• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

எனக்குள் காலம் - 2

Member
Messages
37
Reaction score
2
Points
8
மாலை சூரியன் மறையும் பொழுது என்பதால் பறவைகள் எல்லாம் தன் கூட்டிற்கு சென்று கொண்டிருக்க, சக்தியும் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி தன் அறைக்கு திரும்ப செல்கிறான். தன் அறையின் கதவை திறக்க முற்படும் பொழுது அந்த கதவு ஏற்கனவே திறந்து இருப்பதை உணர்கிறான்.
"நம்ம வீட்டுல யாரு.... திருடனா இருப்பானோ..."என மனதினுள் எண்ணி கொண்டே அந்த கதவை திறக்கிறான். உள்ளே சக்தியின் அம்மா அமுதா சமைத்து கொண்டு இருக்கிறாள்.
"அம்மா...நீங்க என்ன பண்ணறீங்க இங்க..."என ஆச்சர்யத்துடன் பார்க்க,
"உனக்கு அடிபட்டு ஹாஸ்பிடல இருக்கேன்னு கேள்விப்பட்டேன் அதான் வந்தேன்...இது என்னடா கேள்வி பையனுக்கு அடிபட்டா அம்மா வரமா வேற யாருடா வருவா..."என கேட்டு கொண்டே தன் வேலைகளை செய்து கொண்டு இருக்கிறாள் சக்தியின் அன்னை அமுதா.
"இல்ல தனியாவா வந்தே..."என சக்தி கேட்டு கொண்டே அவன் சோஃபாவில் அமர,
"ஆமாடா...வேற யாரு வருவா...இப்போ எப்படி இருக்கு உடம்பு... ஹாஸ்பிடல இருந்து வந்திருக்கே...போய் ஃபர்ஸ்ட் குளிடா...நான் உனக்கு சாப்பாடு எடுத்து வைக்கறேன் என கூறுகிறாள் அமுதா.
சக்தி எழுந்த துண்டை எடுத்து கொண்டு குளியலறையை நோக்கி செல்கிறான். தன் ஆடைகளை களைந்து தண்ணீரை மேல ஊற்றி கண்களை மூடுகிறான்.
சக்தி சிறுவனாக நடந்து செல்லும் பொழுது ஒரு சிறுமி சிவப்பு நிற உடையில் பூங்காவில் உள்ள இலைகள் இல்லாத மரத்தை பார்க்கிறாள். அவளிடம் சக்தி என்னமோ பேச முற்பட சக்தி வேண்டாம் என முடிவெடுத்து அங்கே இருந்து ஓடுவது போல சக்திக்கு காட்சி தோன்றுகிறது. சாடாரென்று சக்தி தன் கண்களை திறக்கிறான்.
"எனக்கு என்னாச்சு... இப்போ என்னமோ தோணுச்சு...என்ன அது...ஒரு வேளை இவங்க குடுக்கற பிரஸர் தாங்க முடியாம பைத்தியம் ஆகிவிட்டேனா..."என சக்தி சிந்தித்து கொண்டே குளித்து முடித்து விட்டு வெளியே வந்து தன் அம்மா அமுதா செய்து வைத்த இட்லியை சாப்பிட்டு விட்டு எழுகிறான்.
"சரிடா நான் இங்க ஹால்ல படுத்துக்கறேன்...நீ ரூம்ல படுத்துக்கோ..."என அமுதா கூறி கொண்டே ஹாலில் உள்ள தொலைக்காட்சியை ஓட விடுகிறாள்.
"அம்மா...."என சக்தி மெல்லிய குரலில் தயங்கி நிற்க,
"என்னடா..."என தன் மகனின் முகத்தை ஏறிடுகிறாள் அமுதா.
"என்மேல கோவம் எதுவும் இல்லைல்ல..."என கேட்க, அமுதா எழுந்து வந்து தன் மகனின் தலையை தடவியவாறு,
"கோவம் எல்லாம் இல்லடா... உன்னோட எதிர்காலத்தை நோக்கி நீ பயணிக்கறே...அதுல நான் தலையிட விரும்பல...உனக்கு என்ன சரின்னு படுதோ அதை பண்ணு...உனக்கு எந்த வேலை புடிச்சு இருக்கோ அதை பண்ணு..."என தன் மகனை ஊக்குவிக்கிறாள் அமுதா.
