• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 20

Administrator
Staff member
Messages
577
Reaction score
834
Points
93
தேனும் இனிப்பும் 20:

நானும் அவனும்
மண்ணும் மணமும்


சென்னையின் புகழ்பெற்ற அந்த பள்ளியின் முன் வாகனத்தை நிறுத்திய ஜீவாவின் விழிகள் பிள்ளைகள் இருவரையும் தேடியது‌.

பள்ளி அப்போது தான் முடிந்திருப்பதால் பிள்ளைகள் முந்தியடித்து கொண்டு வெளியேறினார்கள்.

முகத்தில் சிரிப்புடன் ஓடி வரும் மழலைகளை கண்டதும் ஜீவாவின் இதழ்களில் குறுநகை பூத்தது.

இறங்கி வாசலுக்கு சென்றவனது விழிகள் தம்மக்களை இன்னும் காணோமே என்று தேட ஜீவி தூரத்தில் தம்பியை கையில் பிடித்தபடி நடந்து வந்து கொண்டிருந்தாள்.

இடையில் அருகில் வந்த தோழிகளிடம் சிரித்து பேசியபடி வர அக்காட்சி கவிதையாய் இருந்தது ஜீவாவிற்கு.

அதுவும் அவள் அதியை பத்திரமாய் அழைத்து வரும் பாங்கு பெரிய மனித தோரணையை ஒத்திருந்தது.

தந்தையை அருகில் கண்டதும், “அக்கா அப்பா” என்றவன் ஒடி வந்து ஜீவாவின் கையை பிடித்து கொள்ள, “அப்பா” என்று முகம் முழுவதும் சிரிப்புடன் வந்த ஜீவி, “இவங்க என் ஃப்ரெண்ட்ஸ்” என்று அறிமுகம் செய்தாள்.

ஜீவா சிரிப்புடன் கையசைக்க, “ஹாய் அங்கிள்” என்று ஒவ்வொருவராக கூறினர்.

“பாத்திட்டீங்களா என் அப்பாவ. இனிமேல் அப்பாதான் தினமும் எங்களை ஸ்கூலுக்கு கூட்டிட்டு வர்றது அப்புறம் வீட்டுக்கு அழைச்சிட்டு போகவும் செய்வாங்க” என்றவளது முகத்தில் தான் எவ்வளவு மகிழ்ச்சி. கோடி ரூபாய் கொடுத்தாலும் அதனை வாங்க முடியாது என்று தான் ஜீவாவிற்கு தோன்றியது.

“அப்போ இனிமேல் நிஜமா இங்க தான் இருக்க போறீங்களா?” என்று ஒரு தோழி வினவ, “ஆமா இனிமேல் எப்பவும் இங்க தான்” என்றவள், “சரி நாளைக்கு பேசலாம் அப்பாக்கு டைம் ஆச்சு” என்றாள்.

இதனை பார்த்திருந்த ஜீவா, “அவங்க எப்படி போவாங்க?” என்று வினவ, “நாங்க பக்கம் தான் அங்கிள் நடந்து போய்டுவோம்” என்று ஒருத்தி பதில் அளித்தாள்.

“வாங்க நான் ட்ராப் பண்ணிட்டு போறேன்” என்று ஜீவா அழைக்க, “இல்லை அங்கிள் எங்களுக்கு ப்ராஜெக்ட்க்கு திங்க்ஸ் வாங்கணும் வாங்கிட்டு போறோம்” என்றுவிட்டு அவர்கள் நகர்ந்தனர்.

இருவரையும் கையில் பிடித்தபடி நடந்து வந்து காரில் ஏரியவன், “என்ன திடீர்னு ஃப்ரெண்ட்ஸ கூட்டிட்டு வந்து இன்ட்ரோ குடுக்குற ஜீவி?” என்று வினவிட,
“அவங்க நான் சொல்றதை நம்பவே இல்லைப்பா. நான் டெல்லிக்கு திரும்ப போய்டுவேன்னு சொன்னாங்க” என்று மகள் பதில் அளித்தாள்.

“ஓ…” என்று கேட்டு கொண்டவன் வாகனத்தை இயக்கினான். இருவரும் வேடிக்கை பார்த்தபடி வந்தனர்.

