• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,252
Reaction score
3,674
Points
113
எண்ணம் – 5 ❤️
ராமலிங்கமும் லீலாவதியும் மகனின் தவறைச் சுட்டிக் காட்டியிருக்க, தனாவிற்க்கும் தன் செயலின் வீரியம் புரிந்தது. தன்னை நம்பி வீட்டிற்கு வாழ வந்தப் பெண்ணை இப்படி நடு இரவில் வெளியே அனுப்புவது எல்லாம் பெரிய தவறு என நெற்றிப் பொட்டில் அறைந்தது மனசாட்சி. மலர்விழியின் இடத்தில் யாராய் இருந்தாலும், அப்படித்தான் நடந்து கொண்டிருப்பார்கள் என மனம் அவள்புறம் உள்ள நியாயங்களை வரிசைப்படுத்த, அந்நொடியே கிளம்பிவிட்டான் மனைவியைக் காண.
காலையில் வந்து நின்ற தனஞ்செயனை மூவரும் எதிர்பார்க்கவில்லை. லோகநாயகி அவனை உள்ளே அழைத்து அமர வைக்க, “விழியைக் கூட்டீட்டு போகலாம்னு வந்தேன் அத்தை...” என்றவனை பெற்றவர்கள் பெரிய நிம்மதியுடன் பார்த்தனர். இரண்டு குடும்பத்திற்கும் இடையில் எத்தனை வேறுபாடுகள் இருந்தப் போதும் மலர்விழியை தனாவிற்கு திருமணம் செய்து கொடுத்தது இந்த ஒரு காரணத்திற்காகத்தானே? தனஞ்செயனின் இந்த குணத்திற்காகத்தானே?
“அவ பால்கனியில இருக்கா தனா...” என லோகு கூறியதும், தலையை அசைத்து மலர்விழியைக் காணச் சென்றான்.
அவன் உள்ளே நுழைய, விழிகளை மூடி இருக்கையில் சாய்ந்து இருந்தாள் மலர்விழி. ஒருகரம் அலைபேசியோடு மார்பில் இருக்க, மறுகரம் நாற்காலியிலிருந்தது. விழியோரம் கசியும் லேசான ஈரமும் அவளது சோர்ந்த முகமும் தனாவை அந்த நொடி ஏதோ செய்தது. அவ்வளவு தைரியமாய் அத்தனை பேரின் முன்பும் பேசியவளா இப்போது தனிமையில் அழுகிறாள்? என்ற ஆச்சர்யமும், தானும் இதற்கொரு காரணம் எனக் வருத்தமும் பிறந்தது.

தன்னையே நூறாவது முறையாகத் திட்டிக்கொண்ட தனா அவளருகே செல்ல, கனவிலிருந்து விழிப்பது போல பட்டென கண்ணைத் திறந்த மலரின் முன்னே தனஞ்செயனின் முழு உருவம் சமீபித்தது. விழிகளில் திரையிட்டிருந்த நீர், அவன் உருவத்தை மங்கலாகக் காண்பிக்க, இமை சிமிட்டி நீரை வெளியேற்றினாள்.
அகத்தையும் புறத்தையும் நிறைத்தவன் மனம் நிறைந்தவன் என மூளையும் மனதும் கூறிய நொடி, எழுந்து நின்று அவனுக்கு முகம்காட்டாது மறுபுறம் திரும்பினாள். விழிகளில் வழிந்த நீரை தனாவிற்குக் காட்ட மனம் வரவில்லை . தணிந்திருந்த கோபம் இப்போது மீண்டும் வந்தமர்ந்துகொண்டது.
‘எப்படி என்னை இவன் வெளியே போகச் சொல்லலாம்?’ மனம் முறுக்கிக்கொண்டது.
எப்படி பேச்சைத் தொடங்குவது என யோசித்த தனா, நெற்றியைச் சொரிந்தான். “விழி, என் மேலதான் தப்பு. சாரி டி... வா வீட்டுக்குப் போகலாம்!” என்றான். குரலில் தப்பு செய்த பாவனைதான். அவனுக்குப் பதில் சொல்லவில்லை பெண்.
“ப்ம்ச்... விழி, சாரி. உன்னை வீட்டைவிட்டு வெளியே போகச் சொன்னது தப்புதான். இனிமே சொல்ல மாட்டேன்...” என மீண்டும் மன்னிப்பை யாசித்தான் தனஞ்செயன் .
