• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

இதயம் 16

Administrator
Staff member
Messages
627
Reaction score
891
Points
93
இதயம் – 16

மாலை இருள் கவிழத் துவங்கியிருந்ததால், பூங்கா முருகன் கோவிலில் அவ்வளவாகக் கூட்டம் இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆட்கள் தென்பட, தனது காலணியைக் கழற்றிவிட்டு உள்ளே நுழைந்தாள் மலர்.

நுழையும் போதே மனதிற்குள், "முருகா! உன் பிள்ளையை எப்படியாவது காப்பாத்துப்பா..." என்று கூவியபடியே தான் நுழைந்தாள்.

அன்று வெள்ளிக்கிழமை என்பதால், அபிஷேகம் முடிந்து அலங்காரத்துடன் அழகான புன்னகையுடன் நின்றிருந்த முருகனைக் கண்டு, "இதெல்லாம் உனக்கே நியாயமா, முருகப்பெருமானே? ஏன் இப்படி என் வாழ்க்கையில் விளையாடிட்டு இருக்க?!" என்று வினவியபடி கைகளைக் கூப்பி வணங்கினாள்.

*"இவ்வளவு நாள் என் வாழ்க்கை நல்லாத்தானே போயிட்டு இருந்துச்சு. திடீர்னு எதுக்கு இந்த ஸ்பீட் பிரேக்கர்? இந்தப் புது இம்சை எனக்கு எதுக்கு? நீயே சொல்லு. இதெல்லாம் சரியா வருமா? அவர் எங்க, நான் எங்க? எதுக்காக இப்படி? ஏற்கனவே அவங்க அம்மாவுக்கும் அண்ணிக்கும் என்னைப் பார்த்தாலே ஆக மாட்டேங்குது. இதுல இந்த விஷயம் தெரிஞ்சா என்ன வேலையிலிருந்து நிப்பாட்டிருவாங்களே! இந்த வேலையை நம்பித்தானே என் குடும்பமே இருக்கு. அதுவும் அவர் கம்பெனி வேலையை நம்பித்தான் என் தம்பி படிப்பு இருக்கு. முரளி இப்பத்தான் காலேஜ் ஜாயின் பண்ணியிருக்கான். தயவுசெய்து இதையெல்லாம் முடிச்சுவிட்ரு.

அவருக்கு இதெல்லாம் கொஞ்சம்கூட ஒத்து வராது என்று புரியிற மாதிரி நீதான் ஏதாவது பண்ணணும். இல்லன்னா நான் பொழப்புக்கு சிங்கிதான் தட்டணும். தயவுசெய்து என்னைக் காப்பாத்திருப்பா, முருகா..."*

என்று மீண்டும் மனம் உருகி வேண்டிக்கொண்டவள், சன்னதியைச் சுற்றிவந்து ஒரு ஓரமாய் அமர்ந்துவிட்டாள்.

கடவுளிடம் மனபாரத்தைக் கூறிவிட்டாலும், உள்ளே இருந்த அச்சம் மட்டும் சிறிதும் குறையவில்லை.

*"இப்போதான் பணத் தேவை எல்லாம் குறைந்து, கடனையும் ஓரளவுக்கு அடைத்துவிட்டு நிம்மதியா மூச்சு விட்றேன். அது உனக்குப் பொறுக்கலையா? இப்படி ஒரு இடியைத் தலையில இறக்குறியே! இதெல்லாம் ராதா மேடம்க்குத் தெரிஞ்சா என் நிலைமை என்னாகிறது?

சும்மாவே அவங்க நல்லவிதமா நடந்துக்க மாட்டாங்க. இப்போ இது மட்டும் தெரிஞ்சா கண்டிப்பா பெரிய பிரச்சனையாகிடும்.

எதுக்கு இப்ப அவரோட என்னைக் கோர்த்து விடப் பாக்குற? நான் என்னோட தகுதிக்கு ஏத்த மாதிரி ஒரு கறிக்கடைக்காரனையோ, மளிகைக்கடைக்காரனையோ தானே கேட்டேன்! அதுவும் இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சுத்தானே கேட்டேன். அதுக்குள்ள எதுக்கு இந்த வம்பு?

அதுவும் அவங்க அண்ணி, பணத்துக்காக நான்தான் இவரை மயக்கிட்டேன்னு கூட வாய் கூசாம பேசுவாங்க. இதெல்லாம் கேட்கணும்னு எனக்கு என்ன அவசியம்? கண்டிப்பா அவங்க கண்டபடி பேசுவாங்க..."*

என்று எண்ணியவள், நேரத்தைப் பார்த்துவிட்டு எழுந்து வெளியே சென்றாள்.

