• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் - 20, 21

Administrator
Staff member
Messages
1,030
Reaction score
2,923
Points
113
அத்தியாயம் - 20





இந்துமதிக்கு எந்த வேலையும் வைக்காமல் திரிலோகேஷ், குமார் இருவருமே எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வதாக கூறி விட்டனர் அவரின் உடல் நிலையை கருதி. அவர் மீனுவிற்கு தேவையான உடைகள், நகைகள், அலங்காரம் இதையெல்லாம் பார்த்துக் கொண்டார்.




"ப்பா...மீனுக்குட்டி ஏன் ஸ்கூல்க்கு வரலை. அடிக்கடி லீவ் போட்டுட்டே இருக்காங்களே!" என்று திருமணம் குறித்த வந்த மறுநாளே மகள் தந்தையிடம் சந்தேகத்தை வினவ இது தான் சமயம் என்று நினைத்தவன் மகளை மடியில் அமர்த்தி, "மேகாம்மா, இனிமே நீ அவங்களை மீனுக்குட்டினு கூப்பிடக் கூடாது. அம்மானு தான் கூப்பிடணும்" என்று கூற அவளோ கண்களை விரித்து வைத்து தந்தையை பார்த்தாள்.


அவளது பாவனையை கண்டவன், "என்னடா" என்று மகளின் தாடையை ஆதுரமாக பிடித்துக் கொள்ள, "என் ப்ரெண்ட்ஸ் அம்மா எல்லாம் அவங்க கூடவே இருப்பாங்க. அப்ப மீனுக்குட்டி" என்று நாக்கை கடித்தவள், "அம்மாவும் என்கூடவே இருப்பாங்களா?" என்று வினவினாள்.


"ஆமா இனிமே நம்ம வீட்டில தான் இருப்பாங்கடா" என்று கூற குழந்தை முகத்தில் அவ்வளவு உற்காசம்.

"ரியலி" என்றவள் எழுந்து அவனது முகத்தை தன் இரு கைகளாலும் பற்றிக் கொள்ள, "ம்மா..ஆமா" என தலையாட்டினான்.


"ஆனா ஏன் திடீர்னு" என்று அடுத்த அம்பை தந்தையை நோக்கி எறிய, "இனிமே அப்படி தான். இப்ப சொன்னா உனக்கு புரியாது. ஆனா கண்டிப்பா டாடி உன்க்கிட்ட சொல்லுவேன்" என்று மகளை அணைத்துக் கொள்ள, "சரி அப்ப இப்பவே என்னை மம்மிய பார்க்க அழைச்சுட்டு போங்க" என்று நின்றாள் அவள்.


"ச்சு...மேகா, நீ ஸ்கூல்க்கு போ. இன்னும் த்ரி டேஸ்ல அவங்க இங்கயே வந்திடுவாங்க" என்று கூற
"க்கும்.. முடியாது. அழைச்சுட்டு போங்க" என்று பிடிவாதமாக நின்றாள்.


வெளியே சென்ற செல்வியும் குமாரும் வந்து விட எழுந்து சென்ற திரிலோகேஷ் அவர்களுக்கு தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தான்.


"டாடி ப்ளீஸ்" என்று மகள் இறைஞ்சுதலாக குரல் கொடுக்க, "மேகா" என்று சற்று அதட்டுலாக குரலெழுப்ப முகத்தை தூக்கி வைத்து அமர்ந்து கொண்டாள்.


"என்னாச்சு மாப்பிள்ளை" என்ற குமார் பேத்தியை தூக்கி மடியில் வைத்துக் கொள்ள, "இல்லை மாமா, ஸ்கூல்க்கு போகாம மீனுவை பார்க்கணும்னு சொல்றா" என்றான் தயக்கமாக.


"கல்யாணம் வரை மேகாவும் லீவ் எடுக்கட்டும் மாப்பிள்ளை. இப்ப என்ன ஆகிட போகுது. எனக்கு இந்துமதியம்மாகிட்ட கொஞ்சம் கலந்து பேச வேண்டி இருக்கு. நான் கூட்டிட்டு போறேன்" என அவளை அழைத்துக் கொண்டு செல்வியுடன் கிளம்பியும் விட்டார்.


"அம்மா" என்ற வார்த்தையை கேட்டவுடன் மேகாவிற்கு அப்படியொரு ஆனந்தம். நிறைய முறை வேண்டும் என்று ஏங்கி இருக்கிறது மனது. ஆனால் திரிலோகேஷிடம் வெளிபடுத்தியதில்லை. அவன் வேண்டாம், இல்லை, கேட்காதே என்று ஏதாவது கூறினால் அதற்கு பின் எதையும் கேட்டிடவே மாட்டாள். குழந்தை என்பதால் ஏக்கம் மனதிலே நின்று விட்டது. வயது வித்தியாசமின்றி எல்லா ஜீவன்களுக்கு அதிக படியா பிடிக்கும் வார்த்தையும் உருவமும் அம்மா என்பதையன்றி ஏதுமில்லை தான்.

