• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் - 31

Administrator
Staff member
Messages
1,030
Reaction score
2,923
Points
113
அத்தியாயம் - 31




"மீனு, நடந்ததை பத்தி பேச நான் விரும்பலை. அதனால யாருக்கும் எந்த பயனும் இல்லை. நான் உனக்கு பண்ணது கண்டிப்பா துரோகம் தான். எப்பயுமே நான் அதை மறுக்கவே மாட்டேன். ஆனா நான் அதை வேணும்னே பண்ணலை. இந்த மாதிரி எதுவும் ப்ராப்ளம் வரக் கூடாதுனு தான் நான் விலகி போனேன். பட்" என்றவன் நிறுத்தி அவளை பார்க்க கண்களில் நீர் தேங்கி இருந்தது. தலையை கோதிக் கொண்டான். அவளது கண்ணீர் வலிக்கிறது. துடைத்திட விரும்பினாலும் மனது ஒத்துழைக்கவில்லை. அவளது வார்த்தைகளில் உண்டான காயம் அவனை தூர விலக்கி நிறுத்துகிறது.

"எங்கம்மா அவங்களோட கடைசி மூச்சை சுவாசிச்சிட்டு இருந்தாங்க. அப்பா இல்லை, அம்மா தான் எல்லாமே எனக்கு. ரொம்ப கஷ்டப்பட்டு தான் வளர்த்தாங்க. ரொம்ப பிடிக்கும். அவங்களுக்கு அப்படி ஆனதும் எனக்கு எதுவுமே யோசிக்க தோணலை. அவங்களும் மூச்சு அடங்குறதுக்குள்ள எனக்கு நல்லது பண்ணி பார்க்கணும்னு ஆசையில என்னை கேட்காம கூட மாமாகிட்ட பேசி முடிச்சிட்டாங்க. இன்ஃபாக்ட் அதுக்கு முன்னாடி கூட நான் ஷாம்லிய அவ்வளவா பார்த்தது கூட இல்லை. எப்பயாவது ரொம்ப ரேரா பார்த்திருக்கோம் சம் டைம்ஸ். அவளும் ரொம்ப நல்ல பொண்ணு தான். கடைசியா அம்மாவுக்கு எல்லாமே பார்த்தா முகம் சுழிக்காம. என்னை விட அவ தான் அவங்க கூட அட்டாச்சா இருந்தா ஆஸ்பிட்டல்ல இருந்த டைம்ல்ல. ஆல்ரெடி உன்னை கஷ்டப்படுத்தி தான் அவளை மேரேஜ் பண்ணிக்கிட்டேன். திரும்ப அவளையும் கஷ்டப்படுத்த எனக்கு விருப்பமில்லை. என்னோட விதி இது தான் நான் வாழ ஆரம்பிச்சேன். அவ இடையில போய் நீ திரும்ப என் லைஃப்ல வருவன்னு சத்தியமா கனவுல கூட எதிர்பார்க்கவே இல்லை" என்றவனுக்கு கண்களெல்லாம் கலங்கியது. இறுக கைகளை மூடி தன்னைக் கட்டுப்படுத்துகிறான்.


"உன்னால என்னை மன்னிக்க முடியலைன்னா விலகி போய்டு மீனு" என்று ஒரு வழியாக மனதில் கோர்த்திருந்த வார்த்தைகளை கூறி விட்டான். அவ்வளவு வலி நிறைந்திருந்தது அதில். நிறைய யோசித்து தான் இந்த முடிவை எடுத்தான்.


"வாழ்க்கையை யாருக்காவும் சகிச்சிட்டு வாழணும்னு அவசியம் இல்லை மீனு. நீ கஷ்டப்பட்டு விருப்பமில்லாம என் வாழ்க்கையில இருக்க வேண்டாம்" என்றவனுக்கு அதற்கு மேல் பேச இயலாது தொண்டை அடைத்தது.
அவளோ அவனது வார்த்தைகளில் ஸ்தம்பித்து அமர்ந்திருந்தாள்.