அலுவலகத்தில் இருந்து வீட்டிற்குச் சென்றுவிட்டுத்தான் கோவிலுக்கு வந்திருந்தாள். இப்போது நேராக ரிஷியின் வீட்டிற்குத்தான் செல்ல வேண்டும்.

"இன்று என்ன பேசுவானோ?" என்று உள்ளுக்குள் அச்சம் விரவியது.

"பேசாம நாமளே அவர்கிட்ட நேரடியா, 'இதெல்லாம் ஒத்து வராது, சார்,' அப்படின்னு சொல்லிடலாமா?" என்று எண்ணியபடி நடக்க, அவளை உரசும் நெருக்கத்தில் வந்து நின்றது ஒரு மகிழுந்து.

அதில் அதிர்ந்து துள்ளியவள் திரும்பித் திட்டப் போக, கார் கதவைத் திறந்து உள்ளிருந்து கையசைத்தான் ரிஷி.

திட்டப் போனவளின் வாய் அப்படியே மூடிவிட, "என்ன, இப்பத்தான் நினைச்சிட்டு இருந்தோம்; அதுக்குள்ள முன்னாடி வந்து நிற்கிறாரே!" என்று நினைத்தபடி திகைப்புடன் அவனை நோக்கினாள்.

அவளது திகைப்பை மெதுவாய் உள்வாங்கியவன், "மலர், கெட் இன்." என்று இயல்பாய் அழைத்திட,

"என்ன... நானா?" என்று திகைத்து விழித்தாள் மலர்.

"உன்னைத்தான், மலர். உள்ள வா." என்று மீண்டும் ரிஷி அழைத்திட,

"இல்ல, வேண்டாம் சார். நான் ஷேர் ஆட்டோல வந்துருக்கிறேன்." என்று உடனடியாக மறுத்தாள்.

இப்போது அவன் முகத்தில் இருந்த இயல்பு லேசாகக் குறைவது போலிருக்க,

"உன்ன கார்ல ஏறச் சொன்னேன், மலர்." என்று அழுத்தமாகக் கூறினான்.

"இல்ல சார்... வேண்டாம். ப்ளீஸ்..." என்று விழிகளைச் சுருக்கி அவள் கெஞ்ச,

அவளது சுருங்கிய விழிகளில் ஒரு கணம் நிலைத்து மீண்டவன்,

"ரெண்டு பேரும் ஒரே பிளேஸ்க்குத்தானே, மலர், போறோம். கெட் இன்." என்று குரலில் அழுத்தத்தைக் குறைத்து, அவளை அழைத்துச் செல்லும் அவாவை அதிகரித்தான்.

அவனது குரல் பேதத்தை உணர்ந்தவள், மெல்லிய தயக்கத்துடன் ஏறி உள்ளே அமர, ரிஷி அவளுக்குத் தானே சீட் பெல்ட்டை அணிவிக்க முயல, சட்டென்று மூச்சை உள்ளிழுத்துச் சுருங்கினாள் மலர்.

அதில் இவனது இதழ்களில் கீற்றாய்ப் புன்னகை முளைக்க,

"மலருக்கு என்னைப் பார்த்து அவ்வளவு பயமா?" என்று வினவியபடி பெல்ட்டை மாட்டிவிட்டான்.

அவனது கேள்வியில் ஒரு கணம் திகைத்தவள், பிறகு இயல்பாகி,

"அதெல்லாம் இல்ல..." என்று மறுத்துவிட்டு, பின் மெல்லிய குரலில்,

"இந்த ரெண்டு நாளாத்தான் பயந்துட்டு இருக்கேன்..." என்று இதழ்களுக்குள் முணுமுணுத்தாள்.

அவளது முனகல் ரிஷியின் காதில் அட்சரசுத்தமாய் வந்து விழுந்துவிட, புன்னகை இன்னும் இமை நீண்டது.

அதனை வியப்பாய் விழிவிரித்துக் கண்டவள் மனதிற்குள்,

"சாருக்கு இவ்வளவு அழகா சிரிக்கத் தெரியுமா?" என்று எண்ண,

மலரின் பார்வையை உணர்ந்து அவள் புறம் திரும்பியவன்,

"என்ன?" என்பதாய் சிரிப்பு மாறாமலே ஒற்றைப் புருவம் உயர்த்தி வினவினான்.