கூப்பிட வேண்டும் என்று ஆசை தான். ஆனால் யாரை கூப்பிடுவது. ஷாம்லியை காட்டி கூறி இருக்கிறான் தான். ஆனால் போட்டோ முன் நின்று அழைத்திருக்கிறாள். "ம்மா...வாங்க" என்று அந்த கணங்களில் கலங்கிய கண்களோடு மகளை கைகளில் அள்ளி மனதை மாற்ற முயற்சி செய்திருக்கிறான்.




மீனுவால் எதிலுமே லயிக்க முடியவில்லை. ஒரு பரிதவிப்பு வாழ்க்கை அடுத்த கட்டத்தை நோக்கி சுழல்கிறது. ஆனால் மனதோ அப்படியே மரத்து போய் வர மறுத்து மருகுகிறது. காரணம் புரியவில்லை. ஏதோ இழந்தது போல் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருந்தாள்.


"இந்த சேலைய பார் மீனு, அதை பார் இதை பார்" என்று இந்துமதியோ ஆர்வத்தோடும் மகிழ்ச்சியோடும் அவள் முன் நிற்க, "நீங்க பார்த்துக்கோங்கம்மா" என்று ஒற்றை வரியில் முடித்து விட அவரது முகமும் வாடி தான் போகிறது. அவரது சூழலை உணர முடிகிறது தான். ஆனால் தன்னை இயல்பாய் காட்டிக் கொள்ள முயன்று தோற்றுக் கொண்டிருக்கிறாள் பெண்ணவள்.



அவளது முகத்தின் இறுக்கத்தைக் கண்டு, "கல்யாணம் பிடிக்கலையா? சொல்லும்மா, ஏன் இப்படி இருக்க?" என்று பெற்றவரும் மருகி மருகி தவித்து நிற்கிறார்.

"இல்லைம்மா, எனக்கு பிடிச்சிருக்கு. நீங்க வொரி பண்ணாதீங்க" என்று பல்வேறு சமாதானங்களை கூறி தாயை சரி செய்வது போல் தன்னை தானே சரி செய்து கொள்ள முயல்கிறாள் பேதை.


வேண்டும் வேண்டாம் என்பதற்கிடையிலான அவளது முற்று பெறாத போராட்டம் நீண்டு கொண்டிருக்கிறது. என்று தீரும் என்றே புரியவில்லை. தீருமா தீராத என்று கூட தெரியவில்லை. மனது சீரற்று அலை பாய்ந்தது. கடந்த காலத்திற்கு செல்லாதே என்று வலுக்கட்டாயமாக பின்னோக்கி இழுத்து நிலை நிறுத்தும் முயற்சியில் தோற்றுக் கொண்டிருக்கிறது பெண்ணவளின் மனம்.

இவையெல்லாம் ஒரே ஒரு நாளிலான மனதின் போராட்டம். எப்படியோ பல வருடங்களை கடந்தவளுக்கு திருமணம் அதுவும் திரிலோகேஷூடன் என்னும் பொழுது பிரவாகமாக சுழன்று திணற செய்கிறது. மூச்சு முட்டுகிறது, தாலி கட்டுவதற்கு முன்பே இவ்வாறு அலைப்புறும் மனதை எவ்வாறு சமன் செய்திடுவேன். அவனது வாழ்க்கையில் ஒட்டிக் கொண்டிருக்கிருக்கும் நிம்மதியையும் துடைத்தெறிய போகிறேனா? என்றெல்லாம் எண்ணங்கள் சுழல்கிறது.




சில சமயம் எதுவுமே வேண்டாம் என்று சத்தமாக கத்தி அழுக வேண்டும் என்றெல்லாம் தோன்றுகிறது. ஆனால் இந்துமதியின் முகத்தில் தற்போதிருக்கும் அந்த புன்னகை அவளை ஒட்டு மொத்தமாக கட்டி போட்டிருக்கிறது. அதனால் தான் ஓரமா அமர்ந்து கொண்டாள் எதிலுமே ஒன்ற இயலாது. டைனிங் டேபிளில் தலை சாய்த்தபடி சிந்தனைகளில் அமிழ்ந்திருந்தாள்.