“நட்டநடு ராத்திரின்னு கூட யோசிக்காம வெளிய போன்னு சொல்வீங்க. காலைல வந்து நான் செஞ்சது தப்புன்னு அதே வீட்டுக்குக் கூப்பிடுவீங்க? நீங்க போன்னு சொன்னதும் போய்ட்டு, வான்னு சொன்னதும் வர்றதுக்கு நான் ஒன்னும் உங்க வீட்டு வேலைக்காரி இல்லை . நீங்க தொட்டு தாலி கட்டுன பொண்டாட்டி. உங்களை மட்டுமே நம்பி பெத்தவங்களை விட்டுட்டு வந்தவ...” என்று அழுத்தமாக உரைத்தாள்.
“ச்சு... விழி, தப்புதான். நான் செஞ்சது தப்புதான். அதுக்காக நீ பேசுனது எல்லாம் சரியா? நீயே சொல்லு. நாலு பேர் கூடியிருக்க சபையில எங்க அப்பா பேசும்போது நான் என்னைக்கும் இடையில பேசுனது இல்லை. அப்படி நாங்க எதிர்த்து பேசுனா, அது அவரை எல்லார் முன்னாடியும் இறக்கிக் காட்டிடும். தேவி அத்தை பேசும்போது கூட நான் அமைதியா இருந்ததுக்கு காரணம் அப்பாதான். அவர் தேவி அத்தையைப் பார்த்துப்பார்னு. அதான் நீ பேசவும் எனக்கு கோபம். அதை விட, என்னை நீ நம்பியிருந்தா, அமைதியா இருந்திருப்ப. நான் உனக்காக பேசுவேன்னு கொஞ்சம் கூடத் தோணலை இல்லை?” என தனா ஆற்றாமையாய்க் கேட்க, மலர்விழியிடம் கனத்த அமைதி.
“சொல்லு விழி, என்னை நம்பி வாழ்க்கையைக் கொடுத்தேன்னு சொன்னீயே! அதே நம்பிக்கையோட நீ அமைதியா இருந்திருந்தா, நானே அத்தையை பேசி அமைதியாக்கி இருப்பேன். நானோ, அப்பாவோ அத்தயை எது சொன்னாலும் அண்ணன், அண்ணன் பையன்ற எண்ணத்தோட போய்டும். ஆனால், நீ பேசுனா, அது அவங்க மனசுல தங்கிடும். என்னைக்குனாலும் அது உங்களோட உறவுக்கு இடையில கசப்பைக்கொண்டு வரும். போன்னு அத்துவிட்டுப் போற உறவு இல்லை. நம்ப வீட்ல எந்த ஃபங்கசன்னாலும் அவங்கதான் முன்னாடி நிப்பாங்க. அதுக்காக தேவி அத்தை பேசுனது சரின்னு சொல்ல மாட்டேன். அவங்க குணமே அதுதான். நிறைய முறை சொல்லிட்டோம். அவங்க திருந்தலை. ஆனால், ஐயம் ஷ்யூர் தட், இனிமே அத்தை மாமாவை அவங்க ஒரு வார்த்தைக் கூட பேச மாட்டாங்க. நானும் அப்பாவும் அவங்ககிட்ட கண்டிப்போட சொல்லிட்டோம்...” பொறுமையாய் தன்னிலை விளக்கம் கொடுத்தான் தனஞ்செயன். அவனின் கோபம் எதனால் என மனதில் உள்ளதைக் கூறினான். அவன் பேச்சின் நியாயம் புரிந்தாலும், மலரால் இறங்கி வர முடியவில்லை. என்ன நடந்தாலும் வீட்டைவிட்டு வெளியே போகச் சொன்னதை மனது மீண்டும் மீண்டும் நினைத்து அவளை வதைத்தது.
தான் இவ்வளவு கூறியும் இளகாது இருப்பவளை என்ன செய்து சமாதானம் செய்ய எனப் பார்த்திருந்தவன், “சாரி டி...” என அவளது முழங்கையைப் பிடித்திழுத்து மொத்தமாய் அணைத்திருந்தான். ஒரு நொடி என்ன நடந்தது என மலர்விழியால் உணர முடியவில்லை. முகத்தில் மோதிய தனாவின் மார்பும் அதன் சூடும், செவியில் மோதிய அவனது இதயத்துடிப்பும் மலர்விழியை செயலிழக்கச் செய்தன. இத்தனை நேரம் இறுகியிருந்த உடல் அவனின் அணைப்பில் மொத்தமாய் தளர்ந்து போனது. முதல் தொடுகை, ஏனோ மலரின் விழிகளில் குபுகுபுவென நீர் பொங்கியது. தொண்டை வரை வந்தக் கேவலை அடக்கிவிட்டாள்.
