• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 33

Administrator
Staff member
Messages
545
Reaction score
735
Points
93
அத்தியாயம் - 33

காயங்களின்றி காலங்கள் எதையும் உணர்த்திடுவதில்லை. அருகில் இருக்கும் பொழுது அற்பமாக தோன்றிடும் விஷயங்கள் தொலைவில் சென்ற பின்பே அற்புதமாக தெரிந்திடும். எல்லா இடங்களிலும் தாங்கிப் பிடித்திடும் வழித்துணை கிடைப்பது அரிதல்லவா? பிடித்தானே! அதுவே அவனின் மீதான அவளின் பிடித்தங்களை இன்னும் இறுக்கி பிடிக்க வைத்ததே!


அவளுக்காக இந்துமதியிடமே பேசியது முதல் இன்னும் ஏராளம். எல்லா இடத்திலும் அவளது தயக்கங்களை மொழிகளன்றி உணர்ந்து முன் வந்து செய்தது என்று அவனின் நிறைகளையும் மனது அலச ஆரம்பித்தது. குறைகள் என்ற வார்த்தைகளையே தன் வாழ்வில் இருந்து அழிக்க முயற்சித்தாள் மீனலோஷினி.

பிழைகளையே பிழையாக்கிடும் முயற்சியில் தற்சமயம் அவள். நிறையவே சிந்தித்தாள். யோகா வகுப்புகள் சென்றாள். மனதிற்கும் மூளைக்கும் இடையிலான போராட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைக்க கற்றிருந்தாள். திரிலோகேஷ் வேண்டும் என்ற எண்ணங்களை மனது ஆழமாக உருபோட ஆரம்பித்தது. எண்ணங்களின் உருமாற்றமே செயல் வடிவமும் சொல் வடிவமும். தன்னையே செதுக்க ஆரம்பித்திருந்தாள் அப்பேதை!


மாற்றம் என்பது அவனிடமிருந்து அன்றி தன்னிடமிருந்து தொடங்கிட விரும்பினாள். ஆனால் இதெல்லாம் சுலபமில்லையே! முழுவதுமாக இல்லையென்றாலும் ஓரளவு வெற்றி தான். இலக்கின்றி தேடலில் அந்தமாக அவனை நிலை நிறுத்திக் கொள்ள மனது விரும்பியது.


மருத்துவரின் ஒவ்வொரு கேள்விகளும் அவள் தனக்கு மட்டுமே துரோகம் நிகழ்ந்து விட்டதொரு போல் உருவாக்கி இருந்த பிரம்மையை உடைத்து சிதற செய்திருந்தது. கற்பனை கோட்டைகளை தகர்ந்து வெளி வந்தாள். "நமக்கு ரொம்ப பிடிச்சவங்களுக்காக சில நினைவுகளை மறக்கிறது தப்பில்லை மீனு. வாழ்க்கை என்பது நிச்சயமற்றது. நாளைக்கு யார் இருப்போம்ன்னு கூட தெரியாது. இப்ப உங்ககிட்ட இருக்க நாட்களை மகிழ்ச்சியா மாத்திக்கோங்க. இதெல்லாம் நீங்க திரும்ப ஏங்கினா கூட கிடைக்கவே கிடைக்காது. வாழ்க்கையை எப்பயாவது திரும்பி பார்த்தா அதில் கொஞ்சமாவது சந்தோஷம் இருக்கணும். இதை நினைக்கவே கூடாது அப்படின்ற தாட் நம்மக்கிட்ட வர அளவுக்கு வாழ்ந்திடக் கூடாது" என்ற மருத்துவர் திரிலோகேஷ் புறமிருந்து அவளுக்கு நிறைய விளக்கங்கள் கொடுத்திருந்தார்.


முதலிலே அவனே கேள்வி எழுப்பியிருந்தால் தான் சற்று நிதானித்திருப்போமோ என்ற எண்ணங்கள் அவளுள் தோன்றி மறைந்தது. அவனது தவறுகளை எல்லா இடங்களிலும் தான் கோடிட்டு காட்டியும் எந்த இடத்திலும் அவன் தன்னையும் தன் செயலின் அதிருப்தியை கூட காட்டியதில்லை. வினாக்களற்ற பாதையில பிழையாகிடும் வாய்ப்புகள் ஏராளம். ஏனெனில் இடைவெளியற்ற ஓட்டங்களில் நம்மை சிந்திக்க செய்து சீர் தூக்கி நிலை நிறுத்துவதில் வினா என்பதன் பங்கு அதிகமே! இங்கேயும் அதே நிலை தான்.

