• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

இதயம் 18

Administrator
Staff member
Messages
627
Reaction score
891
Points
93
இதயம் 18

“ஏய், என்னோட பிஸ்கட்டை எடுக்காதடா!” என்று வித்யா கத்த, “ஒரே ஒரு பிஸ்கட் தானே எடுத்தேன். ரொம்ப பண்ணாதடி,” என்று முரளி அவளிடமிருந்து வாங்க முயற்சித்தான்.

“வேணும்னா வாங்கி சாப்பிடு. ஏண்டா என்னதை எடுக்கிற? உனக்கு வாங்கிக் கொடுத்ததை நல்லா மொக்கிட்டு, இப்ப என்னதை எடுக்குறியா?” என்று வித்யா கோபமாக உரைக்க, “ஒரு பிஸ்கட் தானே கொடுத்தால் என்னடி” என்பது போல் முரளியும் விடாது பார்த்தான்.

“ஒரு பிஸ்கட்டுக்கு எதுக்கு ரெண்டு பேரும் இப்படி அக்கப்போர் பண்ணிட்டு இருக்கீங்க? முரளி, வா. காசு தரேன், போய் வாங்கிக்கோ,” என்று மாதவி அறைக்குள் எட்டிப் பார்த்துக் கூற, “எனக்கு அதெல்லாம் வேணாம். அவகிட்ட இருக்க பிஸ்கட் தான் வேணும்,” என்று நின்றான் முரளி.

“அது சரி, நீ வேணும்னே அவக்கிட்ட வம்பு இழுக்கற முரளி,” என்று மாதவி முறைக்க, “ஆமாம்மா, வேணும்னா வேற வாங்கிச் சாப்பிடச் சொல்லு. எதுக்கு என்கிட்ட வந்து திருடிட்டு இருக்கான்?” என்று முரளியைப் பார்த்து வக்கணை காட்டினாள்.

இவர்களது சண்டையில் உறங்கிக் கொண்டிருந்த மலர் எழுந்து, “ஏண்டா, ரெண்டு பேரும் என் உயிரைப் போட்டு வாங்கிட்டு இருக்கீங்க? எனக்கு என்னைக்காவது ஒரு நாள் தான் லீவு கிடைக்குது. அதுலயும் தூங்க விடாம இம்சை பண்றீங்க. தொல்லை பண்ணாம வெளியே போய் சண்டை போடுங்க,” என்று திட்டிவிட்டு மீண்டும் உறக்கத்தைத் தொடர, இருவரும் கப்சிப் என்றாயினர்.

“ஆமா, அவளுக்கே என்னைக்காவது ஒரு நாள் தான் லீவு கிடைக்குது. அதையும் தொந்தரவு பண்ணாம இரண்டு பேரும் அமைதியா இருங்க. முரளி, என் கூட வா. நான் பிஸ்கட் வாங்கித் தரேன்,” என்று மாதவி அழைத்துச் சென்றார்.

இங்கு மலர் முகத்தைப் போர்வையால் போர்த்திக்கொண்டு விட்ட உறக்கத்தைத் தொடரும் முயற்சியில் இருந்தாள்.

ரிஷி நான்கு நாட்கள் அவளுக்கு விடுமுறை கொடுத்துவிட்டு ஊருக்குச் சென்றிருக்க, மலர் மீனை விற்றுவிட்டு வந்து நிம்மதியாய் உறங்கிக் கொண்டிருந்தாள். அதுவும் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆகிப் போக, மீன் விற்றதும் வேறு வேலை இன்றி சாப்பிட்டு உறங்கிக் கொண்டிருந்தாள்.

மதிய உணவைக்கூட உண்ண எழாது உறங்கியவள், மாலை நான்கு மணிக்குத்தான் கண்விழித்தாள்.

எழுந்தவள் குளியலறை சென்று முகம் கழுவி வர, அதனைக் கண்ட மாதவி, “எந்திருச்சிட்டியா, மலரு? டீ போட்டு தரவா?” என்று கேட்க, “ஹ்ம்ம்... கொடும்மா,” என்றவள் தொலைக்காட்சியை ஓடவிட்டு கூடத்தில் அமர்ந்தாள்.

இரண்டு நாட்கள் எந்த வேலையும் செய்யாது உறங்கி ஓய்வெடுப்பது அவ்வளவு சுகமாக இருந்தது. கடைசியாக இதேபோல் ஓய்வெடுத்தது எப்போது என்று நினைவில் இல்லை. தந்தை இறந்த பிறகு முழுவதும் அவளுக்கு ஓட்டம் தானே.