மெல்லிய நடுக்கம், இது வேண்டாம் என மூளை உந்த, மனது சத்தியமாய் எதிர்க்கவில்லை. அந்த இதயத்துடிப்பு இன்னுமின்னும் வேண்டும் என விழிகளில் நீர் பொங்கியது.
“சாரி விழி, இதுக்கு மேல எப்படி உன்னை சமாதானம் செய்றதுன்னு எனக்குத் தெரியலை டி. வீட்டுக்கு வந்துடேன்” என்று இறைஞ்சும் பார்வை பார்த்தவனை நிமிர்ந்து ஒரு நொடி நோக்கி,
பட்டென அவன் மார்பில் கையை வைத்து தள்ளி மறுபுறம் திரும்பியவளின் இதயம் முழுவதும் நடுக்கம் தான். அதை மறைத்தவள், “வரேன் போங்க...” என்றாள் குரலின் பேதத்தை மறைத்து. இன்னும் அந்த அணைப்பின் கதகதப்பு அவளுடைய வலது கன்னத்தை மொத்தமாய் வதைத்தது உண்மை. உடல் உணர்ந்த அவனது ஸ்பரிசம் மொத்தமாய் பெண்ணை உடைத்திருந்தது.
“நிஜமா வருவதானே விழி?” ஆசையும் எதிர்பார்ப்புமாய்க் கேட்ட குரலில் இதயம் கூட அதிகமாகத் துடிக்க, அந்தக் குரலை புறக்கணிக்க முடியவில்லை பெண்ணால். சத்தியமாய் முடியாதே அவளால்! இந்தக் குரல், வேண்டாம். மனதும் மூளையும் அரற்றியது.
“வர்றேன்... போங்க. வெயிட் பண்ணுங்க!” என்றாள் இழுத்துப் பிடித்த பொறுமையுடன் அழுத்தமாய். தலையை அழுந்தக் கோதியவன் முகத்தில் இப்போது மென்னகை படர்ந்தது. தனா எந்த எண்ணத்தில், எந்த தைரியத்தில் அவளை அணைத்தான் என அவனுக்கே தெரியவில்லை. மனைவி என்ற நினைப்பா, இல்லை தோழி என்றா? என. ஆனால், மலரை சமாதானம் செய்யும் அணைப்பு மட்டும்தான். அணைத்தவனுக்கு ஒன்றும் தெரியவில்லை.

ஆனால், வாங்கியவள் மொத்தமாய் உடைந்திருந்தாள். அதைக் கணவனிடம் வெளிப்படுத்தாது, அறைக்குள் நுழைந்து கதவை மூடிவிட்டு சுவற்றில் சாய்ந்தாள். இன்னும் உடல் நடுக்கம் குறையவில்லை. சிறிது நேரத்தில் தன்னை நிலைப்படுத்தியவள், குளித்துவிட்டு வெளியே வர, தனஞ்செயன் உணவு உண்டு கொண்டிருந்தான்.
“வா மலர், நீயும் சாப்பிட்டு கிளம்பு...” லோகநாயகி அழைக்க, “இல்லை, எனக்குப் பசிக்கலை...” என்றாள். தான் பேசியது அவளுக்குக் கோபம் எனத் தாய்க்குப் புரிந்தது. சாரதி உணவு‌ண்ண கூறியும், மாறன் வற்புறுத்தியும் கூட சாப்பிட மாட்டேன் என நிற்பவளை என்ன செய்வது எனத் தெரியாது மூவரும் அனுப்பி வைத்தனர்.
“தனா, பத்திரமா போங்க. நாங்க கொஞ்ச நேரம் கழிச்சு வரோம்...” சாரதி கூற, தலையை அசைத்தவன், மனைவியுடன் கிளம்பினான்.
இடையில் வாகனத்தை நிறுத்தி, கடை ஒன்றில் பழச்சாறை வாங்கி வந்தான். “விழி, மார்னிங் ப்ரேக் ஃபஸ்ட் சாப்பிடலை இல்லை. இந்த மாஸாவைக் குடி...” என அவளிடம் நீட்டினான். அவனையும் பழச்சாறையும் மாறி மாறி பார்த்தவள், “வேணாம்‌...” என்றாள்.
“ப்ம்ச்... சாப்பிடாம இருக்கக் கூடாது. இந்த ஜூஸையாவது குடி விழி...” தனா வற்புறுத்த அவனை ஊன்று கவனித்தவள், “நான் பேக்க்ட் ஜூஸ் குடிக்க மாட்டேன்!” என்றாள் அழுத்தமாய். அப்போதுதான் அவனுக்கும் அது உறைத்தது, நினைவிற்கும் வந்தது.