அதனை எதிர்பாராது திகைத்துப் பின் தன்னைச் சமாளித்தவள், ஒன்றுமில்லை என்பதுபோல் இடவலமாகத் தலையசைத்துவிட்டு, சாளரத்தின் புறம் திரும்பிக் கொண்டாள்.

என்னவோ இந்த இரண்டு நாட்களாக இவன் அருகில் இதயம் படபடவென அடித்து, பந்தயக் குதிரை போல் ஓடிக்கொண்டிருக்கிறது.

என்னென்னவோ இவனிடம் பேச வேண்டும் என்று எண்ணிக்கொண்டு வர, இவனைக் கண்டால் வாயிலிருந்து வார்த்தையே வந்த பாடில்லை என்று மனதிற்குள் மலரால் புலம்பத்தான் முடிந்தது.

"நான் இதைவிட இன்னும் நல்லா ஸ்மைல் பண்ணுவேன், மலர்... எனக்குப் பிடிச்சவங்க கூட இருந்தா மட்டும்..." என்று இரண்டு நிமிடங்களுக்கு முன் அவள் நினைத்ததற்குப் பதில் அளிக்க, அதில் அதிர்ந்து திரும்பியவள் விழிகளை விரித்து அவனை நோக்கினாள்.

"நான் மனதிற்குள் எண்ணியது எப்படி இவருக்குத் தெரிந்தது?" என்று அதிர்ந்து, அவனது முகத்தையே அகலாது நோக்க, ரிஷியின் இதழ்களில் குறுஞ்சிரிப்பு பூத்தது.

அதுவும் அவன் கூறிய வார்த்தையின் அர்த்தம் பிடித்தவர்களுடன் இருந்தால் அழகாய் புன்னகைப்பானே. அப்படியானால் நானும் அவனது பிடித்தத்தில் அடக்கமா என்று இதயத்தினோரம் மெலிதாய் அதிர்வு பூத்தது.

"என்ன, மலர்... இப்படி பார்க்கிற? நான் அழகா இருக்கேனா?" என்று மாறாத சிரிப்புடன் புருவம் உயர்த்த,

"ஆங்..." என்று விழித்தாள் மலர். காரணம், ரிஷியின் இந்தப் புதிய பரிமாணம்தான்.

இத்தனை நாட்கள் தன்னுடைய முகத்தைக்கூட பார்த்துப் பேசாதவன், இப்போது இப்படியெல்லாம் பேசினால் அவளும்தான் என்ன செய்வாள்? அதிர்வையும் திகைப்பையும் மலரால் தாங்க முடியவில்லை.

அதனை அவளது முகம் கண்ணாடியாய் பிரதிபலிக்க,

"என்ன... பதிலே காணோம்?" என்று கேட்டபடி வாகனத்தை இயக்கிக்கொண்டிருந்தான் ரிஷி.

"ம்ஹூம்... அதெல்லாம் ஒண்ணும் இல்ல, சார்..." என்று விட்டு மலர் வெளியே விழிகளைப் பதிக்க,

"அப்போ நான் மலர் கண்ணுக்கு அழகா தெரியலையா?" என்றவனது இதழ் கடையோரம் புன்னகையில் துடித்தது.

அவனது கேள்வியில் திகைப்பும் அதிர்வும் வந்து குடிகொள்ள, பதிலற்று அவனைக் கண்டாள்.

"என்ன, மலர்? நான் கேக்குறது உண்மைதானா?" என்று மீண்டும் ரிஷி அவளை ஓரக்கண்ணால் பார்த்தபடி வினவிட,

"இல்ல... அப்படியெல்லாம், சார்..." என்று லேசாகப் பதறி மலர் பதிலளித்தாள்.

அவளது பதற்றத்தைக் கண்டு இதழ்களுக்குள் புன்னகையை மறைத்தவன், மெதுவாய் அவள் புறம் திரும்பி,

"அப்போ நான் மலர் கண்ணுக்கு அழகா தெரியுறேனா?" என்று ஆழ்ந்த குரலில் கேட்க, அந்தக் குரல் அவள் இதயத்தில் பூகம்பத்தைக் கிளப்பியது.

தனது பையை நெஞ்சோடு இறுக்கிக்கொண்டவள், நிமிர்ந்து அவனை நோக்கி,

"ப்ளீஸ்... எதுவும் பேசாதீங்க..." என்று கெஞ்சும் பாவனையில் பார்த்திட, அவனது இதழோரம் மென்னகை துளிர்த்தது.

