• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
997
Reaction score
2,809
Points
93
இரவு - 38

திருமணம் முடிந்து நான்கு நாட்கள் கடந்திருந்தது. உறவினர்கள் எல்லாம் விடைபெற, வீடு பழைய நிலைக்கு திரும்பி இருந்தது.
அன்று யுகி அலுவலகம் கிளம்பி சென்று விட, நிவியும் வித்யாவும் அமர்ந்து கதை பேசிக் கொண்டிருந்தனர்.

இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே பிரசவத்திற்கு இருக்க, இது போன்ற நேரத்தில் பயணம் வேண்டாம் என சந்த்ரு ஆனந்தியிடம் கூற, அவரும் ஜோதியிடம் கூறி நிவேதாவை அனுப்ப மறுத்து விட்டார். இங்கேயே ஒரு மருத்துவமனையில் பிரசவம் பார்த்துக் கொள்ளலாம் எனவும், குழந்தை பிறந்து சில நாட்கள் கழித்து அவளை தாய் வீட்டிற்கு அனுப்பலாம் என அவர் முடிவு செய்ய, ஜோதி தான் என்ன செய்வது என திணறி விட்டார்.

ஒரே மகள் உடனிருந்து பார்த்துக் கொள்ள எண்ணம் இருந்தாலும், வீரபாண்டியை அங்கே தனியே விட முடியாது. முன்பானால் சாந்தி பார்த்துக் கொள்வார் என விட்டு விடலாம். ஆனால், இப்போது அப்படி இல்லையே! ஆனந்தியிடம் வற்புறுத்தி நிவியை அழைத்து செல்ல விருப்பம் இல்லை. முறைப்படி பெண் வீட்டில் தான் பிரசவம் பார்க்க வேண்டும் என மனதில் நினைத்தாலும், சூழ்நிலை சரியில்லை.

சென்னையிலிருந்து திருச்சி செல்ல குறைந்தது ஆறு மணி நேரமாவதாகும். அவ்வளவு நேர பயணம் பிரசவ நெருக்கில் பிரச்சனைகளை வரவழைக்க கூடும் என எண்ணியவர், கணவனுடன் திருச்சிக்கு இரண்டு நாட்கள் முன்பே கிளம்பி விட்டார். நிவிக்கு பிரசவ வலி வந்து அவளை மருத்துவமனையில் சேர்த்த பிறகு, இங்கு வந்து அவளுக்கு ஒரு வாரம் துணையாக இருந்து விட்டு, அப்படியே வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம் என மனதில் நினைத்துக் கொண்டார்.

சந்த்ரு மிகவும் கவனமுடன் தான் இருந்தான். பேச்சுக்களுக்கு பஞ்சமாகி போன போதும், தன்னிருப்பை அவளருகில் உறுதி செய்து கொண்டான். நான்கு நாட்களும் மனைவியை தன்னருகே வைத்துக் கொண்டான். அலுவலகம் தவிர அனைத்து நேரமும் மனைவி அருகில் தான் இருந்தான். அது ஒரு வித மனநிம்மதியை கொடுத்தது அவனுக்கு.

யுகியும் சந்த்ருவும் அலுவலகம் சென்றிருக்க, ஆனந்தியும் சாந்தியும் சமையலில் மும்முரமாகி இருந்தனர். அழகர் தன்னறையில் இருந்தார்.

"அக்கா, இங்க பாருங்க... நான் அழகா இருக்கேன்ல்ல?" நிவேதாவின் கல்யாண புகைப்படங்களை அப்போது தான் இருவரும் புரட்டிக் கொண்டிருந்தனர்.

"ஆமா! அப்போவே உன் கண்ணு என் மாமா பின்னாடி தான் போல!" நிவி வினவ, உதட்டைக் கடித்துக் கொண்ட வித்யா, அடுத்த புகைப்படத்திற்கு தாவி விட்டாள்.

"உன்னோட ஆல்பம் எப்போ வரும்?" நிவி வினவ,

"தெரியலை கா. நான் கேட்டேன். மினிமம் ஒரு வாரம் ஆகும்னு சொன்னாங்க!" என்ற வித்யா, நேரத்தைப் பார்த்தாள்.

"அக்கா, டைம் ஆகிடுச்சு. உங்களுக்கு பசிக்கலையா?" என வினவ, அவளை முறைத்தாள் நிவி.

"இப்போ தான் நான் குடிச்ச ஜூஸ் உள்ள போய் இருக்கு. அதுக்குள்ள சாப்பாடா? என் புள்ளை பாவம்! ரொம்ப கொடுமைபடுத்துறாங்க ரெண்டு பாட்டியும் சேர்ந்து!" என சுகமாக அலுத்துக் கொண்டாள் நிவி. ஆனந்தி மற்றும் சாந்தியின் கவனிப்பு அப்படி. அவளை ஒரு இடம் நகரவிடுவதில்லை. உணவு கூட அறைக்கு எடுத்து கொண்டு வர, சண்டையிட்டு தான் மேஜையில் அமர்ந்து உண்டாள்.