அப்போது தான் அவர்கள் ப்ராஜெக்ட்டிற்கு பொருட்கள் வாங்க வேண்டும் என்று கூறியது நினைவிற்கு வர, “உனக்கு ப்ராஜெக்ட் இல்லையா ஜீவி?” என்று வினவிட, “இருக்குப்பா” என்று பதில் அளித்தாள்.

“எல்லா திங்க்ஸும் வச்சு இருக்கியா?” என்று ஜீவா கேட்க, “இல்லைப்பா வாங்கணும்” என்றாள்.

“இப்போ போய் வாங்கலாமா?” என்று ஜீவா வினா தொடுக்க, “போகலாம் பா” என்று ஆர்வமாய் கூறியவள், “ஆனால் உங்களுக்கு ஆபிஸ்க்கு டைம் ஆகலையா?” என்று ஏக்கத்துடன் முடித்தாள்.

“இப்போதைக்கு எமெர்ஜென்சி வொர்க் எதுவும் இல்லைடா. நாம போகலாம்” என்று மகளின் மனம் உணர்ந்து பதில் அளிக்க, “ஹை சூப்பர்ப்பா போகலாம்” என்று துள்ளி குதித்தாள்.

“சூப்பர் பா” என்ற அதியும் குதிக்க, “என்னடா உனக்கும் ப்ராஜெக்ட் இருக்கா?” என்று ஜீவா வினா எழுப்பினான்.

“இல்லைப்பா அவன் ஷாப்க்கு போனா சாக்லேட் வாங்கலாம்னு குதிக்கிறான்” என்று சிரிப்புடன் ஜீவி கூற, “அப்படியா?” என்று ஜீவா மகனை கண்டு புருவம் உயர்த்தினான்.

“ஆமாப்பா” என்றவனது முகம் முழுவதும் சிரிப்பு. “டேய் நோ சாக்லேட்ஸ் நேத்து தான வாங்கி கொடுத்தேன்” என்று ஜீவா மறுக்க, “ப்பா ப்ளீஸ்ப்பா” என்று கெஞ்சினான்.

“சாக்லேட் வாங்கி கொடுத்தா அம்மா உங்களோட சேர்த்து என்னையும் அடிப்பாடா” என்று ஜீவா மொழிய, “ப்பா தம்பி கேக்குறான்ல ஒரே ஒரு சாக்லேட் வாங்கி கொடுங்கப்பா” என்று மகள் தம்பிக்கு ஆதரவாக பேசினாள்.

அதில் ஜீவாவிற்கு புன்னகை இமை நீள, “தம்பிக்கு சப்போர்ட்டா” என்று மகளிடம் வினவினான்.

“ஆமா என் தம்பிக்கு நான் தான் சப்போர்ட் பண்ணுவேன்” என்று அதியை பிடித்து கொள்ள, “ஆமா என் அக்கா” என்று அவனும் தமக்கையை பிடித்து கொண்டான்.

பிள்ளைகளின் ஒற்றுமையில் மனம் நிறைந்திட, “சரி ஒன்னே ஒன்னு தான் அகெய்ன் கேக்க கூடாது” என்று கூற, “சரிப்பா” என்று இருவரும் கோரஸ் பாடினர்.

ஜீவா ஒரு கடையில் வாகனத்தை நிறுத்திவிட்டு மக்களை உள்ளே அழைத்து சென்றான்.

இருவரும் உள்ளே சென்றதும் தங்களுக்கு தேவையானதை எடுத்து கூடையில் போட ஜீவா அவர்களை அவதானித்தபடி உடன் சென்றான்.

இருவரும் தங்களுக்குள்ளே பேசியபடி பொருட்களை எடுத்து போட ஜீவா அந்த கடையை சுற்றி பார்த்து கொண்டிருந்தான்.

அதி, “அக்கா சாக்லேட்” என்று ஒரு பெரிய இனிப்பை தூக்க, “டேய் அவ்ளோ பெருசு வேணாம். சின்னது எடு” என்று மறுத்தாள்.