இதுவும் பேசாமல் சாலையைப் பார்த்து வாகனத்தை இயக்க, ரிஷியின் அலைபேசி அழைத்தது. அலைபேசியை ப்ளூடூத்தில் ஏற்கனவே இணைத்திருந்தவன், அழைப்பை ஏற்று ஒலிபெருக்கியை ஆன் செய்தான்.

ராதாதான் அழைத்திருந்தார்.

ரிஷி அழைப்பை ஏற்றதும்,

"என்ன பண்ற, கண்ணா? பிஸியா? காலையிலிருந்து கால் பண்ணவே இல்ல..." என்று பாசமான குரலில் வினவிட,

"ஆமாம்மா... கொஞ்சம் ஒர்க். இப்பத்தான் வீட்டுக்குப் போயிட்டு இருக்கேன். போயிட்டு நானே கால் பண்ணலாம்னு இருந்தேன்." என்று ரிஷி பதிலுரைத்தான்.

சாலையைப் பார்த்து முகத்தைத் திருப்பிக்கொண்ட மலர் மனதிற்குள், "இவரது மகன் தன்னைப் பார்ப்பதை அறிந்தால், ராதாவின் குரலில் இதே போல பாசம் இருக்குமா?" என்று சந்தேகம் முளைத்தது.

பொதுவான பேச்சுகளுக்குப் பிறகு ராதா,

"கண்ணா... நாளைக்கு தரகரை வரச் சொல்லி இருக்கேன். நம்ம சொந்தத்துல பார்த்த பொண்ணுதான். எதுவும் உனக்குப் பிடிக்கல. அதுதான் தரகரை வச்சு பொண்ணு தேடலாம்னு முடிவு பண்ணி இருக்கேன். உனக்கு என்ன மாதிரி பொண்ணு வேணும்னு இப்பவாவது சொல்லு, கண்ணா. லாஸ்ட் டைம் அந்த ரோகினியை கண்டிப்பா உனக்குப் பிடிக்கும்னு நாங்க எல்லாம் எதிர்பார்த்து ஏமாந்து போயிட்டோம்..." என்று வருத்தம் தோய்ந்த குரலில் கூற,

இவனது விழிகள் மலரின் புறம் சாய்ந்தது. அதே சமயம் மலரும் ரிஷியைத்தான் பார்த்திருந்தாள்.

ஒரு நொடி இருவரது விழிகளும் நேர்கோட்டில் பயணிக்க, அவள் மீது இருந்த பார்வையை அகற்றாது,

"என் பக்கத்துல இருக்க பொண்ணு மாதிரி வேணும், மா..." என்றிட,

மலர் ஏகமாய் அதிர, விலோசனங்கள் ஆழியாய் விரிந்தது. அதில் இவனது அதரத்தில் அழகான புன்னகை சயனித்தது.

மகனது பதிலைக் கேட்ட ராதா,

"என்ன கண்ணா சொல்ற? யாரு உன் பக்கத்துல இருக்க பொண்ணு?" என்று ஆர்வமும் வியப்பும் போட்டி போடக் கேட்க,

மலர் படபடவென அடித்துக்கொண்ட இதயத்துடன் அவனை நோக்கினாள்.

விழிகள், "எதுவும் சொல்லிவிடாதே..." என்று கெஞ்ச, அந்த விழிகளின் பாவனையில் இவனது இதயம் தடுமாறித் தத்தளித்தது.

ஆழ்துளையாய் தன்னை ஈர்த்த அந்த விழிகளில் மெதுவாய் கரைந்து போவதை உணர்ந்தவன், அவளிடமிருந்து பார்வையை அகற்றினான்.

"என்ன கண்ணா... பதிலே காணோம்?" என்று ராதா வினவிட,

அதில் தன்னிலை அடைந்தவன்,

"சிக்னல்ல நிற்கிறேன்மா. பக்கத்துல ஒரு பொண்ணு ஸ்கூட்டியில் நின்னுட்டு இருந்தா. அவளைப் பார்த்துத்தான் சொன்னேன்." என்று பதில் அளிக்க,

இவ்வளவு நேரம் மூச்சை இழுத்துப் பிடித்திருந்தவள்,

"ஊஃப்..." என்று ஆசுவாசமாய் வெளியிட்டாள்.

அவளது வெப்ப மூச்சு தன்னைத் தாக்கித் தவிக்க வைப்பதை உணர்ந்தவன், வலக்கையால் கழுத்தோரம் வருடியபடி ஓரக்கண்ணால் அவளைக் கண்டான்.