"நிவி, நேரமாச்சு. சாப்ட வா!" சாந்தி உள்ளே வர, இருவரும் ஒரே நேரத்தில் சிரித்து விட்டனர். சாந்தி அவர்களை கேள்வியாக பார்க்க, "ஒன்னும் இல்லை அத்தை. இப்பவே பேரக்குழந்தையை ரொம்ப கவனிச்சுக்குறீங்களாம். நிவி அக்கா சொல்லீட்டு இருந்தாங்க!" என்ற வித்யாவுடன் நிவியும் மெதுவாக எழுந்து வெளியே வந்தாள்.

"அது அப்படி தான் நிவி. நம்ம வீட்டோட முதல் வாரிசு. எங்களுக்கும் ஆசை இருக்கும் இல்லை. நான் தூக்கி வளர்த்த நிவிக்கு இப்போ ஒரு குழந்தை வரப்போகுது இல்லை!" முகம் முழுவதும் புன்னகையுடன் பதிலளித்தார் சாந்தி.

நிவி உணவு உண்ண அமர, "வித்யா, நீயும் உட்காந்து சாப்பிடு" என்றார் சாந்தி.

"இல்லை அத்தை, அவர் கூட சேர்ந்து சாப்பிட்டுக்குறேனே!" என அவள் கூற, சாந்தி தலையை அசைத்தார். இந்த நான்கு நாட்கள் யுகி வீட்டில் தான் இருந்தான். எனவே எப்போதும் அவனுடன் தான் உண்டாள். இன்றும் அலுவலகம் சென்று விட்டான். சாந்தி மதிய சாப்பாட்டிற்கு வீட்டிற்கு வருமாறு கூறி விட்டார்.


அழகரும் நிவியும் சாப்பிட்டு எழ, இரண்டு தாய்மார்களும் தங்களது புதல்வனை எதிர்நோக்கி காத்திருந்தனர்.

"ம்மா... ஒரு சின்ன வொர்க் இருக்கு. முடிச்சுட்டு இங்கேயே எப்பவும் போல சாப்ட்டுக்குறேன். நீங்க எனக்கு வெயிட் பண்ணாதீங்க!" என்று ஆனந்திக்கு அழைத்து கூறிய சந்த்ரு, மனைவி சாப்பிட்டதை உறுதி செய்து கொண்டான். எப்போதும் மதிய உணவை பணிமனையில் தான் உண்பான் . இந்த இரண்டு நாட்களாக தான் வீட்டிற்க்கு வர சொல்லி அழைத்தார் ஆனந்தி. சரி என வந்தவனால், அன்று வர முடியவில்லை. வேலை இழுத்துக் கொண்டது.

சிறிது நேரத்திலே யுகி சாப்பிட வந்து விட்டான். "வா யுகி!" என சாந்தி அழைக்க, உணவு மேஜையில் அமர்ந்தான். வித்யா பரிமாறிவிட்டு, அவனருகில் அமர்ந்து உண்ண துவங்கினாள்.

"நிவி, நீ போய் கொஞ்சநேரம் தூங்கு" என அவளை அறைக்கு அனுப்பி விட்டார் ஆனந்தி.

யுகி சாப்பிட்டுக் கொண்டிருக்க, "அத்தை!" என அழைத்தாள் நிவேதா.

"இதோ வரேன் நிவி!" என ஆனந்தி வர, அதற்குள்ளே நிவிக்கு பிரசவ வலி வரத் துவங்கியது. அவளது முகத்தைப் பார்த்தே கணித்தவர், "என்னடா நிவி வலிக்குதா?" என கேட்டுக் கொண்டே அருகில் வர, அவளது பனிக்குடம் உடைந்து உடையெல்லாம் நனைந்து விட்டது.

"அத்தை, வலி வந்துடுச்சு!" என்றவள், பொறுக்க முடியாது பல்லைக் கடித்தாள்.

"ஒன்னும் இல்லை டா!" என அவளை ஆற்றுப்படுத்தியவர், "யுகி!" என அழைத்தார். அவர் குரலின் பதற்றத்தை உணர்ந்த யுகி, கையை கழுவி விட்டு அறைக்குள் ஓடினான்.

"நிவிக்கு வலி வந்துடுச்சு பா! நீ போய் வண்டியை எடு!" என்று கூற, பரபரவென்று செயல்பட்டவன், மகிழுந்தை இயக்க, மெதுவாக நடந்து வந்து நிவி அமர, அவளுக்கு இருபுறமும் ஆனந்தியும் சாந்தியும் அமர்ந்தனர். வித்யா முன்புறம் அமர, யுகி வாகனத்தை மருத்துவமனை நோக்கி செலுத்தினான்.

