• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 19(i)

Messages
47
Reaction score
2
Points
8
*சொல்லாமல்....!*

*மௌனம் 19(i)*

*சில வருடங்களுக்கு முன்....*

அந்த இரவு நேரத்தில் கட்டிலில் கண்மூடி சாய்ந்திருந்தாலும் அவனின் கருமணிகள் உருண்டே கொண்டிருந்தன,
மூடிய இமை வழியே அதன் அசைவை உணர்த்தியவாறு.

என்றும் போல் அவனின் நினைவுகளை அவள் ஆக்கிரமித்திருக்க அதன் வெளிப்பாடு இதழ்களிலும்.

ஏனோ நினைவுகள் முதன் முதலாய் அவளைக் கண்ட தருணத்தை நோக்கி அசைந்தோடியது.

அப்போதெல்லாம் ஆடவனுக்கு அவள் தன் வீட்டருகே வசிப்பவள் என்று தெரியாது.
இங்கு குடி வந்து சில நாட்களே என்பதால் பெரிதாக ஆட்கள் அறிமுகமாகி இருக்கவில்லை.

அந்த கைக்கடிகாரங்கள் மட்டுமே விற்கும் கடையின் வாயிலில் நின்றிருந்தான்,
ஆடவன்.

அதன் முன்னே ஒரு சிறு இடத்தை எடுத்து ஒரு வாட்ச் மெகானிக் அமர்ந்திருந்த அவரிடம் தன் கைக்கடிகாரத்தை பழுது பார்த்திடச் சொல்லி விட்டு அலைபேசியில் மூழ்கி இருந்தவனைக் கலைத்தது,அந்த பாதச்சத்தம்.

சிந்தனை கலைந்தாலும் தலைதூக்கி பார்த்திடவில்லை,
ஆடவன்.
ஏன் அவசியம் என்கின்ற எண்ணம் தான்.

அந்நேரம் தான் தோழியுடன் கடையினுள் நுழைந்திருந்தாள்,
தர்ஷினி.

சேமித்து வைத்திருந்த பணத்தில் இன்று எப்படியாவது கைக்கடிகாரம் வாங்கியே தீருவேன் என்று வம்படியாய் தோழியை உடன் அழைத்து வந்திருந்தாள்,
எத்தனை மறுத்தும்.

அந்தக் கண்ணாடித் தடுப்புக்கு வெளியே ஆடவன் நின்றிருக்க அவளோ உள்ளிருந்து பிடித்தமானதை தேடிக் கொண்டிருந்தாள்,
முகம் விகசிக்க.

ஏற்கனவே வானிலை மந்தாரமாய் இருக்க வீசிய காற்று ஆடவனுக்குள் குளிரை பரப்பியது.
அலைபேசியை பாக்கெட்டில் போட்டு விட்டு நிமிர்ந்தவனுக்கு ஏதோ மனம் உந்தவே திரும்பி கடையினுள் தன் கூர்ப்பார்வையை செலுத்தியிருந்தான்,
தற்செயலாக.

அவனுக்கு முதுகு காட்டி நின்று கொண்டு தனக்கு பிடித்த சில கைக்கடிகாரங்களை எடுத்து அதை காதருகே கொண்டு சென்று அதில் முட்கள் நகரும் போது வந்திடும் சத்தத்தை ஆழ்ந்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தாள்,
தர்ஷினி.

ஏனோ அவளின் அந்த செயல் ஆடவனின் புருவங்களை உயர்த்தி கேள்வியுடன் நிற்க வைத்தது.

அவனும் அதிகமாக கைக்கடிகாரம் வாங்கிடும் போது இப்படி தானே செய்வான்.
ஏனோ தெரியவில்லை, கைக்கடிகாரத்தின் அழகை விட அதன் முள் நகரும் ஓசையின் மீது அப்படி ஒரு பிடித்தம் ஆடவனுக்கு.

