழுக்கு உள்ளே கிலி பிடித்த கவினது உடல் நிலையை நினைத்து.

"ச்சு ஒன்னுமில்லைடா. ஒன்னுமில்லை அப்பா ஏதோ கோபத்தில இருந்தாரு" என்று இருவரையும் அணைத்து கொண்டவளுக்கும் அழுகை பெருகியது.

எழில் கூட சிறிது நேரத்தில் அழுகையை நிறுத்திவிட கவின் தான்,

"ம்ம் ம்ம்…" என்று தேம்பிக் கொண்டே இருந்தான்.

மகிழ் தான் அழுகையுடன்,

"அழாதடாம்மா. அம்மா உனக்கு சாக்லேட் வாங்கி தர்றேன்" என்று சமாதானம் செய்ய,

எழில், "ம்மா தம்பி அழ மாட்டான். நீ அழாத…" என்று தாயின் கண்ணீரை துடைத்தான்.

அவனது செயலில் மகிக்கு அழுகையில் தொண்டை அடைத்தது.

என்னவோ அங்கிருக்கவே அவ்வளவு கஷ்டமாக இருந்தது. ஏதோ அந்நிய இடத்தில் தேவையில்லாத தீண்டத்தகாத பொருளாக இருப்பதாக உள்ளே தோன்றியது.

இப்படியே இவர்களுடன் எழுந்து எங்காவது சென்றுவிடலாமா? என்று கூட தோன்றியது.

'தன்னை பார்த்து பணத்திற்காக… என்ன வார்த்தை கூறி விட்டார்' என்று நெஞ்சம் விம்ம என்னவோ அழுகை மிகவும் அதிகரித்தது.

தாயின் அழுகையை கண்ட கவின் கூட,

"ம்மா கவின் குட் பாய் அழ மாட்டான். நீ அழாத" என்றிட,

இவள் தேம்பி கொண்டே அவர்களை அணைத்து கொண்டாள்.

மனம் பெற்றவர்களை நினைத்தது. ஏன் என்னை இப்படி தவிக்கவிட்டு சென்றுவிட்டு சென்றீர்கள் என்னையும் உங்களுடனே அழைத்து சென்று இருக்கலாமே என்று உள்ளம் தவித்தது.

குருவின் அருவருப்பான பார்வையில் தன்னை நினைத்தே கூசி போனாள்.

இதற்கு பெற்றோர் சென்ற போதே தாங்களும் சென்றிருக்கலாம். உயிரை மாய்த்து கொண்டாவது இருக்கலாம் என்று உள்ளே எண்ணி எண்ணி மருகி போனாள்.

'இன்னும் என்னென்ன துயரத்தை எல்லாம் இந்த வாழ்க்கை எனக்கு வைத்திருக்கிறது என்று தெரியவில்லை' என்று நொந்து போயிருந்தாள்.

நேரம் செல்ல வெளியே வாகனத்தின் சத்தம் கேட்டது. அடுத்த நிமிடம் வேகமாக கோதையும் பிறை சூடனும் உள்ளே நுழைந்தனர்.

அவர்களது முகமே அவர்களுக்கு எல்லாம் தெரிந்துவிட்டது என்று கூறியதும் மகிழுக்கு உள்ளே பதறியது.

அடுத்து இவர்கள் வார்த்தையால் என்ன சொல்லி என்னை குதற போகிறார்களோ என்று கலங்கி தவித்தாள்.

கோதை உள்ளே வந்ததும் குருவும் அறையை விட்டு வெளியே வந்தான்.

கோதை, "பிரசாத்…" என்று அழுகையுடன் அவனை அணைத்து கொள்ள,

பிறைசூடன், "என்னடா இந்த பசங்க இப்படி பண்ணிட்டாங்க" என்று வேதனையில் கலங்க,

"ம்மா நீங்க உங்க ஹெல்த்த ஸ்பாயில் பண்ணிக்காதிங்க‌. நான் இந்த விஷயத்தை பாத்துக்கிறேன்" என்றிட,

"என்னப்பா பண்ண போறோம். என் பொண்ணு வாழ்க்கை இப்படியா ஆகணும். இனி அவளுக்கு எப்படி ஒரு நல்ல வாழ்க்கை அமையும்" என்று கண்ணீரை வடிக்க,