"அத்தை... அத்தை. அவருக்கு கால் பண்ணுங்க!" என உதட்டை கடித்துக் கொண்டு நிவி கூற, வித்யா சந்த்ருவுக்கு அழைத்து கூறி விட்டாள். செய்தியை கேட்டதும் செய்த வேலையை விட்டு விட்டு மருத்துவமனையை நோக்கி விரைந்தான் சந்த்ரு.

அழகர் மற்றொரு மகிழுந்தில் வந்து கொண்டிருந்தார். ஜோதிக்கும் வீரபாண்டிக்கும் தகவல் சொல்லப்பட, அவர்களும் கிளம்பி விட்டனர்.

"அத்தை, வலிக்குது அத்தை. முடியலை!" என்ற நிவியின் கண்களிலிருந்து நீர் வழிந்து கொண்டே இருக்க, அதை பார்த்த யுகி வேகமெடுத்தான்.

"மாமா, பார்த்து போங்க!" என வித்யா தான் அவன் கையை பிடித்தாள். சில பல நிமிடங்களில் மருத்துவமனை வந்து விட, யாருக்கும் காத்திராமல், நிவியை கைகளில் தூக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தான் யுகி. சரியாக சந்த்ருவும் வந்து விட்டான்.

"டாக்டர்..." யுகி ஓடும் முன், சந்த்ரு கத்தி அழைக்க, அவரசம் புரிந்த செவிலியர்கள் நிவியை தூக்கி படுக்கையில் படுக்க வைத்து அறைக்குள் அழைத்து செல்ல, அடுத்த நிமிடமே மருத்துவர்கள் உள்ளே நுழைந்தனர்.

எல்லோரும் வாயிலில் காத்திருக்க, வெளியே வந்த மருத்துவர், "பனிக்குடம் உடைஞ்சு போச்சு சார். ஆப்ரேஷன் தான் பண்ணணும். நர்ஸ் கொடுக்குற பேப்பர்ல சைன் பண்ணுங்க. இன்னும் ஒரு 15 நிமிஷத்துல ஆப்ரேஷன் தியேட்டர்க்கு கூட்டிட்டு போய்டுவோம். பயப்பட்றதுக்கு ஒன்னும் இல்லை!" என கூறி செல்ல, அவர் பின்னே வந்த செவிலியர், "பேஷண்டோட ஹஸ்பண்ட் யாரு?" என வினவினார்.

"நான் தான்!" பதற்றத்துடன் சந்த்ரு முன்னே வர, "இதுல அவங்க டீடெயில்ஸ் பில்லஃப் பண்ணிடுங்க அண்ட் எல்லாத்தையும் படிச்சு பார்த்து சைன் பண்ணுங்க!" என ஒரு காகிதத்தையும் எழுதுகோலையும் கையில் கொடுத்து விட்டு சென்றார்.

அதை வாங்கி நிரப்ப சென்ற சந்த்ரு வியர்வையில் குளித்திருந்தான். கைகள் நடுங்கியது. அதை நிரப்ப முயல, மனதில் பயம் கவ்விக் கொண்டது. அறுவை சிகிச்சை என்பது இப்போது பரவலாக காணப்பட்டாலும், ஏனோ மனம் தவித்துக் கொண்டிருந்தது. இத்தனை நேரம் அருகிலிருந்த இதை கவனித்துக் கொண்டிருந்த யுகி, சந்த்ரு அருகில் சென்று அவன் கையை அழுத்தினான்.

"அவளுக்கு ஒன்னும் ஆகாது. நல்லபடியா வருவா!" என்ற யுகியிடம் அத்தனை நிதானம் குரலில். திடமாக இருந்தவனிடம் அதிக நம்பிக்கை இருந்தது எந்த பிரச்சனையும் வந்து விடாது என. அவன் முகத்தையே சந்த்ரு பார்க்க, அவன் கையிலிருந்த காகிதத்தை வாங்கி விறுவிறுவென நிரப்பிய யுகி, "சைன் பண்ணு சந்த்ரு. டைமாச்சு" என கூற, கைகள் நடுங்க கையெழுத்திட்டான் சந்த்ரு.

அதை வாங்கிக் கொண்ட செவிலியர் நகர, இரண்டு நிமிடத்தில் அறையிலிருந்து நிவேதாவை சிகிச்சைக்காக உடையை மாற்றி வெளியே அழைத்து வந்தனர். வெளியே வந்தவளின் விழிகள் கணவனை தேட, சந்த்ரு அவளருகில் ஓடி வந்தான்.