காதருகே கொண்டு செல்வதும் மீள வைப்பதும் மீண்டுமொன்றை எடுப்பதுமாய் இருந்த அவளின் செயலை தன்னாலே பூத்த புன்முறுவலுடன் தனை மறந்து உரசிக் கொண்டிருந்தன,
ஆடவனின் விழிகள்.

அதற்குள் சத்தமிட்டு அவனைக் கலைத்து சரி செய்த அவனின் கைக்கடிகாரத்தை அந்த வாட்ச் மெகானிக் அவனின் கையில் கொடுத்திட அவருக்கான பணத்தை கொடுத்து விட்டு வாங்கி தன் கையில் கட்டிக்கொண்டவனின் கரமோ என்றும் போல் தன்னாலே அவனின் காதருகே சென்றது,அந்த சத்ததுக்காக.

ஏதோ தோன்ற அப்படியே திரும்பியவனின் விழிகள் விரிந்து கொண்டன, தான் வாங்கிய கைக்கடிகாரத்தை உடனே கையில் கட்டி தர்ஷினியும் அவ்வாறு செய்வதைக் கண்டு.

நமது பழக்கம் அப்படியே இன்னொருவரிடம் பிரதிபலிக்கப்படும் போது ஒரு வித இரசனை தோன்றும் அல்லவா..?

அந்த உணர்வு மட்டும் தான் அவனிடத்தில்.
அதற்குள் பாலா வந்து விட கிளம்பியிருந்தான்,
ஆடவன்.

ஆனால், வீட்டுக்கு வந்ததும் அவளின் செயல் நினைவில் வந்திட அவனின் இதழ்கள் புன்னகையை பூசிக் கொண்டாலும் அன்று அவனுக்கு தெரிந்திட வாய்ப்பேயில்லை,
அவளிடம் தான் மீள முடியாது காதலில் விழப்போவது.

அதன் பின்னர் தான்
அவளை பக்கத்து வீட்டினர் என்று அவன் அறிந்திருக்க அதற்குள் அவனுக்கு வந்த காதல் கடிதம் முற்றிலும் அவள் மீதான எண்ணங்களை முரணாக மாற்றி விட்டல்லவா நின்றது.

தன் நினைவுகளில் இருந்து கலைந்தவனின் பாதங்கள் விரைந்தன,
மொட்டை மாடியை நோக்கி.

இப்போதெல்லாம் அவளுக்கு தெரியாமல் அடிக்கடி அவளைப் பார்த்து இரசிப்பான்,ஆடவன்.

தற்செயலாய் அவளின் பார்வை அவன் புறம் திரும்பினால் கூட முகத்தை அழுத்தமாக மாற்றிக் கொள்ள தர்ஷினிக்கு அவள் மேல் கொஞ்சமும் சந்தேகம் வராதிருக்க அவனின் நடத்தை பெரும் பங்கு வகித்தது.

இருவிழி நிமிர்த்தி கருமணி நகர்த்தி ஆடவனவன் கசியவிடும் அந்தக் கண நேர கடை விழி உரசல் வார்த்தையின்றி வார்த்தெடுத்த ஒரு குறுங்கவிதை தான்.

வெறும் விழிகள் மட்டுமே சொல்லிக் கொண்டிருந்தது,
அவளுக்கான காதலை.

இப்படியே இரு வாரங்கள் கடந்திருக்க சிற்றுண்டிச்சாலையின் அதே இடம்.
முன்பொரு முறை அவளின் புகைப்படத்தை பார்த்து கொஞ்சிக் கொண்டிருந்தவளை ஆடவன் அதட்டிய அதே இடம்.

இன்றும் அதே போல் தான்.மூலையில் இருந்த மேசையில் அவள் அவனுக்கு முதுகு காட்டி அமர்ந்திருக்க அதற்கு முன்னே இருந்த மேசையில் அமர்ந்திருந்தான்,
ஆடவன்.

உள்ளுக்குள் தடுமாற்றத்தின் புயலே உருவெடுத்திருக்க அதை வதனத்தில் காட்டாதிருக்க பெரும் பிரயத்தனப்பட வேண்டி இருந்தது,
ஆடவனுக்கு.