இங்கு மகனது பதிலில் வியப்படைந்த ராதா,

"யாருடா அந்த பொண்ணு? நீயே திரும்பிப் பாக்குற அளவுக்கு! இதுவரைக்கும் எவ்வளவு அழகான பொண்ணு காட்டுனாலும் வேணாம்னு சொல்லிட்டு இருந்தியே! உனக்குத் தெரிஞ்ச பொண்ணாடா?" என்று ஆர்வமும் ஆசையும் போட்டி போட வினவிட,

"தெரிஞ்ச பொண்ணு எல்லாம் இல்லம்மா. சும்மா பார்த்தேன்..." என்றவன் முடித்துவிட்டான்.

"என் பையனுக்கே புடிச்சிருக்குனா கண்டிப்பா அந்தப் பொண்ணை நான் பார்க்கணுமே, ரிஷி! எப்படி இருந்தா அவ? ரொம்ப அழகா இருந்தாளா?" என்றவரது குரலில் இருந்த அவா ரிஷிக்குப் புன்னகையை வரவழைத்தது.

அவள் மீது ஒரு கணம் பார்வையைப் பதித்து மீண்டவன்,

"ஆமாம்மா... ரொம்ப அழகா இருந்தா." என்று ரிஷி மொழிய,

பட்டென்று அவனைத் திரும்பிப் பார்த்தாள் மலர்.

அதில் ரிஷி, "என்ன?" என்பதாய் விழியுயர்த்தி ஆழப்பார்வை பார்த்திட, அந்தப் பார்வையில் இவளுக்குத் தொண்டை வறண்டு போனது.

ஏதுமில்லை என்ற ரீதியில் தலையாட்டியவள், தனது பையில் இருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து அருந்தி, தொண்டையை நனைத்துக்கொண்டாள்.

"ரோகினியை விட அழகா இருந்தாளாடா?" என்று மீண்டும் ராதா கேட்க,

"ரோகினியெல்லாம் அவ பக்கத்துல வரவே முடியாதும்மா..." என்றவனது குரல் அவளுக்குள் மெதுவாய் சுகமாய் இறங்கியது.

தான் அழகா என்று முதல்முறையாக அவளுக்கு எண்ணம் பிறந்தது. சிறுவயதிலிருந்தே பள்ளியிலும் கல்லூரியிலும் சிலர் அவளது நிறத்தை வைத்து கிண்டலடித்திருக்க, மலருக்கு மனதில் தான் வெளித்தோற்றத்தில் மிகவும் சுமாராக இருக்கிறோம் என்று ஆழப் பதிந்து போயிருந்தது.

முதல் முறையாய் தன்னை ஒருவன் அழகென்று கூறியதில், இதயத்தில் மெல்லிய சாரல் அடிப்பதை உணர்ந்து விதிர்விதிர்த்துப் போனாள்.

நொடிநேரம் தான் உணர்ந்த மகிழ்ச்சியை எண்ணித் தன்னையே வந்துகொண்டவள்,

"மலரே... உனக்கு வாழ்க்கையில் நிறைய கடமை இருக்கு. அதுக்கு மேல இதெல்லாம் எந்தக் காலத்திலும் நடக்காது. அமைதியா கிட..." என்று தன்னைத் தானே கொட்டிக்கொண்டாள்.

"நிஜமாவாடா? எனக்கு அந்தப் பொண்ணைப் பார்க்கணும்டா. போட்டோ ஏதாவது எடுடா..." என்று ராதா மொழிய,

ரிஷி பதில் அளிப்பதற்குள் ஷாலினி அலைபேசியை வாங்கி,

"அண்ணா... யார் அந்தப் பொண்ணு? அதுவும் அழகா இருப்பாங்கன்னு வேற சொன்னியாமே! என்னைவிட அழகா இருப்பாளா?" என்று குறும்புச் சிரிப்புடன் வினவினாள்.

"ஹ்ம்ம்... இருப்பா..." என்ற ரிஷியின் குரலில் மென்சிரிப்பு படர,

"அண்ணா... நிஜமாவா? என்னைவிட அழகாக இருந்தாளா அந்தப் பொண்ணு?" என்று நம்பாத குரலில் ஷாலினி வினவினாள்.

"ஆமா, ஷாலினி..." என்று இம்முறை சிறிது அழுத்தத்துடன் கூற,

"ஓ... எப்படி இருப்பாங்க அவங்க?" என்றவளது குரலில் சுருதி குறைந்து ஒலித்தது.

