• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் - 24, 25

Administrator
Staff member
Messages
997
Reaction score
2,811
Points
93
அத்தியாயம் - 24




திரிலோகேஷ் காரை கோயிலின் வாயிலில் நிறுத்த, அனைவரும் இறங்கி உள்ளே சென்றனர். அவனது விழிகள் முழுவதும் மீனலோஷினி மீது தான். ஆனால் அவளோ அவனை ஏறெடுத்தும் பார்த்திடவில்லை. அவனது பார்வையின் வீச்சை உணர்கிறது மனது. ஆனால் கடவுளின் மீது மட்டுமே அவளது பார்வை நிலைத்திருந்தது.


அவளது முகம் அப்படியொரு அமைதியை தத்தெடுத்திருக்க மனதோ எரிமலையை விட பிரவாகமாக பொங்கியது. அவள் அதிகமாக மனிதர்களை விட கடவுளிடமே சண்டையிட்டு நிற்பாள். எங்கு பதில் கிடைக்குமோ அங்கு வினா எழுப்புவது தானே புத்திசாலி தனம்!


யாரிடம் செல்லவே கூடாது என்றிருந்தேனே அவனிடமே என் வாழ்வை நிர்ணயித்து விட்டாயே! அவன் மட்டுமின்றி நீயுமல்லவா என்னை வஞ்சித்து விட்டாய் என்று ஓலமிட்டது மனது.

குங்குமத்தை ஐயர் கொண்டு வந்து அனைவருக்கும் கொடுக்க வாங்கிக் கொண்டு புறப்பட்டு விட்டனர்.



மீனலோஷினி பேச்சுக்கள் திரிலோகேஷ் என்பவனை தவிர எல்லோரிடமும் இருந்தது. அவனது விழிகள் அவள் தன்னிடம் பேச வேண்டும் என்று ஏங்கி நிற்கிறது. ஒதுக்கம், விலகலை ஏற்க மறுத்து அவனது மனது வெதும்புகிறது. ஆனால் அவள் அவளின் பேச்சின் வீரியம் தன்னை எதிர்காலத்தில் கொஞ்சம் கொஞ்சம் கொன்று குவிக்க போகிறது என்று அந்த ஆடவன் மனது உணரவில்லை போல்!


இந்துமதி வீட்டிற்கு சென்றனர். மீனலோஷினி மேகாவை தூக்கியபடி திரிலோகேஷூடன் நின்றிருக்க ஆரத்தி சுற்றி வரவேற்றார். என்றுமில்லாத அப்படியொரு பொலிவு அந்த தாயின் முகத்தில்.



இத்தனை நாட்களாக மகள் எப்படி வாழ வேண்டும் என்று எண்ணி மருகினாரோ அது தற்போது நிகழ்காலத்தில். இதை காணாமல் ஒரேடியாக சென்று விடுவோமோ என்றெல்லாம் எத்தனை முறை மனது தவித்திருக்கும். தனக்கு பின் அவளை இறுக்கமாக பிடித்து வைக்க ஓர் உறவல்ல இரண்டு உறவுகள் வந்து விட்டது என்ற ஆசுவாசம். இதை விட பெரிய நிறைவு எனக்கு என்ன கிடைத்திட போகிறது என்று மனது கர்வமாக உணர்ந்தது.




"வா லோகேஷ்" என்றவர் செல்வி, குமார் புறம் திரும்பி, "வாங்க" என்று உள்ளே வருமாறு தலையசைத்தார்.


அனைவரும் அமர, "இருங்க காபி கொண்டு வரேன்" என்று உள்ளே நுழைய மகளும் பின்பே சென்றாள்.


"ம்மா..." என்றவள் அவரை அணைத்துக் கொண்டாள். பிரிவு வலி என்பது நாட்களை வைத்து கணக்கிடுவதல்ல. விருப்பமானவர்களை நொடி பிரிந்தாலுமே அது வலி தானே!


கண்கள் கலக்கியது மகளுக்கு, "மீனு, என்னடா" என்று பதறினார். வேகமாக முகத்தை மாற்றி, "ஒன்னுமில்லை" என்னும் விதமாக புன்னகைத்தாள் செயற்கையாக.


"மீனு அங்க உனக்கு எல்லாமே பிடிச்சிருக்கா. சந்தோசமா இருக்கீங்களா. லோகேஷ் உன்கிட்ட" என்று தடுமாறிய தாயையும் அவரது வினாவின் தடுமாற்றத்தையும் உணர்ந்தவள்,
"ம்ம்... நல்லா இருக்கேன்ம்மா, நல்லா பார்த்துக்கிறார்" என்று முற்றுப்புள்ளி வைத்தாள் அவசர கதியில்.