அப்பொழுது தொலைகாட்சியில் "இன்று மாலை திருப்பூரில் பள்ளி குழந்தைகள் இரண்டு பேர் மர்மமான முறையில் காணாமல் போனார்கள்"என செய்தி வாசித்து கொண்டு இருந்தார் சுந்தர்.
அமுதா அந்த செய்தியை கேட்டு,"உனக்கு நியாபகம் இருக்கா...நீ சின்ன பையனா இருந்தப்போ இதே மாதிரி நம்ம வீட்டு பக்கத்துல இருக்க சில குழந்தைகள் மர்மமான முறையில காணாம போனாங்க...எங்க தேடியும் கிடைக்கல...கொஞ்ச நாள் கழிச்சு அந்த குழந்தைங்க சடலம்தான் கிடைச்சது...அந்த குழந்தைகளை கொன்னது நம்ம பக்கத்து வீட்டுல இருக்க கவின்தான்னு எல்லாரும் சந்தேகப்பட்டு அவனை போலீஸ்ல அரெஸ்ட் பண்ணாங்க..."என கூறுகிறாள் அமுதா.
"எனக்கு அதெல்லாம் நியாபகம் இல்லம்மா..."என கூறிய தன் மகனின் முகத்தை பார்த்து மெதுவாக புன்னகைத்தபடி,
"ஆமா உனக்கு நினைவு இருக்காது...அந்த காணாம போன குழந்தைகள்ல ஒரு குழந்தையை நீ பார்த்து இருக்கே...அந்த பொண்ணை நீ நினைச்சு இருந்தா காப்பாத்தி இருக்கலாம்ன்னு நீ நினைச்சே...ஆனா நீ அப்போ அதை பண்ணல...அப்போ அந்த பொண்ணு இறந்த செய்தி கேட்டு நீ மிரண்டு போயிட்டே... நைட் எல்லாம் தூங்கமாட்டே அப்போதான் உன்னை ஒரு psychiatristகிட்ட கூட்டி கொண்டு போனேன்... அப்போ இருந்து நீ எல்லாம் மறந்துட்டே..."என கூற,
"எம்மா...நீ நியூஸ் ரிபோட்டர் வேலைல இருந்து ரிடயர்டு ஆகிட்டே...இன்னும் இப்படி எல்லாம் எதை எதையோ கனெக்ட் பண்ணிட்டு இருக்காத..."என தன் தாயின் தலையில் செல்லமாக கொட்டிவிட்டு தன் அறைக்கு செல்கின்றான் சக்தி.
"இன்னும் எவ்வளவு நாளைக்கு இந்த போராட்டம் தெரியல... இருபத்தி ஐந்து வயசாச்சு.... இப்படி நம்ம அம்மாவ விட்டு என்னோட கனவுக்காக ஓட்டிட்டு இருக்கேன்..."என எண்ணிக்கொண்டே தூங்கி போகிறான் சக்தி.

"அண்ணா இங்க என்ன பண்ணறீங்க..."என மைதானத்தை வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த கவினிடம் சிறுவயது சக்தி கேட்க,
"சும்மாதான் தம்பி போர் அடிக்குது...அதான் எனக்கு ஃப்ரெண்ட்ஸ் யாரும் இல்ல..."என கவின் கூற,
"சரி அண்ணா இப்போ இருந்து நான் உங்களுக்கு ப்ரெண்ட்டா இருக்கேன்.."என சிறுவயது சக்தி கூறுகிறான்.
"ரொம்ப தேங்க்ஸ் தம்பி"என கவின் சிரித்தவாறே,
"நீ என்னை மாதிரி இருக்க கூடாது... எல்லார்கிட்டயும் அன்பா நடந்துக்கோ...எல்லாருக்கும் அப்போதான் உன்னை புடிக்கும்... வருங்காலத்தில உனக்கான பாதையை நீயே choose பண்ணி கிளம்பு...எல்லாம் சரியா இருந்தா உன்னால சாதிக்க முடியும்..."என கவின் கூறுகிறான்.
இரவு நேரம் மழைத்துளி மெதுவாக மண்ணை நனைத்து கொண்டு இருந்த வேளை.