"நீ முதல்ல இருந்ததுக்கு இப்ப எவ்வளவோ மாறி இருக்க. எனக்கு புரியுது. உன்னோட காயங்கள் அதிகம் தான். என்னை ரொம்ப நம்புன. பட், நான் அதுக்கு தகுதியானவனா நடக்கலை. உன்னை கஷ்டப்படுத்த என்னைக்குமே மனசால நான் விரும்புனது கிடையாது. கொஞ்ச நாள் நல்லா யோசி. பழசை எல்லாம் மறந்து என்னை ஏத்துக்க முடியும் தோணுச்சுனா திரும்ப வா. இல்லை டிவோர்ஸ் பண்ணிக்கலாம். திரும்பவும் இதே சூழ்நிலையில நம்ம நிற்கிறதை நான் விரும்பலை. என்னைக்குமே நான் உன்னை கட்டாயப்படுத்த மாட்டேன். நீயா வந்தா கண்டிப்பா ஏத்துப்பேன். நீ என்ன முடிவெடுத்தாலுமே எனக்கு சம்மதம் தான். வேண்டாம்னு விலகி போனாலும் ஒரு ப்ரண்டா எப்பவுமே நான் உன் கூட சப்போர்ட்டா இருக்க ஆசைப்படுறேன் பிகாஸ் ஐ லவ் யூ சோ மச். எங்கம்மாவுக்கு அப்புறம் நான் அதிகமா நேசிச்சது உன்னை தான், யெஸ்ஸ்.... உன்னோட இடத்தை கண்டிப்பா என்னோட லைப்ல யாராலையும் ரீப்ளேஸ் பண்ணவே முடியாது. யூ ஆர் க்ளோஸ் டூ மை ஹார்ட்." என்றான் நிமிர்ந்து அமர்ந்து கைகளால் நெஞ்சைத் தொட்டு காட்டினான்.

அவனது வார்த்தைகள் ஈட்டியை பாய்ச்சியது அவளுள். அவள் சிரமப்பட்டு வாழ வேண்டாம் என்ற எண்ணத்தில் அவன் பிரதிபலித்த வார்த்தைகள் அவளை அதீதமாக தாக்கியது. அவன் கூறிய வேறு எதுவும் அவளது மனதில் பதியாது போக அவனது விழிகளில் தெரிந்து வலிகள் மட்டும் மனதில் பரவ கண்ணீரை துடைத்து எழுந்து அறைக்குள் நுழைந்து விட்டாள். அவன் தடுக்கவில்லை, செல்பவளை வேடிக்கை பார்த்தப்படியே அமர்ந்திருந்தான்.

மனதில் ஏதோ ஒரு மூலையில் அவள் செல்ல மாட்டாள் என்றெண்ணிய அவனது ஆசை நிராசையாகிப் போனது. தனது துணிகளை பேக்கில் எடுத்து வைத்து வெளியில் வந்தாள். தலையை இறுக பிடித்தப்படி அமர்ந்திருந்தான். வாழ்க்கை எதை நோக்கி பயணிக்கிறது என்று புரியாத நிலை. கடலில் தத்தளிப்பது போல் ஒரு உணர்வு.


"லோகேஷ்" என்றிட நிமிர்ந்து பார்த்தான். இருவரது கண்களில் நீர் படலம் தான். சூழலை கிரகிப்பதற்கு வெகுவாக திண்டாடினார்கள் இருவருமே.

"ஐயம் சாரி, அந்த மாதிரி நான் உங்ககிட்ட பேசி இருக்கக் கூடாது. கண்டிப்பா உங்களுக்கு என்கிட்ட எல்லா ரைட்ஸூம் இருக்கு. நீங்க சரியா தான் நடந்திட்டு இருக்கீங்க. நான் தான் சரியில்லை. புரியுது எல்லாத்தையும் காம்ளிக்கேட் பண்றேன். நீங்க சொல்றது மாதிரி எனக்கு கொஞ்சம் ஸ்பேஸ் வேணும்.
என்னை எங்கம்மா வீட்டில விடுங்க" என்றாள் கண்ணீரை துடைத்தப்படி.

அவன் எதுவும் கூறாது கார் சாவியை எடுத்து வெளியில் செல்ல, அவன் பின்னே சென்றாள். நிமிடங்களில் அவனிமிருந்தும் அந்த வீட்டிலிருந்தும் அந்நியமாகி விட்டதொரு பிரம்மை அவளை ஆட்டுவித்தது. குனிந்து அவன் கட்டிய தாலியை பார்த்தாள். இன்னும் வலித்தது. மௌனங்களற்ற பயணம். ஒவ்வொரு முறையும் அங்கு செல்லும் பொழுது அத்தனை மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் இந்த சூழல் அவளை இன்னும் அழுத்தத்திற்கு இழுத்து சென்றது. கண்களை இறுக மூடிக் கொண்டாள். திருமண நாளிலிருந்து ஒவ்வொன்றாக மனது மீட்டிப் பார்த்து. அவனும் அவனுடைய நடவடிக்கைகளையும் எந்த இடத்திலுமே தவறவில்லை. அவளை தாங்கி தான் பிடித்திருந்தான். வார்த்தைகளை கூரிய அம்புகளாக மாற்றி அவனை நோக்கி எறிந்த பொழுதுகளிலும் அவளை புரிந்து அரவணைத்து தான் சென்றான். அதிர்ந்து கூட பேசியதில்லை. அவனே விலகி இருக்குமாறு கேட்க அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை.