லேசான புன்னகைத்தப்படி மீண்டும் தன் வேலையில் ஈடுபட அவரது தோளில் சாய்ந்து கொண்டாள். காபியை எடுத்து அவர் வெளியில் கிளம்ப ஆயத்தமாக, "கொடுங்க" என்று வாங்கி அனைவருக்கும் கொடுத்தாள். பேச்சுக்கள் பொதுவாக சென்றது சிறிது நேரம். மீனு அதில் கலந்து கொள்ளாமல் மேகாவுடன் சற்று தள்ளி அமர்ந்திருந்தாள்.
லயிக்கவில்லை எதிலுமே மனம். வெகுநாட்களுக்கு பிறகான தாயின் உற்சாகமும் மகிழ்ச்சியும் ரசிக்கிறது மனது. ஆனால் அதற்காக தான் அளித்த விலை கொஞ்ச நஞ்சமல்ல என்று மனது கதறுகிறது. எத்தனை முறை மனதிடம் வாதாடி மண்டியிட்டு இறுதியில் தான் திரிலோகேஷிடம் சென்று நின்றாள். சில கணங்களில் விரும்பாத இடத்தில் நிறுத்தி வாழ்க்கை சிரிக்கும். ஏற்க முடியாது என்று பிடிவாதமாக நின்றாலும் சூழல் நம்மை மட்டுமின்றி பிடிவாதத்தையும் உடைத்து நொறுக்கி விடும்.




"வாங்க சாப்பிட்டு பேசலாம்" என்று இந்துமதி எழுந்து கொள்ள செல்வியும் மீனுவுடன் அவருடன் உதவிக்கு சென்றனர்.
வகை வகையாக சமைத்திருந்தார் மகளுக்காக. "ம்மா... இவ்வளவும் எப்படி தனியா செஞ்சீங்க?" என்று மகள் அலறியே விட்டாள்.


புன்னகையிலே பதிலளித்தவர், "அப்புறம் சொல்றேன், நீ போய் மாப்பிள்ளை கூட உட்கார்" என்று விரட்ட, "ஆமா, போம்மா" என்ற செல்வி அவளை அழைத்துச் சென்று வெளியே விட்டு வந்தார்.


மறுக்க இயலாது வந்து அவனின் அருகில் அமர்ந்து கொண்டாள். குமார் ஏதோ கேள்விக் கேட்க பதில் புன்னகையுடன் பதில் கூறியவள் மேகாவை தூக்கி மடியில் வைத்துக் கொண்டாள்.


அவனின் கண் முன் தான் நடமாடிக் கொண்டிருக்கிறாள் அவனுடைய மனைவியாக. உரிமை கொண்டாட வேண்டி மனது யாசிக்கிறது. ஆனால் மூளை மறுக்கிறது. 'என்னிடம் ஏதாவது பேசேன் டி. என்னை திட்டவாவது செய்!' என்று ஏங்குகிறது. தவிர்க்கிறாள் அதீத கவனத்துடன் அவனை மட்டும். புரியாதளவுக்கு முட்டாள் அல்ல!


உணவு பரிமாற உண்டனர். மீனு அந்த உலகத்திலே இல்லை. தனக்கான பிரத்தியோக உலகத்தில் உழன்றாள். இத்தனை நாட்கள் அதிலே அடைந்து கிடந்தவளால் அவ்வளவு சுலபத்தில் வெளி வர முடிந்திடவில்லை.


சிறிது நேரத்தில் அமர்ந்திருந்தவளுக்கு அப்படியே கண்கள் சொருக, "உள்ள போய் படு மீனு" என்றார் இந்துமதி.


தலையசைத்தவள் தன் மீது படுத்து எப்பொழுதோ தூங்கியிருந்த மேகாவை தூக்கிக் கொண்டு தன் அறைக்குள் நுழைந்து மகளை அணைத்துக் கொண்ட படி உறங்கியும் விட்டாள்.


மாலையில், "மீனு" என்ற திரிலோகேஷின் அழைப்பு செவியை தீண்டிய பின்பே சிரமப்பட்டு கண் விழித்தாள்.


அவனை கண்டு ஒரு நிமிடம் பதறி எழ, "ஹேய், ரிலாக்ஸ். ஒன்னுமில்லை. அத்தையும் மாமாவும் ஊருக்கு போறாங்க. அதான் உன்கிட்ட சொல்லீட்டு போகலாம்னு ரொம்ப நேரமா வெயிட் பண்றாங்க" என்றான் பொறுமையாக.