"அண்ணா...."என சக்தி கவினை பார்த்து கத்த,
"நான் ஒன்னும் பண்ணல..."என்பதை போல கவின் சக்தியை போலீஸ் ஜீப்பில் இருந்து பார்க்கிறான் கைகளில் விலங்குடன்.
"இவனை எல்லாம் எல்லாருக்கும் தெரியற மாதிரி நாயடிச்சு இழுத்துட்டு போற மாதிரி இழுத்துட்டு போங்க..."என குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் கத்துகிறார்கள். சக்தியின் முகத்தை இனி ஏறிட்டு பார்க்க முடியாமல் கவின் தன் தலையை கீழே சாய்த்து கொண்டு வருந்துகிறான் என்பதை நிரூபித்தது அவனின் தாடையில் வழிந்த கண்ணீர் துளி.

சட்டென்று கண்விழிக்கிறான் சக்தி.
"ச்சை....கனவா....இது கனவா இல்ல நான் மறந்து போன என்னோட பழைய நினைவா...."என குழம்பியவாறு தன் படுக்கையை விட்டு எழுகிறான் சக்தி.
"டேய்... எவ்ளோ நேரம்தான் தூங்குவே...சீக்கிரம் எழுந்து வா... டிபார்ட்மெண்ட் ஸ்டோர் போகனும்...ரூம்ல மளிகை சாமான் எதுவும் இல்ல...எல்லாம் காலி..."என அமுதா கூற,
தலையை சொரிந்து கொண்டே வாயில் ப்ரஷ் வைத்து கொண்டே வெளியே வருகிறான் சக்தி."மளிகை சாமான் இல்லையா...எங்க போச்சு"என சக்தி பார்க்க,
""உனக்கென்னப்பா நீ பாட்டுக்கு ஜாலியா ஹாஸ்பிடல படுத்து தூங்கிட்டே...எனக்கு இங்க போர் அடிச்சுது..அதான் சமைச்சிட்டேன்..."என அமுதா கூற,
"சரி வா போலாம்..."என தன் தாயின் தலையில் செல்லமாக குட்டியவாறு டிபார்ட்மெண்ட் ஸ்டோர் செல்ல ஆயத்தம் ஆகிறான் சக்தி.
டிபார்ட்மெண்ட் ஸ்டோர் சென்று தனக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு அமுதாவும் கடையை விட்டு வெளியே சென்று இருக்கிறார்கள்.
"எல்லாமே வாங்கியாச்சு...இனி நீ நடு நடுவுல கடைக்கு போகனும்னு அவசியம் இல்லடா..."என கூறி கொண்டே நடந்து செல்கிறாள் அமுதா.
"ஆமா இருக்கற பொருள் எல்லாத்தையும் ரெண்டே நாளுல காலி பண்ணிட்டு பேச்ச பாரு..."என தன் அம்மாவை கடிந்து கொண்டே செல்கிறான் சக்தி.
அப்பொழுது அவன் முன் செல்லும் அமுதா மெதுவாக நடந்து செல்வது போல் தோன்ற, பக்கத்தில் உள்ள மரத்தில் உள்ள இலைகள் காற்றில் உதிர்வது மெதுவாக தெரிகிறது சக்திக்கு. அப்பொழுது நீல நிற மின்னும் பட்டாம் பூச்சி ஒன்று பறப்பதை சக்தி பார்க்கிறான்.
"எல்லாமே வாங்கியாச்சு...இனி நீ நடு நடுவுல கடைக்கு போகனும்னு அவசியம் இல்லடா..."என கூறி கொண்டே நடந்து செல்லும் அமுதாவை பார்க்கிறான் சக்தி.
"மறுபடியுமா....இப்போ என்னன்னு தெரியலை...."என சிந்தித்து கொண்டே சக்தி சுற்றும் முற்றும் பார்க்கிறான். அவனால் ஒன்றும் தவறாக பார்க்க முடியவில்லை.