இந்த விடுமுறைக்குக் காரணம் ரிஷிதான். அவன் ஊருக்குச் செல்லவில்லை என்றால் தனக்கு விடுமுறை கிடைத்திருக்குமா என்று எண்ணம் வர, ரிஷியின் முகம் மனக்கண்ணில் வந்து போனது.

உடனடியாக இதழில் ஒரு புன்னகையும் தோன்றியது. காரணம் ரிஷிதான். மலர் அன்று மகிழுந்தில் வைத்து பேசிவிட்ட பிறகு, ரிஷி அவளிடம் அவனது விருப்பத்தை வைத்து எதையும் பேசிவிடவில்லை. முன்பு போலவே நடந்து கொண்டான்.

தான் பேசிய பிறகு அவன் கூறிச் சென்ற வார்த்தையில் திகைத்தவளுக்கு, இன்னும் எப்படி விளக்கிக் கூறுவது என்று புரியவில்லை. அதனை எண்ணிக் கவலையோடு வலம் வர, அதற்கெல்லாம் அவசியமில்லை என்பதுபோல ரிஷி அமைதியாகிப் போனான்.

மலரும் ஒரு வழியாக அவருக்குப் புரிந்துவிட்டது போல என்று நிம்மதி அடைந்து, வழக்கம்போல அவனது வீட்டிற்குப் பணிக்கு சென்று வந்தாள். அதன் பிறகு மூன்று நாட்கள் கழித்து தான் ஊருக்குச் செல்வதாகக் கூறி, மலருக்கு நான்கு நாள் விடுமுறை கொடுத்துவிட்டு சென்றிருந்தான் ரிஷி.

அந்த விடுமுறையைத்தான் சுகமாய் அனுபவித்துக் கொண்டிருந்தாள் கருணை மலர்.

தாய் தேநீரைக் கொண்டு வந்ததும், அதன் வாசத்தை உள்ளிழுத்தவாறு ஒரு மிடறு பருகியவள், “எங்கம்மா, தம்பி தங்கச்சிங்க மூணு பேரையும் காணோம்?” என்று வினவிட, “பக்கத்துல ஒரு சூப்பர் மார்க்கெட் திறந்து இருக்காங்கல்ல... அங்க ஐஸ்கிரீம் ஏதோ ஆஃபர்ல கொடுக்கிறாங்களாம். அதை வாங்கிச் சாப்பிடப் போயிருக்குதுங்க,” என்று மாதவி பதில் அளித்தார்.

“ஓ... என்ன ஆஃபர்மா?” என்று மலர் கேட்க, “ஏதோ பாதி விலைக்கு கொடுக்கிறாங்கன்னு சாகித்யா சொன்னா. ஆளுக்கு ஒரு ஐஸ்கிரீம் வேணும்னு நூத்தம்பது ரூவா வாங்கிட்டுப் போயிருக்குதுங்க,” என்று மாதவி பதில் மொழிந்தார்.

“சரி மா,” என்று கேட்டுக் கொண்டவள், தேநீரை அருந்தியபடியே தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்த பாடலைப் பார்த்திருந்தாள்.

அப்போது அவளது அலைபேசி இசைக்க, “நமக்கு யாரு போன் பண்றது?” என்று எண்ணியபடி எழுந்து சென்று பார்க்க, ராதா அழைத்திருந்தார்.

“ஐயையோ, இந்தம்மாவா? இவங்க எதுக்கு எனக்கு கால் பண்றாங்க?” என்று அலறியவள், அழைப்பை ஏற்று காதில் பொருத்த, “மலர், வீட்டுக்கு வா,” என்று ராதாவின் குரல் அதிகாரமாய் ஒலித்தது.

“மேடம்?” என்றவள் புரியாது கேட்க, “நான் வீட்லதான் இருக்கேன். மலர், கிளம்பி வா,” என்று ராதா மீண்டும் அழைத்தார்.

“சரிங்க மேடம்,” என்று அழைப்பைத் துண்டித்தவள், “சார் நாலு நாள் லீவ் கொடுத்துட்டுப் போனாரு. எதுக்கு இந்தம்மா வந்திருக்காங்கன்னு தெரியலையே,” என்று சலித்தவள், “ரிஷி சார் வீட்டுக்குப் போயிட்டு வரேன்மா,” என்று மாதவியிடம் குரல் கொடுத்தாள்.