சில நிமிடங்களுக்கு பிறகே அவனது வார்த்தைகளை உள் வாங்கி கிரகித்தவள், "சரி போங்க, ரெண்டு நிமிஷத்தில வரேன்" என்ற படி எழுந்து பாத்ரூம் புகுந்தாள்.


முகத்தை கழுவி வெளியே வர கையில் காபியை இந்துமதி திணிக்க வாங்கி பருகியபடி செல்வி அருகில் அமர்ந்தாள்.


"எதுக்கு அதுக்குள்ள போறீங்க? இன்னும் ரெண்டு நாள் இருந்திட்டு போங்க. என்ன அவசரம்" என்று இந்துமதி கூற,


"இல்லைம்மா, போட்டது போட்டபடி வந்தாச்சு. இன்னொரு நாள் வரோம்" என்றார் மறுப்பாக குமார்.


மீனுவின் கையை பற்றிக் கொண்ட செல்வி, "மேகாவ நினைச்சு நிறைய வருத்தப்பட்டிருக்கேன். ஆயிரம் இருந்தாலும் அம்மாவுக்கு ஈடு யாருமே இல்லைன்னு. ஆனா இப்ப ரொம்பவே நிம்மதியா இருக்கு. நீ வந்திட்ட" என்று உணர்ந்து கூறியவர் கண்களில் அப்படியொரு நிம்மதி.


"மாப்பிள்ளை கண்டிப்பா, நீங்களும் மீனுவும் அடுத்த வாரம் வீட்டுக்கு வரணும்" என்ற குமார் இந்துமதியிடம், "நீங்களும் தான், நாங்க ரொம்பவே எதிர்பார்ப்போம்" என்றார் புன்னகையுடன்.


"ஆமாம்" என்ற செல்வி, "போய்ட்டு வரோம், வந்திருங்க. எங்க பொண்ணுக்கு பின்னாடி எங்களுக்கு யாருமே இல்லைன்னு நினைச்சோம். ஆனா மாப்பிள்ளை எங்களை விடவே இல்லை. இப்ப எங்களுக்கு மகளாவே மீனுவும் வந்திட்டா" என்றார் அவளை அணைத்தப்படி.


"சரி கிளம்புறோம்" என்ற குமார் கூற, "வாங்க" என்ற திரிலோகேஷ் அவர்களை பேருந்து நிலையம் அழைத்துச் சென்றான்.



மீண்டும் அறைக்குள் சென்ற மீனலோஷினி அமைதியாக படுத்துக் கொண்டாள். உறங்கவில்லை, விழித்திருந்தாள். மனதோ அலை பாய்ந்தது. 'எனக்கு எதுவுமே பிடிக்கவில்லை' என்று சத்தமாக கத்த வேண்டும் என்று மனது விரும்புகிறது. ஆனால் மூளை தடையிட்டு அவளை கட்டுப்படுத்த விழைகிறது. காரணமே இன்றி கன்னத்தில் நீர் இறங்குகிறது. இரண்டு நாளுக்கே மூச்சு முட்டுகிறது. இனி வாழ்க்கை முழுவதும் எவ்வாறு சாமளிக்க போகிறாய் என்று மனது வரிசையாக வினாக்களை கண் முன் கடை பரப்புகிறது.

நீயாக தேடிக் கொண்டது தானே! யாரும் உன்னை வற்புறுத்தவில்லையே! அவன் கூட உன்னை வேறொருவனை திருமணம் செய்து கொள்ளும்படி தானே கூறினான். மெல்ல முடியாவிட்டாலும் விழுங்கி விடு என்று நிதர்சனத்தை முகத்தில் அடித்தாற் போல் மூளை அறிவுறுத்துகிறது.

வந்து விட்டான், அவனது பேச்சுக்குரல் கேட்கிறது. கண்களை இறுக மூடிக் கொண்டாள். உள்ளே வந்து மனைவியையும் மகளையும் நின்று பார்த்தவன் மீண்டும் வெளியில் சென்று விட்டான். அதன் பின்பே மூச்சு சீராக விட்டத்தை வெறித்தபடி இருந்தாள்.

சிறிது நேரத்தில் இந்துமதி உள்ளே வர எழுந்து அமர்ந்து கொண்டாள், "என்னம்மா" என்றபடி.


"தூங்குறீயா? லோகேஷ் தனியாவே உட்கார்ந்திருக்கார். தூங்கலைன்னா வந்து பேசிட்டு இரு" என்று அழைப்பு விடுக்க மறுக்க முடியாமல் எழுந்து வந்து அவனருகில் அமர்ந்தாள். அவனின் பார்வை முழுவதும் அவளில் மட்டுமே நிலைத்திருந்தது.