“சாரி, சாரி. நான் ப்ரெஷ் ஜூஸ் வாங்கிட்டு வரேன்” என தனா கீழே இறங்கச் செல்ல, “வேணாம். காரை எடுங்க. வீட்டுக்குப் போகலாம்...” என்றாள்.
“ஹே! ரியலி சாரி விழி. நான் மறந்துட்டேன்...” என்றான்.
“தெரியுமே! நீங்க மறந்துருப்பீங்கன்னு...” என்றவள் குரலின் பாவனை புரியாது விழித்தான் தனஞ்செயன்.
“காரை எடுங்கப் போகலாம்...” என அவள் மீண்டும் கூறியதும், மகிழுந்தை இயக்கினான்.
இருவரும் வந்து இறங்கியதும் லீலா மலரைப் பிடித்துக்கொண்டார். “என்ன பொண்ணுமா நீ... அவன் சொன்னா, நீயும் உடனே கிளம்பி போய்டுவீயா? பெரியவங்க நாங்க எதுக்கு இருக்கோம்? இனிமே இப்படியெல்லாம் செஞ்ச, உதை விழும்...” என்று மகனிடம் பாடிய சுப்ரபாதத்தை மருமகளிடமும் பாடிவிட்டார். ராமலிங்கமும் மருமகளிடம் கண்டிப்புடன் பேச, தலையை மட்டும் அசைத்துக் கேட்டுக்கொண்டாள். சிறிது நேரத்திலே மலரின் பெற்றவர்களும், மாறனும் வந்துவிட்டனர்.
நேற்றைய தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளைப் பற்றி சிறிது நேரம் பேசினர். லீலா தனாவின் மீதான தவறுக்கு மன்னிப்பு கேட்க, லோகநாயகி தன் மகளின் மீதுதான் தவறு என அவரும் வருந்திப் பேசினார். பின்னர் வரவேற்பு பற்றிய பேச்சுக்கள் ஆரம்பமானது. சிறிது நேரம் பேசிவிட்டு அவர்கள் விடை பெற்றனர்.

இன்னும் பத்து நாட்களில் வரவேற்பு வைக்கலாம் என நேற்றே தேதி குறித்திருக்க, இரண்டு வீட்டிலும் அதற்கான ஏற்பாடுகள் துரிதகதியில் நடை பெற்றன. லோகநாயகியும் சாரதியும் மகளுக்கு செய்ய வேண்டியதை சிறப்பாய் செய்துவிட வேண்டும் என அனைத்தையும் பார்த்துப் பார்த்து வாங்கினர்.

மலருக்கு புது உடைகள் நகைகள் என வாங்க மகளை அழைத்தார் லோகநாயகி. பெற்றவர்கள் மீதான அவளின் கோபம் துளிகூட குறையவில்லையே. வரமாட்டேன் என்றுவிட்டாள். எத்தனை முறை கெஞ்சியும் வற்புறுத்தியும் அதட்டியும் கூட ஒரு வார்த்தை கூட அவர்களிடம் பேசவில்லை மலர்விழி. கோபத்தை மட்டும் முதன்மையாய் காண்பிக்க, சரி சிறிது நாட்கள் சென்றால் அவள் சரியாகிவிடுவாள் என பெற்றவர்களும் விட்டுவிட்டனர். அவளுக்கான அனைத்தையும் தாய், தந்தை இருவரும் வாங்கிவிட்டனர்.

வரவேற்பிற்கு யார் யாரை அழைக்க வேண்டும் என முடிவு செய்து, நெருங்கிய சொந்தங்களை முதலில் அழைத்து முடித்துப் பின்னர், அக்கம் பக்கத்தினர் என அனைவரையும் அழைத்தனர்.

ராமலிங்கமும் லீலாவதியும் கூட, திருமணப் பெண் மாறிய விஷயம் நிறைய பேருக்குத் தெரியாது என உறவினர்கள் அனைவரையும் அழைத்தனர். இப்போதும் விஷயம் கேள்விப்பட்டு ஒரு சிலர் அழைத்து விசாரிக்க, அதனாலே உறவினர்கள் அனைவரையும் அழைத்துவிட்டனர்.