இப்போது ரிஷியின் பார்வை அமைதியாய், ஆர்ப்பரிப்பு இல்லாமல் மலரின் மீது படர்ந்தது.

அவனது பார்வையை உணர்ந்தவள், நகக் கண்களை ஆராய்ச்சி செய்யும் பாவனையில் குனிந்துகொள்ள,

"ஹ்ம்ம்... எப்படி சொல்றது..." என்று யோசித்தவனது குரலில் அருகில் இருந்தவளுக்கான நேசம் மிகுந்திருந்தது.

"எப்படியாவது சொல்லுண்ணா..." என்று மெல்லிய சலிப்போடு ஷாலினி இயம்ப,

"இதோ இந்த வானத்துக் கருப்பை அள்ளிப் பூசிக்கிட்ட மாதிரி இருப்பா..." என்றவனது ஆழ்ந்த குரலில் அவள் மீதிருந்த ரசனை குறிஞ்சியாய் பூத்துக் கிடந்தது.

குனிந்திருந்தவள் படக்கென்று நிமிர்ந்து அவனை இமை சிமிட்டாது நோக்கினாள். அந்தக் குரல், அதில் அள்ளித் தெளிக்கப்பட்டிருந்த ரசனை, மெதுவாய் இவளது இதயத்தின் அறையெங்கும் அதிர்வைப் பரப்பியது.

அவளது பார்வையை உணர்ந்தவன்,

"வட்டமான முகம்... அதுல அழகான கண்ணு... குட்டியான மூக்கு... அந்த மூக்குல அவ போட்டிருக்க கல்லு வச்ச மூக்குத்திதான் அவளோட மொத்த அழகையும் ஒளிச்சு வச்சுருக்கு. அந்த மூக்குக்கீழே சின்னக் குழியோட மேவாயும் உதடும்... இன்னும் எவ்வளவோ அவகிட்ட எனக்கு அழகா தெரிஞ்சது..." என்று ரசனை மிகு குரலில், அமைதியாய் அவளிடத்தில் கத்தியின்றி, ரத்தமின்றி யுத்தத்தைத் தொடங்கி வைத்தான்.

மலருக்கு மெலிதாய் விழிகள் கலங்குவதாய்த் தோன்ற, இமைசிமிட்டித் தன்னைச் சமாளித்தவள், அவனது குரல் தனக்குக் கேட்காத பாவனையில் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

இங்கு ரிஷியின் வர்ணனையில் ஷாலினி ஏகமாய் வியந்து,

"ரிஷிண்ணா! இது நிஜமாகவே நீங்கதானா? ஒரு நிமிஷம் சிக்னல்ல பார்த்த பொண்ணையா இவ்வளவு நோட் பண்ணி இருக்கீங்க? என்னால் நம்பவே முடியல. எனக்கு அவங்களை உடனே பாக்கணும் போல இருக்கு..." என்று ஆர்ப்பரிக்க,

"சான்ஸ் கிடைக்கும்போது உனக்குக் காட்டுறேன்." என்றவன், இரு நிமிடங்கள் பேசிவிட்டு அலைபேசியைத் துண்டித்தான்.

அதன் பிறகு அங்கே மௌனம் அழையா விருந்தாளியாய் புகுந்துகொண்டது.

ரிஷி அமைதியாய் மகிழுந்தை இயக்கி வந்து அதன் தரிப்பிடத்தில் நிறுத்த, மலர் ரிஷியின் திசைப் பக்கம் கூடத் திரும்பாது கதவைத் திறக்க முயற்சி செய்ய, அது பூட்டியிருந்தது.

அதனை உணர்ந்தவள் தலையை மட்டும் திருப்பி அவனைக் காண, ரிஷி இப்போது அவளைப் பார்த்தவாறு திரும்பி அமர்
ந்திருந்தான்.

அதனைக் கண்டவளுக்கு அச்சம் அலை அலையாய் மேலெழும்ப, கைகள் இரண்டையும் இறுக்கிக்கொண்டபடி அவனை நிமிர்ந்து நோக்கினாள்.

இரண்டு நிமிட மௌனங்களுக்குப் பிறகு,

"மலர்... நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமா?" என்று வினவியிருந்தான் ரிஷிகேஷவ்.
 
Active member
Messages
206
Reaction score
123
Points
43
Amazing sister.. enna da ithu thinam thinam onnu kekaran intha rishi
 
Top