“எதுக்குடி? அதான் சார் ஊருக்குப் போயிருக்காருன்னு சொன்னியே?” என்று மாதவி வினவிட, “சாரோட அம்மா வந்திருக்காங்க போல. ஏதோ வேலைக்காக அவங்கதான் கூப்பிட்டாங்க. வேலை செய்யதான் கூப்பிடுவாங்கன்னு நினைக்கிறேன். போய் முடிச்சுட்டு வரேன்,” என்று பதில் அளித்தாள்.

“ரெண்டு நாள் கொடுத்த லீவைக்கூட அனுபவிக்க விடமாட்றாங்க,” என்று அலுத்துக் கொண்ட மாதவி, “ பார்த்து போய்ட்டு வா,” என்றார்.

“லீவு கொடுக்கிறேன்னு சொல்லி இப்படி ஆசை காட்டி மோசம் பண்றாங்களே! எதுக்கு இந்தம்மா திடீர்னு வந்துருக்காங்க? ஏதும் வேலையா இருக்குமா? சார் கூட நம்ம கிட்ட சொல்லலையே. இந்தம்மா வேற ஆயிரம் நொனநாட்டியம் பார்க்குமே... எப்படி சமாளிக்கப் போறேனோ? முருகா, காப்பாத்துப்பா!” என்று புலம்பியபடி ரிஷியின் வீட்டை அடைந்தவள், அழைப்பு மணியை அழுத்தினாள்.

கதவைத் திறந்த ராதா, “கூப்பிட்ட உடனே வரமாட்டியா? ஏன் இவ்வளவு நேரம்?” என்று கேட்க, ‘இந்த வந்தவுடனே சிடுசிடுக்க ஆரம்பிச்சுருச்சு இந்தம்மா’ என்று மனதிற்குள் அலறியவள், “நடந்து வர நேரமாயிருச்சு, மேடம்,” என்று பதிலளித்தாள்.

“எதையாவது ரீசன் சொல்றதே வேலையா வச்சிரு,” என்று திட்டியவர் உள்ளே செல்ல, மலரும் அமைதியாக அவரது பின்னே சென்றாள்.

ராதா கூடத்தில் இருந்த நீள்விருக்கையில் அமர, அவரது அருகில் ஒரு நடுத்தர வயது நபர் அமர்ந்திருந்தார். அவருடைய வயது ஐம்பது இருக்கும்.

மலருக்கு அவர் யார் என்று தெரியவில்லை. அதனைத் தெரிந்துகொள்ள விருப்பமும் கொள்ளாதவள், “ராதா மேடம், உங்களுக்கு டீ போட்டுக் கொண்டு வரவா?” என்று வினவினாள்.

“அதெல்லாம் இனிமே நீ செய்யத் தேவையில்லை. உன்கிட்ட பேசணும். அதான் வர சொன்னேன்,” என்ற ராதாவின் வார்த்தைகளைக் கேட்டு, மலர் அவரைப் புரியாது நோக்கினாள்.

“என்ன, எதுவுமே தெரியாத மாதிரி பாக்குற? பிளான் பண்ணி எல்லா வேலையும் பார்த்துட்டு, இப்ப நல்லவ மாதிரி முகத்தை வச்சுக்கிட்டா நான் நம்பிடுவேனா?” என்று ராதா ஒருவித கோபமும் வெறுப்பும் கலந்து கேட்க, மலருக்கு உண்மையாகவே அவர் கூறுவதன் அர்த்தம் புரியவில்லை.

“மேடம்...” என்றவள், தான் என்ன தவறு செய்தோம் என்று தெரியாது ராதாவைக் காண, “என்ன, மேடமா? உனக்கு எவ்வளவு கொழுப்பு இருந்தா இந்த மாதிரி ஒரு வேலையைப் பார்த்திருப்ப? என் அண்ணி முதல்லயே சொன்னாங்க, குப்பத்துக் காரிய எல்லாம் வேலையில வைக்காதன்னு. நான்தான் கேக்கல,” என்றவர் ஒருவித அசூயையுடன் மலர் மீது பார்வையைப் பதித்தார்.

மலரை அந்தப் பார்வை வெகுவாய் தாக்கிட, என்ன தவறு செய்தோம் என்று தெரியாது பேச்சு வாங்குவது அவளுக்குக் காயத்தை ஏற்படுத்தியது.