நெருப்பு என்றால் சுட்டு விடாது தான். ஆனால் அவளால் ஏற்க முடியவில்லை. தன் வாழ்க்கையை மட்டுமின்றி அவனது வாழ்க்கையையும் சேர்த்து அழித்துக் கொண்டிருப்பது போல் ஒரு குற்றவுணர்வு ஆட்கொண்டது.


திரிலோகேஷ் இன்று மட்டுமல்ல அன்று கூட தன் செயலுக்கு நியாயம் கற்பித்தது கிடையாது. ஆம், தவறு தான் மன்னித்து விடு என்றானே தவிர, தன்னுடைய செயலுக்காக எந்த வாதங்களையும் முன் வைத்திடவில்லை. அவனை புரிகிறது இருந்தும் நடந்ததை மாற்ற இயலாதே. அந்த நிகழ்வு அவளையும் மீறிய அழுத்தங்களின் வெளிப்பாடு தானே! அவனை முன்பை விட அதிகமாகவே பிடிக்கிறது. தாயிற்காக தன் ஆசையை புதைத்திருக்கிறான். அவ்வளவு சுலபத்தில் யாரும் செய்திட இயலாத காரியம். மகளிற்காகவே வாழ்வை நகர்த்தினான் மனைவிக்கு பிறகு. இன்னும் ஏராளம் பட்டியலிட்டது அவளது மனது.

ஆனால் தற்போதைய பிரிவு அவளுக்கு அதிகமாகவே தேவைப்பட்டது. அவனே கூறவில்லை என்றால் கண்டிப்பாக மீனலோஷினி நிரந்திர பிரிவிற்கு வழி வகுத்திருப்பாள்.



வீட்டின் முன் காரை நிறுத்தினான். இறங்கிட கால்கள் மறுத்தது. இந்துமதியின் கேள்வி கணைகளை தாங்கிட இயலாதே என்று உள்ளம் வெதும்பியது. தடுமாறி தயங்கியவளை உணர்ந்தவன் கையில் இருக்கும் பேக்கை வாங்கினான். அவன் கைகளை நீட்ட எந்த கேள்வியும் கேட்டிடாது கொடுத்தும் விட்டாள்.


"வா நான் ஆன்ட்டிக்கிட்ட பேசி உன்னை விட்டுட்டு போறேன்" என்று கூற அதை இன்னும் அவளை தாக்கியது. அவளின் தயக்கங்கள் தடுமாற்றங்களை கூட உணர்ந்து நடக்கிறான். பதிலுக்கு நான் அவனுக்கு கொடுப்பது ரணங்கள் மட்டுமே என்ற எண்ணம் அவளை தாக்கியது.


அப்பொழுதே அவனது மார்பில் சாய்ந்திடும் எண்ணம் தான். ஆனால் அவன் கூறியது போல் அந்த நிலையில் மீண்டும் இருவருமே நின்றிட கூடாது என்பதில் அவளும் உறுதியாக தான் இருந்தாள். முதலில் தன்னை சரி செய்து ஒரு முடிவிற்கு வந்த பின்பே அவன் வாழ்வில் நுழைய வேண்டும் என்று நினைத்தாள்.


லோகேஷ் முன்னால் சென்று காலிங் பெல் அழுத்த அவன் அருகில் நின்றாள் சுவரை ஒட்டியபடி. கதவை திறந்த இந்துமதியின் சற்று அதிர்ந்தாலும், "வாங்க" என்றார். அவரின் பார்வை மகளின் மீது ஆராய்ச்சியாய் சென்றது. இருவரது முகமுமே வாடி வதங்கி இருக்க அவருக்கும் அவர்களின் நிலை கலக்கத்தை ஏற்ப்படுத்தியது.