அவளுள் அவனின் மீதான காதலின் அளவு விரிந்து கொண்டே சென்றது. மருத்துவர் அவர்களுக்கிடையிலான திரையை விலக்கும் கருவியாக இருந்திட்டார். நாம் தொடர்ச்சியாக ஒரு வேலை செய்திருக்கும் பொழுது இடையில் அதன் குறித்தான விவாதங்களே அதனை சீர் செய்திடும். அதே போலவே தடைகளற்ற அவளின் செயலில் மடை மாற்றாக அவரின் பேச்சுக்கள் இருத்தது.

"குடிக்க கொண்டு வரவா?" என்பதற்கும் வெறும் தலையசைப்புக்கள் மட்டுமே! அவள் நொந்து கொண்டாள். வெளிப்படையாக எரிச்சல் முகத்தில் பிரதிபலித்தது. அது அவனின் சுவாரசியத்தை இன்னும் கூட்டியது. முறைத்தவள் அடுப்பறை நுழைய அவனது இதழ்களிலோ புன்னகையால் நிறைந்தது.

சில நிமிடங்களில் காபியுடன் அவன் முன் நின்றாள். வாங்கியவன் பருக ஆரம்பிக்க, அவனிடம் பேசிட மனது விழைந்தது. என்ன பேசுவது என்ற தயக்கங்கள் வார்த்தைகளை விழுங்கிக் கொள்ள அருகிலே நின்றிருந்தாள் ஒரு விதமான தவிப்பான மனநிலையுடன். அவளின் அசைவுகள் கூட அவனை ஈர்த்தது. பார்வை முழுவதையும் அவளிடம் வைத்து கவனத்தை காபியிடம் வைத்திருந்தான்.


அவளால் தன்னை ஊடுருவும் பார்வையை உணர்ந்திட இயலாதா? இன்று தான் புதிதாக திருமணமானது போன்றதொரு பதற்றம் அவளிடம். எவ்வளவு பேசி சண்டையிட்டு அழுகை சமாதானம் எண்ணிலடங்கா இருவர்ளுக்கிடையில். ஆனால் மீனலோஷினிக்கு இந்த திரிலோகேஷ் புதிதாகவே தெரிந்தான். அவள் மாறவில்லை, மாறாக பார்வைகளை மாற்றி இருந்தாள். சிலரிடம் உறுதிகளை தகர்க்கா விட்டால் வாழ்க்கை நம்மையே சிதைத்து விடும் என்ற நிதர்சனத்தை மனதிற்கு புரிபட ஆரம்பித்திருந்தது.


இருவரும் பார்வைகளும் பரிமாற்றங்கள் செய்து கொண்டிருக்க அறைக்குள் நுழைந்தவள் வேகமாக தனது மருத்துவ அறிக்கையை எடுத்து வந்து அவன் முன் நீட்டினாள். அவளை ஆராய்ந்தபடி அதை புரட்டியவன் சற்று மூச்செடுத்து தன்னை நிதானித்து அவளை பார்த்தான். அவளின் வலிகளும் உணர்வுகளும் அவனுக்கும் புரிகிறது. தன்னை நெருங்கவும் இயலாது விலகவும் இயலாத அவளின் தவிப்புகள் ஏராளம் என்பது அவன் அறியாததல்ல.


"நளைக்கு ஹாஸ்பிட்டல் வரும் பொழுது உங்களையும் அழைச்சுட்டு வரச் சொன்னாங்க. நீங்க ப்ரீயா?" என்று கேட்க, "வரேன்" என்றான் வலி நிறைந்த குரலில். வெகு சிரமங்களுக்கிடையில் தான் அவளின் இந்த மாற்றம் என்று புரிகிறது. அவனது இந்த தலையசைப்புக்களும் ஒரு வரி பதில்களும் இன்னும் அவளின் தவிப்புக்களை அதிகரிக்க செய்கிறது.
தன்னை குறித்தான தேடல் அவனிடம் இல்லையோ என்ற ஐயமும் கூட உண்டு.