அழைப்பு மணி ஒலிக்க இந்துமதி தான் கதவை திறந்தார். "வாங்க" என்று வரவேற்க மேகாவுடன் குமார்,செல்வியும் வந்து அமர்ந்தனர்.


மீனு கவனத்தில் எதுவுமே இல்லை. அப்படியே அமர்ந்திருக்க இந்துமதி, "மீனும்மா" என்று குரல் கொடுத்த பின்பே சுதாரித்தவள் லேசாக புன்னகைத்து, "வாங்க" என்றாள்.


அவர்களும் லேசாக தலையசைத்தப்படி திருமணத்தை எந்த கோயிலில் வைக்கலாம் நல்ல நேரம் மற்றும் அதற்குரிய ஏற்பாட்டை குறித்து இந்துமதியிடம் கலந்துரையாடிக் கொண்டிருக்க
மேகா செல்வியிடமிருந்து எழுந்து மீனலோஷினி முன் நிற்க அவளது கன்னத்தை கிள்ளி கொஞ்சியவள் அவளையே பார்க்க, "மீனுக்குட்டி.." என்று ஆரம்பித்தவள், "இல்லை இல்லை அம்மா.." என்று தலையை ஆட்டியபடி திருத்த அவளது பாவனையில் மீனலோஷினி மனதில் ஒரு வித இதம் பரவியது.

மீனலோஷினியின் புன்னகை மேலும் விரிய, "ஆமா, டாடி. இனிமே உங்களை அப்படி தான் கூப்பிட சொல்லி இருக்காங்க. இனிமே நீங்க என்கூடவே இருப்பீங்களாமே. உண்மையாவா?" என இன்னும் நம்ப முடியாது மீண்டும் அதே கேள்வியை அவள் முன் வைக்க, "ஆமாம்" என்று புன்னகை முகமாக தலையாட்டி அவளை அள்ளி மடியில் வைத்துக் கொண்டாள்.


நிறைய நிறைய கேள்வி கேட்டு அவளை மேகா திணறடித்து சிந்தனையில் இருந்து மீட்டுக் கொண்டிருக்க செல்வியும் குமாரும் கிளம்பி விட்டனர் மேகாவை அங்கேயே விட்டு.




நான்கு நாட்கள் எப்படி நகர்ந்தது என்றே மீனுவிற்கு புரியவில்லை. ஏதோ மாயநதியில் நீந்திக் கொண்டிருப்பது போன்றதொரு உணர்வு. அன்று காலையில் தன் மீது உறங்கிக் கொண்டிருந்த மேகாவை கீழே படுத்து எழுந்து கொண்டாள் இந்துமதி கதவை தட்டும் சத்தத்தில். ஆம், மேகா மூன்று நாட்களாக அவளுடனே தான் சுற்றிக் கொண்டிருக்கிறாள்.


கதவை திறக்க இந்துமதி ஏற்கனவே தயாரகி இருந்தார். முகத்தில் மகிழ்ச்சி பொங்கிட ஒரு பொலிவு. நீண்ட வருடங்களுக்கு பிறகு அவரை அவ்வாறு காண்கிறாள். கைலாஷ்நாத் மறைவிற்கு பிறகு என்றுமே அவரது முகத்தில் அதிகப்படியான புன்னகையையோ மகிழ்ச்சியையோ மீனு கண்டதில்லை.



அவருக்கும் நீண்ட நாளைய ஏக்கம் தீர்ந்து விடப் போகிறதே என்ற ஆனந்தம். மகளை திரிலோகேஷ் பார்த்துக் கொள்வான் என்று பெரிய ஆசுவாசம்.


"இப்பவே கிளம்ப ஆரம்பிச்சா தான் சரியா இருக்கும்மா, மாப்பிள்ளை போன் பண்ணிட்டார். அவங்க இன்னும் கொஞ்ச நேரத்தில கிளம்பிடுவாங்களாம்" என்று அவளை துரிதப்படுத்தி குளியலறை அனுப்பினார்.



சிறிது நேரத்தில் குளித்து புடவை மாற்றி வந்து அமர அழகுநிலைய பெண்கள் அவளை தயார் செய்ய ஆரம்பித்தனர். எல்லாமே விரைவாக நடந்து கொண்டிருந்தது. எதுவுமே அவளது கவனத்தில் பதியவில்லை. நான்கு நாட்களாகவே அவ்வாறே இருக்கிறாள். அவ்வ பொழுது மேகா தான் அவளை தன் உலகத்தில் இழுத்துக் கொண்டிருக்கிறாள்.