முயன்று முகத்தைச் சாதாரணமாக வைத்தவள், “நான் என்ன தப்பு பண்ணேன்னு தெரிஞ்சுக்கலாமா, மேடம்? எதுக்கு என்ன இப்படி பேசிட்டு இருக்கீங்க?” என்று திடப்படுத்தி கேட்டுவிட, “செய்றதெல்லாம் செஞ்சுட்டு எப்படி ஒண்ணுமே தெரியாத மாதிரி கேக்குறா பாருங்கண்ணா!” என்று அருகில் இருந்தவரிடம் பொறுமினார் ராதா.

உண்மையாகவே மலருக்கு எதுவும் புரியவில்லை. ஆனால் ராதாவிற்கு அது மலரின் நடிப்பாகவே தெரிந்தது.

ஒருமுறை அவளை அமைதியாக நோக்கியவர், “பாக்குறதுக்கு கருப்பா, கேவலமா இருக்க. கொஞ்சம் நல்லா இருந்தா கூட பரவால்ல. என் வீட்டு வேலைக்காரியா வரக்கூட உனக்குத் தகுதி இல்லை. ஏதோ அன்னைக்கு கெஞ்சி கேட்டியேன்னு போனா போகுதுன்னு வேலை போட்டுக் கொடுத்தா, நீ என் தலை மேலேயே கை வைப்பியா?” என்று ஆங்காரத்துடன் ராதா கேட்டிட, தன்னுடைய புறத்தோற்றத்தைப் பற்றிய அவரது கூற்றில் அடிபட்டுப் போனவள், “எதுக்கு, மேடம், தேவையில்லாம என்ன இப்படி பேசிட்டு இருக்கீங்க?” என்று கேட்டுவிட்டாள்.

“என்ன தேவையில்லாம பேசினேன்? என்ன பேச வச்சது நீதான்டி! உன்னோட லெவல் என்னன்னு உனக்குத் தெரியுமா? இன்னைக்கு வேலைய விட்டு துரத்தினா, ஒரு மாசம் கூட உன்னால வீட்டுக்கு சோறு போட முடியாது. பிச்சைதான் எடுப்ப. நீ என் மகன் மேல ஆசைப்படுறியா?” என்று ராதா ஆவேசமாகக் கேட்க, “என்ன?” என்று பார்த்தவளின் முகத்தில் ஏகமாய் திகைப்பு.

“என் பையனோட லெவல் என்னன்னு தெரியுமா உனக்கு? எங்க ஸ்டேட்டஸ் தெரியுமா? அவனுக்குப் பொண்ணு கொடுக்க எத்தனை இன்டஸ்ரியலிஸ்ட் பணக்காரங்க, ஏன், ஜமீன் வம்சத்தில்கூட நீ நான்னு போட்டி போட்டுட்டு வராங்க. அப்படிப்பட்டவனுக்கு நீ பொண்டாட்டியாக ஆசைப்படுறியா? அவனைக் கல்யாணம் பண்ணிக்க ஒரு சதவீதமாவது உனக்குத் தகுதி இருக்கா?” என்று ஆத்திரம் நிறைந்த குரலில் வினா தொடுக்க, மலரிடம் பதில் இல்லை.

அவரது பேச்சில் ஏகமாய் அதிர்ந்து போயிருந்தாள். தான் எப்போது அவரது மகன் மீது ஆசைப்பட்டோம் என்று அவளுக்குப் புரியவில்லை.

“பதில் சொல்லு! இதுக்குத்தான் இந்த மாதிரி லோ கிளாஸ் பீப்பிளை வீட்டுக்குள்ள விடக்கூடாதுன்னு சொல்றது. ச்சை!” என்ற அவரது பார்வை அருவருப்புடன் மலர் மீது படிய, அவள் கூசி போனாள்.

“உன் முகத்தை என்னைக்காவது கண்ணாடில பாத்திருக்கியா நீ? கூலி வேலை பாக்குறவன் கூட உன்னை கல்யாணம் பண்ணிக்க யோசிப்பான். ஆனா, உனக்கு வெளிநாட்டில் போய்ப் படிச்சிட்டு வந்த என் பையன் கேக்குதா? எங்களோட சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா உனக்கு? எங்க வீட்ல வேலை பாக்குற ஆளுங்களே அஞ்சு பேர் இருப்பாங்க. நீ வீட்டு வேலை பார்த்து உன்னோட குடும்பத்தைக் காப்பாத்திட்டு இருக்க. உனக்கு என் மகன் மேல ஆசையா?” என்று ஏகமாய் முறைத்துப் பார்க்க, மலருக்கு விழிகளில் நீர் தேங்கியது.