தர்ஷினிக்கு அவன் வந்தது எல்லாம் கருத்தில் பதியவேயில்லை.
கார்த்திகாவுடன் மும்முரமாக கதையில் மூழ்கி இருந்தவளின் மீது தான் மொத்தக் கவனத்தையும் பதித்திருந்தான்,தேவா.

"அது எப்டி பீல் ஆச்சுன்னா..அந்த சீன பாக்கும் போது என்னோட சின்ன முடியெல்லாம் அப்டியே எந்திரிச்சு நின்னுருச்சு டி..என்னால முடியல..எத்தன தடவ பாத்தேன்னும் தெரியல..ஒத்த சீன்ல ஒரு மணி நேரம் ஓடிருச்சு டி..அதுலயும் அந்த க்ரூப் போட்டோல தேவா வர்ஷாவ தேடுவான் பாரு..யப்பா..என்னா எக்ஸ்ப்ரெஷன்...டைரக்டர் ரொம்ப க்ரியேட்டிவ் ல.."

"அதுலயும் தேவா ப்ரெண்டு தான் செம்ம.." என்க கேட்டுக் கொண்டிருந்த ஆடவனின் பார்வை பாலாவை தான் தழுவி மீண்டது.

அந்த இடத்தில் பெரிது சத்தம் இல்லாதிருக்க தர்ஷினி பேசிக் கொண்டிருந்தது பாலாவின் செவிகளையும் எட்ட மறந்திடவில்லையே.

ஒரு நமட்டுச் சிரிப்புடன் தோழனைப் பார்த்தவனுக்கு தனது செயலை ப்ரித்வி பாராட்டியதும் அதை பின்பற்றி திரையில் விழுந்த புகைப்படத்துக்கு பதில் கதாநாயகியின் ஒரு க்ரூப் போட்டோவை வைத்து மீண்டும் ஒரு முறை தனியான புகைப்படம் வரும் காட்சிக்கு பதிலாக காட்சியை படம் பிடித்ததும் நினைவில் வந்திட காலரை தூக்கி விட்டுக் கொண்டவனை கூர் விழி சுருக்கி முறைக்க மட்டுமே முடிந்தது,அவனால்.

"அதுலயும் அந்த கண்ணும் அந்த எக்ஸ்பெரஷனும்..மனசுல அப்டியே பட்டர் ப்ளையா பறந்துருச்சுன்னா பாரேன்..படத்துல எல்லாம் சொல்லுவாங்கல..எனக்கு அந்த தேவா மேல இருந்த க்ரஷ் கூடிப்போயிருச்சு டி..ஏதோ மேஜிக் இருக்கு டி அந்த கண்ணுல..இல்லன்னா நானே இப்டி கவுந்து நிப்பேனா.." தன் முகத்தில் மொத்த உணர்வுகளையும் வெளிக்காட்டி பேசிக் கொண்டிருந்த தோழியை வெகுவாக கனிவுடன் பார்த்திருந்தாள், கார்த்திகா.

தோழிக்கு இவ்வாறு ஈர்ப்பு வந்திருப்பது இதுவே முதல் தடவை.
முன்பெல்லாம் "ஜடம்" என்று அவளே திட்டியிருக்க இன்று அதற்கு நேர் மாறான நடத்தை அவளை மொத்தமாய் செவி சாய்க்க வைத்திருந்தது.

பள்ளி நாட்கள் துவக்கமே யாரையும் பெரிதாய் பார்க்க மாட்டாள் அவள்.
விளையாட்டுக்காய் அவர்கள் பாரேன் என்றாலும் பாராதிருப்பவள் இரசனை அவர்களில் இருந்து மாறுபட்டிருப்பதை அப்போதிருந்தே உணர்ந்திருந்தாள்,
அவள்.