"ம்மா... நீங்களும் கண்டிப்பா எங்க கூட வரணும். உங்களை தனியா விட முடியாது. இல்லைன்னா நான் அங்க போக மாட்டேன்" என்று மீனு வார்த்தைகளை சிதற விட ஒரு நிமிடம் பதறி விட்டார். "மீனு என்ன பேச்சு இது, கல்யாணமாகி மறுநாளே அங்க போக மாட்டேன்" என்று அதட்ட மகள் முகம் சுருங்கி விட்டது.


மனைவியின் வருத்தத்தை பொறுக்க முடியவில்லை, "ஆமாத்தை, நீங்க வரலைன்னா நாங்க போக மாட்டோம். அப்புறம் உங்களுக்கு தான் கஷ்டம். உங்க பொண்ணுமில்லாம எங்க பொண்ணையும் நீங்க தான் சமாளிக்கணும்" என்று அவளின் பேச்சை திருத்திடும் விதமாக புன்னகையுடன் கூறினான் திரிலோகேஷ்.


தாய்க்கு அவனின் பக்குவம் புரிந்து இதழில் புன்னகை தவழ, "மீனும்மா, அம்மாவுக்கு உன்னை புரியுது டா, ஆனா என்னையும் நீ புரிஞ்சுக்கேம்மா. நான் என்ன ரொம்ப தூரத்துலையா இருக்கேன். உனக்கு என்னை பார்க்கணும்னு தோன்றப்ப வா. லீவ், அப்புறம் ஸ்கூல் முடிஞ்சு தினமும் கூட வா. என்னை பத்தி கவலைப்படாத. கற்பகம் திரும்பவும் வேலைக்கு வரேன் சொல்லிட்டா" என்று இலகுவாக மகளை சரி செய்தாலும் அதில் ஒரு உறுதி இருந்தது.


"ச்சு...ம்மா" என்று மகள் மீண்டும் ஆரம்பிக்க, "மீனு அவங்களை போர்ஸ் பண்ணாதடா, அவங்க விருப்பப்படி இருக்க விடு" என்று கணவன் இடையில் புகு அப்படி முறைத்தாள் அவனை.
அவரின் சங்கடங்கள் அவனுக்கு புரிந்தளவுக்கு கூட மகளுக்கு புரியவில்லை.


"மீனு, இப்ப தான கல்யாணமாகி இருக்கு. கொஞ்ச நாள் தனியா இருந்தா தான் உங்களுக்குள்ள ஒரு புரிதல் வரும். இப்ப வேணாம், உனக்கு குழந்தை பிறக்கட்டும். அப்ப உன்னை கஷ்டப்பட விடாம அம்மா உன் கூடவே வந்திடுறேன் டா" என்றிட இப்பொழுது மகளுக்கு தூக்கி வாரி போட்டது.


திருமணத்திற்கு நச்சரித்தார் எப்படியே செய்து கொண்டாய். அடுத்து குழந்தை என்னும் பொழுது மனதில் அவளையும் அறியாமல் கிலி குடி கொண்டது. திருமணம் என்பது மட்டுமே அப்பொழுது விஸ்வரூபமாக தெரிந்தது. அதை தாண்டி என்ன என்று மனம் சென்றிடவில்லை.

முகம் இருளடைந்து விட அவனுக்கு அவளுடைய நிலை புரிந்தது. தனக்கு சிறிது தள்ளி அமர்ந்திருந்த அவளின் கை மீது தன் கைகளால் அழுத்தம் கொடுக்க இப்பொழுது தான் இந்துமதி அவளையே பார்த்திருப்பது புரிந்தது. வேகமாக முகத்தை மாற்ற முயற்சி செய்ய, அவரின் சிந்தனையை தடை செய்யும் விதமாக, "ம்மா..." என்று கண்களை கசக்கிக் கொண்டு உறக்கம் கலைந்த மேகா வந்து விட்டாள்.



மீனு தன் மடியில் வந்து அமர்ந்தவளை தூக்கி அவளுக்கு பாலை காய்ச்சிக் கொடுக்க சிறிது நேரத்தில் மூவரும் இரவு உணவை முடித்த தங்களின் வீட்டிற்கு புறப்பட்டு விட்டனர்.


"நாளைக்கு போகலாம்ல்ல லோகேஷ்" என்று இந்துமதி கூற, "இல்லை ஆன்ட்டி, மேகா ஆல்ரெடி ரொம்ப ஸ்கூல்க்கு லீவ் போட்டுட்டா. நாளைக்கு கண்டிப்பா போகணும்" என்று கூறி காரில் ஏற, "வரோம்மா" என்ற மீனுவும் மேகாவுடன் மறுபுறம் ஏறிக் கொண்டாள்.