இதற்காகத்தானே இதுபோல பேச்சு வாங்க நேரிடும் என்று தானே ரிஷியிடம் படித்துப் படித்துக் கூறினாள், “உனக்கும் எனக்கும் எந்தக் காலத்திலும் ஒத்து வராது,” என்று. ஆனால், தான் பயந்து கொண்டிருந்த ஒன்று நடந்துவிட்டது என்று கருத்த முகத்துடன் நின்று கொண்டிருந்தாள்.

“பதில் சொல்லு!” என்று ராதா உச்சபட்ச கோபத்தில் அதட்ட, “நான் எதுவும் பண்ணல, மேடம். சார் தான் என்னைப் பிடிச்சிருக்குன்னு சொன்னாங்க. ஆனா, நான் எப்பவோ இதெல்லாம் ஒத்து வராதுன்னு சொல்லிட்டேன், மேடம்,” என்று அழுகையை அடக்கிய குரலில் தன்னிலை எடுத்துக் கூறினாள்.

“அப்படியே அழுது நல்லவ மாதிரி நடிக்காதடி. இதுதான உன்னோட பிளான்? பணக்காரனைப் பார்த்து வளைச்சுப் போட்டு, குடும்பத்தோட செட்டில் ஆகுற ஐடியாவில்தானே இப்படி பண்ண?” என்று ராதா கோபத்தில் விழிகளால் அவளை எரிக்க, “நிச்சயமா இல்ல, மேடம். எனக்கு என்னோட தகுதி என்னன்னு தெரியும், மேடம். தகுதிக்கு மீறி நான் என்னைக்கும் ஆசைப்பட மாட்டேன்,” என்றவளது குரல் தழுதழுத்தது.

“அப்படி உன்னோட தகுதி என்னன்னு உனக்குத் தெரிஞ்சிருந்தா, என் பையன் மேல ஆசைப்பட்டு இருப்பியா? இல்ல, அவனை மயக்கி உன் பின்னாடி சுத்தவிட்டு இருப்பியா?” என்று கேட்க முடியாத வார்த்தைகளால் தணலை அள்ளிக் கொட்ட, “போதும், நிறுத்துங்க, மேடம்! எனக்கும் இதுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. நான் என்னைக்குமே உங்க மகனை அப்படி பார்த்ததில்லை. இனி பார்க்கவும் மாட்டேன்,” என்று மலரும் லேசான கோபம் எட்டிப் பார்த்த குரலில் மொழிந்தாள்.

“பண்றதெல்லாம் பண்ணிட்டு உனக்குக் கோபம் வேற வருதா?” என்று ராதா எகிறிக் கொண்டு வர, மலர் பயத்துடன் இரண்டெட்டு பின் வாங்கினாள்.

“என்னோட பேக்ரவுண்ட் தெரியாம நீ என் பையன் கிட்ட விளையாடிட்ட. நான் யாருன்னு காட்ட நினைச்சா, நீ இருக்குற இடம் தெரியாம அழிஞ்சு போயிருவ,” என்று ராதா விழிகளால் அவளைச் சுட்டுப் பொசுக்க, மலருக்கு நெஞ்சுக்கூடு அச்சத்தில் சில்லிட்டது.

“உனக்கு எவ்வளவு திண்ணக்கம் இருந்தா, ரிஷிய‌ வீட்டில
கல்யாணத்துக்குப் பேசச் சொல்லி அனுப்பி இருப்ப?” என்று ஆங்காரமாய் ராதா கத்த, தான் அறிந்து கொண்ட செய்தியில் மேலும் அதிர்ந்து போனாள் மலர்.

இரண்டு நாட்கள் ரிஷி அமைதியாக இருந்தது, அவனுக்கு நிதர்சனம் புரிந்துவிட்டது. இனி தன்னிடம் அதுபோல நடந்து கொள்ள மாட்டான் என்று மலர் மகிழ்ந்திருக்க, அவன் என்னவென்றால் வீட்டில் சென்று திருமணத்திற்குப் பேசியுள்ளானா? அதுவும் தன்னுடைய குடும்பத்தைப் பற்றி தெரிந்திருந்தும் அவர்களிடம் பேசியிருக்கிறானே என்று மலருக்குள் ஏகமாய் அதிர்வு இறங்கியது.