ஆணோ பெண்ணோ தர்ஷினி யாரையாவது அழகு என்றால் மொத்த தோழியருமே கண்டிடா விடினும் ஒத்துக் கொள்ளத் தான் செய்வார்கள்.
அத்தனை எளிதில் அவள் இதழ்கள் மொழிந்திராதே அந்த வார்த்தையை.

அது தான்..
கார்த்திகாவையும் நேற்றில் இருந்து அவள் சொல்லும் மொத்தத்தையும் சலிக்காமல் கேட்க வைத்திருந்தது.

"ஆனா..கார்த்தி..யாருடி அது..இப்டி நடிக்கிறது..அத பாத்தா அந்த கேரக்டர்ல வாழ்ற மாதிரி தோணுது டி..அதுலயும் அந்த கண்மணி திரியுறத ஸ்லோமோஷன்ல காட்டுவாங்க பாரு..அதுவும் அந்த பீ ஜீ எம் அதுவும்..என் கண்ணுல ஹார்ட் பறந்துகிட்டே இருந்தது டி..அந்த சீன பாக்கும் போது.." வாய் ஓயாமல் பேசுபவற்றை கேட்ட ஆடவனுக்கு உள்ளுக்குள் குறுகுறுக்க இலேசாக வெட்கமும் எட்டிப் பார்த்தது.

எப்போதும் போல் ஆடவனின் கரங்களில் சிக்கியிருந்த காலி காபி டம்ளர் சுழன்று கொண்டிருக்க தோழனின் அவஸ்தை புரிந்த மற்றைய இருவரின் இதழ்களிலும் அர்த்தப் புன்னகை.

"என் போன்ல நெறய ஸ்க்ரீன் ஷாட்ஸ் இருக்குடி..நிறுத்தி நிறுத்தி அந்த கண்ண ஸ்க்ரீன் ஷாட் பண்ணேன்.." என்றவாறே தன் அலைபேசியை தோழியிடம் காட்ட அதை அப்படியே பார்த்திட்டால் என்ன என்கின்ற எண்ணம் தான்,ஆடவன் மனதில்.

"வீட்ல வேற திவ்யா கிட்ட சொல்லி சொல்லியே தான் நேத்து நாள் போச்சு.." என்றபடி பெரு மூச்சு விட்டவளை காணத் துடித்து அவனிதயம்.
ஆனாலும்,திரும்பிட மாட்டானே அவன்.

இடைவேளை முடியும் மணி அடிக்க வேகவேகமாக தர்ஷினி எழுந்து நகர்ந்திருந்தாலும் அவள் விழியில் ஆடவனின் விம்பம் விழத் தான் செய்தது.
அவன் கோபபப்படாமல் இருந்ததை எண்ணி வியந்தவளாய் அவள் நகர்ந்திட அவள் மறையும் வரை அவள் உருவத்தை தான் பார்த்திருந்தான் ஆடவன்,ஓர விழியால்.

அவள் விம்பம் மறைந்ததும் தான் இயல்பு மீண்டது ஆடவனுக்கு.
வேகமாக துடித்த தன் இதயத்தை விரல்கொண்டு நீவிய படி நிமிர்ந்திட உதட்டை மடித்து சிரிப்பை அடக்கிக் கொண்டனர்,தோழர்கள்.

"மச்சீ..அன்னிக்கு அந்த பொண்ணு தேவான்னு தன்ன கொஞ்சுனதுக்கு தாம் தூம்னு குதிச்ச..இன்னிக்கு உன் கண்ண தான் ரசிச்சு பேசுதுன்னு தெரிஞ்சும் பேசாம இருக்க..என்னடா ஆச்சு..?"

"வெப் சீரிஸ் பாத்துட்டு இது மாதிரி கமென்டஸ் வருது தான..அப்போ பேசாம தான பாக்கறேன்..அப்றம் யேன் இவங்க பண்றதுக்கு மட்டும் நா ரியாக்ட் பண்ணனும்..?" இடது புருவத்தை ஏற்றி இறக்கிய படி கேட்ட ஆடவனின் செயலில் மற்ற இருவரின் முகத்திலும் கொலைவெறி.