இந்துமதி அவர்கள் கேட்பதை எல்லாம் எடுத்துக் கொடுத்தபடி சுழன்று கொண்டிருக்க வீட்டிற்கு ஆட்கள் வந்து விட்டனர். நெருங்கிய வட்டாரத்தில் முக்கியமானவர்களை மட்டும் அழைத்திருந்தார். அவ்வளவு பிரமாண்டமாக மகளின் திருமணத்தை நடத்த வேண்டும் என்று விரும்பியவர்க்கு இந்த எளிமை ஆதங்கமாக தான் இருந்தது. ஆனால் திரிலோகேஷிடம் பேசி தன் விருப்பப்படி நடத்தி இருக்கலாம் தான். ஆனால் மேகா குறித்த கேள்வியோ அல்லது ஏன் இப்படி இரண்டாவதாக திருமணம் செய்து கொடுக்கிறாய் என்ற பேச்சோ எழுந்து விடக் கூடாது. அது எல்லோருக்கும் கசப்பு தான். ஒரு விஷயம் நடந்த பின்பு மன்னிப்பு கோருவதை விட அதை நடந்து விடாமல் பாதுகாப்பதே புத்திசாலி தனம். அதையே செய்து கொண்டிருக்கிறாள் அந்த தாய். இது நல்லபடியாக நடந்து மகள் மகிழச்சியாக இருந்தால் மட்டுமே போதும் என்பதே அவரின் பிரதான எண்ணமும் மட்டுமன்றி வேண்டுதலும் கூட.





வெகு நேரத்திற்கு பிறகே விழித்த மேகாவிற்கு மீனுவை பார்க்க சற்று குதுகலமாக இருந்தது. "வாவ், அழகா இருக்கீங்க?" என்று ஆச்சரியத்தோடு அவளை பார்த்திருந்தாள்.


அவளுக்கும் உடை மாற்றி இந்துமதி தயார் செய்ய மீனுவின் கழுத்தைக் கட்டிக் கொண்டு மடியில் தான் அமர்ந்திருந்தாள். கீழே இறங்கவே இல்லை. வீட்டில் நிறைய தெரியாத ஆட்கள் நிரம்பி வழிய அவளையே இறுக பற்றி இருந்தது அப்பிஞ்சின் கை விரல்கள். மீனலோஷினியும் அவளை தன்னுடனே வைத்துக் கொண்டாள்.


"வாம்மா, கிளம்பலாம்" என்று இந்துமதி அவளை பூஜையறை அழைத்துச் சென்று கடவுளை வணங்க அவருக்கு லேசாக கண்கள் கலங்கி விட்டது.


அவர் காலில் விழுந்து வணங்கியவளை தூக்கியவர் கைகள் நடுங்கியபடி மகளை அணைத்துக் கொண்டது.


"இனி மேலாவது என் பொண்ணு சந்தோஷமா இருக்கனும்" என்று அவரின் மனது இறைவனிடம் முறையிட்டுக் கொண்டிருக்க அவளின் மனதும் அதை தான் யாசித்தது தாய்க்காக.


"சரி வாங்க லேட்டாயிடுச்சு" என்று அவரின் அண்ணி அதட்டிய பின்பே சுதாரித்த இந்து, "வாம்மா" என்று மீனலோஷினியை காரில் ஏற்றினார்.


நேரம் நெருங்க நெருங்க மீனுவோ மீள முடியாத தவிப்பில் ஆழந்திருந்தாள். சில நிமிடங்களில் காரை கோயில் முன் நிறுத்திட அனைவரும் இறங்கி உள்ளே சென்றனர்.


அதன் வாயிலில் கால் எடுத்து வைக்கும் போதே அவளது கால்கள் நடுங்கியது. முயன்று சரி செய்து உள்ளே நுழைய ஏறக்குறைய எல்லா ஏற்பாடும் முடிந்திருந்தது. அவளது விழிகளோ திரிலோகேஷை தேட அவனே அகப்படாது சுற்றிக் கொண்டிருந்தான்.



அவளருகில் வந்த செல்வி, "வாம்மா, நேரமாகிடுச்சு" என்று அவளை சன்னதிக்கு அருகில் அழைத்துச் செல்ல திரிலோகேஷ் தயாராக நின்றிருந்தான். அவனருகில் நிறுத்தி வைக்க இப்பொழுது நிமிர்ந்து பார்க்க மனதில் தைரியமற்று போனது. அவளது ஒரு கையை மேகா இறுக பற்றி இருக்க மற்றொரு கையை அவனது விரல்கள் பற்றிக் கொண்டது.