"பாய் பாட்டி" என்று மேகா கையசைக்க கார் வீட்டை நோக்கி புறப்
பட்டது.

இனி வாழ்க்கை வசந்தமாக மாறி விடுமோ என்ற எண்ணம் அவனை ஆக்ஷிக்க இல்லை இனி தான் பிரளயமே வெடிக்க காத்திருக்கு என்று அவனது விதி சிரித்தது.
 
Last edited:
Administrator
Staff member
Messages
997
Reaction score
2,811
Points
93
அத்தியாயம் - 25



அதற்கு பின் காரில் எந்த பேச்சு சத்தமும் கேட்டிடவில்லை. மேகாவோ மீனுவின் மார்பிலே கண்ணயர்ந்து விட அவளோ ஜன்னல் வழியே வெளியே வெறித்தப்படி அமர்ந்திருந்தாள்.



சில நிமிடங்களுக்கு முன்பு ஒட்ட வைத்திருந்த செயற்கை புன்னகை கூட மாயமாகி போனது. என்ன கேட்பது என்று அவனுக்கும் புரியவில்லை. அமைதியாகவே காரை செலுத்தினான். சில நிமிடத்தில் அவளும் கண்களை மூடிக் கொண்டாள். மனைவியே அடிக்கடி பார்த்த படி காரை வீட்டினுள் நிறுத்தினான்.



காரின் இயக்கம் நின்றவுடன் கண் விழித்தவள் கதவை திறந்துக் கொண்டு இறங்க முற்பட மேகாவை தூக்கிய படி என்பதால் சற்று சிரமமாகவே இருந்தது.


"இரு, நான் வரேன்" என்றவன் வேகமாக இறங்கி அவள் புறம் வந்து மேகாவை தூக்கிக் கொள்ள இறங்கியவள் சாவியை எடுத்து கதவை திறந்து மின்விளக்குகளை போட்டாள்.



தங்கள் அறைக்குள் நுழைந்தவன் மேகாவை நேராக படுக்க வைத்து போர்வையை போர்த்தி விட கதவை பூட்டியவள் அடுப்பறை புகுந்து நிமிடத்தில் பாலை காய்ச்சி ப்ளாஸ்க்கில் எடுத்து அறைக்குள் நுழைந்தாள்.


அவள் என்ன செய்கிறாள் என்று எட்டி பார்த்தவன் உடையை எடுத்துக் கொண்டு குளியலறை புகுந்தான். தண்ணீர் சத்தத்தின் மூலம் அவன் பாத்ரூம் உள்ளே இருக்கிறான் என உணர்ந்து உடை கூட மாற்ற மனதின்றி அப்படியே மேகாவின் மறு புறம் படுத்துக் கொண்டாள்.


உறக்கம் வரவில்லை, கண்களை இறுக மூடிக் கொண்டாள். வெளியில் வந்தவன், 'ட்ரெஸ் மாத்தாமலே படுத்திட்டா' என்று யோசனையோடு அருகில் செல்ல அவள் உறங்கவில்லை என்பதை உணர முடிந்தது.


"மீனு, ட்ரெஸ் மாத்திட்டு படு" என்று குனிந்து சற்று மெதுவாக குரலில் மோகாவின் உறக்கத்தை எண்ணி கூற, "வேண்டாம்" என்றாள் முனங்கலான குரலில். ஆனால் அவனை பார்க்க விழைந்திடவில்லை. கழுத்து வரை இருந்து போர்வையை இழுத்து முகம் முழுவதும் போர்த்திக் கொண்டாள்.

பெருமூச்சு விட்டவன் வேறு எதுவும் பேச விரும்பாது சென்று படுத்துக் கொண்டான். வெகு நேரத்திற்கு பிறகே இருவரையும் உறக்கம் சூழந்து கொண்டது.


காலையில் சற்று விரைவாகவே எழுந்து கொண்டவள் காபி போட்டு திரிலோகேஷை எட்டி பார்க்க அவன் இன்னும் எழுந்து கொள்ள வில்லை. தனக்கு மட்டும் எடுத்து குடித்து விட்டு மேகாவும் அவளும் பள்ளிக்கு கிளம்ப வேண்டும் என்பதால் உணவை தயாரிப்பதலில் இறங்கி விட்டாள்.



சற்று நேரத்தத்திற்கு பிறகு எழுந்து வந்தவன் ஹாலில் அமர அவனுடனே எழுந்த மேகா மீனுவிடம் சென்று விட்டாள். அவளை தூக்கிக் கொண்டவள் அவளுக்கு பால் காய்ச்சி கொடுத்து விட்டு த்ரிலோகேஷிற்கு காபியை எடுத்து வந்தாள். இன்னும் பேச்சுக்கள் என்பது வார்த்தைகளன்றி பார்வைகளின் மூலம் மட்டுமே. அதற்கு மேல் எடுத்து செல்ல அவளால் முடியவும் இல்லை. மனதும் அவளுக்கு ஈடு கொடுக்க மறுக்கிறது.



