• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

ஆருயிரே!_02

New member
Messages
5
Reaction score
6
Points
3
யாருமற்ற சாலையில் தன்னந் தனியாக சென்று கொண்டிருந்தாள் அவள். வெள்ளை நிறத்தில் சேலை கட்டி, விரித்து விட்டிருந்த தலையில் மல்லிகை சூடியிருந்தாள். அவளின் மல்லிகைச் சரத்தின் வாசத்தை காற்றும் ரசித்ததோ என்னவோ, மெதுவாக அவளின் முடியை இழுத்து அழகு பார்த்துக் கொண்டிருக்க, அவளின் அடர்ந்த கருங்குழல் காற்றில் நடனமாடிக் கொண்டிருந்தது.

பூமிக்கு நோகாமல் மெது மெதுவாய் அன்னநடையிட்டு நடந்து சென்று கொண்டிருந்தவளின் கையை ஓடிச் சென்று பற்றிக்கொண்ட ராம் கிருஷ்ணன், "அகி எங்க போற?" என்று கேட்டான்.

நின்று திரும்பிப் பார்த்தவள், "நான் போறேன் கிருஷ்ணா. நீங்க கவனமா இருங்க" என்று கூறிப் புன்னகைக்க

"எங்க போகப் போற அகி?" என்று கேட்டான் ராம்.

இதழ் விரித்து முத்துப் பற்கள் வெளியே தெரியும் வண்ணம் அழகாய் புன்னகைத்தவள், "சொல்லுறேன் கிருஷ்ணா. நான் சொல்லுறதை கேளுங்க. நான் உங்க கிட்ட ஒன்னு சொல்லணும்னு ஆசைப் படறேன்" என்று கூற

"சொல்லு அகி" என்றான்.

அகிலா, "இந்த உலகத்துல யாரும், எதுவும் நிறந்தரமில்லை. பொருளோ, உறவோ அது இன்னைக்கு நம்ம கூட இருக்கும். நாளைக்கு.. இல்ல இல்ல, இன்னும் ரெண்டு மணி நேரத்துக்கு பிறகு நம்மல விட்டுப் போகக் கூடும். யாரையும் அளவுக்கு அதிகமா நம்பாதீங்க கிருஷ்ணா. வாழ்க்கை ரொம்ப குறுகியது. அதை நமக்காகவும், நமக்கு பிடிச்சவங்களுக்காகவும் வாழனும்.

எனக்கு உலகத்திலேயே ரொம்ப பிடிச்சது உங்களைத் தான். உங்களை மட்டும் தான். என்னோட உலகமே நீங்கதான். உங்க சந்தோசத்தில தான் நான் உயிர் வாழ்ந்திட்டு இருக்கேன். உங்க சிரிப்புல தான் என்னோட நிம்மதி, சந்தோஷம் ஒழிஞ்சிருக்கு. என்னோட வாழ்க்கையை உங்களுக்காக, உங்களோட கடைசி வரை வாழ்ந்துட்டு போறேன். நான் இல்லேன்னு என்னைக்கு சோர்ந்து போயிடாதீங்க கிருஷ்ணா. எப்போவும் நான் உங்க கூட, உங்களுக்குள்ள தான் இருப்பேன்.

என்னை பார்க்கணும்னு தோணுச்சுன்னா கண்ணாடி முன்னால நின்னு ஸ்மைல் பண்ணுங்க. உங்க புன்னகைல நான் தெரிவேன். என்னை உங்க மனசு தேடுச்சுன்னா உங்க நெஞ்சுல கை வைச்சுப் பாருங்க. அங்க கண்டிப்பா நான் இருப்பேன். நிறைய வெற்றிகளோட நீங்க வீட்டுக்கு திரும்பி வரப்பல்லாம், உங்களை ஓடி வந்து கட்டிப்பிடிச்சுக்குறது எனக்குப் பழகிப் போன ஒன்னு. உங்க வெற்றிகள் என்னோட இலட்சியம் கிருஷ்ணா. என்னைக்கும் சோர்ந்து போகாதீங்க. நான் போறேன். நிரந்தரமா போறேன்" என்று கூறி, பற்றியிருந்த கையை இழுத்துக் கொண்டு முன்னால் நடந்தாள்.

"அகி. எங்க போறே?" என்று அவன் கத்தியது அவனுக்கு கேட்டதோ இல்லையோ, தொடர்ந்து முன்னோக்கி நடந்து கொண்டேயிருந்தாள்.

மீண்டும் ஓடிச் சென்று அவளின் கைப் பற்ற முயல, அவள் காற்றோடு மெல்ல மெல்லக் கலந்த நிலையில், "நான் உங்ககூட தான் இருக்கேன் கிருஷ்ணா" என்று கூறி, முழுதாய் மறைந்து போய் விட, "அகி!" என்று கத்திக் கொண்டே கண்களைத் திறந்தான் ராம் கிருஷ்ணன்.