உள் நுழைந்தவள் எதுவுமே கூறாது அறையில் சென்று கதவடைத்துக் கொண்டாள். இந்துமதி திரிலோகேஷை பார்க்க அவளது பையை வைத்து விட்டு ஷோபாவில் அமர்ந்து விட்டான்.


ஏதோ பிரச்சனை என்பது அவருக்கு புரிந்தது. அவனிடம் என்ன கேட்பது என்று தயங்கி நிற்க, "ஆன்ட்டி, எனக்கு காபி வேணும்" என்றான்
உரிமையாக.

அப்பொழுது தான் சுதாரித்தவர், "ரெண்டு நிமிஷம்ப்பா" என அடுப்பறை நுழைந்து அவனுக்கு காபி எடுத்து வந்து கொடுத்தார். அவன் குடித்து முடிக்கும் வரை கூட அவரால் பொறுக்க முடியவில்லை. மனமோ நிலையில்லாமல் தவித்தது.


"ஏதாவது பிரச்சனையாப்பா, பேக் எல்லாம் எடுத்துட்டு வந்திருக்க. அவ எதுவுமே பேசாம உள்ள போய்ட்டா?" என்று கேட்டு அவனையே பார்த்தார். உண்மையிலே பதற தான் செய்தது தாயின் மனது.



"ம்ம்... ஆமா. ஆனா எங்க ரெண்டு பேர்க்குள்ள இருக்க பிரச்சனையில யாரும் தலையிட வேண்டாம்னு நான் நினைக்கிறேன். நாங்களே தீர்த்துப்போம். நீங்க மீனுக்கிட்ட எதுவுமே கேட்காதீங்க. அவ கொஞ்ச நாள் இங்கே இருக்கட்டும்" என்று கூற, "என்னப்பா இப்படி மொட்டையா சொல்ற" என்று பதறினார். இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு மகள் பிடிவாதத்தை விட்டு திருமணம் செய்து கொண்டது தான் தற்சமயம் அவருக்கு ஆறுதலாக இருந்தது.
இப்பொழுது பிணக்கு என்னும் பொழுது அதிர்ந்தது அவரின் மனது.


அவர் கைகளை பற்றிக் கொண்டவன், "உங்களுக்கு என் மேல நம்பிக்கை இருக்குல்ல. நான் எல்லாத்தையும் பார்த்துப்பேன். பிரச்சனை, சண்டையில்லாத வாழ்க்கை யாருக்குமே கிடைக்காது. இப்ப எங்களுக்கு கொஞ்சம் டைம் தேவைப்படுது. ஒரே இடத்தில இருந்தா சரி வராது. கண்டிப்பா எப்பயுமே நான் மீனுவை விட்டுட மாட்டேன். இதை மட்டும் உறுதியா சொல்றேன். அவக்கிட்ட எதுவுமே கேட்காதீங்க. ஆல்ரெடி ரொம்ப டிப்ரெஷன்ல இருக்கா. அவளே மாறி வருவா, இப்ப அவளுக்கு தேவை அமைதி தான்" என்று அவரை சமாதானம் செய்தான். அவனது நம்பிக்கையான வார்த்தைகளுக்கு பிறகு தான் சற்று ஆசுவாசமடைந்தார்.


"சரி நான் கிளம்புறேன்" என்றவன் பேக்கை எடுத்து மீனுவின் அறைக் கதவை தட்ட எழுந்து வந்து அசட்டையாக திறந்தாள். அழுதிருந்தாள் நிறையவே. அவளது நிலை அவனுக்கும் மனதை பிசைந்தது. ஆனாலும் இறங்கிச் செல்ல மனதில்லை. இனிமேல் அவளாக தன்னிடம் வர வேண்டும் என்று விரும்பியது அவனது மனது. அவளது கையில் பையை கொடுத்தவன், "போய்ட்டு வரேன்" என்று கிளம்பி விட்டான். செல்பவனி
ன் முதுகையே வெறித்து நின்றவளுக்கு துக்கம் தொண்டையை அடைக்க தான் செய்தது.
 
Well-known member
Messages
612
Reaction score
348
Points
63
கண்டிப்பா உன்னோட மீனு குட்டி வருவ லோகேஷ் உன்கிட்ட உன்னோட மீனு குட்டியாக அதுக்கு கொஞ்சம் time ஆகும் பிரிந்து இருத்த தான் அன்பு பெருசா இருக்கும் மறுபடியும் இப்படி ஒரு situation நீங்க இருக்க கூடாது
 
Top