அரவத்தில் அவன் நிமர்ந்து பார்க்க டேபிளில் வைத்து விட்டு உள்ளே சென்று விட்டாள். அவன் கைகள் அதை தொட விழைந்திடவில்லை. அவளின் மௌனம் வதைக்கிறது. உனக்கு எதுவும் செய்ய மாட்டேன் என்று விலகி நின்றாள் கூட பெரிதாக பாதிக்காது. இந்த மௌன யுத்தத்தை ஏற்க முடியவில்லை அக்கணவனால்.


அப்படியே வெறித்தபடியே அமர்ந்திருந்தான். வேலையை முடித்தவள் கிளம்புவதற்காக மேகாவுடன் வெளியில் வர காபி குவளை அவள் வைத்த இடத்தை விட்டு அசையவில்லை.


அவனையும் அதையும் மாறி மாறி பார்த்தவள் எதுவும் கேட்காது அறைக்குள் நுழைந்து கொண்டாள். அந்த அலட்சியம் இன்னும் இன்னும் தாக்கியது. முதலில் இருந்த மேகாவின் நெருக்கம் கூட அவளின் வருகையால் தடைபட்டது. ஒரே நாளில் யாருமற்ற அநாதை போன்ற உணர்வு அவனுக்கு. வெகு நேரத்திற்கு பிறகே, இது தொடக்கம் தான். இதுக்கு இவ்வாறு அதிர்ந்தால் எப்படி. எல்லாமே தெரிந்து அவளை புரிந்து தானே இந்த வாழ்க்கைக்குள் நுழைந்தாய் என்று மனது சத்தமாக ஓலமிட, எழுந்து காபியை கீழே ஊற்றி கப்பை கழுவி வைத்து அறைக்குள் நுழைய இருவரும் குளித்து தயாராகிக் கொண்டிருந்தனர்.

அவனும் உடையை எடுத்து குளியலறை புகுந்து நிமிடத்தில் தயாராகி வெளியே வர மீனு மேகாவிற்கு உணவை ஊட்டியபடி தானும் உண்டுக் கொண்டிருந்தாள்.

அவன் சென்று டேபிளில் அமர உணவை அவன் புறம் நகர்த்தி வைத்து விட்டு மீண்டும் தன் வேலையை தொடர எடுத்து போட்டு உண்டான். எதிர்பார்ப்பு என்பது எதார்த்தம் தானே. அது பொய்க்கும் சமயங்களில் வலிக்கிறது அவனுள். உடனே அவனுள் ஒன்ற வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்த்திடவில்லை. சின்ன புன்னகை, ஓரிரு வார்த்தைகள், இவைகள் தானே அவனின் தற்போது மிகப் பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது. முடியாது என்று மறுத்து விலகி ஓடுபவளை என்ன செய்வது என்றே அவனின் எண்ணம் முழுவதும்.

பல்வேறு சிந்தனைகளில் சிக்கி சுழன்றவனுக்கு உணவு என்பது உள்ளே இறங்கவே மறுத்தது. அவளோ தங்களின் பேக்குகளை எடுத்து தயாராய் ஷோபாவில் அமர்ந்து விட கடினப்பட்டு உணவை சிறிதளவு உள்ளே இறக்கிக் கொண்டிருக்க வெளியில் ஹாரன் சத்தம் கேட்டது.

எழுந்து கொண்டவள் வெளியில் செல்ல ஆயத்தமாக, "ம்மா... டாடி இன்னும் சாப்பிடலை. எங்க கிளம்புறீங்க?" என்று மேகா அவளின் கையை பற்றியபடி வினவ,

"டாடிக்கு வேலை இருக்காம், நம்ம மமாமி காரல் போவோம் சரியா?" என்று அவளின் உயரத்திற்கு குனிந்து கன்னத்தை பற்றிய படி கூறினாள் மீனு.

அவளோ, 'அப்படியா?' என்று தந்தையை பார்த்தாள். மீனுவை ஒரு வெற்று பார்வை பார்த்தவன், "ஆமாம்" என்று தலையசைக்க இருவரும் கிளம்பி விட்டனர்.

அப்படியே எழுந்து கைக்கழுவியவன் கண்களில் அவள் மதியத்திற்கு அவனுக்காக தயார் செய்து வைத்திருந்த உணவு பட்டது. அவனையும் மீறி வலியுடன் கூடிய புன்னகை பரவ வெளியேறி விட்டான்.