அந்த நொடி எதுவுமே புரியாது முழித்துக் கொண்டு குழந்தைதனத்தோடு வேடிக்கை பார்த்திருந்த மேகாவும் அவனும் சமமாகவே தோன்றியது அவளுக்கு. ஏதோ பெரிய பொறுப்புக்குள் நுழைவது போன்றதொரு பிரம்மை. தன்னால் சரியாக நடத்தி சென்றிட முடியுமா இவர்களது வாழ்வை என்று மிகப்பெரிய கேள்வி அவள் முன் ஆர்பரிக்க விழிகளோ எல்லாவற்றையும் நீயே பொறுப்பு என்பதாய் தன் முன் இருந்த இறைவன் மீது நிலைத்திருந்தது.


மாலை மாற்ற நொடிப்பொழுதில் இறைவன் பாதத்தில் இருந்த மாங்கல்யத்தை அவளது கழுத்தில் கட்டி விட்டான். இப்பொழுதும் அவனது விழிகளை காண மறுத்து அவளது விழிகள் மூடிக் கொள்ள அவளையும் மீறி கண்ணீர் கசிந்தது.


தலையை சுற்றி குங்குமத்தை அவளது நெற்றி வகிட்டில் வைத்த பின்பே விழிகளை திறந்து அவனை பார்த்தாள். இருவரது விழிகளும் சந்தித்துக் கொள்ள இன்றும் அவளது விழி
கள் அவனிடம், "ஏன் என்னை ஏமாற்றினாய்" என்ற கேள்வியே எழுப்பிக் கொண்டிருந்தது. அதற்காக தான் தப்பித்து ஓடிக் கொண்டிருந்தான் பதில் கூற வழியறியாது.
(தொடர்ந்து கீழே படிக்க)
 
Administrator
Staff member
Messages
1,030
Reaction score
2,923
Points
113
அத்தியாயம் - 21




அந்த பார்வை இன்றும் அவனை வதம் செய்தது. அதை எதிர்கொள்வதற்குள் தடுமாறி திணறி தான் போகிறான் ஒவ்வொரு கணங்களிலும். இனி வாழ்க்கை முழுவதுமே அதை எதிர்கொள்ள போகிறாய் என்ற எண்ணமே அவனுள் லேசான கிலியை உருவாக்கியது.




தெரிந்தோ தெரியாமலோ செய்தாலும் தவறு என்பது தவறு தான். கண்டிப்பாக நமது செயலுக்கு எதிரான வினை உண்டு என்று அவன் மனது அறியாமல் இல்லை. ஆனால் அதை தன்னால் தாங்கிட இயலுமா என்பதே அவன் மனதின் தவிப்பிற்கும் துடிப்பிற்கும் காரணம்.



வந்து விட்டாள் இத்தனை வருடங்கள் கழித்து தன்னிடமே. இடையில் எத்தனையோ கசப்பான நிகழ்வுகள். எல்லாவற்றையும் கடந்து அவன் ஒரு காலத்தில் செய்த தவம் நிறைவேறி விட்டது தான். ஆனால் பாதை என்னவோ அவ்வளவு சுலபமாக இருந்திடவில்லை. இக்கணங்களில் இருவருக்குமே அது அவ்வளவு மகிழ்ச்சியை அளித்திடவில்லை என்பதே நிதர்சனம். தேவைப்படும் பொழுது கிடைக்காத பொருள் மட்டுமின்றி உறவுமே வீண் என்றே அவளது சிந்தை எண்ணி மருகியது.




"டாடி" என்ற மேகாவின் குரல் அவர்களை கலைத்தது. தூக்கும் படி கைகளை தூக்க அவனை அப்படியே வாரி எடுத்துக் கொண்டான். அவளோ அவனிடத்திருந்து அருகிலிருந்து மீனுவிடம் தாவியவள் அவளது கன்னத்தில் முத்தமிட அங்கிருந்த நிழற்பட கருவி அவற்றை அழகாக பதிவு செய்து கொண்டது.



அனைவருக்கும் அத்தனை ஆசுவாசம். இந்துமதி காலில் மூன்று பேரும் விழுந்து வணங்க, "நல்லா இருங்க" என்றவருக்கு அதற்கு மேல் மகிழ்ச்சியில் வார்த்தைகள் வர மறுத்தது. மேகா மீனுவுடனே தான் இருந்தாள். தாலி கட்டும் கணங்களில் மட்டும் செல்வியிடம் இருந்தவள் மீண்டும் அவளிடம் தஞ்சமடைந்துக் கொண்டாள்.