"ம்மா இந்த விஷயத்தை கேர்புல்லா தான் ஹாண்டில் பண்ணனும். நான் கண்டிப்பா எந்த பிராப்ளமும் வராம இதை சரி பண்றேன்" என்று மொழிய,

"செல்லம் கொடுத்து செல்லம் கொடுத்து நான் தான் அவ இப்படி ஒரு நிலைமைக்கு போக காரணம் ஆகிட்டேன்" என்று கலங்கி பிறைசூடன் தளர்ந்து அமர்ந்திட,

"ப்பா…"

"தாத்தா…" என்று இருவரும் அருகில் ஓடி வந்தனர்.

இருவரும் இரு புறமும் பிடித்து கொள்ள,

குரு, "தாத்தா அம்மா ரெண்டு பேரும் என்னை நம்புங்க. அம்மு நேம் கெடாம நான் இதை சரி பண்றேன்" என்று வாக்கு கொடுக்க,

"எப்படிப்பா இந்த வீடியோ தான் எல்லா இடத்திலயும் பரவிடுச்சே" என்று பிறை சூடன் கலங்க,

"டெக்னாலஜிய வச்சு எல்லாமே பண்ணலாம். நான் ஏற்கனவே இதை சால்வ் பண்ண‌ எல்லா ஏற்பாட்டையும் பண்ணிட்டேன்" என்று உறுதியளித்தான்.

இதை எல்லாம் கேட்ட படி பிள்ளைகளுடன் அமர்ந்திருந்த மகிழ் இருந்த இடத்தை விட்டு அகலவில்லை.

அது அவர்களுடைய குடும்பம் தான் ஒரு அந்நிய நபர் என்ற எண்ணம் வேரூன்றி இருந்தது. மேலும் அவர்களிடம் பேச சென்று தான் மேலும் காயப்பட அவள் விரும்பவில்லை.

நேரம் கடக்க வாசலில் வாகனத்தின் ஓசை கேட்டது. மகிழுக்கு அகிலனும் வர்ஷினியும் வந்துவிட்டனர் என்று தெரிந்தது.

இதயம் தடதடத்தது. உள்ளே பயம் மொத்தமாக வாரி சுருட்டி கொண்டது. லேசான நடுக்கம் உடலில். இளையவர்களை இறுக பிடித்து கொண்டாள்.

இருவரும் உள்ளே நுழைந்தனர். முதலில் அகிலன் அவனது பின்னே வர்ஷினி அழுத முகத்துடன். அகிலனது முகம் நிர்மலாக இருந்தது.

வர்ஷினியை கண்டதும் கோதை ஓடி சென்று,

"ஏன்டி இப்படி பண்ண?" என்று கன்னத்திலே ஒரு அறையை பலார் என்று விட்டிருந்தார்.

ஒரு நொடி அங்கே மௌனம். வர்ஷினியின் கண்ணீர் அதிகமாகியது.

"ஏன்டி இப்படி பண்ண. குடும்ப மானத்தையே வாங்க தான் என் வயித்துல வந்து பிறந்தியா? நீ பிறந்ததுக்கு பிறக்காமலே இருந்திருக்கலாம்" என்று வர்ஷினியை மாறி மாறி அறைந்தார்.

குரு, "ம்மா விடுங்க" என்று தடுக்க,

"என்னை விடு பிரசாத். எனக்கு வர்ற கோவத்துக்கு இவளை என் கையாலயே அடிச்சு கொன்னுட்றேன்" என்று அழுகையுடன் அவளை அடிக்க,

"ம்மா விடுங்க" என்று குரு அதட்டி வர்ஷினியை கோதையிடமிருந்து பிரித்தான்.

"எனக்கு வர்ற கோவத்துக்கு என்ன பண்றதுன்னு தெரியலை. எவ்ளோ பெரிய காரியத்தை பண்ணிட்டு குடும்ப மானத்தை வாங்கிட்டு வந்து கல்லு மாதிரி நிக்கிறா… இப்போ வெளியில நாம எப்படி தலைகாட்ட முடியும்.‌ அப்பா இருந்திருந்தா இந்த பிள்ளை இப்படி பண்ணி இருக்குமான்னு நாலு பேர் பேசுவாங்களே…" என்று ஆதங்கமும் அழுகையுமாக மொழிய,

"அம்மு நீ உள்ள போ" என்று தங்கையை அறைக்குள் அனுப்பியவன் கோதையிடம்,

"ம்மா எமோஷனல் ஆகாதிங்க" என்று கூறினான்.