அப்பொழுது தன் மகனிடம் இருந்து எந்த பதிலும் வராததை உணர்ந்த அமுதா திரும்பி தன் மகனை பார்க்க, அப்பொழுது சக்திக்கு பின்னே ஒரு குழந்தை கைகளில் ஐஸ் கிரீம் வைத்து கொண்டு ஒரு கருப்பு நிற சட்டை அணிந்த ஒரு மனிதனுடன் நடந்து செல்வதை பார்த்து சந்தேகம் அடைகிறாள். அவன் அந்த குழந்தையை தன் காரில் ஏற்றி கொண்டு சக்தியை கடந்து செல்வதை அமுதா பார்க்கிறாள்.
"டேய் இங்கேயே இரு ஒரு நிமிஷம் ஒரு ஃபோன் பேசிட்டு வரேன்..."என கூறி கொண்டு அமுதா சற்று தள்ளி சென்று தன் அலைபேசியில் பேசி கொண்டு இருக்கிறாள்.
எவ்வளவு தேடியும் எதுவும் வித்தியாசமாக சக்திக்கு தெரியாததால் திரும்பி தன் அன்னை அமுதாவை பார்க்கிறான். அமுதா தொலைபேசி பேசி முடித்து விட்டு சக்தியை நோக்கி வர, சக்தியின் தோளை ஒரு கை வந்து தொடுகிறது. சக்தி பயந்து போய் திரும்பி பார்க்க அங்கு ஸ்வேதா நின்று கொண்டு இருக்கிறாள்.
"என்ன சக்தி இங்க பீட்ஸா சாப்பிட வந்தீங்களா...இங்க அதெல்லாம் இல்ல..."என கூறிய ஸ்வேதாவை,
"பீட்சாவை விடுங்களேன்..."என கூறுகிறான் சக்தி.
"ஸ்வேதா இதுதான் என் அம்மா..."என அமுதாவை அறிமுகம் செய்கிறான் சக்தி.
"ம்ம்...புரியுது...நீ ஏன் வீட்டுக்கு வராம இங்கேயே இருக்கேன்னு..."என சற்று கேலியுடன் கூறிய அமுதாவை பார்த்து,
"யம்மா கொஞ்சம் சும்மா இரும்மா..."என கூறி கொண்டே நடக்கிறான் சக்தி.
"ஸ்வேதா நீ இப்போ ஃப்ரீயா இருந்தா எங்க வீட்டுக்கு வாம்மா... சாப்பிட்டுவிட்டு போ..."என அமுதா கூற,
"சரி"என ஸ்வேதாவும் அவர்கள் வீட்டிற்கு செல்கிறாள்.
சைவ உணவுதான் என்றாலும் ருசிகரமாக சமைத்து பரிமாறுகிறாள் அமுதா. ஸ்வேதா அமுதாவுடன் நன்றாக பேச தொடங்குகிறாள்.
"சரிங்க aunty... நான் கிளம்பறேன்..."என ஸ்வேதா விடைபெற்று சென்றதும்,
"நாம இன்னிக்கு ஒரு குழந்தை கடத்தலை தடுத்து இருக்கிறோம் என நினைக்கறேன்..."என அமுதா கூறுகிறாள்.
"என்னது..."என சக்தி கேட்க,
"ஒன்னும் இல்ல...போய் தூங்குடா..."என கூறுகிறாள் அமுதா.
மறுநாள் சக்தி தன் வேலைக்கு கிளம்ப, அமுதா தன் அலைபேசி எடுத்து சில தகவல்களை சேகரிக்கிறாள். அதை வைத்து பார்க்கும் பொழுது அந்த குழந்தையை கடத்த முயன்ற நபருக்கு தன்னை நன்றாக தெரியும் என்பதை உணர்கிறாள். தனக்கு கிடைத்த தகவல்களை சேகரித்து அந்த நபர் யார் என்பதை கண்டுபிடிக்கிறாள் அமுதா. உடனே தன் உடன் வேலை பார்த்த சுந்தருக்கு தொலை பேசியில் தொடர்பு கொள்கிறாள்.
"ஹலோ..."
"ஹலோ....நான் அமுதா பேசறேன்..."
"சொல்லுங்க மேடம்...என்ன கால் எல்லாம்..."
"இப்போ குழந்தைகளை கடத்திட்டு இருக்க அந்த ஆளு யாருன்னு நான் கண்டுபிடிச்சுட்டேன்..."என கூற,
"யாரு..."என சுந்தர் கேட்கிறார்.