"அம்மா" என்ற வார்த்தையும் உணர்வும் அவ்வளவு ஈர்த்தது அப்பிஞ்சினை. அடிக்கடி கூப்பிட்டு பார்த்தாள். அவளது செயலில் மீனுவிற்கு புன்னகை பூத்தாலும் அதற்கு பின் இருந்த வலியும் ஏக்கமும் புரியாமலும் இல்லை. அணைத்துக் கொண்டாள் இறுக, இனி உன்னை விடவே மாட்டேன் என்பதை உணர்த்துவது போல்.



செல்விக்கும் குமார்க்கும் அவ்வளவு நிறைவாக இருந்தது. திரிலோகேஷ் மேகாவுடன் தனியே படும் கஷ்டங்களை அவர்கள் அறியாமல் இல்லை. மேகாவை கைக்குழந்தையாய் வைத்துக் கொண்டு அவன் பட்ட சிரமங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. "குழந்தைக்காகவாது இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கோப்பா" என்று எத்தனை முறை வேண்டி நின்றிருக்கிறார்.


"வேண்டாம்" என்று உறுதியாய் மறுத்துக் கொண்டிருந்தவனது மனமாற்றம் அவ்வளவு நெகிழ்ச்சியாக இருந்தது. ஷாம்லி இடத்தில் மீனு வருகிறாள் என்ற எண்ணம் இருவருக்குமே சிறிதளவு கூட இருக்க வில்லை. எல்லா வேலையும் முன் நின்று செய்தனர் தம்பதி சகிதமாய்.


மீனுவிற்கும் மேகாவிற்கும் இடையிலான பிணைப்பைக் கண்டு அவர்களுக்கு அத்தனை ஆசுவாசமாக இருந்தது. இப்படி ஒரு பிணைப்பு எல்லா இடத்திலும் அவ்வளவு சுலபத்தில் நிகழ்ந்து விடுமா என்ன?



அடுத்ததாக அவர்கள் காலில் விழுந்து வரிசையாக பெரியவர்கள் காலில் எல்லாம் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுக் கொள்ள திருமணத்தை பதிவு செய்வதற்காக குமார் அவர்களை கோயிலுள் இருக்கும் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார்.


முதலில் திரிலோகேஷ் கையெழுத்திட அடுத்ததாக மீனலோஷினி கையெழுத்திட்டு மீனிலோஷினி
கைலாஷ்நாத்திலிருந்து மீனலோஷினி திரிலோகேஷ்ஷாக நொடியில் மாறியிருந்தாள். மாற்றம் பெயரளவில் உடனடியாக நிகழ்ந்து விட்டாலும் இன்னும் மனதளவில் என்பது விடையறிய இயலா கேள்விக் குறியே.


சூழலை கிரகிக்க முயன்று தோற்றுக் கொண்டிருக்கிறாள். ஒரு காலத்தில் அவள் விரும்பிய அவனது அருகாமை இப்பொழுது மூச்சு முட்டுகிறது. நடுக்கம், பதற்றம் என்பதை எல்லாம் தாண்டி இன்னும் அவனால் அவளுள் உருவாகிய தணல் அணைந்திடவில்லை. அணையா சுடர் போல் இன்னுமின்னும் மிளிர்கிறது. அதன் வெம்மை அவனை தாக்கிடும் கணங்களில் தான் உணர்ந்திடுவானோ தணலின் இருப்பையே!



அடுத்ததாக அவர்களை உணவுண்ண அழைத்துச் சென்றனர். மீனுவிற்கு ஏதோ கனவுலகில் இருப்பது போன்றதொரு மனநிலை. மேகா கையின் பிணைப்பு அழுத்தம் மற்றும் அவளது கேள்விகளும் தான் அவ்வபொழுது அவளை நிகழ்வுலகத்திற்கு அழைத்து வந்துக் கொண்டிருந்தது.



தன் மடியில் இருந்த மேகாவிற்கு உணவை ஊட்டியவள் சிறிதளவு பெயருக்கு உண்டு எழுந்து விட்டாள். அதை கவனித்த லோகேஷ் அவளுக்கு காபியை கொண்டு வர சொல்ல சூழலை கருத்தில் கொண்டு மறுக்காமல் வாங்கிக் கொண்டாள்.



அதற்கு பின் மீனு வீட்டிற்கு அழைத்துச் சென்று சம்பிரதாயங்கள் செய்தனர். இதையெல்லாம் தவிர்க்க கூடாது என்று இந்துமதி உறுதியாக கூறி விட்டார். எல்லாம் முடித்து அமர திரிலோகேஷ் முகத்தில் அப்படியொரு சோர்வு. நான்கு நாட்களாகவே அதீத அலைச்சல். குமாருடன் நின்று எல்லா வேலையும் அவன் தான் செய்தான்.