“அக்கா ப்ளீஸ்” என்று இளையவன் கெஞ்ச, “நிறைய சாக்லேட் சாப்பிட்டா பூச்சி பல்லு வந்திடும் அது ரொம்ப வலிக்கும்” என்று ஜீவி விளக்கினாள்.

“அப்படியா?” என்று அதி விழி விரிக்க, “ஆமா டா. எனக்கு வந்து ரொம்ப வலி‌. அப்புறம் அந்த பல்லை எடுத்துட்டோம்” என்று ஜீவி மறுமொழிந்தாள்.

“எங்க காட்டு?” என்று அதி வினவ, “இதோ இந்த லாஸ்ட்ல” என்றவள் வாயை திறந்து காண்பித்தாள்.

இரண்டு நிமிடங்கள் எக்கி எக்கி பார்த்தவன், “ஆமா காணோம்” என்று அதிசயத்தை பார்த்தது போல கூறிவிட்டு, “சரிக்கா நான் சின்ன பாக்கேட் எடுத்துக்கிறேன்” என்க, ‘அடப்பாவி’ என்று ஜீவா சிரிப்புடன் பார்த்தான்.

காரணம் தான் எவ்வளவு முறை இதனை கூறியிருப்போம். அப்போதெல்லாம் காதிலே வாங்காதவன் தமக்கை கூறியதும் கேட்டுக் கொண்டானே என்று ஆச்சரியம் தான்.

இருவரும் ஐந்து நிமிடத்தில் அனைத்தையும் வாங்கிவிட்டு வந்து, “அப்பா வாங்கிட்டோம்” என்க, “நீங்க இங்க இருங்க நான் பில் போட்டுட்டு வர்றேன்” என்று சென்றவனது முகத்தில் இன்னுமே ஆச்சரியம் தான்.

ஜீவிதாவை இருவரும் ஏற்று கொள்வார்களா? சண்டை ஏதேனும் வருமோ என்று பயந்து கொண்டே இருந்தான். ஆனால் அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்பது போல அவ்வளவு ஒற்றுமையாக இருக்கின்றனர்.

அதுவும் ஜீவிதா இந்த வயதிலே முதிர்ச்சியுடன் தம்பிகளை நன்றாக பார்த்து கொள்கிறாளே என்று வியப்பு தான்.

ஜீவா வந்ததும் மூவரும் வீட்டை நோக்கி சென்றனர். ஜீவா, “டேய் போனதும் சாக்லேட்டை எடுத்து காட்டி அம்மாக்கிட்ட மாட்டிக்காதடா” என்று அறிவுறுத்த, மகிழுந்தில் இருந்து இறங்கியதுமே, “அம்மா அப்பா சாக்லேட் வாங்கி கொடுத்திருக்காரு” என்று கத்தியபடி வீட்டிற்கு ஓட, ஜீவி சத்தமாக சிரித்துவிட்டாள்.

ஜீவா போலியாக மகளை முறைக்க, “சாரிப்பா என்னால சிரிப்பை அடக்க முடியலை” என்றவள் மீண்டும் சிரிக்க துவங்கினாள்.

ஜீவாவின் பார்வை பொங்கி சிரிக்கும் மகளின் மீது ரசனையுடன் படிந்தது. அதனை கலைக்கும் விதமாக, “ஜீவா” என்று முறைப்புடன் வந்து நின்றாள் ஜானு.

ஜீவி, “ப்பா மாட்டிக்கிட்டீங்க” என்று சிறுகுரலில் கூற, “நீயும் தான்” என்று அவனும் மென்குரலில் கூறினான்.

“அங்க என்ன அப்பாவும் மகளும் ரகசியம் பேசிட்டு இருக்கீங்க?” என்று ஜானு அதட்ட, “எனக்கும் என் அப்பாக்கும் இடையில ஆயிரம் ரகசியம் இருக்கும். அதெல்லாம் உன்கிட்ட சொல்ல முடியாது” என்று மகள் சிலுப்பி கொள்ள, “ஆமாம்” என்று சிரிப்புடன் மகளுக்கு கொடி பிடித்தான் ஜீவா.

“ரொம்பத்தான்” என்று இதழ்களை சுழித்தவள், “அதிக்கு எதுக்கு சாக்லேட் வாங்கி கொடுத்தீங்க” என்று இடுப்பில் கைவைத்து முறைத்தாள்.