"என்கிட்ட பேச மாட்டீயா லோகேஷ்? ரியலி சாரி, உன்னை ரொம்பவே ஹெர்ட் பண்ணிட்டேன்" என்றவளுக்கு கண்ணீர் ததும்பி விட்டது. அவன் தன்னை தூர விலக்குவது போல் ஒரு எண்ணம் பரவியது கடந்த சில மாதங்களாக. அந்த தவிப்பு, தான் அவனை விலக்கி வைத்த கணங்களில் இப்படி தான் அவனுக்கு இருந்திருக்கும் என்ற உண்மைகளை அவளுள் சேர்பித்தது.

இந்த வார்த்தைகளை பேசுவதற்குள் எத்தனை முறை மனதிற்குள் ஒத்திகை பார்த்தாள் என்பது அவள் மடடுமே அறிந்திட்ட உண்மை. சரளமான வார்த்தைகள் கூட பிணக்குகளுக்கு பிறகு பிறழ்வது இயல்பே.


அவன் வார்த்தைகளாக விவரித்திடவில்லை. அவளது கண்ணீரும் எதிர்பாரப்பும் அவனையும் அவனின் உறுதியையும் உடைத்தது. கைகளை தூக்கி நீட்டினான் அவளை நோக்கி. இனி உனக்கு என்னிடமிருந்து விடுதலை இல்லை என்பதாய். தொலைந்திட்ட இடத்திலே மீண்டும் அடைக்கலமாகி விடு என்பதாய் இத்தனை நாட்களாக இருவருள்ளும் தேங்கி இருந்த ஏமாற்றங்களையும் எதிர்பாரப்புக்களையும் கரைத்திட விரும்பும் இந்த நொடி இனித்ததே தேனாய்!


எதிரான கூரான வார்த்தைகளும் செயல்களும் தோற்று மறக்குமா? கண்டிப்பாக அதீத அன்பின் முன் அனைத்துமே மண்டியிட்டே ஆக வேண்டும் என்பது எழுதப்படாத விதியாகிற்றே.


நொடியும் தாமதிக்காது சரணடைந்து விட்டாள தன்னுயிரிடம். அப்படியொரு அழுகை அவன் மார்பில் சாய்ந்தபடி. தடுக்கவில்லை. இறுக்கி அணைத்துக் கொண்டான். இத்தனை நாட்களாக இருவருக்கிடையிலான மாயக்கயிற்றை அறுத்து எறிந்திட மனது விரும்பியது. இந்த நொடி அவனை தவிர அவளது கண்களுக்கு எதுவுமே புலப்படவில்லை. அவன் கண்களில் தெரிந்த தனக்கான நேசம் அவளை இன்னும் அவனுள் உருகி கரைய செய்திட்டது.


"மீனுனு... ரிலாக்ஸ்" என்றான் அவளின் தலையை வருடியபடி. அவனின் அழைப்பு இத்தனை மாத ஏக்கம் இன்னும் அதிக கண்ணீரை பெருக்கியது அவளிடம். அவளின் அழுகையின் சத்தம் அவனது அடி மனது வரை சிலிர்க்க செய்தது. "மீனுனு...." என்றபடி முகத்தை தன்னை நோக்கி நிமிர்த்தினான். அவனது விழிகளை எதிர்கொள்ளும் தைரியம் அவளிடம் முற்றிலும் தொலைந்து தான் போயிற்று. தாழ்த்திக் கொண்டாள்.


"இங்க பாருடி, எதுக்கு அழுகுற?" என்ற அவனது அதட்டலிலே அவளது விழி அவனது விழிகளை நேராக மோதிற்று. நொடி பொழுதே அதனை தாங்க இயலாதவள் மீண்டும் அவனது மார்பில் தன்னை மறைத்துக் கொண்டாள்.

வெளியில வர முடியாது அடைத்து வைத்திருந்த காதல் வெள்ளமாக பெருக்கெடுத்து மனதின் கரைகளையுடைத்து இருவரையும் அடித்துச் செல்ல விரும்பியது. உணர்ச்சிகள் பிரவாகமாக பொங்கியது இருவருள்ளும். இங்கு வார்த்தைகள் என்பது வடிவமிழக்க உணர்வுகளே எல்லாவற்றையும் விளக்கிட விரும்பியது. உணர்ந்தவர்களின் விழியசைவே மொழியாய் மாறிடுமே!