அவனை கவனித்த இந்துமதி, "லோகேஷ் ரொம்ப டயர்டா தெரியுறீயே? போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுப்பா" என்றவர், "மீனு ரூம்க்கு கூட்டிட்டு போம்மா" என்றார் மகளை நோக்கி. தலையசைத்தவள் முன்னே எழுந்து செல்ல பின்பு சென்றான். ஏற்கனவே மேகா அங்கு உறங்கி இருந்தாள்.



பார்ப்பவர்கள் சில நிமிடங்களாவாது கண்களை அகற்றிடாது இருப்பார்கள் அவளை கண்டு. ஒப்பனையின்றியே ஒளிர்பவளின் முகம் இன்று ஜொலித்து தான் கொண்டிருந்தது. ஆனால் அதையெல்லாம் மீறி அவளது கண்களில் வரையறுக்க இயலாத ஒரு வித வலி உழன்றது. இதழின் புன்னகை கண்களுக்கு கூட எட்டவில்லை. அப்படி தான் காலையில் இருந்து சுற்றிக் கொண்டிருக்கிறாள் மீனலோஷினி.


உள்ளே நுழைந்தவள் படுக்கையின் மேலிருந்து தனது உடைமைகளை அப்புறப்படுத்தி மேகாவை ஓரமாக நகர்த்தி அவன் படுப்பதற்கு ஏதுவாய் தலையணை எடுத்து போட்டு சரி செய்து கொண்டிருந்தாள். அவனது பார்வை அவளை விட்டு அகலவே இல்லை. அவளும் உணர்கிறாள் தான் ஆனால் திரும்பி அவனை எதிர்கொள்ள விருப்பமில்லை. அவளது அதிர்வினால், "ம்மா" என்று முணங்கிய மேகா அசைய, "தூங்குடா" என்று அவளை தட்டிக் கொடுத்தவள் வெளியேறி விட்டாள்.



செல்பவளையே பார்த்திருந்தவன் அப்படியே அமர்ந்து விட்டான் பெருமூச்சு விட்டப்படி. அவளது வலி சூழல் கோபம் எல்லாமே உணர முடிகிறது அக்காதலனுக்கு. ஆனால் எப்படி இதை சரி செய்திடுவது என்று தான் புரியவில்லை. மாற்றம் ஒரே நாளில் நிகழ்ந்து விடாது என்று மூளைக்கு புரிகிறது. ஆனால் மனது அதை ஏற்க மறுக்கிறது.


அவளது விலகல் வலிக்கிறது. தாலி கட்டி விட்டால் அவளுக்கு இழைத்த அநீதி மறைந்து விடுமா என்று மூளை கேள்வி எழுப்பி கொண்டிருக்கிறது. ஆனால் மனதோ அவளை அதிகமாகவே எதிர்பார்க்கிறது.
முன்பில்லாது ஒரு உரிமை உணர்வு வந்து அவனுள் ஒட்டிக் கொண்டது தாலி கட்டி நெற்றி தீண்டி குங்குமமிட்ட நொடி. அவள் இனி தன் பொறுப்பு, தன்னிடம் வந்து விட்டாள் தனக்கானவள் என்ற எண்ணம் மனதை ஆட்கொள்ள உறவிற்கிடையிலான எதிர்ப்பார்ப்பு வலுக்கிறது அவனிடம்.



அப்படியே படுத்தவன் உறங்கியும் விட்டான். வெகுநேரத்திற்கு பிறகு மேகா, "டாடி" என்று உலுக்கிய பின்பே கண் விழித்தான். அருகில் நின்ற மகளை அள்ளி மடியில் வைத்தவன், "என்னம்மா" என்றிட, "அம்மா தான் உங்களை எழுப்ப சொன்னாங்க" என்றாள் மழலை மொழியில்.



அவன் வெளியில் வர, "நம்ம வீட்டுக்கு கிளம்பலாம் மாப்பிள்ளை" என்று குமார் கூற, "சரி மாமா" என்று தலையசைத்தவன் மீனலோஷினியை பார்த்தான். கிளம்ப வேண்டும் என்றவுடனே தான் அவளுக்கு இந்துமதி நினைவு வந்தது. அவரை தனியே விட்டுச் செல்ல வேண்டும் என்பது மூளையில் உரைக்க முதலிலே இதை பற்றி சிந்திக்காமல் விட்ட மடத்தனத்தை எண்ணி நொந்து கொண்டவள் கண்களில் கலக்கம். அதை உணர்ந்து கொண்டவன், "என்ன" என்று கண்களாலே வினவ லேசாக தலையை அசைத்தாலே தவிர எதுவும் கூறவில்லை.