தனா எப்போதும் போல இயல்பாய் மலரிடம் பேச விழைய, அவள் அதற்கெல்லாம் பிடி கொடுக்கவே இல்லை. அவனை சகமனிதனாய் கூட மதித்து பதில் கூறவில்லை. இரவு உறங்க வரும்போது மட்டும்தான் அவளுக்கு அறை ஒன்று இருப்பதே நினைவிற்கு வரும். மற்றபடி அவனிடம் பேச்சை தவிர்த்தாள். தனாவும், சரி இப்போதைக்கு பிரச்சனை எதுவும் வேண்டாம். அவளது கோபம் குறையட்டும். அவளுக்கும் என்னைப் புரிந்து கொள்ள, இந்தத் திருமணத்தை ஏற்றுக்கொள்ள நேரம் வேண்டும் என மலருக்கான இடைவெளியை வழங்கினான். ஆனால், அவன் அறியாதது புரிந்தாலும் புரியாவிட்டாலும் அவளுடைய அவனுக்கான நடவடிக்கைகள் எப்போதும் இப்படித்தான் இருக்குமென.

லீலாவதி மலரைத் தன் அறைக்கு அழைத்து, தன் மாமியார் தனக்குக் கொடுத்த நகைகளைத் தன் மருமகளிடம் கொடுத்தார்.

“ஏன் அத்தை, இந்த நகையெல்லாம் போடலைன்னா, உங்க வீட்டு மருமகளா என்னை அக்செப்ட் பண்ண மாட்டீங்களா?” விளையாட்டாய்க் கேட்பது போலத்தான் வினவினாள் மலர்விழி.
“ச்சு… என்ன பேச்சு மலர் இது? அப்படியெல்லாம் நாங்க சொல்வோமா? இது நம்மக் குடும்பத்து மரியாதை டா. மேடைல நிக்கும்போது எல்லாரும் பொண்ணு மாப்பிள்ளையை
தானே பார்ப்பாங்க. அவங்க பேசுற அளவுக்கு நம்ம இடம் கொடுக்கக் கூடாது இல்ல?” என்றார் லீலா.
“என்ன பேசுவாங்க அத்தை? ராமலிங்கமும் லீலாவும் இல்லாத வீட்ல இருந்து பொண்ணை எடுத்துட்டாங்கன்னா?” என வினவியளை லீலா முறைத்தார்.
“ஏன் மலர் இப்படியெல்லாம் பேசுற? இதெல்லாம் என் மாமியாரும் அம்மாவும் எனக்கு கொடுத்தது. அவங்க கொடுக்கும்போது என்கிட்ட இதைத்தான் சொன்னாங்க. நானும் உன்கிட்ட அதான் சொல்றேன். இது நம்ம வீட்டு பாரம்பரியம். இதை நகையா பார்க்காத! நம்ம வீட்டு மரியாதையா பாருடா...” என்றார்.
“ஏன் அப்படி பார்க்கணும் அத்தை? இந்த நகை, பணத்துக்கு மட்டும்தான் மதிப்பா? மனுஷங்களுக்கு மரியாதை தர மாட்டாங்களா?” ஆதங்கமாய்க் கேட்டாள்.
“சில கேளவிக்கு எல்லாம் பதில் இல்லை. அது போலதான் இந்தக் கேள்விக்கும் பதில் இல்லை. இதுக்கெல்லாம் காரணம் இந்த சமூகம்தான். பணக்காரங்கன்னா, இப்படித்தான் இருப்பாங்கன்னு ஒரு பிம்பத்தை உருவாக்கிட்டாங்க. பிடிச்சாலும் பிடிக்கலைனாலும், இந்த சமூககத்துல நீயும் ஒரு ஆளா மாறிட்ட. அதனால இதெல்லாம் கத்துக்கணும். வீட்ல கோடி ரூபாய் கடன் இருந்தாக் கூட, நீ எங்கப் போனாலும் இந்த நகையெல்லாம் போட்டுட்டுதான் போகணும். நம்மளோட கடனை வெளிய காட்டக் கூடாது. ஏன்னா, நம்ம பணக்காரங்க, நம்மகிட்ட இருபத்தினாலு மணி நேரமும் பணம் இருக்குன்னு நம்புறவங்களை ஏமாத்தக் கூடாதுல்ல? அதுல ஒரு படி குறைஞ்சா கூட, நம்மகிட்ட எதுவுமே இல்லைன்னு சொல்லிடுவாங்க‌. பணக்காரங்க எப்பவுமே பணக்காரங்களாதான் இருக்கணும். அப்படி இல்லைன்னா, நமக்கான மரியாதை கிடைக்காது! அப்புறம் போற வர்ற எல்லாரும் உதவின்னு வந்து இளக்காரமா பேச ஆரம்பிச்சுடுவாங்க. இதெல்லாம்
போக போக பழகிடும் உனக்கு...” என கேலியாய் சிரித்தவரை மலரும் பார்த்தாள்.