"எப்படிடா கோவப்படாம இருக்க முடியும்…" என்று கோபத்தில் இரைந்தவர் இப்போது அகிலனது புறம் திரும்பினார்.

கோதை, "ஏன்டா இப்படி பண்ண? நாங்க உனக்கு என்ன துரோகம் பண்ணோம்.‌‌ என் பொண்ணு வாழ்க்கையை நாசம் பண்ணிட்டியே. என் புள்ளை மாதிரி நினைச்சு தான இந்த கையால உனக்கு நான் சோறு போட்டேன்" என்று கோபத்தில் உரக்க வினவ,

அகிலனிடம் பதில் இல்லை. சிலை போல நின்று இருந்தான்.

"உன்கிட்ட தானே கேக்குறேன் பதில் சொல்லுடா. பொண்டாட்டியோட தம்பிய தான் தம்பி மாதிரி பாத்துக்கிட்டு உனக்கு பணம் கட்டி படிக்க வச்சானே என் புள்ளை. அவனுக்கு செஞ்ச நன்றி கடன் இது தானா…?" என்று வினவ,

இப்போதும் அகிலிடம் மொழி இல்லை.

மகிழுக்கும் தம்பியின் மீது அவ்வளவு கோபம் வந்தது.

எழுந்து வந்து, "ஏன்டா இப்படி பண்ண? ஏன் இப்படி பண்ண? உன்னை படிக்க வச்சவங்களுக்கு நீ செஞ்ச நன்றி கடன் இது தானா?" என்று ஆத்திரம் தீரும் மட்டும் கன்னத்தில் மாறி மாறி அறைந்தாள்.

குருவும் சரி கோதையும் சரி அமைதியாக தான் வேடிக்கை பார்த்தனர்.

இவள் தான் அடித்தடித்து ஓய்ந்து தரையில் அமர்ந்துவிட்டாள்.

அந்த நொடியும் கல் போல நின்றிருந்தானே அன்றி ஒரு வார்த்தையும் அகிலிடமிருந்து வரவில்லை.

அழுதபடி இருந்த கோதை திடீரென மயங்கி சரிய,

"ம்மா…" என்று ஓடி வந்து தாங்கி இருந்தான் குரு.

பிறைசூடன் அடுத்த நொடியே மருத்துவருக்கு அழைக்க ஐந்து நிமிடத்தில் மருத்துவரும் விரைவாக வந்திருந்தார்.

மயக்கத்தில் இருந்த கோதையை பரிசோதித்த மருத்துவர்,

"பிபி ரொம்ப லோ ஆகியிருக்கு. ஓவர் எமோஷனல் ஆகியிட்டாங்களா? ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆக விடாதிங்க. அது அவங்க ஹெல்த்துக்கு நல்லது இல்லை. இன்ஜெக்ஷன் போட்டு இருக்கேன். அவங்களை ரெஸ்ட் எடுக்க வைங்க" என்று மருத்துவர் கூறி சென்றிட,

பிறைசூடன், " என் மக உடல்நிலை தான் எனக்கு முக்கியம்.‌ எதுவா இருந்தாலும் நாளைக்கு பேசிக்கலாம் போங்க" என்றிட,

வர்ஷினி மட்டும் அழுகையுடன் தாயின் அருகில் அமர்ந்து இருந்தாள்.

அகிலன் எங்கு சென்றான் என்று தெரியவில்லை.

குரு தாயை பார்த்துவிட்டு அடுத்து என்ன செய்வதென்ற சிந்தையுடன் அறைக்குள் செல்ல இங்கு மகிழ் தான் இளையவர்களுடன் கூடத்திலே அமர்ந்து விட்டாள்.

அவளுக்கு அந்த அறைக்கு செல்ல துளியும் விருப்பம் இல்லை. இனி செல்லவே கூடாது என்று முடிவெடுத்து விட்டாள்.