இருவருமே தங்களை உணர்ந்தனர். காதல் என்பது உணர்வுகளின் சங்கமமே. அவர்களின் காதல் இருவரையும் முழுவதுமாக தன்னுள் கரைத்திட விரும்பியது. அந்த கணங்கள் அப்படியே இருவரோடு உறைந்திட வேண்டும் என்று காதல் கொண்ட மனங்களில் பேரவா தோன்றியது.


காலிங்பெல் ஒலியிலே இருவரும் சுயநினைவு பெற்றனர். வேகமாக அவனிடமிருந்து விலகியவள், "அம்மா வந்திட்டாங்க போல" என்று கதவை திறக்க செல்ல வேகமாக அவளை தன்னை நோக்கி இழுத்தான். அவளோ கேள்வியாய் பார்க்க கண்ணீரை நன்றாக துடைத்து, "போ" என்று அனுமதியளிக்க பூத்திட்ட புன்னகையுடனே கதவை திறந்தாள். ஆனால் முகமோ நன்றாக சிவந்திருந்தது அழுது விட்டதின் விளைவாக.


கதவை திறந்தவுடன் தாயிற்கு மகளின் முக மாற்றம் கண்ணில் பட்டு விட ஒரு வித ஆராய்ச்சி பார்வையுடன் உள்ளே நுழைய திரிலோகேஷ் அமர்ந்திருந்தான்.

அவனை கண்டவுடன் அவரிடம் புன்னகை பரவி மற்றதெல்லாம் பின்னால் சென்று விட, "வாப்பா, வந்து ரொம்ப நேரமாச்சா?" என்று பேச்சுக் கொடுத்தப்படி அருகில் செல்ல மேகா அவரிடமிருந்து இறங்கி அவன் மடியில் அடைக்கலமாகிக் கொண்டாள்.



சிறிது நேரம் பேசியவன் கிளம்ப ஆயத்தமாக அந்த நொடி மீண்டும் அவளுள் இனம் புரியாத தவிப்பு. "அழைத்துச் செல்" என்று கேட்க இன்னும் தைரியமில்லை. ஏதோவொரு தயக்கம் அவனுள்ளுமே அதே தான். மனைவி மகளின் அருகாமைக்கு மனது ஏங்கியது. ஆனால் அவளாக கேட்காமல் தான் எப்படி முன்னெடுப்பது என்ற ஒரு எண்ணங்களின் பரவல் அவனை கட்டுப்படுத்தி இருந்தது.



அவர்களின் எண்ணம் புரிந்தவள் போல், "ப்பா... எப்ப என்னையும் மம்மியையும் அங்க அழைச்சுட்டு போவீங்க. என் ப்ரெண்ட ரித்து எப்ப விளையாட வருவன்னு கேட்டுட்டே இருக்கா?" என்று மழலை மொழியில் தந்தையிடம் வினவியது அந்த பிஞ்சு.



இந்துமதிக்கும் இந்த கேள்வி உதித்திருந்தது. ஆனால் அவனே, 'தள்ளி நில்! நாங்களே தீர்த்துக் கொள்வோம்.' என்னும் பொழுது இருவருக்கிடையில் செல்வது அநாகரிகம் என்று புரிந்து விலகி நின்றார். ஆனால் மகளின் வாழ்க்கை குறித்தான நெருடல் ஏதோவொரு மூலையில் மனதில் நின்று கொண்டிருந்தது தான்.


மீனலோஷினியின் பார்வையும் கணவனிடத்தில் தான். பதிலை கேட்டிடும் ஆர்வம். "சீக்கிரமே" என்றான் திரிலோகேஷ் மகளை முத்தமிட்டபடி. மனைவிக்கு
ஏமாற்றம் சூழ்ந்து கொள்ள அது கணவனின் புத்திக்கும் உரைத்திற்று.




தொடரும்....
 
Well-known member
Messages
610
Reaction score
346
Points
63
Ama meenu doctor sollurathu correct past life paathi yosicha ippo present life romba miss pannuvom ne lokesh pannatha marainthu vidu Avan unagaga mari irukan ippo neyum try panna ellam nadagum itho ethu tha anbin uruvam pesi samathanam aagatha thu onum illa Meha kutty appa sikirama kupidu povam unnoda mummy solladum
 
Top