அவன் கைகளை இறுக்கமாக பற்றிக் கொண்டவள், "சந்த்ரு, நானும் பாப்பாவும் பத்ரமா வந்துடுவோம். நீங்க பயப்படாதீங்க!" என்றவள், யுகியை அழைத்தாள். அவளுக்கு மறுபுறம் யுகேந்திரன் வந்து நிற்க, மற்ற அனைவரும் சுற்றி நின்று கொண்டனர்.

"சந்த்ரு, நான் உங்க கிட்ட இதுவரைக்கும் சொன்னது இல்லை. யுகி மாமா எனக்கு சின்ன வயசுல இருந்து ரொம்ப பிடிக்கும். என்னை கூட பொறக்காத தங்கச்சியா தான் பார்த்துக்கிட்டாரு. அவரை நான் நேசிக்கிறேன் உண்மை. அதே போல உங்களையும் அளவுக்கு அதிகமாக நேசிக்கிறேன். உங்கள்ல ஒருத்தருக்காக ஒருத்தரை என்னால எப்பவும் விட முடியாது. நீங்க ரெண்டு பேரும் எனக்கு வேணும்!" என்றவள் விழிகளில் நீர் தேங்கி நின்றது. மனைவியை வேதனையுடன் பார்த்தான் சந்த்ரு.

அவர்கள் இருவரது கையையும் ஒன்றாக வைத்தவள், "எப்பவும் நீங்க ரெண்டு பேரும் பிரிய கூடாது. எனக்காக... நீங்க மாமாவை ஏத்துக்கோங்க சந்த்ரு. அவர் ரொம்ப நல்லவர்..." என்று சந்த்ருவிடம் கூறியவள், "மாமா, நீயும் அவரை நல்லா பார்த்துக்கணும். உன் அளவுக்கு அவருக்கு பக்குவம் இல்லை. குழந்தை மாதிரி தான். அடிக்கடி சண்டை போடுவார். அவரே வந்து பேசிடுவார்!" என்றவளின் வாய் மீது கையை வைத்த சந்த்ரு, "லூசு மாதிரி பேசாத டி... ஒழுங்கா போய் என் புள்ளையோட வா!" என்றான்.

"கண்டிப்பா, இப்படியே எல்லாம் உங்களை ஜாலியா விட்டுட்டுப் போக மாட்டேன்!" என்றவளின் இதழிலும் லேசாக சிரிப்பு எட்டிப் பார்த்தது.

"மாமா, நான் போய்ட்டு குழந்தை பிறந்து வர சில மணி நேரம் ஆகலாம். அதுவரை என் புருஷனை பார்த்துக்கோ!" என்றவள், "அத்தை, மாமா, பேரப்புள்ளையை பார்க்க ஆவலா இருங்க, வரேன்!" என்றவளுக்கு தொலைந்திருந்த இடுப்பு வலி மீண்டும் ஆரம்பமானது.

"போதும்! டைமாச்சு‌. டாக்டர் திட்டுவாரு. பேஷண்ட்டை கூட்டீட்டு வாங்க!" என தலைமை செவிலியர் சத்தம் போட்டதும், நிவி அறுவை சிகிச்சை அரங்கிற்குள் அழைத்து செல்லப்பட, "சார், அவங்களோட நகை!" என சந்த்ரு கையில் தாலியையும் நிவியின் மற்ற அணிகலன்களையும் செவிலியர் சேர்த்து கொடுத்து விட்டுச் செல்ல, நாற்காலியில் அமர்ந்து விட்டான்.

அவனுக்கு அருகில் வந்த ஆனந்தி, "சந்த்ரு, அப்போவே நீ எனக்கு ஆப்ரேஷன் மூலமா தான் டா பொறந்த. பயப்படாத டா!" என்று கூறினார். தலையை லேசாக அசைத்தான். மற்றவர்களும் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தனர்.

இரண்டு மணி நேரங்கள் கடந்தும், அறுவை சிகிச்சை முடியவில்லை. பெரியவர்கள் எல்லாம் அமைதியாக காத்திருந்தனர். யுகி கூட நம்பிக்கையாக அமர்ந்து இருக்க, சந்த்ரு தான் அவ்வப்போது அறை வாசலில் நின்று பார்த்து வந்தான். அப்படியே சென்று ஜன்னலின் ஓரம் நின்றவனின் கண்கள் சிவந்திருக்க, என்றோ படித்த செய்திகளும் கேட்ட விஷயங்களும் இன்று பூதாகரமாக மிரட்டியது ஆடவனை.

அவனைப் பார்த்துக் கெண்டிருந்த
யுகி அவனருகில் சென்றான்.
"சந்த்ரு!" என அவன் தோளை தொட்ட கணம், யுகியை அணைத்திருந்தான் சந்த்ரு. இதை எதிர்பாரத யுகி திகைத்துப் பின், அவன் முதுகில் ஆதரவாக தடவினான். ஏதோ ஒரு பற்றுக்கோல் தேவைப்பட்டது சந்த்ருவுக்கு. அந்த நேரம் எதுவும் நினைவில் இல்லை. உள்ளே இருக்கும் தன்னுடைய இரண்டு உயிர்கள் மட்டுமே பிரதானமாக தெரிந்தது.