"அப்போ நீ லவ் பண்ணல.?" இருவரும் ஒரு சேரக் கேட்டிட பதில் சொல்லாது சிரித்தான்,வழமை போலவே.

அத்தனை எளிதல்லவே அந்த அழுத்தக்காரனை ஒப்புக்கொள்ளச் செய்வது..?

அந்த நேரம் தேவாவைப் பார்த்தவாறே அவன் முன்னே இருந்த காலிக் கதிரையில் வந்தமர்ந்தான்,
யாதவ்.

ஒரு மேசையைச் சூழ ஐந்து கதிரைகள் போடப்பட்டிருக்க ஆடவனுக்கு முன்னே இருந்த கதிரையில் யாரும் அமர்ந்திருக்கவில்லை.

அவன் வந்தமர்ந்திட திடுமென இருந்த இதம் போய் இறுக்கம் சூழ்ந்து கொண்டது.
தேவாவின் இதழ்கள் அழுந்த மூடிக் கொண்டிட பட்டென எழும்பியவனை தடுத்திருந்தான்,
யாதவ்.

"மிஸ்டர்.தேவா..கொஞ்சம் இருந்து பேசலாமே..முக்கியமான விஷயம் தான்.." என்று வழமைக்கு மாறாய் தன்மையாய் அவன் குரல் வெளிவந்தாலும் அவன் முகத்தில் என்றுமிருக்கும் அலட்சியம்.

"ஊப்ப்ப்.." என பெருமூச்சொன்றை விட்டவாறு ஆடவன் அவ்விடத்தில் அமர்ந்தாலும் அவனின் பார்வை யாதவ்வை தழுவிடவில்லையே.

காலி காபி டம்ளரை அப்படியே சுழற்றிய படி பார்வையை அலையவிட்டிருக்க ஒரு வித புரியாத பாவத்துடன் தோழனுக்காக அமர்ந்திருந்தனர்,
கிஷோரும் பாலாவும்.

ஆடவனோ சுற்றி எங்கும் பார்வையை அலையவிட்டிருக்க அதைக் கண்ட யாதவ் இதழ் பிரித்து சிரித்தான்.

"என்ன மிஸ்டர்.தேவா..லவ் பண்றீங்க போல.." அவன் எள்ளலாய் கேட்டிட உள்ளுக்குள் ஒரு நொடி அதிர்ந்தாலும் அதை துளியும் வெளிப்படுத்தவில்லை,அவன் நேத்திரங்கள்.

கீழே குனிந்தவாறு காபி டம்ளரை சுழற்றிக் கொண்டிருந்தவனோ அதை நிறுத்தாமல் விழி நிமிர்த்தி யாதவ்வை பார்த்து அர்த்தப் புன்னகை சிந்தினான்.

"நா..லவ் பண்ணுவேன்..பண்ண மாட்டேன்..அதுல உங்களுக்கு என்ன ப்ராப்ளம் மிஸ்டர்.யாதவ்..?" கேட்டவனின் விரல்கள் கை விட அப்படியே சரிந்தது, காபி டம்ளர்.

"ப்ராப்ளம் எல்லாம் எதுவும் கெடயாது...பட் ஒரு வெல்விஷரா சில விஷயங்கள சொல்லித் தானே ஆகனும்.." மொழிந்திருந்தான் யாதவ்,அதே எள்ளலுடன்.

"ஓஹ்ஹ்..ஓகே ரைட்ட்ட்..அப்டிங்குறீங்களா..? சரி சொல்லுங்களேன் கேப்போம்.." கூறியவாறு சரிந்தமர்ந்தவனோ விரல்களை கோர்த்து கைகளை மடக்கி பின்னந்தலையில் வைத்துக் கொண்டிட தோழனின் செயலைக் கண்ட கிஷோரின் இதழ்கள் விரிந்திற்று.