அவள் நினைத்தது போலவோ அச்சு பிசகாமல் நடந்தது. அவன் மிச்சம் மீதி சேர்த்து வைத்திருந்த மொத்த நிம்மதியை வாரி சுருட்டிக் கொண்டிருந்தாள்.

நேற்று தோன்றிய வண்ணங்களெல்லாம் மாயை போல் மறைந்து மீண்டும் வாழ்க்கை அதீத கருப்பு பக்கங்களாக மாறி விட்டது போன்றதொரு உணர்ச்சி அவனை ஆட்கொள்ள அலுவலகம் செல்ல மனதில்லை.

மாலை வரையிலுமே இலக்கின்றி காரிலே சுற்றிக் கொண்டிருந்தான். நிறைய வழக்குகள் வேலைகள் அவனுக்காக காத்திருக்க அலைபேசி அழைப்புகள் வந்த வண்ணமே இருந்தது. மொபைலை சைலண்டில் போட்டு விட்டான்.


மனம் கனக்கிறது, பாரத்தை எவ்வாறு எங்கு இறக்கி வைப்பது என்று புரியவில்லை. அவளிடம் சண்டையிடுவதில் அவனுக்கு துளியளவும் விருப்பமில்லை. கேட்டு பெறுவதல்ல அன்பு என்று மூளைக்கு புரிகிறது. ஆனால் மனதால் ஏற்க முடியவில்லை.

கத்தி அழுக வேண்டும் என்று தோன்றிகிறது. ஆனால் முடியவில்லை. ஷாம்லியை திருமணம் செய்தது முதல் தற்போது மீனுவை திருமணம் செய்தது வரை சூழலின் பிடியில் மட்டுமே. நான் என்ன தவறு செய்தேன்! தண்டனை மட்டும் எனக்கா? என்றெல்லாம் மனது பிதற்ற உணவை கூட மறந்து சுற்றினான் ஏதோ வெறி பிடித்தாற் போல்.

மாலை வீட்டிற்கு வந்தவள் கண்ணில் முதலில் பட்டது என்னவோ அவனுக்காக காலையில் தயார் செய்து வைத்த உணவு தான். அதை பார்த்தவுடன் அப்படியொரு கோபம் துளிர்த்தது. "திமிர், காலையில எவ்வளவு சீக்கிரம் எழுந்து கஷ்டப்பட்டு செஞ்சு வச்சேன். இப்படி சாப்பாடாம வேஸ்ட் பண்ணிட்டான். வேண்டாம் சொல்லி இருந்தா எனக்கு வேலை மிஞ்சமாகி இருக்கும்" என்று புலம்பியவள் கெட்டு போன உணவை அப்புறப்படுத்தி விட்டு தங்களுக்கு காபியை போட்டாள்.

தாய் மகள், இருவரும் காபி குடிக்க அடுத்து மேகா தனது வீட்டுபாடங்களை எழுத ஆரம்பித்து விட்டாள். அவளுடன் அமர்ந்து அவளுக்கு சொல்லிக் கொடுத்த மீனு பிறகு இந்துமதிக்கு அழைத்து விட்டாள்.

இருவரும் அவருடன் பேச நேரம் போனதே தெரியவில்லை. "ம்மா.. பசிக்குது" என்று மேகா கூறிய பின்பே நேரத்தை பார்த்தவள், "அச்சோ சாரிடா, ரெண்டு நிமிஷத்தில தோசை ஊத்திடுறேன்" என்று அழைப்பை துண்டித்து அடுப்பறை நுழைந்தாள்.

அவள் தோசையுடன் வர இருவரும் சாப்பிட்டு முடித்தனர். "இன்னும் அப்பா வரலை?" என்று மேகா கேட்டவுடன் தான் அவளுக்கு த்ரிலோகேஷ் நினைவே வந்தது. ஒரு நிமிடம் அழைக்கலாமா என்று தோன்றினாலும் எண்ணத்தை செயல்படுத்த விருப்பமில்லாது போக, "வேலை இருக்கும், வந்திடுவார் டா!" என்று மகளை சமாதானம் செய்தாள்.
சிறிது நேரம் அவளுடன் விளையாடிய கொண்டிருந்த மேகா அப்படியே உறங்கியும் போனாள்.


நேரத்தை பார்த்தப்படியே அமர்ந்திருந்தாள். பத்தை நெருங்கியும் அவன் வராது கடுப்பு இன்னும் அதிகரித்தது. "லேட்டாகும்னா ஒரு வார்த்தை போன் பண்ணி சொல்லத்த தெரியாது" என்று புலம்பியவள் அசதியில் உறங்கியும் போனாள்.