"நீ பயப்படாத சந்த்ரு. அவ ரொம்ப தைரியமா தான் உள்ள போய்ருக்கா!" என அவன் முதுகில் தட்டினான் யுகேந்திரன். பெரியவர்கள் எல்லாம் இதை ஆச்சரியமாக பார்த்தனர். அழகர் முகம் மலர்ந்து விட்டது.

'கிடைத்தற்கு அரிய காட்சி!' என வித்யா ஆச்சரியம் கலந்த சிரிப்புடன் அதை தன் அலைபேசியில் புகைப்படம் எடுத்துக் கொண்டாள்.

கதவு திறக்கும் சத்தம் கேட்க, எல்லோரும் ஆவலாக திரும்பினர். செவிலியர் கையில் பஞ்சு பொதியை போல குழந்தையை சுத்தம் செய்து துணியில் சுற்றி எடுத்து வந்தார்.

"பெண் குழந்தை பிறந்து இருக்கு சார். பேபியும் மதரும் சேஃப்!" என கூறி குழந்தையை கொடுக்க, சந்த்ரு தான் குழந்தையை வாங்கினான். அவனிடம் வந்ததும் சிணுங்கிக் கொண்டே கண்களை சிமிட்டினாள் குழந்தை. அதில் மனது தொலைந்து போனது. ஆசையாக தன் மகளின் நெற்றியில் முத்தமிட்டான்.

"அப்பா!" என தன் தந்தையிடம் நீண்ட நாட்களுக்கு பின்னால் பேசினான். தன் மகிழ்ச்சியை அவரிடம் பகிர்ந்து கொண்டான். குழந்தையை கையில் வாங்கிய அழகர் கொஞ்ச, அடுத்தாக சாந்தி, ஆனந்தி என குழந்தையை கையிலேந்தினர்.

யுகி புன்னகையுடன் தூர நின்று பார்க்க, "யுகி, வா..." என ஆனந்தி அவன் கையில் குழந்தையை கொடுத்தார். யுகி முகத்தில் அந்த நொடி சந்தோஷம் தாளவில்லை. தன் நிவியின் குழந்தை... தனக்கு நான்கு வயதாக இருக்கும் போது நிவி கைக்குழந்தை. அவளை சுற்றி சுற்றி வந்த நினைவுகள் இப்போது கண்முன் நிழலாடின. குழந்தை சந்த்ருவை உரித்து வைத்திருந்தாள்.

வெளியே வந்த மருத்துவர், "ஷி இஸ் பைன். பட் அனஸ்தீஷியா கொடுத்து இருக்கதால, இப்போ கான்ஷியஸ் இல்லை அவங்களுக்கு. ஒரு டூ ஹவர்ஸ் கழிச்சு நினைவு வந்துடும். அப்புறம் ஒவ்வொருத்தரா போய் பாருங்க." என்றுவிட்டு அவர் செல்ல, குழந்தையை செவிலியர் வாங்கி சென்று விட்டார்.

"யுகி, நீயும் வித்யாவும் டீ குடிச்சிட்டு எல்லாருக்கும் வாங்கிட்டு வாங்க!" என சாந்தி அனுப்ப, அவர்கள் இருவரும் பணிமனையை நோக்கி சென்றனர்.

தேநீரை அருந்தியவர்கள், மற்றவர்களுக்கும் வாங்கி வர, என நேரம் சென்றது. இரண்டு மணி நேரம் கழித்து சந்த்ரு தான் முதலில் உள்ளே சென்றான்.

நிவி படுத்துக் கொண்டே உள்ளே நுழைந்தவனை பார்த்து எழுந்து அமர முயற்சி செய்ய, "எழாத நிவி!" என தானியங்கி படுக்கையை சரி செய்ய, அது சற்று மேல்புறம் வளைந்து கொடுக்க, அமர்ந்தது போல இருந்தாள் நிவி.

அவளருகில் வந்து குனிந்தவன், எதுவும் பேசாமல் அவளது இதழில் அழுத்தமாக முத்தமிட்டு, நெற்றியில் முத்தமிட்டான். "சந்த்ரு!" என அவன் கையை பிடித்துக் கொண்டாள் பெண். அவன் கண்களின் சிவப்பே கூறியது ஆடவனின் தவிப்பை. சில நிமிடங்கள் மௌனமாக கழிய, குழந்தையை எட்டிப் பார்த்தாள். தொட்டிலில் தன் பெற்றவர்களை முட்டைக் கண்ணை விரித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

சந்த்ரு தூக்கி குழந்தையை நிவி அருகில் படுக்க வைக்க, அவள் முகத்தில் புன்னகை.
"அப்படியே உங்களை மாதிரியே இருக்கா!" நிவி கூற, சந்த்ருவும் தலையை அசைத்தான். தன்னை உரித்து வைத்திருக்கும் குழந்தையை பார்த்தவன், "ஆனால் குணம் உன்னை மாதிரி தான் இருக்கும்!" என இதழை சுழித்துக் கொண்டு கூற, நிவி சிரித்தாள்.