அவளுக்கும் புரிந்தது. பணக்காரர்கள் என்று வெளியே இருந்து நாம் அவர்கள் வாழ்க்கையை எளிதாக விமர்சிக்கிறோம். ஆனால், அவர்களுக்குத் தங்களை விட அதிகமாய் மனஉளைச்சல்களும் பிரச்சனைகளும் இருக்கத்தான் செய்கின்றன. இருந்தாலும் இல்லாவிட்டாலும் எந்த இடத்திலும் தாங்கள் இறங்கிவிடக் கூடாது என அவர்களது கஷ்டமும் புரிந்தது. மருமகள் கையில் நகையைத் திணித்தார் லீலாவதி.
“சரி, ரொம்பக் கேள்வி கேட்டு என்னை டயர்டாக்குற. போ, போய் எதாவது படிக்க இருந்தா, படி...” என்றார் லீலா.
அவர் கொடுத்த நகைகளை எல்லாம் எடுத்துக்கொண்டு தங்களது அறைக்குச் சென்ற மலர்விழி அலமாரியில் வைத்துப் பூட்டினாள். அலைபேசி நீண்ட நேரம் அழைத்துக்கொண்டே இருக்க, எடுத்துப் பார்த்தாள். மாறன்தான் அழைத்தான். அழைப்பைத் துண்டித்துவிட்டாள். வீட்டிலிருந்து வந்த அன்று அவர்களுடன் பேசியது. அதற்குப்பின் தாய், தந்தை, மாறன் என யார் அழைத்தாலும் மலர்விழி அழைப்பை ஏற்கவே இல்லை.
படபடவென குறுஞ்செய்திகள் மாறனிடமிருந்து வந்து விழ, அனைத்தையும் திறந்து பார்த்தாள். லோகநாயகிதான் மகளுக்கு வாங்கிய நகைகளையும் சீர் பொருட்களையும் புகைப்படமெடுத்து அவளுக்கு அனுப்ப சொன்னார்‌.
எல்லா புகைப்படத்தையும் பார்த்தவள், நொடியில் மாறனுக்கு அழைத்துவிட்டாள். “என்ன மலர், நகையெல்லாம் உனக்குப் பிடிச்சிருக்கா? அம்மா, அப்பா செலக்ட் பண்ணாங்க!” என்றான்.
“மொத்தம் எத்தனை பவன் நகை மாறா?” அவன் கேள்விக்குப் பதிலளிக்காத மலர்விழி, வேறொரு வினாவைத் தொடுத்தாள்.
மாறன், “ம்ம்... ஒரு முப்பது பவன் இருக்கும் மலர்...” என்றதும் மனதில் படபடவென கணக்கைத் தீட்டினாள். பின்னர் வாங்கிய, கட்டில், மெத்தை என இதரப் பொருட்களின் விலையைத் தோராயமாக மதிப்பிட்டாள்.
சத்தம் இல்லாது போக, “மலர், லைன்ல இருக்கீயா?” என மாறன் இருமுறை வினவ, “இருக்கேன்... இருக்கேன்...” என்றவள், “இவ்வளோ பணம் அம்மா, அப்பாக்கு ஏது மாறா?” என வினவினாள்.
“அது... அது...” மாறன் திணற, “அதெல்லாம் உனக்கு எதுக்குடி இப்போ? நகையெல்லாம் பிடிச்சிருக்கா இல்லையா ஒத்தை மகன்னு ஆசையா வாங்கிட்டு வந்தா, ஏதுன்னு கேள்வி கேட்குறா!” எனப் பொரிந்தார் லோகநாயகி.
“மாறா நான் உன்கிட்ட கேட்டேன். இதெல்லாம் வாங்க கிட்டத்தட்ட இருபது லட்சம் ஆகியிருக்கும். உங்ககிட்ட ஏது இவ்வளோ பணம்?” என மலர் தன் பொறுமையை இழுத்துப் பிடித்துப் பேசினாள்.
“அதெல்லாம் தெரிஞ்சுட்டு நீ என்னடி பண்ண போற?” மீண்டும் லோகநாயகி கோபத்தில் கத்த, “மாறா...” என மலரின் கத்தல் மாறனின் காதை பிளந்தது.
“சும்மா கத்தாத டி. வீட்டை அடகு வச்சு பணத்தை வாங்குனோம்...” மாறன் கூற, அதைக் கேட்ட மலர்விழி கோபத்தில் கொதித்தாள்.