இருட்டும் வரை காரில் சுற்றியவன் அதன் பின் அலுவலகம் சென்று விட்டான். யாரிடமும் தன்னுடைய கோபத்தை வெளிபடுத்தி விடக் கூடாது என்ற எண்ணம் மட்டுமே அவனிடம் தற்போது உலாவிக் கொண்டிருந்தது. அதானால் தான் வீட்டிற்கு கூட செல்ல மனமில்லாது போனது. முதலிலாவது மேகா என்று ஓடுவான். ஆனால் அந்த வேலையும் தற்போது அவளுடையதாக ஆக்கிக் கொண்டாள் மனைவி.

காணவில்லை என்றால் தன்னை தேடிட மாட்டாளா என்று கூட மனது ஏங்கியது. எங்கு அவளது அழைப்பை ஏற்காமல் கண்ணயர்ந்து
விட்டால் என்றெல்லாம் நற்பாசை கொண்டவன் வேகமாக சைலண்டில் இருந்து எடுத்து மொபைலை பார்த்தபடியே இருந்தான்.

மணி பணிரெண்டை கடந்தும் அழைக்கவில்லை. அவனுக்கோ கோபத்தின் அளவு அதிகரித்துக் கொண்டே சென்றது. தனக்கு ஏதாவது நேர்ந்திருந்தால் கூட இப்படி தான் இருப்பாளா என்று எண்ண ஒரு நொடி முழுதாக உடைந்தே போனான்.
இதற்கு தானே அத்தனை முறை மறுத்து மருகி நின்றேன். அருகில் வந்து விடாதே. மனது உரிமையை அதிகமாக எதிர்பார்த்திடும் என்பதை அறிந்து.


'ஏன் டி என்னை இப்படி கொல்லுற' என்று புலம்பியவன் அப்படியே கண்களை மூடி நாற்காலியில் சாய்ந்து கொண்டான். எதுவுமே பிடிக்கவில்லை, எங்காவது யாரையுமே தெரியாத புதிய இடத்திற்கு சென்று விட வேண்டும் என்று மனது பேராசை கொண்டது.

அதிகாலையிலே எழுந்தவளுக்கு இன்னும் லோகேஷ் வரவில்லை என்று உணர்வு தோன்ற தன் தலையில் தட்டிக் கொண்டவள் வேகமாக அழைபேசியை தேடி எடுக்க அரவத்தில் மேகா முழித்துக் கொண்டாள்.


"டாடி எங்க? வெளியில இருக்காங்களா?" என்று இரவு தந்தையை காணமல் உறங்கி விட்டதால் அவனை கண்டுவிடும் ஆரவத்தில் வினவ அவளிடம் என்ன கூறுவது என்று புரியாமல் ஒரு நிமிடம் முழித்தவள், "அவர்க்கு தான் போன் பண்றேன். பேசு" என்று அழைப்பேசியை மகளிடம் நீட்டினாள்.




அழைப்பு முழுவதுமாக சென்று துண்டாகிட போகும் நூலிழையில் அழைப்பை ஏற்று, "ஹலோ" என்றிட, "டாடி" என்றாள் மகள். அந்த குரல் இழந்திருந்த அவனது ஜீவனை மீட்க, "என்னடா" என்றான்.


"நீங்க நைட் வரலையா? எங்க இருக்கீங்க? வாங்க சீக்கிரம்" என்றாள் மழலை மொழியில்.


"கொஞ்சம் வேலை வந்திடுறேன்" என்று அழைப்பை துண்டித்தவன் நொடியும் தாமதிக்காது கிளம்பி விட்டான். அவன் கூறியதை மேகா மீனுவிடம் கூற அப்பொழுது தான் அவள் மனம் சற்று ஆசுவாசமானது.

தாய் மகள் இருவரும் வாயிலை பார்த்தப் படியே அமர்ந்திருக்க உள்ளே நுழைந்தான். இரவு முழுவதும் தூங்காததன் விளைவாக கண்கள் நன்றாக சிவந்து இருக்க, முகமே வெகுவாய் ஓய்ந்த தோற்றத்தில் இருந்தது. மீனலோஷினி அவனை தான் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்க, அருகில் வந்து மகளை தூக்கியவன் அறைக்குள் சென்று விட்டான்.


அவனது தோற்றம் அவளது மனதை பிசைந்தாலும் தன்னிடம் எதுவும் கூறாது உள்
ளே சென்று விட்டான் என்ற கோபம் எழ வீம்பு கொண்டு அப்படியே அமர்ந்து கொண்டவள் கண்களில் தன்னையும் அறியாமல் நீர் பனித்தது.
 
Last edited:
Top