ஆனால் குழந்தைகளை என்ன செய்வது சுழ்நிலையின் காரணமாக தனக்கு தான் பசி தூக்கம் மரத்துவிட்டது என்றால் குழந்தைகளுக்கு உண்டு தானே.

அங்கிருப்பது நெருப்பில் இருப்பது போல தகித்தாலும் இருக்க வேண்டிய கட்டாயம் இருந்ததால் வேறு வழியின்றி எழுந்து சென்று பிள்ளைகளுக்கு பாலை ஆற்றி கொடுத்து உறங்க வைத்துவிட்டவள் அருகிலே அமர்ந்து கொண்டாள்.

என்னவோ இந்த ஒரு நாளில் வாழ்க்கையே வெறுத்து விட்டது.

குரு தனக்கு தெரிந்த காவல் துறை நண்பனை தொடர்பு கொண்டு அந்த காணொளியை எப்படி சமூக ஊடகத்தில் இருந்து அழிப்பது என்று பேசி கொண்டு இருந்தவன் தன் அருகே நிழலாட நிமிர்ந்து பார்த்தான்.

வர்ஷினி தான் நின்று இருந்தாள். குருவிற்கு வர்ஷினி மீது எந்த கோபமும் இல்லை. அவனை பொறுத்த வரை வர்ஷினி ஒரு குழந்தை.

அவளுக்கு எதுவுமே தெரியாது‌. அகிலன் தான் பணத்திற்கு ஆசைப்பட்டு ஏதேதோ செய்து வர்ஷினியை ஏமாற்றி இருக்கிறான் என்பது தான் அவனுடைய எண்ணம்.

ஓரிரு நொடிகள் மௌனத்தில் கழிய,

"அண்ணா சாரிண்ணா…" என்று அவனது கையை பிடித்து காலுக்கு கீழ் அமர்ந்து கொண்டாள்.

குரு அவளே பேசட்டும் என்று அமைதியாக இருந்தான். அவள் பேசிய பிறகு எதுவாக இருந்தாலும் தான் பேசுவோம் என்று எண்ணி இருந்தான்.

"எல்லா தப்பும் என் மேல தான். அகில்… அகிலன் மேல எந்த தப்பும் இல்லை. அவன் ரொம்ப ரொம்ப நல்லவன். இவ்ளோ திட்டு அடி எல்லா வாங்கியும் என் மேல தான் தப்புனு ஓரு வார்த்தை கூட சொல்லலை. எல்லா தப்புமே என் மேல தான். அவனுக்கு ஒரு பர்சண்டேஜ் கூட இதுல பங்கு இல்லை.அவன் அவன் உண்டு படிப்பு உண்டுனு தான் இருந்தான் நான் தான் புத்தி கெட்டு இதை எல்லாம் பண்ணிட்டேன். அன்னைக்கு பார்டிக்கு கூட அவனா அங்க வரலை. நான் தான் கையை அறுத்துப்பேன்னு மிரட்டி அவனை அங்க வர வச்சேன்…" என்று தொடங்கி நடந்த அனைத்தையும் கூறி அவனது கையில் முகத்தை புதைத்து அழ துவங்கினாள்.

இங்கு குரு தான் வர்ஷினி கூறிய உண்மையை கேட்டு ஏகமாக அதிர்ந்து போயிருந்தான்.

தான் நினைத்த எதுவுமே நினைத்தது போல இல்லை என்று அறிந்தவனது முகத்தில் அதிர்ச்சி ரேகைகள் அலையலையாய் பரவியது.

ஏதுமறியா பெண்ணை வார்த்தைகளால் குத்தி குதறி உயிரோடு மரிக்க செய்ததை உணர்ந்தவன் அவளது உணர்வுகளை மீட்டெழ செய்வானா…?

இங்கோ ஒரு தவறும் செய்யாத அகிலனோ போக இடமின்றி இரவின் தனிமையில் நடு தெருவில் நின்று இருந்தான்…

இங்கு குருவால் உயிரோடு கொல்லப்பட்டவளோ வாழ்க்கையை வெறுத்து சுவற்றினை வெறித்திருந்தாள்…



 
Well-known member
Messages
610
Reaction score
346
Points
63
Emotional episodes mahi onum aagathu unnoda thamni Akil athuyum pannala sikirama sari agidum feel pannatha guru ne pesuratha pesidu ippo enna panna pora
 
Top