ஜீவாவின் பார்வை தானாக மகள் மீது பதிய, “சமாளிங்கப்பா யூ கேன் டூ இட்” என்று முணுமுணுத்துவிட்டு ஓட, “என்ன சொல்லிட்டு போறா உங்க மக” என்று முறைப்புடன் வினவினாள்.

“ஹான் அவங்கம்மா இன்னைக்கு ரொம்ப அழகா இருக்கான்னு சொல்லிட்டு போறா” என்று மந்தகாச சிரிப்புடன் கூறினான்.

“இது மக சொல்ற மாதிரி இல்லையே அவங்கப்பா சொல்ற மாதிரி இருக்கே” என்று சிரிப்பை மறைத்து கேட்க, “அவங்கப்பா இப்படி வாய் வார்த்தையா சொல்ல மாட்டான்” என்று மனைவியின் தோளில் கைப்போட்டு உள்ளே அழைத்து சென்றவனது இதழ்களில் விஷமப்புன்னகை.

“எதையாவது சொல்லி என்னை சமாளிச்சிட வேண்டியது” என்று முணுமுணுப்புடன் வர மூவரும் வட்டமாக அமர்ந்து இனிப்பை உண்டு கொண்டிருந்தனர்.

அதனை கண்ட இருவருக்கும் புன்னகை இமை நீண்டது. இருந்தும் விடாமல் ஜானு கணவனை முறைத்து, “ஒன்னு சாக்லேட் இல்லை ஐஸ்க்ரீம் இதை தவிர ஏதும் தெரியாதா உங்களுக்கு” என்க, “ஏன் தெரியாது நிறைய தெரியுமே நைட் சொல்லித் தர்றேன்” என்றவனது குரலில் குறும்பு கூத்தாடியது.

லேசாக சூடாகிவிட்ட கன்னத்தை தேய்த்தவள், “பசங்க முன்னாடி என்ன பண்றீங்க?” என்று முறைக்க, “நான் எதுவுமே பண்ணலையே” என்று சிரிப்புடன் தோளை குலுக்கினான்.

அதில் மேலும் முறைத்தவள், “சார் ஒரு பார்ம்ல தான் இருக்கீங்க போல. நான் போய் டீ போட்றேன்” என்றவள், “வந்து ட்ரெஸ் கூட சேஞ்ச் பண்ணாம சாப்பிட்றது என்ன பழக்கம் போங்க போய் சேஞ்ச் பண்ணிட்டு வாங்க” என்று தாயை அதட்டினாள்.

இனிப்பை உண்டு முடித்திருந்தவர்கள் சம்மதமாக தலையசைக்க, ஜீவி அதியை அழைத்து கொண்டு உடை மாற்றி வர சென்றாள்.

ஜீவா, “அர்னவ் வா கை கழுவிட்டு வரலாம்” என்று மகனை தூக்க வர, “ம்மா” என்று தாயிடம் தாவினான் அவன்.

ஜீவா போலியாக மகனை முறைக்க, ஜானு சிரிப்புடன், “தங்கம் அப்பாட்ட போ” என்க, “அம்மா” என்று அவளை ஒட்டி கொண்டான்.

அதனை கண்ட ஜீவாவின் புருவம் உயர, “இப்போ தான் தூங்கி எழுந்தான் அதான்” என்று விளக்கம் கொடுத்தவள் மகனுக்கு பாலை ஆற்றி கொடுத்துவிட்டு கணவனுக்கு தேநீர் தயாரிக்க துவங்கினாள்.

பிள்ளைகள் இருவரும் உடை மாற்றி வந்துவிட மூவரும் தேநீரை கொடுத்தவள் தானும் அமர்ந்து கொண்டாள்.

ஜீவா மனைவி மக்களோடு பக்கத்து வீட்டிற்கு குடியேறி ஒரு மாதம் ஆகியிருந்தது. ஒரு மாத காலமாக வாழ்க்கை அமைதியாக செல்கிறது அவர்களுக்கு.