அவனருகில் யாருமே இல்லை. சுற்றிச் சுற்றிப் பார்த்தவன், "அகி. போய்ட்டியா? அகி ப்ளீஸ். என்கிட்டே திரும்பி வந்திடு. எங்க போறேனு சொல்லிட்டுப் போ! ப்ளீஸ் அகி" என்று கத்தி, அந்தக் கட்டிலின் மேல் இருந்த போர்வை, தலையணைகளையெல்லாம் தூக்கி எறியத் தொடங்கியவன், வெளியில் ஹோவென்று கொட்டிக் கொண்டிருந்த மழையை திறந்திருந்த ஜன்னல் வழியாகப் பார்த்தான்.

கட்டிலை விட்டுக் கீழிறங்கி ஜன்னலருகே சென்று நின்றவன், "அகி" என்று கத்தி அழைத்தான்.

மழையை வெறிக்க வெறிக்க சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தவன், திடீரென பித்துப் பிடித்தவன் போலாகி, "அகி என்னை விட்டு எங்கயும் போயிடாத. எங்க போறேனு சொல்லு. நானும் உன்கூடவே வந்திடுவேன். ப்ளீஸ் அகி. உன் கிருஷ்ணா ரொம்பப் பாவம்ல அகி? நானும் உன்கிட்ட வந்திடறேன். அப்பறம் எங்கயும் போக மாட்டேல?" என்று கேட்டு, ஜன்னல் படியில் ஏறி அமர்ந்து, கீழே எட்டிப் பார்த்தான்.

இரண்டாம் மாடியிலிருந்து பார்ப்பதால் அவ்வளவு உயரமாகத் தெரியவில்லை. கொட்டிக் கொண்டிருந்த மழை சாடை மாடையாக அவனின் தலையையும் நனைக்க, "அகி" என்று முணுமுணுத்தான்.

எதேர்ச்சையாக பார்வையை திருப்பியத்தில் தோட்டத்தில் மழையில் நனைந்த வண்ணம் ஆடிக் கொண்டிருந்த அவனின் அகியைக் கண்டான். அவனின் இதழ்கள் புன்னகையில் விரிந்தது.

அவளுக்கு மழையென்றால் மிகவும் பிடிக்கும். மழையைக் கண்டுவிட்டால் குழந்தையாய் துள்ளிக் குதித்து, பல திட்டல்களுக்கு மத்தியில் மழையில் நனைந்து உலகை மறந்து ஆட ஆரம்பித்து விடுவாள் அவள். பற்றாக்குறைக்கு அவனையும் இழுத்துக் கொண்டு சென்று சீண்டி மகிழ்வாள்.

தோட்டத்தில் ஆடிக் கொண்டிருந்தவளை கன்னத்தில் கை குற்றி ரசனையாய்ப் பார்த்திருந்த ராம், "அகி என்னைக் கூப்பிடாம ஏன் தனியாவே நனையப் போய்ட்ட? இரு நானும் வரேன்" என்று கூறி ஜன்னலில் இருந்து கீழே குதிக்கப் போக, அவனை அறைக்குள் இழுத்தெடுத்து கன்னத்தில் பளார் என ஒரு அறை விட்டது ஒரு கரம்.

கன்னத்தில் கை வைத்துக் கொண்டு, "ப்ச்! எதுக்கு அறைஞ்சிட்டீங்க? அங்க அகி மட்டும் தனியா மழைல டான்ஸ் பண்ணிட்டு இருக்கா. நானும் போகப்போறேன்" என்றவாறே நிமிர்ந்தவன், தலையிலிருந்து தண்ணீர் சொட்டச் சொட்ட தன் முன் நின்றிருந்த அகிலாவைக் கண்டு

"அதுக்குள்ள உள்ள வந்துட்டியா அகி? பரவாயில்லை. வா இன்னொரு வாட்டி ஆடலாம். உனக்கு தான் மழைல டான்ஸ் பண்ண பிடிக்கும்ல?" என்று கேட்டு அவளின் கையைப் பிடித்து இழுக்க, "ராம்!" என்று கத்தியவாறே அவனின் முகத்தில் நீரை வீசியடித்தார் சாந்தி.

முகத்தில் தெளித்த தண்ணீரை துடைத்து விட்டுக் கொண்டவனுக்கு அப்போது தான் தன்முன் நின்றிருப்பது அகிலாவல்ல, சாந்தி என்று புரிந்தது.