அவன் வெளியே செல்ல, யுகியும் வித்யாவும் வந்தனர்.
"மாமா..." என நிவி அவன் கைகளைப் பிடித்துக் கொண்டாள். அவள் கைகளை அழுத்திய யுகி, "அப்படியே உன் புருஷனை உரிச்சு வச்சுருக்கா உன் பொண்ணு!" என்றான்.

"என் புருஷன் மட்டும் இல்லை. உங்க தம்பியும் தான்!" என நிவி முறைக்க, யுகியின் இதழ்களில் புன்னகை. பின் பெரியவர்கள் வந்து பார்த்து விட்டு சென்றனர்.

நேரம் இரவை தொட, ஜோதியும் வீரபாண்டியும் வந்து விட்டனர். பேத்தியை பார்த்து பூரித்துப் போய் விட்டனர். ஜோதி மட்டும் நிவி உடன் அறைக்குள் இருக்க, யுகியும் சந்த்ருவும் வெளியே இருக்கையில் அமர்ந்து கொண்டனர். மற்றவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டான் யுகி.

இரவில் நாற்காலியில் உறங்கும் சந்த்ரு, பகலில் மனைவியையும் குழந்தையையும் விட்டு நகரவே இல்லை. ஒரு வாரம் அலுவலகத்திற்கு அவன் செல்லவில்லை. அதோ இதோ என ஒரு வாரம் முடிந்து நிவியை வீட்டிற்கு அழைத்து வர, இரண்டு மாமியார்களும் ஆரத்தி சுற்றி புது பேத்தியை வரவேற்றனர்.

நாள் முழுவதும் சொந்தகாரர்களும் நிவியின் நண்பர்களும் என வந்து பார்த்து விட்டு சென்றனர். இரவு குழந்தைக்கு பால் கொடுத்து விட்டு அவளை தொட்டியில் போட்டு தாலாட்டி தூங்க வைத்த நிவி கட்டிலில் அமர, அவளிடம் பேச தனிமையை தேடிக் கொண்டிருந்த சந்த்ருவுக்கு, அப்போது தான் தனிமை கிட்டியது.

அவளருகில் சென்றவன், "சாரி நிவி!" என மனைவியை இறுக்கி அணைத்திருந்தான். அவன் உடல் மொழியில் மாற்றத்தை உணர்ந்தவள், "சந்த்ரு..." என பதட்டமாக அழைத்தாள்.

"சாரி நிவி, நான்... நான் உன்கிட்ட டைவர்ஸ் கேட்டது தப்பு தான்!" என்றவன் வார்த்தைகளில் இத்தனை நாளுக்கான பிரிவின் வலியும் வேதனையும் தொனித்தது.

சிறிது நேரம் அமைதியாக இருந்தவள், அவனை தன்னிடமிருந்து பிரித்தாள்.
"சின்ன தப்பு இல்லை... ரொம்ப பெரிய தப்பு. எப்படி நீங்க எடுத்ததும் டிவோர்ஸ் போகலாம்னு உங்க மேல ரொம்ப கோபம். ஒரு வார்த்தை ஏன்னு உங்களால் என்கிட்ட கேட்க முடியலை இல்லை?" என்றவளுக்கு விழிகள் பனித்து விட்டது.

"சாரி டி!" சந்த்ரு பதற,

"தப்பு தான்... நான் தப்பு செய்யலைன்னு எல்லாம் சொல்ல மாட்டேன். நான், என்னோட அத்தை, என் யுகி மாமான்னு சுயநலமா இருந்துட்டேன். ஆனால், உங்களை மனசார காதலிச்சு தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். உங்களை தெரியுறதுக்கு முன்னாடி எந்த இன்டென்ஷனும் எனக்கு கிடையாது. அது... அத்தையை பத்தியும் மாமா பத்தியும் இடையில ஒரு நாள் தெரிஞ்சது. குடும்பத்தை சேர்த்து வைக்க தான் ஆசைப்பட்டேன். என்னோட பாதை தப்பா இருக்கலாம். ஆனால், நோக்கம் ஒரு போதும் தப்பு இல்லை!" என்றவள் வழியும் கண்ணீரை துடைத்துக் கொண்டாள். மௌனமாக மனைவி பேச்சை கேட்டுக் கொண்டிருந்தான் சந்த்ரு.