பிள்ளைகள் தினமும் பள்ளி விட்டு வந்ததும் பாட்டியிடம் ஓடி விடுவார்கள். காலை உணவில் இருந்து இருவீட்டிற்கும் பரிமாற்றம் நிகழ்கின்றது தான்.

திலகா வரும் சமயம் மட்டும் ஜானு அங்கு தலை காட்டுவதில்லை. தினமும் மாலை பள்ளி விட்டு வந்ததும் அனைவரும் சேர்ந்து தேநீர் அருந்துவது வழக்கமாக வைத்திருந்தனர்.

பிறகு பிள்ளைகள் பாட்டி வீட்டிற்கு சென்றுவிட ஜீவா பணிக்கு செல்வான். ஜானு இரவுணவை தயாரிக்கும் வேலையை கவனிப்பாள்.

அதே போல தேநீர் அருந்தியதும், “ம்மா பாட்டிக்கிட்ட போறோம்” என்று ஜீவி எழுந்து கொள்ள, “நாங்களும்” என்று மற்ற இருவரும் எழுந்தனர்.

“போய்ட்டு சீக்கிரம் வரணும். ஹோம் வொர்க் பண்ணனும்” என்று ஜானு கண்டிப்புடன் கூற, ஜீவி மற்றும் அதி சமத்தாக தலையசைக்க அதை கண்டு அர்னவ்வும் அசைத்தான்.

அதில் ஜானு சிரிப்புடன், “நீ எதுககுடா தலையாட்ற” என்று அவன் சிகை கலைக்க, அவன் பதிலுக்கு சிரித்து வைத்தான்.

“அழகுக்குட்டி டா நீ” என்று அவனது கன்னத்தில் முத்தமிட அவனும் பதிலுக்கும் முத்தமிட்டான்.

இதனை கண்ட மற்ற இருவரும் கூட தாயிடம் பெற்று கொண்டு வழங்கியும் சென்றனர்.

அவர்கள் நகர்ந்ததும் எழுந்து கொண்டவன், “என் கோட்டா” என்று கேட்க, “என்ன?” என்று மனைவி விழியுயர்த்தினாள்.

“அவங்க மட்டும் கொடுக்கல் வாங்கல் பண்றாங்க எனக்கு எங்க?” என்றபடி மனைவியை நெருங்க, பதிலுக்கு போலியாக முறைப்பை பதிலாக கொடுத்தவள், “உனக்கு ஆபிஸ்க்கு டைம் ஆகலையா?” என்று கேட்டாள்.

“அழகான பொண்ட்டி பக்கத்துல இருக்கும் போது எவனாவது ஆபிஸ் பத்தி நினைப்பானா?” என்று சிரிப்புடன் இடை வளைக்க, “ஆஹான்…” என்று ராகமிழுத்தவள், “நம்பிட்டேன்” என்று இதழை சுழித்தாள்.

“ஹேய் நம்புடி. அப்போ சொன்னது என் மக வார்த்தை இல்லை என்னோடது தான்” என்று முகத்தில் உதடு குவித்து ஊத, அதில் லேசாய் சிலிர்த்தவள், “ஹ்ம்ம் ஹ்ம்ம் நம்புறேன். டைம் ஆச்சு ஆபிஸ் கிளம்புங்க” என்று அவனிடமிருந்து விலக முயன்றாள்.

“என் கோட்டா வந்தாதான் கிளம்புவேன்” என்று வம்பிழுத்தவன் கன்னத்தினை அவளுக்கு காண்பிக்க, “உன்னோட ஒரே இம்சை ஜீவா” என்று போலியாக அழுத்தவள் பிள்ளைகள் வந்துவிட்டால் என்ன ஆவது என்று அங்கே பார்வை பதித்தவாறு கன்னத்தில் இதழ் பதிக்க முற்பட்டாள்.

பட்டென்று திரும்பி அதனை இதழில் பெற்று கொண்டவன் மீண்டும்
திருப்பி கொடுத்துவிட்டு நொடியில் நகர்ந்திருந்தான்.

அவனது செயலை மெதுவாய் உள்வாங்கி திகைத்தவள் சிரிப்பும் முறைப்புமாக கணவனை பார்த்து வைத்தாள்.
 
Top