இந்துமதி, "மீனு பார்த்துக் கவனம்மா" என்று அவளது கைகளை பற்றிக் கொள்ள அவளது கண்ணீர் உடைப்பெடுத்து விட்டது. "ச்சு...என்ன இது சின்ன புள்ளை மாதிரி அழுதுகிட்டு" என்று அவளை சமாதானம் செய்திட, "ம்மா...நீங்களும் எங்க கூடவே வாங்க" என்று நின்றாள் சிறுகுழந்தையாய். அவளது தவிப்பைக் கண்டவன், "ஆமா ஆன்ட்டி, நீங்களும் வாங்க. அப்புறம் திங்க்ஸ் எல்லாம் ஆள் வச்சு எடுத்துக்கலாம்" என்று கூற,


"இப்ப வேண்டாம்ப்பா. கொஞ்ச நாள் ஆகட்டும் பார்த்துக்கலாம். இப்பே ஆக வேண்டியதை பார்ப்போம்" என்று மறுத்தவர் மீனு புறம் திரும்பி, "இப்ப நீ கிளம்புடா, நல்ல நேரம் முடியுறதுக்குள்ள அங்க போய் விளக்கு ஏத்தணும்" என்று பல்வேறு காரணங்களை கூறி அவளை கிளப்ப மனதே இன்றி கிளம்பி விட்டாள்.


காரில் ஏறியவளுக்கு நிற்காமல் கண்ணீர் வழிய கண்களை மூடி அமர்ந்து கொண்டாள். அவளது மடியில் அமர்ந்திருந்த மேகாவின் கை முகத்தில் படர விழித்து விட்டாள்.

"எதுக்கு அழுகுறீங்க மம்மி? நாளைக்கு போய் பாட்டிய பார்த்துக்கலாம்" என்று மழலை மொழியில் கூறி அவளது கண்ணீரை துடைத்து, "டாடி, மம்மி பாவம் அழுகுறாங்க. பாட்டிக்கிட்டே விட்டு போய்டலாம்.ப்ளீஸ்" என்று கண்களை சுருக்கி அவனிடம் கெஞ்ச அவளது பேச்சிலும் குழந்தை தனத்திலும் எல்லோர் முகத்திலும் புன்னகை அரும்பியது. மீனுவின் இதழிலும் தன்னையறியாமல் நகை தவழ அவளிடம் பேச ஆரம்பித்து விட்டாள்.


திரிலோகேஷ் வீட்டு வாசலில் வண்டியை நிறுத்த செல்வி இறங்கி சென்று மணமக்களை ஆரத்தி எடுக்க மீனு வலது காலை எடுத்து வைத்து உள்ளே சென்றாள். பின் அவள் பூஜையறை சென்று விளக்கேற்ற இறைவனை வணங்கினார்கள்.




அந்த வீடு பலமுறை சென்று வந்ததால் பரிட்சயம் என்றாலும் மீனுவிற்கு ஏதோ ஒரு தவிப்பு இருந்து கொண்டே இருந்தது. இந்துமதி என்ன செய்கிறார் சாப்பிட்டாரா? மாத்திரை சாப்பிட்டாரா? என்று. வந்து சிறிது நேரத்திலே இருப்புக் கொள்ளாமல் அழைத்து விட்டாள்.


"ம்மா..." என்று இறங்கிய குரலில் அழைக்க, "என்னம்மா" என்றார் வாஞ்சனையாக. "என்ன பண்றீங்க? சாப்பிட்டாச்சா? டேப்லெட் போட்டீங்களா?" என்று வரிசையாக அடுக்க, "மீனு, என்னம்மா இது. இப்ப தான போன அதுக்குல்ல என்ன? நான் என்னை பார்த்துப்பேன்டா, நீ நிம்மதியா சந்தோஷமா மாப்பிள்ளையோடு இருந்தாலே எனக்கு இந்த ஹாஸ்பிட்டல் டேப்லெட் எதுவுமே இல்லாம உடம்பு சரியாகிடும்" என்று கூறிக் கொண்டு, "மீனு" என்று வந்து விட்டார் செல்வி.


"சரிம்மா, நீ அங்
க பார். அப்புறம் பேசலாம்" என்று அழைப்பை இந்து துண்டித்து விட, "என்னம்மா" என்றபடி செல்வி அருகில் சென்றாள்.
 
Well-known member
Messages
612
Reaction score
348
Points
63
ஒரு நாள் எல்லா மாறும் முன்னாடி கசப்பான ஒன்னு இருக்கு இப்போ அதுல இருந்து வாங்க மறைந்து போகும் எல்லாம் குட்டி மேகா இருக்கும் போது என்ன🥳🥳😻❤️❤️
 
Top