"நீங்க லவ் பண்ற பொண்ணு நல்ல பொண்ணு இல்ல மிஸ்டர் தேவா..அவ என்னோட ப்ரெண்ட லவ் பண்ணிட்டு ப்ரேக் அப் பண்ணிட்டா ஏதேதோ ரீசன் சொல்லி.." தீவிரமாய்த் தான் சொன்னான்,யாதவ்.

அவனுக்கு கேள்விப்பட்டது அப்படித் தான்.
யாதவ்வின் தோழனொருவனுக்கு எதையும் கண்டிடாது கடந்திடும் தர்ஷினியின் மீது சிறு ஈர்ப்பு வந்திருக்க தோழர்களிடம் அவளை காதல் வலையில் சிக்க வைப்பதாக பந்தயம் கட்டியிருந்தான்,
அவன்.

அது முடியாது போகவே தர்ஷினியும் அவனும் காதலிப்பதாக வதந்தி ஒன்றை கிளப்பி விட்டு தோழர்களை நம்பவும் வைத்திருக்க ஒரு நான்கு மாதங்களின் பின் தம் காதல் முறிந்து விட்டதாகவும் அதற்கு காரணம் தர்ஷினி என்றும் அவன் கூறியிருக்க பாதி மனதோடு அவனின் கூற்றை ஏற்கத் தான் செய்திருந்தான்,
யாதவ்.

என்னவென்றாலும் தோழன் ஆயிற்றே.
சந்தர்ப்ப சூழ்நிலைகளும் தோழனை சந்தேகிக்க விடவில்லை,துளியும்.

தர்ஷினியை பற்றி தவறான எண்ணத்தில் இருப்பவனுக்கு தேவா காதலிப்பது அவளைத் தான் என்கின்ற செய்தி பெரும் அதிர்ச்சியைத் தந்ததன் காரணம் அவனுக்கு மட்டுமே வெளிச்சம்.

ஏதோ ஒரு நல்லெண்ணத்தில் அவன் கூற வந்திருக்க அவனின் தரப்பு நியாயம் தேவாவுக்கு தெரியாதே.

அவளைப் பற்றி சொன்னதுமே அவனின் முகத்தில் ரௌத்திரம் ஏற இத்தனை நேரம் பார்வையாளனாய் தள்ளி நின்றிருந்த குருவுக்கு ஆடவனின் முகமாற்றங்கள் பெரிதான பயத்தை கிளப்பிட நகர்ந்து வந்து நின்று கொண்டிருந்தான்,
தோழனின் பின்னே.

ஏனோ அவனின் கரம் யாதவ்வின் தோற்பட்டையில் பதிந்து யாதவ்வை அமைதியாய் இருக்கச் சொல்லி அழுத்தியது.

யாதவ்வுக்கு ஆடவனின் செயலில் இன்னும் கோபம் தலைக்கேற விழிகளில் கனல்.

" என்ன தேவா..காதல் கண்ண மறக்கிதோ..?"

"யெஸ்ஸ்ஸ்..அப்டியே வச்சுக்கோங்க..பட் அவங்கள பத்தி பேச உங்களுக்கு எந்த ரைட்ஸ் உம் கெடயாது...ஓகே ரைட்ட்..நீங்க இப்போ போகலாம்..ஆனா இது மாதிரி வேற யார்கிட்டயாச்சும் சொல்லிகிட்டு இருந்தத கேள்விபட்டேன்..பின் விளைவுகளுக்கு நா பொறுப்பு கெடயாது.." நிதானமாக அழுத்தமாய் சொன்னாலும் அதற்கு நேர் மாறாய் இருந்தது,அவனின் முகம் வெளிப்படுத்திய உணர்வுகளும் அந்த சிவந்த விழிகளும்.

"வாட் யூ மீன் மிஸ்டர்.தேவா.."

"பொத்திட்டு போன்னு சொன்னேன் போதுமா..?"ஏனோ ஆடவனின் வார்த்தைகளில் அப்படி ஒரு சூடு.

தொடரும்.

🖋️அதி....!
2024.01.24
 
Top