பதில் சொல்ல வாயை திறக்க, அமுதாவின் வாயை ஒரு கை பொத்துகிறது. அமுதா தன் கை பையில் உள்ள பெப்பெர் ஸ்ப்ரே எடுக்கும் முன்னே அமுதாவின் நெஞ்சில் கத்தியை வைத்து குத்துகிறது அந்த கை. அமுதா தன் சுய நினைவை இழந்து சக்தியின் நினைவுகள் மலர அந்த இடத்திலே இறக்கிறாள்.
தன் வேலையை முடித்து கொண்டு தன் அறைக்கு திரும்ப வந்து கொண்டு இருக்கும் சக்தி தன் வீட்டின் வெளியே இருந்து வரும் நபரின் சட்டை நிறத்தை மட்டும் பார்க்கிறான். கருப்பு சட்டை அணிந்த அந்த நபரின் முகத்தை பார்க்கும் முன்னே அவன் முகத்தை திருப்பி கொண்டு வேகமாக செல்கின்றான்.
"அம்மோவ்....என்ன சாப்பாடு இன்னிக்கு..."என கேட்டபடி தன் வீட்டின் கதவை திறக்கிறான் சக்தி.
சக்திக்கு அங்கே இரத்த வெள்ளத்தில் இறந்து கிடக்கும் அமுதாவின் உடலை கண்டு அழுகையுடன் பயத்தில் குலை நடுங்கி போகிறான். கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வழிகிறது.
"அம்மாமா............."என கதறுகிறான். சக்தியின் சப்தத்தை கேட்டு பக்கத்தில் உள்ள நபர்கள் ஓடி சென்று பார்க்கிறார்கள். சக்தி அமுதாவின் அருகே இருப்பதை கண்ட பக்கத்து வீட்டு காரர்கள் சக்திதான் அமுதாவினை கொன்று இருக்க வேண்டும் என முடிவு செய்து போலீஸ்க்கு தகவல் கொடுக்கிறார்கள்.
"நான் ஒன்னும் பண்ணல..."என சக்தி கூறுவதை அங்கு உள்ள எவரும் நம்பவில்லை.
அப்பொழுது அந்த வீட்டை விட்டு வெளியே குதித்து சக்தி ஓட, சரியாக அந்த இடத்திற்கு போலீஸ் வருகிறது. சக்தி காவலர்களிடம் இருந்து தப்பிக்க திரும்பி ஓடுகிறான். அப்பொழுது சக்தியின் கால்கள் மெதுவாக செயல்படுகிறது. பின்னே வரும் காவலர்களின் கால் கூட மெதுவாக மண்ணில் பதிகிறது. சக்தியின் கண் முன்னே ஒரு நீல நிற மின்னும் பட்டாம்பூச்சி பறக்கிறது. அதை பார்க்கிறான் சக்தி. ஆனால் சக்தியின் கால்கள் இன்னும் ஓடி கொண்டுதான் இருக்கிறது. குனிந்து கீழே தன் கால்களை பார்த்த சக்திக்கு அதிர்ச்சி. தன் கால்கள் ஒரு சிறுவனின் கால்களை போல் இருப்பதை பார்க்கிறான். அவனின் முன்னே தன் சிறுவயது நண்பனான கோபிநாத் சிறுவன் போல ஓடி கொண்டு இருக்கிறான்.
"சீக்கிரம் வாடா..."என சக்தியின் கைகளை பிடித்து இழுக்க தன் கைகளும் சிறுவனின் கைகளை போல் உள்ளதை உணர்கிறான் சக்தி.
இருவரும் ஓடி சென்று ஒரு பள்ளிக்குள் செல்கின்றனர். திரும்பி அங்கே தேதி நாட்காட்டியை பார்க்கிறான் சக்தி. 2003 வந்து இருப்பதை உறுதிபடுத்தியது அந்த நாள்காட்டி.
"என்ன....இந்த தடவ இவ்வளவு வருஷம் முன்னாடி வந்து இருக்கிறோம்..."என அதிர்ச்சியுடன் ஓடி வந்ததில் மூச்சு இரைக்கிரான் சக்தி.


(டிக்....டிக்.... டிக்....)
 
Top