"உங்க கிட்ட சொல்லி இருக்கலாம். ஏன் நான் சொல்ல சரியான நேரம் பார்த்து காத்துட்டு இருந்தேன். ஆனால், நீங்க... நீங்க யுகி மாமா மேல வச்ச வெறுப்பு அப்போ தான் எனக்கு தெரிஞ்சது. எனக்குள்ள ஒரு பயம்... எங்க யுகி மாமா விஷயத்தை கல்யாணத்துக்கு முதல்ல உங்க கிட்ட சொன்னா, என்னோட குடும்பத்தை பங்கு போட வந்துட்டான்னு யுகி மாமா கிட்ட சண்டை போட்ருவீங்களோன்னு. யுகி மாமா மேல உங்களுக்கு இருக்க வெறுப்பு அதிகமாகிடும்னு மனசு சொல்லுச்சு. இந்த பிரச்சனையால நமக்கு இடையில் எதுவும் பிரிவு வர நான் விரும்பலை. நான் ஒரு பாதையை தேர்ந்தெடுத்த நடக்க ஆரம்பிச்சுட்டேன். நீங்க... நீங்க என் கூட கையை பிடிச்சு நடந்து வரீங்க... எப்போ எப்படின்னு எல்லாம் தெரியாது. ஆனால், எனக்குள்ள நீங்க அதிகமா வேரூன்றிட்டீங்க. முத முதல்ல உங்களை பார்த்தப்போ பிடிக்கலை... அப்புறம் உங்களோட இன்னசென்ட் பிடிச்சது. ஒரு ப்ரெண்டா அக்செப்ட் பண்ண முடியும்னு தோணுனப்போ தான் நீங்க காதல்னு வந்து நின்னீங்க. என்ன சொல்லன்னு தெரியலை. வேண்டாம்னு சொல்லீட்டு போய்ட்டேன். அப்புறம் தான் சாந்தி அத்தை விஷயம் தெரியும். உங்களுக்கு கால் பண்ணி பேசுனேன். இந்த இடத்துல நான் ரொம்ப சுயநலமானவ! என்னை மன்னிச்சுடுங்க... நான் பண்ண முத தப்பு... மே பீ உங்க கிட்ட அப்பவே உண்மையை சொல்லி இருக்கலாம்!" என்றவள் குரல் உடைந்து விடுவது போல இருந்தது.

தன்னை தேற்றியவள், "உங்க கிட்ட பழகலாம்னு தோணுச்சு. எந்த நம்பிக்கைல பழக ஆரம்பிச்சேன்னு தெரியலை. எப்போ உங்களை காதலிக்க ஆரம்பிச்சேன்னு தெரியலை. பட், ரொம்ப நேசிச்சேன். என்னையே சுத்தி வர்ற இந்த மனுஷனை எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்துச்சு. எனக்காக, எனக்காகன்னு பார்த்து பார்த்து செய்ற உங்க மனசு எனக்கே எனக்கா வேணும்னு தோணுச்சு. என்னோட சாந்தி அத்தைக்கும் அழகர் மாமாவுக்கும் சம்பந்தம் இல்லைன்னா கூட, இந்த சந்தருவை என்னால விட்டுட முடியும்னு தோணலை! எஸ்...ஐ லவ் யூ... ரொம்ப ரொம்ப காதலிச்சேன்... காதலிக்கிறேன். காலம் முழுசும் காதலிப்பேன். உங்களை உங்களுக்காக தான் நான் காதலிச்சு கல்யாணம் பண்ணேன்! யுகி மாமா மேல எனக்கு இருக்கது பாசம், என் மாமான்னு ஒரு உரிமை, அவருக்கான இடம் என் வாழ்க்கையில தனி. அதே மாதிரி உங்க மேல நான் வச்சிருக்க காதல் உண்மை. உங்க இடத்தை அவரால் நிரப்ப முடியாது, அவர் இடத்தை உங்களால் முடியாது!" என்றவள், "நான் செஞ்ச தப்பை மன்னிச்சுடுங்க. இனிமே எதுனாலும் பேசி தீர்த்துக்கலாம். நாலு அடி கூட அடிங்க. ஏன்டி இப்படின்னு சண்டை கூட போடுங்க. ஆனால், பிரிவு மட்டும் வேணாம். உங்களுக்கு எப்படியோ தெரியலை. வரட்டு கௌரவம்! ஈகோ... என்னை வேண்டாம்னு சொன்ன மனுஷன் வேணாம்னு தான் போனேன். ஆனால், நீங்க இல்லாத ஒவ்வொரு நொடியும் எவ்ளோ கஷ்டப்பட்டு போச்சுன்னு எனக்கு மட்டும் தான் தெரியும். நம்ம குழந்தை விஷயத்தை கூட முதல்ல உங்க கிட்ட சொல்லணும்னு நினைச்சேன். ஆனால், கோபம்... யாரையும் சொல்ல விடலை... பிரிவு ரொம்ப கொடுமையானது. அதை மட்டும் இனிமே கொடுக்காதீங்க!" என்ற நிவி முகத்தை மூடிக் கொண்டு தேம்ப, சந்த்ருவின் விழிகளிலும் நீர் கோர்த்தது.