“அன்னைக்கு ரிஷிய பார்க்க வந்திருந்தாளே ரோகிணி... அவளை நீயும் பார்த்த தானே?” என்று ராதா கேட்க, மலரின் தலை மேலும் கீழும் அசைந்தது.

“அந்தப் பொண்ணு எவ்வளவு அழகா இருந்தா, எவ்ளோ படிச்சிருக்கா தெரியுமா? அவங்க அப்பா எவ்வளவு பெரிய பிசினஸ்மேன்னு தெரியுமா? அவங்க அந்தப் பொண்ணுக்கு இருநூறு பவன் கல்யாணத்துக்குப் போடத் தயாரா இருந்தாங்க. அந்தப் பொண்ணோட உன்னை கம்பேர் பண்ணா, அவ கால் தூசிக்காது. நீ சமமாவியா?” என்று ராதா கேட்க, மலரின் தலை இல்லை என்று அசைந்தது.

“இல்ல தானே? அப்புறம் என்ன? இதுக்கு என் மகனை வளைச்சுப் போடப் பாத்த?” என்று சொல்லி மீண்டும் மீண்டும் அவளது ஒழுக்கத்தைக் கேள்விக்குறியாக்க, மலருக்கு மனதே விட்டுப் போனது.

“மேடம், போதும்... ப்ளீஸ்,” என்றவள் கையெடுத்துக் கும்பிட, “எப்படி நல்லவ வேஷம் போடுறா பாருங்கண்ணா,” என்று அருகில் இருந்தவரிடம் ராதா கூறினார்.

இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த ராதாவால் அண்ணன் என்று அழைக்கப்பட்ட ராமச்சந்திரன், “உன் குடும்பத்தைப் பத்தி என் தங்கச்சி சொன்னா. இனிமே என் மருமகன் இருக்கப் பக்கமே தலை வைச்சு நீ பார்க்கக் கூடாது. அப்படி மீறி ஏதாவது பண்ண, உன் குடும்பத்தை உருத் தெரியாம அழிச்சிடுவேன். உன் தங்கச்சியும் தம்பியும் ஸ்கூல்தானே படிச்சிட்டு இருக்காங்க? ஸ்கூல் போனவங்க திரும்பி வரவே மாட்டாங்க. பாத்துக்கோ,” என்றிட மலருக்கு சர்வமும் ஒடுங்கியது.

“உன் தங்கச்சி மெடிக்கல் காலேஜ்ல படிக்கிறாள்ல? காலேஜ்ல வச்சு அசிங்கப்படுத்திடுவேன், பாத்துக்கோ,” என்று மீண்டும் சாகித்யாவை இழுத்து வைத்துப் பேச, “போதும்... ப்ளீஸ்! என்ன விட்டுருங்க. இனிமே நீங்க இருக்க திசைப் பக்கம் கூட நான் வரமாட்டேன்,” என்று மலர் அழுகையுடன் கைகூப்பினாள்.

“அதுதான் உனக்கும் உன் குடும்பத்துக்கும் நல்லது. போ இங்கயிருந்து,” என்று ராதா நாயை விரட்டுவது போல விரட்ட, அங்கிருந்து வெளியே ஓடி வந்தவளுக்கு அழுகை பெருகியது.

துடைக்கத் துடைக்க வற்றாத நதியாகிப் போன கண்ணீரைத் துப்பட்டாவால் துடைத்தபடி வீட்டை நோக்கிச் சென்றவளுக்கு நெஞ்சு வேதனையில் துடித்தது.

தன்னைப் பற்றி எவ்வளவு கேவலமாகப் பேசி விட்டனர்! தந்தை இறந்த பின்பு சாப்பாட்டிற்காகத் துன்பப்பட்ட போதும், நேர்மையாக உழைத்து உண்ண வேண்டும் என்பதற்காகத்தானே இப்படி அல்லும் பகலும் வேலைக்கு ஓடிக் கொண்டிருக்கிறேன்? என்னைப் போய், என்னுடைய ஒழுக்கத்தைப் போய் அசிங்கப்படுத்திவிட்டனர் என்று நெஞ்சம் விம்மியது.