வெளிப்படையாக தலையில் தட்டிக் கொண்டவன், "சாரிமா. தோட்டத்துல அகி டான்ஸ் பண்ணிட்டு இருக்கா. மழையில நனையாத. ஜுரம் வரும்னு சொல்லிட்டே இருப்பேன்ல நானு? அதான் என்கிட்டே சொல்லாம தனியாவே டான்ஸ் பண்ணுறாள். அவளையே பார்த்திட்டு இருந்ததால உங்களை அகினு நினைச்சுட்டேன்" என்று கூறி அசடு வழியப் புன்னகைக்க, அவனை கண்களில் வலியோடு நோக்கினார் சாந்தி.

அவரின் கன்னத்தில் தட்டிக் கண் சிமிட்டியவன், "சரிமா. எங்க பார்த்தாலும் உனக்கு அகியை மட்டும்தான் தெரியுதுனு நீங்க நினைக்கிறது புரியுது. இங்க வாங்க. வந்து உங்க மக யாரு பேச்சையும் கேட்காமல் மழையில டான்ஸ் பண்ணிட்டு இருக்கிறதை நீங்களே பாருங்க" என்று கூறி அவருக்கு ஜன்னலுக்கு வெளியே கை காட்டினான்.

சாந்தி அந்த புறமாகத் திரும்பி பார்க்காமல் இருப்பது கண்டு சிரித்தவன், ஜன்னல் புறமாய் வெளியே பார்வையை செலுத்தினான்.

அங்கே அவனின் அகி இல்லாமல் இருப்பது கண்டு முழித்தவன், "அதுக்குள்ள எங்க போய்ட்டானு தெரியலமா. இப்போ இங்க தான் இருந்தா" என்று கூறிப் பெருமூச்சு விட

"ராம்" என்று அழுகுரலில் அழைத்த சாந்தி, வழுக்கட்டாயம் அவனை இழுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறி கீழ் மாடியின் வாசலில் நிறுத்தி, "இதோ பாரு. இதோ. இங்க இருக்கா உன்னோட அகி" என்று கை காட்ட, கண்கள் மின்ன அவர் கை காட்டிய திசையில் பார்த்தான் ராம்கிருஷ்ணன்.

நடு வாசலில் அலங்கரிக்கப்பட்ட உயிரற்ற சடலமாய் கிடத்தப்பட்டிருந்தாள் அகிலா. ராம் கண்கள் சுருங்க அவளைப் பார்த்தான்.

அவனின் தோளைத் தட்டி உலுக்கிய சாந்தி, "உன்னோட அகி இப்போ உன்கூட இல்ல ராம். புரிஞ்சிக்க. ஏன் நீ இப்டி இருக்க. உன் அகி உன்கூட இல்ல. அவ நம்ம எல்லாரையும் விட்டுட்டுப் போய்ட்டா" என்று கண்ணீருடன் உரைக்க, வேகமாய் அவரின் கையை தட்டி விட்ட ராம், "இல்லமா. என்னோட அகி என்கூட தான் இருக்கா. எங்கயும் போகல" என்று கூறிவிட்டு மாடியில் ஏறிச் சென்று மீண்டும் அறைக்குள் புகுந்து கொண்டான்.

அவனையே பார்த்திருந்த விஸ்வநாதின் அருகில் சென்று நின்ற சாந்தி, "என்னங்க. எனக்கு பயமா இருக்குங்க. ராம் நடந்த எதையும் ஏத்துக்க முடியாத நிலமைல இருக்கான். மூச்சுக்கு முன்னூறு வாட்டி அகி அகினு மட்டுமே சொல்லிட்டு இருக்கான். எனக்கு ரொம்பப் பயமா இருக்குங்க. அகிலாவோட இழப்பு அவனை எந்த நிலைமைக்கு கொண்டு போகும்னு நினைக்கிறப்ப ரொம்ப பயமா இருக்குங்க" என்று கண்களில் பயத்துடன் அழுதுக்கொண்டே கூறினார்.

அவரின் கண்களைத் துடைத்து விட்டு தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்ட விஸ்வநாத், "அகிலாவோட இழப்பை நம்மளாலையே இன்னும் ஏத்துக்க முடியாம இருக்கு சாந்தி. அவன் எப்டி ஏத்துப்பான்? விடிஞ்சதுல இருந்து நைட்டு தூங்குற வரைக்குமே அவளை பத்தி மட்டும் தான் பேசுவான். அவளைப் பத்தி மட்டும் தான் யோசிப்பான். நாம என்ன பண்ணுறது? அவனோட விதில இவ்ளோ தான் எழுதப் பட்டிருக்கு" என்று ஆறுதலாய்க் கூற

"நான் போய் ராமை சமாதானம் பண்ணட்டுமா மாமா?" என்று கேட்டுத் துள்ளிக்கொண்டு வந்து நின்றாள் பத்மினி. பரிமளாவின் மகள்.