அவளது கைகளை பிரித்தவன், அவள் நெற்றியில் முத்தமிட்டு, தன்னோடு இறுக்கி அணைத்துக் கொண்டான். மனைவியின் வார்த்தைகளே காதில் ரீங்காரமிட்டது. 'உங்களை உங்களுக்காக தான் நான் காதலிச்சு கல்யாணம் பண்ணேன்!' அந்த ஒரு வார்த்தையே அத்தனை சமாதானங்களை அள்ளி விதைத்திருந்தது. மனம் சமன்பட்டது. "சாரி டி பொண்டாட்டி... இனிமே இப்படி பிரிஞ்சு போக எல்லாம் சொல்ல மாட்டேன். சண்டையோ சமாதானமோ, அது நம்ம ரெண்டு பேர் குள்ள தான்... மூனாவது மனுஷங்க வரை எல்லாம் போகாது!" என அவள் முகம் பார்த்துக் கூற, "போங்க... போங்க. எனக்கு நீங்க வேணாம். டைவர்ஸ் கேட்டவரு தானே?" என நிவி இப்போது முறைக்க, ஆடவன் இதழ்களில் புன்னகை மின்ன, அவளை தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.

"நடந்தது நடந்து போச்சு டி. அந்த நேரத்து கோபம், ஈகோ எல்லா தான் டைவர்ஸ் வர போய்டுச்சு. பட், இனிமே இந்த தப்பை ரெண்டு பேருமே பண்ண கூடாது. இந்த பிரச்சனையை இத்தோட விட்டுடலாம். யார் தப்பு? யார் சரின்னு எல்லாம் பார்க்க வேணாம். விடு... நீ சொன்ன மாதிரி தான். சாந்திமாவுக்கும் உங்க மாமாவுக்குமான அடையாளம் உரிமை கிடைச்சுடுச்சு. அவங்க நம்ம குடும்பத்துல ஒரு ஆள். அந்த பாதை தப்பு... உன்னோட நோக்கம் தப்பு இல்லை. உன்னை அதிகமாக நேசிச்சேன். ஆனால், ஒரு நொடி கூட ஏன்னு உன்னோட செயலுக்கான காரணத்தை கேட்கலை. நம்பிக்கை! அந்த நொடி சுக்கு சுக்காகிடுச்சுன்னு நினைச்சேன். பட், என் நிவி தப்பு இல்லை. எப்பவுமே அவ சரி..." என்றவன், "எனக்கொரு சத்தியம் மட்டும் பண்ணிக் கொடு!" என்றான்.

அவன் மார்பில் தலை வைத்தவாறே நிமிர்ந்து பார்த்தாள். "நமக்கு இடையில் ஒளிவு மறைவு எதுவும் இருக்க கூடாது. தப்போ சரியோ எதுவா இருந்தாலும் என்கிட்ட நீ சொல்லிடணும். எந்த ஒரு சூழ்நிலையிலும் நான் உன்கூட இருப்பேன். என்னை நம்பணும். யுகி... யுகி அவர் மேல எதோ ஒரு வெறுப்பு. அது... உன் மேல நான் வச்ச லவ்னால கூட இருக்கலாம். இனிமே அதை கொஞ்சம் மாத்த முயற்சி பண்றேன். அதுக்காக உடனே எல்லாம் முடியாது. சரியா?" என கேட்டவனின் உதட்டில் எட்டி அழுத்தமாக முத்தமிட்டாள் மனைவி. இருவரும் அப்படியே கட்டிலில் சரிய, அவளை தன்னோடு இறுக்கிக் கொண்டான் சந்த்ரு. அவன் கை மீது தன் கையை வைத்த நிவி, "சத்தியமா இனிமே எதுனாலும் உங்க கிட்ட சொல்லாம செய்ய மாட்டேன்!" என்றாள். அவள் கைகளை விடவே இல்லை சந்த்ரு. சில நிமிடங்கள் மௌனமாக கழிய, மனைவியை நேராக படுக்க வைத்தவன், அவளை அணைத்துக் கொண்டான். நிவி நிமிர்ந்து பார்க்க, அவள் விழிகளில் முத்தமிட்டவன், "தூங்கு டி!" என்க, இருவரும் ஒருவர் அருகில் மற்றொருவர் சுகமான நித்திரையை தழுவினர்.

தொடரும்...
 
Well-known member
Messages
409
Reaction score
303
Points
63
சூப்பர் பொண்ணு வந்ததும் தான் பேசி சமாதானமாகிட்டாங்க
 
Top