இதையெல்லாம் விட, தன்னுடைய குடும்பம், தன்னுடைய வாழ்வே தன் குடும்பத்தினர்தானே! அப்படிப்பட்டவர்களை உருத் தெரியாமல் அழித்துவிடுவேன் என்று மிரட்டுகின்றனரே என்று கை, கால் எல்லாம் நடுங்கியது.

எங்கே தன் குடும்பத்தினரை ஏதாவது செய்துவிடுவார்களோ என்று உள்ளம் பதைபதைத்திட, அந்தப் பகுதியைக் கடந்தவள் ஒரு மரத்தடியில் அமர்ந்துவிட்டாள்.

நடக்க முடியவில்லை. கை, கால் எல்லாம் கிடுகிடுவென நடுங்கியது அச்சத்தில்.

இந்த ஊரில் தங்களுக்குப் பெரிதாக யாரையும் தெரியாது. பஞ்சம் பிழைக்கத்தான் இங்கு வந்துள்ளோம். இவர்கள் தங்களை ஏதாவது செய்தாலும் கேட்க ஆளில்லையே! இப்போது என்ன செய்வது என்று பயத்தில் இம்மையும் புரியவில்லை, மறுமையும் புரியவில்லை அவளுக்கு.

ரிஷியின் மேல் கோபமாக வந்தது.

‘தான் எவ்வளவு படித்துப் படித்துக் கூறினேன்... நீங்கள் வேறு, நான் வேறு’ என்று. அவருக்கு எதுவுமே புரியவில்லையா? எப்படி யோசிக்காமல் அவரது குடும்பத்தினரிடம் போய்க் கூறினார்? அதன் விளைவுகளை நான் தான் சந்திக்க நேரிடும் என்று அவருக்குக் கிஞ்சித்தும் சிந்தை இல்லையா?” என்று உள்ளம் கதறியது.

செய்யாத தவறுக்கு இவ்வளவு பெரிய பழியைத் தூக்கிச் சுமப்பது நெஞ்சில் வலி ஏற்படுத்த, கையை வைத்து இதயத்தில் அழுத்திக் கொண்டாள்.

“தான் யாருக்கு என்ன துன்பம் செய்தோம்? தானுண்டு, தன் வேலையுண்டு என்று தானே இருக்கிறேன். பிறகு ஏன் எனக்கு இவ்வளவு துன்பத்தைக் கொடுக்கிறாய், கடவுளே?” என்று அழுகையுடன் மனதிற்குள் கதறினாள்.

இங்கு ராமச்சந்திரனோ, “ராதா, எனக்கு இந்தப் பொண்ணைப் பார்த்தா இப்படியே விட்டுவிடுவான்னு தோணல. பேசாம ஆள் வச்சு, அவங்க வீட்ல இருக்க யாரையாவது தூக்கிருவோமா?” என்று கேட்டிட,

“ண்ணா, அவ இவ்வளவு எல்லாம் ஒர்த் இல்லைண்ணா. அவ வீட்டு ஆளுங்களை ஒன்னும் இல்லாம பண்ணிடுவோம்னு சொன்னப்பவே பயந்துட்டா. அவ முகத்தை நான் பார்த்தேன். நான் அவளைத் திட்டும்போது கூட கொஞ்சம் தைரியமாகத்தான் இருந்தா. ஆனா, அவ வீட்டாளுங்களைச் சொல்லும்போது ரொம்பவே பயந்துட்டா. அவளுக்கு என்னைப் பத்தி நல்லாவே தெரியும். கண்டிப்பா இனி ரிஷி பக்கம் திரும்பமாட்டா,” என்று ராதா உறுதியாகக் கூறினார்.

“பாப்போம். இல்லாட்டினா, எனக்குத் தெரிஞ்ச ரவுடியை விட்டு மிரட்டி ஊரைவிட்டு போக துரத்திடலாம்,” என்று ராமச்சந்திரன் கூற, ராதாவிற்கும் அது சரியான யோசனையாகப்பட்டது.

“கொஞ்ச நாள் பாப்போம் ண்ணா. திரும்பவும் வாலாட்டுனா, அவ குப்பத்துக்கே தொரத்திவிடலாம்,” என்று ராதா கூற, ராமச்சந்திர
ன் அதனை ஆமோதித்தார்.

இங்கு மலர்தான் அந்த அந்தி சாயும் பொழுது, கேட்க யாருமற்று தெருவின் ஓரத்தில் அமர்ந்து அழுகையில் கரைந்து கொண்டிருந்தாள்.
 
Top