"வேணாம் பத்.." என்று சாந்தி அவசரமாக மறுக்க வர

"போ பத்மினி" என்று கூறி அவளை அங்கிருந்து அனுப்பி வைத்த விஸ்வநாத், சாந்தியைப் பார்த்தார்.

"என்னங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க? உங்க அக்கா பொண்ணை ஏன் அவனோட ரூமுக்கு அனுப்பி வைச்சீங்க? சும்மாவே அவனுக்கு பத்மாவைக் கண்டாலே பிடிக்காது. இதுல அவள் போய் எதையாவது சொல்லிட்டாள்னா எதையாவது தூக்கி வீசி அடிச்சிட்டாலும் ஆச்சரியப்படத்துக்கு ஒன்னுல்ல. அகி இப்போ உயிரோட இல்லேனு நான் சொன்னதுக்கே என் கையை தட்டி விட்டுட்டுப் போய்ட்டான். நீங்க என்னடான்னா அவளைப் போய்.." என்று பதட்டமாய் பேச

"சாந்தி ரிலாக்ஸ். இப்போ நாம அவளைப் போகாதேனு தடுத்துட்டோம்னா அவள் கேட்கப் போறதில்ல. போகட்டும். போய் அவன் கிட்ட ரெண்டு மூணு திட்டு வாங்கிட்டு வரட்டும். அப்போவாவது அவளாவே அவனை விட்டுத் தள்ளி நிற்க ஆரம்பிச்சுடுவா" என்று கூற, சரியென்று தலையசைத்தார் சாந்தி.

அங்கிருந்து நகர்ந்த பத்மினி ராமின் அறைக்கு வரும் போது, அவன் கட்டிலில் தலையைத் தாங்கிப் பிடித்தவாறு அமர்ந்திருந்தான்.

மெதுவாக கை நீட்டி கதவைத் தட்டியவள், "உள்ள வரலாமா?" என்று கேட்க, தலை தூக்கிப் பாராமலே

"ப்ளீஸ் லீவ் மீ அலோன்" என்று கெஞ்சலாய் உரைத்தான் அவன்.

அவள் அங்கிருந்து சற்று நகராமல் கதவோரம் கைக்கட்டி நின்று அவனையே பார்த்திருந்தாள். அவனின் அழுகை அவளின் நெஞ்சை வெகுவாய் காயப்படுத்தியது. அவன் இன்னொரு பெண்ணிற்கு கணவன் என்ற போதிலும் அவனை அனுஅனுவாய் ரசித்து, அவனின் ஒவ்வொரு அசைவையும் தன் மனம் என்னும் நெஞ்சக்கோட்டைக்குள் சேமித்து வைத்திருந்தாள் அவள்.

ஓரிரு வருடக் காதலல்ல! அகவை பதினேழை தொடும் போதே உண்டாகி விட்ட காதல் தான் இன்று பெருவிருட்சமாய் மாறி விட்டிருந்தது. ஆனால் என்ன? அவனுக்குத்தான் அவளைப் பார்த்தாலே பிடிக்காது. அவள் ஓரடி நெருங்கி வந்தால் ஈரடி தள்ளி நின்று முறைப்பான்.

தன் காதலை அவனிடம் கூறிவிடலாம் என்று எண்ணம் எழும் போதெல்லாம், முதலில் அவனுக்கு தன்னைப் பிடிக்க வேண்டுமே என்று நினைத்து அமைதி காத்திருந்தவள், ஒருநாள் அகிலாவைக் கை காட்டி அவளைக் காதலிக்கிறேன் என்று விஸ்வநாத் மற்றும் சாந்தியிடம் கூறிய போது தான், இத்தனை நாள் தாமதித்து விட்டதன் வீரியத்தை அறிந்தாள்.

ஆனால் அவள் காதலிப்பதை நிறுத்தவில்லை. அதற்கென்று இருவரையும் நெருங்கிச் சென்று தொந்தரவு செய்யவுமில்லை. கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டு நிமிர்ந்தவள், "கிருஷ் அத்தான்" என்றழைத்தாள்.

திடீரென்று எங்கிருந்தோ பறந்து வந்த ஏதோவொரு பொருள், அவளின் தலையை உரசிக் கொண்டு சுவற்றில் மோதிக் கீழே விழ.. அதிர்ச்சியாய் நிமிர்ந்தவளை தீ கக்கும் பார்வை பார்த்திருந்தான் ராம் கிருஷ்ணன்.



◦◦◦⚬✿❀❀❀❀✿⚬◦◦◦
தொடரும்.
 
Top