“வீட்டை அடகு வச்சு எல்லாத்தையும் என்கிட்ட கொடுத்துட்டு, உங்க அம்மா, அப்பாவோட ரோட்ல போய் படுக்கப் போறீயா மாறா?” மலர்விழி பல்லைக் கடித்து வினவினாள்.
“நாங்க ரோட்ல படுக்குறோம்? வீட்ல படுக்குறோம். அதைப்பத்தி நீ கவலைப்பட தேவையில்லை!” லோகநாயகி இரைந்தார். இங்கே இவளுக்கு சத்தியமாய் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தன்னால் வீட்டினர் இத்தனை பெரிய தொகைக்கு கடனாளியாகிவிட்டனரே என மனம் துடித்தது. கண்டிப்பாக மாறனின் சம்பளத்தையும் தந்தையுடைய சம்பளத்தையும் சேர்த்துக் கட்டினால் கூட, குறைந்தது ஐந்து வருடங்களாவது வேண்டும் கடனை அடைக்க. என்ன செய்வது? யார் மீது கொட்டுவது ஆத்திரத்தை எனத் தெரியாது கையிலிருந்த அலைபேசியை அழுத்திப் பிடித்தவள், “எந்த தைரியத்துல இவ்வளோ பெரிய கடனை வாங்குனீங்க? எப்படியும் இதை அடைக்க ஐஞ்சு ஆறு வருஷம் ஆகும்...” என்றாள்.
“அதெல்லாம் எங்கப் பாடு பத்து லட்சம். நீ இப்படி கேள்வி கேட்குறதை எப்போ நிறுத்தப் போறீயோ...” என்ற லோகநாயகி அழைப்பைத் துண்டித்திருந்தார். அவரது பேச்சில் மேலும் இவளுக்குப் கோபம் பொங்கியது. மாறனுக்கு இருமுறை அழைத்தாள். அழைப்பு ஏற்கப்படவில்லை என்றதும், துப்பட்டாவை எடுத்துப் போட்டுக்கொண்டு வீட்டிற்குச் செல்லலாம் என்ற நினைப்புடன் திரும்ப, தனஞ்செயன் நின்றிருந்தான். இத்தனை நேரப் பேச்சுக்கள் அனைத்தையும் அவன் கேட்டுக்கொண்டுதான் இருந்தான்.
மலர்விழியின் கையைப் பிடித்தவன், “கொஞ்சம் பொறுமையா இரு மலர். நான் என்னென்னுப் பேசுறேன்...” என்றான்.
“என்ன பேசப் போறீங்க? என்ன கேட்கப் போறீங்க? எங்க வீட்டை அடகு வச்ச கதையையா?” லோகநாயகி மீதிருந்த கோபம் இப்போது கணவன் புறம் திரும்பியது.
“கத்தாம கொஞ்சம் நேரம் அமைதியா இரு டி...” என அதட்டலிட்ட தனாவிடமிருந்து சத்தியமாய் கையை உருவ முடியவில்லை மலரால்‌.
தனா அழைப்பு விடுத்ததும் மாறன் ஏற்றான். “சொல்லு டா...” மாறன் பேச,
“மாறா, வீட்டை ஏன் அடகு வச்சீங்க?” என நேரடியாய் விஷயத்திற்கு வந்தான் தனஞ்செயன்.
“ப்ம்ச்... அந்தப் பேச்சு இப்போ எதுக்கு. விடு டா!” என்றான் மாறன்‌.
“மாறா, கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லு டா. இப்போ வீட்டை வச்சு நீங்க சீர் செய்யணும்னு என்ன அவசியம்? சொல்லு...” என தனா அதட்டலாய்க் கேட்டான்.
“டேய், அதெல்லாம் உனக்குப் புரியாது டா. உனக்கொரு அக்காவோ, தங்கையோ இருந்திருந்தா புரிஞ்சு இருக்கும். இதெல்லாம் முறை. எல்லாத்தையும் செய்யணும். அதான் இரண்டு குடும்பத்துக்கும் நல்லது. நாங்க இப்போ செய்றதை உங்களை கம்பேர் பண்ணா, கம்மி டா!” என்றான் மாறன்‌.
“ப்ம்ச்... ஏன் டா, ஏன் இப்படியெல்லாம் பேசுற? தேவி அத்தைப் பேசுனதை இன்னும் நீங்க மறக்கலையா? அவங்க ஏதோ தெரியாம பேசிட்டாங்க டா!” என்ற தனஞ்செயனுக்கும் மாறன் செயலில் அதிருப்திதான்.

அவனுக்கும் தெரியுமே மாறன் வீட்டின் நிதி நிலைமை பற்றி. சிறு வயதிலிருந்து சிறுக சிறுக சேமித்து ஆசையாய் கட்டிய வீடு. அந்த வீட்டுக் கடனை கூட பிள்ளைகள் படிப்பு, வீட்டு செலவு என எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டு கட்டுவதற்கு எத்தனை கஷ்டப்பட்டார் சாரதி என அவன் அறிந்ததே. இப்போது மலர்விழியின் படிப்பு கூட, கல்வி கடன் மூலமாகத்தான் கட்டுகிறார்கள் என மாறன் ஒருமுறை கூறியது உபரித்தகவலாய் நினைவு வந்தது.
“தனா, இனிமே இதைப் பத்தி பேசுறதுன்னா, கால் பண்ணாத...” என மாறன் அழைப்பைத் துண்டித்துவிட, தனஞ்செயன் அலைபேசியைப் பார்க்க, அவனை முறைத்துக் கொண்டிருந்தாள் மலர்விழி. அவளை நிமிர்ந்து பார்த்தான்.
“போதுமா? உங்க அத்தை பேசுன பேச்சுல எங்க வீட்ல இருக்க எல்லாரும் கடனாளி ஆகிட்டாங்க” என்றாள் ஆத்திரம் மிகுதியில். மனதுக்குள் அத்தனை வேதனை. தான் நன்றாக இருக்க வேண்டும் என மீண்டும் ஒரு கடனான வாழ்க்கை. எப்போதடா வீடு கட்டிய கடன் முடியும் என சாரதியும் லோகநாயகியும் புலம்புவதை எத்தனை முறை கண்டிருக்கிறாள். அந்தக் கடன் முடிந்தப் பிறகு இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாய் சேமிப்பைத் தொடங்கியிருந்தார் லோகநாயகி. மீண்டுமொரு கடன். கண்டிப்பாய் இதை கட்டி முடிவதற்குள் ஓய்ந்து விடுவார்களே என மனம் கனத்துப் போக, அது வார்த்தையிலே வெளிப்பட்டது.
“மலர், நான் தான் சொன்னேனே. வரதட்சணை எதுவும் வேண்டாம்னு” தனா கூற வர, அவன் முன்னே கையை நீட்டியவள், “போதும்... இந்த மாதிரி பேச்செல்லாம் நம்ப நான் தயாரா இல்லை. எப்படியோ எங்க வீட்டை கடன்ல தள்ளிட்டு நான் இங்க சந்தோஷமா வாழணும். அதுவும் இல்லாம, நான் போட்ற நகை, சீர்ல தானே உங்க வீட்டு மானம், மரியாதை எல்லாம் இருக்கு... அப்போ இதுவே கம்மிதானே?” என்றாள் நக்கலாய்.
“மலர், வார்த்தையை கொஞ்சம் அடக்கிப் பேசு!” என்ற தனஞ்செயனுக்கும் கோபம் சுறுசுறுவென வரத் துவங்கியது.
“என்ன அளந்துப் பேசணும். இதானே உண்மை...” என்றவள், தன் கழுத்தில் கிடந்த தாலியைத் தூக்கி, “நீங்க கட்டுன இந்தத் தாலிக்கு இல்லாத மரியாதை... உயிரும் உடம்புமாய் நிக்கிற எனக்கு இல்லாத மரியாதை, எங்க அம்மா, அப்பா செய்ற சீர்லயும், நகையிலயும் தானே இருக்கு?” எனப் பேச பேச, கோபத்தில் அவளது இரண்டு தோளையும் பிடித்திருந்தான் தனா.
“கோபம் வருதா உங்களுக்கு? சே... நியாயமான கோபம்தானே? எங்க வீட்ல செய்றது பத்தலைன்னா சொல்லுங்க. வேற எதுவும் இருந்தா வித்து உங்க வீட்டு மரியாதையை நிலை நிறுத்திடலாம்...” என்றவளைத் தனஞ்செயன் கோபத்தில் உதறியிருந்தான். எந்த பிடிமானமும் இல்லாதிருந்த மலர்விழி அப்படியே அறையின் மூளைக்குச் சென்று விழுந்திருக்க, மேஜை அவளது கையில் பட்டென அடித்தது. அதில் துடித்துப் போனாள்.
தொடரும்...



































































 
Well-known member
Messages
556
Reaction score
389
Points
63
அச்சச்சோ எப்படி பேசினாலும் தப்பாகுதே
 
Top